“மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு மூலையில் பிறந்த அக்குழந்தை கண்விழித்த போது ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான விடிவெள்ளி முளைத்து விட்டதை யாரும் உணரவில்லை. அக்குழந்தை தன் பிஞ்சுக் கரங்களை அசைத்துச் சிரித்த போது ஆண்டாண்டு காலமாய் அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கானவர்களின் கண்ணீர் துடைக்கப்பட்டு அவர்கள் நிம்மதியாக புன்னகைக்கப் போகிறார்கள் என்பதை உலகம் உணர்ந்திருக்கவில்லை”
ஏழாம் வகுப்பில் தான் நான் முதன் முறையாக பேச்சுப் போட்டிக்காக மேடையேறினேன். இந்த மேற்கோள் அம்பேத்கர் பற்றிய என் உரையின் தொடக்கமாக அமைந்த வரிகள். அந்த உரையை என் அப்பா தான் வைத்திருந்த அம்பேத்கர் பற்றிய ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு புத்தகத்தின் பகுதிகளில் இருந்து தொகுத்து எழுதி கொடுத்திருந்தார். இவ்வரிகள் அம்பேத்கரின் பிறப்புக்கு மெல்லிய காவியச் சாயல் ஏற்ற முயல்கின்றன. சிறு வயதில் நமக்கு வாசிக்கக் கிடைக்கும் மாபெரும் அரசியல் தலைவர்கள் மன்னர்கள் பற்றிய தகவல்கள் நம்மிடம் இவ்வாறு தான் வந்து சேர்கின்றன. இந்த புகழ்ச்சிகளின் எதிர்நிலையாக பேராளுமைகள் குறித்த அளவில்லாத கசப்புகளும் இகழ்ச்சிகளும் கொண்ட எழுத்துகளை நாம் பார்க்கிறோம். புகழ்ச்சிகளை சிறுபிள்ளைத்தனமாவை என்றும் இகழ்ச்சிகளை புரட்சிகரமானவை என்றும் ஒரு கட்டத்தில் சிலர் நம்பத் தொடங்கி விடுகின்றனர். பெரும்பாலானவர்கள் தம்முடைய சார்புநிலைகளுக்கு ஒத்துப் போகிற தலைவர்கள் குறித்த புகழுரைகளும் ஒத்துப்போகாதவர்கள் பற்றிய இகழ்ச்சிகளையுமே அதன்பிறகு தொடர்ச்சியாக கேட்கத் தொடங்குகிறார்கள்.
பெருந்தலைவர்கள் குறித்த காவியத் தன்மைக்கு நம் மரபிலிருந்தும் ஒரு காரணத்தைச் சொல்ல முடியும். நம்முடைய புராண நாயகர்கள் பிறக்கும் போதே பிற்காலத்தில் அவர்கள் இயற்றப் போகும் பெருஞ்செயல்களுக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றனர். கிருஷ்ணர் எட்டு கைகளுடன் பிறக்கிறார். கர்ணன் சூரியனின் நேரடிப் புதல்வராகிறார். திரௌபதி நெருப்பில் இருந்து எழுகிறாள். புத்தருடைய பிறப்புக்கும் முன்னறிவிப்புகள் உள்ளன. ராஜராஜ சோழனைக் கூட கடவுளின் அவதாரமாக காணும் ஒரு கதை நிலவுகிறது! வரலாற்றில் நிலைபெற்று விட்ட தலைவர்களின் பிற்காலத்தைய சாதனைகளைத் தான் நாம் அறிய நேர்கிறது. அதைக் கொண்டே அவர்களது இளமையை நாம் மதிப்பிடுகிறோம். புராணத் தாக்கங்களால் அந்த மதிப்பீடு பெரும்பாலும் மிகையானதாகவே இருக்கிறது. காந்தி சென்ற நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க தலைலர். குஹாவின் பார்வையில் ‘சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, சமயப் பன்மையாளர், தீர்க்கதரிசி’. காந்தி குறித்த இந்த வரையறைகள் அவரது எழுபத்தொன்பது ஆண்டுகால வாழ்க்கையை மொத்தமாக கணக்கிலெடுத்துச் சொல்லப்படுகிறவை. ஆனால் இளம் காந்தி எப்படியான சூழ்நிலைகளை எதிர்கொண்டார், அவரது ஆளுமையைக் கட்டமைத்த சூழல், அச்சூழலை காந்தி எதிர்கொண்ட விதம் போன்றவை குறித்து நமக்குக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன அல்லது காந்தி என்ற உலக அளவில் புகழ்பெற்ற ‘மகாத்மா’ உருவான பிறகு நம் கவனத்துக்கு வருகிறவையாக இருக்கின்றன. இளம் காந்தியைப் பற்றிய தகவல்களை நமக்கு அதிகம் கொடுக்கும் நூல் சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் காந்தி எழுதிய சுயசரிதை பாணியிலான சத்திய சோதனை தான். சத்திய சோதனை தொடராக வெளிவந்த காலத்திலேயே சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஆனால் இந்திய அரசாங்கம் கட்டமைத்திருக்கும் மகாத்மா என்ற பிம்பத்தைக் கடந்து காந்தியை அறிய உதவுகிறது. காந்தியின் மொழிநடை இந்த நூல் வழியாக அவரை அறிய நேரும் வாசகருக்கு சற்று அதிர்ச்சியை அளிக்கக் கூடியது. மிக அந்தரங்கமான உணர்வுகளைக் கூட சாதாரணமாக, அதே நேரம், வலுவான மொழியில் காந்தி பகிர்ந்து கொண்டிருப்பார். ஆனாலும் கூட அந்த நூலும் காந்தியைப் பற்றிய முழுமையான பார்வையை அளிக்கவல்லதல்ல. ஒரு காரணம் அதை எழுதியவர் காந்தி என்பது தான். மற்றொரு காரணம் ஒரு காலகட்டம் குறித்த துல்லியமான பார்வையை வந்தடைய அக்காலகட்டத்தைக் கடந்த பிறகே முடிகிறது. அவ்வகையில் இது காந்தி வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்ட நூல் என்பதால் சத்திய சோதனை அதற்கான எல்லைகளைக் கொண்டுள்ளது.
குஹா தன்னுடைய தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ற இந்த நூலில் இளம் காந்தியை அவர் செயல்புரிந்த காலகட்டத்தில் இருந்தே வரையறுக்க முயல்கிறார். காந்தி லண்டனிலும் தென்னாப்பிரிக்காவிலும் எழுதியவை உட்பட அவரது பெரும்பான்மையான எழுத்துகள் இன்று தொகுக்கப்பட்டு விட்டன. குஹா அந்த தொகுக்கப்பட்ட எழுத்துக்களை (Collected works of Mahatma Gandhi) முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார். மேலும் காந்தியுடன் இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் பழகியவர்கள், அவரை அங்கிருக்கும் போதே தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள், அக்காலத்தைய காந்தியின் உற்ற நண்பர்கள், தீவிரமான எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள், காந்தியைப் பற்றி செய்தி வெளியிட்ட இந்திய, தென்னாப்பிரிக்க நாளிதழ்கள், காந்தியே நடத்திய இந்தியன் ஒப்பினியன் நாளிதழ் என்று இளம் காந்தியின் இந்தியா திரும்பும் வரையிலான வாழ்வை ஒரு ‘நினைவுகூரலாக’ இன்றி ‘சமகாலமாக’ பாவித்து ஆய்வு செய்கிறார். தென்னாப்பிரிக்காவில் காந்தி காந்தியின் பிறப்பு முதல் 1914ஆம் ஆண்டு அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் வரையிலான அவரது வரலாற்றை ஆய்வு செய்கிறது.
‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’ இருபத்தியிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட நூல். இந்த அத்தியாயங்களில் பெரும்பாலானவை காந்தி ஒரு தேசத்தில் இருந்து மற்றொரு தேசத்துக்கோ அல்லது ஒரு பிரதேசத்தில் இருந்து மற்றொரு பிரதேசத்துக்கோ இடம்பெயர்வதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. காந்தி பிறந்தது முதல் லண்டன் செல்ல நேர்வது வரையிலான அவரது வாழ்க்கையை விவரிக்கும் ‘இடைநிலைச் சாதி, இடைநிலை வர்க்கம்’ என்ற முதல் அத்தியாயம் மட்டும் காந்திகளின் வரலாற்றினை தொட்டுச் செல்கிறது. கத்தியவார் மாகாணத்துடனும் போர்பந்தருடனும் காந்திகளின் தொடர்பினை விவரிக்கிறது. இந்தப் பகுதியின் பெரும்பாலான குறிப்புகள் காந்தியின் சுயசரிதையில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக மோ.க.காந்தி உயர்நிலை வகுப்புவரை படித்த ஒரு பள்ளியில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் மாணவன் மோ.க.காந்தி பற்றிய சித்திரத்தை அளிக்கின்றன. ஒழுங்காக வகுப்புக்கு வராத விளையாட்டிலும் பெரிய ஆர்வங்கள் இல்லாத சுமாராக படிக்கக் கூடிய (சுமாருக்கு சற்று கீழே என்றும் சொல்லலாம்) ஒரு உயர் மத்தியத்தர வர்க்க மாணவரையே நமக்கு அந்த ஆவணங்கள் அறிமுகம் செய்கின்றன. கத்தியவாரில் திவான்களாக காந்திகளின் குடும்பம் இருந்த காலம் அது. ஆனால் திவான் பதவிக்கு மரபுவழி உரிமையை விட கல்வி அவசியம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்திருப்பதால் தங்கள் வீட்டின் இளம் மைந்தனை காந்திகள் பள்ளிக்கு அனுப்பி இருப்பார்கள் என ஊகிக்கலாம். காந்தியின் தந்தை காபா காந்தி 1885ல் இறந்த பிறகு குடும்பத்தின் நிலை சற்று தடுமாறியது போலத் தெரிகிறது. ஆனால் காந்தி படிப்பைத் தொடர அனுமதிக்கப்படுகிறார். தந்தையின் மரணத்துக்குப் பிறகும் ஆங்கிலம் குஜராத்தி தவிர்த்த பிற பாடங்களில் காந்தியால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. 1888ஆம் ஆண்டு காந்தியின் குடும்ப நண்பர் மாவ்ஜி தவே காந்தியை லண்டனுக்கு சட்டம் படிக்க அனுப்புமாறு புத்லிபாயிடம் யோசனை தெரிவிக்கிறார். அந்தத் தாய் முதலில் அதை விரும்பாவிட்டாலும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு அந்நியப் பெண்களுடன் உடலுறவு கொள்ளக் கூடாது (காந்திக்கு ஏற்கனவே மணமாகி இருந்தது), மது அருந்தக்கூடாது, மாமிசம் உண்ணக் கூடாது என்ற மூன்று சத்தியங்களைப் பெற்றுக் கொண்டு மகனுக்கு விடை கொடுக்கிறார். முதல் அத்தியாயம் இங்கு முடிகிறது. தொடரும் அத்தியாயங்களில் பல, இது போன்ற இரு பயணங்களுக்கு இடையிலானதாக இருக்கின்றன.
இளம் காந்தியின் ஆளுமை தெளிவாக உருவெடுக்கத் தொடங்குவது லண்டனில் தான். தாயிடம் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காக அசைவம் உண்ணாதிருந்த காந்திக்கு இயல்பாகவே லண்டனில் அப்போது இயங்கி வந்த சைவ உணவு குழுக்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அக்குழுவினரால் தன்னுடைய முதல் ஆசிரியரான ஹென்றி சால்ட்டின் எழுத்துகளை அறிமுகம் செய்து கொள்கிறார். சைவ உணவு கழகத்துடனான காந்தியின் தொடர்பை அவர் வாழ்வின் ஒரு திருப்புமுனை நிகழ்வு என்றே சொல்லலாம். லண்டனின் இளம் வக்கீல்களும் படித்த இளைஞர்களும் சோஷலிஸம், கம்யூனிஸம் என புரட்சிகர சிந்தனைகளால் ஈர்க்கப்படத் தொடங்கிய காலம். ஆனால் காந்தி அமைதியாக தன்னுடைய சைவ உணவு பழக்கத்துடன் தொடர்புடைய சிறு குழுவுடன் தொடர்பு கொள்கிறார். காந்தி இளமையிலேயே எந்தப் பெரு லட்சிய அலையிலும் இழுத்துச் செல்லப்படாமல் அவரை சக சைவ உணவாளர்கள் காத்தனர் என்றே சொல்லலாம். தன் வாழ்வுடன் தொடர்புடைய நடைமுறையில் தினம் பின்பற்றக்கூடிய லட்சியங்களைத்தான் காந்தி கைக்கொள்ள முனைந்தார். ஆனால் தன் கடைபிடித்தலை முழுமையான தீவிரத்துடனும் உண்மையுடனும் காந்தி செயல்படுத்தினார். அவருடைய சைவ உணவு பழக்கத்துக்கு தாயிடம் செய்து கொடுத்த சத்தியம் காரணமாயிருந்தாலும் லண்டனில் தன் அன்றாட வாழ்வை மேலும் மேலும் எளிமைப்படுத்திக் கொள்ள பொருளாதார காரணங்களும் இருந்தன.
கிடைத்த குறிப்புகளைக் கொண்டு குஹா இவ்வாறு எழுதுகிறார்.
லண்டனில் காந்தியின் முதலாம் ஆண்டில், அவரது மாத செலவுகள் 12 பவுண்டுகள். இரண்டாம் ஆண்டில் அதை அவர் 4 பவுண்டுகளாகக் குறைத்துக் கொண்டார். சட்டைகளுக்குக் கஞ்சி போடுவதை விட்டுவிட்டார். இதற்கு உந்துதலாக இருந்தது ‘இங்கிலாந்தில் இருந்த சில மரபுக்கு மாறான மனிதர்கள்; நவநாகரிகத்தை கடவுள் போலத் தொழுவதை விட்டுவிட்டவர்கள்’. கோடை காலத்தில் டிராயர்கள் அணிவதை நிறுத்தினார். இது சலவைக்காரருக்கான செலவைக் குறைத்தது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எல்லா இடங்களுக்கும் நடந்தே போய்வரலானார். தபால்தலை செலவைக் குறைப்பதற்காக அவர் வீட்டுக்கு எழுதும் கடிதங்களை உறையில் இட்டு அனுப்புவதற்குப் பதிலாக அஞ்சலட்டைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். முடி வெட்டுபவரிடம் செல்வதற்குப் பதிலாகத் தானே சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தார். செய்தித்தாள்களைத் தானே வாங்குவதற்குப் பதிலாகப் பொது நூலகங்களில் படிக்க ஆரம்பித்தார்.
லண்டனில் இருந்து வெளியான தி வெஜிட்டேரியன் என்ற இதழில் காந்தி இந்து மதப் பண்டிகைகள், இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், மருத்துவ முறைகள் பற்றி எழுதத் தொடங்கினார். பின்னாட்களில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஈர்ப்புமிக்க தலைவராக விளங்கப் போகிறவர் தன்னுடைய இருபதுகளில் அன்று பிரபலமாகியிருந்த எந்த அரசியல் இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் நலவாழ்வுக்கான இதழொன்றில் கட்டுரைகள் வழியாக தன் சிந்தனைகளை வெளிப்படுத்தினார் என்பது சற்று விசித்திரமானது தான். கொந்தளிப்பான இளம் வயதில் காந்தி இது போன்றதொரு தீவிரமான மிதவாதியாக விளங்கியதற்கான காரணங்கள் ஆராய்ச்சிக்குரியவை. லண்டனில் இருந்து பாரிஸ்டர் பட்டத்துடன் சைவ உணவாளர்கள் மத்தியில் மதிப்பு வாய்ந்த சிந்தனையாளராகவும் விளங்கிய இளம் காந்தி இந்தியா திரும்பினார்.
காந்தியின் சுயசரிதையில் சட்டென நம்மை அறையும் ஒரு சம்பவத்தை காந்தி பம்பாயில் வந்து இறங்கியதும் எதிர்கொள்ள நேர்கிறது. அவருடைய தாய் புத்லிபாய் அவர் வருவதற்கு முன்பே இறந்து விட்டிருந்தார். காந்தியின் படிப்பு தடைபடக் கூடாதென அவர் குடும்பம் இச்செய்தியை மறைத்து விடுகிறது. லண்டனில் ஹென்றி சால்ட் என்ற ஆசிரியர் காந்திக்கு வாய்த்தார். எடுத்துக் கொண்ட பிரமாணங்களை நிறைவேற்றியதுடன் வெற்றிகரமாக படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அந்த இளம் வழக்கறிஞர் தாயின் மரணத்தால் நிலைகுலைந்தார். இச்சூழலில் காந்தி தன்னை விட மூன்று வயதே மூத்தவரான தன்னுடைய அடுத்த ஆசிரியரை சந்திக்கிறார். ராய்ச்சந்த் பாய் என்ற சமணரான நகை வணிகரின் காந்தி மீதான தாக்கம் முதன்மையானது. காந்தி அவருடைய ஆசிரியர்களில் பெரிய அளவில் முரண்படாதது ராய்ச்சந்த் பாயுடன் தான்.
காந்தி இந்தியா திரும்பிய சமயத்தில் அவருடைய சகோதரர் லக்ஷ்மிதாஸை ஒரு சிக்கலில் இருந்து மீட்பதற்காக காந்தி ஒரு ஆங்கிலேய அதிகாரியை சந்திப்பதற்காகச் செல்கிறார். சுயசரிதையில் காந்தி ஆங்கிலேய அதிகாரத்தின் திமிர்த்தனத்தை எதிர்கொள்ளும் தருணம் போல விரியும் அச்சந்தர்ப்பம் உண்மையில் காந்தி சற்று முறையற்ற ஒரு சிபாரிசுக்காகச் சென்றதாகத் தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. சகோதரர் போர்பந்தர் சமஸ்தானத்தில் பொறுப்புகள் ஏதும் வகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. காந்தியாலும் பம்பாயில் ஒரு வழக்கறிஞராக சோபிக்க முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் தான் டர்பனில் அப்துல்லா சகோதரர்களின் வழக்கை ஏற்று நடத்தும் சந்தர்ப்பம் நன்றாக ஆங்கிலம் அறிந்த அந்த இளம் வழக்கறிஞருக்கு கிடைக்கிறது. மனைவியையும் ஐந்து வயது மகன் ஹரிலாலையும் கைக்குழந்தையான மணிலாலையும் பிரிந்து காந்தி 1893ல் தென்னாபிரிக்காவுக்கு புறப்படுகிறார்.
தென்னாப்பிரிக்காவின் அரசியல் சூழல் சற்று விசித்திரமானது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற பெரிய தேசத்தை ஆட்சி செய்யவே நினைத்தனர். இந்தியாவின் தட்பவெட்பம் பெருமளவிலான ஆங்கிலேயர்கள் இங்கு குடியேறுவதை தடை செய்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் ஐரோப்பாவில் நிலவியது போன்ற சூழல் காரணமாக ஆங்கிலேயர்கள் நிரந்தரமாக குடியேறத் தொடங்கி இருந்தனர். சம அளவில் இந்தியாவில் இருந்து கூலிகளாகவும் வியாபாரிகளாகவும் இந்தியர்களும் தென்னாப்பிரிக்காவில் குடியேறிக் கொண்டிருந்தனர். நேட்டால், டிரான்ஸ்வால், டர்பன், ஜோஹனஸ்பர்க் பகுதிகளில் இந்தியர்கள் குடியேற்றம் பெருகிக் கொண்டிருந்த சூழலில் தான் காந்தி கப்பலேறுகிறார். இந்தியாவில் ஆட்சியாளர்கள் – குடிமக்கள் என்றிருந்த பிரிட்டிஷார் – இந்தியர் உறவு தென்னாப்பிரிக்காவில் சக குடிமக்கள் என்ற நிலையில் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலை ஆங்கிலேயர்கள் பெரிதாக விரும்பவில்லை. மேலும் வெள்ளையர்கள் என்ற போதிலும் போயர்களுக்கும் (டச்சுக்காரர்கள்) ஆங்கிலேயர்களுக்கும் அதிகாரப் போட்டி நிலவியது. இந்தியர்கள் சக குடிமக்களாக வருவதை இரண்டு தரப்புமே விரும்பவில்லை. அப்துல்லா சகோதரர்களுக்கு இடையேயான வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச தீர்வினை காந்தி எட்ட வைத்தார். வெற்றிகரமான இளம் வழக்கறிஞராக காந்தி இந்தியர்களின் வழக்குகளை எடுத்து நடத்தத் தொடங்கினார். ஆனால் போர்பந்தரிலும் லண்டனிலும் இல்லாத ஒன்றை காந்தி தென்னாப்பிரிக்காவில் உணர்ந்தார். வெள்ளையர்களுடைய இந்தியர்கள் மீதான வெறுப்பு. நேரடியாக காந்தியும் அதனால் பாதிக்கப்பட்டார். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் காந்தி இன்னமும் தென்னாப்பிரிக்க பூர்வ குடிகளை இந்தியருக்கோ வெள்ளையருக்கோ இணையானவராக கருத முடியாதவராகவே இருந்தார்.
இந்தியர்கள் தங்களுடைய கைவிரல் ரேகைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. இவ்வுத்தவரால் இந்திய சமூகம் சீண்டப்பட்டது. காந்தி இவ்வாறு எழுதினார்.
இந்தியன் என்றாலே காட்டுமிராண்டி என்று முடிவுகட்டுவதாகும். பூர்வகுடிமகன் ஒருவரை பதிந்து கொள்ளச் சொல்வதற்கு சரியான காரணம் இருக்கிறது; அவருக்கு இன்னும் உழைப்பின் அவசியமும் மதிப்பும் கற்றுத் தரப்படவில்லை. இந்தியனுக்கோ அது தெரியும்; தெரிந்திருப்பதால் தான் அந்த நாட்டுக்கு வரவழைக்கப்படுகிறார்.
ஆப்பிரிக்கர்களை இந்தியர்களுடன் இணைத்து யோசிப்பதற்கு காந்திக்கு இன்னமும் காலமெடுத்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவை விட்டு கிளம்பும் முன் ஜான் டூபே போன்ற ஆப்ரிக்க கல்வியாளர்களின் நட்பினை காந்தி சம்பாதித்து விட்டார். ஏறக்குறைய இருபதாண்டுகள் காந்திக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் நீடித்த இழுபறியும் காந்தியின் போராட்ட முறைகள் மெல்ல மெல்ல மாறி வளர்ந்து வரும் சித்திரத்தையும் இந்த நூல் அளிக்கிறது. நூலின் அனைத்து அத்தியாயங்களையும் விளக்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, இக்கட்டுரை தென்னாப்பிரிக்காவில் காந்தி நூலினை முன்வைத்து காந்தியின் இருபதாண்டு கால தென்னாப்பிரிக்க வாழ்வும் பீச் குரோவில் ஆடம்பரமான மாளிகையில் வசித்த வெற்றிகரமான இளம் வழக்கறிஞர் 1914ல் தன்னைத் தாமாக முன்வந்து முழுமையான ஏழையாக மாற்றிக் கொண்டு இந்தியா திரும்புவதையும் பேச முனைகிறது.
1896ஆம் ஆண்டு நேட்டாலில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக காந்தி இந்தியாவுக்கு வருகிறார். அங்கு நடைபெறும் இன ரீதியிலான ஒதுக்கல்களைப் பல கூட்டங்களில் பேசுகிறார். பம்பாயில் ஓரளவும் சென்னையில் பலமாகவும் காந்திக்கு ஆதரவு கிடைக்கிறது. நேட்டாலில் வசித்தவர்களில் பெரும்பங்கு தமிழர்கள் என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வில் தமிழர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. காந்தியின் தென்னாப்பிரிக்க போராட்டங்களில் இறுதிவரை துணை நின்ற ஆகிருதி மிக்கவராக தம்பி நாயுடு விளங்கினார். பின்னர் காந்தி இந்தியர்களான பதான்களால் தாக்கப்பட்ட போது தம்பி நாயுடுவே காந்தியின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். தம்பி நாயுடு தமிழர் என்ற போதிலும் அவர் இந்தியாவைக் கண்டதே இல்லை. மொரிஷியஸில் பிறந்து நேரடியாக நேட்டாலுக்கு வியாபாரம் செய்ய வந்தவர். சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு பெண்கள் கைதாக நேர்ந்த போது முதலில் கைதானவர்களில் தம்பி நாயுடுவின் மனைவியும் தாயும் இருந்தனர். காந்தி தென்னாப்பிரிக்காவை விட்டு நிரந்தரமாக புறப்பட்ட போது தேசச் சேவைக்கென தன்னுடைய மகன்களை நாயுடு காந்தியுடன் அனுப்பி வைத்தார். சத்தியாகிரகத்தில் இறுதி வரை உற்சாகமாகப் பங்கெடுத்தவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். சத்தியாகிரகத்தின் போது சிறைவாசத்தால் இறந்த மூவருக்கு காந்தி விடைபெறும் முன் அஞ்சலி செலுத்தினார். வள்ளியம்மை, நாகப்பன், நாராயணன். அவர்கள் மூவருமே தமிழர்கள். மேலும் காந்தி தமிழர்களை ஒப்பிட்டு தன் சொந்த மொழியினரான குஜராத்திகளைக் கடிந்து கொள்ளவும் தவறவில்லை.
‘என் குஜராத்தி சகோதரர்கள் எனக்கும் திருமதி காந்திக்கும் நிறையச் செய்திருக்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் போராட்டத்தின் நலனுக்காகத் தமிழ்ச் சமூகம் ஆற்றிய அளவுக்குத் தொண்டாற்றவில்லை என்று நான் சொல்லியாக வேண்டும். தமிழர்களிடமிருந்து ஒரு பாடத்தைக் குஜராத்திகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு அவர்களது மொழி தெரியாவிட்டாலும் அவர்கள் தான் இந்தப் போராட்டத்தில் எனக்கு ஆகப் பெரிய உதவி செய்திருக்கிறார்கள்.
1896ஆம் ஆண்டு டிசம்பரில் காந்தி டர்பனுக்கு கப்பலில் வந்து சேர்ந்தார். பிரயாணிகளிடம் நோய்த் தொற்று இருக்கிறது என்று சந்தேகப்படுவதால் கப்பல் துறைமுகத்திலேயே நிறுத்தப்படுகிறது. ஜனவரி வரை கப்பல் கரையடைய அனுமதி கிடைக்கவில்லை. நோய்த் தொற்று ஒரு சாக்கு. உண்மையான காரணம் காந்தி தான். காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த வெள்ளையர்கள் குறித்து அவதூறு கிளப்பி விட்டதாக காந்தியின் மீது சச்சரவு எழுந்து வெள்ளையர்களின் கடுமையான வெறுப்புக்கு ஆளாகிறார் காந்தி. அந்தச் சமயம் காந்திக்கு ஆதரவாக அவரது நண்பர் ஒருவர் குரல் கொடுக்கிறார். ஷேக் மேத்தாப் என்ற இந்த நண்பரும் தம்பி நாயுடு அளவு காந்திக்கு நெருக்கமானவர். ஒருவகையில் புத்லிபாய் அளவு காந்திக்கு முக்கியமானவர் என்று சொல்லலாம். சைவப் பின்னணி கொண்ட சிறு வயது காந்தியை ‘மாமிசம் சாப்பிடுதல்’ போன்ற சாகச செயல்களில் ஈடுபடுத்தி அன்னையிடம் பாவ மன்னிப்பு கேட்க வைத்த ஷேக் மேத்தாப் காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கை முழுவதும் உடனிருக்கிறார். முதலில் காந்தியுடன் வீட்டைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் மேத்தாப் வீட்டிற்கே பாலியல் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்ததால் நண்பரை காந்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இப்போது காந்தி டர்பன் துறைமுகத்தில் காத்திருந்த போது காந்தி இந்தியாவில் பேசியவை தன்னுடைய கருத்துக்களே என்று இந்த நண்பர் சொல்கிறார். சத்தியாகிரகம் தீவிரமடைந்த போது இந்திய நாளிதழ்களில் கவிதைகள் எழுதியும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும் காந்தியின் புகழை இந்த இஸ்லாமிய நண்பர் பரப்பி இருக்கிறார். தானே கைதாகியும் மனைவியை கைதாகச் சொல்லியும் தன் மீது கடுமை காட்டிய நண்பரின் மீதான பிரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஷேக் மேத்தாப்.
ஒருவழியாக, 1897 ஜனவரியில் டர்பனில் நுழைந்த காந்தி வெள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார். காந்தியை அந்தத் தாக்குதலில் இருந்து காப்பதும் அலெக்சாண்டர் என்ற ஆங்கில அதிகாரியும் அவர் மனைவியும் தான். தாக்குதலுக்குப் பிறகும் காந்தி பிரிட்டிஷ் சட்டங்களின் மீது நம்பிக்கை இழக்கவில்லை. அடுத்த ஆண்டே பிரிட்டிஷ் ராணுவத்துக்கும் போயர்களுக்கும் போர் மூண்ட போது காந்தி இந்தியர்களைக் கொண்டு காயம்பட்டவர்களுக்கு உதவ ஒரு ஆம்புலன்ஸ் படையை அமைக்கிறார். இந்தியர்களின் சமூகப் பங்களிப்பை அதிகரிப்பதன் வாயிலாக பிரிட்டிஷாரின் நல்லெண்ணத்தைத் தூண்டி இந்தியர்கள் மீதான நிற வெறியைக் குறைப்பது காந்தியின் எண்ணம். ஆனால் நிகழ்ந்ததோ வேறு.
போருக்குப் பிறகு போயர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு புது அரசாங்கம் அமைந்த பிறகு அவர்களின் பொதுவான எதிரிகளாக லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எண்ணிக்கை கொண்ட இந்தியர்கள் மாறுகிறார்கள். இந்தியர் தரப்பில் இருந்து நேட்டால் இந்தியன் காங்கிரஸ் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தன்னுடைய இந்தியப் பயணத்தின் வழியாக ராணடே, கோகலே, திலகர் போன்ற இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் காந்தி தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் தான் காந்தி இந்தியன் ஒப்பீனியன் வார இதழை 1903ல் தொடங்குகிறார். தமிழ், இந்தி, குஜராத்தி, ஆங்கிலம் என்று நான்கு மொழிகளுடன் இதழ் வெளியாகத் தொடங்குகிறது. ஹென்றி சால்ட்டை வாசித்த பிறகு தீவிர சைவ உணவாளராகவும் அது சார்ந்த வாழ்க்கை முறையில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறிய காந்தி ஜான் ரஸ்கினை வாசித்த பிறகு எளிமையான வாழ்க்கை முறைக்குத் தன்னை பழக்கிக் கொள்கிறார். ஃபீனிக்ஸ் பண்ணைக்கு இந்தியன் ஒபீனியன் பத்திரிக்கை அலுவலகத்தை மாற்றிக் கொள்கிறார். பீச் குரோவில் இருந்த ஆடம்பரமான வீட்டை விட்டு வசதி குறைந்த ஒரு வீட்டில் குடியேறுகிறார். தொடர்ச்சியான மனு அளித்தல்கள் லண்டனில் சென்று நடத்திய லாபிக்கள் எதுவும் இந்தியர்கள் பதிவு செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற நிபந்தனையை மாற்ற முடிவதில்லை. இந்தச் சூழலில் தான் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும் எம்பயர் தியேட்டர் கூட்டம் 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடைபெறுகிறது. சாத்விக எதிர்ப்பு (போராட்டமுறை சத்தியாகிரகம் என்ற பெயர் மேலும் ஓரிரு வருடங்கள் இருக்கின்றன) என்ற போராட்ட முறையை காந்தி முன்வைக்கிறார். இந்தியர்கள் பதிவு அலுவலகம் திறக்கப்பட்ட பிறகும் பதிவு செய்து கொள்ளப் போவதில்லை என்றும் வற்புறுத்தப்பட்டால் கைதாகி சிறை செல்வது என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
காந்தி இந்தப் போராட்ட முறைக்கான முன்னுதாரணமாக ஹென்றி தோரோவின் சிந்தனைகளை எடுத்துக் கொண்டிருப்பார் என்று நம்பப்படுகிறது. ஆனால் மூன்றாண்டுகள் பத்திரிக்கையாளராக ஏகப்பட்ட கட்டுரைகள் தலையங்கங்கள் எழுதிவிட்ட காந்தி தோரோ குறித்து எங்கும் குறிப்பிடவில்லை. தன்னுடைய ஆசிரியர்களுக்கு ஹென்றி சால்ட், ராய்ச்சந்த் பாய் ,டால்ஸ்டாய் குறித்தெல்லாம் பேசியும் எழுதியும் வந்த காந்தி சாத்விக எதிர்ப்பு முறையை கைக்கொண்ட பிறகே தோரோவை வாசித்திருக்க வாய்ப்பு அதிகம்.
இந்திய மனதுக்குக் கிளர்ச்சி செய்வது புதிய விஷயமே அல்ல. இந்தியாவிலிருக்கும் சாதிகளின் வலைப்பின்னல், சரியான விதத்தில் பயன்படுத்தப்படும் போது அந்த ஆயுதத்துக்கு இருக்கும் பயன்பாட்டையும் மதிப்பையுமே எடுத்துக் காட்டுகிறது. ஒதுக்கி வைப்பதும் விலக்கி வைப்பதும் இந்தியாவில் இன்று பயன்படுத்தப்படும் வலிமையான உபகரணங்களாகும்; துரதிர்ஷ்டவசமாக அவை அற்பமான விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன; பதிவுச் சட்டம் என் நாட்டு மக்களை அந்தப் பயங்கரமான ஆயுதத்தை ஒரு மேலான நோக்கத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று உணரச் செய்யுமானால், எல்ஜினும், டிரான்ஸ்வால் அரசும் அவர்களின் நன்றிக்கு உரியவர்களாவர்.
அமைப்புக்கு கட்டுப்படாதிருப்பது என்பதை காந்தி புரிந்து கொண்ட விதம் இத்தகையதே. 1907ல் கட்டாயப் பதிவுக்கான அலுவலகம் திறக்கப்படுகிறது. மாண்ட்ஃபோர்ட் சாம்னி பதிவு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். பொதுவாக அடக்கமான சமநிலையுடன் வெளிப்படும் காந்தியின் எழுத்துத் தொனி கட்டாயப் பதிவினைப் பற்றி குறிப்பிடும் போது சற்று கிண்டலாக ஒலிக்கிறது.
திரு சாம்னி புதிய சட்டப்படி ரெஜிஸ்ட்ரார் ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சமூகம், அவர் வெறுமனே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும்படிப் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இதை எழுதியிருப்பவரின் பெயர் பதிவேட்டில் ஒருபோதும் இடம்பெறாது. இந்தியர்கள் எல்லோர் விஷயத்திலும் கூட இப்படியே நிகழ வேண்டும் என்பதே எப்போதும் இறைவனிடம் என் பிரார்த்தனை.
சத்யாகிரகிகள் பதிவு செய்துகொள்ள மறுக்கின்றனர். அரசு கால நீட்டிப்புத் தருகிறது. அப்போதும் சொற்ப எண்ணிக்கையில் தான் பதிவு நடைபெறுகிறது. 1908 ஜனவரி வாக்கில் கைதுப் படலம் தொடங்குகிறது. கைதாகிறவர்களுக்காக காந்தி வழக்கறிஞராக களமிறங்குகிறார். அவர்கள் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொல்கிறார். ஆனால் தன்னுடைய கட்சிக்காரர்கள் சிறைக்குச் செல்லும்படி விட்டு விடுகிறார். தானும் சிறை செல்கிறார். காந்தியின் இருபது வயது மகன் ஹரிலாலும் சிறைக்குச் செல்கிறார். ஆயிரக்கணக்கானவர்கள் தாமாக முன்வந்து சிறை செல்வதைக் கண்டு அரசு அதிர்ச்சி அடைகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. காந்தியின் எதிர்த்தரப்பில் போயரான ஜெனரல் ஸ்மட்ஸ் இருக்கிறார். அவருக்குப் பின்னே தென்னாப்பிரிக்காவில் குடியேறிக் கொண்டிருந்த ஐரோப்பிய சமூகத்தின் இந்தியர்கள் மீதான கடுமையான மன விலக்கம் இருக்கிறது. மீண்டும் காந்தி 1909ல் லண்டன் செல்கிறார்.
மதன்லால் திங்ரா என்ற இந்திய மாணவர் சர் கர்சன் வைலி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பாக லண்டனில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. பேசியவர்களிலும் திங்ராவின் செயலை நியாயப்படுத்தியவர்களில் சவார்க்கரும் ஒருவர். காந்தியும் சவார்க்கரும் 1909ல் சந்தித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இந்திய மக்களின் ஆதர்சமாக மாறுவதற்கு முன்பும் கூட காந்தி வன்முறை புரட்சி பற்றிய தன் பார்வையைத் தெளிவாகவே கொண்டிருந்திருக்கிறார்.
வைலி இந்திய மாணவர்கள் மத்தியில் ஒரு விருந்தினராக வந்தவர். துரோகச் செயல் எதுவும் என்றும் ஒரு நாட்டுக்கு நற்பலன் தர முடியாது. அப்படியே பிரிட்டிஷார் இம்மாதிரியான படுகொலைகள் காரணமாக நாட்டை விட்டுச் சென்று விட்டாலும், அவர்களுக்குப் பதில் ஆளப் போவது யார்? ஒரே பதில் கொலைகாரர்கள் என்பதே. அப்போது யார் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஆங்கிலேயன் ஆங்கிலேயனாக இருப்பதாலேயே மோசமானவனாகி விடுவானா? இந்தியத் தோல் கொண்ட எல்லோருமே நல்லவர்களா? … கொலைகாரர்களின் ஆட்சியால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் விளையாது – அவர்கள் வெள்ளையர்களாக இருந்தாலும் சரி, கறுப்பர்களாக இருந்தாலும் சரி.
நல்ல நோக்கம் கொண்ட நேரடியான சாத்விக எதிர்ப்பு என்பது மட்டுமே காந்தியின் வழிமுறையாக இருந்தது. குஹா இந்த நூலில் காந்தியின் இந்த வழிமுறையை அன்று இந்திய தேசிய காங்கிரஸில் நிலவிய மிதவாதம், தீவிரவாதம் என்ற இரு பிரிவுகளுக்கு நடுவில் நிலைகொள்வதாக காண்கிறார். மிதவாதிகள் ஆங்கிலேய அரசினை நல்லெண்ணம் கொண்டதாகக் கருதினர். தொடர்ச்சியாக மனு எழுதுதல், குறைகளை அரசுக்கு தெரிவித்தல் போன்றவற்றை வழிமுறையாக கைக்கொண்டனர். மாறாக தீவிரப் பிரிவினர் கிளர்ச்சி செய்தல் ,வன்முறைப் புரட்சி போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். காந்தி வெறுமனே மனு எழுதிக் கொண்டிருக்காமல் அதே நேரத்தில் கிளர்ச்சியும் செய்யாமல் வெள்ளை அரசாங்கத்தின் மனசாட்சியுடன் பேச முற்பட்டார். தங்களை வறுத்திக் கொள்வதன் வழியாக உரையாடலை சாத்தியப்படுத்த முனைந்தார்.
ஒரு அனுபவமற்ற வழக்கறிஞராக தென்னாப்பிரிக்கா சென்ற காந்தியை அந்நாட்டின் ஒன்றரை லட்சம் பேர் கொண்ட இந்திய குடியேற்றத்தின் தலைவராக மாற்றியதில் காந்தியின் சொந்த தனித்த அணுகுமுறைகள் அளவுக்கு நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளும் அவரது திறனும் முக்கியப் பங்காற்றியது. இந்தியாவில் நிகழ்ந்த மேலும் பெரிய நிகழ்வுகளால் காந்தியின் ஆரம்ப கால நட்புகளும் தொடர்புகளும் பெரிதாக கவனம் பெறாமல் போய்விட்டன. இந்த நூல் காந்தியின் நண்பர்களை மிக விரிவாக அறிமுகம் செய்கிறது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்த மிதவாதத் தன்மை கொண்ட தாதாபாய் நௌரோஜி, அவருக்கு அடுத்ததாக பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சென்ற பௌநாக்ரி போன்றவர்களுடன் காந்தி அரசியல் ரீதியான நட்பு கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்க பிரச்சினையை லண்டனில் கவனம் பெறச் செய்தவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள். பர்மாவில் வணிகம் செய்த ப்ரன்ஜீவன் மேத்தாவுடனான காந்தியின் நட்பு இறுதிவரைத் தொடர்ந்திருக்கிறது. காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் குறிப்பிட்டவரும் மேத்தா தான். பின்னாட்களில் மேத்தாவின் மகள் ஜக்கிக்கு காந்தியின் இரண்டாவது மகன் மணிலாலுடனான உறவு காரணமாக ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு பின்னும் கூட அந்த நட்பு தொடரவே செய்திருக்கிறது.
தம்பி நாயுடு, ஷேக் மேத்தாப் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டேன். யூதர்களான ஸெர்மன் காலன்பாக், ஹென்றி போலாக், அவர் மனைவி மில்லி கிரஹாம் போலாக், முதன்முதலாக காந்தியின் சுயசரிதையை எழுதியவரான ஜோசப் டோக், காந்தியை ஆசிரியராகவே ஏற்றுக் கொண்டு பீனிக்ஸ் பண்ணையில் தங்கிவிட்ட ரோட்ஸ், தென்னாப்பிரிக்காவில் காந்தியின் உதவியாளராக பணிபுரிந்த சோன்ஜா ஸ்லேஷின் என்று காந்தியின் நட்புவட்டம் தேசம் கடந்தது. இவர்கள் வெறுமனே நண்பர்கள் என்பதைத் தாண்டி போராட்ட காலத்தில் சத்தியாகிரகிகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் செய்திருக்கின்றனர். காந்தியின் உதவியாளரான சோன்ஜா ஸ்லேஷின் சத்தியாகிரகிகள் சிறையில் இருந்த போது தன்னுடைய மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு அவர்களுக்கு உணவும் செய்தியும் பரிமாறியிருக்கிறார்.
ஆனால் வெற்றிகரமாக நட்புகளைப் பேண முடிந்த காந்தியால் குடும்பத்தை அவ்வளவு வெற்றிகரமாக நடத்த இயலவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருபது வயதில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் காந்தியின் மூத்த மகன் ஹரிலால். தந்தையுடனான பிணக்கு காரணமாக தென்னாப்பிரிக்காவில் இருந்தும் தந்தையிடமிருந்தும் ஏறக்குறைய தப்பிச் செல்கிறார். மணிலால் காந்தியுடன் ஒத்துப் போகும் மகனாகவே இருந்தும் ஒழுக்க மீறல் என்று தந்தை நம்பும் செயலால் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். கஸ்தூர்பாவுடனான காந்தியின் உறவு கடமையுணர்வுக்கும் பிரியத்துக்கும் நடுவே தத்தளிக்கிறது. இந்த விரிசல்களுக்கு பிறரை மட்டுமே குற்றம் சொல்லிவிட முடியாது. காந்தியின் சிக்கல் நிறைந்த ஆளுமையும் குடும்ப உறுப்பினர்களை வருத்தியதில் பங்காற்றி இருக்கிறது.
நேட்டால், டிரான்ஸ்வால், ஜோஹனஸ்பர்க், கேப் மாகாணங்கள் தென்னாப்பிரிக்க ஒன்றியமாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. சத்தியாகிரகிகளுக்கும் அரசாங்கத்துக்குமான இழுபறி நீடித்தவண்ணமே இருக்கிறது. ஜெனரல் ஸ்மட்ஸ் விட்டுக் கொடுக்காதவராகவே நீடிக்கிறார். இந்தியாவின் செல்வாக்கு பெற்ற தலைவரான கோகலே 1912ல் காந்தியால் தென்னாப்பிரிக்காவுக்கு வரவழைக்கப்படுகிறார். பேச்சுவார்த்தை தொடர்கிறது. கோகலேவுக்கு ஜெனரல் ஸ்மட்ஸால் சில வாக்குறுதிகள் தரப்படுகின்றன. ஆனால் அவர் திரும்பிச் சென்ற சில மாதங்களில் அரசின் பிடி மீண்டும் இறுகுகிறது. இரண்டு முக்கியமான விஷயங்கள் போராட்டக் களத்தில் முதன்மைப்படுகின்றன.
இந்தியாவில் பலதார மணம் கட்டுப்படுத்தப்படாத காலம் அது. மேலும் இஸ்லாமியர்களுக்கு அவர்களது மதம் நான்கு மனைவிகள் வரை அனுமதித்திருக்கிறது. மேலும் தலாக் முறை இஸ்லாமிய திருமணங்களை ஸ்திரமற்றதாக்கி இருக்கிறது. இக்காரணங்களால் பிரிட்டிஷ் சட்டப்படி இந்தியர்களின் திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படுகின்றன. ஏனெனில் வெள்ளை அரசால் ஒருதார மணம் அப்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. கஸ்தூர்பா உட்பட இந்தியப் பெண்கள் கொந்தளித்து எழுகின்றனர். இதுவரை கணவர்கள் சிறை சென்றிருக்க குடும்பத்தை தாங்கியிருந்த பெண்கள் தாங்களே சிறை செல்ல முன்வந்து கைதாகின்றனர்.
அடுத்ததாக இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று பவுண்ட் வரி. வியாபாரிகளை இந்த வரி பெரிதாக பாதிக்கவில்லை. ஆரம்பத்தில் காந்தியின் தொடர்பும் அதிகமாக வியாபாரிகளுடன் இருந்ததால் அவரும் இதனை முதன்மையான பிரச்சினையாகக் கருதவில்லை. ஆனால் காந்தியின் போராட்ட முறை அவர் மீதான இந்தியர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தத் தொடங்கியிருந்தது. கரும்புத் தோட்டக் கூலிகள் இந்த வரியால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் மூன்று பவுண்ட் வரியும் இம்முறை கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இந்தியர்களின் சுய கௌரவம் சார்ந்ததாகத் தொடங்கிய போராட்டம் பெண்கள், கூலித் தொழிலாளிகள் என ஒட்டுமொத்தத் தென்னாப்பிரிக்க இந்திய சமூகத்தின் போராட்டமாக மாறுகிறது. இந்தியாவிலும் பல செய்தித்தாள்கள் காந்தி முன்னெடுத்த போராட்டத்தை புகழ்ந்து எழுதுகின்றன. அரசு சமாதானத்துக்கு வருகிறது. சமாதானம் ஏற்பட்டதிலும் ஜெனரல் ஸ்மட்ஸ் முக்கியமான பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது! இந்திய மணங்கள் செல்லுபடியாகும் என்றும் மூன்று பவுண்ட் வரி ரத்து செய்யப்படுகிறது என்றும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 1914ஆம் ஆண்டு ஜூலையில் இன்னும் பெரிய மக்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டியவராக காந்தி இந்தியா திரும்புகிறார்.
ஃபீனிக்ஸில் காந்தி நடைமுறைப்படுத்திய ஒரு சிறு விஷயம் அவருடைய ஒட்டுமொத்த ஆளுமையின் அடிப்படைப் பண்பினை புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஃபீனிக்ஸில் குடியிருந்தவர்களின் குழந்தைகளுக்கு பாடமெடுப்பதற்காக அங்கு ஒரு பள்ளி ஏற்படுத்தப்பட்டிருந்தது. காந்தியே அதில் பாடமெடுக்கவும் செய்தார். மேலும் மாணவர்களின் உணவுப் பழக்கங்களும் காந்தியால் வழிநடத்தப்பட்டன. கீரைகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், பருப்பு வகைகள் போன்றவையே பெரும்பாலும் உணவு வகைகளில் இடம்பெற்றன. ஆனால் டீ, கோகோ, காபி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் தடை செய்யப்பட்டதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் அல்ல. அவை பண்ணை அடிமைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதே காரணமாக அமைந்தது. தான் அநீதி என்று நம்பும் ஒன்றுடனான தொடர்பை தார்மீக ரீதியாக விளக்கிக் கொள்ளும் இந்தப் பண்பு தான் காந்தியின் எல்லா செயல்பாடுகளிலும் செயல்பட்டிருக்கிறது. அவர் குரல் பின்பற்றப்படக் கூடியதாக இருந்ததற்கும் இந்தத் தார்மீக வலிமையே காரணமாக அமைந்திருக்கிறது.
சிவசக்தி சரவணின் மொழிபெயர்ப்பு ஒரு புனைவினை வாசித்துச் செல்லும் விரைவுடன் நூற்றக்கணக்கான அடிக்குறிப்புகள் கொண்ட இந்தப் பெரிய வாழ்க்கை வரலாற்று நூலை வாசிக்கச் செய்கிறது.
தென்னாப்பிரிக்காவில் காந்தி – ராமச்சந்திர குஹா (தமிழில் – சிவசக்தி சரவணன்), கிழக்கு பதிப்பகம்