நேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை? “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமானால் குழந்தைமையின் தூய அறியாமைகளோடு அணுகிப்பாருங்கள்” என்று பதிலளிக்கிறார். இதுவொரு கவித்துவமான பதில் என்றே தோன்றுகிறது. “தூய அறியாமை” போதாதென்றே படுகிறது. அந்தக் குழந்தைமையில் கொஞ்சம் ஞானத்தின் தாடி மண்டியிருத்தல் அவசியம் என்று தோன்றுகிறது. முகுந்த் நாகராஜன் சொல்லும் குழந்தைமையும் அபி சொல்லும் குழந்தைமையும் ஒன்றல்ல. இரண்டிற்கும் நோக்கங்கள் வேறு.
அபியின் கவியுலகை ஆழங்கண்டு சொல்ல என்னால் ஆகுமா என்று தெரியவில்லை. அதற்கான கண்கள் என்னிடமில்லை என்றே நம்புகிறேன். எனவே அதைத் தொட்டுத் தொட்டுத் தடவும் ஒரு எளிய முயற்சி இது. கண்மூடித் தடவுபவன் உண்மையில் எல்லையின்மைகளைத் தான் தடவுகிறான். ஆனால் அதைச் சொல்லுகையில் ஒரு எல்லை பிறந்து விடுகிறது. தடவுதலில் கைகளுக்கு ஒரு எல்லையும் அதன்வழி கருத்தில் விரியும் கற்பனைகளுக்கு ஒரு எல்லையின்மையும் உருவாகிறது. எனவே ஒருவன் தடவிக் கண்டு சொல்வதற்கு கொஞ்சம் காது கொடுப்பதில் பிழையொன்றுமில்லை தான். அபியின் அநேக கவிதைகளையொட்டி எனக்கு உளற எதோ இருக்கிறது. அந்த உளறலில் இருந்து வாசகருக்கு ஏதேனும் கிடைத்தால் மகிழ்ச்சியே.
அபியின் கவிதைகளில் வருகிற “ நீ” என்கிற முன்னிலை ஒருவித தற்சுட்டே என்று தோன்றுகிறது. அவரோடு அவர் பேசும் பேச்சுக்களாக ஒலிக்கின்றன இக்கவிதைகள். நவீன மனிதன் பேஃஸ்புக்கில் இருக்கிறான். வாட்ஸ்அப்பில் இருக்கிறான். டிக்-டாக்கில் இருக்கிறான். அவன் தன்னோடு தானிருக்கும் நேரங்கள் வேகமாகக் குறைந்து வருகிற இந்நாட்களில் அபியின் இந்தத் “தற்பேச்சு” கூடுதல் முக்கியத்துவமுடையதாகிறது.
சமையல்
என்புகைக்கூண்டின் வழியேஎன் சதைக்கருகலைமோப்பம் கொண்டுவிருந்தெனக் கூச்சலிட்டுஉள் நுழைந்தன,தம் அலகுகளைத் தின்று தீர்த்தஅராஜகப் பசிகள்.
(அபி கவிதைகள் பக்கம். 33)
இந்தப் பசியோடு அபி நடத்தும் யுத்தங்கள் தான் அவரது கவியுலகு.
“அரூபக் கவிஞர்” என்று பெயர் பெற்றவர் அபி. ரூபம் தான் அரூபமாகிறது. அபியின் கவிதைகளில் பத்மினியும் சரோஜாதேவியும் இல்லையா என்று கேட்டால், “ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்“ என்று சொல்லலாம்.
இக்கவிதைகளில் ஒன்று இன்னொன்றாக மாறுவது தொடர்ந்து நடக்கிறது. அதாவது சத்தம் வண்ணமாக, வண்ணம் ஸ்பரிஸமாக, ஆகாயம் ஊசிமுனையாக. இப்படி ஒன்று இன்னொனறாக மாறுகையில் என்ன நடக்கிறது? ஒரு புதிய உலகு பிறக்கிறது. நாசமாய்ப் போன, சலித்த இந்த உலகிற்கு மாற்றாக இன்னொரு உலகு… இரண்டு நிமிடமே நீடிக்குமென்றாலும் எனக்கு அது அவசியமே. சமீபத்தில் வந்திருக்கும் பிரான்சிஸ் கிருபாவுடைய கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்”. ஒளி ஒலியாகிப் பிறக்கும் அந்தச் சின்னஞ்சிறு உலகைக் காண இந்தத் தலைப்பை நான் அடிக்கடி சொல்லிப் பார்ப்பதுண்டு.
அபி எழுகிறார்..
சுருதி தோய்ந்துவானும் நிறமற்றுஆழ்ந்தது மெத்தெனபூமியில்ஒலிகளின் உட்பிரிவுபால் பிடித்திருந்ததுவெண் பச்சையாய்.(அபி கவிதைகள் பக் . 6)
இந்தக் கவிதைகளில் இருப்பு, இன்மை ஆகியவை தொடர்ந்து பேசப்பகின்றன. சதா இருந்து கொண்டே இருக்கும் இருப்பிற்கு எதிராக “இல்லாதிருக்கும் இருப்பைப்” பேசுகிறார் அபி.
நெடுங்காலம் கடுகாகிக்காணாமல் போயிற்றுசுருதியின்பரந்து விரிந்து விரவி..இல்லாதிருக்கும் இருப்புபுலப்பட்டதுமங்கலாக.(அ. க. பக். 5)
சிலப்பதிகாரம் சொல்லும் ”வினைவிளை காலம்” என்பது புரட்சிக்கு எதிரானது. கொஞ்சம் வளைத்தால் அதை ஆதரவானதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். அபியோ,
வினை அறுப்போர்எவருமில்லைஎங்கும் எங்கும் வினைமயம்(அ. க. பக். 7)
என்கிறார். அதாவது வினை தான் நிச்சயம். அது எப்படி விளையும் என்பது நிச்சயமில்லை. இந்த வரிகள் புரட்சிக்கு அப்பால் இருக்கின்றன. புரட்சிக்கு அப்பால் இருக்கும் ஒன்றைக் காண்பது ஒரு எளிய இடதுசாரி மனத்திற்கு தொல்லை தருவது. அதைக் கடும் குழப்பங்களில் ஆழ்த்துவது. உலகைத் தற்செயல்களின் நாடகமாகக் காண அதனால் இயலாது.
பாவம் X புண்ணியம், நன்மை X தீமை, அழகு X அழுக்கு என்கிற இருமைகளிலிருந்து வெளியேற முயல்பவராக இருக்கிறார் அபி. ஒரு மனித உயிர்க்கு அது அவ்வளவு சாத்தியமானதில்லை. அது உழல்வது இந்த இருமைகளில் தான்.
இக்கவிதைகள் “கண்டறிதலில்” முனைப்பு கொண்டு ஓடி ஓடித் தேடுகின்றன. அப்படித் தேடி அடைந்ததை கேலி பேசி நிராகரித்து மீண்டும் தேடத் துவங்குகின்றன. நமது உலகம் நமக்கு நாமே போர்த்திக் கொண்டது தான். அதன் அர்த்தம் அப்படியொன்றும் நிச்சயமானதில்லை. சமயங்களில், கசப்பு, இனிப்பு, வெறுப்பு, விருப்பு ஆகியவை பெயரளவில் மட்டுமே வேறானவை எனக் கண்டுகொள்கிறோம். அபியின் கவிதைகளில் “நார்க்காடு” என்கிற உருவகம் பலமுறை இடம் பெறுகிறது. உரிக்க, உரிக்க வந்து கொண்டே இருக்கும் முடிவற்ற, தெளிவற்ற ஒன்று அது.
“காலம்” பொதுவாக நாம் காண மறுப்பது. விரும்பாததும் கூட. அபி அதை விதவிதமாகக் கண்டு எழுதியிருக்கிறார். என்ன தான் நாம் ஒளிந்து கொள்ள விரும்பினாலும் காலத்திற்கு தப்பிப் பிழைக்க என ஒரு இடம் பூமியில் இல்லை. கஞ்சாத்தூளை உள்ளங்கையில் வைத்து அப்படி அழுத்தி அழுத்தி தேய்ப்பது எதற்கு? காலத்தை மயக்கத்தான். அது நேற்றும், இன்றும், நாளையுமற்ற ஒரு உலகிற்குள் அவனை அழைத்துச் செல்கிறது. காலம் மங்கினால் சகலமும் மங்கி விடுகிறது.
எதையாவது தொட்டால் தானே ஏதாவது நிகழும். எதையாவது கடைந்தால் தானே அமுதோ நஞ்சோ வெளிப்படும். எதையும் தொட்டு விடாத சுகமொன்றைப் பேசுகிறார் அபி.
எதையும் தொட்டிராதஎன் புதிய கைகள்எங்கெங்கும் நீண்டுஎதையும் தொடாதுதிளைத்தன.(அ. க. பக். 75)
வெளிப்பாடு, உள்பாடு என்று இரண்டு கவிதைகள் அடுத்ததடுத்து உள்ளன. “உள்பாடு” கவிதைக்கு வரிக்கு வரி உரை சொல்ல என்னால் முடியாது. சொன்னால் ஏதோ ஒன்று வழுக்கி விடும். அபியின் பல கவிதைகளும் இப்படி உரை சொல்ல எத்தனிக்கையில் வழக்கி விடுகின்றன. ஆனால் அதைப் படிக்கையில் அடைந்த பரவசம் உண்மை.
உள்பாடு
இந்தப் பழக்கம்விட்டு விடு.எங்காயினும்வானிலேனும் மண்ணிலேனும்புள்ளியொன்று கிடக்கக் கண்டால்சுற்றிச் சுற்றிவட்டங்கள் வரைவதும்சுழன்று சுழன்றுகோலங்கள் வரைவதும்குறுக்கும் நெடுக்குமாய்ப்புள்ளியின் வழியேபரபரத்துத் திரிவதும்…இந்தப் பழக்கம் விட்டுவிடுமுடிந்தால்புள்ளியைத் தொட்டுத்தடவிஅதன் முடிதிறந்துஉள் நுழைந்துவிடு.(அ. க. பக். 48)
நமக்குப் புள்ளியைக் காண்பதே அரிது. முதலில் புள்ளியைக் கண்டு, பிறகு அதன் முடியைக் கண்டறிந்து அதையும் திறந்து உள்நுழைவதென்றால்…. சார், மனிதர்களிடம் எதிர்பார்ப்பதற்கும் ஒரு அளவிருக்கிறதல்லவா?
அபியின் “மாலை கவிதைகளில்” உள்ள மாலை நமது வழக்கமான மாலையல்ல. நாம் அறிந்த பொன் மாலைப் பொழுதல்ல. அவை கண்ணிற்குத் தோன்றும் ரம்மியமான காட்சியாக இல்லாமல் நமது கற்பிதங்களின் அபத்தங்கள் இறங்கி வரும் களமாக மாறியிருக்கின்றன. வாழ்வு ஓர் ஓட்டப் பந்தயம் என்று சொல்லி வளர்க்கப்பட்டிருக்கும் நமக்கு புதிய பாடங்களைச் சொல்லி, வேறு வேறு வெளிச்சங்களைக் காட்டும் இக்கவிதைகள் “முன்-பின்” என்பதைக் கலைத்துப் போட்டு விடுகின்றன.
அபியின் லட்சியம் ஒரு “காலியிடம்”. லட்சியம் என்று சொல்ல முடியாது. லட்சியம் என்று உச்சரித்த மாத்திரத்திலேயே அந்தக் காலியிடம் காணமல் ஆகக் காண்கிறோம். ஒரு எளிய மனித உயிரால் வெகு நேரம் அந்தக் காலியிடத்தில் நிலைத்திருக்க இயலாது. அவனைச் சுற்றிலும் ஆயிரம் விசயங்களின் மினுக்காட்டம். ஏதோ ஒரு ஆட்டத்தில் கலந்து விடவே அவன் விரும்புகிறான். அவனால் அவ்வளவு தான் தாக்குப் பிடிக்க முடியும்.
எனக்கு வந்தபரிசுப் பொட்டலங்கள் ஒன்றில்வெறும் காலியிடம் விரவிக் கிடந்தது.(அ. க. பக். 197)
என்று துவங்குகிறது ஒரு கவிதை.
எப்படியோ நாம் உருவாகித் தொலைத்து விட்டோம். அதன்பின் நடக்கிற கூத்தில் கவனம் செலுத்துவது தான் பொது இயல்பு. ஆனால் அபி எல்லாவற்றிற்கும் “உருவாகும் விதம்” தான் காரணம் என்று நம்புகிறார். எனவே “உருவாகும் வரலாற்றை” ஆழத்திற்குச் சென்று தேடுகிறார். ஆனால் அங்கு அவர் காண்பது அடர்ந்து செறிந்த ஒரு இருள். தீராத குழப்பங்கள்… வெறும் வினாக்கள். இந்த உருவாகும் வரலாறும், அபி சொல்லும் காலியிடமும் ஒரு விதத்தில் அருகருகே இருக்கக் காண்கிறோம். அடர்ந்த இருளைக் கண்டு வந்தாலும் வாழ்வின் மெய்மையைத் தேடி திரும்பத் திரும்ப வேறு வேறு ஆழங்களுக்குச் செல்வதை அபி நிறுத்துவதில்லை. அவரது கவியுலகின் ஆதார இயல்பாக இருக்கிறது அது. அவரது கட்டுரை வரியொன்று இப்படிச் சொல்கிறது.. “கவிதை என்பது இவனுக்குக் கற்பனை இல்லை. மூலங்களைத் தொட்டு முடிவிலிகளின் வழியாக செல்லும் முயற்சி”.
அபியின் சில கவிதைகளை வாசிக்கையில் எனக்குச் சிரிப்பு வந்தது. ( எ.கா: உள்பாடு, அதுதான் சரி ) வாழ்வின் மெய்மையைத் தேடி அவ்வளவு ஆழமாகப் போகையில் சிரிப்பு வருவது இயல்பு தானே?
கீழே எறிந்துவிட்டுமறுபடி நினைத்தால்நினைக்க நினைக்கநா ஊறுகிறது.(அ. க. பக். 227)
என்பதாக அவரது முதல் தொகுப்பில் தொடங்கும் அபத்த தரிசனம் சமீபம் வரை தொடர்கிறது. ஆனால் “கசப்பு” என்கிற நிலையிலிருந்து அது “இயல்பு” என்கிற நிலைக்கு நகர்ந்து விட்டதாகத் தோன்றுகிறது. அதாவது அழுகை நின்று விட்டது.
அபி எதையாவது கொஞ்சம் அழுத்துவாரெனில் அது சங்கீதத்தைத் தான். அதையும் கூட நாம் அழுத்துவது போல் அழுத்துவதில்லை அவர். “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை ஒரு சிறுவனைப் பாட வைத்து அதைக் கண்டு கண்டு நெக்குருகியோடி ஒருவரையொருவர் கட்டித் தழுவி அரங்கையே மூக்குச் சளியால் மூடிவிடப் பார்க்கும் “சிங்கர்ஸ் ஷோ”க்கள் வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் “நாதத்தை புலன்களில் பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்” என்று கவிதை படிக்கிறார் அபி. “இந்த ஆள வச்சிகிட்டு ஒரு கொல கூட செய்ய முடியாது” என்று தலையில் அடித்துக் கொள்கிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.
வாழ்வு குறித்த பிரம்மாண்ட கற்பனைக்கு எதிராக அபி காட்டும் ஒன்றுமற்ற வெட்ட வெளி நம்மைக் கடுமையாக அச்சுறுத்துகிறது. வாழ்வுக்குள் இட்டு நிரப்ப முடியாத இடைவெளிகள் உண்டென்றால் நாம் ஆம் என்று தலையாட்டலாம். “இடைவெளியை சுற்றும் சிற்றெம்புகள் தான் வாழ்க்கை” என்று சொன்னால் பீதி கிளம்பாதா என்ன?
இடைவெளிகள்
யாரும் கவனியாதிருந்த போது
இடைவெளிகள்விழித்துக் கொண்டுவிரிவடைந்தன.நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்உனக்கும் உனக்கும்விநாடிக்கும் விநாடிக்கும்இடைவெளிக்கும் இடைவெளிக்கும்..என்றுஇடைவெளிகள் விரிவடைந்தன.வெறியூரி வியாபித்தன.
வியாபகத்தின் உச்சத்தில்மற்றதெல்லாம் சுருங்கிப் போயின.ஆங்காங்கிருந்துஇடைவெளிகள் ஒருங்கு திரண்டுஅண்ட வட்டமாயின.வட்டத்தின் சுழற்சியில்நடுவே தோன்றி வளர்ந்ததுபேரொளிஅதற்குப் பேச்சு வரவில்லைசைகைகளும் இல்லைஎனினும் அதனிடம்அடக்கமாய் வீற்றிருந்ததுநோக்கமற்று ஒரு மகத்துவம்.(அ. க. பக். 122)
மகத்துவத்தின் முன்னே கொஞ்சம் நம்பிக்கை கொள்ளலாம். எதையாவது வேண்டலாம். மண்டியிட்டு கண்ணீர் சிந்தலாம். “நோக்கமற்ற மகத்துவத்தின்” முன்னே என்ன செய்ய? வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர.
மூழ்கினால் முத்தெடுத்து வர வேண்டுமென்பது நமது பொது நியதி. அபி நம்மை இழுத்துச் செல்லும் ஆழங்களில் “ஒன்றுமில்லை”. ஒன்றுமில்லை என்று காட்டத் தான் அவர் நம்மை அவ்வளவு ஆழத்திற்கு இழுத்துச் செல்கிறார்.
அபி இந்த வாழ்வை பொருட்படுத்தாது வேறெதையோ பேசிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமை தோன்றுவது இயல்பே. ஏனெனில் நமது அன்றாட வாழ்வின் சித்திரங்கள் இதில் இல்லை. ஆனால் வாழ்வு குறித்த ஆழமான விசாரணைகள் உள்ளன.
“நடைமுறை வாழ்வைச் சந்தித்து உழல்பவன் இவனுடைய ஒரு அவன். இவன் எழுத்து மனிதன். எதை எப்படி எழுத வேண்டும் என்பதைத் தன் சுதந்திரமாகக் கொள்கிறான்” என்று சொல்லும் அபி இன்னொரு இடத்தில் சொல்கிறார்.. “வாழ்விலிருந்து இவன் எதிர்ப்பக்கமாகப் போகவில்லை; வாழ்விற்குள்ளேயே இருளடர்ந்த வேறொரு பக்கமே இவன் போவது”.
பொதுவாக நமது தமிழ்வாசக மனத்திற்கு எல்லாமும் “இரத்தமும் சதையுமாக” வேண்டும். அப்படி அல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்வதில் அதற்குத் தயக்கங்கள் உண்டு. இப்படி “இரத்தமும் சதையுமாக” வாழும் நமக்கு “ஒன்றுமற்ற காலியிடத்தை” காண்பது கொஞ்சம் சிரமமானது தான். “ஒன்றுமில்லை” என்பது கூட “சித்தர் பாடல்களில்” ஒலிப்பது போல உரத்து ஒலிக்குமாயின் நாம் அதை மகிழ்ந்து கொண்டாடுவோம். அபியோ “ஒன்றுமில்லை” என்பதை “ஒன்றுமில்லாதது போலவே” சொல்கிறார்.
அபி அரிதாக ஒரு காதல் கவிதை எழுதியிருக்கிறார். அதாவது தெளிவாக அதில் ஒரு பெண் உரு உண்டு. “உலகின் விஷங்களை வெல்லவோ உன் முகத்தில் இரண்டு மகுடிகள்” என்று பிரமாதமாகத் துவங்குகிறது கவிதை. காதலில் உருகி உருகி எழுதிச் செல்பவர். முடிக்கிற தருவாயில் எழுதுகிறார்…
இந்தப் புதிர்கள் முன் பிரமிக்கவேஇத்தனை அறிவிலும்புகுந்து வந்தேன்.
இப்படியாக இவ்வரிகள் அபியின் இன்னொரு மெய்ஞானக் கவிதையின் வரிகளாக மாறி விடுகின்றன. அந்தக் காதலியை எண்ணிப் பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருக்கிறது.
சில வரிகள் நாம் அர்த்தமேற்றும் முன்னரே நம்மைக் கவர்ந்து விடுகின்றன.
வாசற்படியில்வாயில் விரலுடன்நின்றது குழந்தைவீடும் வாய் திறந்துகுழந்தையை விரலாய்ச்சப்பி நின்றது….(அ. க. பக். 30)
அபியின் சில கவிதைகள் வெறும் உளவியல் கணக்குக்குகளாகவும், தத்துவ விளையாட்டுகளாகவும் தங்கி விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அவற்றில் கவிதையின் வண்ணம் ஏறவில்லை என்றே எனக்குப் படுகிறது.
இனிஇருக்கிறேன் என்பதில்லாத இருப்புஇல்லை என்றுஇருக்கும்(அ. க. பக். 169)
போன்ற வரிகள் அதன் அர்த்தபுஷ்டிகளைக் கடந்தும் கொஞ்சம் எரிச்சலூட்டவே செய்கின்றன.
அபி ஒரு கவி.. “சொற்களின் கும்மாளம்”, “எண்ணங்களின் ஆடம்பரம்” என்றெழுதிச் சொல்லும் ஒரு கவி.
மிக உறுதியாக அபி எமது மொழியின் ஒரு தனித்த ஆபூர்வம். விஷ்ணுபுரம் விருது பெறும் அவர்க்கு என்னுடைய வணக்கங்கள்.
2 comments
[…] நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை… […]
சக்தியின் கூத்தில் ஒளி ஒரு தாளம்
என்னும் ஒற்றை வரியை கடந்த இருபது ஆண்டுகளாக நானும் அடிக்கடி உச்சரித்துணர்வேன். மகிழ்ச்சி.
மகாகவி பாரதி எழுதிய அற்புதமான கவி தரிசனங்களுள் இவ்வரியுமொன்று.
Comments are closed.