பிரமிள்: தனியொருவன் (பகுதி 8) – பாலா கருப்பசாமி

0 comment

வாசித்துக் கொண்டே வருகையில் ஓரிடத்தில் இப்படியொரு வாக்கியம்:

எனது விமர்சனங்களை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களின் தொடர்போ உதவியோ எனக்கு வேண்டாம்.”

என்ன மனிதன் இவன்? இங்கே வாழ்வதற்காக, தாம் உருவாக்கி வைத்திருக்கும் அடையாளங்களைத் தக்க வைக்கவும், மெருகேற்றவும் திட்டமிட்டு ஒவ்வொரு அசைவையும் நிர்ணயிக்கும் நபர்கள் சூழ்ந்த உலகில் இது என்ன பேத்தல். பிரமிள் எந்த வேலைக்கும் செல்லவில்லை. பிறர் தயவில் தான் வாழ வேண்டி இருந்தது. ஆனால் அந்த ஆதரவு வெறும் அனுசரணையாக இல்லாமல் தனது எழுத்தின் மீது கொண்ட மதிப்பிலிருந்து வர வேண்டும் என்று நினைக்கிறார். மதிக்கப்பட வேண்டியது எழுத்தே. அதன் பொருட்டே படைப்பாளி.

இந்தக் கட்டுரைத் தொடரில் ஓரிடத்தில் திராவிட எழுத்துக்கு முன்னுதாரணமாக உயர்த்திப் பிடிக்க வேண்டியது பிரமிளைத் தான் என்று சொல்லியிருக்கிறேன். இதற்கு அர்த்தம் ஆரியம் – திராவிடம் என்ற பாகுபாட்டினால் ஆனதல்ல. திராவிட மனோபாவம் என்பது குறிப்பிட்ட இனப்பற்றைக் குறிப்பது அல்ல. மாறாக திராவிட குறிப்பாக தமிழர்களின் மரபார்ந்த பண்பான அனைவரையும் சமமாகப் பார்க்கும் குணாம்சத்திலிருந்து சொல்லப்படுவது. இதற்கு பிரமிளின் வரிகளில் இருந்தே உதாரணம் தரலாம். லயம் இதழ் 9ல் (1987, ஏப்ரல்) டேவிட் சந்திரசேகர் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார் பிரமிள். அதில்,

என் எழுத்தியக்கம் அடிப்படையில் இந்தியப் புரட்சியைச் சார்ந்தது. இந்தியாவுக்கே விஷேசமாக உரிய ஜாதியத்தின் மூர்க்கங்களை, அறிவார்த்தத் தளத்திலிருந்தேனும் களையும் வேலையை 1976க்கும் பிந்திய எனது கட்டுரைகளிலும்படைப்புகளிலும்கூடகாணலாம். இந்த இயக்கம், ஏதோ ஒரு ஜாதிய வர்க்கத்துக்கு மட்டும் எதிரான ஒன்றல்ல. 1979ல் நான் டேவிட்டின் ரூமில் அவருடன் இருந்த போது, என்னைச் சந்திக்க வந்தனர் வண்ணநிலவனும் விக்கிரமாதித்யனும். வண்ணநிலவன் என்னிடம், ‘பிராமண எழுத்தாளர்களுக்குப் பத்திரிகை இருப்பது போல், பிராமணரல்லாத நமக்கும் வேண்டும். வாருங்கள் ஆரம்பிக்கலாம்என்றார். நான் இதற்குப் பதிலாகச் சொன்னதை இங்கே விவரிப்பது அவசியம்.

என்னுடைய இயக்கம் அறிவியக்கம். அறிவியக்கம், ஜாதிய வர்க்க இயக்கமாக முடியாது. எழுத்தாளன், அறிவியக்கவாதியாகவே இருக்க முடியும். எனவே, பிராமண எழுத்தாளன்அல்லாத எழுத்தாளன் என்பது, எந்தப் படித்தரத்திலும் உள்முரணானது. இந்த நிலைப்பாட்டிலிருந்து நான் எந்தக் காரணத்துக்காகவும் நகர மாட்டேன். என் விமர்சனங்களில், பிராமண எழுத்தாளர்கள்அல்லாத எழுத்தாளர்கள் என்ற பாகுபாடு கிடையாது. நான் எழுத்தாளன், அறிவுவாதி; எந்த ஒரு ஜாதிக்குமோ வர்க்கத்துக்குமோ உரியவனல்ல.”

இந்தக் காலகட்டத்தில் ஜாதீயத்துக்கு எதிராக பிரமிள் எழுதிய கட்டுரைகளில் முக்கியமான ஒன்று ’வரலாற்றுச் சலனங்கள்’. மிக நீண்ட கட்டுரை இது. உலகளாவிய அளவில் உள்ள அடிமை முறையையும் தீண்டாமையையும் ஒப்பிடுகிறார். உலகின் மத, தத்துவ வளர்ச்சிப் போக்கில் ஆரியத்தின் மாற்றங்கள் என விவரித்து ஆரியர்களின் குணப் பண்புகளுக்கான காரணங்களை அலசுகிறார். இந்தியாவில் மட்டும் ஜனித்திருக்கும் ஜாதியத்திற்கு முழுக்காரணமும் ஆரியர்களாய் இருக்க முடியாது என்றும் ஆரியர்களின் வருகைக்கு முன் இங்கிருந்த விசேஷ குணங்கள் ஆரிய நோக்கங்களோடு கலந்ததின் விளைவே ஜாதியம் என்கிறார். முன்பு கம்யூனிசத்தை வைதீகத்துக்கு நிகராக எதிர்த்து வந்த பிரமிள் இந்தக் காலகட்டத்து எழுத்துகளில் கம்யூனிசத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது போலத் தோன்றும். இந்தியக் கலைமரபும் ஹிட்லரிசமும் என்ற கட்டுரையில், ‘எழுத்தியல் கலை வடிவம், சமுகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கக் கூடிய கருவி’ என்று குறிப்பிடுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். முன்பே சொன்னபடி சமூகத்தளத்தில் ஒரு நடுநிலைவாதி இடதுசாரியாகவே இருக்க முடியும். இதே கட்டுரையில் கம்யூனிசத்தின் பலவீனமாக மனித உன்னதத்தை மறுக்கும் வகையான ஆதிக்கத்தை போஷிப்பது என்பதையும் குறிப்பிடுகிறார்.

1970க்குப் பின்பு அதாவது பிரமிள் இந்தியா வந்த பின்பு அவரது விமர்சனத் தொனியில் பெரியதொரு மாற்றத்தைப் பார்க்கலாம். கலை கலைக்காகவே என்றும், இலக்கியத்தை ஒரு மோஸ்தராக மட்டும் பார்க்கும் கூட்டத்தின் பின்புலத்தில் பிராமணியம் இருப்பதைப் புரிந்து கொண்டதால் அவரது விமர்சனங்களில் சமூகவியல் பார்வை தூக்கலாய் நிற்கிறது. இன்னொன்று இங்கே ஆன்மீகம் என்பதே பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பிரமிளின் ஆன்மீகம் எது? பிரக்ஞையுணர்வுடன் எப்போதும் இருக்கும் நிலையை அடைவதே மனிதனின் உச்சபட்ச சாதனை என்று சொன்ன ஜே.கிருஷ்ணமூர்த்தியை தனது ஆதர்ஷமாகக் கொண்டவர் பிரமிள். பிரக்ஞையுணர்வு என்பது என்ன? உயிர்ப்புணர்வு நிலை.

நீரை எடுத்துக் கொள்வோம். அருவியாய்க் கொட்டி ஆர்ப்பரிக்கும் நீர், நதியாய்ப் பூர்ண அமைதியடைகிறது. கிணற்றில் ஒரு முகம்; குளத்தில் ஒரு முகம்; மழையொரு முகம். ஆனால் அமைதி பூத்த நதி தான் உயிர்களிடம் இரக்கமின்றியும் இருக்கிறது. எத்தனை கடற்கோள்களைக் கண்டிருக்கிறது இவ்வுலகம். நீரின்றியமையாது உலகு. ஒருபுறம் அதீதக் கருணையும், மறுபுறம் அதன் சுவடேயின்றியும் நீர் நீராகவே இருக்கிறது. தான், தனது தன்மையாகவே இருக்கும் நீரிடம் கருணையும் தர்மமும் வேண்டி மண்டியிட்டு ஆதிமனிதன் எழுப்பிய குரலே முதல் வேண்டுதலாய் இருந்திருக்கும். இத்தனை சொல்லியும் நீரை அதன் தன்மையாய் அப்படியே உள்வாங்க முடிவதில்லை. நம் மனநிலைக்கு ஏற்ப உருக்கொடுக்கிறோம். இந்தப் பூவுலகில் ஆறு அறிவு படைத்த மனிதனாய் நாம் இருப்பதை, அதில் என்னவாக இருக்கிறோம் என்பதையாவது தன்னுணர்வோடு புரிந்துள்ளோமா என்றால் இல்லை. நாம் ஏதோ செய்கிறோம். எதற்கோ ஆசைப்படுகிறோம். என்னவோ திட்டங்கள் வைத்திருக்கிறோம். பிரக்ஞையை மறைத்தபடி மனம் இழுத்துச் செல்கிறது. புலன்கள் கூருணர்வடைந்து மேகத்திலிருந்து வெளிவரும் நிலவைப் போலத் தெரிகிறது பிரக்ஞை. இங்கே கடவுள் இல்லை. உயிர்ப்பு மட்டுமே இருக்கிறது. உயிர்ப்பைச் சுவைக்கும் தன்னுணர்வு. தன் வாலை விழுங்கும் பாம்பு.

உறங்கும் முன்பு ஏதேதோ காட்சிகள் கட்டுப்பாடின்றி வந்து கொண்டிருந்தாலும் மனம் ஆழ்ந்த அமைதிக்குச் சென்று கொண்டிருப்பதை நாம் உணர்ந்திருக்கலாம். வழக்கமாய் மேல்மனம் முரண்பட்டவாறே இருக்கும். ஆழ்மனத்தில் அத்தகைய தொந்தரவு இல்லை. முரண்படாத காட்சியோட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒருமுறை தொட்டால் மீட்டெடுத்து விடலாமென்று தோன்றும் இந்தக் காட்சிகள் நினைவுக்கு வருவதே இல்லை. ஆனால் நமக்குள்ளே தான் கிடக்கின்றன. தன்னுணர்வு அதிகரிக்க அதிகரிக்க மேல்மனத்துக்கும் ஆழ்மனத்துக்குமான வேறுபாடு குறைகிறது அல்லது மேல்மனத்தின் முரண் விலக ஆரம்பிக்கிறது.

இந்தப் பயணமே பிரமிளின் ஆன்மீகம். இந்தத் தன்மை அவரது எழுத்துக்களுக்கு அடிநாதமாய் இருப்பதால் தான் அவர் விமர்சனங்கள் பூசிமெழுகுவதோ, சுய ஏமாற்றோ இன்றி மிகக் கூர்மையாய் இருக்கின்றன. இதன் நீட்சியாகத் தான் அவரது சமூகப் பார்வையை வைக்க முடியும். திசைநான்கு என்ற சிற்றிதழில் பிரமிள் எழுதியிருக்கும் தலையங்கத்தில் கீழ்க்கண்ட பத்தி வருகிறது:

தனிமனிதனுக்குள்ள மூளைக்குச் சமமாகச் சமூகம் என்ற தொகையுடலை ஆள்வது, அதன் சிந்தனையுலகத்தினர் தாம். இவர்களுள் சிந்தனைக்கு உரிய பண்புகளை இழப்பவர்களை, அதே உலகத்தில் ஆரோக்யமாக இயங்குவோர் களைவது, சமூகத்தின் ஒரு மொத்தமான ஆரோக்கியத்துக்கு இன்றியமையாததாகும். இந்த வேலையைச் செய்யாமல் வாளாவிருப்பவர்கள், வெகு சீக்கிரமே தங்களுடைய ஆரோக்கியத்தையும் இழக்கத் துவங்குகின்றனர். இதன் விளைவாக, சமூகத் தொகையுடலின் மூளை தனது பகுத்தறிவுச் சக்தியினை இழக்கும்

இந்தப் பத்தியினை மேற்சொன்ன பார்வையுடன் ஒப்பிட்டு நோக்கலாம். தன்னைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தினை தனக்குச் சமமான பார்வையிலிருந்து நோக்குவதும் அதன் சிந்தனைத் தளத்தை மீட்டெடுப்பதும் முன்னோக்கி நகர்வதுமே சமூக மனிதனின் கடமை. இது தனிமனிதன் ஒருவகையில் தனக்காகச் செய்து கொள்வதும் கூட. இது சமூக நோக்கிலான பிரமிளின் பார்வையென்றால், இதன் இன்னொரு கோணத்தில் அகமுக நோக்கோடு சமூகத் தளத்தை இணைக்கும் மற்றொரு கோணத்தையும் பார்க்கலாம்.

ஒருமுறை கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிச் சொல்லும் போது அவர் அக்காலத்திய கூரிய மனங்களை தன்பக்கம் ஈர்த்து விட்டது புரட்சி மனோநிலையை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஒரு காரணமாகிவிட்டது என்று சொல்லியிருந்தார். ஒருவகையில் இது உண்மையும் கூட. லட்சியத்தின் பரிமாணங்கள் (’திசைநான்கு’ – ஜூலை 1989) என்ற கட்டுரையில்:

இலட்சியத்தைப் பற்றிய பேச்சை விட, உடனடியாக இப்போது நாம் வாழும் விதத்தினைச் செம்மைப்படுத்துவதே செய்யப்பட வேண்டிய காரியம் என்ற பார்வை, இந்தச் சரித்திரக் கட்டத்திலேயே பிறக்கிறது. உடனடியாக நாம் வாழும் விதத்தை ஒரு இலட்சியத்துடன் ஒப்பிட்டு, இலட்சியத்துக்கு ஏற்ப உடனடி வாழ்வைத் திருத்த முயற்சிப்பது, இலட்சியத்தின் கொடுங்கோல் என்றாகும். இது ஆழ்ந்த மனிதர்களின் அகமுகப் பிரச்சினை. இந்த எல்லைக்கு வரக்கூடியவர்களுக்கு, ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரவசனங்களைப் போல மதிப்புக்கு உரியவை வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இந்த எல்லையை உணரத் திராணியற்ற மரத்தவர்களின் பார்வையில் உபயோகமற்ற விஷயமாகவும் அதே ஜே.கி.யின் பிரவசனங்கள் தொனிக்கும். காரணம், இலட்சியத்துக்கு ஏற்ப வாழ்வை அமைக்கிற கடினமான காரியங்களில் இவர்கள் இறங்கியதில்லை. எனவே இலட்சியம் என்பது உடனடிக் கணத்தின் ஆழமான ஊற்றை அடைக்கும் இறுதிக்கல் என்ற பிரச்சினையினைச் சந்திக்கிற ஜே.கி.யின் அபூர்வமான தர்சனப் பிரவசனத்தின் தலையும் புரியாது காலும் புரியாது, தங்கள் ஆச்சாரிய பீடங்களிலிருந்து பிதற்றுவார்கள்.

ஆன்மீக கேந்திரம் தான் எனது தார்மீகத்தின் ஊற்றுக்கண். நான் சநாதனத்தை எதிர்த்தாலும், ராமகிருஷ்ணரிலிருந்து ஜே.கிருஷ்ணமூர்த்தி ஈறான எனது பிராந்தியம் கூடச் சநாதனமானது தான் என்கிற .மார்க்ஸும், வேலுமித்திரன் என்ற கோ.ராஜாராமும் ஒன்றை உணர வேண்டும். சநாதனம் என்பது இனவர்க்கஜாதிரீதியானது. ராமகிருஷ்ணரும் சரி ஜே.கியும் சரி, ஜாதிய இனரீதியான எல்லாவித வர்க்க உணர்வுகளையும் தங்களது மனோ நிலத்தினது அடி அத்திவாரத்திலேயே களைந்தெறிந்தவர்கள்; உண்மையான புரட்சிக்காரர்கள்; இருவருமே தோட்டிகளாகக் கூட செயல்பட்டவர்கள். முதலாளித்துவத்தை எதிர்க்கும் சாக்கில், தங்கள் வாழ்க்கை வசதிகளைக் காப்பாற்றிப் பெருக்கிக் கொண்டு, அந்த வசதிகள் பறிமுதலாகாமல் இருப்பதற்காக மார்க்ஸிய ஊளையிட்டவர்களல்லர்ராமகிருஷ்ணரும் கிருஷ்ணமூர்த்தியும்.”

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆடிட்டர் குருமூர்த்தி, “தமிழகத்தில் ஆன்மீகம் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் அதைப் பிரதிபலிக்கும் அரசியல் மாற்றம் இன்னும் வரவில்லை” என்று குறிப்பிட்டார். ஒரு கட்சி சார்ந்த நபரின் கருத்தாக இதைச் சாதாரணமாகக் கடந்துவிடலாம். ஆனால் பொதுஜனமாக இருந்து பார்க்கையில், இந்த மக்களுக்கெல்லாம் இந்தப் பதிலின் அர்த்தம் தெரிந்தால், தங்கள் கடவுள் பக்தி மிகப்பெரிய அரசியல் வலைக்குள் கிடக்கிறது என்பது புரிந்தால் எப்படியிருக்கும்? இதுவொன்றும் புதிதில்லை. ஆரம்பத்தில் கிறித்துவத்தைப் பரப்புவதற்காக பல்வேறு நாடுகளுக்குப் படையெடுத்த சீடர்களின் முயற்சியால் கிறித்துவம் தழைத்து மதபோதகர்கள் அதிகார பீடத்தைக் கைப்பற்றவும் செய்தார்கள். மதத்தைப் பரப்புவதோடு இணைந்த செயல்பாடாக அரசியல் அதிகார ஈடுபாடும் அமைந்து விடுகிறது. எந்தத் தத்துவமும் ஒருகட்டத்துக்குப் பின் அமைப்புமயமாகி விடுகிறது. அது அதை உருவாக்கியவரின் கட்டுப்பாட்டையும் மீறிய அரசியல் செயல்பாடாக வளர்கிறது.

சாக்ரடீஸ் ஒரு நாடானது தத்துவவாதியினால் ஆளப்பட வேண்டும் என்று சொன்னார். ஆனால் அதை அரசன் டயனோசியஸ் செயல்படுத்திய போது பொருளாதாரம் சிதறுண்டது. எனினும் பிளேட்டோவுக்குப் பிந்திய காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் போது மார்க்கஸ் அரேலியஸ் என்ற தத்துவத்தில் ஈடுபாடுள்ள அரசன் சிறப்பாக அரசாண்டமைக்குக் காரணம் அவனது தத்துவார்த்தமான ராஜ்ய பரிபாலனமே. வர்ணங்களை மறுத்த பௌத்தத்தைத் தழுவிய அசோகரின் காலம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

சிந்தனைவாதிகளுக்கு இருந்த செல்வாக்கினை இரண்டு உலகப் போர்களும் நசுக்கிக் கொன்று விட்டன. மிகக்குறுகிய வட்டமாக தங்களுக்குள் பேசிக் கொள்ளும் இனமாக பொதுஜனங்களுடன் எவ்விதத்திலும் ஒட்டாத ஒன்றாகவே அறிவுஜீவி வர்க்கம் ஆகிவிட்டது. யூத இனத்தைக் கொன்று குவித்த ஹிட்லருக்குக் கூட பிற ஐரோப்பிய தேசங்களிலும் எதிர்ப்பு இன்றித்தான் இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவியேற்ற பின்பு தான் எதிர் நிலைப்பாடு வலுவாக வேரூன்றியது. யுத்த காலத்தில் சர்ச்சிலின் பேச்சு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவை தொகுக்கப்பட்டு நூலாகக் கொண்டு வரப்பட்டு அதற்கு நோபல் பரிசும் கொடுக்கப்பட்டது. இத்தனைக்கும் சர்ச்சில் அறிவு / கலாச்சாரம் / மரபுகள் / மதங்கள் / தத்துவங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்க பின்புலம் கொண்டவரில்லை.

ஜனவரி 1995ல் வந்த லயம் இதழ் 11ல் ’வின்ஸ்டன் சர்ச்சில், ஈ.வெ.ரா., சி.என்.ஏ’ என்ற கட்டுரையில் சர்ச்சிலையும் ஈ.வெ.ரா.வையும் ஒப்பிடுகிறார் பிரமிள். முறையான படிப்பறிவு இல்லாவிட்டாலும், ஜாதியம், அதன் ஆதாரமான பார்ப்பனீயம் மற்றும் அதன் விளைவான மூட நம்பிக்கைகள், மனித விரோதங்கள் எல்லாவற்றையும் ஈ.வெ.ரா. தாக்கினார். இடதுசாரிகள் இலக்கியத்தில் அரசியலைக் காண்பது போல ஈ.வெ.ரா.வும் இலக்கியங்களில் இருந்த பெண்ணடிமைத்தனத்தையும், ஆரிய மேட்டிமைவாதத்தையும் எதிர்த்தார். திராவிட கட்சிக்கும் கம்யூனிசத்துக்கும் பெரிய வேறுபாடுகள் பார்க்க முடியாது. அதனால் தான் அவை ஒன்றையொன்று ஆதரிக்கும் கட்சிகளாகவே தமிழகத்தில் தொடர்ந்து வந்துள்ளன. நமது இலக்கியங்கள் மீது இவ்வாறான பாகுபாடுகளை இனங்காட்டும் விமர்சனங்களை முன்வைத்தவர் ஈ.வெ.ரா. இதற்காக அவரது குரல் இலக்கியார்த்தமாகக் கவனம் பெறவேண்டும்; அவரது இலக்கியக் கணிப்பை மீறிய பரிமாணமாக இதைப் பார்க்க வேண்டும் என்கிறார் பிரமிள்.

ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்தாலும் சி. என். அண்ணாதுரையும் தனது தீர்க்கமான கருத்து நிலைகளில் சர்ச்சிலுடன் ஒப்பிடத்தக்கவர் என்ற வாதத்தை முன்வைக்கிறார். இந்தக் கட்டுரை எழுதப்பட்டதன் காரணம், சாகித்ய அகாடமியின் பிரசுரத்துக்கு ஈ.வெ.ரா. மற்றும் சி.என்.அண்ணாதுரையின் எழுத்துகள் இலாயக்கற்றவை என்று தமிழவன், சா.கந்தசாமி, ஜெயகாந்தன் போன்றோர் ஒரு கூட்டத்தில் பேசியவையே. தேவதாசி முறையினால் தமிழகத்தில் இசையும் பரதமும் பேணப்பட்டது; இந்த முறை மறைந்ததினால் இந்தக் கலைகள் பாதிப்படைந்தன என்று இந்தியா டுடே இதழ் எழுதியது. சமூகத்தை முழுக்க விலக்கி விட்டு இலக்கியம் என்பது இசைக் கச்சேரி போல ஒன்று என்று பவுசுகாட்டும் தனத்தை இந்தக் கட்டுரையில் உரித்துக்காட்டுகிறார்.

சர்ச்சில், சரித்திர உணர்வை வெகுஜனத்தினருக்கு உணர்த்த ருசிகரப் பாணியைக் கடைப்பிடித்தமை கூட, பாமரர்களுக்கும் புரியக் கூடிய வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த .வெ.ரா.விடம் எதிரொலிக்கிறது. .வெ.ரா.வின் பிரசாரத்திலிருந்து விளைந்த கடுமையான போராட்டத்தின் விளைவாகவே, பெண்களுக்குப் பொட்டுக்கட்டித் தேவதாஸிகளாக்கி, கோவில் கலாச்சார சாக்கில்தர்மவான்கள்காம வேட்டைக்குப் பயன்படுத்திய முறை, இத்தகைய பகுத்தறிவு இயக்கத்தை அறியாத கேரளத்தின் கம்யூனிஸ ஆட்சியினாலேயே, அங்கே இன்னும் அழிக்கப்படவில்லை, கர்நாடகம், ஆந்திரா முதலியவையும் இத்தகைய இயக்கத்தை அறியாமையால், அங்கும் தேவதாஸி முறை அழிக்கப்படவில்லை. கோவில் சார்ந்த மடமைகள் பாமரர்களுக்கு புலனாகாதபட்சத்தில், இத்தகைய சீரழிவுகளை அழிப்பது அசாத்தியம். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான், முக்கியமாக .வெ.ரா.வின் கருத்துகள்அகில இந்தியத் தளத்துக்குப் போக வேண்டும்.

தமிழகத்தில், கோவில் கலாச்சாரம் என்ற பெயரில், பலாத்காரமாக மூளைச்சலவை மூலம் பெண்களுக்குப் பொட்டுக்கட்டுகிற இந்தக் கேவலத்துக்கும், கலையியலுக்கும் சம்பந்தமில்லை. இருப்பதாகக் கூறுகிறவர்களின் ஒரே நோக்கம், கலாச்சாரப் போர்வையில் விபச்சாரத்தைப் புணருத்தாரணம் செய்கிற தர்ம கைங்கர்யமாகத் தான் இருக்க வேண்டும். இவர்கள், பிறருக்குப் பொட்டுக்கட்டுவதை விடுத்துத் தங்களுக்குத் தாங்களே பொட்டுக் கட்டிக்கொண்டு, ‘கோயிற் கலாச்சாரம்பண்ணுவது தான் நேர்மை. பிறருக்குப் பொட்டுக்கட்டி விடும் முறை, .வெ.ரா.வின் கடுமையான இயக்கத்தின் விளைவாகவே, தமிழகத்திலிருந்து களையப்பட்டது.”

1975க்குப் பிறகான அவர் எழுத்துகளில் சமூக நோக்கே ஓங்கியிருந்தது. பிரமிளுடையது அறிவியக்கம். 1995ல் சி.சு.செல்லப்பா பிரமிளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் எழுபதுகளின் காலகட்டத்தில் இயங்கியவர்களின் இயக்கம் என்று அதில் பங்கெடுத்தவர்களை மொத்தமாகக் குறிப்பிடுவதே சரியென்றும், அந்தச் சூழலும், இயக்கமுமே பிரதானமென்றும், அதில் ஒருவர் என்று பிரமிள் தன்னைச் சொல்லிக் கொள்ளலாமே தவிர தன் இயக்கம் என்று தனியே சொல்ல முடியாது என்று சற்று வேகத்துடனேயே சி.சு.செ. குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு நேரடியாக பிரமிள் பதிலளிக்காவிட்டாலும், தனது விமர்சன முறையினால் தனக்கு நேர்ந்த பாதிப்புகளைச் சொல்லியிருப்பதோடு, தமிழ் இலக்கியச் சூழலில் அவரது விமர்சன மரபு எத்தகையது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தீவிர இலக்கியத்தை மலினப்படுத்தும் அனைத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். ஞானக்கூத்தன் தனது கவிதைகளில் ஜாதியத்தை உள்ளூடாகப் புகுத்தி வெளிக்காட்டிக் கொண்டது, பிரம்மராஜன், சாரு நிவேதிதா, இடதுசாரிய எழுத்தாளர்கள் மற்றும் இன்னபிற இஸம்சார் எழுத்தாளர்களை அத்தகைய எழுத்துகளின் மலட்டுத்தன்மைக்கு எதிராக மீண்டும் மீண்டும் குரல் கொடுத்திருக்கிறார். சுருக்கமாகப் பார்த்தோமென்றால் பிரமிளின் பார்வையில் படைப்பாம்ச குணங்களாக அவர் குறிப்பிடுபவற்றில் சில:

  1. உயிர்ப்பு: வெறுமனே செய்து பார்க்கும் முயற்சியாகவோ, தொழில்முறை உத்தியாகவோ அல்லாமல் படைப்பு மனோகதியில் இருந்து எழுதப்படும் தன்மை, பிரக்ஞை, உணர்வுத்தளத் தீவிரம், வாழ்க்கை அனுபவம் கொண்டிருப்பது. சமூக விஞ்ஞானபூர்வமான நிர்தாட்சண்யத்தை அடிப்படையாக்கி, தனிமனிதனில் அகண்டமான மனித வர்க்கத்தை அல்லது பிரபஞ்சத்தின் உயிர் சொரூபத்தைக் காண வேண்டும்; காட்ட வேண்டும். இதனை அவன் ஆழமாக்காமல், உள்பொருள் அளவில் விரிவு பெறாமல் ஒரு வெளிப்படைத் தளத்திலேனும் மனிதாயம் பேணப்பட்டு வராவிட்டால், சமூகத்தின் அறிவார்த்தத்தளம் சீர்குலையும்.
  2. வெளிப்படுத்தும் பொருள்: கொள்ளைக்காரனாய் இருந்த ஜான் ஜெனேயின் எழுத்துகளை உயர்வாகப் பேசிய பிரமிள் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகளை விமர்சித்திருப்பது ஏன் என்று கேட்டுக் கொண்டால் இதற்கு விடை கிடைத்துவிடும்.
  3. பார்வையின் புத்துணர்வு (Fresh Outlook): எழுதுபவரின் தீட்சண்ய விசேஷத்தைச் சார்ந்தது இது. இந்தப் பார்வை இருந்தால் அதன் வழியாகச் சென்று தேர்ந்து கொள்கிற விஷயமும் புதுமைப் பொலிவு கொள்ளும்.
  4. சிந்தனை சார்ந்த மனம்: பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். வெறும் சரீரப் பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒருசில பக்கங்களுக்குள் பிசுபிசுத்து விடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம், இயற்கையாக வளரவும் வேண்டும் என்கிறார்.
  5. பின்னல்: சிருஷ்டி பின்னலானது. இயற்கையின் இயக்க சக்திகள் ஒன்றுடன் ஒன்று பிணையும் அனந்தகோடித் தாதுபூர்வமான நிகழ்ச்சிகள், இந்தப் பின்னல் நிலையை ஒரு சாதனையாக்குகின்றன. கலா சிருஷ்டியின் அடிப்படையும் இந்தப் பின்னலே. போதனையை உத்தேசிப்பவன் கலையியலின் தர்க்கத்தை இழந்தே தன்னுடைய தெளிவைச் சாதிக்கிறானாதலால், அவனது ‘தெளிவு’ பின்னல் குணத்தை நிராகரிக்கிறது. இதனால், அதன் விஷய தாதுக்களினிடையே உயிரின் ஊடாட்டம் நிகழ்வதில்லை. அதாவது, ஒரு வெற்றுப் பார்வையில் மட்டுமே அது ‘தெளிவு’ கொண்டு நிற்கும். ஊடுருவும் பார்வையில் அது தெளிவற்று, உள்தொடர்பற்று நிற்கும்.
  6. கலைஞனின் சமூகவுணர்வு: ‘சமூக உணர்வு’ என்ற பிரயோகத்தின் உண்மையான பொருள், மனிதனை – அவனது விளை நிலமான சமூகத்தை – இயற்கைக் களனை- உள்ளது உள்ளபடி காணல் என்று கொள்வதுதான் சரி. இதுதான் இலக்கியக் கலைப் பிராந்தியத்தில் சரியான அளவுகோல்களைப் போஷிக்கும். கலையுலகின் கேள்விமயமான உட்கிடைக்குத் தத்துவம் தீர்வுகளைத் தரலாம்; அரசியல்வாதி சீர்திருத்தங்களைச் செய்யலாம். ஆனால், அந்த வேலைகளையே கலைஞனும் செய்ய வேண்டும் என்று வற்புறுத்த முடியாது.

*

இப்படியான கலைக் கோட்பாடுகள் குறித்து பிரமிள் இன்னும் நிறையவே சொல்லியிருக்கிறார். இவ்விடத்து பிரமிளின் விமர்சனங்கள் குறித்து எழுதப்பட்டவை போதுமென்று நினைக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தில் பிரமிளின் பார்வை வாசகருக்கு விளக்கு போன்றது. பிரமிள் விமர்சனங்கள் வாசிக்க ஆர்வமுள்ளோர், லயம் காலசுப்ரமணியம் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். (தொடர்புக்கு: kasu.layam@gmail.com / 9442680619)

முற்றும்.