இந்தியா விடுதலை பெற்றது முதலே ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல போர்களையும் பயங்கரவாதத்தையும் மக்கள் போராட்டங்களையும் கண்டுள்ளது. இன்று இந்நிலம் மீண்டும் ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலைச் சந்தித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து தரப்பட்டிருந்த ஒரு மாநிலம், சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மாநில உரிமை நீக்கப்பட்டு, ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது. காஷ்மீரின் அரசியல் தலைவர்களும் சில ஆயிரம் மக்களும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே உலகின் மிக அதிகமான ராணுவ இருப்பைக் கொண்ட பகுதிகளில் ஒன்றான காஷ்மீரில், இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வசதிகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல கடைகளும் மூடியே உள்ளன. பத்திரிக்கையாளர்கள் இயங்குவதும் கடினமாகவே உள்ளது. ஆகஸ்டு, 2019 முதல் வாரம் முதலே ஓர் அறிவிக்கப்படாத அவசர நிலை அங்கு நிலவுகிறது.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது, மற்ற மாநிலங்களின் இணைப்பைப் போலன்றி, முற்றிலும் வேறான ஒரு சூழலில் நிகழ்ந்தது. ஜம்மு-காஷ்மீரின் அரசராக இருந்த ஹரி சிங் தோக்ரா இனத்தைச் சேர்ந்தவர். இந்து. ஆனால் அவரது நாட்டில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருந்தனர். ஹரி சிங்கின் முப்பாட்டனார் குலாப் சிங் பஞ்சாபின் ஆளுகைக்கு உட்பட்ட ஜம்முவின் ஆட்சியாளராக இருந்த போது, சீக்கியப் படையினரை வெல்ல உதவியதற்காக, பிரித்தானியர்களால், அம்ரித்சர் உடன்படிக்கையின் படி, 1846ம் ஆண்டில், காஷ்மீர் பள்ளத்தாக்கு அவருக்கு விற்கப்பட்டது. படிப்படியாக ஜம்மு, காஷ்மீர், பல்திஸ்தான், கில்கிட் ஆகிய பகுதிகள் தோக்ரா குடும்பத்தின் ஆட்சிக்குக் கீழ் வந்தன. இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் இருந்தது. ஜம்முவிலிருந்து வந்த ராஜபுத்திரர்களும் காஷ்மீருக்கு வெளியில் இருந்து வந்த இந்துக்களும் அதிகாரப் பொறுப்பு கொண்ட பணிகளில் அமர்த்தப்பட்டதால், இஸ்லாமியர்கள் மத்தியில் ஒரு கசப்பு வளர்ந்தது. கல்வியறிவில் சற்றே முன்னேறிய காஷ்மீர் பண்டிதர்கள் ‘காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே’ என்ற இயக்கத்தைத் தொடங்கினர். காஷ்மீர் பண்டிதர்களும் அரசுப் பணிகளில் அமரத் தொடங்கிய பின் இஸ்லாமியர்கள் மேலும் கசப்படைந்தனர்.
1930-40களில் காஷ்மீர் மக்களின் பேராதரவு பெற்ற தலைவராக ஷேக் அப்துல்லா உருவெடுத்தார். 1932ல், அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டுக் கட்சியைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றினார். ஆனால் பின்னர் மதச்சார்பற்ற தன்மைகொண்ட தேசிய மாநாட்டுக் கட்சி இந்துக்களையும் சீக்கியர்களையும் உள்ளடக்கி உருவெடுத்தது. ஜவகர்லால் நேருவோடும் இந்திய தேசிய காங்கிரசோடும் நெருங்கிய உறவுகளை அப்துல்லா வளர்த்துக் கொண்டார். அப்துல்லாவிடமிருந்து விலகிய ஜம்முவைச் சேர்ந்த இஸ்லாமியரான குலாம் அப்பாஸ் முஸ்லிம் மாநாட்டுக் கட்சிசை உயர்ப்பித்து நடத்தினார். ஆனாலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் பிரபல்யத்தை அதனால் எட்டமுடியவில்லை. ஷேக் அப்துல்லா ‘புதிய காஷ்மீர்’ என்ற கொள்கை அறிக்கையைத் தயாரித்தார். ‘அக்காலகட்டத்தின் மிகச்சிறந்த சோசலிசத் திட்டங்களில் ஒன்றாக’ அது கருதப்பட்டது. உழுபவர்களுக்கே நிலத்தைத் தருவதில் கவனத்தைக் குவித்து, பெரும்பாலான மக்களின் மனங்களை வகுப்புவாரியான பிரச்சனைகளை விடுத்து பொருளாதாரப் பிரச்சனைகளை நோக்கித் திருப்ப அந்த அறிக்கை உதவியாக இருந்தது. இவ்வறிக்கைக்கு இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவையும் அப்துல்லா வென்றார்.
1946ல், தேசிய மாநாட்டுக் கட்சி ‘காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்ற இயக்கத்தை மகாராஜாவுக்கு எதிராகத் தொடங்கியது. அப்போது ஜம்மு காஷ்மீரின் பிரதமராக இருந்த ராம் சந்திர கக் போர்க்காலச் சட்டத்தை அமுல்படுத்தினார். ஷேக் அப்துல்லா நேருவைச் சந்திக்க தில்லி செல்ல முயன்ற போது சிறைப்படுத்தப்பட்டார். நேரு அப்துல்லாவுக்கு ஆதரவாக வாதாட காஷ்மீர் சென்றார்; ஆனால் நாட்டுக்குள் நுழையத் தடைசெய்யப்ட்டு, ஐந்து மணிநேரம் அங்கேயே நின்றிருந்து தடையை மீறிய போது சிறைப்படுத்தப்பட்டு ஒரு பயணியர் மாளிகையில் அடைக்கப்பட்டார். ஆனால், காங்கிரசு தலைவராக இருந்த மௌலான ஆசாத்தும், காந்தியும் காபினெட் மிசன் திட்டத்தைக் குறித்த முக்கிய ஆலோசனைகளுக்காக இந்தியா திரும்புமாறும், பின்னர் காஷ்மீர் செல்லலாம் என்றும் கூறி வரவழைத்தனர். பின்னர், 1946ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நேரு மீண்டும் காஷ்மீர் சென்ற போதும் அரசரைச் சந்திக்க இயலவில்லை. மீண்டும் வருவதாக வாக்களித்து இந்தியா திரும்பினார்; ஆனால் இயலவில்லை. பிரிவினை சமயத்தில் அவர் காஷ்மீர் செல்வது, காஷ்மீரை இந்தியாவில் சேரப் பணிக்கும் செயல்பாடாகக் கருதப்படும் என்று காங்கிரசு தலைமை கருதியது. அவருக்குப் பதிலாக காந்தி அங்கு செல்ல முன்வந்தார். மவுண்ட்பேட்டனும் காஷ்மீர் சென்றார். மவுண்ட்பேட்டன், நேரு, பட்டேல், காந்தி ஆகியோருக்கு இடையே பல ஊசலாடும் பரிமாற்றங்களுக்குப் பின்னர், நேரு விரக்தியுடன், “காஷ்மீரில் எம் மக்களுக்கு நான் தேவைப்படுகிறேன் என்பதற்கும் பிரதமராக இருக்கவேண்டும் என்பதற்கும் இடையே நான் முன்னதையே தேர்ந்தெடுப்பேன்,” என்று காந்திக்குக் கடிதம் எழுதினார் [ஜூலை 28, 1947]. இறுதியாக காந்தி ஆகஸ்டு 1, 1947 அன்று காஷ்மீர் சென்றார். அரசியல் உரைகள் எதுவும் நிகழ்த்துவதில்லை என்று உறுதி தந்தார்; வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டார்.
காஷ்மீர் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தில்லியில் நடந்த ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில், “காஷ்மீர் மக்கள் இணைய விரும்புவது பாகிஸ்தானோடா இந்தியாவோடா என்பதைக் கேட்டறிய வேண்டும். அவர்கள் விரும்பியவண்ணம் அவர்கள் செய்யட்டும். மக்கள் தான் எல்லாம். வரும் நாட்களில் மன்னர் மடிந்து போவார், ஆனால் மக்கள் எப்போதுமிருப்பர்,” என்றார் காந்தி [ஜூலை 29, 1947].
ஸ்ரீநகர் வந்த முதல் நாளன்று, கில்கிட் காஷ்மீரோடு இணைந்ததையொட்டி, நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ‘கடைசிக் காலகட்டம்’ நூலில், பியாரேலால், ‘எதற்காக இந்த அலங்கார விளக்குகள்?’ என்று காந்தி கேட்டார். காரணம் அறிந்த போது, ‘இது பெருந்தவறு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காஷ்மீருக்குள் கில்கிட்டுக்கு தன்னாட்சி அதிகாரம் தருவதாக அறிவித்திருக்க வேண்டும்,’ என்றார். கிட்டத்தட்ட நூறு விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட கில்கிட், பிரித்தானிய அரசுத் துறையால் பிரிவினைவாதம் வளர்க்கப்பட்ட ஒரு பகுதி. ஒரு மின்னற்பொழுதில் காஷ்மீரில் கில்கிட்டை எந்த நிபந்தனையும் இன்றி இணைப்பதில் எதிர்காலச் சிக்கல்களுக்கான விதைகள் உள்ளதைக் கண்டார்,” என்று எழுதுகிறார். மன்னரையும், ஷேக் அப்துல்லாவின் மனைவியையும், தேசிய மாநாட்டுக் கட்சியின் பிற உறுப்பினர்களையும் காந்தி சந்தித்தார். “காலை 11 மணியிலிருந்து 5000 காஷ்மீரத்துப் பெண்கள் காந்தியடிகளுக்காகக் கூட்டமாகக் காத்துக் கொண்டிருந்தனர். அவரது தரிசனம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். அதனால் இரவு 8 மணிக்கு மீண்டும் ஒரு கடினமான பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.” அடுத்த நாள் ஜம்முவுக்குப் காரில் பயணமானார். “‘இந்தியா 15 ஆகஸ்டு அன்று விடுதலை பெற்று விடும். காஷ்மீருக்கு என்னவாகும்?’ என்று ஜம்முவில் அவரைச் சந்தித்த ஊழியர்கள் குழு அவரைக் கேட்டனர். ‘அது காஷ்மீர் மக்களையே சார்ந்திருக்கும்,’ என்றார் காந்தி. காஷ்மீர் இந்திய ஒன்றியத்தோடு இணையுமா பாகிஸ்தானோடு இணையுமா என்று அவர்கள் அனைவரும் அறிந்துகொள்ள விரும்பினர். காந்தி, ‘அதுவும் காஷ்மீர் மக்களின் விருப்பப்படி தான் முடிவு செய்யப்பட வேண்டும்,’ என்று விடையளித்தார்.”
காந்தி நேருவுக்கும் பட்டேலுக்கும் எழுதிய குறிப்பில், காஷ்மீரின் பிரதமர் மக்களின் ஆதரவை இழந்திருந்தார் என்பதை அவரிடம் தெரிவித்ததாகவும், அவர் மன்னர் விரும்பினால் தான் பதவி விலகிக் கொள்வதாகக் கூறியதாகவும் எழுதினார். மன்னரோடும் இளவரசரோடும் நடந்த சந்திப்பைக் குறித்தும் அதில் எழுதினார்:
“இருவருமே பிரித்தானிய ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, காஷ்மீர் மக்களுடைய ஆட்சி மலர வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர்; இந்திய அரசுடன் சேர வேண்டும் என்று எவ்வளவு தான் அவர்கள் இருவரும் விரும்பினாலும், மக்கள் விருப்பத்துக்கு இணைங்கியே நடக்க வேண்டும். அதை எப்படி அறிந்துகொள்வது என்பதைக் குறித்து அவர்களுடன் அன்று உரையாடவில்லை…
“ஷேக் அப்துல்லாவையும் அவருடன் சிறையில் இருக்கும் மற்றவர்களையும் விடுவித்து விட்டு, தடைகளை நீக்கி விட்டு, தற்போதைய பிரதமரும் விலகி விட்டு, மக்களிடம் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தினால் – வயது வந்தோர் வாக்கெடுப்பாகட்டும் தற்போதைய பட்டியலின்படியாகட்டும் – காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாகவே முடிவுகள் இருக்கும் என்று பக்ஷி (குலாம் முகமது) உறுதியாக நம்புகிறார். பொதுமக்கள் கருத்தையே அவர் எதிரொலித்திருக்கலாம். அம்ரித்சர் உடன்படிக்கையை நான் விரிவாகப் படித்தேன். அதை ‘விற்பனை ஒப்பந்தம்’ என்றே சொல்ல வேண்டும். 15ம் நாள் அந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிடும். பின்னர் காஷ்மீர் யாருக்குச் சொந்தமாகும்? மக்களுக்குச் சொந்தமாகாதா?” [ஆகஸ்டு 6, 1947]
இந்தியா திரும்புகையில் வாஃஹ் நகரில் அகதிகள் முகாமொன்றில் பேசியபோது, “மக்களின் விருப்பமே ஜம்மு காஷ்மீரின் விதியை முடிவுசெய்ய வேண்டும் என்று இயல்பறிவு சொல்கிறது. எவ்வளவு விரைவாக இது சாத்தியமோ அவ்வளவுக்கு நல்லது. எப்படி மக்களின் விருப்பத்தை அறிவது என்பது நியாயமான கேள்வி. இரண்டு ஒன்றியங்கள், மன்னர், காஷ்மீரத்து மக்கள் அனைவரும் சேர்ந்து இக்கேள்வி முடிவுசெய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நான்கு தரப்புகளும் ஒரு கூட்டு முடிவுக்கு வந்து சேர்ந்தால் பல சிக்கல்களும் தவிர்க்கப்படும். காஷ்மீர் பெரிய சமஸ்தானம்; இந்தியாவிலேயே மிக அதிக உத்திப்பூர்வ முக்கியத்துவம் வாய்ந்தது,” என்றார். [ஆகஸ்டு 5, 1947]
மக்களுடைய விருப்பத்துக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதை காந்தி தொடர்ந்து கூறி வந்தார். அதே நேரத்தில் இந்தியா கூறுபோடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விரும்பினார். முன்னதாக, ஜூன் 24, 1947 அன்று, திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமசுவாமி ஐயர் திருவிதாங்கூரை சுதந்திர நாடாக்க முனைவதைக் குறித்து வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் சொன்னது:
“காந்தியும் காங்கிரசும் வடமேற்கு எல்லைப் பிராந்தியத்துக்கு சுதந்திரம் வழங்கத் தயாராக இருக்கிறார்கள் என்று சர்.சி.பி. கூறுகிறார். சர். சி.பி. போன்ற ஒரு மெத்தப் படித்தவர் எப்படி இவ்வளவு அபத்தமான விஷயத்தைக் கூற முடியும்? திருவிதாங்கூர் தனி நாடானால், ஐதராபாத், காஷ்மீர், இந்தூர் மற்றும் இன்ன பிற சமஸ்தானங்களும் சுதந்திர நாடுகளாக அறிவித்துக்கொள்ளும். இந்தியா கூறுபோடப்படும். வடமேற்கு எல்லைப் பிராந்தியத்தில் கேட்பது மக்களின் குரல். ஆனால் திருவாங்கூரில் இந்துக்கள் சார்பாகப் பேசுவது மகாராஜாவும் பிரதமரும். வடமேற்கு எல்லை மாகாணத்தைக் காட்டி மக்கள் கண்களில் சர்.சி.பி. மண்ணைப் போட முடியாது. அரசமைப்புச் சட்டப் பேரவையில் திருவிதாங்கூர் இணைய வேண்டும் என்று சர்.சி.பி.க்கு ஆலோசனை வழங்குகிறேன்.”
முன்னதாக, ஏப்ரில் 1947ல், சர். எம்.தெர்லிங் என்பவருடனான சந்திப்பின் போது, முன்னறிதலுடன், “நாடு பிரிவினை செய்யப்படுவது என்னைக் காயப்படுத்துகிறது. உறுப்புகள் துண்டிக்கப்பட்ட உடலின் நிலை என்னவாகும்? இந்தியா போன்ற வளமான நாட்டைத் துண்டாடினால், மக்களை மொத்தமாகச் சிதைத்து விடும். இப்போது இந்நாடு பிரிக்கப்படுகிறது; நாளை காஷ்மீராகவோ, நாளை மறுநாள் கத்தியவாரின் கடைக்கோடியில் உள்ள ஜுனாகத்தாகவோ இருக்கலாம். எப்படி இது சாத்தியம்? மொத்த இந்தியாவையும் முஸ்லிம் லீக்கிடமே தந்து விடலாம். நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன். அதனால் தான், பிரித்தானியர்கள் வெளியேறிய பின், மக்கள் விழிப்புணர்வு பெறாவிட்டால், இந்தியா மன்னர்கள் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளும் போர்க்களமாகி, அவர்களில் பெரியவர்கள் சிறியவர்களை விழுங்கி ஆட்சியைக் கைப்பற்ற முனைவார்கள் என்று அஞ்சுகிறேன்,’” என்றார். [ஏப்ரில் 8]. முஸ்லிம் லீக்கிற்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கி விடலாம் என்று வெறும் பேச்சுக்காக அவர் சொல்லவில்லை. ஏற்கனவே, மவுண்ட்பேட்டனிடமும் காங்கிரசு தலைவர்களிடமும் அப்படியொரு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
காஷ்மீரின் பிரதமர் கக்கை பதவி விலகச் செய்து, எம்.சி.மகாஜனை பிரதமராக்கினார் மன்னர். நவீன இந்தியாவில் போரும் அமைதியும் என்ற நூலில், ஸ்ரீநாத் ராகவன், “எம்.சி.மகாஜன் பட்டேலையும் நேருவையும் சந்தித்து, மன்னர் இந்தியாவோடு இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அரசியல் சீர்திருத்தங்களை ஒத்திவைக்கும்படி கேட்பதாகவும் கூறினார். சிறைப்படுத்தப்பட்டுள்ள ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டு, மக்கள் ஆதரவு பெற்ற அரசு உடனே அமைக்கப்பட வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார்; அப்போதுதான் காஷ்மீர் இந்தியாவோடு இணையலாம் என்றார். 29 செப்டெம்பர் அன்று ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்,” என்று எழுதுகிறார். பாகிஸ்தான் அரசின் மறைமுக ஆதரவோடு அப்ரிதி இனக்குழுவினர் காஷ்மீர் மீது படையெடுத்தனர். ‘அக்டோபர் 22, 1947 அன்று, 5000 இனக்குழுவினர் தாக்கி முசாபராபாத், தோமெல், உரி ஆகிய ஊர்களைக் கைப்பற்றி ஸ்ரீநகர் நோக்கி நகர்ந்தனர். இரண்டு நாட்களில், நெருக்கடியிலிருந்த மகாராஜா இந்தியாவோடு இணைந்து கொள்வதாகக் கூறி, புது தில்லியிடம் ராணுவ உதவியைக் கோரினார்.’ காஷ்மீர் படைகளோ பிரித்தானிய ராணுவத்தைச் சார்ந்திருந்ததால், போதிய ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் அற்றிருந்தனர். அந்தப் படையெடுப்பின் போது அங்கு பயணம் செய்த அமெரிக்க இதழாளர் மார்கரெட் பூர்க்-வைட், ‘Halfway to Freedom’ என்ற நூலில், ஸ்ரீநகரைக் காக்க, காஷ்மீரிகள் குச்சிகளாலும் வெறும் கரங்களாலும் போரிட்டனர் என்று எழுதியுள்ளார்.
காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் இணைந்து விடும் ஒப்பந்தத்தில் அக்டோபர் 27, 1947 அன்று கையொப்பமிட்டார். சில சிறப்புச் சலுகைகள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டன. இச்சலுகைகளே பின்னர், அரசியலமைப்புச் சட்டம் 370ம் பிரிவில் சேர்க்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களை அகற்றியதும் மக்கள் கருத்தை அறிவது என்ற நோக்கிலேயே அன்றைய இந்திய அரசு இருந்தது. காஷ்மீர் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த ஷேக் அப்துல்லாவும் இந்தியாவோடு இணைந்து, இந்திய ராணுவ ஆதரவைப் பெறுவதற்கு உடன்பட்டார்; மக்கள் ஆதரவையும் திரட்டினார். இந்தியப் படைகள் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீநகரைக் காப்பதற்குச் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
ஜுனாகத், ஐதராபாத் ஆகிய மாகாணங்களிலும் யாரோடு இணைவது என்பது குறித்த சிக்கல்கள் வெடித்தன. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த இந்த இரு மாகாணங்களும் முஸ்லிம் மன்னர்களால் ஆளப்பட்டன; இரு மன்னர்களும் இந்தியாவோடு இணைய விரும்பவில்லை. மவுண்ட்பேட்டனும் ஜின்னாவும் லாகூரில் நவெம்பர் 1, 1947 அன்று சந்தித்த போது, ஜுனாகத், ஐதராபாத், காஷ்மீர் பிரச்சனைகளைப் பற்றி மூன்று மணிநேரம் பேசினர். ‘ஒரு நாட்டின் மன்னர் பெரும்பான்மைச் சமூகத்தைச் சாராதவராக இருந்து, பெரும்பான்மைச் சமூகத்தையொட்டிய ஒன்றியத்தோடு இணையாமலிருந்தால், எந்த ஒன்றியத்தோடு இணைவது என்பது மக்கள் விருப்பத்துக்கு இணங்கியே முடிவெடுக்க வேண்டும்’ என்று இந்தியா பாகிஸ்தானை ஒப்புக்கொள்ள வலியுறுத்தியது. ‘சட்ட ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்பட்டவுடன், ஐக்கிய நாடுகள் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தவும் நேரு தயாராக இருந்தார்.’ ஆனால் ஜின்னா உடன்பட மறுத்து விட்டார். ஜின்னாவின் மறுப்புக்கான காராணங்களை ஸ்ரீநாத் ராகவன் கணிக்கிறார்: ‘முதலாவதாக, ஜின்னா காஷ்மீர் மீதான படையெடுப்பு, இந்தியத் தலையீட்டையும் மீறி வெற்றி பெறும் என்று நம்பினார்; அதானல் தான் மேலும் அதிகமாக இனக்குழுவினரை காஷ்மீருக்குள் அனுப்பினார். […] இரண்டாவதாக, இனக்குழுவினர் படையெடுப்பின் காரணமாக, காஷ்மீரில் வாக்கெடுப்பு நடந்தால் பாகிஸ்தான் தோற்றுவிடும் சாத்தியம் அதிகம் என்பதையும் ஜின்னா அறியாமலில்லை.’
காஷ்மீரில் மட்டுமன்றி இந்தியாவின் எல்லைப் பகுதிகளெங்கும் பெரும் குழப்பமும் படுகொலைகளும் மக்கட்பெயர்ச்சியும் நடந்து கொண்டிருந்தன. இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும் பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும் சீக்கியர்களும் வரலாறு காணாத அளவில் இடம்பெயர்ந்தனர். வீடிழந்து, செல்வமனைத்தும் இழந்து, உறவுகளை இழந்து பல லட்சம் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களும் புது தில்லியில் குழுமியிருந்தனர்.
இந்தச் சிக்கலான அரசியல் சூழலில் காந்தி புது தில்லியில் தங்கியிருந்தார். கல்கத்தாவில் ஓரளவு அமைதியை ஏற்படுத்த உதவியபின் அவர் புது தில்லி திரும்பியிருந்தார். தொடர்ந்து மக்களைச் சந்தித்து வந்தார். வழிபாட்டுக் கூட்டங்களின் மூலமாகப் பெருந்திரளான மக்களிடம் உரையாற்றி வந்தார். அப்போது காஷ்மீர் குறித்தும் தொடர்ந்து பேசி வந்தார்.
காந்தி தன் இறுதி ஆண்டுகளில் பேரிருள் தன்னைச் சூழ்ந்திருப்பதாக உணர்ந்தார். தன் வாழ்நாளெல்லாம் நம்பிக்கை வைத்திருந்த அகிம்சைக்கு மிகப்பெரிய சோதனை நேர்ந்திருப்பதைக் கண்டார். அகிம்சையை அவர் ஒரு வாழ்க்கை நெறியாக, மாறாத உண்மையாகக் கருதியிருந்த போது, அவரோடு சேர்ந்து நீண்ட காலம் போராடியவர்களே அகிம்சையை ஓர் உத்தியாகவும் ஆயுதமாகவுமே பயன்படுத்தியதையும் காந்தி உணர்ந்த ஆண்டுகள் இவை. கத்தியின்றி ரத்தமின்றிப் பெற்ற சுதந்திரத்தை ரத்தத்தால் மக்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். அவரது விருப்பத்துக்கெதிராக பிரிவினை நடந்தேறியது. இந்தியச் சுதந்திரப் போராட்டம் உண்மையான அகிம்சைப் போராட்டமாக இல்லை என்பதை அவர் ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை. எனினும், எத்தனை இருள் சூழ்ந்த போதும் காந்தி அகிம்சை மீதான நம்பிக்கையைத் துறந்துவிடவில்லை. கொலைவெறி கோரதாண்டவம் ஆடிய சூழலில் தான் காந்தியின் அகிம்சைக்கு நவகாளியிலும் கல்கத்தாவிலும் பெரும் வெற்றிகளும் கிட்டின. இன்னும் அதிகமான பேரிழப்புகள் தடுக்கப்பட்டன.
ஆனால் காஷ்மீரைக் காக்க இந்திய ராணுவம் அனுப்பப்பட்ட போது காந்தி அதை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. சுதந்திர இந்தியாவுக்கு ஆயுதமேந்திய ராணுவமே கூடாது என்று ஒருகட்டத்தில் கூறிய காந்தி, காஷ்மீரைக் காக்க ராணுவம் அனுப்பப்பட்ட போது பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில சமயங்களில் தன் இயலாமையை வெளிப்படுத்தினார். இளம் காந்தி தென்னாப்பிரிக்கப் போர்களின் போதும், முதல் உலகப்போரின் போதும் பங்கெடுப்பதன் மூலம் தன் அகிம்சையில் சிறு சமரசங்கள் செய்து கொண்டதைப் போல, தன் இறுதிக் காலத்தில் இருந்த காந்தி காஷ்மீர் விஷயத்தில் சமரசம் செய்துகொண்டாரா என்று ஆராய வேண்டியுள்ளது. ஹிட்லரையும் ஜப்பானியப் படைகளையும் கூட அகிம்சை முறையில் எதிர்க்க முடியும் என்று இரண்டாம் உலகப் போரின் போது இந்தியர்களை ஆயத்தப்படுத்திய காந்தி, அகிம்சை குறித்த தன் கொள்கைப் பிடிப்பை காஷ்மீர் விஷயத்தில் சற்றே தளர்த்திக் கொண்டதாகவே கருத வேண்டும். எதிர்ப்பின்றிக் கோழைகளாக மடிவதை விட, தம் நாட்டையும் மக்களையும் காக்க, வலுவான எதிரியோடு ஆயுதமேந்தியேனும் போரிட்டு மடிவது மேலெனும் கருத்து காந்திக்கு எப்போதும் இருந்திருக்கிறது. அதனை இச்சூழலில் மீண்டும் வலியுறுத்தினார். “ஒரு லட்சம் பேர் கொண்ட ஆயுதமேந்திய அப்ரிதிகளின் படை அவ்விடத்தின் மீது படையெடுத்து வந்ததாக வைத்துக் கொள்வோம்; அப்போது விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய வெகுசிலர் அங்குள்ள கள்ளமற்ற குழந்தைகளையும் பெண்களையும் காப்பதற்காக ஆயுதமேந்திப் போரிட்டு மடிந்தார்களெனில், ஆயுதமேந்திய போதிலும் அவர்கள் அகிம்சையைக் கடைப்பிடித்ததாகவே கருதப்படுவார்கள்,” என்றார்.
மறைந்திருந்து செய்யும் தனிநபர் தாக்குதல்கள் மீது அவருக்கு ஒவ்வாமை இருந்தாலும், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் நடத்திய வலியோருக்கெதிரான எளியோரின் நேரடியான ஆயுதப் போர்களின் போது அவர்கள் வெளிப்படுத்திய வீரத்தை காந்தி முன்பே பாராட்டி இருக்கிறார். இத்தகைய வன்முறையை விட அகிம்சை உயர்ந்தது என்றே சொல்வார். ஆனாலும் இதுவும் அகிம்சை தான் என்ற காந்தியின் இந்த நிலைப்பாடு சற்றே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ‘ராணுவ பலத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு நவீன நாடு அகிம்சை முறையில் உள்நாட்டுக் கலவரங்களையோ வெளிநாட்டுப் படையெடுப்பையோ எதிர்கொள்ளமுடியாது. […] அகிம்சையின் அடிப்படையில் ஒரு நாட்டை அமைக்க முடியும்; அப்படியான நாட்டால் ராணுவ பலத்தைத் திரட்டிவரும் உலகக் கூட்டணியை அகிம்சை முறையில் எதிர்க்க முடியும்,’ என்று ஒருமுறை எழுதினார் [மே 2, 1946, ஹரிஜன்]. நாடும் மக்களும் அன்றிருந்த நிலையில் தூய அகிம்சையைப் போதிக்கும் அவரது குரலைக் கேட்க யாரும் இல்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். தன் கொள்கைக்காக மேலும் பல்லாயிரம் மக்கள் மடிவதை விட, தன் கொள்கையைக் காஷ்மீரின் மீட்புக்குக் குறுக்கே நிறுத்தாமல் இருந்தார் என்றே இதைப் பார்க்கலாம். தில்லியிலிருந்து கிளம்பி அவரே காஷ்மீர் செல்வதற்கான வாய்ப்பு மீண்டும் அமைந்திருந்தால், அவருடைய அணுகுமுறை வேறாக இருந்திருக்கலாம்.
அகிம்சையின் உச்சங்களைத் தொட்ட காந்தி போரை ஆதரிக்கலாமா என்ற கேள்வி காந்தியிடமும் எழுப்பப்பட்டது. கிங்க்ஸ்லி மார்ட்டினுடனான நேர்காணலில், தான் எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லை என்பதையும் அன்று ஆட்சியில் இருந்தவர்களுக்கு அகிம்சையில் நம்பிக்கையில்லையென்பதையும் சுட்டிக்காட்டி, “ஓர் உண்மையான அகிம்சாவாதி ஒருபோதும் அதிகாரத்தைத் தானே வைத்திருக்கமுடியாது. தான் சேவை செய்யும் மக்களிடமிருந்தே அவன் அதிகாரத்தைப் பெறுகிறான். அத்தகைய ஒரு மனிதனுக்கோ அரசுக்கோ, ஓர் அகிம்சைப் படை முழு சாத்தியமே. வாக்காளர்கள் தாங்களாகவே, ‘எங்கள் பாதுகாப்புக்கு எந்த ராணுவமும் தேவையில்லை,’ என்று கூறிவிடுவார்கள். அகிம்சைப் படை எல்லா அநீதிக்கெதிராகவும், படையெடுப்புக்கு எதிராகவும் போராடும்; ஆனால், தூய்மையான ஆயுதங்களைக் கொண்டு. எதிரிக்கு எதிராகப் போராடக் கூடாது என்பதல்ல அகிம்சையின் பொருள்; எதிரி என்பதும் மனிதர்கள் செய்யும் தீமையைக் குறிப்பதேயன்றி, மனிதர்களைக் குறிக்கவில்லை. ஷேக் அப்துல்லா போல காஷ்மீரின் தலைவராக நான் இருந்திருந்தால், அப்படியொரு படையைக் கொண்டிருப்பேன், ஆனால் ஷேக் அப்துல்லா நேர்மையாகவும் பணிவாகவும் வேறுமாதிரி நினைக்கிறார்,” என்று கூறினார்.
காஷ்மீருக்கு அவரே மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்திருந்ததால், அவர் வேறு மாதிரியான அணுகுமுறையை எடுத்திருக்கக் கூடும்; ஆனால் தில்லியில் அப்போதிருந்த சூழலில் அது சாத்தியமாக இல்லை. பியாரேலால், “காஷ்மீர் விஷயத்தில், போராளிகளின் வீரத்தையும், ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக எல்லாத் தரப்பு மக்களும் வெளிப்படுத்திய ஒத்த நோக்கையும் ஒருங்கிணைப்பையும் மதிப்பதாகக் கூறியிருந்தாலும் கூட, ஒரு பொன்னான வாய்ப்பு நழுவி விட்டது என்றே நினைத்தார். தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆதரவோடு மகாராஜாவின் விண்ணப்பத்துக்கு இணங்கிப் படைகளை அனுப்பியது, அச்சூழலில் இந்திய அரசாங்கத்தைப் பொருத்தவரை சரியான செயல் தான்; உலகம் எது உரிமை என்று நம்புகிறதோ அதனடிப்படையில் படைகளை அனுப்பும் உரிமை இந்திய அரசாங்கத்துக்கு இருந்தது. ஆனால் இது அவரது வழியன்று. இந்தியா முழுவதும் தமது மண்ணின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்களுக்குத் துணையாக அகிம்சை முறையில் தற்காப்பு செய்யத் திரண்டிருப்பதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பியிருப்பார். இந்த அடக்குமுறை எவ்விதத் தூண்டுதலும் இல்லாமல் நடந்தது என்பதாலும், பாதுகாக்கப் போராடும் போராளிகளின் நோக்கம் மிகவும் நேர்மையானது என்பதாலும், ஆக்கிரமிப்பை காஷ்மீர் மக்கள் இறுதிவரை அகிம்சை முறையில் எதிர்த்திருந்தால் ஒட்டுமொத்த உலகத்தின் மதிப்பையும் அனுதாபத்தையும் வென்றிருப்பார்கள் என்று நினைத்தார். ‘நானே காஷ்மீர் போக வேண்டும் என்று விரும்புகிறேன்; மக்கள் எனது வழியைப் பின்பற்றினால், அவர்களுக்கே வெற்றி உரித்தாகும்,’ என்று ஒருமுறை மவுண்ட்பேட்டன் பிரபுவைச் சந்திக்க டிசெம்பர் மாத இறுதியில் செல்லும்போது என்னிடம் கூறினார். ‘தில்லியின் சூழல்மட்டும் என்னை அனுமதித்தால்,’ என்று பெருமூச்சுடன் மேலும் கூறினார்.” 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உண்ணாவிரதத்துக்குப் பின், காந்தி பியாரேலாலிடம் மீண்டும் ‘தில்லியில் அவருக்கு வெற்றி கிடைத்தால், காஷ்மீர் சென்று தனது அகிம்சைக் கோட்பாடு என்ன செய்யமுடியும் என்று பார்ப்பதைக் குறித்து ஏதோ’ சொன்னார்.
ஜின்னாவுடனும், லியாகத் அலி கானுடனும் பிறரோடும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காந்தி தனது பார்சி இன நண்பர்களான ஜெகாங்கீர் பட்டேல், மருத்துவர் தின்ஷா மேத்தா ஆகியோரை தன் அந்தரங்கத் தூதுவர்களாக அனுப்பி வைத்தார். அங்கு அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டனர். இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் அடங்கிய ஒரு தீர்ப்பாயம் காஷ்மீர் உட்பட எஞ்சிய பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்ப்பதற்காக ஆலோசிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஐக்கிய நாடுகள் சபை காஷ்மீர் குறித்த விவாதங்களை நிறுத்தி வைக்கலாம். பாகிஸ்தானுக்கு காந்தி செல்வதற்கான ஒரு திட்டமும் தீட்டப்பட்டது. ‘பிப்ரவரி 8ம் தேதியோ 9ம் தேதியோ காந்தி வந்து சேர்வதாக உத்தேசிக்கப்பட்டது. தில்லியில் காந்தியைச் சந்தித்த ஒரு பாகிஸ்தானிய இஸ்லாமியர், ‘காந்தியின் தலைமையில் ஐம்பது மைல் நீள ஊர்வலமாக இந்துக்கள் பாகிஸ்தான் திரும்புவார்கள்’ என்ற நம்பிக்கை மிகுந்த சித்திரத்தைக் கற்பனை செய்து கூறினார். இந்த எண்ணம் காந்திக்கு பேருவப்பாக இருந்தது. நல்ல நாட்கள் உதயமாகக் கூடும் என்று தோன்றியது,” என்று ஜெகாங்கீர் பட்டேலும் மர்ஜோரி சைக்ஸும் தமது நூலில் எழுதுகின்றனர். “ஜெகாங்கீர் பட்டேலையும் தின்ஷா மேத்தாவையும் ஜின்னாவோடும், லியாகத் அலியோடும் பிறரோடும் பேச்சுவார்த்தை நடத்த நான் அனுப்பியுள்ளேன். நான் பாகிஸ்தான் செல்வதற்கான திட்டத்துக்கு சுஹ்ரவார்டியின் கணிசமான உதவியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் இதெல்லாம் இப்போதைக்கு பகல் கனவுகள் தாம்,” என்று காந்தியும் ஒரு கடிதத்தில் எழுதினார். [ஜனவரி 24, 1948]. மகாத்மாவின் அற ஆளுமையைச் சார்ந்திருந்த இப்பெரும் திட்டம், ஒரு கொலைகாரனின் மூன்று குண்டுகளால் நசுக்கப்பட்டது.
போர் நிகழ்ந்து கொண்டிருந்த புறச்சூழலில், லட்சியவாத யதார்த்தவாதியான காந்தியின் அகத்தில், லட்சியத்துக்கும் யதார்த்தத்துக்கும் நடக்கும் போரையும் இந்த உரைகளும் நேர்காணல்களும் வெளிப்படுத்துகின்றன. வின்சென்ட் ஷீனிடம், “காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். இது எனது மறைமுக ஆதரவோடு தான் நடக்கிறது என்பதை நான் மறுக்க முடியாது. எனது அறிவுரைக்கு அவர்கள் செவிசாய்க்கப் போவதில்லை. ஆனாலும், அவர்களுக்கு இதெல்லாம் வெறுத்துப் போனால், இன்றும் என்னால் ஒரு வழியைக் காட்ட முடியும்,” என்று தன் மரணத்திற்கு இரு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
இக்காலகட்டத்தில் காந்தியின் கூற்றுகள் பெரும்பாலும் திட்டமிட்டு எழுதப்பட்டவை அல்ல. உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்த சூழலில், பிரிவினையால் பாதிக்கப்பட்டு ஆற்றாமையும் சீற்றமும் கொண்டிருந்த மக்கள் முன் ஆற்றப்பட்ட உரைகள். அவர்களுக்கு ஆறுதல் தரவும், உற்சாகப்படுத்தவும், வன்முறையைத் தவிர்க்கவும், செய்திகள் பகிர்ந்து கொள்ளவும், நம்பிக்கையூட்டவும் பேசப்பட்டவை. இந்தியில் பேச்சுமொழியில் அமைந்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழுக்கு வந்திருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே காந்தியின் எழுத்தில் இருக்கும் கட்டுக்கோப்பும் கவனமும் சில இடங்களில் இல்லை எனலாம். இருந்தபோதும், பல இடங்களில் அவரது தனித்த நோக்கும் கூர்மையான சொற்களும் மறுக்க முடியாத தருக்கமும் மக்கள் மீதான தீராத அன்பும் தெறிக்கக் காணலாம்.
காஷ்மீர் பற்றிய காந்தியின் உரைகளில் சில பொது அம்சங்களையும் காணலாம்.
முதலாவதாக, காஷ்மீரையோ பிற சமஸ்தானங்களையோ, இந்தியாவோடோ பாகிஸ்தானோடோ இணைப்பதற்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மக்களின் விருப்பமே தலையாயது என்றும் அவர் வலியுறுத்தினார். காஷ்மீர் மகாராஜாவைக் காட்டிலும் மக்களின் ஆதரவைப் பெற்ற ஷேக் அப்துல்லா இந்தியாவோடு இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்ததாலேயே காந்தி முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான காஷ்மீர் இந்தியாவோடு இணைவதை ஆதரித்தார். காஷ்மீர் மக்களின் குரலுக்கும் விருப்பத்துக்கும் செவிசாய்க்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் கூறினார். “மகாராஜா மட்டுமே இந்திய ஒன்றியத்தோடு இணைய வேண்டும் என்று விரும்பியிருந்தால், அத்தகைய செய்கையை நான் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. காஷ்மீர் தம்மோடு இணைவதை ஒன்றிய அரசு தற்போதைக்கு ஒப்புக் கொண்டதற்குக் காரணம், மகாராஜா, காஷ்மீர் மக்களின் பிரதிநிதியான ஷேக் அப்துல்லா ஆகிய இருவருமே அதை விரும்பியதால் தான். முஸ்லிம்களை மட்டுமல்ல, காஷ்மீர் மக்கள் அனைவரையும் பிரிதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுவதாலேயே ஷேக் அப்துல்லா முன்வந்தார்.” [நவெம்பர் 11, 1947]
மக்களுடைய விருப்பத்தைக் கேட்பது அவசியம் என்று கருதிய அவர் காலமும் பலனும் இடனும் சார்ந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
“காஷ்மீரோ, ஐதராபாத்தோ, ஜுனாகதோ, என்னைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இல்லை. யாரும் எந்த முடிவை நோக்கியும் கட்டாயப்படுத்தப்பட வேண்டாம். எந்த மிரட்டலும் வேண்டாம். ஆனால், ஒன்றைக் கூறிக் கொள்கிறேன் – இன்று காஷ்மீர் அதன் மகாராஜாவால் ஆளப்படவில்லை. பிற மாநிலங்களிலும் நாம் அறிந்திருந்த மாதிரியான அரசர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டனர். இப்போது ஆங்கிலேயர் சென்று விட்டனர். அந்த அரசர்களை அவர்கள் உருவாக்கியதற்குக் காரணம், அவர்கள் மூலமாகத் தாம் ஆளலாம், ஆதிக்கம் செலுத்தலாம் என்பது தான். காஷ்மீரில் இன்னும் மக்கள் ஆதரவு பெற்ற ஆட்சி அமையவில்லை. ஐதராபாத், ஜுனாகத் போன்ற பிற நாடுகளிலும் அதே நிலை தான். என் நோக்கில் இவற்றிற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. ஒரு நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் அதன் மக்கள் தாம். காஷ்மீரத்து மக்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தால், உலகின் எந்த சக்தியாலும் அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுக்க முடியாது. ஆனால் அவர்களே முடிவெடுக்க அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிட வேண்டும். மக்களைத் தாக்கக் கூடாது; கிராமங்களை எரித்து மிரட்டக் கூடாது. காஷ்மீரத்து மக்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருப்பினும், அவர்கள் இந்தியாவோடு இணைய விரும்பினால், யாராலும் அவர்களைத் தடுக்க இயலாது.
பாகிஸ்தான் அரசு அதன் மக்கள் காஷ்மீர் சென்று காஷ்மீரத்து மக்களைக் கட்டாயப்படுத்துவதைத் தடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பாகிஸ்தான் அரசு தான் எல்லாப் பழியையும் சுமக்க வேண்டியிருக்கும். இந்திய மக்கள் காஷ்மீர் சென்று கட்டாயப்படுத்தினால், அவர்களும் தடுக்கப்பட வேண்டும்; அவர்கள் தாமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.“ [அக்டோபர் 26, 1947]
“ஒரு மாகாணத்தின் மக்களுக்குத் தான் இரண்டு ஒன்றியங்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இணையும் சட்டப்பூர்வமான உரிமை உள்ளது. ஜுனாகத்திலுள்ள தற்காலிக அரசாங்கம் ஏதேனுமொரு கட்டத்தில் அதன் மக்களளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனில், அது அந்த மாகாணத்தின் ஆட்சி இருக்கையில் நியாயமற்ற முறையில் அமர்ந்திருக்கும் ஒரு குழு தான்; அதனை இரு நாடுகளுமே விரட்ட வேண்டும். யாராவது ஒரு ஆட்சியாளர் தன் தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம், ஏதேனும் ஓர் ஒன்றியத்தில் இணைந்தால், அந்த ஒன்றியம் உலகின் முன் அவரது செயலை நியாயப்படுத்த இயலாது. ஜுனாகத்தின் மக்கள் பாகிஸ்தானோடு இணைவதற்கு ஒப்புதல் அளிப்பதாக நிரூபிக்கப்படும் வரை நவாப்பின் செயல் அடிப்படையற்றது. எந்த ஒன்றியத்தோடு ஜுனாகத் இணைய வேண்டும் என்பதை மக்களுடைய கருத்தைக் கேட்டறியும் கருத்தெடுப்பு மூலமாகத் தான் முடிவு செய்ய இயலும். இப்பணி முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்; இதில் வன்முறையோ வன்முறை அச்சுறுத்தலோ இருக்கக் கூடாது. பாகிஸ்தான் அரசும், இப்போது ஜுனாகத்தின் பிரதமரும் எடுத்துள்ள நிலைப்பாடு வினோதமான சூழலை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் செய்வது சரியா, இந்திய ஒன்றிய அரசாங்கம் செய்வது சரியா என்பதை யார் முடிவு செய்வது? ஆயுத பலத்தைக் கொண்டு இதை முடிவு செய்யலாம் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நடுநிலையானவர்களைக் கொண்டு சமாதானப் பேச்சு நடத்துவதன் மூலமாக இதைத் தீர்ப்பது மட்டுமே நல்லதொரு வழி. நமது நாட்டிலேயே நடுநிலையானவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் சமாதானப் பேச்சு நடத்துவதற்கு இரு தரப்பினரும் உடன்படவில்லையெனில், உலகின் எந்த மூலையிலிருந்தும் ஒரு நடுநிலையானவரை அழைப்பதற்கு என்னைப் பொறுத்தவரை எந்த மறுப்பும் இல்லை. நான் ஜுனாகத் பற்றிச் சொல்லிய எல்லாமும், காஷ்மீருக்கும் ஐதராபாத்துக்கும் சமமாகப் பொருந்தும். காஷ்மீர் மகாராஜாவாகட்டும், ஐதராபாத் நிஜாமாகட்டும், மக்களின் ஒப்புதலில்லாமல் எந்தவொரு ஒன்றியத்தோடும் இணைவதற்கு அதிகாரமற்றவர்கள்.“ [நவெம்பர் 11, 1947]
இரண்டாவதாக, காஷ்மீரில் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயல்பட்டது காந்தியை மேலும் கவர்ந்தது. காஷ்மீரின் பழங்கால சுல்தான் ஒருவர் குறித்து, “முன்னாளில், ஜைனுலுதீன் இந்துக்களோடு சேர்ந்து காசிக்கு யாத்திரை செல்லும்போது, வழியிலுள்ள கோயில்களையெல்லாம் சீரமைத்தார்,” என்று கூறுகிறார் [ஜுன் 12, 1947]. பிரிவினைக் கொள்கையைப் பொய்யாக்கும் களமாக அவர் காஷ்மீரைக் கண்டார். காஷ்மீர் இந்தியாவோடு இணைவது இந்திய மதச்சார்பின்மையின் வெற்றியாகவும் அவர் கருதியிருக்கக் கூடும். “நம்மிடையே பரவியுள்ள நஞ்சு ஒருபோதும் பரவியிருக்கக்கூடாது. காஷ்மீர் மூலமாக அந்த நஞ்சு விலக்கப்படலாம். இப்படியொரு தியாகத்தைக் காஷ்மீரில் செய்து இந்த நஞ்சு நீங்கினால், நம்முடைய கண்களும் திறக்கும்,” என்றார். “நம் நாட்டில் உள்ள காரிருளில், காஷ்மீர் ஒளிவழங்கும் விண்மீனாக வேண்டும் என்பதே எனது வேண்டுதல்,” என்றும் சொன்னார் [டிசெம்பர் 29, 1947]. ஜம்முவில் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களைத் தாக்கிய போது பெரிதும் கலக்கமுற்றார்.
மூன்றாவதாக, காஷ்மீரின் மதச்சார்பற்ற தன்மையின் பொருட்டே ஜம்மு-காஷ்மீரைப் பிரிப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார். மத அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரைப் பிரிப்பது, பிரிவினைக் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொள்வதற்கு இணையானதென்ற எண்ணத்தை அவரது எதிர்ப்பு காட்டுகிறது. “ஜம்மு-காஷ்மீர் ஒரே மாநிலம். அதைப் பிரிவினை செய்ய முடியாது. பிரிவினைச் செயலைத் தொடங்கி வைத்தால் இதற்கு முடிவேது? இந்தியாவைப் பிரிவினை செய்ததே போதுமானது. தேவையற்றது. காஷ்மீரைப் பிரித்தால், ஏன் மற்ற மாநிலங்களையும் பிரிக்கக் கூடாது?” என்பதே அவரது தரப்பு [டிசெம்ர் 25, 1947].
நான்காவதாக, ஷேக் அப்துல்லா என்ற ஒற்றை மனிதர் மீது கொண்ட நம்பிக்கையும் அபிமானமும் காந்தியின் நிலைப்பாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தியிருப்பதையும் காணலாம். பல காஷ்மீரிகள் ஷேக் அப்துல்லாவால் உந்துதல் பெற்று அச்சமற்றுப் போரிட்டு மடிந்திருக்கின்றனர். மீர் மக்பூல் ஷெர்வானி போன்றவர்களின் வீர மரணத்தை வரலாறு மறந்து விட்டது. காந்தி தன் உரையில் அந்த வரலாறைப் பதிவு செய்கிறார். இன்னும் விளக்கமாக மார்கரெட் பூர்க்-வைட்டின் நூலில் மக்பூலின் போராட்டமும் சிலுவையில் அறைந்தது போன்ற மரணமும் சித்தரிக்கப்பட்டுள்ளன. (முல்க் ராஜ் ஆனந்த்தின் ‘Death of a Hero’ என்ற நாவல் ஷெர்வானியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது.) மார்கரெட் காந்தியைக் கடைசியாகச் சந்தித்து நேர்காணல் செய்த நிருபர். அவரும் ஷேக் அப்துல்லாவின் அன்றைய செயல்பாடுகளை நேரில் கண்டு மிக உயர்வாக எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில், இந்திய அரசைவிடவும் அப்துல்லா தலைமையிலான காஷ்மீர் அரசு மதச்சார்பற்றும் நிலப் பங்கீடு போன்ற சீர்திருத்தங்களில் முற்போக்காகவும் வேகமாகவும் செயல்பட்டதாகப் பதிவு செய்துள்ளார். எனவே, காந்தி அப்துல்லாவின்பால் ஈர்க்கப்பட்டது இயல்பானதே. அதே சமயம் காஷ்மீர் பற்றிய அவரது இறுதிக் கடிதத்தில் [ஜனவரி 28, 1948, பெறுநர் குறிப்பிடப்படவில்லை], தனிமனிதரைச் சார்ந்து எடுக்கப்படும் நிலைப்பாட்டில் இருக்கும் ஆபத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். “ஷேக் அப்துல்லா துணிச்சலான மனிதர். ஆனால் அவரும் இறுதியில் ஏமாற்றம் தந்து விடுவாரோ என்று தோன்றுகிறது. எந்த ஒரு மனிதனும் இன்னொருவரை ஏமாற்ற முடியாது; இறுதியில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். அதனால் இதுகுறித்து எனக்குக் கவலையில்லை.”
ஐந்தாவதாக, காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க நடுநிலையான ஒருவரை வைத்துச் சமரசப் பேச்சுகள் நடத்த வேண்டும் என்றும், நம்பிக்கைக்குரிய நடுநிலையானவர்கள் கிடைக்கவில்லையெனில் மூன்றாம் நபர்களைக் கொண்டு பேசலாம் என்றும் ஆரம்பத்தில் கூறிய காந்தி, பின்னால் மூன்றாம் நபர்கள் தலையிடுவதை எதிர்க்கிறார். ஐ.நா.சபைக்கு இந்தியா சென்றதை அவர் கண்டிக்கவில்லை. வேறு வழியில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் அது அவருக்கு உவப்பான செயலாகவும் இல்லை. “இந்திய, பாகிஸ்தான் அரசாங்கங்கள் ஒன்றாக அமர்ந்து, நடுநிலையான இந்தியர்களைக் கொண்டு இப்பிரச்சனையைப் பேசித் தீர்க்க முடியாதா? நடுநிலையானவர்களே இந்தியாவில் இல்லையா? அந்தளவு நாம் திவாலாகிவிடவில்லை என்று நினைக்கிறேன்,” என்றும், “காஷ்மீர் குறித்து நாம் சக்ஸஸ் ஏரிக்கு (லேக் சக்ஸஸ் – ஐ.நா.சபை) செல்லவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்,” என்றும் கூறுகிறார் [ஜனவரி 27, 1948]. அன்றைய தினம் நடந்த பிறிதொரு நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஐ.நா.வின் பாதுகாப்பு சபை காஷ்மீர் பிரச்சனை குறித்து நடந்துகொள்ளும் விதம் காந்திக்கு ஏமாற்றமளித்தது. இந்தியாவின் புகாரைக் கருத்தில்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றுவதை விடுத்து, இந்தியா தனது படைகளை விலக்க வேண்டும் என்பதை காஷ்மீரின் எதிர்காலத்தை முடிவுசெய்யும் கருத்துக் கணிப்பு நடத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாகக் கோருவதற்கான மேடை அமைக்கப்படுகிறது. இது பொய்மையும் நழுவலும் அதிக மதிப்புபெறும் அமைப்பாகி விட்டது. ‘பண்டித நேருவின் அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு இன்று அவர்கள் ஆயத்தமாகிறார்கள்,’ என்று தர்காவிலிருந்து திரும்பும்போது அவர் கூறினார். ‘நாம் மிகவும் கவனமாக இல்லாவிட்டால், நமது நற்பெயர் களங்கப்பட்டு தான் நாம் வெளியே வருவோம்’ ” என்று பியாரேலால் எழுதினார்.
மேலும் அதிகமாக காந்தியைப் புரிந்து கொள்வதற்கும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த காலகட்டத்தைப் புரிந்து கொள்வதற்கும் இத்தொகுப்பு உதவும் என்று நம்புகிறேன்.
ராமச்சந்திர குஹா தி டெலகிராப் இதழில் எழுதிய கட்டுரையில் [தமிழ் இந்து: 6-செப், 2019], “காஷ்மீரின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த மூன்று சம்பவங்களுக்காக காந்தி மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்திருப்பார். முதலாவது, 1953-ல் நேரு தலைமையிலான மத்திய அரசு ஷேக் அப்துல்லாவைக் கைதுசெய்தபோது; இரண்டாவது, 1989-90-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியிருந்த இஸ்லாமிய ஜிகாதிகளால் இந்து பண்டிட்டுகள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது; மூன்றாவது, 2019-ல் ஒருதலைப்பட்சமாக காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிளக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டபோது. இந்தக் கடைசிச் செயல் அவரை மிகவும் திடுக்கிட வைத்திருக்கும். அவருடைய 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்தச் சமயத்தில், மக்களுடைய விருப்பத்துக்கேற்ப மாற்றங்களைச் செய்ய மறுத்த இந்திய அரசு, மனித வரலாற்றிலேயே முதல் முறையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதையும் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றி விட்டது குறித்து அவர் நிறையவே வருந்தியிருப்பார்,” என்கிறார்.
காந்தியின் கருத்துகளில் இருந்து ஆகஸ்டு 2019லிருந்து காஷ்மீரில் நிகழ்ந்துள்ளவற்றை காந்தி எப்படி நோக்கியிருக்கக் கூடும் என்பதைக் குறித்து நாம் மேலும் சில அனுமானங்கள் செய்யலாம்.
- காந்தி பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கண்டித்திருப்பார். அதே வேளை அதையே இந்தியா தன் மக்கள் மீதே அடக்குமுறை செலுத்துவதற்கான முகாந்திரமாக்குவதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். காஷ்மீரின் மொத்த அரசியல் தலைமையையும் சிறையில் அடைத்திருப்பதை எதிர்த்துக் கிளர்ந்திருப்பார்.
- ஒருதலைப்பட்சமாக அரசியலமைப்புச் சட்டம் 370ம் பிரிவை விலக்குவதை அவர் அனுமதித்திருக்க மாட்டார். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஆளுநரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கோ அரசமைப்புச் சட்டப் பேரவைக்கோ மாற்றாகக் கருதலாம் என்பதை எதிர்த்திருப்பார். சட்டப்பூர்வமாக அது சரியானதென்று தீர்ப்பானாலும், அறத்துக்குப் புறம்பான ஒன்றாகவே அதைக் கருதியிருப்பார்
- லட்சியவாத காந்தி ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரித்ததைக் கண்டு பொருமியிருப்பார். “காஷ்மீர் பிரிக்கப்படலாம் என்று மக்கள் கிசுகிசுப்பதைக் கேட்டிருக்கிறேன். ஜம்மு இந்துக்களுக்கும், காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் சென்று விடும். இப்படிப் பிரிக்கப்பட்ட விசுவாசத்தை, இந்திய மாகாணங்களைக் கூறுபோடுவதை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. எனவே, இந்தியா முழுவதும் இதில் அறிவுப்பூர்வமாகச் செயல்பட்டு, திக்கற்ற ஏதிலிகளாகும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்காகவேனும், இத்தகைய ஒரு அவலமான சூழல் உருவாகமல் தடுக்கப்படும் என்று நம்புகிறேன்,” என்றவர் காந்தி [நவெம்பர் 11, 1947]. ஆனால், லடாக்கில் பெருவாரியான மக்கள் பிரிந்து செல்வதை விரும்புவதாக அவர் உறுதிசெய்து கொண்டால், யதார்த்தவாத காந்தி தன்னிலைப்பாட்டில் சமரசம் செய்து ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.
- ஆனால் ஒரு மாநிலத்தை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியதை காந்தி வன்மையாகக் கண்டித்திருப்பார். நேர் எதிராக, அதிக சிக்கல்கள் உள்ள ஒரு பகுதியில், முன்னைக் காட்டிலும் அதிகமாக அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரியிருப்பார்.
- காஷ்மீரின் இரு புறங்களிலும் இந்த அளவு ராணுவமயமாவதைப் வேதனையோடு கண்டிருப்பார். இத்தனை நாட்களாக ஒட்டுமொத்த மக்களின் குடிமை உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொதித்திருப்பார். போர்க்காலச் சட்டங்களைக் குறித்து அவரது கருத்துகளை இவ்வாறு தொகுத்துச் சொல்லியிருக்கிறார்: “பஞ்சாப் போர்க்காலச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். முன்பொரு முறை போர்க்காலச் சட்டம் பஞ்சாபில் அமுல்படுத்தப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். போர்க்காலச் சட்டம் என்பதன் விளைவை நான் அறிவேன். அக்கட்டுப்பாடுகளால் மனிதர்களின் மனங்களை மாற்ற முடியாது. முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், இந்துக்கள் இந்து மதத்தையும், சீக்கியர்கள் குருத்வாராக்களையும் காக்க நினைத்தால், அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட மாட்டோம் என்று உறுதிபூண வேண்டும்…” [ஜூன் 24, 1947].
- காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்டது காந்தியை மிகவும் பாதித்திருக்கும். காஷ்மீரின் மதச்சார்பற்ற சமூகம் குறித்த அவரது பார்வைக்கு இது பேரிடியாக இருந்திருக்கும். “நம் நாட்டில் உள்ள காரிருளில், காஷ்மீர் ஒளிவழங்கும் விண்மீனாக வேண்டும்” என்பதே அவரது வேண்டுதல். காஷ்மீரின் குடிமைச் சமூகத்திடம் பண்டிதர்களைத் திரும்ப அழைக்கும்படியும் அவர்களது சொந்தக் குடியிருப்புகளில் அமர்த்தி, பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும்படியும் மன்றாடியிருப்பார். அதே சமயம், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீர் பண்டிதர்களுக்கு நிகழ்ந்த அநீதியைக் கொண்டு, இன்று காஷ்மீரில் நடப்பதை நியாயப்படுத்துவதை அனுமதிக்க மாட்டார்.
- 1947-48ல் ஒட்டுமொத்த காஷ்மீரிலும் பாகிஸ்தானின் படைகளை விலக்கிக் கொண்டபின் நடத்த நினைத்த வாக்கெடுப்பின் சாத்தியங்கள் வெகுவாகக் குன்றிவிட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வாக்கெடுப்பு நடத்துவதற்காக வெவ்வேறு சாத்தியங்களை நேரு ஆலோசித்தார். ஆனால் பாகிஸ்தானுடன் எந்த சமரசமும் ஏற்படாததால் அவை கைவிடப்பட்டன. பாகிஸ்தானின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், இந்தியாவின் பொறுப்பில் இருக்கும் காஷ்மீரில் உள்ள மக்களது கருத்தையேனும் செவிமடுக்குமாறு காந்தி வாதாடியிருக்கக் கூடும்; அதே நேரம் காஷ்மீரத்து மக்கள் இந்தியாவோடு இணைந்திருப்பதைத் தாமாகவே தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான அனைத்தையும் செய்திருப்பார்.
அன்றைய காலத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டாலும், காந்தியின் கருத்துகள் காஷ்மீருக்கு மட்டுமல்லாமல், வேறு பல சிக்கல்களுக்கும் தீர்வு காண உதவலாம். உண்மை, அகிம்சை, அன்பு ஆகியவை காலத்தைத் தாண்டி நிற்பவை; எதற்கும் எக்காலத்துக்குமானவை.
உதவிய நூல்கள்:
- The Collected Works of Mahatma Gandhi
- Margaret Bourke-White, Halfway to Freedom, New York: Simon And Schuster, 1949.
- Srinath Raghavan, War and Peace in Modern India, Palgrave Macmillan UK, 2010.
- Pyarelal, The Last Phase, Volume 2, Ahmedabad:Navajivan Publishing House, 1958.
- Jehangir P. Patel and Marjorie Sykes, Gandhi – His Gift of the Fight, Rasulia: Friends Rural Centre, 1987
- Victoria Schofield, Kashmir in Conflict: India, Pakistan and the Unending War, Diane Publishing Company, 2003.
- Nyla Ali Khan, The Parchment of Kashmir, Palgrave Macmillan UK, 2012.
பின்குறிப்பு:
(இக்கட்டுரை ‘போரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி’ என்ற நூலில் இடம்பெற்ற அறிமுகக் கட்டுரையின் சற்றே விரிவுபடுத்தப்பட்ட வடிவம். பதிப்பு: யாவரும் பதிப்பகம்)