பைத்தியக்கார முயல்கள்: டார்டன் சகோதரர்களின் திரையுலகம்

0 comment

1999-இல் Rosetta படத்திற்காகவும் 2005-இல் The Child திரைப்படத்திற்காகவும் இருமுறை தங்கப்பனை விருது பெற்றிருக்கும் பெல்ஜியத்தின் இரட்டை இயக்குநர்களான டார்டன் சகோதரர்கள் (Jean-Pierre Dardenne, Luc Dardenne) தங்களது தனித்துவமான யதார்த்த திரைக்கதைகள் மூலம் தொடர்ந்து உலக அரங்கில் சினிமா ஆர்வலர்களின் அங்கீகாரத்தினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள்.

பெரும்பாலான திரைக்கதைகள் தனிமையில் நிர்கதியில் உழலும் சின்ன மனங்களின் தவிப்பையும் ஆற்றாமையையுமே பேசு பொருட்களாகக் கொண்டிருக்கின்றன. கூடியிருப்பினும் வாழ்க்கையின் பிரம்மாண்டத்தின் முன் மனித சிற்றினம் வீழ்ச்சிக்குரியதே. எனினும் தனித்திருக்கும் எவரையும் காலம் வெல்லக்கட்டி வழங்கி வரவேற்பதில்லை. அப்படியே வழங்கினாலும் அதை சுகிக்கும் முன் மழையனுப்பி கரைத்து விளையாடிப் பார்க்கிறது. வாழ்வின் குதர்க்கத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் அது தரும் பீதியுணர்வு அகவை சார்பின்றி எவரையும் குதறி எடுத்த வண்ணம் இருக்கிறது.

இதை வானிலெல்லாம் பறந்து வண்ணக் கனவுகள் பேசாமல், மேசை நாற்காலி சகிதம் தத்துவ வகுப்பு எடுக்காமல், சமதளத்தில் நடத்திக் காட்டும் இயக்குநர்களின் ஆற்றல் அளப்பரியது. யதார்த்தம் என்ற பெயரில் அர்த்தமற்ற படிமக் கோர்வைகளையோ முகங்களின் தொடர்ச்சியையோ முன்வைக்காமல் சுவாரஸ்யம் குறையாத மனித உணர்வுகளின் கேளிக்கையைக் காண்பித்திருப்பது இறுதியில் பேருணர்வைக் கடத்திவிடுகிறது. இவர்களது படங்கள் சராசரியாக 90 நிமிடங்களைத் தாண்டி விடுவதில்லை. ஆனால் கதை எடுத்துக் கொள்ளும் முடிச்சின் செறிவும் அதன் படமாக்கலும் உணர்ச்சிகளை தீர்க்கமாக நோய் போல பார்வையாளர்களிடம் தொற்றிக் கொள்ளச் செய்துவிடுகிறது.

இவர்களது படங்களின் முதன்மை கதாபாத்திரங்கள் அனைவரிடமிருந்தும் ஏதோ ஒரு புள்ளியில், முக்கியத்துவம் வாய்ந்தவர்களை வாழ்க்கை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு விடுகிறது. அங்கிருந்து தன் அகத்தினை உணர்வின்றி விறைத்துப் போக வைத்துக் கொண்டு காலத்தின் பேரிரைச்சலின் முன் எதிர்நீச்சல் போட முனைகின்றனர். அவர்களுக்குத் தற்காலிகமாக, சுயநலமே அறமாகவும் சினமே பண்பாகவும் ஆகி விட்ட வேளையில் மீண்டும் எங்கிருந்தோ ஒரு அன்பின் கீறல் விழ, அதன் பாரம் தாளாமல் வெடித்து, கண்ணீர் துண்டங்களால் தாமே நனைகிறார்கள்; விழியின் ஈரம் வாழ்வின் பாதையைச் சற்றே தெளிவாகக் காட்டுகிறது. அன்பின் கோரப் பிடியிலிருந்து தப்பிடும் தனித்தவன் என எவருமிருக்க முடியுமோ!

இந்தக் கட்டமைப்பிலேயே பல திரைப்படங்களும் இருப்பதால் அவை ஏற்படுத்தும் பாதிப்பும் ஒன்றாகவே எழுகின்றன. அன்பின் மெழுகுவர்த்தி முன் பதற்றமுற்ற கரங்களுடன் சூடாய் வழியும் கண்ணீருமென ஜெபிக்கும் உணர்வு. ஆனால் ஒவ்வொறு திரைப்படங்களிலும் புதியதொரு புலப்படாமையும், உணர்வுகளின் செறிவால் ஏற்படுத்தப்படும் திகிலும் பிரம்மிப்பூட்டும் அளவில் நிறைந்திருக்கின்றன. இன்னொரு குறிப்பிடத்தகுந்த பண்பாக இவர்களது இருவேறு படங்களிடையே உள்ள தொடர்புகளைக் குறிப்பிடலாம். நேரடியாக குறிப்புகள் ஏதும் இல்லாவிடினும், உணர்வு மற்றும் கதாபாத்திரங்களின் குணப்பிரதிபலிப்பின் கோணத்தில் நோக்கினால் பெரிதும் தொடர்புடைய திரைப்படங்களாகவே, அல்லது ஒன்று மற்றொன்றின் நீட்சி என்றே தோற்றமளிக்கின்றன.

Rosetta-வில் வரும் பதினேழு வயது சிறுமி தன் வேலையில்லா திண்டாட்டத்தினை எதிர்த்து அடம் பிடிப்பதன், இன்னொரு முதிர் வடிவமே Two Days One Night-இல் வரும் சாந்த்ராவின் வேலையின்மைக்கு எதிரான போராட்டமும். The Child-இல் தன் குழந்தையை விற்று விட முயற்சிக்கும் ஒரு நாயகன் மீண்டும் The Kid With a Bike-இலும் வருகிறான். பெண்கள் அனைவருக்கும், தானே முன்வந்து அவமரியாதை செய்கையிலும், நிழல் போலவும் ஊன்றுகோல் போலவும் தொடர ஒரு ஆண் துணை இருக்கிறது. ஒரே ஆன்மாவின் வெவ்வேறு கோலங்கள். ஓவ்வொருவருக்குள்ளும் அவ்வப்போது முழித்துக் கொள்ளும் அசட்டுத்தனங்களின் எதிர்பாரா தாவல்கள், ஒத்த வாழ்வமைப்புடையவர்கள் தான் என்றாலும், எல்லாருடைய வாழ்விலும் வெவ்வேறு வரிசை மாற்றங்களில் வர்ணமடிக்கின்றன.

ஆரண்ய மலர் Rosetta (1999)

தன்னைப் பணியிலிருந்து நீக்கப் போவதைத் தாங்கிக் கொள்ளாத அவள் கடுமையாக எதிர்த்து அடம் பிடிக்கிறாள். குழந்தை போல இடத்தை விட்டு எழ மறுக்கிறாள். எந்நிலையிலும் கையேந்தும் நிலையை கடுமையாக வெறுக்கும் அவளது சுயமரியாதையின் கொழுந்தினை வெறி கொண்டு இன்னும் எரியச் செய்கிறது அவள் பருவம். உறைவிடத்தில், மறுக்க முடியாத ஏழ்மையின் சூழ்விரல்கள் அவளைப் பிறாண்டுகின்றன. ஒரேயொரு துணையாய் இருக்கும் குடிகாரத் தாயினை மட்டும் விட்டுக் கொடுத்து விடவும் முடியாமல் அன்பு செய்திடவும் இயலாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகிறாள். ஞாலம், காலம் கருதி இடத்தாற் செய்பவருக்கே கைக்கூடும். காலம் முட்படுக்கையாகவும், இடம் கொடுங்கனவாகவும் முன்னிற்கையில் அறியாப் பேதைக்கு கோபமும், அவசரமும், கதறல்களுமே போர்வையாகின்றன. விரிபுவியில் ஏதேனும் ஓரிடம் நிலையாய் கிடைத்துவிடாதா என சமரிடுகிறாள்.

ஒவ்வொரு முறை விலகிச் செல்கையிலும் அவள் ஆழம் இன்னும் ஆழமாய் அவளை எதிர்திசையில் இழுக்கிறது. எவரையும் பொருட்படுத்தாமல் விரைந்தும் பதற்றத்துடனுமே எப்போதும் அவள் நடக்கிறாள். ஆனால், தான் கவனிக்க விரும்பும் எதையும் எங்கோ ஒளிந்து கொண்டு தான் கவனிக்கிறாள். அவள் உலகமே அரைப் பார்வையில், பக்கவாட்டுப் பார்வையில் தான் அவளால் உருவகித்துக் கொள்ளப்படுகிறது. அவள் போகும் பாதைகள் வாசல்களை அடைவதில்லை மாறாக கொல்லைப் புறத்தில், ஏதோவொரு வேலியைத் துளையிட்டு உட்புகுந்து கொள்ளும் வண்ணமே முடிவடைகின்றன. வாசலில் நுழைவதற்குத் தேவைப்படும் ஏளன எதிர்ப்பாற்றல் அவளுக்குக் கூடுதல் பளு. தன்னை முற்றுகையிட்டுத் தேடவிருக்கும் பகைவிழிகள் பற்றிய கற்பனை அவளை உறுதுயரில் வீழ்த்துகிறது.

பின்னணி இசையின்மை, அண்மைக் கோணங்களின் ஆக்கிரமிப்பு, கதாபாத்திரத்தின் முதுகினையே பின் தொடரும் பார்வை, பதற்றத்துடன் அசையும் சட்டகங்கள் இவை அனைத்தும் மையக் கதாபாத்திரத்தின் தவிப்பை அசெளகரியத்தை நெருக்கமாக நமக்கு கடத்துவன.

முழுமையாக பார்க்கையில் நாடோடிகளின் உறைநிலத்தில் இருந்து எட்டிப் பார்த்து ஏங்க வைக்கும் வாழ்க்கை மீதான நகர்வின் சிறு கவிதைப்பாடு என இருக்கிறது. அவ்வளவு தான், வேறெதுவுமே படத்தில் இல்லை. ஆனால், எந்த பெருங்கலையும் அப்படித் தான். நேர்மையாக ஒரேயொரு சத்தியத் துளியை மட்டுமே அதனால் பேச முடியும். இன்னும் உற்றுச் சொன்னால், அதையும் முற்றிலும் பேசித் தீர்த்துவிட முடியாது தானே.

ஒரு காட்சியில் தாயின் வாழ்வைச் சீரமைக்க முடிவு கொண்டு அவளைச் சமூக காப்பகத்திற்கு மாற்ற நினைத்ததும், தாயாலேயே உள்ளிட்டுத் தாழிடப்படுகிறாள். தாயின் தாய் மகள்! தப்பியோடும் தாய், தொடர்ந்து நிகழும் சிறு சலசலப்பில் தன் மகளை களிமண் நிறைந்த ஊருணியில் தள்ளித் தப்பி விடுகிறாள். தன் உயிரைக் காத்த வண்ணம் தாயை நோக்கி கூக்குரலிட்டவாறே கரைமேலிடுகிறாள் அவள். இத்தகைய வாழ்வில் சுயநலம் மட்டுமே உயிர் வாழ உதவுகிறது. தன்னை நேசிக்கும் அல்லது குறைந்த பட்சம் தன் மீது இனக் கவர்ச்சியேனும் கொண்ட நண்பன் வந்து உதவுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனைப் பின்னொரு காட்சியில் வேண்டுமென்றே அதே களிமண் குளத்தில் தள்ளிக் கொல்லவும் பார்க்கிறாள், இறுதியில் காக்கிறாள்.

ஆனால், அவன் செய்யும் பிழையை அவனது முதலாளியிடம் சொல்லிக் கொடுத்து அவன் வேலையைப் பறித்துக் கொள்கிறாள். தன் வயிற்று வலிக்கு கொதிப்பானைக் கொண்டு முரட்டு மருத்துவம் செய்து சகித்துக் கொள்ளும் அவளுக்கு நிழலெனத் தொடரும் அவன் விழிகளை மட்டும் எப்படி விலக்கிக் கொள்வது என்ற பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. அன்பிற்கு ஆடும் மனதிற்கு மருந்தென்ன.

இருளை மட்டுமே காணும் விழியும் விதியும் கொண்ட கைதிக்கு சன்னல் நிலவின் ஒளி எத்தனை ஊறுபாடு தருகிறது. போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து வரவிருப்பதாய் உத்திரவாதம் தரும் அந்த நிலவின் ஒளி உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைமையை எழுப்ப வல்லது. அதில் விழுந்து கசியும் கண்ணீர் சொல்ல முற்பட்ட கவிதையின் முற்றுப்புள்ளி. வாழ்வை உற்று நோக்குவதன் முதற்புள்ளி.

அகந்தைக்கும் காதலுக்கும் இடையில் நசுங்குவது ஆண்களுக்கு மட்டுமே உரியது போன்ற தோற்றம் காலம் காலமாய் தமிழ் சினிமாவில் நிலைநாட்டப் பட்டிருக்கிறது. பெண்களுக்கோ, காதலின் காயங்களுக்கு ஆதி காரணம் அவர்கள் என்பது மட்டுமே தரபட்டிருக்கும் பாத்திரம். புதுமைப்பெண் எனில் கூட புரட்சித் தோற்றத்துடன் மெதுநகர்வு காட்சியில் பிம்ப உருவாக்கம் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. ஆனால் ரொசட்டாவில் நிகழ்வது தன்னைத் தானே வதைத்துக் கொள்ளும் பெண்மை. தன் முனைப்பும் சுயநலமும் மட்டுமே கையில் இருக்கையில் தன்னைத் தானே கண்டு பரிதாபப்பட்டுக் கொள்வதும், தன்னிடம் தானே பேசிக் கொள்வதுமென, பாவலாக்கள் ஏதுமின்றி நிழலன்றி வேறேதுமற்றவளைக் காண்பித்திருப்பது இதன் ஆச்சர்யம்.

வாழ்வின் முனையில் நின்று கொண்டிருப்பதாய் தோன்றுகிறது அவளுக்கு. அதைக் குறிப்பிடும் விதமாக தன் முதலாளியிடம் இனி பணிக்கு தான் வரப் போவதில்லை எனச் சொல்கிறாள். வீட்டுகாரரிடம் கேஸ் சிலிண்டரைப் பெற்றுக் கொண்டு தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் தன் முடிவை நோக்கி நடந்து வரும் அவள், அங்கும் வந்து சேர்ந்துவிட்ட அவனது தொடர்கையின் பளுவால் நொய்ந்து விழுந்து அழுவது மெளன மழையின் பேரிரைச்சல். அமைதியைக் கிழிக்கும் வண்டின் முரலல் என அவளைத் தொடரும் அவனது அன்பு அவளை எதைவிடவும் கீறி வலுவிலக்கச் செய்யும் கருவி என்பதை அவளும், அவனும் , நாமும் அப்போது தான் கண்டுகொள்கிறோம். மழை பெய்வது காய்ந்த நிலத்தை மட்டுமின்றி, தன்னையும் நனைத்துக் கொள்ளத் தான்.

தவிர்க்க முடியாத கொடுங்கனவுகள்  – The Son (2002)

டார்டன் சகோதரர்களின் திரைப்படங்கள் அனைத்தும் வெகு குறைவான வசனங்களுடன் கூடிய காட்சிகள் மூலமாக நேரடியாகவே, தான் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விடுகின்றன. பொதுவாக, யோசித்துக் கண்டறிய வேண்டிய குறியீடுகள் அல்லது உருவகங்கள் என எதுவும் படத்தில் இல்லை. ஆனால் அதன் மூலமாக கடத்தப்படும் உணர்வலைகள் வெகு நேரம் மனக் குளத்தில் விரிந்தெழும் நீர் வட்டங்களாய் தொடர்ந்து நிகழ்ந்து பிம்பங்கள் வளர்ந்த வண்ணமே இருக்கின்றன. காட்சிகளின் அண்மை மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதாய் தோற்றமளித்து வியப்பிற்கும் செயலின்மைக்கும் கொண்டு சென்று விடுகிறது.

தச்சுத் தொழிலின் நுணுக்கங்களைச் சொல்லித் தரும் பணிமனை நடத்தி வரும் ஆலிவர் எதையும் துல்லியமாக அளவிடும் ஆற்றல் கொண்ட நிதானிப்புடன் கூடியவர். சந்தர்ப்பவசமாகத் தன் மகனைக் கொலை செய்த சிறுவனை அந்தப் பணிமனையில் சேர்த்துக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அது அந்தக் கொலைகாரன் தான் என்று தெரிந்ததும் அவருக்குள் ஏற்படும் உணர்வுகளின் விசை எண் திசைக்கும் அவரது புலப்படாத ஆழ்மனத் தந்துகிகளை ஒரு சேர இழுக்கிறது.

அவனைத் தவிர்க்க விழைகிறார். ஆனால், அவன் அவரை நோக்கி மீண்டும் மீண்டும் மாணவனாக வந்து நிற்கிறான். தொடர்ந்து மனக் கொந்தளிப்பும் அதனைக் கடந்து அச்சிறுவனை பயிற்றுவிக்கும் பணியையும் ஏற்கிறார். இதை அறிந்த அவரது முன்னாள் மனைவி கடுமையான ஆத்திரமும் ஆற்றாமையையும் கொள்கிறாள். ”ஏன் இப்படி ஒரு காரியத்தை நீ செய்கிறாய்?” எனும் அவளது புலம்பலுக்கு “தெரியவில்லை” என்ற சொல்லே வாய்மையான பதிலாக எஞ்சுகிறது ஆலிவரிடம். அவரது தக்கது செய்யும் தருக்க உளம் அவரைக் கைவிடுகிறது.

பெருமூச்சுகளின் இடையிடையே நிகழும் நடைபயிற்சி போல கவனத்துடன் கடக்கிறது நிமிடங்களின் உருப்பெருக்காய் மாறி அழுத்தும் நாட்கள். மரங்களுக்கே தன் வேரின் ஊடுபாவுகள் புலப்படாத ரகசியங்களாய் மண்ணுக்கடியில் ஒளிந்திருப்பதைப் போல, ஓவ்வொரு மனிதனும் தன் மனதை அறியாது தனித்தவனாய் இருப்பதாலேயே அவன் அடுத்த விநாடியில் தான் செய்யப் போவதென்ன என்பதை அத்தனை ஊர்ஜிதமாய் சொல்ல முடியாதவனாகவே எப்போதும் இருக்கிறான். அவனது பலமற்ற இந்த சுய புரிதலின் மீது உணர்வின் தீப்பிழம்பு வெடிக்கையில் அவன் கைகளில் அவன் இருப்பதில்லை.

மன்னிப்பது தான் எத்தகைய கடுமையான செயல். தன் உள்கடலின் ஒவ்வொரு அலைகளிடமும் மண்டியிட்டு இறைஞ்சி சாந்தமடையச் செய்வது எளிய மானுடர்களுக்கு எத்தனை பெரிய பணி. தான் யாருடைய தந்தை என்பதைச் சொல்லாமலேயெ அந்தச் சிறுவனை அன்புடன் கையாள்கிறான். பயில்தொறும் வேறொரு இனம்புரியாத கயிறு அவனைப் பிணைக்கிறதோ என்னவோ? தவிர்க்கவும் நினைக்கிறான், இருந்தாலும் அதிலிருந்து விலகி விடுவது அத்தனை எளிதானதாக இல்லை. தன் மனம் செய்யும் மர்மங்களை, அது இழுத்துச் செல்லும் விசையை விளக்கிட அவனிடம் எந்தக் காரணமும் இல்லை. அச்சிறுவன் தான் விரும்பாமல் பதற்றத்தில் செய்த கொலைக்காக ஐந்தாண்டுகள் சிறைவாசம் முடிந்தே திரும்பி இருக்கிறான். ஆனால், அது போதுமானதா? ஒரு உயிரை உலகின் தரையிலிருந்தே சுவடின்றிச் செய்துவிட்டதற்கு சிறைவாசம் ஒரு பதிலீடா? வேறேன்ன இந்த உயிரைப் பறித்து விட்டால் அது மட்டும் போதுமானதா என்ன? அது பழிவாங்கல் மட்டுமே. அதனால் சென்ற உயிருக்கான பிழையீடு செய்யப்பட்டு விட்டதாகக் கருதலாமா?

தன் முதிர்வயதில் கண்ணாடிகளுக்குப் பின் நிலைத்தவாறே ஆடும் கண்களில், தண்டு வடத்தை நிலைப்படுத்த அணிந்திருக்கும் பெல்டின் இறுக்கத்தில், கால்மாட்டில் நாற்காலியை அணைத்துக் கொண்டு மூச்சை வெளியேற்றும் உடற்பயிற்சிகளில் என தன் ஒவ்வொரு அடியிலும் உள்மனப் போராட்டத்தினை வெளிப்படுத்துவதில் இலாவகமான அசைவாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆலிவர். (நடிகரும் கதாபாத்திரமும் ஒரே பெயரைச் சுமக்கின்றன). டார்டன் சகோதர்களின் திரைப்படங்களில் வழக்கம் போலவே நிகழும் காமிராவின் அசைவுகளிலும் அதன் முன் நிகழும் கதாபாத்திரங்களின் அசைவுகளிலும் எந்த வித உறுத்தலுமற்ற மானுட தொழில் அரிதான இயல்புடனும் எளிமையுடனும் படமாக்கப்பட்டிருக்கிறது.

இறுதிக் காட்சியில் அவனது கொலை பற்றிய வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதும், அது ஒரு தவறு தான் என ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை பற்றி கண்டிப்புடன் பேசுகிறார் ஆலிவர். அதில் ஆத்திரத்தை விட, தன் சொந்த மகனையே கண்டிக்கும் கோபமே இருக்கிறது. அதை அவன் மறுத்து விடக் கூடாது; அப்போது தான் என்னால் அவனை மன்னிக்க முடியும்! அக்கூற்றினை அச்சிறுவனும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறான். அதையடுத்து தான் தான் இறந்த சிறுவனின் தந்தை என்று வெளியிட்டதும், அவரைக் கண்டு பயத்தில் ஓடி மறைபவனைத் தொடர்ந்து விரட்டிப் பிடித்து அணைத்து மேலேறி உட்கார்ந்து கழுத்தினை நெருக்கத் தொடங்கி மீண்டும் பெருமூச்சினால் அந்த கணத்தினைக் கடக்கும் காட்சி எதிர்பாராத மனங்களின் நடனம் அல்லது மல்யுத்தம். அவனை அப்படியே விட்டுவிட்டு செல்கிறார். அவன் மெல்ல வந்து அவரைச் சரணடைகிறான்.

கலவரத்தில் தன் மகனை இழந்ததால் பல இந்துக்களைக் கொன்றும் நீளும் தாங்கொணாத துன்பத்துடன் காந்தியிடம் வந்து கண்ணீர் விடுபவனிடம் பரிகாரமாக காந்தி ஒன்று சொல்வார். “நீ கொன்ற அதே சமூகத்தில் அநாதரவாய் விடப்பட்ட குழந்தை ஒன்றை மீட்டு அதே மதத்தில் வைத்து வளர்த்து விடு. அதுவே உன் காயங்களுக்கான அதிகபட்ச மருந்து”. சிலிர்ப்பேற்படுத்திய காட்சி. அதன் உட்பொருளான ‘பகைவனை நேசி’ என்ற வலிமை மிகு அறம் இப்படத்திலும் விரவி மனதை அழுத்தியது. ஏசுவும் இவன் போல ஒரு தச்சன் தானே!

திசை தொலைத்த முயல் – The Kid With a Bike (2011)

தன்னை ஒதுக்கி விட நினைக்கும் தந்தையினை அப்படியொன்றும் அவனால் வெறுத்திட முடியவில்லை, எனினும் அவனது தவிப்பின் கனல் மேல்தளத்தில் தன் மீது அணைப்பு தரும் வளர்ப்புத் தாயின் மேல் சினத்துடன் விழுகிறது. தான் அகவையில் பெரியவள் என்பது தந்த அறிதலினாலேயே மணற்கடியில் கிடக்கும் கணையாழி என அவன் மனதைப் புரிந்து கொள்ளவும் அவளால் முடிகிறது. இருப்பினும் அவன் அவளிடம் நிலை கொள்ள விரும்புவதில்லை. குழந்தைகளுக்குத் தன் செம்மலையும் செருக்கினையும் கடக்க எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?

தனது மிதிவண்டியினைப் பல முறை திருடிச் செல்ல விழையும் ஒரு ரெளடி கும்பலிடம் நட்பு கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, அக்கூடா நட்பு தனக்குத் தரவிருக்கும் அங்கீகாரத்தின் பொருட்டு அவளைக் காயப்படுத்தி தப்பவும் தயாராக இருக்கிறான். தந்தையின் பிரிவால் ஏற்பட்ட வெடிப்புகளுக்கு மருந்திடும் அவள் மேலும் கடும் குற்ற உணர்வைத் தருகிறாள் அவனுக்கு.

The Child (2005)-இல் தன் மகனை விற்றுவிட்டு அதன் விளைவுகளை அனுபவிக்கும் இருபது வயது தந்தையைப் பார்க்க முடியும். அது போலவே தன்னை விலக்கி வைத்திருக்கும் தந்தையைத் தேடித் தவிக்கும் மகனை இங்கு பார்க்க முடியும். அகவை ஒருவனது சுதந்திரத்தையும் செருக்கையும் நிர்ணயிக்கும் காரணிகளுள் ஒன்றாகிறது.

தன் புதிய நண்பர்களது அணியில் தன்னை நிருபிக்க ஒரு வழிப்பறிச் சம்பவம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய முனைப்பில் இருக்கிறான் சிறுவன். எதிர்பாரா விதமாக தந்தை மகன் என இருவரைத் தாக்க வேண்டிய நிலை ஏற்பட, அதன் விளைவாக இழப்பீடும் மன்னிப்பு கோரலும் செய்ய வேண்டியதாகிறது. அங்கு தன் பிழைகளை உணர்ந்து வளர்ப்பு அன்னையிடம் மன்னிப்பு கோருகிறான். விழிக்காட்சி தெளிவுறும் தருணம்.

மனக்கவலை மாற்றலரிது – Two days, One night (2014)

இலக்கியத்தின் நீண்ட ஒழுக்கில், கண்ட காலத்தையும் அகண்ட காலத்தையும் வெல்லத் தான் மனதிற்கு எத்தனை எத்தனை ஊக்க மொழிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. மரணப் பெருங்கடலின் அபத்தத்தைக் கண்டு மனிதன் விழுந்து விடாமலிருக்கச் செய்த மணற்கோபுரங்கள் அவை. அதையும் மீறி நொய்ந்த மனம் வைத்த நம்பிக்கையை கொடுங்கனவுகளின் கோரப் பற்கள் குதறி சமநிலையைக் குலைப்பதுண்டு. பாலையில் நீரைக் கனவு காண்கையில் இறந்த வானத்தின் துண்டம் கூட சரிந்து தலைமேல் விழுந்து நம்மைப் மண் துகளென மாற்றி விடுவதுண்டு. எல்லாம் மனம் தான்; ஆம், சரி தான். மனதைச் சமன்செய்யும் மந்திரம் தான் எளிதில் கைவரக் கூடுவதில்லை.

சாந்த்ரா அன்று அலுவலகத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படுகிறாள். ஏற்கனவே மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவள், அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டால் அலுவலகத்தில் பணிபுரியும் பிறருக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்பது ஓட்டெடுப்பின் அடிப்படை. அவள் பணியில் இருக்க வேண்டுமென பெரும்பான்மையினர் ஓட்டளித்தால் கூடுதல் தொகை வழங்கப்பட மாட்டாது என்ற தடுக்கலும் அதில் உண்டு. அதன்படி தான் அவள் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டாள்.

அவள் மீள வராதபடி விரும்பிய அணித் தலைவர் ஓட்டெடுப்பில் ஆதிக்கம் செலுத்தி விட்டிருந்ததால் அது களங்கமுற்றிருந்தது. எனவே, சாந்த்ராவின் தோழியின் கோரிக்கையின் அடிப்படையில்  மீண்டும் ஓட்டெடுப்பு நிகழ்த்த அனுமதிக்கப்படுகிறது. அதற்காக, தன் சக பணியாளர்களிடம் தனக்காக ஓட்டிட கோரிக்கையை வைப்பதும், அதில் தன் சுயத்தைக் காத்திட போராடுவதும், தன் நலமின்மையின் கேள்விகளால் மீண்டும் மீண்டும் நசுங்கியும் எழுவதுமாய் அலையாடுவதும் என சாந்த்ராவின் இரு நாட்கள் நகர்கின்றன. வலுவற்ற பட்டுப்புழு தன் கூட்டை உடைக்க வேண்டிய நாட்கள்.

இந்தக் கதையின் எதார்த்த வலைக்குள் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு நிறைந்திருப்பதை மரியான் கோதியார்ட் (Marion Cotillard) போல எவராலும் செய்திருக்க முடியாது. சிமிட்டலில் எவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்ட மாய விழிகள் வாய்த்திருக்கும் அழகி, இதில் தன் ஆபரணங்களை மட்டுமின்றி கூடவே தன் இயல்பழகையும் உரித்து வீசி விட்டுத் தோற்றமளித்திருக்கிறார். இருபத்தோராம் நூற்றாண்டின் முக்கிய நடிப்புச் செயல்பாடுகளுள் சாந்த்ராவின் பாத்திரம் ஒரு கல்மேலெழுத்து.

உள்ளொலிக்கும் கடலின் அலைகளால் தவிப்பவளுக்கு ஒவ்வொரு கணமும் கணவன் சமன்செய்யும் ஊக்கம் தரும் சொற்களை முன்வைக்கிறான். அவள் தனது இயலாமையை ஒவ்வொரு முறை முன்வைத்தும் அதற்கென அவன் சலிக்காதது கண்டு அவன் காதலையும் கேள்விக்குள்ளாக்கி அவனைச் சீண்டிப் பார்க்கிறாள். அதையும் மெளனித்துக் கடப்பவனைக் கண்டு இன்னும் குற்ற உணர்வு அவளுக்குள் அதிகம் சுரந்திருக்குமோ?

முக்கியமான காட்சியில், ஒரு பெட்டி மனநோய் மாத்திரைகளை ஒன்றாய் உட்கொண்டு தன் அறையில் அழகாய் ஒருங்கு செய்யப்பட்டிருந்த மஞ்சத்தில் படுக்கிறாள், நிரந்தர உறக்கத்தில் தடையேதும் ஏற்பட்டு விடப்போகிறது என்ற தளர்வுடன். திடீரென, பின் தொடரும் அவளது நிழலின் குரலென கணவனின் அழைப்பு. மறுக்க நினைக்கிறாள். மீண்டும் தீர்க்கமான அழைப்பு. அதில் தனது போராட்டத்திற்கான ஒரு வெளிச்சம் என ஒரு நற்செய்தி வந்து சேர்கிறது. தன் தற்கொலை முயற்சியைச் சொல்லி மீண்டும் பிழைப்பிக்கப் படுகிறாள்.

இறப்பின் சாம்பல் ருசியைத் தொட்டு விட்டு வந்தவளுக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. உயிர்த்தெழுதல் என்ற உருவக நிலை! அங்கிருந்து பெற்ற உத்வேகம் அவளை ஓட்டெடுப்பிற்கும் அதிலிருந்து நிகழும் விளைவுகளுக்கும், தன்னிலை இழந்து விடாமல் எதிர்கொள்ளும் சாத்தியத்தை வழங்குகிறது.

தன் அறையை இருளாக்கி தனக்குள் மடிந்து அட்டையைப் போல் சுருட்டிக் கொள்வதாகட்டும், ஒவ்வொருவரிடமும் தன் கோரிக்கையைப் பதற்றமும் பதற்ற மீறலுமாக முன்வைப்பதாகட்டும், அசாத்தியமான நடிப்பு என்ற பதத்திற்கு மரியான் முற்றிலும் தகுதியானவராகி விடுகிறார். சிறு சிறு எதிர்ப்புகளைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தொண்டை அடைத்துக் கொள்வதும், அதிலிருந்து மீளப் போரிடுவதுமென சில நிமிடங்களுக்கு ஒருமுறை இலக்கண மீறல்களை போகிற போக்கில் செய்து சிலிர்க்க வைக்கிறார். குறிப்பாக, தற்கொலைக்கு முயன்று அதிலிருந்து மீளும் காட்சிகளில் இருக்கும் வலிந்து திணிக்கப்படாத எளிமை!

பாத்திர வடிவமைப்பிலும் திரைக்கதையின் மைய இழையிலும் பெரிதும் ‘ரோசட்டா’ திரைப்படத்தின் ஒரு நீட்சியாக இதனைப் பார்க்கலாம். இரண்டும் ஒருவரின் கதையே என்று சொல்லுமளவிற்கு இணைகோடுகளை வரைய முடியும். தற்கதியை வெறுத்தாலும் தவிர்த்திட முடியாத ரோசாட்டா, சாந்த்ரா இருவரும் நிழலெனத் துணை வரும் ஆண்களிடம் தான் வாழ்வினை வெறுத்து விளிம்பு வரைச் சென்று மீண்டு கதி கொள்கின்றனர், இரண்டிலும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிரான போராட்டம், தயக்கங்கள் இருப்பினும் தனக்கான வேலையை உரிமையெனக் கோரி மீண்டும் மீண்டும் சுவரை முட்டும் பந்தெனத் திரும்புதல். எல்லாம் ஒன்று தான். இன்னும் சொன்னால், நம் ஒவ்வொருவரின் கதையின் சில அத்தியாயங்களையும் நினைவில் மீட்டெடுக்கையில் வெகு துல்லியமாக ’அட அதுதான் இது’ என்றும் கூட பிரம்மிக்க முடிகிறதே.

ஆனால் இரண்டையும் முற்றிலுமாக வேறுவேறு திரைப்படங்களாக மாற்றுவது கதாபாத்திரத்தின் பருவ முதிர்வு. ரோசட்டா மடந்தை. ஆனால் பேரிளம் பெண்ணான சாந்த்ராவிடம் இரண்டு மழலைகள், குடும்பம், நண்பர்கள் என பல உராய்வுகள் இருக்கின்றன. தன்னால் பிறருக்குத் தவறாய் ஏதும் நிகழ்ந்திடக் கூடாதென்ற எண்ணமே அவளது வியாகூலத்தின் அடிப்படை. ரோசாட்டாவிடம் இருந்த கட்டிலாதன்மை இவளுக்கு இல்லை, சுற்றத்தாரையும் கணக்கில் கொண்டே சுயத்தின் தேவைக்கும், சுய மரியாதையின் தேவைக்கும் இடையில் சமரிட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அது அவளை இன்னும் நோய்மை நோக்கித் தள்ளுகிறது. படம் நெடுகிலும் அவளது செயல் விரைவும் நடை விரைவும் குறைந்திருக்கிறது.

தோதாக, டார்டன் சகோதரர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சட்டகங்களும் காமிரா அசைவின் வேகக் குறைவும் இன்னும் இதை ரோசட்டாவிலிருந்து விலக்கி முதிர்ந்த திரைமொழியை முன்வைக்கிறது. ரோசட்டாவில் ஒவ்வொரு முறையும் நாயகி சாலையை குறுக்காக ஓடிக் கடப்பாள்; அதில் காமிராவின் பதற்றம் நம்முள்ளும் இருந்து கொண்டே இருக்கும். இதில் நாயகி குடும்பத்துடன் காரில் செல்பவள். இதில் மெலிதாய் அசையும் காட்சிப் பதிவு இன்னும் நாயகியின் குமட்டல்களையும், எச்சில் விழுங்கல்களையும், கண்ணீரையும் நமக்கு அண்மைப்படுத்துகிறது.

தனி மனித அறத்திற்கும் மானுட அறத்திற்குமான வெளிப்பாடுகளே கூட முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிராய் நிற்கும் நிலை ஏற்படுவதுண்டு. மென்மனம் முட்களை எதிர்த்துப் பிழைக்கத் திராணியில்லாமல் போவது பற்றி, தத்தம் உலகில் பறந்து கொண்டிருக்க வேண்டிய வாய்ப்பும் தேவையும் கொண்டிருக்கும் எத்தனை பேர் துக்கம் அனுஷ்டிக்கப் போகிறார்கள். மரணம் போலவொரு தோல்வியும் நிச்சயம் தான்; ஊன்றி எழத் தான் வேண்டும். மரணமே உயிர்த்தெழுதலைச் சாத்தியமாக்குகிறது!