தமிழில் குழந்தைப் பேறின்மை சிக்கலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவுகள் பல உள்ளன. குள்ளச்சித்தன் சரித்திரம் மற்றும் மாதொருபாகன் சமீபத்திய உதாரணங்கள். இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்கக் கூடிய நாவல்கள். குள்ளச்சித்தன் நேர்கோடற்ற தன்மை கொண்ட நாவல். மாதொருபாகன் ஒரு யதார்த்தவாத நாவல். ஆனால் இரண்டு நாவலும் ‘பரிகாரம்’ என்ற ஒரு புள்ளியில் இணைகின்றன. குழந்தைப் பேறின்மைக்கு மருத்துவரீதியாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் நம்முடைய மனம் இந்த புறவயக் காரணங்களால் திருப்தியுறுவதில்லை. குழந்தைப் பேறினை ஒரு மங்கலமாக ஒரு வரமாக பார்க்க நம்முடைய மரபு நம்மைப் பழக்கி இருக்கிறது. இன்னும் பல தலைமுறைகள் நீளப்போகும் பிறவிக்கண்ணியில் தன்னை நீடித்துக் கொள்வதற்கான ஒரே வழியாக குழந்தைப் பேறு தான் சொல்லப்பட்டுள்ளது. இது சமூகத்தின் பொது நம்பிக்கையாக இருப்பதால் குழந்தை சார்ந்த பல்வேறு வகையான உணர்ச்சிரீதியான கதைகளை உருவாக்கி அதன்வழியாக நாம் ஒன்றிணைந்து வாழ்கிறோம்.
வாழ்வுமுறை, பொருளாதாரம், கருத்தியல் என சமூகத்தைப் பிரிக்கும் பல கூறுகள் உள்ளன. ஆனால் இந்தக் ‘குழந்தை’ கருத்தியல் நம்மை ஒருங்கிணைக்கிறது. ‘வரவிருக்கும் சந்ததிகளுக்காக’ என்று தொடங்கும் வரிகளில் நம்மால் பெரிய முரண்களைக் காண முடிவதில்லை. மக்கட்செல்வம் என்பது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்று நாம் எண்ணுவதாலேயே அந்தச் செல்வம் அருளப்படாத “புறத்தாரை” நாம் வெறுக்கிறோம். அவர்களை அந்நியப்படுத்திவிட அல்லது குழந்தைபேறின் வழியாக சமூகத்துடன் ஐக்கியப்படுத்தி விட தொடர்ச்சியாக முயல்கிறோம். குழந்தையின்மை மிகப்பெரிய சமூக அழுத்தமாக தம்பதியர் மீது இறங்குவது இந்தப் புள்ளியில் தான். அந்த அழுத்தம் இறங்கிய பிறகு அந்தத் தம்பதியர் சமூக சந்தையின் இறுதிநிலைப் பயனாளர் (end user) கிடையாது. ஒரு மெல்லிய திரையாக அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யாமல் ஒதுங்கியோ பதுங்கியோ இருந்த மரபு இனியும் தன்னுடைய மறைவை நீடித்துக் கொள்வதில்லை. அது கருணை நிறைந்ததாகவோ கோர முகம் கொண்டதாகவோ வேடம் அணிந்து கொண்டு முன்னே வந்து நின்றுவிடுகிறது.
அன்றாடத்தை நகர்த்த உதவிய தர்க்கங்கள் மரபின் பிரம்மாண்டத்தின் முன்பு தோற்கத் தொடங்குகின்றன. நிச்சயமின்மையை எல்லா திசையில் இருந்தும் எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது. குழந்தைப் பேறில்லாதவர்கள் மரபிடம் அடைக்கலம் கொள்ளத் தொடங்குவது இந்தப் புள்ளியில் தான். குழந்தைப் பேறில்லாதவர்கள் தொடர்ச்சியாக மரபுடன் பேரத்தில் ஈடுபடுகின்றனர். தங்களுடையது அல்லாமல் தங்களுடைய முன்னோர்கள் செய்த வரலாற்று பாவங்களுக்காகவெல்லாம் தெய்வங்களிடம் மன்னிப்பு கேட்டு ‘பரிகாரம்’ செய்கின்றனர். இவர்கள் நம்மிடம் சொல்லும் கதை குள்ளச்சித்தன் சரித்திரம் போல மாயத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் மாதொருபாகன் போல யதார்த்தத்தன்மை கொண்டதாக இருந்தாலும் நம்மால் இவர்களுடைய நம்பிக்கையையும் அவர்கள் சொல்லும் கதைக்கு பின்னிருக்கும் அதர்க்கத்தையும் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது. இத்தகைய அதர்க்க வெளிக்கு நம்மை இழுத்துச் செல்லும் கிளர்ச்சிக்காகவே நாம் இந்தக் கதைகளை கேட்கிறோம் என்றும் தோன்றுகிறது.
சுனில் கிருஷ்ணன் தன்னுடைய நீலகண்டம் நாவலின் வழியாக இத்தகையதொரு அதர்க்க கதையைத் தான் நம்மிடம் சொல்கிறார். ஆனால் இந்த நாவலில் குழந்தைப் பேறின்மை ஒரு பகுதி சிக்கலாகவும் குழந்தையைக் கைவிடுதல் மிகுதிப் பகுதியின் சிக்கலாகவும் உள்ளது. இந்த முரண்தான் நாவலில் பலரைக் கதை சொல்ல வைக்கிறது. குழந்தையற்ற தம்பதியரான செந்திலும் ரம்யாவும் முதலில் சொல்லும் யதார்த்த கதைகளும் வேதாளம் விக்ரமனிடத்தில் சொல்லும் மரபுக் கதைகளும் வர்ஷிணியின் வழியாக உணரத்தக்க உலகத்தை முன்வைத்து ஆசிரியரால் சொல்லப்படும் கதைகளும் அங்கத நாடகமும் குலமரபுக் கதைகளும் சேர்ந்து நாவலுடலைக் கட்டமைக்கின்றன. இப்படி பலர் பேசுவதே இந்த நாவலின் முதன்மையான பலம். விக்ரமனின் தோளில் ஏறி அமர்ந்த வேதாளம் இக்கதையை சொல்லத் தொடங்குகிறது. ஆனால் அடுத்த அத்தியாயத்தில் வழக்கமாக வேதாளம் சொல்லும் ஒரு தன்மையிலான கதை நமக்கு வாசிக்கக் கிடைப்பதில்லை.
ஆட்டிசம் பாதித்த தன் குழந்தையை முதன்முறையாக மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கும் இரவில் கால்பந்தாட்டம் பார்க்க இயலுமா என்பது குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சுயம் குறித்த பிரக்ஞையால் வதைபடும் ஒரு ‘நவீனத்துவ’ தந்தையைக் காண்கிறோம். இந்தச் சித்தரிப்பில் இருந்து நாவல் முன்னே செல்வதில்லை. பின்னே செல்கிறது. நகரத்தார் சமூக செந்திலும் பிராமண சமூக ரம்யாவும் காதலிப்பது ரம்யாவின் பெற்றோர், குறிப்பாக தாய் வரலக்ஷ்மியின், எதிர்ப்பை மீறி மணம்புரிந்து கொள்வது அவர்களுக்கு குழந்தையில்லாதிருப்பது, வர்ஷிணியைத் தத்தெடுப்பது என்று முன்னும் பின்னுமான பல நிகழ்வுகள் வாசக ஊகத்துக்கு விடப்பட்டு வாசக ஊகத்தை மறுக்கும்படியான நிகழ்வுகளால் நாவலில் சொல்லப்படுகின்றன.
செந்தில் வர்ஷிணியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் புள்ளியில் இருந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து நாவலின் யதார்த்த வெளி விரிந்து பரவுகிறது. வேதாளம் விக்ரமனிடம் அறக் குழப்பத்தை உண்டாக்கும் கதைகளைச் சொல்லி முடிவினைக் கேட்பது நாவலின் ஒரு பகுதியாக வருகிறது. வர்ஷிணியின் அக உலகத்தை சொல்லும்படியானதாக அவள் விளையாடும் அலைபேசி விளையாட்டுகள் அவள் பார்க்க நேரும் இடங்கள் என்று ஒரு பகுதி குழந்தைக் கதைகளுக்கான புனைவுத்தன்மையுடன் நகர்கிறது. வர்ஷிணியின் பகுதியைத் தவிர்த்து மற்ற அனைத்திலுமே பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பல்வேறு கேள்விகளை நாவல் எழுப்பிக் கொள்கிறது. வர்ஷிணியின் வழியாக சொல்லப்படும் கதையில் கூட ஆமை முட்டைகளை உண்ணும் பேக்மேன் வழியாக ஏதோவொரு வகையில் குழந்தைப்பேறு கோடிட்டுக் காட்டப்படுகிறது.
திரிபடைதல் என்ற சொல்லின் வழியாக நாவலை விளங்கிக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். நாவலில் வரும் ஒரு சித்தரிப்பு. ரம்யா காதல் மணம் புரிந்து கொண்டதால் அவள் அம்மா வரலக்ஷ்மி வெகு நாட்களாக ரம்யாவின் மீது வெறுப்புடன் இருக்கிறார். அந்தப் பிணக்கு மெல்லச் சரியாகி ரம்யாவின் குடும்பம் அவளைப் பார்க்க செந்திலுடன் அவள் வசிக்கும் வீட்டுக்கு வருகிறது. ரம்யாவுக்கு பிறந்த மகனான சாகரை அவள் குடும்பம் இயல்பாக ஏற்றுக் கொண்டாலும் அவளது தத்துப்பிள்ளையான ஆட்டிசம் பாதித்த வர்ஷிணியை அக்குடும்பத்தால் ஏற்க முடியவில்லை. வர்ஷிணி அவள் தாத்தாவின் (வரலக்ஷ்மியின் கணவர்) அருகே வந்து நிற்கிறாள். அவள் தலையை வருடிக் கொடுக்க அவர் கையை உயர்த்தும் நேரத்தில் அங்கு கடுமையான மலநாற்றம் பரவுகிறது. அச்சூழலின் நிறம் நேரெதிராகத் திரும்புகிறது. இந்த திரிபுநிலை நாவல் முழுவதும் விரவியிருப்பதைக் காண முடிகிறது. யதார்த்த சித்தரிப்புகளில், புராணக் கதை மறு ஆக்கத்தில், அங்கத நாடகத்தில் என எங்கும் இந்த திரிபு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
சுரக்கும் விடத்தை உமிழ்ந்து அழிப்பதற்கும் அதை உட்செரித்து தான் அழிவதற்கும் இடையிலான விளையாட்டாக மாறிப்போனது இப்புடவி; தன் கண்டத்தில் விடத்தை நிறுத்தத் தெரிந்தவர்களால் நிகழ்கிறது இவ்வுலகு.
ரம்யாவும் செந்திலும் வர்ஷிணியுடன் தங்களை பொருத்திக்கொள்ள இயலாமல் அல்லாடுவது தான் நாவலின் மைய இழை. நாவலில் இடம்பெறும் பிற அனைத்துக் கதைகளும் வெவ்வேறு வகைகளில் அந்த மைய இழையின் வெவ்வேறு பரிணாமங்களை எடுத்துக் காட்டுவதாக மைய இழையை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன. ஒரே நிறமுடையதாகத் தென்படும் மணலின் மேற்பரப்பு தோண்டத் தோண்ட வெவ்வேறு வண்ண அடுக்குகளை காண்பிப்பது போல நாவல் இந்த மையச் சிக்கலின் ஆழம் நோக்கிப் பயணிக்கிறது. செந்திலுடைய குடும்பத்தில் பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு துர்நிகழ்வு வர்ஷிணியின் தாயான வரலக்ஷ்மியின் உண்மையான அடையாளம் எனப் பல புள்ளிகள் மைய இழையின் சிக்கலை மேலும் மேலும் கூர்மையாக்குகின்றன.
இப்படி இடைவெட்டும் பல கதைகள் நாவலுக்குள் நுழைந்தாலும் அனைத்திலுமே இந்த திரிபடைதல் – விடத்தை உமிழ்வது அல்லது உட்செரிப்பது – மாற்றமில்லாமல் நிகழ்கிறது. முதலில் வரலக்ஷ்மியை ஏற்கும் அலமேலு பின்னர் அவளை கண்காணிப்பவராக உள்ளுக்குள் வெறுப்பவராக மாறிப் போகிறார். அலுமேலுவின் வரலக்ஷ்மியின் மீதான வெறுப்பு ரம்யாவை வேறு வகையில் திருப்பித் தாக்குகிறது. வர்ஷிணியை காணும்போது இவள் தான் தங்களுடைய குழந்தை என ஏற்கும் செந்திலும் வர்ஷிணியும் அவளைத் தங்களுடன் இருத்திக் கொள்ள தொடர்ந்து போராடுகின்றனர். செந்திலின் ரம்யாவின் உறவும் அன்பில் தொடங்கி நாவலின் இறுதியில் திரிபுநிலை நோக்கியே நகர்கிறது.
யதார்த்த தளத்தில் நிகழ்ந்த செந்தில் ரம்யா சார்ந்த அத்தியாயங்களுக்குள் ஒரு கட்டத்தில் வேதாளம் சொல்லும் கதைகளின் பாத்திரங்கள் நுழைவது இந்த மனத்திரிபுகளை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றன. ரம்யாவிடம் அத்தகைய கற்பனை பாத்திரம் ஒன்று அவளுக்குப் பிறந்த மகனான சாகரை முன்னிட்டு கேள்வி எழுப்புகிறது. செந்திலிடம் தந்தை என்ற அடையாளத்தை பழிவாங்குதல் சார்ந்த கேள்வியை சீராளன் முன்வைக்கிறான். நாவலின் உச்சப்புள்ளியில் வர்ஷிணி காணாமல் போகிறாள். வர்ஷிணி தொலையும் இந்த அத்தியாயம் மிகுந்த நுட்பத்துடன் கட்டமைப்பட்டுள்ளது. செந்திலை ஒரு சுற்றுலாவுக்கு வற்புறுத்திக் கூப்பிடும் நந்தகோபாலின் குணநலன்கள் முன்பே நாவலில் சொல்லப்பட்டு விடுகின்றன. ரம்யாவுடன் இருக்கும் சமயத்தில் வர்ஷிணி தொலைந்து போகிறாள். அந்த அத்தியாயத்தின் முடிவில் செந்தில் “தெய்வம் சார்” என்று சொல்லி நந்தகோபாலின் காலைக் கட்டிக்கொள்கிறான். அதற்கு முதல் வரியிலேயே அவரை அடித்துத் துவைக்கும் வெறி அவனுக்குள் ஊறுவது சொல்லப்படுகிறது. செந்தில் நந்தகோபாலின் காலில் விழுந்தது ஏன் என்பது சங்கடம் தரும் கேள்வி. அதற்கான பதில் நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் இருந்தே பூடகமாகத் தொடரவே செய்கிறது.
செந்திலும் ரம்யாவும் தங்கள் தொண்டையில் தங்கிய விஷத்தை உமிழ்ந்து விட்டதாக ஒரு வாசிப்பினை நான் கொடுக்கிறேன். ஆனால் அந்த விஷம் பாற்கடலை கடைவதால் உருவாகக் கூடியது. அமுதம் எழவிருப்பதன் முன்னறிவிப்பு.
சுனில் கிருஷ்ணன் இந்த நாவலில் மரபு சார்ந்த பல கதைகளையும் படிமங்களையும் பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய பேசும் பூனை கதையில் வருவது போல அலைபேசி விளையாட்டுகள் பலவற்றையும் கதைசொல்லலுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இவை எதுவும் சிக்கலுக்கான பதிலாகவோ தீர்வாகவோ அல்லாமல் சிக்கலின் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக மரபின் பதில்களை தீர்வாக முன்வைக்கும் தன்மையில் இருந்து விலகிச் சென்று மரபையே ஒருவிதத்தில் ‘நவீனத்துவ’ப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். நம்முடைய மரபுக் கதைகள் காஃப்கா போன்ற நவீனத்துவர்களின் வாழ்க்கை நோக்கின் வழியாக மறு ஆக்கம் செய்யப்பட்டவை போல இந்த நாவலில் இடம்பெறும் மரபுக்கதைகள் தோற்றம் தருகின்றன. காஃப்காவின் புனைவுலகில் தொடங்கி அசோகமித்திரன் வழியாக தமிழில் நிலைபெற்றுவிட்ட தீவிர பிரக்ஞை நிலையினால் ஏற்படும் துயரை பிரதிபலிப்பதாகவே இந்த நாவல் உள்ளது. மரபினை உட்செரித்த அல்லது மரபுடன் உரையாடும் முயலும் தன்மையிலான ஒரு நவீனத்துப் பிரதியாகவே இந்த நாவலை வாசிக்க முடிகிறது.
நேர்கோடின்மை, பலகுரல் தன்மை என பல பின்நவீனத்துவ உத்திகள் பயின்று வந்த போதிலும் நாவலின் மையமான வாழ்க்கை நோக்கு நவீனத்துவம் சார்ந்ததாகவே உள்ளது. இந்த இரட்டை நிலையே நாவலின் பலகீனமாகவும் உள்ளது. மெடியா,சுடலைமாடன், விக்ரமன், வேதாளம் ஏன் சிவன் கூட இந்த நாவலில் நவீனத்துவ தன்மை உடையவர்களாகவே வருகின்றனர். நாவலின் இறுதி அத்தியாயம் நாவலின் மீதான பகடியாக அமைந்து லட்சியங்களில் சுபகற்பனைகளில் நம்பிக்கை இழந்த அந்த விலகல் தன்மையை உறுதி செய்து கொள்கிறது. ஒரு அத்தியாயத்தில் இருந்து முற்றாக துண்டித்துக் கொண்டு தனித்து தொடர்புறுத்தும் ரசவாதத்தை ஒவ்வொரு அத்தியாமும் செய்திருந்தாலும் அனைத்து கதைகளுக்கும் பின்னிருக்கும் இந்த நவீனத்துவ பிரக்ஞை ஒரு சிறு உறுத்தலே. அதே நேரம் இத்தகைய பிசிறுகளும் உறுத்தல்களும் புனைவுப்போக்கில் ஒரு தனிப்பாதையை திறக்கும் சாத்தியங்கள் கொண்டவை என்பதையும் மறுக்க இயலாது.
தசையழிவு நோயால் பாதிக்கப்பட்ட வான்மதி என்ற நம்பிக்கையை இழக்காத ஒரு லட்சியவாதியிடமிருந்து செந்தில் விலகி விலகி ஓடுகிறான். அவர்களுடனான அண்மை தன்னுள் காப்பாற்றி வந்த ஏதோவொன்றை உடைத்து விடும் என்று அஞ்சுகிறான். முழுமையாக எந்த தியாகத்தையும் செய்ய இயலாத ஆனால் அப்படி எத்தியாகமும் செய்து துயரை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் உளவுறுதி இல்லாததாலேயே துன்புறும் ஒரு தலைமுறை பிரதிநிதிகளின் கதையாக நீலகண்டம் நிலைபெறுகிறது. உட்செரிப்பதை விட உமிழ்வதே தீர்வென்று நம்பும் மனிதர்களின் கதையாகவும்.