ஏறத்தாழ அனைத்து இளைஞர்களும் ஒரு திசைமானியை அவர்களது கற்பனையில் வைத்துள்ளனர். அதைக் கொண்டு எதிர்காலப் பாதையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். திசைமானியை விரித்துப் பரந்த கண்ணோட்டத்தில் பார்வையைச் செலுத்தும் வேளையில், அதற்கேற்ற மன உறுதியும் வாய்த்து விட்டால் உலகமே அவர்களுடையதாகும். இருப்பினும் ஒருவரது உள்ளார்ந்த வாழ்வில் நிகழும் அந்த அதிசயம் இளமைப் பருவத்திற்கே உரியதாகும். அது இருபத்தியிரண்டு முதல் இருபத்தியெட்டு வயதிற்குள்ளாக அனைவருக்கும் வாய்க்கும். அக்காலக் கட்டத்தில் மாபெரும் எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றும். ஏனெனில் அது பெருமளவிலான ஆசைகளைத் தோற்றுவிக்கும் பருவம். அப்பருவம் குறுகிய விதைக் காலம் போன்றது. விரைந்துக் கடந்து போகும். அதன் பின் செயலாற்றுவதற்கானப் பருவம் உடனே துவங்கி விடும். நம்பிக்கையூட்டும் பருவம், செயல் திறன் மிகுந்த பருவம் என இரு இளமைப் பருவங்கள் உள்ளதாகக் காண்கிறோம். இயற்கையின் பேரருள் பெற்றவர்கள் அவ்வப்போது தோன்றுகின்றனர். அவர்களிடத்தில் அந்த இருப் பருவங்களுமே ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. சீசர், நியூட்டன், நெப்போலியன் போன்று மேன்மை பொருந்தியவர்களில் தலையாயவர்களாக அத்தகையோர் திகழ்கின்றனர்.
ஓர் எண்ணம் தோன்றி, மனதில் வளர்ந்த பின், அதனைச் செயல்படுத்த எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் எனது திசைமானியை விரித்தபடி ஒரு பாறையின் மீது நின்றிருந்தேன். சுமார் அறுநூறு அடிகளுக்கும் கீழே பெரும் சமுத்திரத்தின் அலைகள் மோதிக் கொண்டிருந்தன. நான் எனது எதிர்காலத்தைக் குறித்து ஆய்வு செய்தவாறிருந்தேன். ஒருப் பொறியாளர் தனது எதிர்காலத்தை வளமையாக்கப் புத்தகங்களின் தகவல்களை மூளையில் நிரப்பிக் கொள்வது போலவும், வெற்று நிலமொன்றில் ஓர் அரண்மனை அல்லது கோட்டையைக் கட்டியெழுப்பத் திட்டமிடும் கட்டிட வல்லுநர் போலவும் சிந்திந்துக் கொண்டிருந்தேன்.
சமுத்திரம் அழகாயிருந்தது. குளித்து உடை அணிந்து நான் பாலினுக்காகக் காத்திருந்தேன். அவள் இன்னமும் குளித்துக் கொண்;டிருந்தாள். அங்கிருந்த மிகப் பகட்டான குளியலறை, நீரை விரும்பும் தேவதைகளுக்காக இயற்கையின் மிகச் சிறந்த வடிவமைப்பில் இருந்தது. தரை மென்மையான மணலால் நிரவப்பட்டு, சுற்றிலும் கருங்கற்கள் வளைவாகக் குகை போல் அமைக்கப்பட்டிருந்தன.
எங்களது வசிப்பிடம் க்ராய்ஸிக்கின் ஒருக் கோடியில் இருந்தது. சிறிய அழகிய தீபகற்பத்தைச் சார்ந்த ப்ரிட்டனி பிரதேசத்தில் உள்ளது க்ராய்ஸிக். துறைமுகத்திலிருந்து வெகு தொலைவில் அது இருப்பதால் மக்கள் சுலபமாக வந்து போகக் கூடிய சாத்தியமில்லை. எனவே கடற்கரை பாதுகாவலர்கள் கூட அப்பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டிய அவசியமில்லை என்றே எண்ணியிருந்தனர்.
கடல் அலைகளில் மிதந்தவாறே வானத்தில் சஞ்சாரம்! ஆ! யார்தான் அங்கே என்னைப் போன்று எதிர்காலக் கனவில் மிதக்காமல் இருக்கக் கூடும்? பின் ஏன் நான் சிந்தனை வசமானேன்? தீங்கு எப்போது எவ்வாறு நிகழக் கூடும்? யாருக்குத் தெரியும்? நம்மிடம் அனுமதி பெறாமலேயே மனதிலும் மூளையிலும் யோசனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே.
எந்தவொரு அந்தப்புர வேசியிடமும் காணக் கூடிய செருக்கும், தாறுமாறான போக்கையும் விட ஒரு கலைஞனது மனதில் தோன்றும் கருத்துக்கள் மிக அதிக அகங்காரமிக்கவை. அபூர்வமாகவே அவை மனதில் உதிக்கும். அப்போதே அவற்றை பொக்கிஷம் போல மயிரிழையில் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.
ஹிப்போக்ரிஃப் எனப்படும் புராதன விலங்கின் மீதமர்ந்து செல்லும் அஸ்டால்ஃபே போன்று என் எண்ணங்களில் நான் பயணம் செய்தேன். மனம் போன போக்கில் பல்வேறு லோகங்களின் ஊடாகப் பாய்ந்தோடிச் சென்றேன். அப்போது கொந்தளித்தக் கற்பனைகள் துணிவுடன் செயலாற்றத் தூண்டியதன் காரணமாக சுற்றுபுறத்தில் ஏதேனும் தென்படுகிறதா எனத் தேடினேன். கடல் அலைகளின் ஏற்றமும் இறக்கமும் வெண்ணிறக் கோடாகத் தெரிந்தன. அவற்றின் ஆர்ப்பரிக்கும் ஓசையையும் மீறி எழுந்த உற்சாகப் பெண் குரலொன்று கேட்டது. உளமாரக் குளித்த பின் பொங்கி எழும் புத்துணர்ச்சி மிக்க குரல் அது. மனமார்ந்த மகிழ்ச்சி ததும்பும் அக்குரலைக் கேட்டதும் ஒரு தேவதை பாறைகளின் நடுவே கால் பதித்ததைப் போல் உணர்ந்தேன். அதன் சிறகை விரித்து, “நீ வெற்றி பெறுவாய்” என ஆசி வழங்கியதாகவும் எண்ணினேன். எனது மனச்சுமை குறைந்து ஒளி பொருந்தியவனாக, சரிவில் உருளும் கூழாங்கல்லைப் போன்று களிப்புடன் துள்ளியவாறே கீழிறங்கினேன். அந்நிலையில் என்னைக் கண்டதும் அவள் கேட்டது –
“உங்களுக்கு என்னவாயிற்று?”
நான் பதிலேதும் பேசவில்லை. என் கண்கள் ஈரமாயின. முன்னிரவில் எனது துயரங்களைப் பாலின் புரிந்துக் கொண்டிருந்தாள். தற்போது என் மனக் கிளர்ச்சியையும் அவள் உணர்ந்து கொண்டாள். சூழலின் தன்மைற்கேற்ப நாதம் எழுப்பும் மாய யாழைப் போன்றவள் அவள்.
மனித வாழ்வு அற்புதத் தருணங்களைக் கொண்டது. நாங்களிருவரும் கடற்கரையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். மேகம் ஏதுமற்ற வானம். மன நிம்மதியைத் தரும் கடல். ஏனையோர் கண்களுக்குப் புலனாகும் அக்காட்சி ஒன்றின் மீது ஒன்றாகப் படர்ந்திருக்கும் இரு நீலப் பரப்புகளாகவே தென்படும். ஆனால் நாங்களிருவரும் மாறுபட்டவர்கள். இயற்கையின் அற்புதங்களை வாய் வார்த்தைகளின் அவசியமின்றி ரசிக்கக் கூடியவர்கள். எல்லையற்ற அந்த இரு பரப்புகளுமே இளமைக்கு ஊட்டம் தரும் மாயைகளாக எண்ணுபவர்கள். நீர்ப் பரப்பில் சிறு நிற மாற்றம் நிகழும் போதும், வானில் வீசும் காற்று சற்றே மாறுபடும் போதும் ஒருவர் கையை மற்றொருவர் அழுத்திக் கொண்டோம். எங்களின் இருவர் எண்ணங்களையும் காட்சியாக வெளிப்படுத்தும் உன்னதங்களாகவே அம்மாற்றங்களைக் கருதினோம்.
அன்பு மிகுந்த இல்லற வாழ்வு தரும் வரையற்ற ஆனந்தக் கணத்தை சுவைக்காதவர் எவர்? அக்கணத்தில் உடற்கூறுகளின் தளைகளை எல்லாம் கடந்த ஒரு விடுதலை உணர்வு ஆன்மாவிற்குக் கிட்டும். தோன்றிய இடத்தையே மீண்டும் சென்றடைந்ததையும் அந்நிலையில் அந்த ஆன்மா கண்டறியும்.
காரணம் ஏதும் அறியாமலேயே ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி குதூகலமாகக் குழந்தைகள் ஓடுவதில்லையா? ஒன்றாகக் கலந்த மனித உணர்வுகளும் சில மணி நேரங்கள் அவ்வாறாக மேல் நோக்கி சிறகடித்துப் பறக்காதா என்ன? அப்படியாகத்தான் நாங்களிருவரும் சேர்ந்து நடந்து கொண்டிருந்தோம்.
தொடுவானில் கோடு போல் தோற்றமளித்த மங்கலான சாம்பல் நிறக் கூரைகளைக் கொண்ட கிராமத்தைக் கண்ட போது ஒரு மீனவரை நாங்கள் பார்த்தோம். அவர் க்;ராய்ஸிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த ஓர் ஏழை. காலணி இல்லாத கால்கள். அவரது கால்சட்டையின் கீழ்ப்பகுதி வட்டமாக நைந்திருந்தது. அவரது சட்டை பொதுவாகக் காணக்கூடிய மலிவான தரத்திலிருந்தது. இரங்கத்தக்க அந்த ஏழ்மை எங்கள் மனதைப் புண்படுத்தியது. இணைந்திருந்த எங்களது உணர்வுகளுக்கு அது ஒரு முரணாகத் தோன்றியதும் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். அக்கணம் அபுல் கஸாமின் கருவூலத்திற்குள் நுழையும் ஆற்றல் எங்களுக்கு வாய்க்காததை எண்ணி வருந்தினோம். மீனவரது வலது கையிலிருந்த தூண்டிலில் லாப்ஸ்டர் எனப்படும் கல் இராலும் வளமையான ஒரு நண்டும் இருப்பதைப் பார்த்தோம். இடது கையில் மீன் பிடி சாதனமும் வலையும் இருந்தன.
அவர் பிடித்தவற்றை விலைக்கு வாங்கும் நோக்கத்தில் அவரை அணுகினோம். எங்கள் இருவருக்கும் அந்த யோசனை தோன்றியதும் அவள் புன்னகைத்தாள். அதற்கு பிரதியாக அவளது கையை நான் சற்று அழுத்தி என் இதயத்திற்கருகே கொண்டு சென்றேன். அது ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் கணப்பின் அருகே ஓய்வாக அமர்ந்திருக்கும் போது, முன்னர் நிகழ்ந்தவற்றை மீண்டும் நினைத்துப் பார்க்கும் வேளையில், இவ்வாறான அர்த்தமற்ற விஷயங்கள் கூட நம்மை நெகிழச் செய்து கவிதைகளாக உருவெடுக்கும். நாம் குறிப்பு ஏதும் எழுதி வைத்திருக்கா விட்டாலும் அந்நிகழ்ச்சி நடந்த இடமும் கூட மனக்கண்ணில் மாயத் தோற்றம் பெறும்.
நமது உள்ளம் நிறையும் வகையில் வாழ்வு இலகுவாக நம்மை இட்டுச் செல்லும் போது சுற்றுச்சூழலில் காணக் கூடிய அனைத்திலும் அந்த உணர்வு பிரதிபலிக்கும். மிகச் சிறந்த இயற்கைக் காட்சியும் நாமே உருவாக்கிக் கொள்வதுதானே. கவிதை மனம் கொண்டவரில் வெற்றுப் பாறையைக் கூட நினைவில் பதித்திராதவர் எவர்? பெரும் செலவில் அயல்நாடுகளுக்குச் சென்று காணும் புகழ்பெற்ற இயற்கைக் காட்சிகளை விடவும் அக்கவியின் நினைவில் வெற்றுப் பாறை உன்னத இடம் வகிக்கக் கூடும். அப்பாறையின் அருகே கொந்தளித்த கற்பனைகள்! அங்கேதானே வாழ்வே முழுமை அடைந்தது. அனைத்துப் பயங்களும் அற்றுப் போயின. நம்பிக்கைக் கதிர்களும் ஆன்மாவில் தோன்றின.
கனிவான அன்பும் எதிர்காலம் குறித்த எண்ணங்களும் உள்ளத்தில் தோன்றிய அக்கணத்தில் கதிரவனும் அந்த எண்ணங்களின் பால் அனுதாபம் கொண்டு பாறைக்கு அலாதியான ஒளியை அள்ளி வழங்கியது. ஒரு சில காட்டுப் புஷ்பங்களும் கண்ணில் பட்டன. சந்தடியற்ற சூழலின் அமைதி கரடுமுரடாக வளர்ந்திருந்த செடிக் குவியல்களை மென்மேலும் பெரிதாக மிகைப்படுத்திக் காட்டின. கனவுலகில் மிதந்த என் கண்களுக்கு சற்றே நிறம் மங்கித் தெரிந்தாலும், குறைந்தளவே காணப்பட்டப் பட்டுப் போன்ற இலைகளைக் கொண்ட சாமந்திச் செடிகள் வெகு அழகாயிருந்தன. ஓ! நீடித்த விழாக் கோலம்! ஓ! மேன்மை மிகு அலங்காரம்! ஓ! மானிட ஆற்றலுக்கேயுரிய ஆனந்தப் பரவசம்! ஏற்கெனவே ஒரு முறை ப்ரியான் ஏரிக்கரையில் இத்தகைய அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. க்ராய்ஸிக் பாறையில் நிகழ்ந்தது ஒருக்கால் எனது இறுதி பரவச நிலையாக இருக்கக் கூடும். அப்படியானால் பாலினுக்கு என்ன நேரும்?
“அன்பரே! இன்று நிறைய அகப்பட்டதா?” என்றேன் நான் மீனவரிடம்.
“ஆம் ஐயா!” என்று பதிலளித்த அவர் எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பினார். தண்ணீரில் விழும் சூரியனின் பிரதிபலிப்பை நாள் முழுவதும் காண்கிற அவரது முகம் கருத்திருந்தது. அந்த முகமானது நீண்ட காலப் பணிவின் அடையாளாமாகக் காட்சியளித்தது. மீனவர்களுக்கே உரிய பொறுமையும், அமைதியான சுபாவமும் அதில் தென்பட்டன. குரலில் கடுமை ஏதுமில்லை. கனிவான உதடுகள் அவரிடத்தில் எவ்வித லட்சியமும் இல்லாததன் அறிகுறியாகத் திகழ்ந்தன. ஆனாலும் ஏதோவொரு நலிவும், குறைபாடும் அவரிடமிருந்ததையும் உணர முடிந்தது. வேறு எவ்விதமான மாறுபட்ட முகபாவனையும் எங்களது அப்போதைய உணர்வுகளுக்கு எதிரான அதிர்வைத் தோற்றுவித்திருக்கும்.
“நீங்கள் பிடித்தவற்றை எங்கு விற்பீர்கள்?”
“நகரத்தில்தான்.”
“கல் இராலுக்கு எவ்வளவு பணம் தருவார்கள்?”
“பதினைந்து சூஸ்கள்”
“நண்டிற்கு?”
“இருபது சூஸ்கள்”
“இரண்டிற்கும் ஏன் வித்தியாசமான விலை?”
“ஐயா! நண்டு அதிகச் சுவையானது. தவிர அது குரங்கைப் போல தந்திரமிக்கது. சுலபமாக சிக்கிக் கொள்ளாது.”
“இரண்டையும் நூறு சூஸ்களுக்கு எங்களுக்குத் தருவீர்களா?”
அதிர்ச்சியில் உறைந்த அவர் கல்லானது போல் காணப்பட்டார்.
“உனக்கு அது கிடைக்காது” என்றேன் அவளிடம் பெரும் சிரிப்புடன். “நான் பத்து ஃப்ராங்குகள் தருவேன். மகிழ்ச்சியான உணர்வுகளை நாம் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.”
“நல்லது!” என்ற அவள், “பின் நான் பத்து ஃப்ராங்குகளும் இரண்டு சூஸ்களும் தருவேன்.”
“பத்து ஃப்ராங்குகளும் பத்து சூஸ்களும்.”
“பன்னிரண்டு ஃப்ராங்க்ஸ்.”
“பதினைந்து ஃப்ராங்க்ஸ்.”
“பதினைந்து ஃப்ராங்க்ஸ். ஐம்பது சூஸ்கள்.”
“நூறு ஃப்ராங்க்ஸ்.”
“நூற்றிஐம்பது ஃப்ராங்க்ஸ்.”
நான் விட்டுக் கொடுத்தேன். அதற்கும் மேலாக அதிக விலை கொடுத்து வாங்குமளவு அக்கணத்தில் நாங்கள் செல்வந்தர்களாக இருக்கவில்லை.
அந்த ஏழை மீனவர் எங்களது நடத்தையை கேலிக் கூத்தாக எண்ணிக் கோபம் கொள்வதா அல்லது ஆனந்தத்தில் திக்கு முக்காடி சித்தம் கலங்கிப் போவதா என்கிற குழப்பத்தில் ஆழ்ந்தார். அவரை அந்நிலையிலிருந்து விடுவிக்க நாங்கள் தங்கியிருந்த இடத்தின் உரிமையாளர் பெயரைக் குறிப்பிட்டு அவரிடம் அந்தக் கல் இராலையும், நண்டையும் கொடுத்து விடும்படிக் கேட்டுக் கொண்டோம்.
அவரது வறிய நிலைக்கான காரணத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டி நான் அவரிடம், “உங்களது வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குரிய போதுமான வருமானம் கிடைக்கிறதா?” என்று கேட்டேன்.
“எப்போதும் சிரமம்தான். மிகுந்த ஏழ்மை” என்று பதிலளித்தார் அவர். “என்னிடம் படகும் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான வலைகளும் கிடையாது. கரையில் நின்று கழியும், தூண்டிலையும் வைத்து மீன் பிடிப்பது நிச்சயமில்லாத தொழில். மீன் அல்லது நண்டிற்காகக் காத்திருக்க வேண்டும். உண்மையான மீனவன் அவற்றிற்காகக் கடலுக்குள் செல்வான். இவ்வகையில் சம்பாதிப்பது மிகுந்த சிரமம். இப்பகுதியில் நான் ஒருவன் மட்டுமே கரையில் நின்று மீன் பிடிக்கிறேன். ஏதுமே கிடைக்காமல் முழு நாளும் நின்றிருக்கிறேன். நண்டைப் பிடிக்க வேண்டுமானால் அது தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். இந்த நண்டை அந்நிலையில்தான் பிடித்தேன். கல் இரால் மடத்தனமாக பாறையின் இடுக்கில் ஒடுங்கியிருக்க வேண்டும். சில வேளைகளில் கடல் ஏற்றத்தின் போது வரும் சிப்பிகளையும் அள்ளிக் கொள்வேன்.”
“சரி, ஒரு நாளைப் போல மற்றொரு நாள் இல்லாவிட்டாலும் ஏறக்குறைய எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?”
“ஓ! பதினொரு அல்லது பன்னிரண்டு சூஸ்கள். நான் தனியனாக இருந்தால் அதுவே எனக்குப் போதும். ஆனால் வயது முதிர்ந்த தந்தையும் என்னோடு இருக்கிறார். நல்ல மனிதரான அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஏனெனில் அவர் கண் பார்வையற்ற குருடர்.”
அவர் இயல்பாக சொன்ன வார்த்தைகளைக் கேட்டு பாலினும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். பின் நான் அவரிடம் கேட்டது –
“உங்களுக்கு மனைவி அல்லது உற்ற நண்பர் எவருமில்லையா?”
நான் கண்டதிலேயே துயர் மிகுந்த ஒரு பார்வையால் என்னை நோக்கிய அவர் சொன்னது –
“மனைவி இருந்தால் தந்தையை அநாதையாக விட்டுவிட வேண்டியிருக்கும். அவரையும் வைத்துக் கொண்டு, மனைவி குழந்தைகளுக்கும் என்னால் உணவளிக்க முடியாது”
“சரி, எனதருமை ஏழை இளைஞரே! உப்பளத்தில் வேலை செய்து அதிகம் சம்பாதிக்க வேண்டியதுதானே. அல்லது துறைமுகத்திற்கு உப்பு எடுத்துச் செல்லும் வேலையை நீங்கள் ஏன் செய்யக் கூடாது?”
“ஆ! ஐயா, அவ்வேலையை என்னால் மூன்று மாதங்களுக்கு மேல் செய்ய முடியவில்லை. நான் அந்தளவு பலசாலி அல்ல. ஒரு வேளை நோய்வாய்ப்பட்டு நான் இறக்க நேர்ந்தால் என் தந்தை பிச்சைதான் எடுக்க வேண்டியிருக்கும். எனவே சிறிது திறமையும், பெருமளவு பொறுமையும் தேவைப்படும் வேலையைத்தான் செய்யும்படியாக நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.”
“ஆனாலும் வெறும் பன்னிரன்டு சூஸ்களைக் கொண்டு இருவர் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?”
“ஓ, ஐயா, நாங்கள் மலிவான கோதுமையில் செய்யப்பட்ட கேக்குகளையும், பாறைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிப்பிகளையும்தான் சாப்பிடுகிறோம்.”
“உன் வயதென்ன?”
“முப்பத்தி ஏழு.”
“எப்போதாவது க்ராய்ஸிக்கை விட்டு வேறு எங்கேயும் சென்றிருக்கிறாயா?”
“கட்டாய ராணுவப் பணியின் காரணமாக ஒரு முறை கேரன்டுக்கும் அங்கிருந்து சாவனேவிற்கும் சென்றிருந்தேன். நான் அரை அங்குலம் அதிக உயரம் இருந்திருந்தால் என்னை ராணுவத்தில் சேர்த்திருப்பார்கள். போரின் முதல் படையெடுப்பிலேயே நான் மாண்டிருப்பேன். பின் எனது ஏழை தந்தை ரொட்டிக்காக பிச்சை எடுத்திருப்பார்.”
“பல நாடகக் கதைகளை எனது சிந்தனையில் நான் உருவாக்கியுள்ளேன். என்னைப் போன்று துயர் நிறைந்தவர்களிடம் நெருங்கிப் பழகியிருந்த பாலினும் பெரும் மன எழுச்சிகளுக்குப் பழக்கப்பட்டிருக்கிறாள். ஆயினும் இந்தளவு நெகிழ்ச்சியுறச் செய்யும் வார்த்தைகளை நாங்களிருவருமே ஒருபோதும் கேட்டதில்லை. சிறிது தூரம் ஏதும் பேசாமல் மௌனமாக நடந்து கொண்டிருந்தோம்.
எவரும் அறியாமல் வாழ்ந்து வரும் அம்மனிதனின் ஆழ்ந்த துயரம் எங்களை உருகச் செய்தது. மனமுவந்து அவர் ஆற்றி வரும் பெரும் தொண்டினை மனதாரப் போற்றினோம். ஆனால் அந்த எளிய மனிதரோ அதன் பெருமையை அறியாமலேயே அக்காரியத்தைச் செய்து வருகிறார். நலிந்த நிலையிலும் அவரது வைராக்கியம் எங்களை வியக்கச் செய்தது. அவரிடமிருந்த தயாள குணத்தை உணராமலேயே அவர் செய்து கொண்டிருக்கும் சேவை எங்களை அற்பர்களாக்கியது.
கப்பலில் துடுப்பிழுக்கும் அடிமைகள் இரும்புக் குண்டுடன் சேர்ந்த சங்கிலியால் பிணைக்கப்பட்டு எங்கும் நகர முடியாதது போல, உள்ளுணர்வின் உந்துதலில் மட்டுமே வாழ்கிற அந்த ஏழை ஜீவன் க்ராய்ஸிக் பாறைகளில் கட்டுண்டிருக்கிறார். வாழ்வாதாரத்திற்கென கடல் நண்டுகளை எதிர்நோக்கி பல வருடங்கள் அவர் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம். ஒரேயொரு கனிவான உணர்விற்காக நீடித்த பொறுமையைக் காத்து வருகிறார். தனிமையில் எத்தனை மணி நேரங்களை கடற்கரையில் வீணாக்கியிருக்க வேண்டும். எத்தனை வானிலை மாற்றங்கள் அவரது நம்பிக்கைகளை சிதைத்திருக்கும். ஒரு கருங்கல் பாறையில் தொற்றிக் கொண்டு, இந்திய நாடோடி போல் கையை நீட்டிக் கொண்டிருக்கிறார். அவரது தந்தையோ கடல் அனுமதித்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய சிப்பிக்காகவும், கடினமானதொரு ரொட்டிக்காகவும் இருளில் அமைதியாகக் குடிசையில் காத்திருக்கிறார்.
“நீ எப்போதேனும் ஒயின் குடித்திருக்கிறாயா?” நான் கேட்டேன்.
“ஆண்டிற்கு மூன்று நான்கு முறைகள்” என்றார்.
“நல்லது! இன்று நீயும் உன் தந்தையும் ஒயின் அருந்தலாம். வெள்ளை ரொட்டியும் நாங்கள் தருகிறோம்.”
“ஐயா! நீங்கள் பெரும் கருணைக் காட்டுகிறீர்கள்.”
“பாட்ஸ் செல்வதற்கான கடற்கரைப் பாதையை நீ எங்களுக்குக் காட்டினால் உனக்கு இரவு உணவை நாங்கள் வழங்குகிறோம். பாட்ஸிற்கும் க்ராய்ஸிற்கும் இடையிலான விரிகுடாவை பார்வையிடும் வகையில் அமைந்துள்ள கோபுரத்தை நாங்கள் காண விரும்புகிறோம்.”
“சந்தோஷமாகக் காட்டுகிறேன்” என்றார் அவர். “நீங்கள் நடந்து கொண்டிருக்கும் பாதையிலேயே நேராகச் சென்று கொண்டிருங்கள். நான் எனது தூண்டிலை வைத்து விட்டு உங்கள் பின்னாலேயே சீக்கிரம் வந்து விடுகிறேன்.”
நாங்கள் தலையசைத்து இசைந்ததும் அவர் குதூகலமாக நகர் நோக்கி ஓடினார். இவரது சந்திப்பு எங்களுக்கு முன்னர் இருந்த அதே மனநிலையை நீடிக்கச் செய்தது. ஆனால் மகிழ்ச்சிக் களிப்பால் மனப் பாரமற்றிருந்த நிலையின் தன்மை சிறிது குறைந்து விட்டது.
“பாவப்பட்ட ஏழை!” என்றாள் பாலின். அக்கணம் அவரது குரலில், மனித இரக்கத்தை இழிவுபடுத்தும் அனைத்தையும் முற்றாக அழித்து விடும் பெண்மைக்கேயுரிய கருணையின் தொனி வெளிப்பட்டது. “இவ்வாறான கடும் துயரில் வாழ்பவர்கள் உள்ள போது, நாம் மகிழ்ச்சியுறுவதை நினைத்து வெட்கப்பட வேண்டும்.”
“சாத்தியப்படாத ஆசைகளை விடவும் கொடூரமான வேதனையைத் தருவது வேறு ஏதும் கிடையாது,” என நான் பதிலளித்தேன். “நாம் அவர்களது நிலை குறித்து அனுதாபப்படுகிறோம் என்பது தந்தை, மகன் ஆகிய இருவருக்குமே ஒரு போதும் புரியாது. அதே போன்று அவர்களது அற்புத வாழ்வைக் குறித்தும் ஒரு போதும் இந்த உலகமும் அறியாது. பொக்கிஷங்களை அவர்கள் சொர்க்கத்தில் சேமிக்கின்றனர்.”
“ஓ! இந்த நாடு எவ்வளவு வறிய நிலையில் உள்ளது!” என்றாள் அவள் எதிரே சுட்டிக்காட்டியபடி. அங்கிருந்த வெட்ட வெளியில் காணப்பட்ட ஒரு சுவரில் வரிசையாக மாட்டுச் சாணம் பதிக்கப்பட்டிருந்தது. மும்முரமாக சாணத்தை ஒட்டிக் கொண்டிருந்த குடியானவப் பெண்ணிடம், “எதற்காக இதைச் செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். “எரிபொருளாக பயன்படுத்துவதற்குத்தான்” என்று பதிலளித்தார் அவர். அவ்வாறாக சாணத்தை ஒட்டிக் காய்ந்ததும், அவற்றை சேகரித்து வீட்டில் வைத்து எரிபொருளாக மனிதர்கள் உபயோகிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நிலக்கரி விற்பனை செய்யப்படுவதைப் போல அவற்றைக் குளிர்காலங்களில் விற்கவும் செய்வார்களாம். மேலும் அங்கு உடுப்புகள் தைப்பதில் மிகுந்த திறன் உள்ளவர் ஒரு நாளில் சம்பாதிக்கக் கூடியது ஐந்து சூஸ்களும், உண்ண உணவும் மட்டுமே என்றும் அப்பெண்மணி தெரிவித்தார்.
“ஆனால் கவனி,” என்றேன் நான். “கடற்காற்று எவ்வாறு இங்குள்ள அனைத்தையும் சீர்குலைத்து அழிக்கிறது. மரங்கள் ஏதுமில்லை. சேதமடைந்த பொருட்களும், பழைய பாத்திரங்களும், நொறுக்கி உடைக்கப்படுகிறது. அவற்றை விலைக்கு வாங்கும் வசதி யாருக்கேனும் இருந்தால் அவரிடம் விற்கப்படுகிறது. பிரிட்டனியில் அதிகளவில் கிடைக்கக் கூடிய விறகுகளை இங்கு அனுப்புவதானால் போக்குவரத்து செலவு மிக அதிகமாகும். உயர்ந்த ஆத்மாக்களுக்கு மட்டுமே இந்தப் பிரதேசம் சிறப்பானது. வேறு எவருக்கும் இது ஏற்றதல்ல. ஒரு வகை உணர்ச்சிமிக்க மனோபாவம் அல்லாதவர்கள் இங்கு வாழவே இயலாது. பாறையில் ஒட்டிக் கொள்ளும் சிப்பிகளும், கவிஞர்களும் மட்டுமே இங்குக் குடியேற முடியும். இப்பாறைக்கு மக்களைக் கொண்டு வந்து சேர்த்திருப்பது உப்பளமும், உப்பு தயாரிக்கும் தொழிற்சாலையும் மட்டுமே. ஒரு புறம் கடல், மறுபுறம் மணல். மேற்புறம் எல்லையற்ற வான்வெளி.”
தற்போது நாங்கள் நகரைக் கடந்து விட்டிருந்தோம். க்ராய்ஸிக் நகரையும், பாட்ஸ் கிராமத்தையும் பிரிக்கும் வெற்றுப் பாலை வெளியை அடைந்திருந்தோம். அன்பு மாமா! கற்பனை செய்து கொள்ளுங்கள். மைல் கணக்காக நீளும் பாதையில் செடி கொடிகள் ஏதுமற்ற வெற்று வெளி. ஒளி வீசும் கடற்கரை மணல் துகள் மட்டுமே அப்பாதையை நிரப்பியிருந்தது. அங்குமிங்குமாக சில பாறைகள் தலையைத் துருத்திக் கொண்டிருந்தன. மணல் குன்றுகளில் படுத்துக் கொண்டிருக்கும் பெரிய மிருகங்கள் தங்கள் தலையைத் தூக்கி வைத்திருப்பதாக நீங்கள் எண்ணமிடக் கூடும். கடற்கரை ஓரமாகவும் பாறைகள் இருந்தன. அவற்றின் மீது மோதிய நீரலைகள் நுரைத்து ஒளிர்ந்தன. அவை பெரும் வெள்ளை ரோஜாக்களாகத் தென்பட்டன. நீரில் மிதப்பதாகவோ அல்லது ஓய்வெடுப்பதாகவோ தோன்றின. ஒருபுறம் வெற்று நிலப்பரப்பும் அதனருகே சமுத்திரமும் இருக்கக் கண்டேன். மறுபுறம் பாறைகள் நிறைந்த கேரென்ட் கடற்கரைக்கும் க்ராய்ஸிக்குமிடையே சமுத்திரத்தின் மற்றொரு கிளை ஓடுவதைக் கண்டேன். அதன் அடிப்புறத்தில்தான் தாவரங்கள் ஏதுமற்ற உப்பளங்களும் இருந்தன.
“கொளுத்தும் வெயிலில் மணலில் நடந்து செல்வதற்கான தைரியம் உள்ளதா?” என நான் பாலினைப் பார்த்துக் கேட்டேன்.
“என்னிடம் காலணிகள் உள்ளன. மேலும் நடக்கலாம்” என்று சொன்னவள் பாட்ஸின் கோபுரத்தை சுட்டிக் காட்டினாள். கூம்பு போன்ற குவியல்களுக்கிடையே காணப்பட்ட அந்தக் கோபுரம் கண்களை ஈர்த்தது. அக்கூம்பு நேர்த்தியான அழகுடன் மெலிந்த வடிவில் காணப்பட்டது. ஆசியாவின் ஏதோவொரு பழமையான பாழடைந்த நகரத்தின் அழகிய வடிவமைப்பு தோற்றுவிக்கும் கவித்துவமான உணர்வுகள் கற்பனையில் உதித்தன. மேலும் சில அடிகள் நடந்து சென்றோம். பெரும் பாறையின் கீழிருந்த நிழலில் அமர்ந்தோம். அப்போது மணி பதினொன்று. எங்களின் காலடி நிழல் துரிதமாக மறைந்துக் கொண்டிருந்தது.
“இந்த அமைதி எவ்வளவு அற்புதமாயுள்ளது!” என்று அவள் என்னிடம் கூறினாள். “கரையில் சீராக மோதும் அலைகளும் இந்த அற்புதத்தின் அழகை மேலும் ஆழமாக்குகின்றன.”
“சுற்றிலுமுள்ள காற்று, மணல், நீர் ஆகிய மூன்று பிரம்மாண்டங்களையும் புரிந்துக் கொண்டு, அலைகளின் ஒலியை மட்டுமே ஆழ்ந்துக் கேட்டுப் பார். அது பேசுவதை நம்மால் பொறுக்க இயலாது. அது வெளிப்படுத்தும் எண்ணமானது நம்மை நிர்மூலமாக்கி விடும். நேற்று சூரிய அஸ்தமனத்தின் போது எனக்கு அவ்வாறாகத்தான் நிகழ்ந்து சோர்வுற்றேன்.”
பின் நிலவிய நீண்ட மௌனத்திற்குப் பின், “ஓ! நாம் பேசுவோம், பேசுவோம்” என்றாள். “எனக்குப் புரிகிறது. எந்த ஒரு சிறந்த பேச்சாளரையும் விட கடலின் சொற்கள் அதிக அச்சத்தை விளைவிக்கிறது” என்றவள் மேலும் தொடர்ந்தாள். “சுற்றிலுமுள்ள சீரான தன்மையின் காரணத்தை உணர்கிறேன். இந்த நிலப்பரப்பு மூன்று குறிப்பிட்ட நிறங்களை வெளிப்படுத்துகிறது. மணலின் ஒளிரும் மஞ்சள், வானின் நீலம், கடலின் பச்சை ஆகியன வெகு நேர்த்தியாக இணைந்துள்ளன. இது பிரம்மாண்டமாக இருப்பினும் பாலைவனமாக இல்லை. மாறுதலே இல்லாத போதும் சலிக்கவில்லை. இங்கிருப்பது மூன்றே சக்திகள் தாம். இருப்பினும் பல வகைகளில் வேறுபடுகின்றன.”
“இவ்வாறான பதிவுகளை எவ்வாறு விளக்கமாக வெளிப்படுத்துவது என்பது பெண்களே அறிந்த விஷயம்” என்றேன் நான். “உன் திறனை நான் நன்றாக உணர்ந்துள்ளேன். கவிஞன் கூட உன்னிடத்தில் தோற்றுப் போவான்.”
“நண்பகலின் கடும் வெப்பம் இந்த மூன்று எல்லையில்லாத சக்திகளுக்கும் பேராற்றல் மிகுந்த நிறங்களை அளித்துள்ளது” என்றாள் புன்சிரிப்புடன் பாலின். “கீழை நாடுகளின் கவித்துவமும், தீவிர உணர்ச்சிகளையும் இங்கு என்னால் உணர முடிகிறது.”
“நான் அந்நாடுகளின் துயர்களை உணர்கிறேன்.”
“அதுவும் சரிதான்” என்றாள். “இந்த மணல் குன்றுகள் தனித்துள்ள துறவிகள் மடம் போல் உள்ளன. மேன்மை மிக்க மடங்கள்.”
அப்போது எங்களது வழிகாட்டியின் விரைந்து வரும் காலடியோசையைக் கேட்டோம். அவர் ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடையை உடுத்தியிருந்தார். அவரிடம் குறைவாகவே பேசினோம். எங்களது மனநிலை மாறி விட்டதாக அவர் எண்ணிக் கொண்டார் போலும். ஏழ்மைக்கே உரிய கூச்சத்துடன் அமைதி காத்தார். எங்களது மனப் பதிவுகளையும், கருத்துக்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் விதமாக அவ்வப்போது உணர்ச்சிகரமாகக் கைகளை அழுந்தப் பற்றினோம். அமைதியாக மேலும் அரை மணி நேரம் நடந்திருப்போம். கொதிக்கும் மணலிலிருந்து அலையாக எழும்பிய வெப்பம் துன்புறுத்தியதாலோ அல்லது நடப்பதன் சிரமம் எங்களது கவனத்தை ஈர்த்ததாலோ நாங்கள் அமைதி காத்தோம். இளம் சிறார்களைப் போல நாங்கள் கை கோர்த்திருந்தோம். தனித்தனியாக கை வீசியபடி நடந்திருந்தால், உண்மையில் பன்னிரண்டு காலடிகள் கூட முன் எடுத்து வைத்திருக்க மாட்டோம்.
பாட்ஸ் செல்வதற்குரிய பாதை சுலபமாகக் காணக் கூடிய வகையில் இல்லை. குதிரைக் குளம்புகள் அல்லது வண்டிச் சக்கரங்களின் தடங்களை முற்றிலுமாக அழித்து விட, வீசும் ஒரு கடுங் காற்றே போதும். ஆனால் மணலிலுள்ள குப்பைக் கூளங்களும், அந்தப் பாலை நிலத்தைக் கடந்து சென்ற மாடுகளின் சாணமும் வழிகாட்டியின் பழக்கப்பட்ட கண்களுக்குத் தெரிந்தன. பாதை சில வேளைகளில் கடல்புறத்தை நோக்கி கீழே இறங்கியும், நிலப்பரப்பை நோக்கி மேலேயும் சென்றது. அது நிலச்சரிவின் காரணமாகவோ அல்லது பாறையைச் சுற்றிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தாலோ இருக்கக் கூடும். நண்பகல் வேளையின் போது பாதி தூரமே சென்றிருப்போம்.
“நாம் அங்குச் சற்று இளைப்பாறுவோம்” என்று நான் சுட்டிக் காட்டிய இடத்தில் பாறைகள் கூம்பு போலக் குவிந்து உயரமாக இருந்தன. மேலே ஒரு குகை இருப்பதைக் கூட காண நேரிடலாம்.
நான் கூறியதைக் கேட்ட மீனவர் அத்திசையை நோக்கினார். பின் மறுக்கும் விதமாகத் தலையசைத்து அவர் சொன்னது –
“அங்கு ஒருவர் வசிக்கிறார். பாட்ஸ் கிராமத்திலிருந்து க்ராய்ஸிக் அல்லது க்ராய்ஸிக்கிலிருந்து பாட்ஸ{க்குச் செல்லும் எவருமே அந்த இடத்தைச் சுற்றித்தான் செல்வார்கள். அப்பாறை மீதேறிச் செல்வதில்லை.”
அந்த வார்த்தைகளை தாழ்ந்த குரலில் ரகசியம் போல அவர் கூறிய விதம் ஏதோ ஒரு மர்மம் அங்கிருப்பதை உணர்த்தியது.
“யார் அவர்? திருடனா அல்லது கொலையாளியா?”
பெருமூச்சு ஒன்றை மட்டுமே பதிலாகத் தெரிவித்தார் வழிகாட்டி. எங்களது ஆவல் மேலும் அதிகமானது.
“அவ்வழியாக சென்றால் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேருமா?”
“ஓ! அப்படியில்லை.”
“நீ எங்களுடன் வருவாயா?”
“முடியாது ஐயா.”
“ஏதும் ஆபத்தில்லை என நீ உறுதியளித்தால் நாங்கள் அவ்வழியாகவே ஏறி வருகிறோம்.”
“ஆபத்தின் காரணமாக நான் மறுக்கவில்லை” என்றார் உடனே மீனவர். “நான் சொல்ல வருவது என்ன என்றால் அங்குள்ளவர் உங்களிடம் எதுவும் பேசவும் மாட்டார். எந்தத் தீங்கும் செய்யவும் மாட்டார். இன்னும் சொல்லப் போனால் அவர் இருக்குமிடத்தை விட்டு நகரவும் மாட்டார்.”
“அவர் யார்?”
“ஒரு மனிதர்.”
அந்த இரு சொற்கள் ஒருபோதும் அவ்ளவு துயருடன் உச்சரிக்கப்பட்டிராது. அக்கணம் சிறப்புமிக்க அந்தப் பாறைக்கு சுமார் ஐம்பது அடிகள் தூரத்திலிருந்தோம். அப்பாறையின் ஒரு பகுதி கடற்புறமாக நீண்டிருந்தது. எங்களது வழிகாட்டி அப்பாறையின் கீழிறிருந்த சுற்றுப் பாதையில் நடந்தார். நாங்கள் அப்பாறைக்குச் செல்லும் பாதையிலேயே தொடர்ந்து நடந்தோம். பாலின் எனது கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டே நடந்து வந்தாள். நாங்கள் நடக்கும் பாதையும் வழிகாட்டியின் சுற்றுப்பாதையும் ஒன்றாகுமிடத்தில் எங்களை எதிர்கொள்ளும் விதமாக அவர் சற்று விரைவாக நடக்கத் துவங்கினார்.
அச்சூழல் எங்களது ஆவலைக் கிளர்ந்தெழச் செய்தது. மனதில் அச்சம் தோன்றுகையில் இதயம் வேகமாகத் துடிப்பது போல எங்களது கிளர்ச்சித் தீவிரமான கணத்தில் அவ்வாறே நிகழ்ந்தது. அந்நாளின் வெப்பம், மணலில் நடந்த சிரமம் தந்த களைப்பிருந்தும் கூட எங்களது ஆன்மா பரவச நிலையில் சொல்லொண்ணா வகையில் நெகிழ்ந்திருந்தது. விளக்கிச் சொல்ல முடியாத தூய இன்பம் ஆன்மாவை நிறைத்தது. மொஸார்டின், ‘ஆடியாமோ மையோ பென்’ இசையைக் கேட்கும் போது தோன்றும் மகிழ்ச்சியை அதற்கு ஈடாகக் குறிப்பிடலாம். இருத் தூய கனிவான மனங்கள் ஒன்றாகக் கலந்த நிலையில் அது இனிமையான இருக் குரல்கள் சேர்ந்து பாடுவது போலன்றி வேறென்ன? எங்களை ஆட்கொண்ட உணர்வை சரியாகப் புரிந்துக் கொண்டு மெச்சக் கூடுமானால், காலையில் நடந்த சம்பவங்கள் தோற்றுவித்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.
ஒரு வசந்த காலத்தில், அசைந்தாடும் கிளை ஒன்றில் அமர்ந்திருக்கும் அழகிய புறாவைக் காணுங்கள். மாறிக் கொண்டே இருக்கும் அதன் மீதான வர்ண ஜாலத்தையும் வெகு நேரம் ரசித்துக் கொண்டிருங்கள். அப்போது திடுமென பருந்து ஒன்று பாய்ந்து வந்து அதன் நெஞ்சில் வலிமையான கூரிய நகங்களைப் பதித்துக் கொலை வெறியுடன் துரிதமாகப் பறந்து செல்லும் வேளையில் உங்களுக்கு ஏற்படும் மனவலியில் ஓவென நீங்கள் ஓலமிடக் கூடும்.
கடல் மட்டத்திற்கு மேலாக சுமார் நூறு அடிகள் உயரத்தில் ஒரு சமதளம் அமைந்திருந்தது. கடலின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அரணாக சுவர் போல் பாறைகள் அங்கிருந்தன. அந்த இடத்தில் குகை வாயில் போல் தோற்றமளித்த திறந்த வெளிக்கு முன்பாக ஓரிரண்டு அடிகள் முன் வைத்திருப்போம். திடீரென மின்சாரம் தாக்கியது போல நடுக்கமுற்றோம். அமைதியான நள்ளிரவில் பெரும் ஓசை திடுமென ஒலித்தால் திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது போலிருந்தது.
பெரும் பாறை ஒன்றின் மீதமர்ந்திருந்த ஒரு மனிதன் எங்களைப் பார்வையிடுவதைக் கண்டோம். அவரது பார்வையானது பீரங்கிக் குண்டு வெடிக்கும் போது தோன்றும் ஒளியைப் போல பளிச்சிட்டது. கண்களிரண்டும் ரத்தச் சிவப்பாயிருந்தன. அசைவற்று அமர்ந்திருந்த அந்நிலையை அவரைச் சூழ்ந்திருந்த பாறைகளுக்குத்தான் ஒப்பிடக் கூடும். அவரது கண்கள் நிதானமாக அசைந்தன. உடல் கல்லாகச் சமைந்தது போல் விறைத்திருந்தது. அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தப் பார்வையால் எங்களை நோக்கியதன் பின் அவரது பார்வையை மீண்டும் எல்லையற்ற கடலின் மீது திருப்பிக் கொண்டார். பின் ஆழ்ந்து அதைப் பார்த்தவாறிருந்தார். கண் கூச வைக்கும் கடலின் பேரொளியைக் கழுகுகள் பார்வையிடுவதைப் போல விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
எனதருமை மாமா! விசித்திரமான ஓரிடத்தில் பழமையான கருவாலி மரம் ஒன்றின் திரட்சியும் அதிலிருந்து வளைந்துத் தொங்கும் கிளைகளையும் நினைவுப்படுத்திக் கொண்டால் இந்த மனிதனைப் பற்றிய ஒரு பிம்பம் கிடைக்கும். சீரழிந்த ஹெர்க்குலிஸ் போன்ற உடலமைப்பைக் கொண்டிருந்தார். ரோமானியக் கடவுள் போன்ற முகத்தை வயதின் முதிர்ச்சி சிதைத்து விட்டிருந்தது. கடினமான கடல் வாழ்வு, சாமானிய உணவு, பெரும் துயரம் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து மின்னல் தாக்கியது போல் கருத்திருந்தார். முடி நிறைந்த வலுவான கைகளைப் பார்த்த போது அதிலுள்ள தசைநார்கள் முறுக்கேற்றிய இரும்பு போன்றிருந்தன. அவரைக் குறித்த அனைத்துமே உறுதியான கட்டமைப்பிலிருந்தன.
குகையின் ஒரு மூலையில் பாசிப் படர்ந்திருந்தது. பாறையில் இயற்கை செதுக்கியிருந்த விளிம்பு போன்ற ஓரிடத்தில் ரொட்டி இருந்தது. அந்த ரொட்டி களிமண்ணாலான ஒரு ஜாடியை மூடியிருந்தது. பாலைவனத்தில் வாழ்ந்து பணியாற்றிய பழங்காலக் கிறிஸ்துவ துறவிகள் என் நினைவிற்கு வந்தனர். அவர்களில் எவரேனும் இந்த மனிதரை விடவும் மேன்மையான துறவியாக இருக்கக் கூடும் என்றோ அல்லது இவரை விடவும் கடுமையான வருத்தம் தோய்ந்த யாரேனும் இருக்க முடியும் என்றோ என்னால் கற்பனையிலும் எண்ண முடியவில்லை.
அன்பு மாமா! வாழ்நாள் முழுவதும் பிறரதுப் பாவங்களைக் கேட்ட அனுபவம் உங்களுக்கிருக்கிறது. ஆனால் இவரளவு மன உறுத்தலுள்ள ஒருவரை நீங்கள் கண்டிருக்கவே முடியாது. பிரார்த்தனை அலைகளில் ஆழ்ந்து மூழ்கியதொரு மன உறுத்தல். மனமுறிவின் பிறகு ஏற்படும் ஆழ்ந்த அமைதியான முடிவேயற்ற வேண்டுதல்கள். அந்த மீனவர், கடல்வாசி, கடுமையான, கரடுமுரடான ப்ரீட்டன் மனதில் ஆழமாகப் புதைந்திருக்கும் உணர்ச்சிகள் அவரை வியக்கத்தக்கவராக்கியுள்ளன. அந்தக் கண்கள் எப்போதேனும் அழுதிருக்குமா? செதுக்கப்படாத ஒரு சிலைக்காக வார்க்கப்பட்டிருந்ததைப் போன்ற அக்கைகள் எவரையேனும் அடித்து வீழ்த்தியிருக்குமா?
தாறுமாறாகக் காணப்பட்ட அவரது புருவங்களில் மூர்க்கமான கௌரவம் பொதிந்திருந்தது. மெய்யான பலத்தின் அடையாளம் மென்மையான பண்பு. முன்னர் எப்போதோ அவரிடமிருந்த கனிவான அப்பண்பு நீங்கி விட்டதன் அறிகுறியாயிருந்தது பறட்டையான அப்புருவங்கள். முன்நெற்றியின் சுருக்கக் கோடுகள் உள்ளிருக்கும் இதயத்தோடு இசைந்திருந்ததா? ஏன் இந்த மனிதர் கருங்கல் பாறையில் வாழ வேண்டும்? பாறையாய் ஏன் உறைந்திருக்க வேண்டும்? அங்குள்ளதில் எது பாறை? யார் மனிதன்? கட்டற்ற கற்பனை லோகமே எங்களது மனதில் உதயமாயிற்று. எங்களது வழிகாட்டி முன்கூட்டியே தெரிவித்திருந்தது போல நாங்கள் அவ்விடத்தை அமைதியாக விரைந்துக் கடந்தோம்.
வழிகாட்டியை மீண்டும் சந்தித்த போது அவர் எங்களது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உடனே கண்ணுற்றார். ஆனால் அவரது முன்னெச்சரிக்கையைக் குறித்து தற்பெருமை ஏதும் கொள்ளவில்லை. அவர் வெறுமனே சொன்னது –
“நீங்கள் அவரைப் பார்த்து விட்டீர்கள்”
“யார் அந்த மனிதர்?”
“இங்குள்ள மக்கள் அவரை ‘சூளுரைத்த மனிதர்’ என்றுதான் குறிப்பிடுகின்றனர்.”
எங்களது இரு தலைகளும் எத்தனை வேகமாக வழிகாட்டியை நோக்கித் திரும்பின என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். அவர் கபடமற்ற எளிய உள்ளம் கொண்டவர். வார்த்தைகளற்ற எங்களது விசாரணையை உடனே புரிந்துக் கொண்டார். பின் வருவது அவர் எங்களிடம் சொன்னது. பிரபலமாயிருந்த அவரது பேச்சு வழக்கையேப் பயன்படுத்தி என்னால் இயன்றளவுச் சிறப்பாக அவரது வாய் மொழியிலேயே உங்களுக்கு வழங்குகிறேன்.
“அம்மணி! க்ராய்ஸிக்கில் உள்ளவர்களும் பாட்ஸில் உள்ளவர்களும் ஏதோவொரு குற்றம் செய்து விட்டவராகவே அவரைக் கருதுகின்றனர். நான்டெஸ{க்கு அப்பாலுள்ள ஏதோ ஓரிடத்தில் அவர் தனது பாவத்தை பிரபல மதகுருவிடம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார் என்றும், அவர் கட்டளைப்படியே பிராயச்சித்தம் செய்கிறார் என்றும் நினைக்கின்றனர்.
“அந்தக் கேம்ப்ரீமர், அதுவே அவரது பெயர், அவரிருக்கும் திசையிலிருந்து வரும் காற்று தம்மீது பட்டாலும் கூட ஏதேனும் கெட்டத் தலைவிதியில் சிக்க நேரிடும் என்றும் ஒரு சிலர் எண்ணுகின்றனர். அவர்கள் இந்தப் பாறையைக் கடக்கும் போது காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்பதைக் கவனிப்பார்கள். அது வடமேற்காக வீசும் போது அப்பாறையைக் கடக்க மாட்டார்கள். புனிதக் காரியத்துக்காகப் புறப்பட்டிருந்தாலும் பயந்துத் திரும்பி விடுவார்கள்.
“மற்றவர்கள் அதாவது க்ராய்ஸிக்கிலுள்ள செல்வந்தர்கள், கேம்ப்ரீமர் சபதம் செய்துள்ளார். எனவேதான் மக்கள் அவரை ‘சூளுரைத்த மனிதர்’ எனக் குறிப்பிடுகின்றனர் என்பார்கள். அவர் இரவும் பகலும் அங்கேயே இருக்கிறார். அந்த இடத்தை விட்டு அவர் நகர்வதேயில்லை. ஆக, அனைவர் சொல்வதிலும் சிறிது உண்மை கலந்துள்ளது.
“அங்கே பாருங்கள்” என்று பின்திரும்பி நாங்கள் கவனிக்கத் தவறியதை சுட்டிக்காட்டியவாறே தொடர்ந்தார். “இடது புறத்தில் மரத்தாலான சிலுவை ஒன்றை அவர் நட்டு வைத்திருக்கிறார். யேசு, கன்னி மேரி, புனிதர்கள் ஆகியோரது பாதுகாப்பில் வாழ்ந்து வருவதை அறிவிக்கிறார். மக்களின் அச்சமே படைவீரர்களின் பட்டாளம் சூழ்ந்துக் காவலிருப்பதைப் போன்றப் பாதுகாப்பை அவருக்கு வழங்குகிறது. திறந்த வெளியில் தம்மைச் சிறைப்படுத்திக் கொண்டதன் பின்னர் ஒரு வார்த்தை கூட அவர் யாரிடமும் பேசியதில்லை. ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறார்.
“ஒவ்வொரு நாள் காலையிலும் அவரது சகோதரரின் மகள் ரொட்டியைக் கொண்டுத் தருகிறாள். பன்னிரண்டு வயதேயான அந்த மணமாகாத சிறுமிக்கு தனது சொத்தை அவர் எழுதி வைத்திருக்கிறார். அவள் அழகிய சிறுமி, ஆட்டுக்குட்டியைப் போல மென்மையான சுபாவம். அருமையானவள், இனியவள். அவள் நீல நிற நீளமான கண்களை உடையவள். இவ்வளவு நீளம்,” என்றவர் தன் கட்டை விரலால் கோடு போல இழுத்துக் காண்பித்தார். “குட்டித் தேவதை போன்ற தலைமுடி. ‘சொல்லு பெரோட்’ என்று அவளிடம் கேட்டால் (பீட்டர் என்பதை இப்பகுதியில் நாங்கள் செல்லமாக அப்படித்தான் சொல்வது வழக்கம் என்றும் குறிப்பிட்டு, அவள் புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்டவள். கேம்ப்ரீமரின் மற்றொரு பெயரும் பீட்டர்தான். அவரே அவளது ஞானத் தந்தை) ‘சொல்லு பெரோட், உன் மாமா உன்னிடம் என்ன பேசினார்?’ என்றால், ‘அவர் என்னிடம் ஏதும் பேச மாட்டார்’ என்பாள். ‘சரி, வேறு என்ன செய்வார்?’ என்றால், ‘ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் என் நெற்றியில் முத்தமிடுவார்’ என்பாள்;. ‘உனக்கு அவரிடம் பயம் கிடையாதா?’ என்றால், ‘இல்லவே இல்லை. அவர் தானே என் ஞானத் தந்தை. என்னைத் தவிர வேறு யாரும் உணவு கொண்டு தர அவர் விடுவதேயில்லை’ என்பாள். அவளைப் பார்த்ததும் அவர் புன்னகைப்பதாகவும் அவள் சொல்வாள். பனிமூட்டத்தில் சூரியனைக் காண்பது போலத்தான் அது. கருமேகங்கள் சூழ்ந்த நாட்கள் போல அவர் சோகமயமானவர்.”
“ஆனால் நீங்கள் எங்கள் ஆவலைத் தீர்த்து வைக்காமல் மேலும் அதிகமாகத் தூண்டவே செய்கிறீர்கள். அவரை அங்குக் கொண்டு சென்றது எது? துயரமா அல்லது செய்த தவறுக்கு வருத்தமா? பித்தமா அல்லது குற்றமா? அல்லது” – என்ற போது மீனவர் இடை மறித்தார்.
“இருங்கள் ஐயா! என் தந்தையும், என்னையும் தவிர வேறு யாருக்குமே அதன் உண்மை தெரியாது. செத்துப் போன என் தாயார் ஒரு வக்கீலின் குடும்பத்தில் வீட்டு வேலை செய்து வந்தாள். கேம்ப்ரீமர் அந்த வக்கீலிடம்தான் மதகுருவின் கட்டளையைத் தெரிவித்தார். கட்டளை நிறைவேற்றாமல் பாவ மன்னிப்பு தர முடியாது என்றும் கூறியிருந்தாராம். இதைத்தான் துறைமுகப் பகுதி மக்கள் சொல்லி வருகிறார்கள். கேம்ப்ரீமரின் வக்கீலி;டம் பேசியது என் தாயார் காதிலும் விழுந்தது. வக்கீலின் அறை அந்த வீட்டில் சமையல் அறைக்கு அருகே இருந்ததுதான் காரணமே தவிர தாயார் ஒட்டுக் கேட்கவில்லை. அவளும் இறந்து விட்டாள். வக்கீலும் இறந்து விட்டார். நானும் என் தந்தையும் சுற்றுப்புறத்தாரிடம் அந்த ரகசியத்தை சொல்லக் கூடாது என்று தாயார் எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். அந்த இரவில் அவர் சொன்னது எனக்கு மயிர்கூச்செறிந்தது என்பதை மட்டும் நான் உங்களிடம் சொல்வேன்.”
“நல்லது அன்பரே! இப்போது எங்களிடம் அந்த உண்மையைச் சொல்லுங்கள். நாங்கள் அது பற்றி யாரிடமும் பேசப் போவதில்லை.”
அந்த மீனவர் எங்களை நோட்டமிட்ட பின் தொடர்ந்தார்.
“பீட்டர் கேம்ப்ரீமர், நீங்கள் பார்த்த அந்த மனிதர்தான் கேம்ப்ரீமர் குடும்பத்திலேயே மூத்தவர். தந்தையிலிருந்து மகன் என அவர்கள் வழி வழியாக வந்த மீனவப் பரம்பரையினர். கேம்ப்ரீமர் என்னும் பெயரே அதைத்தான் குறிக்கும். கடலே அவர்களுக்கு அசைந்து கொடுக்கும். பீட்டர் ஆழ்கடல் மீனவர். அவரிடம் படகுகள் இருந்தன. அவர் இரால்களையும், பெரிய மீன்களையும் பிடித்து வியாபாரிகளுக்கு விற்றார். அவர் மனைவியிடம் மிகப் பிரியமாக இருந்தார். இல்லையெனில் மேலும் பெரிய படகாக வாங்கி சுறா மீன்களைப் பிடிப்பதற்காக வெகு தூரம் கடலில் சென்றிருப்பார்.
“மனைவியும் மிக நல்லப் பெண்மணி. கேரென்ட்டைச் சார்ந்தவர். ப்ரூயின் எனப் பெயர் கொண்டவர். கருணை நிறைந்த இதயம் உள்ளவர். அவரும் கேம்ப்ரீமரை மிகவும் நேசித்தார். கணவரை விட்டு அதிக நாள் பிரிந்திருக்க இயலாதவர். கணவர் அதிக தூரம் கடலில் செல்வதைக் கூட பொறுக்க முடியாத அளவிற்கு பாசம் கொண்டிருந்தவர். அதோ பாருங்கள். அங்கேதான் அவர்கள் வசித்திருந்தார்கள்” என்றார் மீனவர். சிறு குன்றின் மீதேறி கடல் மத்தியில் தீவு போன்றிருந்த நிலப்பகுதியைச் சுட்டிக் காட்டினார். அது நாங்கள் நடந்து வந்திருந்த மணல் குன்றுகளுக்கும் கேரென்ட் சதுப்பு நிலத்திற்கும் இடையில் அமைந்திருந்தது. “இங்கிருந்து நீங்கள் அவரது வீட்டைப் பார்க்கலாம். அது அவருக்கே சொந்தமாயிருந்தது.
“ஜாக்வெட் ப்ரூயினுக்கும், பீட்டர் கேம்ப்ரீனுக்கும் ஒரேயொரு மகன் மட்டுமே இருந்தான். அவனிடம் அவர்கள் மிக அன்பாயிருந்தனர். அதை நான் எவ்வாறு உங்களுக்கு விளக்குவது? அந்த ஒரே மகனிடம் அவர்கள் பைத்தியமாயிருந்தனர். அவன் திருப்தியடையும் வரையில் வகை வகையான சாதனங்களைப் பொருட்காட்சி சந்தைகளில் எத்தனையோ முறை வாங்கித் தந்திருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். எல்லை மீறி செல்லம் கொடுப்பதாக மக்கள் எடுத்துச் சொன்னார்கள். தனது எந்த வித ஆசைகளுக்கும் தடையே இல்லாத நிலையில் இளைய கேம்ப்ரீமர் மூர்க்கமான முரடனானான். பீட்டர் கேம்ப்ரீமரிடம் மக்கள், ‘உங்களது மகன் அந்த சிறியவனைக் கொன்றே இருப்பான்’ என்று முறையிட்ட போதும் கூட அவர் சிரித்தவாறே, ‘ஓ! அவன் தைரியமிக்க மாலுமியாவான். அரசனின் கப்பல் படைத் தலைவனாவான்’ என்பார்.
“மற்றொரு சமயம், ‘பீட்டர் கேம்ப்ரீமர், உங்கள் மகன் சிறுமியான பௌகார்ட்டின் கண்ணைக் குருடாக்கி இருப்பான் என்று முறையிட்ட போது – ‘ஹா! அவன் எல்லாப் பெண்களையும் விரும்பிச் சீண்டுகிறவன்’ என்றார் பீட்டர் அலட்சியமாக. எந்தவொரு புகாரும் அவருக்கு கவலை அளிக்கவில்லை. பத்து வயதிலேயே அந்தக் கயவனுக்கு கோழிகளின் கழுத்தை வெட்டுவதும், பன்றியின் தோலைக் கிழிப்பதுமே வேடிக்கை விளையாட்டாக இருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் அவன் ரத்தத்தில் புரண்டு மகிழ்ந்தான். ‘அவன் பெரும் படை வீரனாகி புகழ் மிக்கவனாவான்’ என்ற கேம்ப்ரீமர் மேலும் சொன்னது, ‘இப்போதே பாருங்கள், அவன் ரத்தத்தின் சுவையைத் அறிந்து கொண்டான்.’
“இப்போது பாருங்கள், நான் எல்லா விஷயங்களையும் திரும்ப ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன், கேம்ப்ரீமரையும் கூட” என்றார் அந்த மீனவர். சிறிது தாமதத்திற்குப் பின் அவர் மேலும் கூறியது, “ஜாக்வெஸ் கேம்ப்ரீமருக்கு பதினைந்து, பதினாறே வயதேயான போது அவன் எப்படியிருந்தான்? நான் என்ன சொல்வது? – ஒரு பெரும் சுறாவாகியிருந்தான். கேரென்ட்டில் அவன் களித்து மகிழ்ந்தான். பின் சாவனே பெண்களின் பின்னே அலைந்தான். அதற்கு அவனுக்குப் பணம் தேவைப்பட்டது. தாயிடமிருந்து திருடினான். தாய் அது பற்றி தந்தையிடம் ஒரு வார்த்தை சொல்லவும் பயந்தாள். கேம்ப்ரீமரோ மிக நேர்மையானவர். அவர் சொன்ன விலைக்கு மேலதிகமாக யாராவது இரண்டே சூஸ்கள் கொடுத்திருந்தால் கூட அதை அவரிடமே திருப்பித் தர ஐம்பது மைல்கள் கூட நடந்தே செல்வார்.
“இறுதியாக ஒரு நாள் அம்மா சேர்த்து வைத்திருந்த மொத்தப் பணமும் திருடு போனது. அப்பா மீன் பிடிக்கப் போயிருந்த போது ஜாக்வெஸ் வீட்டிலிருந்த எல்லாவற்றையும் அள்ளிச் சென்றான். மரச் சாமான்கள், பண்டப் பாத்திரங்கள், போர்வைகள் போன்ற அனைத்தையும் எடுத்துச் சென்று நான்டெஸில் விற்று அங்கேயே கும்மாளமிட்டான். பாவம் அந்தத் தாய். இரவும் பகலுமாக அழுதாள். அந்தத் தடவை தந்தையிடமிருந்து மறைக்க முடியவில்லை. அவள் அவரிடம் பயந்தாள். தனக்காக அல்ல என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். பீட்டர் கேம்ப்ரீமர் வீட்டிற்கு திரும்பிய போது அண்டை அயலார் மனைவியிடம் கொடுத்து வைத்திருந்த மரச் சாமான்கள் எதுவுமே இல்லாத நிலையைப் பார்த்துக் கேட்டது –
“இங்கென்ன நடந்தது?”
பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்மணியின் பதில்:
“திருடு போய் விட்டது”
“ஜாக்வெஸ் எங்கே?”
“அவன் எங்காவது சென்று களிப்பில் மூழ்கியிருப்பான்”
அந்தப் போக்கிரி எங்கு சென்றான் என யாருக்கும் தெரியவில்லை.
“அவன் அதிகமாக ஆட்டம் போடுகிறான்” என்றார் பீட்டர்.
“ஆறு மாதங்கள் கழித்து அவன் நான்டெஸில் கைதாகப் போகிறான் என்று அவர் காதுக்கு எட்டியது. அவர் நடந்தே அங்குச் சென்றார். கடல் மார்க்கமாக செல்வதை விட அதுவே விரைந்து சென்று சேர்வதற்கான வழி. அவன் தோளில் கை வைத்து வீடு திரும்புமாறு பலவந்தப்படுத்தினார். இங்கு திரும்பிய பின், ‘நீ என்ன காரியம் செய்தாய்?’ என்றும் அவனிடம் கேட்கவில்லை. ஆனால் அவர் சொன்னது –
“நீ வீட்டிலும், என்னிடமும், அம்மாவிடமும் ஒழுங்காக நடந்து கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் உனக்கும் எனக்குமிடையே சச்சரவு ஏற்படக் கூடும்.”
“அதற்கு அந்தப் பித்துப் பிடித்தவன் பெற்றோரை முட்டாள்களாக எண்ணி முகத்தை கோணிச் சிணுங்கினான். அதே முகத்தில் பீட்டர் கொடுத்த அடி ஆறு வாரங்கள் ஜாக்வெஸை படுக்கையில் கிடத்தியது. இரக்கத்திற்குரிய தாய் துக்கத்தில் ஆழ்ந்து நலிவடைந்தார். ஒரு நாள் இரவு கணவரோடு படுத்திருந்த போது ஏதோ சத்தம் கேட்டு உடனே எழுந்துப் பார்த்தாள். அவளது கையில் கத்திக்குத்து விழுந்தது. அவளது அலறலைக் கேட்ட கேம்ப்ரீமர் விளக்கைக் கொளுத்தினார். அவளது காயத்தைப் பார்த்து திருடர்களின் கைவரிசை என எண்ணினார். ஏதோ இப்பகுதியில் திருடர்கள் இருப்பதைப் போல! பத்தாயிரம் ஃப்ராங்க்குகள் மதிப்புள்ள தங்கத்தை க்ராய்ஸிக்கிலிருந்து செயின்ட் நாஸேர் வரை எடுத்துச் சென்றாலும், ஒரு போதும் கையிலிருப்பது என்னவென்று கேட்பதற்கு கூட இங்கு ஆளில்லை.
“பீட்டர் மகனைத் தேடினார். அவனைக் காணவில்லை. இரவு முழுக்க பாட்ஸில் தங்கியிருந்ததாகச் சொல்லி மறுநாள் காலையில் அந்த அரக்கன் வீடு திரும்பி இருக்கலாம். ஆனால் அவனால் வீட்டில் தலை காட்ட முடியவில்லை. அவன் அம்மாவிற்கோ பணத்தை எங்கு ஒளித்து வைப்பது என்றே தெரியவில்லை. கேம்ப்ரீமர் க்ராய்ஸிக்கில் உள்ள டுபோட்டல் ஐயாவிடம் பணத்தைக் கொடுத்து வைத்திருந்தார். அதற்குள்ளாக மகனது நடவடிக்கைகளினால் அவர்கள் அரைவாசி சீரழிந்திருந்தனர். சொந்தத்தில் தீவும், பன்னிரண்டாயிரம் ஃப்ராங்க்குகள் ரொக்கமும் வைத்திருந்தவர்களுக்கு அந்நிலை துன்புறுத்தியது. நான்டெஸிலிருந்து மகனை மீட்டெடுக்க கேம்ப்ரீமர் எவ்வளவு செலவழித்தார் என்று யாருக்குமே தெரியாது.
“அவர்கள் குடும்பத்தைத் தொடர்ந்து துரதிர்ஷ்டம் தாக்கியது. கேம்ப்ரீமர் சகோதரருக்கும் கஷ்டங்கள் ஏற்பட்டன. அவருக்கும் உதவி தேவைப்பட்டது. ஜாக்வெஸ{ம், பெரோட்டும் (சகோதரரின் மகள்) மணம் செய்து கொள்ளலாம் என்று பீட்டர் சகோதரருக்கு ஆறுதல் சொன்னார். ஜோசப் கேம்ப்ரீமரின் சாப்பாட்டு செலவுக்கு உதவ பீட்டர் அவரையும் தன்னுடன் மீன் பிடிக்க அழைத்துச் சென்றார். பாவப்பட்ட அந்த மனிதர் வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். அவரது மனைவியும் காய்ச்சலில் இறந்து போனார். பெரோட்டை வளர்க்க தாதியின் செலவு வேறு. அந்தச் சிறுமியின் ஆடை தவிர இதர செலவுகளுக்கு பீட்டரின் மனைவி பலரிடம் வாங்கியிருந்த கடன் பாக்கியும் நூறு ஃப்ராங்க்குகள் இருந்தன. எனவே எப்போது வேண்டுமானாலும் கடனை அடைத்து விடலாம் என எண்ணி ஒரு ஸ்பானிய தங்க நாணயத்தை மெத்தையில் மறைத்து வைத்து தைத்திருந்தார். அந்த நாணயத்தை ஒரு காகிதத்தில் சுற்றி அதில் ‘பெரோட்டுக்காக’ என்றும் எழுதி வைத்திருந்தார்.
“ஜாக்வெட் ப்ரூயின் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. குமாஸ்தாவைப் போல எழுதக் கூடியவர். மகனுக்கும் எழுதப் படிக்கச் சொல்லித் தந்திருந்தார். அந்த நாணயத்தை அந்த வில்லன் எவ்வாறு மோப்பம் பிடித்தான் என்று எனக்குத் தெரியாது. அதைத் திருடி எடுத்து க்ராய்ஸிக்குச் சென்று கூத்தடிக்கப் போனான்.
“பீட்டர் கேம்ப்ரீமர் விதி வகுத்தது போல, அதே நாளில் படகில் திரும்பக் கரை சேர்ந்தார். கரை இறங்கியதும் நீரில் ஒரு காகிதம் மிதப்பதைக் கண்டு அதைக் கையில் எடுத்துப் பார்த்தார். பின் அதை மனைவியிடம் காட்டினார். தனது கையெழுத்தைக் கண்டதும் செத்துப் போனதைப் போல அவர் கீழே சாய்ந்தார். கேம்ப்ரீமர் எதுவுமே கேட்கவுமில்லை, பேசவுமில்லை.
“ஆனால் அவர் க்ராய்ஸிக்குச் சென்றார். மகன் பில்லியர்ட்ஸ் விளையாட்டு அறையில் இருப்பதைக் கண்டறிந்தார். அங்கு உரிமையாளராயிருந்த பெண்மணியிடம் சென்று அவரிடம் சொன்னார் –
“நான் ஜாக்வெஸிடம் குறிப்பிட்ட ஒரு தங்க நாணயத்தை மட்டும் செலவழிக்கவே கூடாது என்று சொல்லியிருந்தேன். அதை அவன் உன்னிடம் தந்திருந்தால் எனக்குத் திரும்பத் தந்து விடு. அதற்கு ஈடான பணத்தை நான் தருகிறேன்.’
“அந்த நல்லப் பெண்மணி அவர் சொன்னதைச் செய்தார். கேம்ப்ரீமர் ‘நல்லது’ என்று ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டு வீடு திரும்பினார். இது வரையிலான விஷயங்கள் ஊர் முழுக்கத் தெரியும். இனிதான் ரகசியமே வெளி வரப் போகிறது. ஆனாலும் பலருக்கு அது பற்றிய சந்தேகம் உள்ளது.
“நான் சொன்னது போல கேம்ப்ரீமர் வீடு திரும்பினார். தனது மனைவியிடம் பூசை அறையைச் சுத்தம் செய்யும்படி சொன்னார். அது வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ளது. அவர் கணப்பில் தீ மூட்டி அறையில் இரு மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தார். கணப்பின் அருகே ஒரு பக்கத்தில் இரண்டு நாற்காலிகளையும், மறு பக்கத்தில் ஒரு முக்காலியையும் வைத்தார். பின் தன் மனைவியிடம் மணநாளன்று அணிந்திருந்த ஆடைகளை எடுத்து அணிந்து கொள்ளுமாறு கட்டளையிட்டார். அவரும் அந்நாளில் அணிந்திருந்த ஆடையை உடுத்திக் கொண்டார்.
“பின் சகோதரரை அழைத்து வீட்டின் கதவருகே நின்று கவனிக்குமாறு சொன்னார். க்ராய்ஸிக் அல்லது கேரென்ட் ஆகிய இரண்டு கடற்கரைப் பகுதிகளிலும் ஏதேனும் ஓசை கேட்டால் அவரை எச்சரிக்கும்படியும் கூறினார். பின் ஒரு துப்பாக்கியை எடுத்துத் தோட்டாக்களை நிரப்பி கணப்பின் ஓரத்தில் வைத்தார்.
“ஜாக்வெஸ் தாமதமாகவே வீடு திரும்பினான். பத்து மணி வரை குடித்து சூதாடி கார்னுஃப் முனை வழியாக வந்திருந்தான். அவனது வருகையை உணர்ந்த சகோதரர் நேரே அவனிடம் சென்று வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால் அவனிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. ஜாக்வெஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் தந்தை அவனிடம் –
“அங்கே உட்கார்,’ என்றார் முக்காலியை சுட்டிக் காட்டி. ‘நீ உன் தாய் தந்தையின் முன் அமர்ந்திருக்கிறாய். எங்களுக்கு நீ தீமை செய்து விட்டாய். அதற்குரிய நீதியை நாங்கள் தரப் போகிறோம்.”
“அதைக் கேட்டதும் ஜாக்வெஸ் ஓலமிட்டான். ஏனெனில் தந்தையின் முகம் முற்றிலும் மாறியிருப்பதைக் கண்டான். தாய் துடுப்பு போல விறைத்திருந்தார்.
“நீ கத்தினால், ஆடாமல் அசையாமல் முக்காலியில் உட்காரவில்லை என்றால், நாயைச் சுடுவது போல உன்னைச் சுடுவேன்” என்றார் துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டிய பீட்டர்.
ஜாக்வெஸ் மீனைப் போல அமைதியானான். அம்மா ஏதும் பேசவில்லை.
“இதோ பார், ஸ்பானிய தங்கம் மடித்து வைத்திருந்த காகிதம். அந்தத் தங்கம் உன் அம்மாவின் மெத்தையில் இருந்தது. அது இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும். நான் கரையேறிய போது இந்தக் காகிதத்தைப் பார்த்தேன். இன்று நீ ஸ்பானிய தங்கத்தை மேரி ஃப்ளுரென்ட்டிடம் தந்துள்ளாய். அம்மாவின் மெத்தையில் இருந்த தங்கம் இப்போதில்லை. இதை விளக்கு.”
“ஜாக்வெஸ் அம்மாவின் பணத்தைத் தான் எடுக்கவில்லை என்றான். நான்டெஸிலிருந்து எடுத்து வந்த தங்கத்தை தான் தந்ததாகக் கூறினான்.
“சந்தோஷம். அதை நிரூபி” என்றார் பீட்டர்.
“அது முன்பே என்னிடமிருந்தது.”
“அம்மாவின் தங்கத்தை நீ எடுக்கவில்லையா?”
“இல்லை”
“உனது உயிரின் மீது ஆணையாக உறுதி அளிப்பாயா?”
அவன் அதைச் செய்ய துணிந்த போது அம்மா தனது கண்களை உயர்த்தி அவனிடம் –
“ஜாக்வெஸ், என் மகனே, சற்று யோசி. உண்மைக்கு மாறாகச் சத்தியம் செய்யாதே. தவறுக்கு நீ வருந்தலாம், திருந்தலாம். அதற்கு இன்னும் நிறைய அவகாசமுள்ளது” என்று சொல்லி அவள் அழுதாள்.
“நீ இப்படி, அப்படி,’ என்று அம்மாவை திட்டியவன், ‘எப்போதும் என்னை ஒழித்துக் கட்டவே விரும்பினாய்.”
கேம்ப்ரீமரின் முகம் வெளிறியது. அவர் சொன்னார் –
“இவ்வாறான வாய்த் துடுக்கு உன் குற்றத்தை மேலும் அதிகமாக்குகிறது. விஷயத்துக்கு வா. நீ உறுதி அளிப்பாயா?”
“ஆம்.”
“சரி,” என்ற பீட்டர், “என்னிடம் மீன் வாங்கும் வியாபாரி தரும் நாணயத்தில் சிலுவைக் குறியைத் கீறித் தருவார். அக்குறி நான்டெஸிலிருந்து நீ கொண்டு வந்தத் தங்கத்தில் இருந்ததா?”
“ஜாக்வெஸ் நொறுங்கிப் போய் அழுதான்.”
“போதும். இதற்கு முன் நீ செய்த குற்றங்களைப் பற்றி நான் ஏதும் பேசவில்லை. ஒரு கேம்ப்ரீமர் தூக்கில் தொங்கிச் சாவதை நான் விரும்பவுமில்லை. உனது பிரார்த்தனைகளைச் சீக்கிரம் சொல்லி முடி. உன் இறுதி வாக்குமூலத்தைக் கேட்கவும், பாவ மன்னிப்பு வழங்கவும் இப்போது பாதிரியார் வருவார்” என்றார் பீட்டர்.
“தாய் அந்த அறையை விட்டு வெளியேறினார். மகன் தண்டிக்கப்படுவதை அவர் பார்க்க விரும்பவில்லை. அவர் வெளியேறியதும் சகோதரர் சென்று பிரியாக்கின் தலைமை மதகுருவை அழைத்து வந்தார். அவரிடம் ஜாக்வெஸ் ஏதும் பேசவில்லை. அவன் புத்திசாலி. பாவ மன்னிப்பு கேட்கும் வரையில் தந்தை அவனைக் கொல்ல மாட்டார் என்பதை அறிந்திருந்தான்.”
“ஜாக்வெஸின் பிடிவாதத்தைக் கண்ட கேம்ப்ரீமர் மதகுருவிடம், ‘உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. சிரமத்தைப் பொறுத்தருளுங்கள்’ என்றார். ‘அவனுக்கு ஒருப் பாடம் கற்பிக்க எண்ணினேன். இது பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம்.’ பின், ‘உன்னைப் பொறுத்த வரை,’ என்றார் ஜாக்வெஸிடம், ‘நீ உன்னைத் திருத்திக் கொள்ள விட்டால், அடுத்த குற்றமே உனது கடைசிக் குற்றமாக இருக்கும். மதகுருவின் அவசியமே இல்லாமல் உனது ஈமச் சடங்கை நானே செய்து விடுவேன்.’
“பின் அவனை உறங்கச் செய்தார். தந்தையை எந்த விதத்திலாவது சமாளித்து விடலாம் என்றே அந்த இளைஞன் எண்ணி உறங்கிப் போனான். தந்தை அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் ஆழ்ந்துத் தூங்கிய போது கயிறால் வாயை இறுகக் கட்டினார். கண்ணையும் ஏதும் பார்க்க இயலாதபடி கட்டி விட்டு, கால் கைகளையும் கட்டினார் – ‘அவன் வெறி கொண்டு சீறினான். ரத்தக் கண்ணீர் வடித்தான்’ என்று கேம்ப்ரீமர் வக்கீலிடம் சொன்னதை என் தாய் கேட்டிருந்தாள். மகனைப் பெற்ற தாய் விழுந்து தந்தையின் கால்களைப் பிடித்துக் கொண்டாள்.”
“அவனது குற்றங்களை அறிந்து தீர்ப்பும் முடிவானது,” என்று பதிலளித்த பீட்டர், “அவனைப் படகிற்குத் தூக்கிச் செல்ல எனக்கு உதவு” என்றார்.
“தாய் மறுத்தாள். கேம்ப்ரீமர் தனியாகவே அவனைத் தூக்கிச் சென்றார். அவனைப் படகில் கிடத்திக் கழுத்தில் கல்லைக் கட்டினார். துடுப்புகளைக் கொண்டு படகைச் செலுத்தி சிறு வளைகுடாவிலிருந்து பெருங்கடலுக்குள் சென்றார். இப்போது அவர் அமர்ந்திருக்கும் பாறை வரையில் அந்தப் படகை ஓட்டிச் சென்றார். இரங்கத்தக்க அந்தத் தாயார் மைத்துனரோடு அங்கே ஓடோடிச் சென்றார். ‘கருணைக் காட்டுங்கள், காட்டுங்கள்’ என அவர் அலறினார். அவ்வார்த்தைகள் ஓநாயைக் கல்லால் அடிப்பது போல அவரது செவியில் நுழையவேயில்லை.
“வானில் நிலாவின் ஒளி இருந்தது. அப்போது காற்றும் வீசவில்லை. தந்தை தனது மகனைத் தூக்கிக் கடலில் வீசுவதை அவள் கண்கூடாகக் கண்டாள். அவளின் மகன், அவளது கர்ப்பப் பையில் கருவுற்றுப் பிறந்தவன். அவள் காதில் கேட்டது ‘ப்ளக்’ என்றொரு ஒலி மட்டுமே. அதன் பிறகு ஒன்றுமேயில்;லை. எந்த சப்தமும், நீர்க் குமிழிகளோ கூட இல்லை. ஆ! கடல் தனக்குக் கிடைத்ததை எவ்வளவு அருமையாகக் கைப்பற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.
“தனது மனைவியின் ஓலத்தை நிறுத்த வேண்டி அவர் மீண்டும் படகைச் செலுத்திக் கரைக்கு வந்தார். அப்போதே அவள் அரைவாசி இறந்திருந்தாள். இரு சகோதரர்களுமே சேர்ந்து கூட அவளை வீடு வரை தூக்கிச் செல்ல முடியாது. எனவே மகனைக் கொல்வதற்கு உதவிய அதே படகில் அவளைக் கிடத்தி க்ராய்ஸிக் வாய்க்காலிலுள்ள கோபுரத்தைச் சுற்றிக் கடந்து திரும்ப வீடு சேர்த்தனர்.
“நல்லது! நல்லது! அழகரசி ப்ரூயின், அப்படித்தான் அவர்கள் செல்லப் பெயரிட்டிருந்தார்கள், அதன் பிறகு ஒரு வாரம் கூட உயிர் பிழைக்கவில்லை. சாபத்திற்குரிய அந்தப் படகைத் தீயிலிட்டுக் கொளுத்துமாறு அவளது கணவரிடம் மன்றாடினாள். ஓ! அவரும் அக்காரியத்தைச் செய்து முடித்தார். பின் அவருக்கு என்னவாயிற்று என்று எனக்கே புரியவில்லை. தான் குடித்த மதுவைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு குடிகாரன் போலத் தள்ளாடித் தடுமாறினார். பின் பத்து நாட்கள் யார் கண்ணிலும் படாமல் அவர் காணாமல் போனார். அதன் பிறகுத் திரும்பிய அவர், நீங்கள் கண்டீர்களே அதே இடத்தில் வாழ்ந்திருந்தார். அங்கு சென்ற பின் இதுவரை அவர் யாரிடமும் எந்தவொரு வார்த்தையும் பேசியதில்லை.”
அந்த மீனவர் இந்தச் சரித்திரத்தைத் துரிதமாகவும், எளிமையாகவும் உரைத்திருந்தார். என்னால் அவ்வாறு எழுத முடியவில்லை. சாமானிய மக்கள் ஒரு விஷயத்தைக் கூறும் போது குறைந்தளவே விளக்குகிறார்கள். கவனத்தை ஈர்த்த ஓர் உண்மை நிகழ்ச்சியை அவர்களின் மனம் உணர்த்திய வகையில் சொல்கின்றனர். கூர்மையான கோடாரியால் ஆழமாக வெட்டுவது போல் சொல்லப்பட்டது அந்தக் கதை.
ஏரியின் மேற்புறமாக அமைந்திருந்த கரையை அடைந்த போது, “நான் பாட்ஸிற்குப் போகப் போவதில்லை” என்றாள் பாலின். கடல் நீர் தேங்கக் கூடிய சதுப்பு நிலத்தின் ஊடாக நாங்கள் க்ராய்ஸிற்குத் திரும்பினோம். சுற்றிச் சுற்றிச் செல்லும் அந்தப் பாதையில் மீனவர் எங்களை வழிநடத்திச் சென்றார். அச்சமயம் எங்களைப் போன்றே அவரும் அமைதியாகி இருந்தார்.
முன்னர் நாங்கள் கொண்டிருந்த மனநிலை முற்றிலும் மாறிப் போனது. நாங்கள் இருவருமே சோக எண்ணங்களில் மூழ்கியிருந்தோம். நாடகம் போல் மீனவர் விளக்கிய விஷயம் எங்களை வருத்தியது. கேம்ப்ரீமரைப் பார்த்த போது திடீரென எங்களை ஆட்கொண்ட ஏதோ ஒரு தீங்கின் அறிகுறிக்கான காரணமும் விளங்கியது. எங்கள் இருவருக்குமே வாழ்க்கை குறித்த போதுமான அனுபவம் இருந்ததால் அந்த மூவரது வாழ்வைப் பற்றி வழிகாட்டி எங்களிடம் சொல்லாமல் விட்டதையும் கிரகித்துக் கொள்ள முடிந்தது. அந்த மூன்று ஜீவன்களின் மன வேதனை, நாடகத்தில் காண்பது போன்று எங்கள் கண்முன்னே காட்சியாக விரிந்தது. உச்சக்கட்டமாக அதன் முடிவில் தனது குற்றத்திற்காகத் தந்தை செய்து வரும் பிராயச்சித்தம். முழுக் கிராமப்புறத்தையும் திகிலடையச் செய்த கொலைக் குற்றம் புரிந்தவர் அமர்ந்திருக்கும் பாறையின் பக்கம் திரும்பிப் பார்க்கவும் நாங்கள் துணியவில்லை.
வானில் சூழ்ந்த சில மேகங்கள் அதன் ஒளியை மங்கச் செய்தன. தொடுவானிலிருந்து பனி மூட்டம் எழும்பி வந்தது. எங்களது கண்கள் அது நாள் வரையில் கண்டிராத கசப்பானதொரு துயரம் நிறைந்த சுற்றுச்சூழலில் நடந்து சென்றோம். இயற்கை வருத்தம் தோய்ந்து நலிவுற்றிருந்தது. நிலம் என்று வழங்கப்படுகிற ஒன்று சொறி சிரங்கினால் புண்பட்டது போல உப்பளங்களால் மூடப்பட்டிருந்தது. இங்கு மணல், சீரான அளவும் வடிவுமற்ற சதுரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த சதுரங்களைச் சுற்றிலும் கவசமிடுவது போல சாம்பல் நிற மண்ணால் உயரமாக மேடெழுப்பிக் கரை கட்டியிருந்தனர். அதில் நீர் நிரம்பியிருந்தது. அதன் மேற்பரப்பில்தான் நுரை போல உப்பு மேலெழும்பி வரும். அந்த வாய்க்கால்கள் மனிதனின் கைகளால் உருவாக்கப்பட்டவை. அவற்றைப் பிரித்து வகுத்துள்ள பாதையில் தொழிலாளர்கள் நடக்கின்றனர். நீளமான வாருகோலினால் நுரைத்து வரும் உப்பைக் கூட்டிக் கரையில் சேர்க்கின்றனர். உப்புத் தயாரானதும் சீரான இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் அதைக் குவிக்கின்றனர்.
சதுரங்க ஆட்டப் பலகைப் போன்று அமைந்திருந்த சோர்வூட்டும் உப்பளங்களின் ஓரமாக இரண்டு மணி நேரம் நடந்தோம். அந்நிலத்தில் எந்த வகையான தாவரங்களும் வளர இயலாதபடி உப்பு தடுத்திருந்தது. சுற்று வட்டாரத்தில் ‘பலுடியர்கள்’ என வழங்கப்படும் வெகு சிலரே அப்பகுதிக்கு வருகின்றனர். அவர்கள் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள். அந்தத் தொழிலாளர்கள் ப்ரீட்டனிலுள்ள ஒருக் குலத்தினர். அவர்கள் பிரத்யேகமான ஆடையை அணிகின்றனர். மதுபானம் தயாரிப்பவர்கள் அணிவதைப் போல வெள்ளை நிறச் சட்டை அணிந்துள்ளனர். அவர்கள் தங்களது குலத்திற்குள்ளேயே மணமுடிக்கின்றனர். அந்த இனத்தைச் சார்ந்த எந்த ஒரு பெண்ணும் பலுடியர் அல்லாத ஒருவரைத் திருமணம் செய்ததற்கான சான்றேயில்லை.
வெறுப்பூட்டும் சதுப்பு நிலங்களும், சீராகக் கிளறி விடப்பட்டிருந்த சேறும் சகதியும், ப்ரீட்டனின் மங்கலான சாம்பல் நிற மணலும் எங்களது ஆன்மாவின் துயரோடு ஒத்திருந்தது. கடலின் ஒரு பிரிவைக் கடந்து ஓரிடத்தை வந்தடைந்தோம். அங்கிருந்து வெளியேறும் கடல் நீர்தான் உப்பு தயாராகும் குட்டைகளுக்குச் செல்கிறது. அந்தக் கடற்கரை மணலில் முளைத்திருந்த சிறு தாவரங்களைக் கண்ட பிறகே சிறிது ஆறுதலடைந்தோம். அங்கு நடக்கும் போது கேம்ப்ரீமர் வாழ்ந்த தீவைக் கண்டோம். ஆனால் நாங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டோம்.
ஓட்டலுக்குத் திரும்பிய போது பில்லியர்ட்ஸ் மேஜை ஒன்று கண்ணில் பட்டது. க்ராய்ஸிக்கிலிருந்த ஒரே பில்லியர்ட்ஸ் மேஜை அதுவே என்பதையும் கண்டறிந்தோம். அங்கிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை அன்றிரவே மேற்கொண்டோம். மறுநாள் கேரென்டிற்குச் சென்றோம். பாலின் அங்கும் துக்கமாகவே இருந்தாள். என்னை ஒழிக்கப் போகும் மூளைக் காய்ச்சல் மீண்டும் வரவிருப்பது போல் நானும் உணர்ந்தேன். அந்த மூன்று பேரையும் குறித்தக் காட்சிகள் மனக்கண்ணில் தோன்றி குரூரமாய் என்னை வதைத்தன. இறுதியில் பாலின் சொன்னது –
“லூயி, அனைத்தையும் எழுதி விடு. உன் காய்ச்சலின் தன்மையை அது மாற்றி விடும்.”
எனவே அன்பு மாமா! உங்களுக்காக அதை விவரித்து எழுதியிருக்கிறேன். இங்கே தங்கியிருந்ததும், கடல் குளியலும் மன அமைதியைத் தரத் துவங்கியிருந்தன. ஆனால் அந்த மன அமைதியை அதிர்ச்சி தரும் அத்தகையதொரு சம்பவத்தால் இழந்தோம்.