கரைமணலும் அலைநுரையும் – கலீல் ஜிப்ரான் – தமிழில் : வெ. ஜீவானந்தம்

0 comment

நினைவு ஒரு சந்திப்பு
மறதி ஒரு விடுதலை

*

சூரியன் அலைவது
நாட்களாய் ஆனது
நாட்களை அளக்க
கடிகாரம் வந்தது
ஓடும் வாழ்வில்
மீண்டும் நாம்
அதே நாளில் –
அதே இடத்தில்
சந்தித்தல் இயலுமோ?

*

வாழ்வின் நீதியில்
நான் நம்பிக்கை இழக்கவில்லை.
மென்துகில் மஞ்சத்தில்
துயில்பவன் கனவும்
கட்டாந்தரையில் கைவைத்துக்
கிடந்தவன் கனவும்
ஒன்றுபோலவே
அழகானதாகவே இருக்கிறது.

*

மனிதனின் கற்பனைக்கும்
அவனது சாதனைக்குமிடையே
ஓர் இடைவெளி உண்டு.
அவனது வேட்கையே
அதை நிறைவு செய்கிறது.

*

உன் கண்களைத் திறந்தால்
உன் உருவமே எதிலும்
உன் காதுகள் திறந்தால்
எதிலும் உன்குரலே.

*

உண்மையைக் காண
இருவர் தேவை
ஒருவன் சொல்ல
ஒருவன் உணர.

*

நீ எழுத வேண்டுமா? எழுது.
அறிவும் அழகும் அற்புதமும் கூடட்டும்.
சொற்களை இசையாக்கும் அறிவு
இயல்பை விளம்பரப்படுத்தாத அழகு
அனைவரையும் நேசிக்கும் அற்புதம்
யாவும் கூடினால் நீ எழுத்தாளனாகலாம்.

*

தினம் தினம் புதுப்பிக்காக் காதல்
பழக்கமானதாகிப் பின்
அடிமையாய் முடிகிறது.

*

காதலர்கள் அன்புடன் தழுவுவது
அவர்களை அல்ல,
அவர்களின் நடுவில் நிற்பதை.

*

ஒரு தந்திர ஓநாய் சொன்னது
“எமது வீட்டுக்கு வந்து
எம்மை கௌரவப்படுத்து”
“வருகிறேன்.
உன் வீடு உன் வயிறில்லையே?

*

ஒருவன் உன்னைப் பார்த்துச்
சிரித்தால் பரிதாபப்படு.
நீ பிறரைப் பார்த்துச் சிரித்தால்
உன்னை மன்னிப்பது எப்படி?
ஒருவன் உன்னைக் காயப்படுத்தினால்
மன்னிக்கலாம், ஆறலாம்
நீ பிறரைக் காயப்படுத்தினால்
நினைவு ஆறுவது எப்படி?
அவன் உன் உணர்வின் வடிவம்
உனது மற்றொரு உடல்.

*

ஒருவன் என் மேஜையில் அமர்ந்தான்.
என் ரொட்டியைத் தின்றான்.
என் திராட்சை ரசத்தைக் குடித்தான்.
சிரித்தபடியே போனான்.
அவன் மீண்டும் மறுநாள் வந்தான்.
ரொட்டி கேட்டான்.
நான் மறுத்தேன்.
தேவன் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

*

ஆயிரம் ஆண்டுகள் முன்
நண்பன் சொன்னான்,
“வாழ்வை வெறுக்கிறேன்
வாழ்வே துயரம்”
நேற்று அவனது
கல்லறையைக் கடந்து சென்றேன்
வாழ்க்கை அவன் கல்லறை மேல்
ஆனந்த நடனமாடிக் கொண்டிருந்தது.

*

ஒவ்வொரு மகான் உள்ளும்
ஓர் அற்பம்.
அதுவே அவனது
பைத்தியக்காரத்தனத்தையும்
தற்கொலையையும் தடுக்கிறது.

*

வாயிலில் நின்று பார்க்கிறாய்.
ஒரு புனிதக்கன்னி கடக்கிறாள்
பின் ஒரு விலைமகள் நடக்கிறாள்
அவள் எத்தனை புனிதமானவள்
இவள் எத்தனை இழிந்தவள் என்கிறாய்
இறைவன் சொன்னார்
“ஒருவன் பிரார்த்தனையில் என்னைத் தேடுகிறான்
மற்றவன் கண்ணீரில் தேடுகிறான்
இருவரும் எனக்கானவர்களே”.

*

அறிதலின் முடிவில்
உணர்தல் ஆரம்பமாகிறது.