இரண்டு மூன்று நாட்களாகவே பறவைகளின் இரைச்சல் விடியற்காலையில் அதிகம் தான். காகங்களும் மைனாக்களும் ஒன்றையொன்று கொத்திச் சண்டை இடுவது போல கத்துகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிரொலியாக ஓடைக்கு மேலே உள்ள புதரிலிருந்து மயில்கள் மாறி மாறி அகவுகின்றன. விடிகிற போது மயில்கள் அதிகம் அகவாது. ஆனால் இந்தப் பறவைகளின் கூச்சல் எல்லை மீறிப் போய் விட்டது. கரபுரவென அவை கத்துவதால் மயில்களும் என்னவோ ஏதோவென்று வெறிக்கின்றன. சுந்தரம் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து வேட்டியைச் சரி செய்தான். கதவைத் திறந்து வெளியே வந்த போது தாழ்வாரத்தில் இருக்கும் கட்டிலில் நல்லமுத்துக் கவுண்டர் இல்லை. தாழ்வாரத்தைத் தாண்டி களத்திற்கு வந்தான். மெல்ல வீசிய காலைக் காற்று குளிர்ச்சியாய்த் தழுவித் தழுவிக் கடந்தது.
தோட்டம் வெறுக்கென்று இருந்தது. நான்கு நாட்களுக்கு முன் கொஞ்சிக் கொண்டிருந்த பெருந்தோப்பு உயிரை விட்டு பாழென்று கிடக்கிறது. வெறிகொண்டு ஓசையெழுப்பியபடி அடித்தண்டுகளை அறுத்த யந்திர ரம்பங்களுக்கு எந்த எதிர்ப்பும் தராது புன்னகை மாறாது மினுமினுத்துக் கொண்டிருந்த மரங்கள் இதோ வெட்டுப்பட்டுக் கிடக்கின்றன. நினைத்தாலே மனசுக்கு என்னவோ போல் இருக்கிறது. வெறுமை பதற்றம் ஆதங்கம் எல்லாம் சேர்ந்து பக்கென ஓர்மையைக் குலைக்கிறது. பெற்ற பிள்ளைகளை வரிசையாக நிறுத்தி வெட்டிச் சாய்த்துவிட்ட ஒரு கொடுஞ்செயல் போல் தோன்றுகிறது. நல்லமுத்துக் கவுண்டருக்கும் மனசு கலங்கியிருக்குமா? பின் எப்படி இப்படித் துணிந்தது அவர் மனசு?
அவர் மேலிருந்த நல்லெண்ணங்கள் எல்லாம் ஈரமற்று முற்றாக வடிந்து வெறுப்பு மேவியது. என்றாலும் சுந்தரம் காட்டிக்கொள்ளவில்லை. அவரை மட்டும் குறைசொல்லி என்ன பயன்? பிள்ளைகளுக்கு வந்த ஆசைகளை அவரால் தள்ளிப்போட முடியவில்லை. தூரத்தில் பொள்ளாச்சி உடுமலை சாலையில் ஒளியை வீசிக்கொண்டு விரையும் வண்டிகள் தெரிந்தன. மூன்று நாட்களுக்கு முன்புவரை வண்டிகளின் ஒளி மட்டும் கண்ணாடி பிரதிபலிப்பு போல டக்டக்டக் என்று மரங்களிடையே தென்பட்டு மறையும். இப்போது பேருந்துகள் போவது தெரிகிறது. இருசக்கர வாகனங்கள் தெரிகின்றன. டெம்போக்கள் தெரிகின்றன. இவனைப் பார்த்து சினையாக இருக்கும் செம்பூத்து ஜெர்சி வயிற்றை எக்கிச் செறுமியது. திரும்பிப் பார்க்கும் கிடாரியின் கண்கள் பளிங்கு போல் மின்னுகின்றன. துவர்ப்பும் நசுங்கிய பசிய தென்னை மரக்கூழ் வாசமும் மூக்கைத் துளைத்தது. மடமடவென மரங்களை அறுத்துச் சாய்த்தபோது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் நின்று பார்த்தனர். பக்கத்துத் தோட்டக்காரர்கள் ஆணும் பெண்ணுமாக வரப்பில் நின்று பார்த்தனர். சம்சாரிகளின் முகத்தில் அருள் இல்லை. கல்வீரன் கோயில் அரச மரத்தடியில் காகங்கள் மைனாக்கள் கரைந்தபடி எழுந்து மாறி அமர்கின்றன. கிணற்றிற்குப் பின் பெரிய ஆலமரம் இருந்தது. தென்னை மரங்களோடு அதையும் வெட்டிச் சாய்த்துவிட்டார். அந்த மரத்தில் வாழ்ந்த பறவைகள் வேறு வழியில்லாமல் கல்வீரன் கோயில் அரச மரத்திற்குச் சென்றன. அந்த மரத்தினைப் பாத்தியமாகக் கொண்டிருந்த பறவைகள் முதல்நாள் இருட்டும் வரை நிலைமையை ஏற்க மறுத்தன. இப்போது இரண்டு நாட்களாக சகஜத்திற்கு வந்திருக்கின்றன. சுந்தரம் தோட்டத்திற்குள் இறங்கினான்.
ஐந்து ஏக்கர் தென்னைகளையும் வெட்டிச் சாய்த்து விட்டார் நல்லமுத்துக் கவுண்டர். தோட்டம் முழுக்கத் தென்னை மரங்கள் குறுக்கும் மறுக்கும் கிடக்கின்றன. இரண்டு நாட்களாக தள்ளுவண்டிகளில் தென்னங்குருத்து விற்பவர்கள் மட்டைகளைப் பிளந்து பிய்த்து குருத்துகளை வெட்டிக்கொண்டு போனார்கள். தலையற்று செந்நாய்கள் அரைகுறையாகத் தின்றுபோட்ட நேற்றைய எலும்புக்கூடு போல குருத்து எடுத்த மரங்கள் கிடக்கின்றன. தெறித்தோடிய குறும்பைகள் தோட்டம் முழுக்கச் சிதறிக் கிடக்கின்றன. குடித்துப் போட்ட இளநீர் மட்டைகள் ஒவ்வொரு அறுபட்ட மரத்தினடியிலும் கிடக்கின்றன. ஆழ்குழாய் கிணற்றில் நீர்ப்பிடிப்பு ஏற்பட்டதிலிருந்து ஈசான மூலையில் ஒரு போர் போட்டார். புகையாய்ப் போய்விட்டது.
சரளிமேட்டிற்கு தென்புறம் ஒரு போர் போட்டார். கால் இஞ்ச் தண்ணீர் கிடைத்தது. ஆனால் இருபது நிமிஷத்திற்கு மேல் வெறும் மோட்டார் தான் ஓடியது. பழைய போர் தண்ணீரைக் கொண்டு மரங்கள் சாகாமல் காப்பாற்றிக் கொண்டு வந்தவர் தான். திடுக்கென இப்படியொரு முடிவெடுத்து விட்டார். 2000த்தில் வந்த வறட்சி 2003ல் போனது போல இந்த வறட்சியும் போய் மழை வரும் என்று சுந்தரம் சொன்னான். நல்லமுத்துக் கவுண்டரும் ‘அப்படியே போயிடாது’ என்று தான் சொன்னார். அவரது பிள்ளைகள் ‘பிடிச்ச பிடியாக’ நின்று விட்டார்கள்.
அவரது ஒன்றுவிட்ட சித்தப்பா பிள்ளையின் பேரன் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடம் முடியுமுன்னே ஸ்கார்பியோ காரில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்து இந்த தோட்டத்தில் தான் நின்றான். அவனோடு வந்த நண்பர்களும் இளநீர் அருந்தினார்கள். அந்த மரங்களும் தோப்போடு சாய்ந்து விட்டன. ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் வைத்திருக்கும் கவுண்டர்கள் ஏல்லாம் ஸ்விப்ட், வால்வோ, பொலிரோ, ஸ்கார்பியோ என்று வாங்கி ஜம்பம் காட்டிக் கொண்டிருக்கும் போது ‘தாத்தன் பூட்டன் காலத்திலிருந்து விவசாயம் பண்ணி என்னத்தை அனுபவித்தோம்?’ என்று ஒரே குரலில் சொல்லிவிட்டனர் மூன்று பெண் பிள்ளைகளும் இரண்டு மகன்களும். நல்லமுத்துக் கவுண்டரும் பேரன் பேத்திகள் வந்தும் நாமென்ன அனுபவித்தோம் என்ற சலிப்புக்கு வந்துவிட்டார். வாழ்க்கையில் நல்லது பொல்லதுக்கு காரில் வலம் வந்தாவது பிறகு போய்ச்சேர வேண்டும் என்ற முடிவிற்கு வந்ததும் வீட்டடி மனைக்குத் திட்டமிட்டு மரங்களைச் சாய்த்துவிட்டார்.
மாப்பிள்ளைகளில் இருவர் அரசு வேலையில் இருக்கிறார்கள். ஒருவருக்குத் தனியார் கம்பெனியில் வேலை. பையன்கள் இருவரும் விவசாயம் பார்க்கிறார்கள். அவர்கள் ஊருக்குள் குடியிருக்கிறார்கள். மூத்தவரின் பெண் பிள்ளைக்கு சென்ற வருடம் திருமணம் நடந்தது. பையனுக்கு இந்த வருடம் படிப்பு முடிகிறது. இளையவரின் இரு பெண்பிள்ளைகள் பொறியியல் படிக்கின்றனர். இளையவர் கிருஷ்ணமூர்த்தி தான் தோட்டத்து வீட்டின் ஒரு சிறு பகுதியை அந்தரத்துக்கு ஒதுக்கிக் கொடுத்தார். நெடுஞ்சாலைக்கு அந்தப் பக்கம் கல்லூரி. நடைப்பயிற்சி போல காலை மாலை வண்டித்தடத்தின் வழியாக கல்லூரிக்குப் போய்வர ஏதுவாக இருக்கிறது. வாடகையும் குறைவு. நல்லமுத்துக் கவுண்டருக்கும் அம்முச்சிக்கும் ஆதரவாக இருக்கட்டும் என்று தான் வாடகையைப் பற்றி பெரிதுபடுத்தாமல் இவனுக்குப் பெரிய அறையைத் தந்தார். ஏற்கனவே நாகராஜ் வருமுன் கணித ஆசிரியர் இங்கிருந்து தான் வந்து போயிருந்தார். இவன் இங்கு வந்தும் நான்காண்டுகள் ஆகிவிட்டன.
நின்று காய்க்கும் தோப்பு. இப்போது தான் பதினைந்து வருடங்கள் முடிந்திருக்கின்றன. நீர்வரத்து மட்டும் நன்றாக இருந்தால் 50, 60 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மரமும் ஊக்கமாகப் பலன் தரும். இரண்டே நாட்களில் அறவை மிஷின் புகுந்து அறுத்தெறிந்து விட்டது. சென்ற வாரம் சனிக்கிழமை முன்னிரவில் தாழ்வாரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது கவுண்டர் மனையடிக்கு ‘அப்ரூவல்’ வாங்கிவிட்டதைச் சொன்னார். விஸ்வதீப்தி மெட்ரிக்குலேசன் பள்ளியைத் தாண்டி நகரம் விரிவடைந்து விட்டது. இடையில் மூன்று தோட்டங்கள் தான் உண்டு. அவர்கள் பிளாட் போடுவதற்கு முன் நல்லமுத்துக் கவுண்டர் முந்திவிட்டார். பக்கத்தில் செண்ட் இரண்டு லட்சம் வரை போகிறது. பாதை போக்குவரத்து போக நானூறு செண்ட் சுளையாக நிற்கிறது. இன்னும் ஐம்பது வருடம் தென்னை மரத்தை அண்ணாந்து பார்த்தாலும் எட்டுக் கோடியைத் தரப் போவதில்லை. அப்ரூவலுக்கு பிள்ளைகள் ஐந்து லட்சம் வரை காசை விட்டு எறிந்திருக்கிறார்கள். இதர செலவினங்கள் போக எப்படியும் ஏழே முக்கால் நிற்கும். என்னதான் பொட்டாம் பொட்டாம் என்று தோப்பில் கிடந்தாலும் கடனோடு நிலம் மட்டும்தான் மிஞ்சும். மனையடி போட முடிவெடுத்த நாளிலிருந்து ‘அட்வான்ஸ்’ போட்டுவைக்க ஆரம்பித்து விட்டார்கள். மூன்று மாதத்தில் ஒரு செண்ட் மிச்சமில்லாமல் போய்விடும் என்கிறார்.
கார் வைத்திருக்கும் நண்பர்கள் வரும்போதெல்லாம் காரின் விலை, நீடித்த உழைப்பு, நம்பகம், மைலேஜ், பயண சொகுசு, எது நன்றாக இருக்கும் என்று கவுண்டர் கேட்கத் தவறுவதில்லை. பொலிரோ அல்லது ஸ்கார்பியோ வாங்கத் திட்டமிடிருக்கிறார். நல்லது பொல்லாததற்கு கல்யாணம் காட்சிகளுக்கு காரில் போவது என்ற மகிமையில் இறங்கி விட்டார். நன்றாகப் புலர்ந்து விட்டது. தோட்டமெங்கும் இனிக்கம் புற்கள் வாடி நிற்கின்றன. வாய்க்காலிலும் தென்னை மரப் பாத்திகளிலும் புல்லும்பூண்டும் விஷச் செடிகளுமாகப் பசுமையோடு இருக்கின்றன. முற்றிய மரமாக இருந்தால் மரம் ஒன்று ஆயிரத்திற்குப் போகும். இளமரம் என்பதால் அறுப்புக் கூலிக்கு மேல் நூறு ரூபாய் வீதம் போகிறது. ஏழெட்டுக் கொக்குகள் பறந்து வந்து வீழ்ந்து கிடக்கும் மரங்களின் மட்டைகளில் இறங்கி அமர்ந்து பூச்சிப் புழுக்களை நோட்டம் விடுகின்றன. கவுண்டர் கிணற்றடி மேட்டில் போத்தடித்து நிற்கும் வேப்பங்கொட்டையில் கரும் பச்சையேறிய குச்சியை முறித்து தழையை ஒடித்துப் போட்டுவிட்டு மென்றபடி தோட்டத்தைப் பார்க்கிறார். களத்திற்கு வரும் போது கோழிகள் தொட்டிப்பக்கம் ஓடின. அம்முச்சி தெக்கால் தோட்டத்திற்கு பால் வாங்கி வரப் போகிறார்.
வாழைத் தோட்டத்தில் வேல்சாமி வேலையில் இறங்கி இருப்பது தெரிந்தது. துண்டைத் தலையில் குறுக்காகப் போட்டுக்கொண்டு சுந்தரம் வண்டித்தடத்துப் பக்கம் வந்தான். வாழைக்குப் போட்டிருந்த சொட்டுநீர் குழாயைத் தூக்கி ஒவ்வொரு வாழைக்கன்றின் இலை பிரியும் கவுளியில் அணைவாக இருக்கும்படி போட்டுக்கொண்டு போகிறார். கருப்பு ரப்பர் ஓசுகளை சுருட்டும் போது ஏற்படும் மடக்குகள் நாளடைவில் பிளந்து விடுகின்றன. இலைக் கவுளிகளில் தூக்கி சிக்கவைத்து விட்டால் களை வெட்ட லகுவாகி விடும். விஷச் செடிகளும் கோரைகளும் ஒட்டு விதைச் செடிகளும் முழங்காலுக்கு மேல் வளர்ந்து சீந்திருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன் சொன்னார், மண்வெட்டிக் களைக்கு விட்டு புரட்டிப் போட்டால் களையெல்லாம் உரமாகி விடும்.
களை வெட்டி மண் அணைத்து வாய்க்கால் வரப்பை எடுத்துக் கட்டியபின் ரப்பர் ஓசுகளை கன்றுகளின் தூர் ஒட்டிப் போடுவார். வெயிலுக்கு இறக்கைகளை கொஞ்சம் விலாவிலிருந்து தூக்கி நடப்பது போல வேலுச்சாமி மேற்குப் பக்கம் போகிறார். இரண்டு பிள்ளைகள் அவர்களுக்கு. அவர் மனைவி ஒன்பது மணிவாக்கில் வருவாள். நாணம் மூக்கில் சுழிக்க புதுமலர்ச்சி கன்னத்தில் பரவ அவள் லேசாகப் பார்த்துக்கொண்டு போவதுண்டு. இவன் கண்கள் மின்னப் பார்த்தால் தோன்றும் அவளது தன்னுணர்வு வாய்க்குள் நாக்கு வெளிக்காட்டாது செய்யும் அசைவில் தோன்றுவது போல் இருக்கும்.
பூசினாற்போல் சதைப்பிடிப்பு, உழைப்பவர்களுக்கே உள்ள ஆரோக்கியம் அவளிடம் தெரியும். அப்படியே அள்ளித் தழுவத் தோன்றும். சும்மா பார்ப்பதோடு சரி. இருவரும் நல்ல பாட்டாளிகள். பெரும்பாலும் கல்லூரி விட்டு சுந்தரம் வரும் போது நிமிர்ந்து தோட்டத்தை ஒரு நோட்டம் விடுவது போல் கணவரிடம் அவள் சொல்லிக்கொண்டு போவாள். வெயிலில் பகலெல்லாம் பாடுபட்டு முகம் கருத்திருந்தாலும் அதுவும் ஒரு நிறமாகத் தோன்றும். வயதில் மூத்த உழைக்கிற பெண்ணை வயது குறைந்த ஒரு ஆசிரியன் உள்ளார்ந்த துடிப்பில் பார்ப்பது அவளுக்குப் பெருமிதமாகக் கூட இருக்கலாம். சட்டென்று ஒரு பதற்றம் கவ்வியது. நாளை இவர்களும் மண்வெட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு நிலத்தை பிளாட் போட்டுவிடுவார்களோ என்று தோன்றியது.
கைபேசி இரண்டே ஓரை துடிப்பில் நின்றது. மிஸ்டு கால் மன்னன் செல்வராஜாகத் தான் இருக்கும். குளித்துவிட்டுச் சென்றால் சரியாக இருக்கும். சுருட்டிய சணல் சாக்கை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கையில் பன்னரிவாளோடு செல்வி மேல்மடை வாய்க்காலில் இறங்குவது தெரிந்தது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்த ஒரு வாரம் விண்ணப்பங்கள் வாங்க வரும் பிள்ளைகளையும் பெற்றோர்களையும் பார்க்கப் பார்க்க சந்தோசமாக இருக்கும். விண்ணப்பம் வாங்கியவர்கள் அனைவரும் சேரப்போவதில்லை தான். ஆனால் முக்கால்பங்கு மாணவ மாணவிகள் வந்து விடுகிறார்கள். சிலரிடம் படித்துவிட வேண்டும் என்ற துடிப்பு தெரியும். சிலரிடம் படித்துவிட முடியுமா என்ற தயக்கமும் சோகமும் முகத்தில் அப்பியிருக்கும். சிலர் முன்பதிவு செய்து பாடப்பிரிவை உறுதி செய்துகொள்வார்கள். பின் பருவக் கட்டணம் கட்டி படிக்க முடியாமல் போய் விடுவார்கள். எல்லோருக்கும் இந்த சுயநிதிக் கல்லூரி உதவாது. மதிப்பெண் அதிகமாக இருக்க வேண்டும், ஏழையாகவும் இருக்க வேண்டும்.
இந்த செல்விப் பிள்ளை கூட பிளஸ் டூ தேர்வு முடிவு வந்த நாளில் விண்ணப்பம் வாங்க வரவில்லை. மூன்றாவது நாள் பனிரெண்டு மணி இருக்கும், நுழைவு வாயிலைத் தாண்டி இடதுபுறம் விளையாட்டுத் திடலுக்குப் போகும் அகன்ற பாதையை ஒட்டி இருக்கும் இலுப்பை மரத்தின் அடியில் வெறுக் வெறுக்கென்று பார்த்துக் கொண்டிருந்தாள். சுந்தரம் முதன்மை அறிவிப்புப் பலகையில் ‘ரேகிங்’ கூடாது என்பதற்கான அரசாணையை ஒட்ட வந்தபோதுதான் பார்த்தான். பார்த்த முகமாக இருக்கிறதே என்று முன்னே வந்தபோது தான் நின்றிருப்பது செல்வி என்று தெரிந்தது. நல்லமுத்துக் கவுண்டர் தோட்டத்திற்கு தென்மேவரத்தில் உள்ள சாமிக்கண்ணு தோப்பில் இவன் வருவதற்கு முன்பிருந்தே குடி இருக்கிறாள்.
“என்னம்மா, இங்கயே நிக்கிற? அப்பிளிகேசன் வாங்க வந்தியா, உள்ள போயி பி பிளாட் வராந்தா வழியாப் போ.”
“அப்பா… போ வர்றேன்னாங்க. இன்னும் காணோம்.”
“என்ன குரூப் படிக்க நினைக்கிற?”
“கம்ப்யுட்டர் சயன்ஸ் சார்.”
“மார்க் எவ்வளவு?”
“853 சார். பீஸ் கம்மியா கட்டி படிக்க இடம் கிடைக்குமா?”
“இந்த மார்க்குக்கு உதவித்தொகை தரமாட்டாங்கம்மா.”
“… … … …”
முகம் மெல்ல கறுத்து சோகம் படர்ந்தது. வரப்பில், தோப்பில், வண்டித்தடத்தில் அவளை சுந்தரம் பார்த்திருக்கிறான். இவ்வளவு அருகில் கவனித்ததில்லை. மெலிந்த தேகம் என்றாலும் நெற்றியில் அப்படியொரு பளபளப்பு. கோரை முடி என்பதால் நடுவகிடு மிகத் தெளிவான ஒற்றையடித் தடம் போல் கூந்தலை இரு பிரிவாகப் பிரித்திருக்கிறது. மாநிறம். கொஞ்சம் எட்டிப் பார்க்கும் முன்பற்கள். அவள் கண்கள் இவனையே பார்த்தன. பழைய சுடிதாரின் மஞ்சள் பூக்கள் வெளிறிவிட்டன. வற்றி சுண்டிப்போன அவளுடைய அப்பா வேலிக்கம்பிக்கு அப்பால் வருவது தெரிந்தது. அவர் சீக்காளி இல்லை தான். ஆனால் எலும்புக் கூட்டிற்குத் தோல் கெட்டியாக ஒட்டியிருப்பது போல தெரியும். அப்படியொரு மெலிவு. சுறுசுறுப்பானவர். “சரிம்மா, மொதல்ல அப்பிளிக்கேசன வாங்கிப் போடு, பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு வண்டி நிறுத்துமிடத்தில் நின்றிருக்கும் பார்த்திபனை நோக்கி வந்தான். கையில் வைத்திருந்த கடலை மிட்டாயை அவன் நீட்டினான். உடைத்து எடுத்துக்கொண்டான்.
மோட்டார் தொட்டியில் விடியற்காலம் முகம் கழுவி விட்டு கொய்யாமரம் பக்கம் வந்து நின்றால் செல்வி களத்தின் வடமேற்கு ஓரம் பாத்திரங்களைக் கழுவுவது தெரியும். செல்வியின் அப்பா வெளிச்சம் வரும் முன் கிழக்கால் போகும் அகன்ற வரப்பில் கருத்த நிழலுருவம் போல போவார். கோமலங்கலத்தில் தான் மாட்டு வியாபாரியாக இருக்கிறார். மூன்று நான்கு நாட்கள்கூட வராமல் போய்விடுவார். தோட்டக்காரர் களத்தில் நிறுத்திவைத்து “நீ தோப்ப கவனிக்கிறதில்ல. ஒன்ன நம்பிவிட்டா தோப்பு நாசமாயிரும். நீ எடத்த காலி பண்ணிரு. நான் எனக்குத் தோதான ஆள கொண்டுவந்து வச்சுக்கிறேன்” என்று சத்தம் போடுவது தெரியும். “அண்ணா, எந்த பாத்தியிலயும் ஈரமில்லன்னு சொல்லுங்க, இப்பியே பிள்ளைகள அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். எங்க போனாலும் ராத்திரியில வந்து மோட்டார எடுத்துவிட்டு பூராம் பாய்ச்சிப் போடுறேனா இல்லையா?” என்று கொஞ்சம் உறுதிபட பதில் பேசுவது கேட்கும். தோட்டக்காரருக்கும் செல்வி அப்பாவிற்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று ஒரு சின்ன மோதல் அவ்வப்போது வரும். அது அப்படியே அறுபடாமல் ஓடுவதற்குக் காரணம் தாயில்லாப் பிள்ளைகளை ‘பொட்டி சட்டிய தூக்கிட்டுப் போ’ என்று சொல்ல தோட்டக்காரருக்கு மனசு வரவில்லை என்பது தான்.
கொட்டத்தில் சாணி வழித்துப் பெருக்கி முடித்ததும் கைகாலைக் கழுவிக்கொண்டு செல்வி பால் கறக்க அமர்வாள். மூன்று உருப்படிகள் எப்போதும் நிற்கின்றன. சுந்தரம் இங்கு வந்த மறுவருடம் ஒரு பசுவை விற்றார்கள். அப்போது பால்குடி கன்றாக இருந்தது. இப்போது ஆறுமாதச் சினையாக நிற்கிறது. பெட்டைக் கன்று வளர்ந்து கிடடேரியாக நிற்கும் போது ஒரு பசுவை விற்றால் மற்றவற்றை வளர்ப்பதற்கு ஓரளவு முடிகிறது போலும். கறந்த பாலை எடுத்துக்கொண்டு ஐந்து தோட்டங்களுக்குக் கொடுக்க வரப்பு வழியாக வேகவேகமாக நடப்பாள். இதுவரை வரப்பில் அவள் தடுக்கி விழுந்ததைப் பார்த்ததில்லை. அது முடிய வெயில் ஏறுவதற்கு முன் நல்லமுத்துக் கவுண்டர் தோப்பிற்குள் நுழைவாள். மரத்தைச் சுற்றி முழங்கால் அளவு வளர்ந்திருக்கும் அருகோடு கூடிய கருங்கொழையை அறுப்பதில் முனைவாள். பத்து மரத்தைச் சுற்றி அறுத்தால் ஒரு சாக்கு சேரும். அம்முச்சி “ஏன்டி இந்த மாட்டக் கொண்டுபோயி அடுத்தவங்க தோட்டத்துல நான் மேய்க்க முடியுமா, நீ குடியிருக்கிற தோப்புல அறுக்கவேண்டியதான்டி” என்று பொதுப்படையாக சத்தம் போடும்.
“அம்முச்சி, நீயே தொரத்துனா நா எங்க போவேன், அங்கு புல்லு இல்லாமதான இங்க வர்றேன்” சொல்லிக் கொண்டே அறுப்பதில்தான் குறியாக இருப்பாள். நல்லமுத்துக் கவுண்டர் “இது ஒன்னு மேயிறதுக்குத் தான் ஒனக்கு இடமில்லையா” என்று அம்முச்சியைத் திட்டுவார். பெரிய சாக்கில் அமுக்கி அமுக்கித் திணித்த புல்கட்டைத் தூக்கிவிட யாரையும் அவள் அழைத்ததில்லை. தூக்கும் போது வலதுகால் முட்டியால் தாங்கி லாவகமாக ஏந்தித் தோளுக்குக் கொண்டுபோய்விடுவாள். தோப்பின் குறுக்கே சுமையோடு செல்வி போகும்போது களத்தில் தங்கையும் தம்பியும் முகம் கழுவிக்கொண்டிருப்பது தெரியும். களம் ஏறும்போதே ‘அடுப்பில தண்ணியை வை எரும’ என்று எகுறுவாள். ‘நான் எப்ப சமச்சு பள்ளிக்கூடத்துக்குப் போவேன்’ தங்கையிடம் குறைப்படுவாள். அறுத்துக்கொண்டு வந்த புல்லை மூன்றுக்கும் நிரந்துபோட்டு, சாக்கை உதறி, தகரத்து உத்திரத்தில் சொருகுவாள். தம்பி தங்கையைக் குளிக்கச் சொல்லி விரட்டிக்கொண்டே வேலைகளில் ஈடுபடுவாள்.
செல்வி குளித்து தலையைக்கூட துவட்டாமல் ஈரத்தை இழுக்க கூந்தலில் முறுக்கிய துண்டோடு போட்ட கொண்டை பெரிதாகத் தெரியும். ஆவிபரக்க இரண்டு தட்டுகளில் சோற்றைப் போட்டு திண்ணையில் அவசர அவசரமாகக் கொண்டுவந்து வைப்பாள். சின்னப் பாத்திரத்தில் முருங்கைக் காயோ கத்தரிக்காயோ கைக்குக் கிடைக்கும் காய்களை அறுத்துப்போட்டு குழம்பு வைப்பாள். அது இல்லையென்றால் ரசம். அப்புறம் தயிர். தங்கையையும் தம்பியையும் சாப்பிட வைத்து பள்ளிக்குத் துரத்தியபின் கூந்தலைச் சீவுவாள். நேர் வகிடெடுத்து இரட்டைச் சடைக்காக இரண்டு தோள்பக்கம் கூந்தலைப் பிரித்துப் போடும் போது பாடுவது கேட்கும். ‘அனல் மேலே பனித்துளி, அலை பாயும் ஒரு கிளி, மரம் தேடும் மலர்க்கொடி, இவைதானே இவள் இனி’. இரட்டைச் சடையைப் பின்னி மடக்கிப் பிணைத்து முன்பக்கம் இழுத்துப்போட்டு கண்ணாடியை ஜன்னலில் சாய்த்து வைத்து பவுடர் போடுவாள். முகம் பின்கழுத்து எல்லாம் போட்டு முடியும்போது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்’ பாடல் வரும். பாடுவதில் பெரிய நெளிவு சுழிவு இழையாது என்றாலும் பாடுவதில் கூடும் மன மகிழ்ச்சியே அதற்கொரு புதிய சுரத்தைத் தருவது போல இருக்கும்.
சாப்பிட்டுவிட்டு பசுவிற்குத் தண்ணீர் காட்டி வைக்கோலை அள்ளிப்போடுவாள். சீருடையை அணிந்து கொண்டு கொல்லையில் அசையும் ஒரு ரோஜாவை காம்புடன் கிள்ளி வலப்பக்க சடைப் பின்னலின் உச்சியில் ஹேர்பின்னால் சொருகிக் கொள்வாள். புத்தகப் பையை முதுகில் போட்டுக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வேகமாகப் போவாள். அவளை பி.பி.ஏ. தான் சேர்த்துவிட முடிந்தது. பி.காம். சிஏ., சி.எஸ் போன்ற பாடப் பிரிவிற்கு நல்ல மதிப்பெண் பெற்றவர்களே அதிகத் தொகை கட்டுவார்கள். இருப்பவர்கள் எப்போதும் முதலில் வந்து அடைத்துக் கொள்கிறார்கள். கவிதா மேடம் சேர்ந்த புதிதில் சொன்னார் “என்ன சார் எப்பப் பார்த்தாலும் ஃபஸ்ட் அவர் லேட்டா வர்றா, லாஸ்ட் அவர் பாதியிலே எழுந்து ஓடுறா” என்று குறைபட்டார்.
“இந்தளவாவது ஓடி வர்றாளேன்னு பெருமைப்படுங்க, அட்டன்டண்சில கை வச்சிடாதீங்க. நெருக்கினீங்கன்னா காலேஜிக்கே வரமாட்டா” என்றான்.
சென்ற வருடம் இறுதியில் கல்லூரி முடித்த ஸ்டீபன் சுந்தரத்தின் தோட்ட வீட்டிற்குப் பார்க்க வரும்போது புல்லறுத்துக்கொண்டிருந்த செல்வியைப் பார்த்து திடுக்கிட்டிருக்கிறான். சாலைக்கு வந்ததும் கேடடான். “அது பி.பி.ஏ படிக்கிற பிள்ளைதான?”
“ஆமா.”
“புல்லறுத்துக்கிட்டிருக்கு?”
“ஏன் அறுக்கக்கூடாதா…”
“இல்ல வந்ததுமா…”
“செல்வி வந்து ஒருமணி நேரமாகுது. சாணி அள்ளிப் போட்டு, மாட்டுக்குத் தண்ணி காட்டி, துணிகள ஊறவச்சு, பால் கரந்து வச்சிட்டுதான புல்லறுக்கப் போயிருக்கு. இனி தங்கச்சியும் தம்பியும் வந்து மாடுகள வரப்பில மேய்க்கக் கொண்டு போகணும். போகலைன்னா ஏச்சு விழும். செல்வி பிறகு சமையல் செய்யணும். அப்பா வர்றதுக்கு ராத்திரியாயிடும். மோட்டார் எடுத்துவிட்டு தோப்புக்குத் திருப்பி விடணும். மடைய வெட்டிவிட்டு வந்து வீட்டக் கூட்டணும். பிளாஸ்டிக் சேர்ல படிக்க வேண்டிய பக்கத்த பிரிச்சு கவுத்து வைச்சிட்டு தொட்டிக்கு தண்ணி எடுத்து ஊத்தணும். அப்புறம் மடையத் திருப்பிவிட ஓடணும். இதெல்லாம் நீ பார்த்ததில்லையே…” ஸ்டீபன் ஆச்சரியத்துடன் சுந்தரத்தையே பார்த்தான்.
குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொண்டு களத்தில் வந்து நின்றான். “டேய் கருவாயா, தட்ட கழுவி வச்சிட்டு புல்கட்ட வண்டிக்கு கீழ வையி” தொட்டிப் பக்கம் பாதங்களை கழுவிக்கொண்டே குனிந்தபடி திரும்பி செல்வி கத்துவது கேட்டது. செந்தில்குமார் சட்டை செய்யாமல் படையப்பா பைக்குள் புத்தகங்களை எடுத்து வைத்தான். உண்ட எச்சில் தட்டு சிறு திண்ணையில் இருந்தது.
“இன்னிக்கு நீயா நானான்னு பாத்திடுறேன். பசுவுக்குத் தண்ணி காட்டச் சொன்னேன். அதையும் செய்யல. இங்க இருக்கிற ஸ்கூலுக்கு இந்த நேரத்துக்கே ஓடுற. மேலுகளவாணிப் பயலே, நான் எத்தன வேலைதான் செய்றது?”
‘வவ்வவ்வவ்…’ அவன் தன் கோவத்தைக் காட்ட பதிலுக்கு நாய்போல கத்தினான். சொல்லச் சொல்ல எந்த வேலையையும் செய்யாமல் பையை முதுகில் போட்டுக் கொண்டு நடந்தான்.
கைகளையும் முகத்தையும் துண்டால் துடைத்துக் கொண்டே சாக்கின் அருகில் வந்தாள். “வாடா சாயந்தரம் ஒன்ன வௌக்குமாத்தால ரெண்டு சாத்து சாத்துனாதான்டா என் ஆத்திரம் அடங்கும். பொங்குனாதான திம்ப? ரெண்டு நா பட்டினி போடுறேன். நான் இனி எந்த வேலையும் செய்ய மாட்டேன். ஒன் சமத்தப் பாக்குறேன். ஒனக்கு நான் என்ன புழுக்கையா? பாப்போம்டா” செல்வி சொல்லச்சொல்ல ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே நடந்தான். செல்வியின் தங்கை ஜெயா சின்னச் சின்ன வேலைகளையெல்லாம் செய்துவிட்டுத் தான் பள்ளிக்கு ஓடினாள். அவள் இரண்டு பஸ் மாற வேண்டும்.
சாக்கைத் தூக்கிக்கொண்டு போய் ஏறக்கட்டி நிற்கும் தட்டுவண்டியின் அடியில் போட்டாள். கம்பு மாவை விதைப்பெட்டியில் அள்ளிவந்து தொட்டியில் மேலாகப் போட்டாள். இந்தப் பசுக்கள் தண்ணீரில் இப்போது வாய் வைப்பதே இல்லை. இதுகளும் வீம்பு செய்ய ஆரம்பித்து விட்டன. அப்பா மாவு போட்டுப் பழக்கிய பின் குளுதாலியில் பூஸ்ட் கேட்கின்றன. கிடாரியை அவிழ்த்து வந்தாள். கொட்டத்தைத் தாண்டியதும் முதுகை நீட்டி முறுக்குவிட்டு பின்னங்காலால் உதறியது. குளம்பில் சிக்கியிருந்த மண்துகள் பறந்தது. தொட்டிக்கு வந்ததும் கயிற்றை அதன் முதுகில் போட்டுவிட்டு திண்ணைக்கு வந்தாள். கண்ணாடி பாட்டிலிலிருந்து தேங்காய் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி இரு கைகளிலும் தேய்த்து கூந்தலுக்குள் விரல்களை விட்டுத் தேய்த்தாள்.
கொஞ்சம் தண்ணீர் குடித்த கிடாரி தலையைத் தூக்கியது. உதடுகளில் ஒட்டியிருந்த மாவை நாக்கால் சுழற்றித் தடவிச் சுவைத்தது. முகத்தைத் தூக்கி ஒருத்தரும் அருகில் இல்லை என்பதை உணர்ந்த கிடாரி மலுச்செனக் குதித்து பின்னங்கால்களை வான்நோக்கி உதைத்தது. செல்வி “அடியேய் ஒனக்கும் மப்பு ஏறிப்போச்சா. இந்தா வர்றேன்” என்று கண்ணாடியைப் போட்டுவிட்டு தலைவிரிகோலமாக ஓடி வந்தாள். கிடாரி குஷியில் களத்தின் வடகிழக்கு இறக்கத்தில் இறங்கி தவ்வாளம் போட்டுக்கொண்டு வந்தது. சுந்தரம் இந்தப் பக்கம் வரும் கிடாரியை மடக்க வெட்டுப்பட்டுக் கிடக்கும் மரத்துப் பக்கம் வந்தான். அது கீழே கிடக்கும் மரங்களை லாகவமாகத் தாண்டியபோது முதுகில் கிடந்த கயிறு தரையில் விழுந்தது. சடக்கெனத் திரும்பி கிழக்கு முகமாய் ஓடியது. செல்வி அந்தப் பக்கம் ஓடினாள். மறுபடியும் வேலுச்சாமி தோட்டத்துப் பக்கம் திரும்பியது. வாழைத் தோட்டத்திற்குள் நுழைந்தால் ஏழெட்டுக் கன்றுகள் சேதமாகிவிடும். வசவு கிட்டும். செல்வி இந்தப் பக்கம் விழுந்தடித்து ஓடினாள். வாய்க்கால் வரப்பைத் தாண்டி மறித்தாள். மறுபடி தெற்குப் பக்கமாக ஓடியது. கயிற்றின் முடிச்சு விழுந்து கிடக்கும் மரத்தின் மட்டை இடுக்கில் சிக்க வெக்கெனச் சுண்டி நிறுத்தியது. இவள் ஓடி வருவதைக் கண்டு காதுகள் விடைக்க கண்கள் பிதுங்கப் பார்த்தது.
இளஞ்சினைக் கிடாரிகளுக்கு வயிற்றில் புருபுருப்பு ஏற்பட்டால் இப்படி ஒரு ஆட்டம் போடுவதில் பிரியப்படும். கெதி பாய்ச்சலில் வந்த செல்வி தன் மொலியை மடக்கி அதன் முதுகில் குத்தினாள். சற்று நெளிந்து வளைந்து செல்வியைப் பார்த்துப் புன்னகைத்தது. ஆத்திரம் எகிற அடிக்க மடக்கிய கயிற்றை அப்படியே பிடித்தபடி மூச்சு வாங்கினாள். கிடாரி அவள் கையை நக்கியது. கோவம் மறைந்து செல்வி கிடாரியின் நெற்றியைத் தடவினாள். கழுத்தை நீட்டி அதுவும் பெருமூச்சுவிட்டு கண்கள் மினுங்கப் பார்த்தது. செல்லமாக முன் செப்பையைத் தடவியபடி கன்னத்தை கழுத்தில் வைத்தாள். “நீ தானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை ராணியின் சொந்தம்…” மெல்லப் பாடியபடி அழைத்துச் சென்றாள். கிடாரி உரசிக்கொண்டு உடன் சென்றது.
சுந்தரம் கவிழ்த்துப்போட்ட தொட்டியில் அமர்ந்து சூவிற்கு பாலீஸ் போடாமலே பிரஷால் லேசாகத் தேய்க்க அமர்ந்த போது செல்வி வேகுது வேகுது என்று மேற்குத் தடத்தில் நடந்து சென்றாள். அவன் கைப்பையை எடுத்துக் கொண்டு தடத்தில் ஏறியபோது செல்வி நொச்சி மரத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. திருத்திவி லாம் என்று கொண்டுவந்த தேர்வுத்தாளில் பாதியைத் தான் முடிக்க முடிந்தது. மாதத்தேர்வு தான். இருந்தாலும் துறைத் தலைவர் உடனே தர வேண்டும் என்று நச்சரிப்பார். ஏதோ டிகிரி ரிசல்ட் தன்னால் தாமதமாவது போல புடுங்குவார். இதற்கெல்லாம் அசந்தால் வண்டி ஓட்ட முடியாது. ‘இந்தா அந்தா’ என்று சொல்லிக்கொண்டு போகவேண்டியது தான். நொச்சி மரத்தைத் தாண்டியபோது செல்வி கத்துவது கேட்டது. வேகமாக ஓடினான். தார்ச்சாலையில் ஒரு அம்மா இவனைப் பார்த்தபடி நிற்பது தெரிந்தது. செல்வி தார்ச் சாலையில் இறங்காமல் தடம் முடியும் இடத்திற்கு முன்னமே வலது பக்கம் அடர்ந்திருக்கும் துத்திச்செடிப் பக்கம் நின்று “நீ இங்க நிக்காத போ” என்று சொல்வது கேட்டது.
“கத்தாதடி” என்றாள் அந்த அம்மா.
“எனக்கு வேகாலம் வந்திடும் பாத்துக்கோ. அவனோட போனது தான் போனயேடி. ரெண்டு எட்டு வைக்கத் தெரியாத பசலையக் கூட போட்டிட்டு ஓடிட்டயேடி. மூக்கு ஒழுகிற அவன வச்சு நான் என்னென்ன கருமாயப்பட்டிருப்பேன். ஒழுங்கா குளிக்கக் கூட தெரியாத அவள தினத்துக்கும் இழுத்திட்டுப் போயிருப்பேன், இப்ப என்னடி ஒனக்கு புதுசா பாசம் பொத்துக்கிட்டு வந்திருக்கு. இவ இன்னாருன்னு டமாரம் அடிச்சு என்ன அசிங்கப்படுத்தலாம்னு வந்திருக்கையா?”
“ஒன்னையேண்டி நான் அசிங்கப்படுத்தணும்… சாமி எஞ்சாமி… இத வாங்கிக்க நான் போயிடுறேன்”
இரண்டு எட்டு செல்வியை நோக்கி முன்வந்து நீட்டினாள். செல்வி வேகமாகத் தட்டிவிட்டாள். செய்தித்தாளில் பந்தாகச் சுருட்டிய அது இறக்கத்தில் விழுந்தது. அவள் செல்வியை வெறித்துப் பார்த்தாள்.
“பிள்ளைகள பாக்கணும் பாக்கணும்னு அந்தச் சீமையில இருந்து ஓடிவந்தேன்…. நல்லா பாத்திட்டேன். பெத்த வயித்தில ஈட்டியால குத்துறயே. எங் கையாலாண்டத இந்தா இப்படி நின்னு தந்திட்டு அடுத்த நிமிசம் போயிடுறேன்…”
“ஓ வயித்தில நான் பொறக்கல போ.”
“சொல்லு. நாலு பேருக்கு கேக்குற மாதிரி கத்தி சொல்லு. நீ சொன்னா? இந்த வயித்தில நீ பொறக்கலன்னு ஆயிடுமா? ஒன்னத்தான்டி தலைச்சனா பெத்து மொத முலைப்பால் ஊட்டுனேன்”
வயிற்றில் மட்டுமட்டுவென்று இரு கைகளால் அறைந்தாள். “பிள்ள கருமாயப்படுதுன்னு கேட்டதும் எம் மனசு என்ன பாடுபட்டுச்சு தெரியுமா? இனி எம் பிள்ளைகளுக்காக நிக்கணும்னு துடிச்சுத்தானே வந்தேன்…”
“எம் பிள்ளைகள வளக்க எனக்குத் தெரியும். எப்பிடி வந்தியோ அப்பிடியே போயிரு. போ நீயாவது நல்லா இரு.”
வேகமாக தார்ச்சாலையில் இறங்கிக் கடந்து கல்லூரி செல்லும் பாதையில் நடந்தாள். விரிந்த பொட்டணத்தில் இரண்டு ஜிமிக்கிகளும் இரண்டு கொலுசுகளும் தெரிந்தன. கண்கள் கரைகட்டி நிற்க குனிந்து அந்தப் பொட்டணத்தை அம்மாக்காரி எடுத்தாள். “நான் நல்லா இருந்தா ஏன்டி இப்படி அல்லல்படுறேன். என் சீரழிவு அந்த கடவுளுக்கே பொறுக்காது…” வெகு தூரத்திலிருந்து இரவெல்லாம் பேருந்துவில் வந்திருப்பாள் போல. தலை எண்ணெய் இல்லாது காய்ந்து கிடந்தது. ஒன்றிரண்டு நரைகள் தென்பட்டன. நெற்றியும் மூக்கும் செல்வியை இனம் காட்டின. தூக்கச்சடவோடு வந்திருப்பது முகத்தில் தெரிந்தது. தார்ச்சாலையில் இறங்கி அந்தப் பக்க மேட்டில் ஏறி நின்று கல்லூரிக்குப் போகும் மகளைப் பார்த்தாள். “நீ என் ஆத்தா வம்சமடி” மெல்ல முனக அவளின் அடிவயிறு துடுக்துடுக்கெனக் குதித்தது. முகத்தைச் சுழித்து மூக்கில் இறங்கும் கண்ணீரை விரல்களால் துடைத்து சேலையில் இழுகிக் கொண்டு தார்ச்சாலையில் இறங்கி இடது ஓரம் நடக்கத் தொடங்கினாள். அவள் கழுத்தில் அழுக்கேறிய ஒரு மஞ்சள் கயிறு மட்டும்தான் தென்பட்டது.