பெருந்தேவியின் “பெண் மனசு ஆழம் என 99.99 சதவீத ஆண்கள் கருதுகிறார்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து.
சமூகத்தின் அசைவுகளுக்கிடையில் உந்தப்படும் மனிதன் அந்தப் பாடுகளை எழுதிவிடுதல் என்பது இன்று நேற்றல்ல, காலங்காலமாக தொடரும் ஒரு நிகழ்வு தான். மனித வாழ்வின் போக்குகளை மாற்றியமைத்த ஒவ்வொரு சம்பவங்களின் முன்னும் பின்னுமாக புதிய ஒழுங்குகளும் ஒழுங்கமைவின்மைகளும் நிகழ்ந்தேறியிருந்தன. அதையே இலக்கியங்களும் பிரதிபலித்தன. அவற்றில் சில கலையாகின. சில பிரச்சாரங்களாயின. இன்னும் சில தங்களுக்கான இடங்களைக் கோரி கூவி அழைத்துக் கொண்டே இருக்கின்றன.
நவீனத்தின் பின்னான ஊடுபாய்ச்சலில் ஒழுங்குகளை மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டு நிகழும் இன்றைய நாளில் அதன் மீதான தன் விமர்சனங்களை, விசனங்களை பெருந்தேவி முன் வைக்கிறார். “ஏதாவது ஒன்று குறுக்கே வந்துவிடுகிறது” என்ற வரிகளின் ஊடாக சனங்களின் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் அறமின்மைகளையும் அபத்தங்களையும் ஆபத்துகளையும் கவனியுங்கள் என்கிறார். பிரச்சாரத்திற்கும் கலைக்கும் இடையே தங்களைக் குறித்து இந்தக் கவிதைகள் சப்தித்துக் கொண்டிருக்கின்றன.
“கவித்துவம் சொட்டக் கவிதை எழுத எனக்கு மட்டும் தோன்றாமலா இருக்கும்” என்று கவிதையூடாகவே கேட்க முனையும் பெருந்தேவி, அதற்கான காரணங்களையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். கவிதையின் வடிவம், கவித்துவம் என இன்னபிற விடயங்கள் குறித்து சமகாலத்தில் நிகழும் உரையாடல்களில் ஏற்பும் மறுப்புமாக பல முனைகள் துருத்திக் கொண்டு நிற்பது நாம் காணக்கூடியது. இதுவே புதுக் கவிதை என்ற வடிவம் தோன்றியது தொட்டு வழக்காயுமுள்ளது.
கவிதையை அடையாளம் காண அது நிகழ்த்தும் தருணங்களே உதவுகின்றன. அந்தத் தருணம் உங்களுக்குள் என்னவாக உருமாற்றமடைகிறது என்பதில் தான் கவிதை தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. தருணம் என்பது ஒரு கணப்பொழுது தான். அதனால் தான் ஒரு கவிதையை, நல்ல கவிதை கெட்ட கவிதை எனப் பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டும் பிரிக்க முடியும் என்று எழுதுகிறார் ஆத்மாநாம்.
பெருந்தேவியும் தன் எழுத்துகளுக்கான நியாயப்பாடுகளை தெளிவாக வரையறை செய்து அதனூடாகவே தன் தொகுப்பை முன்வைக்கிறார். ஆனால் அவைகள் கவிதைகளாகி விடுகின்றனவா என்பது ஏற்பும் நிராகரிப்பும் கொண்டதுவாகவே இருக்கிறது.
ஊடாடும் மனத்தை, வாழ்வின் இடையறாத சலிப்பை அல்லது வெறுமையை, நிகழ்காலம் தந்து கொண்டிருக்கும் நிராகரிப்பை சட்டென எறிந்து செல்ல முயலும் எழுத்துகள் இந்தத் தொகுப்பில் நிறைந்திருக்கின்றன. வாழ்விலிருந்து விலகி நின்று வாழ்வைப் பார்த்து நகைப்பதும், அவ்வளவு தானா என்று கடந்து செல்வதும், கடந்து செல்லும் தற்துணிவை கடத்துவதுமாக நிகழும் கவிதைகள், சில சந்தர்ப்பங்களில் மிகையோசை கொண்டு அலைக்கழிக்கின்றன. விலகி நின்று பார்த்தலுக்கும் அந்த வாழ்வினுள் அள்ளுண்டு போய் அலைவுற்றும் சிதைவுற்றும் திசையறியாது மூழ்கிக் கந்தலாகி எழுந்து நிற்கையில் காணுதலுக்கும் இடையில் இருவேறு உலகங்கள் இருவேறு தரப்புகள்.
இன்று வாழ்வு என்னவாக மாறி இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கையில் பூமியதிர்வில் நொறுங்கும் நவீன யுகத்து உயர்வசதி இருப்பிடங்களைப் போல ஒவ்வொன்றாக உடைந்து விழுந்துகொண்டே வரும். இறுதியில் மிஞ்சியிருப்பது காலடி மண் மேடுதான். அழிவு நிகழ்த்தும் அழகியலை பக்தி மார்க்கப் பாடல்களிலும், இலக்கியங்களிலும் கொண்டாடிய நாம், எம் முன்னே நிகழும் அந்நியமாதலையோ, ஒடுங்குதல்களையோ அதன் வடிவங்களையோ கவனிப்பதில்லை. பெருந்தேவி அதை குளிர் போய் விட்டது என்ற சிறுகவிதையில்
அவற்றைப் பார்க்க ஆன்மா வேண்டும்என்னிடம் ஸ்மார்ட்போன் தான் இருக்கிறது.
என்று எழுதுகிறார்.
நவீனம் நம் உள்ளங்கைகளில் உலகைத் தந்துவிட்டு ஆன்மாவை பறித்துச் சென்று விட்டிருக்கிறது. சாறு எடுக்கப்பட்ட கரும்பை கையில் வைத்துக்கொண்டு சுவையினை கனவு காணும் ஒரு சிறுவனின் உள நிலைக்கு குறைவானதில்லை இந்த நிலை. இந்தக் கவிதையில் ‘வசந்தோற்சவம்’, ‘ஆன்மா’ என்ற சொற்கள் உள்வாங்கப்பட்டிருக்கும் முறை பழமையை நினைவூட்டியும் ஸ்மார்ட் போன் மூலம் நவீனத்தையும் இணைத்து விடுகிறார்.
பஜ்ஜிக்கு சலித்து வைத்த மாவில்சின்னக் கரப்பான் ஒன்று குதித்துமாவை பூசிக்கொண்டுதாவியோடுகிறது.பகல் கூத்துக்கு நீ மட்டும்வேஷம் கட்டினால் போதுமா?
நவீனத்தின் பிடியில் ஆன்மாவைத் தொலைத்துவிட்டாலும், இன்னும் இந்த வாழ்வின் பிடிமானங்கள் எங்கோ ஒரு மூலையில் மீந்து கிடக்கின்றன. நாம் தான் அதனை கண்டுகொள்வதில்லை. ஒரு கரப்பான்பூச்சியில் பெருந்தேவி அதனைக் கண்டுபிடித்துச் சொல்கிறார். இன்னும் ஒருபடி மேலே போய், “நீ மட்டும் வேஷம் கட்டினால் போதுமா? இந்தப் பகலில் நாங்களெல்லாம் வேஷம் கட்ட வேண்டாமா?” என்று கேட்கிறார். பொதுவாக, கரப்பான்பூச்சி பகலில் நடமாடக் கூடியதல்ல. தவிர, ஆட்களற்ற பகுதிகளில் தான் அவதானிக்க முடியும். இது அந்த வீட்டின் தனிமையை வெளிப்படுத்தி இருக்கிறது. பேச்சுத் துணையாக ஒரு கரப்பான்பூச்சியைக் கண்டடைதல் எவ்வளவு கொடுமை. கவிதை கலையாகிவிடுதலை உணர்த்தும் சில தருணங்கள் இவை. மனத்தால் வாசித்து காட்சியாகவும் இதனை நகர்த்த முடியும்.
கடவுளைப் போல சக்தியோடு நான் இருக்கிற தருணம் என்று ஓரிடத்தில் எழுதுகிறார். எறும்பு தேநீரில் படபடத்து நீந்துகிறது. அதனிடம் உன் ஆறு கால்களில் இரண்டை தூக்கித் தான் கும்பிடேன் என்று கேட்கிறார். ஆறிப் போன தேநீரை ஒரு குறியீடாக்கி, எனக்குப் பணிந்து கொள் உன்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லமுனையும் குரல் இதில் ஒளிந்து கிடக்கிறது. இவை கவிதை நிகழ்த்தும் தருணங்கள் தான். ஆனால் இவற்றின்பின் ஊறிக் கிடக்கும் மனோநிலையை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
ஒரு சிறுகதையைப் போல அழைத்துச் சென்று, இறுதி வரிகளில் அதனை இன்னொரு தளத்திற்கு நகர்த்தி, வாசிப்பவருக்கு அதற்கு எதிரானதொரு புரிதலை உருவாக்கிவிடவும் முனைகிறார். இரண்டாயிரங்களில் எழுதப்பட்ட கவிதைகளின் சாயலை இன்னமும் அந்தக் கவிதைகள் தக்க
வைத்திருப்பதை உணர்த்தி விடுகின்றன.
பைக் ஓட்டுவது என் அண்ணனென்றுஉனக்குத் தெரிந்துவிட்டதாஇல்லை என் காதலனோடு போனாலும் தான்பாதகமில்லையென்றாநீ ஒழுக்கசீலனா சந்தர்ப்பவாதியாசிக்கென்றுதான் இருக்கிறாய்
இந்தக் கவிதையின் தலைப்பு 29சி உதயகுமரன். இன்றையை கவிதை பேசினாலும் அதன் தலைப்பு மணிமேகலை வரை அழைத்துச் சென்று வருகிறது. உதயகுமாரன்களை கண்முன்னே கொண்டு வருகிறது. “சிக்கென்றுதான் இருக்கிறாய்” என்ற முடிவு இன்னொரு குரலை அறிமுகப்படுத்துகிறது. சமூகத்தால் மூடி அமுக்கி வைக்கப்பட்ட குரல் அது. ஒருவகையில் அது மணிமேகலையின் குரலாகவும் இருக்கிறது. ஆனால் இது எவ்வளவு தூரம் கவிதையாகி இருக்கிறது? நாமாக வலிந்து பொருள் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா ?
பெருந்தேவி தன் கவிதைகளில் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முயல்கிறார். மொழியில் வடிவச் சிதைவுகளை உருவாக்கி எழுதுகிறார். சந்தைக்குப் புதிதாக வந்திருக்கின்ற “வசீகரமான டில்டோக்களைப் போல சொற்கள் வழுக்கிக் கொண்டு செல்ல வேண்டும்” என்று ஒரு கவிதையில் எழுதுகிறார். புதுக் கவிதை என்ற கோட்பாட்டு மீறலை, அது கொடுத்திருக்கும் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறார். நகைச்சுவையாகவும் முரணாகவும் எல்லாவற்றையும் சொற்களில் கொண்டு வருகிறார். அவைகள் தொடர்ச்சியான எழுத்துச் செயற்பாட்டில் எந்த வகையில் மாற்றங்களை அல்லது புதுமையை முன்னெடுத்திருக்கின்றன என்ற கேள்வியை முன்வைத்தேயாக வேண்டும். “எனது கவிதையின் குரல் என்னுடையதில்லை” என்றும், “அதன் கூக்குரல்களுக்கு நான் பொறுப்பேற்பதாகவும் இல்லை” என்றும் எழுதும் போதும் இந்தப் பழைய தப்பித்தலுக்கு இன்னும் என்ன தேவையிருக்கிறது ?
“‘எதிர்க்கவிதையை வாசித்தல், நவீன தமிழ் எழுத்து போலச் செயலாமென சமாதானப்படுத்தியது குரங்கு என்று சொல்லும் பின்நவீனத்துவக் காடு’ என்கிறார் மூத்த கவிஞர்” போன்ற கவிதைகள் தமிழ்ச்சூழலில் எழுத்துச் செயற்பாடுகள் குறித்த கிண்டலைச் செய்கின்றன. தமிழின் நவீன கவிதைகள் மீது ஏற்படுத்தப்படும் திணிப்புகளைக் குறித்து கேலி செய்கிறது. எதிர்க்கவிதை என்பது புதுக்கவிதைக்கு எதிரானது என்றால் இவை இரண்டுக்குமே ஏதோ ஒரு பண்பினை வழங்கி விடுகிற தன்மையைக் காணலாம். பண்பு நீக்கம் செய்யப்பட்டு எழுதப்பட்டுக் கொண்டிருப்பது தான் புதுக்கவிதை.
கவிதைகள் வாசிப்பவனிடத்தே உருவாக்குகின்ற உணர்வுகளே முக்கியமானவை. ஒவ்வொருவருக்கும் கவிதைகள் ஒவ்வொரு புரிதலைத் தந்துவிடும். இன்று வாசிக்கும் கவிதை இன்னொரு நாளில் இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு வெளிப்படுத்தலையும் நிகழ்த்தும். நல்ல கவிதை என்பது புதிய அனுபவத்தையும் புரிதலையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மீள மீள தன்னை நினைப்பூட்டிக் கொள்ளும் வகையிலும் இருந்துவிட்டால் போதுமானது.
“இன்னொருத்தனாய் நான் நடித்த போது”, “நம்பிக்கை வேண்டும் மக்களே”, “பெயரும் செயலும்”, “அங்கீகாரம்” போன்ற கவிதைகளை நாம் வாழும் காலத்தின் அடையாளமாக முன் வைக்கலாம். இந்தத் தொகுப்பினது வெளிப்படுத்தல்கள் இந்தக் கவிதைகள் தான். கண் முன்னே நிகழும் சமூகத்தின் உண்மை முகத்தினை நிரந்தமாக்குகின்ற போக்குகளையும் அவதானிக்க இயலும்.
கடைசியாக ஆதாரை ஆண் பெண் குறிகளோடுஇணைப்பது கட்டாயமென்று சொல்லி விட்டார்கள்அட்சய திருதியை வரை நேரமிருக்கிறதாம்தங்கக் கொக்கியால் இணைக்க நினைப்பவர்கள்அன்றைக்கு வாங்கினால் செய்கூலி சேதாரமில்லைமற்ற வகைகள் பிளாஸ்டிக்கிலிருந்து ஆக்சிடைஸ்டு வரைசாதாரண அண்ணாச்சி கடையிலேயேகிடைக்கிறதென்கிறார்கள்.
அண்ணாச்சி கடையிலேயே எல்லாம் கிடைக்கிறதென்பதும், ஆதார் அட்டை கண்காணிப்பு கருவியாகியதையும், இன்னும் சிலர் அட்சய திருதியை கனவிலேயே இருப்பதையும் நகைச்சுவையோடு கூறுகின்ற இக்கவிதை சமூகத்தின் கையறு நிலையை உள்வைத்துத் தான் எழுதப்பட்டிருக்கிறது. “விமானத்தை விட்டிறங்கிய ஐந்து வயது சிறுவன்”, “வந்தேறி” போன்ற கவிதைகளும் இதே கையறு நிலையைத் தான் பேசுகின்றன.
இருபது வருடங்களுக்கு மேலாக கவிதைகளுடன் இயங்குகின்ற கவிஞர், அடையாளங்களை மறுப்பதாக எழுதிக் கொண்டிருந்தாலும், சில கவிதைகளில் அடையாளங்களைப் பதிந்து விடுகிறார். அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை. இயல்பாக அவர்களை மீறி எழுகின்றது என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. ‘த்சோ’ என்ற கவிதை வழங்குகின்ற அடையாளமும் வந்தேறி வழங்குகின்ற அடையாளமும் சில பொழுது போக்குகள் என்ற கவிதை கேட்கின்ற அல்லது விரும்புகின்ற அடையாளமும் அவருக்கான அடையாளத்தைத் தந்துவிடுகின்றன.
ஒரு மத்தியதர சமூக மனநிலையை அல்லது அதற்கும் மேலான ஒரு சமூகத்தின் ஊடுபாயும் கவலைகளின் குரலாய்த் தான் இந்தக் கவிதைகள் ஒலிக்கின்றன. அவைகளைத் தான் இந்தக் கவிதைகள் கவனங்கொள்கின்றன. பொதுவாக இலட்சியவாதத்தையும் எதிர் கூறல்களையும் முன்வைக்கும் கவிதைகளை விடுத்து இந்தக் கவிதைகள் உள்ளதை உள்ளபடியே சொல்லி விடுவதும் அதன் போக்கிலேயே கடந்து விடுவதும் இன்னொரு புரிதலை உருவாக்குகின்றன. அதுவே இந்தத் தொகுப்பின் கவனம் கொள்ளக்கூடிய தன்மையாக இருக்கிறது.