அன்னையிட்டத் தீ! – க. மோகனரங்கன்

0 comment

ஆசி வேண்டிப் பணிந்த வேந்தனை நோக்கிப் புன்னகைத்த துறவி சொல்கிறார்: “முதலில் உன் தந்தை இறப்பார்; பிறகு நீயும் சாவாய்; இறுதியாய் உன் மகன் மரிப்பான்.” கேட்டதும் குழம்பித் திகைத்த மன்னனை உடன்வந்த அமைச்சர் ஆற்றுப்படுத்துகிறார். “இப்புவியிலேயே பெரிய சோகம் புத்திர சோகம் தான். அது தங்கள் வம்சத்திற்கு நிகழாது என்றே அவர் வாழ்த்தியுள்ளார்.” மனம் தெளிந்த மன்னன் மறுபடியும் ஒருமுறை அவரை வணங்கிச் செல்கிறான்.

பழுத்த இலை உதிரும் போது இயற்கையின் நியதி இதுவெனத் தேற்றிக் கொள்ளும் மனம் கூட பச்சைத்துளிர் ஒன்று வீழும்போது ஆற்றிக்கொள்ள இயலாமல் பரிதவித்துப் போகிறது. புத்த ஜாதகக் கதையொன்றில் தன் இளவயது மகனைப் பறிகொடுத்தத் தாய் ஒருத்தி வருகிறாள். ஒரே மகன் என்பதால் அவனை உயிர்ப்பித்துத் தருமாறு புத்தரிடம் அழுது அரற்றுகிறாள். அவளை அமைதிப்படுத்திய கௌதமர், மரணம் நிகழ்ந்திராத வீட்டிலிருந்து ஒருபிடி கடுகு வாங்கி வரப் பணிக்கிறார். அலைந்து திரிந்த பிறகும் அப்படியொரு வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் போகும் அத்தாய் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்று அறிய வருகிறாள். ஆனால் தனக்கு முன் தன்பிள்ளை போய்விட்ட தவிப்பை அவ்வுண்மை எவ்விதத்தில் தணிவித்திருக்கும் என்பது புதிர்தான். உணர்ச்சிகளின் கொந்தளிப்புக்கு முன் தர்க்கங்களுக்கு பெறுமதி ஏதுவுமில்லை.

முகநூலில் நான் விரும்பிப் படிப்பனவற்றுள் கவிஞர் பாதசாரியின் பதிவுகள் முதன்மையானவை. பற்றற்றதொரு நோக்கிலும் சுயஎள்ளல் தொனியிலும் அவர் எழுதிச் சேர்த்திடும் எண்ண விசாரங்கள், பல சமயங்களில் நம்முள் மென்னகையைத் தருவிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை மன இறுக்கத்திலிருந்தும் விடுப்பதாகவும் அமையும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவர் எழுதியிருந்த ஒரு பதிவு, வழக்கத்திற்கு மாறாக, மனதைக் கனக்கச் செய்வதாக இருந்தது

ஓராண்டுக்கு முன் பணிவு ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். கடும் மனப்பிறழ்வில், ஓயாது பேசி, உறக்கத்திலும் பேசி, நிரந்தரமாக ஓய்ந்துவிட்டார். முடிவு நிகழ்ந்தது இப்போது தான் என்றாலும் இதற்கான மூலவித்து பல வருடங்களுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது.

இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலையில் ஆறு மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போய் தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனையின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் போது வந்த தகவல் இடியென இறங்கி அவரைச் சிதறடித்தது. வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்த அவருடைய ஒருவயது குழந்தை வாசலில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து மூழ்கிவிட்டது. கணவர் இவரை ஸ்கூட்டரில் கொண்டுவந்து பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு மறுபடியும் வீடு திரும்புவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்போதும் போல அவர்களோடு ஸ்கூட்டரில் முன்னால் நின்றுகொண்டு வராமல் அன்று பார்த்து வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்த பையனை கவனிக்காமல் மாமியார், நாத்தனார் கவனக் குறைவாக இருந்துவிட்டார்கள்.

கால் நூற்றாண்டு கடந்து, அந்த செவிலி பணிஓய்வு பெற்றவராக வீட்டில் உட்காரும் போது உள்ளத்தின் உள்ளே பதுங்கியிருந்த இனம்புரியாத, அறிவின் கரைதாண்டிய குற்றவுணர்வு, ஆழிப் பேரலையாக உருவெடுத்து அவருடைய மனநலனைச் சூறையாடிவிட்டது. இறந்த குழந்தைக்கு அன்று காது குத்தி, சடங்கு செய்வித்துப் புதைத்த நினைவுகள் அவர் மனதிலிருந்து நீங்கியிருக்கவில்லை.

ஒரு சாட்சி போல சம்பவத்தை விலகி நின்று விவரிக்கிற கவிஞர் கடைசியாக, ‘மனசாட்சி உள்ளவர் எவரும் குற்றவுணர்வுக்கு ஆட்படலாகாது, பட்டால் படுவினைத்துயர் அது காவு வாங்கும்’, என்று தமது பதிவை முடிக்கிறார்.

‘அனைத்து உயிரிகளிலும் அன்னை என்பவள் தான் மூர்க்கமானவள்’ என்றொரு ஆங்கில வழக்கு உண்டு. தன் குழந்தையின் பொருட்டு ஓர் அன்னை அடைய நேரிடுகிற துயரத்திற்கும் ஆவேசத்திற்கும் எல்லை ஏதும் இல்லை. அத்தகையதொரு அன்னையின் குரலாக ஒலிக்கிறது பின்வரும் புறநானூற்றுப் பாடல்.

“வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்ஓர் அன்ன இளையர் இருப்பப்
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டில் கிடபித்
தூவென் அறுவை போர்ப்பித் திலதே”

திணை – கறந்தை, துறை – வேத்தியல்
புறம் – 286, பாடியவர் – ஒளவையார்

‘வெள்ளாட்டுக் கிடாக்களைப் போல அவனையொத்த இளைஞர் பலர் இருந்தபோதிலும் அவர்களுக்கும் மேலாக என் மகனுக்கு வழங்கப்பட்ட கள், அவனை காலில்லாத கட்டிலாகிய பாடையில் கிடக்க வைத்து, தூய வெண்ணிற ஆடையால் மூடச் செய்திருக்கிறது.‘ இங்கு மகனைப் பறிகொடுத்த அன்னை அழுது அரற்றினாள் அல்ல. மாறாக அவளது சீற்றம், தணிந்த குரலில் ஆனால் தணியாத வெம்மையோடு வெகு சிக்கனமாக வெளிப்படுகிறது – இக்கவிதையில். இவ்வளவு கால இடைவெளிக்குப் பிறகு இப்போது படிக்கும் போதும் உறையாதிருக்கும் அத்துக்கம் இவ்வரிகளில் இன்னமும் கசிந்து கொண்டிருப்பதை உணரலாம். இதற்கு மாறாக மன்னரால் கள் வழங்கப்பட்ட தன் மகன், அவருக்காக வேண்டிப் போரில் மரித்திடும் பேறு பெறாமல் போயினானே என அத்தாய் வருந்துவதாகப் பொருள் கொள்பவரும் உண்டு. அது போரை ,வெற்றியை, வீரத்தை சிறப்பிக்கும் முகமாக வரித்துக்கொண்ட ஆண்மைய  நோக்கினின்று பிறப்பது. ஆனால், ஒரு தாயின் ஆற்றாமை எனக் காண்போமாயின் முதற்சொன்ன பொருளே சாலவும் பொருந்தி நிற்கும்.

என்னுடைய நண்பரொருவர் பயிற்சிபெற்ற உளவியல் ஆலோசகர். தொடக்க நிலையிலான மனநலப் பிரச்சனைகளுக்கு சம்மந்தப்பட்டவர்களோடு உரையாடி, அவர்களுடைய சிக்கலின் மூலத்தைக் கண்டறிந்து தகுந்த ஆலோசனைகள் வழங்குவது அவருடைய பணி. பெயர் , ஊர் முதலிய அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு அவர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவில் ஆழப் பதிந்துபோனது.

திருமண வயதிலுள்ள இளம்பெண் பொறியியல் படித்து முடித்து பெயர்பெற்ற பன்னாட்டு நிறுவனமொன்றில் கைநிறைய ஊதியத்துடன் பணிபுரிகிறாள் .பள்ளிப்பருவம் தொட்டு உடன் பயின்றுவரும் நண்பன் கல்லூரியின் இறுதிவருடத்தில் அவள் மீதான தன் காதலைச் சொல்கிறான். முதலில் தயங்கினாலும் அவனுடைய தொடர்ச்சியான வேண்டுதல்களுக்கு  இணங்கி சம்மதிக்கிறாள்.

சிலவருடங்கள் இனிமையாகக் கழிந்தது. திருமணம் குறித்து வீட்டில் பேச வேண்டும் என்கிற நிலை வரும்போது பையன் தயங்குகிறான். அவன் வீட்டில் அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. அப்பெண்மணி முதலில் மகனின் முடிவைக் கடுமையாக எதிர்க்கிறார். பிறகு அவனுடைய மனவாட்டத்தைக் கண்டு சற்றே  இறங்கிவந்து ஒரு தீர்வை முன்வைக்கிறார். குல தெய்வம் கோவிலில் வைத்து பூ போட்டு பார்ப்பது. முடிவு சாதகமாக வந்தால் அம்மா சம்மதிப்பது, பாதகமாக வந்தால் மகன் விட்டு கொடுத்து விடவேண்டும். பையனுக்கு எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டால் போதும் என்கிற நிலை. தலையாட்டுகிறான்.

ஒரு வெள்ளிக்கிழமைக் காலையில் சாமி சன்னதியில் அவர்கள் நினைத்துக்கொண்ட வெள்ளைப் பூவுக்கு பதிலாக சிவப்பு பூ கையில் வந்தது. பையன் தயங்கித் தயங்கி வந்து தன்னை மன்னித்துவிடுமாறு அப்பெண்ணிடம் அழாதகுறையாக வேண்டுகிறான்

“சுயமாக முடிவெடுக்கத் தெரியாத குழப்பவாதி சார் அவன்” என நண்பரிடம் குமுறினாள் அப்பெண். “பள்ளி நாட்களிலிருந்து அப்படிதான். எந்த வண்ணத்தில் உடை எடுப்பது, என்ன உணவிற்கு ஆர்டர் செய்வது, எந்தப் படத்திற்கு செல்வது எனச் சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட தயங்கித் தடுமாறுவான். நான்தான் அவனுக்காக முடிவெடுப்பேன். கைளைப் பற்றிக்கொண்டு நன்றி சொல்வான். ‘நீ இல்லாவிட்டால் நான் என்ன ஆவேனோ தெரியாது’ என்று குரல் ததும்ப அவன் சொல்லிய போதெல்லாம் நான் நெஞ்சு விம்ம நின்றிருக்கிறேன். இன்று என்னை வேண்டாம் என்று உதறிவிட்டுப் போக அவனால் எப்படி முடிந்தது என்று ஆத்திரம் ஒருபக்கம் வந்தாலும், மறுபக்கம் நான் இல்லாமல் அவன் எப்படி சமாளிப்பான் என்கிற கவலை தான் என்னைப் பெரிதாக வருத்துகிறது. வேலையில் கவனம் சிதறகிறது. வீட்டில் எல்லோரிடமும் எரிந்து விழுகிறேன். நண்பர்களைப் பார்ப்பதில்லை. வெளியே எங்கும் போவதில்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். இது என் சுபாவமேயல்ல.“ கண்ணில் நீர் வழியச் சொன்னவளை நிறைய பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நண்பர் கடைசியாக அவளிடம் வினவுகிறார்.

“ஒருவேளை மனம் திரும்பி வந்தால் அவனை மறுபடியும் நீ ஏற்றுக்கொள்வாயா?”

என்ன சொல்வது எனப் புரியாமல் ஒருநிமிடம் மெளனமாக யோசிக்கிறாள்.

“என்னை வேண்டாம் என்று மறுத்த போதே அவன் மீதிருந்த காதலெல்லாம் வடிந்து விட்டது. இப்போது நான் இப்படி கிடந்து அல்லல்படுவதெல்லாம் அவன் பாவம் தனியே எப்படி சமாளிக்க போகிறானோ என்கிற பச்சாதாபத்தால் தான் என்று தோன்றுகிறது.”

நண்பர் அவளைக் கண்மூடி உள்மனதை உற்றுக் கவனிக்கச் சொல்லிவிட்டு, அவள் ஞாபகத்தை மெல்ல மெல்லப் பின்னகரச் செய்கிறார்.

“நீ அவனை எப்போது முதன் முதலாகப் பார்த்தாய்? நினைவுபடுத்திச் சொல்”

அவள் மெதுவாக நினைவின் தடத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறாள். கல்லூரி நாட்களையெல்லாம் கடந்து பள்ளிப் பிராயத்திற்குள் நுழைகிறாள்.

“ம். இப்போது கவனத்திற்கு வந்துவிட்டது” தலையை ஒருதரம் உதறிக்கொண்டவளாகத் தன் கண்களைத் திறவாமலேயே சொல்கிறாள்.

“அது நடந்தது மூன்றாம் வகுப்பில். நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அவன் புதிதாக வந்துசேர்கிறான். அவனுடைய அப்பா விட்டுவிட்டுப் போன பிறகும் வாசலையே பார்த்து தேம்பிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, ‘பயப்படாதே’ என்று சமாதானப்படுத்தி பையில் வைத்திருந்த சாக்லேட்டில் பாதியைப் பிட்டு அவனுக்குத் தந்தேன்”. நண்பர் பிறகு அவளிடம் பொறுமையாக விளக்குகிறார். ‘உங்களிருவருக்குமிடையில் ஆழமான ஒரு உறவு இருந்திருக்கிறது, பொய்யில்லை. ஆனால், அது நீங்கள் புரிந்து கொண்டது போல காதல் அல்ல. சின்னஞ்சிறுவனாக அவன் அழுதுகொண்டு வகுப்பில் நின்றிருந்த முதல் கணத்திலிருந்து அவனிடம் பரிவுகாட்டியும் பாவனை செய்தும் நீ வகித்து வந்திருப்பது ஓர் அன்னையின் பாத்திரத்தைத் தான். வீட்டில் அவனுக்காக முடிவுகளை எடுப்பது அவனது அம்மா என்றால், வெளியே எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொண்டாய். இரண்டு இடத்திலும் அவனாக சிந்தித்து சொல்பட வேண்டிய நெருக்கடிகள் எதுவும் இதுவரையிலும் நேர்ந்ததில்லை. இப்போது அம்மாவா? நீயா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அம்மாவின் நிழலில் ஒளிந்து கொண்டுவிட்டான். இப்போது நீ வருந்துவதும் கூட இழந்த காதலை எண்ணி அல்ல. உன்னுடைய இந்தத் துக்கம் மகனைப் பிரிந்த அன்னையுடையதைப் போன்றதே”

அவள் அதிர்ச்சியாக நண்பரை ஏறிட்டுப் பார்க்கிறாள். அவர் புன்னகையோடு மேலும் தொடர்கிறார். ‘உனக்குக் கிடைக்காமல் போவது எல்லாமே இழப்பு என்று எண்ணாதே! சில சமயம், அது அதிர்ஷ்டத்தின் தீண்டலாகக் கூட இருக்கும் என்று சொல்வார்கள். ஒருவேளை, அவனைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆண், பெண் உறவின் உண்மையான பரிமாணத்தை, அதன் கொடுக்கல் வாங்கலை முழுமையாக அறிந்திராமலே போயிருப்பாய். ஆனால், இப்போது எதிர்காலத்தில் வரவிருக்கும் கணவனுக்கு உகந்த மனைவியாகவும், உனது சொந்த குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்கப் போகிற நல்வாய்ப்பு உன்முன் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் ”

வெகுவிரைவிலேயே அந்தப் பெண் அவ்வழுத்தத்தினின்றும் விடுப்பட்டவளாக தன் அன்றாடத்திற்கு திரும்ப வந்துவிட்டதாக நண்பர் சொல்லி முடித்தார். அதன் பிறகு பலமுறை நான் இதைக் குறித்து யோசித்ததுண்டு. மூன்றாம் வகுப்பில் படிக்கும் ஒரு எட்டு வயதான பெண் அந்த வயதிற்கேயுரிய குழந்தைத்தனத்தையும் தாண்டி தன்வயதுடைய ஒரு சிறுவனுக்கு தாய்மையின் பரிவைக் காண்பிக்க முடிந்திருக்கிறது. அது எவ்விதம் சாத்தியமாகிறது என்று வியந்து நின்றிருக்கிறேன். பரிணாமத்தின் தொடர்ச்சி இடையில் எங்கும் அறுந்துபடாமல் இருக்க இயற்கை வரித்துக் கொண்டிருக்கும் உத்திதான் போலும் இத்தாய்மை உணர்வு என்று தோன்றியது. தாயைக் குறித்து எண்ணிறந்த கவிதைகள் நாம் படித்திருப்போம் என்றாலும் தாய்மை என்கிற பிம்பத்தை பெரிய அளவில் ரொமான்டிசைஸ் செய்யாமலும், அதே சமயத்தில், அதன் அசலான ஆகிருதியை துல்லியமாகவும் நேரடியாகவும் விவரிக்கிறது ராஜாசுந்தரராஜனின் பின்வரும் கவிதை. இது அவருடைய மொத்தக் கவிதைகள் அடங்கிய “தாய்வீடு” தொகுப்பில் உள்ளது.

அம்மா

வெளிப்பட்டு வீறிச் செல்கிற நீராவி
ஒரு விசையாக மாறி
எந்திரங்களை உருட்டும்
கொதிகலன் நாள்பட நாள்பட இற்றுப்போகும்
வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில்
செடிகளுக்கு
விதையிலைகள் வேண்டாதனவாகிவிடும்
குஞ்சுகள் கோழியாகும்
சேவல்கள் கூட வரும்
அடைகாத்த சிறகுகளில் இறகுகள் உதிர்ந்துவரும்
காற்றோடு போய்
அங்கங்கே வேரூன்றி விடுவன
வித்துகள்
சாவிலும் கூட
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்

நம்முடைய கரிசனமும், வாஞ்சையும் நம் சந்ததிக்குத் தான் மிகுதியும் போய்ச் சேருகிறது. பெற்றோருக்கு அதில் பகுதி கிடைத்தாலே அதிகம் தான். அடைக்கப்பட முடியாதது பெற்றகடன். அதனால் தானோ என்னவோ தாய்மை பற்றின ஆக்கங்கள் அனைத்திலும் நிழலெனப் படிந்திருக்கும் ஒருவித சுய இரக்கத்தையும் குற்றவுணர்வையும் நாம் காண முடியும். பிள்ளைகளின் அந்த விலகலை உயிர் இயல்பு இதுவென பற்றற்றதொரு தொனியில் இக்கவிதை சுட்டுகிறது. இத்தொனியினாலேயே அவ்வுணர்வு மேலும் ஆழமாகிறது. ‘இனியும் பாலாகப் பாலாகத் துடிக்கும் மார்புக் குருதியின் நாடி’ என்றொரு வரி பாதசாரியின் கவிதையில் வரும். ஒரு பெண் தன் வாழ்வின் போக்கில் இயல்பெனக் கடக்கும் அந்த அனுபவம் எம் போன்ற ஆணுக்கு எவ்வளவு யோசித்தாலும் தீராத அதிசயம் தான். அதை வியப்பதன்றி வேறென்ன செய்யவியலும் அவர்களால்?