ஆஸ்கார் 2020 : சில அவதானிப்புகள்

0 comment

1985-ஆம் ஆண்டு ’அமேடியஸ்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. அதை மேடையில் அறிவித்த லாரன்ஸ் ஆலிவர் அவசரத்தில் நாமினிகளைக் குறிப்பிட மறந்து விட்டிருந்தார். ஒவ்வொரு பிரிவிலும் விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அப்பிரிவில் இருக்கும் பரிந்துரைகளைக் குறிப்பிட வேண்டுமென்பது ஆஸ்காரின் மரபு. அதைச் சொல்ல விட்டு விட்டோமே, சொல்லியாக வேண்டுமே என்ற புரிதலுக்குச் சென்று மீளும் முன்னரே அமேடியஸ் குழு முண்டியடித்து மேடைக்கு வந்துவிட்டிருந்தது. இதை ஒரு தனி நபரின் தடுமாற்றம் எனக் கொள்ளலாம்.

வெகு சமீபத்தில் 2017-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் போது கூட இப்படியொரு குளறுபடி ஏற்பட்டது. பிறகு தவறு திருத்தப்பட்டு மேடையிலேயே மீண்டும் சரியான விருது அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு சிறந்த விருது பெற்ற படம் ‘Moonlight’. ஆனால் முதலில் மேடையில் விருது அறிவிக்கப்பட்டது என்னவோ ‘La La Land’-ற்குத்தான். பிறகு விருது அறிவிப்போடு சேர்த்து அறிவிப்பு உறையைத் தவறாகத் தந்துவிட்டதாக இன்னொரு அறிவிப்பும் மன்னிப்பும் வந்தது.

Moonlight-La La Land குளறுபடி

ஒரு விழாவில் தனிமனிதர்களால் ஏற்படுத்தப்படும் பிழைகளும், தடுமாற்றமும், சேட்டைகளும் ஒரு புறமிருக்க, மொத்தமாக விருது அமைப்பினால் தேர்வுகளில் பிழைகள் ஏற்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயம் ஆஸ்கார் போன்ற வெகுசன விருது அமைப்பு பல குறைபாடுகளும் பல சாய்வுகளும் பல அரசியல் நோக்கங்களுடனுமே விருது வழங்கும் வேலையில் இறங்குகிறது. அது திரைப்படக் கலையின் உன்னத ஆக்கங்களுக்கு விருதுகளைத் தேடித் தேர்வு செய்து வழங்கும் அமைப்பன்று.

2019-இல் வெளியான பல நல்ல திரைப்படங்கள் ஆஸ்காரின் வாசல் வரை கூட வரவில்லை. அவை ஆஸ்காருக்குச் சமர்பிக்கப்படுவதில்லை என்ற வாதத்தில் சிறு உண்மையிருப்பினும், அவற்றை ஆஸ்கார் தனக்குரிய பொருளாதார நோக்கங்களுக்குத் தேவையற்றவையாக கருதுகின்றன என்பதே தெள்ளிய உண்மை. The Lighthouse போன்ற திரைப்படம் ஒரே ஒரு விருதுக்கு மட்டுமே பரிந்துரைப் பட்டியலில் நுழைந்திருக்கிறது என்பதே பெரிய திகைப்பு தான்.

The Lighthouse

மேலே சொன்ன பல தனிமனித பிழைகள் விருதினைத் தேர்ந்தெடுப்பதில் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் அகாடமி ஒரு நெடிய வாக்களிப்பு அமைப்பினை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதன் வழியே ஒரு ஜனநாயக பிரதிபலிப்பு கொண்ட தேர்வு நடைபெறும் என்கிறது. உண்மை தான், அகாடமி ஒரு ஜனநாயக தேர்வு முறைதான், அதில் ஜனநாயகத்தின் சாதக பாதகங்கள் எளிதில் உட்புகுந்து கொள்கின்றன, பெரிதும் பாதகங்கள். ஆனால் அகாடமி விருதுகள் என்பது சினிமா கலையின் உச்ச படைப்புகளுக்கு வழங்கப்படும் ஒன்று என்றோ, புதிய தோன்றா பாதையை உருவாக்கும் படைப்புகளுக்கு வழங்கப்படுவன என்றோ பாவனையும் குழப்பமும் கொள்வது தேவையற்றது.

கடந்த தசாப்தத்தின் வழக்கமாக முன்வைக்கப்படும் கருப்பின பச்சாதாபக் கதைகளையும், LGBT சாராம்சங்கள் கொண்ட திரைப்படங்களையும் அகாடமி தவிர்த்திருக்கிறது. இவ்வருடம் Get Out புகழ் Jordan Peele-யின் Us திரைப்படம் முழுதாகவே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. Portrait of a Lady on Fire படமும் கவனிக்கப்படவில்லை.

Portrait of a Lady on Fire

இந்த ஆண்டு அகாடமி இப்படி ஒரு சூத்திரத்திற்குள் அடைபடவில்லையே என்று மகிழ்ச்சியடைய முடியவில்லை. ஏனெனில் இன்னும் இருபதாண்டுகளுக்கு முந்தைய சூத்திரத்திற்குள் தன்னை செலுத்தி விட்டிருக்கிறது. ஸ்கார்சஸிக்கு மரியாதை தர வேண்டுமே, டராண்டினோ என்ற அசகாய சூரனை எப்படி புறக்கணிப்பது, 1917 திரைப்படத்தில் மேலெழும்பி நிற்கும் தேசிய அம்சத்தை கொஞ்சம் பாராட்டலாமே என்றெல்லாம் கிளம்பி இருப்பது அதன் தொய்வையே காட்டுகிறது. இன்னொரு புறம் Little Woman, Jojo Rabbit, Marriage Story, The Two Popes போன்ற திரைப்படங்களுக்குச் சற்று கவனமளித்திருக்கிறது என்பதும் ஒரு ஆறுதல்.

தொழில்நுட்ப விருதுகள் பெரிதும் பொருத்தமான தேர்வுகளுக்கே தரப்பட்டிருக்கின்றன. 1917 எதிர்பார்த்தவாறே Best Cinematography, Best Visual effects மற்றும் Best Sound Mixing விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனாலும் கருப்பு வெள்ளையில் மனித வண்ணங்களை முன்வைத்த The Lighthouse திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு கிடைக்காமல் ஒற்றைப் பிடிப்பில் படமுழுக்க ஒரு போர்புலத்தைக் காட்டுகிறோம் என்ற வித்தைக்கு விருது கிடைத்திருப்பது சற்றே நெருடல் தான் எனினும், அகாடமியிடம் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே.

சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட Joaquin Phoenix தான் இந்த விழாவிலேயே முத்தாய்ப்பான தேர்வு. ஜோக்கராக அவர் திரையில் தோன்றிய கணமே அவரை ஆஸ்கார் வெற்றியாளர் என்று ஒருமனதாக பல இணையதளங்களும், விமர்சகர்களும் சொல்லி இருந்தனர். பல ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் நடிப்பை வெளிப்படுத்தி போட்டியில் முன்னின்றவர். ஏற்கனவே அவர் இருமுறை சிறந்த நடிகர் பிரிவிலும், ஒருமுறை சிறந்த துணை நடிகர் பிரிவிலும் பரிந்துரைக்கு வந்திருந்தாலும் இப்போது தான் ஜோக்கர் கதாபாத்திரத்தின் பெரும் பிரசித்தியால் வெற்றியைத் தொட்டிருக்கிறார். இந்த ஆஸ்கார் மேடையிலேயே வெறும் சந்தோஷக் கூச்சல்கள் மட்டும் இட்டுக் கொண்டிருக்காமல் சில நிமிடங்கள் அழகிய குறுஞ்சொற்பொழிவை ஆற்றிவிட்டு சென்ற ஒரே நபர் ஆக்குவின் மட்டுமே.

Joaquin Phoenix

அடுத்ததாக Joker திரைப்படத்திற்காக இசையமைத்த – Hildur Ingveldardóttir Guðnadóttir சிறந்த இசைக்கான விருது பெற்றிருப்பதும் அத்தகைய தனித்த தகுதியான வெற்றியே. Little Women திரையிசை படைத்திருந்த அலெக்ஸாண்ட்ரே தெப்லா அதற்கடுத்ததாக சிறப்பான இசையைத் தந்திருந்தார். அவர் ஏற்கனவே இரு முறை அகாடமி சின்னத்தைத் தீண்டியவர்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக விழாவின் உச்சானிக் கொம்பில் ஏறி அமர்ந்த ஒரு திரைப்படம் Parasite. மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று ஆட்சி அமைத்தனர் என்பார்களே, இவ்வாண்டு பாரசைட் அப்படி அமோக தேர்தல் வெற்றியைக் கண்டுள்ளது.

ஒரு புறம் ஆஸ்காரை வைத்து தமிழகத்தில் கொஞ்சம் கண்ணாமூச்சி விளையாட்டுகளும் நடந்தேறி இருக்கிறது. மின்சார கண்ணா தமிழ்படத்தின் காப்பிதான் இந்த பாராஸைட் என்று பகடியாக ஒரு முகநூல் பதிவு வர, வழக்கம் போல அதற்கு எதிர்வினைகள் வந்து, அதை சில முக்கிய சினிமா குழுமங்கள் பகிரப் போய் இது மின்சார கண்ணா திரைப்பட குழுவினர் வரை சென்று, அவர்களால் வழக்கு தொடுக்கப்படும் நிலை வரை எட்டி இருக்கிறது. உண்மையில் பாராசைட் வெளியாக பல மாதங்கள் ஆகிய பின்னரும் அதைப் பற்றி மின்சாரக் கண்ணா அணிக்கே தெரியாது இருந்த பரிதாபத்தை நினைத்து நாணுவதா, இன்னுமும் இதற்கெல்லாம் வழக்கு தொடுத்து வெல்ல முடியும் என்று அசாத்திய நம்பிக்கையுடன் பேட்டியளிப்பதை எண்ணி தன்னம்பிக்கை கொள்வதா என்று புரியவில்லை.

Parasite

கேன்ஸ் விருது விழாவில் தங்கப்பனை விருது பெற்ற பின்னரே பாரசைட் திரைப்படத்தின் மீது ஒரு உலகளாவிய பார்வை விழுகிறது. அதைச் சுற்றி ஒரு வணிக நதி பெருக்கெடுக்கிறது. அது மெல்ல ரசிகர்களால் தொடர்ந்து பேசப்பட்டும் கொண்டாடப்பட்டும் ஒரு முன்மாதிரி திரைப்படம் என்றும், செவ்வியல் படம் என்றும் ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. இதை இன்னார் தான் செய்தனர் என்று சதிக்கோட்பாடு ஒன்றை நான் முன்வைக்கவில்லை. மாறாக இது விழிக்குப் புலப்படாத சந்தைக்காரணிகளால் நிகழ்த்தப்பட்டது என்கிறேன். அத்திரைப்படத்தின் மீதான வணிக வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன என்பதாலேயே அது அகாடமியின் கண்களை ஈர்க்கிறது. சுவாரஸ்யம் என்பதும் ஏற்கனவே அது உலகெல்லாம் இருக்கும் கொரிய சினிமா ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்பதும் அதற்குத் தேவையானதாக, போதுமானதாக இருக்கிறது.

ஆனால் பாரசைட் கவனம் பெறக் காரணமாக இருந்த அதே தங்கப்பனை விருதுக்கு 2014 ஆம் ஆண்டு பரிந்துரைப் பட்டியலில் இருந்த திரைப்படம் Alex Van Warmerdam இயக்கிய Borgman. இந்த திரைப்படத்தில் நிலத்தில் அறை ஏற்படுத்தி வாழும் பரதேசிகள் திரண்டு ஒரு குடும்பம் போல நண்பர்களாக குழுவாக வாழ்கின்றனர். அந்த பாதாள உலகம் தொந்தரவிற்குள்ளாகும் போது அவர்கள் வெளி உலகிற்கு வருகின்றனர். ஒரு செல்வந்தரின் குடும்பம் ஒன்றைத் தெரிவு செய்து நுழைந்து அவர்களை வசியம் செய்து வெல்லவோ அல்லது கொன்று கடக்கவோ செய்கிறார்கள். இதில் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொருவராக அந்தக் குடும்பத்திற்குள் எப்படி நுழைகிறார்கள் என்பதே கதையின் மைய அங்கம்.

பாரசைட்டில் வரும் நிலத்தடி மனிதன், குழந்தைகளிடம் நெருங்குதல், செல்வந்தரின் மகளைக் காதல் வலையில் வீழ்த்துதல், நுட்பமாக வர்க்க வேறுபாடுகளைப் பேசுதல் என ஒவ்வொரு காட்சிகளும் அங்கங்களும் வெகுவாக போர்க்மேனுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டிருக்கின்றன. ஆனால் இயக்குநர் இதை இலகுவான கதைக்களமாக – வளைவுகளும் திருப்பங்களும் கொண்ட மர்மக்கதை – என்கிற அளவில் பார்வையாளர்களுக்குப் படைக்கிறார். அதில் பெரும் வெற்றியும் கொள்கிறார். ஆனால் மனித இருளை முன்வைத்து கொஞ்சம் அசல் பீதியை ஏற்படுத்துவது எது என்று பார்த்தால் பாராசைட்டை விட போர்க்மேனையே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கும்.

Marriage Story

தங்கப்பனை விருது அளிக்கும் முன்போ, அகாடமியில் மூலத் திரைக்கதை பிரிவில் விருது அளிக்கும் முன்போ அந்த குழுக்கள் மின்சாரக் கண்ணாவைப் பார்க்காமல் இருந்திருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், போர்க்மேன் படத்தையும் எப்படிப் பார்க்காமல் இருந்திருப்பார்கள் என்று வியக்கத்தான் முடிகிறது.

முதலில் ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியல் என்பதே, தான் படமெடுத்தாலே அவ்வாண்டு தனது பெயர் பட்டியலில் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்பது போல சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஸ்கார்சஸி, டராண்டினோ, அல்மதோவர் போன்றவர்கள். அவர்களை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இதர படங்களை கவனித்தால், ஓரளவு நல்ல படங்களாகவே இருந்துள்ளன. Marriage Story, Ford Vs Ferrari, Jojo Rabbit போன்ற படங்கள் மானுட உணர்வுகளை விசாரிப்பதில் பாரசைட்டிற்கு சற்றும் குறைவுடையன அல்ல. ஆனால் பாராசைட்டின் மீது ஏற்றப்பட்டிருக்கும் வர்க்கப் போர் பிம்பமும், அதில் இருக்கும் கட்டமைக்கப்பட்ட திரைக்கதைத் தன்மையும், அதைச் சுற்றி எழுந்த வணிகத் தந்திரங்களுமே அதற்கான அந்தஸ்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் சிறந்த படம், சிறந்த வெளிநாட்டுப் படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநர் என்ற நான்கு பிரிவுகளிலும் வெற்றி பெருமளவிற்கு உண்மையில் பாராசைட் அத்தனைத் தகுதியுடையதா என்ற கேள்விக்கும், அத்தோடு சேர்ந்து பரிந்துரைக்கப்பட்ட படங்கள் எவையுமே அந்தந்த பிரிவுகளில் இதை விட தரம் குறைந்தவையா என்ற கேள்விக்கும் அந்த படங்களைப் பார்த்திருப்பார்களேயானால், இல்லை என்று விடை பகர்வது அத்தனைக் கடினமாக இராது.

உதாரணமாக சிறந்த திரைக்கதைப் பிரிவிற்கு வந்த பிற பரிந்துரைகளைப் பாருங்கள்.

Knives Out – Rian Johnson, Marriage Story – Noah Baumbach, 1917 – Sam Mendes and Krysty William-Cairns, Once Upon a Time in Hollywood – Quentin Tarantino

Knives Out

இவை நான்குடனும் பாராசைட்டையும் சேர்த்துப் பார்த்தால் Knives Out மிக அருமையான திரைக்கதை அமைப்பைக் கொண்டது என்பது எளிதில் புலப்படும். ஒரு தற்கொலை அல்லது கொலை என்ற வாய்ப்பையும் கொண்டுள்ள தற்கொலை. அதனைத் தொடர்ந்து எண் திசைகளிலும் விரியும் குழப்பங்கள், கேள்விகள், நீட்சிகள் என அத்தனையும் ஒன்றில் வந்து குவியும் ஒரு முழுமையான ‘கொலை செய்தவன் யார்?’ வகைத் திரைப்படம். தத்துவக் கேள்விகளையோ, வாழ்வியல் போராட்டங்களையோ பேசும் ஒரு க்ளாசிக் திரைப்படம் இல்லை தான். ஆயினும் Knives Out-இன் பின்னிருக்கும் எழுத்து நேர்மையான உழைப்பிலிருந்து விளைந்திருப்பது. சிக்கலான கேள்வி பதில்களை இலகுத்தன்மை போல தோற்றமளிக்கும் திரைப்படமாக முன்வைத்திருப்பதன் ஒருங்கு மேன்மையானது.

இன்னொன்று Marriage Story. இதன் கதை இலாவகமாக திரைக்கதையில் நீண்டு விரிகிறது. முழுமையான திரைக்கதை என்று சொல்ல முடியாவிடிலும், கண்டிப்பாக பாராசைட்டை விட ஒரு படி மேலான திரைக்கதை தான் என்று சொல்ல முடியும். மணமுறிவின் படிநிலைகளைச் சொல்கையிலேயே மனம் அதிலிருந்து விலகிடவும் விலக முடியாமலும் தனக்குள் ஒரு அறப்போரை நிகழ்த்திப் பார்க்கிறது. உலகின் விழிகள் தன்னைக் குற்றவாளியாக நினைத்துவிடக் கூடாது என்பதும், இன்னும் ஆழமாய்த் தன் நெஞ்சே தன்னைப் பொய்யெனப் பேசிவிடக் கூடாது என்பதும் வெகு சிக்கலாய் முன்விரிகிறது. இருவருக்குள் இருக்கும் பிணைப்பை இன்னும் வலுவானதாக்கும் பிள்ளை இன்னும் தெளிவாய் வந்திருக்கலாம் என்பதைத் தவிர இந்த பட்டியலில் இருக்கும் திரைப்படங்களில் சிறந்த ஒரு திரைக்கதையாகத் தான் இதுவும் படுகிறது.

நல்ல வேளையாக பாராசைட் தழுவல் திரைக்கதை என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்படவில்லை. (அப்படி பரிந்துரை செய்யப்பட்டிருந்தால் அது கொஞ்சமேனும் பொருத்தமானதாக இருந்திருக்கும்) ஒருவேளை இருந்திருந்தால் அதிலும் வென்றிருக்கும் Jojo Rabbit பாடு திண்டாட்டமாகி இருக்கும்.

1917

எல்லா குலைவுகளுக்கும் முத்தாய்ப்பாய் துணை நடிகர் மற்றும் துணை நடிகையர் பிரிவுகளில் நிறைய முக்கியமான நடிப்பாற்றல் வெளிப்பட்டும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

1938 ஆம் ஆண்டு ’Old Chicago’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக Alice Brady என்ற நடிகைக்குச் சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. அப்போது தன் கால்மூட்டில் ஏற்படுட்டிருந்த காயம் காரணமாக அவர் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகவே, அவர் சார்பாக ஒரு ஆண் அவ்விருதினைப் பெற்றுக் கொண்டார். வெற்றிச்சின்னத்தைப் பெற்றுவிட்டு அகன்ற அந்த மர்மநபர் அதற்கு பின் எவர் கண்ணிலும் படவேயில்லை. அலைஸ் ப்ரேடிக்கு அந்த மர்ம நபரைத் தெரியாது என்ற செய்தி அகாடமிக்குக் கிடைக்கவே மீண்டும் ஒரு மாற்று விருதுச்சின்னத்தை அவருக்கு வழங்கி அவரைக் கெளரவித்தது. அந்தத் திரைப்படத்தை விட அந்த மர்ம மனிதரின் சேட்டை அலைஸ் ப்ரேடியை இன்றும் நினைவு வைத்துக் கொள்வதற்குக் காரணமாகிறது. அலைஸ் ப்ராடியை விட சிறப்பாக நடித்து அகாடமியை ஏமாற்றிய அந்த நபர் மீண்டும் ஒரு முறை வந்து இந்த முறை துணை நடிகை விருது அறிவிக்கப்பட்ட நபரிடமிருந்தும் அந்த வெற்றிச் சின்னத்தைப் பறித்துச் சென்றிருக்கலாம். இன்னும் கொஞ்சம் துலா திறமையின் பக்கம் சாய்ந்திருக்கும்.