தேவியின் தேசம் – சா. ராம்குமார்

0 comment

அமெரிக்கா என்ற தேசத்தைப் பார்க்க விரும்பாத பிற தேசத்தவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. எப்படியாவது அங்கு சென்று வாழ்க்கையைத் தொடங்கிவிட வேண்டும் என்று ஏங்கும் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியம், அமெரிக்காவின் நாசாவில், அமெரிக்காவிலேயே இப்படியாக நடக்குது, அமெரிக்கா என்ன அமெரிக்கா என்று அவரவர் அளவில் ஒரு குறைந்தபட்ச தரத்தை நிர்ணயப்பதைப் பார்த்திருக்கிறேன். மேலும் 80-90களில் பிறந்து இன்று வாழ்பவர்களுக்கு அமெரிக்கா, காட்சி ஊடகமாக மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தொலைக்காட்சி தொடர்கள், ஹாலிவுட் செட்டுக்கு வெளியே எடுக்கப்பட்டுள்ள படங்கள், பாப் இசை, யூ ட்யூப் காணொளி வழியாகப் புகழ்பெற்றிருக்கும் நட்சத்திரங்கள் என்று இவை எல்லாம் அமெரிக்காவை சற்றே அருகே கொண்டு வந்திருக்கின்றன.

அமெரிக்கா மீது சே, வினவு, பல இரகசிய சதி ஆவணப்படங்கள் மூலம் எனக்கு ஒரு வெறுப்பு இருந்தது. அரசுப்பணியில் சேர்ந்தவுடன் தான் ஒரு தேசத்தை நிர்வகிப்பது எத்தனை சிக்கலானது என்று புரிந்தது. அமெரிக்கா மீது ஒரு பெரும் மரியாதை வருவதற்கும் காரணமாக இருந்தது. ஒரு பயணியாக, அதைவிட அரசு ஊழியனாக, அரசில் நடக்கும் காரியங்கள் அமெரிக்காவில் எப்படி நடக்கிறது என்ற ஆர்வம் இருந்தது. எடுத்துக்காட்டாக, எப்படி நிலத்தைப் பகுத்து வைத்திருக்கிறார்கள், எப்படி நீர் மேலாண்மை செய்கிறாகள் என்று தொடங்கி ஹாலிவுட் சினிமாக்களில் அடி வாங்கும் காவல் வாகனங்களை எப்படி பழுது பார்க்கிறார்கள் என்பது வரை. அமெரிக்கா செல்லும் முன்னரே சில ஏற்பாடுகளை செய்ய முயன்றேன். என் அண்ணன் தங்கியிருந்த பிட்ஸ்பர்க் நகரத்தின் மேயரை சந்தித்து அவர்களின் அன்றாட மேலாண்மையையும் பிற விசயங்களையும் கேட்க எண்ணி நேரம் கேட்டிருந்தேன்.

நேரம் கேட்டதில் இருந்தே அமெரிக்க அனுபவம் தொடங்கியது. அவர்கள் வலைத்தளத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லை. பிறகு எப்படியோ கண்டுபிடித்து அனுப்பிய முகவரியில் மின்னஞ்சல் சென்று சேரவில்லை. பின்னர் என் அண்ணனிடம் சொல்லி அவர்களின் அலுவலகத்தை அழைத்து மேயரின் செயலாளரின் முகவரியை கேட்டறிந்து அனுப்பினேன். கிட்டத்தட்ட இந்தியாவை போல ‘இது என் வேலை இல்லை. அடுத்த மேசை’ என்று ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘அரசு என்ற ஒரு இனமுண்டு. அதற்குத் தனியே ஒரு குணம் உண்டு’ என்று எண்ணிக்கொண்டேன். பிறகு அங்கிருந்து அடுத்த அம்மையாருக்கு அனுப்பினேன். இரு நாட்கள் கழித்து பதில் வந்தது. ஒன்றிரண்டு நாளிலேயே கேட்ட நேரத்தில் அனுமதி கிடைத்தது. மேயரைப் பற்றியும் அந்த நகரத்தைப் பற்றியும் என்னால் இயன்றவரை குறிப்புகள் எடுத்திருந்தேன்.

அவரைச் சந்திப்பதற்கு முன் நான் அமெரிக்கா செல்வதே கடைசி நேரத்தில் சிக்கலாகி விட்டது. என் மாவட்டத்தில் முப்பதாண்டுகளில் இல்லாத வெள்ளம் வந்து பெரிய அளவில் நிவாரண வேலைகள் செய்ய நேரிட்டது. அமெரிக்கா கிளம்ப ஒரு வாரம் இருந்த நிலையில் இந்தச் சிக்கல். நிவாரணம் முடிந்து சற்றே ஓய்வுரும் போது ஒரு பொது அமைதிக்கான சிக்கல். ஒரு காவல் நிலையம் மீது மக்கள் கற்களைக் கொண்டு தாக்கி, ஆய்வாளரின் மண்டையை உடைத்து விட்டார்கள். ஒரு மனநலம் சரியில்லாத நபரை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார்கள் என்ற கோபத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நான் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்தது. நான் விசாவிற்காக கொல்கத்தாவில் இருந்தேன். உடனே கிளம்பி வந்தேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் சரியாக மக்களிடம் பேச முடியவில்லை. அதிகப்படியான காவலர்களைக் கொண்டுவந்து நானே அங்கு சென்று பேசி இயல்பு நிலையைக் கொண்டு வர வேண்டியிருந்தது. பொதுவாகவே மக்களுக்கு சீருடை காவலர்கள் மேல் ஒரு உச்ச உணர்வு தான் இருக்கும். ஒன்று பேரன்பு, இல்லை என்றால் வெறுப்பு. சுடப்பட்டதாக கருதப்பட்ட நபரை என் ஆட்கள் மூலம் தேடிக் கொண்டு வந்தோம். இது விமானம் ஏற ஒரு நாளைக்கு முன்பு நடந்தது. தில்லி சென்று அங்கிருந்து விமானம் ஏறத் திட்டம். இரவு பன்னிரெண்டு மணியளவில் விமானம். ஆனால் 8 மணி வரை சூட்கேஸ் கூட வாங்கவில்லை. தில்லியின் அடைமழையில் ஒருவழியாக விமான நிலையத்தை அடைந்ததே எனக்கு அமெரிக்கா சென்றுவிட்ட உணர்வு. பயண உற்சாகமும் சேர்ந்து கொள்ள லண்டன் அடைந்தேன். அங்கிருந்து நியூயார்க், பின்னர் பிட்ஸ்பர்க்.

என் இடப்பக்கம் ஒரு கருப்பர் அமர்ந்திருந்தார். அமெரிக்கர் என்று நினைத்திருந்தேன். விமானம் இறங்கியதும் பரிசோதனை போதுதான் தெரிந்தது அவர் அமெரிக்கர் இல்லை என்று. ஆங்கிலம் பேசத் திணறினார். அனுமதி கிடைக்காதோ என்ற பதற்றமும் கூடியிருந்தது. நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் நண்பரோ சகோதரரோ காத்திருந்தார். கை விரல்களை மடக்கி நெஞ்சில் அறைந்து முழங்கையை உரசி ஒரு வித்தியாசமான முறையில் வணக்கத்தைப் பகிர்ந்தனர். அந்தக் கருப்பரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. கிட்டத்தட்ட கண்ணீர். அமெரிக்காவிற்கு இறங்கும் ஒவ்வொரு விமானத்திலும் கிட்டத்தட்ட ஒரு டைட்டானிக் ஜாக் இருப்பார் என்று நினைக்கிறேன். வேற்று தேச மனிதர்களுக்கு அப்படி அடைக்கலம் கொடுக்கும் ஒரு தேசம் வணங்கத்தக்கது தான். ஆப்பரிக்காவில் இருந்து இன்னும் மனித பயணம் முடிந்தபாடில்லை என்று நினைத்து கொண்டேன்.

பயணத்தில் என் வலப்பக்கத்தில் இரு கருப்பின பெண்கள் அமர்ந்திருந்தனர். தாயும் மகளும். அவர்களின் ஆங்கிலம் மூலம் அமெரிக்கர்கள் என்று தெரிந்தது. பயணத்தின் போது ஒரு வார்த்தை பேசவில்லை. நானும் பேசவில்லை. அவர்களுக்கும் நியூ யார்க்கில் இறங்கி வேறு ஒரு விமானம் பிடிக்க வேண்டியிருந்தது. பைகளை மாற்றிவிட்ட பின் நான் நடந்ததைப் பார்த்து என்னையே பின் தொடர்ந்து வந்தனர். நிலையத்தின் எதிரே இருந்த பறக்கும் இரயிலில் ஏற முற்படும் போது அவர்களின் நுழைவுச்சீட்டைக் கொடுத்து ‘இதற்கு எங்கே போக வேண்டும்’ என்று கேட்டனர். நான் மேலே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்து, ‘கொலம்பஸ் ஊருக்கு டெர்மினல் 9’ என்றேன். இரயிலில் இருந்து இறங்கியதும் மீண்டும் கேட்டனர். நான் மீண்டும் தொலைக்காட்சியைக் காட்டினேன். அவர்களுக்கு புரிந்தபாடில்லை. எனக்கு சற்றே பதற்றமாகி என் பணம், பாஸ்போர்ட்டை சரிபார்த்துக் கொண்டேன். பின்னர் தான் எனக்குப் புரிந்தது அவர்களுக்கு சரியாக எழுதப்படிக்கத் தெரியவில்லை என்று. வாட்சாப் எல்லாம் வைத்திருந்தார்களே என்று யோசிக்கும் போது தான் அவர்கள் அதில் ஒலி வாக்கியங்களை மட்டும் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பது என் நினைவுக்கு தட்டியது.

நிற்க. அமெரிக்காவின் அண்ணன் வீட்டின் அருகே இருந்த ஒரு நூலகத்திற்கு சென்றிருந்தேன். படிப்பதற்கான அருமையான சூழல். அமெரிக்க நூலகங்களைப் பற்றியே தனி கட்டுரை எழுதலாம். அங்கு இடப்பட்டிருந்த சிறு சிறு பிரசுரங்களை எடுத்துப் படித்தேன். எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக மஞ்சல் நிறத்தில் இருந்த ஒரு பிரசுரத்தில் முதல் வாக்கியமாக ’10 வயது நிரம்பிய 40 சதவீத அமெரிக்க குழந்தைகளுக்கு ஒரு ஆங்கிலப் பத்தியை சரியாக படித்து விளக்கம் சொல்லத் தெரியாது’. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  இது உண்மையா என்று நூலகரை கேட்டேன். ஆமாம் இந்தத் தலைமுறை இன்னும் மோசமாக இருப்பதாகத் தெரிகிறது என்று சொன்னார்.

நியூயார்க்கில் இருந்து பிட்ஸ்பர்க் புறப்பட்டேன். ஒரு மணி நேரப் பயணம். தாழ்வாகப் பறந்ததால் அமெரிக்காவின் நிலப்பகுதியைப் பார்க்க முடிந்தது. சரியான சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டுமே இருக்கும் நிலங்கள். இடைச்செருகல்கள் எதுவும் இல்லாத இந்த நிலப்பிரிவு நில ஆட்சிமுறையில் மிக மிக முக்கியம். நம் ஊரில் இருக்கும் 25% வழக்குகள் இந்த நில எல்லைகளால் வருவது. லண்டனில் பார்க்கையில் அப்படி இல்லை. சதுரம் செவ்வகத்தை கடந்த வடிவ வகைகள் இருந்தன. புதிய தேசமாக அமெரிக்கா இருந்ததால் அப்படி பிரிக்க முடிந்திருக்கலாம்.

பிட்ஸ்பர்க் வந்ததும் அமெரிக்காவின் ஒளி, மணம். இந்தியக் காதுகளுக்கு அமெரிக்காவின் சப்தமின்மை உறுத்துலாக இருந்தது. கனவில் பார்த்தவை எல்லாம் நேரில் நடப்பது போல ஒரு பிம்பம். விமான நிலையத்தின் வெளியே பார்த்தபோது அத்தனை கார்கள்! கார்கள்! கார்கள்! என்றாவது ஒரு நாள் அமெரிக்க வரலாற்றில் கொலம்பஸ் காரில் தான் அமெரிக்கா வந்தடைந்தார் என்று மக்கள் நம்பக்கூடும் என்று தோன்றியது!

பிட்ஸ்பர்க் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்கு கிட்டத்தட்ட 20 நிமிடம் தான். இன்னும் மைல்கள், கேலன் போன்ற உபயோகங்கள் விசித்திரமாக இருந்தன. அமெரிக்க சாலைகளில் கார்களுக்கு நிகராக லாரிகளும் கடந்து சென்று கொண்டிருந்தன. லாரிகளின் பளிச் நிறங்கள், வேகம், உயரம் எல்லாம் இந்திய கண்களுக்கு புதிதாக இருந்தன. பெரும்பாலும் நம் ஊர் லாரிகள் சுமை தாங்கும் போது காச நோய் வந்த கழுதை போலவும், காலியாக செல்லும் போது கோவில் மாட்டைப் போலவும் செல்லும் உணர்வை தரும்.

அண்ணனின் கார் கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் அந்த வேகத்தைக் கடந்து ஒரு லாரி செல்கிறது. இதற்கு முக்கிய காரணம், லாரிகள் தங்கள் அளவான எடையை எடுத்து செல்வது. நம் ஊரில் பெரும்பாலும் லாரிகள் அதன் வயதைக் கடந்து அதன் எடை தூக்கும் சக்தியை மீறியே ஓட்டப்படுகின்றன. அவற்றால் தான் பெரும்பாலும் விபத்துகளும் நடக்கின்றன. ‘கட்டுப்பாட்டை இழந்த லாரி’ என்பதற்கு இதுவும் மிக முக்கிய காரணம். சில சமயங்களில் இந்தியாவின் சாலை விதிகளை சரி செய்தாலே நாடு சரியாகி விடும் என்ற அளவிற்கு வெளிநாட்டுப் பயணங்கள் நம்மை சிந்திக்க வைக்கும். ஆனால் இந்தியாவில் இருக்கும் குறைப்பாட்டின் வெளிப்பாடு தான் அந்த சாலை விதி மீறல்களே. சரியாக லைசன்ஸ் தேர்வு நடத்தப்படாததால் ‘ஓட்டத்தெரியாது ஆனா லைசன்ஸ் இருக்கு’ என்று பல் இளிப்பவர்கள் விபத்துகளை உருவாக்குகின்றனர். சரியான சாலை விதி பலகைகள் இல்லாததால் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். பாடத்திட்டத்தில், பள்ளியில் சாலை விதிகளைப் பற்றி பாடம் இல்லாததால் அது ஒரு விளையாட்டாக கருதப்படுகிறது. இதன் மொத்த வெளிப்பாடு தான் நம் சாலையில் நாம் கேட்கும் ஹார்ன் சப்தம்.

நான் செல்லும் முன்னரே என் பெற்றோர் அமெரிக்கா சென்று இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கி இருந்தனர். அவர்களை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து சந்தித்தேன். அன்று ஒரு நாள் சற்றே உறங்கி எழுந்ததும் பயணக் களைப்பு சரியாகிவிட்டிருந்தது. அடுத்த நாள் பிட்ஸ்பர்கின் மேயரை சந்திக்க வேண்டிய நேரம். அவரிடம் என்னென்ன கேட்கலாம் என்றொரு குறிப்போடு சென்றிருந்தேன்.

டவுண்டவுனில் தான் மேயரின் அலுவலகம். சிட்டி கவுன்சில் என்று அழைக்கப்படும் கட்டிடம். டவுண்டவுன் என்பதே அமெரிக்கர்கள் மட்டும் உபயோகிக்கும் சொலவடை. பெரும்பாலும் பிற நாடுகளில் ‘பிசினஸ் டிஸ்டிரிக்ட்’ என்றும் ‘டவுன்’ என்று நம்மூரிலும் அழைப்பதுண்டு. நியூயார்க் நகரம் தொடக்கத்தில் ஹட்ஸ்ன் நதிக்கரையில் தொடங்கி மேல் நோக்கி விரிந்தது. பழைய தொழில் பகுதியை டவுன் (down) தி ரிவர் டவுன் (town) என்று தொடங்கி டவுண்டவுன் ஆனது.

குறித்த நேரத்திற்கு சற்று முன்னரே சென்றோம். பதினான்காவது மாடியில் அவரின் அலுவலகம். மொத்தக் கட்டிடமும் பழைய கிரேக்க காதிக் வடிவத்தில் இருந்தது. மிக உயர்ந்த முகப்பு. அதன் மேல் கட்டமைக்கப்பட்ட கட்டிடம். அமெரிக்காவின் பழைய அரசு கட்டிடங்கள் யாவும் கிட்டத்தட்ட அதே வடிவமைப்பில் தான் இருந்தன. வரவேற்பில் இருந்த பெண் மென்மையாகப் பேசி ஒரு அறையில் என்னையும் அண்ணனையும் என் பெற்றோரையும் அமர வைத்தார். அவரே தண்ணீர், காப்பி என்று எடுத்து வந்தார். அலுவலகத்தில் என்னுடைய வரவேற்பில் இருக்கும் அலுவலர் அதைச் செய்ய மாட்டார். ‘தண்ணீர்’ எடுப்பதெல்லாம் பியூன் வேலை என்று அமர்ந்துவிடுவார். பியூனுக்கும் இவருக்கும் பெரிய சம்பள வித்தியாசம் இல்லை. இருந்தும் உடல் உழைப்பின் மீது நமக்கிருக்கும் ஒரு சாதிய வெறுப்பு அது.

அந்தப் பார்வையாளர் அறை மிகச் சிறியது. ஐந்து பேர் அமரக் கூடிய அறைதான். மேயரை சந்திக்க அத்தனை மனிதர்கள் வருவதில்லை என்றும் புரிந்தது. இது நல்ல அரசின் அடையாளம். ‘அவர பார்க்க ஒரு மாசம் ஆகுமே’ என்பது அதிகாரத்தின் அடையாளமே தவிர நல்ல அரசின் அடையாளம் அல்ல. ஒரு எளிய குடிமகனுக்கு மேயரை சந்திக்கும் தேவையே இருக்கக் கூடாது. அவருக்கு கீழ் இருக்கும் ஒவ்வொரு தளமும் சரியாக செயல்பட்டால் அதற்கான அவசியம் ஏற்படாது. மேயரின் வாழ்க்கையும் அவருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு விருதுகளும் அவர் கூற எண்ணிய கருத்துகளும் இருந்தன. காந்தியும் அவரின் ஒரு வாசகத்தோடு இருந்தார். இந்தியாவின் மிகப்பெரிய ப்ராண்ட் என்றால் அது காந்தி மட்டும்தான்.

குறித்த நேரத்திற்கு மேயரின் செயலாளர் வந்து ‘அவர் சற்றே தாமதமாக வருவார்’ என்று சொல்லி வேறு ஒரு அறையில் (ஆலோசனை அறையில்) அமரச்சொன்னார். மற்றவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் சென்றேன். அந்த அறையில் ஒரு பழைய வாசம். அந்த நகரத்தின் முதல் மேயரின் படம் தொங்கவிடப்பட்டிருந்தது. அலுவலகத்தில் எங்காவது மின் கயிறு தொங்குகிறதா, தண்ணீர் ஒழுகுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒன்றிரண்டு இருந்தது. ஆனால் அதற்கும் சரியான பாதுகாப்பு எச்சரிக்கை வாசகங்கள் இருந்தன. பழைய கட்டிடங்களுக்குள் எப்படி நவீன வசதிகளை (retrofitting) கொண்டு வருகிறார்கள் என்று கவனித்தேன்.

பத்து நிமிட தாமதத்திற்குப் பிறகு மேயர் வந்தார். இத்தாலியைப் பூர்வீகமாக கொண்டவர். ‘பில் பெதுட்டோ’. அவரோடு அவரின் இன்னொரு செயலாளரும் இருந்தார், பெயர் ‘லிண்ட்சே பவுல்’. முதல் முறையாக ஒரு அமெரிக்கரோடு அவ்வளவு நெருக்கத்தில் பேசுவது ஒரு விசித்திர அனுபவமாக இருந்தது. சினிமாவா கனவா அல்லது நிஜமா என்று தெரியவில்லை. அரை மணி நேரம் தான் தன்னால் இருக்க முடியும் என்று சொன்னாலும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்து பேசினார். நான் அவரைப் பற்றி தெரிந்து வைத்திருந்த அளவிற்கு நான் எங்கிருந்து வருகிறேன், ஏன் வருகிறேன் என்று அவர்கள் யாரும் முன்பணி செய்திருக்கவில்லை. அதைப் பற்றி எங்கு தகவல்கள் சேகரிக்க வேண்டுமோ அதற்கான சொடுக்குகளை முன்னரே அனுப்பியிருந்தேன். ஒருவிதத்தில் சற்றே ஆறுதலாக இருந்தாலும் எரிச்சலூட்டியது.

பில் பெதுட்டோ

பலதரப்பட்ட கேள்விகளை அவரிடம் கேட்டேன். முக்கியமாக நிர்வாகம், அமெரிக்க முறைமை, இன்றைய ட்ரம்ப் ஆட்சியில் இருக்கும் அமெரிக்கா என்று பேசினோம். மிக அண்மையில் இந்தியா வந்ததாகவும் தலாய் லாமாவை சந்திக்க அந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும் சொன்னார். நான் ஆர்வமாக எதைப் பற்றிய பயணம் என்று கேட்டேன். ‘It was about training on nothingness’ என்று சொன்னார். வாழ்க்கையின் தருணங்களை அதன் முன், பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எப்படி அந்த நிலையில் நிகழ்வுகளை உள்வாங்கி சமமாக இருப்பது என்பதைப் பற்றி செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள திட்டத்தைப் பற்றி விளக்கமாகச் சொன்னார். அப்படியே பள்ளிகளுக்கும் எடுத்துச்செல்ல திட்டம் இருப்பதாகவும் தெரிந்தது. அமெரிக்காவின் பாப் கலாச்சாரத்தில் தலாய் லாமாவுக்கும் புத்த மதத்திற்கும் ஒரு பெரிய ஈர்ப்பு இருந்ததைப் பயணம் முழுவதும் கவனித்தேன். இந்தியாவின் அடுத்த பெரிய ப்ராண்ட் புத்தர் தான். ஒருவகையில் மேற்கத்தியர்களுக்கு நம்மிடம் இருக்கும் ஆன்மீகத்தைத் தவிர இந்த நூற்றாண்டில் வேறு எதையும் அளிக்க முடியுமா என்று தெரியவில்லை.

ட்ரம்ப்பைப் பற்றி விவாதம் சுவாரசியமாக இருந்தது. மேயர் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவர்.  இந்த ஆட்சியில் வாசிங்டனுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை என்று சொன்னார். ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு கலந்தாலோசனை என்று சென்று கொண்டிருக்கும், ஆனால் இப்போது எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் ட்ரம்ப் வாசிங்டனில் இருப்பதற்கும் தாங்கள் தினப்படி நிர்வாகம் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜனாதிபதி பாரிஸ் சூழியல் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டாலும் அமெரிக்க மேயர்கள் அனைவரும் அதை ஏற்று (400க்கும் மேற்பட்ட நகரங்கள்) அடுத்த பத்தாண்டுகளில் தங்களின் மின்சக்தி மற்றும் எண்ணெய் தேவையை பாதியாக குறைக்க பாடுபடப் போவதாக சொன்னார். அதன் முயற்சியாக தன் அலுவலகத்தில் கூட சென்ற வருடத்தை விட இந்த வருடம் 15% மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தப்படுவதாக சொன்னார்.

இது அமெரிக்க மாநில/மைய்யம் நீக்கி பரவலாக்கப்பட்ட ஆட்சி முறையின் மிக முக்கிய அம்சம். அமெரிக்க ஜனாதிபதிக்கு அமெரிக்காவிற்குள் இருக்கும் அதிகாரத்தை விட வெளியில் தான் மிகுதியாக தென்படும். காகிதத்தில் அதிகாரம் இருந்தாலும் அப்படி எடுக்கப்படும் பல முடிவுகள் உச்ச நீதிமன்ற வரம்புக்குள் தான் வரும். ட்ரம்ப் பற்றி செய்திகள் கூட சர்வதேச வர்த்தகம், பிற தேசத்தவர்களை உள்ளே அனுமதிப்பது, ஈரானிய கொரிய உடன்பாடு போன்றவை தான். மேலும் எளிய அமெரிக்கனை அனுதினமும் பாதிப்பது மேயரும் கவர்னரும் தான். இந்திய அரசியலமைப்பு அதை மாநிலங்களுக்கு கொடுத்திருக்கிறது. பெரும்பாலும் மக்கள் நினைப்பது ‘மத்தியல அட்ஜஸ்ட் பண்ணாத்தான பணம் கிடைக்கும்’ என்பது. உண்மையில் அப்படியல்ல. சரியாக நிர்வாகம் செய்யும் எந்த மாநிலமும் தனக்கு தேவையான 80% பணத்தைப் பெற்றுவிட முடியும். பெரிய, புதிய திட்டங்கள் தான் சற்றே அரசியலாக்கப்படுமே தவிர நிர்வாகத்திற்கான பணம் பாதிக்காது.

வெளிநாட்டவர்கள் ட்ரம்பைப் பற்றி கேட்கும்போது ஒரு மாதிரி இகழ்ச்சியாக அமெரிக்கர்கள் கருதுவதை நான்கு இடங்களில் பார்த்தேன். காவல்துறை அதிகாரி, சக பயணி, நூலகர் மற்றும் மேயர். நான் சந்தித்த இந்தியர்கள் பெரும்பாலும் ட்ரம்ப் நிச்சயம் மீண்டும் வெல்வார் என்று சொன்னார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பெதுட்டோவிடம் நகர அமைப்பு மேலாண்மை பற்றிக் கேட்டேன். நகரத்தின் ஒரு பகுதிக்கு என்ன வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள் என்பதற்கு அவர் அந்த பகுதி மக்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுக்கு என்ன தேவையோ அதை எங்கள் திட்டத்திற்குள் கொண்டு வருவோம் என்றார். இந்த உரையாடல்கள் எப்படி நடக்கும் என்று கேட்டேன். சமூக வலைதளங்கள் தொடங்கி நகர கட்டுமான வடிவமைப்பாளர்கள் நேரில் சென்று மக்களிடம் பேசி முடிவு செய்வார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அந்த கமிட்டி இருப்பதாக சொன்னார். இந்தியாவில் இது கிட்டத்தட்ட கிடையாது. நடுத்திர வர்கத்திற்கு குறைவானவர்கள் மட்டுமே இந்திய நகரங்களில் கவுன்சிலரின் கதவைத் தட்டுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு பாலம் கட்டுவதற்கு முன்போ, சாலை அமைப்பதற்கு முன்போ இப்போதிருக்கும் நிலக் கையகப்படுத்தும் சட்டத்தில் (land acquisition resettlement and rehabilitation act) சமூக பாதிப்பு பற்றி (social impact assessment) ஒரு ஆய்வு நடத்தித்தான் முன் நகர வேண்டும். ஆனால் நகர திட்டமிடலில் மக்களின் பங்கு மிக மிக குறைவாகத் தான் இருக்கிறது.

இதைப்பற்றி அவரிடம் பேசும்போது இந்த நகரத்தில் முதலில் இத்தாலியர்கள், பின்னர் போலந்து நாட்டவர், பின்னர் ஐரிஷ் மக்கள் என்று வந்து குடியேறிதைப் பற்றி பேசினார். தன் தாத்தா கூட முதலாம் உலகப்போரின் சமயத்தில் ஒரு தச்சு மேஸ்திரியாக வந்து குடியேறியதாக கூறினார். அந்த சமயங்களில் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி தீவுகளாகவே இருந்தது. கிறித்தவமும் நவீன கல்வியும் தான் இவர்களை ஒன்றிணைத்தது என்று கூறலாம். தேசத்தைவிட்டு வெளியேறி வந்ததும் சில பழமைவாத பழக்கங்களும் கழிய இருந்த வாய்ப்பை அந்தத் தலைமுறை ஓரளவிற்கு பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்கா குடியரசாக அறிவிக்கப்படும் மிகச்சில நாட்கள் வரை ஜெர்மன் தான் தேசிய மொழியாக அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஏனோ ஆங்கிலம் மாறியதாக அவர் கூறியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மேயருடனான உரையாடல் எனக்கு ஒரு அரசு அலுவலராக சுவாரசியமாக இருந்தது. அரசு பணியில் தொய்வாகும் போதோ சரியாக பணி செய்யாத போதோ அவர்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்டேன். மேயரின் கீழ் இருக்கும் பல துறைகளுக்கு அவர் பொறுப்பேற்றவுடன் புதிய இயக்குனர்களை நியமிப்பார். அந்த இயக்குனர்களின் காலம் மேயரின் காலம் வரைதான். புதிய மேயர் வந்தால் 90% அவர்கள் விலக நேரிடலாம். அந்த இயக்குனருக்கு தனக்குக் கீழ் இருப்போரை, நிரந்திர பணியாளர்களை கூட பணியில் இருந்து சிறிய காலத்திற்குள்ளாகவே நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது. இந்திய முறையில் அரசில் ஆட்களை தேர்வு செய்வதைவிட நீக்குவது கடினம். கூர்ந்து சிந்தித்தால் அரசும் ஒரு சாதிய முறை போலத் தான் இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கிறது. கான்ஸ்டபிளாக இருப்பவர் மிகச்சிறப்பாக பணி செய்தாலும் துணை ஆய்வாளரை அல்லது ஆய்வாளரைத் தாண்ட முடியாது. அவர் மிக மோசமாக பணி செய்தால் அவரை நீக்க அவ்வளவு பாடுபட வேண்டும். முக்கியமாக நீதி மன்றங்களுடன் பாடுபட வேண்டும். ஆனால் அமெரிக்காவிலும் அவ்வளவு பேரை நீக்குவது கிடையாது. அவர்களுக்கு இருக்கும் சங்கத்தலைவரிடம் புகார் அளிப்பார்கள். அவரே பெரும்பாலும் சரி செய்துவிடுவார். இல்லை எனில் தான் அந்த அளவு முடிவெடுப்பார்கள்.

பொதுப்புத்திக்கு மாறாக பிட்ஸ்பர்க் நகரத்தில் முக்கால்வாசிப்பேர் நிரந்திர பணியாளர்கள் தான். பொதுப்பணித்துறையில் வேலை செய்யும் மேஸ்திரியில் தொடங்கி மேயரின் வரவேற்பாளர் வரை. இந்தியாவில் 100 குடும்பங்களுக்கு ஒரு அரசு அலுவலர் என்றால் அமெரிக்காவில் 7-8 என்று படித்த நினைவு. அரசின் சேவைகள் monopoly என்பதால் அதில் ஆட்கள் மிகுதியாக இருக்க வேண்டும். இல்லை எனில் அதிகாரம் குவிக்கப்பட்டு விடும். அதிகாரங்களை உடைத்து சிறு சிறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டால் ஊழல் மிக மிக வேகமாக குறையும். அரசு ஊழியர்கள் சம்பளத்தை சற்றே குறைத்து (விகிதாச்சாரமாக) அல்லது அரசு வேலைகளிலே பல பணிகளை பகுதி நேரப் பணியாக மாற்றிக்கொடுத்து நிறைய ஆட்களை பணியில் அமர்த்துவது கடை நிலை ஊழலைக் குறைக்க உதவும்.

அரசு அலுவலகங்களில் தனியார் அலுவலகங்களுக்கு நிகராக தொழில்நுட்பங்களை கொண்டு வந்திருப்பதை அமெரிக்காவில் பார்த்தேன். வால்மார்ட் போன்ற பெரிய கடைகளில் பொருட்களை வாங்கி நாமே அதை சரிபார்த்து பணம் கட்டி வெளியேறலாம். அதேபோல ஒரு அஞ்சல் அலுவலகத்தில் தானியங்கி மூலம் நீங்கள் பணம் செலுத்தி அஞ்சல் அனுப்பலாம். இந்தத் தனியார் அரசு தொழில்நுட்ப சாதனங்கள் மட்டுமல்லாது அந்த முறைமையை எப்படி கொண்டு வருகிறீர்கள் என்று மேயரிடம் கேட்டேன். அவரின் செயலாளர் – முக்கியமாக கவனிக்க வேண்டியது, மேயர் நடுத்திர வயதுடையவர். தொழில்நுட்பம் குறித்த கேள்விக்கு அவரின் செயலாளரையே கைகாட்டினார். அதில் அவரின் பரிச்சயம் குறைவு என்பது தெரிந்தது. ஆனால் அந்த இடைவெளியைக் குறைக்க வேண்டிய அவசியம் அவருக்குப் புரிந்திருந்தது. இதற்குக் காரணமாக நான் பார்த்தது மேயரின் மனைவியும் ஒரு நடுத்திர வகுப்பு மக்களைப் போல வாழ்வதற்கான சூழல் அங்கு உள்ளது. அதனால் மக்கள் எதிர்கொள்ளும் தனியார் சேவைகளைப் பற்றிய புரிதல் அரசு பதவிகளில் இருப்போருக்குத் தெரிகிறது. நம் நாட்டில் சற்றே மேல் வகுப்புக்கு சென்றால் இந்த பந்தத்தை மொத்தமாக அறுத்துவிட்டே வெளியேறுகிறார்கள். ஒரு பேருந்து கண்டக்டரின் டிக்கட் கொடுக்கும் சிக்கல்கள்/மக்களுக்கு டிக்கட் வாங்கும் சிக்கல்கள் தெரிவதுமில்லை, புரிவதுமில்லை. சாதி/வகுப்பு வெறுப்பு என்பது ஒருவிதத்தில் நம் எல்லா அணுக்களிலும் குடிகொண்டுவிட்டதாக தோன்றுகிறது.

மேயரின் செயலாளர், தொழில்நுட்ப விசயங்களுக்கு ஒரு தனி இயக்குனரகம் இருப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் எதைக் கொண்டு வரலாம் என்று சிந்தித்து அதை நடைமுறைப்படுத்துவதாகவும் கூறினார். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மிகுதியாக நடைபெறுகிறது. இந்தச் சம்பவங்கள் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படும் பகுதிகளில் துப்பாக்கி தோட்டா வெளியேறும் ஒலியை உள்வாங்கி அதை காவல்துறைக்கு உடனே தெரிவிக்கும் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த அளவு சிந்திக்காமல் துப்பாக்கிகளை தடை செய்யலாமே என்று நமக்கு தோன்றும். அதில் இருப்பது அமெரிக்க வாழ்வியல்முறை (சட்டமும் கூடிய) சிக்கல்.

இறுதியாக அமெரிக்காவில் குவிக்கப்படும் இத்தனை குப்பைகளை என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ‘இதில் நாங்கள் எதுவும் செய்வதில்லை. அப்படியே அள்ளிக்கொண்டு போய் மக்கள் காணாத ஓரிடத்தில் கொட்டி மூடுகிறோம். சில பகுதிகள் விஷமாக மாறிவிட்டன. இதைத் தொடங்கி இருக்க வேண்டிய எங்கள் முன்னாள் அரசு நிர்வாகிகள் ஊழல்வாதிகளாக இருந்ததனால் சூழியலைப் பற்றி எண்ணவில்லை. அமெரிக்காவின் பலமும் பலவீனமும் இந்தப் பெரிய நிலம் தான். இன்னும் கொட்டிக்கொண்டே தான் இருக்கிறோம். நானும் நார்வே சென்று குப்பை மேலாண்மையைப் பார்த்திருக்கிறேன். என்னால் இன்னும் அதை மாற்ற முடியவில்லை’, என்றார். பிட்ஸ்பர்க் நகரின் குப்பையை அள்ளிக்கொண்டு செல்லும் நிறுவனத்தின் பொதுப்பெயர் ‘Waste Management’. குப்பை கொட்டும் மக்களுக்கு நாம் சுற்றுப்புறத்தை துன்புறத்தவில்லை என்ற ஒரு பிம்பத்தைக் கொடுக்க இடப்பட்ட பெயராகத் தெரிகிறது. நியூயார்க்கிலும் இதே பெயரை பார்த்த நினைவு.

வேலூர் சீனிவாசன்

தனிப்பட்ட முறையில் எனக்கு அமெரிக்காவின் இந்த ஊழல் வரலாறு தெரியும். அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்று தெரிந்து கொள்வதற்கே கேட்டேன். வேலூர் சீனிவாசன் என் நண்பர். இந்தியாவின் மிக மிக முக்கிய சமூக பணியாளர்களில் ஒருவர். திடக்கழிவு மேலாண்மையைப் பற்றி அவர் அளவிற்கு தெரிந்திருப்போர் குறைவு. அவரின் பட்டறிவு கொண்டு நாம் பயன்படுத்தப்படும் 98% சதவீத பொருட்களை எப்படி எளிய முறையில் மறுசுழற்சி செய்யலாம் என்று கண்டுபிடித்தவர். என் மாவட்டத்தில் அவர் அறிவுரைப்படி பணிகள் செய்திருக்கிறோம். இந்தியாவின் பல மாநிலங்களில் பணி செய்திருக்கிறார். அரசுடன் நெருங்கி பணி செய்துள்ளார். குறைந்தபட்சம் பத்ம விருதுக்கு தகுயுடையவர். அவரிடமே அமெரிக்காவின் இந்தச் சிக்கலைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

திரு.பெதுட்டோவுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டோம். அவரின் சந்திப்பு எனக்கு பல திறப்புகளை அளித்தது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி பற்றின கவிதைகளான ஒரு நூலை அவருக்குப் பரிசாக கொடுத்து பழமை நெடிந்த அந்த அறையில் இருந்து விடைபெற்றேன். என் பெற்றோரும் அண்ணனும் அமர்ந்திருந்த அறைக்கு சென்று மகிழ்வாக ‘புறப்படலாமா’ என்று சொல்லும் முன்னரே என் அம்மா ‘நாங்களும் அவருடன் பேசினோமே’ என்றார். என்னைச் சந்திக்கும் முன் அவர் என் பெற்றோரைப் பார்த்து பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறார். அங்கிருந்து நாங்கள் நேராக நயாகராவிற்கு செல்வதாக இருந்ததனால் குடும்பமாக மேயரின் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அவருடன் பேசிய அந்த ஒரு மணி நேரத்தை அசைபோட்டுக்கொண்டே வந்தேன். என் பயணத்தின் தொடக்கத்திலேயே அவரைச் சந்தித்ததால் பயணம் மேலும் கூர்மையானது.

பிட்ஸ்பர்கிலிருந்து நயாகரா நான்கு மணிநேர சாலைப் பயணம். சிறிய வண்டிகள், பெரிய வண்டிகள், பெரிய பெரிய வண்டிகள். வேகம் மேலும் வேகம். அமெரிக்காவைப் பற்றி நமக்கிருக்கும் இன்னொரு பொதுப்புத்தி ‘எல்லாம் கட்டிடம்’ என்பது. அமெரிக்காவின் அந்தப் பகுதி முழுவதும் பசுமை படர்ந்திருந்தது. சாலைகள் இல்லாத இடம் எல்லாம் பச்சையாக இருந்தது. உற்று நோக்கினால் தெரியும், அவற்றுள் பல இடங்களில் அவை வளர்க்கப்பட்டிருப்பது. அந்த தட்ப வெப்ப நிலைக்கு செடிகொடிகளின் வகைகளில் பெரும் வேறுபாடு இருக்காது.

சில இடங்களில் எட்டு வழிச்சாலை, சில இடங்களில் நான்கு வழிச்சாலைகள். முழுவதும் கான்கிரீட்டால் இடப்பட்ட சாலைகள். அமெரிக்காவின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகளில் ஒன்று சாலைகள் அமைப்பது. இரயில்களா சாலைகளா என்று வரும்போது சாலைகளையே அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மேயர் சொன்னது போல நிலம் நிறைய இருந்ததனால் சாலை இடுவதில் எந்தச் சிக்கலும் இருந்ததில்லை. இந்த முடிவிற்கு முதல் காரணம் தொழில் தான். சாலைகளை இட்டு, இரயில்களைத் தடுத்தால் தான் மக்கள் கார்கள் வாங்குவார்கள். அப்படி வாங்கினால் தான் எண்ணெய் நிறுவனங்களின் தேவை பெருகும். ஒவ்வொரு பெட்ரோல் பங்கும் அமெரிக்காவில் ஒரு ரியல் எஸ்டேட் வாய்ப்பு தான். இந்தத் திட்டமிட்ட வணிக முடிவுகளின் விளைவு தான் இன்றைய அமெரிக்கா!