டாக்ஸிக்கான செயலியில் ஓட்டுநரின் அலைபேசி எண் அறிவிக்கப்பட்டது. இன்னும் எட்டு நிமிடங்களுக்குள் வாகனம் வந்துவிடும் என்பது உப தகவல். தூரத்தில் தெரியும் சிவப்பு சிக்னல் வரை, தான் நிற்குமிடத்திலிருந்து நீண்டிருக்கும் கார்களும் பேருந்துகளும் அநாவசியமாக ஒலி பெருக்கிக்கொண்டிருந்தன. மனப்புழுக்கம் காதுகளை அடைத்திருந்ததால் பாரதியின் கவனத்தை அவை இம்மியளவும் கோரவில்லை. உடலில் ஆங்காங்கே இன்னதென்று வகைப்படுத்த முடியாத புதுப் புது தினவுகள். டிசம்பர் இரவிற்குப் பொருத்தமற்ற வெப்பம், ஆடை மறைத்திருக்கும் சருமப் பகுதிகளில் ஊர்ந்து கொண்டிருந்தது. சம்பந்தமேயில்லாமல் அவளுக்கு அந்தச் சமயத்தில் சிரிப்பு கூட வந்தது.

இதயங்களும் இதழ்களுமாய் வெறும் எமோஜிகளின் குவியலை நவீனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி காட்டியது. தனக்குத் தானே ஆறுதல் சொல்லவல்ல ஒரு புன்னகையை உருவாக்க அந்தக் குறுஞ்செய்தி போதுமாக இருந்தது. அதே வேளை, அந்த இதயங்களும் இதழ்களும் அர்த்தப்பூர்வமானதா என்ற ஐயமும் கூடவே எழ, கொஞ்சம் சஞ்சலப்பட்டாள். விசைப்பலகையில் சிதறிக்கிடக்கும் அவற்றை, மறுமுனையிலிருக்கும் கட்டைவிரல், வெறும் கடமைக்கு தட்டச்சியிருக்குமோ என்ற எண்ணம் அவளைப் பீடித்தது. இதே மாதிரியான குறுஞ்செய்தி முன்னெப்போதும் இப்படியான சிந்தனையை அவளுக்குத் தோற்றுவித்ததில்லை என்ற சுதாரிப்பு, இப்போதைய நிலையை இன்னும் விகாரமாக்கியது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே கண்கள் நிறைந்து விட்டன.

சட்டென ஏதோ நினைத்தவளாக, ‘மனோஜ், இது எனக்கொரு மறக்கமுடியாத நாள். ஏனென்று யூகி..’ என்று அனுப்பினாள். இந்தச் செய்தியை அனுப்பியதும் அவளது முகத்தில் ஒரு தெளிவு வந்தது போல இருந்தது. மனோஜிடம் சொல்லிவிட்டாலே ஒரு பாரத்தின் கனம் குறைந்துவிடும் என்பது அவளது எண்ணம்.

எட்டு நிமிடங்களுக்கு மேலாகியும் அந்த வாகன நெரிசலின் தடுமாற்றம் ஓய்ந்தபாடில்லை. ஓட்டுநரின் எண்ணை முயற்சித்தாள். நேரம் ஆகும் போல தெரிந்தது. நவீனுக்கு ஒரேவொரு இதயத்தைப் பதிலாக அனுப்பினாள். அந்தச் சிவப்பு இதயம் திரையில் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ஏனோ திடீரென ஒரு சுய பட்சாதாபம் அங்கு கவிந்தது. அநாதரவாக அவளது அந்த இதயம் துடிப்பதாக அவளுக்குப் பட்டிருக்கவேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் அனிச்சையாக, ‘என்னை வெறுத்துவிட மாட்டாய் அல்லவா?’ என்று அடுத்த செய்தியை ஆங்கிலத்தில் அனுப்பினாள். அவன் பார்த்துவிடுதற்குள், அனுப்பிய வேகத்தில் அந்தச் செய்தியை அழித்து விட்டாள். திரையை வெறித்தப்படி நிற்கும் போது, நவீனிடமிருந்து ஒரு கேள்வி பதிலாக வந்தது. ‘பில் இருக்கா?’.

அதுவரையிலிருந்த சோகம் இந்த ஒரே கேள்வியில் சட்டென எப்படியெப்படியோ திரிந்து அச்சமாக மாறியது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தாள். தான் அழித்த செய்தியை ஏன் அவன் பொருட்படுத்தவேயில்லை என்பதையும் சேர்த்தே யோசித்தாள். பொதுவாக அப்படி செய்தால் துருவி துருவி விசாரிப்பவன். அதற்குள் அடுத்த செய்தி – ‘ஹாஸ்டல் போறதுக்கு முன்னாடியே வாங்கிக்கோ.. சீக்கிரம் எடுத்துக்கறது நல்லதாம்’. பதில் சொல்லாமல், அந்தச் செய்தியின் ஒவ்வொரு வார்த்தையாக மீண்டும் மீண்டும்  பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஓட்டுநரின் அழைப்பு வந்துவிட்டது. பார்வைக்கெட்டிய தொலைவிற்குள் அந்த வெள்ளை ஈட்டியொஸ் முன் விளக்கை மினுக்கிக் காட்டியது.

கண்ணாடி ஜன்னலின் வழியே பின்னோக்கி சென்றுகொண்டிருந்த அங்காடிகளில் மருந்தகம் எதுவும் தெரிகிறதா என்று அவளது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. ‘சீக்கிரம் எடுத்துக்கறது நல்லதாம்’- மனதிற்குள் அந்த வாக்கியம் ஓர் அவசர செய்தியறிக்கை போல ஓடிக் கொண்டேயிருந்தது. தன்னுடைய கடைசி மாதவிடாய் தேதியை யோசித்து, விரல்களை ஒவ்வொன்றாக நீட்டி மடக்கி மனதிற்குள் ஏதோ கணக்கு போட்டாள். அவளுக்கு நாட்கள் ஏறுக்குமாறாக முன்னும் பின்னுமாக வேறு வரும். இப்போது இன்னும் முனைப்புடன் அவளது ஜன்னல்வழித் தேடல் தொடர்ந்தது. அங்கிருக்கும் சனத்திரள் அத்தனையும் இவளைப் பரிகசிக்கவே திரண்டிருப்பதாகத் தோன்றியது. தூரத்தில் ஒரு கூட்ட நெரிசல் இல்லாத மருந்தகம் இருப்பது தெரிந்ததும் வண்டி ஓரங்கட்டப்பட்டது. மேசையருகே இவள் போய் நின்றதுமே இரண்டு ஆண் பணியாட்கள் ‘என்ன வேண்டும்’ என்பது போல துடுக்காக வந்து நின்றார்கள். மனதிற்குள் வியர்த்துக் கொட்டியது. நாக்கு அன்னத்தில் தந்தியடித்துக் கொண்டிருந்தது. கடைக்குள் எதையோ தேடுவதைப் போல பார்த்தாள்.

‘நாப்கின் வேணுமா மேடம்?’ – அவள் தேடும் திசையைப் பார்த்தபடி அந்த இருவரில் ஒருவன் அவசரப்படுத்தினான். அந்தக் கேள்வி அவளுக்கு கண நேர ஆறுதலைக் கொடுத்தது. பிராண்ட், அளவு, விங்ஸ் என்றெல்லாம் பேச்சை நீட்டித்து கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டாள். வழக்கமாக அதற்கே தயங்குபவள் தான்; இன்று அது துச்சமாகி, சகஜமானதும் கூட அவளைத் தொந்தரவு செய்தது. தான் ஏன் இப்படி ஆகிவிட்டேன் என்ற பதைப்பு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது. அடுத்த கேள்வியை மனதிற்குள்ளும், தொண்டையிலும், நாவிலுமென பல கட்டங்களில் பலமுறை பரிசீலித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு செய்தித்தாளிலான பொட்டலத்தை அவளிடம் நீட்டி, ‘வேறெதும் வேணுமா?’ என்ற கடைப் பையனின் குரல், அதட்டலாகத் தெரிந்தது. யோசிக்காமல் ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டாள். நீட்டப்பட்ட இரசீதைப் பெற்றுக்கொண்டு மீண்டும் கடைக்குள் எதையோ தேடுவதைப் போல பார்த்தாள். அவள் பார்க்கும் மருந்து அடுக்கை அந்தப் பையனும் திரும்பிப் பார்த்த அவகாசத்தில், தன் அத்தனை தைரியத்தையும் குவித்து அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாள்.

‘ஐ-பில் இருக்கா?’

திரும்பியவனின் பார்வையை அவள் சந்திக்கவே இல்லை. அருகில் நின்ற நடுவயது ஆணின் கண்கள் சட்டென இவளைத் துளைத்து விடுவதைப் போல பார்க்க ஆரம்பித்தன. கையிலிருந்த இரசீதை மேய்வதைப் போல நின்றுகொண்டிருந்தாள். அந்தக் கேள்வியை மறுமுறை ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட கடை ஊழியன் கல்லாவிலிருந்த முதியவரிடம் போய் ஏதோ கேட்டான். எழுந்து வந்தவர், ‘என்னம்மா கேட்டீங்க?’ என்றார். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையைச் சொல்வதே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவர்கள் தன்னை அப்படி சொல்ல வைத்து ஏதோ அற்பமான விரக இன்பம் காண்கிறார்களோ என்று அவளுக்குத் தோன்றியது. ‘ஸ்டாக் இல்லம்மா இப்ப’ என்று அவர் சொன்னதும், அப்படியொரு கேள்வியையே கேட்காதவள் போல சட்டென இரசீதுக்கான பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு விறுவிறுவென வண்டியில் வந்து ஏறிக்கொண்டாள். அந்தக் கடையில் இருந்த மூவரும் இப்போது தன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றிய போது ரொம்பவே அவமானமாக உணர்ந்தாள். அந்தக் கல்லாப்பெட்டி முதியவர் அவளது கழுத்தை அளப்பது போல பார்த்தது நினைவில் வந்தது – தாலியைத் தேடுகிறார் என்பது அப்போதே அவளுக்கு கூசியது. குறைந்தபட்சம் அந்த மாத்திரைகள் கிடைத்திருந்தாலாவது அந்த அசிங்கத்திற்கு ஓர் இழப்பீடு கிடைத்ததாக இருந்திருக்கும். இன்னொரு கடை – இன்னொரு முறை – அவளுக்கு அடிவயிறு கனத்தது. சிறுநீர் கழிக்கவேண்டும் போல இருந்தது. வாகனத்தின் ஏசியை குறைக்கச் சொன்னாள்.

விடுதி வாசலில் போய் இறங்கியதும், கொஞ்சம் தூரம் நடந்துபோய் அந்தத் தெருமுனையில் இருக்கும் மருந்து கடையில் கேட்டுப் பார்க்கலாமா என்ற யோசனை. யோசித்து முடிப்பதற்குள் நடக்க ஆரம்பித்துவிட்டாள். அங்கு வேலையில் இருக்கும் அக்காவின் முகம் நினைவுக்கு வந்ததும், அவளால் இன்னும் உற்சாகமாக நடக்க முடிந்தது. அவள் அங்கு போய் நிற்பதற்கும் ஷட்டர் கீழே இறக்கப்படுவதற்கும் சரியாக இருந்தது. ‘என்னம்மா, எதும் வேணுமா?’ என்று ஷட்டரைப் பாதியில் நிறுத்திய வழுக்கை தலையரைப் பார்த்ததும் வார்த்தையே வரவில்லை. அந்த அக்காவையும் காணவில்லை. அந்தக் கடையை நோக்கித்தான் அவள் வந்திருந்தாள் என்பது அப்பட்டமாக தெரிந்திருக்கும் பட்சத்தில் அவள் எதையாவது கேட்டே ஆக வேண்டும். ‘ஸ்ட்ரெப்ஸில்ஸ் இருக்காண்ணா?’

விடுதிக்குத் திரும்பும்போது கண்ணீர் முட்டியது. சினிமாவில் பார்த்த கருப்பு வெள்ளை நிழலான ஸ்கேன் சிசுவின் பிம்பம் திடீரென மனதில் தோன்றி மறைய, கால்கள் இடறியது. உடலே பாரமாக தெரிந்தது. அவளையே அவள் தூக்கிக்கொண்டு படிகளில் ஏறுவதைப் போல உணர்ந்தாள். மீண்டும் கூகிளில் அந்த மாத்திரைகள் குறித்து வாசிக்க ஆரம்பித்தாள். விடுதியறையில் இருந்த இரண்டு தோழிகளும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பது, ஏதோ இவளைப் பகடி செய்வதைப் போல தோன்றியது.

‘பில்ஸ் கெடைக்கல’ – ப்ளூ டிக் வந்தும் மறுமுனையிலிருந்து முழுதாக மூன்று நிமிடங்களுக்கு பதில் இல்லை. இதுவரை இல்லாதவொன்றின் வினோதம் அவளை ரொம்பவே நிதானமிழக்க வைத்தது. ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு சிந்தனை; ஒரு கேள்வி; அந்தக் கேள்விக்குள்ளேயே அதற்கான பதில். கடந்த ஒரு வாரமாக இந்த நாளுக்கான திட்டமிடலைப் பற்றி பேசியபோது உடனுக்குடன் அவன் பதிலளித்ததையும் சேர்த்தே தான் அவளால் யோசிக்க முடிந்தது. உன் தேவை தீர்ந்துவிட்டதா நவீன்? அரை நாளில் நான் உனக்கு அலுத்துப்போய் விட்டேனா? இவ்வளவு தான் இவள் என்று சுருக்கிவிட்டாயா என்னை? எட்டு மாதங்களாக இனிக்க பேசிய உன் காதல் மொழிகள் அத்தனையும் என்னை இப்படி புசிப்பதற்காக மட்டும்தானா? என் தசைகளின், சின்ன சின்ன நுணுக்கங்களையும் அனுபவித்துவிட்ட பின் நான் கசக்க ஆரம்பிக்கிறேனா? நீ அத்தனை சுயநலக்காரனா நவீன்? கொஞ்சமும் காதலற்றவனா? அல்லது நான் உனக்கு அத்தனை அற்பமானவளா?

அந்தக் கேள்விகள் தோன்றியவுடனே அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. அறைத் தோழிகள் இந்த திடீர் சங்கடத்திற்கு ஆயத்தமாக இருக்கவில்லை. ஒரு மாதிரியாக ஒப்பேற்றிக்கொண்டு வந்து அருகில் அமர்ந்தார்கள். ஒருத்தி ஆதரவாக தோளில் கை வைக்க, பாரதிக்கு அதிலேதோ நாடகத்தனம் இருப்பதாக ரொம்பவே கூசியது. தான் தனிமையில் இருக்க விரும்புவதாக கூற வாயெடுத்து, ஏதோ தோன்றி நிறுத்திக்கொண்டாள். அந்தக் கரங்களால் போலியாகவேனும் தனக்கொரு ஆறுதல் கிடைப்பதாக ஆசுவாசமடைந்தாள். அவர்களிடம் இதைப் பற்றி கேட்டுப் பார்க்கலாமா என்று தோன்றியது. உடலைப் பற்றியும், ஆண்களைப் பற்றியும், உறவைப் பற்றியும், கலவியைப் பற்றியும் அவர்கள் முன்பு பேசிக்கொள்ளாமலெல்லாம் இல்லை. அவை ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட மேம்போக்கான பேச்சுகள். இது பூரண அந்தரங்கம். இரண்டுக்குமான தொலைவு அவளுக்கு அச்சமூட்டியது. ஆடை மாற்றும் போது அங்கங்களையும், அளவுகளையும் மாறி மாறி கேலி செய்துகொள்வதில் இருக்கும் செளகர்யம், இப்போது இந்த விஷயத்தில் அங்கு இல்லை என்பது அவளுக்கு வெளிச்சமாக தெரிந்தது. உடலின் நிர்வாணம் பெரிதே இல்லை. ஆற்றுப்படுத்தும் தோழிகளில் ஒருத்தி அப்போதும் கூட வெறும் உள்ளாடையோடு தான் அமர்ந்திருந்தாள். மனதை, தன் அகத்தை நிர்வாணப்படுத்துவதன் வலி உள்ளுக்குள் அவளை ஆட்டிப்படைத்தது.

நவீனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. தோழிகள் இருவரும் காரணம் கேட்காமல் இருப்பதே அந்தக் கணத்திற்கான மருந்தாக இருந்தது. தன் ரகசியத்திற்கான மரியாதையை அவர்கள் கொடுப்பதாக அதனை உணர்ந்தாள். தோளில் கரம் வைத்திருந்தவளின் மடியில் சாய்ந்து கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். இன்னொருத்தி கலைந்து சற்று அலங்கோலமாகியிருந்த பாரதியின் கேசத்தைக் கோதிவிட்டாள். பாரதிக்கு, தன் சமீபத்திய எதிர்காலம் குறித்த அச்சம் உள்ளுக்குள் வளர்ந்து கொண்டே இருக்க, தன் தோழிகளின் அன்பின் கணப்பில் உலகம் அந்த நொடியில் அப்படியே உறைந்து போய்விட வேண்டுமென பிரார்த்தித்தாள். கூடவே, ‘எதுனாலும் சரியாய்டும்’ என்ற ஒருத்தியின் குரலிலிருந்த, தன் அகத்திற்குள் நுழைய விரும்பாத ஒழுங்கு ரொம்பவே நெகிழச் செய்தது. ‘காலம் எல்லாவற்றையும் ஆற்றுப்படுத்தும்’ என்றது இன்னொருத்தியின் குரல்.

காலம். அதுதானே இப்போது பிரச்சனை. ‘சீக்கிரம் எடுத்துக்கறது நல்லதாம்’. சீக்கிரம் என்றால் எத்தனை சீக்கிரம்? அறிவியல் ‘உடனே’ என்று அவசரப்படுத்துகிறது. முடிந்தால் ‘ஒரு நாளுக்குள்’ என்று கரிசனம் காட்டுகிறது. கொஞ்சம் யோசித்து ‘சரி அதிகபட்சம் மூன்றே நாட்கள்’ என்று மிரட்டுகிறது. சட்டென எழுந்து அமர்ந்துகொண்டாள். அன்றைய நாளை மீண்டும் அசைபோட்டு பார்த்தாள். காலையில் அந்த ஹோட்டல் வரவேற்பறை ஊழியர் ‘திருமணமானவர்களா?’ என்று கேட்டதிலிருந்து நினைவு விரிந்தது – ‘இல்லை’ என்று சொன்னதற்கு அவரது முகமொழியில் எந்த மாற்றமும் இல்லையெனினும் அந்தக் கேள்வியே அப்போது அவளைக் கூனிக்குறுகச் செய்தது. அறை எண் 306ல் நுழைந்த அவசரத்தில் நவீன் அவளைக் கசக்கிப் பிழிந்ததை இப்போது உடலில் உணர்ந்தாள். இயந்திரத்தனமான முதல் சேர்க்கை நடந்தது காலை ஏழு மணியளவில். சேர்க்கை என்று கூட சொல்லமுடியாது. முதன்முறை என்பதால் இவள் துடித்து பாதியிலேயே பின்வாங்கிவிட்டாள். ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் அவன் அன்பாக பேசியது மிச்சமிருக்கும் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கான பாசாங்கு தான் என்று இப்போது அவளுக்குத் தோன்றியது.

இரண்டாவது முயற்சியிலும் இவளால் ஒத்துழைக்க முடியவில்லை. சோர்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தவனை பதினோரு மணியளவில் இவள்தான் எழுப்பிவிட்டு தனக்கு பசிப்பதாகச் சொன்னாள். ஆணைக்காக காத்திருந்தவன் போல, உணவு வாங்கிக்கொண்டு வந்தான். அப்போதும் அது அந்நாளின் எஞ்சியிருக்கும் பொழுதுக்கான அக்கறையாக இருக்க வேண்டும். ‘கொஞ்சம் தூங்கலாமா?’ என்று கேட்டபோது அவநம்பிக்கையுடன் ஆமோதித்த அவனது முகம் இப்போது தெளிவாக நினைவிற்கு வந்தது. மூன்றாவது முயற்சியை இவள்தான் துவங்கி வைத்தாள். அவளது அந்தத் தீர்மானத்திற்காக அவன் காத்திருந்திருக்க வேண்டும். பெண்ணாக முன்னெடுக்காமல் அவளது முழுமையை கவர்ந்துகொள்ள முடியாது என்பதில் அவன் தெளிவாக இருந்திருக்கிறான். இருவருக்கும் இருந்த எதிர்ப்பார்ப்பைத் தணியவைக்கும் அளவிற்கு இல்லையெனினும், அந்த முயற்சி கொஞ்சமேனும் நம்பிக்கையளிப்பதாக இருந்தது. அன்றைய தினத்திற்கு இதுதான் உச்சம் என்ற எண்ணத்திற்கு கிட்டத்தட்ட வந்து, இருவரும் ஒரு சமாதான உறக்கத்திற்குப் போனார்கள். அவனிடம் பாதுகாப்பு பிரயத்தனங்களும் மூன்று கலவிகளுக்கு போதுமாகத் தான் கைவசம் இருந்தன. உறங்கியெழுந்து ஐந்து மணிக்கெல்லாம் அறையைக் காலி செய்யலாமென்ற திட்டம், உடல் சோர்வினால் தள்ளிப்போனது. ஆறே முக்கால் மணிக்கு இருவரும் ஒரே சமயத்தில் கண் விழித்தார்கள். புறப்பட ஆயத்தமாகும் வேளையில், கண்ணாடி முன் நின்று இணையாகத் தங்களைப் பார்த்துக்கொள்ளும் போது ஏதோ பரவசத்தில் அவனை முத்தமிட்டாள். அந்த முத்தம் நீண்டது தான் சிக்கல். உணர்வுப் பெருக்கின் முழுமையை எட்டும்போது, எச்சரிக்கையுணர்வை இருவருமே அலட்சியம் செய்தார்கள். அன்றைய தினத்தின் நிஜமான அதிகபட்சத்தை இருவரும் பெருமூச்சாக வெளியேவிட்டு துவண்டு சாய்ந்தார்கள். அவர்களின் மூச்சிறைப்பைத் தவிர உலகத்தில் எந்த அரவமும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பினார்கள். ‘நவீன்.. ஒன்னும் பிரச்சனையாகாதுல்ல?’. ‘ஆகாது பாத்துக்கலாம்’. அந்த சமயத்தில் ‘ஆகாது’ மட்டும்தான் அவளுக்கு செவி சேர்ந்தது. இப்போது தான் ‘பாத்துக்கலாம்’ என்பது பயமுறுத்துகிறது.

அப்போது நேரம் என்ன இருக்கும் என்று யோசித்தாள். அடுத்த நாள் இரவு ஏழரை மணி வரை தனக்குக் கெடு இருப்பதாக தோன்றியது. இப்போது இந்த இரவில் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாது என்ற சமநிலைக்கு அவளால் வரமுடிந்த போது அருகில் இருந்த தோழியை, அவளால் தான் அது சாத்தியப்பட்டது என்பது போல கட்டியணைத்துக் கொண்டாள். ‘நாளை எல்லாம் சரியாகிவிடும். தூங்கு’ என்று அவள் சொன்னதும், ‘ஆமாம்’ என்று தீர்க்கமாக பாரதி ஆமோதித்தாள். கட்டிலில் படுத்துக்கொண்டதும், சற்று நேரத்தில் விளக்கு அணைக்கப்பட்டது. தோழிகள் இருவருமும் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பாரதி கடைசியாக ஒரு முறை அலைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். நவீனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதுவரை பார்த்துப் பார்த்து ரசித்திருந்த அவனது கொஞ்சல்களை, விதவிதமான தற்படங்களை, தரவிறக்கம் செய்யப்பட்ட வாசகங்களை, முத்தங்களை என அந்த உறவின் ஆகப்பெரிய பொக்கிஷமாக அவள் வைத்திருந்த அந்த உரையாடலை அப்படியே அழித்தாள். சட்டென திரை வெறுமையானதும் ஏதோ அந்த உறவே முடிவிற்கு வந்துவிட்டதைப் போல அவளுக்கு இருந்தது. அது அவளுக்கு பயமாகவும் இருந்தது. ‘நவீன்.. இருக்கிறாயா?’ என்று பதற்றத்துடன் ஒரு செய்தி அனுப்பினாள். ஒற்றை டிக்குடன் அந்தச் செய்தி அப்படியே திரையில் நின்றது. அதே செய்தியை மீண்டும் அனுப்பினாள். கொஞ்சமும் யோசிக்காமல் அவனது எண்ணுக்கு அழைத்தாள். ‘….தொடர்பு எல்லைக்கு வெளியே…’ ஒட்டுமொத்தமாக பொறுமையிழந்தாள். சற்று நேரத்திற்கு முன் அவனைப் பற்றி கொச்சையாக தோன்றிய அத்தனை கேள்விகளையும் துளியும் இடைவெளியின்றி அவனுக்கு அனுப்பிவிட்டு, அலைபேசியை அணைத்துவிட்டு, ஏதோ பாரத்தை இறக்கி வைத்ததைப் போல கண்களை மூடிக்கொண்டாள். உடல் சோர்வும், சற்று முன் அழுததும் சேர்ந்ததால், தூக்கம் உடனே வந்துவிட்டது.

‘ஆஃபிஸ் போலயா?’ ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தோழி கேட்டாள். ‘இல்லை’ என்ற வெற்றுப் புன்னகையுடன் படுக்கையிலிருந்து எழுந்துகொண்டவள், கடிகாரத்தைப் பார்த்தாள். எட்டு மணி. மருந்தகம் திறந்திருக்குமா என்று யோசித்தாள். அந்த நாளுக்கு அதைத் தவிர வேறு வேலை எதுவுமில்லை. முகத்தில் நீரையள்ளி இரைத்துக்கொண்டு, படுக்கையின் விளிம்பில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அணிந்துகொண்டு அவசரமாக படியிறங்கினாள். கடை திறந்திருந்ததும், உள்ளே அந்த அக்கா நிற்பதும் அவளுக்கு அத்தனை நிம்மதியாக இருந்தது.

‘அக்கா..’

‘சொல்லுப்பா.. என்ன வேணும்?’ ஏதோ அடுக்குகளில் பெட்டிகளை அடுக்கிக்கொண்டே கேட்டாள். தான் நிற்கும் இடத்திலிருந்து சத்தமாக அதைக் கேட்கத் தயங்கி, பாரதி எதுவும் சொல்லாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.

‘என்னப்பா?’ அவராகவே பக்கமாக வந்தார்.

‘ஐ-பில் வேணும்க்கா..’

சட்டென அவர் முகத்தில் தோன்றியது என்ன? இளக்காரமா?

‘அது இப்ப வர்றதில்லையேப்பா.. நம்மூர்ல பேன் பண்ணிட்டாங்க..’ ஒரு வினாடி பாரதிக்கு மயக்கம் வருவதைப் போல இருந்தது. காது அடைத்தது. நிலை புரியவில்லை.

மீண்டும் சுதாரித்து, ‘என்னக்கா?’ என்றாள். மீண்டுமொரு முறை கேட்டுப் பார்த்தால் வேறு பதில் கிடைக்குமா என்ற அடிப்படை அற்ப மனித சுபாவம்.

‘ரெண்டு வர்சத்துக்கு மேல ஆச்சுப்பா.. பேன் ஆயிடுச்சு’ அவர் அதனையொரு மிகச் சாதாரண செய்தி போல சொல்வதை பாரதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளால் எப்படி இவ்வாறு பொறுப்பின்றி பதில் சொல்லமுடிகிறது என்று கோபம் வந்தது. அப்படியே தேங்கி நின்றுகொண்டிருந்தாள்.

‘வேற எங்கயும் கெடைக்குமாக்கா?’ அவளது கூச்சமெல்லாம் மொத்தமாக வடிந்து போயிருந்தது. குரலில் வெளிப்படையாக ஒரு பதற்றம் தெரிந்தது.

‘இல்லப்பா.. எங்கயும் ஸ்டாக் இருக்காது.. சின்ன வயசு புள்ளிங்கல்லாம் கெட்டுப்போவுதுன்னு பேன் பண்ணிட்டாங்க’ – இந்த பதில் சுருக்கென்று அவளுக்குள் இறங்கியது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இயந்திரகதியில் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பணிக்கு புறப்பட்டு போய்விட்ட தோழிகள் இல்லாத வெற்று அறைக்குள் நுழையவே அச்சமாக இருந்தது. புறப்பட்டு தானும் போய்விடலாமா என்று யோசித்தாள். ஒரு நாள் விடுப்பிற்கு அனுமதியும் வாங்கியிருந்தாள். அந்த ஒரு நாளால், தான் இன்னும் எத்தனை துயரங்களை அனுபவிக்கப் போகிறேனோ என்று உடல் சில்லிட்டது. அலைபேசியை உயிர்ப்பித்தாள்.

மனோஜ், ‘என்ன விஷ்யம் சொல்லு பாரதி.. கெஸ் வொர்க்லாம் வேணாம்’ என்று அதிகாலை மூன்று மணிக்கு பதில் அனுப்பியிருந்தான். அந்த உரையாடலைத் தொடரும் எண்ணமோ மனநிலையோ அப்போதைக்கு அவளுக்கு இல்லை.

நவீனுக்கு அனுப்பிய அத்தனை குறுஞ்செய்திகளும் வாசிக்கப்பட்டிருந்தன.

‘உன்னை அழைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். என்ன பைத்தியக்காரத்தனம் இதெல்லாம்? ஏன் மொபைலை ஸ்விச்-ஆஃப் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று ஒரே ஒரு பதில் நவீனிடம் இருந்து வந்திருந்தது.

உடனே சற்றும் யோசிக்காமல் அவனது எண்ணுக்கு அழைத்தாள்.

‘நவீன்.. பில்ஸ் எங்கயுமே கெடைக்காதாம் நவீன்..’ என்று அழ ஆரம்பித்தாள்.

‘என்னாச்சு இப்ப உனக்கு? எதுக்கு மெஸ்ஸேஜ்ல கண்டபடிக்கு என்னென்னவோ எழுதி வெச்சிருக்க?’

‘அத விடு.. கடைல கேட்டா இங்க அத பேன் பண்ணி ரெண்டு வருஷம் ஆவுதுன்னு சொல்றாங்க. சத்யமா என்ன செய்றதுன்னே தெரில’

‘என்ன இவ்ளோ லேசா அத விடுன்னு சொல்லிருக்க? என்ன வார்த்தயெல்லாம் யூஸ் பண்ணிருக்க நீ? நா எதோ செக்ஸ்க்காகத் தான் உன்னோட பழகுன மாதிரி’ நவீனின் குரலில் தன் சுயம் சீண்டப்பட்டதற்கான பதற்றம் மட்டுமே தெரிந்தது.

‘ஐய்யோ ப்ளீஸ்.. கோவத்துல பேசுனத பெருசு பண்ணாத நவீன்’

‘என்னடி பெரிய மசுரு கோவம் உனக்கு அப்புடி.. பத்து மணி ட்ரைன புடிக்க அவசரமா ஓடும்போது ரிப்ளை பண்ணல.. கோயம்பத்தூர் இதுக்கு முன்னாடி வந்ததுமில்ல.. ரைல்வே ஸ்டேஷன்ல அவ்ளோ கன்ஃபியூஷன்.. ஒரு வழியா வண்டிய புடிச்சு ஏறி படுத்ததும் செம்ம டயர்டு.. தூங்கிட்டேன்.. காலைல பேசிக்கலாம்ன்னு.. அதுக்குள்ள இஷ்டத்துக்கு பேசிருக்க?’

‘நவீன் திஸ் இஸ் நாட் தி டைம்.. ப்ளீஸ்.. பில்ஸ் கெடைக்கல.. என்ன பண்ணலாம்ன்னு சொல்லு’ பாரதியின் ஒட்டுமொத்த அக்கறையும் அந்தவொரு விஷயத்தில் மட்டுமே அடைந்திருந்தது. அதைத் தவிர்த்த எதையும் அவள் லட்சியம் செய்யும் மனநிலையில் இல்லை. நவீனையும்.

‘அதெல்லாம் ஒன்னும் ஆவாது.. தேவயில்லாம இப்ப சீன் க்ரியேட் பண்ணாத..’

‘சீன் க்ரியேட் பண்றனா? ஒன்னும் ஆவாதுன்னு எப்டி சொல்ற? ஹவ் ஷ்யூர்? எதோ கடவுள் மாதிரி சொல்ற..’ அழுகை இப்போது கோபமாக மாறியிருந்தது.

‘அப்டி என்னடி நடந்துருச்சு.. முழுசா ஒன்னுமே நடக்கல.. அதுக்கே இவ்ளோ பேச்சு வேற?’ பாரதிக்கு இந்த பதிலில் பச்சையான அதிருப்தி தெரிந்தது. அவனும் அந்த தொனியில் தான் சொன்னான்.

‘உன்ன எப்டி திருப்தி படுத்துனா இதெல்லாம் நா பேசலாம், இடியட்? ஒன்னுமே நடக்கலன்னு சொல்ற.. நாக்குல நரம்பே இல்லாம.. அப்றம் என்ன மயித்துக்குடா பில்ஸ் வாங்க சொல்லி எனக்கு சொன்ன?’

நவீனின் குரல் லேசாக தடுமாறியது.

‘அது.. அது ஜஸ்ட் ஒரு எக்ஸ்ட்ரா சேஃப்ட்டிக்கு தான்.. சும்மா ஒரு வாட்டிலலாம் ஒன்னும் ஆயிடாது..’

‘ஆயிடுச்சுன்னா?’

‘சினிமாலதான் ஆவும்.. பெணாத்தாம இரு..’

‘என்ன லாங்குவேஜ் யூஸ் பண்ற நீ? பெணாத்துறனா? இதுக்கு முன்னாடி இந்த மாதிரிலாம் நீ பேசிருக்கியா? ஹவ் அப்யூஸிவ்.. அதான் உனக்கு வேணுங்கறது ஆயிடுச்சு.. அதான்.. நேத்து செக்-அவுட் பண்னிட்டு வெளிய வந்ததும், ஹாஸ்டல் வரைக்கும் வந்துட்டு போவன்னு நெனச்சேன்.. ஆர் அட்லீஸ்ட் எனக்கு கேப் வர வரைக்குமாச்சும் வெயிட் பண்ணுவன்னு நெனச்சேன். வெரி பேசிக் எக்ஸ்பெக்டேஷன்.. சட்டுன்னு ஒரு ஆட்டோ புடிச்சி ஓடிட்ட.. அப்போ நா எவ்ளோ டெஸ்பரேட்டா யோசிப்பேன்னு உனக்கு தெரியவே இல்லைல்ல? என்ன நெனச்சா எனக்கே பாவமா இருந்துச்சு..’

‘பாரதி.. தேவயில்லாம சின்ன விஷயத்தெல்லாம் ரொமாண்ட்டிசைஸ் பண்ற.. இந்த விக்ட்டிம் கார்ட் வேலையெல்லாம் வேணாம்.. நான் சொல்றேன்ல.. ட்ரைனுக்கு லேட் ஆயிடுச்சுன்னு.. மிஸ் ஆச்சுன்னா, புக் பண்ணாம பஸ்ல சென்னை வரைக்கும் வர்றெதெல்லாம்..’

‘ரீசன்ஸ்.. ஜஸ்ட் ரீசன்ஸ்.. உன்னோட தேவ முடிஞ்சுது.. ஆர், நீ இப்ப சொன்ன மாதிரி உனக்கு சாட்டிஸ்ஃபை ஆகல.. இது ரெண்டுல எதோ ஒன்னுதான், அதான் நீ அப்படி ஓடுன..’ நவீனை இந்த நேரடி குற்றச்சாட்டு அமைதியிழக்கச் செய்திருக்க வேண்டும். அது உண்மையா இல்லையா என்பதெல்லாம் அவனுக்கு முக்கியமில்லை. அது எப்படி இவ்வாறு பட்டவர்த்தனமாக பேசப்படலாம் என்பதில் ரொம்பவே பொறுமையிழந்தான்.

‘இனஃப் பாரதி.. விட்டா பேசிட்டே போற.. கடகடன்னு வார்த்தைய கொட்டி ஒன்னுமே இல்லாம பண்ணிடாத.. நான் எங்க வீட்லலாம் உன்ன பத்தி சொல்லிட்டேன்.. தப்பா டிசைட் பண்ணிட்டனோன்னு தோன வைக்காத..’

‘வாவ்.. யூ கோ அஹெட் மேன்..’

‘பாரதி.. ப்ளீஸ்..’

‘இவளோ நேரம் வரைக்கும், உனக்கு நா போர் அடிச்சட்டனோன்னு டவுட்டாதான் இருந்துச்சு.. நீயே கரெக்ட்டா பாயிண்ட்டுகு வந்துட்ட..’

‘புல்ஷிட்.. என்னடி பேசுற..’

‘நீங்க போகலாம் நவீன். பட் எனக்கு இதுக்கு மட்டும் ஒரு சொல்யூஷன் சொல்லிட்டு போங்க’

‘எதோ கன்சீவ் ஆயிட்டமாதிரி ஒளறிட்டு இருக்க.. ஒரு மாதிரி சிக் ஃபீமேல் சைக்காலஜி.. ரெண்டு பேரும் மியூச்சுவலா இன்வால்வ் ஆன விஷயத்துல, நீ மட்டும் எதோ எக்ஸ்ப்லாய்ட் ஆயிட்ட மாதிரி பேசுற.. அண்ட் மோரோவர்.. கெளம்பிட்டு இருந்தவன உசுப்பி நீதானடி ஆரம்பிச்ச.. என்னமோ என்னோட தேவை என்னோட தேவைன்னு படத்த போட்டுட்டு இருக்க.. இந்த பிரச்சனயே உன்னாலதான்.. உன்னோட அரிப்…’ சட்டென அந்த வார்த்தையைப் பாதியில் நிறுத்தினான்.

இரு முனைகளிலும் குறைந்தபட்சம் பத்து வினாடிகளுக்கு மேலான மெளனம்.

‘என்ன சொன்ன? கம் அகைன்..’

‘நத்திங்..’

‘சொல்லு என்ன சொன்ன?’

‘….’

‘யூ ஃபில்த்தி ஸ்கெளண்ட்ரல்.. கெட் லாஸ்ட்…’

இணைப்பைத் துண்டித்து, அவனது எண்ணை மீண்டும் தன்னைத் தொடர்பு கொள்ளமுடியாதபடி தடை செய்தாள். அவனுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்துவது கூட அர்த்தமற்றது என்று தோன்றியது. இந்த விஷயத்தில் இதற்கு மேலான போராட்டம் முழுக்க முழுக்க தன்னுடையது என்ற தெளிவிற்கு வந்தாள். எங்கோ தனக்கொரு பிடிமானம் இருப்பதாக இத்தனை நேரமும் நம்பிக் கொண்டிருந்ததன் பலவீனத்திலிருந்து சட்டென மீண்டு விட்டதாக அவளுக்குத் தோன்றியது. அந்த உடனடி சுதந்திர உணர்வு அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. தான் அத்தனை உருகி நேசம் வைத்திருந்த ஒருவனது விலகலால் எப்படி தனக்கொரு ஆத்ம நிம்மதியைக் கொடுக்க முடிகிறது என்று யோசித்தாள். தன் காதல் அத்தனை பாசாங்கானதா? வலுவற்றதா? எந்தவொரு பரிசுத்த அன்பும் தன் மாயப் பரப்பில் அந்த உறவின் கசப்புகளை மறைத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. நவீனின்பால் தற்போது தனக்கிருப்பது கோபமா வெறுப்பா என்று பரிசீலித்தாள். எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

இணைய வர்த்தகத்தில் அந்த மாத்திரைகளைப் பெற வாய்ப்பிருக்கிறதா? – சாத்தியம் என்ற பதில் வந்ததும் உற்சாகமானாள். ஆனால் கைக்கு வந்து சேர மூன்று நாட்களாகும் என்று பார்த்தபோது அலைபேசியை வீசியெறிந்து நொறுக்கிவிட வேண்டும் போல இருந்தது. ஏன் அந்த மாத்திரைகள் தடை செய்யப்பட்டன என்று இணையத்தில் ஆராய்ந்தாள். அப்படி எந்தவொரு முறையாக அறிவிக்கப்பட்ட அரசாணையும் கிடைக்கவில்லை. பூடகமாக, தனியார் மருந்தகங்களில் எளிதாக கிடைக்கும் வசதியை மட்டும் கொள்முதல் நிலையிலேயே முடக்கியிருக்கிறார்கள் என்று புரிந்தது. அப்படியென்றால் அரசு மருத்துவமனையில் கிடைக்குமா? நேரிலேயே போய் பார்த்துவிட்டு வரலாமா? எங்கு யாரிடம் கேட்க வேண்டும்? விசாரிக்கும் ஒவ்வொருவரிடமும் தன்னை அம்பலமாக்க வேண்டுமா? எத்தனை செவிகள்? எத்தனை கண்கள்? எத்தனை மதிப்பீடுகள்?

‘மனோஜ்.. இருக்கிறாயா?’

‘சொல்லு பாரதி’

‘எனக்கொரு உதவி செய்ய முடியுமா? வேலையாக இருக்கிறாயா?’

‘வேலை இருக்கத்தான் செய்யும்? என்ன உதவி? அதைச் சொல்’

பாரதிக்கு எப்படியோ மனோஜால் இந்த விஷயத்தில் தனக்கு உதவி செய்யமுடியுமென்று தோன்றியது. அதைவிட முக்கியம் – இந்த விஷயத்தைத் தன்னால் நம்பகமாக அவனிடம் பகிர்ந்து கொள்ளமுடியும் என்று தோன்றியது. தன் தோழிகளிடம் கூட சொல்லமுடியாத இந்த விஷயத்தை எப்படி மனோஜிடம் சொல்ல முடிகிறது என்று யோசித்தாள். தன் மீது எந்த மதிப்பீட்டையும் அவன் திணித்துவிட மாட்டான் என்பதன் நம்பிக்கையாக அது இருக்க வேண்டும் என்றுதான் பட்டது. இவள் எந்த பதிலும் சொல்லாமலிருக்க, அவனே அலைப்பேசியில் அழைத்தான். அவனது அந்த தன்னார்வத்தினால் நெகிழ்ந்து உந்தப்பட்டு, முழுவதுமாக சொல்லி முடித்தாள்.

‘இதத்தான் நேத்து மறக்கமுடியாத நாள்ன்னு சொன்னியா?’ காயப்படுத்துவது அவனது எண்ணமாக இருக்காது என்று தெரிந்திருந்தும், அந்தக் கேள்வி தன்னை செருப்பால் அடிப்பது போல இருந்தது அவளுக்கு. பதிலே சொல்லாமல் மெளனம் சாதித்தாள்.

‘இப்ப நான் என்ன செய்யட்டும்? ஜிஎச் போயி செக் பண்ணட்டுமா?’

‘ஹ்ம்.. முடியுமா? ஒன்னும் சிரமம் இல்லையே?’

‘எனக்கென்ன செரமம்?’

அவனது கேள்வி சரிதான் என்று பட்டது. அவனுக்கென்ன சிரமம்? இதில் ஆண்களுக்கு எப்போதும் சிரமம் இல்லை தான். ஆண்-மைய உலகத்தில் எதுவுமே அவர்களுக்கு சிரமமில்லை தான். ஆணுறை வாங்கலாம், சிகரெட் வாங்கலாம், வரிசையில் சண்டை போட்டு சாராயம் வாங்கலாம். தான் ஒரு நாப்கின் வாங்க திண்டாடிய நாட்களை யோசித்துப் பார்த்தாள். எக்ஸ்ட்ரா லார்ஜ் என்று சொன்னபோது சிரித்த நீலச்சட்டை கிழவனின் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. இது குறித்தெல்லாம் எத்தனை முறை ஃபேஸ்புக்கில் எழுதிவிட்டார்கள். எழுதி என்னவாகி விடப் போகிறது அல்லது என்னதான் ஆகிவிட்டது என்று யோசித்தாள். அதையெல்லாம் வாசித்து கொஞ்சமேனும் வெளியே வந்தாலும், அந்த சிரிப்புகள் இன்றும் உளைச்சலைத் தராமலா இருக்கின்றன? தன் உடலைப் பற்றி, அதன் பரிசுத்தத்தைப் பற்றி ஏன் இந்த ஒட்டுமொத்த சமூகமும் இத்தனை அக்கறை கொள்கிறது என்று அவளுக்கு சலிப்பாக இருந்தது.

அவஸ்தையான இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு மனோஜிடமிருந்து அழைப்பு வந்தது.

‘இங்க ரொம்ப ரெஸ்ட்ரிக்‌ஷன் இருக்கு பாரதி.. ஹார்மோன் ட்ரக்ஸ்லாம் டாக்டர் சொல்லாம தர மாட்டங்களாம்..’

‘ஐயோ.. என்ன செய்யலாம் மனோஜ்?’

‘வெயிட் பண்ணு.. எதாவது காசடிச்சா வேல நடக்குதான்னு பாக்குறேன்.. அட்லீஸ்ட் முன்னாடியே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல.. நெக்ல வந்து சொல்ற..’

பாரதி அத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை மீண்டது. இந்த ஒரு துயரத்திலிருந்து மட்டும் மீண்டுவிட்டால் வாழ்வின் அத்தனை சவால்களையும் தன்னால் இனி சமாளித்துவிட முடியும் என்று சம்பந்தமேயில்லாமல் யோசித்தாள். சற்று நேரத்தில் மனோஜின் அழைப்பு.

‘இங்க ஒன்னும் வேலைக்கு ஆகல.. அந்த பேர்ல நேரடியா இங்க எதும் வராது போல.. இந்த பர்ப்பஸ்க்குன்னு டாக்டர் பாத்துதான் மாத்தர கொடுப்பாங்களாம். நெட்ல ஹார்மோன் பேர பாத்து நேரடியா கேட்டுப்பாத்தேன்.. நோ யூஸ்..’

‘மனோஜ் என்னால எதுமே யோசிக்க முடியல..’

‘சாப்ட்டியா எதாச்சும்? இதையே யோசிக்காத.. நா வேற சோர்ஸ் ட்ரை பண்றேன். நீ மொதல்ல சாப்புடு’

‘இன்னிக்கு சாய்ந்தரத்துக்குள்ள வேணும் மனோஜ்’

‘ஹ்ம்.. நீ ரெஸ்ட் எடு’

மனோஜின் கரிசனம் கூட தன்னை சிறுமைப்படுத்துவதாக அவளுக்குத் தெரிந்தது. அவனிடம் இதை சொல்லியிருக்க வேண்டாமோ என்று ஒரு கணம் யோசித்தாள். அவனால் எதுவும் உதவ முடியவில்லை என்ற பட்சத்தில் தன்னுடைய ரகசியமொன்று உடைந்ததைத் தவிர இதில் எந்த பிரயோஜனமுமில்லை என்பது அவளுக்கு உறுத்தியது. அவனால் முடியவில்லை எனில் மேற்கொண்டு எதுவும் உதவிகோர வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

‘பாரதி.. பேங்களூர்ல கிடைக்குதாம்.. என் ஃப்ரெண்ட வாங்க சொல்லிருக்கேன். நாளைக்கு கொரியர்ல எனக்கு வந்துடும்’

‘பட் நாளைக்குங்கறது அன்சேஃப் ஆச்சே மனோஜ்’

‘வேற வழியில்ல பாரதி.. தெரிஞ்ச வரைக்கும் கேட்டுட்டேன். கண்டிப்பா நாளைக்கு வந்துடும்.. நீயும் வேற எடத்துல எதும் கேளு.. இன்னிக்கு நைட்குள்ள கெடைக்குமான்னு.. டிலே பண்ணாம..’

‘சரி.. பட்..’

‘ட்ரை யுவர் பெஸ்ட்.. இல்லன்னாலும் நாளைக்கு கெடச்சிரும்..’

‘ம்’

‘இதெல்லாம் உனக்கு தேவயே இல்ல பாரதி..’

இதை ஏன் அவன் சொன்னான்? என்ன முயற்சிக்கிறான்? அவளைத் தூயவளாக காட்டி நவீனையும், அவனுடனான உறவையும் விமர்சிக்க முயற்சி செய்கிறானா? நவீனின் காதலைத் தான் ஒப்புக்கொண்ட நாளில் மனோஜிடம் தெரிந்த ஓர் அமைதியின்மை உடனடியாக இப்போது நினைவுக்கு வந்தது. இத்தனைக்கும் நவீனும் மனோஜும் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள். அந்தச் சலனத்திற்கு தன் உடைமை பறிப்போவதன் பதற்றத்தைத் தவிர வேறு அர்த்தம் கற்பித்துவிட முடியாது. ஆனால் அதை விசாரிக்கப்போய் மேற்கொண்டு தூபம் போட வேண்டாம் பாரதி அப்படியே அதை விட்டிருந்தாள். ஆனால் அவ்வப்போது நவீனுடனான தன் உறவைப் பற்றி மனோஜிடம் ஏதேனும் சொல்லி, அவனை அளந்தபடி இருப்பாள். அவனது அல்லலை ரசிக்கும் சாடிஸ மனோபாவம் அவளே அறியாமல் அவளிடம் இருந்தது. அந்த அரூப நெருக்கத்தைக் கொண்டு அவனைச் சித்திரவதைப்படுத்துவதன் நீட்சியாகத் தான் இதையும் தான் செய்திருக்கிறேனா என்று அவளுக்கு உள்ளுக்குள் பிசைய ஆரம்பித்தது.

அவன் இப்போது கொஞ்சம் வெளிப்படையாக நவீனுடனான உறவை விமர்சிக்க ஆரம்பித்ததும், அந்த நீண்ட நாளைய உரசலின் அபத்தம் அவளுக்கு நெருக்கடியாக தெரிய ஆரம்பிக்கிறது. நிச்சயம் மனோஜ் ரொம்பவே நொந்து போயிருப்பான் என்று அவனது நிலையை முதன்முறையாக தரையிலிருந்து உணர ஆரம்பித்தாள். ஒருவேளை நவீனுக்கு முன்னரே மனோஜ் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தால், தான் எதை எப்படி பரிசீலித்திருப்பேன் என்று அவளால் ஒரு முடிவுக்கு இப்போதும் வரமுடியவில்லை. மனோஜை தான் எந்த இடத்தில் வைத்திருக்க ஆசைப்படுகிறேன் என்று யோசித்து யோசித்து தோற்றுப் போனாள்.

‘மனோஜ், பில்ஸ் கெடச்சிருச்சு :)’ – அனிச்சையாக இந்தப் பொய்யைக் குறுஞ்செய்தியாக அனுப்பினாள். அவனை விடுவிப்பதே இப்போதைக்கு தனக்கு ஒரு நிம்மதியைத் தரும் என்று நம்பினாள். கட்டை விரலை உயர்த்திக்காட்டி அவன் பதில் அனுப்பினான்.

ஐந்து நிமிட இடைவெளிக்குப்பின், ‘சாரி’ என்ற குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து வைத்துக்கொண்டு அனுப்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அன்றைய நாளில், தன் மனதின் மிகவும் பிரக்ஞைப்பூர்வமான வெளிப்பாடு அதுதான் என்று அவளுக்குத் தோன்றியது. அனுப்பி வைத்தாள். அதை அவன் வாசித்தானா, பதில் அளித்தானா என்று கூட பார்க்காமல், அலைபேசியை அணைத்து புறந்தள்ளிவிட்டு, விறுவிறுவென போய் ஷவரைத் திறந்து விட்டுக்கொண்டு நின்றாள்.

எந்நாளுமில்லாமல் மிக ரம்மியமாக உடையணிந்துகொண்டு, நேர்த்தியாக தலை வாரி, ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு பூச்சரத்தையெடுத்து வைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். வீதியின் முக்கம் வரை நடந்துபோய் அவள் ஏறிய ஆட்டோ, அவள் குறிப்பிட்டு சொன்ன தனியார் மகப்பேறு மருத்துவமனையை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அங்கு பெரிய கண்ணாடி போட்ட வயதான பெண் மருத்துவர் தன்னைத் திட்டப்போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். ஒரே நேரத்தில் இந்த ஆட்டோ நிற்காமலே ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்றும், மருத்துவமனை சீக்கிரம் வந்துவிட்டால் தேவலாம் என்றும் மாறிமாறி யோசித்துக் கொண்டிருந்தாள். மருத்துவமனை இருக்கும் சாலைக்குள் நுழைந்த போது அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது. அந்த வலியைக் கூர்ந்து கவனித்தாள். வாழ்க்கையில் முதன்முறையாக அந்த வலிக்கு வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். கண்ணீர் உடைத்துக்கொண்டு கொட்டியது.