கன்பூசியஸ் என்ற பெயர் கொங் புஷி என்பதன் லத்தீனிய வடிவம். சீனாவின் தலையாய ஆசிரியராகவும் ஞானத் தந்தையாகவும் அறியப்படுபவர். கிரீடமில்லா அரசன் எனப் புகழப்படுபவர். கன்பூசியஸ் செப்டம்பர் 28 ஆம் நாள் 551 கி.மு.வில் பிறந்தார். பதினைந்து வயதில் மனதைக் கல்வியிலும் அறிந்துகொள்ளலிலும் பதித்தார். முப்பது வயதில் அதன்படி நின்றார். நாற்பது வயதில் இரண்டகநிலை இல்லாமல் மனதைத் திடப்படுத்தினார். ஐம்பது வயதில் வானுலகின் கட்டளையை அறிந்துகொண்டதாகச் சொன்னார். அறுபது வயதில் அதன் பொருட்டு காதைப் பொருந்தச் செய்தார். எழுபது வயதில் மனதின் ஆசைகளையும் எல்லைகளையும் தாண்டாமல் பின்பற்ற முடிந்ததாக எழுதினார். கி.மு. 479இல் தன் எழுபத்து மூன்றாம் வயதில் இறந்தார். அவர் இறந்து 267 ஆண்டுகள் கழித்து வந்த பேரரசர் சின் சி ஹுஆங், கன்பூசியஸின் புத்தகங்களை எரிக்கச் சொன்னார். பின்னர் 460 கன்பூசியஸ் அறிஞர்களும் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
அடுத்து வந்த பேரரசர் வென், அவருடைய ஆட்சிக் காலத்தில் மற்ற அனைத்து தத்துவப் பள்ளிகளையும் புறந்தள்ளிவிட்டு கன்பூஸியத்தை மட்டும் பின்பற்றுமாறு உத்தரவிட்டார் . சரித்திரத்தில் முதல்முறையாக கன்பூசியம் அரச மதமாகியது. அதன் பின்னர் சில தடைகளைத் தாண்டி, இன்றுவரை சீனாவின் ஆதிக்கத் தத்துவமாக தொடர்கிறது. புகழ்பெற்ற போதனைகளாக அறியப்படுகிறது. நிலை பெற்றுள்ளது. 2014-இல் சீன அதிபர் சீ ஜின்பிங் கன்பூசியஸின் 2565ஆம் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தற்போதுள்ள சீன கம்யூனிச அரசு என்பது கன்பூசியஸிய தத்துவங்கள் வழிநடத்திய சீன கலாச்சாரத்தின் மரபுவழித் தொடர்ச்சியென்றும் அதன் மதிப்பீடு களை ஆக்கத் துணை செய்யும் அரசு என்றும் கூறினார்.
கன்பூசியஸின் ஒழுக்கவியல் அகிம்சையிலிருந்தும் ஏசுவின் போதனைகளிலிருந்தும் மாறுபட்டது. ஏசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று மத்தேயுவில் போதித்திருக்கிறார். அவருக்கு ஐந்து நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த கன்பூசியஸ், ஒரு தவறுக்கு ஒரு நல்லதைச் செய்வாயெனில் நல்லதிற்கு என்ன திரும்பச் செய்வாய் எனக் கேட்கிறார். “ஒரு தீய செயலுக்கு நல்ல செயலைச் செய்வாயெனில் உன்னை இளக்காரமாகப் பார்ப்பார்கள். ஒரு நல்ல செயலுக்குத் தீயதைத் திரும்பச் செய்தால் நீ கெட்டவனாகப் பார்க்கப்படுவாய். ஒரு நன்மைக்கு நன்மை செய்தால் மக்கள் நன்மை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஒரு தீமைக்கு, பதில் தீமை செய்யும் போது அவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்” என்று கன்பூசியஸ நீதிமுறை சொல்கிறது.
ஒழுக்கத்தைப் பற்றிய கன்பூசியஸின் போதனைகளைக் கேட்பதை விட இளவரசன் லிங் தன் மனைவியுடன் நேரம் செலவழிப்பதையே விரும்பினான். காமத்தை விரும்புமளவு மனிதர்கள் ஒழுக்கத்தை விரும்புவதில்லை என்று கன்பூசியஸ் வருத்தப்பட்டிருக்கிறார். நல்ல ஒழுக்கங்களைப் பேணுவது மட்டுமல்ல, அதை விரும்ப வேண்டும், விரும்புவதோடு மட்டுமல்லாமல் அதில் மகிழ்ச்சி காண வேண்டும். அந்தத் தன்மையை வளர்ப்பதே கன்பூசியஸ தத்துவத்தின் மையப் பாடம். எவ்வாறு அத்தன்மையை வளர்ப்பது என்பதற்கு இவ்வாறு சொல்கிறார்: “கவிதை போல் படித்து, இயல்பு நிலையில் பின்பற்றி, இசைபோல் கொள்ள வேண்டும்.” கவிதை என்று இங்கே அவரின் போதனைகளை இயைபுறக் கூறுகிறார். கற்ற ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் அதனை நெறியாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிறார். ஏன் இசை போல அதைத் துணைகொள்ள வேண்டுமெனில், இசை கேட்கும் போது நாம் அதனுடன் ஒன்றிவிடுகிறோம். இசையின் இயல்பிலேயே மகிழ்ச்சி உள்ளது. இசை கேட்கும்போது நம்மை அறியாமல் ஆனந்தம் பரவுகிறது. நம்மை அறியாமலேயே கைகளை ஆட்டியும் நடனமாடியும் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். அதனைப் போல ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் தன்முயற்சியற்ற முறையில் வழுவாமல் இயல்பாக வாழ வேண்டும்.
கன்பூசியஸ தத்துவத்தின்படி வாழ்வது என்பது மனிதத் தன்மையுடனும் நன்னெறியுடனும் வாழ்வது. அந்த விழுமியங்கள் ‘இருக்க’ வேண்டியன அல்ல; மாறாக, உள்வாங்கிக் கொள்ள வேண்டியவை. உடலுறவைப் போல இயல்பாக இருக்க வேண்டுமென்பதையே கன்பூசியஸ் மீண்டும் மீண்டும் சொல்கிறார். அழகிய நிறங்களைப் பார்ப்பது போல நல்லவற்றை விரும்ப வேண்டும், துர்நாற்றத்தைப் போலத் தீயவற்றை வெறுக்க வேண்டும் என்கிறார். நாற்றமும் நறுமணமும் மூக்கிற்கு ஒன்றுதான். ஆனால் பிரித்தறியும் புத்தி – மனம் இயல்பில் வந்துவிட்டது. நறுமணம் போன்று, நல்ல நிறங்கள் போன்று, காமம் போன்று, நல்லொழுக்கத்தை மனம் விரும்பிப் பழக வேண்டும்.
கன்பூசியஸ் தான் வாழ்ந்த காலத்தில் வெற்றிகரமான அரசியல் சீர்திருத்தவாதியாக இல்லை. அவரது அறிவுரைகள் அவர் அங்கம் வகித்த அரசவைகளில் ஒதுக்கப்படுவதைக் கண்டு மனவருத்ததோடு அவற்றை விட்டு விலகினார். ஆனால் அவரது பார்வையும் அரசியல் சீர்திருத்தமும் இரண்டு சகத்திராண்டுகள் கழிந்தும் உலகத்தால் வியப்போடு பார்க்கப்படுகின்றன. ஒரு சீர்மை சமூகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று கன்பூசியஸ் எழுதியிருக்கிறார் : “பெருவழி மேலோங்கும்போது வானின் கீழெங்கும் பொதுவான கருத்து பரவியிருக்கும். தகுதியான ஒழுக்கமான மக்கள் ஆட்சிக்குத் தேர்தெடுக்கப்படுவார்கள், நம்பிக்கை வலுப்படுத்தப்படும், இணக்கம் உருவாக்கப்படும். மக்கள் அடுத்தவர் குழந்தைகளையும் தங்கள் குழந்தைபோல பாவிப்பார்கள். மரணம் வரை வயதானவர்கள் ஆதரிக்கப்படுவார்கள். விதவைகள், அநாதைகள், குழந்தையற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள். ஆண்கள் தங்கள் பங்கையும் பெண்கள் அவர்கள் வீட்டையும் கண்டிப்பாகப் பெறலாம். மக்கள் தங்களின் பலங்களை முழுமையாக வெளிப்படுத்த விரும்புவார்கள். ஆனால், தங்கள் மேன்மைக்காக அல்ல, அனைவருக்காகவும். இதுவே சிறந்த ஒன்றியமாகும்.” இந்தப் பத்தியில் அவர் அரசியலமைப்பு முறை பற்றிச் சொல்லவில்லை. மக்கள் தங்களைச் சார்ந்தவர்களைப் பார்த்துக்கொள்வதே அடிப்படைப் பொதுப்பணியாக இருக்க முடியும் என்று கருதுகிறார்.
ஒவ்வொரு வயது முதிர்ந்தவரும் தத்தம் நன்னடத்தை மூலமே குடும்பத்தின் தலைவனாக முடியும். அவற்றில் மேன்மையானவர்கள் தங்கள் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பவர்களாகப் பணியாற்றும் தகுதி பெறுகின்றனர். ஒரு கிராமத் தலைவர் என்பவர் அந்த ஊர் சமூகத்தின் மதிக்கத்தக்க நபர், அவர் தேவையான போது கூட்டம் அமைத்து கருத்துகள் கேட்டு, குடும்பங்களிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். சடங்குகள் மூலம் சட்டங்களின் தேவைகளைக் குறைக்கச் செய்வது கன்பூசியஸ கருத்தின் அடிநாதமாகும். ஆனால் இதன் மூலம் மைய அரசு அல்லது வலிமையான அரசன் தேவையில்லை என்ற முடிவுக்கு கன்பூசியஸ் வரவில்லை. ஒரு அரசன் என்பவன் ஒரு நல்ல தகப்பனைப் போல அனைவரையும் அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். சீனாவில் பொதுமக்கள் ஒரு பொருட்டாகக் கருதப்படாது இருந்த காலத்தில் இந்தக் கருத்து புரட்சிகரமானது, மனிதத்தன்மை மிக்கது.
கன்பூசியஸ் சமூகத்திலும் அரசியலிலும் கொண்டுவர வேண்டியதாகப் பல இடங்களில் சொல்லியிருப்பது ஒற்றுமையாகும். இந்த ஒற்றுமை என்பதற்கும் ஒத்துப்போதல் என்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. ஒரு நல்ல மனதுடையவன் ஒத்துப்போவதை விட ஒற்றுமையையே விரும்புகிறான். ஆனால், ஒரு அற்ப மனதுடையவன் இணங்கிப் போவதைத் தான் தேர்ந்தெடுக்கிறான். அவர் அந்த வகையில் சர்வ மைய வாதத்திற்கு எதிரானவர் எனலாம். ஒத்துப் போகுதல் என்று வந்தால் பன்மை விழுமியங்கள் அடிபடும் என்று கருதினார். ஒரு சூப்பில் உப்பும் மிளகும் வெவ்வேறு குணநலன்களைப் பெற்று, உப்பு மிளகின் சுவைக்கு நிறைய வேறுபட்டிருந்தாலும், அவை ஒன்றாகச் சுவை கூட்டுவதைப் போன்று, ஒற்றுமை இருக்க வேண்டும் என்கிறார். ஏன் சட்டங்கள் மூலம் அந்த ஒற்றுமையைக் கொண்டுவர இயலாது என்று கருதுகிறாரெனில், அவரைப் பொறுத்தவரை, தடை அதிகார ஆணைகள் மூலமும் குற்றவியல் சட்டம் மூலமும் மக்களைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம், அவர்களும் தண்டனையைத் தவிர்ப்பார்கள். ஆனால், தவறான நடத்தை குறித்த இழிவு அவர்களிடத்திருக்காது. இதே நன்னெறியோடு அவர்களை வழிநடத்தினால், சடங்குகளின் மூலம் அவர்கள் முறைப்படுத்தப்பட்டால், அவர்கள் தீமையைப் பற்றிய இழிவை அறிந்து தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வார்கள் என்கிறார்.
தத்துவத்திலும் அரசியலிலும் மேன்மையை வலியுறுத்திய கன்பூசியஸின் போதனைகள் காலம் கடந்தும் நினைவுகூரப்படுகின்றன. எந்தச் சூழ்நிலைக்கும் பொருந்திப் போகின்றன. மனித குல மாண்புகளைப் பேணி நல்வழிப்படுத்துகின்றன. அவரது சிறப்புகளைச் செழுமையுற எடுத்துரைக்கும் மொழியாக்க நூல் இது. கால பேதம் கருதாது தனி வாழ்விலும் சமூக அமைப்பிலும் பொலிந்துயர கையொளி விளக்காகத் தயங்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.
*
டாக்டர் ஜீவானந்தம் எழுதிய கன்பூசியஸ் நூலிலிருந்து ஓர் அத்தியாயம்.
கடந்துபோன காலம் குறித்துப் புலம்புவது மனித இயல்பாக நெடுங்காலம் இருந்து வந்துள்ளது. “கண்முன் குளத்தின் பெரும்பரப்பு. ஆனால் மனதின் முன் ஆயிரமாண்டுகள் சிந்தனை கணப்பொழுதில்” என்கிறார் கவி சன்ரன்.
ஆற்றின் நீர் வழிந்து கடந்துபோவது அதிசயமல்ல. இயற்கை விதி. அதுபோல் நில்லாது கடந்து போவதும், திரும்பப் பெற முடியாததுமான மற்றொன்று நேரம்.
‘நதியின் புலம்பல்’ எனும் கவிதையில் கவி டூபூ, “கடந்து போன என் வாழ்வுக்காகக் கண்ணீர் விட்டேன். என் அங்கி நனைந்தது. அருகில் நதி மெல்ல நகர்ந்தது முடிவேதுமின்றி” என்கிறார்.
“வருந்தவும் புலம்பவும் மனித வாழ்வில் எத்தனை எத்தனை! மலைகள் அசைவதில்லை. நதி அதன் நடுவே சலனமின்றி ஓடுகிறது. மனித வாழ்வு குறுகியது. இயற்கையோ முடிவற்றது. இந்த ஒப்புமை நம் ஆன்மாவை உலுக்குகிறது. துயரைக் கண்ணீராய்க் கண்களில் நிறைக்கிறது” என்கிறார் மற்றொரு கவிஞர்.
‘நிலவொளியில் நதிக்கரையில்’ என்ற கவிதை, காலத்தை வியக்கிறது. “நதியில் பிரதிபலிக்கும் நிலவை ரசித்த முதல் மனிதன் யார்? எப்போது நிலவொளி மனிதனைத் தழுவியது? மனிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள். நிலவும் நதியும் இன்னும் யாருக்காக வந்து வந்து காத்திருக்கின்றன? யாங்ஷீ நதி முடிவின்றிப் பாய்கிறது.”
நதிக்கரையில் நின்ற கன்பூசியஸ், “இதுபோல் எல்லாம் கடந்துபோகிறது” என்றார். இந்த மாய வார்த்தைகளை ஒவ்வொரு சீனனும் அறிவான். இது சொல்லும் ரகசியப் பொருள் ஆழமானது. வாழ்வின் துயரங்களைக் காணவும், கடந்து செல்லவும் வலிமை தருவது.
விரிந்து முடிவின்றிக் கிடக்கும் பிரபஞ்சம். முடிவற்ற இயற்கை. இதில் மனிதவாழ்வு சிறு துகள். இதில் என்ன பெரு வாழ்வு? ஓடும் நதியை ஏக்கத்துடன் பார்க்கும் கன்பூசியஸ் தன் மாணவர்களிடம் வாழ்வின் பயணத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் என்ன என வினவுகிறார்.
“பதினைந்து வரை கல்வி கற்றேன். முப்பதில் வாழக் கற்றேன். நாற்பதில் ஐயம் தெளிந்தேன். ஐம்பதில் சொர்க்கத்தின் விதியைப் புரிந்தேன். அறுபதில் என் காதுகள் அடைத்தன. எழுபதில் இதயத்தின் குரலுக்குத் தவறாது நடந்தேன்” என்கிறார்.
வாழ்க்கை பல நிலைகளைக் கொண்டது. ஞானிகளின் விளக்கம் வாழ்வின் பொருள் சொல்வது. அதிலிருந்து வாழக் கற்போம். மனிதவாழ்வு நாம் கடனாகப் பெற்ற கணங்கள். இதில் நிரந்தரம் எனும் நினைவில் கற்பனைக் கோட்டைகள்… எல்லாம் அழியும் நினைவுகள்…
நமக்கு ஆசைகள் உண்டு. ஆனால் நாம் வாழும் சமூகத்துடன் சமரசம் செய்ய வேண்டியுள்ளது. இயற்கையான சீர் செய்யப்படாத மனிதனைச் சமூகநடப்புகள் சீர்செய்கின்றன.
கன்பூசியஸ் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டுமென்பதைக் கூறுகிறார்.
கன்பூசியஸ், “நான் அறிவுடன் பிறக்கவில்லை. ஆனால் அதை விருப்பத்துடன் பெற முயன்றேன்” என்கிறார்.
கல்வி அறிவு என்பதை ஒரு மாணவன் சுய ஆர்வம், உழைப்பு மூலமே பெற முடியும். இன்று கல்வி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. எவ்விதமான கல்வி பயனுள்ளது?
இன்றைய உலகில் கற்பதற்கு ஏராளமாக உள்ளன. ஐந்து வயதிலேயே பள்ளி செல்லத் தொடங்கிவிடுகின்றனர். என்ன படிக்கிறார்கள்? பெரும்பாலும் மனப்பாடம் செய்யும் கல்வியே தரப்படுகிறது. இக்கல்வி பயனுள்ளதா? எத்தனை பேர் அறிவு வளர வேண்டுமென்று படிக்கிறார்கள்? எத்தனை பேர் படித்ததைப் பயன்படுத்துகிறார்கள்?
இன்று ஏராளமான செய்திகள் குவிந்து கிடக்கின்றன. எதைத் தேர்வு செய்வது? தேவையானது எது என்று தேர்வு செய்து கற்பதும் கடினமானதாகவே உள்ளது. “மிகை என்பது வறுமையை விடக் கொடியது” என்கிறார் கன்பூசியஸ். பேராசை கொண்டவன் விழுங்க முடியாததை விழுங்கி விக்கிச் சாகிறான். மனம் கணினி போல மாறிவிட்டால் அன்புக்கு இடமில்லை. எது தேவையோ அதைத் தேர்வு செய்து கற்பதும், அதை வாழ்நாள் முழுதும் உள்வாங்கி வாழ்வதும் சிறந்த கல்வியாகும். கற்ற ஒரு உண்மைக்கென வாழ்வது உன்னதம்.
“பிறர் சொல்வதைக் கற்று, சுயமாகச் சிந்திக்காதவன் தேவை ஏற்படும்போது செய்வதறியாது திகைக்கிறான். அதே வேளையில் தான் கற்றும், பிறரிடமிருந்து கற்கத் தவறுபவன் சிக்கலில் சிக்குகிறான்” என்கிறார் கன்பூசியஸ். கற்பதும் சிந்திப்பதும் அனுபவத்தைப் பயன்படுத்துவதும் வெற்றிக்கான வழிகள்.
இன்றைய கல்லூரிக் கல்வி கட்டுச்சோறு போல. பாடத் திட்டங்கள், புத்தகங்கள் தாண்டி மாணவர் பார்வை செல்வதில்லை. சிந்திப்பதும் கற்பதும் இணைந்ததே சரியான கல்வி. அத்துடன் அனுபவமும் இணையும்போது அது பயனுள்ள வாழ்க்கைக் கல்வியாகிறது. இதை எட்டும்போது நாம் முப்பது வயதைத் தொட்டுவிடுகிறோம்.
இன்று வயது வளரும் அளவு முதிர்ச்சி வருவதில்லை. முப்பது வயதிலும் சிறுவர்களாக உள்ளனர்.
பள்ளி செல்லும் குழந்தைகள் சூரியனின் ஒளி, மலரின் அழகு, மனிதர்களின் நல்ல மனம், உலகம் உன்னதம் என்னும் உணர்வுடனேயே வளர்கின்றனர். கெட்டது என்பதையே அறியாமல் வளரும் அவர்கள் குட்டி ராணி, குட்டி இளவரசன் போல் வாழ்கிறார்கள். அவர்கள் மனதில் களங்கம் இல்லை, துயரம் இல்லை.
இளமையை எட்டும்போது அறிவுடன் கூடவே ஏமாற்றமும், கோபமும், எதிர்ப்பும் வளர்கிறது. உலகை அசிங்கமானதாக, சகிக்க முடியாததாகப் பார்க்கின்றனர். ‘கோபம் மிக்க இளைஞன்’ என்பது அவர்களின் பெருமைக்குரிய அடையாளமாகிறது.
முப்பதைக் கடக்கும்போது உலகமே பூந்தோட்டம் என்ற குழந்தைப் பார்வையும், எல்லாம் முட்காடு என்ற கோபமும் தவறானவை, தேவையற்றவை என உணர்கிறோம். நாம் இந்த சமூகத்தில் வாழ்கிறோம், இதுதவிர வேறு உலகம் இல்லை என்பது புரிகிறது. ஆழ்மனப் புரிதல் என்பதே உண்மையான கல்வி. கற்றதைக் கொண்டு வாழப் பழகுகிறோம். இதுதான் இன்றைய உலகின் தேவை.
சீனாவில் கல்வி இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் நிலை ஆறு நன்னூல்களைப் படித்து அறிவது. இரண் டாவது நிலை, ஆறு நன்னூல்கள் எனக்கு உணர்த்துவது. மேலும் நன்னூற்களைக் கற்பது. இதை முடிப்பதற்குள் தலை நரைக்கத் தொடங்கிவிடும். கல்வி பற்றிய தெளிவு பிறந்துவிடும்.
இரண்டாம் நிலை ஆறு நன்னூற்கள் எனக்குக் கற்றுத் தருவது. இது ஒரு ஆன்மீக நிலை. முப்பது வயதில் தன்னம்பிக்கை பிறக்கிறது. இது புற உலகை எதிர்க்கும் முரட்டுத் துணிவல்ல. உள் மனதையும், வெளி உலகையும் முரண்படாமல் இணைக்கும், உயர்த்தும் அறிவு முதிர்ச்சி.
“கடல் அலை தூரத்து எல்லையைத் தொடுகிறது. வானமே கரை. நான் மற்றொரு சிகரத்தில் நிற்கிறேன்” என்று தாய்மலை பற்றிய கவிதை உண்டு. இது மலையையும் நதியையும் இணைக்கும் சீனப்பார்வை. மலையை வெல்ல மனிதன் நினைக்கிறான். ஆனால் மலையே மனிதனை உயர்த்துகிறது. கடல் நம் முன் பரந்து விரிந்து கிடக்கிறது. வானமே எல்லை. மலை உச்சிதான் முடிவு என்பது நம் கற்பனை. மலை உச்சியை எட்டும்போது, மலை உச்சி என் காலடியில். ஆனால் புதிய சிகரம் தொலைவில், மிகத் தொலைவில் தெரிகிறது. இதுதான் ஆறு நன்னூல்கள் நமக்குச் சொல்லும் பாடம்.
கன்பூசியஸ் தனது மாணவர்கள் எளிமையாக வாழ வேண்டுமென்பார். கண்முன் தெரிவதைப் பார். உணர்வதைச் செய். மற்ற எதைப் பற்றியும் கவலைப்படுவது தேவையற்றது.
கன்பூசியஸ் கடவுள் பற்றியோ விதி பற்றியோ வானுலகம் பற்றியோ பேசவில்லை. அவர் அவற்றை விரும்பவுமில்லை. ஏனெனில் அவர் வாழும் உலகை, மனிதர்களைப் பற்றியே சிந்தித்தார். கவலைப்பட்டார்.
ஒருமுறை பூதம், பேய், ஆவி பற்றிக் கன்பூசியசிடம் ஜீலு கேட்டார். அதற்கு அவர், “நீ காணும் மனிதர்களுக்கே சேவை செய்ய முடியாது தவிக்கிறாய். நீ எப்படி பேய், பூதங்களுக்குச் சேவை செய்ய முடியும்? வாழும் மனிதர்களுக்கு நேர்மையாக நடக்காதவர், செத்தவர்களுக்குச் சேவை செய்வதாகச் சொல்வது கேலிக்குரியதாகும். உன் கண் முன் உள்ளதைப் பார். கண்ணுக்குத் தெரியாததை நினைத்துப் புலம்பாதே” என்றார்.
ஜீலு மனநிறைவின்றி, “மரணம் பற்றிச் சொல்லுங்கள்” என்றார். “வாழ்வைப் பற்றியே அறியாத நீ மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவது ஏன்?” என்றார். கற்பதன் மூலமே தெளிவு பெற முடியும் என்றார்.
உன்னை அளக்கும் அளவுகோல் வெளியே இல்லை, உன்னுள் உள்ளது. உன்னைப் பற்றிய முடிவை நீ உறுதியுடன் எடுக்க வேண்டும். பொருள் வகையான லாபங்களைச் சிந்திக்காமல், உன்னுள் உள்ளதன் மதிப்பே உன் மதிப்பு என்பதை உணர்.
புல் தொப்பியுடன் அலையும் சீனத்து ஏழை விவசாயி பனிக்காலத்தில் உறைந்துகிடக்கும் நதியில் மீனைப் பிடிக்கத் தன் தூண்டிலின் முள்ளையே பார்த்தபடி அமர்ந்துள்ளான். இது நமக்குப் பாடம்.
நாற்பது வயது மரியாதைக்குரியது. அவர்களை விட முதியவர்கள் உண்டு. அவர்களைவிட இளைஞர்களும் உண்டு. இச்சோதனைக் காலத்தில் நமது மனதைச் சலனமின்றிக் காப்பது எப்படி?
சந்தேகத்திலிருந்து விடுபடு என்பார் கன்பூசியஸ். எப்படி முடியும்? இதற்குப் பெரும் ஞானம் தேவை. சந்தேகங்களிலிருந்து விடுபடுவதே நமது வாழ்வின் சிறப்பு. முப்பது வயதுவரை அறிவையும், அனுபவத்தையும் சேர்க்கும் காலம். அறிவை விட பணத்தைச் சேர்ப்பது ஆபத்தானது.
முப்பது வயதுக்கு மேல் தேவைகளைக் குறைப்பது அவசியம். மனம் வேண்டுவதை மட்டும் சேர்ப்பது நல்லது. நம் மனம் ஒரு புதிய வீடுபோல. அதை அழகுபடுத்தவும், பொருட்களைக் குவிக்கவும் முயல்கிறோம். பொருள் நிறைந்த வீட்டைப் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம். உடமைகள் நம்மை அடிமையாக்குகின்றன.
தேவையற்ற உடமைகளை உதிர்ப்பது, பயனற்ற நண்பர்களைத் துறப்பது, தேவையற்ற செயல்களைச் செய்யாமலிருப்பது, தேவைக்கு அதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பு வரும்போது மறுப்பது – இதைச் செய்யும் துணிவுள்ள மனம், இழப்பை ஏற்கும் மனம் சந்தேகங்களிலிருந்து விடுபடுகிறது.
சந்தேகத்திலிருந்து விடுதலை எவ்விதம்? கன்பூசியஸ் போதனைத் திரட்டு நான்கு தொகுதிகள் கொண்டது. ‘அறிதலின் தத்துவம்’ எனும் நூல் உயர் நடத்தையை உணர்த்துவது. சரி தவறு இவற்றை வேறுபடுத்தி அறியாத நிலை, லட்சியத்தை லாபங்களுக்காக விட்டுக்கொடுப்பது இவற்றை விளக்குவது இந்நூல்.
“மகிழ்ச்சி, கோபம், வருத்தம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தாமை அற்பமானது. அவற்றைக் கட்டுப்பாட்டுடன் உணர்த்துவதே சமன்நிலை. சரியான பூமி என்பது வானுலகுடனும் சமன்நிலையில் இயங்குவது. புற உலகம் உன்னை இழிவாக நடத்தியபோதும், நீ உன்னை உணர். தாக்குதல்களைத் தாங்கு. அதுவே உனக்கு ஏணிப்படியாகும்.
எது சரியான வழி என்று குழப்பம் வரும்போது, எந்த எதிர்முனைகளை ஏற்பதைவிடவும், எது பொருத்தமானதோ அதைத் தேர்வு செய்வதே சிறந்தது.
தத்துவஞானி ஃபெங் யூலான், “பழைய தலைமுறையிடம் கற்று, புதிய வழி காண உதவு. நமது லட்சியம் உயர்வாக இருப்பது அவசியம். ஆனால் நமது செயல் நடைமுறையுடன் இணங்கி இருக்க வேண்டும். நன்முறையில் உயர்வான இடத்தை எட்டுவதே சரியானது. இருமுனைகளின் நடுவேயான மையப்பாதையே சரியானது. இருபது முப்பது வயதின் வேகம், நாற்பதில் சந்தேகங்கள் தெளிந்து சலனமற்று நடைபோடத் தொடங்குகிறது. ஐம்பதைத் தொடும்போது பெரும் மாற்றம் நிகழ்கிறது.
“நான் வானுலகைக் குறைகூற விரும்பவில்லை. மனிதரையும் குறைகூற விரும்பவில்லை. நான் என் கல்வியை அடியிலிருந்து ஆரம்பிக்கிறேன். பின் மேலே என்ன உள்ளது என்பதை அறிகிறேன். என் புரிதலுக்குக் காரணமே வானுலகே” என்றார் கன்பூசியஸ்.
இதற்கு அறிஞர் ஹுஆங்கான் விளக்கம் தருகிறார். “மனிதன் கீழிருந்து படிக்கத் தொடங்குகிறான். மனிதர்களில் நல்லவருண்டு, கெட்டவருண்டு. வானுலகம் மனிதனுக்கு ஆதரவாகவும் இருக்கலாம், எதிராகவுமிருக்கலாம். எனவே எது நடக்கிறதோ அதை ஏற்பது சாலச் சிறந்தது. இந்த உணர்வு வரும்போது எதையும் பகுத்தறிவுடன் எதிர்கொண்டு, அமைதியுடன் வாழலாம். மனிதனையோ, வானுலகையோ குற்றம் சொல்லிப் பயனில்லை. எனவே குற்றம் சொல்வதை விட்டு, மன உறுதியுடன் நின்றால், பிறரைக் குறைசொல்ல வேண்டியிருக்காது.”
பிறரிடம் குறைகாண்பது பற்றி கன்பூசியஸ், “ஜுன்ஜீ மேலே உள்ளது பற்றியோ, கீழே உள்ளது பற்றியோ கவலையற்றவர். கீழானவர்களே பிறரைக் குறைகூறி மகிழ்கிறார்கள். ஜுன்ஜீ தனது உள்மனதிற்கே மதிப்பளிக்கிறார். விதியைப் புரிந்துகொள்ளாதவன் ஜுன்ஜியாக முடியாது. வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் பற்றிய தீர்ப்பைக் கூற முடியாது” என்கிறார்.
மனிதன் தன் மனதை முழுமையாக நிறைவு செய்யாமல் சமூகத்தின் மீது நிர்பந்தத்தைத் திணிக்க முடியாது.
கன்பூசியஸ் வாழ்வு என்பது மூன்று நிலைகளைக் கொண்டது என்கிறார்.
விதியைப் புரிந்துகொள்வது,
சமூக விதிகளைப் புரிந்துகொள்வது,
வார்த்தைகளைப் புரிந்துகொள்வது.
ஆனால் இது எதிர்திசையில் நடப்பதைக் காண்கிறோம். முதலில் நாம் பேசுகிறோம். பேச்சின் மூலம் மக்களைப் புரிந்து கொள்கிறோம். பின் பேச்சு மட்டும் சமூகத்தைப் புரிந்து கொள்ளப் போதாது என்பதை உணர்கிறோம். சமூக விதிகள், சடங்குகளைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. அதன் உச்சமாக விதியைப் புரிந்துகொள்கிறோம். விதியைப் புரிந்து கொண்டவன் ஜுன்ஜீ நிலையை எட்டுகிறான். தனக்கான விழுமியங்களை அமைத்துக்கொண்டவன் மன அமைதியை, உறுதியைப் பெறுகிறான். அதைப் புற உலகின் மீது செலுத்தும் ஆற்றல் பெறுகிறான்.
ஐம்பது வயதில் வானுலகின் விருப்பத்தை அறிவது மன உறுதி பெறச் செய்கிறது. யாரையும் குறைகாணா நிலை பெறுகிறான்.
தத்துவஞானி ஷுவான்ஜீ, “எவ்விதப் புகழ்ச்சியும் அவனை மாற்றவில்லை. உலகமே தூற்றினும் அவன் சளைக்கவில்லை. அவன் அகம் – புறம் இரண்டையும் தெளிவாய் உணர்ந்தவன். உண்மையான பெருமை எது, இழிவு எது என்பதை உணர்ந்தவன்” என்கிறார்.
அனுபவங்களால் மனம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் பெறுகிறது. மனவுறுதி பெரும் ஆயுதம் எனும் கருத்து சீனக் கதைகளில் பெரிதும் சொல்லப்பட்டிருக்கிறது. புதிய இளம் வீரன் வரும்போது மிகுந்த அழகும், கூர்மையும் கூடிய மிகப் பெரிய வாளுடன் வருவான். பயிற்சி பெறும்போது வாளே வல்லமை என்ற மனதுடன் பயிற்சி பெறுவான். நன்கு பயிற்சி பெற்றுத் தேர்த்த வீரனாகும் போது அவளது வாள் அத்தனை கூராகவும் இருக்காது. அது பற்றி அவன் கவலைப்படவும் மாட்டான். அவனது மனம் உறுதியாகவும் கூர்மையாகவும் இருக்கும். காலம் செல்லச்செல்ல அவன் வெளியே செல்லும் போது ஒரு வாளை எடுக்காமல் கூடச் செல்லக்கூடும். வாளின் கூர்மை, தரம் என எதுவும் அவனுக்குப் பொருட்டாக இருக்காது. வளர்ச்சியின் உச்சத்தை எட்டும்போது, அவன் எதிரியைச் சந்திக்க ஆயுதம் எதையும் எடுக்காமல், தனது மன உறுதியை மட்டும் நம்பியவனாகச் செல்கிறான். தன் கைகளும் விரல்களும் அவனுக்குப் போதுமானதாகிறது. போர் யுக்திகள், சாதுரியங்கள் யாவும் அவனுக்குத் தேவையற்றனவாகிறது. யுக்திகள் ஏதுமின்றிப் போரிடும்போது அவனது எதிரி குழப்பிப் போகிறான், அவன் ஆயுத வலிமை பயனற்றுத் தோற்றுப் போகிறான்.
தன் திறமையில், பயிற்சியில் பெறும் உச்சமே உன்னதமான ஆயுதம். வானுலகின் முடிவை ஏற்பது என்பது நீண்ட உண்மையான பயிற்சியில் வருவது. அதன் மூலம் மனதைக் குவித்து ஒன்றுதலை அடைவது. அதுவே வெற்றியின் முதற்படி.
வானுலகின் முடிவை அறிந்து ஏற்பவன் மாற்றில்லா வலிமை பெறுகிறான். கூர்மையான காதுகள் பிறரது நல்ல கருத்துகளை விரைந்து கேட்கின்றன. தன்னை அடுத்தவர் நிலையில் வைத்து அவர் துயரை உணர்கிறான். ஊருக்காக அழு, உறவுக்காக உழை என்கிறது சீன முதுமொழி. பிறர் உணர்வுகளை, துயரத்தை உணர்பவன் உலகை உணர்கிறான்.
பிறருடைய வாழ்வுத் துயர்களை நமது கண்கொண்டு மட்டும் பார்ப்பது அதிர்ச்சி தருவது. அவர்கள் நிலை ஏன் அப்படியானது என்பதை உணரும்போது நாம் நம்மை உணர்கிறவர்களாகிறோம்.
இரண்டு மேகங்கள் கூடும்போது மழை உண்டாகிறது. இரண்டு நதிகள் சேரும்போது நலன் உண்டாகிறது.
கூர்மையான காதுகள் உடையவர்களுக்குத் தொலைவுகள் பொருட்டல்ல. அவர்கள் திறந்த மனதுடன் எவ்வளவு தொலைவையும் கடந்தவர்களாவர்.
ஒரு கோவிலில் அழகிய புத்தர் சிலை இருந்தது. தினமும் மக்கள் வழிபட்டு வந்தனர். அக்கோவிலின் படிக்கல்லும், சிலை செய்த அதே கல் கொண்டே கட்டப்பட்டிருந்தது.
பொறாமை கொண்ட படிக்கற்கள், “நாங்களும் நீயும் ஒரே இடத்தில் பிறந்தவர்கள். எங்களை மிதிக்கிறார்கள். உன்னை மதித்து வழிபடுகிறார்கள். நீ என்ன அவ்வளவு உயர்ந்தவனா?” என்றன.
புத்தர் சிலை பொறுமையுடன் சொன்னது, “நீ சில அடிகளையே தாங்கினாய். ஆனால் நானோ உளியின் ஆயிரம் ஆயிரம் அடிகளை ஏற்று புத்தராகியுள்ளேன். வலியை ஏற்பவன் வழிபாட்டுக்குரியவனாகிறான்.”
நாம் ஆழ்மனதுடன் கலந்து மிகுந்த மன அமைதியும், இணக்கமும் பெறும் முன் நாம் பல சோதனைகளையும் துயரங்களையும் கடக்க வேண்டியுள்ளது. நம்முன் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி போல, நம்மை நாமே கண்டு சீர்திருத்திக்கொள்ள வேண்டியுள்ளது. நம் மனம் மாற்றத்தை ஏற்கிறதா? நம் ஐயங்கள், தடுமாற்றங்கள் நீங்குகின்றனவா? உண்மையை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்குண்டா? மற்றவர் தவறுகளை மன்னிக்கும் மனம் நமக்கு உண்டா? நம் மனதின் கட்டளைப்படி நாம் நடக்கிறோமா? என்பனவற்றை தினம் தினம் அக்கண்ணாடியில் கண்டு திருத்திக்கொள்ள வேண்டியுள்ளது. நாம் எந்த வயதில் இதை அடைய முடிகிறது என்பது, நம் முயற்சியில் உள்ளது. நாம் இந்த சலனமற்ற மன அமைதியைப் பெற முடியுமானால், நாம் ஒரு பொருளுள்ள நல்ல வாழ்க்கை வாழ்ந்தோமெனப் பெருமை கொள்ள முடியும்.
ஒரு பூசணிக்காய் எவ்வளவு எடையின் அழுத்தத்தைத் தாங்கி உடையாமலிருக்க முடியும் என்பது பற்றிய ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு எடையை ஏற்றன. ஆனால் ஒரு பூசணிக்காய் மட்டும் எத்தனை சுமை வைத்தபோதும் உடையாமலிருந்தது.
வியந்துபோன விஞ்ஞானிகள் அதை அறுத்துப் பார்க்க முடிவு செய்தனர். கத்தி கொண்டு அறுத்தார்கள். முடியவில்லை. கடைசியில் மரம் அறுக்கும் ரம்பம் கொண்டு அறுத்தார்கள். அது ஒரு விளைத்த மரத்தை அறுப்பது போன்று கடினமாக இருந்தது.
இது ஒரு பரிசோதனை. இது நாம் வாழும் சூழலையும், நமது இதயத்தின் வலிமையையும் உணர்த்துவதாகும்.
போட்டிகளும், அழுத்தமும் நிறைந்த இன்றைய உலகில் நாம் காலத்தை மிஞ்சி முதிர்ச்சியடையக் காரணம் என்ன? “ஒவ்வொரு கணத்தையும் பயன்படுத்து. பத்தாயிரம் ஆண்டுகள் என்பது எட்ட முடியாத நெடுந்தொலைவு. அதுபோன்றதே எழுபதாண்டுகள் காத்திருப்பதும்” என்கிறார் மாவோ.
கன்பூசியஸின் பொன்மொழிகளானாலும், வேறு எந்த ஞானியின் வாசகமானாலும், அவை உணர்த்துவது ஒரே உண்மையே. நமது அறிவு கொண்டு, நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்வதே இப்பயணத்தை நிறைவுள்ளதாக்கும். ஒரு ஜுன்ஜீயைப் போலச் சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும். மிகுந்த கருணை கொண்டவர்களாக வாழ்வதும் அவசியம். பெருமிதத்துடன், நமது ஆழ்மனதின் வழியில் நமது சமூகக் கடமைகளைச் சிறப்பாகச் செய்வது தேவை.
ஞானிகள் மனிதவாழ்வின் சிக்கலான நீண்ட பயணத்தை, மிக எளிய மொழியில் விளக்குகின்றனர். நம் குழந்தைகளும், அவர்களின் குழந்தைகளும், பரம்பரை முழுதும் அவற்றை சிரமத்துடனோ, மகிழ்ச்சியுடனோ தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இப்படித்தான் ஒரு நாட்டின் ஆன்மா உருவாகிறது
நமது தொன்மைக்கால ஆன்மீக வலிமை கொண்ட என்றைக்குமான உண்மைகளைத் தற்கால வாழ்வுடனும், சட்டத்துடனும் இரண்டறக் கலந்து நம் வாழ்வின் சாரமாக்க வேண்டும். நம் வாழ்வு பயனுள்ளதாகவும், மதிப்புமிக்கதாகவும் ஆக வேண்டும். இதுவே கன்பூசியஸ் நமக்கு உணர்த்தும் உன்னதமாக உண்மை வாழ்க்கை.