ஆனை கோடாலி – தர்மு பிரசாத்

0 comment

எலுங்கப் பாறை முகட்டில் இருவர் தயங்கி நிற்பது தெரிந்தது. தயக்கம் எதிர்பார்த்தது தான். மழை நீர் அரித்து, வழுக்குப் பாசியோடியிருக்கும் அபாயமான செங்குத்துச் சரிவு குறுக்கிட்டதில் ஏற்பட்ட தயக்கம்.

இருவரும் பட்ட அசைவுகள முகில் மடிப்புகளினுள் தெரிந்தாலும், அவர்களுடைய கண்களில் கனலக்கூடிய அச்சத்தை மலையின் கீழ் இருந்தே என்னால் உணர முடிகிறது. கற்பனையில். கால் இடறினால், கீழே ஆழத்தில் ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டிருக்கும் கல் அணையின் மடிப்பில் உடல் கிடைக்கும். சிவந்த தசைக் கூழாக.

எங்கள் முறிக்கு செங்குத்துச் சரிவைக் கடந்து இதுவரை ஒருவரும் வந்ததில்லை. அய்யாவிற்கு மட்டும் சரிவின் வழுக்கும் அபாயம் தண்ணிபட்டபாடு. அவரும் கூட செங்குத்துச் சரிவினூடாக மலையின் எதிர் சரிவில் இருக்கும் கிராமங்களிற்கு சித்திரை மாத முதல் நாளில் மட்டும் செல்வார். கூடவே எருமை தொடை வற்றலும், கொன்னமினியா தேனும், வாட்டிய எருமைத் தோலும், அம்மா அரைத்துப் பசையாக்கிய அமரங்கா மரப்பட்டையையும் எடுத்துச் செல்வார்.

அன்று வழமையாக அணியும் அழுக்குச் சாரத்தை உரிந்து விட்டு வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து கொள்வார். வேட்டியின் மேல் அகலமான இடுப்புப்பட்டியை வரிந்து இறுக்கமாகக் கட்டுவார். இடுப்புப் பட்டியிலிருக்கும் மீன் செதில் வடிவ மடிப்பில் அம்மா ஒரு சிறு மடக்குக் கத்தி செருகிவிடுவார். அய்யாவிற்கு இறுக்கமாகப் பின்னிய பிரப்பம் கூடை போன்ற தேன்மெழுகுத் தேகம். வேட்டியில், சட்டையில் அவர் மெல்லிந்து விசித்திரமாகத் தெரிவார். தேன் மெழுகுத் நிற தேகத்தின் ஒளி குன்றிவிடும். கைத்தசைகள் தொய்ந்து தொங்கும். முகத்தின் சுருக்கங்கள் கோரமான வளைவுகளுடன் வெளித் தெரியத் தொடங்கும். உதடுகளை  காவிப் பற்களால் கடித்துக் கொள்ளும் போது அவரிடமிருந்த சொற்ப இளமையும் வடிந்து, உடல் தளர்ந்து தீராத ரோகியின் உடல் போலாகிவிடும்.

அய்யா உதடுகள் பிரித்தால் ஒன்றில் உண்ணவாக இருக்கும் அல்லது கொட்டாவி விடுவதற்காவாக இருக்கும். வார்த்தைகள் முடிந்து விடும் என்ற பதட்டத்தில் அவற்றை எண்ணி எண்ணியே கதைப்பார். அம்மாவிற்கு அய்யாவின் வார்த்தைகள் அவசியமில்லை. அவர் கண்களைப் பார்த்தே அவருடைய விருப்பங்களை துல்லியமாகத் தெரிந்து கொண்டுவிடுவார். அக்குலா மீனைச் சுவையாகச் சமைப்பது, முதுகைப் பொச்சு மட்டையால் உரஞ்சிக் சுடுநீரில் குளிப்பாட்டுவது, இரவுகளில் தன்னுடைய நிர்வாண உடலைப் போர்வையுனுள் கத கதப்பாக்கிக் காத்திருப்பது என அத்தனையும் கண்களில் இருந்தே புரிந்து கொள்வார். அவை அம்மாவின் விருப்பங்களா என்று குழம்பும் அளவிற்கு மிகத் துல்லியமாகத் தயாராக இருப்பார் அம்மா.

எனக்கு அய்யாவின் கண்களில், பொலன்காவின் உக்குறுணிக் கண்களில் தெரியும் கபடமே தெரியும். இரு சொட்டு விசத்தை இனாமாகக் கொடுத்திட யாராவது கிடைக்க மாட்டார்களா என்று பாக்கோயா மரத்தின் வேரோடு வேராக சோம்பலாக படுத்துக்கிடக்கும் பொலன்காவின் கபடம். எந்த மந்திரங்களாலும் கட்டிவைக்க முடியாத கொடும் விஷமும் கபடமும் நிறைந்த கண்கள் அவை. அவற்றில் கட்டளைகளோ, அன்போ, பரிவோ, இரக்கமோ தெரிவதில்லை.

அய்யா மலையேறிச் செல்லும் நாளில் மட்டும் அம்மாவும் நானும் முறியில் தனித்திருப்போம். அன்று இரவு அம்மா என்னுடன் திண்ணையில் உறங்குவார். எங்களை நொச்சிப்பூவின் புளிப்பு வாசனை சூழ்ந்திருக்கும். என் முடிகளுள் விரல் நுழைத்து மெள்ள வருடிவிடுவார் அம்மா. அவருடைய வெள்ளுடலினுள் இருக்கும் குழுமையை வெள்ளைப் பனியின் சில்லிடலில் கை விரல்களில் உணர முடியும். மூடிய கண்களின் ஆழத்துள் இளஞ்சிவப்பு செதில்களை அசைத்து அசைத்து அக்குலா மீன் நீந்துவதையும் உணரமுடியும்.

மல்கெளடா குருவி ‘சட்’ எனத் தலையை வெட்டித் திருப்புவது போல, அய்யா கருக்கலிலேயே முறிக்குத் திரும்பி வந்துவிடுவார். எலுங்கப் பாறை முகட்டிற்கு அவர் வர முன்னமே அவருடைய அசைவை உச்சியில் கண்டுபிடித்துவிடுவேன். மலை உச்சியில் கொட்டைப் பாக்கு அளவில் அவருடைய அசைவு தெரியும். தலைச் சுமையும், புழுதிபடிந்த வெள்ளை வேட்டியும் மெல்லிய பனிப்புகாரில் மறைந்து மறைந்து தெரிவதைக் கீழிருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். தலைச்சுமையில் வெள்ளை உப்பும், மிளகும், காய்ந்த தேயிலை இலைகளும் இருக்கும். அய்யாவே அவற்றை எடுத்துச் சென்று முறியினுள் வைப்பார். மற்றும்படி அவரை பகலில் முறியினுள் பார்க்க முடியாது. முறி வேலைகள் அவருக்குத் தெரியாது.

காலையிலேயே, சிறு துண்டுகளாக நறுக்கிய மரை வற்றல்களைத் தேனிலிட்டு பட்டறையுள் எடுத்து வைப்பார் அம்மா. அய்யா வற்றல் துண்டுகளில் ஒன்றை தன்னுடைய கொடுப்பினுள் அதக்கி வைத்திருந்து, அதன் சாறை மெள்ள மெள்ள உமிந்து குடித்தபடி இருப்பார். அவருடைய தாடையில் தேனின் ஒரு துளியும் ஒட்டிருக்கும்.

உமிந்தபடியே வெள்ளைக் களிமண் உலையின் முன்னால் நாள்முழுவதும் அமர்ந்திருப்பார். அவரது கைகள் இலைவடிவ அம்பு நுனிகளைச் செய்தபடி இருக்கும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக, டிக்கோயா ஆமையின் மெது நடைபோல. அம்பு நுனிகள் செய்ய மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது. வருடம் முழுவதும் அம்பு நுனிகளைச் செய்தாலும் இரண்டு கைகளாலும் அள்ள முடிவதான சொற்பமான அம்பு நுனிகளையே அவரால் செய்ய முடியும். அவற்றை நேர்த்தியாகவும் முழு ஈடுபாட்டுடனும் மெருகேற்றிக் கொண்டிருப்பார். பிறவியின் நோக்கமே அம்பு நுனிகள் செய்வது மட்டுமே என்ற நளினமும் இலாவகமும் அதில் இருக்கும். அம்பு நுனிகள் மட்டுமே செய்யும் அவரை யாரும் திறமான வேலையாள் எனச் சொல்வார்களா தெரியாது. அவர் செய்யும் அம்பு நுனிகளுக்கு சன்மானமாக பொலஸ்காக்கள் தரும் காட்டு எருமையின் கொழுத்த தொடை வற்றல்களில் ‘திறம் வேலை’ என்ற பறைசாற்றல் கொன்னமினியா தேனின் புளிப்பில் இருக்கும். அந்த புளிப்பை அய்யா ரசிப்பதோ கண்டுகொள்வதோ இல்லை.

தேய்பிறையின் கரிய இரவுகளில் பொலஸ்காக்கள் முறிக்கு வருவார்கள். பொலஸ்கா என்றால் தோலில் முற்திட்டுகளுடன் இருக்கும் பாலில்லாப் பலாப்பழம். அவர்களைப் பொலஸ்கா என்றழைப்பது அவர்களுக்குத் தெரியுமா தெரியாது. ஆனால் அவர்களின் தடித்த உதடுகள் அச்சு அசலாக பொலஸ்காவின் கருஞ்சிவப்புச் சுளைகள் போலவே இருக்கும். எண்ணெய் பூசிய முடியை நேர்த்தியாகப் பின்னி, பின்னலை உச்சியில் கொண்டையிட்டு, கொண்டையில் ஒரு மரச் சீப்பைச் செருகி வைத்திருப்பார்கள்.

ஒரு கரிய பொலஸ்கா கூன் முதுகு போல எருமைத் தொடையை தோளில் சுமந்தபடி பட்டறைக்குள் வருவார். அவரின் பின்னால் பழுத்த பொலஸ்கா பழத்தின் சிவந்த சுளைக் கண்கள் போல பொலஸ்காக்களின் கண்கள் இருளுள் ஒளிந்திருக்கும். எருமைத் தொடையுடன் ஓர் பழுத்த இலையையும் பட்டறை வாசலில் தொடங்கவிட்டுச் செல்வார். ஒற்றைப் பழுத்த இலையே அய்யாவும் அவர்களும் பேசிக் கொள்ளும் மெளன மொழி. அதில் இடையறாத ஓர் தொடர்ச்சியும் இருப்பதாகப் பட்டது. அவர்களுடைய ஒற்றை இலை மொழி விடியும் வரை எருமைத் தொடையுடன் பட்டறை வாசலில் தொங்கும். இலையின் வடிவத்தை வெள்ளைக் களிமண் அச்சுக்களாக அம்மா சுட்டு எடுப்பார். ஒற்றை இலை மொழி இருபது சிவந்த களிமண் அச்சுக்களாகி விடும்.

பொலஸ்காக்கள் எப்போது திரும்ப வருவார்கள் எனத் தெரியாது. அவர்கள் திரும்ப வரும்போது டக்கோயா ஆமை தனது மெது நடையை முடித்து ஓய்விலிருக்கும். அம்பு நுனிகளும் தயாராக இருக்கும். அம்பு நுனிகளின் தரம் திறம் என்றால் இன்னுமொரு எருமைத் தொடையை பரிசாகத் தொங்கவிட்டுச் செல்வார்கள். அரிதாக இரண்டு. அய்யாவிற்கு நான்கு கொழுத்த தொடைகளும் ஒரு தேன் குடுவையும் விட்டுச் செல்வார்கள். கொஞ்சம் புளிப்பாக இருக்கும் திறமான கொன்னமினியா தேன். அய்யா அவற்றைத் தொடுவதில்லை. அம்மா தான் அவற்றை முறின் கூரையில் தூக்கணாம் குருவிக் கூடுகள் போலக் கட்டித் தொங்கவிடுவார்.

அம்மாவுக்கு முறி வேலைகள் மட்டுமல்ல பட்டறை வேலைகளும் தெரியும். அய்யா சிரமம்படும் கற்பாறைகளைக் கூட இலகுவாகப் புரட்டிவிடும் தெம்பும் அவரிடம் இருக்கிறது. அம்மாவின் வெளிர் உடலில் கன்றுக்குட்டியின் துள்ளல் இருக்கும். அய்யாவிடம் ஆயிரம் வருடங்களாக உழுது கால் முட்டு தேய்ந்து ஓய்ந்த கிழட்டு காளையின் அசைவுகளே இருக்கும். அம்மாவின் திரட்சியான உடற்கட்டில் மிடுக்கும், வலிமையும் இருந்தாலும் கூர்ந்து கவனித்தால் அவருடைய நடையில் ஒரு பிசிறும், அதை அவர் திறம்பட மறைப்பதும் தெரியும். அவர் வலது காலை ஒரு நொடித் தயக்கத்தின் பின்னரே நிலத்தில் ஊன்றுவார். அது பழுத்த புண் ஒன்று உட் பாதத்தில் இருக்கிறது என்ற அச்சத்துடன் வைப்பது போலிருக்கும். கூர்ந்து கவனித்தால் மட்டுமே அந்த நொடித் தயக்கம் தெரியும். அந்தப் பிசிறை ஊரார் யாராவது அறிந்திருப்பார்களா தெரியாது.

ஆற்றைத் திருப்பி அணை கட்டிய பின் ஊர் எங்களுடைய முறியிலிருந்து பின்னகர்ந்து வெகுதூரம் சென்றுவிட்டது. கைவிடப்பட்டுத் தூர்ந்த வீடுகளும், காட்டுச் செடி படர்ந்த புற்பாதைகளுமே எஞ்சி இருக்கின்றன. ஊராரிற்கு எங்கள் முறியினுள் பிழங்குவதற்கு அச்சம் இருந்தது. ‘ஆனை விழுந்தான் முறி’ என்று சொல்லி விலகியே இருப்பார்கள். சல்லியன் மட்டும் அச்சமின்றி வருவார். நிரூபிப்பதற்கான எந்த ஆதாரங்களும் என்னிடம் இல்லை என்றாலும், அவர் அய்யாவின் தூரத்து உறவினன் என்பது என்னுடைய சிறுவயது மனப்பதிவு. எனக்கு அய்யாவிடமிருந்து கிடைத்திருக்கும் கூர் மூக்கு, ஒடுங்கிய தாடை கூட சல்லியனிடம் இல்லை. தடித்த உதடுகளும், சுருட்டை முடியும், தெறிகள் இல்லாத உப்பு படிந்த சட்டையுமே சல்லியன். அய்யா சல்லியனுக்கு சொற்ப மண் வெட்டிகள் செய்து கொடுப்பார். அம்பு நுனிகள் தவிர்த்து அவற்றை மட்டுமே அய்யா செய்வார்.

சல்லியன் மண்வெட்டிகளிற்கு சன்மானமாக அய்யாவிற்கோ அல்லது அம்மாவிற்கோ மரை வற்றல்களோ தேன் குடுவைகளோ கொடுக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு நிறையவே தந்திருக்கிறார். அவருடைய கண்கள் உட்பட. திண்ணைக் கட்டிலில் டவுணக்கிய புற் போர்வைக்குள் படுத்திருந்தபடி மலைகளிற்கும் காடுகளிற்கும் அப்பாலிருக்கும் விநோதமான மனிதர்களை, புரியாத மொழிகளை, கிளர்ச்சியூட்டும் பழக்க வழக்கங்களை, நெருக்கமான விலங்குகளை, துடிப்பான பறவைகளை, மந்திரவாதிகளின் கொடூர முகங்களை எல்லாம்  சல்லியனின் கண்களூடாவே பார்த்திருக்கிறேன். அவருடைய கண்களினூடாகத் பார்க்கும் நிகழ்வுகளில் மர்மமும், அச்சமூட்டும் அமானுஷ்யத்தின் கரிய நிறமும் சேர்ந்தே இருக்கும்.

எங்கள் முறிக்கு அருகில் தூர்ந்து, முட் செடிகள் அடர்ந்த சேற்றுக்குட்டைகளாக பெரிய இரண்டு குழிகள் இருக்கின்றன. அணைக்கட்டு கட்டிய நாட்களில் அதற்கு மண் வேண்டித் தோண்டிய குழிகள் என்றார் அம்மா. அந்தக் குழிகள் மண்டிப்போகத வரலாற்றின் மண் அடுக்குகளாலும்,  காட்டுராசனின் கண்ணீராலும் நிறைந்தது என்பது சல்லியனின் கண்ளூடகப் பார்த்தாலே தெரியும். சால்லியன் அவற்றை காட்டு ஆனைகள் பழக்க வேண்டி தோண்டிய ஆனைக் குழிகள் என்றார்.  குழிகளைச் சுற்றித் தோப்பாக இருக்கும் ஏராளம் தென்னைகளைப் பார்த்தால் அவர் சொல்வதை நம்பாமல் இருக்க முடியாது. அதற்கு அடுத்ததாக அவர் சொன்னவற்றைக் கேட்டதும் நான் பெரிதாக வெடித்துச் சிரித்தேன். “சிரிப்பில்லை மோனே மெய்தான் கண்டீரோ” என்றார். எனைக்  கூர்ந்து பார்த்தார், நான் அவற்றை நம்பவில்லை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. “இது என்ன தெரியுமா” என்றார். அவரது விரல்கள் சுட்டிய இடத்தில் கையடக்கமான சிறு கோடாலி ஒன்று சுவரில் தொங்கியது. காலம் காலமாக அங்கே தான் இருக்கிறது. கவனிப்பார் இன்றி. பிடி அரக்கு நிறத்தில் வழு வழுப்பாக இருந்தது. இரும்பு முனையில் தேன் தடவிய பளபளப்பில் நல்ல கூராக வேறு இருந்தது. நன்கு கனிந்த குகுலு பழத்தை வெட்டினால் கூட அதன் முனை ஒடிந்து விடும். அவ்வளவு மெல்லியதாக இருந்தது.

“ஆனை பிடிக்கிற கோடாலி, அதாக்கும் ஆனை கோடாலி” என்றார் சல்லியன். அவருடைய கண்கள் விஷேசமானது மட்டுமல்ல விசித்திரமானதும் கூட.

ஆனைக் கோடலியை வைத்து வளர்ந்த காட்டு ஆனைகளை பிடிக்கலாம். ஆனைகளைக் குட்டியாக குழிப் பொறிவைத்துப் பிடிப்பார்கள். குட்டியாக என்றால் பழக்கி எடுப்பது மிக இலகு. வளர்ந்த ஆனைகளைப் பிடித்து என்னதான் செய்வது. “பறங்கியர்களுக்கு வருடத்திற்கு அய்ம்பது ஆனைகள் கொடுக்க வேண்டும், ஆனைக்குட்டி எப்போது வளரும் அதை எப்போது கொடுப்பது, விடுவார்களா பறங்கியர் கொட்டியாரத்து பீரங்கிகளை கண்டிப் பக்கமாக திருப்பிவிட மாட்டார்கள்” என்றார் சல்லியன்.

காட்டு ஆனைகள் எப்போதும் முன்னங்கால்களில் ஒன்றைத் தூக்கியபடியே தூங்கும். ஆனைக் கோடாலியால் தூக்கியிருக்கும் காலில் ஒரு வெட்டு வெட்ட வேண்டும். சிறியதாக பிறை வடிவில். அவ்வளவுதான் முடிந்தது, ஆனை பனம்பழம் போல ‘தொப்’ என்று சுருண்டு விழுந்து நிலத்தோடு நிலமாகப் படுத்துவிடும். தூங்கும் ஆனையின் காலை வெட்டுவது சின்னக் காரியம் இல்லை. உடல் முழுவதும் ஆனைப் பிண்டத்தை பூச்சிச் சென்றாலும் ஆனையை நெருங்கவே முடியாது. தூக்கத்திலும் அதன் காதுகள் கூர்மையாக இருளைச் சலித்தபடி இருக்கும். வாலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஒரு முடியைக் கூட ஆனை பிடுங்க விடாது.

பொலஸ்காக்கள் ஆனைக் காலை வெட்டி ஆனை பிடிப்பதில் அசகாய சூரர்கள். ஆனால் அவர்கள் ஓர் எருமைக் கன்றைக் கூட மேலதிகமாகக் கொல்ல மாட்டார்கள். பொலஸ்காக்கள் வருடத்துக்கு ஒரு ஆனை பிடித்து கண்டிராசனுக்கு கொடுத்தாலே அதிகம். பறங்கியருக்கு அது எம்மாத்திரம். பொலஸ்காக்களுக்கு பறங்கியரின் சொற்களும் பொருட்டில்லை. கண்டிராசான் சட்டமும் அவர்களிடம் எடுபடாது.  காட்டின் குரலை மட்டுமே தலை குனிந்து கேட்பவர்கள் அவர்கள், அதனால் ஆனை பிடித்துக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

ராச சிங்கன் காலத்தில் ஆனை பிடிப்பவர்களுக்கு நல்ல மதிப்பும், வருமானமும் கிடைத்தது. பொலஸ்காக்களின் ஆனை பிடிக்கும் வித்தையை எல்லுப்பேள இரகசியமாக அறிந்து கொண்டார். அவர் கண்டிராசனுக்கு அம்புகள் செய்து கொடுக்கும் பட்டறை வைத்திருந்தார். இரும்பு வேலையில் அவருக்குச் சொற்ப வருமானமே கிடைத்தது. வெளிவேலைகளை எடுத்துச் செய்யலாம், செய்தால் கண்டிராசா தலையைச் சீவி விடுவார்.  இரும்பு வேலையால் உருண்டு திரண்டிருந்த திரள் திரேகக் கட்டுடன் காட்டினுள் வந்து இறங்கினார் எல்லுப்பேள. கைகளில் சிறிய கையடக்கமான ஆனைக் கோடாலியும், பொலன்காவின் நீல விசத்தின் துளிகளும் இருந்தன. கூடவே ஆனனையை நெருங்கிச் செல்லும் பொலஸ்காக்களின் இரகசியமும் தெரிந்திருந்தது.

ஆனைகளின் காலில் பிறைவடிவில் வெட்டுக்களை வெட்டினார். ‘தொப்’ என்று விழுந்த பெண் ஆனைகள் எழுந்திருக்க அய்ந்து நாட்கள் ஆகும். ஆண் ஆனைகள் மூன்று நாளில் எழுந்திருக்கும். எத்தனை நாட்கள் சென்றாலும் வெட்டுக் காயம் ஆறாமல் பிறைவடிவில் நீலமாக இருக்கும். காலை நிலத்தில் ஊன்றவே அஞ்சி நடு நடுங்கி ஆனைகள் கண்ணீர் உகுக்கும். அவற்றின் சிறிய கண்களில் இருந்து கண்ணீர் எலுங்க அருவிபோல கோடாய்க் கொட்டும். அவ்வளவு வலி. நரம்பில் குத்தூசியைச் செருகி வைத்தது போல ‘விண்’ என்று வலிக்கும்.

பொலன்ஸ்காவின் கொடிய விசத்தை கோடாலி நுனியில் நீலப் படலமாகப் பூசியிருப்பார் எல்லுப்பேள. ஆனை மூளைக்கு கால்களின் வழி பொலன்ஸ்கா விசம் மெள்ள ஏறும். விசம் ஏறிய ஆனைகள் இழைத்து, மூர்க்கம் வடிந்து, கைச் சொடுகுச் சந்தம் கேட்டாலே பயந்து கால்களை மடித்து நிலத்தில் அமர்ந்துவிடும். பிறைவடிவ வெட்டு ஆறாத பழுத்த புண்ணாய் அதன் மூளையினுள் அச்சுப்போல பதியும். அரிதான இப்பிலிப்ச் சாறுதான் விஷத்திற்கு முறி மருந்து. அதைப் பசையாக்கிப் பூசினால் காலில் காயம் ஆறும். நினைவில் பிறை வெட்டு அப்படியே பதிந்து இருக்கும். பிறகு ஆனைக்கு முன்னால் தென்னம் குருத்தை நீட்டினால் போதும். முன்னங்காலை மெதுவாக நொண்டி நொண்டி அறுபது கட்டை நடந்து கொட்டியாரத்துக் கடற்கரையிலில் தரித்திருக்கும் பறங்கிக் கப்பலுள் தானாக ஏறிவிடும்.

எல்லுப்பேள மிகச் சொற்ப நாட்களிலேயே பொலஸ்காக்கள் அஞ்சும்படி நிறைய ஆனைகளை பிடித்தார். அவரின் திறமையில் கட்டுண்ட கண்டிராசான் காட்டில் ஆனை பிடிக்கும் மொத்த உரித்தையும் தாளப்பத்து மடலில் அவருக்குச் சாசனமாக எழுதி கொடுத்தார். எல்லுப்பேள வம்சத்தினர் மூத்த பிள்ளைகளுக்கு மட்டும் கோடாலி வித்தையையும், முறி மறிந்து ரகசியத்தையும் கற்றுக் கொடுப்பார்கள் என்றுவிட்டு சல்லியன் என்னுடைய முகத்தையே உற்றுப் பார்த்தார். இந்த முறை நான் வெடித்துச் சிரிக்கவில்லை. உதடுகள் பிரியாமல் மெதுவாகச் சிரித்தேன். திசைக்கு ஒன்றாகத் தொடர்புகள் ஒன்றும் இல்லாமல் சிதறிக் கிடந்த நூல் துண்டுகள் எல்லாம் பெரியதொரு வலையின் கன்னிகளாக கச்சிதமாக இணைத்துவிட்ட திருப்தி அவருடைய கண்களில் தெரிந்தது.

எலுங்கப் பாறை முகட்டில் தயங்கி நின்ற இருவரும் செங்குத்துச் சரிவை கடந்து கீழே இறங்கினார்கள். அதுவொரு புதிய தொடக்கம். இருவரும் பாரமான ஓர்அழுக்கு மூட்டைய மாற்றி மாற்றித் தோள்களில் சுமந்தபடி வந்தார்கள். மிக அருகில் வந்த பிறகே தெரிந்தது, அவர்கள் தோள்களில் சுமந்து எடுத்து வந்தது அழுக்குத் துணி மூட்டை இல்லை, காயம்பட்ட மனிதனின் ரத்த அழுக்கான சிவந்த உடல் என்று.

உருக்குலைந்திருந்த உடலை பட்டறைக்கு முன்னாலிருந்த மரத் திண்டில் இருவருமாக வளர்த்தினார்கள். உடல் வதங்கிய வாழைத் தண்டாக வெளிறி இருந்தது. முதலாமவர் பட்டறையினுள் இருந்த அய்யாவிடம், “அய்யா கொஞ்சம் நீர் கிடைக்குமா” என்றார் பரிவான குரலில். அய்யா முறி வாசலைப் பார்த்தார். அங்கு அம்மா கைகளில் நீர்க் குடுவையுடன் தோன்றினார். மரத் திண்டில் வளர்த்தியிருந்த உடலைப் பார்த்ததும் அவருடைய பச்சை விழிகள் அகல விரிந்தன, கைகள் வியர்த்தன.  நீரை முதலாமவரிடம் கொடுத்தார். குனிந்து காய உடலின் நெஞ்சில் கட்டப்பட்டிருந்த குருதிச் சாரத்தை தன்னுடைய நடுங்கும் விரல்களினால் அவிழ்த்தார்.

“தப்புவது கடினம், இரண்டு குண்டு நெஞ்சைத் துளைத்துச் சென்றிருக்கின்றன” என்றார். புழுதிச் சாரத்தை மடித்துக் கட்டியிருந்த முதலாமவர். கால்களில் ரப்பர் செருப்பு அணிந்திருந்தார். அவரது மார்பு முடிகளும் இரத்தத்தில் ஊறிக்கிடந்தன.

“உயிர் இன்னும் இருக்கிறது” என்றார் அம்மா நம்பிக்கையுடன். அவரது உதடுகள் இறுகின.

“அவசரத் தகவல் ஒன்று தலைமையகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது, பக்கத்தில் ஆஸ்பத்திரி ஒன்றும் இல்லையா” என்றார் மற்றவர்.

“ஆஸ்பத்திரிக்கு தூரம் செல்ல வேண்டும் அது வரை உயிர் தங்குவது கடினம்” என்றார் அம்மா தீர்க்கமான குரலில். அவரின் பதட்டம் இன்னும் குறைந்திருந்தது.

“ஏதாவது வழி இருக்கிறதா” என்றார் இரண்டாமவர். அவரது கண்களில் இறைஞ்சும் கெஞ்சல் தொனி இருந்தது. கொஞ்சம் பூடகமானவராகத் தெரிந்தார்.

அம்மா காயத்தின் இரத்தக் கறைகளை மிகச் சுத்தமாக கழுவினர். கழுவிய காயம் இரு சிறு இரத்தப் பொட்டுகளாகச் சிறுத்து விட்டிருந்தன. சின்னி விரலை நுழைக்கக் கூடிய இரத்தப் பொட்டுக்களிலாளான துளை. துளையினுள் அமரங்கா இலைகளைப் பிழிந்து பசும் சாற்றை துளிகளாக இட்டார். உயிர்த் துளிகள் துளையுள் சொட்டுக்களாக நிரம்பின. நிரம்பிய துளைகளை ஒக்குவா இலைகளை வைத்து கவனமாக மூடினார். கையில் வழிந்த பசுஞ்சாற்றை தலையில் அழுத்தித் தேய்த்தார்.

உடலைத் தூக்கி வந்த இருவரின் முகங்களிலும் ஆச்சரியமும், வியப்பும் தோன்றும்படி வதங்கிய உடலினுள் மெல்லிய மூச்சின் ஓட்டம் தெரிந்தது. முறிக்கு எதிரிலிருந்த மண் குடிசையினுள் கட்டிலில் வைக்கோலைப் பரப்பி அதன் மேல் டவுனக்கினியா பாய் விரித்து அதன் மேல் காயம்பட்ட உடலை வளர்த்தினர். குடிசை வாசலை அம்மா தாளப்பத்து மடலால் இறுக மூடினார். இருவரும் தங்களுடைய துப்பாக்கிகளைத் தாழ்த்தி அம்மாவிற்கு மகிழ்வுடன் ‘நன்றி’ கூறினார்கள். அம்மா துப்பாக்கிகளை விட்டு விட்டு நன்றியை மட்டும் சிறு புன்னகையுடன் உதடுகளை மடித்து வாங்கிக் கொண்டார்.

இருவரும் அணையில் தங்களுடைய குருதிக் கறைபடிந்த உடலைச் சுத்தமாக கழுவி, ஆசைதீர நீந்தினார்கள். பின், அம்மா சமைத்த அக்குலா மீனும், சுடு சோறும் சாப்பிட்டனர். அவசரத் தகவலின் துணைக்கு ஓர் எருமைத் தொடையையும் தோள்களில் சுமந்தபடி தலைமையகம் நோக்கி விரைந்து சென்றார்கள்.

அம்மா தினமும் காயத்தின் புண் வாயில் பச்சிலை பிழிந்து விட்டார். புதிய அமரங்கா இலைகளால் மூடிக் கட்டுக்களை இட்டார். தேறிவரும் உடலின் தலைமாட்டில் சிட்டி விளக்கை ஏற்றிவைத்தார்.  மூன்றாம் நாள் உடல் மெல்ல அசைந்தது. அந்த மூன்று நாட்களும் அம்மா தலையில் நெச்சிப்பூ சூடியிருந்தார். நெச்சிப் பூ சூடும் நாட்களில் அய்யா பட்டறையுள் தனியே படுத்துக் கொள்வார்.

உடல் தேறி குடிசையுள் இருந்து வெளிவந்த வந்த மனிதர் முற்றிலும் புதிய மனிதராக இருந்தார். எல்லா விதத்திலும் யாரோடும் ஒப்பிட முடியாத வசீகரமும், நித்தியமான புன்னகையும் அவரின் நெளியும் உதடுகளில் இருந்தன. தலைமுடி பிடரியில், கழுத்திலும் படிந்து இருந்தது. சற்று நேரத்தின் பின்னரே அவருடைய மர்மமான வசீகரத்தின் ரகசியம் புரிந்தது. அகலமான முகத்தில் சிறு சுருள் சுருள்களாக அடர்ந்து வளர்ந்திருந்த கருந்தாடியே அந்த மர்ம வசீகரத்தின் தொடக்கம், முடிவு கண்களில் ஒளிர்ந்த கபடமின்மை. தன்னுடைய தூய வெள்ளை மனதை விரித்து தன் கைகளிலே பிடித்திருந்தார். இல்லை, அவருடையது குருதிச் சிவப்பு நிறமான மனம்.

போராளி என்று தன்னை அறிமுகம் செய்தார். எனக்குப் ‘போராளியின்’ அர்த்தம் புரியவில்லை. அம்மாவிற்கும் தான். புன்னகை மாறாமல் போராளியை பல விதங்களில் விளக்கிச் சொன்னார்.  புரிவது போலவும் இருந்தது ஆனாலும் புரியவில்லை. தன் பெயர் புரட்சி என்றார். அது இன்னும் குழப்பியது. திண்ணையில் என் அருகில் அமர்ந்திருந்து ஏராளம் கதைகள் சொன்னார். அத்தனையும் போர்க் கதைகள். நிணமும், சதையும், அழுகைளும் சிறிய பித்தளைக் குண்டினுள் நிரம்பியிருந்த கதைகள். தன்னுடைய துப்பாக்கியை நெஞ்சின் குறுக்காகவே எப்போதும் கொழுவி இருந்தார்.

சல்லியனின் கண்களினுள் விசித்திரமும், கடந்த காலத்தின் அமானுஷ்யமும் இருந்தது என்றால் புரட்சியின் கண்களினுள் காட்டுத்தீயின் வெம்மையும் எதிர்காலமும் இருந்தது. வெம்மை, அலுப்பு தரும் வெம்மை. வேட்டுக்களைச் சுட்டபடி முன் நகர்ந்து செல்வதில், எதிரியைக் கொலை செய்வதில் (யார் எதிரி?) என்ன சுவாரசியம் இருக்கிறது? புரியவில்லை. எனக்குப் புரியவில்லை என்பது அவருக்கு புரிந்திருக்க வேண்டும். சுவரில் தொங்கிய கோடலியைச் சுட்டிக்காட்டினார். வரலாற்றின் உள் மடிப்புக்களில் இருந்து ஆக்ரோசத்துடன் எழுந்து வந்திருந்த அந்தக் கையடக்கமான ‘ஆனை கோடலியைத்’ தான்.

“சின்னவனே கோடாலிகளின் காலம் முடிந்து விட்டது, இனி துப்பாக்கியின் காலம்” என்றார்.  நெஞ்சிலிருந்து துப்பாக்கியை எடுத்து அதன் இரும்பு முனையால் போர்வைக்குள் இருந்த என் கால்களைத் தொட்டார். ஒரு கணம் தயங்கி “என்ன” என்றார் குழப்பத்துடன்.

“அதுக்கு வாதம் எப்பவும் படுத்துத்தான் கிடக்கும், வெளிக்கு இருக்க கொல்லைக்கு தூக்கிப் போவது தான் சிரமம்” என்றார் அம்மா முறியினுள் இருந்தபடி.

புரட்சி நித்தியமாகச் சிரித்தபடியே “போலியோ என்று நினைக்கிறேன் அது அரிதாவே இரண்டு கால்களையும் செயல் இழக்கச் செய்யும்” என்றார். பின் ஏதோ யோசித்தவராக “ம்.. கடினம் தான்” என்றார் தனக்குள். எனக்கும் கேட்டது.

பின் வந்த நாட்களில் துப்பாக்கிகளின் காலம் பிறந்து விட்டது அல்லது கோடாலிகளின் காலம் முடிந்துவிட்டது என்று நம்பும் நிகழ்வுகளே முறியைச் சுற்றி நிகழ்ந்தன.

புரட்சியின் மண் குடிசைக்கு மூன்று வேளைகளும் உணவுகளையும், குடி பானங்களையும் மகிழ்வுடன் எடுத்துச் சென்றார் அம்மா. அபூர்வமான காட்டு வாத்தின் இறைச்சியும் சமைத்துக் கொடுத்தார். புரட்சி குளிப்பதற்கான மிதமான சுடு நீர் வைத்துக் கொடுத்தார். அய்யாவின் இரண்டு சோடி உடுப்புக்களையும் அவருக்குக் கொடுத்தார்.

அம்மா மாலை நேரங்களில் தன்னுடைய சேலைத் தலைப்பை ஒதுக்கியபடி வெளிர் பாதங்களால் நீரை அளைந்தபடி அணைக்கட்டில் அமர்ந்திருப்பார். புரட்சி அணையினுள் கைளை வீசி  நீந்திக் கொண்டிருப்பார். அவர் அம்மவின் ஆடைகளை தோய்த்து உலர்த்தி அழகாக மடித்துக் கொடுத்தார். அம்மாவின் முகத்தில் ஒரு மிடறு பொலிவு கூடி, பச்சைக் கண்களும் சிரித்தன. நடையில் பிசிறாக இருந்த அந்த நொடித் தயக்கத்தையும் கூர்ந்து கவனித்தும் அறியமுடியவில்லை. இரவுகளில் புரட்சியின் குடிசையினுள் வெகுநேரம் இருந்து விட்டே முறிக்குத் திரும்பினார். அப்போது அவருடைய உதடுகளில் அபூர்வமாகப் பூக்கும் குறுநகை பூத்திருந்தது. அவர்கள் உள் இருக்கும் போது தாளப்பத்து மடலினல் குடிசை வாசல் மூடியே இருந்தது.

என்னுள் இன்னது என்று சரியாகப் பிரித்தறிய முடியாத மகிழ்ச்சியின் ஊன் பிரவகித்தது. துடிப்பும், மகிழ்ச்சியும், கபடமில்லா கண்களும் கொண்ட அப்பாவின் வருகையாக இருக்கலாம். அக்குலா மீன் கல் அணைகளை உடைத்து, தன் இளஞ்சிவப்பு செதில்களை அசைத்து அசைத்து நீந்தியது.

அத்தனையும் சில நாட்கள் தான். அம்மா சிவந்த கண்களுடன் அழுதபடி மண்குடிசையில் இருந்து வெளியே ஓடி வந்த ஒற்றை காலையுடன் எல்லாம் முடிவிற்கு வந்தது. வழமையின் சோம்பலுடன் விடிந்த பகல் இரவின் அமானுஷ்யத்தின் பரபரப்பில் முடிந்தது.

குடிசையின் உள்ளே என்ன நிகழ்ந்தது என்று சரியாகத் தெரியவில்லை. குடிசையின் குரல்களும் வெளியில் கேட்பதில்லை. அவைகள் எல்லாம் என்னுடைய கண்களாலும், காதுகளாலும் ஊடுருவிச் செல்ல முடியாத தாளப்பத்து மடலின் பின்னால் தொலைவில் இருந்தன. என்னால் முடிந்ததெல்லாம் குடிசையின் இருளை என் மனக் கண்ணில் விரித்துவைத்துக் கொள்வது. உள் உடல் அசைவுகளின் நிழலை அதில் ஊக்கிப்பது. இது உண்மையை அறிவதற்கான அவ்வளவு சரியான வழிமுறை இல்லை என்றாலும், கொஞ்சம் கோணலான முறைதான் என்றாலும் ஒரு அனுகூலம் இதில் இருந்தது. என் கற்பனைகளினதும், விருப்பங்களினதும் ஒரு விள்ளலையும் அந்த இருள் உடல்களில் பூசிவிடவும் முடியும்.

குடிசையுள்ளிருந்து அம்மா வெளிவருவதற்கு முன்னர் “கிழட்டு நாயா” என்ற குரல் சத்தமாகக் கேட்டது. அது புரட்சியின் வழமையான தொனியில் இல்லாமல் கசப்பேறியதாக இருந்தது. ஏன் குரூரமும், இயலாமையும் கூட அதில் இருந்தது. அம்மா சிவந்த கண்களும் கண்ணீருமாக வெளியே வந்தார். நடையில் அச்சம் இருந்தது. நொடித் தயக்கமாகக் கூட இருக்கலாம். முகத்தில் வியர்வை மொட்டுகள் அரும்பியிருந்தன. கோபமானதா, பயந்ததா, இயலாமையிலானதா என்று பிரித்தறிய முடியாத உணர்ச்சிகளின் கலவை அவருடைய முகத்தில் வர்ண வேறுபடுகள் காட்டிக் குழம்பி இருந்தன. முடிவில், கபடம் நிறைந்த பொலன்ஸ்கா இரண்டு சொட்டு விசத்தை இனாமாகக் கொடுக்க ஆளைக் கண்டுகொண்டு பிடித்துவிட்டது.

மதிய உணவைப் புரட்சிக்கு அம்மா எடுத்துச் செல்லவில்லை, புரட்சியும் வெளியே வரவில்லை. குடிசையினுள் நிலையில்லாமல் அவர் நடந்து திரியும் சீரற்ற காலடிகளின் ஒலிகள் சன்னமாகக் கேட்டன. ஆனால் அம்மா இரவு உணவை எடுத்துச் சென்றார். உணவை வைத்துவிட்டுச் சாப்பிடும் வரை காத்திராமல் சடுதியிலே திரும்பி விட்டார்.

எருமையின் காட்டு அலறலே என்னை எழுப்பியது. விழித்தபோது அலறல் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. அலறலின் சுருதி குறைந்தபோது அது புரட்சியின் அலறல்தான் என்று தெரிந்தது. இறைஞ்சுவது போலவும், சபிப்பது போலவும், கட்டளையிடுவது போலவும், பயமுறுத்துவது போலவும் பல ரூபங்களில் ஒலித்து, சுருதி குறைந்தபடி வந்தது. காதுகளைக் கூர்மையாக்கி அந்த அலறலில் குவித்துப் படுத்திருந்தேன். திரும்ப விழித்த போதே அப்படியே தூங்கி விட்டிருந்ததை உணர்ந்தேன். எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை. முறியினுள் இருந்து சீறும் மூச்சொலிகள் ஆவேசமாகக் கேட்டன. புரட்சியின் குடிசையினுள் சப்தம் ஒடுங்கி நிசப்தமாக இருந்தது. என் அருகே யாரோ இருப்பதாக உள்மனம் உணர்ந்தது. இருளைத் துலாவி துலாவி உற்றுப் பார்த்தபடியிருந்தேன். கண்கள் இருட்டிற்குப் பழகியதும் தேகம் சில்லிட்டுக் குளிர்ந்தது. பயத்தில் பற்கள் அடித்துக் கொண்டன.

புரட்சி என்னருகே படுத்திருந்தார். நீலச் சடலமாக. அவருடைய சிவந்த உடலில் விஷத்தின் கருநீலம் படர்ந்திருந்தது. உதடுகள் பிளந்து சுட்ட வெண்மையில் இருந்தன. பற்களின் ஈறுகள் கன்றி கடும் நீலமா என்று சந்தேகிக்கும் நிறத்தில் இருந்தன. கண்கள் மூடி இருந்தன. புரட்சி என் அருகிலே தான் காலம் காலமாக படுத்திருப்பதாகத் தோன்றியது. இரட்டையர்கள்  போல.  சடலத்தின் சில்லிட்ட அச்சம் மெல்ல விலகியது. மூச்சை ஆசுவாசமாக உள்ளிழுத்து பைகளை நன்றாக நிரப்பிக் கொண்டேன். உடலும், மனமும் நிலைக்கு வந்தது. பார்வை இன்னும் கூராகியது. நீலச்சடலத்தையே உற்றுப் பார்த்தபடி படுத்துக் கிடந்தேன். கண்கள் இயல்பாக சடலத்தின் காற் பாதங்களைத் தொட்டுச் சென்றன. உடல் குலுங்க முதுகுத் தண்டு சில்லிட்டு விறைத்தது. ‘சட்’ என வியர்த்தது. வலது காலில் நீலம் பிறை வடிவில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

குழப்பத்துடனும், அச்சத்துடனும் முறி யன்னலை மூடியிருந்த இருந்த தாளம்பத்து தடுப்பை விலக்கி உள்ளே பார்த்தேன். அந்த இருளைக் கண்கள் பழக சொற்ப நேரம் எடுத்தது.

கவிழ்ந்திருக்கும் டக்கோயா ஆமையின் ஓடு போல அம்மாவின் வெளிர் நிறப் புட்டம் நீல ஒளியில் மெல்ல அசைந்து. அவருடைய நீண்ட தலைமுடி வியர்வையில் ஊறி உடல் முழுவதும் பிரி பிரியாகப் படிந்திருந்தது. மூர்கமாகச் சண்டையிடும் பொலன்ஸ்காவும், கெரண்டாவும் போல  நான்கு கால்கள்  பின்னிப் பிணைந்திருந்தன. வெளிர் நிறக் காற் பாதங்கள் தூயதாக மாசு மருவற்று இருந்தன. தேன் மெழுகு நிறப் பாதங்களில் நீல நிறம் பிறை வடிவில் ஒளிர்ந்தபடி இருந்தது.

உடல் விதிர் விதிர்க்க எழுந்திருந்தேன். உடலை, கால்களை மிக இலகுவாக அசைக்க முடிந்தது. ஆனாலும் எழுந்திருக்க விருப்பமே இல்லாமல் அப்படியே படுத்துக் கிடந்தேன்.