கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு

0 comment

இன்றளவும் குழந்தைகளின் அக – புற உலகை கு.அழகிரிசாமி போல யதார்த்ததிலிருந்து நூலிழை கூட விலகாமல் யாரும் கதை எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். அனேக இலக்கியத்தில் குழந்தைகள் என்றால், கடவுள்கள். மிச்சத்தில் அவை சாத்தான்கள். ஆனால், அழகிரிசாமி கதைகளில் மட்டும் அவை கவித்துவ வர்ணனைகளின் சுமையின்றி குழந்தைகளாகவே திரிகின்றன.

என் பாலர் பள்ளி ஆசிரியை அனுபவத்தில், நம்மை விட கூடுதல் கருணை, ஈகோ, சாந்தம், குரோதம், மகிழ்ச்சி என்பதாக உணர்வென்னும் கோப்பை தளும்ப நடமாடும் குழந்தைகளைக் காண்கிறேன். சின்னஞ்சிறு உடலுக்குள் எங்கிருந்து இவ்வளவு கோபம் வருகிறது என்று அசந்திருக்கிறேன். எப்படி நொடிக்கு நொடி வெவ்வேறு உணர்ச்சிகளை ஸ்விட்ச் போட்டதைப் போன்று மாற்றிக்கொள்ள முடிகிறது என்று வியந்திருக்கிறேன். ஒருவேளை குழந்தைகளின் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுக் கலவை தான் வளர்ந்த மனிதனோ என்று தோன்றியிருக்கிறது.

அழகிரிசாமியின் பிரசித்தி பெற்ற ‘அன்பளிப்பு‘ கதையின் துவக்கத்தில் தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்ப குழந்தைகள் செய்யும் அட்டகாசம் பற்றி எழுதியிருப்பார். அதைப் படிக்கையில், நாமே தூங்குவது போலவும் நம்மைச் சுற்றி சில வானரங்கள் ரகளை செய்வது போலவும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். புத்தக அலமாரியிலிருக்கும் புத்தகங்கள் மொத்தமாக கொட்டிவிட அங்கே திடீரென பேரமைதி நிலவுகிறது. மூச்சைப் பிடித்துக்கொண்டு குழந்தைகளோடு நாமும் காத்திருக்கிறோம். பிறகு அவர் மெல்ல சிரிக்கையில், ஆசுவாசம் அடைவது மட்டுமில்லாமல் சித்ராவைப் போல நாமும் இவருக்கு முதுகில் அடி வைத்தால் தான் என்ன என்று தோன்றுகிறது.

ஏதோ ஒன்று வேண்டுமென இடம் பொருள் ஏவல் தெரியாமல் அடம்பிடிக்காத குழந்தைகள் தான் உண்டா? அதே போல குழந்தை ஏங்கி அழுவதைப் பார்க்க சகிக்காத மனதுக்கும், கண்டிப்பு காட்டாமல் விட்டால் அது சரியான வளர்ப்பு இல்லையே என்ற பரிதவிப்புக்கும் புத்திக்கும் இடையிலான போராட்டத்தை நிகழ்த்தாத பெரியவர்களும் இல்லை. தன் வீட்டிற்கு வந்தே தீரவேண்டுமென அடம் பிடிக்கும் சாரங்கன் மீது நமக்கும் எரிச்சல் வருகிறது. காரணமில்லாமல்  யார் வீட்டுக்கும் போவதை அல்லது யாராவது நம் வீட்டுக்கு வருவதை நாசூக்கு மிகுந்த பெரியவர்கள் விரும்புவதில்லை. என்ன விஷயம் என்று சாரங்கனின் தந்தை கேட்காமல் விடுவதே தனக்கு ராஜ உபசாரம் செய்வதைப் போல இருந்தது என்று இவ்விடத்தில் சங்கடத்தைக் கூட பகடியாகப் பதிவு செய்கிறார்.

‘இவனை கோபிக்கக் கூடாது. இவன் இப்போது கொடுக்கும் தொந்தரவே அவன் அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒருநாள் என்னை கஷ்டப்படுத்துவதனாலாவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக்கூடாது, தடுக்க முயலுவது அமானுஷிகம்’ என்று முடிவெடுத்து அவன் பின்னால் போகிறார். பெரியவர்களாகிய நாம், குழந்தைகளின் அன்பென்னும் ஆயுதத்தின் முன் நிராயுதபாணியாகி,  சரணடைந்து விடுவது தான் மென்மனதிற்கு தோன்றும் ஒரே வழியல்லவா?

தூங்கும் குழந்தையின் கையிலிருக்கும் கிலுகிலுப்பை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்துவதைப் போல தன் கையிலிருக்கும் சரித்திர புத்தகத்தை சாரங்கன் விலக்கி வைத்ததாக விவரிக்கிறார். அன்பளிப்பாக சாரங்கன் எதை நினைத்தானோ,  பெரியவர்களுக்கே உரித்தான கூச்சத்தை விலக்கி வைத்து, சின்னஞ்சிறு மனதின் விருப்பத்துக்காக அவர் சாரங்கன் வீட்டுக்குப் போவதைத் தான் நான் ஒரு மனிதன் சக உயிருக்குக் கொடுக்க சாத்தியமுள்ள சிறந்த அன்பளிப்பாக நினைத்துக் கொண்டேன்.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

பேதைமை என்றால் தனக்கு தேவையானதை விட்டுவிட்டு இல்லாததை பிடித்துக்கொண்டு நிற்பது என்கிறது குறள். ‘பேதைமை‘ சிறுகதையில் தெருவில் இரு சிறுவர்களை ஒருவன் அடித்துக் கொண்டிருக்கிறான். கண் பார்வையற்ற பிச்சைக்காரனின் குவளை சோற்றில் விளையாட்டுத்தனமிக்க அந்தச் சிறுவர்கள் மண்ணள்ளி போட்டுவிடுகிறார்கள். அந்த ஆத்திரத்தில் நல்லுள்ளம் படைத்த ஒரு கடைக்காரன் சிறுசுகளைப் போட்டு வெளுக்கிறான். இளம் உயிர்களின் சித்தரவதையைத் தாங்கமுடியாமல் கடைக்காரனிடமிருந்து காப்பாற்றி, அவர்கள் குடிசை எதுவெனக் கேட்டு அழைத்துப் போகிறார். அங்கே நோய்வாய்ப்பட்டிருந்த அவர்கள் தாயைக் கண்டதும் அவர் மனம் இரங்குகிறது. முத்தாய்ப்பாக அவர்களது தந்தை தள்ளாடியப்படியே வருகிறார். அது, வேறு யாருமல்ல, இவர்கள் யார் சோற்றில் கை வைத்தார்களோ, அதே குருட்டு பிச்சைக்காரர் தான். இப்படி ஒரு அறியாமையா என அவருக்கு அந்தக் குழந்தைகளைக் கொல்ல வேண்டும் அல்லது எங்காவது போய் ஓவென அழவேண்டும் போலிருக்கிறது. எதுவும் முடியாமல், ‘குழந்தைகளே..’ என்று நொந்து கொள்வதாக கதை முடிகிறது.

இந்தக் கதையிலும் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறார். முதலில் குழந்தைகளை அடிவெளுக்கும் கடைக்காரன் மோசமானவனாகத் தெரிகிறான். ஆனால் நெருங்கிப் பார்த்தால், குருடனின் சோற்றில் மண் விழுந்ததை தாள முடியாதவனாக இருக்கிறான். அந்தப் பொல்லாத குழந்தைகள் தங்கள் சோற்றில் தான் மண்ணைப் போட்டிருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் கதை முடிவதற்குள், நம் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டு வெவ்வேறு முன்முடிவுகளோடு அணுகும் நம் பேதைமையை தான் என்னவென்பது?!

இவரது மற்றுமொரு சிறந்த படைப்பென “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதையைச் சொல்லலாம். வசதி படைத்த சிறுவனான ராமசாமிக்கும் அவனது நண்பனான செல்லையாவுக்கும் இடையிலான சிறிய போட்டியிலிருந்து கதை துவங்குகிறது. தன் அண்ணன் செல்லைய்யா தோற்றுப் போனதைக் கண்டு தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் ஏக வருத்தமாயிருக்கிறது. பின்னர் அவர்களும் போட்டியில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். பள்ளி முடிந்தும் கூட வரும் வழியெல்லாம் நீயா நானா, யார் உசத்தியென போட்டி தொடர்கிறது. “என்னிடம் சில்க் சட்டை இருக்கிறது, உன்னிடம் இருக்கிறதா?” என்பதில் தொடங்கி என்னிடம் இத்தனை மாடுகள் இருக்கிறன என ராமசாமி சொல்ல, பதிலுக்கு எங்களிடம் இத்தனை கோழிகள் இருக்கின்றன என்கிறாள் மங்கம்மா. ராமசாமி வீட்டு வேலைக்காரன் வந்து விரட்டும் வரையில் செல்லைய்யா வீட்டு வறுமை நமக்குத் தெரிவதில்லை.

இதுவரையில் குழந்தைகள் உலகமாக இருந்த கதையில் மெல்ல விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை, படமென விரிகிறது. மறுநாள், தீபாவளி. செல்லையாவுக்கும், அவன் உடன் பிறந்தவர்களுக்கும் தந்தை புத்தாடை வாங்கி வைத்திருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். தந்தைக்கும் கூட புதுத் துண்டு காத்திருக்கிறது. தாயம்மாள் தனக்கெதுவுமில்லாதது குறித்து குழந்தைகள் வருத்தப்படாமல் பார்த்துக்கொள்கிறாள். மழை துவங்கக் காத்திருக்கும் அந்த இரவில், அவர்கள் வீட்டுக் கொல்லையில் முருங்கை மரத்தின் கீழே அழுக்கு கோவணம் மட்டும் அணிந்த சிறுவன், குளிரில் நடுங்கியவாறே ராமசாமி வீட்டு எச்சில் இலையை கொண்டு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். குழந்தைகள் அச்சிறுவனை விரட்ட அவன் செய்வதறியாது அழத் துவங்குகிறான். தாயம்மாள், அச்சிறுவனை வீட்டுக்கு அழைத்துப் போய் விசாரிக்க, அவன் யாருமற்ற அனாதை, பெயர் ‘ராஜா’ எனத் தெரிகிறது. சிறுமி மங்கம்மாள், அந்த இரவில் வெடி வேண்டுமென அடம் பிடிக்கிறாள். ராஜாவைக் காட்டி தன் அம்மா சமாதானம் செய்வதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. தாயம்மா தன்னிடம் இருந்த ஒரே நல்ல சேலையால் குழந்தைகளுக்கு போர்த்தி, தூங்க வைக்கிறாள்.

விடிகிறது. தன் குழந்தைகளோடு சேர்த்து ராஜாவுக்கும் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி, தோசை சாப்பிடச் செய்கிறாள். இதுவரையில் இக்கதை மனிதநேயத்தின் உச்சத்தை தொட்டுவிட்டதாக நினைத்திருக்கையில், அடுத்த நிகழ்வு மயிர்க்கூச்செரியச் செய்கிறது. நாலுமுழம் துண்டில்லாமல் கணவன் வெளியே செல்வதற்கு கூச்சப்படுவதை, அதற்காக வருடம் முழுவதும் உழைக்க வேண்டியிருந்ததை நினைத்துக் கொண்டாலும், குழந்தைகளுக்குள் பிரிவினை கூடாதென தாயம்மா அந்தச் சிட்டைத் துண்டை ராஜாவுக்கு அணிவிக்கிறாள்.

ராமசாமியின் அக்கா கணவர், ஜமீன் வாரிசு. ஆகையால், தன் வீட்டிற்கு ராஜா வந்திருப்பதாக நண்பர்களிடம் தெரிவிக்கிறான். அவன் பெருமையடிப்பதற்காக அதை சொல்லவில்லையெனினும் மங்கம்மாளுக்கு நேற்றைய நீயா-நானா மறப்பதாக இல்லை. எங்க வீட்டுக்கும் தான் “ராஜா வந்திருக்கிறான்” என்று பெருமையாகச் சொல்வதுடன் கதை முடிகிறது.

அழகிரிசாமியின் சிறப்பே கதையை சரியான, மிகச்சரியான இடத்தில் நிறுத்துவது தான். ஏனெனில் அதற்கு மேற்பட்ட கேள்விகள், பதிலுக்காக நம்மை, சுயத்தையும் சமூகத்தையும் உற்றுகவனிக்கச் செய்கிறது. உடல் முழுக்க சிரங்கு கொண்ட, ஒரு கோவணம் மட்டும் கட்டிய, எச்சில் இலையை சாப்பிட்டவனா ராஜா என்றால், இல்லை தான். ஆனால் பிரதிபலன் பார்க்காமல், தனக்கே ஒன்றுமில்லாத இடத்திலும், இருப்பதை விட்டுக்கொடுத்து உபசரிக்க ஒருவர் கிடைக்கப்பெற்ற அந்தச் சிறுவன் ‘ராஜா’ தான் இல்லையா?!

அழகிரிசாமி படைக்கும் குழந்தைகள் உலகம் பணக்காரத் தன்மையுடையது அல்ல. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத வறுமையிலும் வறுமை மிக்கவர்களின் கதை. ‘இருவர் கண்ட ஒரே கனவு‘ சிறுகதையில் இரு சிறுவர்கள் வருகிறார்கள். இன்றோ, நாளையோ என அவர்கள் தாய் ஒரு பணக்காரர் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் காய்ச்சலோடு சாகக் கிடக்கிறாள். ஒரே ஒரு கந்தல் துணி மட்டுமே அவள் மேல் கிடக்கிறது. சாப்பிட்டு மூன்று நாளாகிய நிலையில் மற்றுமொரு வேலைக்காரனாகிய வேலப்பனின் வீட்டு வாசலில் போய் முக்காலில் முகம் புதைத்து அமர்ந்திருக்கிறார்கள், அச்சிறுவர்கள். வேலப்பன் மனைவி அவர்களுக்கு சாப்பிட கஞ்சி தருகிறாள்.

அந்தப் பசியிலும் அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என அண்ணன் நினைக்க, தம்பி பட்டினி தாங்க முடியாமல் கஞ்சியை அம்மாவுக்கும் எடுத்துப்போகலாம் என்கிறான். இந்த விவாதம் சண்டையாக மாறி, யாருக்கும் இல்லாமல் கஞ்சிச்சட்டி கீழே விழுந்து உடைகிறது. அம்மாவிடம் பஞ்சாயத்தை கொண்டு போக ஓடி வருகிறார்கள். அங்கே அவள் உயிரோடு இல்லை.

இறுதிச் சடங்கில் தங்கள் தாய் முதன்முதலாக புத்தம்புதிய துணி உடுத்தப்பட்டு இருப்பதை வியப்போடு பார்க்கிறார்கள். வேலப்பன் அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுகிறான். சாப்பிடச் செய்து, நல்ல பாயிலும் படுக்க வைக்கப்படுகிறார்கள். நள்ளிரவில் இரு சிறுவர்களும் ஒரே சமயத்தில் அலறிக்கொண்டு எழுகிறார்கள். எதிலும் முரண்பட்ட கருத்துகளை கொண்ட அவர்களுக்கு ஒரே கனவு வருவது ஆச்சர்யம் தான். ஆம், இருவரும் கனவில் தங்கள்  தாயைக் காண்கிறார்கள், அதுவும் பிணத்துக்கு போர்த்தப்பட்ட புதுத்துணியோடு.

வரலாறு எப்போதும் மன்னர்களையும், அரசாண்டவர்களையும் பதிவுசெய்கிறது. அதில், பெயரற்ற சாமானிய மனிதனின் வாழ்க்கை, மேகக் கூட்டம் வானில் பதிக்கின்ற தடம் போல சுவடே இல்லாமல் தான் இருக்கிறது. எனினும் நல்ல இலக்கியத்திற்கு ஆளுமைகள் குறித்த தனிப்பட்ட பிடித்தம் எதுவுமில்லை. முன்னொரு காலத்தில், இந்தக் கிராமத்தில் பஞ்சப்பரதேசியான ஒருவன் தன் உணவை நாய்க்கு பகிர்ந்தளித்தான் என்பது வரலாறாக இல்லாமல் போகலாம். ஆனால், அது சாஸ்வதமான மனித உணர்வல்லவா? கு.அழகிரிசாமி கதைகளில் நீக்கமற நிறைந்திருப்பது இப்படிப்பட்ட மனிதம் தான்.

அதிலும் குழந்தைகளை அவர் ஆசிரியனின் கண்டிப்பில் கவனித்து, ஒரு தாயின் பேரன்போடு பதிவு செய்திருக்கிறார்.  எந்த இடத்திலும் இது கதை என்றே தோன்றாமல், அதிலுள்ள மனிதர்களுக்காக வருந்துகிறோம், சிரிக்கிறோம், நெகிழ்கிறோம். அழகிரிசாமி, தன்னை ஒரு கதாசிரியனாகவே கருதியதில்லை எனப் பல இடங்களில் சொல்லி வந்திருக்கிறார். தான் பார்த்த உலகத்தின் அழகை, அழுக்கை, பேரமைதியை, பெருங்கோபத்தை, கருணாசாகரத்தை, வன்முறையை அப்படியே நுட்பமான தகவல்களைக் கொண்டு, கூட குறைய இல்லாமல், காலத்தின் கண்ணாடியாகப் பதிவு செய்யப்பட்ட அழகிரிசாமியின் படைப்புகள், தமிழ் இலக்கியத்துக்கு கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு தான்.