துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள் தீட்டும் கோட்டுச் சித்திரம்

0 comment

இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் படைப்புகளுக்கு நிகராக தமிழகத்துக்கு வெளியேயிருந்தும் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அப்படைப்புகளின் மீது வாசக கவனமும் குவிய ஆரம்பித்துள்ளது. இதற்கு அச்சு நூல்களின் நவீனமயமாக்கம், இணையப் பரவலாக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் அமேசான் கிண்டில் வழி மின்நூல்களின் வருகை எனப் பல்வேறு காரணங்களைக் கூறவியலும்.

இவ்வாறு தமிழகத்துக்கு வெளியேயிருந்து வரும் படைப்புகளில் மற்ற நாடுகளிலிருந்து வெளிவரும் படைப்புகளை ஒப்பிட ஈழப் படைப்புகள் ஒரு தனித்த கவனத்தை இங்கே பெற்றுள்ளன. பிரமிள், மு.தளையசிங்கம், தெளிவத்தை ஜோசப், எஸ்.பொ என்று வலுவான முன்னோடி வரிசையும் அவர்களைத் தொடர்ந்து அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, குணா கவியழகன் என்று தனித்துவம் மிளிரும் படைப்பாளிகளும் இக்கவனக் குவிப்புக்கு அடிகோலியவர்கள் எனலாம். மேலும், போர்ச்சூழலும் அது கொண்டுவந்து சேர்த்திருக்கும் தீயூழும் தமிழகத்துக்குப் புதியவை. ஈழத்தின் அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் இன்றும்கூட தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.

இப்படியான இன்றைய சூழலில் இந்தத் தொகுப்பின் அவசியம் என்ன? யூ.கே.ஜி படிக்கும் என் மகனிடம் ஓவியப் பயிற்சிப் புத்தகம் ஒன்று உண்டு. அதில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து அவற்றை இணைக்கும் எண்களும் வழிமுறையும் கூறப்பட்டிருக்கும். அவ்வழிமுறையின் துணைகொண்டு அப்புள்ளிகளை ஒன்றிணைக்கும் போது அதுவரைப் புலனாகாத சித்திரம் ஒன்று துலங்கி வெளிவரும். அதுவரை புள்ளிகளின் குவியலாக இருந்தவை சட்டென்று மானாகவோ, மயிலாகவோ உருப்பெற்று உலவுவதைக் காண முடியும். ‘துயிலாத ஊழ்’ என்னும் இத்தொகுப்பும் கிட்டத்தட்ட அதைத்தான் செய்கிறது. இதில் பலதரப்பட்ட அரசியல் மற்றும் இலக்கிய நிலைப்பாடுகளைக் கொண்ட பத்து சமகால ஈழப் படைப்பாளிகளின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, ஒரு படைப்பாளியின் சிறுகதை தொகுப்பொன்றை வாசிக்கும்போது அவரின் படைப்புலகத்தின் வழியே அவர் நம்பும் அரசியல், சமூக விழுமியங்கள், கலை இலக்கிய நம்பிக்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளவியலும். ஆனால், இவ்வாறாக பலதரப்பட்ட கலை – இலக்கிய – அரசியல் நம்பிக்கைகள் கொண்ட படைப்புகளைத் தொகுக்கும்போது அதன் வழியே ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தமான கலை இலக்கியப் போக்கு மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் என்று ஒரு கோட்டுச் சித்திரத்தை வாசகன் வரைந்துகொள்ள ஏதுவாகிறது. அதை முழுமையானதொரு சித்திரம் என்று கூறவியலாதபோதும், சமகால ஈழ இலக்கியப் போக்கினை அறிந்துகொள்ள நிச்சயம் உதவும் ஒரு பயிற்சி ஓவியம் எனத் தாராளமாகக் கூறலாம். அதை இத்தொகுப்பு நூல் சிறப்பாகவே செய்திருக்கிறது. அவ்வகையில் இம்முயற்சி முக்கியமானதும் பாராட்டப்பட வேண்டியதுமாகும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளில் புழங்கும் காலத்தின் வரிசையில் அடுக்கினால், மாபெரும் இறுதிப் போர்க்காலம், அப்போருக்கு முந்தைய பதற்றச்சூழல் கவிந்த காலம், போருக்குப் பிந்தைய இப்பதின்ம வருடங்கள் என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இதிலிருக்கும் கதைகள் இந்தியா, கனடா, ஐரோப்பா என்று உலகெல்லாம் பயணப்பட்டாலும் அவை வேர்பிடித்து நிலைகொள்ளூம் இடமாக ஈழமே இருக்கிறது. இயக்கப் போராளிகள், போராளிகளுக்குப் பக்கமிருந்தவர்கள், சாதாரணர்கள் என்று இதன் கதை மாந்தர்களும் இயக்க ஆதரவு எதிர்ப்பு புறக்கணிப்பு என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி காலம், இடம், மனிதர்கள் என்று வேறுபட்ட கதைகளின் தொகுப்பென்றாலும் இவ்வத்தனை கதைகளையும் இணைக்கும் கண்ணியாக இத்தொகுப்பின் தலைப்பு இருக்கிறது – துயிலாத ஊழ். ஆம், அத்தனை வேறுபாடுகளையும் தாண்டி எல்லோரிடமும் சொந்த நிலம் பறிபோய் நிற்கும் துயரமும் அவமானமும் வலியும் மாறாமல் படிந்திருக்கிறது. இந்தப் பொதுத்தன்மையின் பொருட்டுத்தான், இக்கதைகளில் ஒன்றன் தலைப்பை தொகுப்பு நூலுக்கு வைக்கும் பொது வழக்குக்கு மாறாக அகரன் எந்தக் கதையின் தலைப்புமாக இல்லாத இத்தலைப்பைத் தெரிவு செய்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

இத்தொகுப்பில் சயந்தனின் பூரணம், யதார்த்தனின் குசலாம்பாள் என்னும் செயின் புலாக் தமிழ் நதியின் அப்பாவின் புகைப்படம், அனோஜனின் பேரிட்சை ஆகியன என் மனது நெருக்கமாக உணர்ந்த கதைகள். இத்தொகுப்பிலுள்ள கதைகளை சிறுகதைகளுக்குண்டான கறாரான இலக்கிய அழகியல் மதிப்பீடுகளைக் கொண்டு விமர்சித்தால் சில கதைகள் அவற்றை பூர்த்தி செய்யாமல் போகக்கூடும். ஆனால், அவற்றை மீறி வாசிப்பவனோடு ஆத்மார்த்தமாக உரையாடும் உண்மையும் நேர்மையும் கொண்ட கதைகளாக இருக்கின்றன. சில உண்மைகளைப் பேசுவதற்கு கலைத்தன்மை கூடிவருவதற்காக காத்திருக்க முடியாதுதான். இவையே இத்தொகுப்பிலுள்ள எந்தக் கதையையும் புறக்கணித்துச் செல்லவியலாத நிலையைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள கலையரசி என்னும் கதையில் ஓரிடத்தில் போர் வாழ்வின் நினைவுகளைப் பேசிப்போகும் காட்சியில், “பேசித் தீராத வாழ்கை அது. பிறகு பேசும்” என்று ஒரு கதாப்பாத்திரம் சொல்லும். அக்கதாப்பாத்திரத்தின் பெயரும் கார்த்திக். இங்கு நானும் அதையே சொல்ல விரும்புறேன் – எழுதியோ வாசித்தோ தீராத கதைகள் இவை.