வைக்கம் போராட்டம் நடந்து தொண்ணூற்று ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. இருந்தாலும், இன்றுவரை அப்போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் நூல்கள் எழுதப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை வைக்கம் போராட்டத்தில் ஈவெராவின் பங்கு என்ன என்பதை குறித்த விவாதங்கள் கடந்த பத்து வருடங்களாக உயிர்ப்புடன் நடந்து வருகின்றன. இதுதவிர, காந்தி வைக்கம் போராட்டத்தை வடிவமைத்த விதம் என்பது இன்றைய சமூகப் போராளிகள் பலரும் நினைவில் கொள்ள வேண்டிய பாடமாக உள்ளது. உதாரணத்திற்கு, அவர் இப்போராட்டத்திற்கு பிற மதத்தவர் நிதி தர முயன்ற போது அதனை முழுமையாக நிராகரித்தார். பிற மதத்தவரது ஆதரவையும் உள்நுழைவையும் மறுத்தார். வைக்கம் சத்யாகிரகத்திற்கான ஆதரவு அப்பகுதியில் இருந்தே, ஹிந்துக்களிடம் இருந்தே வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
போராட்டம் எக்காரணத்தைக் கொண்டும் வன்முறை ஆகி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். இதன் காரணமாக நாராயணகுருவிடம் கூட முரண்பட்டார். இந்தச் செயல்முறைகளைக் குறித்து எல்லாம் பல ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. ஆனால் நான் இக்கட்டுரை வழியாக, ஆவணப்படுத்தவும் சற்றே விளக்கவும் முயற்சிப்பவை இவை எவையும் அல்ல. பெரும்பாலான ஆய்வாளர்களால் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத விஷயங்களான போராட்டத்தின் எதிர்த்தரப்பின் பின்புலம் மற்றும் கேரளத்தில் அக்காலத்தில் இருந்த சமூக நிலைக்கான வேர்கள் ஆகியவற்றைக் குறித்த ஓர் எளிய, ஆனால் பன்முகச் சித்திரத்தை உருவாக்கும் முயற்சியே இக்கட்டுரை.
வைக்கம் மஹாதேவர் கோவில் கேரளாவில் இன்றைய கோட்டயம் மாவட்டத்தில் இருக்கிறது. கேரளத்தின் முக்கிய மூன்று சிவாலயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. நூற்றாண்டுகளாகவே வைக்கம் கோவிலிற்கு ஒரு வினோத ராசி உண்டு. தாந்ரீகர்களிடம் கேட்டால் இதற்கான காரணத்தை ஆலய வாஸ்துவைக் கொண்டு விளக்க முயலலாம். வைக்கம் கோவிலினுள் நுழைவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் நடப்பது என்பது காலம் காலமாக தொடரும் நிகழ்வு. சுமார் ஐநூறு வருடங்கள் முன்பும் இது நடந்திருக்கிறது. அக்காலக்கட்டத்தில் மோதிக்கொண்ட இரு தரப்பும் நம்பூதிரி அந்தணர்கள். இக்கோவில் 108 அந்தண குடும்பங்களுக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் வழமை போல இவர்கள் இரண்டு கோஷ்டியாக பிரிந்து கோவிலைக் கைப்பற்ற போராடியுள்ளனர்.
ஒருமுறை தங்களது எதிர்த்தரப்பினர் செய்யும் பூஜையைத் தடுக்க, மற்றொரு தரப்பின் தலைவரான ஞல்லல் நம்பூதிரி, கோவிலின் மேற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து மூலவருக்கு படைப்பதற்காக வைத்திருந்த நைவேத்யத்தில் தனது தாம்பூலத்தை உமிழ்ந்திருக்கிறார். தெய்வத்தின் கோபத்தால் கோவிலை விட்டு வெளியே வந்தததும் அந்த நம்பூதிரி இறந்தார் என்றும் தெய்வ வாக்கின்படி மேற்குறிப்பிட்ட நம்பூதிரி உள்ளே நுழைந்த கோவிலின் மேற்கு வாசல் நிரந்தரமாக மூடப்பட்டது என்றும் கோவில் ஐதீகம் கூறுகின்றது. இது சரியாக எந்த வருடம் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் இன்றிலிருந்து சற்றேக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கத்தில் நடந்த மற்றொரு படுகொலையை குறித்து வரலாற்றாசிரியர்கள் விளக்குகின்றனர்.
தளவாய்க்குளம் படுகொலையைக் குறித்து கேரளாவிற்கு வெளியே பெரிய அளவில் தெரியாது. சம்பவம் 1803-04 காலக்கட்டத்தில் நடந்தது. வேலுத்தம்பி தளவாயின் ஆட்சி. அக்காலக்கட்டத்தில் சில அவர்ண (கோவிலுக்குள் நுழையும் உரிமை இல்லை என்று கருதப்பட்ட வகுப்பினர்) இளைஞர்கள் வைக்கம் கோவிலுக்குள் நுழையத் தீர்மானித்தனர். அதனை அறிவிக்கவும் செய்தனர். விஷயம் வேலுத்தம்பி தளவாயின் கவனத்திற்குச் சென்றது. அவர் திருவனந்தபுரத்தில் இருந்து தனது இராணுவ ஒற்றர் படையைச் சார்ந்த ஒரே ஒரு அதிகாரியை அனுப்பி வைத்தார். அந்த அதிகாரி வைக்கத்தில் வந்து ஆயுதப் பயிற்சி உடைய பத்து பன்னிரண்டு நாயர்களை ஒருங்கிணைத்தார்.
சுமார் இருநூறு இளைஞர்கள் கோவில் நுழைவுப் போராட்டத்திற்காக கோவிலை நோக்கி வந்த போது, அதிகாரியின் தலைமையிலான அந்தச் சிறு படை அவர்களை எதிர்கொண்டது. ஆயுதம் ஏந்திய நபர்களைக் கண்ட இளைஞர்களில் பலர் சிதறி ஓடினர். எதிர்த்து நின்றவர்கள் வெட்டித் தள்ளப்பட்டனர். அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களது உடல் தளவாய்க் குளத்தில் (மார்த்தாண்ட வர்மா காலத்தில் தளவாயாக இருந்த ராமய்யன் தளவாயால் வெட்டப்பட்ட குளம்) வீசி எறியப்பட்டு குளமும் சமன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றளவும் இந்தக் குளம் இருந்த இடம் எது என்ற குழப்பம் நிலவுகிறது. சில ஆய்வாளர்கள் இன்றைய வைக்கம் பேருந்து நிலையம் இருக்கும் இடம் தான் அக்குளம் இருந்த இடம் என்று கருதுகிறார்கள். அரசுத் தரப்பும் இதை ஆதரிக்கிறது. அப்பகுதியில், இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது.
வைக்கம் போராட்டம் மேற்குறிப்பிட்ட படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது. ஆனால், வைக்கம் போராட்டத்தின் ஆணி வேர் தளவாய்க் குளம் சம்பவத்தில் இல்லை. அது திருவிதாங்கூர் அரசு கொண்டு வந்த ஒரு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. 1865ஆம் வருடம் திருவிதாங்கூர் அரசு அனைத்து வீதிகளிலும் அனைவருக்கும் நடமாட உரிமை உண்டு என்று சட்டம் இயற்றி அறிவித்தது. ஆனால் இச்சட்டம் நடைமுறைபடுத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. 1884ஆம் வருடம் நீதிமன்றம் வாயிலாக இச்சட்டம் தொடர்பான பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வந்தன. நீதிமன்றம் திருவிதாங்கூர் சாலைகளை இரண்டு வகையாகப் பிரித்தது. அவை முறையே பொதுச் சாலைகள் மற்றும் கிராம சாலைகள் ஆகும்.
இவற்றில் பொதுச் சாலைகளில் அனைவரும் நடமாடலாம் என்றும் கிராம சாலைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இத்தீர்ப்பை நாம் தமிழகத்தில் நடந்த கழுகுமலைப் பிரச்சனையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கழுகுமலையிலும் தேரடி வீதியும் அந்தக் கிராமமும் கோவில் சொத்து. அதாவது தனியார் சொத்து என்ற அடிப்படையிலேயே ஒரு சிலரின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதே தர்க்கம் தான் வைக்கம் கோவில் வீதிகளில் அவர்ணர்கள் நுழையக் கூடாது என்ற வாதம் எதிர்த்தரப்பால் முன் வைக்கப்படவும் காரணமாக இருந்தது.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பயன்படுத்தலாம், ஆனால் அவர்ணர்களுக்கு மட்டும் விலக்கா என்றா கேள்வியுடன் இதற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. பலர் எண்ணுவது போல, வைக்கம் சத்யாக்ரகம் ஆலய நுழைவுப் போராட்டம் அல்ல. அது ஆலயத்தின் சுற்றி இருக்கும் வீதிகளை அவர்ணர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டம் தான். காந்தி அப்போராட்டம் பொதுவெளியைப் பயன்படுத்த வேண்டிய உரிமைக்கான போராட்டமாகத் தான் தொடங்க வேண்டும் என்பதிலும் ஆலய நுழைவு என்பது இதனுடன் இணைத்துக் கொள்ளப்படக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார்.
பின் நடந்த வைக்கம் சத்யாக்ரகம், அதில் பெருந்திரளாகப் பங்கேற்ற மன்னத்து பத்பநாபன் (நாயர் சங்கத்தின் ஸ்தாபகர். இவரது தந்தை ஒரு நம்பூதிரி) முதலிய “சவர்ண” ஹிந்துக்கள், கேரள சட்டமன்றத்தில் இதற்கு ஆதரவான சட்டம் இயற்றினர். நாராயணகுருவின் நெருங்கிய சீடரான டாக்டர். பல்புவின் சகோதரர், போராட்ட குழுவினரது எண்ணத்திற்கு எதிராக சட்டசபையில் வாக்களித்தார். பிறகு ஒரு வழியாக இரு தரப்பிற்கும் வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்தது போன்றவற்றைக் குறித்து விரிவாகவே பலரும் எழுதி உள்ளனர். இவற்றைக் குறித்து நான் அதிகம் கூற வேண்டியதில்லை. பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் கவனத்தில் கொள்ளாத சில பகுதிகளைக் குறித்து சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
முதலில் நாம் இண்டந்துருத்தி தேவன் நீலகண்டன் நம்பூதிரியில் இருந்து தொடங்குவோம். இண்டந்துருத்தி என்பது அவரது மனையின் / குடும்பத்தின் பெயர். தேவன் நீலகண்டன் நம்பூதிரி தான் சத்யாகிரகிகளுக்கு எதிராக வலுவாக செயல்பட்டார். இவரது குடும்பம் வைக்கம் மஹாதேவர் கோவிலுடன் சடங்கு ரீதியாக தொடர்புடைய குடும்பம். இவர்தான் பல மட்டங்களிலும் சத்யாகிரகத்திற்கு எதிரானவர்களை ஒருங்கிணைத்தவர். இவரைக் காணத்தான் காந்தி சென்றார். காந்திக்கும் இவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் காந்தி முன் வைத்த அத்தனை சமாதான ஆலோசனைகளையும் நம்பூதிரி பூரணமாக நிராகரித்தார். இவரைக் குறித்து பெரும்பான்மையான நூல்கள் அதிகம் தகவல்கள் தருவதில்லை.
ஆனால் இண்டந்துருத்தி நம்பூதிரிகளின் பின்புலம் குறித்து ஆராயும் போது சுவையான தகவல்கள் சில கிடைக்கின்றன. இண்டந்துருத்தி மனையைச் சேர்ந்தவர்கள், தங்களை நம்பூதிரிகள் என்று அழைத்துக் கொண்டாலும் உண்மையில் இவர்கள் நம்பியாத்ரிகள் என்னும் கேரள அந்தணர்கள். இந்த நம்பியாத்ரிகளை ஓத்தில்லா அந்தணர்கள், அதாவது அடிப்படை வேதக் கல்வியைத் தாண்டி வைதீகக் கல்வி இல்லாதவர்கள் என்று அழைப்பதுண்டு. நம்பியாத்ரிகள் ஆயுதம் ஏந்திப் போர் புரியும் கேரள அந்தண மரபைச் சார்ந்தவர்கள். இதுவும் தவிர, அவர்களில் பலரும் அரசாங்க நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தனர்.
மார்த்தாண்ட வர்மாவின் காலக்கட்டத்தில் அவருடைய தளவாயான ராமய்யன் மூலமாகத்தான் இந்த நம்பியாத்ரிகளுக்கு பெரும் இடர் வருகிறது. ராமய்யன் தளவாய் நாங்குநேரி பகுதியைச் சார்ந்த சாங்கேதி வகுப்பு அந்தணர். அவரைக் கேரள அந்தணர்கள் பொருட்டாகவே மதித்ததில்லை. அவருடன் இருந்து உணவு உண்ணக் கூட அவர்கள் மறுத்தனர். இதனாலேயே ராமய்யன் தளவாய்க்கும் கேரள அந்தணர்களுக்கும் பல இடங்களில் உரசல் ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தும் நம்பியாத்ரி பிரிவினருக்கும் அவருக்கும் இடையேயும் உரசல்கள் இருந்தன. போதாக்குறைக்கு திருவிதாங்கூருக்கும் காயங்குளத்திற்கும் இடையிலான போரில் நம்பியாத்ரிகள் காயங்குளம் அரசரை ஆதரித்தனர். ஆயுதம் ஏந்தி திருவிதாங்கூர் அரசருக்கும் அப்பாற்பட்ட அந்தணக் குழுவாக இருக்கும் நம்பியாத்ரிகளை ஒடுக்க ராமய்யன் தளவாய் ஒரு சூழ்ச்சியைச் செய்தார்.
நம்பியாத்ரிகளை நம்பியாதிகளாக ஜாதி இறக்கம் செய்தார். நம்பியாதிகள் நாயர்களின் புரோகிதத்தைச் செய்யும் கேரள அந்தணர்கள். சூத்திரர்களின் புரோகிதர்கள் என்பதால் இவர்களை ஏனைய அந்தணர்கள் மதிப்பதில்லை. ராமய்யன் பல நம்பியாத்ரிகளை மிரட்டி நாயர்களுக்கு புரோகிதம் செய்ய வைத்தார். இதனால் அவர்கள் நம்பியாதிகளாக மாறி தங்கள் பெருமையை இழந்தவர்கள் ஆனார்கள்.
நம் இட்டந்துருத்தி மனையினரும் இந்தப் பிரச்சனையில் சிக்கிக்கொண்டவர்கள் தான். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரள அந்தணர்களின் கூட்டமைப்பான யோக க்ஷேம சபை அமைக்கப்பட்ட போது, அதில் இண்டந்துருத்தி மனையைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரை ஆரம்பத்தில் சேர்த்துக் கொள்ளவே இல்லை. 1923ஆம் வருடம் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் பேரில் தான் இண்டந்துருத்தி குடும்பத்தை கேரள அந்தணர்களாக பிற கேரள அந்தண குடும்பங்கள் ஏற்றுக்கொண்டன. தங்களது வர்ண அங்கீகாரத்திற்கு போராடி வந்த அதே காலக்கட்டத்தில் தான், “அவர்ண”ர்களுக்கு எதிராக செயல்படவும் செய்திருக்கிறார்கள். இது ஒரு வகையில் பார்த்தால் மிகப்பெரிய முரண்நகை. இன்னொரு வகையில் பார்த்தால் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விஷயம்.
இனி மற்றொரு கேள்விக்கு பதில் காண முனைவோம். கேரளாவில் மட்டும் ஜாதிக் கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக இருந்ததற்கு என்ன காரணம்? ஜாதி, ஜாதி வேற்றுமை, தீண்டாமை, குறிப்பிட்ட சில ஜாதியினரை கோவிலுக்குள் விட மறுப்பது போன்றவை இந்தியா முழுக்க இருந்த பிரச்சனை. ஆனால் கேரளாவில் இது இன்னமும் அதிகமாக இருந்தது. இதற்கான காரணத்தைத் தேடினால் அது தத்துவ மரபுகளுக்குள் நம்மைக் கொண்டு சேர்க்கும்.
இந்தியத் தத்துவ மரபுகளுள் மீமாம்ச மரபும் ஒன்று. வேதாந்திகளுக்கு ப்ரம்ம சூத்திரம் எப்படியோ அதே போல மீமாம்ச பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ஜைமினீய சூத்திரங்கள் உண்டு. வேள்விச் சடங்குகளையே முழுமையான வாழ்க்கை முறையாகக் கொண்ட தத்துவப் பிரிவு இது. இப்பிரிவில் அந்தணர் அல்லாதவர்களுக்கு அதிகம் இடம் இல்லை. ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரவி இருந்த இந்தப் பிரிவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அனுஷ்டிக்க ஆள் இல்லாமல் ஆனது. பூர்வ மீமாம்சப் பிரிவின் மிச்சமே இன்று இருக்கும் ஸ்மார்த்த அந்தணர்கள். ஆனால் அவர்களும் வேள்வி, தத்துவம் என்பதில் இருந்து விலகி ஸ்ம்ருதியில் விதிக்கப்பட்டது போன்ற வாழ்க்கை என்பதற்கு வந்து ஆயிரம் வருடங்களாவது இருக்கும்.
ஆனால் இன்றளவும் பூர்வ மீமாம்ச தத்துவம் உயிர்ப்புடன் இருப்பது கேரளாவில் தான். நம்பூதிரிகள் மீமாம்ச அடிப்படையைப் பின்பற்றும் அந்தணப் பிரிவினர். அதனால் தான் பாரதம் எங்கும் அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற பல வேள்விச் சடங்குகள் இன்றளவும் கேரளத்தில் உயிர்ப்புடன் இருக்கின்றன.
Frits Staal போன்றவர்கள், “Agni, the Vedic Ritual of the Fire Altar” போன்ற நூல்களை கேரளாவில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தான் எழுதியுள்ளனர். ஆதி சங்கரரின் ஜன்ம பூமியில் இருந்து குறிப்பிடத்தக்க அத்வைத நூல்கள் / பாஷ்யங்கள் வராததற்கு இந்தத் தத்துவப் பின்புலமும் ஒரு காரணம். ஒரு காலக்கட்டத்தில் கேரளக் கோவில்கள், அங்குள்ள மீமாம்ச அந்தணர்களின் வசம் செல்கின்றன. கேரளாவின் கோவில் சார்ந்த அந்தணர்களாக ஆதி சைவர்கள், பாஞ்சராத்ரிகர்கள் போன்றோர் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை. அங்கிருந்த ஆதி சைவர்களின் மிச்சம் தான் இப்போது இருக்கும் “மூத்தது” என்னும் அம்பலவாசி அந்தணர் பிரிவு என நம்ப வழியுள்ளது.
ஆலயங்களைக் கைப்பற்றிய மீமாம்ச பிரிவு அந்தணர்கள் அவற்றிற்கான பூஜை முறைகளை சைவ வைணவ ஆகமம் சார்ந்தே உருவாக்கிக் கொண்டனர். அவர்களது பூஜை கையேடான கிரியா பத்ததி, தந்த்ர சமுச்சயம் போன்றவற்றை மேலோட்டமாக பார்த்தாலே இது புரியும். இந்த ஆகம வழிமுறைகளை தங்களுக்கானதாக மாற்றிய போது நம்பூதிரிகள் ஒரு வினோதமான பிரச்சனையை எதிர்கொண்டனர். இந்த ஆகம நூல்களில் வரும் தீக்ஷை என்பதை கைக்கொண்டால் அவர்கள் சைவர்களாகவோ வைணவர்களாகவோ மாற வேண்டியது இருக்கும். இது அவர்களது கொள்கைக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அதனால் சமய தீக்ஷை என்னும் பகுதியையே முற்றிலும் தவிர்த்தனர். அர்ச்சகர்களுக்கே தீக்ஷை இல்லை என்னும் போது பிறருக்கு தீக்ஷை இருக்க வாய்ப்பே இல்லாமல் போனது.
தமிழகத்தின் சூழல் இவ்வாறு அல்ல. ஒரு நபர் சைவ தீக்ஷையோ வைணவ தீக்ஷையோ பெற்றால் அவர் பிறந்த ஜாதியின் அடிப்படையில் அவர் எதிர்கொள்ளும் சமயத் தடைகள் பெரும் அளவு நீங்கும். எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் வைணவ / சைவ தீக்ஷை பெறலாம் என்றும் அவ்வாறு தீக்ஷை பெற்று அதன்படி வாழ்ந்து சில கைங்கர்யங்களை செய்யலாம் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. தீக்ஷையால் வர்ணம் மாறும் என்பதல்ல ஆகமப் பார்வை. தீக்ஷை பெற்ற அந்தணர் அல்லாத ஒருவர் தீக்ஷை பெறாத அந்தணரை விட உயர்வானவர் என்பது போன்ற நிலைப்பாடுகளை ஆகமம் எடுத்தது. வர்ணம் முதலியவை இருப்பினும் ஒரு சில ஆலய நடவடிக்கைகளில் தீக்ஷை பெற்ற அனைவரும் பங்கு பெறலாம் என்ற உறுதியைக் கொடுத்தது.
சைவ பூஷணம் என்னும் சித்தாந்த சைவ நூலின் பகுதி ஒன்றை இணைத்துள்ளேன். எப்படிப் பார்த்தாலும் இந்நூல் பதினெட்டாவது நூற்றாண்டைச் சார்ந்ததாகவாவது இருக்க வேண்டும். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கருத்தை இன்றும் பெரும்பான்மையானவர்கள் ஏற்பதில்லை. அன்றைய நிலவரம் இதை விட மோசமாக இருந்திருக்கும். இருப்பினும் இத்தகைய ஒரு கருத்து ஒரு நூலில் இருக்கிறது என்பதே நான் சொன்ன ஆகம நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டுவது தான். ஆனால் இத்தகைய ஒரு வாய்ப்பு கூட சமய தீக்ஷைக்கு இடமே இல்லாத பிற்கால கேரள ஆலய வழிபாட்டு முறையில் இல்லாதது தான் அங்கு ஆலயத்தின் அருகில் கூட சில ஜாதியினர் வரக்கூடாது என்ற மூர்க்கத்தனத்திற்கு வழி வகுத்தது. (SAS Sarma-வின் கேரள தந்த்ரம் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் கேரள அர்ச்சகர்கள் இடையே சமய தீக்ஷைகள் இல்லாமல் போனதைக் குறித்து விரிவாகப் பேசுகின்றன).
இறுதியாக ஒரு கேள்வி. ஆக, கேரளம் என்பது விவேகானந்தர் கூறியது போல ஒரு பைத்தியக்கார விடுதிதானா? உலகில் எங்கும் இல்லாத வினோதமான ஜாதி சடங்குகளும் ஜாதி ஒடுக்குமுறைகளும் உள்ள இடம் மட்டும் தானா? கேரளாவின் ஜாதி அடுக்குமுறை என்பது வெளிநபர்களுக்கு தலைச்சுற்ற வைக்கும் ஒரு விஷயம். மலையாளிகளுக்கு மூச்சுத் திணறலை உருவாக்குவது. ஆனால், பெரிய வேடிக்கை என்னவென்றால் இத்தனை ஜாதி சிடுக்குகள் இருந்த கேரளாவில் தான், “பறையி பெற்ற பன்னிரு குலம்” என்னும் தொன்மமும் இருந்தது. ஐதீக மாலையிலும் அதற்கு முன்பே எழுதப்பட்ட பல நூல்களிலும் இந்தத் தொன்மம் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் தொன்மம் குறைந்தது 300 முதல் 400 வருடம் பழையது.
ஒரு அந்தணருக்கும் பறையர் குலத்தை சார்ந்த அவரது மனைவிக்கும் பன்னிரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இதில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ஜாதியினரால் எடுத்து வளர்க்கப்பட்டு அந்தந்த ஜாதியிலும் ஜாதிக்கு அப்பாற்பட்டும் பிரமுகர்கள் ஆகின்றனர். இதில் அக்னிஹோத்ரியான நம்பூதிரி முதல், பாகனார் என்னும் பறையர், ஒரு இஸ்லாமியர் மற்றும் ஒரு நாயர் வரை பலரும் உண்டு. இவர்கள் தங்கள் பூர்வீகம் தெரிந்து வருடத்திற்கு ஒருமுறை தங்கள் தந்தையின் ஸ்ராத்தத்திற்கு கூடுவதும் உண்டு. (ஆனந்தமூர்த்தியின் கதாபாத்திரங்களுக்கு வரும் இருத்தலியல் குழப்பமோ பைரப்பாவின் கதாபாத்திரங்களுக்கு வரும் சாஸ்திர குழப்பமோ ஏதும் இவர்களுக்கு இல்லை). பரஸ்பரம் நல்லுறவுடன் வாழ்கின்றனர். இவர்களைக் கதாபாத்திரமாக கொண்டு பல கதைகளும் உள்ளன. இவர்களின் பெயர்கள்:
|| mēḷattōḷagnihōtrī rajakanuḷiyanūr –
ttaccanuṃ pinně vaḷḷōn
vāyillākkunnilappan vaţutala maruvuṃ
nāyar kāraykkal mātā
cěmmē kēḷuppukūṛṛan pěriya tiruvara-
ŋŋattěļuṃ pāṇanāruṃ
nērē nāraṇattbhrāntanumuţanakavūr-
ccāttanuṃ pākkanāruṃ II
என்று சொல்லப்பட்டுள்ளன. நாராயணத்து பிராந்தன், பாக்கனார் ஆகியோர் ஞானிகளாக கூறுப்படுகின்றனர். இன்றளவும் மேற்குறிப்பிட்டவர்களின் வாரிசுகளுக்குள் சடங்கு ரீதியாகத் தொடர்புகள் உண்டு. ஒவ்வொரு ஜாதி இடையேயும் இத்தனை அடி இடைவெளி இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருந்த அதே கேரளத்தில் தான் வெவ்வேறு ஜாதிகளை / மதங்களைச் சார்ந்த, ஆனால் சகோதரத்துவத்துடன் இருந்த, இவர்கள் கதையும் சொல்லப்பட்டு வந்தது. வரலாறு, குறிப்பாக சமூக வரலாறு என்பது ஒற்றைப்படையானது அல்ல. அது பல்வேறு சிந்தனைகளின் இசைவையும் முரண்களையும் தன்னுள் கொண்டது .