இன்று வாக்கிங் போகவில்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லை. மத்தியானத்திலிருந்து என்னமோ மாதிரியிருக்கிறான். பெரிய பையனுக்கு வந்ததைப் போலவே மாந்தமாம். அள்ளுமாந்தம், வயிற்றைத் தூக்கித் தூக்கிப் போடுகிறது. மனசு திகிலாயிருக்கிறது. அள்ளுமாந்தம் பரம்பரை வியாதியில்லையே, ஒரு குழந்தைக்கு வந்த மாதிரியே ஏன் இந்தக் குழந்தைக்கும் வரவேண்டும்? பழைய பயம், என்ன சோதனை…

இதுக்கு இங்கிலீஷ் வைத்தியம் கிடையாதாமே…

நாட்டு வைத்தியர்தான் வந்தார்.

எதுவோ கொஞ்சம் சூரணம் உள்ளுக்கு கொடுத்தாகிவிட்டது. வசம்பு சுட்டு இழைத்து, தொப்புளைச் சுற்றித் தடவியாகி விட்டது. வயிறு அள்ளிப் போடுவது மட்டும் நிற்கவில்லை. குழந்தையின் முகத்தைப் பார்த்தபடி சம்சாரம் கண்ணீர் வடிக்கிறாள். அடுப்பு கூடப் பற்ற வைக்கவில்லை, மத்தியானம் சமைத்ததோடு சரி.

குழந்தையைப் பார்க்கச் சகிக்கவில்லை, சின்னதுகளுக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு கொடுமையா? சிசுவுக்கு கண்கள் சொருகுகின்றன. தொண்டைக்குழி திணறுகிறது. முகம் உப்பின மாதிரி வெளுக்கிறது. மூச்சுவரும் வேகத்தைப் பார்த்தால் பயமாய் இருக்கிறது. பக்கத்திலேயே இருக்கிறேன்.

பொழுது போகிறது. இருள் வருகிறது. தெரு விளக்கு வெளிச்சம் ஒருக்களித்த கதவு வழியாக ஏதோ துயரச் செய்தியைத் தாங்கி வந்தது மாதிரி சொல்வதா வேண்டாமா என்பது போல எட்டிப் பார்க்கிறது.

எனக்கு கலவரமாயிருக்கிறது.

‘எதுக்கும் அந்த ஹோமியோபதி வைத்தியரன்னா இட்டாந்து காட்டுவமா?’

‘வாணாம் நீங்க சும்மாயிருங்க, மின்ன ஒண்ணு அப்டித்தான் பறி குடுத்தது போதும்…’

கூடத்தில் துயரம் நிறைந்த அமைதி. தெருவிலே சத்தம். ட்யூசன் வாத்தியார் சத்தம். பையன்கள் சத்தம்.

பாட்டுச் சத்தமும் கேட்கிறது.

பிச்சைக்காரப் பாட்டி வருகிறாள் போலிருக்கிறது.

தினமும் வாக்கிங் போய்விட்டுத் திரும்பும்போது ஏறக்குறைய இருட்டிவிடும். தெருவிளக்குகள் போட்டு விடுவார்கள். மங்கி வெளிரும் ஒளி மெல்ல மெல்ல பிரகாசித்து தன் லாவண்யத்தைக் காட்டிச் சிரிக்க ஆரம்பிக்கும்.

வீட்டில் நுழைந்து கையைக் காலைக் கழுவிக்கொண்டு ரேடியோ அருகில் உட்காருவேன். குழந்தை வந்து காலைக் கட்டிக்கொள்வான். தந்தக்கா பித்தக்கா என்று நடக்கிற குழந்தை. இப்போதிருக்கிற குழந்தை.

கையைப் பிடித்து அழைத்து வருவேன். திண்ணையில் உட்காருவேன். எதிர்வீட்டு எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் ட்யூஷன் சொல்லிக்கொண்டிருப்பார். வாத்தியார் பையன் ஏழாங்கிளாஸ் தமிழ்ப் பாடப் புஸ்தகத்தை சத்தம் போட்டுப் படித்துக்கொண்டிருப்பான். பக்கத்தில் எலக்ட்ரிசிடி போர்ட் கிளார்க் வீட்டு சம்சாரம் குழந்தைக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருப்பாள். குழந்தை இடுப்பிலிருக்கும். அவள் குழந்தை.

‘தோ பார் கடைசீ உருண்ட: ஆ…தெற வாயெ… உவ்வா…’

‘பூன வருதும்மா தம்பி சோற கேக்க.’

‘பூனகிட்ட குடுத்துட்டுமா உவ்வாவ…’

‘த பூன…! மியாவ்… போ போ ஒனக்கு ஒண்ணுங் கெடையாது. உவ்வா தம்பிக்குத் தான்…’

எல்லாம் துண்டுதுண்டாய் காதில் விழும். ஏனோ ஒரு நெகிழ்ச்சி, மனதில் ஒரு ஏக்கம். இறந்து போன முதல் பையனை நினைத்துக் குழந்தையை மடியிலிருத்திக் குந்திக்கொண்டிருப்பேன்.

அப்போது இந்தக் கிழவி வருவாள். பிச்சைக்காரக் கிழவி.

நாலாவது வீட்டண்டை வரும்போதே பாட்டுச் சத்தம் கேட்கும். பாட்டு புரியாது. பொக்கை வாயில் புரண்டு தவழ்ந்து வெளிவரும் வார்த்தைகள் ஏக்கமாய் எதையோ சொல்லும். இழந்து போன எதையெல்லாமோ துயரத்துடன் வெளிப்படுத்தும். எதையெதையெல்லாமோ விரும்பி வந்தேனே, என்ன கிடைத்தது எனக்கு! இப்போது வேண்டியதெல்லாம் ஒரு வாய் சோறுதானே! அதற்கு மேலே வேறு என்ன, அதற்காகத்தானே இவ்வளவு பாடும் என்றெல்லாம் அர்த்தம் தொனிக்கிற மாதிரி எதுவோ தோன்றும். மனதைப் பிசைகிற மாதிரியிருக்கும்.

பழகிப்போன வரிகளை அனிச்சையாய் பாடுகிறாளா… அல்லது யோசித்து வரி கூட்டிப் பாடுகிறாளா… எதுவும் தெரியாது. வாய்தான் முணுமுணுக்கும். கையில் ஒரு தடி. லொட்டு லொட்டென்று வழியறி விக்கும். இடுப்பில் ஒரு அலுமினியக் கிண்ணம். வயிற்றுக்கான சேமிப்புப் பாத்திரம்.

தன்னை மறந்து தன் நினைவு இல்லாமலே கடமை மாதிரி, தன்னோடே சேர்ந்து வளர்ந்து விட்ட உறவு மாதிரி, பக்தி ஸ்லோகம் மாதிரி அந்தப் பாட்டு, தெய்வத்தின் முன்னே அர்ச்சகனின் ஸ்தோத்திரம் போல அவள் பாடிக்கொண்டே வருவாள்.

அந்தப் பாட்டை அவள் எந்த வயதிலிருந்து பாடுகிறாள், எப்போது கற்றுக்கொண்டாள், யார் அவள், எந்த ஊர், என்ன கதை, எதுவுமே எனக்குத் தெரியாது.  எனக்குத் தெரிந்ததெல்லாம் அவள் ஒரு பிச்சைக்காரி. வாடிக்கைப் பிச்சைக்காரி.

எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அவள் ஒரு கிழவி.

நான் சின்னப்பையனாக இருக்கிறேன். அம்மா இருக்கிறாள். அப்போதும் இவள் வந்தாள். இதே பாட்டு. வாய் பாடிக்கொண்டே தானிருக்கிறது. அம்மா சோறு கொண்டுவந்து போடுகிறாள். கிண்ணத்தில் சோறு விழுகிறது. சோறு விழும்போது கூட பாட்டு நிற்கவில்லை. பாடிக்கொண்டே தான் நிற்கிறாள். பாடிக்கொண்டே போய்விடுகிறாள். தடிச் சத்தம் வழி காட்டுகிறது.

நன்றி உணர்ச்சியோ, திருப்தியோ எதுவுமின்றி மரத்துப் போன மாதிரி அதே பாட்டுதான் எப்போதும். யாரிடமும் பேசிப் பார்த்ததில்லை.

இப்போது அம்மா இல்லை. மனைவியிருக்கிறாள். அம்மா குணம் இவளுக்குக் கிடையாது. கொஞ்சம் ஒரு மாதிரி. அடிக்கடி சிடுசிடுத்துக் கொள்கிறாள்.

அம்மாவைச் சொல்லி, கிழவியைச் சொல்லி தினப்படி வழக்கத்தைச் சொல்லி தினம் ஏதோ கொஞ்சம் கிழவிக்குப் போட்டு விடு என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அவள் போடுகிறாள்.

தட்டில் வைத்து எடுத்து வந்ததை ஏனம் படாமல் தூக்கிக் கிண்ணத்தில் போட்டு, சுத்தமாய் வழித்து கையை உதறிப் போடுவாள். அலுப்பும் சலிப்பும் வெளிப்படும்.

அப்போதும் அதே பாட்டு.

முன்னே சோறு போட்டது யார்? இப்போது போடுகிறவர் யார்? அதிலிருந்த அன்பும் பரிவும் என்ன… ஏதோ வேண்டா வெறுப்பாய் கடமைக்குச் செய்கிற மாதிரி இப்போது வந்து விழுகிறது என்ன? ஏதாவது அவளுக்கு வித்தியாசம் தெரியுமா… எது பற்றியுமே அவளுக்கு அக்கறை கிடையாதா… ஜனங்களைப் பற்றித்தான் அவள் என்ன நினைக்கிறாள்…

புரியாமல் திண்ணையிலிருப்பேன். பாட்டுச்சத்தம் தூரத்தில் கேட்கும், நாலைந்து வீடு தாண்டிப் போய்விட்டிருப்பாள்… சத்தம் தேய்ந்து அழியும். தெருக்கோடி கூடம் போய்விட்டிருப்பாள்.

‘நேரமாவலியா… சாப்ட வாங்களேன்.’

எழுந்து உள்ளே வருவேன், பையனையும் தூக்கிக்கொண்டு.

எதுவுமே இன்று ஒழுங்காய் இல்லை. எல்லாமே தாறுமாறாய்… மனம் பயத்தால் கனக்கிறது. குழந்தையைப் பார்க்கிறேன். அதே மாதிரி தான் இருக்கிறது.

‘இப்படியே வச்சிக்னு இருந்தா?’

‘அதான் வைத்தியன் சொல்லிட்டுப் போனானே? ராப்பொழுது இப்டிதான் இருக்கும்.. எதுவும் சொல்ல முடியாதுன்னு…’

அழுகிறாள். உடம்பு குலுங்குகிறது.

தெருவில் பாட்டுச் சத்தம். என் வீட்டை நெருங்குகிறது. கைத்தடிச் சத்தம் கேட்கிறது. செங்கல் தரையில் லொட்டு லொட்டென்று தட்டுகிறது.

தடிச்சத்தம் நிற்கிறது. பாட்டு தொடர்கிறது.

அவள் பாடிக்கொண்டிருக்கிறாள்… கிழவி…

முதல் பையன் நினைவுக்கு வருகிறான். சாகும்போது ஐந்து வயது. மணியாட்டம் வளர்த்து தூக்கிக் கொடுத்தாய் விட்டது. எந்த வைத்தியமும் சுகப்படவில்லை.

நினைக்கும் போதெல்லாம் துயரம் பீறிடுகிறது.

அவ்வளவு சூட்டிகை அந்தப் பையன்…

செவத்த உடம்பு. கறுகறுவென்று தலைமுடி. நல்லா மழமழவென்று.

என் அம்மா முகம், அதே கண்கள். அதே கருணை. குணமும் அப்படி. எல்லாம் கண்முன்னே நிற்கிறது.

கிழவி வருகிறாள்… சோறு வாங்கிக்கொண்டு போகிறாள்.

‘யாருப்பா இந்தப் பாட்டி…’

‘பிச்சைக்காரப் பாட்டி.’

‘ஏம்ப்பா இந்தப் பாட்டி பிச்ச எடுக்குது…’

‘பாட்டிக்கு யாருமில்ல; பிச்ச எடுக்குது…’

‘மத்தியானத்துல எப்டிப்பா சாப்டும்…’

‘பிச்ச எடுத்துத்தான்…!’

‘மத்தியானம் வரல்லியே…’

‘வேற எங்கனா எடுக்கும்…’

கொஞ்சம் நேரம் அவன் கண்கள் எங்கோ சஞ்சரிக்கின்றன. என்ன நினைவோ…

‘எல்லார் வூட்லயும் இவ்வளோவ்ளோ போட்டாங்கன்னா எல்லாத்தியும் எப்டிப்பா அந்தப் பாட்டி சாப்டும்…’

‘எல்லா வூட்லயும் போட மாட்டாங்கடா ராஜா…!’

‘ஏம்ப்பா போடமாட்டாங்க?’

கண்களில் நீர் மல்குகிறது. நெஞ்சைப் பிழிகிறது. சீக்கிரமே போய்ச் சேரத்தான் இந்த மாதிரியெல்லாம் கேட்டானா…

மங்கிய ஒளியில் முகம் கலவரமாய் தெரிகிறது. அந்த மாதிரியே இந்தக் குழந்தையும் போய்விடுமோ…

கிழவியின் பாட்டு வெளியே கேட்கிறது. ஒருநாளாவது அவளுக்குத் தவறியிருக்குமா…

ஒரே ஒரு நாள், அந்த ஒரு நாள், பெரிய பையனைப் பெட்டி வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்குப் போய் வந்த சமயம். அப்போதும் இந்தக் கிழவியைப் பற்றி நினைத்தேன்.

இந்நேரம் அவள் வருவாள், பாடிக்கொண்டே வருவாள். வீடு பூட்டியிருக்கும், தெரியுமோ… தெரியாதோ…

மறுநாள் வீடு வந்து வெறுமையில் மூழ்கிக் கிடந்தபோது இரவு வந்தது. அவளும் வந்தாள். எப்போதுமே நேரம் தவறாமல் வந்தாள். தினமும் வந்தாள்.

நாங்கள் குழந்தையைப் பார்க்கிறோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறோம். எதிலும் நம்பிக்கையில்லை.

குழந்தையின் அள்ளு துடிக்கிறது. அள்ளு மாந்தம். இதயத்தைக் கீறுகிறது.

விளங்கு மங்குகிறது. ஜுவாலை சுருங்குகிறது.

‘சாயங்காலம் எண்ண ஊத்தலியா…’

‘இருக்கும். இந்த வேதனையில எது ஞாபகத்துல இருக்குது… அந்த பாட்டல எடுத்தாங்க…’

தெருக்கொரட்டில் கிழவியின் பாட்டு கேட்கிறது. எப்போது வந்தாள். ரொம்ப நேரமாய் பாடிக் கொண்டிருக்கிறாளோ… எங்கே நிற்கிறோம்… எங்கே பாடுகிறோம்… என்று எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் மணியானால் ஒலிக்கின்ற கடிகாரம் மாதிரி, இந்த நேரம் வந்தால் இப்படித்தான் பாடவேண்டும், இதுதான் வழக்கம் என்று பழக்கப்பட்டுப் போனது போல, எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல், உணர்வுகளே மரத்த மாதிரி… எனக்குள் கொஞ்ச நேரம்.

பிறகு லேசாய் ஒரு அசைவு.

அவள் பாடிக்கொண்டிருக்கிறாளே என்று மனசில் உறுத்தல். பாட்டிலைக் கொண்டுவந்து கொடுத்த மனைவியைப் பார்க்கிறேன். குழந்தையைப் பார்க்கிறேன்.

வாடிக்கைக்காரி. ஏதாவது போட்டனுப்பிவிட்டால் அவள் போய்விடுவாள் இல்லையா… மனசு சொல்கிறது. கண்களால் கேட்கிறேன்.

‘இங்க ஒண்ணும் கெடையாது போ. புண்ணியம் பார்த்த வரிக்கும் போதும்…’

எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த மனைவி வேதனையில் வெடுக்கென்று காய்ந்துவிடுகிறாள்.

ஒரே ஒருகணம். கணத்தில் ஒரு கணம்தான்… பாட்டு நின்ற மாதிரி… பிரமையோ…

பாட்டுச் சத்தம் தொடர்கிறது.

எப்போதும் போலவே ஒலிக்கிறது. தடிச் சத்தம் கேட்கிறது. லொட்டு லொட்டென்று தேய்கிறது.

கிழவி படியை விட்டு இறங்கிப் போய்விட்டாள், பாட்டு பின் தொடர்ந்து போகிறது. தாழ்ந்து மெலிந்து மக்கி மடிகிறது ஒலி.

ரொம்ப தூராம் போய்விட்டிருப்பாளோ…

நாலு நாளாய் வாக்கிங் போகிறேன். பையன் பூரணமாய் குணமடைந்து விட்டான். நல்ல சுகம், நாட்டு வைத்தியம் தான் பலித்தது. அவளுக்கு வெற்றி. ஆனால் என் நெஞ்சில் பாராமாய்க் குந்தி கனக்கிறது ஒரு வேதனை.

பொழுது இருட்டுகிறது. தெருவிளக்கு எரிகிறது. ட்யூஷன் சத்தம், வாத்தியார் சத்தம், ரேடியோ சத்தம் எல்லாம் எப்போதும் போலவே கேட்கிறது. குழந்தையை மடியிலிருத்தி திண்ணையில் குந்தியிருக்கிறேன். நேரம் கழிகிறது…

ஆனால் அவளைக் காணோம். பிச்சைக்காரக் கிழவி…

‘இங்க ஒண்ணும் கெடையாது போ, புண்ணியம் பாத்த வரிக்கும் போதும்’ என் மனைவி சொன்னது தான்… நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது.

மனசை அரிக்கிறது.

கந்தல் புடவை அழுக்குப் புரள, கிழிந்த புடவை வெறும் எலும்பை மறைக்க, பஞ்சும்பரட்டையுமான தலையுடன் ஒட்டி உலர்ந்து போன தன் உடம்பை சத்திரத்து திண்ணையிலே கிடத்தி அவள் முடங்கிக் கொண்டிருப்பதை பகல் நேரங்களில் எப்போதோ பார்த்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அப்போது அவள் வாய் ஓய்ந்து திக்கற்றுக் கிடப்பாள்.

அந்த இடம் கூட காலியாய்க் கிடக்கிறது.

மனம் கேட்கவில்லை.

எங்கே போனாள்…?

மறுநாள், மறுநாள், அதற்கும் மறுநாள். எப்போதும் அவளைக் காணோம். ஊர் ஓயாத முன்னிரவில் நிம்மதியாய் அன்றாடம் அவள் பாடிக்கொண்டு வரும் அந்தப் பாட்டைக் காணோம். அவளைக் காணோம்.

மனைவியின் காய்ச்சல் காதில் நெருப்பாய் சுட, கடைத்தெருப் பக்கம் போனபோது டீக்கடைப் பையனை கேட்கிறேன்.

‘இங்கே ஒரு கெழவி படுத்துக்னு இருக்குமே. சத்திரத்துத் திண்ணையில், எங்க காணம்…’

‘அது செத்து ஒரு வாரமாவுதே சார். உங்களுக்குத் தெரியாதா… கடத் தெருவுலதான் காசி தண்டி எடுத்துப் போட்டாங்க. பாவம்!’