‘ஒங்க ரோசா மாமி செஞ்ச காரியத்தை கேள்விப்பட்டீங்களா?’
நஜ்மா துணி மடித்துக் கொண்டிருந்தாள்.. நான் அப்போது தான் ஷூவை சுழற்றிக் கொண்டிருந்தேன். யாசிர் ஏற்கனவே ஃபோன் பண்ணியிருந்தான். எனக்கு ஏற்பட்டது அதிர்ச்சியெல்லாம் இல்லை. மனதின் இன்னொரு திறப்புதான். ஒவ்வொரு கதவாகத் திறந்து திறந்து கடைசியில் கதவே இல்லாத வெட்டவெளிக்குக் போய் நிற்பதுதானே வாழ்க்கை?
‘ம்…’
‘என்ன அசால்டா ‘ம்’ ங்றீங்க.. எனக்கு கை காலெல்லாம் நடுங்கிருச்சு. அல்லா..! இந்த வயசுலயா? அப்படி என்ன உடம்பு சுகம் கேக்குது? பேரன் பேத்திய கொஞ்ச வேண்டிய வயசுல?”
நான் அறைக்குள் வந்து லுங்கிக்கு மாறியிருந்தேன். நஜ்மா உள்ளே வந்து மின்விசிறியைப் போட்டாள்.
‘மல்லிகா அக்கா தான் சொன்னாங்க. கேட்டதுல இருந்து மனசு ஆறவே இல்ல. இப்டிப்பட்ட கேவலமான பொம்பள கிட்டவா அப்டி பழகுனோம்.. பொம்பளன்னா அதபு வேணாம்.. எல்லாம் கூதிக் கொழுப்பு..’
‘நிப்பாட்றியா..’
‘ஏன் மாமிய சொன்னா குத்துதோ?’
கட்டிலில் சாய்ந்தபடி கண்ணை மூடியிருந்தேன்.
‘என்ன பதில காணோம்?’
‘அது அவங்க வாழ்க்கை. நாஞ்சொல்ல என்ன இருக்கு?’
‘அதானே..’ஆம்பள புத்தி..’நாளைக்கு நம்ம மாட்டிக்கிட்டாலும் தப்பிக்கிறதுக்கு சாக்கு வேணும்ல.. போத்தா நீ ஒருக்கா கூட போயிட்டு வா..’
‘நஜ்மாஆஆ..’
இன்னும் சில நொடிகள் தான். எப்போது வேண்டுமானாலும் நான் மிருகமாகி விடலாம். ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் இருக்கிற மிருகத்தை கட்டி வைக்கத்தான் எல்லாமுமா? இதோ நஜ்மா அவிழ்த்து விட்டிருக்கிறாள். அந்த மிருகம் என்னையும் அழைக்கிறது.
ஒரு பார்வை பார்த்து விட்டு அடுப்படிக்குப் போய் விட்டாள். நானும் பார்த்து விட்டேன். ஒவ்வொரு பெண்ணும் இப்படிச் சிக்கிக்கொள்கிற போது சம்பந்தமே இல்லாத வேறு பெண்களுக்கு இந்தப் பதட்டம் எங்கிருந்து வருகிறது? இப்போது நஜ்மாவுக்குத் தேவை ஒரே ஒரு வார்த்தை தான். ‘எல்லோரும் ஒன்ன மாதிரி இருப்பாங்களா நஜ்மா?’ காலம்காலமாக எல்லா நாயும் இந்த பொரைக்காகத் தானே குரைக்கிறது.. வாலாட்டுகிறது.. நக்
அடுப்படிக்குள் போனேன். பழைய குழம்பை கேஸ் அடுப்பில் வைத்து விட்டு லைட்டரை தேடிக் கொண்டிருந்தாள்.
‘நஜ்மா..’
‘……..’
‘நைட்டு தோசையா?’
‘ஏன் பிரியாணி கூட பண்றேன். அதுக்குத் தானே நானிருக்கேன். எங்கத்தா என்னய பெத்து யார் யார்ட்டயோ பேச்சு கேக்கத்தானே நாப்பது பவுனோட இங்க அனுப்பிருக்காரு..’
இது இன்னொரு அஸ்திரம். உண்மையில் பெண்தான் வேட்டைக்காரி. ஆண் புதுப்புது மிருகத்தைத் தேடிப் போவான். பெண்ணுக்கு கூட இருக்கிற மிருகம் மட்டுந்தேன் ஒரே இலக்கு. முதல்ல சுத்தி சுத்தி வந்து பழக்கிட்டு பெறவு ஒரு நல்ல நாள்ல வேட்டை ஆரம்பிக்கும். ஒவ்வொரு நாளும் கடிச்சுக் குதறி சாகவும் விட்றாம, தடவித் தடவிக் கொடுத்து மருந்து போட்டு, ஒரே குறியை தினம் தினம் வேட்டையாடி, அதே அம்பினால் தன்னையும் குத்தச் சொல்லி, இவ்வளவுக்குப் பெறவும் வேட்டை சலிக்காதவள் தான் பெண். ஆணுக்கு மிருகம் துடித்து வீழ்கிற போதே வெறி அடங்கி விடும். பெண்ணுக்கு அப்பத்தான் ஆரம்பிக்கவே செய்யும்..
இன்னிக்கு முழுக்க இவ எதிர்பார்ப்பு இதான்.. ரோசா மாமிய இவ கூட சேந்து நானும் திட்டனும்.. மோசமா.. கொச்சையா.. கி
ஆனா மாமிய என்னால அப்டி பேச முடியுமா? பேச மாட்டேன்னு அவளுக்கே தெரியும். அதான் ஆங்காரம். பெரும்பாலும் மனிதர்களை யோசிக்கையில எல்லாருக்கும் மூஞ்சிதான் மனசுல வந்து நிக்கும். ஆனா ரோசா மாமி பத்தி நெனைக்கறப்பவெல்லாம் எனக்கு முதல்ல ஞாபகம் வர்றது இருபத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் சொன்ன இந்த வார்த்தைகள் தான்..
‘யானைக்கு விரிச்ச முந்தானைய நாய்க்கும் நரிக்கும் விரிக்கச் சொல்றீங்களா? எந்திரிச்சு போங்க எல்லாரும்’
இந்த வார்த்தையை யார் மூலமாகவோ கேட்டபோது எனக்கு வயசு பதினாலு இருக்கும். அப்ப மாமிக்கு என்ன? பத்தொம்பதோ? இருபதோ?
பாருக் மாமா மவுத்தாயி நாப்பதாம் நாளு பாத்தியா ஓதுன பெறவு யாரோ ஒரு பொம்பள நைசா இன்னொரு கல்யாணத்தப் பத்தி பேச மொத்தமா எல்லாரும் வாங்கிக் கட்டிக்கிட்டாஹ.. யார் மேலயும் தப்புமில்ல. சந்தூக்கு தூக்குறப்ப அந்த அழுகை அழுது தெரு வரைக்கும் தலைவிரி கோலமா போயி மண்ணுல புரண்டு கெடந்த மாமி ஒரே வாரத்திலயே புள்ளைக்காக சரியாகியிருந்தது. சரி பச்ச மண்ணு.. அவ மனசுல என்ன இருக்கோங்கிற? ஆதங்கத்துல தான் கேட்டு வச்சது. அத கேக்கிறப்ப கூட மாமி சாதாரணமா பம்பாய் படத்து பாட்ட டிவில பாத்துக்கிட்டு தான் இருந்திருக்கு. அதுல ஏமாந்து கேக்க போயிதேன் இப்டி ஒரு பதில்..
ஆனா அந்த வார்த்தைக்கு அப்றம் மாமியோட மதிப்பு சொந்த பந்தத்துல ரொம்ப உசந்திருச்சு. யாராவது யார் கூடயாவது ஓடிப்போனாலோ, எவளாவது வெவஸ்தை கெட்டத்தனமா கையும் களவுமா சிக்கிட்டாலோ எல்லாருக்கும் ஒடனே ஞாபகத்துக்கு வர்றது ரோசா மாமிதே.. ‘அவ மாதிரி எவளால இருக்க முடியும்..’ என்று ஒரு பாட்டம் மாமியப் புகழ்ந்து விட்டு மத்தவளோட பாய சபை நடுவுல போட்டு கடைசி கோரை வரைக்கும் கிழிச்செறிஞ்சாத்தே நெஞ்சு ஆறும் இதுகளுக்கு..
ஆனா.. எனக்கு அந்த வார்த்தை, உத்தமி ஒருத்தியின் சத்தியப் பிரமாணமாகவோ, இஸ்லாத்தில் பொறந்து விட்ட ஒரு நவீன கண்ணகியின் ஆவேச பஞ்ச் டயலாக்காகவோ தோன்றியதில்லை. அதுக்குள்ள இருந்த காதல்தேன் கண்ணுக்கு தெரியும்..
மாமி ராசா காலத்துல பொறந்திருந்தா கண்டிப்பா ஒருநா வீட்டு முன்னாடி பல்லக்கு வந்திருக்கும். காடு கரைன்னு ஓடியிருந்தா கூட எவனாவது ஒரு கிறுக்குப் புடிச்ச ஓவியனோ, சிற்பியோ மாமி காலடில விழுந்து வாழ்க்கையவே தொலச்சு உன்னதமான ஒண்ணு ரெண்ட பூமிக்கு விட்டுட்டு போயிருந்திருப்பான். மெட்ராஸ்லயோ
ரோசா மாமி அழகுங்கிறதெல்லாம் சும்மா கஞ்சத்தனமான பேச்சு. அஞ்சரை அடியும், கோதுமை நெறமும், தூண் மாதிரி கை காலும் நடந்து வர்றப்பவெல்லாம் மூச்சு நின்னு திரும்ப வந்திருக்கு எனக்கு. புருவம் கருகருன்னு இருக்கும். அப்பப்ப மாமி அத மேல தூக்கறப்போ அது ஏதோ நீளமான பட்டாம்பூச்சி ஓடற மாதிரி இருக்கும். எட்டூரை என்ன விலைன்னு கேக்குற கண்ணு அது. கண்ணுல கருப்புப் பகுதி ஜாஸ்தி. கண்ணு இமைலயும் நல்ல ரோமக் கட்டு. கண்ண மூடித் தெறந்தா ஏதோ பறவை பறக்குற மாதிரி இருக்கும். உளிய கைல புடிச்சு மன்மதனே மந்திரஞ் சொல்லி செதுக்குன மாதிரி மூக்கு. நுனில பொடிசா நச்சத்திரம் மாதிரி என்னவோ மின்னும். மாமி ஒதடு எப்பவும் ஈரமாத்தேன் இருக்கும். வெயில்ல நடக்கிறப்ப கூட வறண்டு பாத்ததே இல்லை. இத்தனைக்கும் சில பொம்பளைக மாதிரி நாக்க வெளில நீட்டி உதட்ட தடவுற சங்கதியெல்லாம் மாமிட்ட கெடயாது. வெள்ள வெளேர்னு குப்புறப்படுத்திருக்கிற மொசக்குட்டி மாதிரி பாதம். பெரும்பாலும் அதத்தே பாத்துக்கிட்டு இருப்பேன். கால நீட்டி உக்காந்திருக்கப்ப ஒண்ணு ரெண்டு முடி லேசான செம்பட்டை கலர்ல தெரியும். அத பாத்தா எனக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை அப்டியே நட்டுக்கிட்டு நிக்கும்..
மாமி ரொம்ப கனிவாதே எல்லார்ட்டயும் பேசும். ‘வாத்தா இப்டி உக்காரு’ன்னு கையப் புடிச்சாலே எனக்கு மூத்திரம் முட்டிக்கிட்டு வந்துரும். ‘சரி’, ‘இல்ல’, ‘ஆமா’, ‘இப்பத்தேன்’, ‘போதும்’, ‘வர்றீ’ இவற்றைத் தவிர பிற வார்த்தைகளை மாமியிடம் பேசியதாய் எனக்கு நினைவில்லை..
மாமி வெத்தலை போடறத பல தடவை பாத்திருக்கேன். மாமாதே மடிச்சுத் தருவார். நாலஞ்சு வெத்தலை வேணும் மாமிக்கு. ஆனா ஒன்னொன்னும் தனித்தனியா பாக்க முழுசா கொட்டி அதுல சீனியும் போட்டாகனும். மாமா லுங்கியில் வெத்தலைய லேசா தடவிக் கொடுத்து சுண்ணாம்பு வக்கிறது பாக்க அவ்வளவு நவிசா இருக்கும். அவருக்கு வெத்தலயும், மாமியும் வேறல்லங்கிற மாதிரி.. இத்தினிக்கும் ஆளு சண்டியர் மாதிரி.. ஆறடி உயரம். நெஞ்சு பூராம் கருகருன்னு முடி.. நடந்தா கை நீண்டு தொட வர தொங்கும். தோள்பட்ட கறியோட வலு வெளில தெரிற மாதிரி கைய நல்லா மேல சுருட்டி விட்ருப்பார். கழுத்துல இறுக்கமா தாயத்து. வீட்டுல பெரும்பாலும் பனியன் போடாம வெறும் மேலோடதே இருப்பார். யாராவது பொம்பளைக வந்தாதே எந்திரிச்சு போயி துண்ட உடம்புல சுத்திக்கிட்டு வருவாரு. அதுக்குள்ள பலருக்கும் மாமா நெஞ்சுமுடிய நோக்கி கண்ணு போயிரும். மாமி ஒதட்டுல அப்ப ஒரு மாதிரி வெளித்தெரியாத சிரிப்பு கெடக்கும். மாமா வெத்தலை போட மாட்டார். ‘சின்ன வயசுல கோழி முட்டும்னு’ சொன்னத நம்பி போடறத விட்டவரு. அதுக்கப்புறம் பழகவே இல்ல. சிலசமயம் மாமி, ஒதப்புன வெத்தலை சாறோட நாக்க வெளில நீட்டும். நல்லா செவந்து போன நாக்குல இருந்து மாமா தன் நாக்குல எடுத்துக்குவாரு. ரெண்டு மூணு தடவை இத பாத்திருக்கேன். அன்னிக்கு நைட்டெல்லாம் தூக்கமே வராது. என் நாக்கு எங்கெங்கியோ நீண்டு போர்வைல நுரை தள்ளுனதுதே மிச்சம்..
மாமா டிவிஎஸ் 50யை குத்த வச்சு உக்காந்து தொடைக்குறப்பவோ, லுங்கிய மடிச்சு கட்டி கை கால் கரளை தெரிய வெறக பிளந்து போடுறப்பவோ, இல்லாட்டி கை ரெண்டையும் தலைக்கு பின்னாடி அண்டக் கொடுத்து வச்சு கம்காடு தெரியுற மாதிரி சேர்ல உக்காந்திருக்கப்பவோ மாமி பக்கத்துல நிக்கிறத நா பாத்திருக்கேன். மாமா கவனிக்காதப்ப மாமி பாக்குற பார்வை இருக்கே. உச்சில இருந்து உள்ளங்கால் வரை ஒரு பொம்பள கண்ணுலயே ஒருத்தனுக்கு மாலை போட முடியுமான்னு தோணும். இப்ப பறந்து போயிருங்கிற மாதிரி துடிச்சிட்டிருக்கிற பட்டாம்பூச்சிய பூவுல வச்சு பாக்குற மாதிரி கண்ணுல அவ்வளவு கூர்மை தெரியும். மாமா சில நேரம் லேசா சிரித்தபடி, ‘என்னலேம்பார்’. ’என்னா நொன்னலே.. போத்தா கருவாத்தொர’ன்னுட்டு உள்ள போயிரும். அதுமாதிரி நேரங்கள்ல மாமா ஒடனேயே பாய தரைல போட்டு டிரான்ஸிஸ்டரோட படுத்திருவார். ஒரே இளையராஜா பாட்டு தே… அதுல சங்கடம் என்னன்னா மாமாவும் கூடச் சேந்து பாடுவார். அந்தக் குரல் வடச்சட்டில கல்ல போட்டு வறுத்தது மாதிரி இருக்கும். அந்தத் தெருவுல வண்ணா வீடோ, கழுதைகளோ இல்லங்கிறதால மாமா கௌரதையா தப்பிச்சார். ஆனா மாமா பாடறப்ப மாமி மாவாட்டிக்கிட்டோ, பாத்திரம் கழுவிக்கிட்டோ, கொழம்ப நொட்டாங்கைல ஊத்தி உப்பு ருசி பாத்துகிட்டோ இருந்தாலும் காது இங்கதேன் இருக்கும். அந்தக் கத்தி மூக்கோட நுனி கூடுதலா ஒளிர்ற நேரம் அது. முகம் ரோசாப்பூவ வச்சுக் கட்னது மாதிரி நல்லா ரோஸ் கலர்ல இருக்கும்…
என்கிட்டன்னு இல்ல.. யார் முன்னாடியும் ரெண்டு பேருக்கும் கூச்சமே கெடயாது. அவுகளுக்கு நடுஹாலு, மொட்டைமாடி, அடுப்படி, பாத்ரூமு, கொல்லை, வாசப்படி, தெரு, பஸ்ஸூ எல்லாமே பெட்ரூம் மாதிரிதேன். முரட்டுப் பாசம். மாமி ஏற்கனவே சாயங்காலம் தெருவுல விக்க வர்றவன் கிட்ட மல்லியப் பூவ வாங்கி வச்சிக்கிட்டாலும் தலைவர் பஸ் ஸ்டாண்டு கடைல பூ வாங்காம வீட்டுக்கு வர மாட்டார். கூட திங்கிறதுக்கு மூணு நாலு பொட்டலம் வேற. வந்த உடனே அத பிரிச்சு நடுஹால்ல வச்சிருவாரு.. உடனே மாமிய திங்க விட்டு பாக்கனும் அவருக்கு. மாமி கொல்லைல இருந்தாலும் போயி, ‘ரோசா… ரோசா’ன்னு கதவத் தட்டுவாரு. மாமி பாதில முடிச்சிட்டு பாவடைல கை தொடச்சபடியே வெளில வந்திரும். ஆளு போடற சத்தம் அப்படி…
மாமிக்கு டிவிஎஸ் 50 ஓட்டக் கத்து தர்றேன்னு வண்டில ஏத்தி உக்கார வச்சு நெருக்கமா பின்னாடி உக்காந்து ஏழெட்டு தெரு சுத்தி வருவார். ரைஹானா பொறந்து கொஞ்ச நா கழிச்ச உடனேயே ரெண்டு பேரும் விட்ருந்த ஊர்வலத்தை தொடர்ந்தாஹ.. ஆனா மூணு வருஷமா பைக்கு ஊரையே சுத்தி வந்தாலும் மாமி பிரேக் போடுவதைக் கூட கத்துக்கல. மாமாவுக்கு அதுபத்தியெல்லாம் கவலை இல்லை. ஆனா பேரு என்னவோ ‘ரோசாவுக்கு வண்டி ஓட்ட கத்து தரப்போறேங்’குறது தான்.. அவரு பின்னாடி உக்காந்து மாமி காதுல வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பத்தி தான் எப்பவும் பேசுனதில்லையே? ஊர்க்கண்ணு பூரா இங்கதே இருக்கும். மாமி வீடு வந்ததும் வண்டில இருந்து இறங்குறப்ப மூஞ்சி புள்ளத்தாச்சி பொம்பள மாதிரி கனிஞ்சு போயி இருக்கும். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் போது, ‘நாளைக்கு நா வர மாட்டேன் நீயா ஓட்டனும்பார்’. மாமி செருப்பக் கழட்டிக்கிட்டே மெலிசான குரல்ல ‘ம்’ங்கும்.. மறுநா வண்டி கிக்கரை ஒதைச்சு மாமிய ஏத்தி விட்டுட்டு பின்னாடியே அதே அளவு நெருக்கத்துல உக்காந்திருவார். ‘இன்னிக்கு வர மாட்டீன்னீங்க?’ மாமி கழுத்தை லேசாகத் திருப்பி புருஷனுக்கு மட்டுமேயான பிரத்யேகக் குரலில் கேக்கும். ‘இன்னிக்குத் தான் லாஸ்ட்’ம்பார்.. ‘இருக்கட்டும்.. இருக்கட்டும்’ கண்ணாடி வழி மாமியின் முகம் தளும்புவது தெரியும்..
எல்லாத்துலயும் அப்டித்தே.. திடீர்னு ரெண்டு பேரும் போயி ராட்டனம் சுத்திட்டு தெருவுலயே ஐஸ் தின்னுட்டு வருவாங்க. மாமி சேலைல பால் ஐஸோ, சேமியா ஐஸோ வடியுறப்ப மாமா கூச்சமே படாம நடுத்தெருவுலயே அங்க கையால தொடைச்சு விடுவாரு. மாமி அதுக்கும் அலட்டிக்கிராது. சமயத்துல ஐஸ்காரன் முன்னாடியே எல்லாக் கூத்தும் நடக்கும்.. இவுக கிளம்புனதும் ‘ஐஸே ஐஸே’ என்று பெட்டியைத் தட்டியபடி தெருவைக் கடக்கும் போது அவன் கண்கள் வேறு மாதிரி இருக்கும். ராவுத்தமார்ல இல்லாத வழக்கமா படத்துக்கு வேற போவாக.. மாமி கல்யாணம் காச்சின்னாதேன் வெள்ளைத் துப்பட்டிய சேல மேல சுத்திருக்கும். மத்த நேரம் கெடயாது. மாமி கமல் ரசிகை. மாமா ரஜினி ரசிகன். கல்யாணத்துக்கு பெறவு அவரும் கமல் ரசிகரா ஆயிட்டாரு. ரோசாவுக்காகவெல்லாம் இல்ல. ‘இந்தாளு நல்லா முத்தம் கொடுக்குறாப்டி’ ம்பார்.. ‘தேவர் மகன்’ படம் வந்தப்ப ரைஹானா கைக்கொழந்த. தங்கச்சி கிட்ட கைக்குழந்தைய விட்டுட்டு ரெண்டு பேரும் ரெண்டாம் ஆட்டம் போனத ஊரே ஆதங்கம் பாதி பொறாமை பாதியா கரிச்சு கொட்டுச்சு. ஆனா இதுக்கெல்லாம் அசர்றவங்களா ரெண்டு பேரும்.. அவர்களின் உலகத்தில் எல்லோரும் பார்வையாளர்கள் மட்டுமே. ரைஹானா உட்பட.
வைகை டேமுக்கு சொந்த பந்தமெல்லாம் வேன் புடிச்சுப் போனோம். எதிர்பார்த்தத விட தலக்கட்டு கூடிருச்சு. ஒரு ஆளுக்கு நிக்கக் கூட இடமில்லை. மாமா கொஞ்சம் கூட யோசிக்காம மாமிய பாத்து, ‘வா ரோசா என் மடில உக்காந்துக்கன்னுட்டாரு’ மாமியும் போயிருச்சு. சுத்தி அத்தனை பொம்பளைக. அத பத்தி என்ன அவுகளுக்கு? நா வேற பக்கத்துல.. கம்பத்துல தொடங்குன ரொமான்ஸ் வைகை டேம் பூங்கா பக்கத்துல வேன ஆஃப் பண்றது வரை ஓயல.. மர்லியா மாமி தான் கிண்டலா சொல்லுச்சு. ‘இறங்குற மாதிரி ஐடியா இருக்கா? இல்ல ரெண்டு பேரும் இங்கயே இருந்து ரைஹானா தம்பியோட வாறீஹளா?’ எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். பாருக் மாமாவோட தாய்மாமன் மகதான் மாமி. சின்ன வயசுலயே பேசி வச்ச விஷயம் இவுங்க கல்யாணம். மாமிய விட மாமா எட்டு வயசு மூத்தவர். சின்னப் புள்ளைல ஒண்ணுந் தெரியல. பன்னெண்டு வயசுல மாமி ஆளானப்பறம் மாமா மூஞ்சிய அதால நேருக்கு நேர் பாக்க முடியாது. ஓடி ஒளிஞ்சுக்கும். ஆனா தூரத்துல இருந்து விடாம பாத்துக்கிருவாஹ.. கல்யாணம் காச்சி, மவுத்தான வீடு, பாவாதர்ஹாவுல நடக்குற கொடிக்கட்டு எல்லாத்திலயும் இவுஹ ரெண்டு பேரு காதல்தே சொந்த பந்தத்துக்கெல்லாம் ஓசி சினிமா. யாராவது சீண்டுவார்கள். சூழலை உருவாக்குவார்கள். ஆனா கல்யாணம் முன்னாடி வரைக்கும் ரெண்டு பேரும் நேருக்கு நேரா நின்னு பேசுனதே இல்லை.
கல்யாணமும் அவ்வளவு லேசா நடந்துர்ல. ஆரம்பத்தில் தம்பிக்கு வாக்கு கொடுத்திருந்த நபீஸா நன்னிக்கு திடீர்னு எளகிருச்சு. அந்த வெறும்பய பத்தோ பதினைஞ்சோ தான் நக போடுவான்னு தோணுச்சோ என்னவோ? வெளில பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருச்சு. அன்னிக்குத் தான்
‘அப்பன் இல்லாத ஒத்த புள்ளன்னு ஊட்டி ஊட்டி வளத்ததுக்கா என்னயவே கொல்லுவீங்கறான்.. இப்பவே மைய்ய வச்சிடாளுகளே. முஹையதீன் ஆண்டவுகளே நா என்ன செய்வீ..’ நன்னி வீடா வீடா போயி மூக்கு சிந்தி போட்டு ஒப்பாரி வச்சும் ஒண்ணும் நடக்கல.. மாமாதே ஜெயிச்சார். நிச்சயம் போட்டவுடனே மாமா மணி கொத்தனார கூட்டிட்டு வந்து மாடில வீடு எடுத்தாரு. கக்கூஸ் உட்பட எல்லாம் மேலயே. மாடிக்கு போற பாதை கூட வெளிலதே. அதுக்கு தனியா இந்தப் பக்கம் நீளமான கேட்டு. நபீஸா நன்னி முறைத்துக் கொண்டும், நொடித்துக் கொண்டும் திரிந்தாலும் சித்தாளுகளுக்கும் நிமிந்தாளுகளு
மாமா மவுத்தாயி பாயில் கிடந்த போது எத்தனையோ பேரு தடுத்தும் மாமி அப்டித்தே மேலுல விழுந்து கெடந்துச்சு. வழக்கமா எந்தத் துலுக்க பொம்பளயும் அப்டி செய்றதில்ல. எவ்வளவு பலமா ஒப்பாரி வச்சாலும் எல்லாம் பொம்பளையாளுக்கு நடுல உள்ளதே நடக்கும். ஆனா மாமிய கழுத தொலையட்டும்னு விட்டுட்டாஹ.. குளுப்பாட்டத் தூக்குன போது போட்ட சத்தத்துல ஊரே நடுங்கிருச்சு. ‘மச்சாஆஆஆ.. இனி நீங்க வீட்லயே குடிங்க.. நா ஒண்ணுஞ் சொல்ல மாட்டேன்… ரைஹானா மேல சத்தியமா… எந்திரிங்க மச்சாஆஆன்..ம்அம்..ம்அம்ஆஆ’. யார் மடியிலயோ உக்காந்து வாயில் எச்சில் ஒழுக குறுங்கையை காற்றில் அசைத்தபடி பாத்துக்கிட்டிருந்த ரைஹானாவும் அம்மாவ பாத்து மெல்லச் சிணுங்கியது…
மாமா குடித்து விட்டு வந்து மாமிய கொஞ்சறத அடிக்கடி பாத்திருக்கேன். குடிச்சிட்டு வந்தா கேட்டுக்கு வெளில கீழயே நிப்பார். மேல வர மாட்டார். குறிப்பா ஒரே ஒரு பாட்டதே பாடுவார். ‘ப்பூங்கத்தவே தால் திறவோய்.. ப்பூவாய்..பொம்பாவாய்’ என்று மாமா பாடுவதைக் கேட்டு தெரு நாய்கள் தங்கள் தேசாந்திர எல்லையை மாற்றிக் கொண்டேயிருக்கும். என்னென்னவோ பேசுவார். எல்லாமே எழுதப்படாத காதல் கடிதங்கள். பகிரங்கமான மன்னிப்புக் கோரல்கள். காயிதே மில்லத் தெரு கதவு எண் 5/7 கீழ் மாமா தன் மனச தெருக்குழா மாதிரி அந்த ராத்திரில தொறந்து விட்ருப்பார். ‘ரோசா ரோசா.. அடியே ரோசா, மலந்த ரோசா.. வாச ரோசா.. வாடி ரோசா.. ரைஹானாவுக்கு தம்பி செய்யலாமாடி? வா வா..’ காற்றில் கையை நீட்டி உளற ஆரம்பிக்கும் போது தான் மாமி பதறிப் போய் கீழ வரும். வந்த உடனே மாமி தோள் மேல சாஞ்சுக்குவாரு. அப்படியே கண்கள் சொருக வானத்தை பார்த்து ‘நெலா.. அடியே நெலா.. இதா ரோசா.. ம்.. சொல்லிருக்கீன்ல உன்ட்ட.. எம் பொண்டாட்டி.. எம்புட்டு அழகு பாரு.. ஒன்னய விட.. என் எஜமானி.. எஞ்சாமி.. என் உசுருடி..’ன்னு தலய சிலுப்புவார். சிலநேரம் தலய ஒரு மாதிரி குலுக்கி ரோசா மாமிட்ட நிலாவ காட்டி, ‘ரோசா இது ஏண்டி துணி உடுத்தாம மொட்டைக் குண்டியோட அலையுது.. இதுக்கு ஃபர்ஸ்ட் நைட்டா’னு கண்ணடிப்பார். இதுமாதிரி நேரங்களில் நபிஸா நன்னி வெளிலயே வராது. எப்பபவாச்சும் தல தெரிஞ்சா போதும். ‘வாலா.. நபிஸா.. அசன் ராவுத்தர் கைல கருகமணி வாங்குன குலவெளக்கே.. வைய்யகரையார் வகையறாவின் வைரமே.. வா.. வா.. பாருலா ஒம்மருமகள.. தம்பி பெத்த திருமகள.. அவ அழகப் பார்.. நடையப் பார்.. எடையப் பார்.. உடையப் பார்.. இடையைப் பார். (இத சொல்றப்ப ரஜினிகாந்த் மாதிரி வெக்கத்தோட காலர கடிச்சபடி திரும்பி நிண்டுக்குவாரு) வெக்க வெக்கமா வருதுலா… ஏன்.. ஆம்பள வெக்கப்படலாமா?.. படலாம்.. லவ் பண்ற ஆம்பள வெக்கப்படலாம்ல.. ஆமா.. நா ரோசாவத்தே லவ் பண்றீ.. ரொம்ம்ம்ப (கைய விரிச்சுக்குட்டே போயி பெறவு சடாரென்று குவித்து நெஞ்சுக் கிட்ட கொண்டு வந்து) லவ் பண்றீ.. என்னலா செய்வ? இல்ல நீ என்ன செய்வ? போலா.. போலா.. ஒங்கொப்பன் புலைல் ராவுத்தர் வீட்டுக்கு போலா.. இப்பவே நடந்து போலா’. மாமிக்கு அந்த ஆறடி மனுஷன இழுத்துட்டு மேல போறதுக்குள்ள பெரும் பாடாயிடும். ஆம்பளயோ பொம்பளயோ யாரும் ஒத்தாசைக்கு வர மாட்டாஹ.. வேடிக்கை மட்டுந்தே. வந்தாலும் பாருக்கு என்னவாவது பேசிப் போடுவானோங்கிற பயந்தே. மாமா பேசுற ஆளுதே.. ‘அடியே ரோசா இந்தத் தெருவுல எல்லாமே… ஆமா.. எழுதி வச்சுக்க எல்லாமே.. ஒருத்தனும் வெலக்கு கெடையாது.. எழுதி கை நாட்டு வச்சு தாறேன்.. நா சொல்றது நெசம்.. நெசம்.. நெசம்… அல்லாக்கு
சில நேரம் வாளித்தண்ணிய தலைல ஊத்திகொஞ்ச நேரம் நிக்க விட்டுட்டு பெறவு வலுக்கட்டாயமா மேல கூட்டிட்டு போகும்.. அப்பவும் அடங்க மாட்டார்.. நடுராத்திரி வரை பாட்டும் பேச்சுந்தேன்.. பெரும்பாலும் சோகப்பாட்டுதே.. ‘ஏர்ரிக்கரப் ப்பூங்காஆஆத்தே’ன்னு சன்னலை தொறந்து வச்சுக்கிட்டு தெருவப் பாத்து கத்துவார்.. நீ செத்துப் போயிட்டீன்னா மச்சானுக்கு ஆரும் இல்லடி.. புலைல் ராவுத்தர் மக சோத்துல விஷம் வச்சாலும் வச்சுருவாடீ.. அதுனால நா ஃபஸ்டு சாகிறீ.. நீ ரைஹானாவோட பேரம் பேத்தியெல்லாம் பாத்துட்டு வா.. மச்சானுக்கெல்லாம் நரகந்தே.. நீ வந்துட்டா அல்லாட்ட மாப்பு கேட்டு சொர்க்கத்துக்கு போயிடலாம்ன்னா’.. தொட்டிலுக்குப் போய் மகளின் பாதத்தை எடுத்து ரெண்டு கன்னத்திலும் வச்சபடி, ‘ரைஹானா. ட்ர்ரா.. ட்ர்ரா. அழாதடி கண்ணு… நாம ரெண்டு பேரும் அம்மாவ நல்லா பாத்துக்கணும்.. நல்ல அம்மாடி ஒனக்கு.. ஒனக்கு அத்தா மாதிரி குடிகாரன்லாம் வேணாம்.. நல்ல மாப்ள. கலெக்ட்ரு.. ம்.. டாக்ட்ரு.
மாமியோட அந்த வார்த்தைக்குப் பெறவு சொந்த பந்தம் எதுஞ் சொல்றத நிப்பாட்டிருச்சு. ஆனா ஆம்பள புத்தி சும்மா இருக்குமா? தினம் ஒரு கதை காதுல விழுகும். மாமிட்ட செருப்படி வாங்காத ஆம்பளயே ஊர்ல கெடையாது. பெரும்பாலும் எதையும் யார்ட்டயும் தாம்போயி சொல்லாது. ஆனா யார் மூலமாவது கதை வெளில வந்துரும். மாமாவுக்கு நாலஞ்சு தோட்டமும் மூணு நாலு வீடும் உண்டு. அவ்வளவும் மாமாவே சம்பாதிச்சது. ஒரே ஒரு தோட்டம் மட்டுந்தே அவங்கப்பன் விட்டுட்டுப் போனது. ஒத்த வீட்டை மட்டும் அம்மா பேர்ல விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையுமே மாமி பேர்லதே மாத்தி எழுதிருந்தார். சும்மா சொல்லக் கூடாது. நபிஸா நன்னிய மகன் செத்தப்புறம் மருமகள கண்ணுல வச்சு பாத்துக்கிருச்சு. அவுங்க வீட்ல கூப்டப்ப கூட மாமி போகல. தோட்டத்த எல்லாம் உண்டருதிக்கு விட்டுட்டு வீட்டு வாடகைய வாங்கித்தேன் ரெண்டு பேரும் வயித்தக் கழுவுனாஹ. பெரிய பெரிய பணக்காரன்லாம் மாமி அழகுக்கு ஆசப்பட்டு அவுஹ அத்தா, அம்மாட்ட பேசி பாத்தாஹ. பொண்டாட்டிய பறி கொடுத்தவன், டைவர்ஸ் ஆனவன் மட்டுமில்ல அதுல கல்யாணம் ஆகாதவனுகளும் அடக்கம். ஆனா மாமி வீட்டு ஆளுஹளுக்கு அத இங்க வந்து சொல்றதுக்கு கூட பயம். ஒருத்தன்லாம் இன்னிக்கு வர மாமிய நெனச்சே கல்யாணம் கட்டாம அலைஞ்சு கடைசியா வெளிநாட்டுக்கு போயிட்டான். மாமிய எந்தத் தொந்தரவும் பண்ணாம பின்னாடியே வருவானாம். ஒருநா ரைஹானாவுக்கு ஏதோ வாங்கித் தந்திருக்காம் போல. மாமி அவம்பாக்கவே அதத் தூக்கி நடுவீதில எறிஞ்சுட்டு காறி துப்பி கதவச் சாத்திருக்கு.. ‘ஒனக்கு பாவமே இல்லியாக்கா பாசித்த பாத்து?’ன்னு மர்லியா மாமி ஒருவாட்டி கேக்க, ‘பாவந்தே.. நா பாவம் இல்லியா? ரைஹானா இல்லாட்டி நா ஒங்க மச்சான் செத்தன்னிக்கே அரளி விதய குடிச்சிருப்பேன்.. அதா நெசம்.. பல ஜென்மத்துக்கான வாழ்க்கைய மூணு வருஷத்தில வாழ்ந்துட்டோம்டி.. அத நெனக்கிறதுக்கே இந்த ஒத்த வாழ்க்கை போதாது.. இதுல பாசித்தாம்.. கோசித்தாம்.’
ரைஹானாவுக்கு அப்படியே மாமா சாடை. நெடுநெடுன்னு கறுப்பா இருக்கும். மாமியோட முக லட்சணம் எதுவுமே விழுகல. ஆனா அந்த மினுமினுப்பு மட்டும் மாமியோடது. அதும் கருப்பா இருக்றதுனால எண்ண வச்ச அம்மன் செல மாதிரி இருப்பா. எனக்கும் ரைஹானாவுக்கும் வயசு வித்தியாசம் ஜாஸ்தி. இல்லாட்டி மாமி எனக்கு கட்டிக் கொடுத்திருக்கும். மாமிக்குள்
ரைஹானா வயசுக்கு வந்து ஒரு மாசத்துல நபீஸா நன்னி கண்ண மூடிருச்சு. அதுக்கப்புறமும் மாமி தன் வீட்டுக்குப் போகல. ரைஹானாவ ஒத்த ஆளா நின்னு காலேஜ் வரைக்கும் படிக்க வச்சிருச்சு. ரைஹானா ஒடம்புல ஒரு ஆம்பளத்தன்மை இருக்கிறதால பசங்களுக்கு கொஞ்சம் பயம். அதுனாலயே பெருசா எந்தப் பிரச்சினையும் இல்ல. மாமி தங்கச்சி நூரக்காவும் அவ புருஷன் ஷாஜகானுந்தே ஊர்ஊரா போயி மாப்ள பார்த்தாங்க. மாமி தங்கச்சிக்கும் மாமிக்கும் சம்பந்தமே இருக்காது. ஆளு குட்டை. அஞ்சடிதேன்.. பூனைக்கண்ணு
வத்தலக்குண்டில் தான் அந்த மாப்பிள்ளை வீடு. இதுவரைக்கும் பத்து இருபது சம்மந்தம் பாத்தாச்சு. எதுவும் அமையல. எல்லாத்துக்குமே பொண்ண பாத்துட்டு சின்ன சஞ்சலம். நல்லா இருக்குன்னுஞ் சொல்ல முடியல. இல்லன்னுஞ் சொல்ல முடியல. ஒரு மாதிரி பயம். இந்த புள்ள நம்ம மகனுக்கு அடங்கி கெடக்குமான்னு உள்ளுக்குள்ள யோசனை. ஃபோன் பண்றோம்னு சொல்லிட்டு போனவர்களுக்காக பஜ்ஜி பண்ணி பஜ்ஜி பண்ணி கை இத்துப் போச்சு. மாப்ள வீட்டுக்குப் போன போது மாப்ள பையன் மட்டுந்தே வீட்ல இருந்திருக்கான். ஆளு மாமா மாதிரி ஆறு அடி. கிட்டதட்ட அதே சாடை. மாமிய பார்த்ததுமே பொண்ணு போட்டோ கூட பாக்காம இதயே முடிச்சிருங்கன்னு
சொல்லிருக்கான். அவங்
அவுங்க வீட்ல பையன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவங்க. வந்து நிச்சயம் போட்டுட்டாங்க. நிச்சயத்துக்குப்
ரைஹானாவுக்கு ரெண்டு வருஷமா புள்ள இல்ல. அது மாமிக்கு ரொம்ப வருத்தம். ஆஸ்பத்திரிக்கு கூப்டதுக்கு பிடிவாதக்காரி வழக்கம் போல வர்லன்னு அடம்புடிச்சாட்டா. இப்பவெல்லாம் அடம் ஜாஸ்தி வேற.. புருஷன் ஆரம்பத்துல மாதிரி தங்கூட இல்லன்னு ஒரே ஆங்காரம்.. ‘வேற எவளையும் வச்சிருக்கியா நீ? அவுத்து போட்டு அம்மணக்குண்டியா நின்னாலும் மூடிக்கிட்டு படுத்துக் கெடக்க’. அம்மாக்காரி முன்னாலயே பச்சை பச்சையா கேப்பாளாம். அந்தாளு எதுக்கும் பதில் சொல்றதில்ல. கல்லூளி மங்கன் மாதிரி சாப்ட்டு பதில் சொல்லாம எந்திரிச்சிப் போயிருவானாம்..
அந்த விஷயத்தை யாசிர் ஃபோனில் சொன்ன போது எனக்கு முதலில் ஏற்பட்டது அருவருப்பு தான்.. ச்சீ அந்தாளா? மாமிக்கு ஏன் புத்தி இப்டி போச்சு? அந்தாளு மூஞ்சியும் முகரயும். முத்தம் கொடுக்காமலா அது நிகழ்ந்திருக்க முடியும்? மாமி அந்த முகத்தை எப்படி தன்னருகே வர அனுமதித்தார்? காமத்துக்கு எந்தக் கணக்கும் இல்லை என்பதை நான் என்றோ உணர்ந்திருந்தாலும் மாமியை வழக்கமான வகையில் வைக்க முடியவில்லை.
நிகழ்ந்தது இதுதான். ஊர்ல ஒரு பெரிய கல்யாணம். மாமி எடையிலயே தல வலிக்குதுன்னு கெளம்பி ஆட்டோவுல போயிருச்சு. ரைஹானா மாத்துச் சேலய தூக்கிட்டு போகல போல. அத எடுத்துட்டு போறதுக்காக ரைஹானா மாமியாக்காரி பன்னெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்தப்ப கீழ்க்கதவு ஒருக்களிச்சு கெடந்திருக்கு. சரி ரோசா தூங்குது போலன்னு சத்தமில்லாம கதவத் தெறந்து உள்ள போனா ரூமு உள்ள பூட்டிக் கெடந்திருக்கு. தட்டித் தட்டி பாத்தும் கதவு தெறக்கல. அந்தம்மாவுக்கு பயமாயிருச்சு போல. வாசலுக்கு வந்து கூப்பாடு போடறப்பதான் ஒரு ஜோடி ஆம்பளச் செருப்ப பாத்திருக்கு. வாயில கை வச்சுக்கிட்டே, ‘அறுதலி முண்ட’ன்னு கூப்பாடு போட்ருச்சு. எல்லோரும் வந்து கதவ ஒடைக்கிற மாதிரி தட்ட வேற வழியில்லாம கதவ மாமி தொறந்திருக்கு. உள்ள ஷாஜகானும் வெறும் மேலோட மாமிக்கு பின்னாடி நின்னிருந்திருக்கான். அந்தாளு மாமிய விட குட்டை. எல்லோரையும் பாத்ததும் வேகவேகமா வெளில ஓடிப்போயி ஹால் ஹேங்கர்ல இருந்த சட்டையை போடப் போயிருக்கான். அதுக்குள்ள செமத்தியா அடி.. மாமி எதயும் காதுல வாங்கிக்காம ஒருக்களிச்சு சுவத்த பாத்தாப்ல படுத்திக்கிருச்சு. ஒரே வசவு நாத்தம். மாமியின் காதுகள் இரும்பாகியிருந்தன. மனசு.. அது யாருக்குத் தெரியும்?
சாயங்காலமே பஞ்சாயத்து. ஊரே அந்த வீட்லதே.. எல்லோரும் மாமியை குற்றவாளியாக்கி கைய நீட்டி நீட்டிப் பேச மாமி ஒரு வார்த்தையும் பதில் சொல்லல போல. பெரும்பாலும் வெறித்த பார்வை. இல்லன்னா குனிஞ்ச தல. மூஞ்சில ஒரு சொட்டு கண்ணீர் இல்ல. அந்த நெஞ்சழுத்தம் தான் எல்லாத்தையும் வெறியேத்தியிருக்கு. உச்சபட்ச வெறில எவனோ எந்திரிச்சு மாமிய அடிக்க கைய ஓங்கிட்டுப் போயிருக்கான். அம்புட்டுதே.. ஆங்
ஆனாலும் அம்மாவும் மகளும் அதுக்குப்பெறவு பேசிக்கிறதில்ல. மருமகன் வேலையை வெளியூருக்கு மாத்திக்கிட்டாப்ல போல.. மாசத்துக்கு ஒருக்கா யாருக்கும் பொல்லாப்பு இல்லாம பொண்டாட்டி கைல தின்னுட்டு ஒரே ஒரு ராத்திரி இருந்துட்டு விடியறதுக்கு முன்னாடியே ஓடிருவானாம்.
ஊர் அந்தக் கதையை தங்களுக்கான அபிலாஷைகளையும் கலந்து விதவிதமான குரலில் சொல்லிப் பார்த்தது. ஷாஜகானோட அது மொத தடவ இல்ல. ஷாஜான தங்கச்சிக்கு கட்டி வச்சதே இதுக்குதே. ஷாஜகான் மட்டுமா? மருமகன்காரன் என்னவாம்? அவ அந்த கருவாச்சிய கட்டிக்கிட்டதே ஒத்தைக்கு ரெட்டையா வழிச்சு நக்கிக்கலாம்னுதே.. மாமியாக்காரி
ஊருக்குத் தான் எத்தனை நாவுகள்? நான் ஏன் எதையும் பேசாமலிருக்கிறேன்? உண்மையில் என் நெனப்புதான் என்ன?
மாமி ஏன் அப்படிச் செய்தார் என்று நான் ஆராய விரும்பவில்லை. உண்மையில் இப்போதும் மாமியிடம் என்னால் அந்த சில சொற்களைத் தவிர வேறு எதுவும் பேசி விட முடியாது. நான் இன்னமும் மாமிய பாத்தாலே மூத்திரம் வரும் பன்னெண்டு வயசுக்காரன் தான். ஷாஜகான்கள் இல்லாத அறைகளுண்டா? ஷாஜகான்கள் வருவதற்கு முன்பும் ஷாஜான்கள் வெளியேறிய பிறகும் அதே மலர்ந்த முகத்தோடு புன்னகைக்கும் ரோசாக்கள் தானே என் மயிர்க்கால்களை மலர வைப்பவர்கள். ‘நிசத்தில் அங்கு படுத்துக் கெடந்தது நா இல்லத்தா.. எல்லாம் பொய்யி.. இட்டுக்கட்ன கதைன்னு மாமி கதறி அழுதால் நான் நம்பத் தயாராய் இருந்தேன்..
மாமி ஊர்ல ஒரு மவுத்து. தூரத்துச் சொந்தம். போறப்பவே இவ படிச்சு படிச்சு சொல்லி விட்டாள். ‘அங்க போயிராதீஹ.. மரியாதை கெட்ரும்’.. அடக்கம் செய்வதற்கு முன்பாகவே நேராக கால்கள் அந்த வீட்டை நோக்கித் தான் நடந்தன…
வாசலில் செம்பருத்திச் செடிகள். கதவு பூட்டியிருக்கவில்லை. அந்த வீட்டுக்கு இனி யார் வரப் போகிறார்கள் என்கிற அசட்டையால் இருக்கலாம். நா போறப்ப மதியம் மூணு மணி இருக்கும்..
‘மாமி..மாமி..’
‘………. ……’
‘ரோசா மாமி…’
மாமி எழுந்து வந்தார். பாத்து ஒரு வருஷம் இருக்கும். அதே முகம். சோகம் மட்டுந்தேன் புதுசு. என்னைப் பார்த்ததும் கண்களில் ஆச்சர்யத்தின் நெருப்பு. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலிருக்க பிரயத்தனப்பட்ட மாதிரி தெரிந்தது…
.வாத்தா..உள்ள வா…
சேலைத் தலைப்பை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டார்.
‘என்ன சாப்புடுறத்தா?’
‘வேணா.. சாப்ட்டேன்..’
மேலே மெல்லிய பேச்சொலி கேட்டது. ஆணும் பெண்ணும்.. ஒரு முயக்கத்திற்கு முந்தைய அல்லது முயங்கிய பின்னான கலவைக் குரல்..
மாமி மின்விசிறியை ஐந்தில் வைத்து விட்டு அடுப்படிக்குள் போனார்.
‘சூஸ் கலக்குறீ..’
‘ம்..’
மாமாவின் ஆளுயரப் படம் ஹாலில் மாட்டியிருந்தது. முந்தி மாமி கட்லுக்கு அடில போட்டு வச்சிருக்கும். சில நேரம் கட்லு மேலயே கெடக்கும். வெளில போட்டோ மாட்னா மலக்குஹ வீட்டுக்குள்ள வரமாட்டாங்கன்னு யாரோ சொன்னதால இப்டி. இனி மலக்குகள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்கிற அசட்டையா? அந்தப் படத்தில் மாமா மலர்ந்து சிரித்திருப்பார். அந்தச் சிரிப்பு அபூர்வம். எவரையும் மன்னிக்கிற பெரும் கனிவை அந்தச் சிரிப்புக்குள் ஒளித்து வைத்திருந்தார். ‘வா இப்டி மடில உக்காருங்கிற’ பாவம் அது.. ரைஹானா உண்டானத மாமி காதுக்குள்ள சொன்ன உடனே ஓடிப்போயி முதவேளையா சுபா ஸ்டுடியோவில எடுத்த ஃபோட்டோ இது. ரொம்பநாளா அத ஸ்டுடியோக்காரன் வாசல்லயே மாட்டி வச்சிருந்தான்..
அந்தப் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதுக்கு நேராதான் அடுப்படி. அந்தப் படத்தின் ஃபிரேம் கண்ணாடியில் மாமி சூஸ் கலக்குவது மங்கலாகத் தெரிந்தது. அங்கிருந்து பார்த்தால் நான் உக்காந்திருப்பதும் தெரியும். அது மாட்டியிருந்த இடம் அப்டி. இப்போது மாமி திரும்பி நின்றிருந்தார். முதுகு மட்டும் லேசாக குலுங்கிக் கொண்டிருந்தது…