கிருஷ்ணா கல்லூரி மாணவர்களுடன் ஆளுமைத்திறன் சார்ந்து உரையாற்றிய பின் கேள்வி நேரத்தில், “தற்கால மாணவர்களாகிய எங்களுக்கு பொறுப்பு இல்லையென்பது பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு மாணவர் கேட்டார்.
”இந்தக்கால மாணவர்களாகிய உங்களது பெரும்பான்மையான நேரம் செல்பேசியிலும் இணையத்திலும் செலவழிக்கப்படுவதால் நீங்கள் எல்லாவற்றையும் மிக எளிதானதெனக் கருதிக் கொள்கிறீர்கள். எங்களது காலத்தில் அறிவு சார்ந்த ஒரே போக்கிடமாக ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால் உங்களுக்கு ஒரே நொடியில் எது குறித்த தகவல்களையும் விளக்கங்களையும் இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது. கற்றல் மட்டுமில்லாமல் ஷாப்பிங், சினிமா உள்ளிட்ட வேறு பல விஷயங்களுக்கும் இது பொருந்தும். எனவே உங்களது இயல்பு வேறுமாதிரியானதாக இருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி குடும்பம், உறவுகள், வலி, பசி, உயிர் போன்ற உணர்வுகள் பழமையானவை மற்றும் தவிர்க்கமுடியாதவை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றபடி பேரிடர்க்காலங்களில் உதவுதல், பள்ளியில் ஒருவருக்கொருவர் (குறிப்பாக இயலாதவர்களுக்கு) துணை நிற்றல் போன்றவற்றில் சிறப்பாகவே செயல்படுகிறீர்கள். எனவே ஒட்டுமொத்தமாக உங்களைப் பொறுப்பற்றவர்கள் என்று குற்றம் சாட்ட இயலாது” எனக் கூறினேன்.
Digital Natives, Digital Immigrants
இந்த நிகழ்வு முடிந்த அந்த மாலையில்தான் நண்பர் இளங்கோ கிருஷ்ணன் முகநூல் பக்கத்தில் Marc Prensky பற்றிய பதிவொன்றைப் பார்த்தேன். ஒருவேளை நிகழ்வுக்கு முன்னதாகவே அதைப் பார்த்திருந்தால் இன்னும் துல்லியமான பதிலைச் சொல்லியிருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
எழுத்தாளரும் கல்வியாளருமான ப்ரென்ஸ்கி, “digital natives, digital immigrants” எனும் இரண்டு பதங்களை அறிமுகப்படுத்தியவர். இந்த இரண்டு பதங்களையும் விவரிப்பதோடு மட்டுமல்லாது அதன் அடிப்படையில் கற்பித்தல் முறையில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளையும் தனது ‘Prensky – Digital Natives, Digital Immigrants – Part1’, ‘Prensky – Digital Natives, Digital Immigrants – Part2’ கட்டுரைகளில் முன்வைக்கிறார்.
கணினி, வீடியோ கேம்ஸ், செல்ஃபோன், வீடியோ கேமராக்கள், டிஜிட்டல் இசை மற்றும் இணையப் பயன்பாடு வெகு இயல்பாக மாறிவிட்ட சூழலில் பிறந்து அவற்றைப் பயன்படுத்தியவாறு வளர்கிறவர்களை Digital Natives என்றும் அதற்கு முந்தைய காலத்தில் பிறந்து இடையில் டிஜிட்டல் உலகின் பழக்கங்களுக்குள் தன்னை பொருத்திக்கொள்ளப் பழகுகிறவர்களை Digital Immigrants என்றும் வரையறுக்கிறார். இதை தாய்மொழியைக் கற்பதற்கும் இடையில் புதிய மொழி ஒன்றைக் கற்பதற்கும் ஒப்பிடலாம். நீங்கள் பிறந்ததிலிருந்தே உங்கள் அம்மாவும் அருகிருப்போரும் தொலைக்காட்சியில் வருவோரும் பேசுகின்ற ஒரு மொழியைக் கேட்டு வளருகையில் அது உங்கள் மூளைக்குள் புகும் முறைக்கும், ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் பள்ளிக்கு வந்து எழுத்துகளைக் கற்று அதன் பின் உச்சரிப்புகளையும் வார்த்தைகளையும் அதற்கான பொருளையும் கற்கும்போது அம்மொழி உங்கள் மூளைக்குள் புகும் விதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா!
Neuroplasticity
இந்த இடத்தில் இவர் Neuroplasticity என்கிற கருத்தையும் தொடர்புபடுத்துகிறார். அதாவது Digital Natives-ல் ஏற்பட்டிருக்கும் மாற்றமானது பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் சார்ந்தது மாத்திரமல்ல. அது உடற்கூறு சம்பந்தப்பட்டதும் தான் என்கிறார். மாற்றுத்திறனாளிகளது புலன்கள் தங்களது தேவை சார்ந்து தகவமைத்துக் கொள்வதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். (செவித்திறன் அற்றோரின் கேட்டல் நரம்புகள் பார்வை சார்ந்த செயல்பாடுகளுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வு முடிவுகளை இவர் இதற்கு ஆதாரமாக முன்வைக்கிறார்).
Digital Immigrant ஆசிரியர்களும் Digital Native மாணவர்களும்
இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் தற்போதைய பள்ளிகளின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பொருத்திப் பார்க்கையில் ஒரு துயர்ச்சித்திரமே நம்முன் எழுகிறது. அதாவது டிஜிட்டல் சார்ந்த விஷயங்களை ஒரு இரண்டாவது மொழியைக் கற்றுக்கொள்வது போன்ற சிரமத்துடன் கற்றுக் கொண்டிருக்கிற டிஜிட்டல் இமிக்ரண்ட்ஸ் ஆசிரியர்கள் அதை அநாயாசமாகக் கையாள முடிகிற டிஜிட்டல் நேடிவ்ஸ்ற்கு பாடம் நடத்துகிறார்கள். (இன்னமும் கூட தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகளில் மார்ஜின் சரியாக வைக்கும் விதம் பற்றி பத்து மதிப்பெண் கேள்வி கேட்கப்படுகிறது! எப்படியாகினும் கணினியில்தான் தட்டச்சப் போகிறோம் என்கிறபோது அது தேவையற்ற ஒன்றாகி விடுகிறதை நாம் அறிவோம்!) இதில் ஓய்வுபெறும் வயதைத் தள்ளிப்போடும் அறிவிப்புகள் வேறு!
கூடவே, Neuroplasticity-ன் படி தற்போதைய மாணவர்களில் ஏற்பட்டிருக்கிற முக்கியமான மாற்றமாக அவர் கூறுவது “They thrive on instant gratification and frequent rewards”. கடிதக் காலங்கள் போலல்லாது மின்னஞ்சல்கள் மூலம் உடனடியாக செய்திகளை அனுப்ப, அவற்றிற்கு பதில்கள் பெற அவர்கள் பழகியிருக்கிறார்கள்; அவர்களது வீடியோ கேம்களில் உடனடியாக மதிப்பெண்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன, சிறப்பாகச் செயல்பட்டால் கூடுதல் மதிப்பெண்கள் மட்டுமல்லாது இறுதியில் பரிசுப்பொருட்களும் உண்டு; சமூக வலைத்தளங்களில் தங்களது திறமையை (பாடல்/நடிப்பு/புகைப்படம்/தொழிற்திறன்) பதிவிட்டால் உடனடியாக விருப்பக்குறிகள், பாராட்டுகள், பகிர்வுகள் களைகட்டுகின்றன. இப்படிப்பட்ட பழக்கத்திற்கு தகவமைந்தவர்களைப் பள்ளியில் அமரவைத்து படிப்படியாகப் பாடங்களை நடத்துகையில் அது அவர்களுக்கு பொருத்தமற்றதாக, சோர்வூட்டுவதாக, ஆர்வமில்லாததாக அமைகிறது. நாம் அவர்களைப் பொறுப்பில்லாதவர்கள், கவனமில்லாதவர்கள் எனக் குற்றம் சாட்டுகிறோம். பிழை யாருடையது என்கிறார்.
Response Related Teaching and Learning
டிஜிட்டல் நேடிவ்ஸ் தங்களது பழக்கங்களிலிருந்து திரும்பி வருவதென்பது சாத்தியமற்றது என நாம் அறிவோம். மருத்துவமனைகள் முதல் ரேஷன் கடைகள் வரை எல்லாமே டிஜிட்டல் பயன்பாட்டுக்குள்ளாகி வருகின்ற காலம் இது. Digital India என்பது நம் தேசத்தின் நவீன பிரகடனமாகவும் ஆகியிருக்கிறது. ஆகையால், அவர்களது ஆசிரியர்களும் டிஜிட்டல் இம்மிக்ரண்ட்ஸுமான நாம் தான் நமது கற்பித்தல் முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுவே இதற்கான தீர்வென்கிறார்.
சரி! தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், நமது கற்பித்தல் முறையில் டிஜிட்டல் சார்ந்து மாற்றங்கள் எதுவுமே நிகழவில்லையா என்றால், நிச்சயம் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. Chart, Chalk piece போன்றவற்றிலிருந்து power-point, content videos என்பதாக கற்பித்தல் உபகரணங்கள் உருமாறியுள்ளன. பாடப்புத்தகங்களின் அங்கமாக மாறியிருக்கும் Quick Reference Code-கள் பாடம் சார்ந்த கூடுதல் விவரங்களை மாணவர்களின் விரல் நுனியில் கொணர்கின்றன. தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான பள்ளிகளுக்கு கணினி, மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் கற்றல் உபகரணங்களாயிருக்கின்றனவே தவிர கற்றுக்கொள்ளும் விதம் ஒரே மாதிரியானதாகத் தான் இருக்கிறது.
மாணவர்களுக்கு ஒரு பாடப்பொருளைப் பற்றிய கருத்துகள் ஆசிரியர் உரை, வீடியோ போன்றவற்றின் மூலம் புகட்டப்படுகின்றன. ஆனால் instant gratification-ஐ எதிர்நோக்குவதாகத் தகவமைந்துள்ள அவர்கள் மூளைக்கு இது போதுமானதா? இல்லை எனில், அப்படிப்பட்ட ஒரு கற்பித்தல் முறையை வடிவமைத்தல் வேண்டும்.
அது சாத்தியமானதா? இதை நமது ஆசிரியர்களிடமும் துறை வல்லுநர்களிடமும் கேட்டால் ஒரு ஆரம்பக்கட்டத் தயக்கத்திற்குப் பிறகு அவர்கள் ஆமோதிப்பாகத் தலையசைப்பார்களாயிருக்கும். எல்லாப் பாடங்களுக்கும் response related கற்பித்தல் முறைகளை வடிவமைக்க முடியும்தான்.
கனவும் நடைமுறையும்
Response Related கோட்பாட்டின் அடிப்படையில் வடிவமைத்த கற்பித்தல் முறையை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்கள் இருக்கின்றன. ஏனென்றால், ”புதிய விஷயங்களைச் செய்வது வேறு, பழைய விஷயத்தைப் புதிய முறையில் செய்வது வேறு. முதலாவதை விட இரண்டாவது மிகக்கடினம்.”
இதனை நான் கண்முன்னே கண்டிருக்கிறேன். மாணவர் மையக் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அடிப்படையில் 2007-08 முதல் செயல்படுத்தப்பட்ட ‘செயல்வழிக் கற்றல்’ என்னும் புதிய முறையில் பாடங்களைக் கற்பிக்கவேண்டி வந்தபோது நமது ஆசிரியர்கள் பலருக்கும் அதில் சிரமங்கள் இருந்தன. ஆசிரியர் மையக் கற்பித்தலுக்குப் பழகியவர்களுக்கு, இனி தான் மாணவர் முன் நின்று உரையாற்றப் போவதில்லை – மாறாக அவர்கள் அருகிலமர்ந்து அறிமுகம் மட்டும் தந்து பின் அவர்களது சந்தேகங்களைத் தீர்க்கப்போகிறோம் என்பது முதல் அதிர்ச்சி. வகுப்பு நேரம் முழுதும் முன்னால் நின்று உரையாற்றாமல் கற்பிக்க முடியும் என்பதை பலராலும் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. ஆசிரியர் மாணவர் பின்னூட்டங்கள் அடிப்படையில் இந்தப் பனிரெண்டு ஆண்டுகளில் அது எளிமைப்படுத்தப்பட்டு வேறு வடிவங்களில் வேறு பெயர்கள் மாற்றப்பட்டு தொடரப்படுகிறது. இதற்கு ஆசிரியர் மாணவர் விகிதம், கற்றல் அட்டைகளின் சிதைவுறும் மற்றும் காணாமல் போகும் தன்மை போன்ற புறக்காரணிகளும் காரணம் என்பதை ஒதுக்க இயலாது.
போலவே இந்த செயல்வழிக் கற்றலை அரசாங்கம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே கட்டாயமாக்கியது. ஒரு புதிய முயற்சியை, எல்லா ஆய்வுகளுக்குமான அடிப்படை விதியின் அடிப்படையில், வெவ்வேறுபட்ட களங்களில் முயற்சித்துப் பார்த்திருக்க வேண்டும். மாறாக, அரசுப்பள்ளி மாணவர்கள் மீது இது முயற்சித்துப் பார்க்கப்பட்ட போது தனியார் பள்ளிகள் தங்களுக்கு வசதியான முறையில் கற்பித்து வந்தன. அரசுப்பள்ளி மாணவர்களது அடிப்படை வாசித்தல், எழுதுதல் திறன்களில் இக்குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட பின்னடைவை இதனோடு பொருத்திப் பார்த்து ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் சில தெளிவுகள் கிடைக்கக்கூடும்!
இந்த அத்தனை விஷயங்களையும் நாம் டிஜிட்டல் அடிப்படையிலான response related கற்பித்தல் முறையைச் செயல்படுத்தும் சூழலுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். ஆசிரியர் – மாணவர் விகிதம், மாணவர் – கணினி விகிதம், மின்சார வசதி, ஆசிரியர் மனமாற்றம், பெற்றோர் மனமாற்றம், அரசின் நிதி ஒதுக்கீடு (புதிய பாடங்கள் வடிவமைத்தல், டிஜிட்டல் உபகரணங்கள், டிஜிட்டல் உபகரணங்களின் பொருட்டு பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்தல், ஆசிரியர் நியமனம்…), அரசின் கொள்கை முடிவுகள் போன்ற எல்லாவற்றையும் கடந்தே இது நடைமுறைப்படுத்தப்பட முடியும். ஏனெனில் கற்பித்தல் முறைகள் களத்தில் நிகழ்கின்றன; தேர்வு முறைகளைப் போல மேலிருந்து கீழாக அவற்றைத் தூவிவிட முடியாது.
இந்த எல்லா மாற்றங்களையும் கைக்கொண்டு நாம் டிஜிட்டல் நேடிவ் குழந்தைகளைக் கையாள்வதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும் எனத் தெரியவில்லை! அதற்குள்ளாக அவர்களே பணிக்கு வந்து பாதிப் பிரச்சனையைக் குறைக்கக்கூடும் அல்லது காலம் இன்னும் கொஞ்சம் முன்னோக்கிச் சுழன்று வேறு புதிய பிரச்சனைகளை அவர்கள் முன் வைக்கக்கூடும்! ஒவ்வொரு தலைமுறையும் தனது அடுத்த தலைமுறையைப் பொறுப்பற்றவர்கள் எனச் சாடும் பழக்கத்தை அவர்களும் தொடரக்கூடும்.