நானொரு குதிரைக்குட்டி – லேலா பாலபக்கி

0 comment

இன்னமும் என்னுடைய உடல் தளர்ந்துதான் இருந்தது. என் கழுத்தின் மீது விரல்களை ஓட்டினேன். துருத்திய பச்சை நரம்புகளின் துடிப்பையுணர்ந்தேன். மேலாடையை  நெஞ்சுப் பகுதியைச் சுற்றி இழுத்துவிட்டுக் கொண்டு, கண்களை மூடி, அறையின் மேற்கூரையை நோக்கி என் முகத்தை உயர்த்தினேன்.

மறுபடியும் என்னுடைய கால்மூட்டுகளின் மேல், ஆடையின் கனத்தை உணரத் துவங்கினேன். என் தோள்களை அணைத்தபடி தலையைத் தாழ்த்தி, என் முகவாயை ஆடைக்குள் புதைத்துக் கொண்டேன். பின்பகுதியில் உடை ஒட்டிக்கொண்டது. திடீரென ஒரு குறிப்பிட்ட வாசனையை நுகர்ந்தேன். பின்பு சுயநினைவிழந்தேன். நான்…

(நதிக்கரையில் மெதுவாய் முன்னேறிச் செல்லும் ஒரு வெள்ளை பெண் குதிரைக் குட்டியானேன். அவள் தன் கழுத்தை பரந்த வெளியில் நீட்ட, தலை பரிசுத்தமான வானை முட்டுகிறது. மரங்களையும், புல்வெளியையும், தூரத்து மலைகளையும், வீடுகளையும், பள்ளத்தாக்குகளையும் சுழித்துக் கொண்டோடும் ஆற்றோட்டத்தை நோக்குகிறாள்.. அவள் கழுத்தை அசைத்தவுடன் ஒரு வெண்மேகம் அவளைச் சுமந்து சென்று நீரின் மேற்பரப்பில் அவளுடன் இறங்குகிறது. அருகிலும் தொலைவிலும் அமைந்த குளங்களில் வசிக்கும் தவளைகள் பாடுவதைக் கேட்கிறாள், வண்ணங்கள் நிறைந்த பட்டாம்பூச்சிகள் நடனமாடுவதைப் பார்க்கிறாள். தான் பெண் குதிரையாகப் பிறந்திருக்காவிட்டால், சூரிய ஒளியிலும் சந்திர முகத்திலும், மரங்களற்ற புல்வெளிகள் மீதும்  அதிகாரத்தை செலுத்தும் பட்டாம்பூச்சியாகப் பிறந்திருக்கத் தேர்ந்தெடுத்திருப்பேன் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.

ஒரு நாள், ஊற்றில் நீரருந்திக் கொண்டிருந்தாள் அப்பெண் குதிரைக்குட்டி. பனிப் பொழிந்திருந்த பிரதேசத்திற்கு மேற்கொண்ட பயணத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தாள். பிரகாசமாகவும் பளபளப்பாகவும் இருந்ததொரு புதிய உலகை அங்கே கண்டிருந்தாள். அங்கு மரங்கள் மலைகளின் மேல் ஏற்றிய மெழுகுவர்த்திகளாக இருந்தன. வீடுகள் வெள்ளைக் கம்பளி உடையும் சிகப்புத் தொப்பியுமணிந்த குழந்தைகள் போலிருந்தன.

நீரருந்தியபடியிருந்தக் குதிரைக்குட்டிக்கு இந்தக் காட்சிப் படிமங்களெல்லாம் இன்னமும் பசுமையாக நினைவிலிருந்தன. நீர் சுவையாக இருக்கின்றதேயென எண்ணிய சமயத்தில், ஜாக்கிரதையான காலடிச்சுவடுகள் தன்னை நோக்கி வருவதை அறிந்தாள். ஓரக்கண்களால் பார்த்த அவள், அது ஓர் ஆண் என்று கண்டுகொண்டாள். பயத்துடன் குதிக்கவோ அவனை உதைத்துத் தள்ளவோ அவளைத் தடுத்தது எதுவென்று அவள் அறியவில்லை.அந்த மனிதனின் வாசனையை முகர்ந்தாள். அவள் நாசித்துளைகளில் ஊடுருவிய அவ்வாசனை அவளுடைய இதயத்தின் ஆழத்திற்குக் கசிந்து சென்று, அங்கே படிந்தது. பெண் குதிரைக்குட்டி அம்மனிதனை தனக்கருகாமையில் வரவும், தனது பின்னுடலில் கைகளை வைத்துத் தடவிக் கொடுக்கவும்,  நீளமான நிமிர்ந்த கழுத்தில் கைகளை வைத்தணைத்து, நகரத்திற்குத் தன்னுடன் எடுத்துச் செல்லவும் அனுமதித்தது.)

நான் கண்களைத் திறந்த போது, என்னுடைய முகம் அறையின் மேற்கூரையை நோக்கித்  திருப்பியிருந்தது. அங்கே குதிரைக்குட்டியின் உருவம் மறைந்துவிட்டிருந்தது. என்னிரு கரங்களாலும் நெற்றிப்பொட்டைத் தேய்த்துக் கொண்ட சமயம், என் காதுகள் துடிக்க ஆரம்பித்தன. மேற்கூரையின் அதீத வெண்மை நிறம் திகைப்பூட்டியதால், நான் கருமை திரண்டிருக்கும் அதன் மூலைகளைத் தேடினேன். பிறகு என் விழிகள் மூன்று சுவர்களின் நெடுகிலுமிருந்த ஆறு ஜன்னல்களின் விளிம்புகளின் மேல் விழுந்தன. நான் சுவாசத்தை இடைநிறுத்தினேன். சட்டென ஒரு பயம் என் கணுக்களில் மெதுவாக ஊடுருவியது. இரும்புத் தண்டுகளால் மூடப்பெற்ற ஜன்னல்கள் யாவும் குறுகியதாகவும், மிக உயரமாகவும் இருப்பதை முதன்முறையாக நான் கண்டுகொண்டேன். அவற்றில் கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை. தரைவரை நீண்ட இரண்டு மரத் தடுப்புகளால் வெளிப்புறம் பொருத்தப்பட்டிருந்தன. அதில் பூசப்பட்டிருந்த பச்சை வண்ணச் சாயம் உதிர்ந்திருந்தது. அவை துருப்பிடித்த ஆணிகளால் முடுக்கப்பட்டிருந்தன.

ஜன்னல்களின் விளிம்புகளிலிருந்து ஊடுருவிய தூசு அறையின் உள்ளே சேர்ந்திருந்தது. நாற்காலியின் மீது நான் சுருண்டு அமர்ந்திருந்த கோணத்திலிருந்து நோக்கும் போது, மென் வண்ணங்களிலான ஓடுகள் பதித்த வெற்றுத் தரையின் மீதிருந்த பெரிய வட்டமேஜைக்குக் கால்கள் இல்லையென்பதாகத் தோன்றியது. அந்த நீண்ட சாய்வு நாற்காலி, தரையின் மேல் ஊர்வது போலிருந்தது. அந்தக் கணத்தில், அவ்வறையில் என்னுடன் இருந்த மனிதனை யாரென கண்டுகொண்டேன்.

பெண்குதிரைக் குட்டியுடன் இருந்த அம்மனிதன் தான் இவன். மேற்கூரையிலிருந்து, இருண்ட குளிர் நிறைந்த இரகசியமான பாதாள அறை போல காட்சியளித்தது அந்த அறை.

நானந்த மனிதனைக் கண்ட சமயம், எலிகள் குடியிருக்கும் இருண்டதும் முடிவற்றதுமான ஆழமான குழியென அந்த அறை மாற்றம் கொண்டது. நானொரு சுண்டெலி, அவன் வீட்டின் உரிமையாளன்.

மீண்டுமொரு முறை சுயநினைவற்றவளானேன்.. நான் ..

(மெல்லிய பிசுபிசுப்பான, சில்வண்டை விட சற்றே பெரியதாயிருக்கும், சுண்டெலியானேன். முடிகளற்ற ஊளைச் சதைக் கொண்ட உடம்பும், சிவப்பு மூக்குடன் பளபளப்பான வெளுத்த மஞ்சள் கண்களுடனும் அவள் இருக்கிறாள். தாத்தாவிடமிருந்து அவனுடைய தந்தைக்கும் தந்தையிடமிருந்து இம்மனிதனுக்கும் பரம்பரையாக கிடைத்திருக்கும் பழைய நாற்காலியில் அந்த எலி வாழ்ந்து வந்தது. அவன் விளக்குகளை அணைக்கும் போது அது தன் வளையை விட்டு வெளியில் வந்தது. திருட்டுத்தனமாகவும் பயத்துடனும் மேஜைக்கு வந்து, அதன் மேலிருக்கும் அவன் இரவுணவின் மீதத்தை உண்கிறது. அவனுடைய காப்பிச் சக்கைகளை அருந்தி, அவன் கைகளுக்கடியில் உறங்குகிறது. அம்மனிதன் உறக்கத்தில் அசையும் போதெல்லாம் அவளை நசுங்கச் செய்து, மரணம் நேரத்தக்க வகையில் மூச்சடைக்கச் செய்கிறான்.

பகலில் அவன் ஒரு பொறியை அமைக்கிறான். வெண்ணெயில் முக்கப்பட்ட ரொட்டித் துண்டு சொருகப்பட்ட கொக்கியுடனான முள் கொண்ட, மரத்திலான பொறியை தினந்தோறும் கொண்டு வருகிறான். கதவுக்குப் பின்புறம், பின்பு மேஜைக்கு அடியில், அதன் பிறகு நாற்காலிக்கு மேல், பிறகு அலமாரிக்கு உட்புறம் என்று இறுதியில் வீடு முழுவதும் அதனை நகர்த்திப் போகிறான். “அவனுக்குத் தெரியவில்லை, என்னிடமிருந்து விடுபட வேண்டுமெனில் அம்மனிதன் தனது பிடியைத் தளர்த்த வேண்டுமென”. சுண்டெலி தனக்குள் நினைத்துக் கொள்கிறாள்.)

நான் சிரித்தேன். மெய்யான உடல் கொண்டதொரு சுண்டெலியாக என்னைக் கற்பனை செய்து கொண்டேன். அந்தரத்தில் குதிக்கின்ற, மரச்சாமான்களின் மீது தாவுகின்ற, அவளைக் கொல்லும் நோக்கில் துரத்தும் அவன் மூக்கின் மீதும் தத்துகின்ற சுண்டெலி. நான் சிரித்தேன் – அந்த மனிதன்  – என் கணவன் பத்திரிக்கையிலிருந்து மூக்கினை உயர்த்தி, திகைத்தபடி முகச்சுளிப்பும் ஏளனமும் கொண்ட பார்வையை வீசினான். “கிறிஸ்டைன் கீலர்-ஓ.. எப்படிப்பட்ட பெண்மணி!” அவன் முணுமுணுத்தபின் மறுபடியும் தன் மூக்கை பத்திரிக்கையின் பக்கங்களில் புதைத்துக் கொண்டான்.

நான் சிரிப்பதை நிறுத்தி அவனைப் பார்த்தேன். சாம்பல் கிண்ணம், பாதி வரை நிரப்பப்பட்ட தண்ணீர் குப்பி, காலி டம்ளர்கள், அணைக்கப்பட்ட சிறிய வானொலி ஆகியவற்றுக்கிடையே கால்களை நீட்டியிருந்த அவன், நாற்காலியில் சாய்ந்து கொண்டு, பாதங்களை மேஜையின் விளிம்பில் வைத்திருந்தான். அவன் அணிந்திருந்த, பச்சையும் வெள்ளையுமாக கோடிடப்பட்டிருந்த, பருத்திக் குளியலாடை நெஞ்சிலிருந்து இடுப்பு வரை திறந்திருந்தது. அவனுடைய தோலின் நிறம், வயிற்றை விட நெஞ்சுப் பகுதியில் கறுத்தும், வயிற்றுக்கப்பால் இன்னும் கறுத்த நிறத்தினைக் கொண்டதாக, கேளிக்கை விருந்துக்குப் போன போது, அங்கே சந்தித்த மது அருந்திய பொன்னிறமான தலைமுடியுடைய ஒருவனுக்கு உடைமையானதை இவன் எடுத்துக் கொண்டு வந்துவிட்டதாக, அவனுடைய தலை உடலின் மற்ற பாகத்துடன் ஒட்டாமல் தனித்திருந்தது. அதிகாலை கிளம்பும் பொழுது, இருவரும் அங்கிருந்து புறப்படத் தயாராகும் சமயம், நடைக் கூடத்தின் அடுக்குச் சட்டத்திலிருந்து அவர்களுடைய தலைகளை எடுத்துக் கொண்டனர். இருவரில் ஒருவன் தப்பிதமாக தலையை மாற்றி எடுத்துக் கொண்டுவிட்டான், மற்றவனின் பெயரோ முகவரியோ பரஸ்பரம் அறியாதிருக்கின்றனர் இப்போது.

இப்படி கற்பனை செய்து கொண்டதும், நான் இன்னமும் சிரித்தேன். அவன் – என் கணவன் – கடன் வாங்கியத் தலையுடன் அசைந்த போது, நொடிப் பொழுதில் அவன் முகவமைப்புகள் தெரிந்தன. முகம் பாவனையற்றிருந்தது. அது மறுபடியும் பத்திரிக்கையில் மறைந்து போன போது, நான் சிரிப்பதை நிறுத்தியிருந்தேன். இந்த முகத்தினை முன்பு எதிர்கொண்டிருக்கிறேன் என்ற ஞாபகம் வந்தது .எப்பொழுது? எங்கே? அதிலென்ன மாற்றம் இப்போதிருக்கிறது?

கடந்த காலத்திற்குப் பயணம் செய்வது சிரமமானதாகயிருந்தது. நீளமான இருண்ட சுரங்கத்தைக் கடப்பதைப் போல கண்களை மூடிக் கொண்டேன். நான் ஏழு வருடங்களுக்கு முன்பான அக்கணத்தில் போய் நின்றேன்.

இப்போதைப் போலவே அப்போதும் வேனிற்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய தோழியின் வீட்டில் அவனைச் சந்தித்தேன். அவனைக் கண்டவுடன், “இவன்தான் என் கனவுகளின் நாயகன்” என என் தோழியின் காதில் கிசுகிசுத்தேன். என்னை நோக்கி வந்து நான் எங்கிருந்து வந்தவள் என்று வினவினான். நான் இம்மண்ணை சேர்ந்தவள்தானென சொன்னேன். பிறகேன் நாம் இதற்கு முன்பு சந்தித்ததில்லை எனக் கேட்டான். நான் ஐரோப்பாவில் இருந்தேன் என்றும், அங்குள்ள தலைநகரங்களுக்கிடையே பயணம் மேற்கொண்டு, பாலே நடனம் கற்றுக் கொண்டிருந்தேன் என்றும் பதிலுரைத்தேன். கோடை விடுமுறையை என் தாயுடன் கழித்த பின்பு மீண்டும் அங்கே சென்றுவிடும் திட்டமிருப்பதாகக் கூறினேன். நான் ஏன் இப்படியானதொரு கலையை – நம் சூரியனுக்கும், மண்ணுக்கும், அதன் அடர்ந்த தலையுள்ள கறுப்பு மக்களுக்கும், அந்நியமான நடனத்தை தேர்வு செய்தேன் என்று வினவும் பொழுது அவன் குரல் குழறியது.

அவனுக்கு நெடிய கதையொன்றைச் சொன்னேன். “ஐந்து வயது நிரம்பிய சிறுமி ஒருத்தியை அவள் அம்மா ஒரு நாள் மதியம் கைப்பிடித்து நடத்தியபடி அழைத்துப் போனார். சூரியன் வெளுத்திருந்தது, சந்துகள் குளிர்ந்திருந்தன, வீட்டு ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஒரு பழைய செங்கல் வீட்டின் முன் நின்ற போது, அம்மா அக்கதவின் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தார். அதீத வெண்மையும் சுருக்கங்களும் கொண்ட முகமுடைய வயதானவர் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். அவர் தனது நீண்ட விரல்களமைந்த மெல்லிய கையை நீட்டி, அம்மாவுடன் கைக்குலுக்கினார். பிறகு சிறுமியின் தலைமுடிகளை செல்லமாகக் கலைத்துவிட்டு, அவர்கள் அவருக்கு முன் நடக்க, உடன் வந்தார். அவளை நாற்காலியில் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டார், முதல் ப்யானோ வகுப்பை இவ்வாறாக அவள் கற்றாள். அதே சமயம்  மூலையில் கண்களை மூடி அமர்ந்திருந்த அவளுடைய அம்மாவின் அழுகையிலிருந்து வெள்ளமாகப் பொங்கிய கண்ணீர் அவர் மார்பில் வழிந்தோடியபடியிருந்தது.”

“ஆரம்பத்தில் ப்யோனோ வகுப்புகள் மிகவும் மகிழ்ச்சிகரமாகக் கழிந்தன. நான் பெருமையாக உணரத்தக்க வகையில், ஒரு வேடிக்கையான விளையாட்டைப் போலிருந்தது. ஏனெனில் என் சின்னஞ்சிறிய நண்பர்களுக்கிடையே நான் மட்டுமே அந்தத் திறமையைப் பெற்றிருந்தேன். அந்நியநாட்டவரான என் தாய், தனது நாட்டைப் பற்றிய கனவுகளும் அந்த தூர தேசத்திற்கான ஏக்கங்களும் கொண்டிருந்தபடி, முப்பது வருடங்கள் என் தந்தையுடன் வாழ்ந்திருந்தார். என் தந்தை இறந்த போது அம்மாவின் கனவுகளும் அவருடன் மரித்தன. பிறகு அக்கனவுகளை எனக்கு பரிமாற்றம் செய்துவிட்டார். மறுபடியும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு, அவருடைய தாய்மொழி பேசும் ஒரு பெண்மணியின் சிறிய வீட்டிற்கு அழைத்துப் போனார். என் நடனத்தின் முதல் பாடத்தைக் கற்றபோது இப்படி நடந்தது” என்று அவனிடம் சொன்னேன்.

என் தாய் தன்னுடைய மோதிரங்களையும் வளையல்களையும் நான் ஐரோப்பா செல்ல வேண்டுமென்பதற்காக விற்றார் என்பதையும், நான் அங்கு தங்குவதன் பொருட்டு தன் மரச்சாமான்களை விற்பனை செய்தார் என்பதையும், என்னைக் காண பாரீஸ் வரவும் பின் அங்கிருந்து நாங்கள் ரோம் நகரத்திற்கு பயணப்படவும் தேவையாகயிருந்த பணத்திற்கு தன் தந்தையின் கிராமத்திலிருக்கும் நிலத்தை அடமானம் வைத்தார் எனவும் அவனுக்கு எடுத்துரைத்தேன். நேர்மறையாக அனைத்தையும் எதிர்கொண்ட அம்மாவின் தலை நரைத்தது, என்னுடைய தலைமுடி நீளமாக அடர்ந்திருந்தது. நடனத்தில் தேர்ச்சியடைந்திருந்தேன். வரும் பனிக்காலத்தில், “பாரீஸ் ஓபரா”வில் நான் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் இப்பொழுது ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம் என்பதைச் சொன்னேன்.

அவன் ஒன்றும் பேசவில்லை. எனது கைகளைப் பற்றிக் கொண்டு, என்னுடைய தோழியின் வீட்டுப்படிகள் வழியே நடத்திச் சென்று, ‘பெரூட்’டின் ஆளற்ற வீதிகளில் என்னுடன் சுற்றினான். தோட்டத்துடன் அமைந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், அழைப்பு மணியை ஒலிக்கவில்லை, ஏனெனில் அக்கதவு பூட்டியிருந்தது. ஒரு வார்த்தையும் பேசாமல் அவன் என்னை ஒரு மரத்தினடியில் அமரச் செய்தான்.

என் தாய் இந்நாட்டில் அந்நியமாய் உணர்ந்ததைப் போல நான் அந்த நாட்டில் எப்படி அந்நியமாக உணந்தேன் என்பதை அவனுக்குச் சொன்னேன். தோலை வாட்டி வியர்க்கச் செய்யும் சூரியன், சோகமான பாடல்கள், அடர்கருப்பு வானில் ஒளிரும் நட்சத்திரங்கள், பெல்லி நடனம், வெள்ளி வளையல்கள், வெறுங்காலுடனான மனிதர்கள் என இந்நிலத்திற்கான ஏக்கங்களை வெளிப்படுத்தினேன்.

நான் நடனமாடாமல் உயிர் வாழ முடியாதெனவும், ஆட முடியாவிடில் மூச்சுத்திணறி இறப்பேன் என்பதையும் விளக்கினேன். நான் அந்நாட்டிற்கும் அந்நியமானவளாக இந்நாட்டிற்கும் அந்நியமானவளாக இருந்தேன்.

அவன் இப்போதும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவனுடைய கைகளை என் இடுப்பில் வைத்து அருகில் இழுத்தணைத்தான். அவனது மூச்சுக்காற்று காதோரம் வருடியது. அடிமரத்திலிருந்து வெடித்த நீரூற்று என் முகத்தில் பீறிட்டு வழிந்ததாக உணர்ந்தேன். அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்ட போது, கிளைகளில் தொங்கும் நட்சரத்திரங்களைக் கண்டேன். என்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டு கைகளால் அணைத்தபடி, நான் மகிழ்ச்சியுற்றவளாக இருக்கிறேனா எனக் கேட்டான். நான் ,காட்டுவெளியில் நிர்வாணமாகத் திரியும் போது மழைத்துளிகள் என் மீது தெறிப்பது போலவும், அமைதியாக அங்கங்கே பற்றி எரியும் சிறு மரத்தண்டுகள் நீலமும் சிவப்புமான ஜ்வாலையுடன் காட்சி தருவதைப் போலவும் உணர்கிறேன் என்றேன். என்னை, இப்போது அறுவடைக்கான காலத்தை நெருங்கிவிட்ட தண்டுக் கரும்பு எனவும், இந்தக் கரும்பு இத்தனை நாள் வெப்பமான நாட்டில் செழுமையான நிலத்தைத் தேடிக் கொண்டு தொலைந்திருந்தது எனவும் சொன்னான். நான் என்னுடைய இனிப்பை அவனுக்குப் புகட்டினால் தன் தமனிகளை அறுத்து இரத்தத்தைப் பரிசளிப்பேன் என்றான். அவனை மணந்து கொண்டால் நான் செய்ய வேண்டியதெல்லாம் நடனம், நடனம், நடனம் மட்டுமே, காலத்தின் இறுதிவரை வானுக்கும் பூமிக்குமிடையே நடனமாடிக் கொண்டே இருக்கலாம் என்றான்.

அவனைத் திருமணம் செய்து கொண்டேன். துக்கத்தில் என் அம்மா இறந்து போனார்.

என்னுடைய மகளை நான் கர்ப்பம் கொண்டதும், எனது தாயின் மரணத்திற்கு நான் காரணமாகயிருந்தேன் என்ற எண்ணம் மறைந்தது. அம்மா, எனது மகளாக என்னுடைய வயிற்றில் இருக்கும் போது, இனியும்  என் மீது வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும்  இருக்க மாட்டார். அவர் இன்னொரு உருவில் என்னிடமே வருகிறார், என்னை தன் இரத்தத்தில் சுமந்ததைப் போல நான் அவரை என் இரத்தத்தில் சுமப்பேன். நான் குழந்தைப் பிறப்பின் வலிகளை தாங்கிக் கொள்ளும் பொழுது என் பாவங்களை மன்னித்து விடுவார். மெய்யாகவும் பிறகு, என்னுடைய அம்மாவின் ஜாடையையே ஒத்திருந்தாள் என் மகள்.

நான் குழந்தை பெற்றப்பின் நடனத்திற்குத் திரும்பலாம் என அவன் சத்தியம் செய்திருந்தான். அதற்கு என்னுடைய எடையைக் குறைக்க வேண்டியிருந்தது. அந்தக் காலைப் பொழுதை மறக்கவே மாட்டேன். நான் கட்டிலில் கை கால்களை நீட்டிப் படுத்திருந்தேன். உடலைப் பிடித்துவிடும் பெண்மணி மஸாஜ் செய்தபடி இருந்த போது என்னுடைய கணவன் கதவைத் திறந்தான். அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டு அவளை வீட்டை விட்டு வெளியேற்றினான். இவ்வீட்டில் எந்தப் பெண்ணும் ஆணுக்கெதிரில் இப்படிக் கால்களை விரிப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று அலறினான். நான் மேலும் கீழும் குதிப்பதற்கு பள்ளி தொடங்கும் முன், தாயாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும், மற்றவர்களின் பொழுதுபோக்கிற்காக ஆடும் முன்பு  குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டுமெனவும் கூச்சலிட்டான்.

இப்போது.. இப்போது.. மலை மேலிருக்கும் இந்த அறையில் மெதுவாகத் தன் பத்திரிக்கையின் பக்கங்களைத் திருப்பியபடி என் முன்னே இருக்கிறான். நெஞ்சுப் பகுதியில் இறுக்க இருக்கும்படி என் பட்டாடையை இழுத்துவிட்டேன். வெதுவெதுப்பான உடலின் மேல் அதன் மென்மையை உணர்ந்தேன். அந்தக் காலைப் பொழுதைப் பற்றி இப்போது நினைவில் கொண்டுவர முடியவில்லை. அப்போது ஒரு வார்த்தையும் நான் பதில் பேசவில்லை. சூரியன் அஸ்தமித்து இருள் கவிழும் வரை, நான் பல மணி நேரங்கள் அசைவற்றுப் படுக்கையில் கிடந்தேன். நான் அலறவில்லை, அழவில்லை, அசையவுமில்லை. எனக்குள் இருந்த ஒன்று திணறயடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தது என்றாலும் அதொரு இரத்தம் சிந்தா மரணம். எனக்குள்ளே நான் சுருங்கி விட்டேன். என்னுடைய பொழுதுகளையெல்லாம் என் மகளுக்கே அர்ப்பணித்தேன். அவளுக்குத் தாய்ப்பாலூட்டினேன், அவளின் அரைக்கச்சைகளை நானே எனது கைகளால் துவைத்தேன், அவளுடைய உடைகளுக்கு பூ வேலைப்பாடுகள் செய்தேன், அவளுக்கு நடைபயிலவும் பேசவும் கற்றுக் கொடுத்தேன்

நான் தவழ்ந்தேன். ஐந்து ஆண்டுகள், கீழ் நோக்கும் முகத்துடன், நான் தவழ்ந்திருந்தேன்.

இப்போது.. இப்போது தான் இந்த மனிதனை – என் கணவனை மீண்டும் சந்தித்தேன். சில நிமிடங்களுக்கு முன்பாக இவன் இப்பொழுது அமர்ந்திருக்கிருக்கும் இதே சாய்வு நாற்காலியில் நான் இருந்தேன். என் மீது அவன் இருந்தான். என்னுடைய உடலின் மேல் அவன் செலுத்திய அசைவுகளைக் கவனித்தேன். நான் நீண்ட, கனத்த, வறண்ட – சுயநினைவில்லாத நிலையில் இருந்தபோது, அவன் வீட்டிற்கு வருவதும், போவதும், உண்பதும், என்னுடன் படுப்பதுமாக ஐந்து வருடங்கள் கழிந்திருந்தது. இப்போது.. நான் விழித்துக் கொள்வேன்.. விழித்துக் கொள்வேன்.

நான் கண்களை அகலத் திறந்தேன். அவன் நெற்றியோரங்களில் சில நரைமுடிகளைக் கண்டேன். மேஜையின் மீது அவன் பாதங்களுக்கிடையில் ஒரு டம்ளர் நீரில், ஒரு சிவப்பு ரோஜா வைக்கப்பட்டிருந்தது. அது இரவு விடுதியின் வாசலில் விற்கப்படும் பூக்களை ஒத்திருந்தது. ஒரு சிறுகட்டு மென்தால் சிகரெட்டுகள் இருந்தன. அந்த அறையின் காற்றை முகர்ந்த போது, இரவில் ரகசியமாக அவனிடம் வரும் பெண்ணின் வாசத்தை அறிந்தேன். நான் கேலியாக மகிழ்ச்சியுடன் சிரித்தேன். “உனக்கென்ன பித்துப்பிடித்து விட்டதா? இப்படி வெறித்தனமாக சிரிப்பதன் அர்த்தமென்ன?” என்று அவன் முகத்தை சுருக்கியபடி கோபமாகக் கேட்டான்.

பத்திரிக்கையைக் கீழே வைத்துவிட்டு என்னை நோக்கும்படி சொன்னேன். குழப்பம் கொண்ட அவன் எனக்குக் கீழ்ப்படிந்தான். பத்திரிக்கை அவனது கைகளிலிருந்து நழுவி விழ, அவன் என்னைத் திகைப்புடன் கவனித்துக் கொண்டிருக்க, நான் ஆடையை உடம்பிலிருந்து கிழித்தெறிந்து விட்டு, நிர்வாணமாக அந்த நாற்காலியில் சுருண்டிருந்தேன். நான் அவனுடைய முகத்திலடித்தாற் போல திரும்பத் திரும்பக் கூறினேன், “என்னிடமிருந்து உன் கண்களை அகற்றாதே. மீண்டும் இப்பொழுது நான் அசையத் துவங்கியுள்ளேன். முதலில் துடிப்பான குதிரைக்குட்டியாக இருந்த என்னை சுண்டெலியாக மாற்றினாய். இனியும் வசியத்திற்கு ஆட்பட்டிருக்க மாட்டேன். மந்திரவாதியின் மந்திரக்கோல் தொலைந்துவிட்டது. பார்! என் கை கால்களை அசைக்க முடியும். நாற்காலியை விட்டு இறங்க முடியும். நடக்கவும் உடலை வளைக்கவும் முடியும். நான் மீண்டும் பெண் குதிரைக்குட்டி ஆகவும் முடியும்.

சன்னதம் கொண்டவள் போல அவன் முன்னே நடனமாடத் துவங்கினேன். என் அசைவுகளை கவனித்துக் கொண்டே என்னுள் கேட்டுக் கொண்டேன், “எங்கிருந்து நான் இந்த தைரியத்தை வரவழைத்தேன், எனது துணிவு எப்படி மீண்டது?” என்னுடைய தோலின் ஒவ்வொரு துளையிலிருந்தும் வியர்வை ஊற்றெடுத்தது. என்னுடைய மகள் என்னை நோக்கி மகிழ்ச்சியாக சிரித்தாள். எனக்குப் பைத்தியம் பிடித்துள்ளதாகக் கூறினான். பைத்தியம்! மெல்ல என் நடனத்தை நிறுத்தினேன். என் மகளை ஏந்திக்கொண்டு என்னுடைய அறைக்குச் சென்று, கண்ணாடியின் முன்பு அவளுடன் நின்று என்னைப் பார்த்துக் கொண்டேன். ஐந்து வருடங்களாக என்னை பார்த்துக் கொள்ளவில்லை. ஆடைகளை உடுத்திக் கொண்டேன். அவன் தொடர்ந்து பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருந்தான். என் மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். தொலைவிற்கு..

வெகு தொலைவிற்குச் சென்றேன்.

*

லேலா பாலபக்கி (Layla Balabaki, 1936)

நாவலாசரியர், பத்திரிக்கையாளர், பெண்ணியவாதி, சமூக ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டவராக அறியப்படும் லேலா பாலபக்கி, தெற்கு லெபனானில் பிறந்தவர். தன்னுடைய எழுத்துப் பயணத்தை பத்திரிக்கையாளராகத் துவங்கியவர். தனது இருபத்திரெண்டாம் வயதில்  முதல் நாவலை வெளியிட்டார். (அனா அஹ்யா – I Live)

1963ம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அவரது கதைகளில் இடம்பெற்றிருந்த கருத்துகள் இஸ்லாம் மதத்திற்கும் பொது நல்லொழுக்க விதிகளுக்கும் எதிரானவை என்று தடை செய்யப்பட்டன. பிறகு அது நீக்கப்பட்டதென்றாலும் அவர் பின்னாட்களில் வேறு கதைகள் எதையும் வெளியிடவில்லை. அவரது எழுத்துகள் அரசியல் எழுச்சிக்கும் வித்திட்டன.

*

மூலம்: The filly became a mouse, Layla Balabakki