திகிலும் கலவரமும் சூழ சத்திரத்துத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருந்தான் இருசப்பன். போன ஆட்டமே ஒரு சீட்டில் போய் விட்டது. கையிலும் காசு போண்டி. இந்த ஆட்டமாவது காட்டினால் தான் தொடர்ந்து ஆட முடியும். நாலடி கட்டுக் கட்டியாகிவிட்டது. மூணடி கட்டும் ஒன்று பூர்த்தி. ஸ்பேட் நாலும் அஞ்சும் கையிலிருக்கிறது. மூணு வந்தாலும் சரி, ஆறு வந்தாலும் சரி. கையைக் காட்டி விடலாம். மேசை ரெண்டரை ரூபாய் வரும். அடுத்த ஆட்டம் போடலாம். ஆனால் அதற்குள் யாரும் கையைக் காட்டாமல் இருக்க வேண்டுமே!
‘ஏம்பா, என்னுமோ நாங்க சொல்ல சொல்ல இருக்காதுன்னியே, இப்பக்கூடம் அவன் உங்க வூட்டதாம்பா இருக்கிறான்…’ சுற்றிலும் சூழ்ந்து நின்று ஆடிக்கொண்டிருக்கிற ஆட்களுக்கு ஐடியா கொடுக்கிற கும்பலில் புதிதாக வந்து சேர்ந்த மணி சொன்னான்.
இருசப்பன் அதைக் காதில் வாங்காத மாதிரி பேசாமலிருந்தான். எல்லோர் முகங்களும் சீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தன.
‘ஏம்பா அந்த ஏகாம்பரம் என்னாபா, எப்பப் பாத்தாலும் உன் வூட்டுப் பக்கமாவே சுத்திக்னுக்கிறான்.’
‘எந்த நேரமும் உன் வூட்டுலியே இருக்கறானே நீயில்லாட்டா கூடம். உன் சம்சாரம் ஒண்ணும் சொல்லாதா…’
‘அட நீ ஒண்ணு… ஒண்ணுமில்லாதவா அவன் வர்றான்!’
‘அதான கேட்டேன். அடிக்கடி அங்கியே சுத்திக்னுக்கிறானே என்னாடான்னு பார்த்தேன்…’
‘அவன் என்ன சும்மாவா சுத்தறான். எல்லாம் காரியத்தோட தான் சுத்தறான்.’
‘அட என்னடா நீ! இப்பத்தான் என்னுமோ புதுசா இல்லாத்த கண்டுபுடிச்சிட்டா மாதிரி. சொல்லித்தான் தெரிஞ்சிக்கணுமா அதல்லாம்…’
‘அதான் வாத்தியார் கமுக்கமா இருக்காரா…’
இந்த மாதிரி உரையாடலைக் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டவன் அவன். கேட்கும்போது எரிச்சலடைவான் ‘போங்கடா.. அதல்லாம் ஒண்ணும் கெடையாது. சும்மா வருவான் போவான். அத வச்சி கத கட்டிட வேண்டித்தானா’ என்று வெறுப்போடு அவர்களைப் பார்த்துச் சொல்வான். ‘எவம் பொண்டாட்டிய எவம் போனா இவங்களுக்கு என்னா? அவனவனுங்கனுத பத்தரமா வச்சிக் காபந்து பண்ணிக்னா போதாதா எங்கியும் மேய வுடாம’ மனசுக்குள் குமைந்து கொள்வான் .
‘என்னாபா… நான் சொல்றேன்.’
‘சும்மா இர்றா. இருக்காது.’
அசட்டையாகச் சொல்லிவிட்டுச் சீட்டிலேயே கண்ணாயிருந்தான். ஒவ்வொரு சீட்டை எடுத்துப் பார்க்கும்போது அது ஸ்பேட் ஆறாகவோ மூணாகவோ இருந்து விடக்கூடாதா என்கிற ஆதங்கம். இருந்துவிட வேண்டுமே என்கிற பதைப்பு. அதற்குள் யாரும் காட்டி விடுவார்களோ என்கிற பயம்.
‘ஏம்பா, இப்ப நான் கண்ணால பாத்துட்டு வந்து சொல்றேன். நீ என்னடான்னா இருக்காதுன்றியே..’
‘சும்மா வந்து குந்தி பேசிக்னு இருப்பான். போடா….’
இன்னும் ஒரே சீட்டு, ஒரே ஒரு சீட்டு. பழுத்துப்போன ஈச்சம் பாயில் வறுக்வறுக்கென்று சீட்டை இழுத்துக் கொண்டிருந்தான். மனசு கலவரப்பட்டது. யார் முகத்தில் ஆட்டம் அடிக்கிற குறி இருக்கிறது என்பது தெரியவில்லை. மூணு ஆறு எல்லாம் எவனாவது மொக்கை கட்டி விட்டிருப்பானோ? அல்லது ஆஸ் ரெண்டு மூணு, ஆறு ஏழு எட்டு எவனாவது சீரியல் பிடித்துவிட்டிருப்பானோ! ஏழு ஓபனில் கிடந்தது. விரல்கள் நடுங்கின.
‘சும்மா குந்திப் பேசிக்னு இருக்கறதுன்னா கதவ தாப்பா போட்டுக்னுதான் பேசணுமா?’
‘அட ஏன்டா நீ வேற சும்மா உயிர வாங்கற…’
இருசப்பனுக்குக் குப்பென்று முகம் வியர்த்தது. கழுத்து வியர்த்தது. ரோமம் அடர்ந்த நெஞ்சு வியர்த்தது. திடுக்கிட்டுப் போனான். இந்த ஆட்டமும் வீரப்பனே அடித்து விடுகிறான்.
‘இவனுக்கு இன்னைக்கி என்ன ராசியோ. எங்கியாவது பீய கீய மெறிச்சிக்னு வந்திடிருப்பானோ…’
‘எம்மாம் நேரமா ஒரு சீட்டுல ஆடிக்னு இருக்குது. எங்கியோ கெடந்து வந்து அடிச்சிட்டானே….’
துண்டால் உடம்பைத் துடைத்துக்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் வீரப்பனைப் பார்த்தான் இருசப்பன். வீரப்பன் மேசைப் பணத்தைத் தனக்காகத் தள்ளிக்கொண்டு கலைந்து கிடந்த சீட்டுகளைப் பொறுக்கித் தட்டிச் சேர்த்து குழைக்க ஆரம்பிக்க, அடுத்த ஆட்டத்துக்கான மேசை விழுகிறது.
‘ஏம்பா வீரப்பா, எனக்கு ஒரு ஆட்டம் போடேன்’ என்றான் இருசப்பன்.
‘அட ஏம்பா நீ வேற. ஆட்டத்துல வந்து கடங் கேட்டுக்னு…’
‘நீ வேணா இப்பவே கையோட எழுந்து வாயேன். நான் காட்டறேன்’ என்றான் மணி.
‘அட சும்மா இர்றா நீ வேற. இங்க நான் காச வுட்டுட்டு தெவிச்சிக்னு இருக்கிறேன். இப்பதான் வந்து தொணதொணன்னிக்னு… ஏம்பா வீரப்பா போடுபா. சும்மா ஒரே ஒரு ஆட்டம். இந்த ஆட்டம் மட்டும் பாத்துக்னு போயிடறேன்.’
‘அதல்லாம் இப்ப ஆட்டத்துல எதுவும் கேக்காத…’
அவன் கறாராய் மறுத்துவிட தொளசிங்கத்தைப் பார்த்தான். ‘ஏம்பா நீயாவது போடேன். ஒரே ஒரு ஆட்டம். இப்ப போட்டா ஜெயிப்பு நேரத்துல வந்ததெல்லாம் பூடும்னு பாக்கறாரு போலயிருக்குது அவரு.’
‘அட நீ வேற எங்கிட்ட ஏது காசி’
‘ஏம்பா காசியில்லண்ணா எழுந்திரி. நான் உக்கார்றேன்.’ பக்கத்திலிருந்த முருகேசன் ஆயத்தமானான்.
‘கொஞ்சம் இர்றா ரவ. ரெண்டாட்டம் வுட்டதப் புடிச்சிக்னு போயிடறேன்.’
‘ஏன் ஜெயிச்சிக்னு போறப்ப…’
திக்கின்றி விழித்தான்.
‘இருப்பா சீட்டப் போடாதே. மேசையில காசு வுழட்டும்’ என்று சீட்டுப் போட இருந்த வீரப்பனின் கையைப் பிடித்து தடுத்தான் வடிவேலு.
‘டேய் எழுந்திர்றா. பெருசா சீட்டாட வந்துட்டான். தூக்க முடியாத தூக்கி ரெண்டு ரூபாய் காச மடியில கட்டிக்னு…’
‘காசில்லண்ணா எழுந்துட வேண்டித்தான? வேற யார்னா உக்காருவாங்க இல்ல, நேரம் ஆவல’ என்றான் முருகேசன்.
‘நவுர்றா அப்பால. ஏம்பா பெருமாளு நீ குந்து.’
‘நான் உக்காரலாம்னு பார்த்தேன்’ என்றான் கோவிந்து.
‘இர்றா. அவன் எம்மா நேரமா காத்துக்னு இருக்கறான். வேற யார்னா எழுந்திரிக்கட்டும். அப்பறம் உக்காருவே.’
இருசப்பனுக்கு முகம் வெளிறியது. நழுவிய வேட்டியை இழுத்துச் சரியாகக் கட்டிக்கொண்டு நிமிர்ந்தான். ஒரே ஒரு மேசை யாராவது போட்டால் போதும். இந்த ஒரு ஆட்டம் பார்த்துவிட்டு எழுந்து விடலாம். சுற்றிலும் தெரியும் முகங்களைப் பார்த்தான். ‘ஏம்பா வடிவேலு, நீதான் போடேன்.’
‘அட ஏன்டா நீ வேற வவுத்தெரிச்சல கொட்டிக்னு! நானே தோப்புல இருக்கறேன்..’
‘எழுந்திர்றா. அங்க பொண்டாட்டி பக்கத்துல எவனோ வந்து படுத்துங் கெடக்கறானாம். அதப் போய் பாக்கறதுக்குத் துப்பு இல்ல. அத வுட்டுப்புட்டு இப்பதான் இங்க கடன் கேக்க வந்துட்டான். நீ உக்காருபா.’
சிவுக்கென்னு இருசப்பனுக்கு முகம் மாறியது. ‘ஏன்டா இப்படி நாக்கழிஞ்சி போறிங்க. வாய்க்கி வந்தத பேசிக்னு. எவனும்தான் போட மாட்டன்னிட்டீங்களே. அதோட போங்களேன்.’
‘அவன்தான் கூப்புட்றானே. போய்ப் பாரேன். யார் நாக்கு அழுவுதுன்னு. ’
‘போய்ப் பாத்துதான் இவன் என்னா பண்ணப்போறான். இவனே இட்டாந்து படுக்க வச்சிட்டுதான இங்க வந்து குந்திக்கிறான்.’
சடாலென்று வேட்டியை மடித்து விரித்து கட்டிக்கொண்டு எழுந்தான் இருசப்பன். ‘டாய்… ஒங்களாட்டம்னு நெனச்சிக்னீங்களாடா. ஒருத்தங்கிட்ட புள்ள குட்டியோட வாழ்ந்துங்கிறவள தள்ளியாந்து வச்சிக்னு குடுத்தனம் பண்ணீங்கறமே அந்த மாதிரின்னு…’
‘இவரு பெரிய ரோஷக்காரு! சும்மா கூட்டிக் குடுத்து மொத்த சோறு வாங்கித் தின்ற பையன் நீ. இப்பதான் என்னமோ காட்டிக்றியே பெருசா கைலாசம்! போடா சர்த்தான்…’
‘டாய்…’ இருசப்பன் கத்தினான்.
‘இங்க கத்தாதறா கண்ணு! அங்க போய் கத்து.’
இருசப்பன் முகம் மாறியது. செய்வதறியாது நின்றான்.
‘போலாமா’ என்றான் மணி. ‘என்னாபா வேற யார்னா வர்றீங்களா’ என்றான் மற்றவர்களைப் பார்த்து.
‘நீ போய்ப் பாத்துக்கனு வந்து சொல்லு. அப்பறம் நாங்கல்லாம் வர்றம்’ என்று சிரித்தான் மன்னாரு.
‘வந்து பேசிக்றேன் இருங்க உங்கள’ என்று திண்ணையை விட்டு கீழே இறங்கினான் இருசப்பன். கால்கள் தயங்கின.
நாலாம் வகுப்பு படிக்கும்போது நேர்ந்த சம்பவம் ஒன்று இவன் நினைவுக்கு வந்தது. அவனது அப்பன் இவனுக்குப் புதுசாக ஒரு பல்பம் வாங்கித் தந்திருந்தான். மாவு பல்பம். நீட்டு பல்பம். இவனுக்கு படிப்பு வாசனை கம்மி. எழுத்து வாசனையும் கிடையாது. எழுதி எழுதிப் பார்த்தான். புது பல்பத்திலும் எழுத்து கோணிக்கொண்டு தான் வந்தது.
பக்கத்திலிருந்து சக்தி பார்த்தான். ‘புது பல்பமா! ஏதுடா இது? காட்டுப் பாப்பம். எழுதிப் பாத்துட்டுத் தந்துடறேன்.’ கொடுத்தான். சக்தி தான் அந்தக் கிளாசுக்கே மானிட்டர். வாத்தியார் இல்லாத சமயங்களில் பேசறவங்க பேர் எழுதற பையன். நன்றாகப் படிப்பான், நன்றாக எழுதுவான். கோவை இலை போட்டுத் தேய்த்த பலகையில் கொட்டுக் கொட்டாக அவன் எழுதுவதைப் பார்க்க ஆசையாக இருக்கும். அழகாக முத்து முத்தாக எழுதினான். பிறகு பல்பத்தை இப்படியும் அப்படியுமாக இரண்டு முறை கோடு இழுத்து ஓட்டிப் பார்த்து இவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டான். ‘பத்ரமா வச்சுக்கோடா தொலைச்சிடாத. நல்லா அச்சி கொட்டுது.’ அவன் கண்களில் ஏக்கம் தெரிந்தது. பல்பத்தை வாங்கி இருசப்பன் நிசார் பையில் வைத்த பிறகும் வெளியே நீட்டியிருக்கும் அதன் விளிம்பையே பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.
இருசப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கொஞ்சம் யோசித்து பல்பத்தை எடுத்து சக்தியிடமே கொடுத்து, ‘நீயே வச்சிக்கோடா’ என்றான். சக்தியின் கண்களில் ஆச்சர்யம் பளிச்சிட்டது. முகத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் பொங்க நம்பமாட்டாதவனைப் போல பிரமிப்புடன் பார்த்தான். ‘எனக்கே.. எனக்கேவாடா’ கூட இருந்த பசங்கள் கபக்கென்று சிரித்தான்கள். சில கண்களில் பொறாமையும் வெறுப்பும். சில கண்களில் கெஞ்சல்.
‘டேய் எனக்குக் குட்றா…’, ‘எனக்குக் குடத்துட்றா’, ‘டேய் நான் கூட நல்லா எழுதுவேன்’, ‘நான் மாங்கா வச்சிருக்கறேன்’, ‘நான் மல்லாட்டப் பயிறு வச்சிருக்கறேன்.’
மாங்காயும் மல்லாட்ட பயிறும் இருசப்பனுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ‘யாருக்கும் இல்ல, சக்திக்கு குடுத்தாச்சி’ என்றான்.
இதற்குப் பரிகாரமாக ஒண்ணுக்கு விட்டபோது எல்லோரும் இருசப்பனைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘தோத்தாங்களிடா டோய்.. எழுதத் தெரியாத மண்டு. வாத்தியார் கூடம் மண்டுன்னுதான சொன்னாரு. ம்…’, ‘இல்ல மரமண்ட’, ‘ஆமா மண்டு, மரமண்ட, மண்டு மரமண்ட’ எல்லோரும் கத்தி ஓய்ந்தார்கள். ‘இரு இரு உங்கப்பன் கிட்டியே சொல்றேன் வா. பல்பத்த சக்திகிட்ட குடுத்துட்டன்னு’, ‘எனக்கு ரவோண்டு ஒடச்சி குடுத்திட்டீன்னா..’, ‘அப்பறம் எனக்கு’, ‘டேய் பேசாம வாங்கிக்கோ அப்புறம் உங்க அப்பா உன்னை சக்கையா ஒதைப்பாரு.’ சக்தி இருசப்பனைக் பரிதாபகரமாகப் பார்த்தான். ‘இந்தா எனக்கு வாணாம் நீயே வச்சுக்கோ.’
இருசப்பனுக்குக் கண்கள் கலங்கின. பல்பத்தை வாங்கிக் கொண்டான். பிறகு பள்ளிக்கூடம் விட்ட பிறகு யாருமில்லாத சமயமாகப் பார்த்துச் சக்தியை நெருங்கி பல்பத்தைக் கொடுத்தான். ‘இந்தா எனக்குத் தான் சரியா எழுதத் தெரிய மாட்டன்னுதே. நீயே வச்சிக்க. யாருகிட்டியும் சொல்லாத. ரெண்டா ஒடிச்சி வச்சிக்கோ. யார்னா கேட்டா கூடம் உங்க மாமா வாங்கிக் குடுத்தாருன்னு சொல்லு புதுசா.’
மணியை முன்னால் விட்டுப் பின்னால் நடந்தான். வீட்டை நெருங்க மணி சொன்னான் ‘பாத்தியா கதவு இன்னும் அப்பிடியேதான் தாப்பா போட்டிருக்குது.’
‘ஒண்டியா வூட்டுல தூங்கற பொம்பள என்னா பின்ன கதவத் தெறந்து வச்சிட்டாடா தூங்குவா!’
‘நீ தட்டேன் சொல்றேன்.’
‘தூங்கறவள இப்ப ஏன்டா எழுப்பச் சொல்ற…’
மணி இகழ்ச்சி கலந்த சிரிப்போடு இவனை நோக்க இவனுக்கு ஜன்மமே குன்னிப்போவது போல் இருந்தது. வேறு வழியின்றிக் கதவவைத் தட்டினான்.
‘தோ வந்துட்டேன்.’
உள்ளே உடம்பு நழுவும் சப்தமும், வளையல்கள் சலசலக்கிற ஓசையும் கேட்டு மணி அவனைப் பார்த்தான். அவள் அவ்வளவு ஜூட்டிக்குக் கிடையாது. வீட்டுக்குப் பின்புறம் வழியும் கிடையாது, இவனுக்கு உடம்பு நடுங்கியது.
கதவை இயல்பாய்த் திறந்த அவள் மூன்றாவது நபரைக் காணத் திகைத்து நின்றாள். லுங்கி பனியனோடு பாயிலிருந்து எழுந்த ஏகாம்பரம் சட்டையை மாட்டிக் கொண்டிருந்தான்.
‘சரியாப் போச்சா’ மணி கெக்கலித்தான்.
‘ஏய்….’ என்று கத்தியபடியே ஒரு பாவலாவோடு அவளை உள்ளே தள்ளிக்கொண்டு போனான் இருசப்பன். ‘அடிப்பாவி எம்மா நாளாடி நடக்குது இந்த அநியாயம்! அடி குடிச்ச காரிச்சி! ஊருல இருக்கறவன் சொல்லும் போதெல்லாம் அவனுங்க சும்மா சொல்றானுங்க, சும்மா சொல்றானுங்க. நம்ப பொண்டாட்டி அப்டியாகொந்தவ இல்லண்ணு எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிக்னு இத்தினி நாளா எதியும் கண்டுக்காமலே இருந்துட்டனேடி… அடி நாதாறு சிறுக்கி… இப்படியா பண்ணுவ நீ…!’ இருசப்பன் ஊடு கட்டினான்.
ஏதும் புரியாமல் குழப்பத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் இந்த அலம்பலெல்லாம் சற்று ஓய்ந்து முடிய, அவனை நெருங்கி அவன் தோளைத் தடவினாள். ‘என்னாத வந்துடுத்து உனக்கு இன்னைக்கி, இத்தினி நாளா என்னைக்குமில்லாம…’
இருசப்பன் பதில் ஏதும் சொல்லத் தெரியாமல் அவளைக் கட்டிப் பிடித்து மடியில் முகம் புதைத்து அழுதான்.