பந்தயக் குதிரைகள் – ஆர்த்தி தன்ராஜ்

0 comment

கோகுல் பிரசாத் என்னைத் தொடர்புகொண்டு, “தமிழினிக்கு எழுதுகிறீர்களா?“ எனக் கேட்ட போது நான் வாழைப்பழத்தை அரைத்து, ஐஸ்க்ரீம் என்று எனக்கு நானே சொல்லி, மனச் சமாதானத்திற்கு அதன் மேலே பூஸ்ட் தூவி சாப்பிட்டுக் கொண்டு, தோலை நறுக்கி கோழிக்குப் போட்டு, அது உண்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“உடைவு என்கிற சிறுகதையை போகன் சங்கர் எழுதினாரே? அந்தப் பத்திரிக்கையா? அதில் நான் எழுதவா? எனக்குக் காய்ச்சலுங்க. வாய் பேச வராது.. எழுதப் படிக்கத் தெரியாது… ஜல்பு பிடித்து விட்டது.. அடுத்த மூன்று வாரங்களுக்கு (ஜென்மங்களுக்கு?) இலக்கியவாதிகள் சகவாசம் வேண்டாம் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்திருக்கிறார்” போன்ற அத்தனை சால்ஜாப்புகளையும் தாண்டி, ஒரு வாரம் ஒப்பேற்றி விட்டு, இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் இதைத் தொடந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் அரை நாள் கழித்தே இந்த வரிகள் எழுதப்பட்டன. சென்ற வரியோடு நிறுத்திவிட்டு முகநூலுக்கு ஓடிவிட்டேன். ஏனென்றால் இது கட்டுரையின் கொளு ஆரம்பிக்க வேண்டிய இடம். மொத்த வாழ்க்கையையுமே கொள் கருத்தென்று எதுமில்லாமல் வாழ்ந்துவிட வேண்டும் என்ற உயர்பெரும் இலட்சியத்துடன் வாழுமிடத்தில் கட்டுரைக்கான கொளுவிற்கு எங்கே செல்ல?

இரா. பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைப் போல கருத்தென்று எதுவுமில்வாமல் எழுத மறந்த கதையென்று இரண்டு பக்கம், கட்டுரை எழுதிய கதையென்று ஒரு பக்கம் என ஓட்டி விடலாமா என்றும் யோசித்தேன். ஒவ்வொரு கட்டுரையும் எதைப் பற்றியாவது குறிப்பாக – விரைப்பாக பேசியே ஆக வேண்டுமா? ஏதேனும் கருத்தாக உரைத்து முடித்தால் தான் கட்டுரைகள் தம்மை நினைத்து உவப்படைகின்றனவா? ஏதேனும் சாதித்து யாருக்கேனும் தன்னை நிரூபித்தால் மட்டுமே ஆத்மா சாந்தி அடையும் பெண்ணியவாதிகளைப் போல?

ஆண்களை விட இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயங்கள் அதிகம் உள்ளனவா என யோசிக்கிறேன். கனவுகளின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்ட பல பெண்ணியவாதிகள் இருக்கிறார்கள். கனவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாமே! தனக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்த வேண்டும், கார், சொந்த வீடு, பதவி உயர்வு, நிறைந்த சம்பளம், ஆண்களை மீறி (அல்லது ஆண்களுக்கு இணையாக) முன்னேறுதல், பயணங்கள் மேற்கொள்வது போன்ற ஜிகினா தாள்கள் ஒட்டப்பட்டு சீரியல் பல்புகள் தொங்கவிடப்பட்ட கனவுகளுக்கு முன்பு, “என் குடும்பத்தினர் அனைவருடனும் நெருக்கமாக இருப்பேன். இன்று என் குழந்தைகளுடன் விளையாடுவேன், சொந்த பந்தங்களுடன், தோழர் தோழியருடன் நேரம் செலவிடுவேன், பிடித்த விஷயங்களைச் செய்வேன்” போன்ற மெல்லின கனவுகள் சோபை இழந்து தெரிகின்றன. ஒரு ஆணால் எப்படி “என் நண்பர்களோடு நேரம் செலவிடுவேன், என் குழந்தைகளுடன் விளையாடுவேன், வெளியில் செல்லப் பிடிக்கவில்லை, வீட்டில் இருப்பேன், வயலின் வாசிப்பேன், பிடித்த காரியத்தைத் தான் செய்வேன்” போன்ற சுதந்திரக் கனவுகளை நனவாக்க முடியவில்லையோ அதே பொறிக்குள் இன்றைய பெண்களும் சிக்கிக் கொண்டனரோ?

ஆணாதிக்கத்தினால் நேர்ந்த தலைமுறைப் பிழைகளைப் போல புரிதலற்ற கார்ப்பரேட் பெண்ணியத்தால் ஒரு தலைமுறையே பிழையாகிறதா?

இன்றைய சமூகம் தரும் அழுத்தங்கள் சாதாரணமானவை அல்ல. ஒரு குழந்தை வயலின் வாசிக்க விரும்பினால் அது விஜய் டிவியில் வாசிக்க வேண்டும். குறைந்தபட்சம், அபார்ட்மெண்ட் வளாகத்தின் மேடையிலாவது! அந்தக் குழந்தைக்கு நன்றாக வயலின் வாசிக்கும் திறமையிருந்தாலும் மேடையில் வாசிக்க பயமாகவோ அல்லது ‘ஏன் மேடையில் வாசிக்க வேண்டும்? நான் எனக்கு மட்டும் வாசித்துக் கொள்கிறேன், என்னைச் சேர்ந்த நெருக்கமானவர்களுக்காக மட்டும் வாசிக்கிறேன்’ என்று நினைத்தாலோ அந்தக் குழந்தைக்கு வயலின் வாசிக்கும் திறமையில்லை என்றே கருதப்படுகிறது.

இத்தகைய எக்ஸ்ட்ரோவர்ட் உலகில், பொருள் ரீதியிலான, புகழ் ரீதியிலான, தனது குணநலன்களுக்குச் சம்பந்தமில்லாத, தனிப்பட்ட சந்தோசங்கள் எதுவும் அளித்திடாத ஜிகினா தாள் கனவுகளைத் துரத்தி ஓட பெண்களும் பெண்ணியத்தால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். முந்தைய தலைமுறையின் ஆணாதிக்கப் பிடியிலிருந்து வெளியேறிய பெண்கள் அனைவரும் வேறொரு அரிதாரம் பூசிக்கொண்டு வந்திருக்கும் புதியதொரு வார்ப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்.

வேலை அதிகம் என்று பதவி உயர்வை மறுக்கும் ஒரு பெண், தன் முந்தைய தலைமுறைப் பெண்கள் தனக்காகப் போராடிப் பெற்றுத்தந்த சுதந்திரத்தை அவமதிப்பவளாகிறாள். திருமணம் செய்ய விரும்பாமல் காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் சுற்ற விரும்பும் பெண்ணோ பெண்ணியத்துக்கான பலிகடாவாக உணரப்படுகிறாள்.

உலகில் நமது தேவைக்கு மீறி நாம் சம்பாதிக்கும் நற்பெயர், பணம், புகழ் என அத்தனையும் நாம் இறந்த பிறகு நமது இருப்பை இந்த உலகில் நீட்டிக்கும் முயற்சியே. தம் குஞ்சுக்கு ஒரு நாளிற்கொரு முறை உணவு ஊட்டி, இறக்கை வளர்ந்தவுடன் பறக்க விட்டு விடும் சிட்டுக்குருவிகள் வாழும் இவ்வுலகில் தான், மூன்று தலைமுறைகளுக்குச் சேர்ந்தாற்போல சொத்து சேர்த்துவைத்துச் செல்ல நினைக்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அது, நாம் சென்ற பிறகும் நமது குழந்தையின் வாழ்க்கையை முடிந்தவரை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முயற்சிதானே?

நற்பெயர் என்பது, பணத்தைப் போல, சமூக அமைப்பில் ஒருவர் வாழத் தேவையான ஒரு கருவி மட்டுமே. திருமணம் செய்து கொள்ளவும் வரவு செலவு கணக்குகள் வைத்துக் கொள்ளவும் ஒருவரின் நற்பெயர் அவருக்கு அனுகூலமாக இருந்து அவரது வாழ்வை எளிதாக்கும். நம்மைப் பற்றி பிறர் மதிப்பீடு செய்வதற்கு அடிகோலும். அத்தகைய நற்பெயரைப் பெறவேண்டி ஒருவர் செய்யும் அனைத்து செயல்களும், சமூக அமைப்பின் பகுதியாக செயல்பட்டு, மனிதர்களை உய்விக்கும். இவ்வளவு தான் நற்பெயரின் சாராம்சம். நாம் இறந்த பிறகும் நம்மைப் பற்றி மற்றவர்கள் நினைவுகூர்வதில் எந்தப் பெருமையும் தேவையும் நன்மையும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தன் கால்தடத்தைப் பதித்துச் செல்ல விழைகிறான். தான் எவ்வளவு சிறியவன் என்பதை உணர்ந்துகொள்ள மறுக்கிறான். எனவே, சொந்த வீடு கட்டுவதில் இருந்து சிவன் கோயில் கட்டுவது வரை, இவை அனைத்துமே நமது இருப்பை நாம் இறந்த பிறகும் பதிவு செய்ய விரும்பும் பரிதாபகரமான முயற்சிகளே.

நாம் இப்படிச் செய்யும் ஒவ்வொரு செயலும் இயற்கையை , நாம் வாழும் உலகை, ஏதோ ஒரு வகையில் காயப்படுத்துகிறது. நம் கைக்கு வரும் ஒவ்வொரு காசையும் உலகின் ஒரு துகளை அழித்தே நம்மால் சம்பாதிக்க முடிகிறது. இதுதான் பணத்தின் சாராம்சம்.

குறுகிய காலம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்து மடிய வந்த மனிதன், வயிறுக்கு உணவு இட்டு, இணை சேர்ந்து, இனப்பெருக்கம் செய்து, வாழ்ந்து மடிதல் என்ற எளிய வாழ்க்கையைத் தனது தேவையில்லாத ஆறாம் அறிவால் இடியாப்பச் சிக்கலுக்கு உள்ளாக்கி வைத்திருக்கிறான்.

முன்னொரு காலத்தில் ஆண்கள் மட்டுமே பொருளீட்டியதால் அவர்களைச் சார்ந்து உயிர்வாழ வேண்டிய நிர்பந்தம் பெண்களுக்கு ஏற்பட்டு விட்டது. தன் கையில் பொருளீட்டும் சுதந்திரம் இல்லாதததால், இயல்பாகவே, ஆண் கொடுப்பவனாகவும் பெண் எடுப்பவளாகவும் மாறிவிட, அதிலிருந்த ஏற்றத்தாழ்வுகள் கூட்டுசேர்ந்து, பல்வேறு நுணுக்கமான மனவியல் மாற்றங்களைக் காலப்போக்கில் ஏற்படுத்தின. பெண்களும் பொருளீட்டத் தொடங்கிய பிறகு, இன்று எல்லாவற்றிலும் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என நிரூபித்தே ஆக வேண்டிய (தேவையில்லாத) கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஆணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, உயிரிழந்து விட்டாலோ, பொருளீட்டும் திறமை இல்லாதவனாக இருந்தாலோ, ஏன் பொருளீட்டும் ஆர்வம் இல்லாதவனாக இருந்தால் கூட, அவ்விடத்தில் ஆல்பா ஆணாக பெண்ணே இருந்து குடும்பத்தை நடத்துவது இயல்பான ஒன்று. வலிந்து திணிக்கப்பட்ட இந்த கார்பொரேட் பெண்ணியம் உலக மக்கட்தொகையில் பாதியுள்ள பெண் உயிரினங்களை சம்பாதிக்கத் தூண்டி, தேவையில்லாத சொத்துகளைச் சேர்த்து வைக்கவும் செலவு செய்யவும் தூண்டுகிறது. ஒருவர் சம்பாதித்தால் போதும் என்றிருந்த நிலை மாறி, இருவர் சாம்பாதிக்காமல் வண்டி ஓடாது என்ற நிலை ஏற்பட்டதே இருபாலரும் பொருளீட்ட ஆரம்பித்ததன் தொடர் விளைவின் ஒரு கண்ணி தான்.. உண்மையில் இந்த மாற்றம் தேவையில்லாத ஒன்று. உலகின் இருப்பிற்கும் ஆயுளுக்கும் ஆபத்தான ஒன்றும் கூட. இருபாலரும் பொருளீட்டத் துவங்கியதும், உலகமே இறுக்கம் கொண்டு, வாழ்வதென்பதே கடினமானதாக மாறி விட்டது. விவசாயம் போன்ற வேலைகளை குடும்பத்தோடு பார்க்கும் சூழல் மறைந்து, இருபாலரும் பரவலாக அடித்துக்கொள்ள, வேலையின்மையும் விலைவாசி எகிறலும் தான் நடக்கிறது.

தன்னை மற்றவர்கள் மதிக்குமாறு உடுத்த வேண்டிய துணிமணியில் இருந்து, வாகனத்தில் இருந்து, தொடர்வேலையில் கடுப்பாகும் மனதை ஆற்றுப்படுத்தும் பொழுதுபோக்கு வகையறாக்கள் வரை எல்லாமே தேவைக்கு அதிகமாக உருவாகி அழிகின்றன. அப்போது சுயசார்பு என்பது பூஜ்யத்திற்கும் கீழே செல்கிறது. ஒவ்வொரு கையாக பணம் மாறுந்தோறும் அது தன்னுடைய மதிப்பிலிருந்து ஒரு பகுதியை இழக்கிறது. பணம் கைமாறும் வேகம் குறைய வேண்டும். தற்சமயம், இருபாலர் சம்பாதிப்பதும் அதற்கான வாழ்வியலும் பணம் கை மாறும் வேகத்தை மிகவும் அதிகப்படுத்துகின்றது. இது செயற்கையான விலைவாசி உயர்வுக்கும், எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத நிம்மதியற்ற வாழ்க்கை முறைக்கும் இட்டுச்செல்கிறது.

கனவுகள், சேமிப்பு, தன்மதிப்பு, இலட்சியம், பிறரிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட விழையும் தன்முனைப்பு போன்றவை மிக முக்கியமானவையே. ஒருவரது சுயமதிப்பை உறுதி செய்யவும் நம் இருப்பை அர்த்தமாக்கவும் இவை இன்றியமையாதவையும் கூட.

ஆனால், எனது இலட்சியங்கள் பிறரது அங்கீகாரத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவசியமற்றது. எனக்கான படுக்கை போல, எனது ஆசைகள் – இன்ப – துன்பங்கள் போல, என்னுடைய இலட்சியங்களும் தனிப்பட்டவை. அதில் யாரும் எட்டிப் பார்க்க வேண்டியது இல்லை. எவரும் பாராட்ட வேண்டியதுமில்லை.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், தாங்கள் செய்கிற எல்லா காரியங்களையும் பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெண்களுக்கு உண்டு. அந்த அங்கீகரித்தலுக்காக எப்போதும் ஏங்கித் தவித்திருப்பார்கள். ஏனெனில், நாம் காலங்காலமாக பெண்களை அப்படித்தான் வடிவமைத்திருக்கிறோம். இப்போதும் அவர்கள், தங்களது அடிமை விலங்குகளைக் களைவதாக எண்ணிக்கொண்டு, அங்கீகரிப்பு வலைகளிலேயே சிக்குண்டுக் கிடப்பதைப் பார்க்கலாம்.

வீட்டிலிருந்து குடும்பத்தைப் பார்த்துக்கொண்ட போது இவர்களை மகா பத்தினி என்றும் வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பவர் என்றும் தியாகச் செம்மல் என்றும் மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் இவர்களை வெற்றியாளர்கள் என்றும் திறமைசாலி என்றும் மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இவர்களது கனவுகளும் இலட்சியங்களும் வீரமும் புருவமும் சிகையும் ஞாபக சக்தியும் சம்பாத்தியமும் குழந்தைகளும் மற்றவர்களால் விதந்தோதப்பட வேண்டும். இந்த அடையாள வலையில் இருந்து வெளியேறும் வரை, தனக்காகத் தான் வாழும் உண்மை தைரியம் பிறக்காத வரை, எந்தப் பெண்ணியத்தாலும் பெண்களுக்கு விடுதலை இல்லை .

வெறும் எண்ணக்கோர்வை தான். “எழுதி விட்டீர்களா?” என இன்பாக்ஸில் கோகுல் கேட்டதை இன்னும் பார்க்காதது போல பாவனை பண்ணிக்கொண்டு அவசர அவசரமாக எழுதி முடிக்கிறேன். வணக்கம்.