கருப்பு வெள்ளைக்குள் எல்லா நிறங்களும் நிறமின்மைகளும் ஒளிந்து கொள்கின்றன. நிறமற்ற குமிழுக்குள், தான் உடையும் கணத்திற்கும் முன் பல நிறங்களையும் பிரித்து, பிரதிபலித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற உந்தம் இருப்பதும், வளி வழியே அது மேலெழும்பிப் பறப்பதும் இயற்கையின் சாகசக் கவிதைகளுள் ஒன்று. நீளாயிரம் ஆண்டுகளாய் தங்கள் முகங்களையே மாற்றி மாற்றிப் பார்த்து சலித்துவிட்ட ஐம்பூதங்களும் புவியில் உயிர்களைப் பரப்பி நாற்களமாடி இரசித்தன. அவ்விளையாட்டின் மேம்பட்ட வடிவமாய், இன்று மானுட இனத்தின் நாடகங்களை இரசித்துக் கொண்டிருக்கின்றனவோ என்ற கேள்வியை எழுப்பிக் கொள்கிறேன். இருக்கக்கூடும். தீராத வன்மத்தை எப்படி இந்த மானுடர்கள் சலிப்புறாமல் உமிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வி அவற்றிற்கும் உண்டாகி இருக்கும்.
பயணங்களின் வழியே கதைசொல்லுதல் ஆயிரம் முறை திரைக்கு வந்திருக்கிறது. எனினும், பயணங்கள் பற்றிய கதைகள் மீதான பரவசத்திற்குக் குறைவில்லை. இவ்வகைமையில், பல திரைப்படங்கள் வெறும் நிலக்காட்சிகளை முன்வைத்தல், ஒரு கட்டற்ற கதாபாத்திரம் என்று ஒரு சிலவற்றை உருவாக்கிக் கொள்ளுதல், மெய்யறிவு பேசுதல் போன்றவற்றைத் தவறாமல் தேய்வழக்காய்ச் செய்யும். வெகு சில திரைப்படங்களே வாழ்வின் கழுத்தறுப்புகளையும் மனிதத்தின் அயோக்கியத்தனங்களையும் நேர்மையாக முன்வைப்பவை.
இன்கரும்பினை வேலி வைத்து அடைக்காமல் இருக்கும் போது, அதன் மீது வெறிக் குதறல் செய்யும் பற்கள் தான் எத்தனை. முன்னரே ஆழமாய் நிறுவப்பட்டு விட்ட வேர்களின் மூலம் விசம் பாய்ச்சும் பரப்புரைகள், போர்களுக்காக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட மூளைச் சலவைகள், குடும்பம் என்பதன் பண்பினைக் கிழித்துப் பார்க்கத் தொடங்கிய ஐரோப்பியச் சூழல் எல்லாம், உலகிற்கே கொடுங்கனவுகளை விளைவித்துப் பரீட்சை செய்து பார்க்கும் களமாக இருந்த காலம். அதில் தனியனாய் விடப்பட்ட ஒரு முயல்குட்டி. அதற்கு வந்து சேரும் காயங்களும் தழும்புகளும் கதையாக விரிகிறது The Painted Bird (2019) திரைப்படத்தில்.
கருந்திரையில் தலைப்பு தோன்றும் போதே செவிகளில் ஒரு சிறுவனின் மூச்சிரைப்பு தெறிக்கிறது. அங்கு நிறுவப்படும் லயம் கடைசிவரைத் தொடர்கிறது. எந்த ஒரு சட்டகமும் தேவையற்று
இருக்கவில்லை. ஆயிரம் மைல் பயணங்களில், ஓரடி தவறான திசையில் வைத்தாலும் பயணத்தின் பண்பு கெடுமே. அதைப் புரிந்து கொண்டு மூச்சு முட்டவைக்கும் ஒருங்குடன் ஒவ்வொரு காட்சியும் காட்சித்துணுக்கும் விழியை அகலவிடாத முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சிறுவன், தனது மூதாட்டியைத் தீயுண்ணக் கொடுத்துவிட்டுத் தன்னைத் தனிமையுண்ணத் தந்து விடுகிறான். ஞாயிறை விழுங்கிய இரவு அவனையும் விழுங்கிக் கொள்கிறது. அவனுக்கு முன்னிற்கும் பயணங்களின் நீளமும் வன்மையும் அவன் அகவையின் கொள்ளளவிற்குப் பன்மடங்கு என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன்னரே நீர்வழிப்படூம் புனையாகி விடுகிறான். இலக்கணம் அறியாக் குதலையின் மழலைச் செய்யுள் போல இருக்கிறது அவனது நடை. அவன் போகுமிடங்களில் எங்கும் காருண்யத்தின் கூரையில்லை, அப்படியே இருந்தாலும் அதன் உள்ளே அமில மழை ஒழுகியபடியே இருக்கிறது.
பல காட்சிகளிலும் வளர்ப்புப் பிராணிகளும் பறவைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. கூடவே அந்தப் பிராணிகளுக்கும் வன்மத்திற்கும் இடையேயான தொடர்பு சுட்டப்படுகிறது. முயல் எரிக்கப்படுகிறது, கோழியின் தலை கொய்யப்படுகிறது, காகங்கள் இவனைக் கொத்திக் குருதி பார்க்கின்றன, பூனையின் விழிகள் பிடுங்கப்படுகிறது. எந்த ஒரு காட்சியிலும் இத்தகைய நுட்பங்கள் துருத்திக் கொண்டு தெரியவில்லை என்பது இயக்குநரின் உழைப்பிற்கும் மேதமைக்கும் சான்று. இவை அத்தனையோடும் தன்னைப் பொருத்திக் கொண்டு பீதியும் இறுகிய சாந்தமுமாய் கன்னிவெடிகள் புதைக்கப்பட்ட நிலத்தில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறான் அச்சிறுவன்.
அவன் போகுமிடமெல்லாம் வல்லூறுகள் உமிழ்நீர் ஒழுகும் பசிப் பார்வையுடன் காத்திருக்கின்றன. அவன் ஒரு இரை. அவன் ஒரு சடுதியமுதம். குழந்தைக்கென்று அறியமுடியாத ஒரு வளைதன்மை இருக்கிறது, அது அச்சத்தின் வேர்களைப் பற்றிக் கொண்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு இடமாகத் தங்கியும் தாண்டியும் கடந்து வருகிறான் அவன். படம் நெடுக அவனுக்குப் பெயர் இல்லை. அவன் தனது பெயரைச் சொல்லும் அளவிற்குக் கூட பலரிடமும் பேசுவதுமில்லை என்பது முதன்மையானது. இந்தப் பைத்தியக்கார உலகிற்கு சொற்கள் எத்தகைய அர்த்தத்தையும் தரும். மாறாக, தனக்கே ஆபத்தாய் முடியும் என்ற எண்ணம் அவனது சொற்களை உறிஞ்சி உள்ளேயே புதைத்துக் கொள்கிறது. எதிரில் இருப்பவனின் மனம் தீ, தன் சொற்கள் அவனுக்கு நெய்யூற்றி விடக்கூடாது.
அவன் பேசுவதில்லை என்பதாலேயே வெவ்வேறு முகாம்களில் வெவ்வேறு அடையாளங்கள் சூட்டப்படுகின்றன. கூரிய பற்களைக் கண்டு டிராகுலா என அடையாளம் காண்பது தொடங்கி அவனை யூதன், சூனியக்காரன், உற்பாதன், கம்யூனிஸ்ட் என்றெல்லாம் அடையாளமிட்டுக் கொள்கிறார்கள். அவன் ஒரு நிறமூட்டப்பட்ட பறவை. அவனை அந்நிறத்திற்கு மாறான அணியும் அடையாளமும் கைப்பற்றும் போது கொத்திக் கொல்லத் தயாராக தனது நாவினைக் கூர்தீட்டிக் கொண்டிருக்கும் என்பதையும் அவன் உள்ளம் பாடம் கொள்கிறது. உருசிய முகாமில் அவனுக்கு ஒரு சீருடை தரப்படுகிறது. சீருடை என்பது அடையாளத்தின் பறைசாற்றல். இப்படிப்பட்டவனாகத் தான் நீ இருந்தாக வேண்டும் என்பதன் வடிவம்.
அடரிருளுக்குள் வீழ்ந்து இருக்கும் அவனுக்கு அவ்வப்போது மென்னிருள் அத்தியாயங்களும் உண்டு. தனக்கு எஜமானியாக இருந்த பறவை விற்பவர் கற்றுக் கொடுத்த பாடமிது. அவர் கைகளில் இருந்த பறவையின் மீது நிறமேற்றி வானில் விட்ட போது, அது மகிழ்வுடன் உந்தி ஏறிச் செல்லும், கொஞ்ச நேரத்திலேயே நூறலகுகள் அதைக் கொத்திக் கிழிக்க வானிலேயே இறந்து வந்து மண் தொட வீழும். அதுதான் கதையின் மையப் படிமம்.
The Night of the Hunter (1955) என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படத்தில் குழந்தைகளிடமிருந்து செல்வத்தைப் பறிப்பதற்காக ஒரு கொலைகார பாதிரியார் துரத்திக் கொண்டு வருவார். அக்குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்த ஒரு முதிரன்னை, ஆந்தை முயலைக் கவ்வும் ஒரு படிமத்தைப் பார்த்து, ‘சிறியனவற்றிற்கு இந்த உலகம் தடித்தனமானது’ என்பார். இங்கிருந்து அந்தப் படத்திற்கு ஒரு நேர்க்கோட்டினை இழுக்க முடியும்.
சுசீலமற்று சூழ்ந்திருக்கும் இருளின் உலகில் மெல்ல அவன் நடக்கிறான். ஒரு அரவை இயந்திர ஆலையில் பணிபுரிந்த போது இன்னொரு குரூரத்தைச் சந்திக்கிறான். அதில் தன் மனைவியுடன் காதல் வைத்திருந்த ஒரு இளைஞனை கொடூரமான முறையில் கண்களைப் பிதுக்கி வெளியேற்றி குருடனாக்குகிறான். நம் சிறுவன் இரத்த நாளங்களும் நரம்புகளும் வால் போல் நீண்டு, அசையாக் கயல் போல தரையில் கிடக்கும் இரண்டு விழியுருளைகளையும் கையில் எடுத்துக் கொள்கிறான். என்றோ ஒருநாள் நமக்கும் இந்த நிலை சத்தியம் என்ற முடிபில் அங்கிருந்து கிளம்பியவன், வழியில் அந்தக் குருடனைக் கண்டு, விழிக்கோளங்களைக் கையில் வைத்துவிட்டுச் செல்கிறான். குழந்தைமையின் பேராற்றல். குருடன் ஓலமிடுகிறான். சிலிர்ப்பு!
இன்னொரு கிராமத்தில் சிறுவனை யூதன் என்று சொல்லி அருகிலிருக்கும் நாஜி முகாமில் ஒப்படைத்தால் நன்மதிப்பும் சன்மானமும் கிடைக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அவ்விதமே கொலைப்பட அனுப்பப்பட்ட அவன் ஒரு சிப்பாயின் முடிவினால் உயிர்பிழைத்து வயல்களுக்குள் எலியாய்த் திரிகிறான். மனிதனுக்கு நிகழும் எல்லாமே வட்டம்தான் அல்லது வட்டம் என்ற வடிவத்தின் முழுமைதான் மனிதனைச் சமநிலை பேணுவதில் உதவுகிறது. அரைவட்டம் சதுரம் என்பவை எல்லாம் அவனுக்குப் பீதி ஏற்படுத்தும் வடிவங்கள். வட்டம் மட்டுமே அணைக்கும் தாய்மை. வட்டத்தைக் கைகளைச் சுற்றி அணிந்து கொண்டு நாம் காப்பு என்பதில்லையா?
ஆனால், வட்டம் கழுத்தைச் சுற்றி மெல்ல இறுக்கத் துவங்கும் போது அது துயராகி விடுகிறது. அதீத அன்பின் இனிமையில் வீழ்ந்து மூழ்கி இறப்பவன் இருக்கின்றானே. இந்தச் சிறுவனுக்கும் ஒரு வட்டம் போல மீண்டும் நாஜிக்களால் துரத்தப்பட்ட ஒரு கும்பலால் பிடிபடுவது நிகழ்கிறது. நாஜிக்களுக்கு அல்லது எளியார் முன் வன்மத்தைத் தொடுக்கும் எவருக்கும் ஒரு எண்ணம் உண்டு. உலகிலுள்ள அனைத்து பிற இனங்களுக்கும் வழங்கப்பட்ட வாழ்க்கை என்பது தாங்கள் அளித்த இனாம். அப்படி பாவிக்காவிடில் இரண்டு ரவைகள் மார்புக்கு இனாம். தன்னைச் சுடும் முன் நாஜி அதிகாரி ஒருவனை காறி உமிழ்ந்துவிட்டுச் சாகிறார் சக கைதி. துப்பாக்கி முனை மெல்லத் திரும்பித் தன்னைச் சுட்டிக் காட்டத் துவங்கியதும் தயக்கத்தின் சுவடேயின்றி அருகே வந்து அந்த உமிழ்நீரைத் துடைத்துவிட்டு நாயின் விழிகளால் நிமிர்ந்து பார்க்கிறான் சிறுவன். அவனுக்கு வாழ்க்கை இனாமாக மீண்டும் தூக்கி எறியப்படுகிறது.
எப்படிப் பார்த்தாலும் ஒரு சிட்டுக்குருவி ஆக்கிரமிக்கக் கூடியது ஒரு பொந்தின் இடைவெளி தான். அதைக் கூடச் சுதந்திரமாய் அளித்து விடாதே என்கிறது அறிவும் அத்துடன் துளி இணைந்த வன்குணமும். இறைவாக்கின் அருகிலேயே அமர்ந்து கொண்டு துப்புறவு செய்யும் பணி கிடைக்கிறது சிறுவனுக்கு. அங்கிருந்து தான் பாதுகாப்பு தருவதாய்ச் சொல்லி சிறுவனை அழைத்துப் போகிறான் தேவாலயத்தின் உறுப்பினர்களுள் ஒருவன். அவன் குழந்தையைப் புணரும் கொடூரன் என்பது பார்வையாளருக்குப் புரிகையில் அதுவரை அனுபவித்திருக்காத உடல்ரீதியான வாதைகள் நிகழ்ந்தேறி விடுகின்றன.
வெக்லாஃப் மாரோல் (Václav Marhoul), இந்தத் திரைப்படத்தினை கதையாகச் சொல்லும் விதத்தை நோக்கினாலும் படமாக்கிய விதத்தினை நோக்கினாலும் மேதமையே தெளிகிறது. சிறுவன் அகவையிலும் உளத்திடத்திலும் தொடர்ந்து திரையில் வளர்வதைக் காண முடிகிறது. அத்துடன் ஒரு தேர்ந்த நடிகர், ஒற்றை ஆளாய்த் திரையில் நிறைந்து விரவிடுவது போல, இச்சிறுவனின் ஆளுமையும் விரிவது திகைப்பு. ஒவ்வொரு கொடுங்கனவின் பிடியிலிருந்தும் தூக்கி எறியப்பட்டு இன்னொரு கொடுங்கனவிற்குள் அவன் வீழும் தோறும் நம் மனம் பதறுகிறது, கைகள் வியர்க்கின்றன, வன்மத்தின் தோல் கண்கூசும் அளவு பளபளக்கிறது. ஒரு வாள் போல.
வாழ்வில் வேண்டாதவற்றை, ஆகாதவற்றை, அல்லல்களைப் பட்டியலிடும் இலக்கியம் இன்னா நாற்பது. அதன் முதற் செய்யுள்களிலேயே ‘நெடுநீர், புனையின்றி நீந்துதல் இன்னா’ என்ற அடியெழுகிறது. யார் கடலைப் புனையின்றி நீந்தப் போகிறார்? நெடுநீரென்பது வாழ்வின் உருவகமன்றோ, தெப்பமின்றி இருத்தல் என்பது துணையின்றி அந்த வாழ்வைப் பயணித்தல் என்று தானே அறிந்து கொள்கிறோம். இந்தச் சிறுவன் துணை என்று யாரைப் பெற்றான், முட்கள் கிழிக்கும் பாதையற்ற பாதையில் சிக்கித் தவித்து தன் விழிநீரே தன்னிருப்பின் சாட்சி என்று அவன் ஒவ்வொரு கணமும் அடியெடுத்து வைப்பது மானுடத்தின் நம்பிக்கை.
இந்தப் படமும் கூட அப்படியே அடியெடுத்து வைக்கிறது. ஒரு முறை கூட தவறாத வைக்கப்படாத அடிகள் மலைக்க வைக்கிறது. இத்தனை முக்கியமான திரைப்படம் உலக அரங்கில் பேசப்பட வேண்டிய போதுமான கவனம் பெற்றுவிட்டதா? இயக்குநர், ஜெர்ஸி கோசின்ஸ்கியின் நாவலுக்கு வெகு அண்மையில் இந்தத் திரைப்படத்தினை முன்னிறுத்தியுள்ளார். இந்த நாவல் பல தனியர்களின் வலிகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து ஒற்றைப் புனைவிற்குள்ளே நுழைக்கப்பட்டு எழுந்த ஒரு கட்டுமானம், பன்முகக் கோவை.
சிறந்த திரைப்படங்களில் மிகவும் உன்னத தருணங்கள் என நான்கு அல்லது ஐந்து மட்டுமே இருக்கும். பிற காட்சிகளுக்கும் கதைத் தளங்களுக்கும் அந்தத் தருணங்களை மெல்ல தீட்டிக் கூர்செய்ய வேண்டுமென்பதே பிரதான நோக்கம். இந்தத் திரைப்படத்தில் நிச்சயம் பத்திற்கும் மேலான காட்சிகள் தன்னளவில் கதை முழுமையும் பிறிதொன்றிலாத்தன்மையும் கொண்ட தருணங்கள் என்பதைத் திடமாய்ச் சொல்லாம். ஒவ்வொரு அத்தியாயத்தின் போதும் அந்த சிறுவன் தனக்குள் தக்க வைத்துக் கொள்ளும் அப்பாவித்தனம் கடைசியில் தனது கையில் இருக்கும் துப்பாக்கியினால் களவாடப்பட்டு விடுகிறது. பச்சைப் படுகொலை பண்ணப் பழகி விட்டான்.
குழந்தைகள் போரின் மனிதக் கூட்டு பைத்தியக்காரத்தனத்தினால் முதலில் பாதிப்படைபவர்கள். அவர்களை நோக்கியே படைப்புகள் பேச வேண்டியது அவசியம் என்றவர் டி-சிகா. அவரது Bicycle Thieves (1948) திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் தந்தையை மகன் புரிந்து கொண்டு கைகளை இறுகப் பற்றுவான். அந்த திரைப்படத்தை – குறிப்பாக அந்தக் காட்சியைப் – பார்த்து முடித்த எவரும் அதற்கு முன்பானவர் என்றும் அதற்குப் பின்பானவர் என்றும் தன்னையே பிரித்துப் புரிந்துகொள்ள முடியும். அதை நகலெடுத்தும் நீட்டியும் முழக்கியும் உலகெங்கும் உள்ள திரைப்படங்களில் பல நூறு காட்சிகள் எழுதப்பட்டு விட்டன. ஆனால், வெகு சிலவே அந்தக் காட்சிக்கு அருகில் நிற்கும் தகுதி கொண்டவை. இந்த படத்திலும் அப்படி ஒரு ஒளி எஞ்சுகிறது. அந்த ஒளியை மட்டும் படைப்பாளர் கருணையுடன் அள்ளித் தந்திருக்காவிடில் நாமெல்லாம் எதை எண்ணித் தேற்றம் கொண்டிருப்பது!