இளையராஜா தொழில்முறை இசை அமைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலில் பெருமதிப்புக்கு உரிய பெயர். திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி 45 ஆண்டுகளில் ஆயிரம் படங்களைக் கடந்து தயாரிப்பாளர்-பாடலாசிரியர்-பா
இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி. மே 14 ஆம் தேதி 1976 ஆம் வருடம் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர்கள் தேவராஜ் மோகன் இயக்குனர் இணை. இதனைத் தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம். இந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் பேசப்பட்டு பெருவெற்றி அடைந்தன. 1976ம் ஆண்டு இளையராஜா இசையில் நான்கு படங்கள் வெளியாகின. அந்த ஆண்டின் இறுதியில் இளையராஜாவின் கையில் தெலுங்கு கன்னடப் படங்கள் உட்பட பல படங்கள் இருந்தன. அடுத்தடுத்த வருடங்களில் மேலும் பரபரப்பான இசையமைப்பாளர் ஆனார். முதல் ஐந்து வருடங்களில் அவர் தனது முதல் நூறு படங்கள் என்ற எண்ணிக்கையைத் தாண்டினார்.
பாடல்கள் இசை என்ற வகைமையில் இளையராஜா அறிமுகம் ஆன எழுபதுகளில் தமிழ்த் திரை இசையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் கரம் ஓங்கி இருந்தது. அந்தத் தசாப்தத்தில் கே.வீ. மகாதேவன், வீ.குமார், சங்கர்-கணேஷ் ஆகியோரும் பல படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தனர். பன்மொழிக் கலைஞர் சலீல் சவுத்ரி, இசைமேதை எல்.வைத்யநாதன், வீணை சிட்டிபாபு, குன்னக்குடி வைத்யநாதன், பழம்பெரும் இசையமைப்பாளர்கள் ஜி.கே.வெங்கடேஷ், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கோவர்தன், எஸ்.வி.வெங்கட்ராமன், ஏ.எம்.ராஜா, தக்ஷிணாமூர்த்தி ஆகியோர்களது இசையேற்புடன் படங்கள் வந்தன. பிறமொழிகளின் இசையமைப்பாளர்கள் விஜய் பாஸ்கர், ஷ்யாம், தேவராஜன், ராஜன் நாகேந்திரா, எம்பி.சீனிவாசன், ரமேஷ் நாயுடு, செல்லப்பிள்ளை, சத்யம், கே.சக்கரவர்த்தி, ஏ.டி.உம்மர் ஆகியோரது இசையமைப்பில் படங்கள் வெளியாகின. இளையராஜாவின் வருகைக்குப் பின்னால் அறிமுகமான இரண்டு இசையமைப்பாளர்களான சந்திரபோஸ் மற்றும் கங்கை அமரன் ஆகியோரது இசைக்கணக்கும் தொடங்கலாயிற்று.
பின்னணி இசையைப் பொறுத்த வரை தமிழ்த் திரை இசையை இளையராஜாவுக்கு முன் பின் எனப் பகுப்பது தான் சரியாக இருக்கும். எழுபதுகளின் மத்தியில் உருவான இசையமைப்பாளர் இளையராஜா. அவருக்கு முன் இசை அமைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பின்னணி இசை என்பது கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய படிவம் போல வழங்கப்பட்டது, இளையராஜா பின்னணி இசைக்கான கொள்கையை மறுவுரு செய்ய விழைந்தார் அல்லது தனக்கான பின்னணி இசை பற்றிய புதிய கொள்கையை உருவாக்கத் தலைப்பட்டார். சுதந்தரவாத இசை முயல்வுகளைப் பாடல்களினூடாகவே உருவாக்க விழைந்த மற்ற இசை அமைப்பாளர்களிடமிருந்து இளையராஜா தனித்து விலகிய புள்ளி மேற்கண்ட கொள்கை உருவாக்கமாக இருக்கக்கூடும். அதிகரிக்கப்பட்ட சப்தங்களாகவும் இறக்குமதி செய்து கொண்ட கோர்வைகளாகவும் பெரும்பாலும் பாடல்களைத் தழுவிய தொடர்பற்ற இசைக் கோர்வைகளின் கூட்டு மிதவைகளாகவும் அது வரை இருந்த பின்னணி இசைப் பாணியை முற்றிலுமாக மறுதலிக்க முயன்று அதில் வெற்றியும் கண்டார் இளையராஜா.
அவருக்கு முன்பிருந்த தென் இந்தியத் திரைப்படப் பின்னணி இசைத் தேவையும் வழங்கலும் அதீத சப்தங்களுடனான பேரொலிகளை மேலாண் செய்கிற நடைமுறையாக பெரிதும் நிலவிய காலத்தில் இளையராஜா இசையமைக்க ஆரம்பித்தார். பின்னணி இசை என்பது அதிகத் துடிப்புகளுடனான விரைந்தொலிக்கும் கோர்வைகள் மட்டுமே என்பதை முற்றிலுமாக நிராகரித்தார். ராஜாவின் இசை மித-மத்திம-மெல்லியல் தன்மையோடு அமைந்திருந்தது. பெருவாரிக் கதைகளுக்கான டைட்டில் இசையை அதுவரை வேறாரும் முன்னெடுக்காத கவன எடுப்புடன் கையாண்டார். ஒரு படத்துக்கான பார்வையாள மனோநிலையைத் தயாரிப்பதில் டைட்டில் இசைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு என்பதை நிறுவினார்.
படம் பற்றிய பேச்சு எழும் போதெல்லாம் பாடல்களுக்கு எந்த விதமான ஆரவாரமும் அரவணைப்பும் கிடைக்குமோ அதைத் தாண்டிய வேறொன்றைப் பெற்றுத் தருவதற்கான முகாந்திரம் படத்தின் பின்னணி இசைக்கு உண்டு என்பதை அவரது படங்கள் வெளிப்படுத்தின. முக்கியமாக படத்தின் டைட்டில் இசைக்கு படத்தோடு ஒன்றச் செய்வதற்கான வல்லமை இருப்பதை உணர்த்த, பல படங்களை முன் வைத்தார். உதாரணமாக, ருத்ரய்யா இயக்கத்தில் உருவான அவள் அப்படித்தான் படத்தின் பின்னணி இசையை மிகக் குறைவான இசைக்கோவைகளும் பெரும்பங்கு மௌனமுமாக அமைத்தார். அந்தப் படம் சார்ந்தோர் அனைவருக்கும் நற்பெயரை ஈட்டித் தந்தது. இசை மிகவும் பேசப்பட்டது.
முதல் ஐந்து ஆண்டுகளில் தன்னை அறிமுகப்படுத்திய தேவராஜ் – மோகன் இயக்கத்தில் ‘அன்னக்கிளி’யைத் தவிர மேலும் ஏழு படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்தில் 5 பாடல்களுக்கு ஐவர் இசையமைத்தார்கள். அவர்களில் ராஜா இசையமைத்த, “நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்” பாடல் மந்திரம் போல் வென்றது. ‘உறவாடும் நெஞ்சம்’ திரைப்படத்தில் ‘ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்’ என்கிற பாடல் ராஜாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலில் தொடர் – வெளி – சப்தம் ஒன்றைத் துடிப்பிசையாக, மொத்தப் பாடலின் ஒலிப்புல நகர்வில் முழுவதுமாக இடம்பெறச் செய்தார் ராஜா. இந்தப் பாடலின் சந்தோஷத்தையும் மென் சோகத்தையும் அவற்றின் புற உலகத் தோற்றங்களிலிருந்து விடுவித்து, நாடகவயமான பாடற் பயன்பாடு ஒன்றைக் கட்டமைத்தார் ராஜா.
உற்சாகத்தையும் அதனுள் மறைந்து ஒலிக்கிற மெல்லிய துக்கச் சரடு ஒன்றையும் கட்டுப்படுத்துகிற வேலையை முன்சொன்ன தொடர் – வெளி – சப்தம் கையாண்டது. ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ படத்தில் எஸ்பிபி – பி.சுசிலா பாடிய ‘ஒரு காதல் தேவதை’ என்கிற பாடலும் இந்தப் பாடலுக்கு ஒப்பானதே. ‘சிட்டுக்குருவி’ படத்தில் பேருந்தின் பின்புலத்தில் நிகழுகிற ‘என் கண்மணி என் காதலி’ என்கிற பாடல், முழுப் பாடலாகத் தொடர்ந்தொலிக்காமல் நாயகன் நாயகி இருவருக்குப் பின்புலத்தில் தோன்றுகிற யதார்த்த மனிதர்களின் தன்னியல்பு உரையாடல் துளிகளை, பாடலோடு பொருந்தி ஒலிக்கச் செய்ததன் மூலமாக மற்ற பாடல்களிலிருந்து அதனைத் தனிக்கச் செய்தார்.
‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் இடம்பெற்ற ‘உச்சி வகுந்தெடுத்து’ பாடல் தாங்க முடியாத கழிவிரக்கச் சுமையை, சுய பச்சாதாபத்தின் அதீத நியாயம் கேட்டலை, அதுவரை தமிழ்த்திரை கையாண்டிருந்த காவிய பாணியிலிருந்து முற்றிலும் விலகி, ஒரு முழுமையான பாமரக் கானமாக ஒலித்தது. இந்தப் படத்தின் பிற உற்சாகப் பாடல்கள், ‘வெத்தல வெத்தல வெத்தலையோ’ மற்றும் ‘மாமன் ஒருநாள் மல்லியப்பூ கொடுத்தான்’ இரண்டும் வாழ்வின் வலி மறக்கச் செய்யும் உற்சாக கானங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நின்று நிதானித்து ஒலிக்கும் ‘என்னுள்ளில் எங்கோ’ என்கிற வாணி ஜெயராம் பாடிய பாடலை, கங்கை அமரன் எழுதினார். ஏகாந்தத்தின் சொல்ல முடியாத விகசித்தலை இசைவழி பெயர்த்து இந்தப் பாடலில் குழைத்திருந்தார் ராஜா.
‘பூந்தளிர்’ எழுபதுகளின் இன்னும் ஒரு சோகச் சித்திரம். இந்தப் படத்தில், பஞ்சு அருணாச்சலம் எழுதிய ‘வா பொன்மயிலே’ என்கிற பாடல் மிகப் புகழ்பெற்றது. ‘சக்களத்தி’ படத்தில் இளையராஜா தன் சொந்தக் குரலில் பாடிய ‘வாட வாட்டுது’ என்கிற பாடல் வானொலி நேயர்களின் பிரியத்துக்கு உகந்ததாய் இருந்தது. தேவராஜ் – மோகன் மற்றும் பஞ்சு அருணாச்சலம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் படங்கள் ராஜாவைச் சற்று நெகிழ்த்தி, தனிக் கவன ஈரம் மிகுந்த பாடல்களை உருவாக்க விழைந்தன.
இந்த முதல் ஐந்து வருடக் காலகட்டத்தில் இளையராஜா அறிமுகமான ஒரு வருடத்துக்குள் எம்.ஜி.ராமச்சந்திரன் தேர்தலில் நின்று முதலமைச்சராக ஆனதும் அதன் பின்னரும் அவர் நடித்த படங்கள் வெளிவந்ததும், இளையராஜா இசையில் எம்.ஜி.ஆர் ஒரு படம் நடிக்க ஏற்பாடுகள் ஆனதும், ஏதேதோ காரணங்களுக்காக அந்தப் பட முயல்வுகள் மேலெடுக்கப்படாமல் நின்று போனதும் பதிய வேண்டிய நிஜங்கள். சிவாஜி கணேசன் தனிச் சிங்கமாக காடுதேடி அலைந்து கொண்டிருந்தார். எம்.எஸ்.வி இசையில் பல சிவாஜி படங்கள் வெளிவந்தன. ‘தீபம்’ திரைப்படம் சிவாஜி கணேசனுக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம். பாடல்களை புலமைப்பித்தன் எழுத, ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது’ என்கிற பெருவெற்றிப் பாடலை யேசுதாஸ் – ஜானகி பாடினார்கள். ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ என்கிற பாடல் உள்பட மற்ற பாடல்களை டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.
‘தியாகம்’ திரைப்படம் கே.விஜயன் இயக்கத்தில் சிவாஜி நடிக்க, கண்ணதாசனின் பாடல்களுக்கு டி.எம்.சௌந்தரராஜன் குரலில் இசையமைத்தார் இளையராஜா. ‘தேன்மல்லிப் பூவே’, ‘வசந்தகால கோலங்கள்’, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ ஆகிய பாடல்கள் பெருவெற்றி பெற்றன. இந்தக் காலகட்டத்தில் ஐ.வி.சசி இயக்கத்தில் ‘பகலில் ஒரு இரவு’, ‘குரு’, ‘காளி’ ஆகிய படங்கள், ருத்ரய்யா இயக்கத்தில் ‘அவள் அப்படித்தான்’, ‘கிராமத்து அத்தியாயம்’ ஆகிய இரண்டு படங்கள், ஆர்.சி.சக்தியின் ‘தர்ம யுத்தம்’, ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் ‘அகல் விளக்கு’, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ ஆகிய படங்கள் பாடல் இசை, பின்னணி இசை என கவனம் ஈர்த்த படங்கள்.
பாரதிராஜா, மகேந்திரன் ஆகிய இரு இயக்குனர்கள் எழுபதுகளின் பிற்பகுதியில் உற்பத்தியான புதிய அலைவரிசையைத் தோற்றுவித்தவர்கள். ஊர்-திசை எனப் பலவிதங்களில் இளையராஜாவின் பூர்வகால நண்பரான பாரதிராஜா, கன்னடத்தின் எழுச்சி மிகுந்த இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் படம் பயின்றவர். அவருடைய ‘பதினாறு வயதினிலே’ எழுபதுகளைக் கூறுபோட்ட மூன்று தமிழ்ப்படங்களில் ஒன்று என வகைப்படுத்தக் கூடிய படம். (‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘வசந்த மாளிகை’ ஆகியன பிற இரண்டு படங்கள்) இன்னொரு வகையில் சொல்வதானால், எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரின் அடுத்தகால இணை இருப்பாக கமலஹாசனுடன் ரஜினிகாந்தை உற்பத்தி செய்த முதல் படமும் ‘பதினாறு வயதினிலே’ தான்.
பாரதிராஜா தமிழ்த் திரைப்படத்தின் அனைத்து பாணிகளையும் நொறுக்கி, தான் போவதற்கான பாதையைப் புதிதாகச் சமைத்துக் கொண்டார். அவருடைய முதல் ஐந்து படங்கள் தொடர் வெற்றிகளைக் குவித்து, இளையராஜாவின் முதல் ஐந்து வருடத்தில் இசை சார்ந்த எல்லா அம்சங்களுக்காகவும் கவனம் பெற்றன. ‘பதினாறு வயதினிலே’வுக்குப் பின்னால் ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’ என ஐந்து படங்களுக்கு அப்பால் ‘நிழல்கள்’ நல்ல பெயரையும் பாடல்களுக்கான பிரபலத்தையும் ஈட்டித் தந்தது. பாரதிராஜா, இளையராஜா இணைகிற படங்கள் மீதான பொது எதிர்பார்ப்பும் பாடல்களுக்கானதோடு நின்றுவிடாமல், பின்னணி இசைக்கான முன் தீர்மானமாகவும் விரிவடைந்தது. ‘சிகப்பு ரோஜாக்கள்’ த்ரில்லர் வகைப் படம். இரண்டே பாடல்களுடன், போதுமான இசை கொண்டு நிமித்தத்தைப் பூர்த்தி செய்தது. இந்தப் படத்தின் பின்புலக் காட்சிகளுக்கான இசை, கோரஸ் குரல்களின் திகில் தோரணமாகவும், மிகுந்தொலிக்கும் த்ரில்லர் தாள இசைக் கூட்டாகவும் அமையப்பெற்றது. இந்திய அளவில் உளச்சிதைவை இசையின் வழியே நுட்பமாக வெளிப்படுத்திய படங்களை வரிசைப்படுத்தினால் அதில் சிகப்பு ரோஜாக்கள் மற்றும் மூடுபனி இரண்டுக்கும் நிச்சயம் இடமளிக்க வேண்டும்.
மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆகிய படங்களுக்கான பாடல்களை அமைப்பதிலும் பின்னணித் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், தேவராஜ் – மோகன் இயக்கிய படங்களுக்கு, தான் உருவாக்கியிருந்த இசைக் கோட்பாட்டின் தொடர்ச்சியாக இசையமைத்தார் இளையராஜா. ‘உறவாடும் நெஞ்சம்’ படத்துக்காக முன் சொல்லப்பட்ட பாடலின் அடுத்த பாடலாக ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்கிற பாடலை அமைத்தார் இளையராஜா. ‘உதிரிப் பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ கிராம நகர கூட்டு மனோபாவம் ஒன்றை இசைவழி நுகர்தலாகக் கேட்பவர் காண்பவர் மனோநிலைகளுக்கு மாற்றித் தருகிற தன் முனைப்பில் பெருமளவு வெற்றி பெற்றன.
‘ஜானி’ மேற்கத்திய செவ்வியல் தன்மையும், வடகிழக்கு இந்திய நாடோடி முறைமையும் கலந்த மனோபாவத்துடன் இசைப்படுத்தப்பட்ட படம். ‘ஜானி’ படத்தில் இடம்பெற்ற ‘ஆசையக் காத்துல தூதுவிட்டு’ பாடலை முப்பத்துச் சொச்ச வருடங்களுக்குப் பின்னால், ‘ஷமிதாப்’ இந்தித் திரைப்படத்தில் தானே மறுவுரு செய்தார் இளையராஜா. அந்தப் பாடல் சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது. ஸ்ரீதருடைய இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன் இரண்டு படங்களின் பாடல்களுமே பெருமளவு வெற்றி அடைந்தன. எழுபதுகளில் இழந்த காதல் பிரிவாற்றாமை ஊடல் தீர்ந்து இணைதல் எனக் காதலின் பல்வேறு சதுக்கங்களைப் பேசிய இளம் தலைமுறையினருக்கு மிகவும் இணக்கமான வெற்றியை ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது பெற்றது.
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1976-1980 வரை 12 படங்களுக்கு இசையமைத்தார் இளையராஜா புவனா ஒரு கேள்விக்குறி, கவரிமான், ஆறிலிருந்து அறுபது வரை, ரிஷிமூலம் எனப் பெருமளவு வெற்றிப் படங்கள். எண்பதுகளில் தமிழின் தவிர்க்க முடியாத இயக்குனராக முத்துராமனும் உச்ச நடிகராக ரஜினிகாந்தும் உருவாவதை உறுதிப்படுத்தியது ஏவி.எம் தயாரித்த முரட்டுக்காளை. வட்டத்துக்குள் சதுரம் படத்தில் இளையராஜா உருவாக்கித் தந்த இதோ இதோ என் நெஞ்சிலே பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் தனித்துவமான பாடல்
1980ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எண்ணிக்கை ஒரு புறம், பாடல்களிலும் பின்னணி இசைச்சேர்ப்பிலும் தான் முயன்று பார்க்க விரும்பிய வித்தியாசங்கள் மறுபுறம் என அடுத்த கற்தொலைவைக் கடந்தார் இளையராஜா. இந்தக் காலகட்டத்தில் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், பஞ்சு அருணாச்சலம், நா.காமராசன் என அப்போது எழுதிக் கொண்டிருந்த அனைவரோடும் இணைந்து பாடல்களை வழங்கினார் இளையராஜா. கங்கை அமரன், வைரமுத்து ஆகிய இருவரும் பாடலாசிரியர்களாக அறிமுகம் ஆயினர், டி. எம். சவுந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து பாடகர்களையும் தன் படப் பாடல்களில் உட்படுத்தினார் இளையராஜா.
இந்த முதற்காலத்தில், தான் தமிழில் இசையமைத்து வெற்றி பெற்ற படங்களின் மறு-உருவாக்கங்கள் சிலவற்றில் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் இசையமைத்தார் இளையராஜா. நேரடியாக மலையாளத்தில் வ்யாமோஹம் தூரம் அரிகே, கன்னடத்தில் ஷங்கர் நாக் இயக்கத்தில் ஜன்ம ஜன்மதா அனுபந்தனா, தெலுங்கில் பசுதி மொகலு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். 16 வயதினிலே மற்றும் நிழல்கள் படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்றார். இந்தக் காலகட்டத்தில் இசையமைத்த புதிய அடிமைகள், மணிப்பூர் மாமியார், நெஞ்சில் ஆடும் பூ ஒன்று ஆகிய படங்கள் வெளியாகவே இல்லை.
இளையராஜா தனக்கு முந்தைய இசைமேதைகளின் இசைப் பணியினின்றும் பாணி, உள்ளடக்கம், கருவிகள் பயன்பாடு, குரல்களை வழிநடத்துவது, பாடலைத் தொடங்குவது, பாடலின் நகர்திசை, உடனொலிகள், உபகுரல்களின் பயன்பாடு, சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசை, புறவய சப்தங்களை இசைப்படுத்துதல், தாளக்கருவிகளின் பயன்பாட்டுத் தொடர்ச்சி, தொன்மக் கருவிகளின் பயன்பாடு, குரலற்ற குரல்களின் எழுச்சி எனப் பலவகை செயற்பாடுகளின் விளைவாக தன்னைத் தனித்துக் கொண்டார். அடுத்தக் காலத்தின் இசைக்கருவிகளின் தரவுகள், அவற்றின் நிமித்தம் தாண்டி அலசி ஆராய்ந்து பயன்படுத்துவதன் மூலமாக அவற்றுக்கான பயன்பாட்டு வெளியை விஸ்தரிப்பது, ஸ்டீரியோஃபோனிக் இசைக் கட்டுமானத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டிய பாடலிசையின் தேவையை நன்கு உணர்ந்து இசையமைத்த பாங்கு எனப் பல காரணங்களுக்கான உற்று நோக்கப்பட வேண்டிய இசை மேதமை கொண்டிருந்தார்.
இளையராஜா இசையமைக்கத் தொடங்கி முதல் நூறு படங்கள் மூடுபனி வரைக்கும் அவர் திரையுலகம் கேட்பதைத் தருவதில் பிழையறப் பணி புரிந்து வந்தார். தனக்கு வழங்கப்பட்ட எல்லைகளுக்குள் அவர் மீறலும் புதுமையுமாக இசையமைக்கவும் முயன்றார். தன் இசைக்கான தேவை – இசை மற்றும் பாடல்களுடைய ஒருங்கிணைந்த மனோபாவத்தைக் கட்டமைக்க விழைந்தார். அதில் வெற்றி பெற்றதோடு மட்டுமன்றித் தன்னைப் பின் தொடர்பவர்களைப் பெரும்பாலும் தொடர் மயக்க நிலையில் வைத்திருப்பதற்கான முன்-பொருள் ஆகவே தன் பாடல்களின் மன வருடலை, அவை உத்தரவாதம் செய்து தர விழைகிற உளவியல் ஆற்றுப்படுத்தலை முன் வைத்தார் இளையராஜா.
அவருக்கு முன்னால் பாடல்களுக்காகப் போற்றப்பட்ட பெருங்கூட்டம் ஒன்று அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவருடைய பாடல்கள் என்பதைத் தாண்டி அவரது இசைக் கோட்பாட்டுக்காக அவரைப் போற்ற விழைந்த புதிய கூட்டம் ஒன்றை உருவாக்கத் தொடங்கினார். இளையராஜாவின் இசைத் திறன் பாடல்களின் வழி தென்பட்டாலும் அவை பாடல்கள் என்ற ஒற்றைத்துவத்துக்குள் நிரம்பி / அடங்கி / முடிந்து விடுவதில்லை. அவரது இசையைக் கொண்டாடுபவர்கள் அவரது பாடல்களின் வார்த்தைகள், வரிகள், விஷயம், குரல், தொனி போன்ற பல அடித்தளங்களைத் தகர்த்து அல்லது மௌனிக்கச் செய்து ஒற்றைத்துவம் கொண்ட மேன்மையாக அவரது இசைத்திறனை மீண்டும் மீண்டும் முன்னெடுக்க ஆரம்பித்தார்கள். அப்படியான இசை இரசிகர்கள் பாடலிசை, பின்னணி இசை, வாத்தியப் பயன்பாடு இவற்றை எல்லாம் தாண்டிய பொதுவான மன அமைதி ஒன்றை அவரால் மட்டுமே ஆகவாய்த்த புனித – அற்புதமாக முன்வைக்கலாயினர்.
நிழல்கள் படத்தில் ‘மடை திறந்து தாவும் நதியலை நான்’ பாடலில் தோன்றினார் இளையராஜா. கதைப்படி வாய்ப்புக்காக ஏங்கி அலையும் இசைக் கலைஞன் ஒருவனுக்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது. தன் முதற்பாடலை இசை அமைக்கிறான். அந்த முதற்பாடலாக விரியும் கனவுப் பாடலை எழுதியவர் வாலி.
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்
என்பதாக வரிகள் விரியும் இதே பாடலின் அடுத்த சரணம் முற்றுகையில்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைகென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
என்று வரும். இந்தப் பாடலில் ஒரு காட்சியில் ராஜா தோன்றியதன் மூலமாக படத்தில் இசையமைக்க முயலுகிறவராக அந்தக் கதாபாத்திரத்தை ஏற்ற சந்திரசேகர் எனும் நடிகர் முற்றிலுமாக பிம்ப நீக்கம் செய்யப்பட்டார். அது இளையராஜா தோன்றுகிற பாடலாகவே பிரதி – பிம்ப உருவாக்கம் நிகழ்த்தப் பெற்றது இந்தப் பாடல். இந்திய சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே அதற்கு முன்னும் பின்னும் உரித்தாயிருந்த பாடல் வரிகளுக்கு உள்ளே மற்றும் பின்புலத்தில், ஒற்றைப் பிம்பமாக போற்றப்படுகிற இரசிக ஆராதனை நாயக ஸ்தானத்தைத் தாண்டி, இசை அமைப்பாளர் என்கிற உள் வரிசைக் கலைஞனுக்கு முதன்முறை இடம் கிடைத்தது.
தனக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களின் நுட்பம் மற்றும் கலைத்திறன் ஆகியவற்றின் மீது பெரும் மரியாதை கொண்டவரான இளையராஜா, தான் அறிமுகமான காலத்தில் இசையின் திசையை ஆனமட்டும் மாற்றி அமைக்கப் பிரயத்தனப்பட்டார். அதில் அவருக்குப் பெரிய வெற்றி கிடைத்ததற்கு அவருடைய ஒத்திகை காலப் பயிற்சியும் மேற்கத்திய இசையில் அவருக்கு இருந்த ஒப்பிலாப் புலமையும் முக்கிய காரணங்களாயின. இந்திய – தென் இந்தியச் சார்தலும் மயக்கமும் துளியும் இல்லாதது அவருடைய இசைப்பாணி. எண்பது முதல் தொண்ணூறு வரையிலான தசாப்தத்தின் இந்தியத் திரை உலகின் மகா செல்வாக்குப் பெற்ற பண்டமாக முன்னெழுந்தது இளையராஜாவின் இசை.
– தொடரலாம்.
நன்றி: இளையராஜாவின் புகைப்படங்களை எடுத்தவர் – எர்னெஸ்டோ