உரத்த கனவு – மாற்கு

by மாற்கு
0 comment

அப்போது காலை ஒன்பது மணி. இதமான தென்றல். இளவெப்பக் கதிர்கள். தாழ்ந்து தவழ்ந்த வெண்மேகங்கள். உடன் பயணித்த நிழல்கள். நிரம்பிய குளங்கள். மெல்லிய அலைகள். மகிழ்வில் துள்ளிய கெண்டை மீன்கள். கரையில் பழ மரங்கள். கிளைகளில் தொங்கிய தொட்டில்கள். உறங்கும் குழந்தைகளின் மெல்லிய குறட்டை. குயில்களின் தாலாட்டு. மைனாக்களின் எக்காளம். கிளிகளின் மழலை. அணில்களின் சாகசம். வாய்க்கால் நீரின் சலசலப்பு. பாத்திகளில் அதைத் திருப்பும் விவசாயிகளின் சூட்சுமம்; களையெடுக்கும் பெண்களின் கலகலப்பு. களைப்பைக் களிப்பாக்கும் பாடல்களின் இனிமை. நிலையாய் நின்ற கொக்குகளின் கூரிய பார்வை. மேயும் ஆடு. மாடுகளின் நிதானம். வயலுக்குள் இறங்கா அவற்றின் நேர்மை. கள்ள ஆடுகளின் மீறல் மணியோசை. மேய்ப்போர் எழுப்பும் அதட்டல் குரல். பயந்து பணியும் கள்ள ஆடுகளின் தலையாட்டல். பறக்கும் விட்டில்களை கவ்விப் பிடிக்கும் குருவிகளின் கீச்சொலி. சலவைத் தொழிலாளரின் பெரிய வயிறுப் பானை. அவற்றில் உவர் மண் கரைசல். ஊறும் அழுக்குத் துணிகள். வேக வைக்க எரியும் சுள்ளிகள்.

தெருக்களில் விளையாடும் குழந்தைகளின் மழலைச் சிரிப்பு. அதற்குப் போட்டியாக சேவல்களின் கொக்கரிப்பு. பஞ்சாரத்திலிருந்து வெளிவந்த கோழிக் குஞ்சுகளின் ஆர்ப்பரிப்பு. குப்பையைக் கிளறும் தாய்க் கோழிகளின் பரபரப்பு. அதில் உணவு தேடும் குஞ்சுகளின் ஆவல்.

உயரப் பறக்கும் பருந்துச் சிறகுகளின் ஆக்ரோஷமான மிதப்பு. குஞ்சுகளின் மீதான கொடூரப் பார்வை. தூக்கிச் செல்லத் தயாராகும் கால் நகங்களின் கூர்மை. அதன் பார்வைக்குத் திரையிட்ட வெண்மேகக் கூட்டங்களின் நகர்வு. தனது குறி தவறிவிடக் கூடாதே என்ற பதைப்பில் மேகத் திரையைக் கிழிக்கும் அதன் வேகம். பருந்தைக் கண்ட தாய்க் கோழியின் அபயக்குரல். விரிந்த சிறகுக்குள் தஞ்சம் புகுந்த குஞ்சுகளின் பதைபதைப்பு. குறி தவறியதால் மேகத்துள் மறைந்த பருந்தின் தந்திரம்.

ரம்மியமான இயற்கைச் சூழல். அப்போது…

பல வண்ணமான இரண்டு பறவைகள் வானில். பண்ணொலி இசைத்து இறகுகள் மின்ன இன்பமாய்ப் பறந்தன. ஒன்றின் கழுத்தில் மெல்லிய மஞ்சள் வட்டம். உயர்ந்தும் தாழ்ந்தும், சிறகடித்தும் அடிக்காமலும், இமைத்தும் இமைக்காமலும், நகங்களை விரித்தும் மடித்தும், குரலெழுப்பியும் எழுப்பாமலும் பறந்தன. மற்ற பறவைகள் அனைத்தும் அவற்றை வியப்புடன் பார்த்து மகிழ்ந்தன.

இணைந்து பறந்தவைகளில் திடீர் மாற்றம். கழுத்தில் மஞ்சள் வட்டமற்ற பறவை பின்தங்கியது. அதன் பாடலில் அபஸ்வரம். மெதுவாகவே சிறகடித்தது. பின்தங்கிய பறவையைப் பொருட்படுத்தாமல் மஞ்சள் வட்டப் பறவை தொடர்ந்து பறந்தது. தன்னுடன் விளையாடவே இவ்வாறு செய்வதாக அது எண்ணியது.

பின்தங்கிய பறவையின் அபஸ்வரம் சோகமாக மாறியது. மகிழ்வில் எதற்குச் சோகம்? முன்னோக்கிப் பறந்த பறவை தனது சிறகுகளைத் திருப்பி மற்றதை நோக்கிப் பறந்தது. ஆனால் மற்ற பறவை சிறகடிப்பதை முற்றிலும் நிறுத்தியது. அதன் சோக கீதமும் மறைந்தது. விண்கல் போல கீழே விழந்தது. மஞ்சள் வட்டப் பறவையின் இன்பப் பாடல் முற்றிலும் நின்றது. பதற்றத்துடன் கீழே விழுந்து கொண்டிருந்த பறவையை நோக்கி வேகமாகச் சிறகடித்துப் பாய்ந்தது. விழுந்து கொண்டிருந்த பறவையின் கண்கள் மூடியும் அலகு திறந்தும் இருப்பதைக் கண்டது. நடப்பதை உணரும் முன் கீழே விழுந்தது பறவை. தரையில் இறங்கும் கால்கள் மேல் நோக்கி. தலை தரையில். அசைவற்றுக் கிடந்தது. அதனருகில் பதற்றத்துடன் அமர்ந்த மஞ்சள் வட்டப் பறவை தனது சிறகுகளை ஓங்கி ஓங்கி அடித்தது. சோகத்தில் கத்தியது.

உயரப் பறந்த பருந்து, விட்டில்களைப் பிடித்த குருவி, பாடிய குயில், பழம் தின்ற மைனா, மழலை பேசிய கிளி, பொந்திலிருந்த ஆந்தை, வயலிலிருந்த கொக்கு என்று அனைத்துப் பறவைகளும் பார்த்தன. விழுந்து கிடந்த பறவையை நோக்கிப் பாய்ந்து வந்தன. அசைவற்றுத் தரையில் கிடந்த பறவையைச் சுற்றிசுற்றிப் பறந்தன. அது இறந்ததை அறிந்தன. மஞ்சள் கழுத்துப் பறவையின் சோகத்தையும் உணர்ந்தன.

சலவைத் தொழிலாளியின் வெள்ளாவியை நோக்கிப் பறந்தது பருந்து. எரிந்துகொண்டிருந்த ஒரு சுள்ளியை அலகால் கவ்விக்கொண்டு வந்தது. அதைப் பார்த்த சில பறவைகளும் அங்கு சென்று எரியும் சுள்ளிகளுடன் திரும்பின. மஞ்சள் வட்டப் பறவை பதற்றமடைந்தது. ஒருநொடி செய்வதறியாது திகைத்தது. மறுநொடி தனது பலத்தை ஒன்றுகூட்டி வேகமாக மிக வேகமாக அங்கிருந்து வானில் பறந்தது. சுள்ளிகளுடன் திரும்பிய பறவைகள் அதைக் கண்டன. கடும் சினத்துடன் அதை நோக்கி எரியும் சுள்ளிகளுடன் பறந்தன. சுள்ளிகளற்ற பறவைகளும் பேரிரைச்சலுடன் மஞ்சள் கழுத்துப் பறவையைச் சீற்றத்துடன் துரத்தின. விரைவில் அதனை நெருங்கின. விரைந்து பறந்த மஞ்சள் வட்டப் பறவை தன்னைத் துரத்தும் அனைத்துப் பறவைகளையும் கண்டது. தன்னால் இதற்குமேல் வேகமாகப் பறக்க முடியாது என்று உணர்ந்தது. அதனிடமிருந்து உலகத்தையே உலுக்கும் சோகப் பாடல் எழுந்து விண்நோக்கிப் பறந்தது. எந்தக் கவிஞனாலும் அதைப் போல அவலப் பாடலை எழுத முடியாது. எந்த இசைஞானியாலும் அதுபோல சோக இசையைப் படைக்க முடியாது.

பறவைகள் பேரிரைச்சலுடன் மஞ்சள் கழுத்துப் பறவையைச் சுற்றின. அந்த இரைச்சல் பறவையின் அவலப் பாடலை முழுவதும் அமுக்கி மறைத்தது. அது பறந்து மறைந்து விடாமல் அதனைச் சுற்றி அரணாக எரியும் சுள்ளிகளுடன் மற்ற பறவைகள்.

மஞ்சள் பறவை மெதுவாக தரையிறக்கப்பட்டது. இறந்து கிடந்த பறவையின் அருகில் அமர்த்தப்பட்டது. சுற்றி நின்றன எரியும் சுள்ளிகளுடைய பறவைகள். அடுத்த வட்டத்தில் பேரிரைச்சலுடன் சுள்ளிகளற்ற மற்ற பறவைகள். மஞ்சள் கழுத்துப் பறவைக்கு சுரக்க விழிநீரில்லை. சோகத்தை இசைத்த நாக்கு கட்டுண்டது. விரிந்து பறந்த வண்ண இறகுகள் சுருங்கின. உறுதியான கால்கள் நடுங்கிச் சரிந்தன. மயங்கி விழுந்தது. உயிரற்றுக் கிடந்த மற்ற பறவையின் அருகில் மஞ்சள் கழுத்துப் பறவையைப் புரட்டிப் போட்டன மற்ற பறவைகள். அவற்றின் ஆவேசப் பேரிரைச்சல் அதிகரித்தது. அலகிலிருந்த எரியும் சுள்ளியை அவற்றின்மீது போட்டது பருந்து. மற்றவையும் அலகுகளிலிருந்த எரியும் சுள்ளிகளைப் போட்டன. மற்ற பறவைகள் அருகில் கிடந்த சுள்ளிகளைத் தேடி எடுத்து அவற்றின்மீது போட்டன. இறந்த பறவையும், உயிருடன் இருந்த மஞ்சள் கழுத்துப் பறவையும் தீயில் எரிந்தன. மஞ்சளின் சிறகுகள் சிலமுறை அடித்து அடங்கின. இரண்டும் சாம்பலாகும் வரை பேரிரைச்சலில் பறவைகள் கத்தின. சாம்பலானதும் உள்ளத்தை உருக்கும் தெய்வீக இசையை அனைத்துப் பறவைகளும் ஒன்றுபோல இசைக்க ஆரம்பித்தன. விரித்த சிறகுகளுக்குள் தலைகளைக் குவித்து மறைத்து வணங்கின.

பதற்றத்துடன் தூக்கத்திலிருந்து எழுந்தார் திரிங்கால். உடல் முழுவதும் வியர்வை. படுக்கையும் நனைந்திருந்தது. உடலில் நடுக்கம். ‘கண்டது கனவா?’ தன்னை இலேசாகக் கிள்ளினார். வலித்தது. ‘கனவே தான். என்ன கொடுமையான கனவு?’ மணியைப் பார்த்தார். இரவு ஒரு மணி.

அவரின் தூக்கம் முற்றிலும் மறைந்தது. கனவே முழுமையாக அவரை நிறைத்தது. மறக்க முயன்றார். முடியவில்லை. நினைவை மற்றதை நோக்கித் திரும்ப முயன்றார். முடியவில்லை. எவ்வளவுக்கு அதிகமாக மறக்க முயன்றாரோ அதற்கு மேற்பட்ட வேகத்தில் கனவு அவரைத் தாக்கியது. மறக்கும் முயற்சியைக் கைவிட்டார். கனவை முழுமையாக மனத்திரையில் ஓட விட்டார்.

‘எவ்வளவு இனிமையான ஆரம்பம். இயற்கை வளம் செழிக்கும் சூழல். நிறைந்த ஏரி, கரையில் பழ மரம், தொட்டில்களில் உறங்கும் குழந்தைகள், பறவைகளின் தாலாட்டு, பசுமையான வயல், ஆடு மாடுகளின் நிறைவு, இருபால் மக்களின் ஆனந்த உழைப்பு, குழந்தைகளின் அபூர்வ விளையாட்டு, கோழிக் குஞ்சுகளின் சுதந்திரம், பருந்தின் ஏமாற்றம், இறுதியாக வண்ணப் பறவைகளின் பாடல்… எவ்வளவு அற்புதமான சூழல். ஒரு பறவை செத்ததால் உன்னதமான சூழல் முற்றாக மறைந்ததே? ஏன்? அதன் பொருள் என்ன? மஞ்சள் வட்டக் கழுத்து எதைக் குறிக்கிறது? மற்ற பறவைகள் எதற்கு அதை திடீர்னு வெறுக்கணும்? ஏன் எரிக்கணும்? என்னகாரணம்? அது செய்த தவறு என்ன?’ எவ்வளவு யோசித்தாலும் கனவின் பொருளை அவரால் உணர முடியவில்லை. ஆனால் கனவின் வழியாக இறைவன் தனக்கு எதையோ உணர்த்த விரும்புகிறார் என்பதை உணர்ந்தார். அது என்ன? அவருக்குப் புரியவில்லை. விளக்கம் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. உறங்க விரும்பவில்லை. தியானத்தில் மூழ்கினார்.

மரியன்னை பங்கு மிகப் பெரியது. கிறிஸ்தவர்கள் பல கிராமங்களில் வசித்தனர். சந்திக்க பல மைல்கள் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதி சரியாக இல்லாத காலம். மோசமான கிராமச் சாலைகள். பங்கு மக்கள் அனைவரையும் அந்தந்த கிராமங்களில் சந்தித்துத் திரும்ப பல வாரங்களாகும். பாதர் கெனோஸ் பங்கு மக்களைச் சந்திக்க ஒருசில நாட்களுக்கு முன்புதான் சென்றிருந்தார். திரும்பும்வரை பங்கின் பொறுப்பு திரிங்காலிடம்.

இரவில் சரியான உறக்கமில்லை. இருப்பினும் திரிங்கால் களைப்பை உணரவில்லை. வழக்கம் போல் காலையில் லத்தீனில் திருப்பலி. சற்று நேரம் செபித்தபின் ஆலயத்திலிருந்து வெளியே வந்தார்.

“சாமி, சர்வேஸ்வரனுக்கு தோஸ்திரம்.” ஓர் இளைஞன் அவரைக் கும்பிட்டார்.

“ஆசீர்வாதம்.”

“சாமி, உங்கள்ட்ட பேசணும். தனியாப் பேசணும்.”

உடன் வந்த உபதேசியாருக்கு வேறு வேலை கொடுத்துவிட்டு இளைஞரை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு வந்தார். நாற்காலியில் அமர்ந்தவர் இளைஞரையும் அமரச் சொன்னார்.

“வேண்டாம் சாமி.” இளைஞர் மறுத்தார்.

“அமர்ந்தால் தான் பேச முடியும்.” அன்பு கலந்த கண்டிப்பு.

நாற்காலியில் அமர்ந்தார். எதுவும் பேசவில்லை. தலைகுனிந்தபடி இருந்தார்.

அவரிடம் மிகவும் அன்பாகக் கூறினார். “உங்களுக்கு பிரச்சினை இருக்குன்னு முகம் அப்பட்டமாக் காட்டுது. என்ன பிரச்சினைனாலும் தைரியமாச் சொல்லுங்க. என்னால் முடிந்ததைக் கட்டாயம் செய்றேன்.”

அவரது பேச்சு இளைஞருக்குத் தைரியம் கொடுத்தது. துணிந்து கூறினார். “சாமி, நான் ஒரு வேளாளர்.”

“தம்பி, கிறிஸ்தவத்துல சாதியில்லை. இப்ப எதுக்கு அதைச் சொல்லணும்?” சற்று நெருடலுடன் கூறினார்.

“சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். நான் ஒரு பெண்ணை விரும்புறேன்.”

“நல்ல செய்திதான். இதைச் சொல்றதுக்கா இவ்வளவு தயக்கம்? அந்தப் பெண் வேற சாதியா? கட்டாயம் திருமணத்தை நடத்துறேன். சாதி மறுப்புத் திருமணங்க தான் சாதியை ஒழிக்கும்.” திரிங்காலிடம் உற்சாசம் பிறந்தது.

“அந்தப் பெண்ணும் வேளாளப் பெண்தான்.”

“அப்ப என்ன பிரச்சினை? பெற்றோருக்கு விருப்பமில்லையா?” மறுபடியும் அவரிடம் தளர்ச்சி.

“பெற்றோருக்கு இன்னும் தெரியாது.”

“பெற்றோர்ட்ட நான் பேசவா?”

“அவங்க சம்மதிக்க மாட்டாங்க. அது மட்டுமில்ல. எங்க சாதியில யாருமே சம்மதிக்க மாட்டாங்க.”

“ஏன்?” ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஏன்னா அந்தப் பெண் விதவை. சின்ன வயசு.”

திரிங்காலுக்கு அதிர்ச்சி. விதவைகள் மறுமணம் என்பது உயர்சாதியினரிடம் இல்லை. கிறிஸ்தவத்திலும் இந்த நிலை நீடிப்பதாக அறிந்திருந்தார். இதை ஒழிக்க மத போதகர்களால் முடியவில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையே மத போதகர்களிடம் நீடித்தது. ‘நான் ஏன் மணி கட்டக்கூடாது?’ திரிங்காலிடம் புதிய உற்சாகம். ‘இந்தத் திருமணத்தை ஆசீர்வதிக்க இறைவனே ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்.’

தலைகுனிந்திருந்த இளைஞனையே அமைதியாக ஒருசில நிமிடங்கள் பார்த்தார். அவருக்குத் தைரியம் அளிக்கும் விதத்திலும் அதே சமயம் மிகவும் கவனமாகவும் கூறினார். “தம்பி, குழம்ப வேண்டாம். அமைதியாப் போங்க. நல்லா யோசிச்சி முடிவைச் சொல்றேன். யார்ட்டயும் சொல்ல வேண்டாம்.”

வணங்கி விடைபெற்றுச் சென்றான் இளைஞன்.

விதவையின் மறுமணத்தை நடத்த வேண்டும் என்று மனதில் தோன்றினாலும் அது சரியா தவறா என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை. சிந்தித்தார். ‘இதுவரைக்கு எந்த மிஷனரிகளும் நடத்தலைனா அதுக்குக் காரணம் இருக்கணும். அது என்ன? இங்க கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறுவதாகக் கேள்விப்பட்டேன். அதைப்பற்றி சபையின் மிஷனரிகள் பல கடிதங்களை எழுதினாங்க. அவங்க அந்தப் பழக்கத்தை ஒழிக்க ஏதும் நடவடிக்கை எடுத்தாங்களா? அது எப்படி நடந்துச்சி?’

மிஷனரிகள் எழுதிய கடிதங்களில் அதுபற்றிய விவரம் இருக்கலாம் என்று எண்ணினார். அவற்றின் பிரதிகள் நூலகத்தில் இருந்தன. எடுத்து வாசித்தார் திரிங்கால்.

பாதர் பிராயான்கோ 1659இல் எழுதிய கடிதத்தில் திருமலை நாயக்கர் இறந்தவுடன் அவரது 200 மனைவியரும் உடன்கட்டை ஏறியதைக் குறிப்பிட்டிருந்தார். அதே ஆண்டு எழுதப்பட்ட கடிதத்தில் திருச்சிராப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி இருந்தது. கணவன் இறந்ததும் கருவுற்றிருந்த அவனது மனைவி உடன்கட்டை ஏற முடிவு செய்தாள். அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் காப்பாற்ற விரும்பிய உறவினர்கள் அதைத் தடுக்க வரும்பினர். ஆயினும் அவர்களது வேண்டுகோள் அவளது செவியில் ஏறவில்லை. கிராமத் தலைவன் அப்பெண்னின் காலில் விழுந்து, அவளது இறுதிக்காலம் வரை அவளைக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். இருப்பினும் மனம் மாறாத அவள் உடன்கட்டை ஏறினாள்.

கி.பி. 1713இல், பீட்டர் மார்ட்டின் என்ற சேசு சபைத் துறவி எழுதிய மடலில், கி.பி. 1689இல், மதுரையை ஆண்ட மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் (1682-1689) இறந்தபோது அவரது மனைவி முத்தம்மாள் உடன்கட்டையேற முயற்சி செய்ததைக் குறிப்பிட்டிருந்தார். முத்துவீரப்பர் இறக்கும் போது கருவுற்றிருந்த முத்தம்மாள், தன் மாமியாரான ராணி மங்கம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்கி குழந்தை பிறக்கும் வரை உடன்கட்டை ஏறாமலிருந்தாள். பின்னர் விஜயரங்க சொக்கநாதரைப் (1706-1732) பெற்றெடுத்துவிட்டு உடன்கட்டையேறி உயிர் துறந்தாள்.

கி.பி.1710இல் கிழவன் சேதுபதி என்ற மறவ நாட்டு மன்னன் இறந்தபோது அவனது 47 மனைவியரும் உடன்கட்டையேறிய நிகழ்சியினை பாதர் மார்ட்டின் நேரில் கண்டுள்ளர். அந்நிகழ்ச்சியை டி.வில்லட் என்ற துறவிக்கு 1713இல் எழுதிய மடலில் குறிப்பிட்டிருந்தார்.

உடன்கட்டை குறித்த நேர்முக வருணனை போல் அமைந்துள்ள அம்மடலை வாசித்தார். ‘இராமநாதபுரம் நகரத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு பெரிய ஆழமான பள்ளம் வெட்டப்பட்டது. ஏராளமான விறகுகளால் அது நிரப்பப்பட்டது. விலை மதிப்பான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட இறந்த அரசரின் உடல் சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு, கொள்ளிகளின் மீது வைக்கப்பட்டது. பிராமணர்கள் பல சடங்குகளைச் செய்தபோது கொள்ளிகளின் அடியில் பல இடங்களில் நெருப்பு வைக்கப்பட்டது. கொள்ளிகளின் அடிப்பக்கம் மளமளவென எரியத் துவங்கியது. அப்போது தலையிலிருந்து பாதம் வரை நகைகளால் அலங்கரிக்கப்பட்டு அலர்க்கிரீடங்களை அணிந்த துரதிருஷ்டம் மிக்க 47 பெண்கள் அணிவகுப்பாக அவர்களின் பலிபீடமான தகன மேடையைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர்.

‘சற்று நேரத்தில் பட்டத்தரசி, இறந்த அரசன் எப்போதும் எடுத்துச் செல்லும் வாளைக் கைகளில் ஏந்தி, அவரது வாரிசிடம் இவ்வாறு கூறினாள் – இங்கே பார், இந்த ஆயுதத்தை அரசர் தனது எதிரிகளை வெல்வதற்காகவே பயன்படுத்தினார். எனவே வேறு எந்தக் காரியத்திற்கும் இதைப் பயன்படுத்தாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள். எல்லாவற்றிற்கும் மேலாக உனது குடிமக்களின் குருதியால் ஒரு நாளும் இதைக் கறைப்படுத்தி விடாதே. அவர் ஒரு தந்தையைப் போல ஆட்சி செய்தது போல் நீயும் ஆட்சி செய். அவரைப் போலவே நீயும் பல ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாய் வாழ்வாய். என்னைப் பொறுத்தவரையில் அவர் இல்லாத இவ்வுலகத்தில் வாழ ஒன்றுமில்லை. அவர் எங்கே சென்றாரோ அங்கே நான் பின் தொடர்வதைத் தவிர வேறெதுவுமில்லை. – இவ்வார்த்தைகளோடு புதிய அரசரின் கரங்களில் வாளை வைக்க அவரும் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாதவாறு பெற்றுக்கொண்டார். அவள் தொடர்ந்து கூறினாள். – ஆ, எத்தகைய மானிட மகிழ்ச்சி கிட்டியிருக்கிறது. நரகத்தில் நான் உயிர் வாழப்போகிறேன் என எண்ணுகிறேன். – பின் தனது கடவுள்களின் பெயர்களையெல்லாம் உரக்கக் கூறிக்கொண்டு பெரும் அழுகையோடு நெருப்பில் வீழ்ந்தாள்.

‘இரண்டாவது பெண் புதுக்கோட்டைத் தொண்டைமான் ராஜாவின் சகோதரி. அவரும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தமது சகோதரியை அலங்காரம் செய்திருந்த நகைகளையெல்லாம் அவர் அகற்றினார். அவ்வாறு செய்தபொழுது தம் கண்ணீரை அவரால் அடக்க முடியவில்லை. அவளது மார்பில் தம்மைச் சாய்த்து மிக வாஞ்சையுடன அவர் அரவணைத்த போதும் மகிழ்சியற்ற அப்பெண் உணர்ச்சியற்றுக் காணப்பட்டாள். சற்று நேரம் தகன மேடையைப் பார்த்தபின் சுற்றியிருப்பவர்களை நோக்கினாள். பின் ‘ஓம் சிவ சிவ’ என்று அழுகையோடு கூறிக்கொண்டு முதல் பெண்ணைப் போலவே தைரியமாக எரியும் நெருப்பில் பாய்ந்தாள்.

‘மற்ற பெண்கள் ஒருவர்பின் ஒருவராகப் பின்தொடர்ந்தார்கள். சிலர் தங்கள் சாவை உறுதியோடும், சிலர் நினைவிழந்த பிரமை நிலையிலும் பயத்திலும் சந்தித்தார்கள். மற்றவர்களைவிட அதிகமாகப் பயந்த ஒரு பெண் மட்டும் அங்கிருந்து ஓடி ஒரு கிறிஸ்துவ இராணுவ வீரனின் கழுத்தைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பாற்ற வேண்டினாள். ஆனால் அவளின் முயற்சி பலிக்கவில்லை. இத்தகைய காட்டுமிராண்டி நிகழ்ச்சிகளுக்குக் கிறிஸ்தவர்கள் உதவக்கூடாது என்று கிறிஸ்தவ சமயம் கடுமையாகத் தடை விதித்திருந்தது. இருந்தாலும் பயந்துபோன அவன், அத்துரதிருஷ்டசாலிப் பெண்ணைப் பலவந்தமாகத் தள்ளிவிட்டான். அவள் தன் சமநிலையை இழந்து தலைகுப்புற நெருப்பில் விழுந்தாள். அப்படைவீரன் துரிதமாகப் பின்வாங்கி, உடல்நடுங்கி, கடும் சுரம் ஏற்பட்டு, இரத்தம் மூளைக்கு ஏறி, உணர்வு திரும்பாத நிலையில் மறுநாள் இறந்தான்.

‘இத்துரதிருஷ்ட பலி ஆடுகள் காட்டிய உறுதியானது போலியானது. ஏனெனில் நெருப்பின் வெம்மையை உணரத் தொங்கியதும், கடுமையான முயற்சிகள் செய்து தங்களின் சமாதிகளிலிருந்து தப்பிக்க விழைந்தனர். ஒருவர் மேல் ஒருவர் விழுந்தடித்துக் கொண்டு உள்ளிருந்து வெளியே வரப் போராடினர். ஈம நெருப்பின் ஓரத்திற்கு வருவதற்கு முயன்று தோல்வியுற்றனர். காதைத் துளைக்கும் கூக்குரலும் முனங்கல்களும் எங்கும் வியாபித்திருந்தது. இவ்வோலங்களை அமுக்கவும், அதே நேரத்தில் எரிகின்ற நெருப்பை மேலும் அதிகரிக்கவும், விறகுக் கட்டைகளை அப்பெண்களின் தலைகளில் விழுமாறு தூக்கி எறிந்தனர். இதன்பின் அவர்களது குரல்கள் மேலும் பலவீனம் அடைந்து இறுதியாக அடங்கிப் போயின.

‘நெருப்பில் எல்லாப் பூதவுடல்களும் சாம்பல் ஆனபின், பிராமணர்கள் இன்னும் புகைந்து கொண்டிருக்கும் கொள்ளிகளுக்கு அருகே சென்று சில சடங்குகளைச் செய்தனர். பின் எரிந்துபோன எலும்புகளையும் சாம்பலையும் எடுத்து, விலைமதிப்புடைய துணிகளில் கவனமாகச் சுற்றி அவற்றை இராமேஸ்வரம் தீவிற்குக் கொண்டுசென்று கடலில் எறிந்தனர். இதன் பின் அக்குழி நிரப்பப்பட்டது. அதன் மேல் இறந்துபோன அரசனுக்கும், கடவுளரோடு இடம் பிடித்துக்கொண்ட அவரின் மனைவியருக்கும் ஓர் ஆலயம் அவர்களது நினைவாகக் கட்டப்பட்டது.’

வாசித்த திரிங்கால் உறைந்து போனார். ‘இந்திய சமூகத்திலிருந்த அவலங்களை அவதானித்தும் எழுதியும் வந்த எனது முன்னோர் ஏன் அவற்றைப் போக்க முயலல? புரையோடிப் போன உடன்கட்டை நோயைப் போக்க எண்ணியதா, முயன்றதா தெரியலையே…? அது தங்களோட சக்திக்கு அப்பாற்பட்டதுன்னு நினைச்சாங்களா? முயன்றாலும் தோல்விதான்னு மௌன சாட்சிகளானாங்களா? முயன்றாலே பல சிக்கல்கள் எழும்னு ஒதுங்குனாங்களா? இப்ப உடன்கட்டை ஏறும் பழக்கத்தை அரசே ஒழிச்சதாச் சொல்றாங்க. இப்ப அந்தக் கொடுமை இல்லை. ஆனா விதவை பிரச்சினை இருக்கு. கிறிஸ்தவத்திலும் அது நீடிக்கிது. இவங்க மறுமணத்தை ஆதரிச்சா பிரச்சினைனு மிஷனரிகள் ஒதுங்குறாங்களா? இது சரியா? ஏன் இன்னும் மௌன சாட்சிகளா இருக்காங்க? இன்னும் எவ்வளவு காலம் இதை சகிக்கிறது? இப்ப விதவையின் திருமணத்தை நடத்த ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நான் ஏன் துணிஞ்சி இந்தத் திருமணத்தை நடத்தக்கூடாது? என்னால நடத்த முடியுமா? அப்படியே நடத்தத் துணிந்தாலும் எப்படி நடத்துறது?’

யோசித்தபோது ஒரு வழி தெரிந்தது. ‘உபதேசியாரின் ஒத்துழைப்பு இல்லாம திருமணத்தை நடத்த முடியாது. ஆனா அவர் வேளாளர். சம்மதிப்பாரா? தெரியலை. இருந்தாலும் அவர்ட்ட வேளாள சமூகத்தில் விதவைகளின் நிலையைப் பற்றிப் பொதுவா விசாரிக்கலாம். அப்ப அவரது மனநிலையை ஓரளவு யூகிக்கலாம். அதுக்குப் பிறகு முடிவு செய்யலாம். மிகவும் கவனமாச் செயல்படணும்.’

உபதேசியாருக்குச் சந்தேகம் ஏற்படாத விதத்தில் விதவைகளின் நிலைபற்றிப் பொதுவாகக் கேட்டார் திரிங்கால்.

“சாமி, எல்லாச் சாதிகள்ளயும் விதவைக இருக்காங்க. ஆனா எங்கள மாதிரி உசந்த சாதிகள்ள விதவைக நிலை ரொம்ப மோசம். பிள்ளை இல்லாத விதவைனா இன்னும் மோசம். வீட்டுக்கு துரதிர்ஷ்டமாம். எல்லாச் சாதிகள்லயும் குழந்தைத் திருமணம், சின்ன வயசுத் திருமணம் நடந்தாலும் உசந்த சாதிகள்ல நடக்கும் இப்படிப்பட்ட திருமணங்க ரொம்பக் கொடூரமானவை. சாதியைக் காக்கணுங்கிறது தான் நோக்கம். வளர்ந்த பிறகு பையனோ பொண்ணோ வேற சாதியினரை விரும்பலாம். எங்காவது ஓடிப்போய் திருமணம் செய்யலாங்கிற பயம். பெண்கள் தான் சாதிப் பெருமையைக் காக்கணுங்கிற நம்பிக்கை. சொத்தும் சொந்தத்துக்குள்ளயே இருக்கணுங்கிற பேராசை. அதனால நெருங்கிய சொந்தங்கள்ல இப்படிப்பட்ட குழந்தைத் திருமணங்க அதிகம். எங்க சாதியில கணவன் இறந்தா அந்த விதவையைக் கணவன் பிணத்தோட எரிக்கும் பழக்கம் இருக்கு.”

“இன்னும் இருக்கா?”

“ஆமா, இருக்கு. இதை சதின்னு சொல்லுவோம். எந்த அளவுக்கு விதவைகளை எரிக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிய அந்தஸ்து உயருமாம். எங்க சாதிக்காரங்களுக்கும் அந்த ஆசை. அதனால தான் எரிக்காங்க. கணவன் இறந்ததும் மனைவிக்கு போதைப் பானங்களை அதிகமா குடிக்கக் கொடுப்பாங்க. மயக்க நிலையில இருப்பவளை அலங்கரிச்சி கணவன் பிணத்தோட கூட்டிக்கிட்டுப் போவாங்க. சுய நினைவோடு இருக்கும் பெண்கள் இதுக்குச் சம்மதிக்கலைனா இழுத்துக்கிட்டுப் போவாங்க. அந்தப் பெண்ணின் ஒப்பாரியை, கதறுதலை, கண்ணீரை யாரும் பொருட்படுத்துறதில்லை. அது வெளிவரக் கூடாதுன்னு கொட்டடிப்பாங்க. மேளம் வாசிப்பாங்க. குழல் ஊதுவாங்க. பெண்கள் குலவையிடுவாங்க. ஆண்கள் ஆ…ஊன்னு கத்துவாங்க. அந்த சத்தத்துல பெண்ணின் கதறல் கரைஞ்சிரும். அவளால திமிறி ஓடவும் முடியாது. சுடுகாட்டுக்கு வந்ததும் கைகால்களைக் கட்டி கணவனோடு சிதையில கிடத்துவாங்க. விறகால மூடிக் கொளுத்துவாங்க. வேதனை தாங்காம பெண் சிதையிலிருந்து எந்திரிப்பா. எழவிடாம அடிச்சி எரிச்சி சாம்பலாக்குவாங்க. பிறகு அந்தப் பெண்ணைச் ‘சதிமாதா’ன்னு தெய்வமா கும்பிடுவாங்க.”

மிஷனரிகள் எழுதியவை இன்றும் நீடிப்பதை அறிந்து அவரது மனம் கொதித்தது. இரவில் கண்ட கனவும் ஞாபகத்திற்கு வந்தது. ‘மஞ்சள் வட்டக் கழுத்துப் பறவைதான் பெண்ணா? மஞ்சள் வட்டம் அவளது தாலியா? இந்தக் கனவு எனக்கு ஏன் வரணும்? கனவின் ஆரம்பத்தில் மகிழ்வான சூழ்நிலையில் மஞ்சள் வட்டக் கழுத்துப் பறவை பறந்ததே. அந்த நிலை எப்பவும் அந்தப் பெண்ணுக்கு நீடிக்க நான் உழைக்கணுமோ?’

உபதேசியார் தொடர்ந்தார். “இருபத்தைஞ்சு வருஷங்களுக்கு முன்னால் இங்க லஷசிங்டன்னு மனிதநேயமுள்ள ஒரு நீதிபதி இருந்தார். அவர் தஞ்சாவூர்லயும் நீதிபதியா இருந்தவர். தஞ்சாவூர்லயும் திருச்சிராப்பள்ளியிலயும் தான் விதவைகளை எரிச்சிக் கொல்ற வழக்கம் அதிகமா இருக்கிறதை பார்த்திருக்கிறார். இந்தப் பழக்கத்தை ஒழிக்க சட்டம் போடுங்கன்னு பிரிட்டிஷ் அரசுக்கு உணர்வுப்பூர்வமான கடிதம் எழுதினார். ராஜாராம் மோகன்ராய்ங்கிற படிச்ச வங்காள இந்தியரும் இதை வன்மையா எதிர்த்தார். இந்தக் காரணங்களால 1829ஆம் வருஷம் பிரிட்டிஷ் அரசு இதைத் தடை செஞ்சது. ஆனா இன்னும் அரசுக்குத் தெரியாம இது நடக்கத்தான் செய்யிது. நல்லவேளையா கிறிஸ்தவத்தில இது இல்ல.”

“கிறிஸ்தவத்துல விதவைக நிலை எப்பிடி இருக்கு?” மிகவும் இயல்பாகக் கேட்பதாகப் பாவனை காட்டினார் திரிங்கால்.

அவரது உள்நோக்கத்தை உணராத உபதேசியார் விளக்க ஆரம்பித்தார். “பெரிய மாற்றம்னு சொல்ல முடியாது. சாதி இந்துக்க எப்படி வாழ்றாங்களோ அதே மாதிரி தான் கிறிஸ்தவங்களா மதம் மாறுனவங்களும் வாழ்றாங்க. கும்பிடும் கடவுள்தான் மாறியிருக்கு. சாதியப் பழக்க வழக்கங்க அப்படியே இருக்கு. நாங்க வேளாளர்கள். எங்கள்ட்டயும் அந்தப் பழக்கம்தான் இருக்கு.”

“வேளாளர்கள் பூர்வீகமே இந்த ஊர்தானா?”

“சில குடும்பங்க இங்கயே இருந்திருக்காங்க. தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினத்திலிருந்து பல வேளாளக் குடும்பங்க குடிபெயர்ந்திருக்காங்க. வேளாளர்கள்லயே பல பிரிவுகள் இருக்கு.”

“அப்படீன்னா?”

“இங்கிருக்கிற சில வேளாளர்களுக்கு காவிரி ஆற்றோரமா நிலம் இருக்கு. அதுல நெல், வாழை பயிரிடுறாங்க. முக்கியமான வெள்ளாமை வெற்றிலை. இந்த வெற்றிலைக்குத் தனி மதிப்பு. வெற்றிலைக் கொடின்னு தான் இதைச் சொல்வோம். இதைப் பயிரிடுறதால கொடிக்கா வேளாளர்னு சொல்றாங்க. சோழிய வேளாளர்கள்ன்னு இன்னொரு பெரிய பிரிவும் இருக்கு. இந்த ரெண்டு பிரிவுகளுக்குள்ளகூட திருமணம் நடக்காது.

“இந்து வேளாளர்கள் எப்படி விதவைகளை நடத்துறாங்களோ அதே மாதிரி தான் நாங்களும் நடத்துறோம். விதவைகள் எந்த சுபகாரியங்கள்லயும் கலந்துக்கிடக் கூடாது. மொட்டை போடணும். அதுவும் ஒவ்வொரு மாசமும். எப்பவும் வெள்ளைச் சீலைதான். பொட்டு, பூ, கம்மல், வளையல், சங்கிலி கூடாது. வீட்டு வேலைகள் எல்லாத்தையும் செய்யணும். பாலியல் துன்புறுத்தலும் இருக்கு. மறுமணம் கூடவே கூடாது. கிறிஸ்தவத்துல மறுமணம் செய்யலாம்னு இருக்கு. இதைப்பற்றி சாமியார்கள் சொல்றாங்க. ஆனா அப்படியொரு திருமணம் இங்க நடக்கல. நடக்கவும் நடக்காது. சாதியத்துல ஊறிப் போயிருக்கோம். கிறிஸ்தவங்கன்னு சொல்ல நாங்க வெக்கப்படணும். பறையர்கள் வித்தியாசமா இருக்காங்க. அவங்க சாதியில விதவைகள் திருமணம் வழக்கம் போல நடக்கு. ஒண்ணு ரெண்டு இங்கயே நடந்திருக்கு. இவங்க விதவைகளை எரிக்கிறதில்லை. அவங்க மறுமணத்தை ஆதரிக்காங்க. வரதட்சணை இல்லை. கடினமான உழைப்பு. எதைச் செய்யணுமோ அதைச் செய்றவங்க தாழ்ந்தவங்களாம், எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்றவங்க உசந்தவங்களாம். கொடுமையா இருக்கு.”

“வேளாள விதவைக்கு கோயில்ல திருமணம் நடத்த முடியுமா?”

“சாமி நடக்கிறதைப் பேசுங்க. ஆனா ஒண்ணு சொல்றேன். நீங்க நடத்துனா அதுக்கு நான் எல்லா உதவியும் செய்றேன். சின்ன வயசிலயே விதவையானவங்க எவ்வளவோ பேர் இங்க இருக்காங்க. அவங்களுக்கு விடிவு காலம் பிறக்கணும். பொண்டாட்டி இறந்த கொஞ்ச நாள்லயே ஆம்பளைங்க ரெண்டாம் கலியாணம் செய்றாங்க. அவங்க கூட விதவைகளைக் கலியாணம் செய்றதில்லை. வயசான காலத்துலயும் சின்னப் பெண்களை, அதுவும் ஏழைப் பெண்களை திருமணம் செய்றாங்க. அவன் சீக்கிரமே செத்துப் போவான். ஏழைப் பெண்ணின் நிலைதான் பரிதாபம். இளம் வயசிலயே விதவை. காலம் பூராம் விதவை.”

திரிங்காலின் மனம் வேதனையில் நிறைந்தது. இருப்பினும் உபதேசியார் திறந்த உள்ளத்தோடு இருப்பது அவருக்குச் சற்று ஆறுதல். ‘இளம் விதவையின் திருமணத்தை நடத்துவதா வேண்டாமா? யாரும் இதுவரை செய்யாததைச் துணிஞ்சி செய்வதா வேண்டாமா?’ தேர்ந்து தெளிந்த முடிவெடுக்க விரும்பினார்.

ஆலயத்திற்குச் சென்றார். பீடத்திற்கு முன் முழந்தாளிட்டார். கரங்களைக் குவித்து குனிந்து தரையை முத்தி செய்தார். நிமிர்ந்து பீடத்தைப் பார்த்தார். விழிகளில் நீர். அடக்கவில்லை. வழியும் வரை வழியட்டும் என்று இருந்தார். வழிவது நின்றதும் மறுபடியும் குனிந்து தரையை முத்தமிட்டார். எழுந்து அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். கண்களை மூடினார். மூடிய கண்ணுக்குள் வேளாள இளைஞன் தோன்றினான். அவன் விரும்புவதாகக் கூறிய விதவைப் பெண்ணும் வெள்ளை முக்காட்டில் முகம் மறைத்துத் தோன்றினாள்.

‘வேளாள இளைஞனின் கோரிக்கை நியாயமானது. திருச்சபைக்கு எதிரானதில்லை. அதனால திருமணத்தை நடத்தலாம். எப்பிடி நடத்தலாம்? பல சாத்தியங்களை ஆராய்ந்தார். பையனின் பெற்றோரை அழைத்துப் பேசி சம்மதம் வாங்கலாமா? ஊர்ப் பெரியவங்களை அழைச்சிப் பேசலாமா? பெற்றோர்கள்ட்ட சம்மதம் வாங்கி வா. நடத்துறேன்னு பையன்ட்ட சொல்லலாமா? சாதிக் கட்டுப்பாடு இருக்கிறதால விதவையை மறந்துவிடுன்னு அறிவுறுத்தலாமா? சாதியினர் எதிர்க்கிறதால விதவையோடு எங்காவது சென்று திருமணம் செய்து வாழ்னு பரிந்துரைக்கலாமா? பங்குச் சாமியார் பாதர் கெனோஸ் வரும்வரை பொறுத்திருந்து அவரிடம் பிரச்சினையை விட்டுவிடலாமா? வருவது வரட்டும்னு துணிஞ்சி பொதுவில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செஞ்சி வரும் பிரச்சினையைத் திருமணத்திற்கு முன்னாலயே சந்திக்கலாமா? யாருக்கும் தெரியாம திருமணத்தை ரகசியமா நடத்தி அதுக்குப் பிறகு பிரச்சினை எழுந்தாச் சந்திக்கலாமா?’

அனைத்து வழிகளையும் இறைவன் திருமுன் ஆராய்ந்தார். இறுதி வழிதான் சரியானது என்று மனதுக்குப் பட்டது. அதை நினைத்தபோதே மனதில் மகிழ்வும் நிறைவும் எழுவதை உணர்ந்தார். இருப்பினும் அது சரிதானா என்று ஆய்ந்தார். இறைவனின் விருப்பத்தை அறிய விரும்பினார். பைபிளைத் திறந்தார். கண்ட பகுதியை வாசித்தார். தொழுகைக் கூடம் சென்ற இயேசு ஓய்வுநாளில் கை சூம்பியவரை குணமாக்கிய நிகழ்வு அது.

‘ஓய்வுநாள்ல எதுவும் செய்யக் கூடாதுங்கிறது யூதச் சட்டம். கடவுளே கொடுத்ததா நம்புனாங்க. ஓய்வு நாள்ல கை சூம்பியவரை இயேசு பார்க்கிறார். அவரிடம் செல்கிறார். சட்டத்தை வலிந்து மீறி குணமாக்குறார். ஓய்வுநாள்ல நல்லது செய்யலாம்னு விளக்கமும் கொடுக்கார். பிரச்சினை உருவாகுது. பிரச்சினை இல்லாம குணமாக்கியிருக்கலாம். அடுத்த நாள் குணமாக்கியிருக்கலாம். எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. இவ்வளவு காலமா கஷ்டப்பட்டவர் இன்னும் ஒருநாள் காத்திருக்கிறது பெரிய காரியமில்லை. தன்னைக் குணமாக்க இயேசுட்ட அவர் கேக்கல. இருந்தாலும் இயேசு குணமாக்குறார். பிரச்சினையை உருவாக்கணும்னு வேணும்னே குணமாக்குறார்னு தோணுது.’

‘எபிரேயம், கிரேக்கம், லத்தீன் படித்த விவிலிய அறிஞர் திரிங்கால். அவரது விவிலிய அறிவு விழித்தது. புதிய ஏற்பாட்டில் பல பகுதிகள் அவரது ஞாபகத்திற்கு வந்தன. ‘இயேசு பலதடவை யூத சட்டங்களை மீறி மதகுருக்கள், பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களோட மோதியிருக்கார். பிரச்சினைகளை உருவாக்கியிருக்கார். முடக்குவாதக்காரரை கூரையைப் பிரித்து இயேசுவுக்கு முன்னால இறக்குனாங்க. அவங்க நோக்கம் முடக்குவாதக்காரரின் உடல்நலன். அதைச் செய்றதை விட்டுட்டு உன் பாவங்க மன்னிக்கப்பட்டனன்னு சொன்னதால பிரச்சினை. பாவிகள், வரிதண்டுவோர் வீடுகளுக்கு யூதர்கள் போறதில்லை. அவங்களைத் தீண்டத்தகாதவங்களா நடத்துனாங்க. அப்படிப்பட்டவங்க வீடுகளுக்கு இயேசு போய் சாப்பிட்டதால பிரச்சினை. ஓய்வுநாள்ல சீடர்கள் கதிர் கொய்து கசக்கிச் சாப்பிட்டாங்க. அதை ஆதரிச்சதால பிரச்சினை. சீடர்கள் நோன்பு இருக்கலை. அதை நியாயப்படுத்தியதால பிரச்சினை. எருசலேம் ஆலயத்தில வியாபாரம் நடக்கிறது வாடிக்கை. அங்க விற்கிறவங்க வாங்கிறவங்களைச் சாட்டையால அடிச்சி விரட்டியதால பிரச்சினை. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லால் எறிஞ்சி கொல்றது வழக்கம். உங்கள்ல பாவமில்லாதவன் கல்லெறியட்டும்னு சொல்லி அப்பெண்ணைக் காப்பாற்றியதால பிரச்சினை.’

‘பிரச்சினைகளை இயேசு உருவாக்குறார். பிரச்சினைகளை உருவாக்கினாத் தான் தீர்வு கிடைக்கும்னு நினைக்கிறார். நல்லதுக்காக பிரச்சினையை எழுப்புறார். அது அவரது இயல்பாயிருக்கு. மக்கள் பார்வையிலிருந்து சட்டத்தைப் பார்க்கிறார். அடிமைப்படுத்தும் சட்டங்களை மீறுகிறார்.

‘விதவைகள் மறுமணம் செய்யக் கூடாதுங்கிறது அடிமைப்படுத்தும் சட்டம்தானே? அதை ஏன் மீறக் கூடாது? விதவையின் திருமணத்தை மந்திரிச்சி பிரச்சினையை ஏன் எழுப்பக்கூடாது? பிரச்சினையை எழுப்பினாத் தானே தீர்வு கிடைக்கும்? பிரச்சினையை எழுப்பலைனா எப்பிடித் தீர்வு கிடைக்கும்? நல்லா யோசிச்சா இது பிரச்சனையே இல்லை. விதவை மறுமணத்தை திருச்சபை அங்கீகரிக்குது. இதை நடத்துறதால நான் எந்தச் சட்டத்தையும் மீறலை. சாதிய வழக்கத்தை மீறுனதாச் சொல்லலாம். சாதிய வழக்கத்தை நான் ஏன் மதிக்கணும்? அது இயேசுவின் நெறியோ திருச்சபையின் சட்டமோ இல்லையே? ஆதிக்கச் சட்டங்களை, அடிமைப்படுத்தும் சட்டங்களை, சாதியச் சட்டங்களை ஆனந்தமா மீறுவதுதானே இயேசுவின் வழி?’

மாற்று எண்ணமும் அவரிடம் எழுந்தது. ‘நான் பங்குக் குரு கிடையாது. பங்குக் குரு வரும் வரை ஏன் ஒத்திப்போடக் கூடாது? விதவைத் திருமணம் இதுவரை நடக்கலை. இது உணர்வுபூர்வமான விஷயம். நான் வரும்வரை காத்திருக்காம எதுக்கு திருமணத்தை மந்திரிச்சீங்கன்னு பங்குக் குரு கேட்டா நான் என்ன பதில் சொல்றது? அவர் வரும் வரை ஒத்திப்போடுறது நல்லதா?’

மறுப்பும் உடனடியாக உதித்தது. ‘பங்குக் குரு இல்லைனா திருமணங்களை மந்திரிக்க எனக்கு அதிகாரமிருக்கு. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் செயல்படுறேன். விதவைத் திருமணங்கிறது ரொம்ப நல்ல விஷயம். காலத்தின் கட்டாயம். நல்லதைச் செய்றதை நான் ஏன் தள்ளிப்போடணும்? நல்லதைச் செய்ய நான் ஏன் அனுமதி கேக்கணும்? இயேசு அப்படிச் செய்யலையே? நல்லது செய்றதைத் தள்ளிப்போடாதே. உடனே செய்ங்கிறது தானே இயேசுவின் கட்டளை. மேலும் இந்தத் திருமணத்தை பங்குக் குரு நிறைவேற்றுவார்னு எப்படிச் சொல்ல முடியும்? இதுவரை விதவைத் திருமணத்தை அவர் நடத்தலையே? இப்ப எப்படி நடத்துவார்? அதனால நான் மந்திரிப்பேன். கட்டாயம் பிரச்சினை வரும். வரட்டும். சமாளிக்கலாம். பங்குக் குருவும் சேர்ந்து சமாளிக்கட்டும். இதுல எனது செயலைத் தவறுன்னு சொன்னாச் சொல்லட்டும். தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியோட ஏற்பேன்.’

ஆலயத்தில் இறைப் பிரசன்னத்தில் தேர்ந்து தெளிந்த முடிவை எடுத்தார். முடிவு எடுத்ததும் மனதின் குழப்பம், சஞ்சலம் முற்றிலும் மறைந்தது. மகிழ்வு அவரை நிறைத்தது. அமைதியை அனுபவித்தார். பீடத்திற்கு முன்பாக முழந்தாளிட்டார். ஒருசில நிமிடங்கள் இறைவனுக்கு நன்றி கூறினார். குனிந்து தரையை முத்தி செய்தபின் ஆலயத்திலிருந்து வெளியே வந்தார். ‘கவனமாத் திட்டமிட்டு விதவையின் மறுமணத்தை நடத்தணும். நம்பிக்கைக்குரிய சிலரது முன்னிலையில ரகசியமா நடத்தணும். பிரச்சனை கட்டாயம் வரும். அவங்க பஞ்சாயத்துக்குப் பிரச்சனையை எடுத்துச் செல்லணும். இது கிறிஸ்தவத்துக்கு எதிரானதில்லைன்னு அதுல விளக்கி எதிர்ப்பை அடக்கணும்.’

திரிங்காலுக்கு உபதேசியார்தான் நம்பிக்கைக்குரியவர். அவரிடம் விதவைகள் மறுமணம் பற்றி மறுபடியும் பேசினார். “விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கும் நீங்க திருச்சபையின் எண்ணத்தையே பிரதிபலிக்கீங்க. ஆனா உங்க சாதிக்காரங்க இதை எதுக்குறாங்க. விதவையின் மறுமணத்தை நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடத்தலாமா?”

“கட்டாயம் நடத்தலாம் சாமி. நாம வாயினால பேசுனா போதுமா? திருமணம் செய்ய யாராவது பையனும் விதவையும் முன்வரணுமே?” உபதேசியார் முறுவலித்தார்.

“ஒரு பையனும் விதவையும் தயாராயிருக்காங்க.”

உபதேசியாருக்கு அதிர்ச்சியான ஆனந்தம். “அப்படியா சாமி? என் வாழ்நாள்ல இப்படி ஒண்ணு நடக்கும்னு நினைக்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. திருமணத்துக்கு முழுசா ஒத்துழைக்கேன். பையனும் பொண்ணும் யாரு? நான் என்ன செய்யணும்? சொல்லுங்க. கட்டாயம் செய்றேன்.”

“ரகசியமா திருமணத்தை நடத்தணும்.”

“எம் பொண்டாட்டி பிள்ளைகளுக்குக்கூட சொல்லமாட்டேன் சாமி.”

மணமக்கள் பற்றிய விவரங்களைக் கூறினார்.

உபதேசியார் மகிழ்வின் நிறைவில் கூறினார். “சாமி, நீங்க கூறிய விதவை ரொம்பச் சின்னப் பெண். இவளுக்கு மறுவாழ்வு கிடைக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோசம். பையனும் தங்கமானவன். திருமணத்தை ரொம்ப ரகசியமா நடத்தணும். யாருக்காவது தெரிஞ்சா பெரிய பிரச்சினையாயிரும். பிறகு திருமணம் நடக்கவே நடக்காது. எனக்கொரு வழி தெரியிது. யாருக்கும் தெரியாம நடத்தணும்னா பகல் தான் தோதானது. காலை, மாலை, இரவுகள்ல எப்பவும் மக்கள் நடமாட்டம் இருக்கும். பகல்ல எல்லாரும் வேலைக்குப் போயிருவாங்க. யாரும் இருக்க மாட்டாங்க. அவளைக் கோயிலுக்கு வரச் சொல்லலாம். அவள் கோயிலுக்கு வர்றதில எந்தச் சிக்கலும் இருக்காது. பையனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. எப்படியும் வந்திருவான். முற்போக்குச் சிந்தனையுள்ள ஒண்ணு ரெண்டு பேர் இருக்காங்க. சாட்சிக்காக அவங்களைக் கூப்பிடுறேன். யார்ட்டயும் சொல்ல மாட்டாங்க. ரகசியமா திருமணத்தை முடிப்போம். அதுக்குப் பெறகு பிரச்சனை கட்டாயம் வரும். சமாளிக்கலாம்.”

மரியன்னை ஆலயத்தில் பகலில் ரகசியமாக விதவையின் திருமணத்தை மனநிறைவுடன் துணிந்து நடத்தினார் திரிங்கால்.

விதவையின் திருமணம் மக்களிடம் கசிந்தது. ரககியமாகக் காதோடு காதாகத் தங்களுக்குள் பகிர்ந்தனர். ஒருசிலர் வெளிப்படையாகப் பேசினர். சாதியத் தலைவர்களுக்கும் தெரிய வந்தது. அவர்கள் கொதித்தனர். சாதியப் பெருமை முற்றிலும் அழிந்துவிட்டதாகத் துடித்தனர். அனைவரும் ஒன்றுகூடி திரிங்காலுக்கு எதிராகக் கடினமான வார்த்தைகளில் பேசினர். உபதேசியார் மேல் அதிகக் கோபம். “நம்ம பழக்கவழக்கங்க தெரியாததால உதவிச் சாமியார் திருமணத்தை மந்திரிச்சிருக்கலாம். ஆனா நம்ம சாங்கியம் தெரிஞ்ச உபதேசியார் எப்படித் துணை போகலாம்? தடுத்திருக்கணும். முடியலைனா நம்மள்ட்ட சொல்லியிருக்கணும். சாமியார் சொல்லுக்குத் தலையாட்டலாமா? சாதிய வழக்கமும் விதவைக்கு நல்லாத் தெரியும். வீட்டுல முடங்கிக் கிடக்கிறதை விட்டுட்டு எப்படித் திருமணம் செய்யலாம்? அவ நிம்மதியா வாழலாமா? அவளை ஊரை விட்டுத் துரத்தணும்.”

மரியன்னை ஆலயத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். விதவையின் மறுமணத்தை எதிர்த்து ஒரு நீண்ட தாளில் அநேகரிடம் கையெழுத்து வாங்கினர். பல பொய்யான தகவல்களை அதில் இணைத்தனர். அதோடு உபதேசியாரைப் பற்றியும் பொய்யும் புரட்டும் நிறைந்த ஒரு கடிதத்தையும் எழுதினர். உபதேசியாரை வேலையை விட்டு விலக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பாதர் கெனோஸ் திருமணத்தை ஏற்கமாட்டார், தங்களுக்குச் சார்பாக இருப்பார் என ஊர்ப் பெரியோர் நம்பினர்.

பங்கு மக்களைச் சந்திக்கச் சென்றிருந்த பாதர் கெனோசுக்கு திருச்சிராப்பள்ளியில் நடந்தவை தெரிந்தன. மிகவும் வருந்தினார். ‘திரிங்கால் செஞ்சது சட்டப்படி சரி. ஆனா அவர் விவேகமா நடக்கலை. உணர்வு சார்ந்த விஷயங்கள்ல கவனமா முடிவெடுக்கணும். மக்கள் கூடியிருக்கும் போது வெளிப்படையாத் திருமணத்தை நடத்திருக்கணும். அல்லது நான் வரும்வரை தள்ளிப் போட்டிருக்கணும்.’

மக்களின் கலவரம் கெனோசை மிகவும் பாதித்தது. திட்டமிட்டபடி அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. இடையில் நிறுத்திவிட்டு அவசரமாகத் திருச்சிராப்பள்ளி திரும்பினார்.
அவரைச் சந்தித்த திரிங்கால் நடந்தவற்றை முழுமையாக விவரித்தார்.

பொறுமையாகக் கேட்ட பாதர் கெனோஸ் நிதானமாகக் கூறினார். “விதவைகள் பிரச்சினை எல்லா மிஷனரிகளுக்கும் தெரியும். மறுமணம் செய்ய ஏற்பாடு செய்யணும்னு நினைச்சாங்க. யாராலும் முடியல. நீங்க துணிஞ்சி மந்திரிச்சிருக்கீங்க. பாராட்டுறேன். ஆனா நல்லா யோசிச்சிருக்கணும். ரகசியமா மந்திரிச்சதால தான் இப்ப பிரச்சினை.”

கெனோஸ் தன்னைப் பாராட்டுகிறாரா அல்லது குற்றம் சொல்கிறாரா என்று திரிங்காலுக்குப் புரியவில்லை. மிகவும் அமைதியாகக் கூறினார். “நான் இறைப் பிரசன்னத்துல செபிச்சேன். நம்ம தலைவர் இஞ்ஞாசியாரின் வழிகளின்படி சாதக பாதகங்களை ஆராய்ந்தபின் தேர்ந்து தெளிந்த முடிவெடுத்தேன். பிறகுதான் திருமணத்தை மந்திரிச்சேன். இப்ப பிரச்சினை. இதைச் சந்திப்போம். நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும்.” அதற்குமேல் கெனோசிடம் திரிங்கால் இப்பிரச்சினை பற்றிப் பேசவில்லை.

பாதர் கெனோஸ் திரும்பிய செய்தி மக்களிடம் பரவியது. திருமணத்தை எதிர்த்தோர் பெருங்கூட்டமாக அவரிடம் சண்டைக்குச் சென்றனர். அவர்கள் எழுதிய மனுக்களைப் படித்தபின் சந்திப்பதாகக் கூறினார். அவற்றைக் கொடுக்காமல் உரக்கக் கத்தினர். பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்தார். மனுவை வாசிக்கும்படி பணித்தார். கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிராக அகந்தையுடன் மனு எழுதப்பட்டிருந்தது. கெனோஸ் மக்களைக் கடிந்து பேசினார்.

கெனோஸ் தங்களை ஆதரிப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு பேரிடி. கோபத்தில் மிரட்டினர். “மறுபடியும் விதவை மறுமணத்தை நடத்த நீங்க பிடிவாதமாயிருந்தா நாங்க யாரும் கோயிலுக்கு வரமாட்டோம். தேவ திரவிய அனுமானங்களைப் பெறமாட்டோம். மறுமணம் புரிந்த தம்பதிகளை ஊரை விட்டு விரட்டுவோம். இனிமே யாராவது சமூகக் கட்டுப்பாட்ட மீறி மறுமணம் முடிச்சா அவங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்போம்.”

கெனோஸ் மிகவும் உறுதியாக விதவைகளின் மறுமணத்திலுள்ள நன்மைகளையும், அது திருச்சபைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்பதையும் விளக்கினார். பிறகு தனது நிலைப்பாட்டைக் கம்பீரமாகப் பறைசாற்றினார். “எந்த விதவையையும் மறுமணம் செய்யும்படி நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனா மறுமணம் புரிய எந்த விதவையாவது முன்வந்தா இயற்கைச் சட்டத்தையும் தெய்வீகச் சட்டத்தையும் மதிச்சி மறுமணத்தை ஆசீர்வதிப்பேன். மறுமணத்தை ஆதரிச்சி புனித சின்னப்பர் தனது கடிதங்கள்ல எழுதியிருக்கார். விதவை மறுமணத்தை எதிர்ப்பவங்க தங்களைக் கிறிஸ்தவங்கன்னு சொல்லத் தகுதியற்றவங்க.”

கெனோசின் முழக்கம் கலகக்காரர்களை நிலைகுலைய வைத்தது. அவர்களும் தங்களது மனதைக் கடினப்படுத்தினர். “சாமி, நீங்க இப்படி ஒரு முடிவு எடுத்தா எங்க சாதிக்காரங்க யாரும் இனிமே கோயிலுக்கு வரமாட்டாங்க” என்ற அவர்களின் பிரதிநிதி கலகக்காரர்களிடம் கோபத்தில் ஆணையிட்டார். “இனும இவர்ட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு? வாங்க போவோம்.”

ஆணவத்துடன் சென்ற கலகக்காரர்களின் செயல்கள் கடுமையாயின. ஆலயத்திற்குச் சென்ற தங்களது சாதியினரைத் தடுத்தனர். பாண்டிச்சேரி சென்று விக்கர் அப்போஸ்தலிக்கைச் சந்தித்து இல்லாததும் பொல்லாததும் கூறினர். தங்களுக்கு நீதி வழங்குமாறு மனு கொடுத்தனர்.

இதுவரை செய்த நல்லவை அனைத்தும் அழிந்துவிடுமோ என்ற கவலை பாதர் கெனோசுக்கு. கலகக்காரர்கள் மேல் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைதியைக் கடைப்பிடித்தார். காலம்தான் பிரச்சினையைத் தீர்க்கும் என்று பொறுமையாயிருந்தார். இறைவனிடம் மன்றாடினார்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நெருங்கியது. தாங்கள் இல்லாமல் எவ்வாறு விழாக் கொண்டாட முடியும் என்ற இறுமாப்பில் கலகக்காரர்கள் இருந்தனர். திருவிழாவிற்கான வரியைக் கொடுக்கவில்லை. மற்ற கிராமத்தினர் வரி கொடுப்பதையும், உதவுவதையும், திருவிழாவில் பங்கேற்பதையும் தடுத்தனர். ஆனால் அவர்கள் எடுத்த முயற்சி அவர்களிடையே பிளவையும் குழப்பத்தையுமே உருவாக்கியது.

பாதர் கெனோஸ் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாட அமைதியாகத் திட்டமிட்டார். அதனால் மற்ற எந்த ஆண்டையும்விட அவ்வாண்டு கிராமத்தினரின் பங்கேற்பு அதிகம் இருந்தது. பெருங்கூட்டம் திருவிழாவில் கூடியது. மக்கள் ஆரவாரத்தோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடினர். கலகக்காரர்கள் இல்லாதது ஒரு குறையாகவே யாருக்கும் படவில்லை. அவர்களது உதவி இல்லாமலே அனைத்தும் மிகவும் சிறப்பாக நடந்தன.

தனது அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றியாக கெனோஸ் உணர்ந்தாலும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. கலகக்காரர்களுக்கு எரிச்சல் மூட்டுவதைக் கவனமுடன் தவிர்த்தார். அவரது பொறுமை தொடர்ந்தது.

பிரச்சினைக்கு முடிவு கட்ட கலகக்காரர்களில் சிலர் முயன்றனர். பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அவர்களிடம் எந்தவிதமான அதிருப்தியையும் கெனோஸ் காட்டவில்லை. அமைதியாக அவர்களை வரவேற்றார். அமரச்சொல்லி அன்புடன் உரையாடினார். அவர்களது கோரிக்கைகளை முற்றிலும் புறக்கணித்து அவமானப்படுத்த விரும்பவில்லை. சிறிது விட்டுக்கொடுத்து அவர்களது வெட்கத்தைக் குறைக்க விரும்பினார். உபதேசியாரை நீக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக மற்றொரு உபதேசியாரை நியமிப்பதாகக் கூறினார். கலகக்காரர்களுக்குச் சந்தோஷம். பழைய உபதேசியாருக்கு கெனோஸ் முன்பு போல உதவ கலகக்காரர்களும் சம்மதித்தனர்.

சுமுகமான தீர்வால் கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத முக்கியமானவர்களும் கெனோசிடம் வந்தனர். தங்கள் செயலுக்காக மன்னிப்பும் கேட்டனர். மெதுவாக இயல்புநிலைக்குத் திரும்பியது. கிறிஸ்தவ விதவைகளின் மறுவாழ்வுக்கான சூழ்நிலை திருச்சிராப்பள்ளியில் உருவானது.