ஒரு வாழ்க்கையும் சில சிதறல்களும் – ஷரிஃபா அல்-ஷம்லான்

0 comment

முதல் சிதறல்:

நான் இருபது வயதானவள். நான் உறுதியாக அறிவேன். எனக்குப் பத்து வயதிருக்கும் போது என்னுடைய தாய் இறந்து போனார். எனது பதினேழு வயதில் நான் இங்கு அழைத்து வரப்பட்டேன். என்னால் என் வயதை சரியாகக் கணிக்க முடியும். ஏனெனில் என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், எங்கள் தோட்டத்தில் ஒரு பேரீச்சை மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் இங்கு மூன்று வருட காலமாக இருக்கின்றேன். என் தந்தையுடைய வருகையின் எண்ணிக்கையை வைத்து அதை நான் அறிந்துள்ளேன். ஒவ்வொரு ரமலான் மாதத்தின் இறுதியிலும் அவர் என்னைக் காண வருவார்.

இன்னொரு சிதறல்:

இன்று வக்ஃபா. நாளை பெருவிழா. அவர்கள் இங்கே விசேஷ அலங்காரங்கள் செய்வது பெருவிழா என்ற காரணத்தினால் அல்ல. நிர்வாக இயக்குநர் வருகை தருகிறார் என்பதினால்.

நான், தாளும் பேனாவும் தரும்படி கேட்டுக் கொண்டேன். நான் என்னுடைய தாய்க்கு ஒரு நீள் கடிதமும் என் தந்தைக்கு வாழ்த்து அட்டையும் எழுத விரும்பினேன். அவர்கள் என்னுடைய வேண்டுகோளை நிராகரித்தனர். நான் நிர்வாக இயக்குநருக்கு புகார் கடிதம் எழுதி விடுவேனென அவர்கள் அச்சம் கொண்டனர். அவர்களைக் கண்டு நான் மனத்திற்குள் மிகவும் நகைத்தேன். ஏனெனில், எனக்கு எப்படி எழுதுவது என்பது கூடத் தெரியாது.

மற்றுமொரு சிதறல்:

நிர்வாக இயக்குநரை கூர்ந்து பார்த்தபோது நான் அதிகம் சிரித்தேன். அவர் பெருத்திருந்ததாகத் தோன்றியது.. மிகவும் பெருத்து. காண்பதற்குத் தூய்மையாகவும் பிரகாசமாகவும் இருந்த ஆண் செவிலியர்கள் அவருக்கு இருமருங்கிலும் வரிசையில் நின்றிருந்தனர். நிர்வாக இயக்குநர் என்னை நெருங்கி வந்த சமயம், முதன்மை மருத்துவன், “அவள் அபாயமானவள்” என்று  (பிறருக்கும்) கேட்கும் தொனியில் அவருடைய காதுகளில் கிசுகிசுப்பாகச் சொன்னான்.

நான் இயக்குநர் அணிந்திருந்த மேலங்கியைத் தொடுவதற்காக எனது கைகளை நீட்டுவதற்கு முயன்றேன். வலிந்து ஒரு புன்னகையை தனது முகத்திலிருத்திய அவர், “உனக்கு என்ன வேண்டும், இளம்பெண்ணே?” என்றார்.

“உங்கள் மேலாடையைத் தொட்டுப் பார்க்க வேண்டும்” என்றேன் நான்.

“எதற்கு?”

நான் அவருடைய காதினை அருகில் கொண்டு வருமாறு சைகை செய்து, பின் அவரிடம் கிசுகிசுத்தேன். “இதை விற்பதாயின் எவ்வளவு பணம் கிட்டுமென்று தெரிந்துகொள்ள! அந்தப் பணம் என் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்குமளவிற்குப் போதுமானதாக இருக்கக் கூடுமா என்றறிந்து கொள்ள” என்றேன்.

அவர் சிரித்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டார்.

பிரதான மருத்துவனின் கண்கள் பயத்தில் பிதுங்கி நின்றன.

முன்நிகழ்ந்த சிதறல்:

பிரதான மருத்துவனை காணநேரும் போதெல்லாம் சிரிப்பு வருகிறது. என் நகங்களால் வரையப்பட்ட வரைபடங்கள் அவன் முகத்தில் இருக்கின்றன. ஒருநாள் என்னை மானபங்கப்படுத்த விரும்பினான். நான் அவன் மூக்கையுடைக்க முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை. நான் செய்ததெல்லாம் அவன் முகத்தை அவனுடைய இரத்தம் கொண்டு பூசியதுதான்.

சிறியதொரு சிதறல்:

அங்கு பணிபுரிபவள் என்னுடைய உணவைக் கொண்டுவந்தாள். நான் ஒன்றும் வினவவில்லை.

“அண்டை வீட்டின் நாய்க்கு மாமிசத்தின் துண்டை வழங்கிவிட்டேன். அது பசியுடன் இருந்தது” என அவள் கூறினாள்.

“அந்த நாய் தகுதியானது என நம்புகிறேன்” என்று சொன்னேன்.

ஒரு கிடைமட்ட சிதறல்:

தனது கையில் மருந்தேற்றும் குழலைச் சுமந்து கொண்டு வழக்கம் போல் செவிலி வருகிறாள். ஊசியை என்னுடைய கைகளில் செலுத்துவதற்கு பதிலாக, தன் உடையின் முன்பகுதியில் மறைத்து வைத்துக் கொள்ளத்தக்க வகையில், அதை உடனடியாக இன்னொரு சிறிய குப்பிக்குள் செலுத்துகிறாள். இதனையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. என்னை அழகான உலகங்களுக்கு… ஒரு பரந்த பிரபஞ்சத்திற்கு.. அந்த மருந்து இடம்பெயரச் செய்வது மெய்தான் எனினும், என்னை அதற்குப் பிறகு ஒரு இருண்ட உலகில் விட்டுச் செல்கிறது – கூடுதலாகக் கடுமையான தலைவலியுடன்.

“எனக்கு நிறைய பேரீச்சை மரத்தின் முட்களை நீ கொண்டு வர வேண்டுமென விரும்புகிறேன்” என்று நான் செவிலியிடம் கூறினேன்.

“எதற்கு?” என அவள் அலட்சியமாகக் கேட்டாள்.

“நான் என்னுடைய படுக்கையைச் சுற்றி ஒரு முள்வேலியை அமைத்துக் கொள்ள அவற்றைப் பயன்படுத்துவேன்” என்று நான் பதிலளித்தேன்.

பிறகு நான் அவளுடைய வயிற்றில் கிள்ளினேன். அவளுக்கு மூச்சுத் திணறியது. பிறகு, அவள் தனது மேலங்கியை தன்னைச் சுற்றிப் போர்த்தியபடி, அங்கிருந்து விரைவாக அகன்றாள்.

வலி நிறைந்த சிதறல்:

ஒருநாள் என் தந்தை எனக்காக சில வளையல்கள் வாங்கி வந்தார். நான் அவற்றால் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். நான் என்னுடைய தோழிகளுக்கெல்லாம் அவற்றைக் காண்பித்தேன். என் மாற்றாந்தாய் அட்டிகைகளும் கொலுசுகளும் நிறைய வளையல்களும் வாங்கினார். நான் கண்டுகொள்ளவில்லை. என்னுடைய தந்தை செல்வந்தராகி விட்டார் என்று நான் மகிழ்ந்திருந்தேன். நான் எனது வளையல்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவை சூரிய ஒளியில் பளபளத்தன. நானொரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன். ஒரு பெரிய ட்ராக்டர் தோட்டத்தை அகழ்ந்து கொண்டிருந்தது. அது என்னுடைய பேரீச்சை மரங்களை நெருங்கிக் கொண்டிருந்தது.

நான் கூச்சலிட்டேன்.. கூச்சலிட்டேன்.. பிறகு கத்தியபடி ஓடிச் சென்று அந்த ட்ராக்டரின் முன்புறத்தில், நிலத்தின் மேல் அமர்ந்து கொண்டேன். என்னுடைய வளர்ப்புத்தாய் என்னைப் பிடித்து அப்பால் இழுத்தபடி, “நாம் தோட்டத்தை விற்பனை செய்துவிட்டோம். அதனை சாலையாக மாற்றப் போகிறார்கள்” என்றார். நான் அவருடைய தலைமுடிகளை இழுத்து அவர் முகத்தைப் பிறாண்டி வைத்தேன். “வளையல்கள் எங்கிருந்து வந்ததென நீ கேட்கவில்லையே?” என அவர் சொன்னார். நான் வளையல்களை அந்தப் பெரிய ட்ராக்டருக்கடியில் விசிறியடித்தேன். அதற்குப் பிறகு, நான் இங்கு அழைத்து வரப்பட்டேன்.

கடைசி சிதறல்:

பணியாள் என்னிடம் வந்து கூறினாள். “அவர்கள் உன்னைப் பற்றி செய்தித்தாள்களில் எழுதியுள்ளனர்”

“ஏன்?” நான் கேட்டேன்.

“நிர்வாக இயக்குநர் உன் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய்கள் அனுப்பி வைத்துள்ளார்.”

“குழந்தைகள் மகிழ்ச்சியுற்றார்களா?”

“ஆம்”, அவள் சொன்னாள்.அவர்கள் நிர்வாக இயக்குனருக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளனர்.” .

*

ஷரிஃபா அல்-ஷம்லான் (1946)

1968ம் ஆண்டு பாக்தாத் பல்கலைகழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 1989-ல் வெளியானது. இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. உள்ளூர் செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார்.

*

மூலக்கதை: Fragments from a Life, Sharifa al–Shamlan