நீர் பதுமராகம்

0 comment

“ஹயாசிந்த் ஓடாதே நில். ஓடாதே” அப்போல்லோ உரக்கக் கூவினான். அப்போல்லோ எறிந்த வட்டத்தகடைத் துரத்திப் பிடிக்கவே ஹயாசிந்த் ஓடினான். அப்போல்லோவும் அவனும் ஸ்பார்ட்டா மலைத்தொடர் குன்றுகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். அன்று அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக வட்டத்தகடை எறிந்து விளையாட முற்பட்டனர். அப்போல்லோ தான் முதலில் எறிந்தது.

அப்போல்லோ சூரியக்கடவுள். வில்வித்தை அறிந்தவன். கையில் வில்லுடனே இருப்பவன். அவன் யாழ் மீட்டி நன்கு பாடக்கூடியவனும் கூட. ஹயாசிந்த் எளியவன். அழகன். எளியவனான ஹயாசிந்தின் மேல் அப்போல்லோவுக்கு காதல். அவனது அழகு இவனைப் பித்துகொள்ளச் செய்தது. ஹயாசிந்தும் அப்போல்லோவை ஏற்றுக்கொண்டான். அவன் யாழின் பண்ணுக்கு சொக்கிப் போவான்.

அப்போல்லோ எறிந்த வட்டத்தகடு காடு, மலை, கடல் என்று பூமிப்பந்தின் கண்டதட்டுகள் கடந்து சென்றது. ஹயாசிந்த் தன் கால்களின் விரல்களைக் கொண்டு கடலில் தத்தித் தத்தி ஓடினான். மேக ஊர்தியில் ஏறிக்கொண்டு நகர்ந்தான். மலைகளை காற்றாய் வளைந்து கடந்தான். கடைசியாய் அந்த அடர்ந்த கானகத்துக்குள் நுழைந்தான். அவனுக்கு அப்போல்லோ எறிந்த தகடை பூமியில் விழுவதற்கு முன்பே கைப்பற்ற வேண்டும். கைப்பற்றி அப்போல்லோவிடம் தந்து தன் காதலின் நிமித்தத்தை தெரியப்படுத்த வேண்டும்.

அப்போல்லோவும் அவனைப் பின்தொடர்ந்தான். இருவரும் நிர்வாணமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். “ஓடாதே நில் ஹயாசிந்த்” அப்போல்லோ ஹயாசிந்தை நெருங்கி விட்டான்.

வட்டத்தகடு கீழிறங்கியது. அது சுழல் கொண்ட வேகத்தில் கலைக்கப்பட்ட ஓசை அந்த அடர்கானகத்தில் ஹயாசிந்தின் காதுகளுக்கு எட்டியது. ஹயாசிந்த் அதனைக் கண்டுகொண்டு விட்டான். இலைகள் சொட்டிக்கொண்டிருந்த கானகம் அது. முழுதும் பச்சை வனப்பு. அருகில் பேரோலம் கொண்ட ஆறு எதுவோ ஓடிக்கொண்டிருக்க வேண்டும். வட்டதகடு ஒரு தடாகத்துக்கு அருகில் வந்து விழுந்துகொண்டிருந்தது.

ஹயாசிந்த் சரியாக கணித்து கை நீட்டினான். ஹயாசிந்துக்குத் தெரியும், வட்டத்தகடைப் பிடித்து விடுவோம் என்று. அப்போது காட்டில் இலகுவான தென்றல் வீசியது. அது அவன் மேனியில் பரவி அவனை ஆசுவாசப்படுத்தியது. கண்களை மூடிக்கொண்டு கையை நீட்டி நின்றுகொண்டிருந்தான். கணம் தப்பிப் போனது போல உணர்ந்து விழித்துப் பார்த்தான். அவன் விழித்த போது அந்தத் தட்டு அவனை விட்டு அகன்று அருகில் இருந்த பாறையில் பட்டு எம்பி அவன் தலையைத் தட்டியெறிந்தது. “ஓ” என்ற ஓலமிட்டான் ஹயாசிந்த். அவன் குருதி அருகில் இருந்த தடாகத்தில் தெறித்து, திட்டுத்திட்டாக, பல துளிகளாக நின்றிருந்தது.

அப்போல்லோ தூரத்தில் இருந்தவனாக அதனைக் கண்டுகொண்டு விட்டான். ஹயாசிந்தை நோக்கி ஓடி வந்தான். குருதி வழிய நின்ற ஹயாசிந்த் மூர்ச்சையாகி அப்போல்லோவின் மடியில் விழுந்து இறந்துபோனான். அவனை நெஞ்சில் ஏந்திக்கொண்டு அப்போல்லோ அழுதான். ஹயாசிந்திற்கு முத்தமிட்டான். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போல்லோ ஹயாசிந்தை காவு வாங்கிய தன் வட்டத்தகடை எடுத்து தடாகத்து ஆழத்தில் வீசி எறிந்தான். அந்தத் தகடு தான் வந்த வேலை முடிந்தது போல மூழ்கியது.

அந்நிகழ்வுக்குப் பிறகு அப்போல்லோ பண்ணமைத்து யாழ் மீட்டிப் பாடிய அத்தனை பாடல்களிலும் ஹயாசிந்தை இழந்த துயரம் இருந்தது. அதனை காதலின் ஓலம் என்றார்கள். அவ்வப்போது ஹயாசிந்த் இறந்து கிடந்த அந்தத் தடாகக் கரையை வந்து பார்த்துக் கொண்டிருந்தான் அப்போல்லோ. ஒருமுறை அப்படி வந்து பார்த்த போது ஒன்றைக் கண்டான். ஹயாசிந்தின் செந்நிற குருதித் துளிகள் நீரில் கலந்துவிடாமல் தனித்தனித் தீவுகளாய்ப் படர்ந்து, அல்லி இலைகளைப் போல தடாகத்தின் மேல்பரப்பில் அப்படியே நிலைகொண்டிருப்பதை!

*

செஃபையர் அப்போல்லோவைக் காண வந்தான். அப்போல்லோ ஹயாசிந்தை நினைத்து பீடித்து இருப்பதை அவன் அறிந்திருந்தான். அப்போல்லோ ஆழ்ந்து எங்கோ அமர்ந்து கொண்டிருந்தவன் போல இருந்தான். செஃபையர் தயங்கியவனாக நெருங்கி அப்போல்லோவின் கால்களில் வந்து விழுந்தான்.

“என்னை மன்னியுங்கள்” என்று அப்போல்லோவின் முன் அவன் மண்டியிட்டான்.

செஃபையர் காற்றின் கடவுள். மென்தென்றலைத் தருபவன். அவன் விழி நீர் கசிந்து தன் காலடியில் கிடப்பது அப்போல்லோவை துணுக்குறச் செய்தது.

“என்ன இது செஃபையர்?”

“என்னை மன்னியுங்கள். இல்லை, நான் என்னை மாய்த்துக்கொள்ளப் போகிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்கு பாவ மன்னிப்பே கிடையாது. மீட்பே கிடையாது. என் தலையை உங்கள் அம்பினால் கொய்தெறியுங்கள்” என்றான்.

“என்ன இது? நானே பெருந்துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிறேன். நீ வேறு வந்து இப்படி? என்ன ஆயிற்று? சொல்” என்றான் அப்போல்லோ.

“ஹயாசிந்தை நான் தான் கொன்றேன்”

“என்ன சொல்கிறாய்?” என்று செஃபையரை நெருங்கி புருவமுயர்த்தினான்.

“ஆம், நான் தான் கொன்றேன். ஹயாசிந்த் அந்த வட்டத்தகடைப் பிடித்திருந்திருப்பான். நான் தான் காற்றாகி வந்து அதனை திசை திருப்பிவிட்டு அருகில் இருந்த பாறையின் மேல் விழச்செய்தேன்”

“நீ தென்றலானவன் ஆயிற்றே” என்றான் அப்போல்லோ.

“ஆம், நான் தென்றலானவன் தான். ஆனால்..”

“என்ன ஆனால்? பாவி. சொல்”

“ஹயாசிந்த் மேல் நான் கொண்ட காதல்…”

“என்ன?”

“ஆம். நானும் ஹயாசிந்தை காதலித்தேன். உங்களுக்கு முன்பே அவனை எனக்குத் தெரியும். நான் அவனை எப்படியெல்லாம் காதலித்தேன் தெரியுமா? என்றைக்காவது அவன் புழுக்கம் கொண்டோ அவன் மேனி வியர்த்து வழிவதையோ உங்களால் பார்க்க முடிந்திருக்கிறதா? ஒரு வியர்வை முத்தாவது அவன் மேல் நின்றிருப்பதை உங்களால் காண முடிந்திருக்கிறதா?“

“இல்லை.”

“ஆம், பார்த்திருக்க முடியாது. அப்படி காதலித்தேன் அவனை. காதலித்துக் கொண்டும் இருந்தேன். ஆனால் அவன் என்னை ஏற்காமல் உங்களோடு வந்துவிட்டான். அதை என்னால் தாங்க முடியவில்லை. உங்கள் இருவரது காதலின் மேல் பொறாமை கொண்டேன். அந்தப் பொறாமையில் புழுங்கி வெந்தேன். பாதி உடல் கரிந்த புழுவைப் போல இருந்தேன். அந்த ஒரு கணம். அந்த ஒரு கணம். என் மூர்க்கம், அந்தப் பொட்டு கணத்தில் திறந்துகொண்டது. எனக்குள் இருந்த புயல் ஒன்று சுழிமையம் கொண்டது. அது அந்த வட்டத்தகடை வீசியெறிந்து திசைமாற்றி பாறையின் மேல் மோதவிட்டது.”

“பாவி” என்றான் அப்போல்லோ. விழிகளில் தோய்ந்திருந்த அவன் பார்வை வேர்கள், சினத்தில் நிறைந்து புடைத்து நின்றன. பின்னர் முழுஅமைதியாகிப் போனான்.

“ஆம், நான் பாவி தான். பாவி. அவன் இல்லாமையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதான் தங்களிடம் ஒப்புக்கொண்டு என் சாவை தேடிக்கொள்ள வந்தேன். என் தலையை கொய்தெறியுங்கள் உங்கள் அம்பால்” என்று நெஞ்சில் அறைந்து அழுதான்.

அப்போல்லோ, “சென்று வா” என்றுவிட்டு எழுந்து அவனை விட்டு அகன்றான். பின்னர் அப்போல்லோவின் இடக் காலைப் பிடித்துக்கொண்டு தரையோடு தரையாக தன் உடலை இழுத்துக் கொண்டு நகர்ந்தான். அப்போல்லோவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

*

அந்தக் கானகத்தில் இருந்த தடாகக் கரைக்கு அப்போல்லோ சென்றான். அவன் அந்தத் தடாகத்தின் மேல் பரப்பில் இன்னும் கரையாமல் திட்டுகளாய்ப் படிந்திருந்த குருதித் துளிகளைக் கண்டான். ஹயாசிந்தின் குருதி நீர்த்துப் போகாமல் மேலும் உருகி இறுகியிருந்தது. பின்னர் வந்த வழியை திரும்பிப் பார்த்து, “செஃபையர் நீ வந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும். என் கண்முன் தோன்று” என்றான்.

செஃபையர் அப்போல்லோவின் கால்களுக்கடியில் மண்டியிட்டவனாய் தோன்றினான்.

“நான் ஹயாசிந்தை உயிர்த்தெழச் செய்யப் போகிறேன். துணை நிற்கட்டும் இறைவனின் பேரருள்” என்றுவிட்டு அப்போல்லோ தடாகத்தில் இறங்கினான். ஒரு குருதித் திட்டுக்கு அருகில் போய் அரை ஆழத்தில் நின்று இறைவனை ஒருமுறை வேண்டிக்கொண்டு யாழ் மீட்டத் தொடங்கினான். அவன் பாட்டுக்கு செவிமடுத்து விழித்துக் கொண்டவன் போல ஹயாசிந்த் அந்தக் குருதித் துளியில் இருந்து எழுந்தான், நுனியில் பூத்திருந்த தாவரமாக.

அப்போல்லோவைப் பார்த்து மடல் விரித்தான். ஊதா நிறப் பூவிதழ்கள் கொண்ட மலர்ச்செண்டு. ஒவ்வொரு மலரிலும் ஆறு இதழ்கள்.  ஆறும் வெளிறிய ஊதா நிறம். மேலிதழில் மட்டும் வெளிரிய ஊதா நிறம். நடுவில் செல்லச் செல்ல மெருகி அடர்ந்து மத்தியில் மஞ்சள் நிறக் கீற்றுடன் காணப்பட்டது. பின்னர், தொடர்ந்து மற்ற குருதித் திட்டுகளில் இருந்தும் அதே போன்ற மலருள்ள நீர்த் தாவரம் அரும்பின. கரையேறிய அப்போல்லோ அவற்றைப் பார்த்தான். ஒவ்வொன்றிலும் ஹயாசிந்தின் சிரிப்பைக் கண்டான்.

மண்டியிட்டு அமர்ந்திருந்த செஃபையர் தலை குனிந்து அப்போல்லோவின் ஆணைக்காக காத்திருந்தான்.

அப்போல்லோ அவனை அழைத்து, “நிமிர்ந்து பார், செஃபையர்” என்றான். பூத்துக் குலுங்கியிருந்த ஹயாசிந்தைப் பார்த்தான் செஃபையர். அவன் கண்கள் தானாகவே கலங்கின.

பின்னர் செஃபையர் அப்போல்லோவைப் பார்த்தான். “உன் மீட்சிக்கான பாதை இதோ. என்னால் அதை ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். அந்த வழியின்படி நீயே உன் மீட்பைத் தேடிக்கொள்ள வேண்டியது தான்” என்றான் அப்போல்லோ.

“என்ன அது?” என்றான் செஃபையர்.

“நீ மீண்டும் காற்றாக மாறி அதோ நீரில் மிதக்கிறதே அத்தாவரம், அது என்றும் நிலைபெற்று சிரித்துக்கொண்டு இருக்கும்படி செய்ய வேண்டும். அது நீரில் அமிழ்ந்து அழுகி விடாமல் அதன் தண்டுகளுக்குள் போய் புகுந்து ஏறிக்கொள். அதுவே உனக்கான மீட்சி” என்றான் அப்போல்லோ.

அதுபடி செஃபையர் காற்றாக மாறி ஒவ்வொரு தாவரத்தின் தண்டுகளுக்குள் புகுந்துகொண்டான்.  நீரில் அத்தாவரம் மூழ்கிவிடாமல் அத்தாவரத்தின் இலைத்தண்டுகள் வீங்கின. அத்தாவரம் நீரில் நிறைந்து தடாகத்து பரப்பு முழுதும் படர்ந்து விட்டிருந்தது. திரும்பிச் சென்ற அப்போல்லோ தூரமாய் இருந்து அந்தத் தடாகத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

*

1769ஆம் ஆண்டு டோவரிலிருந்து மதராஸுக்கு கப்பல் புறப்பட்டது. வாரன் ஹாஸ்டிங்ஸ் அங்கு தான் அவளைச் சந்தித்தார். அவள் அழகி. சீமாட்டி. இருபதில் இருந்து இருபத்தைந்து அகவைக்குள் தான் இருக்கும் அவளுக்கு. வாரன் ஹாஸ்டிங்ஸ் அந்த அழகியின் பால் ஈர்க்கப்பட்டார். எதோவொரு சந்தர்ப்பத்திற்காக அவளிடம் பேச்சு கொடுக்கக் காத்திருந்தார்.

கப்பலின் கீழ் தளத்தில் அன்று இரவு அனைவரும் மதுவருந்திக் கொண்டிருந்தனர். அனைவரும் உயர்குடி மக்கள். அவள் தனக்கான வைன் கிண்ணத்தை ஏந்திக்கொண்டு தன் இதழை கோப்பையில் பதித்தெடுத்து அருந்திக்கொண்டு அமர்ந்திருந்தாள். சுருள்முடிக் கற்றைகளாக அவள் தலைமுடி. அப்படியே காற்றில் எழுந்து உறைந்து விட்ட கடலலைகள் போன்று. தரை தழைய மஞ்சள் நிற அங்கி ஒன்றை உடுத்தியிருந்தாள். அவள் வானத்தில் இருந்து இறங்கிய ஆர்கேஞ்சலாக அவருக்குத் தெரிந்தாள்.

வாரன் ஹாஸ்டிங்ஸ் அவளை அணுகினார். அவர் தனக்கான ஒரு கோப்பையைப் பெற்றுக் கொண்டு, “நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாத பட்சத்தில் நான் இங்கு அமரலாமா?” என்று அவள் அருகில் இருந்த இருக்கையைக் காட்டி நின்றார். அதுவரை எதையோ நினைத்தவாறு மது அருந்திக் கொண்டிருந்தவள், கவனத்தை மீட்டுக் கொண்டு வந்து அவரைக் கண்டு, “தாராளமாக” என்றாள்.

ஹாஸ்டிங்ஸ் அமர்ந்தார். “இந்தியாவிற்கு முதல் தடவை வருகிறீர்களா?”

“ஆம்”

“தங்கள் பெயர்?”

“என் பெயர் மரியா வான் இம்ஹாஃப். என் கணவர் பாரோன் வான் இம்ஹாஃப். நாங்கள் ஜெர்மானியர்கள்.”

“ஆம், தோற்றத்தில் இருந்தே புலப்பட்டு விட்டது.“

“எதற்காக இந்தப் பயணம்?”

“என் கணவர் மதராஸ் மாகாணத்திற்கு உருவப்பட ஓவியராகச் செல்கிறார்”

“ஓ அப்படியா? நன்று”

“நீங்கள்?”

“நான் வாரன் ஹாஸ்டிங்ஸ். எனக்கு இது இரண்டாவது பயணம். ஏற்கனவே நான் இந்தியா வந்துள்ளேன்”

“ஓ அப்படியா? ஏன் திரும்பிச் சென்றீர்கள்? இப்போது ஏன் மறுபடியும் வருகிறீர்கள்?”

“நான் முதன்முதலாய் 1750ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியில் கடைநிலை எழுத்தராக நியமிக்கப்பட்டு கல்கத்தா மாகாணத்திற்கு வந்தேன். அப்போது அங்கு நவாப்பாக அலிவர்தி கான் ஆண்டு கொண்டிருந்தார். அவரது வயது மூப்பிற்குப் பிறகு அவரது பெயரன் சிராஜ்-உத்-தெளலா பதவிக்கு வந்தான். அவன் பிரிட்டீஷ் அரசுக்கு பணிந்தவன் இல்லை. 1756ல் அலிவர்தி கான் இறந்து போனார். அதன் பிறகு நவாப் படையை ஒன்றுதிரட்டி கல்கத்தாவை முழுதுமாக கைப்பற்றினான் சிராஜ். நீ கேள்விப்பட்டிருப்பாய், கல்கத்தாவின் கருந்துளை நிகழ்வு பற்றி. உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு அது. பிரிட்டீஷ் அரசாங்கத்தின் அடிவேரை உலுக்கிப் பார்த்த நிகழ்வு. பிரிட்டீஷ் அரசாங்கத்தையே காரி உமிழ முடியும் சந்தர்ப்பம் ஒன்றை அது உலகத்தார்க்கு தருவித்தது.

“கல்கத்தாவின் ஹூக்ளி நதிக்கரையில் இருக்கிறது வில்லியம் கோட்டை. அங்கே ஒரு இருட்டறையில் பிரிட்டீஷ் படைவீரர்களையும் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்தவர்களையும் கைது செய்து ஒரு நாள் இரவு முழுக்க அடைத்து வைத்தான் சிராஜ். 20 ஜூன் 1756 அன்று. புழுக்கத்திலும் வெக்கையிலும் வெந்து, கூட்ட நெரிசலில் திணறியே அக்குறுகிய அறையில் 120 பேர் மாண்டார்கள்.  நான் அப்போது முர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்டு இருந்தேன். பிறகு தப்பித்து அகதியாக கல்கத்தாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஹூக்ளி நதி கடலில் கலக்கும் இடத்தில் இருந்த ஃபுல்டா தீவில் மற்ற ஆங்கிலேய பிணைக் கைதிகளோடு இருந்தேன். அங்கு தன் கணவனை அந்நிகழ்வில் பலிகொடுத்த மேரி என்ற பெண்ணைப் பார்த்தேன். பின்னர், அவளை மணந்து கொண்டேன்.

“கல்கத்தாவின் கருந்துளை நிகழ்வு பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு நெருக்கடியைத் தந்தது. அவர்கள் ராபர்ட் கிளைவை நியமித்தார்கள். அவர் அப்போது மதராஸ் மாகாணத்தில் பொறுப்பில் இருந்தார். அவர் படைகளை ஒன்றுதிரட்டி கல்கத்தாவைத் தாக்க ஃபுல்டா தீவுக்கு வந்தார். நான் அவரோடு படையில் இணைந்து கொண்டேன். அவர் கல்கத்தாவை கைப்பற்றினார். பின்னர் 1757ல் பிளாசிப் போரில் சிராஜ்-உத்-தெளலாவை எதிர்கொண்டு வெற்றிகொண்டார். அவனது நவாப் அரியணையில் மிர் ஜாஃபரை அமர வைத்தார்.

“நான் ராபர்ட் கிளைவுக்கு அணுக்கனாய் ஆனேன். முர்ஷிதாபாத்தில் பிரிட்டீஷ் குடியிருப்பில் வசித்திருந்தேன். பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கும் வங்காள நவாப் மிர் ஜாஃபருக்கும் தூதுவனாக இயங்கினேன். அவர் மிகவும் வயதானவர்.  வங்காளத்தின் மொத்த காபந்து பணிகளிலும் கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்கள் பெரும்பாலானவர்கள் ஊடுருவி இருந்தனர். வயதின் காரணமாக மிர் ஜாஃபருக்கு பதில் அவரது மகன் மிர் காசிமை அமர வைத்தது பிரிட்டீஷ் அரசு. நான் மிர் ஜாஃபரின் மீது நன்மதிப்பு கொண்டிருந்தேன். அவருக்குப் பதிலாக வந்த மிர் காசிமோடும் நல்லுறவு வைத்திருந்தேன். 1759ல் என் மனைவி மேரி இறந்து போனாள். திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளிலேயே. கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டீஷாரின் ஆதிக்கம் வங்காளத்தில் கூடிவந்தது.

“அவர்கள் தகாதனவற்றைச் செய்யும் போது நான் கேள்வி கேட்பேன். ஒருமுறை சட்டத்துக்கு முரணான வணிகப் போக்குவரத்திற்கு துணை நின்ற கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் கவுன்சிலில் முறையீடு செய்தேன். ஆனால் அவர்கள் அதனை லட்சியம் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் நான் நிராகரிக்கப்பட்டேன். என் குரல் என் செவியை மட்டுமே எட்டியது. தொடர் நிராகரிப்புகளால் துவண்டு போனேன். நான் மிகவும் தாராளமாக நடந்துகொண்டு விட்டேன் என்றார்கள். ஊதாரித்தனமாக செலவழிக்கிறேன் என்றார்கள். மற்றவர்களுக்கு மிகவும் இசைந்து கொடுக்கிறேன் என்றார்கள். கவனச் சிதறலுடன் நடந்து கொண்டேன் என்றார்கள். கிழக்கிந்திய கம்பெனியில் என் ராஜினாமாவை சமர்ப்பித்து இருந்தேன்.

“அப்போது தான், அதாவது, 1764ல் பக்ஸர் போர் மூண்டது. மிர் காசிம் தனியாகச் செயலாற்றினான். அது பிரிட்டீஷாரை சீண்டியது. அவர்கள் அவன் மேல் படையெடுத்தார்கள். கல்கத்தாவில் இருந்த புறப்பட்ட பிரிட்டீஷ் படையை அறிந்துகொண்டு பாட்னாவில் பிணைக் கைதிகளாய் வைத்திருந்த பிரிட்டீஷ் படைவீரர்களை அவன் கொன்று குவித்தான். முன்ரோ தலைமை வகித்த பிரிட்டீஷ் படை தொடர் போர்களில் அவனை வென்றது.

“அவன் டெல்லிக்கு நாடு கடத்தப்பட்டான். வங்காளம் முழுதும் நவாப் ராஜ்ஜியம் அடியோடு ஒழிக்கப்பட்டு பிரிட்டீஷாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் தான் என் ராஜினாமா பரிசீலிக்கப்பட்டது. வெறுங்கைகளுடன் என் தாயகம் திரும்பினேன். என் சேமிப்புகள் எல்லாம் கற்பூரம் போன்று காற்றில் கரைந்தது. கடன்பட்டேன். ராபர்ட் கிளைவுடன் கடிதத் தொடர்பில் இருந்தேன். அவர் உதவியால் மதராஸ் மாகாணத்து கவுன்சிலின் உறுப்பினர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். இப்போது மீண்டும் திரும்புகிறேன்” என்றார் வாரன் ஹாஸ்டிங்ஸ்.

“ஆஹா. உங்களது இருபதாண்டு வரலாற்று வாழ்க்கையை என்னுடைய ஒரு மிடறு வைனில் நான் கடந்து விட்டேனா?” என்றாள் புன்னகைத்தபடி.

ஹாஸ்டிங்ஸ் சிரித்தார். “ஆம் வரலாற்றை ஒரு துளியென உறிஞ்சி கடந்துவிட்டாய். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவின் மேல் மொத்தமாக நிழல் விரித்த வரலாறு. எஞ்சியிருந்த முகாலய சாம்ராஜ்யமும் துடைத்தெடுக்கப்பட்டு விட்டது. இரு பெரும் படையெடுப்புகள். போர்கள். அதில் துளியிலும் துளியாய் நானும் எறும்பென ஊர்ந்திருக்கிறேன். ஆனால் இன்று…”

“இன்று?”

“உன் மதுக் கிண்ணத்தின் விளிம்பில் தளும்பும் நுரைக்கும் கண்ணாடித் தளத்திற்கும் இடைப்பட்டு அல்லாடும் எறும்பாய் எனைக் காண்கிறேன்”.

அவள் “என்ன?” என்று புருவத்தைச் சுருக்கிப் பார்த்தாள். அந்த முகச்சுளிப்பில் புருவக்கோடுகள்  ஒன்றிணைந்த போது அவருக்கு அவள் பேரழகியாய்த் தோன்றினாள். பின்னர் அவர் வைத்திருந்த கோப்பையால் அவளது கோப்பையை உரசி, “மகிழ்வுடன் பருகுக” என்றார்.

“என்ன சொன்னீர்கள்? எனக்குப் புரியவில்லை”

“ஒன்றுமில்லை.”

“இல்லை எதோ சொல்ல வந்தீர்கள்?”

“ஒன்றுமில்லை. உன் கணவன் எங்கே?”

“அவர் எங்களது அறையில் இருப்பார்.”

“சரி” என்று அவளை விட்டு அகன்றார்.

அவள் மதுக்கோப்பையுடன் அவரைப் பின்தொடர்ந்தார்.

“நீங்கள் எதையோ என்னிடம் சொல்ல வந்தீர்கள்?”

“அதான் ஒன்றுமில்லை என்று சொன்னேனே”

“இல்லை. பரவாயில்லை சொல்லுங்கள்”

“உன் அழகு என்னை பாழ்படுத்துகிறது. நீ என்னுடனே வந்து விடு. நான் உன்னைக் காதலிக்கிறேன். போதுமா?”

அவள் நின்றுவிட்டாள். அவர் தள்ளாடியபடி வேகமாக முன் நடந்து சென்றார்.

பின்னர் சிறிது நேர அமைதிக்குப் பின் அவரிடம், “அப்படியென்றால் நாளை ஏதாவது ஒரு பரிசுப் பொருளோடு என்னை வந்து சந்தியுங்கள்” என உரக்கக் கத்தினாள்.

அவர் பின்னால் தலைதிருப்பி சிரித்துக்கொண்டே சென்றார்.

*

மறுநாள் அவளை அவர் அந்தப் பூக்களோடு சந்தித்தார். நீர் பதுமராக மலர்கள் கொண்ட செண்டு. ஊதா நிறப் பூக்கள் நிறைந்து இருந்தது. 45 நாள் கடல் பயணத்தில் வாடி விடாதவாறு பதனப்படுத்தி வைத்திருந்தார்.

அவளைச் சந்தித்து அவள் கண்களின் முன் அதனை நீட்டினார்.

“என் அன்புக்கினிய பாரோனஸ் வான் இன்ஹாஃப் அவர்களுக்கு.”

அவள் அதை வாங்கிக்கொண்டாள். பூக்களின் ஊதா நிறம் அவளைக் கவர்ந்திழுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆச்சரியமாகப் பார்த்தாள். ஒவ்வொரு இதழ்களாக தொட்டு வருடினாள்.

“காணக் கண்கொள்ளாது” என்றாள். பின்னர், “என்ன பூக்கள் இவை? இதற்குமுன் நான் பார்த்ததே இல்லையே.”

“இவை உன்னைப் போலத்தான். எக்சோடிக் பூக்கள். பார்த்தவுடனே சுண்டி இழுப்பவை”. அவள் கன்னங்கள் கடலில் இருந்து வந்த உப்புக்காற்றிலும் சிவந்து போனது.

“இது நன்னீர் தாவரம். ஏரி, குளங்களில் வளரும். இதன் பெயர் வாட்டர் ஹயாசிந்த். இவை தென் அமெரிக்க நாடான பிரேசிலில், அமேசான் காடுகளில் கண்டெடுக்கப்பட்டவை. இத்தகைய பல பூக்கள் உலகம் முழுக்க உண்டு. உயர்குடிகளுக்கு இத்தகைய செடிகளில் இருந்து பூக்களைக் கொண்டு வந்து இப்படிக் கொடுத்து வாழ்த்தும் வணக்கமும் தெரிவிப்பது ஒரு வழக்கம். அதற்காகவே, அரிய வகைப் பூக்களின் கண்காட்சி நடைபெறும். இத்தகைய பூக்கள் கொண்ட செடிகள் உலகம் முழுதும் இப்படித்தான் பரவ முடியும். நான் டோவரில் நண்பர் ஒருவரது தோட்டத்தில் இருந்து இப்பூக்களைப் பறித்துக்கொண்டு வந்தேன்.”

“சரி. எவருக்கு கொண்டு செல்கிறீர்கள்?”

“ராபர்ட் கிளைவுக்காக.”

“அவருக்காக கொண்டு செல்வதை எனக்கு அளித்துவீட்டீர்களே!”

“அது பரவாயில்லை. சமாளித்துக் கொள்ளலாம்.”

“சரி, இந்தப் பூவை ஏன் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அதுவும் அவருக்காக?”

“இந்தப் பூவைக் கொண்ட தாவரம் விசித்திர அம்சம் கொண்டது. இதன் வேர், நீரில் அமிழ்ந்து இருக்கும். தாமரையைப் போல நீண்டு நீருக்கடியில் இருக்கும் சேற்றுக்குள் புதைந்து இருக்காது. வெறும் மிதவை தான். இதன் இலைகள் நன்கு வழவழப்பாக இருக்கும். மேலும், இதிலிருந்து ஒரு செடியை எந்தவொரு ஏரியிலோ குளங்களிலோ விட்டாலும் மிக விரைவாகவே சுற்றிலும் படர்ந்து ஏரிப்பரப்பை முற்றிலும் மூடிவிடும். அங்கங்கே தனித்தனி காலனிகளாக தென்படும். இதன் தண்டு நடுவில் வீங்கி காற்று அடைந்து காணப்படும். அது இத்தாவரத்தை நீருக்குள் மூழ்காமல் பார்த்துக் கொள்ளும். இது எல்லாம் அவற்றின் தாவர இயல்புதான். ஆனால் நான் தனிப்பட்ட முறையில் இப்பூக்களுடன் ஒன்றிப் போவது உண்டு. சில காரணங்களுக்காக. செடிகளின் உச்சியில் அமைந்திருக்கும் இப்பூக்கள். அழகிய ஊதா நிறப் பூக்கள் நிறைந்த கொத்துகள். அதிலும் மேல் நோக்கி நின்றிருக்கும் அந்த இதழ் எனக்கு ஒன்றை உணர்த்தியது.”

“என்ன உணர்த்தியது?”

“அதை நான் சொல்வதற்கு முன்பு, நீ எனக்கு ஒரு பதில் சொல். இந்த பூமிப்பந்தின் நெற்றிப் பொட்டு எது?”

“என்ன இப்படி கேட்கிறீர்கள்? சத்தியமாக எனக்கு அப்படி ஏதும் தெரியாது.”

“சரி. நான் இந்த ஆறு இதழ்கள் விரிந்த பூவை பூமிப்பந்தாய் கற்பனை செய்து கொள்கிறேன். இதில் நீ நெற்றிப் பொட்டாய் கருத வேண்டிய பகுதி எது என்று சொல்.”

அவள் மேல் நோக்கி நின்றிருந்த இதழைச் சுட்டினாள்.  அந்த இதழ் மற்ற இதழ்கள் போலில்லாமல் மத்தியில் ஊதா நிறம் அடர்ந்து மஞ்சள் நிறக் கீற்றோடு இருந்தது. அதைச் சுட்டிக் காண்பித்து, ‘நீங்கள் சொன்ன அந்த நெற்றிப் பொட்டுப் பகுதி இந்த மஞ்சள் நிறப்பகுதி தானே?’ என்றாள்.

“சரியாகச் சொன்னாய். இப்போது என் பழைய கேள்விக்கு வா. பூமிப்பந்தின் நெற்றிப் பொட்டு எது?”

“மன்னிக்கவும். என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை”

“சரி. பூமிப்பந்தின் நெற்றிப்பொட்டு கிரேட் பிரிட்டன். புவியமைப்பின்படி, சூரியன் கிழக்கே ஜப்பானில் கிரேட் பிரிட்டன் நேரத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன் உதிக்கிறது. மேற்கே அலாஸ்காவில் 12 மணிநேரத்திற்குப் பின் மறைகிறது. மேலும், கிரேட் பிரிட்டன் வடதுருவத்திற்கு அதாவது உச்சிக்கு சற்று கீழாக அமைந்திருக்கிறது. இது சாதாரண புவியியல் அமைப்பாக இருக்கலாம். ஆனால் என்னால் அப்படியே விட்டுவிட முடியவில்லை. இத்தாவரத்தின் படர்தல் தன்மையைப் பார்த்த பின்பு இனம்புரியாத ஒன்றை அது எனக்குச் சொல்கிறது. இத்தாவரம் என்னைப் பொருத்தவரை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் குறியீடாக எண்ணிக்கொண்டேன். இதைச் சொல்லி ராபர்ட் கிளைவுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் இப்போது அது என் காதலின் குறியீடாய் மாறி உன் மென்மையான கைகளில் இருக்கிறது” என்றார்.

அவள் சிரித்தாள்.

*

கப்பலில் இருந்து இறங்குவதற்கு முன்னரே மரியாவின் கணவன் இம்ஹாஃபிடம், தான் அவளைக் காதலிப்பதாகவும் அவளும் தன்னை விரும்புவதாகவும், தான் அவளை மணம்புரிந்து கொள்ளப் போவதாகவும் அதனால் அவனிடம் அவளை விவகாரத்து செய்யும்படியும் கோரினார்.

தேவைப்பட்டால் அவனை ஒத்துக்கொள்ள வைக்க, தன் அதிகாரத்தை பிரயோகிக்கவும் நினைத்திருந்தார். ஆனால், இம்ஹாஃப் எந்தவித மறுப்பும் இன்றி அதற்கு ஒத்துக்கொண்டான். அது ஹாஸ்டிங்ஸை அதிரச்செய்தது. ஆனந்த அதிர்ச்சி தான் என்றாலும். இவ்வளவு தூரம் கூட்டி வந்தவளை எளிதில் கைவிடுவதென்பது எப்படி சாத்தியம்? அதுவும் இப்படியோர் அழகியை?

எப்போதாவது அவனைப் பற்றி மரியத்திடம் கேட்பார். அவள், “அவர் தன்னைப் பெரிதும் வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர். அவருக்கு ஓவியம் தான் அனைத்துமே” என்றாள். ஒருமுறை அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அவர் வந்திருந்த போது அவளே அவன் வரைந்து வைத்திருந்த உருவப்படங்களைக் காண்பித்தாள். நேர்த்தியான உருவ ஓவியங்கள் அவை.

“இத்தனை படங்களையும் நான் தான் கட்டிச் சேர்த்து கப்பலில் எடுத்துக்கொண்டு வந்தேன். இப்படங்களை நம்பித்தான் நாங்கள் பிழைப்பு தேடி இக்கப்பலில் ஏறியிருக்கிறோம். அவர் வாழ்வது அடுத்து அவர் வரையப்போகும் ஓவியத்தில் தான். அது வரையப்பட்ட பிறகு அதற்கான எந்த உரிமையையும் அவர் கோரமாட்டார். அகன்று விடுவார். இந்தப் படங்களை வெளியே கொண்டு போய் கடலில் வீசியெறிந்தாலும் அவர் கவலைப்பட மாட்டார்”  என்றாள்.

வாரன் ஹாஸ்டிங்ஸ் நினைத்தார். கலைஞர்கள் எதனையும் எளிதாக உதறிவிட்டுச் செல்லக் கூடியவர்களா? தம்மைப் போன்று வெளியிருப்பவருக்குத் தான் கலையும் அழகும் அச்சுறுத்துத்துமா? அடிவிழைவை ஏற்படுத்துமா? பற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றச் செய்யுமா? கலைஞர்களுக்கு அந்தப் பற்றுதல் அறவே கிடையாதா? அவர்கள் தன்னைப் போன்ற சாமான்யர்களை நோக்கி, தன் கலையால் புன்னகைத்து கடந்து செல்லக் கூடியவர்களா?

அவர் அவளிடம் கேட்டார். “இது அனைத்தும் தெரிந்தே தான் நீ அவரை ஏற்றுக்கொண்டாயா?”

அவள் பதில் சொன்னாள். “எது எப்படி நடக்கும் என்று எவருக்குத் தெரியும்? காலத்தின் விதைகளை கண்கூடிப் பார்த்து கணிப்பவர் யார்?”

வாரன் ஹாஸ்டிங்ஸின் முகம் சுருங்கியது. அவள் வெடித்துச் சிரித்து, “உங்களை இக்கப்பலில் சந்திக்க நேர்ந்ததற்கு அவரும் ஒரு காரணமாகிப் போனார் அல்லவா?” என்றாள். சற்றுமுன் தொலைந்த சிரிப்பை மீட்டுக்கொண்டு வந்தார் ஹாஸ்டிங்ஸ்.

வாரன் ஹாஸ்டிங்ஸ் மதராஸில் பொறுப்பேற்றுக் கொண்டார். மரியமும் வான் இம்ஹாஃபும் விவாகரத்துக்காக ஜெர்மனியில் கோரியிருந்தார்கள். இம்ஹாஃபுக்கும் மேரிக்கும் ஒருவேளை குழந்தை பிறந்தால் அதற்கும் ஹாஸ்டிங்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டு ஒரே வீட்டில் அவர்கள் மூவருடன் வாழலாம் என்று ஜெர்மனியில் இருந்து பதில் வந்தது. அது மினேஜ்-எ-ட்ராய்ஸ் வழக்கம். ஹாஸ்டிங்ஸ் அதற்கு உடன்பட்டு இருவரையும் தன்னோடு வைத்துக் கொண்டார். எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தார்.

இந்த விவாகரத்தினால் எவர் ஒருவருக்கும் பிரச்சினையில்லாமல் சுமூகமாக இருந்த போதும் கூட அது ஜெர்மனி அரசால் இழுத்தடிக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம் என்று எவராலும் யூகிக்க முடியவில்லை.  ஹாஸ்டிங்ஸ், வான் இம்ஹாஃபை “சென்று விடு” என்று சொன்னால் சென்று விடுபவன் தான். ஆனால், அந்த இழுத்தடிப்பு அவர்களை வெகுகாலம் ஒரே குடித்தனத்தில் வைத்திருந்தது.

வாரன் ஹாஸ்டிங்ஸ் அலுவல் பணிகளில் தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியின் நன்மதிப்பைப் பெற்றார். ராபர்ட் கிளைவ் அவர்கள் முன்மொழிந்த ஒன்றுபட்ட கிழக்கிந்திய கம்பெனிக்கான தன் ஆதரவினை தெரிவித்தார். இப்போது மதராஸ், பம்பாய், கல்கத்தா என்று மூன்றாக பிரிந்து செயல்படும் மாகாணங்களைத் தொகுத்து ஒற்றை ஆட்சிக்குள் ஒற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அதன் நோக்கம். மூன்று மாகாணங்களுக்கும் தலைநகரமாக கல்கத்தா இயங்கும்.

1771ஆம் ஆண்டு அவர் இம்ஹாஃப் தம்பதியினருடன் கல்கத்தாவிற்கே திரும்பச் சென்றார். அவரை வில்லியம் கோட்டையின் கவர்னராக நியமித்தது கிழக்கிந்திய கம்பெனி. கிளைவ் அவர்கள் முன்மொழிந்த எல்லைகள் அழிக்கப்பெற்ற ஒற்றை ஆட்சிக்குள் மொத்த இந்தியாவும் கொண்டு வரப்பட்டது. 1773ல், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார். கல்கத்தாவின் அலிப்பூரில் இருக்கும் பெல்வதெரே தோட்டத்து மாளிகையில் தன் வீட்டை அமைத்துக் கொண்டார். 1777ல் தான்  இம்ஹாஃப் தம்பதியினருக்கு விவாகரத்து முற்றிலுமாக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாரோன் வான் இன்ஹாஃபை கணத்த வெகுமதியுடன் ஹாஸ்டிங்ஸ் அனுப்பி வைத்தார். அவன் அந்த வெகுமதியைக் கூட சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சம்பிரதாயமாகத் தான் வாங்கிக் கொண்டான். எப்படியும் அவன் அதனை பொருட்படுத்தப் போவதில்லை. வெகுமதியை ஏற்று தன் முன்னால் மனைவியை ஹாஸ்டிங்ஸிடம் விட்டுவிட்டுச் சென்றான். அன்றிலிருந்து மரியன் ஹாஸ்டிங்ஸ் என்றும் லேடி ஹாஸ்டிங்ஸ் என்று வழங்கப்பட்டாள் மரியா.

அவர்கள் இருவரும் பெல்வதெரே தோட்டத்து புல்வெளிகளிலும் தடாகக் கரையிலும் தங்கள் அலாதியான காதல் தருணங்களைக் கழித்தனர். ஹூக்ளி நதிக்கரையோரமாக அமைந்திருந்தது அம்மாளிகை. ஒருமுறை சட்டென்று அவளுக்கு அந்த மலர்களைப் பற்றிய நினைப்பு வந்தது. ஹாஸ்டிங்ஸ் முதன்முதலில் கப்பலில் வைத்து தனக்கென கொடுத்த அந்த மலர்க்கொத்து. அதனைப் பற்றி ஹாஸ்டிங்ஸிடம் வினவ ஆரம்பித்தாள். “என் அன்பு மரியன், நான் பிரிட்டனில் இருந்து வரும் கப்பலில் அச்செடிகளைக் கொண்டு வரச்சொல்கிறேன். கண்டிப்பாக” என்று அவளிடம் ஹாஸ்டிங்ஸ் வாக்களித்தார்.

எப்போதாவது அலுவல் காரணமாக வெளியே செல்ல நேரிட்டால் ஹாஸ்டிங்ஸ், மரியத்தை கல்கத்தாவிற்கு வடக்கே ஹூக்ளி கரையில் அமைந்த சின்ஸுராவில் உள்ள டச்சு குடியிருப்புக்கு அனுப்பி வைத்து விடுவார். அங்கே அவர்களது அணுக்க நண்பர்களான ராஸ் தம்பதியினரின் பொறுப்பில் அவளை விட்டுவிடுவார். அனுதினமும் அவளுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருப்பார்.  1780 ஆகஸ்டு மாதம் சில நாட்களுக்கு முன்பாகவே அவளை சின்சுராவுக்கு அனுப்பி வைத்து விட்டார் ஹாஸ்டிங்ஸ். ஆனால் அவர் வெளியே எங்கும் செல்லவில்லை. ஃப்ரான்சிஸ் ஃபிலிப்ஸ் என்பவர் ஆளுனர் கவுன்சிலின் உறுப்பினர். அவர் ஹாஸ்டிங்க்சின் மேல் ஒவ்வாமை கொண்டிருந்தார். ஹாஸ்டிங்ஸ் மேல் பல்வேறுபட்ட அரசியல் அவதூறுகளைப் பரப்பினார். ஹாஸ்டிங்ஸுக்கும் அவர் மேல் மதிப்பு இல்லை. அவரது குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக மறுத்தார். கவுன்சிலில் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டனர்.

கடைசியாக ஹாஸ்டிங்ஸ், “இல்லை. நான் மிஸ்டர் ஃபிரான்சிஸை ஏற்க மறுக்கிறேன். அவர் மீதுள்ள நம்பிக்கையின்மையினால் அவரை ஒட்டுமொத்தமாக மறுக்க விழைகிறேன். உண்மைக்கும் நன்மதிப்புக்கும் புரம்பான சில தனிப்பட்ட காரணங்களுக்காக” என உரக்க கத்தி முடித்தார். சபை அடங்கியது. இனி பேசிப் பயனில்லை என்று ஹாஸ்டிங்ஸை ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கிச் சண்டைக்கு அழைத்தார் ஃபிரான்சிஸ். ஹாஸ்டிங்ஸும் அதற்கு உடனடியாக ஒத்துக்கொண்டார்.  இருவரும் நேருக்கு நேர் நின்றுகொண்டு பிஸ்டல்களை இயக்க வேண்டும். இப்படிப்பட்ட சண்டைகள் உயர்குடிகளுக்கு மத்தியில் அப்போது ஒரு சடங்காக இருந்தது. இது மரியத்தின் காதுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவே அவளை ஹாஸ்டிங்ஸ் சின்சுராவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அந்தச் சண்டைக்கான இடமும் நேரமும் தேர்வு செய்யப்பட்டது. பெல்வதேரே மாளிக்கைக்கு அருகிலேயே உள்ள சாலையில் 17 ஆகஸ்டு 1780 வியாழக்கிழமை அன்று விடியற்காலை ஐந்தரை
மணிக்கென நேரம் குறிக்கப்பட்டது. கல்கத்தாவின் அந்த மழைக்கால காலை இரு குண்டு வெடிப்புச் சத்தத்தில் தான் புலர்ந்தது. ஃபிரான்சிஸ் இதற்கு முன் துப்பாக்கியைத் தொட்டதில்லை. ஹாஸ்டிங்ஸ் ஓரிரு தடவை பயன்படுத்தி இருக்கிறார். அவர்களது கர்னல்கள் அவர்களை போட்டிக்கு வழி நடத்தினார்கள்.

ஒன்றைச் சொல்ல வேண்டும், அவர்கள் இருவரிடமுமே ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் சுடுவதற்கு வெடிமருந்து இருந்திருக்கவில்லை. ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டை நம்பியே களமிறங்கி இருக்கிறார்கள். ஃபிரான்ஸிஸ் தன் பிஸ்டலை எடுத்தார். வெடிமருந்தை அதற்குள் செலுத்தினார். வெடிமருந்து ஈரமாக இருந்ததனால் சற்று நிலைதடுமாறினார். பின்னர் சரிசெய்து கொண்டார். ஹாஸ்டிங்ஸ் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டு நின்றார். அதன்பின் இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் குறிவைத்துக் கொண்டனர். கூட இருந்த கர்னல்கள், கீழ் வரிசையில் சரியான இடைவெளியில் எண்ணினார்கள். 3….2…1…. டப்… டப்..

முதலில் ட்ரிக்கரை அழுத்தியிருந்தது ஃபிரான்சிஸ் தான். அதைத் தொடர்ந்து ஹாஸ்டிங்ஸ். ஃபிரான்சிஸின் குண்டு தன் காதுக்கு அருகில் “உஸ்ஸ்…” என்று சென்றதை உணர்ந்தார் ஹாஸ்டிங்ஸ். எதிர்முனையில் அலறல். “கடவுளே, நான் செத்துப் போய்விட்டேன்” என்ற குரல்.  ஹாஸ்டிங்ஸின் குண்டு ஃபிரான்சிஸ்ஸின் இடது தோள்பட்டைக்கு கீழே துளைத்து ரத்தம் வழிந்து கீழே விழுந்து கிடந்தார். “நல்லவேளை” என்று ஹாஸ்டிங்ஸ் ஃபிரான்ஸிஸ் அருகே ஓடினார். ஃபிரான்சிஸின் உயிர் போகவில்லை. அவரை ஹாஸ்டிங்ஸ் தன் பெல்வதேரே இல்லத்திற்கு கொண்டு செல்லச் சொல்லி அங்கிருந்தே அவருக்கு மருத்துவம் பார்த்தார். அன்று இரவே சின்சுராவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

“அன்புள்ள மரியன்,

இன்று என் நண்பர் ஃபிரான்சிஸ் எனைக் காண வந்தார். அவருக்கு அவரது கையில் அடிபட்டு விட்டது. ஆனால் பயப்படுமளவு ஏதும் நடக்கவில்லை. எனக்கும் ஒன்றும் ஆகவில்லை. நான் நலமாக இருக்கிறேன். நான் இங்கு நம் பெல்வதேரே இல்லத்தில் அவரை மருத்துவர்களை நியமித்து பார்த்துக் கொண்டு வருகிறேன். இந்நிலையில் அவரை விட்டு என்னால் வெளியே எங்கும் செல்ல முடியாது. நீ சின்சுராவிலேயே இரு. நான் கூடிய விரைவில் உனை வந்து சந்திக்கிறேன். ராஸ் தம்பதியினரை கேட்டதாக சொல். அவர்களுக்கு என் வணக்கங்கள்.

என்றும் அன்புடன்,

வாரன் ஹாஸ்டிங்ஸ்.”

பின்னர் அடுத்த நாள் மீண்டும் ஒரு கடிதம். “நான் அனுப்பிய கடிதம் உனை வந்து சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். போன கடிதத்தில் என்னால் என்ன நடந்தது என்று சொல்ல முடியவில்லை. அதை நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று ஐயமாக இருந்தது. நடந்தது இப்போது உனக்குத் தெரிந்திருக்கும். ஃபிரான்சிஸ் தேறி வருகிறார். என் குண்டு அவரது தசையைத் தான் சிதைத்திருக்கிறது. எலும்புகளை அல்ல. அதனால் அவர் சீக்கிரமாகவே குணமாகி விடுவார். நீ அடிக்கடி சொல்வாயே, “எது எப்படி நடக்கும் என்று எவருக்குத் தெரியும்? காலத்தின் விதைகளை கண்கூடிப் பார்த்துக் கணிப்பவர் யார்?” அது போலத் தான். பத்திரமாக இருந்துகொள். கல்கத்தா மிகவும் ஈரமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார்.

அவர் ஃபிரான்சிசை அத்தனை வஞ்சத்துடன் எதிர்கொண்டது ஏன் தெரியுமா? அரசியல் பூசல்கள் என்றனர். ஆனால் அது மேம்போக்கான கூற்றுதான். அதற்கு ஓர் அந்தரங்க காரணம் இருந்தது. அது ஹாஸ்டிங்ஸின் காதுகளுக்கு எப்படியோ எட்டியிருந்தது. அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. அது என்ன தெரியுமா? ஃபிரான்சிஸ் இவரைக் கொன்றுவிட்டு எதோ ஒரு செல்வந்தனுக்கு மூன்று லட்ச சிக்கா ரூபாய்க்கு விதவை ஹாஸ்டிங்ஸை அனுப்பி வைக்க விலை பேசியிருக்கிறான். அது தான்.

நிலைமை மீண்ட பின்னர், சின்சுராவில் இருந்து மரியனை அழைத்து வந்தார் ஹாஸ்டிங்ஸ். அவளை பெல்வதேரே தோட்டத்தின் தடாகத்திற்கு அருகில் கண்களைக் கட்டி கூட்டி வந்து கண்கட்டை அவழ்த்துக் காண்பித்தார். தடாகத்தில் அந்த ஊதா நிறப் பதுமராக மலர்கள் சிரித்துக் கொண்டு நின்றிருந்தன.

ஜோஹான் சொஃபானி என்கிற ஓவியர் அவர்கள் இருவரும் பெல்வதேரே தோட்டத்தில் ஒரு ஆலமரத்தடியில் நின்றிருக்கும் அவர்களது காதல் தருணத்தை படம் வரைந்திருக்கிறார். வாரன் ஹாஸ்டிங்ஸ் தன் தொப்பியை கையில் இறக்கிப் பிடித்து பிரிட்டீஷ் ஆளுனருக்குண்டான மிடுக்குடன் நின்றிருந்தார். அருகே சாமரம் வீச ஒரு இந்தியப் பணிப்பெண்ணோடு மரியன் தன் மஞ்சள் நிற அங்கியில் நிறைந்து வழிவது போல் நின்று அவருடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.  1785ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று தன் மனைவியுடன் இங்கிலாந்து திரும்பினார் வாரன் ஹாஸ்டிங்ஸ்.

*

கிளாரா டேவிட்சனை மதராஸுக்கு வரச் சொல்லி கடிதம் எழுதியிருந்தாள் அன்னம்மாள் ராஜம். கிளாராவும் வருவதாக பதில் போட்டிருந்தாள். அன்னம்மாள் ராஜம் சூழியல் துறையில் ஆய்வாளர். தாவரவியல் பேராசிரியை. அவள் நன்னீர் ஆதாரங்களில் ஊறுவிளைவிக்கும் தாவரங்களைப் பற்றியும் அவற்றை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துவதைப் பற்றியும் ஓர் ஆய்வறிக்கை தயார் செய்து கொண்டிருந்தாள். அப்போது தான் அது பற்றி அவள் கேள்விப்பட்டாள். ஆகாயத் தாமரைகள் தமிழகத்தின் ஏரிக்குளங்களில் பரவி ஆக்கிரமித்திருந்தன. அவை சூரிய வெளிச்சத்தை மறைத்து நீரில் உள்ள கரைந்த ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து நீருக்கடியில் வாழும் உயிரினங்களுக்கு ஊறு விளைவித்தன.

இதுபற்றி குறிப்பிட்டு கிளாராவை அங்கு வந்து தனக்கு உதவும்படி அக்கடிதத்தில் கோரியிருந்தாள். கிளாரா டேவிட்சன் பூச்சியிலாளராக உலகப்பந்தில் எங்கேனும் ஊர்ந்து கொண்டிருப்பவள். அவளின் திசையை இந்தியா நோக்கித் திருப்ப வேண்டும். அவ்வளவுதான். இவர்கள் இருவரும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். கிளாரா லண்டனை அடுத்திருந்த லூட்டனைச் சேர்ந்தவள். அம்மா அப்பா கிடையாது. அன்னம்மாள் இங்கிருந்து அங்கு சென்று படித்தாள். அப்போது தான் கிளாரவோடு பழக்கம். இவள் அங்கே தாவரவியல் துறை. அவள் பூச்சியியல் துறை. அன்னம்மாள் கல்லூரியின் கடைசி வருடங்களில் விடுதியில் தங்காமல் காலி பண்ணிக்கொண்டு கிளாராவோடு இருந்தாள்.

அன்னம்மாள் இன்று மதராஸில் தன் வீட்டில் தனியாக வசித்து வருகிறாள். அவள் தன் விவாகரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறாள். அவளுக்கு திருமணம் முடிந்து எட்டு வருடம் ஆகியிருந்தது. அந்த எட்டு வருடத்திற்குள்ளாகவே அவளுக்கும் அவள் கணவனுக்கும் பெரிதாக எதுவும் இசைந்து போகவில்லை. இத்தனைக்கும் காதல் திருமணம் தான் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தனர். விவாகரத்து கைக்கு வர சில மாத காலம் ஆகும் என்றிருக்கிறார்கள்.

*

அன்று அன்னம்மாள் தன் டிரைவர் மருதராஜிடம் சொல்லி காரை அனுப்பி விமான நிலையத்திற்குச் சென்று கிளாராவை அழைத்து வந்தாள்.

“எப்படி இருக்கிறாய் அன்னம்?” என்றாள் கிளாரா வீட்டுக்குள் நுழைந்தபடி.

“நன்றாக இருக்கிறேன் கிளாரா.”

“பிரயாணம் சுகப்பட்டது தானே?”

“ஆம்”

இரவுணவு தயார் செய்து வைத்திருந்தாள் அன்னம்மாள். இருவரும் உணவு உட்கொள்ளும் மேஜையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு சாப்பிட்டார்கள்.

“எகிப்தில் இருந்து தானே வருகிறாய்?”

“ஆம். எகிப்தில் நான் எது பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தேன் தெரியுமா?”

“ஏதோ ஒரு விசித்திர பூச்சியைப் பற்றித்தானே? பூச்சியை பூச்சி அறியாதா என்ன?”

“ஆம், ஸ்காராப் எனும் வண்டு இனம் பற்றி.”

“ஹ்ம்ம்”

“ஒன்று சொல்லட்டுமா அன்னம்மா? இந்தப் பூச்சிகள் உலகத்தையே தின்று விடக்கூடியவை.  உலகத்தில் அனைத்தும் அழிந்தாலும் பூச்சிகளே மிஞ்சும். உலகம் அழிந்து அந்த எச்சங்களை பூச்சிகளே ஆளும்.”

“உன் வழக்கொழியாத கருதுகோள். புதிதொன்றும் இல்லையே. இதை இன்னும் விடவில்லையா? மேலும் கூட அப்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாய். இந்தப் பக்கம் ஒரு புதிய உயிரினம் தோன்றும் போது அந்தபக்கம் அதை உண்பதற்காக புதிய வண்டு ஒன்று தோன்றிவிடுமென்று” என நகைத்தாள் அன்னம்மாள்.

“ஆமாம். நான் எகிப்தில் கண்டு கொண்டது அது தான். ஸ்காராப் என்று சொன்னேன் அல்லவா? அவை பீ வண்டு ஜாதி. அதாவது சாண வண்டுகள். டங் பீட்டில்கள். அங்கே அதனை எகிப்தியர்கள் வழிபடுகிறார்கள். அவர்களது தொன்மத்தில் அவை மனிதனையே அரித்துத் தின்றுவிடும் என்கிறார்கள். நான் நினைத்துக் கொண்டேன். நாமெல்லாமும் அவற்றுக்கு சாணம் தான். கடவுள் ஒரு பக்கம் இத்தகைய வண்டுகளைப் படைக்கிறார்.  மறுபக்கம் அவற்றுக்கான சாணங்களாக நம்மைப் படைக்கிறார் என்று” என்றாள்.

மேலும் அவள் தொடர்ந்தாள். “இந்த உலகத்திலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டங் பீட்டில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உலர்ந்த சாணங்களை உண்பதில்லை. பச்சை சாணங்களைத் தான் உண்கின்றன. சாணம் விழுந்த பதினைந்தாவது நிமிடத்திற்குள் அதை மொய்த்து விடுகின்றன. ஒவ்வொரு சாண வண்டும், தான்  எதைப் புசிக்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கின்றது. ஒரு விலங்கின் சாணத்தை உண்ணும் வண்டு அதை மட்டும் தான் உண்கிறது. வேற்று விலங்குகளின் சாணத்தைத் தொடுவதில்லை தெரியுமா? ஏதோ ஒரு தகவமைவு அவற்றுக்குள் இருக்கின்றன. என்னைப் போன்றோர் ஆஸ்திரேலியாவில் சாண வண்டுகளைப் பழக்கப்படுத்துகிறார்கள். எதற்காக தெரியுமா? ஒரு குறிப்பிட்ட வகை சாண வண்டு கங்காருவின் விட்டையை விட்டு நகர மாட்டேன் என்கிறது. அவற்றை ஆடு மாடுகளின் விட்டைக்கு பழக்கப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். ம்ஹூம்… அவர்கள் முயற்சி சோபிக்கவில்லை.”

அன்னம்மாள் வாய்விட்டு சிரித்தே விட்டாள். “அந்தச் சாண வண்டுகள் வேறு என்னவெல்லாம் செய்கின்றன?” எனக் கேட்டாள்.

“அவை சாணத்தை போட்டிப்போட்டு சண்டையிட்டு எடுத்துச் செல்கின்றன. ஒவ்வொன்றும் தன் எடையை விட ஐம்பது மடங்கு எடையுள்ள சாணத்தை! அந்தச் சாணக்கிடங்கில் இருந்து பிய்த்தெடுத்துக் கொண்டு உருட்டிச் செல்கின்றன. துல்லியமான உருண்டைகளாக. இந்த உலகப்பந்து கூட சரியான உருண்டை இல்லை என்கிறார்கள். மேலும் கீழும் நீண்டு நடுவில் கொஞ்சம் அழுந்தியிருக்கிறது என்கிறார்கள். ஆனால் இவ்வண்டுகள் உருட்டும் சாணை உருளைகள் அப்படியில்லை. மிகச்சரியான 4/3πr3 கோள வடிவம்.

“அப்படி எடுத்துச்செல்லும் உருளைகளுக்கு மற்ற வண்டுகளிடம் இருந்து ஆபத்து.  நடுவில் நுழைந்து அந்த உருளையை தட்டிப் பறித்துச் செல்கின்றன. அச்சாணை உருளைக்காக பெருஞ்சண்டையே நடைபெறுகிறது தெரியுமா? ஜெயிக்கும் வண்டு ஒவ்வொரு முறையும் அந்த உருளையில் ஏறி, சுற்றிலும் பார்த்துவிட்டு, படு ஜாக்கிரதையாக அந்தச் சாணை உருளையை தன் பொந்திற்குக் கொண்டு போய் சாண சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்புகிறது.

“ஒன்று தெரியுமா? அதன் எச்சரிக்கை உணர்வு தான் என்னை ஈர்த்தது. அவை சாண உருளைகளை நேர்க்கோட்டில் உருட்டிக்கொண்டு போய் தன் பொந்தில் சேர்க்கின்றன. பார்த்துக் கொள். அவை சாணத்தைத் தேடிப் புறப்பட்டு கண்டபடி அலைந்து திரிகின்றன. அது கிடைத்த பிறகு அதன் பொந்திற்கு நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. அப்பாதைகள் எத்தனை பெரிய மேடு பள்ளங்களாக இருந்தாலும் சரி, நேர்க்கோட்டுப் பாதை தான். இது என்னை பிரமிக்க வைத்தது. மற்ற வண்டுகளிடம் இருந்து தன் சாண உருளையைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு, தான் திரும்பும் பயணத்தின் தூரம் குறைந்த தூரமாய் இருத்தல் வேண்டும். அதற்கு நேர்க்கோடு தான் விதிவிட்ட வழி என்று தெரிந்து வைத்திருக்கின்றன அவை. நாம் இயற்பியலில் படித்திருக்கிறோமே? தூரமும் இடப்பெயர்வும் என்று, அந்த வித்தியாசம் தான்.

“இதை ஆராயத்தான் நான் எகிப்து சென்றேன். அங்கே ஒன்றைக் கேள்விப்பட்டேன். அந்த நேர்க்கோடு சமாச்சாரம் அங்கு வாழும் மக்களின் தொன்மத்தில் புதைந்திருக்கிறது தெரியுமா? பண்டைய எகிப்தியர்கள் சூரியனையே அந்த வண்டின் சாணை உருளையாக கருதியிருக்கிறார்கள். சூரிய உதயத்தின் போது உருத்தெரியாத வண்டு ஒன்று சூரிய உருண்டையை உருட்டி உருட்டி சூரிய அஸ்தமனத்தில் மறுபக்கம் கொண்டு சேர்க்கிறது என்று நம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாளென்பதும் பொழுதென்பதும் காலமென்பதும் அந்த வண்டின் சாணவுருட்டு கணக்கு தான். வானத்தை அரைக்கோளமாக பார்த்திடாமல் தட்டையாக நினைத்திருக்கிறார்கள். அதனால் தான் அந்த உருத்தெரியாத வண்டு சூரியனை உருட்டிய பாதையை நேர்க்கோடாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த உருத்தெரியாத வண்டை அவர்கள் கடவுளென வழிபடுகிறார்கள். அது அவர்களின் சூரியக்கடவுள். பெயர் கெஃப்ரி. அவரை மனித உடம்பு கொண்ட வண்டுத்தலையாக வரைந்து வைத்திருக்கிறார்கள்” என்று முடித்தாள் கிளாரா.

“சரி ஓய்வெடுத்துக் கொள் கிளாரா. நாளை காலை டிரைவரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் நம்மை கூட்டிச்செல்வார்” என்றாள் அன்னம்மாள்.

“நன்றி அன்னம்மா. எனக்கும் நான் எகிப்து சென்று வந்த அறிக்கையை நிறைவு செய்ய வேண்டும். இன்று இரவே முடித்து விடுகிறேன்” என்றாள். அன்னம்மாள் அவளுக்கான ஓய்வறையைக் காட்டினாள்.

*

அன்னம்மாளும் கிளாராவும் மறுநாள் அன்னம்மாளின் காரில் புறப்பட்டனர். அவளது கார் கரிய நிற அம்பாசிடர். முன் தலையில் வழுக்கை ஏறியது போல மொழுக்கென்று இருக்கும். அதையுமே வண்டு என்று தான் கற்பனை செய்துகொள்வாள் கிளாரா என மனதில் நினைத்து சிரித்துக் கொண்டாள் அன்னம்மா. கேட்டால் அதன் அமைப்பு அப்படித்தானே இருக்கிறது என்று நிரூபித்து விடுவாள். கிளாராவுக்கு தன்னைச் சூழ்ந்து இருப்பவற்றை எப்படியாவது பூச்சியுடன் தொடர்புபடுத்திவிட வேண்டும். இதோ மதராஸிலிருந்து தெற்குப் பக்காய் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் இந்த மைய சாலையைக் கூட அவள் ஏதோ ஒரு பெண்ணின் தலையின் நடுவகுட்டில் பேன் ஊர்ந்து போவது போல எண்ணிக்கொண்டு விடுவாள். அன்னம்மாளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

இவர்கள் இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர். டிரைவர் மருதராஜ் தான் ஓட்டிக்கொண்டு சென்றார். அவர் தான் அன்னம்மாளிடம் அவரது ஊரில் ஒரு ஏரி இருக்கிறது என்றும் அங்கு பூண்டுகளாக மண்டிக் கிடக்கிறது என்றும் தெரிவித்தார். அன்னம்மாள் முன்பு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்.

அன்னம்மாள் கிளாராவிடம் சொல்ல ஆரம்பித்தாள். “நாம் இவர் ஊருக்குத் தான் செல்கிறோம். அங்கே அமைந்த ஏரியைத்தான் பார்வையிடச் செல்கிறோம். அந்த ஏரி சோழர்காலத்தில் உத்தம சோழனால் வெட்டப்பட்டது. 2400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன் பெயர் மூச்சுப்பாப்பானேரி. ஊர்ப் பெயருமே அதுதான். அங்கே அந்த ஏரியில் முக்கால் பங்குக்கு ஆகாயத் தாமரைகளாகப் படர்ந்து அந்த ஏரியை மூடியிருக்கிறது. ஊர்க்காரர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நான் ஒருமுறை சென்று பார்வையிட்டேன். அந்தச் செடிகள் தமிழகத்தில் ஆகாயத் தாமரை, நீர் பதுமராகம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் வாட்டர் ஹயாசிந்த்”

“ஹயாசிந்தா?“ என்று இடைமறித்தாள் கிளாரா. “கிரேக்கத் தொன்மத்தில் சூரியக் கடவுளான அப்போல்லோ, ஹயாசிந்த் எனும் அழகனைப் பறிகொடுத்து அவனை ஒரு செடியாக உயிர்ப்பித்தான் என்று கதையுண்டு அதுவா?”

“அதே தான். அதனால் தான் அதற்கு இந்தப் பெயர். அப்போல்லோ, ஹயாசிந்த், செஃபயர் இவர்களுக்கிடையில் நடந்த முக்கோணக் காதல் கதை அது”

“மூவருமே ஆடவர்களா?” என்று குறும்பாக சிரித்தாள் கிளாரா.

“ஆம், செஃபையர் காற்றுக்கடவுள். அவன் ஹயாசிந்தை ஒருதலையாக காதலித்திருக்கிறான். அவன் மற்றவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்த போது, ஏதோ வட்டத்தகடின் வீழ்வுப் பாதையை மாற்றி ஹயாசிந்தின் மண்டையைப் பிளக்கச் செய்து கொன்றிருக்கிறான். பின்னர் அப்போல்லோவிடம் அதனை ஒத்துக்கொண்டிருக்கிறான். அப்போல்லோ தன் காதலுக்காக  ஹயாசிந்தை இந்தத் தாவரமாக உயிர்ப்பித்தார். இதன் தாவரவியல் பெயர் ஐக்கார்னியா கிராசிப்பஸ். நன்னீர் மிதவைத் தாவரம். காண்பவரை இழுக்கும்படி வழவழப்பான இலைகளும் உப்பிய இலைத்தண்டுகளும் ஊதா நிறப்பூக்களும் கொண்டிருக்கும்.

“இவை எப்படி அதி தீவிரமாக பெருகுகிறது தெரியுமா? மகரந்த சேர்க்கையினால் அல்ல. அதை தாவரவியலில் வெஜிடேடிவ் ரிப்ரொடக்‌ஷன் என்கிறார்கள். நீர்ப் பரப்பின் மேல் இதன் தண்டுகள் பக்கவாட்டில் படரும். படர்ந்து படர்ந்து அவற்றில் வேர் உருவாகி தனிச்செடியாக ஆகும். பக்கவாட்டில் படரும் தண்டிலும் உப்பிய இலைத்தண்டிலும் காற்று அடைந்து காணப்படும். அந்தக் காற்று தான் செஃபயர்.

“இந்தச் செடியின் பிறப்பிடம் தென் அமெரிக்காவின் அமேசான் காடுகள். இதன் ஈர்க்கும் அழகால் ஐரோப்பியர்கள் மற்றவருக்கு இப்பூக்களைப் பரிசளித்து மகிழ்ந்தார்கள். காலனியாதிக்கத்தின் போது இது உலகம் எங்கிலும் சென்றது. இந்தியாவிற்கு பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹாஸ்டிங்ஸின் மனைவி ஆசைப்பட்டு கேட்டுக் கொண்டதன்படி கல்கத்தாவில் அறிமுகமானது.

“நாளடைவில் அந்த அழகே அழிவாய் மாறிப்போனது. வங்காளப் பஞ்சத்தின் போது ஏரி குளங்களில் நீரில்லாமல் இதுவே மண்டிக்கிடந்தது. கங்கையின் கிளையான ஹூக்ளி நதியில் அப்படி படர்ந்திருந்ததாம். இறைத்து இறைத்து மண்டிகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இந்தத் தாவரத்தை ‘வங்காளத்தின் ஊறு’ என்கிற அடைமொழியோடு தான் குறிப்பிடுகிறார்கள். பின்னர் இது இந்தியா முழுதுமாகப் படர்ந்தது. இதன் விதை 20 வருடங்களுக்கு வீரியத்தோடு இருக்குமாம். நீர் எங்கேனும் இருந்தால் பிடித்துக்கொண்டு ஆக்கிரமித்துவிடும்” என்றாள் அன்னம்மாள்.

“அவர்களது மூவரின் காதல் தான் இப்படி உலகம் முழுதும் படர்ந்து கிடக்கிறதோ என்னவோ?” என்றாள் கிளாரா விளையாட்டாக.

“இன்னும் இச்செடிகளை முற்றொழிக்க முடியவில்லை. பூச்சிக்கொல்லிகளை விட்டுப் பார்த்தாயிற்று. கிரேன்களை  வைத்துக் கொண்டெல்லாம் பிடுங்கிப் பார்த்தாயிற்று. ஆட்செலவும் பொருட்செலவும் நேர விரயமும் தான் மிச்சம். பெரிய பயனில்லை. அதனால் தான் உயிரியல் முறையில் இதனை கையாளலாமா என்றெண்ணி உன்னை அழைத்தேன்.”

‘சரி’ என்றபடி அமர்ந்திருந்தாள் கிளாரா. ‘அந்தத் தாவரம் பூமிப்பரப்பில் இப்படி அதி தீவரமாக அனைத்து திசைகளிலும் படர்வது ஒருவேளை தன் தாயகத்தை திரும்ப அடைவதற்காகத் தானோ என்னவோ?’ என்று ஒரு கணம் எண்ணிணாள்.

மூச்சுப்பாப்பானேரி வந்தது. காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு மருதராஜ் அவர்களை ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றார். அவர் அவர்களுக்கு வழியைக் காண்பித்து கீழேயே நின்று கொண்டார். இருவரும் மணல் திட்டுகளில் ஏறி, கரையின் உச்சியை அடைந்தனர். கடல் போன்று பரந்து விரிந்திருந்தது அந்த ஏரி. ஏரிக்கரை காற்றின் ஓலம் அவர்களின் செவியை நிறைத்தது. கண்ணுக்கு எட்டிய வரை இந்த ஆகாயத் தாமரைப் பூண்டுகள் ஏரியின் ஓரங்களில் படர்ந்து ஏரியே சுற்றி வளைக்கப்பட்டதைப் போல இருந்தது. நீர் நிறைந்து தெரிந்த இடங்களில் இவை தனித்தனி காலனிகளாய் நின்று காற்றில் அலைவு கண்டன. இவை அடர்ந்திருந்த பகுதிகளில் ஆங்காங்கே குட்டிக் குட்டித் தீவைப் போல நீரின் தடம் தெரிந்தது. வானில் இருந்து இறங்கிய வெண்ணிற நாரைக்கூட்டம் அந்த சின்னஞ்சிறிய நீர்த் தீவுகளில் வந்தமர்ந்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன. முக்கால்வாசி ஏரியை அந்த ஒற்றைப் பரப்பே மூடியிருந்தது. அந்த ஒற்றைப் பரப்பில் இருந்து எழுந்த பூக்கள் தன் ஊதா நிறச்சிரிப்பைக் காட்டி நின்றுகொண்டிருந்தன.

அன்னமாளிடம் கிளாரா சொன்னாள். “பாலாடை போல ஒரு பக்கத்தில் இருந்து தொட்டு இழுத்தால் மொத்தமும் கையோடு ஒட்டிக்கொண்டு வந்துவிடும்.”

நீர் நின்ற அளவு முழங்கால் அளவு ஆழம் தான் இருக்கும் என்று தோன்றியது. அன்னம்மாள் கிளாராவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஏரிக்கு அருகில் இறங்கினாள். இறங்கி ஒற்றைச் செடியை பிடித்து இழுத்தாள். மெல்லிய இழுவை தான். ஆனால் கொஞ்சம் மொத்தமாக வந்தது.  ஒரு செடியை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை ஏரியிலேயே வீசி எறிந்தாள்.

பின்னர் கரையில் ஏறி, அந்தச் செடியின் உப்பிய இலைத்தண்டை குறுக்காக வெட்டிக் காண்பித்தாள். உள்ளே காற்று தங்குவதற்கான சிறு சிறு அறைகள். மென்மையான அறைகள். அழுத்திய போது மென்பஞ்சைப் போல இருந்தது.

“இந்த அறைகளை காற்றறைகள் என்கிறார்கள். ஏரன்கைமா. நீருக்குமேல் நிலைகொள்ள காற்றை உள்கிரகிக்க இந்த அறைகள் அவற்றிற்குத் தேவைப்படுகிறது“ என்றாள்.

“செபையர் வாழும் அறை அல்லது இந்த ஏரியின் நுரையீரல்” என்றாள் கிளாரா.

சிறிது நேரம் ஏரிக்கரையிலேயே நின்றனர். மருதராஜ் அவர்களை நோக்கி வந்தார்.

கிளாரா கேட்டாள். “இந்த ஏரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?”

மருதராஜ் இடைமறித்து, “மூச்சுப்பாப்பனேரி” என்றார்.

“தூர்வாரி எவ்வளவு நாள் இருக்கும்? உங்கள் அரசாங்கம் ஏதாவது செய்திருப்பார்களே?” என்றாள் கிளாரா. அன்னம்மாள் அவர்கள் இருவருக்கும் மொழிபெயர்ப்பாளராய் செயல்பட்டாள்.

“அரசாங்கத்திற்கு இந்தக் கவலை இரண்டாம்பட்சம் தான். ஏனென்றால் இங்கிருக்கும் மக்களுக்கே அதில் ஆர்வம் இல்லை” என்றார் மருதராஜ்.

“தூர்வாரப்பட்டதே இல்லையா? எப்போதிலிருந்து?”

“ஆம். பழங்காலத்திலிருந்தே” என்றார். “எனக்குத் தெரிந்து ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே.”

“ஏன்?”

“இந்த ஏரியில் கைவைக்க இந்த ஏரியை சுற்றியுள்ள கிராம மக்கள் தயங்குகிறார்கள். ஒப்பமிட மறுத்துவிடுவார்கள்”

“ஏன்?”

“இது ராமர் காத்த ஏரி” என்றார்.

கிளாரா புரியாமல் விழித்தாள். “அது சூர்ய வம்சத்தில் வந்த அயோத்தி அரசர். ராமர். எங்களின் தெய்வம்” என்று எடுத்துச் சொன்னாள் அன்னம்மாள்.

மருதராஜ் ஏரியைச் சுற்றியுள்ள நிலங்களைக் காட்டிச் சொன்னார். “இதோ இந்த பொட்டல் காடுகளைப் பாருங்கள். ஒருகாலத்தில் இவை எல்லாம் விளைநிலங்களாய் இருந்திருக்கின்றன. இந்த ஏரியில் நீர் குறைந்ததே இல்லை.” அருகில் சிறுகுன்றின் மேல் கோயில் இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, “அது எங்கள் ஊரின் கோதண்டராமர் கோயில். முன்பெல்லாம் இங்கே முப்போகம் விளைச்சல். பூமி மக்களை தண்டிக்கவில்லை. வானம் தான் தண்டித்தது. பருவமழைக் காலங்களில் இந்த ஏரி மடை உடைத்துக் கொள்ளும். இதனால் மக்களின் விளைநிலங்களில் நீர் புகுந்து சேதாரம் அடையும். கரையை பலப்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்திடம் மனு கோரியிருந்தனர்.

“1795-இல் இருந்து 1799 வரை அன்று செங்கல்பட்டு மாவட்ட அதிகாரியாக செயல்பட்ட ஆங்கிலேயர் லயோனல் ப்ளேஸ் இந்த ஏரியை பலப்படுத்துவதற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்தார். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மழை நீர் பெருகி ஏரி உடைந்து மக்கள் அவதியுற்றனர். மூன்றாவது வருஷம், அதாவது, 1798ஆம் ஆண்டில் அவர் ஏரிக்கரையருகே கொட்டகை அமைத்து நிலைமையை நேர்நின்று கண்காணித்தார். அந்த இரவில் மழை வலுத்தது. ஒரு இடி. ஒரு மின்னல். அந்த மின்னல் கணத்தில் தூரத்து ஏரிக்கரையில் அவர் இரு ஆடவர்களைக் கண்டார். அவர்கள் கையில் வில் வைத்திருந்தனர். அதில் மூத்தவராக இருந்தவர் தன் வில்லை எடுத்து விண்ணை நோக்கி ஏந்தி அம்பேதும் தொடுக்காமல் தன் விரல்களால் வில்லின் நாணை இழுத்து அதிரச் செய்தார். அது பெருமுழக்கமிட்டது.

“பின்னர், மழை அடங்கிப்போனது. பின்னர் அந்த வில்லின் நாணை வில்லில் இருந்து அறுத்து அந்த ஏரியில் வீசியெறிந்தார். அவரோடு வந்திருந்த அவரது இளையவரும் விண்ணை நோக்கி வில்லை ஏந்தி நாணை அதிரச் செய்து, பின்னர், அதனை அறுத்து அந்த ஏரியில் வீசினார். பின்னர் அவர்கள் இருவரும் அதோ அந்தக் கரைப்பக்கமாய் சென்று மறைந்து விட்டார்கள். லயோனல் ப்ளேஸ் அந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறார். அது அந்த ஆலயக் கல்வெட்டில் இன்றும் இருக்கிறது. அந்த நிகழ்வுக்குப் பின் ஏரியின் கரைமடை உடையவே இல்லை. மடையுடையாமல் ஏரியைக் காத்ததால் நாங்கள் அந்த தெய்வச் சகோதரர்களை வழிபடுகிறோம்” என்றார்.

“அந்த ஏரி அந்நிகழ்வுக்கு முன் ஒரு ஏரியாகவும் அதன் பிறகு மற்றொரு ஏரியாகவும் இருந்ததால் அதற்கு பாப்பானேரி என்று பெயர்” என்றார் மருதராஜ்.

கிளாரா புரியாதது போல் விழித்தாள். அன்னம்மாள் சொன்னாள். “இங்குள்ள பிராமணர்கள். பார்ப்பனர்கள் எனப்படுவர். அவர்களுக்கு இருபிறப்பு உண்டு. அவர்கள் அன்னை வயிற்றில் பிறப்பது ஒரு பிறப்பு. பின்னர் பால்ய பருவத்தில் பூணூல் போட்டுக்கொண்டு வேதம் கற்றால் மற்றொரு பிறப்பு என்றும் கருதப்பட்டது. ஆகவே பார்ப்பு என்பது இருபிறப்பை குறிக்கும் சொல். சொல்லப்போனால், பறவைக்கு இருபிறப்பு. முட்டையாக ஒரு பிறப்பு. அதிலிருந்து குஞ்சு பொறித்தல் இரண்டாம் பிறப்பு. அந்தச் சகோதரர்கள் வில்லில் பூணப்பட்டிருந்த நூலை ஏரியில் வீசியெறிந்திருக்கிறார்கள் அல்லவா? அதனாலேயே இப்பெயர் அந்த ஏரிக்கு ஏற்பட்டிருக்கலாம்” என்று விளக்கினாள். “அவர்கள் வைத்திருந்த வில்லுக்கே இருபிறப்பு உண்டு. மரத்தால் செதுக்கப்படும் போதும், உலோகத்தால் வார்க்கப்படும் போதும் அதற்கு முதல் பிறப்பு. நாண் பூணப்படும் போது அதற்கு இன்னொரு பிறப்பு. இது எங்கள் ஐதீகம்” என்றாள்.

மருதராஜ் மீண்டும் சொல்ல ஆரம்பித்தார். “மூன்று நாட்கள் மழை ஓய்ந்த பிறகு லயோனல் ப்ளேஸ் சுட்டிக் காட்டிய இடத்தில் மக்கள் சென்று பார்த்தனர். அங்கு சென்று கரையின் விளிம்பில் நின்று கொண்டு அவர்கள் அறுத்தெறிந்த வில்லின் நாண்கள் இருக்குமா என்று பார்த்தனர். ஆனால் அங்கு இச்செடி கொடியெனப் படர்ந்து மிதந்து அலைவு கொண்டிருந்தது. அந்த வருடத்திற்குப் பிறகு நாங்கள் பேய் மழையெல்லாம் சந்தித்தோம். ஆனால் ஏறி உடையவே இல்லை. இச்செடி பெருகிப் படர்ந்து ஏரியை முழுதும் நிறைத்தது. அவர்கள் வீசியெறிந்த நாண் இன்னும் விண்ணைப் பார்த்து அதிர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் காற்று தான் ஏரியின் அச்செடிகளில் நிரம்பியிருக்கிறது. உங்கள் காது மடல்களில் நீங்கள் உணரும் ஓலம் அதனால் தான். பின்னாட்களில் எவரோ இந்த ஏரி மூச்சுவிடுவதாய் கற்பனை செய்துகொண்டார்கள். “மூச்சு” என்கிற முன்னொட்டு இணைந்து இந்த ஏரி ‘மூச்சுப்பாப்பானேரி’யாக மாறியது” என்றார்.

கிளாரா அன்னம்மாளிடம் கேட்டாள். “எப்படி இந்த அதிசயம் நடந்தது? இந்தச் செடி முளைத்து ஏரியின் நீரை மிகாமல் செய்து மடை உடைப்பைத் தடுத்துவிட முடியுமா என்ன?”

அன்னம்மாள் சொன்னாள். “எந்த வகையில் இது சாத்தியம் என்பது தெரியாது. ஆனால் தாவரத்தின் தன்மையின்படி அது புரிந்துகொள்ளக் கூடியது தான். இது நீர் உறிஞ்சித் தாவரம். இச்செடிகளைக் கொண்டு ஏரி நீர் ஆவியாகும் வீதம் இச்செடிகளே இல்லாமல் ஆவியாகும் வீதத்தை விட பத்து மடங்கு அதிகம் என்கின்றனர்.”

அவர்கள் இருவரையும் நாண் எறியப்பட்ட இடத்திற்கு கரையோரமாகவே கூட்டிச் சென்றார் மருதராஜ். அங்கே ஒரு பக்கம் இடையளவு உயரத்திற்கு ஒரு சிமெண்ட் கோயில் இருந்தது. அங்கு ராம லட்சுமண உருவ பொம்மைகளை வைத்திருந்தனர். வழிபட்டு விட்டுச்சென்ற தடம் தெரிந்தது. அதனருகில் ஏரியை ஒட்டி வடிகால் அமைத்து கட்டியிருந்தார்கள். அந்த வடிகாலில் இருந்து ஒரு கால்வாய் ஊருக்குள் பாசனத்திற்காக புறப்பட்டுச் சென்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்தக் கால்வாயிலும் ஆகாயத்தாமரை அடர்ந்து போர்த்தியது போல் அதன் இலைகளின் வழவழப்பு வெயிலொளியில் மிளிர்ந்தது. அன்னம்மாளும் கிளாராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “பச்சையின் மினுப்பு” என்று எண்ணிக்கொண்டனர்.

பின்னர் இருவரும் கீழிறங்கி மருதராஜ் ஏற்பாடு செய்து வைத்திருந்த பண்ணை வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்தனர். கிளாரா அங்கே ஒரு வாரம் தங்கினாள். களப்பணியில் இறங்கினாள். அந்த ஏரியை மூன்று வேளைகளும் கண்காணித்தாள். அந்த ஏரியில் வந்து அமரும் பூச்சி வகைகளை குறிப்பெடுத்துக் கொண்டாள். ஏரி நீரின் மாறுபடும் காரத்தன்மையை அன்றாடம் எழுதிக் கொண்டாள். ஏரியின் தட்பவெப்ப மாறுதல்களை பதிவு செய்தாள். இறுதியாக, அவள் நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சி வகைகளை பட்டியலிட்டு இருந்தாள். அவளுக்கு வேண்டிய மாதிரிகளை கிளாரா எடுத்துக்கொண்டாள். மேற்கொண்ட விபரங்களோ மாதிரிகளோ தேவைப்பட்டால் அன்னம்மாளை உதவிசெய்யும்படி கேட்டுக்கொண்டாள். எட்டாம் நாள் காலை இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றாள்.

*

ஆறு மாதத்திற்குப் பிறகு, கிளாராவின் கடிதம் அன்னம்மாளுக்கு கிடைத்தது.

“என் அன்புக்கினிய அன்னம்மா,

நான் இங்கு நலம். உன் நலத்தையும் விழைகிறேன். ஆகாயத் தாமரையை ஒழிப்பதற்காக நான் அங்கிருந்து கொண்டுவந்த தகவல்கள் ஒன்று கூட எனக்கு உதவவில்லை. கடலின் உப்பை ஊர்க்குட்டையில் தேட முடியுமா என்ன? போன மாதம் தான் அந்தச் செய்தியை எதேச்சையாகக் கடந்தேன். 1970-ல் வார்னர் என்பவரால் அது கண்டுபிடிக்கப்பட்டது. தென்அமெரிக்காவில் ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியின் போது அவர் அந்த வண்டைக் கண்டடைந்திருக்கிறார். பார், ஆகாயத் தாமரையாகிய ஐக்கார்னியா க்ராசிப்பஸுக்கு மூலம் தென் அமெரிக்கா தான். அதனை அழிக்கக்கூடிய வண்டுக்கும் தென் அமெரிக்கா தான் மூலம்.  ஊரெல்லாம் தேடி அலுத்த அற்பனுக்கு தன் வீட்டு கொட்டிலிலேயே கிடைத்ததாம் புதையல். நான் ஒரு மடைச்சி. இப்படி யோசிக்காமல் விட்டுவிட்டேன் பார்.

நான் சொன்னேன் அல்லவா? ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு பூச்சி உண்டென்று. அதுபடியே, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த தாவரப்பட்சிணி வண்டு ஐக்கார்னியா க்ராசிப்பஸ், தாவரத்தை மட்டும் உட்கொண்டு பெருகுபவையாம். நியோசெட்டினா பூச்சிவகைப் பட்டியலில் அவ்வண்டைச் சேர்த்திருக்கிறார்கள். அதற்கு, “நியோசெட்டினா ஐக்கார்னியே வார்னர் 1970” என்று பெயரிட்டிருக்கிறார்கள். வாட்டர் ஹயாசிந்த் வீவில் என்றும் சொல்கின்றனர். 1972-இல் ஐக்கிய நாடுகளில் ப்ளோரிடா மாகாணத்தில் அதனை முதன்முறையாக ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். நல்ல விளைவை அது தந்திருக்கிறது. அதனால், நான் அதனை உனக்குப் பரிந்துரை செய்கிறேன். அதை அங்கே நீ அறிமுகப்படுத்துவதாக இருந்தால் அதற்கான முழு ஒத்துழைப்பும் நல்குகிறேன். இக்கடிதத்துடன் அது சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் ஆய்வறிக்கைகளையும் அனுப்பியிருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்.

அந்த வண்டு எப்படி அந்தச் செடியை வீழச் செய்யும் தெரியுமா? முதலில் அதனின் முட்டைகளை நீர்ப்பரப்பில் தூவி விடவேண்டும். முதலில் அவை அந்த நீர்ப்பரப்பில் மிதக்கும். அந்த முட்டையில் இருந்து வரும் வெண்ணிற புழுக்கள் இலைத்தண்டுகளை துளையிடும். ஆம், செஃபையரின் காதலை அது துளைத்துப் பார்க்கும். துளைத்த பின் உள் நுழைந்து காற்றறைகளின் காற்றை வெளித் தள்ளும். ஆம் வில்லிலிருந்து அறுந்த அந்த நாணின் துடிப்போசையை முற்றிலுமாக அகற்றி விடும்.

உள்ளே ஊடுருவிக் குடைந்து கீழிறங்கி வேர்களையும் பக்கவாட்டுத் தண்டுகளையும் அரித்து கூட்டைக் கட்டிக்கொண்டு கூட்டுப்புழுவாக அதற்குள் ஒடுங்கி கொள்ளும். பின்னர் கூட்டைப் பொறித்துக் கொண்டு பூச்சியாக வெளிவரும். வெளிவந்து, இலைச் செதில்களை அரிக்கும். ஆணினம் பெண்ணித்தோடு கூடும். மீண்டும் முட்டையிடும். முடிந்தது கதை. மொத்தச் செடியும் சரிந்து நீரில் கிடந்து அழுகிவிடும்.

நீ சொன்னாயே. அந்தணருக்கும் பறவைக்கும் இரண்டு பிறப்பென்று. இந்தப் பூச்சிகளுக்கு நான்கு பிறப்பு அன்னம்மா. இது பூச்சிகளின் உலகம், அன்னம்மா. இது பூச்சிகளின் உலகம். இந்த உலகமே அவற்றுக்கு உணவு தான். காதலாவது! கடவுளாவது! இது எதுவும் பூச்சிகளுக்குத் தெரியாது.

கடைசியில் உனக்காக ஒரு கிரேக்க நீதிக் கதை சொல்கிறேன், கேள். கடவுளின் மேல் வண்டு சாணி அடித்த கதையை. ஏசோப் சொல்கிறான். சாண வண்டு காட்டு முயலுடன் நட்பாய் இருந்தது. ஏன் அது இரண்டுக்கும் அப்படியொரு நட்பென்றால், ஒரு நாள் அந்த முயல் விட்டை போட்டது. அந்த வண்டு முயலின் விட்டையில் இருந்து ஒரு உருளையை உருட்டி தனக்கென கொண்டு போனது. ஒருநாள் தன் விட்டையை தானே தின்றுகொண்டிருந்த முயலை வண்டு கண்டுகொண்டது. அப்படி ஒரே விட்டையைத் தின்ற இருவரும் நண்பர்களாயினர்.

ஒருநாள் அந்த முயலை கழுகொன்று கொத்திச் சென்று குதறிப்போட்டது. தன் நண்பனை இழந்த வண்டுக்கு வருத்தம். அது முயலைக் கொன்றது கழுகுதான் என்று தெரிந்து கொண்டது. அதன் பின் தன் நண்பனுக்காக பழிவாங்கத் துணிந்தது. அக்கழுகு போட்ட முட்டையை எல்லாம் அது உருட்டித் தள்ளிவிட்டு அழித்தது. தான் போட்ட முட்டையைக் காபந்து செய்ய முடியாமல், கழுகு தன் முட்டைகளைக் கொண்டு போய் ஒலிம்பஸ் மலையில் அமர்ந்திருக்கும் மூத்த கடவுளான ஜீயஸிடம் கொடுத்து முறையிட்டது. ஜீயஸ் யார் தெரியுமா? ஹயாசிந்தை உயிர்த்தெழுப்பிய அப்போல்லோவின் தந்தை. தன் முட்டைகளை ஜீயஸின் மடியில் பாதுகாப்புக்காக விட்டுச் சென்றது.

சாண வண்டு ஜீயஸ் என்று பயப்படவில்லை. சாணி உருண்டையோடு அவரை எதிர்கொண்டது. ஜீயஸ் அசந்த நேரம் பார்த்து அது தன் சாண உருண்டையை அவர் முகத்தில் வீசியது. பதற்றத்தில் எழுந்த ஜீயஸின் மடியில் இருந்து கழுகு முட்டைகள் கீழே விழுந்து நொறுங்கிப் போயின. கழுகு வந்தது. இப்படி நொறுக்கி விட்டீர்களே என்றது. அவர் வண்டைக் கூப்பிட்டு விசாரித்தார். கழுகு இழைத்த அவலக் கதையை கேட்டறிந்தார். வண்டு பக்கம் இருந்த நியாயத்திற்காக அதற்குத் துணை நின்றார். பார், இளக்காரமான ஜந்துவாக இருந்தாலும் அது தன் அறத்திற்காக அப்பேர்பட்ட கடவுளையே எதிர்த்து நின்றிருக்கிறது. வண்டுகளின் அறத்தினில் தான் இப்புவியே சுழல்கிறது. அந்த அறத்திற்காக அவை இப்புவியையே விழுங்கி விடலாம்.

நிறைய சொல்லிவிட்டேன், நன்றி.

இப்படிக்கு,

கிளாரா டேவிட்சன்.

*

அன்னம்மா கிளாராவின் பரிந்துரையின்படி அறிக்கைகளைச் சேகரித்து மாநிலத்தின் சூழியல் துறைக்கு அனுப்பினாள். அவர்கள் இவள் சமர்ப்பித்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர். அவளையே இதற்குத் தலைமை ஏற்கச் சொன்னார்கள். கிளாராவிடம் சொல்லி அவள் உதவியை நாடினாள். மூச்சுப்பாப்பானேரியை சுற்றியிருந்த கிராம மக்களை மருதராஜ் உதவியுடன் ஒன்றிணைத்து அவர்களுக்கு ஆகாயத் தாமரைப் பூண்டுகள் நன்னீர் வளங்களில் ஏற்படுத்தும் சூழியல் மாசுபாடுகளைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாள். உயிரியல் முறைப்படி கட்டுப்படுத்துவதன் நலன்களையும் எடுத்துரைத்தாள். அம்மக்களின் ஒப்புதலைப் பெற்றாள்.

1987 டிசம்பர் மாதம், கிளாராவின் உதவியால் கொண்டுவரப்பட்ட அந்த ஐக்கார்னியா வீவில் முட்டைகளை  மூச்சுப்பாப்பானேரியில் அறிமுகப்படுத்தினாள். பின் வந்த நாட்களில் ஆகாயத் தாமரையின் இலைகள் அந்த வீவில்களால் அரிக்கப்பட்டு பழுப்பு நிறத்தில் புள்ளியேறி இருந்த காட்சியை ஒருமுறை ஏரிக்கரையில் நின்று பார்த்தாள். அதைக் கண்ட அவள் ஒரு கணம் துணுக்குற்றாள். பத்து மாதம் தான். அழுகிய மண்டிகள் தூர்வாரப்பட்டு அவற்றின் விதைகள் அகற்றப்பட்டு ஏரி 95 சதவீதம் மீட்கப்பட்டது. அடுத்த மழையில் ஏரி நீர் ததும்பி நின்றது. தமிழகம் முழுக்க இம்முறையில் ஏரிகளை மீட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.