மய்யத்தாங்கரையில் ஒரு மரிக்கொழுந்து

by மானசீகன்
0 comment

‘ரஹ்மானு.. மனச திடப்படுத்திக்க, அம்மா வஃபாத் ஆகிட்டாங்க.’

தாவூத் மாமாவின் அதே கீச்சுக்குரல் தான்.. ஆனால் ஒரு குரல் பெரும் பாறாங்கல்லை தன்னந்தனியாய் இழுத்து வந்து ஒருத்தன் தலையில் எப்படிப் போட முடியும்?

வஃபாத் ஆயிட்டாங்க.. வஃபாத் ஆயிட்டாங்க.. இந்தக் குரல் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அதை சொன்னது தாவூத் மாமா இல்லை. யார் யாரோ வந்து காதுகளில் சொன்னார்கள். தெரிந்த குரல், தெரியாத குரல் எல்லாமே. யாரோ சிலர் சிரித்துக் கொண்டே வேறு சொல்கிறார்களே?

‘ரஹ்மான்..’

‘…………..’

‘ ரஹ்மானு… அழுறியா?’

‘…………..’

‘எங்க இருக்க?’

‘…………..’

அலைபேசியின் சிவப்புப் பகுதியை ஓங்கி அழுத்தினான். இது பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது. இது ஏப்ரல் மாசமா? இல்லையே.. இது நவம்பர்.. இல்ல இது, ‘ஏப்ரல் ஃபூல்டான்னு’ தாவூத் மாமா இன்னொரு தடவை ஃபோன் போட்டுச் சொல்லி விட்டால்? ச்சீ அவர் இப்படியெல்லாம் சீப்பா வெளையாடற ஆளா?

அவன் நடந்தானா? ஓடினானா? பறந்தானா? என்பதெல்லாம் அவனுக்கே தெரியாது. ஆனால் மனமெங்கும் விதவிதமான அம்மாவின் பிம்பங்கள். குர்ஆன் ஓதும் அம்மா.. தலைதுவட்டி விடும் அம்மா.. டிஃபன் பாக்ஸோடு தன் பின்னாலேயே ஓடி வரும் அம்மா… தைலம் தேச்சு விடும் அம்மா.. குண்டி கழுவி விடும் அம்மா.. பாவாடையை மட்டும் ஏத்திக் கட்டியபடி பாத்ரூமுக்குள்ளிருந்து திங்குதிங்கென்று ஹாலைக் கடந்து ரூமுக்குள் ஓடும் அம்மா..

அப்பத்தான் நினைவு வந்தது. அம்மா அவனை அடித்ததே இல்லையோ? அடிக்கிற மாதிரி நாம என்ன செஞ்சிருக்கோம்? ஒருவேள அத்தா இருந்திருந்தா அடிச்சிருப்பாரோ? அத்தா இந்நேரம் புதுமாப்ள மாதிரி பட்டு வேட்டி கட்டி வானத்தில் காத்து நிற்பாரோ? அம்மா மண்ணறையை உதறி இதே உடம்போடு மேலே போவாளோ? பால் செம்பு… ச்சீ.. இதென்ன அபத்தமான நினைவுகள்.. இதுவரை தனக்கு அழுகை வராமலிருந்ததைக் கவனித்து அதிர்ச்சியடைந்தான்.

அவன் அழுகிற மாதிரி இதுவரைக்கும் எவனுஞ் செத்ததில்லை.. ந்தா அந்த முதலமைச்சரம்மா செத்தப்ப அம்மா தேம்பி தேம்பி அழுததை பாத்திருக்கான்… அன்னிக்கு வீட்ல  சிக்கன்.. ஆனா அம்மா தொடவே இல்ல.. இவன்தான் மொத்தமா காலி செஞ்சான்.. அம்மா சேனல மாத்தவே விடல.. ஆனா இவனுக்கு அதப்பாத்து ஒண்ணுமே தோணல.. அழவும் தோணாம, சிரிக்கவும் முடியாம சும்மா வெறிச்சபடி உக்காந்திருந்தான்…. ‘உனக்கு யார்மா அந்தம்மா? ஏன் இப்டி அழுகிற? நீ ஓட்டு கூட அந்தம்மாவுக்கு போட்டதில்லையே.. சாதிப் பாசமோ?’

அம்மா மூக்கை கசக்கிக் கொண்டே சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. ‘ஆம்பளக்குத் தேத்தா சாதி மதமெல்லாம். பொம்பளைக்கு ஏது அது? எல்லா பொம்பளயும் ஒரே சாதிதான். உன் கணக்குப்படி பாத்தாலும் அந்தம்மா ஐயங்கார். நா அய்யர்.’

‘பர்வீன் அய்யர். பொருத்தமா இருக்கும்மா.’

அம்மா சிரித்துக்கொண்டே சோற்றை போட்டுச் சாப்பிட்டார். அம்மா அப்படித்தான். எந்த அழுகையிலும் அப்படியே சிரிப்பார். சிரிக்கும் போதே திடீரென்று அழுவார். ‘பர்வீனு, நீ சிவாஜி ரசிகைன்னு நொடிக்கொருக்கா நிரூபிக்கிற’ என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறான்.

அம்மாவின் ஒரிஜினல் பெயர் என்ன என்று பலதடவை கேட்டுப் பார்த்தும் ஒருதடவை கூட பதில் வந்ததே இல்லை. இவனாக பல பெயர்களை கற்பனை செய்து அம்மாவிடம் சொல்லியிருக்கிறான். ஹேமலதா, சவிதா, பத்மா, நந்தினி, ஸ்ருதி, ரேவதி, வித்யா… அம்மா அது மாதிரி நேரங்களில் அவனை உற்றுப் பார்ப்பார். ‘கபுறுஸ்தான்ல பொணத்தை பொதைச்சப்புறம் தோண்டிப் பாக்கக் கூடாதுத்தா’. அம்மா இப்படித்தான்.. எதைப் பற்றி பேசினாலும் ஓரிடத்திலாவது சாவு பற்றி பேசி விடுவாள். மரணம் என்கிற குழந்தை கூட விளையாட  ஆளில்லாமல் தனியேதான் அலைகிறதா? எவர் தன் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறார்களோ அவர்களைக் கைபிடித்து இழுத்துப் போகிற அதன் வீடு எங்கிருக்கிறது?

இவன் போவதற்குள் பந்தல் ஓலையும், மூங்கிலும் வந்து இறங்கியிருந்தது. அம்மா வேலை பார்க்கிற ரெடிமேட் கம்பெனி ஓனர் தாவூத் மாமா முன்னாலயே நின்றிருந்தார். தாவூத்தை எல்லா மௌத் வீடுகளிலும் பார்க்க முடியும். மஹல்லாவில் யார் மௌத்தானாலும் பத்து நிமிஷத்தில் அங்கிருப்பார். அவருக்கு கூடமாட ஒத்தாசை செய்ய ஆட்களும் இருப்பார்கள். பந்தலுக்குச் சொல்வது, சுத்து பத்து பள்ளிவாசல்கள்ல மௌத்த அறிவிக்க ஆளுக கிட்ட விவரம் கேட்டு எழுதித் தர்றது, வெளியூர்களுக்கு தோதுவான ஆட்களை மௌத் சொல்ல அனுப்பறது, ஐஸ்பெட்டி தூக்கிட்டு வர்றது, அடிக்கழுவ ஆள் பிடிக்கிறது, அஸரத், மோதிய வரவைக்கிறது இப்டி நெறய..

அடக்குனப்புறம் வெளியூர்காரவுகளுக்கும் நெருங்குன ஒறவுமுறைக்கும் தேங்காச்சோறு, தால்ச்சா, தக்காளி சட்னியோட சாப்பாடு செய்ய பண்டாரி ஏற்பாடு பண்ணி, சமைச்சு பரிமாறுறதுக்கு வாலிபர் செட்டை ரெடி பண்ணி, பாத்தியா ஓதுற வரைக்கும் கூடவே தான் இருப்பார். ‘மத்தவஹளுக்கு நாம தொண இருந்தோம்னா நாம போஹையில நாலு பேரு நிப்பாஹல்ல’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். ‘போகும் போது நாலு பேரு இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? இதென்ன சைக்கிள் ரேஸா போறோம்? வேடிக்கைக்கு ஆள் வேணுங்கிறதுக்கு?’ தன் மனதின் விசித்திரம் அடிக்கடி ரஹ்மானை பயமுறுத்தும். குழவிக்கல்லைப் பார்த்தால் ‘இத அப்டியே தூக்கி அம்மா தலைல போட்டுட்டு நாம அந்தக் கொழவியோட மொட்டை மாடில இருந்து குதிச்சா எப்டி இருக்கும்?’ என்றெல்லாம் நெனப்பு வரும்.

அதுமாதிரி நேரங்களில் அம்மாவின் வயித்துக்குப் பக்கத்தில் சுருண்டு படுத்துக் கொள்வான். அம்மா வெறும் வயிற்றில் அவன் முகத்தைச் சேர்த்து வைத்து இறுக்கிக் கொள்வாள். இவனுக்குள் விபரீதமாய் என்ன மாதிரியான எண்ணங்கள் ஓடினாலும் அம்மாவுக்கு எப்படித் தெரிந்து விடுகிறது என்று ஆச்சர்யமாய் இருக்கும். குழந்தைகள் சாகும் வரை தோன்றப் போகும் எண்ணங்களை கருவில் வைத்தே ஒத்திகை பார்த்து விடுகின்றனவோ? எல்லா அம்மாக்களும் அப்பவே சகலமும் அறிந்து விடுகிறார்களா? இனி இதுமாதிரித் தோன்றினால் நான் எந்த வயிறை இறுக்கிக் கொண்டு கிடப்பேன்?

அம்மாவை மர பெஞ்சில் கிடத்தியிருந்தார்கள். தூங்குவது போலத்தான் தெரிந்தார். அது வெறும் கூடா? அப்படியானால் பறவை எங்கே? என் உறவு யாருடன்? கூட்டுடனா? பறவையுடனா? முதலில் நான் யார்? கூடா? பறவையா? எதுவுமில்லாத வெத்து வானமா?

இது என்ன ஏதோ அழுத்துகிறது. வஹிதாக்கா தான் இடதுபுறமாக கட்டிப் பிடித்திருந்தார். தோள்பட்டையில் அழுத்திக் கொண்டிருப்பது என்ன? அம்மா ஓரிரண்டு தடவை சேலைத் தலைப்பு விலக படுத்துக் கிடந்த போது சில நொடிகள் வெறித்து விட்டு சடாரென்று போர்வையை போர்த்தி விட்டிருக்கிறான்.

பத்தியை அப்போதுதான் பொருத்தி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ராஜிக் குனிந்து பாயில் இரு கைகளையும் மடக்கி கீழே வைத்தபடி குண்டியை மட்டும் மேலே தூக்கி அழ முயற்சித்துக் கொண்டிருந்தான்.

‘இவனுக்கு என்ன  வயசிருக்கும்?’

‘பாவம் இந்த வருஷந்தேன் பன்ணெண்டாப்பு படிக்கிறான்’

‘அவுஹ அம்மா மௌலா முஸ்லிம்லாம்ல’

‘ஆமா.. அய்யப் பொம்பள.. ஆனா குர்ஆனு, மௌலூது எல்லாம் அப்டி ஓதுவா’

‘என்ன இருந்து என்ன செய்ய? ..ந்தா ஒத்தப் புள்ளய இப்டி விட்டுட்டு அங்க போயி ஓதி என்ன? தொழுது என்ன?’

‘இவ என்னா வஹிதா இம்புட்டு உருத்தா இருக்கா? இவளும் மாறுனவுளா?’

‘ம்.. அவ நம்ம வகையறா.. வய்யக்கரையாருடி.. பெரியகுளத்திலு பொறந்து ஜமீலுக்கு வாக்கப்பட்டவ.’

‘ஆமா.. இவ புருஷன் ஜமீலு துபாய்ல யாரோ ஒரு மலையாளத்துக்காரிய வச்சிருக்கானாமே?’

‘ஆம்பள எங்க போனாலும் எவளையாவது வச்சுக்குவான். பின்ன என்ன நாமளா கையத்தே வச்சுக்க முடியும்?’

சூழலுக்கு பொருத்தமில்லாத பேச்சும் சிரிப்பும்.. எல்லாமே ரஹ்மான் காதில் விழுந்தது.. அக்காவுக்கும் கேட்ருக்குமோ ?திரும்பிப் பார்த்தான். வஹிதா பெஞ்சில் சாய்ந்து மெல்ல குலுங்கிக் கொண்டிருந்தாள்.

2

அம்மா நெற மாசமா இருக்கும் போதே அத்தா திண்டுக்கல்லில் செத்துப் போனார். அதற்குப் பிறகு அத்தாவுடைய நண்பருக்கு தெரிஞ்சிருந்த தாவூத் மாமா மூலமாக அம்மா இங்க வந்தார். இங்க வந்த பிறகுதான் ரஹ்மான் பிறந்திருக்கிறான். அம்மாவுக்கும் அத்தாவுக்கும் எப்படி காதல் வந்தது? அத்தாவின் குடும்பம் எங்கிருக்கிறது? எப்படி அத்தா செத்துப் போனார்? அம்மாவுக்கென்று உறவுகள் இருந்தனவா? ஏன் அங்கிருந்து கம்பம் வர வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அம்மா ஒருபோதும் பதில் சொன்னதில்லை. தன்னிடம் மட்டுமல்ல யாரிடமும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

இதற்காகவே அம்மா வஹிதாவைத் தவிர யாரையும் தன் உள்வட்டத்தில் அனுமதித்ததில்லை. ஆனால் அம்மாவிடம் எப்போதும் ஒரு பதட்டம் இருக்கும். அந்தப் பதட்டத்திற்குக் காரணம் தான்தான் என்று ரஹ்மான் உணர்ந்திருக்கிறான். யாரோ தன் மகனைக் கொன்று விடுவார்கள், அவனுக்கு என்னவோ ஆகி விடும் என்று அம்மா உள்ளூர நடுங்கிக் கொண்டேயிருந்திருக்கிறாள். இவனுக்கும் இயல்பிலேயே அந்த நடுக்கம் உண்டு. வயிற்றுக்குள் இருக்கும் போது அம்மாவை உதைத்த கால்கள் கூட  நடுங்கிக் கொண்டேதான் இருந்திருக்க வாய்ப்புண்டு. நல்ல பாம்பு புத்துக்குப் பக்கத்தில் வைக்கப்பட்ட பஞ்சாரத்தின் கோழியாகவே அம்மா நடந்து கொண்டாள்..

அதனால்தான் பதினேழு வயசிலும் தான் குஞ்சாகவே இருக்கிறோமோ? ‘கையடிக்கிறதுன்னா என்னன்னு தெரியாதா? நீயெல்லாம் என்னடா ஆம்பள?’ பாலச்சந்தர் சிகரெட்டை தன் முகத்தில் ஊதியபடி கேட்ட போது கண்களில் நீர் துளிர்க்க மௌனமாகவே நின்றிருக்கிறான். நிஜமாகவே அந்தச் சொல்லின் பொருள் விளங்கவில்லை. யாரிடம் கேட்பது? அம்மாவிடம் கேட்கிற விஷயம் இல்லை என்று மட்டும் புரிந்து வைத்திருந்தான். அவனுக்கென்று நெருக்கமாய் நண்பர்களே கிடையாது. நண்பர்கள் வேண்டுமென்றால் கிரிக்கெட் விளையாட வேண்டும், ஊர் சுத்த வேண்டும், முன்னிரவு வரை பாலத்திலோ , கிரவுண்டிலோ உக்காந்திருக்க வேண்டும், செகண்ட் ஷோ இல்லன்னாலும் ஃபர்ஸ்டோ, மேட்னியோவாவது போயிருக்க வேண்டும்.

சுருளி, வைகை டேம், சோத்துப்பாறை, மேகமலை பைக் ரைடு ம்ஹூம்.. இங்கதான் எதுக்கும் வழியில்லையே? எவன் பழகுவான்? ஒருதடவை அம்மாவுக்குத் தெரியாமல் கிரவுண்டுக்கு போய்விட அம்மா துப்பட்டிய மாட்டிக்கிட்டு கிரவுண்டுக்கே திங்கு திங்குன்னு வந்திருச்சு.. ‘ரஹ்மான்’, ‘ டே..ரஹ்மான்னு’ ஒரே கூப்பாடு..

‘போத்தா.. போயி ஒங்கம்மாட்ட பால குடிச்சுட்டு கட்ட விரலையும் கலிமா விரலையும் சேத்து வாயில வச்சுக்கிட்டு தொட்டில்ல படுத்துத் தூங்கு.’

எவனோ கொளுத்திவிட எல்லவனும் கெக்கபிக்கெ என்று சிரித்து வைத்தார்கள். அவனுக்குக் கோபம் வந்தது, வெறி வந்தது. அந்த மட்டையைப் பிடுங்கி அம்மாவை சாத்தி விடலாமா என்று ஆத்திரம் வந்தது. உன் வயிற்றில் ஏன் வந்து தொலைத்தேன்? பயாலஜி புத்தகத்தில் சொல்லியிருப்பது போல் உயிரணுவாகவே இருந்திருந்தால் அங்காவது வால் முளைத்து சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்திருப்பேனே? யாரும் கையில் பேட்டோடு ஸ்டம்ப் முன்னால் நிற்கையில் துப்பட்டி போட்டு வந்து மானத்தை வாங்க மாட்டார்கள். இல்லை, உன் வயித்தில் இருந்திருந்தாலாவது  ஏதாவது ஒரு மாதத்தில் கரு ரத்தமாக வெளியேறி விடுதலை அடைந்திருப்பேனே அம்மா? அம்மா வெள்ளைத் துப்பட்டியோடு புளிய மரத்தடியில் அழுத கோலத்தில் நின்றிருந்தாள். அம்மாவின் கண்ணீருக்கு ஏதோ மாயம் உண்டு. தன் எல்லா உணர்வுகளும் அதன் முன்னால் மண்டியிட்டு விடுகிறதே?

யார் யாரோ வந்து அவனுக்குக் கை கொடுத்து கட்டியணைத்து முஸாபா செய்தார்கள்… ‘இனிதான் நீ தெம்பா இருக்கனும்’, ‘மனச விட்ராதத்தா’, ‘மவுத் இயற்கைதானே’, ‘நல்ல மனுஷி.. ம்.. என்ன செய்ய?’, ஸபூர் செய்த்தா’, ‘அல்லா இருக்கான்..ம்’ என்று விதவிதமாக அறிவுரை சொன்னார்கள். இவனுக்கு யாரையும் தெரியாது. வெள்ளிக்கிழமை தொழப் போனால் கூட சீக்கிரமாகப் போய் ஒரு மூலையில் உக்காந்து துவா முடிஞ்சதும் முதல் ஆளாக வெளியேறி விடுவான். பலசரக்குக் கடை, காய்கறிக்கடை, கறிக்கடை, கேஸ் கடை, பேங்க் எங்குமே போனதில்லை அவன். எல்லாமே அம்மாதான். ஆதார் எடுக்க தாலுகா ஆபிசில் நின்னதோடு சரி. அப்பகூட அம்மா பொம்பள வரிசையில் நின்னு நொடிக்கொருதரம் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்..

‘யாரும் வர வேண்டியதிருக்கா? லுஹர்க்கே எடுத்திரலாமா?’

‘சொந்த பந்தம்னு யாரும் கிடையாது அதுக்கு. ஒத்தக்கட்டைதே. அப்றம் யாருக்காக காத்திருக்கனும்? எடுத்திரலாம்.

தாவூத்தே எல்லா செலவுகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய ரெடிமேட் கம்பெனியில் போய் பிசிறு வெட்டுவது, கூட்டி தண்ணி புடிச்சு வைப்பது, இது மாதிரி எல்லா வேலைகளையும் அம்மா செய்வாள். அங்க இருககிறப்ப மத்தவங்கள பாத்து டெய்லரிங்கும் கத்துக்கிட்டா. வீட்ல ஒரு மிஷினப் போட்டு பெண்களுக்கு ஜாக்கெட் தைக்க, எம்ராய்டரி வேலை பாக்க என்று சகலமும் தெரியும். இதில்லாம அதிரசம், முறுக்கு, குழலப்பம், மாவுருண்டை எல்லாமே ஆர்டருக்கு போட்டுத் தருவாள். கடைசி வரை ஓடிக்கிட்டேதே இருந்தாள். இதோ யாரோ ஒரு ரெஃபரி விசில் ஊதி விட்டதால் இப்படிப் படுத்துக் கிடக்கிறாள்..

அடிக்குளுப் பாட்டி வெள்ளைத் துணி சுத்தப்பட்டிருந்த அம்மாவை உற்றுப் பார்த்தான். ‘அழுதிரு.. அழுதிரு.. தேக்கி வச்சிருந்தா துக்கம். வெளிய விட்டுட்டா வெறுந்தண்ணி.’

யாரோ அழுவதாக பாவனை பண்ணியபடி இவனிடம் சொன்னார்கள். இவனுக்கிருப்பது துக்கமா விடுதலை உணர்வா என்பதே இன்னும் விளங்கவில்லையே‌.

அம்மாவின் முகத்தில் இந்த அமைதியை எப்போதும் பார்த்ததில்லை. அந்த சாந்தமான முகத்தில் எப்போதும் கொந்தளிப்பு இருந்து கொண்டேயிருக்கும். சில நேரங்களில் சர்ச்சில் இருக்கும் மேரி மாதா படத்தைப் பார்த்து விட்டு இவர் மேரி மாதா இல்லை என்று தோன்றியிருக்கிறது. மேரி மாதா முகம் அம்மாவைப் போலத்தான் இருந்திருக்க முடியும். இவர் நிலைமைக்கு இந்த அமைதி சாத்தியமே இல்லை. இயேசுவையும் அவர் அம்மா கிரிக்கெட் விளையாட விட்டிருக்க மாட்டார் தானே? அப்ப கிரிக்கெட் இல்லையே.. சரி ஏதாவது ஒரு விளையாட்டு இருந்திருக்கும்.. அங்கு வந்து இவர் இடையில் நின்றிருப்பார்.. ராஜா சார் இயேசு சின்ன வயதில் இந்தியா வந்ததாகச் சொன்னாரே.. அம்மாட்ட கோவிச்சுக்குட்டு ஃபிரீயா விளையாடத் தான் இந்தியா வந்தாரோ? இமய மலையில் என்ன விளையாடியிருப்பார்?

அதுக்குப் பிறகுதானே அங்கே போய் தீர்க்கதரிசியானது. தீர்க்கதரிசி ஆக வேண்டும் என்றால் ஆடு மேய்க்கனும் என்று யாரோ சொன்னார்களே? அது தப்பு. தீர்க்கதரிசி ஆகனும்னா அம்மாவுக்குத் தெரியாம விளையாடனும். நண்பர்களோட ஊர் சுத்தனும். ‘கை முட்டி அடிச்சிருக்கியாடா’ன்னு எவனாவது கேட்டா பதிலுக்கு அவன் மூஞ்சில ஊதி ‘அடிச்சிருக்கேண்டா’ன்னு கெத்தா சொல்லத் தெரியனும். ஆனா அம்மா முகம் இப்ப சர்ச்ல இருக்க மாதா மூஞ்சி மாதிரிதான் இருக்கு. அப்ப அதுவும் சந்தாக்குல இருந்தத பாத்து வரைஞ்ச ஓவியம்தானா? குழந்தைப் பருவத்தில் நம்மை விட்டுப் போகிற அந்த அமைதி ததும்பும் அழகு சரியாக சாகிற போது எப்படி கதவைத் தட்டி மூஞ்சிக்குள் புகுந்து கொள்கிறது? இடையில் அது எங்கிருக்கிறது?

‘எம்புள்ளக்கு இன்னமும் கொழந்த மூஞ்சி மாறவே இல்ல. நர்சு கைல இருந்து வாங்குனப்ப கண்ண மூடிக்கிட்டு சிரிச்ச அதே குறுஞ்சிரிப்பு. நான் தூங்கி விட்டதாக நினைத்து வஹிதாக்காவிடம் அம்மா மெல்லிய குரலில் சொல்லுவாள். ..ம்மா, நா கொழந்தையெல்லாம் இல்லம்மா. வளந்த பையன். என் மனதில் இருப்பதும் அமுதமல்ல, கொடிய விஷம். நான் தூங்கும் போது நீ என்னை ரசிக்கிறாய். ஆனால் நீ தூங்கும் போது இந்தப் பாவி உன்னைக் கொன்று விட நினைத்திருக்கிறேன்.’ ஆனால் அம்மாவைக் கொன்று விட்டு என்ன செய்யப் போகிறோம் என்று அதிகம் யோசித்ததில்லை. இதோ அம்மா போய் விட்டார். திருப்திதானே பேயே?

‘த்தா.. இந்த ஸலவாத்துப் பொடிய அம்மா மேல போடு.’

யாரோ எதையோ கையில் தந்தார்கள்.

‘கடைசியா முகம் பாக்கிறவங்க பாத்துக்கங்க.’

அவனைத் தள்ளிக் கொண்டு பெருங்கூட்டம் முன்னால் வந்தது. பெரும்பகுதி பெண்கள். எல்லோரும் ஒருவரையொருவர் இடித்தபடி போலியாய் ஒப்பாரி வைத்தார்கள். வியர்வை மணமும் போலியான அத்தர் மணமும் வியாபித்திருக்க, சூழலின் கசகசப்பும், ஒழுங்கற்ற ஓசைகளின் மீதான மன விலக்கமும் அவனை எரிச்சலூட்டியது. அழுகிறவர்கள் எல்லோரையும் கிரிக்கெட் பேட்டால் வெளுத்தெடுக்க வேண்டும் என்று தோன்றியது. அம்மா உடம்பெல்லாம் வியர்வையோடு தன் சிவந்த முகத்தில் நெருப்பின் காந்தலை உணர்ந்தபடி குத்த வச்சு குழலப்பத்தை எண்ணெயில் போட்டு, தன் பொழுதுகளை தொலைத்துக் கொண்டிருந்த நாட்களில் இவர்களெல்லாம் எங்கிருந்தார்கள்? அம்மாவை யார் யாரோ தூக்கிக் கொண்டு வெளியில் போனார்கள்.

கலிமா சஹாதத்.. யாரோ சொல்ல ‘அஷ்ஹது அன்லா இலாகஹ இல்லல்லாஹ்.. அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’

இவனும் அனிச்சையாக அதையே சொன்னான். அம்மா அத்தாவை கல்யாணம் செய்து கொள்ளாமலிருந்து செத்துப் போயிருந்தால்? ‘அஷ்ஹது அன்லா இலாஹ’

‘நீயும் அம்மாவுக்கு சந்தாக்கு புடித்தா. அது மனசு குளிர வேணாமா? என்ன புள்ளயோ போ.’

அம்மா கனமாக இருந்தார். தனக்கு ஏழேட்டு தடவை வகுத்தால போயி நிலைகுலஞ்சு பாயில கெடந்த போது அம்மா ஒத்த ஆளாக அவனைத் தூக்கியபடி படியில் இறங்கி ஓடியது நினைவிலிருக்கிறது.

‘இறக்கி வைங்க.. ம்.. இங்கதேன். பாத்து, சூதனமா.’

செருப்பு சுழற்றும் ஓசைகள். ஹவுள் நீரில் கை அலம்பும் ஓசைகள். கால்களில் நீர் ஊற்றும் ஓசைகள். ஒன்றிரண்டு பறவைகளின் ஒலி. மனிதர்களின் கலவையான ஒலிகள். ஓசை.. ஓசை..

‘அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்.’

பாங்கு சொல்லி விட்டார்கள். மனித ஓசைகள் மெல்ல மெல்ல கலைந்தன. யாரோ இவன் தோளைத் தொட்டு, ‘ஒளு செய்யலையா’ என்று கேட்டுவிட்டு, ‘ந்தா..’ என்பதற்குள் பதிலை வாங்காமல் கடந்து போயிருந்தார்.

இப்போது மொத்தமாக வெள்ளைத் துணி போட்டு மூடியிருந்தார்கள். அம்மா என்பவள் வெறும் பொட்டலம். இனி அவளால் எழுந்து கிரவுண்ட் வரை வர முடியாது. புளிய மரத்தடியில் நின்று விசும்பி மற்றவர்கள் முன்னிலையில் தன்னைக் கேலிப்பொருளாக்க முடியாது. இனி சுருளியில் கூடப் படிக்கிறவன்களோடு போய் உடம்பெல்லாம் எண்ணை வச்சு தை தைன்னு குதிச்சுக்கிட்டே குளிக்கலாம். இனி கேள்வி கேட்க யாருமில்லை. ..ந்தா அந்த காக்கா மாதிரி பள்ளிவாசல் மினராவில உக்காந்து அங்கிருந்து பறந்து வந்து ஹவுள் தண்ணில தெனாவட்டா வாய் வைக்கலாம். எவராவது கை ஓங்குவார்கள் தான். தன்னிடம்தான் சிறகுகள் இருக்கிறதே? பறந்தே எல்லவனையும் கடுப்பேத்திடலாம். ஃபிரீ பேர்ட்.. ஐ யாம் எ ஃபிரீ பேர்ட்..

என்ன இது இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? செத்தது என் அம்மா இல்லையா? பத்து மாசம் சொமந்து உடல் தந்தவள். உயிர் தந்தவள். என் பீயை அள்ளி.. எனக்குக் குண்டி கழுவி.. சோறு போட்டு, தான் சாப்பிடாமலிருந்து, அடுப்படியில் வெந்து, தான் விழித்து எனைத் தூங்க வைத்து, இப்படியல்லவா யோசிக்க வேண்டும்? ஏன் இந்த மாதிரி தனக்கு யோசிக்க வர மாட்டேங்குது? யார் பிழை இது? அத்தா இதுமாதிரி தான் கல்நெஞ்சக்காரரோ? தான் கெழண்டு போயி செத்து வெள்ளை மூட்டையாயி தன்னந்தனியா கபுறுஸ்தான்ல கெடக்கையில் தன் பிள்ளை இதே கல்நெஞ்சத்தோடு விடுதலை உணர்வு கொள்வானோ? அப்போதிருக்கப் போவது இந்தக் காக்காவின் பேரனோ பேத்தியோ?

சினிமாவில் இதுவரை அம்மா செத்துப் போன காட்சிகளில் கதாநாயகர்கள் அழுவதை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தான். அவர்களைப் போல் அழுக முயற்சி செய்தான். யாருமில்லாத தனிமையிலும் கூட அழ வரவில்லையே. ஒருவேளை நமக்கு ஏன் அழுக வர மாட்டேங்குதுன்னு நெனச்சா அழுக வருமோ? ஆனா அந்த அழுகை அம்மாவுக்கானதில்லையே? கடைசியில் அம்மா பூமியிலிருந்து கொண்டு போகப்போவது தன் ஒரு சொட்டுக் கண்ணீரைத் தானா?

யாரோ திரும்பவும் தோளில் கை வைத்தார்கள். ஜனாஸா தொழுகை ஆரம்பித்தது. இந்தத் தொழுகையில் குனியவோ, சாஷ்டாங்கமா நிலத்தில் நெற்றி பதியவோ தொழுவதில்லை என்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நிக்கிற பொஸிஷன் மட்டும்தான். இடையிடையே தக்பீர் சொன்னார்கள். அவன் தொழற மொத ஜனாஸா தொழுகையே இதான். இந்தத் தொழுகையில் யாரும் செருப்பைக் கழட்டவேயில்லை. இவன் மட்டும் கழட்டி ஓரமாகப் போட்டிருந்தான்..

ஏற்கனவே குழி வெட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் சிறு மரிக்கொழுந்துச் செடி. வெட்டியவன் பெரிய மனது பண்ணி அதை காலில் மிதிக்காமலோ, மம்மட்டியால் வீசி எறிந்து விடாமலோ விட்டு வைத்திருந்தான். நல்ல மனசோடு குழி வெட்டிருக்கான். அவன் சிறுவயதில் கிட்டி புள்ளோ, கபடியோ விளையாடும் போது அவன் அம்மா குறுக்கே வந்து ஆட்டையைக் கலைத்திருக்க மாட்டாள்.

அம்மா பெரும்பாலும் பூ வைத்ததில்லை. யாராவது பாத்ததியா ஓதி பால் பழத்தோடு பகுந்து தந்தாலும் தன் பங்கையும் சேத்து வஹிதாக்கா தலையில வச்சு விட்ரும்.

பலகைகளை அடுக்கி வைத்து அதற்குள்ளே அந்த வெள்ளை மூட்டையை இறங்கினார்கள். உள்ளே ஒரு ஆள் இறங்கி லேசாக முகத்தை விலக்கினார். இவனை யாரோ முன்னால் இழுத்து வைத்து ‘பாத்துக்கத்தா’ என்றார்கள். அம்மா இந்த மாதிரி தூங்கி அவன் பார்த்ததே இல்லை. எப்ப வேணும்னாலும் எந்திரிக்கிற மாதிரிதான் விழிரெப்பை அரைகுறையா மூடிருக்கும். அம்மா கோழி என்பதைப் போல் அந்தத் தூக்கமும் கோழித் தூக்கம்தான்..

‘மண்ணைப் போடுங்க.. ம்.’ மண்ணைப் போட்டு தண்ணிய ஊத்தி கபுறு வடிவத்துக்குக் கொண்டு வந்தார்கள். ‘பத்திக்கட்டு மல்லியப்பூ எங்க?’ தாவூது மாமா ஓடி வந்தார். அழுவதாக நினைத்து இவனை அணைத்துக் கொண்டார். அவர் உடம்பில் அப்படியே மௌத்தான வீட்டின் மணம், வியர்வைக் கசகசப்பு. தன்னிடமிருந்து எதையோ வாங்கிக் கொண்டவரைப் போல் அவரை உணர்ந்தான். அவர் மீது ஏதோ ஒரு வெறுப்பு முளைத்திருந்தது. அவர் கைகளை விட்டு மெல்ல நகர்ந்து கொண்டான்.

‘அல் ஃபாத்திஹா.. அவூது பில்லாஹி மினஸ்ஸைத்தானிர் ரஜீம்…’

லத்தீப் அசரத் ஓத ஓத எல்லோரும் ஆமின் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவன் அந்த மரிக்கொழுந்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

3

வீடு வரைக்கும் எல்லோரும் கூடவே வந்தார்கள். மரணம் என்பது நிதானமான வழியனுப்புதலா? ‘இருந்தது போதும் போ’ என்று துரத்தி விடுவதா? எல்லோரும் அந்த வெறும் உடலை சொர்க்கத்திற்கு அனுப்புவதிலேயே குறியாய் இருக்கிறார்களே? இருப்பவர்களைப் பற்றி ஏன் யோசிப்பதில்லை?

தட்டில் வைத்திருந்த பேரிச்சம்பழத்தை கையில் எடுத்துக் கொண்டு எல்லோரும் ரஹ்மானை கட்டிப்பிடித்தார்கள். விதவிதமான வாசனை. வியர்வை வாசனை, பழ வாசனை, பிரியாணி வாசனை, பலசரக்குக் கடையின் மணம், கிரீஸ் வாசனை, அத்தர் வாசனை, மண் வாசனை, ஹவுள் தண்ணீரின் வாசனை. அம்மாவின் வாசனை யார் உடம்பிலிருந்தாவது வருமா? வஹிதாக்காவின் நினைவு சடாரென்று தோன்றி மறைய லேசாய் கண்ணீர் வந்தது போல் தோன்றியது.

‘ரஹ்மானு இங்க வாத்தா’

வஹிதாக்காவின் தாய்மாமா ஃபுலைலுர் ரஹ்மான். திருச்சியில் ஒரு ஹோட்டலில் மேனேஜராக இருக்கிறார்.

‘…………’

‘ஆனது ஆச்சு‌. வஹிதா ஒன்ன பத்திதே சொல்லிட்டே இருக்கும். ஒனக்கும் சொந்தபந்தம் இல்ல. படிப்பும் முடியல. ஒண்ணு செய்யி, பேசாம திருச்சிக்கு வந்துருத்தா. அங்கயே தங்கிக்கலாம். சாப்பாடு ஃபிரீ. ஆளு பேருமா போயி ஒங்க ஸ்கூல்ல பேசி பரிட்சை எழுத மட்டும் வர்ற மாதிரி பேசிப் பாப்போம். என்ன?’

இப்போதைக்கு அதற்குத் தலையாட்டி வைப்பதே ‘தர்மம்’ என்று தோன்றியது. திருச்சி எங்க இருக்கு? மெட்ராஸ் பக்கத்திலயா? அங்கு மலைக்கோட்டை இருக்கு, காவிரி ஓடுது, அவ்வளவுதே அவனுக்குத் தெரியும்‌.

கொஞ்சம் காலார நடந்து போனால் ராஹத்தாக இருக்கும் என்று தோன்றியது. யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது. காதில் விழாதது போல் நடந்து போனான்.

முல்லையாறு சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. யாரோ எருமையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தன் உள்ளுக்குள் சைக்கிளை நிப்பாட்டி குத்த வச்சு உக்காந்து பெடலை படுவேகமாக சுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய சைக்கிளை சுற்றி தண்ணீர் சிதறிக் கொண்டிருந்தது. தென்னை மரத்திலிருந்து சோகை உதிர்ந்து விழுந்தது. சற்றே விலகிக் கொண்டான். இந்த ஆற்றில் ஒரு தடவை கூட குளிச்சதில்லை என்பது நினைவுக்கு வந்தது. நண்பர்கள் சனி ஞாயிறுகளில் வந்து கூப்பிட்டிருக்கிறார்கள். அம்மா விட்டதில்லை.

‘நம்ம குடும்பத்துக்கு தண்ணி சேராது’ன்னிருவாள்‌. அவளுக்கு ஆறே இல்லாத திண்டுக்கல்லில் இருந்து யாரோ ஒருவன் வெட்டரிவாளோடு நீந்தி வந்து இந்த முல்லையாத்து தண்ணிக்குள்ளிருந்து எந்திரிச்சிருவானோன்னு நெனப்பு? அம்மா சுடுதண்ணி வச்சு தண்ணி விளாவிதான் குளிக்கச் சொல்லுவாள். மே மாதத்தில் கூட அப்படித்தான். என்ன அப்ப சூடு கொஞ்சம் கம்மியா இருக்கும். ஒரு குட்டிப் பாறையில் உக்காந்து கால்களை மட்டும் தண்ணிக்குள் விட்டான். நீரின் குளுமை சுகமாய் இருந்தது. மீன்களின் குறுகுறுப்பு. சடாரென்று காலை வெளியே இழுத்தான். தண்ணிப்பாம்பு கடிச்சு வச்சிருமோ என்று பயம் வந்தது.‌ அம்மா, பயத்தைத் தான் தனக்குத் துணையாக விட்டுப் போயிருக்கிறாள் என்று தோன்றியது..

இப்போது மீண்டும் கால்களை உள்ளே விட்டான்.‌ மீனின் சொல்லக்கடி கால்களுக்கு பழகி விட்டது. எல்லோரும், ‘வெவரமா இரு.. வெவராமா இரு’ அப்டீன்னு சொல்றாங்களே? அது என்ன? ஒரு விஷயம் பழகும் வரை காத்திருப்பது தானா? தலையில் கை வைத்தபடி குனிந்திருந்தான். ‘எலேய் தம்பி ஒனக்கென்ன ஆத்தாவா செத்துப் போச்சு. இப்டி தலைல கை வச்சு கெடக்குறவன்’. துவைச்ச துணிகளை உடம்பெல்லாம் போட்டபடி அந்த வண்ணாத்தி சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு களங்கமற்ற ஒன்றாக இருந்தது. ‘ஒங்கம்மா எங்க போயிருக்கான்னு எனக்குத் தெரியும்’ என்று சொல்வதைப் போல. அவளுக்குப் பின்னால் அவிழப் போகும் டவுசரை கையில் பிடித்தபடி கன்னங்கரேலென்று ஒரு சிறுவன் முழுவதுமாய் நனைத்திருந்தான். ‘ரஹ்மானு தலைய பாத்ரூம்லயே தொடச்சிட்டு வாத்தா.. சளி புடிச்சிக்கிரும்’. அம்மாவின் குரல் ஒலித்தது.

‘ச்சும்மா’

‘ஒண்ணு குளி. இல்லாட்டி எந்திரிச்சு வீட்டுக்கு போ. சூரியன் மசங்குற நேரம் இது. கண்டது காத்துல அலையும். அதேஞ் சொல்றீ.’

அவள் பேசிக்கொண்டே நடந்து போனாள். அப்படி ஒரு மோகினியோ, பேயோவாவது துணையாக வீட்டுக்கு வரட்டுமே.

பந்தலுக்குக் கீழே இப்போது யாரும் இல்லை. சேர்களை தூக்கிப் போட்டு நாலு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ‘இதாம் ஃபிளைட்டா’ என்று ஒருத்தன் கேட்க, ‘ஞ்சுஞ்சுர்ரீ’ என்றபடி சேரின் சாய்மான இடைவெளியில் காலைப் போட்டபடி வெறும் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார் ஒரு பைலட். இன்னொருத்தன் பெஞ்சு மேல ஏறி நின்னு, ‘டிக்கெட் டிக்கெட். சில்ற பாக்கி’ என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். ரஹ்மானைப் பார்த்ததும் மற்ற மூவரும் லேசாய் மிரண்டார்கள். ‘ஞ்ஞெய் அவ்ங்க சேர்டீ’. கையை வளைத்துக் கொண்டிருந்தவன் அசரவேயில்லை. ‘ஃபிளைட் நம்மளுதுடா.’

அவனைக் கண்டதும் வஹிதாக்கா வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தாள். ‘எங்கத்தா போயிட்ட? போனையும் வீட்ல வச்சிட்டு. ரொம்ப பயந்து போயிட்டீ.’

‘…………..’

‘மேல சாப்பாடு எடுத்து வச்சிருக்கீ.. ஃபிளாஸ்க்ல பாலு சூடா இருக்கு.. சாப்டுட்டு எதையும் நினைக்காம தூங்கு.. ன்னா.. யாரையும் தொணைக்கு படுக்கச் சொல்லவா?’

‘ல்ல வேணா..’

‘சரி.. மாமா பேசுனாராம்ல.. இந்த ஒரு வருஷம் முடியட்டும்.. போயிக்கரலாம். ந்தா ஒஞ் செல்லு.’

அக்காவின் விரல்கள் குளுமையாக இருந்தன. உள்ளே போனதும் கதவைச் சாத்தினான்.

கொடியில் அம்மாவின் சேலை கிடந்தது. அப்படியே கிட்டத்தில் போய் அதை இழுத்து மூஞ்சி மேல் போட்டுக் கொண்டான். தாளிக்கிற வாசனை, ஹமாம் சோப்பு போட்டு குளிச்சுட்டு வர்றப்ப தூரத்துலயே மணக்குமே அது, மாவு வாடை, கை முறுக்கின் மணம், வியர்வையின் கத்தாழைக் கவுச்சி, அடிவயித்துச் சூட்டிலிருந்து எழும் மெல்லிய மண் வாசனை. ‘ம்மா.. ம்ம்மாஆ.. ம்ம்ஆஆ..’ ஒரு இசைப்பாடகன் மெல்ல சுருதி கூட்டி ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இழந்து தான்தோன்றித்தனமாக இசைப்பதைப் போல வெடித்து அழுதான்.

இந்தத் தனிமையை எப்படித் தாங்கப் போகிறான் என்பதே பெரும் பிரச்சினையாக இருந்தது. அந்த அறைக்குள் நிறைய பேர் இருப்பதைப் போல உணர்ந்தான். ஆணும், பெண்ணும், குழந்தைகளும், முதியவர்களுமாய்.. பொட்டு வைத்தவர்கள்.. தொப்பி வைத்தவர்கள் எல்லாம்.. ‘அம்மா.. அம்மா..’

அலறியபடி பாத்ரூமுக்குள் ஓடி, வாளித் தண்ணீரை தலையில் ஊற்றினான். எல்லோரும் அங்கயும் வந்து விட்டிருந்தார்கள்..

ஈரமான லுங்கியோடு கதவைத் திறந்து வெளியே ஓடினான். அது மாடி வீடு. வீட்டுக்கு முன்னால் பால்கனி.

‘ந்தா, வஹிதா தேங்காச் சோறு வச்சிருக்கு பாரு’, ‘கத்தி எங்கடா இருக்கு அடுப்படில?’, ‘லே மயிராண்டி மவனே! கபுறுஸ்தான்ல என்னடா துவா கேக்காம மரிக்கொழுந்து செடிய பாக்குற?’, ‘ஒங்கொம்மாவ நீதான கொன்ன?’, ‘வா இப்ப போயி மண்ண விலக்கி பாத்துட்டு வருவமா?’, ‘ந்தாத்தா மல்லியப் பூ ஒந் தலைல வச்சுக்குறியா’, ‘ஏன் மாமா எங்க ஃபிளைட்ட புடுங்கிட்டீங்க?’, ‘தலைல கை வச்சவனே! சொன்னனே கேட்டியா’, ‘சுடுதண்ணி வைக்கவாடா?’ ..குரல்கள்.. குரல்கள்.. வெறும் குரல்கள்.. உள்ளே ஆட்கள்.. இங்கே குரல்கள்..

தலையைப் பிடித்தபடி கீழே அமர்ந்தான். திடீரென்று தோன்றியது.. சாகனும்.. அதான் நிம்மதி.. தானறியாத திருச்சி ஒரு மலைப்பாம்பாக வாயைப் பிளந்தபடி நின்றிருந்தது.. நா சாகப் போறீ. மலைப்பாம்பு தலை துண்டாக தெறித்து விழுந்தது.. தன்னை அச்சுறுத்திய எல்லா குரல்களையும் நோக்கி மெல்லக் கூறினான். ‘நா சாகப் போறீ..’ ஒரே மௌனம்.. அரைகுறையாக திறந்திருந்த கதவின் வழி எல்லோரும் உள்ளேயே இருப்பது தெரிந்தது… ‘நா சாப் போறீ…’ எல்லோரும் இவன் பார்க்கவே மௌனமாக தலையைக் குனிந்தபடி வெளியேறிப் போனார்கள்.

இப்போது கதவை பயமில்லாமல் திறந்தான். உள்ளே யாருமில்லை‌.‌ அவனும் அந்த வீடும் மட்டுமே. சத்தம் போட்டுச் சொன்னான். ‘நா சாகப் போறீ..’ மண்டைக்குள் இப்போது எந்தக் குரலுமில்லை. ஒரு மந்திரம் போல் இதையே சொன்னான். ‘நா சாகப் போறீ..’

பதட்டத்துடன் தேர்வுத்தாளை வாங்கிப் பார்த்ததும் அத்தனை கேள்விகளும் நன்றாகத் தெரிந்த கேள்விகளாய் இருந்தால் மனம் பரபரத்து மூளைக்குள் ஒரு உற்சாகம் பிறக்குமே.. அந்த மனநிலை வந்திருந்தது.. தன் வாழ்வில் அதுவரை உணராத அமைதியை சிகரெட் புகையை உள்ளிழுத்து புளங்காங்கிதம் அடைவதைப் போல அனுபவித்தான்.

எப்படிச் சாவது? அம்மா பயன்படுத்தும் தூக்க மாத்திரைகள் டப்பா நிறைய இருக்கின்றன. ஆனால் அது வேஸ்ட். தூக்க மாத்திரை சாப்பிட்டு எவனும் சாவதில்லை‌. அப்படியே செத்திருந்தாலும் அது டாக்டரின் கைங்கர்யமாகத் தான் இருக்கும். மேலிருந்து குதித்து விடலாமா? அம்மாவின் பரம்பரைச் சொத்தான பயம் தன் உடலை வளைத்துப் பிடித்து தடம் மாற்றி வெறும் காயத்தோடு காப்பாற்றி விடும். கை கால் உடைந்து படுக்கையில்.. ந்நோ… பிளேடோ, கத்தியோ எடுத்துக் கீறிக் கொண்டால்? ரொம்ப நேரம் ஆகும்.. வலி தாங்க முடியாது.. உள்ளே கேஸ் சிலிண்டர்  இருக்கிறது.. வேண்டாம்..

நெருப்பு மட்டும் வேண்டவே வேண்டாம்.. ஒருவேளை காப்பாற்றி விட்டால்.. நரகம் அது.. ஓடிப்போய் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டான்.. ‘ம்மா வந்துடறேன்மா’ சாவதென்று முடிவெடுத்து விட்டேன்.. எப்படிச் சாவது? ஏதாவது சொல்லேன்மா.. அம்மாவின் சேலை கீழே கிடந்தது. அவன் தன்னையே பாராட்டிக் கொண்டான். இந்தச் சாவுதான் கவித்துவமானது. அம்மாவின் சேலையை ஃபேனில் சுற்றி… நாளை தன் உடலைப் பார்த்து விட்டு என்ன பேசுவார்கள்? விதவிதமாக கற்பனை செய்து அவனே அழுது.. பூரித்து.. பெருமிதப்பட்டு..

இதோ கிளம்பி விட்டேன் அம்மா.. உன் வயிற்றில் சுருண்டு கொள்ள.. அங்கு வந்த பிறகு அவுள் நீரில் விளையாடக் கூடாது என்று என் காலை ஒடிக்கலாம் நீ.. எங்கும் போகாமல் உன்னுடனே கிடப்பேன்.. கரையான் தின்ற சதைகள் போக மீந்திருக்கும் உன் எலும்புக் கரங்களால் அணைத்துக் கொள். இந்த உலகம் வேண்டாம் எனக்கு.. என் பயமும் நீயும் போதும்.. நானுன் மார்பில் அருந்துவதற்கு பால் இருக்கிறதா அம்மா? கருணையுள்ள எந்த மலக்கிடமாவது வேண்டிக் கொண்டு என் இதழ்கள் தூர்க்காமல் வற்றிப் போன உன் மார்பை சுரக்க வை. இதோ வந்து விட்டேன். மன்னித்துக் கொள் அம்மா.. நீ கூட்டித் துடைத்து பெருக்கி வழித்து நாக்கில் மட்டும்தான் நக்காமல் விட்ட இந்த சுத்தபத்தமான வீட்டின் நடுஹாலிலேயே நான் பேளப் போகிறேன். மோளப் போகிறேன் அம்மா..

4

கையில் எடுத்த அம்மாவின் சேலையையே உற்றுப்‌ பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அலைபேசி ஒலித்தது. ‘நெஞ்சே எழு.. நெஞ்சே எழு’. ரகுமான் அடித்தொண்டையிலிருந்து பாடினாலும் குரலில் குளிர்மை இருந்தது. அம்மா தன் செல்போனை வாங்கி போன வாரம் வச்சு விட்ட ரிங்டோன்.. அது கூட எப்போதும் அம்மா முடிவு செய்வதுதான். செல்ஃபோனை தூக்கிக் கொண்டு வரட்டுமா அம்மா? அங்கும் ஏதாவது ரிங்டோன் வை. யாராயிருக்கும்? எவனாவது ஒரு விவஸ்தை கெட்டவன், ‘ஐநூறு குழலப்பம்’ கேட்பான்‌. அம்மா தன் எண்ணைத்தானே எல்லோருக்கும் கொடுத்து வைத்திருக்கிறாள்?

அடேய் திண்ணிப் பண்டார சாயபே! உன் மனைவியை அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை ‌வைக்கச் சொல்லிவிட்டு உன் குண்டியை அதில் முக்கு. அவள் பொரித்தெடுத்துத் திங்கட்டும்.. மன்னித்து விடம்மா.. கெட்ட வார்த்தை பேசி விட்டேன்.. நரகத்தின் கங்குகளை இரவலாகப் பெற்று என் நாக்கில் சூடு போடு.. இதோ வருகிறேன்.. மீண்டும், ‘நெஞ்சே எழு.. நெஞ்சே எழு’ ரஹ்மான் புரோ! நீங்களாகவே இருந்தாலும் இப்போது எடுக்க இயலாத நிலைமை. மன்னித்து விடுங்கள். சற்று பொறுங்கள்.. நானும் அம்மாவும் சதை வறண்ட விரல்களால் இரு கைகளையும் நீட்டி உங்களின் மூணாவது ஆஸ்காருக்காக மண்ணறையில் இருந்தபடி துவா செய்கிறோம்‌‌. எங்கள் துவாவிற்கு ராக்கெட்டை விட வேகம் அதிகம். இப்போது போய் விடுங்கள். வந்து விட்டேன் அம்மா. ஒருவேளை அம்மாவே அழைக்கிறாரோ? ‘யாவரும் நலம்’ படத்தின் இறுதிக்காட்சி போல. இதோ வந்துவிட்டேன் அம்மா..

‘தூங்கிட்டியாத்தா? வஹிதா பேசுறேன்‌. சாப்டியா..?’

அக்காவின் குரலை இதுவரை அலைபேசியில் கேட்டதில்லை. இவ்வளவு அழகிய குரலா அக்காவுக்கு?

‘ம்.. தூங்கிட்டேன்’

‘மனச விட்ராதத்தா.. உனக்கு யார் இருக்காங்களோ இல்லியோ நா இருக்கீ.. என்ன செல்லம்?’

‘செல்லம்’ அந்தச் சொல் என்னவோ செய்கிறதே?

‘உன்னை நினைச்சு இந்நேரம் வரை தூக்கமே வரல.. என் நினைப்பு பூராம் உன் மேலதான் இருந்தது’

உன்னை விட்டா போக இருந்தேன்?

‘என்னத்தா.. பேசவே மாட்டேங்குற? ஒண்ணும் பிரச்சினை இல்லைல? எனக்கு என்னென்னே தெரியல.. கெதக்கு கெதக்குன்னு இருக்கு.. கேஸ் நானே ஆஃப் பண்ணிட்டேன்.. ம்.. அம்மாவோட மாத்திரைய எடுத்து குப்பைத் தொட்டில கொட்டிரு.. அடுப்படிக்குள்ள போக வேணாம்.. நா காலைல வந்து பாத்துக்கிறேன்.. அம்மா சேல ஒண்ணு கொடில கிடந்தது.. அத எடுத்து மடிச்சு வச்சிரு’

நீ எப்படியடி என் மனதைத் துப்பறிந்து கூடவே வந்திருக்கிறாய்? எனக்கு யார் நீ? சேலை வரை எப்படி மோப்பம் பிடித்தாய்?

‘சரி வெச்சிடவா? எதுன்னாலும் உடனே ஃபோன் பண்ணு.. இல்ல கீழ் வந்து பெல்லடி.. ஓகேயா? வச்சிர்றேன்.’

பெல் அடி.. ஃபோன் பண்ணு… பெல் அடி… ஃபோன் பண்ணு.. பெல் அடி… ஃபோன் பண்ணு..

குரலா அது? அம்மா பெஞ்சில் கிடந்த போது தன் தோளில் இடித்ததே அதே மெதுமெதுப்பு… என் உடம்பில் இப்போது ஏன் ஒரு நதி ஓடுகிறது..

இறுக்கிக் கட்டப்பட்ட வீணை போல் உடம்பு அதிர்ந்தது.. அக்கா சிரிக்கிறாள்.. நடக்கிறாள்.. கிடக்கிறாள்.. ஓடுகிறாள்.. ‘வா வாடா’ அழைக்கிறாள்.. மேலே மிதந்து அறைக்குள் வருகிறாள்.. அக்கா.. அக்கா

அக்காவாம் அக்கா? இனி அவள் வஹிதா.. என் அம்மா எனக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த அம்ருதத்தை விழுங்கியவள் நீதானா? இதிலொரு உருண்டையைத் தந்துதான் உன் கணவனை வெளிநாட்டுக்குத் துரத்தி விட்டாயா? மீதமெல்லாம் எனக்கா? இதைத்தான் உன் உடல் சூட்டால் உருக்கி ராஜிக்கின் வாயில் ஊற்றுகிறாயா? இதற்காகத்தான் எவனோ ஒரு திண்டுக்கல்காரனின் அரிவாளுக்காக வீடு மாறிக் கொண்டேயிருந்த அம்மாவை இங்கேயே கட்டிப் போட்டாயா? நமக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்று அவளைக் கொன்றதும் நீதானே?

இரு. .இரு.. நான் வந்து உன்னைக் கொல்கிறேன். நீ சாக மாட்டாய்.. நானும்.. ஆனால் நாம் சாவோம்.. எங்கிருந்தடி கிளம்புகிறது இந்த நீருற்று.. கூசுகிறதே.. அடியே வஹிதா இடிக்காதே.. இடிக்காதேடி.. அய்யோ வஹிதா.. செல்லம்… செல்லம்.. செல்லம்.. இந்த வார்த்தையை எங்கேயடி ஒளித்து வைத்திருந்தாய்.. உன் இதழ்களுக்குள் ஊடுருவி அந்த ஆதி இடத்தைக் காண வேண்டுமடி தங்கமே..

செல்லையே உற்றுப் பார்த்தான்.. கால் ஹிஸ்டரியில் போய் அந்தப் பெயரை ஆசை தீரப் பார்த்தான். வ..ஹி..தா.. ஆம் தா.. உன்னைத் தா.. என் அம்மா வளராமலே புதைத்து விட்ட என்னைத் தா.. யாருமறியாமல் பதுக்கி வைத்திருந்த என் ஆசைகளைத் தா.. இந்த பிரபஞ்சத்தையே தா… என் தோளில் நீருற்றை எழுப்பிய அந்தப் பஞ்சுப் பொதியைத் தா.. பாழடைந்த வீட்டின் கதவுகளைத் திறக்க வந்த சாவியாய் என் காதுகளில் விழுந்து உடலெங்கும் வழிந்து கொண்டிருக்கும் அந்தக் குரலைத் தா..

வஹிதாவின் கணவன் வந்து நாலு வருஷம் இருக்கும்.. அப்பத்தானே இங்கே குடி வந்தோம்.. ராஜிக் உருவானதும் அப்போதுதான்.. மற மற‌.மற… பெரியார் சொல்வாரே அதுமாதிரி… ‘ராஜிக்கை மற.. இந்த ராசாத்தியை நினை’

வ.ஹி..தா.. வ..ஹி..தா.. வ…ஹி..தா..

கிட்டத்தட்ட ஓடினான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இவனை மிரட்டிக் கொண்டிருந்த மொத்தக் கூட்டமும் வெளியே பால்கனியில் நின்றிருந்தது.. எல்லா முகங்களிலும் இருள்.. அவனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம்..

கேட்டீங்களா…’செல்லம்’ எப்டி.. ‘செல்லம்’..

அத்தனை பேரும் அங்கேயே வெடித்துச் சிதறினர்.. போர்க்களத்தில் ஆயிரம் பேரைக் கொன்று விட்டு எதிரி நாட்டு மன்னனைக் கொல்லப் போகும் சாமுராயின் குதிரை மாதிரி அவன் ஓடினான்..

வ..ஹி..தா..

காதுக்குள் கேட்கவில்லையாடி என் குரல்? எதற்கிந்த நாடகம்? நான் ஏன் பெல்லடிக்க வேண்டும்.. திறந்தே வைத்திருக்கும் கதவை உடைத்து வெளியே வா.. என்மீது படர்ந்து கொள்.. என் உடம்பு முழுவதையும் கூச வைக்கிற அயிரை மீன்களை மொத்தமாய் உன் மீது கொட்டுகிறேன்.. மாலை நேரத்தில் ஆற்றில் உட்கார்ந்தால் மோகினி பிடித்துக் கொள்ளுமாமே? வண்ணாத்தி சொல்கிறாள்.. அவள் கிடக்கிறாள். மனிதர்களின் அழுக்கைப் பற்றி மட்டுமே அறிந்தவள். ‘நெஞ்சே எழு.. நெஞ்சே எழு..’

அம்மா கப்றில் தெளித்த சந்தனத் துளிகளைப் போல் பிரிக்கப்படாத பந்தலில் சேர்கள் அங்கங்கு ஒழுங்கில்லாமல் சிதறிக் கிடந்தன. அந்த மூலையில கிடக்கிறதுதானே ஃபிளைட்.. வாடி வஹிதா.. அதிலேறி துபாய் செல்வோம்.. உன் அமிர்தத்தை எனக்குத் தெரியாமல் சூறையாடினானே? அவன் முன்னிலையிலேயே உன்னை…

உனக்கும் எனக்கும் என்ன? ஆறு வயசு வித்தியாசம் இருக்குமா? காலங்களைத் தாண்டிப் பாயும் காட்டாறுக்கு முன்னால் வயது மண்சுவரடி.. மண்சுவர்..

பெல்லை அழுத்தப் போனான்.

‘ம்மா ஆ.. அம்மே.. ம்மா.. அம்மாஆஆ’

ராஜிக்கின் குரல்… மேகம் திரண்டு.. வானம் கருத்து.. சூரியனை யாரோ இழுத்துப் போய் கழுத்தை அறுத்து.. மின்னல் பளீரிட்டு.. இடி தடதடத்த குரலில் ஓங்கி ஒலிக்கிற போது மரங்களில் கிளம்பி மேலே ஏறிய பெருஞ்சூரை மேகத்தைக் கலைப்பது போல் அவன் குரல்..

சத்தமில்லாமல் படியேறினான்… மண்ணில் துளிகள் வரவில்லையே தவிர வானம் அப்படியேதான் இருந்தது..

மீண்டும் கதவைத் திறந்த போது மணி பார்த்தான் இரண்டு.. பயங்கரமாய் பசித்தது.. ஹாட்பாக்ஸை திறந்து பார்த்தான்.. தேங்காச் சோறு.. முகர்ந்தான்.. நீர் கோர்க்கவில்லை.. வஹிதாவின் மணம்.. பிள்ளைக்குப் பாலூட்டும் கசிந்த முலையின் மணம்.. வியர்த்த கம்முக்காட்டின் மணம்.. துணியைக் கொடியில் போடும் போது சேலை இடைவெளியில் தெரிந்த தொப்புளின் மணம்.. நனைந்த கூந்தலின் சொட்டுகள் கீழே வடிய அசைந்ததபடி நகரும் பின்புறத்தின் மணம்.. முழங்கால் வரை மடித்த சேலை நடுவே நெளியும் மயிர்க்கால்களின் மணம்.. குடத்தை வாங்கும் போது கொண்டை அவிழ்ந்து முகத்தில் பட்ட ஷாம்பூ வாசம்.. படியிறங்கும் போது வெண்டிலேசன் இடைவெளி வழியாக வெளிவந்து காற்றை நிறைக்கும் டவ் சோப் வாசம்.. ஒரே ஒரு தடவை வாய்த்த பேருந்து பயணத்தில் அம்மா பஸ்ஸிலேயே பிள்ளையை வைத்துக் கொள்ள, துணைக்குக் கூடப் போன போது கழிப்பறை கக்கூஸின் அத்தனை நாற்றத்தையும் மீறி தன்னைக் கிளர்த்திய தனியானதொரு மூத்திர வாசம்..

இரண்டு ஆள் சாப்பாடு.. ஒருவனே தின்று முடித்தான்.. இன்னும் பசித்தது.. மிச்சமிருந்த தால்சாவை வட்டியில் கொட்டி வழித்து நக்கினான்.. போதவில்லை.. வ..ஹி..தா.. தக்காளிச் சட்னி கிண்ணத்தில் விரல் விட்டு வழித்துச் சூப்பினான்.. இன்னும் பசித்தது.. வ..ஹி..தா.

எழுந்து போய் இரண்டு செம்பு தண்ணீர் குடித்தும் வயிறு அடங்கவில்லை.. இன்னும் தா தா என்றது. வ.ஹி.தா..

அப்படியே கீழே சரிந்தான்.. கீழே மீண்டும் ராஜிக்கின் அழுகுரல் மெலிதாகக் கேட்கிறது.. ‘ஜூ ஜூ கண்ணுறங்கு’ வஹிதா மெலிதாகப் பாடுகிறாள்..

‘ஜூ ஜூ கண்ணுறங்கு
ரஹ்மானே ராசாவே
ரத்தினமே நீயுறங்கு..
மார்புச்சூட்டில் மையல் வச்சு
மகாராசா நீயுறங்கு
தொடை மேல படுக்க வச்சேன்
தொட்டுத் தொட்டு நீயுறங்கு
அதிகாலை ஒழியட்டும்
ராத்திரியே பூத்துறங்கு’

‘ஜூ ஜூ கண்ணுறங்கு.. ஜூ ஜூ’

அம்மா நீ இறந்தன்னிக்கு ஏம்மா இப்டித் தோணுது? நீ எல்லாத்தையும் பாத்திட்டுதான் இருக்கியா? இதுதான் பெண்ணாம்மா? ஏன் இந்தப் பக்கம் போக விடாமல் என் பார்வையை மறைத்தாய்? திண்டுக்கல்லில் இருந்து என்னைக் கொல்ல அரிவாளோடு அலைவதாக  நீ பயந்தது இதற்குத் தானா? உனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்? நீயெப்படி மண் குடத்தை உடைத்து விட்டு வெறும் காற்றில் நீரருந்தினாய்? எனக்குத் தாகமாக இருக்கிறதம்மா? நான் குடிக்க வேண்டிய நதியை மறைத்து பாறாங்கல்லாக ராஜிக் படுத்திருக்கிறானே அம்மா.. அவனை உதை.. உதை..

அம்மா மெல்ல அவன் கைகளைப் பிடித்து இழுத்தாள்.. இவன் மிதந்தபடி உள்ளே சென்றான்.. அம்மா தலையில் மல்லிகைப் பூச்சூடி அமர்ந்திருந்தாள்.. பக்கத்தில் அத்தா. அவர் முகமே தெரியவில்லை. ‘உங்க பிள்ளைக்கு மதகு உடைஞ்சிருச்சு தெரியுமா?’, ‘ ‘அப்டியா..?’ அத்தா சிரிக்கிறார்.. இவனைப் பார்க்கவேயில்லை.. ‘அம்மா நீ பூ வச்சிருக்க? வைக்கலாமா?’ அம்மாவின் தலைக்குப் பின்னால் நின்றான். ‘வெளிய போடா பட்டி மோனே’ அத்தா எட்டி உதைத்தார். வெளியே வந்து விழுந்தான். அதே கப்று.. சந்தனம் உலரவில்லை… அம்மா தலையில் இருந்த அதே பூ மண்ணில்.. பக்கத்தில் மருக்கொழுந்துச் செடி.. அந்த வாசத்தை துரத்திக் கொண்டு ஓடினான்.. வாசம் முடிவடைந்த இடத்தில் ஒரு நதியிருந்தது.. ‘வெளிய போடா பட்டி மோனே’

அந்தப் பாறையை உதைத்து கால் சுளுக்கி நதியில் விழுந்தான்.. அது நதியல்ல.. வேறு எதுவோ.. மெதுக் மெதுக் என்றிருந்தது.. வ..ஹி..தா.. வ..ஹி..தா.. வஹி.. ‘நா இப்போ உன்ன செல்லம்னு சொல்லவா?’ பதில் சொல்லாமல் அது கிடைமட்டத்திலிருந்து திரண்டெழுந்து தோள்களில் உராய்ந்தது.. வ..ஹி..தா.. வ..ஹி..தா.. வஹி’ கண்கள் சொருகின.. கைகள் காற்றில் அசைய தோள்களில் அதே மெதுமெதுவான உயிரசைவு… தன்னைச் சுருட்டியபடி வேகமாய்ப் பயணித்த காட்டாறு தன்னிலிருந்து பிரிகிற உணர்வு.. கண்களைத் திறக்கவே முடியவில்லை… அறை முழுக்க மரிக்கொழுந்தின் வாசம்.. முதுகில் இன்னமும் அதே பஞ்சுப்பொதி அழுத்தம்..

சடாரென்று திரும்பினான்.. இது கனவில்லையா? தலகாணியை விட்டு எங்கோ நகர்ந்து வந்திருந்தான்.. மதிலை ஒட்டி இருந்த ராஜிக்கின் பொம்மை, தோள்களுக்குப் பின்னால் அழுத்திக் கொண்டிருந்தது.. திரும்பிப் பார்த்தான்.. அம்மாவின் சேலை மின்விசிறியின் தயவால்  நெளிநெளிவாக ஒன்றின் மேல் ஒன்று படுத்திருக்கும் பாம்புகளைப் போல் சுருண்டு கிடந்தது… ராத்திரியைப் புணர்ந்து விட்ட களைப்பின் சுவடு துளியும் இல்லாமல் சூரியன் ஜன்னல்களின் வழியே ஊடுருவியிருந்தான்..

அந்த அறை நேற்றிரவு இருந்த அறை அல்ல.. நேற்றிருந்த பதட்டம்.. வேகம் இரண்டுமே காணாமல் போயிருந்தது.. அவனுக்கே அது ஆச்சர்யம்.. ஓரிரவு பெய்த பெருமழையிலும் நனையாத பூமியைப் போல் தானிருப்பது கண்டு வியந்தான்.. முதலில் கைலி மாற்றிக்கொள்ள பாத்ரூமுக்கு போனான்..

பாத்திரங்களை எல்லாம் அம்மா மாதிரியே கழுவி வைத்து அடுக்கினான்.. தரையைக் கூட்டி மாப் வைத்து இழுத்தான்.. நாக்கால் துடைக்காத குறைதான்.. எப்போதும் போலில்லாமல் சரியாய் பவுடர் அடித்து, பட்டன்களை சரியாய்ப் போட்டு, செருப்புக்குள் காலை சரியாய் விட்டு, வீட்டைப் பூட்டினான்.. பால்கனி சுவரில் இருந்த காகம் இவனையே பார்த்துவிட்டு யாரிடமோ எதையோ சொல்லப் போகிற பாவனையில் வேகமாய் எழுந்து ஓடியது.

அவனுக்கு முன்பாக படியில் கீழிறங்கியது மரிக்கொழுந்தின் வாசனை.. அழைப்பு மணியை அழுத்தினான்.. ராஜிக் அழுவானோ? ஒரு கணம் திகைத்து மறுகணம் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

வஹிதா யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். திறந்திருந்த ஜன்னல் வழி வெளியே கேட்டது குரல்..

‘ம்.. நேத்து மேல வச்சுட்டேன்.. ஆமா.. இன்னம் எந்திரிக்கல.. இல்லல்ல.. இந்த வர்ஷம் முடியட்டும்.. ஆமாமமா. மாமு சொன்னாஹ.. யே! ஏன் இப்டி பேசுற?… அந்தக்கா சீட்டுக்காசு எழுபதாயிரத்த என்கிட்டதே கொடுத்து வச்சிருக்கு.. மனுஷ மக்கள யோசிம்மா.. நாலு வருஷமா எனக்கு அவங்கதே பாதுகாப்பு.. இப்ப எப்டி… அதெல்லாம் விடு.. நா பாத்துக்கறேன்… என்னா பேசுற நீ… அது எங்கூடப் பொறந்த பொறப்பு மாதிரி.. ரசூல் வேற ரஹ்மான் வேற இல்லம்மா… மூஞ்சிய பாத்துக் கூட பேசாத புள்ள அது… ராஜிக் அளவுதேம்மா அதுக்கு விவரம்.. பச்ச மண்ணு.. ஆளுதே வளந்திருக்கு.. சரி சரி.. அப்ப நீயும் ஆறுமாசத்துக்கு கூட வந்து இரு… அதுக்கப்புறம் திருச்சி போகட்டும்.. வச்சிரவா..’

ட்ரிங்க் ட்ரிங்.

‘யாரு.. ந்தா வர்றீ’

வஹிதா சற்றே கலைந்த கரும்புச் சேலையோடு வெளிப்பட்டாள்.. தலையில் சீப்பு வச்சது வச்சபடி.. இடுப்பில் ராஜிக்..

‘என்னத்தா.. எங்க கிளம்பிட்ட?’

‘அந்த திருச்சிக்காரு நம்பர் வேணும்’

‘வா, உள்ள வா’

‘இருக்கட்டும்’

‘அட வாடான்னா ..’

‘நம்பர்?’

‘ந்தா இரு..’

அக்கா ராஜிக்கை கீழே இறக்கி விட்டு செல்ஃபோனோடு வந்தாள்.

‘குறிச்சுக்க.. நைன் எய்ட்…’

அவன் தன் செல்ஃபோனில் நம்பரை பதிந்து கொண்டான்..

‘எங்கடா கிளம்பிட்ட’

‘திருச்சிக்கு’

அக்கா அப்போதுதான் பேக்கை பார்த்தாள்.

‘ஏன்?’

‘…………’

அக்கா சற்று நேரம் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. விழிகள் ஒரு ஸ்கேன் மிஷினாகி உயிர் வரை ஊடுருவும் பார்வை.. அவன் வெளியே போய் விட்டு வீட்டுக்குள் நுழையும் போது அம்மா பார்க்கும் அதே பார்வை..

‘மும்தாஜ் செத்த ஒடனே ராத்திரில ஷாஜகான் ராசாவுக்கு முடி நரச்சிருச்சாமே.. அதுமாதிரி நீ ஒரே ராத்திரில பெரிய மனுஷனாயிட்டியாடா?’

‘………..’

‘பஸ்ஸூக்கு காசிருக்கா?’

‘இருக்கு’

‘கல்லூளி மங்கா.. திடீர்னு என்ன? அக்காவ கூட முழுங்கிட்ட…’

‘…………..’

‘சரி, சாப்டாவது போடா.’

‘இல்ல.. பசிக்கல’

‘சரி போ.. நா மாமுட்ட பேசிர்றேன்.. பத்திரமா போடா’

‘ம்’

பேக்கை எடுத்து மெல்ல நகர்ந்தான்.. ராஜிக் கதவருகே வர வஹிதா அவனைத் தூக்கி இடுப்பில் இடுக்கிக் கொண்டாள்..

ராஜிக் அவனைப் பாத்து ‘அஹ்மானு’ மெல்லச் சிரித்தான்.. இவனும் அதே கனிவோடு சிரித்து விட்டு, ‘பை டா’ என்றான்.

‘மாமாவுக்கு பை சொல்லு.. ந்தா பாரு சொல்றாண்டா பை.. மாமா பை’

பேக்கோடு நகர்ந்தவன் மெல்லத் திரும்பி, ‘தேங்க்ஸ்’ என்றான்.

அவள் தலையிலிருந்த சீப்பை கைகளில் எடுத்தாள்.. கண்களில் மெல்லிய ஆச்சர்யத்தோடு ‘எதுக்குடா?’

அவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் அம்மாவுக்காக போட்ட பந்தலைக் கடந்து போய்க் கொண்டிருந்தான்.