மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 2) : ராஜா பாடிய பாடல்கள்

0 comment

ஒரு பாடல் அதை உருவாகிய போதோ, வெளியான பிறகோ அது அடைந்த பிரபலத்துக்குப் பொருத்தமற்ற வியப்பொன்றை உருவாக்குவது அரிய நிகழ்வு. அது ஏன் வென்றது என்பதற்கான தனியான காரணம் தேவையில்லை. முன் சொன்ன வியத்தல் அந்தப் பாடலின் பின்னுறையும் புதிர்களின் விடையாகவும் மாறும். இசையமைப்பாளராக வெற்றிகரமான இடத்தை, தான் அறிமுகமான தினத்திலிருந்தே பெறத் துவங்கி விட்ட இளையராஜா, எண்பதுகளின் ஆரம்பத்தில் தென் இந்தியாவின் பெருவிருப்பத்துக்குரிய திரை ஆளுமைகளில் ஒருவரானார். அவருடைய இணைப்பும் இசையேற்பும் நிச்சயமான வெற்றியின் அச்சார நம்பிக்கையாக முன்னெழுந்தது.

இதனை ஒட்டிய காலத்தில் மிக அதிகமான படங்களுக்கு இசைப் பொறுப்பை ஏற்கலானார் ராஜா. திரை இசையில் பிஸியாகும் ஏற்ற காலத்தில் பொதுவாக இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் எல்லாம் பாடல் இசை மாத்திரம் ஒருவர் ஏற்றால் பின்னணி இசையை வேறு நபர் வசம் ஒப்படைத்து ரீ-ரெகார்டிங் செய்துகொள்வது இன்றளவும் நிலவுகிற முறைமை தான். மலையாளத்தில் கூட அப்படிப்பட்ட படங்கள் இன்றளவும் உண்டு. தமிழில் இசை என்றாலே பின்னணி இசையும் பாடல்களுமாக மொத்தமும் ஓருருவாக்கம் செய்யப்படுவதே வழக்கமாக இருந்தது. இளையராஜாவும் அதையே பின்பற்றினார்.

வார்த்தைகளை அவற்றுக்கு உண்டான இசை ஒழுங்குடன் பாடுவது பாடகர்களின் ஆதாரகுணம் மற்றும் பாடல்களின் தேவையும் அதுவே. குரல் இனிமை வார்த்தைப் பிசகுகளை மறக்கச் செய்வது பாடல் அனுபவத்தின் போதைத்துவம் மிகத் தொடங்குகிற அதன் கணப் பரிமாற்றங்களில் ஒன்றெனக் கொள்ளப்படும். பாடகர்கள் தத்தமது தாய்மொழி தவிர்த்து மற்ற மொழிகளைக் கையாளும்பொழுது, அவற்றின் தொனி விலகல், உச்சரிப்பு நகர்தல், மழலைப் பிசகு ஆகியவை பாடல் உருவாக்கத்தின் இனிமையை அதிகரிப்பதற்கான உருவாக்க முறையாகவே அனுமதிக்கப்பட்டன.

திரை உலகத்தில் பெரும்பான்மை வரவேற்கிற எதுவும் அடுத்த காலத்தின் தயாரிப்பு முறையாகவே பரிந்துரைக்கப்படுவதும் பின்பற்றப்படுவதும் சினிமாவின் வழக்கம். பல்வேறு இசைப் பாணிகள், இசை முறைமை இவற்றில் ஏற்படுகிற கூட்டுருவாக்க – சமரசங்கள் யாவற்றையும் அனுமதித்தபடி ஒரு பொதுப் பெரும்பான்மை விருப்பத் தேவையை நியாய – முன்வைத்தல் ஆக்கியபடி செய்யத் தலைப்படுகிற கலையுருவாக்கம் பின்னதான காலமாற்றத் தேவையாகவும் விரியும்.

எப்படி ஒரு சினிமாவின் ஒட்டுமொத்த வெற்றி தோல்வியைக் குறித்த நூறு சதவிகித முன் யூகத்தை சாத்தியமாக்க முடியாதோ, அங்கனமே அதன் உப கலை சேர்மானங்களின் எடுபடல்களையும் நிராகரிப்புகளையும் முன்தீர்மானம் செய்ய முடியாது. இது காலமும் இரசிகனும் தன் கையில் வைத்திருக்கும் கலை மீதான அதிகாரங்களில் தலையாயது. இங்கே படைப்பின் பொறுப்பேற்றல் என்பது ரசனைக்கான இடுபொருளைத் தயாரித்து அளிப்பதில் அடங்குகிறது. அந்த வகையில் ஒரு பாடலின் வெற்றி தோல்விக்கு அக – புற காரணிகளில் அதன் பின்னிசை, படச் சூழல், மைய இசை, பாடலின் வரிகள், தொனி, லயம், குரல் என்றெல்லாவற்றின் இயக்கமும், கூட்டு மற்றும் தனிக் காரணிகளாக அமையக்கூடும். பாடலின் நீர்மமாகவே அதன் குரல் விளங்குகிறது. இசையும் வரியும் பாடலுக்கு உள்ளே வெளியே தையல் இழைகளைப் போல் குரலால் நிகழ்கிறது. குரலின் மூலமாகவே இசையும் வரிகளும் கலக்க வாய்க்கிறது. ஒரு பாடல் இசைஞன் மற்றும் கவிஞன் ஆகியவர்களுக்கு மத்தியில் முதலில் பாடகனின் பாடலாகவே அறியப்படுகிறது.

எந்தப் பாடலை யார் பாடவேண்டும் என்பது இசையமைப்பாளனுக்கு இருக்கும் சுதந்திரம். அவருடைய முதன்மை உரிமைகளில் ஒன்று. தனக்கு முன் இசை வரலாற்றில் கண்டசாலா, ஜி.கே.வெங்கடேஷ், எம்.எஸ்.விசுவநாதன் ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் தனித்த தங்கள் குரலால் பாடிய பாடல்களுக்காக, பாடகராகவும் அறியப்பட்டவர்கள். இந்த இடத்தில் இவர்களுக்கு அடுத்து, தன் இசையின் காலத்தைத் தொடங்கிப் பெருவெற்றி அடைந்த இளையராஜா, பாடகராக தன் சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் அடுத்தடுத்த புதிர்க்குறிப்புகளைத் திறந்தபடி அடையத் தலைப்படுகிற அனுபவ மொத்தத்தின் பெருங்கால நிகழ்தல் ஒன்றென நிகழ்ந்தன.

பாடகர் இளையராஜா பாடலற்ற பாடல்களைத் தேர்வுசெய்து, தான் அதைப் பாடுவதன் மூலமாக, நுட்பமான, கடினமான, எளிதில் கடக்கவியலாத சிடுக்குகளுடனான பாடல்களைத் தனக்குத் தானே அளித்துக்கொண்டார். முதல் ஐந்து வருடத்தில் அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கைக்குச் சம்மந்தம் இல்லாமல் பிற்காலங்களில் அவர் பாடிய பாடல்களின் தொகை அதிகரித்தது. நிறைய பாடல்களைப் பாடினார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்தவர் என அறியப்படுகிற ராஜா, என் கணக்கின்படி முன்னூற்றுக்கும் அதிகமான பாடல்கள் பாடியிருக்க முடியும்.

ராஜா சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் எப்படிப்பட்டவை?

ஓர் அதிர்ச்சிக்குப் பின்னதான அமைதியை அவருடைய குரல் பொதுவில் கொண்டிருந்தது. அனுபவத்தின் நிம்மதிச் சான்றெனத் தன் குரலின் பாடல் தோன்றல்களை நிகழ்த்த முனைந்தார். அவருடைய சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் அவரது இசையை இரசிக்கிற இரசிகர்களின் மத்தியில் கண்மூடித்தனமான வழிபாட்டுப் பலனாகவே மாறத் தொடங்கின. டைட்டில் பாடல்கள், சோகப் பாடல்கள், வாயசைப்பின்றி கதையோடு சேர்ந்து கலக்கிற பின்புலப் பாடல்கள், நாயகனைத் தவிர்த்த பிறருக்கான பாடல்கள், குழுப் பாடல்கள், கேலிப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், தத்துவப் பாடல்கள் என அத்தனை வகையிலும் ராஜாவின் பாடல்கள் தோன்றின.

தனி சோகப் பாடல்கள், துக்கத்தைப் பிரதிபலிக்கிற பாடல்கள், ஏகாந்தத்தில் அலைந்து உருகுகிற விரக்திப் பாடல்கள், தத்துவம் பகிரும் பாட்டுகள், கேலிப் பாடல்கள், நண்பர்களுக்குள் பாடும் உற்சாக கானங்கள், நாயக அறிமுகப் பாட்டு, டூயட் பாடல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட நாயகர்கள் இணைந்து பாடும் நட்புப் பாடல்கள், போட்டிப் பாடல்கள், ஆன்மீகப் பாடல்கள், டைட்டில் சாங்ஸ் மற்றும் சிறுதுளிப் பாடல்கள் என்று நெடியதோர் பாடல் பட்டியல் பாடகர் இளையராஜாவின் பாடல்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. கன்னடம், தெலுங்கு உட்பட வேற்று மொழிகளிலும் ராஜா பாடியிருக்கிறார்.

எழுத்தாளர் அழகாபுரி அழகப்பன் எழுதி, தேவராஜ் மோகன் இயக்கிய ‘சக்களத்தி’ என்கிற படத்தில் (1979) ‘வாடை வாட்டுது’ என்ற பாடலை ராஜா பாடினார். அதே வருடம் ‘பகலில் ஒரு இரவு’ படத்தில் ‘தோட்டம் கொண்ட ராசாவே’ பாடல் மற்ற பாடல்களோடு தானும் பிரபலமானது. ‘கவரிமான்’ படத்தில் ‘உள்ளங்கள்’ எனத் தொடங்கும் பாடல் ராஜா பாடிய ஆரம்பகாலப் பாடல்களில் ஒன்று. இன்றளவும் அவரது இரசிகர்களால் கொண்டாடப்படுகிற இரண்டு முக்கியப் பாடல்கள் ‘தைப்பொங்கல்’ திரைப்படத்தில் வருகிற ‘கண்மலர்களின் அழைப்பிதழ்’ மற்றும் ‘ஆட்டோ ராஜா’ திரைப்படத்தில் ‘சந்தத்தில் பாடாத கவிதை’ இரண்டுமாகும். மணிப்பூர் மாமியார் படம் வெளியாகவில்லை. அதில் ஒரு டூயட் பாடல் உண்டு. ரசிகனே என் அருகில் வா… ரசிக்கவா எந்தன் மெல்லிசை அருகிலே உன் அணைப்பிலே இருக்க வேண்டும் நான் தினம்தினம்” என்று அதன் வரிகள் அமைந்தன. இன்றும் கேட்கப்படுகிற ரேடியோ கானம் இந்தப் பாடல்.

‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் ராஜா பாடிய இரண்டு பாடல்கள் அந்தக் காலகட்டத்தைக் கலக்கிய பாடல்களாயின. ஒன்று ‘ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ என்ற பாடல். இன்னொன்று, ‘சாமக்கோழி ஏ கூவுதம்மா’ பாடல் ஆரம்பகாலத்தில் ராஜா பாடிய முக்கியமானதொரு ஜோடிப் பாடல் இதனை அவர் எஸ்.பி.சைலஜாவோடு சேர்ந்து பாடினார். மித மயக்கப் பாடலான சாமக்கோழி பாடலின் வரிகளும் அதன் இசை பெருகிய விதமும் ஏக்கமும் தயக்கமும் ஒன்றிணைந்த இசைக் கலவையாகப் படர்ந்தது. இந்தப் பாடலின் நடுவே தன் குரலால் இணைந்து கொள்வார்

மொத்தமுள்ள 03.51 நிமிடங்களில் முதல் 02.18 நிமிடங்கள் முதலிசை மற்றும் சைலஜாவின் தனிக்குரல் மட்டுமே ஒலிக்கும். 02.11இல் சேர்ந்து கொள்வார் ராஜா

அந்த வரிகள், “பாடலுக்கு ராகமின்றி காத்திருந்தேன் நானும்” என்ற இடத்தில் “ராகத்துடன் பாவம் கொண்டு ஓடிவந்தாய் நீயும்” என்ற வரியுடன் சேர்ந்தொலிக்கும் ராஜாவின் குரல். இந்தப் பாடலின் இசையை மட்டும் எடுத்தொலித்தால் நின்று நிதானித்து ஒலித்து நிறைந்து மறுபடி சுழன்று தொடங்கும் சுழலிசைப் பாடல் என்பதாக விரியும். முழுமையான சுழலிசைப் பாடல்கள் தமிழில் குறைவு. ராஜாவின் முதல் சில சுழலிசைப் பாடல்களில் இது ஒன்றாக அமைந்தது.

ருசி கண்ட பூனை படத்தில் ஒரு குழப்பமான சூழலில் ஒலிக்கும் பாடலாக ‘அன்புமுகம் தந்த சுகம்’ பாடல் இடம்பெற்றது. ஒலிக்கும் ரேடியோ “பாடுபவர் இளையராஜா” என்று அறிவிக்கும். அங்கே இருந்து பாடல் சுழன்று தொடங்கும். அந்தப் பாடலின் பின் இசை நகரும் திசை அத்தனை அற்புதமான கோர்வைகளால் நிரம்பி இருந்தது. சரணம் முடிவடையும் இடத்தில்

“நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
நீ சொன்ன வார்த்தைகள் போனது காற்றினிலே”

-என்று முதல் சரணத்தில் வரும்.

அடுத்ததில்,

“நான் உன்னை நேசிக்க நீ என்னை வஞ்சிக்க
காலங்கள் போனது யாரிடம் கேட்பதம்மா”

என்று ஒலிக்கும்.

இந்த இரண்டு சரண ஈற்று இருவரிகளை இளையராஜா கடந்த விதமும் கையாண்ட அழகும் அலாதியானது. தேவைப்படுகிற இடங்களில் எழுந்தமர்கிற மாயலாகிரியாகவே இளையராஜாவின் பல பாடல்கள் தோன்றின. அவரது குரல் கூடி ஒலிக்கும் இசைக்கருவி போலவே இயங்கியது. இசைக்கருவிகள் அவருடைய பாடல்களில் உடனொலிகளாக மாற்றம் கண்டன. இசைஞராக மட்டுமல்லாது குரலாளராகவும் ராஜாவை விரும்புவதற்கான காரணங்களாக அவர் இசைத்துப் பாடிய பாடல்கள் நின்றொலித்தன.

எந்தப் பாடகருக்கும் பாடக் கிடைக்காத பாடல்கள் இருந்தே தீரும். பாடத் தரப்படாத பாடல்கள் அல்ல. குரலுக்கும் பாடலுக்குமான பந்தப் பொருத்தம் இப்படியான பாடல்களைத் தீர்மானிக்கலாம். இது நிச்சயமாக பாடகருடைய பாடல் திறமை – இயலாமை சார்ந்ததன்று. சின்னஞ்சிறிய பாடல் தொகையறா தொடங்கி பல்வேறு துண்டங்களாகப் பிரித்துப் பகுக்கப்பட்டு படத்தில் இடம்பெறுகிற பாடல் பல்லவி அல்லது சரணம் என்றெல்லாம் பிரித்தறிய முடியாத நேர்சில வரிகள் எனப் பாடலாக்கத்தின் உள்ளும் புறமும் பல்வேறு காரணங்கள் இருந்துவிடும்.

தர்மபத்தினி (1986) என்ற படத்தில் இடம்பெற்ற ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ என்ற பாடல் மற்றுமொரு பாடலாகக் கடந்து செல்வதற்கான அத்தனை சூழல்பொருத்தமும் வாய்த்த பாடல் தான். அதைப் பாடியவர் இளையராஜா. கண்மணி சுப்பு எழுதிய இந்தப் பாடல் எண்பதுகளின் அதிபிரபலப் பாடல்கள் என்று பத்துப் பாட்டைத் தேர்ந்தெடுத்தால் அதில் இடம்பெறும். எஸ்.ஜானகியும் இளையராஜாவும் பாடிய இந்தப் பாடல் அடைந்த தூரம் மிகப் பெரியது. பாடலின் காட்சியாக்கத்தில் இளையராஜா கச்சேரியில் பாடுவதாகத் தான் தொடங்கும். மிக நீண்டதொரு முன்னெடுப்புக்குப் பிறகு பாடலின் தொடக்க இசை உற்சாக ரீங்காரத்தை இசைத்தது. நேரே பாடல் சென்றிறங்கும் இடம் பூமேடையாயிற்று. நான் தேடும் செவ்வந்திப் பூவிது என்று ராஜா தொடக்கத்திலிருந்தே அழுத்தமும் திருத்தமுமாய்க் கையாண்டது வசீகரித்தது.

இளையராஜா தோன்றிப் பாடும் பாடல் என்று ரசிக மனக் குறிப்புகளில் இடம்பெற்ற இந்தப் பாடல். முன்பே இளையராஜா பாடிய பல முக்கியப் பாடல்கள் மாபெரும் பிரபலத்தை அடைந்திருந்த போதும் (உதா: ஒரு ஜீவன் அழைத்தது, விழியில் விழுந்து இதயம் நுழைந்து) ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ அவற்றையெல்லாம் விஞ்சியது. முன்பே சொன்னவகையில், ‘மடைதிறந்து தாவும் நதியலை நான்’ பாடலில் ராஜா தன் முகம் காட்டி ரசிகர்களிடம் அதற்குக் கிடைத்த வரவேற்பும் ராஜாவுக்கு இணக்கமும் நெருக்கமுமான இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஒரே ஒரு ஃப்ரேமிலாவது அவர் தோன்றுவது படத்தின் காட்சி அனுபவத்தில் ஒரு அலையை ஏற்படுத்தும் என்று எண்ணியிருக்கக் கூடும்.

ராஜா ஆரம்ப நாட்களில் தான் பாடத் தேர்ந்தெடுத்த பாடல்களுக்கும் எண்பதுகளின் பிற்பகுதியில் நான் தேடும் செவ்வந்திப் பூ பாட்டுக்கப்பால் அவர் பாடியவற்றுக்கும் இடையில் சில வித்தியாசங்கள் இருந்தன.

கார்த்திக், முரளி, ரஜினிகாந்த், விஜயகாந்த் எனப் பல நடிகர்களுக்குப் பொருத்தமான குரல்களில் ஒன்றெனவே ராஜாவின் குரல் அமைந்தது என்றாலும் பாடி நடிக்கக் கூடிய திறன் பெற்றிருந்த கமலஹாசனுக்குப் பெரும்பாலும் நேரடி வாயசைப்புக்கான பாடல்களை அதிகம் பாடவில்லை. மாண்டேஜ் வகைப் பாடல்கள் இருக்கின்றன. இப்படி ஏற்பும் விலகலுமாகத் தன் பாடல்களைக் குறித்த மிக நுட்பமான முடிவுகள் ராஜாவிடம் இருந்தன. பெரும்பாலும் அவர் பாடிய பாடல்கள் பிரபலமடைந்ததற்குத் தன் குரலுக்கேற்ற பாடல்களைத் தேர்வு செய்த அவரது கவனம் முக்கியக் காரணம்.

இவற்றினூடாகப் பயணித்தால் ராஜா பாடிய பல பாடல்கள் பாடலற்ற பாடல்கள், அவற்றில் படத்தில் வலிந்து உருவாக்கம் செய்யப்பட்ட சில பாடல்கள் இருந்தன. அவற்றை ராஜா பாடியதாலேயே அவை தனிக் கவனம் பெற முடிந்தது. பாடல்கள் சில அவற்றின் பொது வடிவத்திலிருந்து சற்றே விலகி ஒலித்தன சற்றே புதிர்மை மிக்க பாடல்கள் அவை, ஒரு எதிர்பாராமை, அ-நிச்சயம், சட்டெனச் சுழிந்து பூர்த்தியடைவது, தொகையறா பாடல், இடையிடையே பயன்படுத்தப்படுகிற துளிப்பாக்கள், நாயகத்தைத் தாண்டிய பிற பாத்திரங்களுக்கான பாடல்கள், அவற்றில் அடக்கம். எதிர்பாராத நடிகர்களுக்கு – ஜனகராஜ், நாஸர், மணிவண்ணன் எனப் பலருடைய வாயசைப்புக்கு ராஜாவின் குரல் பொருந்தி நின்றது.

சோகத்தின் வகைமைகள், சோகம் என்பதன் வழமை அர்த்தம் தாண்டி, அமைதி, நிச்சலனம், வன ஆழம், ஏகாந்தம், இருள், பயம், அனாதித்துவம், அந்தகாரம், சூன்யம், கனவு எனப் பல தொடர்புடைய அடுத்தடுத்த மற்றும் வேறுபட்ட உணர்வுகள் மிகுந்து ஒலிக்கும் பாடல்களைத் தன் சொந்தக் குரலில் தோற்றுவிக்க விழைந்தார். அவருடைய குரலில் பொது இயக்கமாக சோகமும் தத்துவமும் விளங்கின. மற்ற எல்லாம் இவற்றுக்கு அடுத்து தான்.

‘காட்டுவழி போற பொண்ணே கவலப்படாத’, ‘தாயென்றும் தந்தையென்றும் பாடும் தாலாட்டு‘, ‘ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே‘ இந்தப் பாடல்கள் மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை, இதன் பல்லவி மடங்கிச் சுழிந்து, மறுபடி தன்னைத் துவக்கிக்கொள்ளும் பாணி. ‘தனியானால் என்ன – துணை இங்கே – நான் பாடும் பாட்டுண்டு’ என்பது ஒரு துண்டித்தலுக்குப் பின்னதான நிதானத்தோடு தொடங்குவது, ‘மம்பட்டியான் பேர – சொன்னா – புலி ஒதுங்கும் பாரு’, ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ இந்தப் பகுதிகளின் விள்ளல் தன்மை, ராஜாவின் தெரிவுகளில் ஒன்றானது.

நெடிய ஆலாபனை உள்ள ‘வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்’ பாடலின் தொடக்கம், மந்திரச் சொற்களின் உச்சாடனம் மிகுந்த ‘ஜனனி ஜனனி’, ‘தேவனின் கோவில்’, ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’, நின்று ஒலிக்கக்கூடிய வடமொழி மந்திரச் சொற்கள் மிகுந்த பாடல்கள். இசையில் மேற்கத்திய கோர்வைகளுக்குக் கொடுத்த அதே இடத்தை, கர்னாடக சங்கீத மெட்டுகளிலும், நாட்டுப்புறத் தொன்ம இசைச் சரடுகளைப் பயனுறுத்துவதிலும் புதிய அதிகம் பயன்படாத இசைக்கருவிகளை எடுத்தாள்வதிலும் காட்டிய ஆர்வத்தைப் போலவே தன் குரலை விதவிதமான பாடல்களுக்கு அணிவித்துப் பார்த்து, பலதரப்பட்ட பாடல்களை, உணர்வுகளை, தன் குரல்வழி பரீட்சார்த்தம் செய்து பார்த்த வகையில் பத்துக்கும் மேற்பட்ட வகைமைத் தேவை எப்போதெல்லாம் நேர்கிறதோ, அப்போதெல்லாம் தன் குரல் பாடல்களைத் தோற்றுவித்தார் இளையராஜா.

‘சங்கத்தில் பாடாத கவிதை’ கன்னடத்திலிருந்து தமிழுக்கு மீவுரு செய்யப்பட்ட ‘ஆட்டோ ராஜா’ திரைப்படத்தில் இளையராஜா முதலில் இசைப் பொறுப்பை ஏற்றார், ஒரே ஒரு பாடலை மட்டும் ஈந்த பிறகு, அந்தப் படத்திலிருந்து விலகினார். அந்த ஒரே ஒரு பாடல் தற்செயலாக இளையராஜா ஜானகியுடன் பாடிய சொந்தக் குரல் பாடலாகவே படம் வெளியான காலத்தைத் தாண்டி, பின்னொரு காலத்தில் அதிகப் பிரபலம் அடைந்தது.

அழுத்தமான தீர்மானம் ஒன்றின் இசைவழிப் பெருக்கமாகவே சங்கத்தில் பாடாத கவிதை பாடலை சுட்ட முடிகிறது. அத்தனை ஆழத்திலிருந்து ஒரு வணிக சினிமாவின் டூயட் பாடலைத் துவங்குவது கற்பனை செய்து பாராத தனித்துவம். இளையராஜா பாடிய ஆரம்பகால சொந்தக் குரல் பாடல்களில் இந்தச் சங்கத்தில் பாடாத கவிதை பாடல் மாபெரும் தனிக்கிறக்க ஸ்கோர் ஆகவே உறைகிறது. இன்றளவும் இந்தப் பாடல் மொழிகளினூடாக இந்திய இசை ரசனை வெளியில் அடைந்திருக்கக் கூடிய இடமானது வெகு அபூர்வமான சிறப்பான ஓரிடம். இந்தப் பாடலின் முதல் வரியை உச்சரிக்கும் போதே இசை நிகழ்ச்சிகள் ராஜாவின் கட்டளைக்கு கண் இமைக்காமல் அப்படியே உறைந்து சட்டென்று மௌனிப்பதைப் பல இடங்களில் பார்க்க முடியும்.

இந்தப் பாடலுக்குள் எதோவொரு எதிர்பாராமையும் சன்னமான வீழ்தலின் கேவலும் இருப்பதை உணரலாம். சேர்ந்து பாடிய எஸ்.ஜானகியின் குரலில் இருக்கக்கூடிய கொண்டாட்டத்தை உறுத்தாமல், அதே சமயம் ஏற்காமல், தன் குரலால் அந்த உற்சாகத்தை அலசி சற்றே அதைக் கட்டுப்படுத்திப் பாடினார்  ராஜா. இன்றைக்கும் இந்தப் பாடல் ராஜா ரசிகர்களின் பெருவிருப்பப் பாடல்களில் முதல் வரிசைப் பாடலாக விளங்குகிறது.

பாலுமகேந்திரா இயக்கிய மலையாளப் படமான ‘ஓளங்கள்’ (தும்பி வா தும்பக் குடத்தின்), அதே பாலுமகேந்திராவின் தெலுங்குப் படமான ‘நீரக்ஷனா’ (ஆகாசம் ஏனாதிதோ) மற்றும் அவரது ஹிந்திப் படமான ‘அவுர் ஏக் ப்ரேம் கஹானி’ (சண்டே தோ…) ஆகியவற்றில் பல்வேறு காலகட்டங்களில் ராஜாவால் மறுவுரு செய்யப்பட்டது. அந்தப் பாடல்கள் எவற்றையும் அவர் பாடவில்லை. இதில் இன்னொரு வசீகரம் ‘நீரக்ஷனா’ திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, இன்னுமொரு முறை கூடுதலாக இதே பாடல் (நீர்வீழ்ச்சி தீமூட்டுதே) தமிழில் மொழிமாற்றப்பட்டது.

இவை ஒரே சாயலில் தென்படுகிற உடன்பிறந்தோரின் முகங்களைப் போல் ஒற்றுமைகளாலும் வேற்றுமைகளாலும் நிரம்பின. இடையிசை பாடல்வேகம் தொனிமாற்றம் குரலின் தன்மை என எல்லாமே எல்லா வெர்ஷன்களிலுமே கவர்ந்தன. இத்தனை பரந்த வெற்றிப் பரப்பென்பது பாரம்பரிய இசையில் ஒரு கீர்த்தனையை எடுத்தாளும் போது அதன் செல்திசைக்குக் கிடைக்கிற அத்தனை மாறுபட்ட நிரவல்-நகர்தல்-குவிதல்-கலைதல் என அனைத்தும் ஒரு திரைப்பாடலின் பன்முக வெர்ஷன்களில் சாத்தியமாவது ரசம்.

‘தைப்பொங்கல்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மலர்களின் அழைப்பிதழ்’ பாடல் ஒரு ஆழ்ந்த அமைதியில் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கக்கூடிய ஒரு நினைவுப் படகு போல நிலைத்த செறிவான உணர்வு ஒன்றை எப்போதும் தோற்றுவிப்பது. ‘கழுகு’ திரைப்படத்தில் ‘பொன்னோவியம்’ பாடலும் இவற்றோடு சேர்த்துச் சொல்லத்தக்கது. யூகிக்க முடியாத பாடல்களை தன் குரல் பாடல்களாக ராஜா உருவாக்கினார். ‘ஆத்தாடி பாவாட காத்தாட’ என்கிற ‘பூவிலங்கு’ படப் பாடல் பெருகும் ஆனந்த இசையோடு தொடங்கி, நீராழத்து வேரெனத் தடம் மாறி, ஒரு மென்மையான தாளக்கட்டோடு உற்சாகக் கொண்டாட்ட வரிகளைத் தன் விகசிப்பான குரலில் பாடினார் இளையராஜா. இன்றளவும் ஆத்தாடி பாவாடை காத்தாட பாடலானது ராஜா ரசிகர்களின் பெருவிருப்பத் தனிப் பாடலாக செல்வாக்குடன் திகழ்கிறது.

அவருடைய பாடல்கள் குரல் தொட்டு அவர் எழுதிய கானக் கையொப்பங்களாகவே மாறின. இளையராஜா பாடிய பல பாடல்கள் சன்னதத்தின் அமைதியும் நிர்க்கதியான மனம் தெளிவாகத் தொடங்குகிற தூய காற்றின் வருகைக் கணமொன்றின் வருடலாகவே நிகழ்ந்தேறின. பலரும் அவருடைய பாடல்களைத் திரைப்படத்தின் கதை மற்றும் காட்சி ஆகியவற்றிலிருந்து தனியே எடுத்துச் சென்று தங்கள் மனங்களில் பதிந்து கொண்டார்கள். பெரியதோர் நிகழ்வாகவே ராஜாவின் பாடல்கள் ரசிகர்களது வாழ்வுகளில் ஒலிக்கலாயிற்று. சுருங்கச் சொன்னால், இன்மையிலிருந்து நிம்மதி நோக்கிய ஒளி வருடும் தடமாகவே ராஜாவின் குரல் பாடல்களை உருவாக்கியது.

அப்படியான பாடல்கள் ராஜா தன் குரலால் நேரடியாக ரசிக மனங்களோடு உரையாடக் கூடிய தனிமொழியாக உருப்பெற்றது. ராஜாவின் பெயர் தோன்றும் இடங்களில் குவிந்த கரவொலி திரைக்குப் பின்னால் ஆளுமை செலுத்தக் கூடிய திறனுருக்களில் இயக்குனர்களுக்கு மட்டுமே அதுவரை கிட்டியிருந்தது. முதன்முதலாக அப்படியான கரவொலிகளைத் தனதாக்கி ரசிகர்களின் நிறை கவனம் பெற்ற திறனாளராக இளையராஜா மாறினார்.

‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ பாடலுக்குப் பின்னால் அடுத்துவந்த ஏழாண்டுக் காலம் பல திரைப்படங்களில் டைட்டில் பாடல்களை இளையராஜா பாடினார். ‘பணக்காரன்’ திரைப்படத்தில் ‘மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ பாடல். ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ‘கத கேளு கத கேளு’ பாடல் அவற்றில் சில. டைட்டில் பாடல் என்பது பெரும்பாலும் மாண்டேஜாகக் கதை நகர்வின் ஊடே நகரத்தக்கப் பாடல்களாக அமைவது வழக்கம். குரலுக்கும், பாடுகிற முகத்துக்குமான பொருத்தம் குறித்த சிக்கலற்ற சுதந்திரத்தோடு இத்தகைய டைட்டில் பாடல்கள் அமைந்தன.

எண்பதுகளின் பிற்பகுதியில் தாய்மையைப் போற்றுகிற பல பாடல்கள் ராஜா குரலில் உருவாகின. சொந்தமென்று வந்தவளே ஆத்தா, பெத்த மனசு பித்தத்தில் பித்தமடா, என் தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே, அம்மான்னா சும்மா இல்லைடா, பொன்னப் போல ஆத்தா எனப் பல பாடல்கள் ராஜாவின் முத்திரைப் பாடல்களாக உருமாறின. ‘ராஜா’, ‘ராசா’ எனும் சொற்கள் நகரவாழ்விலும் கிராமப்புறங்களிலும் அதிகம் புழங்கிய காலம் ஒன்றில் ராஜய்யா என்கிற இயற்பெயர் கொண்ட இளையராஜா என்கிற புனைப்பெயர் ஏற்ற அவரது வெற்றிகரத்தின் செல்லப் பெயராகவே ராஜா எனும் சொல் மாறியது. பெயரில் இளையராஜா என்று இருந்தாலும், இன்னொரு பெரிய ராஜா யாருமற்ற ஒரே ராஜாவாக அவர் பார்க்கப்பட்டதன் ஆரம்பம் ராஜா எனும் பெயர்ச்சொல் மாறிற்று.

‘தேடிவந்த ராசா’, ‘ராஜா ராஜாதான்’, ‘என்னைப் பெத்த ராசா’. ‘ராசாவே உன்ன நம்பி’, ‘எல்லாமே என் ராசா தான்’ எனப் பல படங்களின் தலைப்புகள் ராஜா என்பதன் பயனுறுத்தலோடு நிகழலாயின. முரளி, கார்த்திக், ராமராஜன், ராஜ்கிரண், அர்ஜுன் எனப் பல நாயகர்களுடனான இளையராஜாவின் காம்பினேஷன் ராஜாவுக்கானதாக உற்று நோக்கப்பட்டது. எண்பதுகளின் தமிழ்த் திரைக்கதை முற்பகுதியில் மின் இணைப்பு தரப்படாத நீண்ட வயர்களுடனான மைக்கைப் பிடித்துக்கொண்டு பெரிய மேடையில் தன்னந்தனியாகவும் கூட்டத்தோடும் இணைந்து வலம் வந்து, பாடி ஆடி, அதன் மூலமாக, பாடகன் என்கிற பாத்திரமாக நாயக வடிவம் புனையப்பட்ட கதைகளால் அதிகம் உருவாக்கப்பட்டது. அதன் இரண்டாம் பகுதியில் கிராமிய, நகர, பாடல்கள் சார்ந்த பல்வேறு கதைகளாக விரிவாக்கம் அடைந்தது.

எண்பதுகளின் இசை முகமாக திரைப்படங்களில் உள்ளும் புறமும் இளையராஜா பேருருக் கொண்டார். பல படங்களின் போஸ்டர்களில் ‘இசைஞானி’, ‘ராகதேவன்’, ‘மேஸ்ட்ரோ’, ‘இளையராஜாவின் இசை மழையில்’ என்று ராஜாவின் முகத்தைத் தனித்துத் தோற்றுவித்து, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டன. இளையராஜா ஓவியங்களிலும், திரைப்படத்தின் காட்சிப் புலங்களிலும், பேனர்களிலும், பட விளம்பரங்களிலும் எங்கும் நிறைந்து ததும்பலானார். படத்தின் வசனங்கள், பாத்திரங்கள், இளையராஜா இசை குறித்து எதாவதொரு இடத்தில் குறிப்பிடுவது அதிகம் நிகழ்ந்தது.

படத்தின் பெருவெற்றிப் பாடல் ஒன்றை இளையராஜா தன் குரலில் பாடி அவை கேஸட்டுகளில் மட்டும் இடம்பெற்றன. தன் ரசிகர்களுக்கான ராஜாவின் பிரத்தியேகப் பரிசு. எனவே அந்தப் பாடலில் படத்தில் இடம்பெறும் பாடகர்-வெர்ஷனை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டு, அதன் படத்தில் இடம்பெறாத ராஜா-வெர்ஷனை, அவரது தீவிர விசிறிகள் கொண்டாடினர். அழுத்தம் திருத்தமான ராஜாவின் உச்சரிப்பும், அவருடைய பாடல்களில் தனித்துப் போற்றப்பட்டது.

அவருக்குப் பின்னால் அறிமுகமான இசையமைப்பாளர்கள் பலரும் சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் பெரும் பட்டியல் ஒன்று உண்டு என்றாலும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் அதிகப் பாடல்களைத் தன் குரலில் பாடிய இசையமைப்பாளராக இளையராஜாவின் பெயரை முதலாவதாக எழுதும் வண்ணம் எண்ணிக்கையில் அதிகமான பாடல்களை, பல வகைகளில் பாடியிருப்பவர் இளையராஜா. தொண்ணூறுகளுக்கு அப்பால் ராஜா பாடிய மேலும் பல பாடல்கள் அவரது தனிக்கோர்வை ஆல்பங்கள் மற்றும் ஆன்மீக ஆல்பங்கள் ஆகியவை குறித்து இன்னுமோர் அத்தியாயத்தில் காணலாம்.

‘பாட்டாலே புத்தி சொன்னார்’ பாடலின் சரணம் இப்படி நிறையும்.

“எனக்குத் தலைவர்கள் என் ரசிகர்கள், அவர் விரும்பும் வரைக்கும் விருந்து படைப்பேன்”

இது இசையமைப்பாளராக மட்டுமல்ல பாடகராகவும் தன் மனதில் ராஜா எழுதிக் கொண்ட வரிகள் என்றே கருதலாம். அரியவகை குரல் ஒன்றைக் கொண்டு பலதரப் பட்ட பாடல்களைப் பாடியது இளையராஜாவின் சாதனைகளில் இன்னுமொன்றாக இருக்கலாம். அவருடைய சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் பலவற்றைத் தங்களுடைய வாழ்க்கையின் ஊடாக நிகழ்ந்த சொந்த நிகழ்வு ஒன்றெனவே மனதின் அதி உன்னத இடமொன்றில் அவற்றை இருத்தி முதல் முறை போலவே கேட்கும் ஒவ்வொரு முறையும் அவற்றின் முன் சரணடைந்து மனம் கசிந்து உருகி ஆற்றுப்படுகிற ஆயிரமாயிரம் ரசிகர்களின் மாறாவிருப்பமாகத் தன் குரலைக் கொண்டாட வைத்த சாதனையானது நிச்சயமாக வேறாரும் செய்து பார்க்காத வசிய முனைவு தான்.

-தொடரலாம்.

*

முதற்பகுதி: இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்