வடிவத்துக்கு எதிரான வடிவம்: செர்ஜி பராஜனோவ் திரைப்படங்கள்

by எம்.கே.மணி
0 comment

ஏற்கனவே சிறிது காலத்திற்கு முன்பு மாதாந்திர திரைப்படத் திரையிடலில் இரண்டு படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது இந்தக் கட்டுரைக்காக அவற்றையும் சேர்த்து நான்கு படங்கள். மிக மெதுவாகத் தான் என்றாலும் ஒன்று புரிந்தது. இப்படங்களைப் பார்ப்பதென்பது அவற்றை முழுமையாக புரிந்துகொண்டு அதன் மீது நமது தீர்ப்பை எடுத்து வைப்பது அல்ல. பார்க்கிற ஒவ்வொரு முறையும் நாம் தான் அதைத் தொகுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலம் தான் அந்தப் படத்தின் இளமையை நமது மனதில் காப்பாற்றி வைத்திருக்க முடியும்.

அதுவும் முழுமை கூடியதாக இருக்க முடியாது. எப்போதேனும் நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு விண்மீனைப் போல ஒளியால் மோதி விட்டு மறைந்து விடலாம். வழக்கமான ஆழ்ந்த வடிவமுள்ள திரைப்படங்களில் புழங்கின அனுபவம், இப்படங்களைக் காணும்போது நழுவியவாறு இருப்பதைத் தவிர்க்க ஒரு வழியும் இல்லை என்பது உறுதி. சொல்லப்போனால், இவைகளைப் பற்றி நான் மறதி வசப்பட்டிருந்தேன் என்பதற்கு மேலே சொல்லி வந்தவைகள் யாவுமே காரணம். இயக்குனர் பெயர் மறக்காது.

செர்ஜி பராஜனோவ் (Sergei Parajanov) மாஸ்டர்களில் ஒருவர். நமக்கு ஈர்ப்பு உண்டாக்கக் கூடிய பல்வேறு சேட்டைகளும் அவரிடத்தில் உண்டு.

செர்ஜி பராஜனோவ்

ஒரு போர் வீரனின் சாகசங்களைக் காட்டிலும் தீரம் மிகுந்த கலைஞர்களை அடைவதில் நமக்கு ஒருவிதமான ஆர்வமுண்டு. சொந்த வாழ்க்கையைச் சிதறடித்தவாறு கலை செய்தவர்கள் எப்போதுமே முன்னோடிகளாக மரணத்துக்கு அப்புறமும் அழைத்துக் கொண்டிருப்பவர்களாக சாஸ்வதம் பெற்றிருப்பார்கள். அரசுகளைப் பகைத்துக் கொண்டிருக்கிறார். சிறையில் இருக்க நேரிட்டிருக்கிறது. பாலியல் நடவடிக்கைகளால் மிகப்பெரிய தனிமை நேரிட்டிருக்கும் என்பது போன்ற நிறைய தகவல்கள் படிப்பதற்கு இருக்கின்றன. எனக்கென்னவோ அவைகளைத் தொகுத்துச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமாக இருக்க முடியாது என்று படுகிறது.

அவரது படங்களின் விவரணைகள், அவரது நேரடியான கண்ணோட்டங்களைப் பிரதிபலிப்பது பற்றி அறிய வருவது இன்னமுமே அவரை அறிந்து கொண்டு வருவதாக இருக்கும். மிக எளிய உதாரணமாக ஒன்றைச் சொல்லுவது என்றால் அவருடைய படங்களின் பல்முனை சட்டகங்களிலும், குதிரைகள் வரும் காட்சிகளில் எல்லாம், அவை சுற்றி வரும் ஒரு பாணியை எளிமையாக கவனித்துவிட முடியும். அதிகாரம் உட்பட்ட எத்தனையோ தலைப்புகளுக்குக் கீழே அவைகள் வட்டமடித்த போதிலும், அவை நமது மனதின் ஒழுங்கை சீர் குலைப்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அது எழுத்தில் முழுமை கொண்டு எழுந்ததே அல்ல. அந்த நிகழ்வு நடந்தேறும் நிலப்பகுதி அல்லது கதாபாத்திரத்தின் ஆற்றாமை, ஆர்வம், ஆத்திரம் இவ்வாறான உணர்வுகளுடன் தொடர்பு கொண்டது. அவர் நமது மனதின் சமநிலையைத் தாக்குவதற்கான ஆயுதங்களை வைத்திருந்தார் எனலாம்.

ஒரு சிறுவன் தனது பால்யத்தைக் கடப்பது என்பது எவ்வளவு கூரியதாக இருக்க முடியும் என்பதை அவர் நமது சுரணையின் மீது மீட்டுவதை The Color of Pomegranates (1969) படத்தின் மூலம் மேலும் ஒரு உதாரணமாக அறிய இயலும். பிற்காலத்தில் உள்மன ஆற்றலுள்ள ஒரு கவி அவனில் இருந்து எழுந்து கொள்ளப் போகிறான் என்பதற்காக அச்சிறுவன் இயல்பாக வேடிக்கைப் பார்க்கக்கூடிய காட்சிகள் அப்படி தொகுக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமான ஒரு கதை சொல்லும் முறையில் நேராத அழுத்தம் பொருட்களாலும், வர்ணங்களாலும், இசையினாலும் மட்டுமின்றி எல்லா திக்குகளில் இருந்து வருகிற குறிப்புகளாலும் சமிக்ஞைகளாலும் நம்மை வந்து சேருகின்றன. அவருடைய படங்களின் பொருளுணர்த்தல் அத்தனையும் இந்தத் தினுசில் சுழல்வது தான் என்றாலும் கூட இந்தப் படத்தில் அது மட்டுமேயாக நிரம்பியிருக்கிறது.

பால்யத்துக்கு அப்புறம் இளமைக் காலம், காதல், மனோ சஞ்சாரங்கள், தப்பிதம், குற்றவுணர்ச்சி, ஆன்மிகம், முதுமை என்று பரந்த கேன்வாசில் சித்திரங்கள் உருப்பெற்று எழுந்தவாறு இருக்கின்றன. இந்தப் படத்தின் படபிடிப்பு வெகு அடக்கமானது. உள்பகுதிகளில் செட்டுகள் வைத்து கூட பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாம். நமக்கு ஒன்றிற்குப் பிறகு மற்றொன்று என்று நகர்கிற ஃபிரேம்களில் தொகுக்கப்படுகிற கற்பனை பிரம்மாண்டமானது. அசைவுகளில் கூட அதுதான்.

ஆயினும் ஒன்றைச் சொல்ல வேண்டும். இடைவெளியே இல்லாமல் நமக்குப் படத்தின் கூடவே நகர்ந்து அதற்குத் தேவையான ஓர் உன்னிப்பு தேவைப்படுவதால் சிறிய களைப்பேனும் உண்டாவதை மறுக்க முடியவில்லை. ஓர் ஓவியக் கண்காட்சியில் வரிசையாக வைக்கப்படிருக்கும் சித்திரங்களை கவனிப்பதில் இருந்து நான் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள முடியும் என்கிற நிலை இதில் இல்லாமல் போவதால் மேற்கண்டதைச் சொன்னேன். ஒருமுறைக்கு இருமுறையாகப் பார்க்கலாம். ஒரே மூச்சில் முடியாது. என்னால் முடியவில்லை. ஆர்மீனியாவின் கவி சயாத் நோவாவின் வாழ்வைச் சொல்லிய படம். பெரும் பாராட்டைப் பெற்ற படம்.

1988-ல் வெளிவந்த Ashik Kerib என்கிற படம் தர்க்கோவ்ஸ்கிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. செர்ஜியுடன் இன்னொரு இயக்குநரும் பணிபுரிந்திருக்கிறார். ஒரு காதலுக்கு நடுவே குழிந்து விடுகிற பள்ளத்தில் பணத்தை இட்டு நிரப்ப, காதலியைக் காத்திருக்க வைத்துவிட்டு புறப்படுகிறான் காதலன். ஆயிரத்தொரு இரவுகள் மட்டுமே இருக்கின்றன. அதற்குள் அவன் திரும்பியாக வேண்டும். ஒரு சிறிய சம்பிரதாய சவால் தான். ஆனால் அந்தக் குறுகிய நாட்களுக்குள் அவனுக்கு முன்னே வாழ்வு பெரு வெள்ளமாக ஓடுகிறது.

ஒரு நாட்டின் ஆழத்திலிருக்கிற கிராமங்களின், அதன் வெகுளி மனிதர்களின் ஆத்மா உச்சரிக்கிற பாடல்கள் உயர்ந்து வருகின்றன. மனசைக் குவிக்கும் தோறும் ஒருமைப்படும் அறிவினால் அற்புதங்கள் நிகழ்கின்றன. அவன் சம்பாதிப்பது பணத்தை மட்டும் அல்ல. அனுபவங்களினால் நிரம்பி வருகிற அவனை பிரமிக்கிற தாயும் ஊராரும் அல்லாது காதலை மட்டுமே நம்பிக் காத்திருக்கிற அந்தப் பெண்ணும் வரவேற்கிறாள். இப்படத்தில் கூட கதை ஒரு சாக்கு தான். இயக்குநர் பேயாட்டம் போட்டிருக்கிறார். மனத்தைக் கிழிக்கிற குரல்களுடன், காட்சி ஜாலங்கள் இணைகிற படைப்பு.

செர்ஜிக்கு தனது கலை நோக்கங்கள் தான் முக்கியம். சினிமா என்கிற தனிப்பட்ட ஊடகத்தின் மீது பெரிய அக்கறை இல்லையென்று சொல்ல முடியாது. அதற்கு மேலும் புரிந்துகொண்டு அதை ஒரு வலுவுள்ள சாதனமாகவும் உபயோகப்படுத்துகிறார் என்பதை Shadows of Forgotten Ancestors என்கிற படம் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இத்தனைக்கும் 1965-இல் அது வெளிவந்திருக்கிறது. ஒரு கதையைப் பற்றிக் கொண்டு அதை நீரோட்டமாகச் சொல்லிக் கொண்டு போகும்போது அளவு மீறுகிற தொழில்நுட்பத்துக்கு எங்கே பொருத்தம் என்பதை அந்த அளவில் பார்த்து பணி புரிந்திருப்பதை வியந்தேன். ஒருவேளை அவருக்கு சினிமா வராது என்கிற பராதிகளுக்கு சவால் உருவாகி அதற்குச் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கலாம் என்று எனது வசதிக்கு கற்பனை செய்து கொண்டேன். அந்த மாதிரி எண்ணங்கள் யாருக்கேனும் இருந்திருந்தால் அவர்கள் வாயடைத்துப் போயிருக்க வேண்டும்.

ஓர் அழகிய காதல் கதை தான்.

கண்டிப்பாக அது ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அவர்களுடைய பாலியல் உந்துதல்களையும் மட்டுமே எடுத்துக் கொண்ட தட்டையான கதையாக இருக்க முடியாது என்பதை யாராலும் யூகிக்க முடியும். படம் துவங்கும் போதே மனித வாழ்க்கைப் பாடுகளின் அவலம் எதிரொலிக்கிற மலைமேடுகளும் காடும் பனிப்பொழிவும் துயர்படரத் துவங்கி விடுகின்றன. அங்கே ஒரு காதல். அதுவும் தன்னுடைய தகப்பனைக் கொன்ற எதிரியின் மகள் மரிக்கா மீது இவானுக்கு காதல் வருவதில் அவ்வளவு நெகிழ்வு கூடிய காட்சிகள் வந்திருக்கின்றன. பிழைப்பின் நிமித்தம் இவானுக்கு காலம் நகர்வதற்குள் மரிக்கா ஒரு விபத்தில் இறந்து போகிறாள்.

ஒரு மனிதன் தனக்குள் ஒளிர்கிற விளக்கு அணைந்து போகும்போது என்ன செய்யக்கூடும் என்பதை இப்படம் நிதானமாக விவரணை செய்கிறது. அவன் ஒருபோதும் தனது கடமைகளில் இருந்து நழுவவில்லை, திருமணம் கூட செய்து கொள்கிறான். இருந்துமென்ன என்கிற வேதனையை நாம் துணுக்குறுகிறோம். உண்மையாகவே ஒரு நல்ல சினிமாவிற்கு கதை என்பது அதன் ஜீவனாக இருக்க முடியாது என்று தெரிந்திருந்தாலும், நான்கு படங்களில் ஒருவாறாக கதை சொன்னது இந்தப் படம் தான். மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக எனக்குப் பிடித்திருந்தது. என்ன செய்வது, பழக்கங்களில் இருந்து ஒருசேர விடுதலையடைவது சாத்தியமில்லை. ஓர் எழுத்தாளரின் கதையைத் தான் இயக்குநர் எடுத்துக்கொண்டிருந்தார்.

The Legend of Suram Fortress எண்பத்து ஐந்தில் வந்த படம். நிலவியவாறு இருந்த ஒரு ஜார்ஜியன்  நாட்டுப்புறக் கதையை எடுத்துக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது. மதங்களின் வெவ்வேறு முரண்கள் படத்தில் அலை எழுப்பின. மூளை குருடான அதிகாரமும், அது நீச்சலடிக்க விரும்புகிற குருதிப் பெருக்கமும் கொலைகளும் தவிர்த்து, கவனிக்கிற அளவில் ஓலங்களும் பிரார்த்தனைகளும் படத்தில் இருந்தன. சாதாரண மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாது என்பதன் நிருபணங்கள் இருந்தன.

படம் துவங்கிய கணத்திலிருந்து ஒவ்வொரு காட்சியின் நோக்கத்துக்கும் பொருந்தி வந்த நிலக்காட்சிகள், கோட்டைகள், குகை வீடுகள் போன்ற யாவுமே நம்மிடையே விசித்திரமான உணர்வுகளைத் தோற்றுவித்து நாமறியாத பிரதேசங்களில் நம்மை ஒருவிதமான திகைப்புடன் உலவச் செய்திருந்தது. இந்தப் படம் என்றில்லை, எல்லா படத்திலும் குறியீடுகள், கொலாஜ் தன்மை என்று கூறப்படுகிற இவையெல்லாம் இருந்திருந்த போதிலும் அது தனது மேதமையை பறைசாற்ற எடுத்துக் கொள்வதோ என்கிற சந்தேகங்கள் இம்மியளவிலும் எழாமற்போவதற்கு காரணம், நாம் பார்க்கக்கூடிய அவற்றில் இருந்த அசல் தன்மை மட்டுமே.

சர்ரியலிசம், எக்ஸ்பிரஷனிசம் போன்ற அடைமொழிகள் அல்லது அடையாளங்கள் இவற்றிற்கு வேண்டுமா என்பது தெரியாது. செர்ஜி சினிமாவை, அதன் திரைக்கதையை மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றவர் மட்டுமில்லை. அவருக்கு ஓவியம் தெரியும். சிற்பங்கள் செதுக்குபவராக இருந்தார். ஒரு வெளியில் வர்ணங்களின் அதிகாரம் பற்றி கண்டிப்பாக அவருக்குத் தெரியும். ஒரு இடத்தில் பொருட்கள் வைக்கப்பட வேண்டிய, அடுக்கப்பட வேண்டிய, கலைக்கப்பட வேண்டிய நேர்த்தி எப்படிப்பட்டவை என்பதெல்லாம் அவரால் செய்து முடிக்கப்பட்டு விட்டன.

பொதுவாக அமைப்புகளுடன், ஆட்களுடன் எவ்வெப்போதும் முரண்பட்டு மோதுகிறவர்களிடம்,  யாருக்கும் உள்ளுக்குள் இருக்கக்கூடிய தர்க்கம் பிறரை விட அதிகமாகவே இருக்கும். அதற்கு என்று தனியான, தணியாத சீற்றங்களும் உண்டு. அது இப்படங்களில் வெளிப்பட்டவாறு இருக்கின்றன. ஒரு சீண்டலும் வெறுப்பேற்றுதலும் இருக்கின்றன. அது வெறும் வக்கிரமாக குரோதங்களுடன் முடிந்து போகாமல் கலையாகவும் பரிணமிக்கின்றன. இயக்குநரின் நோக்கம் ஒருபோதும் பழுதுபட்டதில்லை என்கிற நம்பிக்கை நமக்குள் நெகிழ்வாக இருந்தவாறிருப்பது போதாதா?

செர்ஜி பராஜனோவ் 1924-ம் வருடம் ஜார்ஜியாவில் பிறந்தவர். அவரால் நிறைய திரைப்படங்களை உருவாக்க முடியவில்லை. 1990-இல் இறப்பு. அவருடைய படங்களில் வெளிப்பட்ட அரசியல் அவரை முட்டுச்சந்துகளுக்குத் தள்ளியது. குறைந்த படங்கள் தான் செய்திருக்கிறார் என்றாலும் அவற்றின் தனித்தன்மையை வைத்துப் பார்க்கும்போது அதனால் என்ன என்பதாகவே எண்ணம் வருகிறது.

மேலும் இவைகளை இலட்சியமாகக் கொள்வோரின் எண்ணிக்கை பற்றித் தெரியாது. அது மிகக் குறைவாக இருந்தாலுமே அவர்களால் வழக்கமான சினிமாவை தூக்கி கிடப்பில் போட முடியலாம். அதற்கான ஆற்றலை அவர் தனது படங்களில் காப்பாற்றி வைத்திருக்கிறார்.