சின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு

0 comment

யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருகும் ஶ்ரீதர் நாராயணன் எழுதிய கத்திக்காரன் கதைத் தொகுப்பில் மிக அநாயசமான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் கதை என ‘புதிய நிலம்’ கதையைச் சொல்ல முடியும். சிறு காதல் கதையாகத் தொடங்கிய கதை, மனிதன் நிலத்தைக் கொண்டு நினைவினூடாக செல்லும் அகப்பயணங்களைச் சீராக நம்முன்னே நிகழ்கிறது. சவிதா எனும் இந்தியப்பெண் அவளது அமெரிக்க நண்பர்களுடன் கழிக்கும் ஓரிரு மணிநேரங்களில் நிகழும் கதை என்றாலும் மாறும் நிலம் வழியே வரலாறு நெடுக மனிதர்கள் அடையக்கூடிய புது மாற்றங்களை மிக அழகாகச் சொல்லியுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பெரிய கட்டடத்தைத் தகர்க்கும் நிகழ்வுக்குச் செல்லும்போது பாப் எனும் வயதானவர் பழங்கதையை மீட்டுப் பார்ப்பதோடு தன்னுடைய நினையவிலிருக்கும் பெண்ணுடனான காதலையும் தொட்டுப் பார்க்கிறார். ஒரு நோஸ்டால்ஜியா குறிப்பாக நின்றுவிடாமல் மனிதர்கள் தங்களை மீட்டுக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக கதை நிகழ்ந்துள்ளது. உலகில் பழமையான காதல் நிகழும் ஒவ்வொரு முறையும் புதியது தான்.

உலகில் உள்ள எந்த சிறு பிரச்சனையையும் தீர்க்க முடியும் என அதீத ஆர்வத்துடன் வெகுளித்தனத்தோடு திறமையும் ஒருசேர இருக்கும் தென் அமெரிக்கரான ஹிபோலியோவின் கரிசனத்துக்குப் பின்னால் தர்க்கமற்ற ஒரு விதி ஓடிக்கொண்டிருப்பதைக் காட்டும் கதை ‘ஹிபோலியோ’. உடைந்த கார் பாகங்களிலிருந்து, எலெக்ட்ரிக் ரிப்பேர் வரை செய்து பார்த்து தொழிலை கற்றுக்கொள்ளும் ஹிபோலியோ, கதைசொல்லியின் வீட்டிலிருக்கும் ஏஸியை ரிப்பேர் செய்ய வருகிறார். பல நேரங்களில் நாம் தெரிந்தே தவறு செய்வதில்லை. போலவே, நல்லவைகளும். ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு விதி நம் செயல்களின் விளைவுகளைத் தீர்மானிப்பதை சுவாரஸ்யமான முடிச்சுடன் இந்தக் கதையில் சொல்லியுள்ளார். ஏஸி சீர் செய்யத் தேவையான ஒயர் கிடைக்காமல் ஒரு நாள் தாமதித்ததில் ஒரு எலிக்குடும்பமே தப்பியிருப்பதை உணர நேரும் தருணம் உண்மையில் ஒரு முகூர்த்த தருணம் தான். கடவுளின் கரம் போன்ற ஏதோ ஒன்று பெரு முயற்சிக்காரரான ஹிபோலியோவைத் தடுத்திருக்கிறது.

ஹிபோலியாவின் தருணம் போலொரு மாயக்கரம் ‘யோகம்’ சிறுகதையிலும் நிகழ்கிறது. பார்வை குறைபாடுள்ள வங்கி கணக்காளரின் தவறால் அதிகப்பணம் பெற்றவன் தனது அதிர்ஷ்டத்தை நினைத்திருக்கும் வேளையில் போலீஸுக்கு தெரிந்துபோனால் தனது இந்தியப்பயணம் ரத்தாகிவிடும் என பயப்படுகிறான். அதிகப்பணம் பெற்றதால் போலீஸ் பிடிக்கவில்லை என உணரும் போது குற்றவுணர்வை மீறி ஆசுவாசம் தெரிகிறது. தன்னை மீறிய சக்தியால் குற்ற உணர்விலிருந்து தப்பிவிடுகிறான். நிகர் லாபம் இல்லாவிட்டாலும் இதுவும் ஒருவித யோகமே. அடுத்த நாள் பயணத்துக்கான பணமும் கிட்டிவிடுகிறது. வங்கிக் கணக்கில் ரத்தான டிக்கெட்டின் பணமும் தவறாக கைக்கு வந்ததுக்கு நிகராகி விடுகிறது. ஏதோ ஒரு விதத்தில் மனதைத் தேற்றிக்கொள்ள வைக்கும் யோகம். ஒரு சின்ன நிகழ்வை கதையாக்கக் கூடிய திறன் ஶ்ரீதருக்கு அமைந்திருப்பதை நிரூபிக்கும் கதை சொல்லல் முறை.

‘பியாரி பாபு’ கதையில் வரும் ஜார்ஜ் ஒரு வகையில் புதிய நிலம் கதையின் பாப் எனும் முதியவரின் பிம்பம் தான். இளமையில் நடந்தவற்றை அசைபோட்டபடி வாழும் வயதான நாட்களில் சில நினைவுகள் மிகத் தெளிவாகவும் சில புகை மூட்டமாகவும் இருப்பது சாத்தியம். பியாரி பாபு கதையின் ஜார்ஜ் தனது மாமா தந்த பெட்டியைத் திறக்காமலேயே வைத்திருக்கிறார். காந்தியின் பிரதான சீடரான அவரது மாமாவுக்கு காந்தி எழுதிய கடிதங்களும், அவரது முதல் உயிலும் இருப்பதாக எல்லோரும் நம்புகிறார்கள். ஒருவிதத்தில் நாம் திறக்காமல் வைத்திருக்க நினைக்கும் பழைய நினைவுகள் போல ஒரு மிஸ்டிக் தன்மை இருக்கும் பெட்டி. திறந்தால் அதன் வசீகரத்தை இழந்துவிடுவோம் எனும் பயமாகவும் இருக்கலாம்.

எப்படி எடுத்துக்கொண்டாலும், அதன் திறக்காத பூட்டு தனது வாழ்வுக்கு தனித்த அர்த்தம் தருவதாக ஜார்ஜ் நினைப்பது மனித மனதின் எண்ணிலடங்கா மர்மத்தின் ஓரிதழ். இப்படி நமக்குள் பலவிதமான பியாரி பாபு பெட்டிகள் இருக்கலாம். அதன் அர்த்தங்கள் நமக்கு மட்டுமே புரியக் கூடியவையாக இருக்கலாம். அதில் இருக்கும் வசீகரம் வாழ்வு மீதான நம் பிடிப்பின் திறவுகோல். மிக யதார்த்தமான இந்த வாழ்வின் மர்மத்தை செல்லா காந்திக்கு கடத்திவிடுகிறது பியாரி பாபுவின் பெட்டி. ஒரு விதத்தில் செல்லா காந்தி செல்லுபடியாகத்தொடங்கும் இடத்தை நோக்கி நகர்வது கதையை மிகவும் ரசிக்கத்தக்கதாக ஆக்கியுள்ளது.

வானவில் – மிக நம்பிக்கை ஊட்டும் கதை – போலியான வார்த்தைகளால் மிகையாகப் பாராட்டும் பாணி அல்ல. அது மட்டுமல்ல. ’90கள் வரை பதின்மத்தைக் கழித்தவர்களுக்கு பாலுணர்வைத் தூண்டும்படியாகவோ, வெறுப்பை விதைக்கும் விதமாகவோ கைக்கெட்டிய தூரத்தில் கிட்டும் பொருட்கள் மிகவும் குறைவு. இன்றைய காலம் அப்படிப்பட்டதல்ல. கண் சிமிட்டும் நேரத்தில் நம் மனதின் திசைக்கேற்ப எத்தனை கீழ்த்தரமான தளங்களையும், உச்சகட்ட வன்முறை மற்றும் வெறுப்பை ஊட்டக்கூடிய காணொளிகளையும் பார்க்கக்கூடிய காலத்தில் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி வாழும் குழந்தைகளை எப்படியெல்லாம் இவை பாதிக்கும் என பெரும்பான்மையான நேரம் நாம் உணர்வதில்லை. எதிர்மறையாக, பல நேரங்களில் நம் அதீத ஜாக்கிரதை உணர்வால் அவர்களைச் சந்தேகப்படவும் தொடங்குகிறோம். அப்படிப்பட்ட குடும்பம் பற்றிய மிக மேன்மையான கதை இது.

பதின்பருவத்துப் பெண், தன் கூடப்படிக்கும் பையனுடன் இணையத்தில் எதையோ தேடப்போக ஒரு கீழ்த்தரமான விஷயத்தைக் காண நேர்கிறது. அந்த நொடியே அதிலிருந்து வெளியேறும் மனநிலையைப் பெற்றிருப்பவர்கள் உடனடியாக இதைக் கடந்து விடுகின்றனர். அப்பாவிடம் இதை ஒரு செய்தியாகச் சொல்லும் பள்ளிக்கூடமும் கடமைக்காகவே இதைப் பகிர்கின்றது. குழந்தையாக பாவித்து வளரும் பெண்ணிடன் இது எந்த மாதிரி விளைவை ஏற்படுத்தியிருக்கும் எனவும், அவள் வெறும் அப்பாவிக் குழந்தை என எண்ணுவது தவறோ எனவும் அப்பா நினைக்கத் தொடங்குகிறார். மனைவிக்கு இருக்கும் முதிர்ச்சி அவரிடம் இல்லை. உடனடியாக மனம் அந்த நாட்டின் தாராளவாத பாலியல் சுதந்திரம் மீதும், இந்திய சமூகத்தின் கட்டுப்பாடின் மீது ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தி ஊருக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமளவு அவரை நிலைகுலைய வைக்கிறது. வானவில்லின் தீவிர நிறம் அது. பெண்ணோ அவளது அம்மாவோ இதை மிக இயல்பாகத் தாண்டிச் செல்கிறார்கள். நம் அடுத்தத் தலைமுறை மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கையை அழுத்தமாக அதே சமயம் ஆரவாரமில்லாமல் சொல்லும் கதை.

ஶ்ரீதர் நாராயணனின் கதையின் பெரிய பலம் அவர் கதை சொல்லும் பாங்கும் கதாபாத்திரங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் விதமும் தான். தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக பல தளங்களில் எழுதி வருபவரது எழுத்து மிகவும் முதிர்ச்சியுடனும் கதைக்குத் தேவையானளவு அமைதியும் கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பிலேயே அதற்கு பல உதாரணங்கள் உண்டு. ‘பாரதி எனும் பற்றுக்கோடு’ அதற்குச் சிறந்த உதாரணம். அமெரிக்காவில் வசிப்பவரிடம் பாரதியின் முதல் ஆங்கிலப் பிரதியான ‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ்’ நூலை வாங்கிவரச் சொல்கிறார் பாரதி அறிஞரின் நண்பர்.  9/11 சிக்கலுக்குப் பிறகு ஊருக்கு வெறுங்கையோடு திரும்ப வருபவரது பார்வையில் பாரதி என்ன பொருள்படுகிறார் என ஆராயும் கதை. அறிஞரின் நண்பர் பிடிபடாத பெருமையுடன் பாரதி பிரீதியை பல கதைகள் மூலம் காட்டி வரும்போது கதைசொல்லிக்கு அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் வரும் தடுமாற்றம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. முடிவில் பணத்தை ஒரு கவரில் வைத்துக் கொடுக்கும்போது அங்கு பகிரப்படுவது என்ன எனும் மிகச் சிக்கலான கேள்வியோடு முடிந்திருக்கும் மிக நல்ல கதை.

இத்தொகுப்பின் மிக அருமையான கதைகள் மட்டுமல்லாது சமீப காலங்களில் அதிக ஆரவாரமில்லாமல் நேர்த்தியாக எழுதப்பட்ட சிறுகதைகள் என வகைப்படுத்தக்கூடியவை – கத்திக்காரன் மற்றும் முயல் காதுகள். தலைப்புக் கதையான கத்திக்காரன் ஒரு கலைஞனின் திறமையை அறிய முயல்பவனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. கலைஞன் தனது கலைத்திறமைக்கான ஊற்றைத் தேடிக் கண்டடைய முனையும்போதெல்லாம் அது அவனை மீறிச் சென்றபடியே இருக்கும். கலை நடக்கும் கணத்தில் அவனை மீறி நிகழ்வதன் மூலத்தை அறிய முடியாது. பல நேரங்களில் குறைபாடுகள் கூட நம்பமுடியாத சாத்தியங்களை உருவாக்கலாம். தங்கராஜுக்கு அந்தக் கத்திக்காரன் மிகச்சரியாக கத்தியை வீசுவதன் மீதிருக்கும் வசீகரத்தைப் போல அந்தப் பெண்ணும் அதை லாகவமாக உணர்ந்து கச்சிதமான நொடியில் துல்லியமாக நகர்வதையும் வியக்க முடிகிறது. இந்த மேஜிக்கை ஒரு முறையேனும் தவறவிடுவார்களா எனும் எதிர்பார்ப்பினாலோ பல முறை பார்த்தாவது அதன் ரகசியத்தை அறிந்துகொள்ள முடியுமா எனும் ஆர்வத்தினாலோ, தங்கராஜ் தினமும் கத்திக்காரனின் ஆட்டத்தைப் பார்க்கச் செல்கிறான்.

குடும்பத்தினருக்கு அதில் விருப்பமில்லாவிட்டாலும் ஒரு முறை அவர்களையும் அழைத்துச் சென்று அந்த நொடியின் உன்னதத்தை அறியச் செய்ய பிரயத்தனப்படுகிறான். கத்திக்காரனின் இல்லாத கட்டை விரலையும் அந்தப் பெண் அவன் மீது கொண்டிருக்கும் ஆசையையும் கண்டுணரும் தருணம் அவனுள் அந்த மேஜிக் நிகழ மறுத்துவிடுகிறது. ஏதோ ஒரு பெரிய ரகசியத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது அந்த விரலையும் மீறி கத்திக்காரனின் திறமை தெரிவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவரை மேஜிக் நிகழ்ந்த இடம் எது எனும் கேள்வியோடு கதை முடிகிறது. அந்தப் பெண் கத்திக்காரன் மீது வைத்திருந்த மாறாத நம்பிக்கையும் ஈர்ப்பும் அவளை அவனது அசைவுகளை நுட்பத்தோடு தொடர வைத்திருக்கிறது. ஒருவேளை அவளது கண்களில் மட்டுமே அந்த ரகசியம் தேங்கி இருக்கிறதோ எனும் ஆழமான வினாவையும் நம்முன் வைக்கிறது இந்தக் கதை.

சின்னச் சின்ன விஷயங்களில் அடையக்கூடிய ஒழுங்கைப் பற்றிய அற்புதமான சிறு விசாரணை ‘முயல் காதுகள்’ எனும் கதையாக மாறியுள்ளது. வெங்காயம் வெட்டுவது முதல் செடிக்கு நீர் ஊற்றுவது வரை சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் அதனதன் அழகுணர்ச்சியோடு செய்வது ஒருவித கலை. அது ஜென் அனுபவம் கூட. அப்படி அனுபவிக்கத் தெரிந்தவர் கூடவே இருப்பது வரமும் சாபமும் தான். நம் பார்வைக் கோணத்தைப் பொருத்து அமைவது. முயல் காதுகள் போக அழகாக ஷூலேஸ் கட்டிக்காட்டும் 80 வயது மூதாட்டி கதாசிரியரின் ஜூனியருக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறார். அதுவும் விளையாட்டு போல. வளர்ந்துவிட்ட அவரது சொந்த நாயை கைவிடும் தருணம் கூட ஒரு ஓவியத்தைப் போல அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மலரினும் மெல்லியது காமம் என்பது போல மிக நுணுக்கமான ரசனையும் மெல்லிய புல்லின் அசைவை ஒத்தது. மிக இயல்பானது. காலணி அணிந்துகொள்வதிலும் அப்படி ஒரு நுண்மை உள்ளதைக் காட்டும் மிக அழகான கதை. சொல்லப்போனால், ஜேஸ்டன்வில் நகரின் ஆன்மா இப்படிப்பட்ட பாத்திரங்களின் அன்றாட வாழ்வில் ஒளிந்துள்ளது. அது வெளிப்படும் கதைகளில் இதுவும் ஒன்று.

ஜேஸ்டன்வில் எனும் கற்பனை நகரை உருவாக்கி அங்குள்ள இடங்களையும் மனிதர்களையும் பற்றி எழுதப்பட்ட தொகுப்பு என்றாலும் அந்த ஊருக்கான பிரத்யேக அடையாளங்களும் வாசனைகளும் உருவகங்களாக கதையில் அதிகம் வருவதில்லை. ஊரின் தனித்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாத்திரமாக மாற சாத்தியமுள்ள இடங்கள் தெளிவுற வெளிப்படவில்லை எனும் குறை இருந்தாலும் இப்படி ஒரு சாத்தியத்தை உருவாக்கியதன் மூலம் எதிர்காலத்தில் பழுத்த பல கனவுகளை நிஜமாக்கும் திறமையுள்ளவர் என நிரூபித்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் வெளியான முதல் சிறுகதைத் தொகுப்புகளில் மிக நுட்பமான தருணங்களும் கதை எனும் அம்சத்துக்கான முக்கியத்துவமும் தெளிவான கதாபாத்திர வார்ப்பும் அதிக அலட்டல் இல்லாத கூறுமுறையும் போலியான இலக்கிய பாவனைகள் அற்றதுமான சிறுகதைத் தொகுப்பாக ‘கத்திக்காரன்’ அமைந்துள்ளது. எழுத்தாளரின் கதைகளையும் கட்டுரைகளையும்  கதை போல கச்சிதமாக எழுதப்படும் அவரது பத்தி எழுத்துகளையும் (ஜூனியர் குறிப்புகள்) கவிதைகளையும் ஒன்றுவிடாமல் தொடர்ந்து படித்து  வருபவன் எனும் முறையில், எளிமையான விதத்தில் மிகத் திறமையுடன் சுவாரஸ்யமாக கதை சொல்லும் புது எழுத்தாளர்களில் ஶ்ரீதர் நாராயணன் மிக முக்கியமானவர் என நிச்சயமாகச் சொல்லலாம்.

*

கதாசிரியரின் வலைப்பக்கம்: http://www.sridharblogs.com/