எஞ்சுமா இந்தியப் பத்திரிகைகள்? – செல்வேந்திரன்

0 comment

ஜேம்ஸ் அகதஸ்தஸ் ஹிக்கி துவங்கிய பெங்கால் கெஸட்தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான முதல் பத்திரிகை. வாரன் ஹேஸ்டிங்க்ஸ் ‘கவர்னர் ஜெனரல்’ பதவியில் இருந்துகொண்டு எவ்வளவு லவட்டுகிறார் என்பதை அம்பலப்படுத்தியமைக்காக ஜேம்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றாண்டுகள் தண்டனை. விடுதலைக்குப் பின் அவரது மொத்த வாழ்வும் தேய்ந்தழிந்து அடையாளம் தெரியாமல் இறந்து போனார் ஜேம்ஸ். சுமார் 240 வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் இந்தத் தேசத்தில் அச்சு ஊடகங்களின் வாழ்க்கை ஜேம்ஸ் அகதஸ்தஸினுடையது போல அலங்கோலமாகத்தான் நீடிக்கிறது.

இன்று இந்தியாவில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மட்டும் 82,000. அன்றாடம் 11 கோடி இந்தியர்கள் அச்சுப் பிரதிகளை வாசித்து இந்தத் துறையை 32,000 கோடி விற்றுமுதல் உள்ள துறையாக ஆக்கியிருக்கிறார்கள். இத்துடன் உலகிலேயே அதிகம் வாசிப்பவர்கள் இந்தியர்கள்தான் எனும் ஆச்சர்யமூட்டும் புள்ளி விபரத்தினை இணைத்துப் பார்க்க முடியும். ஒரு சராசரி இந்தியன் வாரத்திற்குப் பத்தே முக்கால் மணி நேரங்களை வாசிப்பில் செலவிடுகிறான்.

For India's docile media, a lesson in press freedom and ethics ...

உலகம் முழுக்க பத்திரிகை விற்பனை தேய்ந்தழிந்து ஒவ்வொரு பெருநிறுவனமும் கடையைச் சாத்திக்கொண்டிருக்க கடந்த ஆறுமாதங்களுக்கு முன்புவரை நம் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் நாங்கள்தான் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கிறோம், இத்தனாயிரம் புதிய வாசகர்களைச் சேர்த்திருக்கிறோம் என்று பெருமையோடு விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். உலகமே நம்மை வினோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. எப்படி சாத்தியப்பட்டது?

இந்தியர்கள் பழக்கத்தின் விசுவாசிகள். 1960-க்கும் 1990-க்கும் இடைப்பட்ட காலம் இந்தியப் பத்திரிகைகளின் பொற்காலம். மத்தியில் மையம் கொண்டிருந்த அரசியல் செயல்பாடுகள் மாநிலங்களை நோக்கி விரிந்தன. மத்தியதர வர்க்கம் எனும் வினோத இனம் உருவாகி எழுந்துவந்தது. பிராந்திய அடையாளங்களைத் தூக்கிப் பிடிக்கும் அரசியல் இயக்கங்கள் உருக்கொண்டன. வாசிப்பதும் விவாதிப்பதும் கருத்தியல் சார்பு கொண்டிருப்பதும் உயிர்த்தேவைகளாயின. எழுத்தறிவு எழுபத்தைந்து சதமானம் வரை உயர்ந்ததும் வாசிப்புக்கு உரமானது. மேற்கண்ட முப்பதாண்டுகளில் உருவான அடித்தளம்தான் இன்றும் அரசின் அத்தியாவசியப் பட்டியலில் நாளிதழ் இடம்பெற்றிருக்கக் காரணம்.

உலகமயமாக்கலுக்குப் பின் சர்வதேச ஊடகங்கள் இந்தியச் சந்தைக்குள் பாய்ந்தன. மரபான அச்சு ஊடகங்கள் ஒரு மெல்லிய திகைப்பிற்குப் பின் சுதாரித்துக்கொண்டன. தொழில்நுட்பம், உள்ளடக்கம், வடிவம், வாசக அணுகுமுறை சார்ந்து பல ஆரோக்கியமான மாற்றங்கள்  உள்வாங்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், சும்மா கிடைப்பாளா சுகுமாரி என்பது போல உலகமயமாக்கல் அச்சு ஊடகங்களுக்கு ஒரு நஞ்சையும் புகட்டியது. அதுவரை குறைந்தபட்ச தார்மீக அறத்துடன் நிகழ்ந்த இதழியல் ‘வணிகம்’ மட்டுமே என்றானது. நிர்வாகத் தந்திரங்கள் உள்ளே நுழைந்து அதீத உற்பத்தி, பதிப்பு விரிவாக்கம், வருவாய் பெருக்குதல், பிறர் சந்தையைக் கைப்பற்றுதல், இலாபத்திற்காக வழிகாட்டும் நெறிமுறைகளில் சமரசம் செய்துகொள்ளுதல், அரசியல் தரப்புகளின் பரப்புக்கருவியாக செயல்படுதல் என முழு ‘தொழிலாக’ மாறியது.

சாட்டிலைட் சானல்களின் வருகை, செய்தி சானல்களின் பெருக்கம், இணையப் பயன்பாடு, ஸ்மார்ட் ஃபோன்களின் பரவலாக்கம், ஜியோ இணையப் புரட்சி,  டிஜிட்டல் ஊடகங்கள், வாசிப்புப் பழக்கம் குறைந்து போனது, உலகப் பொருளாதார மந்தநிலை, இந்தியப் பொருளாதார வீழ்ச்சி, அரசின் கெடுபிடிகள் என எத்தனையோ இடர்ப்பாடுகளை இடைக்காலத்தில் அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டிருக்கின்றன. ஆனாலும்கூட, கடந்த பதினைந்தாண்டுகால ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள், பிற வணிகங்களின் வளர்ச்சிப் புள்ளிவிபரங்களோடு ஒப்புநோக்க நிரந்தரமான நீடித்த வளர்ச்சியைத்தான் இந்திய அச்சு ஊடகங்கள் கொண்டிருந்தன. அச்சு ஊடகங்களுக்கான உலகளாவிய சந்திப்புகளில் இந்தியாவின் இந்த வளர்ச்சி அதிசயத்தோடும் ஆச்சயரித்தோடும் நோக்கப்பட்டு வந்தது. இதெல்லாம், இந்த ஆண்டின் ஜனவரி 30-ஆம் தேதி வரைதான்.

ஆம் அன்றுதான், வூஹானில் மருத்துவம் பயின்ற கேரள இளைஞருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதன் பிறகு இந்தத் தேசத்தில் நடந்ததெல்லாம் வரலாறு. மத்திய அரசு லாக் டவுன் அறிவித்தபோது முதல் வரிசையில் நின்று தன் தலையில் மரண அடியை வாங்கிக்கொண்டது பிரிண்ட் மீடியா. காகிதம் வழியாக கொரோனா பரவும் எனும் பீதியில் பல வாசகர்கள் செய்தித்தாள்களைத் தொட பயந்தனர். முகவர்கள் விநியோகிக்க அஞ்சினர். கடைகள் இல்லாததால் வார இதழ்களை விற்பனை செய்ய இயலாமற் போனது. போக்குவரத்து தடைபட்டதால் பல இடங்களுக்குப் பத்திரிகைகள் அனுப்ப முடியாது போயின. தனியார் அச்சகங்கள் மூடப்பட்டன. சொந்தமாக அச்சுக்கூடங்கள் இல்லாத பத்திரிகைகள் திண்டாடின.

Buy indian turban old man reading newspaper on village with ...

இந்தியாவில் பல நாளிதழ்களும் வாரந்தரிகளும் பத்திரிகை அச்சடிப்பதை இடைக்காலமாக நிறுத்தின. அச்சடித்த காகிதம் வழியாக கொரோனா பரவாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்த பின்னரும் இந்த அச்சம் குறையவில்லை. உச்சகட்டமாக மும்பையிலும் மஹாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் எட்டு நாட்கள் எந்த நாளிதழும் அச்சிடப்படவில்லை. டெல்லியில் 90% வாசகர்கள் சந்தாவை நிறுத்திக்கொண்டார்கள். அச்சடித்த காகிதம் வழியாக கொரோனா பரவும் என்றால் பணத்தை மட்டும் ஏன் தொடுகிறீர்கள் என்று நீதிபதியே காட்டமாகக் கேட்டார். தொடர்ச்சியாக நாளிதழ்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக  நிலைமை மாறி, இன்று மீண்டும் அனைத்து நாளிதழ்களும் அச்சிடப்பட்டாலும் கூட இந்த அச்சம் இன்னும் முழுமையாக விலகிவிடவில்லை. ஆனால், இதெல்லாம் சின்னப் பிரச்சனைகள்தான்.

ஆகப்பெரிய பிரச்சனை நாடடங்கினால் தொழில்கள் முடங்கியதுதான். கடைகள் மூடப்பட்டன. கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் இல்லாமலாயின. பொது நிகழ்ச்சிகள் இரத்தாயின. பத்திரிகைகள் அனைத்துமே விளம்பர வருவாயை நம்பிச் செயல்பட்டவை. பத்தில் ஒருபங்கு வருவாய் கூட பத்திரிகை விற்றுத் தேறாது. ஏற்கனவே பத்திரிகைகளின் விளம்பர வருவாய் மாற்று ஊடகங்களுக்கும் டிஜிட்டலுக்கும் மாறி கடன் சுமையில் தள்ளாடிக்கொண்டிருந்த அச்சு ஊடகங்களின் வரும்படி 90% வரை குறைந்தது.

பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை அள்ளித் தந்துகொண்டிருந்த பொறியியல் கல்லூரிகள், ஆட்டோமொபைல், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் எல்லாம் ஏற்கனவே சரிந்து தொங்கிக்கொண்டிருக்க கடைகள் அடைக்கப்பட்டதால் ரீட்டெயிலர்களிடமிருந்து வரும் சொற்ப விளம்பரங்களும் இல்லாமலாயின. ஏறக்குறைய அத்தனை தொழில்நிறுவனங்களும் தங்களது விளம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டன. பத்திரிகைக்கு ஒதுக்கும் தொகையை அடியோடு நிறுத்திக்கொண்டன.

விளைவாக பத்திரிகைகள் வருவாய் இல்லாது தவித்தன. பலர் தற்காலிகமாக அச்சடிப்பதை நிறுத்திக்கொண்டார்கள். சில இதழ்கள் இனிமேல் நாங்கள் டிஜிட்டலில் என்றார்கள். வருவாய் இல்லாத பதிப்புகள் மூடப்பட்டன. பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இணைப்பிதழ்கள் நிறுத்தப்பட்டன. பெரும்பாரம்பரியம் மிக்க கல்கி இதழே நிறுத்தப்பட்டது. இந்தியா முழுக்க புகழ்கொண்டிருந்த அவுட்லுக் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம். விளைவாக, ஏற்கனவே சொற்பச் சம்பளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அச்சு ஊடக ஊழியர்களுக்கு சம்பள வெட்டு, சலுகைக் குறைப்பு எனத் துவங்கி இன்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டார்கள். இன்றும் இந்தியா முழுக்க தினமும் நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

டாலர் மதிப்பு, இந்தியப் பணத்தின் வீழ்ச்சி, காகித விலை உயர்வு, அன்றாடம் விலையேரும் எரிபொருள், 5% சுங்கவரி, விளம்பரதரர் உபய நிகழ்வுகளின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்புகள், அரசு விளம்பரங்களுக்கு மிகக் குறைவான விலை, அரசுத் துறைகள் செய்த விளம்பரங்களுக்கான பாக்கித்தொகை என அச்சு ஊடகங்களைப் பாதிக்கும் எந்த ஒரு காரணிக்கும் மத்திய அரசு உதவத் தயாராக இல்லை. ஊடக அதிபர்கள் ஒருங்கிணைந்து அனேகமாக இந்தியாவின் அனைத்து அரசியலாளர்கள் வீட்டிற்கும் படியேறிச் சென்று கதறினார்கள். காது கொடுக்கவே பலர் தயாராக இல்லை. கை தூக்கிவிடவோ எவராலும் இயலவில்லை.

பாஜக அரசு பதவியேற்ற முதலே அச்சு ஊடகங்களுக்கு எதிரான கெடுபிடிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தன் கருத்தியலோடு முரண்பாடு கொண்ட, அரசின் செயல்பாடுகளை எதிர்க்கிற இதழ்களுக்கு விளம்பரங்களை நிறுத்தி வைப்பதில் துவங்கி வரி விதிப்புகள், சலுகைகள் இரத்து என்கிற அளவில் அது நீடித்துக்கொண்டே இருக்கிறது. அரசுக்கு எதிரான அறிவுத்தரப்பின் வலுவான விமர்சனங்கள் ஏனைய எந்த ஊடகத்தை விடவும் அச்சில்தான் அழுத்தமாகப் பதியும். ஆகவே அச்சு ஊடகங்கள் அழிவதென்பது ‘ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே சப்பாத்தி, ஒரே பேப்பர்’ எனும் இலட்சியத்திற்கு உதவக் கூடியதென்பதை அறியாதவர்கள் அல்ல அவர்கள்.

தொழில் வர்த்தக சபைத் தலைவர் அகர்வால் அரசு வைத்திருக்கும் விளம்பர பாக்கியை முதலில் செட்டில் செய்யுங்கள் எனக் கோரிக்கை வைத்தார். சுங்க வரியை இரத்து செய்து விளம்பர கட்டணத்தில் 100% அதிகரிப்பு செய்யுங்கள் என அரசுக்கு எழுதினார் ஸ்டாலின். மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறையின் காலியிடங்களை நிரப்பினாலே பாதிபேருக்கு வேலை கிடைக்கும் என்றார் அலோக் மேத்தா. எதுவுமே எடுபடவில்லை.

இந்நிலையில் கொரோனா காலத்தில் நாளிதழ்களையும் பத்திரிகைகளையும் கைவிட்ட வாசகர்கள்  மிக வேகமாக எலெக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல் மீடியா பயன்பாட்டிற்குத் தாவிவிட்டார்கள் என்பதை நிரூபிக்கிறது BARC தரும் புள்ளி விபரங்கள். கொரோனா சூழல் மாறி நிலைமை திரும்பினால் கூட அது அச்சு ஊடகங்களுக்கு எந்த விதத்திலும் பலனளிக்காது என எச்சரிக்கிறது KPMG. 2019-ல் அச்சு ஊடகங்களின் வருவாய் மேலும் 3.4% சரியும் என ஏற்கனவே எர்ணஸ்ட் யங் எச்சரித்திருந்தது. மீடியா எண்டர்ண்டெய்ன்மெண்டின் துறையின் 12% வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த வீழ்ச்சியின் வீரியம் எத்தகையது என்பது புரியவரும்.

மார்ச்சிலேயே வருவாயில் 20% வீழ்ச்சி எனும் பெரிய அடியை வாங்கியது அச்சு ஊடகத்துறை. ஐ.என்.எஸ் எனப்படும் இந்திய செய்தித்தாள் சங்கத்தின் கூற்றுப்படி மார்ச் – ஏப்ரல் வருவாய் இழப்பு மட்டும் 4,500 கோடி. இன்னும் ஆறேழு மாதங்களில் 15,000 கோடி வரை இழப்பு இருக்கும் என்கிறது. இந்தியாவில் அச்சு ஊடகத்தில் நேரடி ஊழியர்கள் சுமார் 10 இலட்சம் பேர். விநியோகஸ்தர்கள், வாகன ஓட்டிகள், பார்சல் கட்டுபவர்கள் என 20 இலட்சம் மறைமுக ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலமும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும் ஒருசேர கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

டிஜிட்டல் மீடியாக்களில் நம்பகத்தன்மை என்பது கிஞ்சித்தும் இல்லாத ஒரு சூழலில் பெரும்பான்மை இந்தியர்கள் நம்பகமான செய்திகளுக்கென்று நம்பியிருப்பது நாளிதழ்களைத்தான். பகாசுர கரங்களால் செய்தி ஊடகங்கள் வளைக்கப்படுகையில் அவர்களது கைக்குச் சிக்காமல் நழுவும் நல்ல செய்தித்தாள்கள் இந்தியாவில் நீடிக்கின்றன. ‘பிஸினஸ் வித் எதிக்ஸ்’ என அறம் சார்ந்த தொழில் நடைமுறைகள் உள்ள பத்திரிகைகள் இங்குண்டு. உதாரணமாக, தி ஹிண்டு பத்திரிகை இன்றைய தேதி வரை மதுபானம், புகையிலை விளம்பரங்களை வெளியிடுவதில்லை. பெண்களின் ஆபாச படங்களைப் பிரசுரிப்பது அதன் வரலாற்றிலேயே இல்லை.

தற்கொலைச் செய்தியை வெளியிட்டால், கூடவே தற்கொலைத் தடுப்பு மன ஆலோசனை உதவி எண்களைச் சேர்த்து வெளியிடும் பத்திரிகைகள் இங்குண்டு. தனக்கு முற்றிலும் மாறான நிலைப்பாடு கொண்டவர்களின் கருத்துகளையும் நடுப்பக்கங்களில் ஏந்தும் தினசரிகள் இங்குண்டு. எதிர்கால இலாபங்களைக் கருத்தில் கொள்ளாமல் பல ஊழல்களை நாளிதழ்களே அம்பலப்படுத்துகின்றன. கருத்துரிமைக்கான களத்தில் அச்சுப்பத்திரிகைகளின் இடம் அசைக்க முடியாததாகிறது. குரலற்றவர்களின் குரல் பொதுச்சமூகத்தின் காதுகளை எட்டவும், அரச பயங்கரவாதம் நிகழ்கையில் அதன் முன் நின்று கைச்சுட்டி கேள்வி கேட்கவும் அச்சுப் பத்திரிகை பிழைத்திருக்க வேண்டியது அவசியம்.

துரதிர்ஷ்டவசமாக அச்சின் வீழ்ச்சியில் புறக்காரணிகள் அளவிற்கே தனக்குத்தானே குழிவெட்டிக்கொண்டவையும் அதிகம். வாரந்தரிகள் சமூக ஊடகத்தின் பெரும்போக்கையே தானும் கடைபிடித்து தங்களுக்கும் ஃபேஸ்புக்கிற்குமான இடைவெளியைக் குறைத்தன. ‘இதுதான் என் டைம்லைனிலேயே கிடைக்கிறதே? நான் ஏன் இதைக் காசு கொடுத்து வாங்கி நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டும்?’ எனும் எண்ணத்தை உருவாக்கியது. தனித்துவத்தைப் பேணாதிருந்ததும், தரக்கட்டுப்பாடுகளில் நிகழ்ந்த சமரசமும், சினிமாத்துறை மீதான ஆவேசத் தழுவலும் வாரந்தரிகளுக்கென்று கௌரவமான வாசகர்களை இல்லாதாக்கியது.

பெரும்பாலான நாளிதழ்கள் ‘பேஜ் 3’ எனும் காஸ்மோ கலாச்சாரத்திற்குள் பாய்ந்தன. காசு கொடுப்பவனைப் புகழ்ந்து எழுதுவது, கவரோடு வரும் செய்தியை அப்படியே வாங்கிப் பிரசுரிக்கும் டேபிள் ஜர்னலிஸம், எதிர்த்து நட்டமடைவதை விட ஒத்துழைத்து ஆதாயம் காண்போமே என அரசு அதிகாரிகளுடன் பத்திரிகையாளர்கள் சமரசம் பேணுவது, அறமற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை மிதமிஞ்சிப் பிரசுரித்து வாசக எரிச்சலை சம்பாதித்துக்கொள்வது, காலத்திற்கு ஒவ்வாத பழைய வினியோக முறையையே கட்டிக்கொண்டு அழுது வாசகர்களை எரிச்சல்படுத்துவது எனப் பட்டியலிட்டால் இன்னும் பத்து பக்கங்களுக்கு கட்டுரை நீளும்.

சரி, இந்தியப் பத்திரிகைகள் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்? ஒருவரிடம்தான் அதற்கான தீர்வு இருந்தது. 1923-ல் ஏர்வாடா சிறையிலிருந்தபோதே அந்தத் தீர்வை அவர் சொல்லி விட்டார். இந்தியாவின் மிகப்பெரிய பிஸினஸ் மூளையான மிஸ்டர் காந்திதான் அவர். சத்தியாகிரகத்தின் மிக முக்கியமான ஆயுதம் என்று அவர் பத்திரிகையைக் கருதினார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்குச் சொந்தமான முதல் அச்சுக்கூடத்தை குஜராத்தியான ஸ்ரீமதன்ஜித் வியஹாரிக் நிறுவி நடத்திவந்தார். அவர் காந்தியுடனும் மன்ஷூக்லால் நாசருடனும் இணைந்து ‘இந்தியன் ஒப்பினியன்’ இதழைத் துவக்கினார்கள்.

டர்பனிலிருந்து பத்திரிகை வெளிவரத் துவங்கியது. ஆரம்பத்திலேயே நஷ்டம். விடுவாரா காந்தி? டர்பனிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பண்ணையை வாங்கி அங்கே பத்திரிகை ஊழியர்கள் அனைவரையும் குடியமர்த்தி ஒரே இடத்தில் அனைத்து வேலைகளும் நிகழும்படி பார்த்துக்கொண்டார். இன்றும் சப் எடிட்டிங், பேஜ் டிசைனிங் போன்ற செண்ட்ரலைஸ்டு செய்யப்பட வேண்டிய துறைகளை ஒவ்வொரு பதிப்பிலும் வைத்துக்கொண்டிருக்கின்றன இந்தியப் பத்திரிகைகள்.

முதலில் ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பத்திரிகை வெளிவந்தது. இந்தி, தமிழ் இதழாளர்கள் பண்ணையில் குடியேற மறுத்தனர். காந்தி யோசிக்காமல் இருமொழி பதிப்புகளையும் நிறுத்தினார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த குஜராத்திகள் விரும்பி வாசித்த இந்தியன் ஒப்பினியனை ஆங்கிலத்தில் குஜராத்தி அல்லாத இந்தியர்களும், தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே வாழும் இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் வாசிக்கும்படிச் செய்தார். கண்டெண்ட் மானிடைஷேசனை கச்சிதமாகப் பயன்படுத்தினவர் காந்திதான். முழு இதழையும் அனுப்ப இயலாத உலகப் பகுதிகளுக்கு நியூஸ் லெட்டர்கள் வடிவில் இதழின் முக்கியமான பகுதிகள் அனுப்பப்பட்டன.

விளம்பரத்தைப் பெற்றுக்கொள்வதில் ஆரம்பத்திலிருந்தே தயக்கம் நீடித்தாலும், அந்த வருவாய் இல்லாமல் பத்திரிகை மேலும் நட்டமடையும் என்பதால் ஒப்புக்கொண்டிருந்தார்கள். ஆனால், அச்சகத்தின் சிறந்த ஊழியர்களின் பெரும் ஆற்றல் விளம்பரத்தைப் பெறுவதிலும் அதற்கான தொகையை வசூலிப்பதிலும் விரயமானதை உணர்ந்தார். மேலும் விளம்பரங்களுக்காக மிகையாக விளம்பரதாரர்களைப் புகழவும், சிறிய அறமீறல்களையும் செய்யவேண்டியதாகவும் இருந்தது. காந்தி துணிந்தார். ஒரு உயரிய நோக்கில் நடத்தப்படும் பத்திரிகையை காப்பாற்ற வேண்டியது மக்களின் கடமை. மக்கள் சந்தா செலுத்தத் தயங்கினால், அந்தப் பத்திரிகை நீடித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறார்கள் என்பதே பொருள் என்றார். துணிச்சலாக விளம்பரங்கள் பெறுவதை நிறுத்தினார். எந்தவொரு அச்சு ஊடகமும் மக்கள் செலுத்தும் சந்தா எனும் தார்மீக பலத்தின் மீதுதான் நிலைபெற்றிருக்க வேண்டும் என்றார்.

விளம்பரங்களுக்காக கோடீஸ்வரர்களின் கால் பிடிப்பதை விட காணும் ஒவ்வொருவரிடமும் ஏன் இந்தப் பத்திரிகை வாசிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கும்படி ஊழியர்களைக் கேட்டுக்கொண்டார். ஆச்சரியகரமாக 1200 சந்தாவிலிருந்து 3500 சந்தாக்களாக இந்தியன் ஒப்பினியன் உயர்ந்தது. விளம்பரமே இல்லாமல் சுதந்திரமாகவும் தற்சார்புடனும் பத்திரிகையை நடத்த முடிந்தது. இந்தியன் ஒப்பினியன் குஜராத்தி இதழ் ஜோகன்னஸ்பர்க்கில் வெளியாகும் தோறும் ஒருவர் வாங்கி வாசிக்க நூற்றுக்கணக்கானவர்கள் கூடி அதைக் கேட்டார்கள்.

அச்சைக்காட்டிலும் நூறு மடங்கு வாசகர்கள் அதற்கு உருவானார்கள். உள்ளடக்கத்தின் தரம் பற்றிய மக்களின் வாய்மொழி வழியாகவே சந்தாக்கள் குவிந்தன. சமீபத்தில் சில இந்திய  நாளிதழ்கள் ஒருங்கிணைந்து ‘லவ் ஃபார் பிரிண்ட்’ எனும் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்து பிறகு பாதியில் கைவிட்டு விட்டார்கள். இன்று ஜனநாயகம் காக்கப்பட ஏன் வாசிக்கவேண்டும் எனும் பேரியக்கம் அனைத்து தரப்பினராலும் இணைந்து நடத்தப்பட வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. ஒருங்கிணைப்பிலும் முன்னெடுப்பிலும் அனைத்து நாளிதழ்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இல்லையெனில் தாங்களே எழுதி தாங்களே வாசித்துக்கொள்ள வேண்டிய எல்லை வரை இது நீண்டுவிடும்.

ஒவ்வொரு இந்தியனும் இந்தியன் ஒப்பினியன் இதழைத் தங்களுடையதாகக் கருதவேண்டும், சொந்தம் கொண்டாட வேண்டும் என காந்தி நினைத்தார். இது தனக்கானது என மக்கள் கருதாத ஒன்று நிலைத்திருக்காதென்பதை அவர் அறிந்திருந்தார். அன்று தென்னாப்பிரிக்காவில் இருந்த அனைத்து பத்திரிகைகளுமே ஏதாவது ஒரு ஐரோப்பிய தங்கச்சுரங்க முதலாளிக்குச் சொந்தமானது. அங்கு பணியாற்றிய இதழளாளர்கள் முதலாளிக்கு ஜிங்சாங் அடித்தபடியே இருந்ததை காந்தி கிழித்தார். அவர்கள் முதலாளிகளின் தொழில்துறை அபிலாஷைகளை எழுத்தில் பிரதிபலித்தார்கள். இடையறாச் சிங்கியின் வழியாக முதலாளிகளின் இங்கிலாந்து கிளைகளுக்குப் பணிமாற்றல் பெற்று உயர்பதவிகளை வென்றார்கள். பெரும்பான்மை ஐரோப்பிய இதழியலாளர்கள் எந்த அறத்தையும் கைக்கொள்ளாத வித்தியாசத்தை காந்தி இந்திய இதழியலளார்களுக்கு விளக்கினார். அவர் கைகாட்டிய விழுமியங்கள் உள்ளடக்கத்தில் பிரதிபலிக்க, இந்தியர்கள் பத்திரிகையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். நமது இதழ்கள் உலக அளவில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்வைத்து தீர்க்கமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.

டர்பன் அச்சகம் ஒரு கட்டத்தில் இதர அச்சுப்பணிகளை அச்சடித்துக்கொடுக்கும் அவுட்சோர்ஸிங் பணிகளையும் நிறுத்திக்கொண்டது. ஊழியர்களின் ஆற்றல் விரயமாகிறது என காந்தி கருதியதே காரணம். அதற்குப் பதிலாக சொந்த கண்டெண்டை நூல்களாக அச்சடிக்கும் பணியில் ‘இந்தியன் ஒப்பினியன்’ ஈடுபட்டது. நூல்களின் வழியாகவும் வருவாய் பெருகியது. ஆனால், எப்பணியிலும் இலாபத்தை முதன்மையாகக் கொள்ளாது சேவையை முன்னிறுத்தி அதை தற்சாற்பு பிஸினஸ் மாடலாக காந்தி மாற்றிக்காட்டினார்.

கிரெட்டா துன்பர்க் பாணியில் சொல்வதானால் அச்சு ஊடகங்களைப் பொருத்தவரை ‘வீடு தீப்பற்றி எரிகிறது’ நிலை. தங்களைத் தாங்களே கறாராக சுயபரிசோதனை செய்துகொண்டு அறுவை சிகிழ்ச்சைகளுக்கு ஊடகங்கள் தயாராக வேண்டும். டிஜிட்டல் கட்டுமானங்கள் வலுவாக உருவாக்கப்பட வேண்டும். விளம்பர வருவாய் ஆதாரங்களைச் சுருக்கிக்கொண்டு தரமான கண்டெண்டுகளுக்கு வாசகர்கள் தங்களுக்கு இயன்றதைப் பங்களிப்பும் சந்தா முறைமைகள் அறிமுகப்படுத்த வேண்டும். கார்டியன் உள்ளிட்ட இதழ்கள் செறிவான கட்டுரைக்குக் கீழே, ‘இந்த உள்ளடக்கத்தை உருவாக்க உழைப்பும் செலவும் ஆகியுள்ளது. உங்களால் இயன்றதைப் பங்களியுங்கள்’ எனக் கேட்டு தங்கள் வருவாயை கணிசமாகப் பெருக்கியுள்ளது கவனிக்கத்தக்கது. உலகளாவிய கப்பல் ஊழியர்களுக்கென்றே தோழி சாய்ஸ்ரீ ஷேகால் நடத்தும் பத்திரிக்கை ஒரு துளி மை, காகிதம், எரிபொருள் உபயோகிக்கப்படாமல் அவரவர் கப்பலிலேயே பிரிண்ட் அவுட் எடுத்து வாசிக்கும்படி வெற்றிகரமாக இருபதாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. பிஸினஸ் மாடல்களின் மீதான ஆழமான மறுபரிசீலனை நிகழ்ந்தால் எதுவும் சாத்தியமே.

எடிட்டோரியல் ஊழியர்களைத் துரத்துவதை விட அவர்களது பலம் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். நிரந்தரச் சம்பளத்திற்குப் பதிலாக டிஜிட்டல் வாசிப்பிற்கேற்ப வேரியபள் பேமண்ட் முறைமை அறிமுகப்படுத்தப்படலாம். சந்தா சேகரிப்பு ஒரு பெரும் இயக்கம் போல நடத்தப்பட வேண்டும். விளம்பரக்காரர்களிடம் கிடைத்தது வரை இலாபம் என சுரண்டுவதற்குப் பதிலாக வித்தியாசமான நிகழ்ச்சிகள், ஒத்துழைப்புகள் மூலம் அவர்களது தொழிலில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நல்க வேண்டியதும் அவசியம்.

காலத்துக்கேற்ப பக்க அளவுகள் குறைக்கப்பட வேண்டும். ஒருவரால் அதிகபட்சம் 15 நிமிடங்களுக்கு மேல் எதன் மீதும் கவனம் செலுத்த முடியாதபடி கவனக் கலைவும் வாழ்க்கை நெருக்கடியும் இருக்கிறது. டேபிள் ஜர்னலிஸம், கவர் ஜர்னலிஸம் ஒழிக்கப்பட்டு செறிவான விஷயங்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட வேண்டும். துறைசார் நிபுணர்கள் அல்லாதவர்களின் கருத்துகள் கட்டுரைகளாக இடம்பெறவே கூடாது. எவரும் எதையும் எழுதலாம் எனும் இழிநிலை இந்திய அச்சு ஊடகங்களைத் தவிர வேறெங்கும் நீடிப்பதில்லை. ‘இவர் அமெரிக்காவில் பதிவு பெற்ற டாக்டர். ஆகவே, இவர் நீர் மேலாண்மை பற்றிய கருத்து உதிர்க்கலாம்’, ‘இவர் ஓய்வுபெற்ற நீதிபதி. ஆகவே, சர்க்கரை நோய் பற்றிய இவரது கருத்துக்களுக்கு மதிப்புண்டு’, ‘இவர் நான் ஏற்கனவே பணியாற்றிய கம்பெனியின் ஓனர். ஆகவே இவரைப் பற்றி ஐந்து நாட்களுக்கு ஒரு செய்தி வரவேண்டும்’ என்கிற மனோபாவம் மடத்தனமானது.

ஒரு காலத்தில் அரசியல் கட்சிகள் ஊடக முதலாளிகளைக் கைப்பற்றினார்கள். பிறகு ஊழல் பணத்தில் தாங்களே ஊடகங்களை நடத்த ஆரம்பித்தார்கள். தேர்தல் சமயங்களில் பாக்கேஜுகள் பேசி ஊடக கவனம் பெற்றார்கள். இது எதுவுமே சரிப்பட்டு வரவில்லையென்பதால் ஐடி விங்குகளைப் போல ஸ்லீப்பர் செல்களை உருவாக்கினார்கள். பத்திரிகை முதலாளியை வாங்குவதை விட அங்குள்ள இதழாளர்களைக் கைப்பற்றுவது எளிதென்று கருதினார்கள். அதன் தீவிளைவுகள் இப்போது ஒவ்வொன்றாக இந்தியா முழுக்க அம்பலப்பட்டு வருகிறது. கருத்தியல் அடிமைகள், கட்சி ஆதரவாளர்கள், ராஜ்ய சபா கனவுக்கான சாலையாக தங்கள் வியந்தோதல் கட்டுரைகளைக் கருதுபவர்கள் போன்றவர்கள் களையெடுக்கப்பட வேண்டும்.

எது செய்தி, எதைக் கவனப்படுத்துவதில் நாம் கவனம்செலுத்த வேண்டும், எவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் நமது பத்திரிகைகளுக்கு ஒரு அடிப்படை விழுமியம் இருக்கிறதா எனும் சந்தேகம் எனக்கு எப்போதும் இருக்கிறது. ராய்ட்டர்ஸ் போன்ற செய்திச் சேவையளிக்கும் நிறுவனங்கள், சர்வதேச ஊடகங்களுக்குச் சந்தா செலுத்தி வாசிக்கிற ஒருவனுக்கு இந்திய நாளிதழ்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் பழையவை போன்ற தோற்றமளிக்கக் கூடியவை. நமது இதழாளர்களின் அக்கறைகள் மாறிவிட்டனவோ என்று ஐயம் ஏற்படுகிறது. பல உதாரணங்களைச் சொல்லலாம். போஸ்னியா காட்டில் யானைகள் மர்மமாக இறந்தன. இன்றுவரை அதைப் பற்றி ஒரு உருப்படியான கட்டுரை வாசிக்கக் கிடைக்கவில்லை.

கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு முன்னேற்றம் பற்றியோ, வாய் கிழியப் பேசும் இந்திய அரசும் விஞ்ஞானிகளும் உலகளவில் இதில் எந்த இடத்தில் இருக்கிறார்களென்றோ பேசும் கட்டுரைகள் எதையேனும் வாசித்தீர்களா? இட ஒதுக்கீட்டில் கூமூட்டை கூட டாக்டராகி விடுகிறான் எனும் பொய் அன்றாடம் இங்கே விதைக்கப்படுகிறது. வெறும் அரை மார்க் கூட வித்தியாசம் இல்லை என்பதை அம்பலப்படுத்தும் புள்ளி விபரங்களுடன் ஒரு செறிவான கட்டுரையைப் பார்க்க முடியுமா? ஒரு சாமான்யன் தன்னால் விடை கண்டடைய முடியாத கேள்விகளுடந்தான் ஊடகங்கள் முன்னே அமர்கிறான். நம் இதழாளர்கள் சராசரிகளின் அறிவையும் இரசனையையும் விட கீழ்நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்திய நாளிதழ் வினியோக முறையில் அடிப்படையில் பரஸ்பர கூட்டுணர்வு இல்லாத காரணத்தால் ஏராளமான கோளாறுகள் உள்ளன. இரு உதாரணங்களின் மூலம் இதைப் புரிந்துகொள்ளலாம். நீலகீரி மாவட்டம் முழுக்க அனைத்து இதழ்களுக்கும் சேர்த்து பத்தாயிரம் வாசகர்கள் கூட கிடையாது. ஆனால், அன்றாடம் பத்திரிகைகளைச் சுமந்துகொண்டு ஐம்பது வண்டிகள் மலையேறுகின்றன. பத்தாயிரம் பிரதிகளுக்கு ஒரெயொரு சின்ன யானை ஆட்டோ போதுமானது. நேரத்தைக் கணக்கிட்டால் அதிகபட்சம் ஐந்து வண்டிகள் தேவைப்படலாம். இந்தியா முழுக்க இப்படி சக்தியும் ஆற்றலும் மனித உழைப்பும் வீணாகிக்கொண்டிருக்கிறது. இந்த ஒருங்கிணைப்பை யார் செய்வது?

பெருநகரங்களில் 300 வீடுகள் உள்ள அடுக்ககங்களில் சுமார் 50 வீடுகளில் நாளிதழ்கள் வாசிக்கிறார்கள். இதை வினியோகம் செய்ய 9 வெவ்வேறு முகவர்கள் நுழைகிறார்கள். எவ்வளவு பெரிய ஆற்றல் வீணடிப்பு? இன்று இந்தியாவின் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் அச்சு இதழ்கள் முகவாண்மையை எடுத்துச் செய்ய எவரும் ஆர்வம் காட்டுவதில்லை. குக்கிராமங்கள் வரை பால், செல்ஃபோன், இ-காமர்ஸ், ஓடிடி ஃப்ளாட்பார்ம்கள் நுழைந்துவிட்டது. 240 ஆண்டுகளாகியும் பாதி நாளிதழ்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. ‘கிராமங்களுக்குப் போ’ என்ற காந்தியின் சொற்படி தன்னை ஆழமாக நுழைத்துக்கொண்ட தினத்தந்தி இந்தப் புயலிலும் சரியாதிருக்கிறது.

அனைத்து பத்திரிகைகளும் ஒருங்கிணைந்தால் அச்சடிப்பதில், வினியோகம் செய்வதில், சந்தா தொகை வசூலிப்பதில், வாடிக்கையாளர் சேவை அளிப்பதில் எத்தனையோ மாற்றங்களை உண்டு பண்ண முடியும். ஆனால், செய்தித்தாள்கள் எதுவும் இந்த அடிப்படையான  விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை.

இந்தியப் பத்திரிகைகளை எந்த அரசும் காப்பாற்றாது. அழிந்து போகட்டும் என்றே உள்ளூர விரும்பும். ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் டிஜிட்டல் காட்டில் வாடிக்கையாளர்களை எளிதில் வேட்டையாட முடிவதால் தனியார்த்துறையும் இந்தியப் பத்திரிகைகளுக்கு இனி கை நீட்டாது. ஜனநாயகமும் நீதி பரிபாலனமும் பொது அறமும் நேர்மையான நிர்வாகமும் நீடித்திருக்க, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட, பண்பாட்டு அடையாளங்களுடன் குடிகள் தங்கள் வாழ்வைத் தொடர, மக்கள்தான் அச்சு ஊடகங்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு மக்களைத் தயார்படுத்துகிற பணியை அறம் சார் ஊடகங்களே மேற்கொள்ள வேண்டும்.