புத்தர் ஞானத்தில் கண்டடைந்தது என்ன?

0 comment

அரசயிலை

அரச மரத்தினடியில் அமர்ந்த துறவி கௌதமர் தனது ஒட்டுமொத்த மனவொருமிப்பு ஆற்றலால் தன்னுடலை ஆழ்ந்து உள்முகமாக நோக்கினார். தன்னுடலின் ஒவ்வொரு அணுவையும் முடிவற்றுப் பாயும் பிறப்பு, வாழ்வு, இறப்பு எனும் ஆற்றின் ஒரு துளியாகக் கண்டார். மாறாதவொன்றென எதுவும் அவ்வுடலில் இல்லை என்றும் தனித்ததொரு சுயமென எதுவுமில்லை எனவும் உய்த்தறிந்தார். உடலெனும் ஆற்றில் ஒன்றறக் கலந்தபடி உணர்ச்சிகள் எனும் வெள்ளமும் ஓட, ஒவ்வொரு உணர்ச்சியும் அவ்வாற்றின் ஒரு துளியாக இருப்பதைக் கண்டார்.

அத்துளிகள் பிறப்பு, வாழ்வு, இறப்பு எனும் சுழலில் ஒன்றோடொன்று முட்டி மோதுகின்றன. சில உணர்ச்சிகள் இனிமையாய் உள்ளன, சில வெறுப்பைத் தருகின்றன, சில வகைமையற்று உள்ளன. ஆனால், எல்லா உணர்ச்சிகளுமே நிச்சயமற்றவை. இவ்வுடலின் அணுக்களைப்போல தோன்றி மறையக் கூடியவையே. தனது மேலான மனவொருமிப்பின் மூலம், கௌதமர் உடலோடும் உணர்ச்சிகளோடும் இணையாய் ஓடும் கிரகிப்பெனும் ஆற்றை ஆராய்ந்தார். பிறப்பு, வாழ்வு, இறப்பு எனும் சுழலில் கிரகிப்பின் துளிகள் ஒன்றோடொன்று கலந்து, ஒன்றையொன்று உந்தித்தள்ளிப் போயின. ஒருவரின் கிரகிப்புகள் துல்லியமாக இருந்தால் நிதர்சனம் சுலபமாய் தன்னை வெளிக்காட்டும். அவ்வாறின்றிப் போனால், கிரகிப்புகள் தவறாகிப்போகும். நிதர்சனம் மறைவுறும். மக்கள் முடிவற்ற துயரத்திற்கு ஆட்படுவதன் காரணம், தவறான கிரகிப்புகளால்தான். அநித்தியமானதை நித்தியமென மக்கள் நம்புகிறார்கள். சுயமற்றதை சுயமென ஏற்கின்றனர், பிறப்பும் இறப்புமற்றதை பிறப்பும் இறப்புமாகக் கருதுகின்றனர். பிரிக்கவியலாததைக் கூறிட்டு பாகங்களாக்குகின்றனர்.

அடுத்ததாக கௌதமர் மனத்தின் நிலைகளின்மேல் தனது விழிப்புணர்வைப் பாய்ச்சினார். அவை துயரத்தின் மூலாதாரங்களான, கோபம், வெறுப்பு, திமிர், பொறாமை, பேராசை, அறியாமை என விரிந்தன. ஒளிர் சூரியனைப்போல மனவிழிப்புணர்வு பொங்கி, அவ்வெதிர்மறையான மனநிலைகளின் இயல்பை வெளிக்காட்டியது. அவை மனவிழிப்புநிலைக்கு முற்றிலும் எதிரானவை. அவை இருண்டவை – ஒளிக்கெதிரானவை. விடுதலைக்கான வழி அறியாமையைத் தகர்த்தொழித்து, நிதர்சனத்தின் உள்ளாழத்தில் நுழைந்து, நேரடி அனுபவத்திற்கு ஆட்படுவதே எனக் கண்டார். அப்படிப்பட்ட அறிவுநிலை புத்திபூர்வமாக அன்றி நேரடி அனுபவத்தினாலேயே கைகூடும்.

முன்பெல்லாம் சித்தார்த்தர் அச்சம், கோபம், பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடும் வழிகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அவ்வழிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் அவை உணர்ச்சிகளையும் மனவெழுச்சிகளையும் அழுத்தி வைக்கும் முயற்சிகளாகவே இருந்தன. தற்போது, அவற்றின் ஆதாரம் அறியாமையே என்பதை அறிந்துகொண்டார். ஒருவர் அறியாமையிலிருந்து விடுதலை பெற்றபின், மனத்தடைகள் தானாகவே சூரியவொளியைக் கண்ட இருளென ஒழிந்துபோகின்றன. சித்தார்த்தனின் இக்கண்டடைவு அவரது ஆழ்ந்த மனவொருமிப்பு நிலையால் விளைந்தது.

புன்னகைத்தபடி சித்தார்த்தர் அண்ணாந்து பார்க்க, அரசயிலைகள் நீலவானில் பதிந்திருப்பதாய்த் தோன்றின. இலைகளின் நீள் நுனி முன்னும்பின்னும் அசைந்தாடுவது அவரை அழைப்பதாய்ப் பட்டது. அரசயிலையைக் கூர்ந்து நோக்க, அதனுள், சூரியனையும் விண்மீன்களின் இருப்பையும் கண்டார் – சூரியனற்ற, ஒளியும் வெப்பமுமற்று, அவ்விலையால் உயிர்த்திருக்க முடியாதெனக் கண்டார். இது இப்படி இருக்கக் காரணம் அது அப்படி இருப்பதால். மேலும் அவர் இலையினுள் கருமேகங்களைக் கண்டார் – அம்மேகங்கள் இல்லையெனில், மழையில்லை. மழையின்றி இலை வாழ இயலாது. அதனுள் மேலும் நிலம், காலம், பரவெளி, மனம் என அனைத்தையும் கண்டுணர்ந்தார். உண்மையில் அக்குறிப்பிட்ட தருணத்தில், மொத்த பிரபஞ்சமும் அவ்விலையினுள் இருப்பதைக் கண்டார். அவ்விலையின் நிதர்சனம் ஓர் அருநிகழ்வாகும்.

வசந்தகாலத்தில் இலை துளிர்க்குமென நாம் சாதாரணமாக எண்ணிக் கொள்வோமாயினும் அது காலங்காலமாக, நீண்டகாலத்திற்கு முன்னரே, சூரியனில், மேகங்களில், மரத்தில், தன்னுள்ளேயே கூட இருந்து வருவதை கௌதமரால் காண முடிந்தது. அவ்விலை ஒருபோதும் பிறக்கவில்லை என்று காணமுடிந்ததால், தானும் அவ்வாறே பிறப்பற்று இருப்பதை அறிந்தார். அவ்விலையும் தானும் வெறுமனே ஒரு வெளிப்பாடே என்றுணர்ந்தார். அவை ஒருபோதும் பிறக்கவில்லை, எனவே ஒருபோதும் இறக்கவும் முடியாது. இந்நுண்ணறிவால் பிறப்பு இறப்பு, தோற்றம் மறைவு ஆகிய கருத்துகள் கரைந்துபோயின. அதனால் இலையினதும் தனது உண்மையான முகமும் வெளிப்பட்டது. ஏதாவது ஒன்றின் இயல்நிகழ்வு ஏனையதின் நிகழ்வுக்கு வழிவகுக்கின்றது என்பதைக் கண்டார். ஒன்று அனைத்தையும் தனக்குள் அடக்கிவைத்துள்ளது, அனைத்தும் ஒன்றில் அடக்கம்.

அவ்விலையும் தனது உடலும் ஒன்றே. எவ்வொன்றும் ஒரு தனித்த, நிலையான சுயத்தைக் கொண்டிருக்கவில்லை. பிரபஞ்சத்திலிருந்து விடுபட்டு எவ்வொன்றும் தன்னிச்சையாய் உயிர்த்திருக்க இயலாது. அனைத்தின் ஒன்றோடொன்று சார்ந்திருக்கும் இயல்பைக் கண்ட சித்தார்த்தர் அனைத்து இயல்நிகழ்வின் சூன்யத்தன்மையை கண்ணுற்றார். அனைத்தும் தனித்த, பிரிந்துபட்ட சுயத்தைக் கொண்டிருக்கவில்லை. விடுதலைக்கான வழி ஒன்றோடொன்றான சார்புப்பண்பிலும், சுயமற்ற பண்பென இரு கோட்பாடுகளில் அடங்கியுள்ளதென அறிந்தார். மேகங்கள் வான்பரப்பில் கலைந்து சென்றன. வெண் பின்புலத்தில் பசிய அரசிலை தென்பட்டது. அவ்வெண்பொதிகள் ஒருக்கால் மாலையில் ஈரிப்புற்று, கனத்து மழையாக மாறலாம். முகில்கள்கள் ஒரு வெளிப்பாடு; மழையும் அப்படியே. மேகங்களும் பிறந்து மறைவதில்லை. கார்மேகங்கள் அவ்வுண்மையை உணர்ந்திடின், மழையென மண்ணில் விழுகையில் உவகை பொங்கப் பாடி மலைகளில், காடுகளில், வயல்களில் ஓடி மகிழும்.

தனது உடல், உணர்ச்சிகள், கிரகிப்புகள், மனவுருவாக்கங்கள், விழிப்புநிலை ஆகிய ஆறுகளை உற்றறிய, சுயத்தின் சூன்யத்தன்மையையும் அநித்தியப்போக்கையும் சித்தார்த்தர் புரிந்துகொண்டார். அவையிரண்டும் உயிர்வாழ்வுக்குத் தேவைப்படும் நிபந்தனைகள் என்றறிந்தார். அநித்தியமும் சுயத்தின் இன்மையும் இல்லாவிடில் எதுவுமே வளரவோ மேம்படவோ முடியாது. நெல்விதையொன்று நிலையற்ற தன்மையும், சுயத்தின் இன்மையும் இல்லாவிடில், அது ஒரு நெற்கதிராக மாறவியலாது. மேகங்கள் நிலையற்றும் சுயமற்றும் இல்லாவிடில் அவை மழையாகப் பரிமளிக்க முடியாது. நிலையற்றும் சுயமற்றும் இல்லாவிடில் ஒரு குழந்தை வளர்ந்து பெரியவராக முடியாது. “எனவே, இவ்வாழ்வை ஏற்றுக்கொள்வது என்பது, சுயத்தின் நிலையற்ற, சூன்யப்பண்பை ஏற்றுக்கொள்வதாகும்” என்றறிந்தார். “துயரம் தொடங்குவது நிலையான ஒன்றிலும், தனிப்பட்ட சுயத்திலும் வைக்கப்பட்ட நம்பிக்கையின் விளைவாகும். இதையறிந்ததும், இங்கே பிறப்புமில்லை, இறப்புமில்லை, உற்பவிப்புமில்லை, நிர்மூலமுமில்லை, ஒன்றோ பலவோ, உள்ளே வெளியே சிறியது பெரியது தூய்மையானது அழுக்கானது என எதுவுமில்லை என்று புரிந்துபோகிறது. அதுபோன்ற அனைத்துக் கருத்துகளும் புத்தியால் உருவாக்கப்பட்ட தவறான வகைப்பாடுகள். அனைத்தின் வெற்றுத்தன்மையை ஒருவர் ஊடுருவிப் பார்த்தால் எல்லா மனத்தடைகளையும் ஒருவரால் கடந்துபோக இயலும். துயரத்தின் சுழற்சியிலிருந்து விடுபட இயலும்.”

அரசமரத்தின் அடியில் ஓரிரவிலிருந்து அடுத்த இரவுவரை கௌதமர் தியானித்தார். தனது விழிப்புணர்வின் ஒளியை, தனது உடல், மனம், பிரபஞ்சமனைத்திலும் பாய்ச்சினார். அவரது ஐந்து நண்பர்களும் அவரை என்றோ கைவிட்டுப் போய்விட, காடும் ஆறும் பறவைகளும் பூமிக்கடியிலும் மரங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான பூச்சிகளுமே தற்போதில் அவரது துணையாக இருந்தன. அம்மகத்தான அரசமரம் அவரது பயிற்சியில் சகோதரன். ஒவ்வோர் இரவும் தியானிக்கையில் வானில் தென்படும் விடிவெள்ளியும் அவரது சகோதரன். அப்படி இரவெல்லாம் தொடர்ந்து தியானித்து வந்தார்.

முற்பகல் வேளைகளில்தான் கிராமத்துச் சிறார்கள் அவரைக் காண வந்தனர். ஒருநாள் பாலும் தேனும் கலந்த அரிசிக்கஞ்சியை சுஜாதா கொண்டுவந்து கொடுத்தாள். புதிதாய் அறுத்த குசா புற்கட்டொன்றை சுவாஸ்தி தந்தான். எருமைகளை வீடுசேர்க்க சுவாஸ்தி சென்றவுடன், கௌதமருக்கு அன்றிரவே தான் மாபெரும் விழிப்பை, உள்ளொளியை அடையப்போவதாகத் தோன்றியது. முந்தைய இரவில் அசாதாரணக் கனவுகள் நிகழ்ந்தன. ஒன்றில் ஒருபக்கமாய் தான் படுத்திருக்க, மடக்கிய முட்டி இமாலயத்தை உரச, இடதுகால் குண கடலையும், வலதுகால் குடகடலைத் தொட்டிருக்க, இருபாதங்களும் தென்கடலில் அமைந்திருப்பதாய்க் கண்டார். இன்னொன்றில், தனது தொப்புளில் இருந்து தேர்ச்சக்கரத்தின் அளவிலொரு பெரிய தாமரை மலர் வளர்ந்து பெருகி வானுயரே மேகங்களினூடே மிதந்தது. மூன்றாவதில், எண்ணிறந்த வண்ணப் பறவைகள் எல்லா திசைகளிலும் இருந்து அவரை நோக்கிப் பறந்து வந்தன. இக்கனவுகள் அவரது அதியுன்னத மெய்ஞான அடைதலுக்கான முன்னறிவிப்பாகின.

அன்றைய முன்மாலைப்பொழுதில், ஆற்றங்கரையோரம் நடைத்தியானத்தில் சென்றார். ஆற்றுக்குள் இறங்கிக் குளித்தார். அந்தி சாய, பழகிய அரச மரத்தினடியில் அமர்ந்தார். அங்கே புதிதாக பரப்பப்பட்டிருந்த குசா புற்களைக்கண்டு புன்னகைத்தார். அம்மரத்தின் கீழேதான் பல அரிய கண்டறிதல்களை அவர் தியானத்தின் மூலம் பெற்றிருந்தார். அவர் வெகுகாலமாகக் காத்திருந்த பொற்கணம் நெருங்கிக்கொண்டிருந்தது. மெய்ஞானத்திற்கான வாசல் திறக்க உள்ளது.

மெல்லென பத்மாசனத்தில் அமர்ந்தார். தூரத்தில் அமைதியாகத் திரண்டோடும் ஆற்றைக் கண்டார். மிக மிருதுவாக மென்காற்று அதன் கரைகளில் முளைத்திருந்த புற்களை வருடிப்போனது. இரவில் காடு வீறமைதி கொண்டு உயிர்ப்புடன் திளைத்திருந்தது. வேறு புழு பூச்சிகள் அவரைச் சுற்றி கிசுகிசுத்துப்போயின. தனது சுவாசத்தில் விழிப்புணர்வைக் கொண்டு சென்று, லேசாக கண்களை மூடிக்கொண்டார். விடிய வரும் விண்மீன் ஒன்று கீழ்வானில் சுடர்ந்தது.

விடிவெள்ளி எழுந்தது

மனவிழிப்புநிலையின் மூலம் சித்தார்த்தரின் மனம், உடல், சுவாசம் யாவும் பூரணமாய் ஒன்றாயின. அவரது மனவிழிப்புநிலைப் பயிற்சி மேலான மனவொருமிப்பு ஆற்றலைப் பெற்றுத்தந்தது. அவ்வாற்றல் கொண்டு தனது உடலையும் மனதையும் விழிப்புணர்வின் ஒளிகொண்டு மிளிரச்செய்தார். தியானத்திற்குள் ஆழ்ந்து நுழைகையில், தனது சொந்த உடலில் எண்ணற்ற பிற உயிர்களின் இருப்பை தற்கணத்தில் உய்த்தறிந்தார். உயிருள்ளவை, பருப்பொருள்கள், தாதுக்கள், பாசிகள், புற்கள், பூச்சிகள், விலங்குகள், பிற மாக்கள், மக்களென யாவற்றையும் தன்னுள் கண்டார். தற்கணத்தில் பிற உயிர்களனைத்தையும் தாமாகவே உணர்ந்தார். தனது கடந்தகாலத்தையும், எல்லாப் பிறப்பு இறப்புகளையும் கண்ணுற்றார். கோடிக்கணக்கான உலகங்களின், விண்மீன்களின் உருவாக்கத்தையும் அழிவையும் கண்ணுற்றார். ஒவ்வொரு உயிரின் – தாய்வழியிலும் முட்டையிலிருந்தும், பிளவுற்று புதிய உயிரெனப் பிறந்தவற்றின் துயரங்களையும் குதூகலங்களையும் உணர்ந்தார். தன்னுடலின் ஒவ்வொரு அணுவும் எல்லாப்பர உலகையும், நேற்று இன்று நாளையெனும் முக்காலத்தையும் கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். அது இரவின் முதல் சாமமாய் இருந்தது.

கௌதமர் மேலும் ஆழ்ந்து தியானத்திற்குள் நுழைந்தார். எண்ணிலடங்கா உலகங்கள் எங்ஙனம் தோன்றி பின் வீழ்ந்தன, உருவாகி அழிவுற்றன என்று கண்டார். எண்ணிலடங்கா உயிர்கள் எங்ஙனம் பிறந்து மரித்தன என்றும், அப்பிறப்பும் மரணமும் வெறும் வெளித்தோற்றமே அன்றி நிதர்சனமல்ல என்றும், லட்சக்கணக்கான அலைகள் கடல்மேல் ஓய்வற்றுத் திரிந்தலைவது போன்றதே என்றும், அதற்குமேலாக கடல் ஆழம் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டதென்றும் தெளிந்தார்.

தாம் கடல்நீரே தான் என்று அலைகள் புரிந்துகொண்டால் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பால் சென்று, அனைத்து பய உணர்வையும் கடந்து, உண்மையான உள்ளமைதியை அவற்றால் அடையமுடியும். இவ்வறிவால்தான் பிறப்பு இறப்பு எனும் வலைக்கப்பால் கௌதமரால் செல்ல முடிந்தது. அவர் புன்னகைத்தார். பூவிதழாய் மலர்ந்த அப்புன்னகை ஆழ்ந்த இரவினூடே நின்று ஒளிர்ந்தது. அனைத்து களங்கங்களும் அழிந்த உள்ளொளி சுடரும் அற்புதமான அறிதலின் புன்னகை அது. இரண்டாம் சாமத்தில் அப்புரிதலின் தளத்தை அவர் அடைந்தார்.

அக்கணத்தில் இடி முழங்கிற்று. வான்வெளியில் பெருமின்னல் கிளைத்தோடி ஒளிர்ந்தது. வானத்தை அது இரண்டாகப் பிளப்பதாய்த் தோன்றிற்று. கார்முகில்கள் நிலவையும் உடுக்களையும் மறைத்து நின்றன. மழை பொழிந்தது. கௌதமர் நனைந்தாலும் சளைக்காமல் தியானத்தைத் தொடர்ந்தார்.

அலைவுறாமல், தனது விழிப்புணர்வை மனதில் ஒளிரவிட்டார். பொதுவானதொரு தளத்தை பிற உயிர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளாததால் தான் மனிதர்கள் துன்புறுகின்றனர் என்றறிந்தார். அறியமையெனும் இருள் எண்ணிறந்த துயரங்களையும் குழப்பங்களையும் சிக்கல்களையும் தருகிறது. பேராசை, கோபம், அகங்காரம், சந்தேகம், பொறாமை, அச்சம் என அனைத்தும் அறியாமை எனும் வேரிலிருந்து வளர்கின்றன. செயல்களின் உண்மையான பண்பை ஆழ்ந்து நோக்கும் பொருட்டு நம் மனதை அமைதியுறக் கற்றுக்கொண்டு விட்டால் முழுதான புரிதலை அடைந்து அதன்மூலம் ஒவ்வொரு துயரத்தையும் பதற்றத்தையும் கரைத்து, நிகழ்வை ஏற்கலாம், அன்பு கூரலாம்.

அறிதலும் அன்பும் ஒன்றே என்பதை கௌதமர் கண்டார். அறிதலின்றி அன்பிருக்க முடியாது. ஒவ்வொருவரின் மனப்பான்மையும் பண்பும் உடல், மனவெழுச்சி, சமூக நியதிகள்கள் ஆகியவற்றின் விளைவாகும். இதைப் புரிந்துகொண்டால், குரூரமாக நடந்துகொள்பவரைக்கூட நம்மால் வெறுக்க இயலாதுபோகும். அன்பு செலுத்தவேண்டுமானால், முதலில் புரிந்துணர்வு இருக்க வேண்டியது அவசியம். எனவே புரிந்துகொள்வதே விடுதலைக்கான திறவுகோல். தெளிந்த அறிவை அடைய வேண்டுமாயின், இத்தருணத்தில் இவ்வாழ்வுடன் நேரடித் தொடர்புகொண்டு மனவிழிப்புடன் இருத்தல் தேவை. ஒருவரின் உள்ளும் புறமும் என்ன நிகழ்கிறது என்பதை உண்மையாகக் காண வேண்டும். மனவிழிப்புநிலையைப் பயிலுதல் ஆழ்ந்து நோக்கும் திறனை வலுப்படுத்துகிறது. எவ்வொன்றின் இருப்பையும் ஆழ்ந்து நோக்கினால் அது தன்னை வெளிப்படுத்திக் காட்டும். இதுவே மனவிழிப்புநிலை எனும் செல்வத்தின் மேலான இரகசியம். அது விடுதலைக்கும் உள்ளொளிக்குமான வழியில் நம்மை நடத்தும். சரியான புரிந்துணர்வு, சரியான சிந்தனை, சரியான வாக்கு, சரியான செயல், சரியான பிழைப்புக்கான வழி, சரியான முயற்சி, சரியான மனவிழிப்புநிலை, சரியான மனவொருமை ஆகியவை வாழ்க்கையை ஒளிரச் செய்கின்றன. சித்தார்த்தர் இதை உன்னதப் பாதையாக, அரிய மார்க்கம் என்றழைத்தார்.

அனைத்து உயிர்களின் இதயத்தை ஆழமாய் ஊடுருவிப் பார்த்த சித்தார்த்தர் அனைத்து மனங்களைப் பற்றிய உள்ளொளியைப் பெற்றார். எத்தனை தூரத்திலிருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரின் துயரங்களின் குதூகலங்களின் குரல்களைக் கேட்டறிந்தார். பூரண பார்வையுடன் அசைவற்று, ஆனால், அனைத்து தூரங்களுக்கும் பயணித்தறிவதற்கான நிலையை அடைந்தார். அது மூன்றாம் யாமத்தின் இறுதியாய் இருந்தது. இடிமுழக்கங்கள் ஓய்ந்தன. மேகங்கள் கலைந்து சென்றன. ஒளிர் நிலவும் சுடர்மீன்களும் தோன்றின.

ஏதோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கட்டுண்டிருந்த வாழ்வின் சிறை உடைவுற்றதாய் உணர்ந்தார். அறியாமையே சிறைக்காவலர். அவ்வறியாமையினால் சூறை மேகங்கள் நிலவையும் நட்சத்திரங்களையும் மூடிவைத்திருந்ததுபோல் அவர் மனதும் மறைக்கப்பட்டிருந்தது. முடிவற்ற மருள் எண்ணங்களின் அலைகள் மறைத்ததால், இயலுலகு காட்சிப் பொருள் – காண்பவர், தான் – பிறர், இருப்பு – இல்லாமை, பிறப்பு – இறப்பு என பொய்யாகப் பிரிதுற்றது. இப்பிரிவினைகளால் தவறான மனப்போக்கு உருவாகி உணர்ச்சிகளால், ஏக்கங்களால், பற்றுகளால், எதுஎதுவாகவோ ஆக விழைந்து, சிறைப்பட்டுப் போனது. பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகிய துன்பங்கள் அச்சிறையின் சுவர்களை இன்னும் பெருக்கச் செய்தன. செய்ய வேண்டியதெல்லாம், அச்சிறைக் காவலரைப் பிடித்து, அவரின் உண்மையான முகத்தைக் காண்பதேயாகும். அறியாமையே அச்சிறைக் காவலர். எட்டு உன்னதப் பாதைகளே அறியாமையை விலக்கும் வழி. அச்சிறைக்கவலர் விலகினால் சிறையும் ஒழிந்துபோகும். இனி ஒருபோதும் அச்சிறை மீண்டும் கட்டப்படாது.

கௌதமமுனி முறுவலித்தபடி,”ஏ சிறைக்காவலனே, இப்போது உன்னைக் காண முடிகிறது. எத்தனை பிறவிகளுக்கு பிறப்பு இறப்பெனும் சிறையில் எனைப் பூட்டி வைத்திருப்பாய்? ஆனால், இப்போது உனது முகத்தை என்னால் தெளிவாகக் காணமுடிகிறது. இக்கணத்திலிருந்து என்னைச்சுற்றி எந்தவொரு சிறையையும் உன்னால் கட்டமுடியாது” எனத் தனக்குள் கூறிக்கொண்டார்.

நிமிர்ந்து நோக்கியபோது அடிவானில் விடிவெள்ளி தோன்றி பெரு வைரமாய் மின்னிற்று. அரசமரத்தடியில் இவ்வாறு அமர்ந்து பல முறை அவ்விடிவெள்ளியைக் கண்ணுற்றிருந்த போதிலும் அந்தக் காலைப்போதில் அதை முதல்முறை புதிதாய்க் காண்பதாய் உணர்ந்தார். அதை சித்தார்த்தர் ஊன்றிப் பார்த்தபடி, “அனைத்துயிர்களும் உள்ளொளிக்கான விதையைத் தம்முள் கொண்டுள்ளன. எனினும், பிறப்பு இறப்பெனும் விரிகடலில் ஆயிரமாயிரம் பிறவிகளாய் மூழ்கிப்போய்க் கிடக்கின்றனர்” என மிகுந்த கருணையுடன் உரைத்தார்.

மாபெரும் பாதையைத் தான் கண்டடைந்ததை உணர்ந்தார். இலக்கை அடைந்தார். பூரண அமைதியையும்  இலகுவையும் அவரது இதயம் அனுபவித்தது. தனது நீண்ட காலத் தேடலைப் பற்றியும், அதன்வழி வந்த இன்னல்களையும் ஏமாற்றங்களையும் பற்றி எண்ணினார். தனது தந்தை, தாய், அத்தை, யசோதரை, ராகுலன், நண்பர்களைப் பற்றியும் நினைவுகூர்ந்தார். தான் வாழ்ந்த அரண்மனை, கபிலவத்து, தனது மக்கள், நாடு, வறுமையில் துயருறும் குடிகளையும், குறிப்பாகக் குழந்தைகளையும் நினைவுகூர்ந்தார். துன்பங்களிலிருந்து அவர்களாகவே விடுதலை பெற தான் உய்த்துணர்ந்து கண்டடைந்த வழியை அவர்களுக்குக் கற்றுத்தர உறுதி பூண்டார். அவரது ஆழ்ந்த உள்ளொளியின் வழி அனைத்துயிர்களுக்குமான பேரன்பைச் சுரந்தார்.

புல்மேவிய ஆற்றங்கரை மருங்கே, அதிகாலைக் கதிர் ஒளியில் வண்ணமலர்கள் பூத்திருந்தன. இலைகளில் நடனமாடி, நீர்த்துளியில் சூரியன் மின்னிற்று. அவரது வலி போய்விட்டது. வாழ்வின் எல்லா அதிசயங்களும் தம்மை வெளிக்காட்டின. யாவும் ஆச்சரியமூட்டும் வகையில் புதிதாய்த் தென்பட்டன. எத்தனை அற்புதம் அந்நீல வானமும் திரள் வெண்மேகங்களும்! இப்பிரபஞ்சத்தின் யாவும் புதிதாய்ப் படைக்கப்பட்டதோவென உண்ர்ந்தார்.

அத்தருணம், சுவாஸ்தி தென்பட்டான். எருமை மேய்க்கும் அவ்விளம் சிறுவன் அவரை நோக்கி ஓடிவருவதைக் கண்ட சித்தார்த்தர் முறுவலித்தார். தனது ஓடுபாதையில் சட்டென நின்ற சுவாஸ்தி அவரை ஏறிட்டு நோக்கினான். வாய் பிளந்தான். “சுவாஸ்தி!” என அவர் அழைத்தார். அவன்  உணர்வுற்று, “ஆசிரியரே!” என்றான்.

கைகூப்பி வணங்கிப் பணிந்தான். சில அடிகள் முன்னெடுத்து பின் மீண்டும் அவரைக் கூர்ந்தான். ஆச்சரியம் கொண்டான். தனது நடத்தையை உணர்ந்து நாணி, தடைப்பட்டு தயங்கிப் பேசினான், “நீங்கள் இன்று வித்தியாசமாக  இருக்கிறீர்கள்.”

அவனை அருகே வரும்படி சைகை செய்த சித்தார்த்தர், அவனது கைபற்றி வினவினார், “இன்று அப்படி என்ன மாற்றத்தை என்னில் கண்டாய்?”

அவரை நிமிர்ந்து பார்த்து, “சொல்வது கடினமாக உள்ளது. நீங்கள் வேறுமாதிரி தென்படுகிறீர்கள், அவ்வளவே” என்றான்.

அவனது தலை தொட்டபடி, “அப்படியா அது? வேறெப்படித் தென்படுகிறேனாம்?”

“இப்போதுதான் மலர்ந்த தாமரை போல தென்படுகிறீர்கள். கயசிசா சிகரத்தின் மேல் ஒளிரும் நிலவைப் போலவும்.”

சுவாஸ்தியின் கண்களுக்குள் ஊடுருவியபடி வினவினார், “நீ பெரிய கவிதான் போ! சரி, இப்போது சொல், நீ ஏன் இத்தனை அதிகாலையில் இங்கு வந்தாய்? உனது எருமைகள் எங்கே?”

எல்லா எருமைகளும் கழனியில் ஏரோட்ட இழுத்துச் செல்லப்பட்டதால் அன்று அவனுக்கு ஓய்வென்றான். தொழுவத்தில் கன்றுகள் மட்டும் நிற்கின்றன. அன்றைக்கு அவனது ஒரே வேலை புல்லறுப்பதெனக் கூறினான். கடந்த இரவின் இடி முழக்கம், மின்னல்களால் அவனும், அவனது சகோதரிகளும் தம்பியும் தூக்கம் தொலைத்தனர். ஒழுகும் கூரைவழி நீர் வழிந்து தரைப்பாயை நனைத்துப்போனது. அதுகாறும் அத்துணை உக்கிரமான மழைச்சீற்றத்தை அவர்கள் கண்டதில்லை. அப்போது காட்டில் கிடக்கும் சித்தார்த்தரை நினைத்து வருந்தினர். பெருமழை ஓயும்வரை ஒருவரையொருவர் ஒட்டியணைத்துக் கிடந்தனர். பிறகு தூங்கிப் போயினர். பொழுது புலர்ந்ததும், எருமைத் தொழுவத்திற்கு ஓடிப்போய் அரிவாளையும் புல்லைக்கட்டி வரும் குச்சியையும் எடுத்துக் கொண்ட சுவாஸ்தி நேராக சித்தார்த்தர் எப்படி இருக்கிறார் என்பதை அறியும் தீவிரத்துடன் காட்டிற்குள் ஓடி வந்தான்.

சித்தார்த்தர் சுவாஸ்தியின் கையைப் பற்றிக்கொண்டார். “இன்றுபோல் நான் என்றும் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்ததில்லை. முடிந்தால் இன்று மதியம் அவ்வரச மரத்தடியில் அனைத்து சிறுவர் சிறுமிகளையும் அழைத்து வா. உனது சகோதரிகளையும் தம்பியையும் கூட்டிவர மறந்துவிடாதே. இப்போது உனது எருமைகளுக்குத் தேவையான குசாப் புற்களைப் போய் அறுத்தெடு” என்றார்.

குதூகலித்து சுவாஸ்தி ஓடினான். சித்தார்த்தர் சூரியவொளியில் மிருளிம் ஆற்றங்கரையோரம் நிதானமாக மென்னடை பயின்றார்.

*

ஜென் துறவி திக் நாட் ஹஞ் எழுதிய ‘பழைய பாதை வெண் மேகங்கள்’ எனும் புத்த சரிதையின் இரண்டாம் பாகத்தின் இரு அத்தியாயங்கள். தமிழில் – வி.அமலன் ஸ்டேன்லி, தமிழினி வெளியீடு.

Leave a Comment