எம்.ஜி.ஆர் – சிவாஜி இரு துருவப் போட்டி ஒரு பக்கம். இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் இருவருக்கும் தனித்த இரசிகர்கள் இருந்தார்கள். ஏ.சி.திருலோக்சந்தர், பி.மாதவன், எஸ்.பி.முத்துராமன், தேவராஜ் மோகன், சிவி.ராஜேந்திரன், கே.ஷங்கர், கே.விஜயன் எனப் பல கமர்சியல் இயக்குநர்களுக்கென்று தொடர்ந்த பட வரத்துகள் இருந்தன. எழுபதுகளின் மத்தியில் இந்திய சினிமாவில் நிகழ்ந்த மாபெரும் ஆளுமை உருவாக்கங்கள் என்று இளையராஜா, பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஜே.மகேந்திரன் ஆகிய நால்வரைச் சொல்லலாம். தமிழ் சினிமாவின் அடுத்தகட்டப் பாய்ச்சலைக் கரமேற்று களம் கண்டவர்கள் இவர்களாகவும் இவர்களுடன் சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.
எம்ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்பேற்றதன் பின்னாலும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆர்வத்தோடு இருந்தார். அவரது புதிய படங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தன. அதில் இளையராஜா இசையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் படம் ஒன்று உருவாக இருந்து அது வெறும் செய்தியாகவே முடிந்துபோனது. ஒருவேளை அந்தப் படம் வளர்ந்து வெளியாகி இருக்குமேயானால் எம்.ஜி.ஆர் – இளையராஜா இருவரது சரித்திரத்திலும் ஒரு முக்கியக் கூறாக இருந்திருக்கும் என்பதில் கருத்து மாற்று இல்லை.
சிவாஜி நடிப்பில் இளையராஜா இசையமைக்கத் தொடங்கிய 1976ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகள், அதாவது 1992ஆம் ஆண்டு வெளியான ‘நாங்கள்’ எனும் திரைப்படம் வரை (என் கணக்குப்படி) 20 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தீபம், தியாகம், நல்லதொரு குடும்பம், ரிஷிமூலம், வெற்றிக்கு ஒருவன், கவரிமான் என இளையராஜா இசையமைத்த சிவாஜி படங்கள் பலவும், பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகிய இரு தளங்களிலும், சிவாஜி கணேசனின் பரம இரசிகர்களைத் திருப்திப்படுத்தவே செய்தது. சிவாஜி கணேசனின் நெடுங்கால குரல் முகமாக விளங்கிய டி.எம்.சௌந்தரராஜன், இளையராஜா இசையில் மேற்சொன்ன படங்கள் பெரும்பாலானவற்றில் சிவாஜிக்கான பாடல்களைப் பாடினார். பிற்பாடு டி.எம்.எஸ் குரலுக்குப் பதிலாக, எஸ்.பி.பி, ஜேசுதாஸ் ஆகிய குரல்களைப் பயன்படுத்துவதன் ஊடாக, மலேசியா வாசுதேவனை சிவாஜிக்கான பொருத்தக் குரலாக வார்த்தெடுத்த இளையராஜா, மலேசியா வாசுதேவன் – சிவாஜி இணைப்பில் பல நல்ல பாடல்களை உருவாக்கினார்.
எண்பதுகளின் தொடக்கத்தில், சிவாஜியின் இரண்டாவது மகன் பிரபு, இளையதிலகம் என்கிற வாழ்த்துக்குறிப்புடன் ‘சங்கிலி’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், வழக்கமான நாயக கதாபாத்திரங்களில் இருந்து சற்றே விலகி, தன் வயதுப் பொருத்தத்துடன் கூடிய பாத்திரங்களைத் தேடி நடிக்க சிவாஜி முன்வந்தார். மறுபுறம், தெளிவான இரசிக பலத்துடன் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கலானார் பிரபு. ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில், சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம்குமார் தன் இளவல் பிரபுவுடன் நடிகராக அறிமுகமானார். அவர் தொழில்முறை நடிகராகத் தொடரவில்லை. சிவாஜி நடித்த 20 படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். 21வது படமாக, பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1997ஆம் வருடம் மலையாளத்தில் வெளிவந்த “ஒரு யாத்ரா மொழி” திரைப்படம்தான் சிவாஜி நடிப்பில் இளையராஜா இசையமைத்த கடைசி படம் என்றானது.
எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்குப் பிறகு, அடுத்த நிகர் நட்சத்திர ஆளுமைகளாக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டனர். இவர்கள் இருவரில், 1960ஆம் வருடம் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் கமலஹாசன். பிற்பாடு துணை நடன இயக்குநராக தங்கப்பன் மாஸ்டரிடம் பணிபுரிந்து, தன்னுடைய பதின்ம வயதில் பாலசந்தர் உள்ளிட்டோரின் தமிழ், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து, தென்னகத்தின் கவனத்துக்குரிய இளம் நடிகராக உருவெடுத்து வந்தார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் ரஜினிகாந்துக்கும் கமல்ஹாசனுக்கும் மிகப்பெரிய வெளிச்சத்தை உருவாக்கியது. கமல்ஹாசன் நடிப்பில் 1977ஆம் ஆண்டு உருவான 16 வயதினிலே படத்தில் தொடங்கி 2005ஆம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் வரை 57 திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.
கடந்த வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று OTT தளத்தில் வெளியான ‘Happi’ என்ற ஹிந்தி படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் கமல்ஹாசன். ரஜினிகாந்த் பாடிய ஒரே பாடல், இளையராஜா இசையமைப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்றது. ‘அடிக்குது குளிரு’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலை ரஜினிகாந்துடன் இணைந்து பாடியவர் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி. கடந்த 26 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘வீரா’ திரைப்படம்தான் இளையராஜா இசையில் ரஜினி தோன்றிய கடைசிப் படம் ஆகும். ரஜினிகாந்த் நடிப்பில் 1977ஆம் வருடம் வெளியான ‘கவிக்குயில்’ படத்தில் தொடங்கி 1994ஆம் ஆண்டு வெளியான வீரா திரைப்படம் வரை 53 திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இளையராஜா கமர்சியல் செல்லப்பிள்ளையாக எழுபதுகளின் இறுதியில் மாறியதற்கு அவருடைய திறமையே முழுமுதற் காரணம். அதைத் தாண்டி இசையமைப்பில் அவர் காட்டிய வேகம் முழுமையான காரணமாக மாறியது. ஒவ்வொரு பாடலுக்கும் அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் நம்ப முடியாதது. இளையராஜா பாடல்களை உருவாக்குகிற வேகம் குறித்த நம்ப முடியாத வியத்தலை பலரும் தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கிறார்கள். இந்த இடத்தில், ஒரு பாடலை உருவாக்குவதில் பொருட்செலவும் காலச்செலவும் ஒன்றோடொன்று இயைந்து பயணிக்கக் கூடியது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். வேகமாகவும் சீக்கிரமாகவும் அவசரமாகவும் திறமையாகவும் இசையமைப்பது என்பது உண்மையிலேயே ஒரு அபூர்வத் திறமைதான். அதனை அநாயாசமாக செய்யத் தொடங்கினார் இளையராஜா.
சினிமாவில் இரண்டு பேர் இணைந்து பணியாற்றி, ஒரு வெற்றிக்குப் பின்னால் அந்த இருவரது கூட்டு தொடர்ந்து பல படங்களுக்கு நீடிப்பதும் பிற்பாடு அப்படியான கூட்டு உடைவதும், இவை எல்லாமே வெகு இயல்பாக நடந்தேறுகிற விஷயங்கள்தான். திரையுலகில் இளையராஜா காலெடுத்து வைக்கும்போது ஸ்ரீதர், சிவாஜி கணேசன், பாலச்சந்தர், தேவராஜ், மோகன், பி.மாதவன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விஜயன் கே.சங்கர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் பல படங்களில் பணிபுரிந்து வெற்றிகரமான திரை ஆளுமைகளாக விளங்கியவர்கள். புதுமுக இசையமைப்பாளராக தன்னுடைய முதல் படமான அன்னக்கிளி படத்தின் மூலம் பாடல்களிலும் பின்னணி இசையிலும் இளையராஜா காட்டிய வித்தியாசங்களும் தொடர்ந்து அவருடைய பாடல்கள் வெற்றி பெற்றதும் அவரைப் பலரும் அணுகக் காரணமாக அமைந்தது.
இந்த நேரத்தில் எழுபதுகளின் மத்தியில் இளையராஜாவுக்கு படர்க்கையில் திரையுலகில் அறிமுகமான படைப்பாளிகளான ருத்ரய்யா, மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.சி.சக்தி, கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே பின்னலின் அடுத்த கண்ணி போல சக படைப்பாளிகளாக வெற்றிகரமாக விளங்கினர். முதல் ஐந்து வருடங்களில் 100 திரைப்படங்களைத் தாண்டிய பிற்பாடு, எண்பதாம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்த் திரையுலகின் முதன்மை முகமாக இளையராஜா மாறினார். ஒருபுறம் அவருக்கு முந்தைய சினிமா ஆளுமைகள், மறுபுறம் அவரது படர்க்கை ஆளுமைகள் – இவர்களோடு ராஜாவுக்குப் பிறகு – எண்பதாம் ஆண்டு தொடங்கி திரையுலகத்தில் அறிமுகமான இயக்குநர்கள் அனைவரும் தங்களது படத்துக்கான பெரும் பலமாகவும் முக்கியமான அம்சமாகவும் தவிர்க்க முடியாத தேவையாகவும் இளையராஜாவின் இசையை முன் தீர்மானத்தோடு அணுகவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆர்.சுந்தர்ராஜன், கே.ரங்கராஜ், மணிவண்ணன், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், ஃபாஸில், மனோபாலா, சுரேஷ் கிருஷ்ணா, அமீர்ஜான், பிரதாப் போத்தன், ஆர்.வி.உதயகுமார், பி.வாசு, சந்தானபாரதி போன்ற எண்பதுகளில் அறிமுகமான பல இயக்குநர்களும் தங்கள் படங்களின் உயிர்நாடியாகவே இளையராஜாவின் இசையை முன்மொழிந்தனர்.
ரஜினி, கமல் ஆகிய இருவருக்குப் பிறகு செல்வாக்கு பெற்றிருந்த விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ் போன்ற பல நட்சத்திரங்களும் தங்கள் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறுவதோடல்லாமல் பெயர் வாங்கும் வேடங்களாகவும் அமைய வேண்டும் எனப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்களே தவிர, ஒரு அளவுக்கு மேல் பாடல், இசை, பாடுபவர் போன்ற விஷயங்களில் தலையிடவில்லை. முரளி, அர்ஜுன், மோகன், ராமராஜன், ராஜ்கிரண் போன்ற பல நடிகர்களும் அவர்களது படத்துக்கு இளையராஜா உருவாக்கி அளித்த இசை, பாடல்கள் ஆகியவற்றை அதிர்ஷ்டத்திற்கு ஒப்பான இடத்தில் வைத்து வழிமொழிய வேண்டிவந்தது. இளையராஜாவின் இசை சர்வநிச்சயமாக வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை 80-களின் இயக்குநர்கள், நடிகர்கள் பலரும் நம்பினார்கள். அவரது பாடல்கள் பலவற்றுக்காகவும் பின்னணி இசைக்காகவும் இரசிகர்களின் ஒருமித்த உச்சமாக இளையராஜாவின் இசை கொண்டாடப்பட்டது.
ஏவி.எம் நிறுவனம் மீண்டும் படமெடுக்க முடிவெடுத்து தயாரிப்பில் இறங்கிய முதல் படமான ‘முரட்டுக்காளை’ படத்துக்கு ராஜாதான் இசையமைத்தார். எண்பதுகளின் பிற்பகுதி வரை ஏவிஎம் நிறுவனத்தின் சகலகலா வல்லவன், பாயும்புலி, முந்தானை முடிச்சு, தூங்காதே தம்பி தூங்காதே, நல்லவனுக்கு நல்லவன், உயர்ந்த உள்ளம், நல்ல தம்பி, மிஸ்டர் பாரத், மெல்லத் திறந்தது கதவு, பேர் சொல்லும் பிள்ளை ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். பிறகு 1993ஆம் ஆண்டு எஜமான், சேதுபதி ஐபிஎஸ், சக்திவேல் ஆகிய படங்களுக்கு இசையமைத்த ராஜா, அதன்பிறகு ஏவி.எம் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றவில்லை. கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘நெற்றிக்கண்’ 1980ஆம் வருடம் தயாரிக்கப்படுகையில் அதற்கும் இசையமைத்தவர் இளையராஜா. அதன்பிறகு புதுக்கவிதை, நான் மகான் அல்ல, பூவிலங்கு, எனக்குள் ஒருவன், ஸ்ரீராகவேந்திரர், வேலைக்காரன், சிவா, உன்னைச்சொல்லிக் குற்றமில்லை ஆகிய படங்களுக்கு இசைத்தார்.
இந்தியாவின் உன்னதமான ஒளிப்பதிவாளர் வரிசையில் பாலுமகேந்திராவின் இடம் மறுக்க முடியாதது. அவர் பரபரப்பான ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டே இயக்குநராகவும் செயல்படத் துவங்கினார். கோகிலா (கன்னடம்) அவர் இயக்கிய முதல் படம். தமிழில் இன்றளவும் ஞாபகத்தை ஏந்துகிற திரைச்சிற்பங்களில் ஒன்றாக ‘அழியாத கோலங்கள்’ தொடர்கிறது. பாலுவின் மூன்றாவது படம் மூடுபனி. எழுத்தாளர் ராஜேந்திர குமார் எழுதிய ‘இதுவும் ஒரு விடுதலைதான்’ என்கிற குறுநாவலையும் John Fowles எழுதிய ‘தி கலெக்டர்’ (1963) என்கிற ஆங்கில நாவலையும் இணைத்து உருவாகிய மூடுபனி படத்தின் திரைக்கதை – அதிக வசனங்களற்ற பாலுமகேந்திரா பாணியைப் பிரதிபலித்த முதல் படம். திரை மேதைமைக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிற செவ்வியல் ஆவணம் இந்தப் படம்.
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கத்தில் உலக அளவில் கவனப் பரவல் பெற்ற Psycho (1960) படத்தையே பெருமளவில் பிரதிபலிப்பதாக அதிக விவாதங்களை எழுப்பியது. இந்தத் திரைப்படம் இளையராஜாவின் நூறாவது படம் என்கிற கூடுதல் பிணைப்பைக் கொண்டது. இந்தப் படத்தில் பருவ காலங்களின் கனவு, ஆசை ராஜா, என் இனிய பொன்நிலாவே ஆகிய மூன்று பாடல்களை எழுதினார் கங்கை அமரன். ஜேசுதாஸ் குரலில் கிட்டார் இசை பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் இன்றும் ஒலித்தவண்ணம் இருக்கும் ஒரு மெகா ஹிட் பாடல். தனிமையை, அந்தரங்கத்தை, காதலின் ஏக்கத்தை, மனதின் ஆழத்தில் இருக்கக்கூடிய அன்பின் முன்மொழிதல் போன்றவற்றை கச்சிதமாக எடுத்து வைக்கும் பிரார்த்தனை இந்தப் பாடல்.
மூடுபனி திரைப்படத்தின் கதைசொல்லியான சந்துரு, மனம் சிதிலமான – நோய்மை மிகுந்த – அதுவரை தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத குரூரமும் மென்மையும் கலந்த புதிய பாத்திரப் படைப்பாகத் தோன்றினார். அதிக வசனங்களற்ற பாலுமகேந்திரா படப் பாணியை இசைக்கான பெருங்களமாக உணர்ந்து, அதற்கேற்ப மௌனத்தையும் சலனங்களையும் அடுத்தடுத்த காட்சிகளை இசையின் வழி படமாக்கிய ஆளுமையுடன் சரிவிகிதத்தில் இளையராஜா பகிர்ந்துகொண்டார் எனலாம். இந்தப் படத்தில் இடம்பெற்ற துண்டுப் பாடலான ‘ஆசை ராஜா’, படம் வெளியான காலத்தைத் தாண்டி இன்றளவும் மகத்துவமான தாயன்பைப் போற்றக்கூடிய திரைப் பாடல்களில் ஒன்று. தமிழில் எடுக்கப்பட்ட மனச்சிதில சினிமாக்களில் – அவற்றுக்கான பின்னணி இசைத் தொகுப்புகளில் – மூடுபனி ஒரு நிரந்தர முதல் அடையாளத் திரைப்படமாக இன்றளவும் தொடர்கிறது.
பாலுமகேந்திரா இயக்கத்தில் தமிழில் உருவான அடுத்த படம் மூன்றாம் பிறை. ஏற்கமுடியாத அன்பின் அடுத்த வடிவத்தை இந்தப் படத்தில் கையாண்டார் பாலுமகேந்திரா. இதுவே கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசித் திரைப்படமானது. இதில் இடம்பெற்ற ‘கண்ணே கலைமானே’ என்கிற பாடல் இன்றளவும் தமிழில் நிலவக்கூடிய செல்வாக்கான உலர்-சோகக்-கானங்களில் (Dry-Pathos) ஒன்றாகத் தொடர்கிறது. ஹிந்தியில் ‘Sadma’ எனும் பெயரில் இதே படம் மீவுரு செய்யப்படுகையிலும் ராஜா – பாலு கூட்டணி தொடர்ந்தது. யூகிக்க முடியாத இந்திய உணர்வுச் சித்திரங்களில் தனித்ததோர் இடம் இன்றளவும் இந்தப் படத்துக்கு உண்டு. 30ஆவது தேசிய விருதுகளில் கமல்ஹாசனும் பாலுமகேந்திராவும் தேசிய விருது பெற்றனர். அமோல் பாலேகர், பூர்ணிமா ஜெயராம், அடூர், பாசி, அம்பிகா ஆகியோரது நடிப்பில் ஜோசப் ஆபிரகாம் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய மலையாளத் திரைப்படம் ‘ஓளங்கள்’. இந்தப் படத்தில் ‘தும்பி வா தும்பக்குடத்தே’ பாடல் முதல்முறை ஒலித்தது. தெலுங்கில் ‘நீரக்ஷனா’, மலையாளத்தில் ‘ஊமைக்குயில்’, ரஜினிகாந்தை வைத்து பாலுமகேந்திரா இயக்கிய ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘நீங்கள் கேட்டவை’ ஆகிய படங்கள் இருவரது கூட்டணியில் உருவான முக்கியமான ஆரம்பகாலப் படங்கள்.
1977ஆம் ஆண்டு யோஜி யமதா (Yōji Yamada) இயக்கத்தில் வெளிவந்த ஜப்பானிய க்ளாசிக் படமான ‘The Yellow Handkerchief’ படத்தின் பாதிப்பில் பாலு மகேந்திரா உருவாக்கிய அழகிய திரைப்படம்தான் மம்மூட்டி, அடூர் பாசி, ஷோபனா நடித்த யாத்ரா. வீடு திரைப்படத்தின் பின்னணி இசையை இளையராஜாவின் தனி ஆல்பங்களில் ஒன்றான ‘ஹவ் டு நேம் இட்’-லிருந்து எடுத்தாண்டிருந்தார்கள். இந்தியில் பாலுமகேந்திரா உருவாக்கிய ‘அவ்ர் ஏக் ப்ரேம் கஹானி’, இளையராஜாவின் செல்வாக்கு பெற்ற தமிழ்ப் பாடல்களின் இந்தி மீவுருவாக இடம்பெற்றது. பாலுமகேந்திராவுக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான இசைப் பந்தம் சுவாரசியமானது. தனித்துவமான பல பாடல்களை இந்த இணை திரை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது. மனதின் மென்மையான உணர்வின் பல புள்ளி-கோலம் ஒன்றாக இசையின் சித்திரத்தை உணர்ந்துகொள்ள முடியும். அந்தப் புள்ளிகளாக விளங்குகிற பெரும்பான்மைப் பாடல்களும் அவற்றுக்கிடையில் நிலவக்கூடிய ஒற்றுமை வேற்றுமைகளும் சுவாரஸ்யமானவை.
‘மலரே மலரே உல்லாசம்‘ என்கிற மெலடி பாடல், உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் இடம்பெற்றது. இதே படத்தில் இடம்பெற்ற ‘கண்ணில் என்ன கார்காலம்‘ எனும் பாடல் மறக்க முடியாதது. ‘ராஜ ராஜ சோழன் நான்‘ என்கிற ரெட்டைவால் குருவி பாடல், ‘கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி‘ என்கிற வண்ண வண்ணப் பூக்கள் படத்தின் பாடல், நீங்கள் கேட்டவை படத்தில் இசைத்த ‘ஓ வசந்த ராஜா‘ என்கிற பாட்டு, ‘நலம்வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள்‘ என்கிற மறுபடியும் படப்பாடல், ‘மகராஜனோடு‘ – சதிலீலாவதி, ராமன் அப்துல்லா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என் வீட்டு ஜன்னல் எட்டி‘, ‘முத்தமிழே‘, ஜூலி கணபதி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே‘ ஆகிய மெலடி பாடல்கள் பாலுமகேந்திரா – இளையராஜா இணைந்து உருவாக்கிய தனித்த இசைச் சிற்பங்களாக இன்றளவும் நிலைத்து நிற்பவை. எதிர்பார்க்க முடியாத தாள இசையோடு நின்று நிதானித்து ஒலிக்கக்கூடிய இன்னொரு வகைப் பாடல்கள். பாலுமகேந்திரா பாடல்களில் ஒன்றெனக் கொண்டாடப்படுபவை. வசீகரிக்கும் கிழக்கு இசையும் தாளமும் கலந்த இத்தகைய பாடல்கள் அனைத்துமே இரசிகர்களின் பெருவிருப்பங்களுள் ஒன்றாக நெடுங்காலம் நிரந்தரிப்பவை.
பாலுமகேந்திராவின் படங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் குற்றவுணர்வுச் சித்திரங்கள். எளிதில் புரிந்து விடக்கூடிய, எல்லோருக்கும் நிகழவல்ல பொதுவான ஊடாட்டங்களை பாலுமகேந்திரா படம்பிடித்தார். அவருடைய மனிதர்கள் எளியவர்கள். வாழ்வின் எதிர்பாராமை, திகைப்பு, தெரிந்தே பிறழ்ந்து போகிற கணங்கள், நெடிய உணர்வுப் போராட்டத்துக்குப் பிறகான ஒன்றுகூடல், புரிதல் ஆகியவற்றை உள்ளடக்கியவை. தனிமனித உணர்வுகளை, ஆசாபாசங்களை, அன்பு தீவிரவாதத்தை, பொறாமையை, அதீதமான காதலை அவரது காமெராவுடன் ராஜாவின் இசையும் பதிவு செய்தது. அதனாலேயே பாலுமகேந்திராவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே மாபெரும் புரிந்துணர்வுடன் கூடிய நட்பு இறுதிவரை நிலைத்தது.
‘கோழி கூவும் நேரத்திலே‘ என்கிற வண்ண வண்ண பூக்கள் பாடல், ‘ஆசை அதிகம் வச்சு‘ என்கிற மறுபடியும் பாடல், ‘பொன்மேனி உருகுதே‘, ‘வானெங்கும் தங்க விண்மீன்கள்’ – மூன்றாம் பிறை, ‘அடியே மனம் நில்லுனா நிக்காதடி‘ – நீங்கள் கேட்டவை ஆகியவற்றை அப்படியான பாடல்களெனச் சொல்ல முடிகிறது. பாலுமகேந்திராவின் அநேக படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, பின்னணி இசையில் மாத்திரமன்றி, பாடல்களிலும் தங்கள் பெயரை நெடிய காலத்திற்கு எழுத முனைந்து அதில் வெற்றியும் கண்டார்.
பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு அதிகம் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிற விஷயம். ஒரே நிலப்பரப்பிலிருந்து தோன்றிய மாபெரும் ஆளுமைகள் என்கிற விதத்தில் ஏற்கனவே அறிமுகமும் நட்பும் கொண்டவர்கள். ஒரே காலகட்டத்தில் முன்னேறி உச்சம் தொடுவதென்பது அசாதாரணமான கவனயீர்ப்பு கொள்ளப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. பாரதிராஜா இயக்கிய பல படங்களில் அதன் பெரிய வெற்றிக்கு இசையும் ஒரு முக்கியமான காரணம் என்பது அவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு குறிப்புதான். அதுவரை ‘செட்டிங்ஸ்’ எனப்படுகிற அரங்கங்களின் கிராமப் போலிச் சித்தரிப்புகளிலிருந்து சினிமாவை மீட்டு, நிஜமான கிராமத்தின் நிலம், மழை, மலைச்சாரல், கபடமற்ற மனிதர்கள், எளிய முகங்கள், நுண்ணுணர்வுகள், இயற்கை சார்ந்த வாழ்க்கையின் வெற்றி தோல்விகள், அவர்தம் ஆசாபாசங்கள், ஊசலாட்டங்கள், மரணம், காதல், காமம், பகை எனப் பலவற்றையும் தன் தொடர் சித்திரங்களின் மூலம் ஆமோதித்தும் ஆட்சேபித்தும் தனது திரை முழக்கத்தை உருவாக்கியவர் பாரதிராஜா. அவரிடம் நம்பிக்கைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் இடையிலான தெளிந்த பார்வை எப்போதும் இருந்தது.
வாழ்வின் சலனங்களைப் பதிவு செய்வதன் மூலமாக சமூகத்தின் தொடர் உரையாடல் களமெனவே தன் சினிமாவை உண்டாக்க விழைந்தவர் பாரதிராஜா. இன்றளவும் அதன் கதைப் போக்குக்காகவும் கதாபாத்திரங்களின் குணாம்ச தனித்துவங்களுக்காகவும் படமாக்கப்பட்ட விதத்திற்காகவும் குன்றாத அழகியலுக்காகவும் 16 வயதினிலே பேசப்படுகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய படங்களுள் ஒன்றாக சிவாஜி கணேசனை கதாநாயகனாக்கி பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் இருந்து வருகிறது. இவை போன்ற இருபதுக்கும் அதிகமான படங்களில் இளையராஜா – பாரதிராஜா இணைந்து பணியாற்றி, நூற்றுக்கும் அதிகமான செவ்வியல் தன்மை மிகுந்த பாடல்களை வழங்கியிருப்பது நிதர்சனம். கலை ஒரு நிரந்தர போதாமை. எப்போதும் தூறிக்கொண்டே இருக்கும் மழை. இந்த இரண்டின் ஒருமித்த உணர்தலாகவே பாரதிராஜாவின் திரைப்படங்கள் எப்போதும் இருந்து வருகின்றன. அதில் இளையராஜா இசைத்தளித்த பற்பல பாடல்களும் தமிழ் சினிமா திரையிசை இரசிகர்கள் மத்தியில் எப்போதும் இழக்காத செல்வாக்குடன் இருக்கின்றன. மனதுக்குப் பிடித்த பல பாடல்களை, வசனங்களை, காட்சிகளை, கதாபாத்திரங்களின் குணங்களை வாழ்க்கைக்குள் எடுத்துச்சென்ற வகையில், இந்த இருவர் கூட்டு அடைந்திருக்கிற இடமும் வழங்கிய கலைக்கொடையும் அபாராமானதுதான்.
மணிரத்னத்தின் முதல் பத்து படங்கள் – பல்லவி அனுபல்லவி – கன்னடம், உணரு – மலையாளம், பகல்நிலவு, இதயக்கோயில், மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி – தமிழ், கீதாஞ்சலி – தெலுங்கு. இவற்றில் உணரு, பகல்நிலவு, அக்னி நட்சத்திரம் இவற்றைக் கடந்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான இசை அடையாளம் ஒன்றை இளையராஜா ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மௌனராகம், தளபதி, கீதஞ்சலி, அஞ்சலி, நாயகன் ஆகியவற்றுக்கு தனித்த பின்னணி இசைக் கோர்வைகளை உருவாக்கினார் இளையராஜா. மற்ற படங்களைப் போலவே பின்னணி இசையமைத்தல் என்பதைத் தாண்டி, தனித்துவ இசை அடையாளங்களாக இன்றளவும் இசை இரசிகர்களால் அவை பார்க்கப்படுகின்றன. பேசாமல் பேசும் கதை சொல்லும் பகுதி ஒன்றாகவே தன்னுடைய தீம் இசைக் கோர்வைகளை இளையராஜா உருவாக்க முனைந்தார்.
கதாபாத்திரத்தின் மனநிலையில் வைத்து, கதையின் ஒரு பகுதியையும் கதையின் முக்கியமான புள்ளி ஒன்றையும் பராமரிப்பதற்கு இத்தகைய தீம் இசைத் தோரணங்கள் உதவுபவை. மணிரத்னத்தின் கதாபாத்திரங்கள் பொதுவாக அதிகம் பேசாதவர்கள் அல்லது அதீதமாகப் பேசுபவர்கள். இந்த முரணிடை மனிதர்களே அவரது பெரும்பாலான பாத்திரங்கள். காட்சியின் வழியாக திரைக்கதையினை நகர்த்திச் செல்வதில் பாலுமகேந்திரா தனிப்பாணியைக் கண்டறிந்திருந்தார். அவரை ஒற்றி மணிரத்னம் தன்னுடைய பாணியைக் கட்டமைத்தவர் எனலாம். சுருக்கமான வசனங்களையே தன் படங்களில் அனுமதித்தார். அவருடைய படங்களில் கதாபாத்திரங்களின் தன்மை விரிவாக எடுத்தாளப்பட்டு அதற்குப் பின்னரான சம்பவங்கள், அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள், தீர்வு ஏதுமற்ற ஊடாட்டம், இவற்றுக்கப்பால் கதை முடியும் களம் என அவரது தனித்துவக் கதாமுறை அமையலாயிற்று.
முன்பே நன்கறிந்த பட முடிவு ஒன்றை நோக்கிய நகர்தல்தான் என்றபோதும், அவை முற்றிலும் வேறுபட்ட வழங்கல் வழி மூலமாக, பிற சமகால கதை சொல்லல் முறைகளில் இருந்து விலகிற்று. ஏற்கனவே அறிந்த தொன்மங்கள், அவற்றின் திறப்புகள், ஆதிக்கம் படிந்த செல்வாக்குடனான கதாபாத்திர ஆளுமை, அவற்றை விவரித்தல், நபர்களிடையிலான பொருந்தாமை மீறல், பொறாமை, வஞ்சகம், நட்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம், காதல் என எல்லாவற்றிலும் அதீதப் பாணி ஒன்றினை தன் கதைகளில் பின்பற்ற விழைந்தார் மணிரத்னம். தன்னுடைய ஆரம்பகாலப் படங்களில் எந்தப் பக்கம் போவது என்பதில் படைப்பாளுமையான மணிரத்னத்திற்கு சிறு குழப்பம் இருந்திருக்கிறது. பல்லவி அனுபல்லவி, உணரு ஆகிய படங்களை ஒருபுறமும் பகல்நிலவு படத்தை மறுபுறமும் கொண்டாலும் இதயக்கோயில்தான் அவரது பெயரையும் அந்தப் படம் அடைந்த வெற்றி அவருக்கு அடுத்தப் படத்தையும் உறுதிசெய்து தந்ததை மறக்கவில்லை.
ஆகவே வணிக ரீதியிலான கவனித்தல் ஒரு படத்துக்கு உள்ளும் புறமும் எங்கனம் எவ்விதம் முக்கியம் என்பதை நன்குணர்ந்து, தன் அடுத்த படமான மௌன ராகத்தைப் படைத்தார். நேர் நோக்குகையில் மிகச் சாதாரணமான கதை போலத் தோற்றமளித்தாலும் மௌன ராகம் காலத்தால் அழியாத ஒரு கல்ட் கிளாசிக். ஆகவே தன்னை சாசுவதப்படுத்திக் கொண்டது. 34வது தேசிய விருதுகளில் தமிழின் சிறந்த படமாக மௌனராகம் தேர்வு செய்யப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் நாயகன் திரைப்படம், மணிரத்னத்தின் முதல் நட்சத்திர நடிகர் இணையாக கமல்ஹாசனை உட்கொண்டது. தனது முந்தைய ஐந்து படங்களைக் காட்டிலும் அதிக பொருட்செலவில் இதை உருவாக்கினார் மணிரத்னம். இளையராஜாவின் இசை இந்தப் படத்தின் ஆகப்பெரும் பலமாக விளங்கியது.
தென்பாண்டிச் சீமையிலே, சின்னத் தாயவள் தந்த ராசாவே, சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, புத்தம் புது பூ பூத்ததோ, தூங்காத விழிகள் ரெண்டு, நீ ஒரு காதல் சங்கீதம், காவியம் பாடவா தென்றலே, ஓ பாப்பா லாலி, ஓம் நமஹ, வானுயர்ந்த சோலையிலே, நான் பாடும் மௌன ராகம், மன்றம் வந்த தென்றலுக்கு, வா வா அன்பே அன்பே, ஓ பிரியா பிரியா, பூமாலையே தோள் சேரவா, வாராயோ வான்மதி, நிலாவே வா போன்ற சோகம் இயைந்த துக்கச்சாய்வு உள்ள ஏராளமான பாடல்கள் மணிரத்னம் இளையராஜா இணைந்த படங்களில் இடம்பெற்றன. காலம் கடந்து நிற்கும் சாசுவத பாடல்கள் ஆகின. விடிய விடிய நடனம், மொட்டமாடி மொட்டமாடி, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா, ஓஹோ மேகம் வந்ததோ, கூட்டத்திலே கோவில் புறா, சின்னச் சின்ன வண்ணக்குயில், பனிவிழும் இரவு, மைனா மைனா, நின்னுக்கோரி வரணும், ரோஜாப்பூ ஆடி வந்தது, இரவு நிலவு உலகை இரசிக்க நினைத்தது, இவற்றோடு ‘பல்லவி அனுபல்லவி’ கன்னடப் படத்தில் இடம்பெற்ற ‘நகுவா நயனா‘ என்கிற எஸ்.பி.பி – எஸ்.ஜானகி இணைந்து பாடிய பாடல் ஆகியவை இந்தக் கூட்டணியின் பெயர் சொல்லும் மறக்கமுடியாத பாட்டுகள். தளபதி திரைப்படத்தில் இளையராஜா உருவாக்கிய இசைக் கோலங்கள் அபாரமானவை. காட்டுக்குயிலு மனசுக்குள்ள, ராக்கம்மா கையைத் தட்டு ஆகிய பாடல்கள் வான் தொட்டன. ‘யமுனை ஆற்றிலே’ என்கிற பாடல் இசை இரசிகனின் மனதை அந்தரங்கமாக வருடித் தந்ததில் முன்பில்லா புதுப் பரவசத்தில் அவன் மனம் கிளர்ந்தான். உச்சபட்ச கலைப் புரிதலுடன் இணைந்து இயங்கிக்கொண்டிருந்த இரண்டு கலை மேதைகள் அதன்பின்னர் இணையவில்லை.
சினிமாவில் சேர்வதும் கலைவதுமான எல்லா நிகழ்வுகளுமே அதனதன் போக்கில் புரிந்துகொள்ளப்பட வேண்டியவைகளே. பாடல்கள், பின்னணி இசை, படங்களின் எண்ணிக்கை ஆகிய யாவற்றின் தொகுப்பாக இளையராஜா தொட்டடைந்த உயரம் அபாரமானது. சர்வ நிச்சயமாக எண்பதுகளின் மாபெரும் திரை ஆளுமை இளையராஜா என்பதில் மாற்றில்லை. இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய திரைமுகங்கள் குறித்த ஒரு சிறிய கணக்கைப் பார்க்கலாம். ஆயிரம் படங்களுக்கு இசைத்திருக்கிறார் இளையராஜா. அறிமுகமான படத்திலிருந்து தொடங்கி இயக்குநர்கள் பலரோடும் இணைந்து பணியாற்றியிருக்கும் இளையராஜாவின் திரை-வரைபடம் ஒன்றை உருவாக்கலாம்.
எஸ்.பி.முத்துராமன் – 36, மணிவண்ணன் – 23, பாரதிராஜா – 21, பாலுமகேந்திரா – 20, பி.வாசு – 18, கங்கை அமரன் – 17, ஆர்.சுந்தர்ராஜன் – 14, ஸ்ரீதர் – 13, தேவராஜ் மோகன் – 13, ஃபாஸில் – 12, கே.ரங்கராஜ் – 11, ராஜசேகர் – 11, மணிரத்னம் – 10, சத்யன் அந்திக்காடு – 10, கே.பாக்யராஜ் – 9, ஜி.என்.ரங்கராஜன் – 9, ஜே.மகேந்திரன் – 8, மனோபாலா – 8, ஆர்.வி.உதயகுமார் – 8, கே.ஆர் – 8, சிங்கீதம் – 7, ஐ.வி.சசி – 7, சந்தானபாரதி – 6, ராம.நாராயணன் – 6, கே.பாலச்சந்தர் – 6, எஸ்.ஏ.சந்திரசேகர் – 5, ஆர்.செல்வராஜ் – 5, அமீர்ஜான் – 5, பாலா – 5, கஸ்தூரி ராஜா – 5, வி.எம்.சி.ஹனீஃபா – 5, கே.விஸ்வநாத் – 4, ஆர்.பார்த்திபன் – 4, பஞ்சு அருணாச்சலம் – 4, பி.எஸ்.நிவாஸ் – 4, சுரேஷ்கிருஷ்ணா – 4, பால்கி – 4, பாண்டியராஜன் – 3, பி.லெனின் – 3, மிஷ்கின் – 3, வீ.சேகர் – 3, பரதன் – 3, ப்ரியதர்சன் – 3, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் – 2, பி.மாதவன் – 2, பாரதி-வாசு – 2, மேஜர் சுந்தர்ராஜன் – 2, ருத்ரய்யா – 2, கமல்ஹாசன் – 2, நாஸர் – 2, வினயன் – 2, சேரன் – 2, ஞான ராஜசேகரன் – 2, ராஜ்கிரண் – 2, ஏ.ஆர்.முருகதாஸ் – 1, வஸந்த் – 1, பவித்ரன் – 1, கதிர் – 1, ஆர்.சி.சக்தி – 1
58 இயக்குநர்களின் 409 படங்கள். மேற்காணும் எந்த இயக்குநரும் இயக்காத படங்கள் இருக்கும் அல்லவா? அப்படியான நாற்பத்தியிரண்டு இயக்குநர்களின் நாற்பத்திமூன்று படங்களில் பணியாற்றியிருக்கிறார். அழகி – தங்கர் பச்சான், மீரா – பி.சி.ஸ்ரீராம், கரும்பு வில் – விஜய், கண் சிவந்தால் மண் சிவக்கும் – ஸ்ரீதர் ராஜன், தம்பிக்கு ஒரு பாட்டு – அஷோக் குமார், ஆராதனை – ப்ரஷாத், ஈரவிழிக் காவியங்கள் – பி.ஆர்.ரவிஷங்கர், ஆனந்தராகம் – பரணி, அர்ச்சனைப் பூக்கள் – கோகுல கிருஷ்ணா, முடிவல்ல ஆரம்பம் – என்.என்.மொய்தீன், நானே ராஜா நானே மந்திரி – பாலு ஆனந்த், அறுவடை நாள் – ஜி.எம்.குமார், கோடைமழை – முக்தா சுந்தர், நினைவுச்சின்னம் – அனுமோகன், சத்ரியன் – கே.சுபாஷ், மௌனம் சம்மதம் – கே.மது, என்னருகில் நீ இருந்தால் – சுந்தர் கே.விஜயன், சந்திரலேகா/மஞ்சள்நிலா – நம்பிராஜ், தாயம்மா – கோபி பீம்சிங், திருப்புமுனை – கலைவாணன் கண்ணதாசன், புதிய ஸ்வரங்கள் – விஜயன், தங்க மனசுக்காரன் – ராஜவர்மன், தாய்மொழி – இளவரசன், என்றும் அன்புடன் – பாக்யநாதன், உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் – ஸ்ரீதேவ், பரதன் – எஸ்.டி.சபா, பொன் விலங்கு – கே.எஸ்.ராஜ்குமார், சக்கரைத் தேவன் – ஜே.பன்னீர், அதர்மம் – ரமேஷ், ஹானஸ்ட் ராஜ் – கே.எஸ்.ரவி, ப்ரியங்கா – நீலகண்டா, பாட்டுப் பாடவா – பீ.ஆர்.விஜயலக்ஷ்மி, பூமணி – களஞ்சியம், மை டியர் குட்டிச்சாத்தான் – ஜி.ஜோ.புன்னோஸ், சங்கீர்த்தனா – கீதா கிருஷ்ணா, கருவேலம்பூக்கள் – பூமணி, குட்டி – ஜானகி விஸ்வநாதன், ஃப்ரெண்ட்ஸ் – சித்திக், காற்றுக்கென்ன வேலி – புகழேந்தி தங்கராஜ், ஐ லவ் இந்தியா – பவித்ரன், காதல் கவிதை – அகத்தியன்
-ஆக மொத்தம் 100 இயக்குநர்களின் 452 படங்கள். தோராய சராசரியாக, ஒரு படத்திற்கு 4 பெருவெற்றிப் பாடல்கள் என்று கொண்டால்கூட 1808 பாடல்கள். ஒவ்வொன்றாய்த் தொகுத்தால் இன்னும் படங்களும் பாடல்களும் கூடுவதற்கான வாய்ப்பே அதிகம்,
இந்தியத் திரையுலகம் சந்தித்த மகத்தான இசைமுகம் இளையராஜா.
-தொடரும்.
*
முதல் பகுதி: இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்
இரண்டாம் பகுதி: ராஜா பாடிய பாடல்கள்