எது நல்ல படம் என்பதற்கான அடிப்படை அளவுகோலாக ஒரு குறிப்பிட்ட படத்தின் திரைமொழியை முன்வைத்தே உரையாட முடியும். திரைமொழி என்றால் என்ன? எளிமையாகச் சொல்லவேண்டுமெனில் திரைப்படம் என்பது காட்சி ஊடகம். எதையும் வசனமாகச் ‘சொல்லாமல்’ பார்வையாளர்களுக்கு உணர்த்த விரும்புவதைக் ‘காட்ட’ வேண்டும். இதன் அர்த்தம், குறைவான வசனங்கள் உள்ளவையே நல்ல படங்கள் என்பதல்ல.

கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், மெல்லிய உருமாற்றங்கள், உளவியல், சம்பவங்களின் பின்னணி, அதன் பாதிப்புகள் என எல்லாவற்றையும் உரையாடல் வழியே ஒப்புவித்துச் செல்லக்கூடாது. செறிவான காட்சிப்படிமங்களின் ஊடாக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரே நல்ல இயக்குநர். ஓர் உரையாடல் மூலமாக சொல்லிச் சென்றதைக் காட்டிலும் மேலதிகமான நுட்பங்களை காட்சிகளில் பொதிந்து வைக்கத் தெரிந்தவராக அவர் இருக்க வேண்டும்.

மிக முக்கியமாக, படத்தைப் ‘பார்த்து மட்டுமே இரசிக்கிற’ பேரனுபவத்தைத் தரவேண்டும். அதற்கேற்ற தொழில்நுட்பங்களையும் உத்திகளையும் தயங்காமல் பயன்படுத்த வேண்டும். சுருக்கமாக, சித்திரக் கதையை (Illustrated Book) திரையில் வாசிப்பது போல ஒரு திரைப்படம் இருக்கலாகாது.

உலகத் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் அவை குறித்து வெளியாகும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டு இருந்தேன். எஸ்.ராமகிருஷ்ணனில் இருந்து சுரேஷ் கண்ணன் வரை எல்லோருமே அந்தத் திரைப்படங்களின் கதைகளைத்தான் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு காட்சியையும் விவரித்து, இடையிடையே ஒளிப்பதிவு அபாரம், நடிப்பு பிரமாதம் போன்ற மானே தேனே வார்த்தைகளைத் தூவிவிட்டு, சில தர்க்கப் பிழைகளைக் கண்டுபிடித்தால் போதும். ‘உலக சினிமா’ விமர்சனம் தயார்.

இவர்கள் எவருக்குமே ஒரு திரைப்படம் ஏன் கலையாகிறது என்றோ எதனால் அதனைச் சிறந்த படமாகக் கருதுகிறார்கள் என்றோ தெளிவுற விளக்க இயலவில்லை. திரைப்படங்கள் குறித்த புரிதலின்மையும் மேலோட்டமான பார்வையுமே இதற்குக் காரணம். தினமும் காலையில் பல் தேய்ப்பது மாதிரி, படம் பார்க்கிற பழக்கத்தைக் கைவிட முடியாமல், இயந்திரத்தனமாக அந்த வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டு அதன் தரத்தைப் பகுத்தறியும் நுண்ணுணர்வின்றி எல்லாவற்றையும் ஒரே குப்பியில் அடைத்து வைப்பார்கள். மேல்நாட்டவரின் விமர்சனங்களையும் பட்டியல்களையும் சலாமிட்டு ஏற்றுக்கொள்வார்கள். அவர்களது எல்லை அவ்வளவுதான்.

ஒரு கதையைப் ‘பார்த்து’ அதை அப்படியே எழுத்தில் வார்ப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மதிப்புரையோ விமர்சனமோ அதில் அந்தக் கட்டுரையாளரின் சுயம் வெளிப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட படைப்பின் ஊடாக அவர்கள் கண்டடைந்த சிந்தனை அல்லது மனத்தாவல்களைப் பற்றி செறிவான மொழியில் முன்வைக்கத் தெரிந்திருக்க வேண்டும். கவித்துவமான சொல்லாட்சிகளைக் கையாள வேண்டும். படைப்பாளியின் மனதைத் தொட்டறிந்து அந்தப் படைப்பை ஓர் அந்தரங்க உணர்வாகவும் பண்பாட்டுத் தொடர்ச்சியாகவும் விரித்தெடுக்கும் ஆற்றலுடையவராக மிளிர வேண்டும். ஆம், விமர்சனமும் படைப்புச் செய்லபாடுதான் என்றுணர்ந்தவரே நல்ல விமர்சகராக பரிணமிக்க முடியும்.

System Crasher (2019)

அந்த இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவராகவே கமலக்கண்ணனைப் பார்க்கிறேன். அதற்கு இந்நூலே சாட்சி. இருபத்தோராம் நூற்றாண்டின் சில முக்கியமான திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அபாரமான மொழிக்கூர்மையுடனும் அசலான பார்வையுடனும் எழுதப்பட்டவை. கதை அல்லது சம்பவத்தை விடவும் தனிமனிதர்களின் அல்லாட்டங்கள் மீதே கமலக்கண்ணன் அக்கறை கொள்கிறார் என்பதை இப்போது மீண்டும் வாசிக்கும்போது உணர முடிகிறது. அதிலும் குறிப்பாக, அந்தக் கதாபாத்திரங்களின் எண்ணவோட்டங்களை விடவும் அவர்கள் புரிகிற எதிர்வினைகள் பற்றியே அவரது கவனம் குவிகிறது.

கட்டுரை எழுதுவதற்காக அவர் எடுத்துக்கொண்டிருக்கும் படங்களை வைத்தே அவரொரு தேர்ந்த இரசனைக்காரர் என்பதைச் சொல்லிவிடலாம். அனைத்தையும் விட முக்கியமாக, ஏதேதோ கோட்பாடுகளைத் தூக்கிக்கொண்டு வந்து படத்தின் உள்ளீடுகளைக் கட்டுடைக்கிறேன் பேர்வழி என கடுமையான சிற்றிதழ் மொழியில் எழுதி வாசகர்களை அவர் துன்புறுத்துவதில்லை. எதைச் சொல்ல வேண்டும் என்பதும் எங்கே நிறுத்த வேண்டும் என்பதும் கமலக்கண்ணனுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தத் தெளிவும் தீர்க்கமும் இக்கட்டுரைகளில் வெளிப்படுகிறது. பார்வையாளர்களின் எதிர்கால நேரடி அனுபவத்தைச் சிதைக்காத வகையில் ஊகங்களுக்கான இடைவெளியைத் தன்னகத்தே தக்கவைத்துக்கொண்டே நிறைவுறுகிறது.

சில முக்கியமான படங்களைப் பற்றின விரிவான கட்டுரைகளை கமலக்கண்ணன் மட்டுமே தமிழ்ச்சூழலில் எழுதியிருக்கிறார். கவனப்படுத்தியிருக்கிறார். அதன் காரணமாகவும் அவற்றின் முக்கியத்துவம் பன்மடங்கு பெருகுகிறது. System Crashers, The Painted Bird போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்தும் அவரது சீரிய முயற்சியில் அவை மைல்கற்கள்.

2

வேரா பிரிட்டனின் ‘டெஸ்டமெண்ட் ஆஃப் யூத்’ என்கிற நூல் முதலாம் உலகப்போர் குறித்த விரிவான சித்திரத்தை அளிக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு யூதப் படுகொலை, அணுகுண்டு, ஹிட்லர் என உச்சக்கட்ட நாடகீயத் தருணங்கள் இருப்பதாலும் அதன் பாதிப்புகள் முன்னதை விட பன்மடங்கு அதிகம் என்பதாலும் அது குறித்து ஏராளமான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் முதல் உலகப்போருக்கு முன் மாதிரிகள் இல்லை. தனித்துவமான ஆளுமை கொண்ட பிரத்யேக கதாநாயகர்களோ வில்லன்களோ உருவாகி வரவில்லை. அதனால் நான்கைந்து கதைகளுக்கு மேல் தேறவில்லை. Paths of Glory போன்ற கையடக்கக் கதைகளே பிரபலமாகி இருக்கின்றன. அவை தேசம் முதலான கற்பிதங்கள் எப்படியெல்லாம் இளம் மனங்களை ஆட்டுவித்தன என்பதைப் பதிவு செய்கின்றன. உலகப்போரை எதிர்கொள்வதில் பதற்றம் நிரம்பிய திண்டாட்டமும் வீரம், தியாகம் போன்றவை அளிக்கக்கூடிய அளவுக்கதிகமான உற்சாகமும் கூட இருந்திருக்கிறது.

காதலன், நண்பன், சகோதரன் என வேரா பிரிட்டன் அறிந்திருந்த ஆண்கள் அனைவரும் முதலாம் உலகப்போரில் இறக்கிறார்கள். இருபத்து இரண்டு வயதுகூட பூர்த்தி அடையாதவர்கள். இராணுவத்தில் சேர வேண்டும் என்கிற தனது சகோதரனின் (எட்வர்ட்) ஆசைக்காக தந்தையுடன் மல்லுக்கட்டி வேராதான் அனுமதி பெற்றுத்தருகிறார். அந்தக் குற்றவுணர்ச்சி மரணம் வரை அவரைத் துரத்தி இருக்கிறது. தான் இறந்த பிறகு தன்னை எரித்து அந்தச் சாம்பலை அவனது சமாதியில் தூவ வேண்டும் என்பதே வேராவின் கடைசி விருப்பம்.

ஓட்டுரிமைக்காக பெண்கள் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் தனக்குக் கிடைத்த ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக வாய்ப்பை உதறிவிட்டு செவிலி ஆகிறார். எழுத்தாளாராக வேண்டும் எனும் கனவை ஒத்திவைக்கிறார். காதலனும் தம்பியும் அனுப்பும் சென்சார் செய்யப்பட்ட கடிதங்களை பத்திரப்படுத்துகிறார். மரணத் தறுவாயில் கிடக்கும் எட்வர்டுக்கு அவனது ‘நண்பனிடமிருந்து’ கடிதம் வருகிறது. அவனது தற்பால் ஈர்ப்பு குறித்து வேரா அறிந்தே இருக்கிறார். இருவரும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளாத ஒரே விஷயம் அதுதான். எட்வர்ட் அச்சத்துடன் வேராவைப் பார்க்கிறான். ‘என்னை நம்பு. இந்தக் கடிதத்தை நான் வாசிக்கவில்லை’ என்கிறார் வேரா.

திருமணமே செய்துகொள்ளாமல் காவியக் காதலியாக வாழ்ந்து மடிய வேண்டும் எனும் வேராவின் உறுதிப்பாடு எட்டு ஆண்டுகளில் கரைந்து போகிறது. திருமணத்திற்குப் பிறகும் தனது பதிப்பாளருடன் இன்னொரு காதல் ஏற்படுகிறது. அவர் தனது சகோதரனை காதலித்த அளவுக்கு பிறிதொருவரை நேசிக்கவில்லை. முதலாம் உலகப்போரின் சிரமங்களை விட என்னை அதிகம் ஈர்த்தது வேராவின் எழுத்தாளர் கனவு உண்டாக்கிய அலைச்சல்தான்.

சுயசரிதையான டெஸ்டமென்ட் ஆஃப் யூத் தவிர உருப்படியாக வேறு எதையும் அவரால் எழுத முடியவில்லை. சில புனைவுகள் முயன்று பார்த்திருக்கிறார். அவை சவலையான ஆக்கங்களாகவே எஞ்சி இருக்கின்றன. கவலையும் உளைச்சலும் இல்லாமல் எழுத முடியாது என்பது உண்மைதான் போல. வேராவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரே கொடுங்கனவை வைத்து ஒரு நாவல் சமைத்து விட்டார். அதற்குப் பிறகு கவலையும் இல்லை, கற்பனையும் இல்லை. அவர் இறந்தபிறகு வெளியான வாசிக்கத்தக்க அளவில் இருக்கும் Letters from a Lost Generation-உம் அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் சேகரித்த கடிதங்களின் தொகுப்புதான்.

ஹெஸ்ஸேவிற்கும் தாமஸ் மன்னிற்கும் வாழ்வு பரிசளித்த அவஸ்தை உண்டு. மார்ஸல் ப்ரூஸ்ட்டின் தனிப்பட்ட வாழ்வு குறித்து தெரியவில்லை. அடுத்தவர் துன்பத்தை தனதாக்கிக் கொண்ட தல்ஸ்தோய் விதிவிலக்கு. வாழ்க்கை நம்மை ஓங்கி அறையாவிட்டால் நன்றாக எழுத முடியாது எனில் பயமாக இருக்கிறது.

கஷ்டங்களை எங்கே போய் தேடுவது? எப்போது எழுதுவது?

https://images-na.ssl-images-amazon.com/images/I/61sNx0+myuL.jpg

3

மகத்தான ருஷ்ய படைப்பாளிகளான தொல்ஸ்தோய்க்கும் தஸ்தாவ்யெஸ்கிக்கும் இடையில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் எனக்குக் குழப்பங்களே இருந்ததில்லை. ஒப்பற்ற உயிர்க் கருணையின் பேரொளியிலேயே உலகியக்கத்தின் உணர்ச்சிப் பெருக்கை, அதன் சீர்குலைவை, ஒழுங்கினை, நலுங்கலை எல்லாம் மினுங்கச் செய்த தொல்ஸ்தோய் தான். அவரது படைப்புலகை கனிவின் ‘உச்சம்’ எனச் சொன்னால் ஏதோ பீடத்தில் ஏற்றி வைத்தது போன்ற விலகலை அளித்து விடுகிறது. அவர் எங்கேயோ உச்சியில் நின்று கொண்டு நம்மைக் குனிந்து நோக்குபவரல்ல. கனிவின் நீர்மையின்பாற் இருண்மையிலும் ஒளியைத் தேடுபவர். திசையறியா காரிருளில் வழிகாட்டி. எலும்பில் ஊடுருவும் வலிக்கு மருந்து.

அந்தப் பெருங்கருணையின் மெய்ஞானத்தை தமிழுக்கு அமுதூட்டிய கு. அழகிரிசாமியின் சிறுகதைகள் முழுத் தொகுப்பினையே எந்தவொரு நல்ல நண்பருக்கும் வாசகருக்கும் பரிசளிக்க விரும்புவேன். காலச்சுவடு வெளியீடு. மொழி, உத்தி, கோட்பாடு என எதுவும் மெய்மைத் தேடலின் ஆவேசத்தின் முன்பு செல்லுபடியாகாது. அதன் விவேகப் பாய்ச்சலை கதையின் ஒவ்வோர் அணுவிலும் பொதிந்து வைத்தவர். பாசாங்கற்ற கதாபாத்திரங்கள் வழியாக மனிதரின் மேன்மையான பக்கங்களை அள்ளியள்ளி எடுத்துரைத்தவர்.

https://m.media-amazon.com/images/I/51-n-RUt+aL.jpg

வேறெதையுமே வாசிக்காமல் அவரது நூற்றி சொச்சம் கதைகளில் மட்டும் தொடர்ந்து ஆழ்ந்திருந்த பல மணி நேரங்களை இப்போது நினைக்கையிலும் பரவசமாக இருக்கிறது. அவரது கதைகள் நம்மைச் சீண்டுவதில்லை. மாறாக, அழுள்ளத்தில் அமைதியைக் கொண்டு வருகிறது. அவரது ‘வேடிக்கை மனிதர்களை’ எண்ணி புன்னகைக்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கிறது. தாயுள்ளத்தின் அரவணைப்பில் கடத்தப்படும் கதகதப்பு. முன்முடிவுகளற்ற சித்தரிப்பில் தெளிந்து வரும் மேதைமை.

அவருக்குப் பிறகு தமிழ்ப் பரப்பில் குழந்தைகளின் உலகை அவரளவுக்கு அணுக்கமாகச் சித்தரித்தவர் சு. வேணுகோபால் மட்டுமே. குழந்தைகள் உலகைக் காட்டிவிட முடிந்தபின் மற்றதெல்லாம் எம்மாத்திரம்? தமிழ்ச் சிறுகதையின் மகத்தான கதைசொல்லி. சாதனையாளர். எல்லோரையும் விட சிறந்தவர். ஆம், புதுமைப்பித்தனை விடவும் சிறந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமி.

4

https://upload.wikimedia.org/wikipedia/commons/e/ea/David_Foster_Wallace.jpg

டேவிட் ஃபாஸ்டர் வாலஸ்

செப்டம்பர் பன்னிரெண்டாம் தேதியன்று டேவிட் ஃபாஸ்டர் வாலஸின் நினைவுநாள் வருகிறது. கலைஞர்கள் அகால மரணமடையும் போதோ தற்கொலை செய்துகொள்ளும் போதோ அந்தச் சாவின் வீரியம் பன்மடங்காகிறது. அவர்களது கலைத் தேட்டமும் ஈடுபாடும் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. ஓர் உச்சநிலையில் கவியும் துக்கம் இருக்கிறதல்லவா? அதைச் சந்திக்க இயலாமல் தான் உள்ளுள் சுருக்கிட்டுக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.

படைப்பாக்க மனநிலை கொண்டவர்களது ஆழ்ந்த சிந்தனையும் நுண்ணுணர்வும் இன்னதென்று வகுத்தக்கொள்ள முடியாத வெறுமைக்கே இட்டுச் செல்கின்றது. அறிய முடியாதவை அளிக்கும் திகைப்பின் முன் அவர்கள் சுருங்கிப் போகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் எல்லாம் தங்களை மரணத்திற்குத் தயார்படுத்திக் கொள்வதற்காகவே கலையைப் பேணுகிறவர்கள். அதைக் கொழுகொம்பெனப் பற்றிக் கொள்கிறவர்கள். கலையின் வழியாகவும் தாங்கள் விரும்பும் ஈடேற்றத்தை அடைய முடியாது என்றறியும் போது அதுவரை அடக்கி வைத்திருந்த பொருமல்கள் அத்தனையும் ஒரே வீச்சில் கிளர்ந்தெழுகின்றன. மனத்துள் நிகழும் அப்பெருவெடிப்பைத் தாங்க மாட்டாது வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்க எழுத்தாளரான டேவிட் ஃபாஸ்டர் வாலஸும் தற்கொலை செய்துகொண்டார். என்னை மிகவும் பாதித்த மரணங்களுள் ஒன்று. This is Water போன்ற மனித நேயம் ததும்பும் உரையை எழுதியவர். கனிவின் நீர்க்குமிழ் மென்மையைத் தீண்டிக் காபந்து செய்தவர். ஆனால், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மனச்சோர்விற்கான மருந்துகளை உட்கொண்டே வாழ்ந்து வந்தார். அது உண்டாக்கும் பக்க விளைவுகளுடன் போராடி, வேதனையையும் வலியையும் பொறுத்துக்கொள்வதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொள்வதே உகந்த செயல் என முடிவெடுத்து விட்டார்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/71t9YpiAduL.jpg

அவரது Infinite Jest நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும். அதில் தனிமைக்கு அடிமையாவதன் போதையைப் பற்றி எழுதியிருப்பார். தனிமை சுகம் கண்டவர்களது வரமும் சாபமும் பகுத்தறிய முடியாதது. உள்ளொடுங்கி உள்ளொடுங்கி புள்ளியாகி விட்டபின் மேலும் சுருங்குவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. அந்தத் தருணத்தில் மன அழுத்தங்கள் பீறிட்டுப் பெருகுகின்றன. கட்டுப்படுத்த இயலாத அளவில் வெள்ளமெனப் பாய்கின்றன.

ஒற்றைச் சிறுபுள்ளியில் இருந்து வெடித்துக் கிளம்பும் விஸ்வரூபத்தின் கனத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாதவர்கள் இருக்கிறார்கள். தடதடக்கும் முரசொலிகள் அவர்களது நெஞ்சை ஊடுருவும். எண்ணில் அடங்காத இடி முழக்கங்கள் மத்தளம் கொட்டும். அதிலிருந்து மீட்பே இல்லை என்பது மட்டும் குரூரமான நிஜம். அவர்கள் என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

அத்தகைய உளைச்சல்களை அனுபவித்து விட்டு இப்படியொரு நாவலையும் கொடையாகத் தந்து தற்கொலை செய்துகொண்ட டேவிட் ஃபாஸ்டர் வாலஸுக்கு நான் ஆலோசனைகள் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன். வாழ்வது எப்படி எனப் பாடமெடுக்க மாட்டேன். மாறாக, அந்த மனதைத் தொட்டறிய முயற்சி செய்வேன். வணங்கி விடைகொடுப்பேன்.