என் மனைவியின் கனி – ஹான் காங் – தமிழில்: சசிகலா பாபு

by சசிகலா பாபு
0 comment

1

மே மாதத்தின் பிற்பகுதியில்தான் என் மனைவியின் உடலில் இருந்த அந்தக் காயங்களை முதன்முதலாகக் கண்டேன். வாயிற்காப்பாளரின் அறையினருகே இருந்த இளஞ்சிவப்பு வண்ண லிலாக் மலர்ப்படுகையில் இருந்து துண்டிக்கப்பட்ட நாக்குகள் போலப் பூவிதழ்கள் கொட்டிக்கிடந்த நாளொன்றில், மூத்த குடிமக்கள் மையத்தின் வாயிலில் போடப்பட்டிருந்த நடைபாதைப் பலகங்களின் மீது நடந்துசெல்வோரின் காலடிகளில் நசுங்கி வெண்ணிற மலர்கள் அழுகிப்போயிருந்த நாளொன்றில்தான் அவளுடைய காயங்களை நான் கண்டேன்.

அச்சமயம் சூரியன் உச்சத்தில் இருந்தது.

எண்ணிறந்த அளவில் தூசுத்துளிகளையும் மகரந்தத்துகள்களையும் அள்ளி இறைத்தபடியே, நன்கு கனிந்த பீச் பழச்சதையின் வண்ணத்தில் வெயிலொளி எங்கள் கூடத்தின் தரையில் விழுந்துகொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளை நானும் என் மனைவியும் புரட்டிக்கொண்டிருந்தோம். திகட்டும் இனிமையும் இளஞ்சூடும் கொண்டிருந்த வெயில் நான் அணிந்திருந்த உள்சட்டையையும் மீறி என் முதுகில் பாய்ந்தது.

கடந்த பல மாதங்களாக நான் அனுபவித்து வரும் அதே சோர்வுடன்தான் சென்ற வாரமும் கடந்து சென்றிருந்தது. வார இறுதிநாட்களில் மட்டும் படுக்கையிலிருந்து தாமதமாக எழுந்திருக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் நான் கண்விழித்திருந்தேன். ஒருபக்கமாக சாய்ந்துபடுத்து, அயர்ந்துகிடந்த என் கால்களை எனக்கு வசதியானபடி மெல்ல நகர்த்திவைத்துக்கொண்டேன். முடிந்தளவு மெதுவாக செய்தித்தாளை மேய்ந்துகொண்டிருந்தேன்.

“இதைக் கொஞ்சம் பார்க்கிறீர்களா? இந்தக் காயங்கள் ஏன் மறையாமலேயே இருக்கின்றன என எனக்குப் புரியவில்லை.”

அவளுடைய வார்த்தைகள் அங்கு சூழ்ந்திருந்த அமைதியை இடையூறு செய்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றியதே தவிர அவள் கூறியதன் பொருளை நான் உள்வாங்கிக் கொள்ளவேயில்லை. ஏதோ நினைவுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.

எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். செய்தித்தாளில் நான் படித்துக்கொண்டிருந்த பகுதியை ஒரு விரலால் அடையாளம் வைத்துக்கொண்டு, உள்ளங்கையால் என் கண்களை நன்கு கசக்கிவிட்டுக்கொண்டேன். என் மனைவி உள்ளாடை தெரிய தன் சட்டையை தூக்கிவிட்டிருந்தாள். அவளுடைய வயிற்றிலும் முதுகிலும் பலவண்ணங்களில் ஆழமான காயங்கள் இருந்தன.

“இவை எப்படி ஏற்பட்டன?”

அவளது இடுப்பை எனக்கு வாகாகத் திருப்பி, அவள் அணிந்திருந்த மடிப்புப்பாவாடையின் ஜிப்பில் துவங்கி அவளது முதுகுத்தண்டுவடம் முழுவதையும் உற்றுப் பார்த்தேன். பிறந்த சிசுவின் முஷ்டியளவில் இருந்த அந்த வெளிர்நீலவண்ணக் காயங்கள், மை கொண்டு அச்சடித்தாற்போல அத்தனை தெளிவாகத் தெரிந்தன.

“சொல், உனக்கு எப்படி இவை ஏற்பட்டன?” பதினெட்டு பியாங் அளவுள்ள எங்களின் அடுக்கக வீட்டின் அமைதி நிறைந்த வெளியை கூர்மையும் வற்புறுத்தலும் நிறைந்த எனது குரல் கிழித்துச் சென்றது.

“எனக்குத் தெரியவில்லை.. என்னையுமறியாமல் எதிலேனும் மோதிக்கொண்டிருப்பேன் என நினைக்கிறேன். காயங்கள் தாமாகவே ஆறி மறைந்துவிடும் என நினைத்தேன்.. ஆனால் அவை பெரிதாகிக்கொண்டேதான் போகின்றன.”

தவறு செய்துவிட்ட குழந்தை கையும்களவுமாக பிடிபட்டுக்கொண்டதைப் போல என் மனைவி என் பார்வையைத் தவிர்த்தாள். அவளை கடிந்துகொண்டதற்காய் வருத்தம் மேலிட, என் குரலை மென்மையாக்கிக் கொள்ள முயன்றேன்.

“வலிக்கவில்லையா?”

“இல்லை, கொஞ்சமும் வலியில்லை. சொல்லப்போனால் காயம்பட்ட பகுதிகளில் உணர்ச்சியே இல்லை. ஆனால், அதுதான் மேலும் வருத்தமளிக்கிறது.”

சிறிது நேரத்திற்கு முன்னர் நான் கண்ட அந்தக் குற்றவுணர்ச்சி சுவடேயில்லாது அவள் முகத்திலிருந்து மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக அங்கு மென்மையான, பொருத்தமேயற்றதொரு புன்னகை குடிகொண்டது. மருத்துவமனைக்கு செல்லவேண்டுமா என அவள் கேட்டபோது அந்தப் புன்னகை அவள் இதழ்களில் தவழ்ந்துகொண்டிருந்தது.

ஒட்டுமொத்தச் சூழலிலிருந்தும் விலகி, இயல்பான உணர்ச்சிவயப்படாத பார்வையோடு என் மனைவியின் முகத்தை ஆராய்ந்தேன். நான் கண்ட முகம் எனக்குப் பரிச்சயமற்றதாய் இருந்தது. பரிச்சயமற்றதாய் இருந்ததோடல்லாது போலியாகவும் இருந்தது. நான்கு வருடங்களாக இருவரும் இணைந்து வாழ்ந்தபிறகும் இத்தகையதொரு போலித்தனம் தோன்றுவது எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது.

என்னைவிடவும் என் மனைவி மூன்று வருடங்கள் இளைவள். இப்போது அவளுக்கு இருபத்தொன்பது வயது. எங்களுக்குத் திருமணம் நிகழ்வதற்கு முன்னர், நாங்கள் இருவரும் இணைந்து வெளியே செல்லும்போதெல்லாம், அவள் முகம் அவளை மிகவும் இளையவளாகத் தோன்றச்செய்து சங்கடப்படுத்தும். பள்ளிமாணவியென அவளைப் பலர் தவறுதலாக எண்ணியிருக்கின்றனர். இப்போதோ அவளுடைய அப்பாவித் தோற்றத்தோடு சேர்ந்து வெளிப்படையாகத் தெரிந்த அயர்ச்சியின் அறிகுறிகளும் அவள் முகத்தில் அதிர்ந்துகொண்டிருந்தன.

இனி எவரும் அவளைப் பள்ளிமாணவியாக மட்டுமல்ல பல்கலைக்கழக மாணவியாகக்கூட தவறுதலாக எண்ணமுடியாது. சொல்லப்போனால், அவளுடைய உண்மையான வயதைவிடவும் முதியவளாகத் தெரிந்தாள். முன்னர் அவளது கன்னங்கள் ஆப்பிள் காய்களுக்குள் ஏறத்துவங்கும் செந்நிறமாய் இருந்தன. இப்போதோ அவளது கன்னங்கள் குத்துபட்ட களிமண்கட்டி போல் ஒடுங்கிப்போயுள்ளன. சர்க்கரைவள்ளிக்கிழங்கு நாற்றைப்போல் வளைந்து நெகிழ்ந்து மென்மையாகவிருந்த அவள் இடையும், கவர்ந்திழுக்கும் வளைவுகளைக்கொண்ட அவளது வயிறும், இப்போது பரிதாபகரமாக மெலிந்துபோயுள்ளன.

கடைசியாக என் மனைவியை எப்போது நான் நிர்வாணமாகக் கண்டேன்? அவளை முழு நிர்வாணமாகக் காணுமளவு பிரகாசமாக இருந்த அந்த நாளை என் நினைவிற்குக் கொண்டுவரப் போராடினேன். கண்டிப்பாக இந்த வருடத்தில் அது நிகழவில்லை. சென்ற வருடமேனும் அது நிகழந்ததா எனவும் எனக்குச் சரியாக நினைவில்லை.

என்னோடே வாழும் ஒரு ஜீவனின் உடலில் இத்தனைக் கடுமையான காயங்கள் உண்டாகியிருப்பதை எப்படி நான் காணத் தவறினேன்? என் மனைவியின் விழியோரங்களில் பிரகாசித்த மெல்லிய சுருக்கங்களை எண்ண முயன்றேன். பிறகு அவள் அணிந்திருந்த ஆடைகளைக் களையச் சொன்னேன். உடல் எடை குறைந்துபோனதால் கூர்மையாய் துருத்திக்கொண்டிருந்த அவளது கன்னவெலும்புகளில் பளீரெனச் சிவப்பு பாய்ந்தது. அவள் என் சொல்லை ஆட்சேபித்தாள்.

“யாரேனும் பார்த்துவிட்டால் என்னாவது?”

பெரும்பாலான அடுக்ககவீடுகளில் அமைந்துள்ளது போல எங்கள் வீட்டு பால்கனி பூந்தோட்டத்தையோ வாகனம் நிறுத்துமிடத்தையோ பார்த்தபடி அமைந்திருக்கவில்லை, பிரதான கிழக்குச்சாலையை நோக்கித்தான் அது அமைந்திருந்தது. அண்டை அடுக்ககத்தில் இருந்து எங்கள் இல்லம் மூன்று வீதிகள் தள்ளியிருந்ததோடு, இரண்டுக்கும் இடையே பிரதான சாலையும் சுங்நங் ஓடையும் அமைந்திருந்ததால், சக்திவாய்ந்த தொலைநோக்கியொன்றின்  உதவிகொண்டு வேண்டுமானால் எவரேனும் எங்களை வேவுபார்க்க இயலுமே தவிர, வேறு எவ்வழியிலும் அது சாத்தியமில்லை. சாலையில் விரையும் வாகனத்தில் இருக்கும் எவருக்கேனும் எங்கள் வீட்டுக்கூடத்தின் நொடிநேரக் காட்சி காணக்கிடைப்பதில் அப்படியொன்றும் பெரிய ஆபத்து நேர்ந்துவிடப் போவதுமில்லை.

எனவே என் மனைவி சங்கடத்தினால்தான் மறுக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன். திருமணமாகியிருந்த புதிதில், ஆகஸ்ட் மாதத்தின் புழுக்கத்தை விரட்டவேண்டி, வராண்டா நோக்கியிருந்த கண்ணாடிக் கதவையும் அதனையொட்டிய ஜன்னலையும் அகலத் திறந்துவைத்தபடி, நட்டநடுப்பகலில் இதே கூடத்தில்தான்,  நாங்கள் பலமுறை உடலுறவு கொண்டுள்ளோம், அப்போது எங்களுக்கு மிகப் புதிதாக கிடைத்திருந்த ஒன்றை ஏனோதானோவென்று ஆய்வு செய்தோம். இறுதியாக ஆயாசத்தின் பாரத்திற்கு இரையாகிப் போனோம்.

ஏறத்தாழ ஒரு வருடம் கடந்துபோனதும் காதல் எங்களுக்கு பழகிப்போய், துவக்கநாட்களில் இருந்த உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்துபோனது. என் மனைவி வெகு சீக்கிரமாகவே உறங்கச் சென்றுவிடுவாள். அத்துடன் அவள் அசாதாரணமான ஆழ் உறக்கம் கொள்பவளாகவும் இருந்தாள் . இரவில் தாமதமாய் நான் வீடுதிரும்புகையிலெல்லாம் அவள் நிச்சயம் உறங்கிப் போயிருப்பாள். வீட்டின் முன்கதவை சாவிகொண்டு திறந்து, வரவேற்க ஒருவருமில்லாமல் தனியாக வீட்டிற்குள் அடியெடுத்துவைத்து, குளித்துவிட்டு, இருண்டுகிடக்கும் படுக்கையறைக்குள் நுழைந்ததும், சீராய் ஒலிக்கும் அவளது சுவாசங்களின் ஒலியைக்கேட்டு விவரிக்கவே முடியாததொரு வெறுமையை உணர்வேன். இந்தத் தனிமையை தணித்துக்கொள்ள அவளை அணைத்துக்கொண்டால் உறக்கம் சூழ்ந்து பாதி மூடியிருக்கும் விழிகளால் என்னைப் பார்ப்பாள். என் அணைப்பை நிராகரிக்கிறாளா அல்லது அன்போடு அதை திருப்பியளிக்கிறாளா என்பதை அந்தப் பார்வையிலிருந்து அறிந்துகொள்ள முடியாது. என் உடலின் இயக்கங்கள் அடங்கும்வரை அவள் விரல்கள் என் கேசத்தை அமைதியாக அளைந்தபடி இருக்கும்.

“எல்லாவற்றையுமா? எல்லா உடைகளையுமா களையச்சொல்கிறீர்கள்?”

பீறிட்டுக்கிளம்பிய அழுகையை அடக்கப் போராடியதில் அவளது முகம் கோணலாகியது. கழற்றிய உள்ளாடையை பந்தாக உருட்டி, தன் அந்தரங்கப் பகுதியை மறைத்துக்கொண்டு என் மனைவி நின்றாள்.

அவளது நிர்வாண உடலின் மீது வசந்தகால வெயில் முழுமையாய் விழுந்தது. நீண்ட காலத்திற்குப் பின் அவளை இவ்வாறு காண்கிறேன்.

எனினும் எனக்கு அணுவளவுகூட விருப்பம் எழவில்லை. அவளுடைய புட்டங்களில் மட்டுமல்லாது விலாவிலும் முழந்தாள்களிலும் கூட பசும் மஞ்சள்நிறக் காயங்கள் இருந்தன, தொடைச் சதையின் உட்புற வெண்மையிலும் கூட அவை படர்ந்திருந்ததைக் கண்டு கடுங்கோபம் என்னை ஆட்கொண்டது, எனினும் உடனடியாக அது மறைந்துபோன போதும் தேவையேயில்லாத துக்கமொன்று என்னுள் எழுவதை உணர்ந்தேன். அலைவுறும் மனதையுடையவள் இவள், மாலைநேரமொன்றில் சாலையோரம் நடந்துசெல்கையில் உறக்கம் இவளை பீடித்துவிட்டதோ, அந்த உறக்கச்சடவில் உணர்வுகளெல்லாம் செயலிழந்துபோனதோ, அதனால் சாலையில் மெதுவாக வந்துகொண்டிருந்த ஏதேனும் காரொன்றின்மேல் மோதிக்கொண்டிருப்பாளோ அல்லது எங்கள் கட்டிடத்தில் விளக்குகள் இல்லாமல் இருண்டுகிடக்கும் அவசரத் தேவைக்கான படிக்கட்டுகளில் காலிடறி விழுந்திருப்பாளோ?

பின்வசந்தகாலத்தின் வெயில் முதுகில் விழ, தன் பிறப்புறுப்பை மறைத்தபடி, மருத்துவமனைக்குச் செல்லவேண்டுமா என ஏதோ நினைவில் மூழ்கியபடி கேட்ட என் மனைவியின் உருவம் அந்நொடி கொண்டிருந்த அவலமும் பரிதாபமும் வருத்தமும் வார்த்தைளுக்குள் அடக்கமுடியாதவை. நீண்டகாலத்திற்குப் பிறகு என்னுள் ஒரு பெருந்துக்கம் எழுவதை உணர்ந்தேன். அவளது அந்த மெலிந்த தேகத்தை என்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன்.

2

அனைத்தும் சரியாகிவிடும் என நம்பினேன். அதனால்தான் அந்த வசந்தநாளில் என் மனைவியின் மெலிந்த தேகத்தை என் கரங்களில் தாங்கியபடி, “காயங்கள் வலிக்கவில்லை என்கிறாய், அப்படியானால் அவை கண்டிப்பாக மறைந்துவிடும். நீ இதுபோன்ற சிக்கல்களில் எப்போதும் சிக்கிக்கொள்ள மாட்டாயே, எப்படி இது நடந்தது?” எனக் கேட்டேன். என் வார்த்தைகளில் இருந்த நிந்தனையை மென்மையாக்க பெரிதாய் சிரித்துக்கொண்டேன்.

கோடை துவக்கத்தின் ஒருநாள் இரவில், ஈரப்பதம் நிரம்பியிருந்த அனற்காற்று காட்டத்தி மர இலைகளில் தன் பிசுபிசுப்பானக் கன்னத்தை தேய்த்தபடியிருக்க, இரத்தச் சிவப்பேறிய விழிகளுடன் வீதிகள் இருளும் ஒளியுமாய் மாறிமாறி மினுங்கிக்கொண்டிருந்தன. இருவரும் சேர்ந்து அன்றைய இரவு உணவை உண்டோம். உணவுமேஜையில் என்னெதிரே அமர்ந்திருந்த என் மனைவி தன் கரண்டியை சப்தத்துடன் கீழே வைத்தாள். அவளுடைய காயங்களை அச்சமயம் நான் முற்றிலுமாக மறந்துபோயிருந்தேன்.

“இது விசித்திரமாக உள்ளது.. மீண்டுமொருமுறை இவற்றைப் பாருங்களேன்” என்றாள்.

என் மனைவி அணிந்திருந்த சட்டையின் குட்டைக் கைகளுக்குள் இருந்து துருத்திக்கொண்டிருந்த அவளது மெலிந்த கரங்களை ஆராய்ந்தேன். சட்டென அவள் தன் டி-சர்ட்டையும் உள்ளாடையையும் கழற்றினாள். உடனே என்னிடமிருந்து அடக்கமுடியாமல் வேதனைக் குரலொன்று எழுந்தது.

சென்ற வசந்தகாலத்தின்போது, பிறந்த சிசுவொன்றின் முஷ்டியளவே இருந்த காயங்களெல்லாம் இப்போது சேம்பு இலைகள் அளவிற்குப் பெரிதாகியிருந்தன. மேலும் அவை கருத்திருந்தன. கோடைகாலத் துவக்கத்தின்போது, வெளிர் பச்சைநிறத்துடன் துளி நீலமும் கலந்து காட்சிதரும் வீப்பிங் வில்லோ மரக்கிளைகளின் மங்கிய நிறத்தோடு அவையிருந்தன.

நடுங்கும் கரங்களால் என் மனைவியின் காயம்பட்ட தோள்களைத் தடவிக்கொடுத்தேன். யாரோ அந்நியரைத் தொடுவதைப்போல அப்போது உணர்ந்தேன். இத்தனை பெரிய காயங்கள் அவளுக்கு எவ்வளவு வலியை உண்டாக்கியிருக்கும்?

இப்போது நினைத்துப் பார்த்தால், ஈயம் கலந்த நீர் படர்ந்தாற்போல என் மனைவியின் முகத்திலும் கூட நீலம் பாய்ந்திருந்ததை அப்போது கண்டேன். முன்னர் மினுமினுப்பாக இருந்த அவளுடைய கேசம் பலவீனமடைந்து, உலர்ந்த முள்ளங்கி இலைகளைப்போல உடைந்து போயுள்ளன. அசாதாரணக் கருமையுடன் விளங்கும் அவளது கருவிழிகளிலிருந்த மசி ஒழுகி அவளது விழிகளின் வெண்பகுதியில் கலந்துவிட்டாற்போல அவை வெளிர் இண்டிகோ நீலத்தில் இருந்தன. ஈரப்பதத்துடன் அவள் விழிகள் மினுங்கின.

“ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது? வெளியே செல்ல வேண்டுமென மிகவும் விரும்புகிறேன். ஆனால் வெளியே சென்றதுமே.. சூரிய ஒளியைக் கண்டதுமே, நான் அணிந்திருக்கும் உடைகளையெல்லாம் களைந்துவிடத் துடிக்கிறேன். அவற்றைக் கழற்றி வீசிவிட வேண்டுமென என் உடல் தவிப்பதைப் போலிருக்கிறது” என்றாள். என் மனைவி எழுந்து நின்றுகொண்டாள், ஒரு வருடமாய் நான் கவனிக்கத்தவறிய வாடிப்போன அவள் உடலின் நிர்வாணத்தைத் தெளிவாய் எனக்குக் காணத்தந்தாள். “நேற்றைக்கும் முன் தினத்தன்று, பால்கனிக்கு சென்றேன், அங்கிருக்கும் துணிதுவைக்கும் இயந்திரத்தின் அருகே நிர்வாணமாக நின்றேன். எவரேனும் என்னைப் பார்த்துவிடுவார்களோ எனக்கூட நான் எண்ணவில்லை… என் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளவும் நான் முயலவில்லை. சரியாகச் சொல்வதென்றால், ஒரு பைத்தியக்காரியைப் போல் நின்றுகொண்டிருந்தேன்!” என்றாள்.

என் மனைவியின் மெலிந்த தேகத்தின் மேற்பகுதி என்னை நோக்கி வருவதை வெறிப்பதைத் தவிர வேறெதையும் என்னால் அப்போது செய்யமுடியவில்லை. நான் பற்றியிருந்த உண்குச்சிகளின் முனைகளின் மேல் பதட்டத்துடன் என் விரல்களை ஓடவிட்டேன். ”எனக்குப் பசிப்பதுமில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக நிறைய நீர் பருகுகிறேன்… ஒரு நாளில் ஒரு கிண்ணம் சோறுகூட என்னால் உண்ண முடிவதில்லை. சரியாக உண்ணாததால் என் வயிற்றில் அமிலம் சரிவர சுரப்பதில்லையோ என்னவோ என ஐயம் உண்டாகிறது. அப்படியே வலுக்கட்டாயமாக உண்ண முயன்றாலும் அந்த உணவு சரியாக சீரணிப்பதில்லை, உண்டதையெல்லாம் வாயிலெடுத்து விடுகிறேன்” என்றாள். பொம்மலாட்டத்தில் கயிறுகள் துண்டிக்கப்பட்ட பொம்மையைப் போல சடாரென முழந்தாளிட்டு அமர்ந்து, என் தொடைகளிடையே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அவள் அழுகிறாளா என்ன? எனது உடற்பயிற்சி காற்சட்டையின் மீது வெப்பத்துடன் கூடிய ஈரம் படர்வதைக் கண்டேன்.

“ஒரு நாளுக்குள் பலமுறை வாயிலெடுப்பது எப்படியிருக்கும் தெரியுமா? பயணம் மேற்கொள்கையில் உணரும் உடல்நலமின்மையை தரையில் வலுவாய் கால்பாவி நிற்கும்போதும் உணரமுடியும். கூன்போட்டே நடக்கவேண்டியிருக்கும், உடலை நிமிர்த்தவே முடியாது. தலை எப்படி வலிக்கும் தெரியுமா… ஏதோ வலதுகண் தலைக்குள் துளைபோட்டுக்கொண்டு செல்வதைப் போல வலிக்கும். தோள்கள் பலகையைப் போல விறைத்துக்கொள்ளும், வயிற்றிலிருந்து சுரந்துவரும் மஞ்சள் அமிலத்தை நடைபாதைக் கற்களின் மீதும், சாலையோர மரங்களின் வேர்களின் மீதும்… உமிழ்ந்தபடியே செல்லவேண்டியிருக்கும்.”

பலவீனமாய் எரிந்த புளோரசண்ட் விளக்கைச் சுற்றிக்கொண்டிருந்த பூச்சியொன்றின் உரத்த ரீங்காரம் கேட்டது. கடால்பா மரத்தின் இதயவடிவ இலையின் அளவில் காயம் இருந்த என் மனைவியின் முதுகின்மீது அவ்விளக்கின் அடர்வெளிச்சம் விழுந்தது. அவளுக்குள் இருந்து கசிந்துவந்த கேவல்களை அடக்க அவள் முயற்சித்துக்கொண்டிருந்தாள்.

அவளது முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து, “மருத்துவமனைக்குச் செல். நாளை நேராக உள்ளக மருத்துவப்பிரிவுக்குச் சென்றுவிடு,” என்றேன்.

ஈரமாய் கறைகளுடன் இருந்த அவள் முகத்தைக் காணச் சகிக்கவில்லை. அவளது உடைந்த கூந்தலை என் விரல்களால் கோதிவிட்டபடியே அவளைப் பார்த்து என் பற்கள் தெரியப் பெரிதாய் புன்னகைத்து வைத்தேன். ”நீ செல்லும்போது கவனமாக இரு. உன்னை நீயே  மீண்டும் காயப்படுத்திக் கொள்ளாதே. தவறிவிழுந்து பொருட்களின்மீது இடித்துக்கொள்ள நீயொன்றும் குழந்தை கிடையாது” என்றேன்.

என் மனைவியின் ஈரமுகத்தில் நடுக்கத்தோடு ஒரு புன்னகை அரும்பியது, அவளுடைய உதடுகளில் தொக்கிநின்ற கண்ணீர்த் துளியொன்று, நீண்டு, தன்னைத்தானே அங்கிருந்து விடுவித்துக்கொண்டது.

3

அழுகையென்பது என் மனைவியின் இயல்பிலேயே இருந்ததா? இல்லை, அவள் அப்படியானவள் இல்லை. அவள் முதன்முதலாக அழுது நான் பார்த்தது அவளுடைய இருபத்தாறாம் வயதில்.

இளம்பெண்ணாக இருந்ததால் வெகு எளிதாக அவளால் அப்போது சிரிக்கமுடிந்தது, வண்ணப்பூச்சு போல் பளீரென மென்மையாய் ஒலிக்கும் அந்தச் சிரிப்புனூடாகத்தான் அவள் எப்போதும் பேசவே செய்வாள். அவளது இளந்தோற்றத்திற்கும் அமைதியும் முதிர்ச்சியும் கொண்ட அவள் பேச்சிற்கும் தொடர்பேயில்லாதது போல் எனக்குத் தோன்றும். அப்படியானவள்தான் முதன்முறையாகத் தன் குரல் நடுங்க என்னிடம், “சாங்யி-டோங்கின் வானளாவிய அடுக்ககத்தில் வசிப்பதை நான் வெறுக்கிறேன்” என்றாள்.

“எழுநூறாயிரம் மக்கள் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், ஒருநாள் நான் வாடிவதங்கி இறந்துபோய் விடுவேன் என எண்ணுகிறேன். இங்கு நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இருக்கும் ஒரேமாதிரியான கட்டிடங்களை, ஒரேமாதிரியான அடுக்களைகளை, ஒரேமாதிரியான கூரைகளை, ஒரேமாதிரியான கழிவறைகளை, குளியல்தொட்டிகளை, பால்கனிகளை, மின்தூக்கிகளை வெறுக்கிறேன். அத்தோடு பூங்காக்களை, ஓய்வுப்பகுதிகளை, கடைகளை, பாதசாரிகள் சாலைகளைக் கடக்கும் இடங்களையும் வெறுக்கிறேன். இங்கிருக்கும் அனைத்தையும் வெறுக்கிறேன்” என்றாள்.

”ஏன் இப்படியெல்லாம் எண்ணுகிறாய், ஹ்ம்ம்?” அவளது குரலில் இருந்த மிருதுத்தன்மையிலேயே என் கவனமெல்லாம் இருந்ததால் அவள் கூறியதன் பொருளை நான் உள்வாங்கிக் கொள்ளவேயில்லை. முரண்டுபிடிக்கும் ஒரு குழந்தையை சமாதானம் செய்வதுபோல்தான் அவளிடம் பேசினேன். “அதிகளவில் மக்கள் அருகருகே வசிப்பதில் வெறுப்பதற்கு என்னவிருக்கிறது?”

என் குரலில் ஓரளவு கண்டிப்பையும் கொண்டுவந்து, என் மனைவியின் கண்களுக்குள் பார்த்துப் பேசினேன். தெளிவான, ஒளிரும் கண்கள் அவளுடையவை.

“இதுவரை நான் வாடகைக்குக் குடியிருந்த அறைகள் யாவும் ஏதேனும் பொழுதுபோக்கு நகரத்தின் அருகே இருக்குமாறுதான் பார்த்துக்கொள்வேன். எப்போதும் மக்கள் சூழ்ந்திருக்கும் பகுதிகளுக்கும், பேரிரைச்சலோடு இசை தெருக்களில் வழியும் பகுதிகளுக்கும், சாலைகளை அடைத்துக்கொண்டு வாகனங்கள் ஒலிப்பான்களை அலறவிடும் பகுதிகளுக்கும்தான் நான் எப்போதும் குடிசெல்வேன். இல்லாதுபோனால் என்னால் சமாளித்திருக்கவே முடியாது. தனியாக இருந்ததை வேறெந்தவழியிலும் என்னால் சமாளித்திருக்கவே முடியாது” என்றேன். என் மனைவி தன் பின்னங்கையால் அவள் கன்னங்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்ட போதும் கண்ணீர் தொடர்ந்து வழிந்தபடியேதான் இருந்தது. “ஏதோவொரு தீரா நோய்மைக்குள் விழுந்து நான் சாகப்போகிறேன் எனத் தோன்றுகிறது. இந்தப் பதின்மூன்றாம் மாடியில் இருந்து நான் கீழே இறங்கப் போவதேயில்லை எனவும், என்னால் வெளியெ செல்லமுடியாமலேயே போகப்போகிறது எனவும் தோன்றுகிறது” என்றாள்.

“ஏன் இந்த சின்ன விஷயத்தை இத்தனைப் பெரிதுபடுத்துகிறாய்? நிஜமாகச் சொல்கிறேன், கொஞ்சம் அதிகப்படியாகத்தான் நடந்துகொள்கிறாய்” என்றேன்.

இந்த வானளாவிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நாங்கள் குடிவந்த முதல் வருடம், என் மனைவி அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். சியோலில் இருந்த மலைப்பாங்கான பகுதியொன்றில் இயற்கையான சூழலிடையே இருந்த அறையொன்றில்தான் முன்னர் என் மனைவி வாடகைக்குக் குடியிருந்தாள். முழுதும் வெப்பமூட்டப்பட்டு முழுக்க அடைக்கப்பட்டிருக்கும் இந்த வீட்டிற்கு அவள் உடல் ஒத்துப்போகவேயில்லை. அவளது சக்தியெல்லாம் வெகுவிரைவிலேயே வடிந்துபோனது, சொற்ப சம்பளத்திற்காய் அவள் பணிபுரிந்துவந்த சிறு பதிப்பகமொன்றுக்குச் செல்ல நாள்தோறும் சரிவான பாதையொன்றில் துரித நடையில் செல்வதை மட்டுமே அவளால் செய்யமுடிந்தது.

எங்களுடைய திருமணத்திற்காகவெல்லாம் அவள் தன் வேலையை விடவில்லை. உண்மையில், அவள் வேலையை விட்டபிறகுதான் நான் எங்கள் திருமணம் குறித்து அவளிடம் பேசவே செய்தேன். அவளுடைய மாதாந்திர ஊதியத்திலிருந்தும் ஓய்வுக்காலப்படியில் இருந்தும், வார இறுதிகளில் பகுதிநேர வேலை செய்தும் அவள் சேமித்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டே வெளியேறும் எண்ணத்தில்தான் அவள் அப்போது இருந்தாள்.

“இங்கிருந்து வெளியேறிச்சென்று என் நரம்புகளுக்குள் புது இரத்தம் பாய்ச்சிக்கொள்ளப் போகிறேன்” என்றாள். ராஜினாமா கடிதத்தை தனது உயரதிகாரியிடம் அவள் கொடுத்த நாளின் மாலையில்தான் இதை என்னிடம் கூறினாள். தனது நரம்புகளுக்குள் கட்டிகட்டியாகத் தேங்கிப்போயிருக்கும் கெட்ட இரத்தத்தை மாற்ற வேண்டுமெனவும், சோர்ந்து போயிருக்கும் அவளது நுரையீரல்களுக்குள் புத்துணர்வுகொண்ட காற்றை நிரப்பிக்கொள்ள வேண்டுமெனவும் கூறினாள். அவள் சிறு குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே சுதந்திரமாக சுற்றித்திரிந்து வாழ்ந்து இறந்துபோக வேண்டுமெனும் வேட்கையைக் கொண்டிருந்தாள், அதற்கான நேரம் சரியாக வாய்க்காததால்தான் அந்தப் பயணத்தைத் தள்ளிப்போட்டபடியே இருந்ததாகவும் ஆனால் தனது அந்தக் கனவை நனவாக்கிக் கொள்ளுமளவிற்கு இப்போது பணம் சேமித்துவிட்டதாகவும் என்னிடம் கூறினாள். ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்து அங்கே ஆறு மாதங்கள் வசிக்கப்போவதாகவும், அடுத்து வேறு எங்கேனும் செல்லப்போவதாகவும், அதற்கடுத்து வேறு இடம் என பயணிக்கப் போவதும்தான் தனது திட்டமெனக் கூறினாள். “நான் இறப்பதற்கு முன்னர் இதைச் செய்துவிட வேண்டும்” எனக்கூறிவிட்டு மென்மையாய் சிரித்தாள். “உலகத்தின் இறுதிமுனை வரை நான் பயணப்பட வேண்டும். என்னால் முடிந்த அளவு தூரமாகச் சென்றுவிடவேண்டும், கொஞ்சம் கொஞ்சமாக” என்றாள்.

ஆனால், உலகின் இறுதிமுனைவரை பயணிப்பதற்கு பதிலாக அவள் தனது சிறுசேமிப்புகளை எல்லாம் எங்களின் திருமணச் செலவுகளுக்காகவும் இந்த அடுக்கக வீட்டிற்கான வைப்புத்தொகையை செலுத்துவதற்காகவும்தான் செலவழிக்க வேண்டிவந்தது. அவள் ஏன் அப்படிச் செய்தாளென்பதை, ”ஏனெனில், உங்களை என்னால் பிரிய முடியாது” எனும் ஒற்றை வரியில் விளக்கிவிட்டாள். விடுதலைக்கான அவளது இந்தக் கனவு எத்தனை உண்மையாக இருந்திருக்கக்கூடும்? இவ்வளவு எளிதாக அவளால் அவ்விருப்பத்தை கைவிட முடிகிறதென்றால், அவள் அதில் அத்தனைத் தீவிரமாய் இருந்திருக்கவில்லை என எண்ணிக்கொண்டேன். அவள் கூறிய அனைத்துமே கற்பனையும் இனிமையும் மிக்கதொரு மாய விருப்பமெனவும், நிலவுக்குச் செல்ல ஆசைப்படும் ஒரு குழந்தையின் திட்டத்தைப்போலத்தான் அவளும் திட்டம் தீட்டியிருந்தாள் எனவும் தோன்றியது. அவள் தாமாகவே இதை இறுதியில் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் தாமதமாகவேனும் அவள் அதை உணர்ந்ததற்கு நான்தான் காரணமென எண்ணிப் பெருமிதப்பட்டுக்கொண்டேன்.

அவ்வப்போது அவளுக்குத் தோன்றும் வலிகளும் வேதனைகளும் பழக்கமானதுதான் எனும்போதும், வாடிய முட்டைக்கோசு இலைகள் போலே அவளது தோள்கள் மெலிந்துதொங்க, பால்கனி  கண்ணாடிக் கதவின் மீது கன்னத்தைப் பதித்தபடி கீழே சாலையில் விரையும் கார்களை அவள் வெறித்துக்கொண்டிருந்த காட்சியைக் கண்டதும் என் மனம் துயரம் கொண்டது. அவளிடம் துளி அசைவில்லை, அவளிடமிருந்து வெளிப்பட்ட மூச்சின் சப்தம்தான் அவள் உயிரோடிருப்பதையே உறுதி செய்தது; கண்களுக்குத் தெரியாத இரு கைகள் அவள் தோள்பட்டைகளை அழுத்திப் பிடித்திருப்பதைப் போலே, கண்களுக்குத் தெரியாத சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கும் பெரிய இரும்புக்குண்டு ஒன்று அவளது தசைகளை அழுத்தியிருப்பதைப் போலே தோன்றியது.

பெரும்பாலும் ஆளரவமற்று இருக்கும் அந்தச் சாலையில், நடுநிசியிலோ அல்லது விடிகாலை நேரங்களிலோ எப்போதேனும் விரையும் டாக்சி அல்லது மோட்டார் பைக்கின் சப்தம் கேட்டு என் மனைவி திடுக்கிட்டு எழுந்துகொள்வாள். “கார்களை விடவும் வேகமாக இந்தச் சாலை விரைந்து செல்வதைப் போலுள்ளது, விரையும் சாலையோடு சேர்ந்து இந்த வீடும் இழுபட்டுச் செல்வதைப் போலுள்ளது” என்றாள். அந்த வாகனங்களின் எஞ்சின் இரைச்சல்கள் தூரத்தில் தேய்ந்துபோய் மீண்டும் அவளை உறக்கம் ஆட்கொள்ளும்போதும்கூட, என் மனைவியின் அழகான முகம் பீதியில் உறைந்து வெளுத்துப்போயிருக்கும்.

அதைப்போன்றதொரு இரவில், கனவு கண்டுகொண்டிருந்த என் மனைவி தெளிவற்ற கம்மலான குரலில், “இவையெளெல்லாம் எங்கிருந்து வந்தன… எதைநோக்கி இவையெல்லாம் ஓடுகின்றன?” எனக் கூறக் கேட்டேன்.

4

மறுநாள் மாலை, முன்கதவைத் திறந்துகொண்டு அடுக்கக வீட்டினுள் நான் அடியெடுத்து வைத்ததுமே, என்னை வரவேற்க என் மனைவி விரைந்து வந்தாள். நடைக்கூடத்தில் என் காலடிகளைக் கேட்டிருப்பாள் போலிருக்கிறது. வெறுங்கால்களோடு இருந்தாள், விரல்நகங்களை வெட்டி நேர்த்தியாகப் பராமரிக்கும் பழக்கம் கொண்ட அவள் சமீபகாலமாக அதைச் செய்யாததால் அவளது பெருவிரல்நகங்கள் பளீரிடும் வெண்மையில் இருந்தன.

“மருத்துவமனையில் என்ன சொன்னார்கள்?” எனக் கேட்டேன்.

பதிலில்லை. நான் என் காலணிகளை கழற்றுவதையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கன்னத்தில் புரண்டுகொண்டிருந்த மெல்லிய முடிக்கற்றையை காதின் பின்னே ஒதுக்கித் தள்ளிவிட்டபடியே திரும்பிச் சென்றாள்.

அவளது அந்தப் பக்கவாட்டுத் தோற்றம் எனக்கு வேறுநினைவுகளைக் கொண்டுவந்தது. பணியிடத்தில் மூத்த ஊழியரொருவர் எங்களிருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தார், பிறகு எங்கிருவரையும் தனிமையில் விட்டுவிட்டு அவர் அங்கிருந்து விலகியதும், என் வருங்கால மனைவியின் முகத்தில் அந்நேரம் நிழலாடிய உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினேன். எங்கோ தொலைதூரத்தில், ஏதோவொரு ரகசிய ஸ்தலத்தில் அவள் சுற்றித்திரிவதைப் போலத்தான் அவள் முகம் தோற்றமளித்தது. உடனடிப் பார்வைக்கு மகிழ்வாகவும் இனிமையாகவும் தோற்றமளிக்கும் அவள் முகம், அவளை முற்றிலும் வேறொருத்தியாக காட்டக்கூடியவகையில் எதிர்பாராததொரு தனிமையுணர்வையும் வெளிப்படுத்தியது. அவள் என்னைப் புரிந்துகொண்டுவிட்டாள் என எனக்கு கணநேர நம்பிக்கை அப்போதுதான் தோன்றியது.

அந்த நம்பிக்கையும், நானருந்தியிருந்த மதுபானமும் கொடுத்த தைரியத்தில்தான் எனது வாழ்வு முழுவதுமே நான் தனிமையிலேயே தவித்து வந்தேனென அவளிடம் உளறினேன். என் மனைவியாகவிருந்த அந்த இருபத்தாறு வயதுப் பெண் அப்போதும்கூட இதேபோல்தான் தன் முகத்தை தூரத்திலிருக்கும் அடிவானத்தை நோக்கி திருப்பி வைத்துக்கொண்டாள், இதே வெறுமை நிறைந்த, தனிமை ததும்பும் பக்கவாட்டு முகத்தோற்றத்தைத்தான் அப்போதும் கண்டேன்.

“மருத்துவமனைக்குச் சென்றாய்தானே?” தலையசைப்பதைப் போலே கழுத்தை மிக லேசாகத் திருப்பினாள் என் மனைவி. நோய்மைகொண்ட அவளது சருமநிறத்தை மறைத்துக்கொள்ளத்தான் அவ்வாறு திரும்பிக்கொண்டாளா அல்லது நான்தான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? “தயவுசெய்து என்னிடம் எதாவது பேசேன். மருத்துவர் என்னதான் கூறினார்?” எனக் கேட்டேன்.

“எல்லாம் நன்றாக இருக்கிறது என்றார்” என்றாள். ஒரு வரியைப் போலல்லாது சுவாசத்தை வெளியேற்றுவதைப் போலத்தான் அந்த பதில் வந்துவிழுந்தது. அச்சம் தரும்வகையில் அவள் குரல் உணர்ச்சியேயற்று இருந்தது.

முதன்முதலாக நாங்கள் சந்தித்தபோது, அவளது குரல்தான் என்னை வெகுவாய் ஈர்த்தது. நான் சொல்லப்போவது முட்டாளதனமான ஒப்பீடாகக்கூட இருக்கலாம். அவளது குரல் மிக நேர்த்தியாக மெருகூட்டப்பட்டுப் பளபளக்கும் ஒரு தேநீர் மேஜையைத்தான் எனக்கு நினைவுபடுத்தியது. மிக முக்கியமான விருந்தாளிகளுக்கு மிகச் சிறந்த கோப்பைகளில் மிகச் சிறந்த தேநீர் கொடுத்து உபசரிக்கவென மட்டும் நாம் வெளியில் எடுக்கும் மிக அழகிய வேலைப்பாடு நிறைந்த மரச்சாமானைப் போல்தான் அவள் குரல் தோன்றியது. நான் உளறிக்கொட்டிய வாக்கியங்களால் பெரிதாய் உருக்குலையாமல் இருந்த அன்றைய இரவின் உரையாடலில், தன் வழக்கமான நிதானக் குரலில் என் மனைவி மிகக் கச்சிதமாக, நேரடியாகத் தன் பதிலைக் கூறினாள். ’என் வாழ்க்கை முழுவதும் ஒரே இடத்தில் தேங்கியிருக்க என்னால் முடியாது’ என்றாள்.

அதன்பிறகுதான் நான் செடிகளைப்பற்றி அவளுடன் பேசத் துவங்கினேன். வீட்டின் பால்கனி முழுக்க பெரியபெரிய பூந்தொட்டிகள் வைத்து, அவற்றுள் மலைக்கீரைகளும் பெரில்லா மலர்ச்செடிகளும் வளர்க்கவேண்டுமென எனக்கொரு கனவு இருப்பதாக அவளிடம் கூறினேன். கோடைக் காலங்களின்போது, சிறுசிறு பனித்துளிகள் போலே சின்னஞ்சிறு மலர்கள் பெரில்லா செடிகளில் பூத்துக்குலுங்கும். அத்தோடு, சமையலறையில் பீன் செடிகளை வளர்க்கலாம் எனவும் அவளிடம் கூறினேன். செடிகள் குறித்த எனது இந்தப் பேச்சுகளெல்லாம் அவளது எண்ணங்களில் இருந்து எத்தனை வேறுபட்டிருந்தன என எண்ணியபடி அத்தனை நேரமும் என்னையே நம்பிக்கையின்மையுடன் பார்த்துக்கொண்டிருந்த அவள் முகத்தில் இதைக் கேட்டதும் உடனே மெல்லிய புன்னகையொன்று தவழ்ந்தது. குற்றமற்ற, பலவீனமான அந்தப் புன்னகை விட்டுச்சென்ற தடத்தின் நுனியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “எனது வாழ்நாள் முழுவதையும் நான் தனிமையிலேயே கழித்து வந்துள்ளேன்” எனக் கூறிமுடித்தேன்.

எங்களுக்குத் திருமணம் முடிந்ததும், முன்னரே பேசியிருந்ததைப்போல எங்கள் பால்கனிகளில் பூந்தொட்டிகளை வைத்தேன். ஆனால் செடிகள் வளர்ப்பில் நாங்கள் தொட்டது துலங்கவேயில்லை. தொடர்ந்து நீர் விட்டாலே போதுமானது என நான் எண்ணிய சராசரி வகைமைச் செடிகளும் கூட ஒன்றும் பூக்காது, காய்க்காது காரணமேயில்லாமல் வாடிவதங்கி இறந்துபோயின.

நிலத்தின் ஆற்றலில் இருந்து எங்களுடைய மேல்மாடிவீடு வெகு விலகியிருப்பதால்தான் இப்படி நடக்கிறதென ஒருவர் கூறினார். நீரும் காற்றும் மாசடைந்து இருப்பதால்தான் எங்களின் செடிகள் சாகின்றன என மற்றொருவர் கூறினார். செடிகளைப்போன்ற உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான நன்னம்பிக்கை எங்களிடம் இல்லாததுதான் காரணமெனவும் கூறினர். ஆனால் அது உண்மையில்லை. முழு அர்ப்பணிப்போடு என் மனைவி செடிகளை கவனித்துக்கொண்ட விதம் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. மலைக்கீரையோ பெரில்லா செடியோ வாடிப்போனால் அரைநாளுக்கும் மேலே அவள் வருத்தத்துடனேயே திரிவதைக் காணலாம். அதேசமயம் விடாப்பிடியாக ஒரு செடி உயிரைக் கையில் பிடித்திருப்பதைக் கண்டுவிட்டால் போதும், அன்று முழுதும் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அவள் சுற்றிவருவதையும் காணலாம்.

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பால்கனியின் நீள்சதுரப் பூந்தொட்டிகளில் உலர்ந்த மண்ணைத் தவிர இப்போது எதுவுமேயில்லை. உலர்ந்து இறந்துபோன அந்தச் செடிகளெல்லாம் எங்கு போயின? எனக்கு ஆச்சரியம் மேலிட்டது. மழை பொழிந்தபோதெல்லாம், பூந்தொட்டிகளைத் தூக்கி ஜன்னல் நிலைக்கட்டையில் வைத்துச் செடிகளின் விரல்களை சில்லென்ற மழைத்தாரைகளில் நனையவிடுவேனே, அந்த இளம் நாட்களெல்லாம் எங்கு போயின?

என் மனைவி என்னிடம் திரும்பி, “நாமிருவரும் எங்கேனும் தொலைதூரத்திற்குச் சென்றுவிடலாம்” என்றாள். உற்சாகமூட்டும் அந்த மழையில் கொஞ்சமேனும் தம் உயிரை அந்தச் செடிகள் தக்கவைத்துக்கொண்டிருக்கையில், என் மனைவி மேலும்மேலும் மனச்சோர்வுக்குள்ளே விழுந்து கொண்டிருந்தாள். மழையில் நனைந்துகொண்டிருந்த மலைக்கீரை இலைகளின் மீது தன் தளர்ந்த கையை நீட்டியவள், “மூச்சுத்திணறும் இந்த இடத்தில் என்னால் வாழவே முடியாது” என்றபடியே மழைநீரை பால்கனியில் விசிறியடித்தாள். “சளியும் எச்சிலும் கலந்த இந்த மழை அழுக்காக உள்ளது” என்றாள். “உயிர்ப்புடன் இருப்பதைப்போல தோற்றமளிக்கிறதே தவிர இம்மழையில் உயிரே இல்லை” என ஆத்திரமாகக் கூறினாள். ”இந்த நாடு கெட்டுப்போய்விட்டது!” எனக்கூறும் குடிகாரனின் குழறிய பேச்சைப்போல அவள் குரல் விரோதத்துடன் ஒலித்தது. “இங்கு எதுவுமே வளர வழியில்லை, பார்க்கிறீர்கள்தானே? இங்கு அடைபட்டுக்கிடக்கும் எதுவும் வாழ முடியாது… திணறலும் இரைச்சலும் நிறைந்த இந்த இடத்தில் எதுவும் பிழைக்காது!” என்றாள்.

அதற்குமேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

“என்ன திணறல்?” புத்தம்புதிதாக நான் அடைந்திருக்கும் இந்த மகிழ்ச்சியை கண்மூடித்தனமாகச் சிதறடிக்கும் அந்தக் குத்தல் பேச்சை, நலமற்றுப்போயிருக்கும் அவள் உடலுக்குள்ளிருந்து  நீண்டகாலமாக அழுத்தப்பட்டிருந்த துயரங்களை வெளியேற்றும் அவள் வார்த்தைகளை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ”சொல்!” என் கைகளுக்குள் சேகரித்திருந்த மழைநீரை என் மனைவியின் மீது விசிறியடித்தேன். “என்ன திணறல்? என்ன இரைச்சல்?”

ஈன முனகலொன்று என் மனைவியிடமிருந்து எழுந்தது. அவள் கைகள் அதிர்ச்சியோடு அவசரம் அவசரமாக அவள் முகத்தின்முன் அளைந்தன. பால்கனியின் ஜன்னல் கண்ணாடி மீது சிதறிய குளிர்மழை என் மீதும் தெளித்தது. ஜன்னல் கட்டையின் மீது வைத்திருந்த பூந்தொட்டி பால்கனி தரையின் மீது விழுந்து உடைந்தது. அப்போது அதன் கூர்முனை என் மனைவியின் பாதத்தைக் குத்திக் கிழித்துவிட்டது. உடைந்த தொட்டியின் ஓடுகளும், மண்கட்டிகளும் என் மனைவியின் ஆடைகளிலும் அவளது வெற்றுப் பாதத்திலும் ஒட்டிக்கொண்டிருந்தன. தன் கீழுதட்டை கடித்தபடியே கீழே குனிந்து, காயம்பட்ட தன் பாதத்தை இருகைகளாலும் அழுந்தப் பிடித்துக்கொண்டாள்.

உதட்டைக் கடித்துக்கொள்வது அவளது நீண்டநாள் பழக்கம். எங்களுக்குத் திருமணமாகுவதற்கு முன்பிருந்தே, நான் கோபடைந்தாலோ அல்லது குரலுயர்த்திப் பேசினாலோ அவள் உதட்டைக் கடித்துக்கொள்வாள். உதடு வலிக்கும்படி கடித்துக்கொள்வதன்மூலம் தன் எண்ணங்களை அவளால் சமன்படுத்திக்கொள்ள முடிந்தது. நான் செய்ததற்கோ அல்லது கூறியதற்கோ பதிலாக சிறிது நேரம் கழித்து நிதானமாகவும் அறிவுப்பூர்வமாகவும் தன் தரப்பு வாதங்களை எடுத்துக்கூறுவாள். ஆனால் அன்று பால்கனியில் நிகழ்ந்த சம்பவத்திற்குப் பின்னர், தன் உதட்டைக் கடித்துக்கொள்வதை மட்டுமே என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாகத் தரத் துவங்கினாள். அன்றைய தினத்திற்குப் பிறகு நாங்கள் வாதம் செய்வதையே நிறுத்திக்கொண்டோம்.

“எதுவும் பிரச்சினையில்லை என்றுதானே மருத்துவர் கூறினார்?” எனக் கேட்டேன். அப்போது என்மீது அதீதச் சோர்வும் தனிமையும் படர்வதை உணர்ந்தேன். தோள்களை உதறி என்னுடைய சூட் ஜாக்கெட்டை கழற்ற முயன்றேன். அதற்குக்கூட உதவ என் மனைவி முன்வரவேயில்லை.

”எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறினார்” என்றாள். அப்போதும் அவள் முகம் திரும்பியே இருந்தது.

5

அவளிடமிருந்த கொஞ்சநஞ்சப் பேச்சையும் என் மனைவி சிறிதுசிறிதாக இழந்துவிட்டாள். நானாக பேசினாலொழிய அவள் பதில் பேசுவதேயில்லை. அப்போதும்கூட ஒரு தலையசைப்போ அல்லது தலையாட்டலோதான் அவளிடமிருந்து எனக்கு பதிலாகக் கிடைக்கும். பதில் கூற வற்புறுத்தி என் குரலை உயர்த்தினாலோ, என் பார்வையைத் தவிர்த்து எங்கேனும் தூரத்தே வெறிக்கத் துவங்கிவிடுவாள். கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்துகொண்டே வந்த அவளுடைய சருமத்தின் காயங்கள் மங்கலான புளோரசண்ட் விளக்கொளியிலும்கூட தெளிவாகத் தெரிந்தன.

எதுவும் பிரச்சினையிருப்பதாகத் தெரியவில்லை என மருத்துவர் கூறிவிட்டபடியால், என் மனைவியில் வயிற்றிலோ அல்லது குடல்களிலோ ஏதேனும் சிறு பிரச்சினையிருக்கலாம் என்பதையும் தாண்டி சிந்தித்துப்பார்த்தால், இது வெறும் ஏக்கத்தினாலும் உண்டாகியிருக்கக்கூடும். ஆனால் எதன்மீது இவ்வளவு ஏக்கம் கொண்டு வாடுகிறாள் இவள்?

கடந்த மூன்று வருடங்கள்தான் என் வாழ்வின் மிக மகிழ்வான, மிக அமைதியான காலமென்பேன். அலுவலகத்தில் எனக்கு வேலைப்பளு அதிகமாயில்லை. நாங்கள் குடியிருக்கும் அடுக்கக வீட்டின் உரிமையாளர் நாங்கள் கொடுத்த தொகையை உயர்த்திக் கேட்கவில்லை. புது அடுக்கக வீட்டிற்காக நான் வாங்கியிருந்த அடமானத்தொகை முழுவதையும் ஏறக்குறைய கட்டிமுடிக்கப் போகிறேன். அசரடிக்கும் பேரழகியாக இல்லாவிடினும் என் இல்லத்துணையாக இருப்பதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும் மனைவியொருத்தியையும் வாய்க்கப்பெற்றுவிட்டேன். முழுதாய் நிரம்பியுள்ள குளியல்தொட்டியின் உட்புறங்களில் இருந்து கசிந்துவரும் இளஞ்சூடான நீர் சோர்வுற்றிருக்கும் என் உடலைத் தொட்டுத் தழுவதைப் போன்றதொரு நிறைவை அனுபவித்து வந்தேன்.

ஆனால் என் மனைவிக்கு என்னதான் பிரச்சினை? உண்மையிலேயே அவளுக்கு எதன்மீதேனும் பெரும் விருப்பம் உண்டாகியுள்ளது என்றாலுமேகூட, அவளுக்குள் இத்தகைய உளவியல் சிக்கல் எழுமளவிற்கா அது உக்கிரமாய் இருக்கக்கூடும்? இந்தத் தனிமையை எனக்கு வழங்குவதற்கான உரிமை இந்தப் பெண்ணிற்கு உண்டா என ஒவ்வொரு முறையும் என்னை நானே கேட்டுக்கொள்ளும் போதும், அளப்பரிய வெறுப்புணர்வு என்னுள்ளே பொங்கிப்பெருகி நீண்டநாட்களாய் சேகரமான தூசுப்படலம் போலே என்னை அந்நியப்படுத்திவிடுவதை உணர்கிறேன்.

வெளிநாட்டிற்கு வியாபார நிமித்தமாய் நான் ஒரு வாரகாலம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு முந்தைய நாளான அடுத்துவந்த ஞாயிறன்று பால்கனியில் என் மனைவி துணிகளை உலர்த்திக் கொண்டிருப்பதைக் கண்டேன். இப்போது அவள் கரங்கள் முழுவதும் அந்தக் காயங்கள் பரவிவிட்டிருந்தன, நீலநிறக் காயங்களின் இடையே சிறுசிறு துண்டுகளாய் தெரிந்த அவளுடைய வெண்ணிறச் சருமம்தான் இப்போது உண்மையிலேயே காயங்கள் போல் தோற்றமளித்தன. எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. காலி துணிக்கூடையை எடுத்துக்கொண்டு அவள் கூடத்திற்குள் நுழைந்தபோது அவளை வழிமறித்து நின்றேன். உடைகளைக் களையுமாறு அவளிடம் கூறினேன். அவள் எதிர்த்தாள். ஆனால் அவள் அணிந்திருந்த டி ஷர்ட்டை விலக்கிப்பார்த்தேன், அவள் தோள்பட்டை முழுதும் அடர்நீலமாய் காட்சியளித்தது.

தடுமாறி பின் நகர்ந்து அவள் உடலையே உற்று நோக்கினேன். முன்னர் அடர்த்தியாக இருந்த அவளது கக்கத்து மயிர் கொட்டிப்போய் பாதியாக குறைந்திருந்தது, முன்னர் மென்மையும் மிருதுவுமாய் இருந்த அவளுடைய முலைக்காம்புகளில் பழுப்புவண்ணம் மறைந்துபோயிருந்தது.

“இதற்குமேல் இதை இப்படியே விட்டுவைக்க முடியாது. நான் தொலைபேசி மூலம் உன் தாயாரிடம் சொல்லிவிடப்போகிறேன்.”

“இல்லை, வேண்டாம், நானே சொல்கிறேன்” என என் மனைவி அவசரமாகக் கத்தினாள். ஏதோ அவளது நாக்கை மென்றபடி பேசுவதைப்போல அந்த வார்த்தைகள் வந்துவிழுந்தன.

“அப்படியானால் மருத்துவமனைக்குப் போ, புரிகிறதா? சருமநோய் நிபுணரிடம் செல். வேண்டாம், பொதுமருத்துவமனைக்குப் போ.” எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள். “உன்னுடன் மருத்துவமனைக்கு வர எனக்கு நேரமில்லை என நீயே அறிவாய். உன் உடம்பைப் பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும், எனவே அதை நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும் இல்லையா?” அவள் மீண்டும் தலையை அசைத்தாள். “நான் சொல்வதைக் கேள். உன் அம்மாவை அழைத்து உனக்குத் துணையாய் வைத்துக்கொள்.” தொடர்ந்து என் மனைவி தலையாட்டியபடியே இருந்தாள். அவள் உதடுகள் அழுந்த மூடியிருந்தன. நான் கூறியதையெல்லாம் அவள் கேட்டுக்கொண்டுதானிருக்கிறாள் என்பதை அவளது தலையாட்டலின் மூலம் முடிவுசெய்து கொள்ளலாமா? நான் கூறிய வார்த்தைகளெல்லாம் அவளுடைய ஒரு காதின்வழியே நுழைந்து மறுகாதின் வழியே வெளியே சென்றிருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம். கூடத்து அறையின் தரையில் அந்த வார்த்தைகளெல்லாம் மலிவான பிஸ்கட்டுகளைப் போல விழுந்து நொறுங்குவது என் காதில் விழுந்தது.

6

மின்தூக்கியின் கதவுகள் தடதடத்தபடியே திறந்துகொண்டன. பாரமாய் கனத்த என் பயணப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு இருண்டுகிடந்த நடைக்கூடம் வழியே நடந்துசென்று அழைப்புமணியை அழுத்தினேன். பதிலில்லை.

நன்கு குளிர்ந்திருந்த ஸ்டீல் கதவின்மீது என் காதை வைத்துக்கேட்டேன். அழைப்புமணி வேலை செய்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து இருமுறை, மூன்றுமுறை, நான்குமுறை என அதை அழுத்தியபடியே இருந்தேன். வீட்டினுள்ளே மணியடிப்பது ஒரு முணுமுணுப்பைப்போல மூடியிருந்த கதவின்வழியே வழிந்துவந்ததைக் கேட்டதும் எங்கோ தொலைதூரத்தில் அது ஒலிப்பதைப்போல் தோன்றியது. என் பெட்டியைக் கதவின்மீது முட்டுக்கொடுத்து நிறுத்திவிட்டு, என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை எட்டு மணி. என் மனைவி ஆழ்ந்து உறங்குபவள்தான் எனும்போதும் இது கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தது.

மிகுந்த சோர்வாய் இருந்தேன். நல்ல பசியும் கூட. பைக்குள்ளிருந்து வீட்டின் சாவியை தேடித்துழாவிக் கண்டுபிடிக்கும் தொந்தரவுபிடித்த வேலையைச் செய்ய அலுப்புத்தட்டியது.

ஒருவேளை நான் கூறியதை மதித்து என் மனைவி அவளுடைய தாயாரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருப்பாளோ, அல்லது கிராமத்தில் இருக்கும் அவளுடைய உறவினர்களின் வீட்டில் தங்க சென்றிருப்பாளோ என எண்ணினேன். ஆனால், நான் வீட்டினுள் நுழைந்ததுமே, அவளது வீட்டு உபயோகக் காலணிகளும், நடைபயிற்சியின்போது அணியும் காலணிகளும், ஸ்மார்ட் காலணிகளும் வாசற்கதவின் அருகேயே கிடப்பதைக் கண்டதும் அப்படியேதும் நடந்திருக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டேன்.

நான் அணிந்திருந்த ஷீக்களை கழற்றிவிட்டு எனது வீட்டு உபயோகக் காலணிகளை அணிந்துகொண்டேன். வீட்டினுள் பரவியிருந்த வழக்கமான சில்லிப்பை என் மூளை தன்னிச்சையாகப் பதிவுசெய்துகொண்டது. வீட்டினுள் ஓரிரு அடிகள்தான் எடுத்துவைத்திருப்பேன், எங்கிருந்தோ கடும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தேன். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். அதனுள்ளே, சீமைச்சுரக்காயும் வெள்ளரிக்காயும் சேர்ந்து செய்திருந்த உணவுப்பொருட்கள் அழுகிச் சுருங்கிப்போய் வீச்சமடித்துக்கொண்டிருந்தன.

சோறுசமைப்பானில் அரைக்கிண்ணமளவு சோறு அப்படியே கிடந்தது. சமைப்பானின் உட்பகுதிப் பாத்திரத்துக்குள் சோறு காய்ந்துபோய் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் அது பலநாட்களாக அங்கே அப்படியே இருந்திருக்கிறது எனத் தோன்றியது. பாத்திரத்தின் மூடியைத் திறந்ததுமே, பழையசோற்றுக்கே உண்டான அந்தப் பிரத்யேக மணமும் வெப்ப ஆவியும் நேராக என் நாசிக்குள் ஏறின. பாத்திரம் கழுவும் சிங்க் முழுக்க அழுக்குப் பாத்திரங்கள் குவிந்துகிடந்தன, துணி துவைக்கும் இயந்திரத்தின் மீதிருந்த பிளாஸ்டிக் வாளிக்குள் சாம்பல்நிற சோப் நீரில் ஊறிக்கொண்டிருந்த அழுக்குத்துணிகளில் இருந்தும் அழுகிய வாடை வந்தவண்ணமிருந்தது.

படுக்கையறை, குளியலறை, பொருட்கள் போட்டுவைக்கும் அறை எனத் தேடிப்பார்த்தேன், எங்குமே என் மனைவியைக் காணவில்லை. அவள் பெயரைச் சொல்லி அழைத்துப்பார்த்தேன். பதிலில்லை. ஒரு வாரத்திற்கு முன்னர் நான் ஊருக்குச் சென்ற அன்று நான் படித்து வைத்துவிட்டுப்போன காலைநேரச் செய்தித்தாள், நான் வைத்துப்போன அதே விரிந்தநிலையிலேயே கூடத்தில் கிடந்தது. 500மிலி பால் அட்டைப்பெட்டி ஒன்று காலியாக இருந்தது. கெட்டிதட்டிப்போன பால் துளிகளோடு ஒரு கண்ணாடி டம்ளர் இருந்தது. என் மனைவியின் வெண்ணிறக் காலுறையொன்றின் உட்புறம் வெளியே திரும்பி கிடந்தது. எல்லாமே அலங்கோலமாய் சிதறிக்கிடந்தன.

பிரதான சாலையில் சீறிப்பாய்ந்த வாகனங்கள் எழுப்பிய இரைச்சல், அடுக்ககத்தினுள் திடமாய் உறைந்துகிடந்த வெறுமையைத் துல்லியமாகக் கீறிச் சென்றது.

பசியுலும் சோர்விலும் துவண்டுகொண்டிருந்தேன். சின்க்கினுள் கழுவாத பாத்திரங்கள் குவிந்துகிடக்கின்றன. கொஞ்சம் உணவை அள்ளி வாய்க்குள் போட்டுக்கொள்ளலாமென்றால் அதற்குக்கூட ஒரு சுத்தமான கரண்டி வீட்டில் இல்லை. நான் தனித்துவிடப்பட்டுள்ளேன். பெருந்தொலைவு பயணித்து வந்தவனை யாருமற்ற காலி வீடுதான் வரவேற்கிறது, தொலைதூர விமானப் பயணங்களில் நிகழ்ந்த சிறுசிறு விஷயங்களையும், வெளிநாட்டு இரயில் பயணங்களின்போது ஜன்னலுக்கு வெளியே விரைந்தோடிய இயற்கைக் காட்சிகளையும் பகிர்ந்துகொள்ள ஓடோடி வந்தேன், “நீங்கள் களைப்பாக இருக்கிறீர்களா?” எனக் கேட்க யாருமில்லை. அந்தக் கேள்விக்கு, “நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என ஒரு ஞானியைப் போலக் கூறி என் உறுதியை நிரூபிக்க விரும்பினேன்.

ஆனால், அதற்கான வாய்ப்பும் எனக்கு வழங்கப்படவில்லை. நான் தனித்துவிடப்பட்டுள்ளேன். இந்தத் தனிமையையெண்ணி ஆத்திரம் கொண்டேன். இந்த உலகோடு ஒட்டி உறவாட இயலாதவண்ணம் என் உடல் முக்கியத்துவமற்றுப் போய்விட்டதையெண்ணி, சட்டென மெல்லியதாகி விட்டதாகத் தோன்றிய என் ஆடைகளின்வழி என்னுள் ஊடுருவிய குளிரையெண்ணி, நான் சிறந்தவன் என இத்தனை நாளும் என்னை நானே ஏமாற்றி வந்ததையெண்ணி, ஆத்திரம் கொண்டேன். என்னை விரும்ப இங்கு யாருமே இல்லை, தனியனாய் விடப்பட்டுள்ளேன், என் இருப்பேகூட எப்போதோ மறைந்துவிட்டிருக்கக்கூடும்.

அந்தச் சமயத்தில்தான் எங்கிருந்தோ ஒரு பலவீனமான குரல் எழுவதைக் கேட்டேன்.

குரல்வந்த திசைநோக்கித் திரும்பினேன். அது என் மனைவியின் குரல். என்ன சொல்கிறாளென அறிந்துகொள்ள முடியாதவாறு தெளிவற்றிருந்த அந்தக் குரல் ஒரு முணுமுணுப்பைப் போல பால்கனியில் இருந்து வந்தது.

அத்தனை நேரமும் உக்கிரமாக இருந்த என் தனிமை சடாரென ஆசுவாசமடைந்தது, பலத்த காலடியோசைகளுடன் பால்கனி நோக்கி நடந்தேன். என் நாநுனியில் இருந்து வெறுப்பு வெடித்துக் கிளம்பியது. “இவ்வளவு நேரமும் இங்குதான் இருந்தாயெனில் ஏன் என் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை?” என்றபடியே வராண்டா கதவை படாரெனத் திறந்தேன். “குடும்பம் நடத்துகிற லட்சணம் இதுதானா? எதைச் சாப்பிட்டு உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய் நீ?”

அங்கு நிர்வாணமாக இருந்த என் மனைவியைக் கண்டு அப்படியே நின்றுவிட்டேன்.

பால்கனி ஜன்னலின் குறுக்கே இருந்த கிராதிகளைப் பார்த்தபடியே என் மனைவி கீழே மண்டியிட்டு அமர்ந்திருந்தாள். மகிழ்ச்சியில் ஆரவாரிப்பதைப்போல அவளுடைய இருகைகளும் உயர்ந்திருந்தன. அவளது முழு உடலும் அடர்பச்சை நிறத்தில் இருந்தது. முன்னர் கருமையாக இருந்த அவள் முகம் இப்போது பசும் இலைகள் போல் பளபளத்தன. காய்ந்த முள்ளங்கி இலைகள் போல் முன்னர் இருந்த அவளது கேசம், இப்போது காட்டுமூலிகைச் செடியின் தண்டுகள் போல் மினுங்கின.

அவளுடைய பச்சை முகத்தில் அவளது விழிகளிரெண்டும் வெளிறிப்போய் ஒளிர்ந்தன. அவள் என்பக்கம் திரும்பியதும் தயங்கிப் பின்வாங்கினேன், எழ முயல்வதைப்போல அசைந்தாள். ஆனால், அவளது கால்கள் இரண்டும் தசைப்பிடிப்பிற்கு ஆளானதைப்போல இழுத்துக்கொண்டன. அவளால் நிற்கவோ நடக்கவோ முடியவில்லை.

நெகிழ்ந்து வளைந்துகொடுக்கும் அவளுடைய இடை, வலியோடு முறுக்கிக்கொண்டது. அவளுடைய நீலம்பாய்ந்த இரு இதழ்களிடையே அவளது நாக்கு ஒரு நீர்ச்செடியைப் போல அசைந்தது. பற்கள் இருந்ததற்கான தடயமேயில்லை.

சுருக்கம்விழுந்து வெளிர்ப்புள்ளிகளோடிருந்த அவள் இதழ்களினிடையே இருந்து, முனகலைவிடவும் கொஞ்சம் அதிகப்படியான ஒலியில் கதறலொன்று வெளிப்பட்டது.

”…… தண்ணீர்.”

சின்க்கை நோக்கி ஓடினேன், தண்ணீர்க்குழாயை முழுவதுமாய் திறந்து பிளாஸ்டிக் பாத்திரம் நிரம்பிவழியுமளவு நீர் பிடித்தேன். அங்கிருந்து பால்கனிநோக்கி விரைந்தேன், எனது ஒவ்வொரு காலடியின்போதும் பாத்திரத்தில் இருந்த நீர் சிதறி கூடத்துத் தரையில் சிந்தின. நீரை என் மனைவியின் நெஞ்சின்மீது தெளித்தேன். உடனே ஒரு பெரியசெடியின் இலைபோல் அவள் உடல்முழுதும் புத்துயிர்ப்படைந்து சிலிர்த்தது. திரும்பிச்சென்று மீண்டும் பிளாஸ்டிக் பாத்திரத்தில் நீர் நிரப்பிக்கொண்டுவந்து அதை என் மனைவியின் தலைமீது கொட்டினேன். அத்தனை நேரமும் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு பாரத்தால் அழுத்தப்பட்டிருந்து இப்போது விடுபட்டதைப் போலே அவளுடைய கேசம் துள்ளி மேலெழும்பின. எனது ஞானஸ்நானத்தால் அவளுடைய பசும்நிற உடல்முழுவதும் பூத்துக்குலுங்குவதைக் கண்டேன். எனக்கு மயக்கமாக வந்தது.

என் மனைவி இதற்குமுன்னர் இத்தனை அழகானவளாய் இருந்ததேயில்லை.

7

அம்மா.

இனிமேல் என்னால் உனக்குக் கடிதங்களே எழுதமுடியாது. நீ இங்கு விட்டுச்சென்ற கம்பளிச் சட்டையையும் இனிமேல் என்னால் அணிந்துகொள்ள முடியாது. கடந்த குளிர்காலத்தில் நீ இங்கு வந்து தங்கியிருந்தபோது மறந்துபோய் இங்கேயே விட்டுச்சென்றுவிட்டாயே, அந்த ஆரஞ்சுநிறக் கம்பளிச் சட்டையைத்தான் சொல்கிறேன்.

வியாபார நிமித்தமாய் அவர் பயணம் மேற்கொண்ட நாளின் மறுநாள் நான் அதை அணிந்துகொண்டேன். அன்று எனக்கு மிக அதிகமாய் குளிரெடுத்தது.

துவைக்கப்படாமல் அழுக்காகவே இருந்ததால் உன் சருமத்திற்கே உரிய மணத்துடன் கலந்து கெட்டுப்போன உணவின் வாசமும் அதிலிருந்து வீசியது. இதே வேறொரு நாளாக இருந்திருந்தால் நான் கண்டிப்பாக அதை துவைத்திருப்பேன், ஆனால் அன்று மிகக் குளிராக இருந்தது. மேலும் அந்த வாசத்தை முகர்ந்துகொண்டிருக்கவே நான் விரும்பினேன். அதை அணிந்தபடியே உறங்கியும் போனேன். அடுத்தநாள் காலை பனி விலகியிருக்கவில்லை. நான் மிகுந்த குளிராகவும் தாகமாகவும் உணர்ந்ததாலோ என்னவோ, படுக்கையறை ஜன்னலில் வழியே காலைச் சூரியவொளி விழுந்ததுமே திக்கித்திணறி, ’அம்மா’ எனக் கத்தினேன். அந்த இளம் சூரியஒளியில் என்னை நானே பொதிந்துக்கொள்ள பால்கனிக்கு சென்று என் உடைகள் அனைத்தையும் களைந்தெறிந்தேன். என் நிர்வாணச் சருமத்தினுள் ஊடுருவிய சூரியக்கதிர்களுக்கு உன் வாசனை இருந்தது. அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து அம்மா, அம்மா எனக் கத்தினேன். வேறு வார்த்தைகளே வரவில்லை.

இப்படியே எவ்வளவு நேரம் கடந்து போனதென்றே தெரியவில்லை. நாட்களா, வாரங்களா, மாதங்களா? காற்று அத்தனையொன்றும் சூடாக இல்லை என்பதைக் கவனித்தேன். குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் கூடுவதை பின்னர் உணர்ந்தேன்.

சுங்னங் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த அடுக்கக ஜன்னல்களில் ஆரஞ்சு ஒளிபட்டு எந்நொடியிலும் மின்னக்கூடும்.

அங்கிருந்து என்னை எவராலும் பார்க்க முடியுமா? முகப்புவிளக்குகளில் ஒளியை உமிழ்ந்தபடி பிரதான சாலையில் விரையும் கார்களில் இருந்து என்னைப் பார்க்க முடியுமா? நான் இப்போது எவ்வாறு தோற்றமளிக்கிறேன்?

*

அவர் என்னிடம் மிகுந்த அன்பாயிருக்கிறார். மிகப்பெரிய பூந்தொட்டி ஒன்றை வாங்கிவந்து அதில் என்னை நட்டுவைத்தார். பால்கனி நிலைப்படியில் அமர்ந்தபடி என் மீது ஊர்ந்த செடிப்பேன்களை அப்புறப்படுத்துவதில் ஞாயிறு காலைகளைச் செலவிடுவார்.

எப்போதுமே சோர்வாகக் காணப்படும் என்னவர், ஒவ்வொரு நாள் காலையிலும் எங்கள் கட்டிடத்தின் பின்னே இருக்கும் மலைமீது ஏறிச் சென்று, ஒரு வாளி நிறைய கனிமவளம் மிக்க நீரைச் சுமந்துவருவார், அந்த நீரை என் கால்களில் ஊற்றுவார் (எனக்குக் குழாய் தண்ணீர் பிடிப்பதில்லை என்பது அவருக்குத் தெரியும்) சிறிது நாட்களுக்கு முன்னர்தான், அவர் என் தொட்டியை காலிசெய்துவிட்டு, வளம் மிக்க வண்டல் மணல் ஒரு கையளவு கொண்டுவந்து என் மண்ணோடு கலந்து வைத்தார். முந்தினநாள் இரவு மழை பொழிந்திருந்தால் நகரத்துக் காற்றிலிருந்த மாசு ஓரளவு கழுவிவிடப்பட்டிருக்கும் என்பதால், புத்துணர்வுமிக்க அந்தக் காற்று எனக்குக் கிடைக்கவேண்டுமென முன்புறக் கதவையும் ஜன்னல்களையும் நன்றாகத் திறந்துவைப்பார்.

*

இது விசித்திரமாக இருக்கிறது அம்மா. என்னால் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை, நுகரவோ ருசிக்கவோ முடியவில்லை, எனினும் எல்லாமே மிகப் புத்துணர்ச்சியுடனும் உயிர்ப்புடனும் இருப்பதாக உணர்கிறேன். தார்ச்சாலையில் டயர்களை தேய்த்துக்கொண்டு செல்லும் வாகனங்களை உணர்கிறேன். முன்பக்கக் கதவைத் திறந்துகொண்டு என்னை நோக்கிவரும் அவரது காலடிகள் எழுப்பும் நுண்ணிய அதிர்வுகளை உணர்கிறேன். மழையின் ஈரப்பதம் நிறைந்திருக்கும் காற்றுமுழுவதும் வளத்திற்கான கனவுகள் பொங்கிப்பெருகுவதை, விடிகாலை வேளையின் சாம்பல்தோய்ந்த அரைவெளிச்ச வானத்தை என அனைத்தையுமே என்னால் உணர முடிகிறது.

என் அருகிலோ அல்லது தொலைவிலோ, மொட்டுக்கள் உதிப்பதையும், அவை இதழிதழாய் விரிவதையும் என்னால் உணர முடிகிறது. கூட்டுக்குள்ளிருந்து புழுக்கள் வெளியேறுவதை, பூனைகளும் நாய்களும் குட்டிகள் ஈனுவதை, அடுத்த கட்டிடத்தில் வசிக்கும் முதியவரின் விட்டுவிட்டுத் துடிக்கும் நாடித்துடிப்பை, மேல் வீட்டின் சமையலறை வாணலியில் அரைவேக்காட்டில் இருக்கும் பசலைக்கீரையை, கீழ்வீட்டில் இருக்கும் கிராமபோனுக்கு அருகே இருக்கும் பூச்சாடியில் செவ்வந்தி மலர்க்கொத்துகள் வைக்கப்படுவதை என்னால் உணர முடிகிறது. இரவோ பகலோ, நட்சத்திரங்கள் நிலைத்த அமைதியுடன் ஒரு சாய்மாலை வட்டத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொருநாளும் சூரியன் உதிக்கும்போதெல்லாம் நெடுஞ்சாலையோரம் இருக்கும் காட்டத்தி மரங்கள் ஏக்கம்கொண்ட தம் உடல்களைக் கிழக்குநோக்கித் திருப்பிக்கொள்கின்றன. என் உடலும் கூட அவ்வண்ணமே திரும்பிக்கொள்கிறது.

உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? கூடியவிரைவில் என் எண்ணங்களையும் தொலைத்துவிடுவேன் எனத் தோன்றுகிறது, ஆனால் நான் நன்றாகவே இருக்கிறேன். இவ்வாறு காற்று, சூரிய ஒளி, நீர் கொண்டுமட்டும் வாழவேண்டுமென்பது என் நீண்டநாள் கனவு.

*

சிறுவயதில் சமையலறைக்கு ஓடிவந்து, உங்களின் பாவாடையில் முகம்புதைத்துக் கொள்வேனே, அப்போது எழும் அந்த இனிமையான வாசம், எள்ளுவித்துக்களின் வாசம், நன்கு வறுக்கப்பட்ட எள்ளுவித்துக்களின் வாசம் என் பால்யகால நினைவுகளில் அப்படியே படிந்துள்ளது. நான் எப்பொழுதும் மண்ணிலேயே விளையாடிக்கொண்டிருப்பேன், தெரியும்தானே? புழுதிபடிந்த என் விரல்களால் உங்களின் ஆடையோரங்களை அழுக்காக்கிவிடுவேன்.

அப்போது எனக்கு என்ன வயது இருந்திருக்கக்கூடும்? மெல்லிய தூறல் விழுந்துகொண்டிருந்த வசந்தகால நாளொன்றில், கலப்பை இயந்திரத்தின்மீது என்னை அமரவைத்து, தந்தை நம் அனைவரையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். மழைக்கோட்டுகளை அணிந்துகொண்டு எதைப் பற்றியும் கவலைகொள்ளாது பெரியவர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர். மழையில் நனைந்த முடிக்கற்றைகள் சிறுவர்களின் நெற்றியில் ஒட்டிக்கிடக்க அவர்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் முகங்கள் தெளிவாகத் தெரியாத அளவிற்கு மழையின் சுழன்றாடினர்.

கடலையொட்டியிருந்த அந்தப் பாவப்பட்ட கிராமம்தான் உங்களின் உலகமாக இருந்தது. அங்கேதான் பிறந்தீர்கள், அங்கேதான் வளர்ந்தீர்கள். அங்கேயே குழந்தைகளைப் பெற்றெடுத்தீர்கள், வேலை செய்தீர்கள், முதுமைவரை அங்கேயே இருந்துவிட்டீர்கள்.

சிறிது காலம் கழிந்ததும், நமது குடும்பக் கல்லறை மயானத்தில், தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே நீங்களும் புதைக்கப்பட்டு விடுவீர்கள்.

உங்களைப் போலவே என் வாழ்வும் முடிந்துவிடக் கூடாது என்ற அச்சத்தினால்தான் அம்மா நான் எனக்கும் என் வீட்டிற்கும் இடையே இத்தனை பெரிய தூரத்தை உண்டாக்கிக்கொண்டேன். என்னுடைய பதினேழு வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு மாதத்திற்கும் மேலாக பூசான், தேய்கூ, காங்நியூங் ஆகிய நகர்ப்பகுதிகளில் இலக்கேயில்லாமல் சுற்றித் திரிந்தது எப்போதும் என் நினைவில் இருக்கும். என்னுடைய உண்மையான வயதை மறைத்து ஒரு ஜப்பானிய உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தேவையான பொருட்கள் வாங்க நானே தனியாகச் சென்றேன். மாலை வேளைகளில் படிப்பறையில் கருவறை சிசுவைப்போலச் சுருண்டு படுத்துக்கொண்டேன். அந்த இடம் எனக்குப் பிடித்துப்போனது. பளீரிடும் விளக்கொளிகள் நிறைந்த நகர்ப்புறம், பளபளக்கும் கவர்ச்சியோடு வாழும் நகரத்தினர்.

அந்நியர்களின் கூட்டம் நிறைந்த இந்தத் தெருக்களில் இப்படியே சுற்றித் திரிந்து கொண்டிருந்தே நான் முதுமையெய்தி அழிந்துபோவேன் என்பதை முதன்முதலாக எப்போது உணர்ந்தேன் எனத் தெரியவில்லை. வீட்டில் நான் மகிழ்ச்சியாக இல்லை, அதேபோல் வேறெங்கிலும் கூட நான் மகிழ்ச்சியாக இல்லை, சொல்லுங்கள், நான் எங்குதான் செல்வது?

நான் மகிழ்ச்சியாக இருந்ததேயில்லை. வாதைக்குள்ளான ஆன்மா ஏதேனும் எப்போதும் என்னைப் பின்தொடர்ந்தபடியே இருக்கிறதா, என் குரல்வளையையும் கைகால்களையும் அது இறுக்குகிறதா? எங்கேனும் ஓடிவிட வேண்டும் எனும் மிக அறுதியான ஒரேயொரு அடிப்படை உணர்ச்சிதான் என்னுள் மிகுந்திருந்தது. அலறலை உண்டாக்கும் வலியது, கதறலை உண்டாக்கும் கஷ்டம் அது. ஒரு ஈயைக் கூட காயப்படுத்த மாட்டேன் எனும் தோற்றத்தோடு பேருந்தின் பின்னிருக்கையில் என் கால்களைக் உயர்த்திவைத்து அமர்ந்திருப்பேன், ஆனால் பேருந்தின் கண்ணாடி ஜன்னலை என் முஷ்டியால் குத்திச் சுக்குநூறாக்கிட வேண்டுமெனும் வேட்கை என்னுள்ளே ஊறிக்கொண்டிருக்கும். அப்போது என் உள்ளங்கையில் வடியும் குருதியை, பூனை பாலை நக்குவதைப் போல சுவைக்கவேண்டுமென பேராசை எழும். எதிலிருந்து விடுபட்டு ஓட விரும்பினேன், உலகின் மறுபக்கத்திற்கு ஓடிவிடவேண்டுமென நான் வெறிகொள்ளுமளவு எது என்னை அலைகழித்துக்கொண்டிருந்தது? அதேநேரம் எது என்னை தடுத்துவைத்திருந்தது, கட்டிப்போட்டு வைத்திருந்தது, முடமாக்கி வைத்திருந்தது? எங்கேனும் பாய்ந்துசென்று, சீக்குப்பிடித்த இந்த இரத்தத்தை மாற்றிக்கொள்ள விடாமல் எந்த விலங்குகள் என்னை இறுக்கிப்பிடித்திருந்தன?

*

வயதான அந்த மருத்துவர் தன் ஸ்டெதெஸ்கோப்பை விரல்களால் தட்டியபடியே இருந்தார். என் உட்பகுதி அங்கங்களெல்லாம் கல்லறை அமைதியோடு இருப்பதாய் முணுமுணுத்தார். தூரத்தே வீசும் காற்றின் ஓலிகள் மட்டும்தான் கேட்கிறது என்றார். ஸ்டெதெஸ்கோப்பை மேஜைமீது வைத்துவிட்டு மீயொலி திரையைத் திருப்பிக்கொண்டார். நான் அசையாமல் படுத்திருந்தேன், ஈரமான ஜெல்லை என் வயிற்றின்மீது தடவி, சில்லென்றிருந்த குச்சிபோன்றதொரு கருவியை என் வயிற்றுச் சதையின் மீது தேய்த்தார், மேல்வயிற்றில் துவங்கி கீழ்வயிறுவரை அதைக் கொண்டுசென்றார். அந்தக் கருவியின் வழியாக, என் வயிற்றினுள் இருந்த உறுப்புகளின் படங்களெல்லாம் கருப்பு வெள்ளை நிறத்தில் திரையில் தெரிந்தன.

”எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது”, நாக்கைச் சொடுக்கி முணுமுணுத்துக்கொண்டார். ”இப்போது நாம் உங்களின் குடல்களைத் திரையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்… அவற்றில் ஏதும் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

எல்லாமே “சரியாக இருப்பதாய்” உறுதிசெய்யப்பட்டன.

“வயிறு, ஈரல், கர்ப்பப்பை, சிறுநீரகங்கள், எல்லாமே நன்றாக இருக்கின்றன.”

இந்த பாகங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவுற்று வருவதையும், கூடிய விரைவிலேயே இவையெல்லாம் மறைந்துவிடப் போவதையும் ஏன் அவரால் காண முடியவில்லை? கைநிறைய டிஷ்யூ காகிதங்களை எடுத்து என் வயிற்றின்மேல் தடவப்பட்டிருந்த ஜெல்லை வழித்தெடுத்துவிட்டு எழ முயன்றேன், ஆனால் என்னை மீண்டும் படுத்துக்கொள்ளச் சொன்னார் அவர். என் வயிற்றின் சில பகுதிகளை அழுத்திப்பார்த்தார். “இங்கு வலிக்கிறதா?” என அவர் கேட்டபோது மூக்குக்கண்ணாடி அணிந்திருந்த அவர் முகத்தைப் பார்த்து இல்லையெனத் தலையாட்டினேன்.

“இந்தப் பகுதி நன்றாக இருக்கிறதா? இங்கு வலியில்லையா?”

“வலியில்லை.”

எனக்கு ஊசி போட்டு அனுப்பினார், திரும்பும் வழியில் மீண்டும் வாயிலெடுத்தேன். சுரங்கப்பாதை இரயில் நிலையத்தின் ஓடுகள் வேய்ந்த சுவற்றில் அழுந்த சாய்ந்துகொண்டேன். வலி குறைவதற்காக மனதிற்குள்ளேயே எண்களை எண்ணத் துவங்கினேன். வலி வரும்போது என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு நல்ல அமைதியான விஷயங்களை எண்ணிப்பார்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். அனைத்திற்கும் மனம்தான் காரணம் என ஒரு புத்தமத குருவின் தொனியில் கூறினார். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, எல்லையில்லா அமைதி, வாயிலெடுப்பதை கட்டுப்படுத்திக்கொண்டே எண்களை எண்ணிக்கொண்டிருந்தேன்…. வலி என் கண்களில் நீரை வரவழைத்தது. வயிற்றிலிருந்த அமிலத்தையெல்லாம் உடல் குலுங்கி அதிர அதிர வாயிலெடுத்தபடியே இருந்தேன். இறுதியாக இனி வாயிலெடுக்க வயிற்றில் ஒன்றுமில்லை என ஆனபோது தரையில் அப்படியே மடங்கி விழுந்துவிட்டேன். குலுங்கிக்கொண்டேயிருந்த நிலம் அடங்கக் காத்திருந்தேன். நாசமாய்ப் போன இந்த நிலம் குலுங்குவதை நிறுத்தித் தொலையக் காத்திருந்தேன்.

எவ்வளவு காலத்திற்கு முன்னர் அது நடந்தது?

*

அம்மா, மீண்டும் மீண்டும் எனக்கு ஒரே கனவு வருகிறது. ஒரு நெட்டிலிங்க மரத்தின் உயரத்திற்கு நான் வளர்ந்துவிடுகிறேன். பால்கனியின் கூரையைத் துளைத்துக்கொண்டு மேலே செல்கிறேன், அதற்கும் மேலே உள்ள தளத்தையும், பதினைந்தாவது தளத்தையும், பதினாறாவது தளத்தையும் கூட துளைக்கிறேன், கான்கிரீட்டையும் வலுவான கம்பிகளையும் கடந்து சென்று இறுதியாகக் கடைசி தளத்தையும் உடைத்துக்கொண்டு வளர்கிறேன். வெண்ணிறப் புழுக்கள் போன்ற நெளிமலர்கள் என் உயர்ந்த கிளைகளில் பூக்கின்றன. என் மூச்சுக்குழாய் வெடித்துவிடுவதைப் போல தூய்மையான நீரை உறிஞ்சிக்கொள்கிறது. என் நெஞ்சு வான்வரை விரிகிறது, எனது ஒவ்வொரு கிளைக்கைகளையும் நீட்டப் பிரயத்தனப்படுகிறேன். இப்படித்தான் நான் இந்த அடுக்கக வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறுகிறேன். ஒவ்வொரு நாள் இரவும், அம்மா, ஒவ்வொரு நாள் இரவும் இதே கனவுதான் வருகின்றது.

*

நாட்கள் செல்லச்செல்ல, குளிர் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இலைகள் பலவும் நிலத்தில் வீழ்வதை, பாம்புகள் பலவும் தம் தோலை உதிர்ப்பதை, பூச்சிகள் பலவும் தம் சின்னஞ்சிறு வாழ்வை இழப்பதை, தவளைகள் பலவும் சிறிதுகாலம் முன்னதாகவே தன் குளிர்கால உறக்கத்தைத் துவங்கிவிட்டதை இந்த உலகம் இன்றும்கூட கண்டிருக்கும்.

உங்களின் கம்பளிச் சட்டையைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன். உங்கள் உடலின் மனம் சரியாக நினைவிலேயே இல்லை. என் மீது அதைப் போர்த்திவிடுமாறு அவரிடம் கூற வேண்டும். ஆனால் நான்தான் என் பேசும்சக்தியை இழந்துவிட்டேனே. இப்போது நான் என்ன செய்வது? என்னுடல் இப்படியே வீணாகிக்கொண்டு போவதைக் கண்டு அவர் கதறுகிறார், சில நேரங்களில் ஆத்திரமும் கொள்கிறார். அவருக்கென இருக்கும் ஒரே குடும்ப உறவு நான் மட்டும்தான் என நீங்களே அறிவீர்கள். எனக்காக அவர் ஊற்றும் கனிமச்சத்து நிறைந்த நீரில் அவரது கண்ணீரும் கலந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. காற்றின் மூலக்கூறுகள் ஒழுங்குதவறி இருப்பதில் இருந்து மூடிய முஷ்டியால் இயலாமையுடன் அவர் காற்றை அளைவதை அறிந்துகொள்ள முடிகிறது.

*

எனக்குப் பயமாக இருக்கிறது, அம்மா. என் கைகால்கள் வெளியில் படர வேண்டும். இந்தப் பூந்தொட்டி மிக இடுக்கமாக உள்ளது, இதன் சுவர்கள் வெகு கடினமாக உள்ளன. அதில் மோதி எனது வேர்களின் நுனிகள் வளரமுடியாமல் வலிக்கின்றன, அம்மா, குளிர்காலம் வருவதற்குள்ளாகவே நான் இறந்து விடுவேன்.

மீண்டும் இந்த உலகில் மலர்வேனா என எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

8

அன்றைய இரவு நான் எனது வெளியூர் பயணத்தில் இருந்து திரும்பியதுமே, என் மனைவியை மூன்று பிளாஸ்டிக் குவளை நிறைய நீரைப் பருகவைத்தேன். உடனே வயிற்றில் சுரக்கும் மஞ்சள் நிற அமிலத்தைப் பெருமளவில் அவள் வாயிலெடுத்தாள். அவள் இதழ்கள் இறுக மூடிக்கொண்டு, ஒன்றோடொன்று பின்னிக்கொள்வதை, சதையோடு சதை ஒட்டிக்கொள்வதை என் கண்களாலேயே கண்டேன். நடுங்கும் என் விரல்களால் வெளிறிப்போயிருந்த அந்த இதழ்களைத் தடவிப் பார்த்தேன், பலவீனமான குரலொன்று இறுதியாக அதிலிருந்து எழுந்தது, அதன் அர்த்தத்தைக் கூட அறிந்துகொள்ள முடியாதவாறு அத்தனை பலவீனமாக அந்தக் குரல் இருந்தது. என் மனைவியின் குரலை நான்  கடைசியாகக் கேட்டது அப்போதுதான். அதன்பிறகு அவளிடமிருந்து சிறு முனகல் கூட எழவில்லை.

அவளுடைய தொடைகளின் உட்பகுதியிலிருந்து வெண்ணிறத் திவலைகள் போல் வேர்கள் தோன்றின. அவளுடைய நெஞ்சுப் பகுதியிலிருந்து அடர்செந்நிற மலர்கள் பூத்தன. முனைப்பகுதியில் வெண்மையாகவும், வேர்ப்பகுதியில் மஞ்சளாகவும் தடிப்பாகவும் இருந்த இரு மகரந்தத் தாள்கள் அவளுடைய முலைக்காம்புகளைத் துளைத்துக்கொண்டு வெளியேறின. மேலே உயர்ந்து நிற்கும் அவளுடைய கரங்களால் சிறிதளவேனும் அழுத்தம் கொடுக்க முடிந்ததால், அவள் என் கழுத்தை கட்டிக்கொள்ள முயன்றாள். மங்கிய ஒளி இன்னமும் மீதமிருந்த அவளுடைய விழிகளைப் பார்த்தபடியே, கமேலியா மலரிதழ்களாக விரிந்த அந்த அணைப்புக்குள் செல்ல மெல்ல குனிந்துகொண்டேன். ”நன்றாக இருக்கிறாயா?” எனக் கேட்டேன். நன்கு பழுத்த திராட்சைக் கனிகள் போல் அவள் விழிகள் மின்னின. ஒளிரும் அதன் மேற்பகுதியில் மெல்லிய புன்னகையொன்று இழையோடியது.

இலையுதிர்காலம் தீவிரமடைந்ததும், என் மனைவியின் உடல் தெளிந்த ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறத் தொடங்கியது. ஜன்னல்களைத் திறந்துவிட்டால் காற்றின் போக்கிக்கேற்ப என் மனைவியின் உயர்த்திய கைகளும் மிக மென்மையாக அசையும்.

இலையுதிர்காலம் முடியும்தருவாயில் அவளுடைய இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்கின. முன்னர் இருந்த ஆரஞ்சு வண்ணத்தில் இருந்து அடர்பழுப்பு வண்ணத்திற்கு அவள் உடல் மாறத்தொடங்கியது.

கடைசியாக எப்போது என் மனைவியுடன் கலவிகொண்டேன் என எண்ணிப்பார்த்தேன்.

அப்போது, வழக்கமாகப் புளிப்புச்சுவை நிறைந்த உடற்திரவங்களைச் சுரக்கும் என் மனைவியின் உடலின் கீழ்பகுதியிலிருந்து விசித்திரமான, இனிமையானதொரு வாசம் வருவதைக் கண்டேன். அவள் வழக்கமாக உபயோகிக்கும் சோப்பிற்கு பதிலாக புதிதாக எதையேனும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடும் அல்லது கொஞ்சம் சிரத்தையெடுத்து சில துளி நறுமணத் தைலத்தை அங்கு அவள் தெளித்துக்கொண்டிருக்க வேண்டுமெனவும் நினைத்துக்கொண்டேன். இதெல்லாம் எவ்வளவு காலத்திற்கு முன்னர் நிகழ்ந்தது?

இரண்டு கால்களையுடைய உயிரியாக அவள் முன்னர் இருந்தாள் என்பதற்கான சுவடே இப்போது அவளிடம் இல்லை. உருண்ட திராட்சைப் பழங்கள் போல் உருமாறி மினுமினுத்த அவள் கருவிழிகள் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அடர்பழுப்புவண்ண மரத்தண்டுகளுக்குள் புதைந்து போய்விட்டன. இனி என் மனைவியால் பார்க்க முடியாது. தண்டுகளின் நுனிகளை அவளால் வளைக்கக்கூட முடியவில்லை. ஆனால் நான் பால்கனிக்கு செல்லும்போதெல்லாம், மொழிகளையெல்லாம் தோற்கடித்து விடக்கூடிய விளக்கமுடியாத ஒருவித உணர்வை அங்கு உணர்ந்தேன். அவளுடைய உடலில் இருந்து என்னுடலுக்கு நுண்ணிய மின்சார அலைகள் பாய்வதைப் போல உணர்ந்தேன். என் மனைவியின் கைகளாகவும் மயிராகவும் இருந்த இலைகளெல்லாம் இப்போது உதிர்ந்துவிட்டன. இரு இதழ்களும் ஒன்றுசேர்ந்து ஒட்டிக்கொண்ட இடத்தில் சிறு பிளவு உண்டாகி, அப்பிளவிலிருந்து கையளவு கனிகள் வெளியானது. உடனே அந்த மின்சார உணர்வு பட்டென அறுந்துபோனது.

மாதுளை முத்துகள் போல அந்த சின்னஞ்சிறு கனிகள் தோன்றின. அவற்றை என் உள்ளங்கையில் சேகரித்துக்கொண்டு, கூடத்தையும் பால்கனியையும் இணைக்கும் நிலைப்படியில் அமர்ந்துகொண்டேன். என் வாழ்நாளில் நான் முதன்முதலாகக் காணும் இக்கனிகள் பசும் மஞ்சள் நிறத்திலிருந்தன. பியர் அருந்தும்போது, பாப்கார்னுடன் வழங்கப்படும் சூரியகாந்தி வித்துகளைப் போல இக்கனிகள் திடமாக இருந்தன.

கனிகளில் ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டேன். அதன் மென்மையான மேற்தோலில் ருசியோ மணமோ இல்லை. பழத்தை மென்று தின்றேன். இந்த உலகில் நான் அனுபவித்த ஒரே பெண்ணின் கனிகள் இவை. முதலில் ஒருவிதமான அமிலத்தன்மை நிறைந்த காந்தல் சுவையைத்தான் என்னால் உணரமுடிந்தது, பிறகு என் நாவின் வேர்களில் படிந்த சாறு கசப்புச் சுவையை மட்டும் விட்டுச்சென்றது.

மறுநாள் ஒரு டஜன் சிறிய, வட்டவடிவப் பூந்தொட்டிகளை வாங்கிவந்தேன். அவற்றுள் நல்ல வளமான மண்ணை நிரப்பி இந்தக் கனிகளை அவற்றுள் நட்டுவைத்தேன். வாடிப்போயிருந்த என் மனைவியின் அருகே அந்தப் பூந்தொட்டிகளை அடுக்கி வைத்துவிட்டு, ஜன்னல்களை திறந்துவைத்தேன். என் மனைவியின் கீழ்ப்பகுதிகளில் திடீரென புத்தம்புதிதாக வளர்ந்திருந்த புற்களின் நறுமணத்தை நுகர்ந்தபடியே, ஜன்னல் கிராதிகளில் சாய்ந்து சிகரெட்டொன்றைப் புகைக்கத் துவங்கினேன். பின்இலையுதிர்காலத்தின் காற்று சிகரெட்டின் புகையையும் என் நீண்ட கேசத்தையும் கலைத்து விளையாடியது.

வசந்தகாலம் வரும்போது என் மனைவி மீண்டும் துளிர்ப்பாளா? அவளுடைய மலர்கள் செந்நிறமாய் இருக்குமா? எனக்குத் தெரியவில்லை.

*

ஆசிரியர் குறிப்பு:

தென்கொரிய எழுத்தாளரான ஹான் காங், 2016-ஆம் ஆண்டின் புக்கர் சர்வதேச விருதினை தன் “த வெஜிடேரியன்” நாவலுக்காக வென்றுள்ளார். இறைச்சி உண்பதைத் துறக்க முடிவெடுக்கும் ஒரு பெண் சந்திக்கநேரும் கொடும் சம்பவங்களின் தொகுப்பாக அந்நாவல் உள்ளது.

“என் மனைவியின் கனி” எனும் இச்சிறுகதையை ஹான் காங் 1997ஆம் ஆண்டு எழுதியுள்ளார். அவருடைய பிரபல நாவலான வெஜிடேரியனுக்கு இச்சிறுகதை முன்னோடியாக விளங்குகிறது.  ஒப்புநோக்க, காஃப்காவின் ‘உருமாற்றம்’ கதையைப் போலவே இச்சிறுகதையும் உள்ளதை நம்மால் உணரமுடியும். ஒரு நாடு தன் வளர்ச்சிக்காக, பொருளாதார முன்னேற்றத்திற்காக, தன் இயற்கை வளங்களை பாரபட்சமில்லாது அப்புறப்படுத்துவதை, வீடுகள் அடுக்ககங்கள் என அனைத்தையும் ‘ஒன்றேபோல்’ உருவாக்கி, அவற்றுள் அடைத்துவைத்து மக்களை இயந்திரங்கள் போல் ஆக்குவதை தன் தனித்துவமான மொழியில் ஹான் காங் கூறுகிறார். கதையின் ஒவ்வொரு துணுக்கிலும் ஆசிரியர் இயற்கையை ஆராதிப்பதை நம்மால் மனதார உணர முடிகிறது, வர்ணனைகளுக்காய் அவர் தேர்வு செய்திருக்கும் பிரமிப்பூட்டும் உருவகங்களும், சூரல் இலைகள் போல் விரிந்துகொண்டே செல்லும் நீண்ட தொடர்களும் கதையின் விஷேச அம்சங்களாய் விளங்குகின்றன.

*

ஆங்கில மூலம்: The Fruit of my Woman by Han Kang, Translated by Deborah Smith