இந்து ராஷ்டிரம் பற்றி தெரிதா என்ன சொல்வார்?

by ஆர்.அபிலாஷ்
0 comment

இந்து ராஷ்டிரம் என்பதை தெரிதா ஏற்றுக்கொள்வாரா அல்லது எதிர்ப்பாரா என்பதல்ல என் கேள்வி – இந்துத்துவாவின் (அதாவது பாஜக அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களின்) கனவுகள், எதிர்பார்ப்புகளை அவர் எப்படிப் புரிந்துகொள்வார்?

இது ஏன் முக்கியம் என முதலில் சொல்லி விடுகிறேன்.

இந்து ராஷ்டிர, அகண்ட பாரதக் கனவின் அடிப்படையிலே பாஜக அரசின் கணிசமான செயல்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறே அரசின் நிர்வாகம் குறித்த பிம்பமும் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இந்து தேசம் எனும் இந்துத்துவா கனவு மட்டுமல்ல, அதனடிப்படையிலான திட்டங்களும், அதன்மீது எழுப்பபடும் பிம்பமும் கூட தர்க்கத்துக்கு உட்பட்டவை அல்ல. அவற்றை வரலாற்றின், நீதியின், ஜனநாயக விழுமியங்களின், அறிவியலின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது. இருந்தும் நன்கு படித்த, சுத்தமாய் படிக்காத ஒரு பெரும் திரளான அடிப்படைவாத மற்றும் நவீன இந்துக்களின் (என்னவொரு முரண்!) காவியக் கனவாக இந்து ராஷ்டிரம் இருந்து வருகிறது. இவர்கள் இந்தக் கனவை நியாயப்படுத்த, அதைப் பகுத்தறிவுப்படி நிறுவ அவசியமில்லை என நினைக்கிறார்கள்.

கூர்ந்து கவனித்தால் இது கலை கலைக்காகவே என கொள்கை கொண்டவர்களின் அழகியல் கோட்பாட்டைப் போலவே இருக்கிறது. இலக்கியத்தில் மாய – யதார்த்தக் கதைகளின் உலகம் போன்று இருக்கிறது. சொல்லப்போனால், இந்துத்துவ ஆதரவாளர்கள் கூட இக்கனவு வசப்படும் என நம்புவதில்லை. நம்பினால் அவர்களே அதை ஆதரிக்க மாட்டார்கள். மாறாக, தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடைவதோ, வருந்துவதோ, பொறுமை இழப்பதோ இல்லை. தமக்கு அளிக்கப்படும் கனவு தம் கையில் இருந்து விலகி விலகி செல்வதை அவர்கள் இரசிக்கிறார்கள், அது ஒரு மகத்தான கிளர்ச்சி தரும் அனுபவம் என உணர்கிறார்கள். எப்படி ஒரு இரசனைக்குரிய கனவானது அது முடியும் இடத்தில் வலியைத் தருகிறதோ அப்படியே இந்து ராஷ்டிர கனவும் உள்ளது. இந்து ராஷ்டிரர்களும் அந்த ராஷ்டிரம் யதார்த்தத்தில் தோன்றும் அன்று இதயம் உடைந்து போவார்கள். அது உருவாகாத வரைதான் அவர்கள் பரவசத்தில், நம்பிக்கையின் எழுச்சியில் இயங்க முடியும்.

அடுத்து, இந்துத்துவர்களின் கனவு என்பது நேர்கோடான ஒரு காலச்சட்டகத்தில் கட்டியெழுப்பப்படவில்லை. ஒரு நாவலைப் படிக்கும் போது நாம் நிகழ்காலத்தில் இருந்து மற்றொரு நிகழ்காலத்துக்குள் பயணிக்கிறோம். அந்த நிகழுக்குள்ளான நிகழுக்குள் ஒரு கடந்தகாலம் வரும் போது அதுவும் நிகழ்காலம் போன்றே நமக்குத் தோன்றுகிறது. இந்து ராஷ்டிரமும் ஒரு புனைவுக்காலத்தில், எங்கென்றே நிறுத்தி வைக்க முடியாத ஒரு பாதரசக் காலத்தில் உருண்டோடியபடியே இருக்கிறது.

இந்துத்துவா இவ்விதத்தில் ஒரு தெய்வீகக் கனவு – தெய்வத்தை எந்த பக்தனும் தரிசிப்பதில்லை. ஆனால் தெய்வ தரிசனம் அன்றாடம் நிகழும், அதேநேரம் ஒருபோதும் நிகழாத ஒரு கனவு. ஒரு ஜோக் உண்டு – தெய்வத்தை அன்றாடம் சந்தித்தால் மனிதர்கள் அவரை ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள் என. அதனாலேயே பக்தர்கள் தம்முன் தெய்வம் தோன்றினால் அதை நம்ப மாட்டார்கள், நம்பினால் அவர்களால் தெய்வ நம்பிக்கையாளர்களாக இருக்க முடியாது. ஆனால், கண்முன் தெய்வம் தோன்றினால் அதை நம்புகிறவன் முதலில் நாத்திகனாகவே இருப்பான். தெய்வம் கண்முன் தோன்றுவதானால் அது தெய்வமாகாது என அவன் நன்றாகவே அறிவான். அதை வைத்து ஆத்திகனை வாதத்தில் முறியடித்துவிட முடியும் என்றும் அறிவான். தெய்வம் தோன்றினால் அவரைக் கையோடு கூட்டிக்கொண்டு ஆத்திகனிடம் வந்து, “இதுவா தெய்வம்?” எனக் கேட்பவன் அவனாகவே இருப்பான். “இவர் தெய்வமில்லை” என தெய்வத்தை முதலில் மறுக்கிறவனும் ஆத்திகனாகவே இருப்பான். இந்த உண்மை, நகைமுரணாகத் தோன்றினாலும், உண்மை. பக்தனின் தெய்வமும் ஒரு கனவே (ஒரு அழகான – ஆழமான கனவு).

விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

இந்த அரசியல் திட்டங்களானவை – குடியுரிமை திருத்த மசோதாவோ, ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் போன்றவையோ – தேசத்தின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி, தேசப்பற்றை வளர்த்து, இறுதியில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தி நம்மை வல்லரசாக்கும் எனும் நம்பிக்கையை முன்வைக்கிறது. வேறெந்த அரசும் இப்படி சம்பந்தமில்லாத இலக்குகளை ஒன்றாய்த் தொடுத்து ஒரு பிரதான இலக்குடன் பிணைத்ததில்லை. அதனாலேயே இந்த அரசின் அரசியல் திட்டங்கள் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு முன்னுக்குப்பின் முரணாக குழப்பமாக உள்ளன.

சொந்த நாட்டிலேயே உற்பத்தி என்று சொல்லிவிட்டு வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கிறார்கள். அந்த உற்பத்தியின் இலாபம் வெளிநாட்டுக்கல்லவா போகும்? இந்தக் கேள்விக்கு எந்த நேரடி பதிலும் அவர்களிடம் இராது. ரூபாய் நோட்டுகளை நள்ளிரவில் தடைசெய்தால் கறுப்புப்பணம் ஒழியும் என்பார்கள். ஒழியவில்லையே, ஏன் எனக் கேட்டால் பதில் இராது. நடுவண் பாஜக அரசு மீதான குற்றச்சாட்டுகளின் சாராம்சமே அது வாய்ச்சொல்லின் வல்லமை கொண்டிருக்கிறது, நடப்பில் எந்தப் பயனுள்ள மாற்றத்தையும் அது ஏற்படுத்துவதில்லை என்பதுதான். நம் பிரதமர் இதுவரை நூற்றுக்கணக்கான திட்டங்களை அறிவித்திருக்கிறார், பல இலட்சங்கள் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

ஒரு பக்கம் பணவீக்கம் அதிகமாக, வளர்ச்சி குறைந்துகொண்டே சென்று கடந்த பல பத்தாண்டுகளில் மிக மோசமான இடத்துக்கு நம் பொருளாதாரம் வந்துள்ளது. ஆனாலும் நாம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாய் நமது அமைச்சர்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு புதிய திட்டத்தை அறிவிக்கும் போதும் இதனாலே அடுத்த சில மாதங்களில் இத்தனை இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும், இத்தனை கோடி பேருக்கு வியாபாரத்தில் இலாபம் வரும் எனக் கூறுகிறார்கள் அமைச்சர்களும் நமது பிரதமரும். இந்த வேலைகளும் பணவரவும் எங்கே என அடுத்தடுத்த வருடங்களில் நாம் கேட்கிறோம். ஆனால் ஆதரவாளர்கள் கேட்பதில்லை. இந்தக் கேள்வியே அவர்களுக்கு அபத்தமாகத் தெரிகிறது – “என்ன முட்டாள்தனமான கேள்வி இது, அதுதான் நாடே செல்வ வளத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் கொழிக்கிறதே, தேனும் பாலும் ஆறாய் ஓடுகிறதே, மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள், வேலைவாய்ப்பில் எந்தப் பிரச்சனையும் தெரியவில்லையே, ஏன் இப்படி எதிர்மறையாய் கேள்வி எழுப்புகிறீர்கள்?” என அவர்கள் எரிச்சலடைகிறார்கள். இந்தக் கேள்வி அவர்களுக்கு தர்க்கப்பூர்வமான கேள்வியாக அல்ல, ‘அரசியலாகத்’ தோன்றுகிறது. ஏன் அப்படி நினைக்கிறார்கள்?

இங்குதான் நாம் இந்த உளவியல் பாங்கைப் புரிந்துகொள்ள முயல வேண்டும் – நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பிணைக்கிற ஒரு சங்கிலி என இந்துத்துவ மனப்பான்மையை வரையறுக்கலாம். அதாவது இன்றைக்கும் நாளைக்கும் நடுவே ஒரு தொங்குபாலத்தை கற்பனை செய்யுங்கள். அதில்தான் இந்துத்துவர்கள் நடக்கிறார்கள். இப்போது அவர்கள் நிகழ்காலத்திலும் இல்லை, எதிர்காலத்திலும் இல்லை, ஒரு நிகழ்-எதிர் காலத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிகழ்-எதிர்காலமானது ஒரு முரண் அல்லவா? அதற்கு நடப்புலகில் இடமில்லை. அதை மொழிக்குள் மட்டுமே கட்டமைத்து தக்கவைக்க முடியும். அதனால்தான் இந்துத்துவர்கள் கள நிலவரத்தை விட அரசியலில் மொழிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இந்தியா வளர்ந்து விட்டது, பிரச்சனைகள் மறைந்து விட்டன, ஒவ்வொரு திட்டமும் ‘வெற்றி வெற்றி’ என அவர்கள் கூவும்போது அது அவர்களைப் பொருத்தமட்டில் பொய்யில்லை – நீங்கள் ஒரு புத்தகத்தைத் திறக்கிறீர்கள், அடுத்து படிக்கிறீர்கள். திறப்பது நிகழிலும், படிப்பது எதிர்காலத்திலும் நிகழ வேண்டும். யாராலும் திறந்தபடியே படித்திட முடியாது. இந்துத்துவர்களால் மட்டும் முடியும். ஏனென்றால் அவர்களுக்கு எதிர்காலம் நிகழ்காலத்திலேயே ஆரம்பிக்கிறது. ஆரம்பித்ததும் அது நடந்துவிடுவதாகவும் நம்புகிறார்கள். தொங்குபாலத்தில் ஒரு அடி வைத்ததும் தாம் அதைக் கடந்துவிட்டதாக நம்புகிறார்கள்.

நிகழ்காலத்திலேயே கடந்த காலமும் உள்ளதாய் அவர்கள் நம்புகிறார்கள் – அதனால் இந்துத்துவா ஒரு மீட்புவாத அரசியலாக இருக்கிறது. பண்டைய இந்தியா மாசுமருவற்ற ஒரு மகத்தான காலம் என நம்புகிறார்கள். அந்தப் பண்டைய காலத்துக்கு அதன் மகத்துவத்துக்கு நம்மை அழைத்துப் போவதே பாஜக அரசின், மோடியின் செயற்திட்டம், சாதனை என்கிறார்கள். புதிய கல்வித்திட்டத்தில் கூட அவர்கள் சொல்வது சமஸ்கிருதம் படித்தால் நம்மால் பழங்காலத்தின் பெருமைகளை மீட்க முடியும் என்பதே. காலத்தைப் பின்னோக்கி செலுத்தவோ, முடிந்த ஒன்றை மீட்கவோ முடியாது என வரலாற்றைத் தெரிந்த, பகுத்தறிவுகொண்ட ஒவ்வொருவருக்கும் தெரியும்.

ஆனால் அது ஒரு பார்வை மட்டுமே, இந்துத்துவர்கள் தர்க்கப்பூர்வமாக இதைப் பார்ப்பதில்லை. அவர்கள் நடக்கும் தொங்குபாலம் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்துக்கும் செல்கிறது. அவர்கள் நிகழ்காலத்தில் இருக்கும் போதே கடந்த காலத்துக்கும் சென்று வருகிறார்கள். இரண்டுமே ஒரே காலம்தான். அதனால்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இஸ்லாமிய படையெடுப்பு அவர்களை ஏதோ தற்சமயம் தம் கண்முன்னால் நடந்ததைப் போல அப்படி கோபமூட்டுகிறது. இக்காலத்தைய இஸ்லாமியர்களும் அந்தக் காலத்து முகலாயர்களும் ஒன்றே என நினைக்கிறார்கள். மோடி ராமர் கோயிலின் அடிக்கல்நாட்டு விழாவில் நெகிழ நெகிழ பேசினால் அவர் தமது பண்டைய பெருமைகளைப் பேசியே கற்பனையில் மீட்டு விட்டதாக அவர்களுக்குத் தோன்றுகிறது.

இதை மேலும் புரிந்துகொள்ள நாம் சினிமாவை உதாரணமாக எடுக்கலாம் – நீங்கள் ஒருதடவைக்கு மேல் ஒரு படத்தை மீள மீளப் பார்க்கும் போது அது பிடித்திருந்தால் புதுமையாகவே நீடிப்பதை கவனிக்கலாம். அடுத்து என்ன வரப்போகிறது எனத் தெரிந்தாலும் தெரியாததைப் போல ஆர்வமாக பார்த்திருப்போம். கிளைமேக்ஸில் என்ன நடக்கப் போகிறது எனத் தெரியும், அது ஏற்கனவே பலமுறை நிகழ்ந்து விட்டது, ஆனால் இம்முறை அது நிகழும் போது அது இம்முறையே நிகழ்கிறது என நினைப்போம். இங்கு நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றாகிறது. சொல்லப்போனால் பார்த்த படமே மேலும் சுவாரஸ்யமான அனுபவத்தை அளிக்கும் என்கிறார்கள். இதற்கு முதல் நிபந்தனை விருப்பத்துடன் அவநம்பிக்கையை கழற்றி வைப்பது. Willing suspension of disbelief. இது தர்க்கம் சார்ந்த அவநம்பிக்கை அல்ல, காலம் சார்ந்த அவநம்பிக்கையை தளர்த்துவது. இது அதிகமும் செயல்படுவது புனைவின் மயக்கமான மனநிலையிலே. இந்துத்துவர்கள் அந்த மயக்கநிலையில் இருப்பதையே விரும்புகிறார்கள். அதையே உண்மை என நம்புகிறார்கள்.

இந்துத்துவா என்பது ஒரு மிகப்பெரிய புனைவுவெளி. அதன் காலம் என்பது புனைவுக்குள் செயல்படும் காலம். தரவுகளை கொட்டோ கொட்டெனக் கொட்டினாலும் இந்தப் புனைவுவெளியைத் தகர்க்க முடியாது. புனைவை புனைவைக் கொண்டே எதிர்க்க முடியும். இந்துத்துவாவுக்குப் பிறகு நம் தேசத்தில் வரப்போகும் அரசியல் சித்தாந்தங்கள் அதன் சாயலிலே இருக்கப் போகின்றன என அரசியல் விமர்சகர்கள் கவலையுடன் அனுமானிப்பது இதனால்தான்.

hindutva

இதுவொரு பார்வை. தெரிதா மற்றொரு பார்வையை அளிக்கிறார் – அவர் நம் மொழிக்குள் அர்த்தம் உற்பத்தி ஆவதும் இப்படியே என்கிறார். அதாவது, அதன் ஆழமான ஒரு தளத்தில் அர்த்தம் தனது ஒரு காலை நிகழ்காலத்திலும் மறுகாலை எதிர்காலத்திலும் ஒரே சமயம் வைக்க முயல்கிறது. முடியாமல் போகும் போது அது எதிர்காலம் நோக்கி குதிக்க முயல்கிறது. அப்போது எதிர்காலம் இன்னும் சற்று தள்ளிப்போய் விடுகிறது. இப்போது அது தொடர்ந்து குதித்தபடி, காலத்தை துரத்தியபடி இருக்க நேர்கிறது என்கிறார்.

உலகத்தில் ஒவ்வொரு பொருளும் எதிர்மைகளால், எதிர்வுகளால் ஆனது என்றார் அமைப்பியல் அறிஞரும், மொழியியல்வாதியுமான சசூர் (Saussure). ஒரு பூனை பூனையாக ஏன் இருக்கிறது, அது நாயாக இல்லாததால், அது பசுவாக இல்லாததால்… அடுத்து ஒரு பூனை வெள்ளைப்பூனையாக இருக்கிறது, ஏன்? அது கறுப்புப்பூனையாக இல்லாததால், அது ஒரு மஞ்சள் பூனையாக இல்லாததால், பழுப்புப்பூனையாக, வெள்ளையும் ஆரஞ்சும் கலந்த பூனையாக இல்லாததால் இப்படியே கழித்தபடியே செல்வோம் என்றார் சசூர். என் வங்கி இருப்புத்தொகையில் பத்தாயிரம் ரூபாய் மட்டும் இருக்கிறதென்றால் அங்கு பத்தாயிரத்து ஒரு ரூபாய் இல்லை என்றோ, 9,999 ரூ இல்லை என்றோ பொருள். உண்மை-பொய் இரண்டும் எதிர்வினால் கட்டமைக்கப்பட்டவை என்றாலும் உண்மை உண்மையாகவும், பொய் பொய்யாகவும் தாம் அர்த்தப்படுகின்றன. அதாவது எதிர்வினால் அர்த்தம் உற்பத்தி பண்ணப்படுகிறது எனும் சசூர், அந்த அர்த்தத்தையே ஒரு எதிர்வாகத்தான் முன்வைத்தார். அர்த்தம் நேர்க்கோடாக, கட்டுறுதியாக, பிசிறின்றி, உடைசலின்றி உருவாகிறது என அவர் நம்பினார். கறுப்பும் வெள்ளையும் ஒன்றையொன்றை கட்டமைக்க உதவுகிறது. ஆனால் கறுப்பு கறுப்புதான், வெள்ளை வெள்ளைதான்.

இதற்குப் பிறகு வந்த தெரிதா இந்தக் கட்டுறுதியான அர்த்தத்தை ஏற்கவில்லை – கறுப்பு என ஒன்றில்லை, கறுப்பு-வெள்ளைதான் இருக்கிறது, வெள்ளையென ஒன்றில்லை, வெள்ளை-கறுப்பே இருக்கிறது என்றார். ஒரு அர்த்தம் முரணால் உருவாவதில்லை, அது முரணாகவே இருக்கிறது. அப்படி முரணாக இருப்பதனாலேயே அர்த்தம் தன்னைக் கொன்று விடுகிறது என்றார். ஒரு கை ராமன் என்றால் மற்றொரு கை ராவணன் – ராமன் ராவணனைக் கொன்றால் ராவணன் ராமனைக் கொன்று விடுவான். ராமன் ராமனாக இருக்க அவன் ஒரே சமயம் ராமனல்லாமலும் (இந்துத்துவ ராமன்) ராமனாகவும் (இந்து மத ராமன்) இருந்தாக வேண்டும். காவிய ராமனை தாம் மீட்டெடுத்துப் பாதுகாப்பதாய் இந்துத்துவர் நம்பும் போது காவிய ராமன் மரித்துப் போகிறான். மீட்டெடுக்கப்பட்ட அயோத்யா ராமன் உயிருடன் வருகிறான் என நம்புகிறார்கள்.

ஆனால், அதற்கு முதலில் காவிய ராமனை நம்ப வேண்டுமே? காவிய ராமனை நம்பினால் அயோத்யா ராமன் சாக வேண்டும். இரண்டு காலங்களின் ராமர்கள் பரஸ்பரம் கொன்றபடியே இருக்க ராமன் இந்த முரண்பாட்டுக்குள் தோன்றுகிறான். அவன் அப்படித் தோன்றினதுமே இந்துக்களின் கடவுளாக உருமாற்றம் அடைகிறான். இந்துக்களின் கடவுளான ராமன் இப்போது இஸ்லாமியர்களின் எதிரியாக வேண்டும். இப்போது மற்றொரு முரண் வருகிறது – இந்துக்களின் கடவுளாக, இஸ்லாமிய விரோதியாக வரும் ராமன் காவிய காலத்தில் இல்லை. நிகழ்காலத்துக்கு வந்து விட்டான். ஆக, இந்துவின் உருவகமே இங்கு காவியக் காலத்துக்குப் பின் உருவான ஒன்றாகிறது. ராமன் காவியக் காலத்திலும் இருப்பவன் என்பதால் இந்து என்பவன் இரு முரண் காலங்களில் ஒரே சமயம் வசித்து தன்னைத் தானே “ரத்து” பண்ணிக்கொள்கிறான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வேற்றுமை (difference) எனும் சொல்லை மறுக்கும் தெரிதா அதனிடத்தில் ஒத்திவைக்கப்படும் (deferring) வேற்றுமை (difference) என ஒன்றைக் கொண்டுவருகிறார். இந்த இரண்டு சொற்களையும் இணைத்து ‘Différance‘ என ஒன்றை உருவாக்குகிறார். இந்த ஒத்திவைக்கப்படும் வேற்றுமையே அர்த்தங்கள் தோன்றும் பாங்கு என்கிறார். ஏன் ஒரு புதிய சொல்? ஏற்கனவே உள்ள ஒரு சொல்லைக்கொண்டு இதைச் சொல்லலாமே? இங்கு ஒரு சுவாரஸ்யமான பதிலைத் தருகிறார் தெரிதா.

ஒரு அகராதியில் உள்ள சொல்லானது மற்றும் பல சொற்களுடன் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டி, ஒரு ஏற்கப்பட்ட சொல்லாக உருவமைக்கிறது. வேற்றுமை என்றால் என்ன என அகராதியில் பார்த்தால் “வேறுபடும் தன்மை” என வரலாம். வேறுபடுவதென்றால் என்ன எனக்கேட்டால் “வித்தியாசமாக இருப்பது” என பதில் வரலாம். இப்படி சற்றே மாறுபட்ட அல்லது இணையாக உள்ள சொற்களைக் கொண்டே ஒரு சொல்லை நாம் அகராதியில் விளக்குகிறோம்.

அதுமட்டுமல்ல விளக்கப்பட்ட சொல்லையும் அப்படியே மற்றொரு சொல்லை விளக்க பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு நிலையான பொருள் உண்டு என நிரூபிக்க நாம் ‘நிலையின்மையை’ நாட நேர்கிறது. மொழியின் இந்த அரசியலை அம்பலப்படுத்த அகராதிக்குள் இல்லாத ஒரு சொல்லைக் கொண்டு வருகிறார் தெரிதா – Différance. இதை நீங்கள் எளிய அகராதிகளில் காண முடியாது. பள்ளி ஆங்கிலத்தில் இது இருக்காது. சொல்லப்போனால் ஒரு பள்ளிக் குழந்தை differance என எழுதினால் அதை வெட்டி “தப்பு” என்றே ஆங்கில ஆசிரியர் சொல்லுவார். ஆனால் différance ஒரு கலைச்சொல்லாக கல்விப்புலத்தில் இப்போது நீடிக்கிறது. இப்போது அது கலைச்சொல் அகராதியில் இடம்பெறுகிறது. எந்த அரசியலை முறியடிக்க தெரிதா ஒரு புதிய விளையாட்டுத்தனமான சொல்லை உருவாக்கினாரோ அதுவே ஒரு அகராதிச் சொல்லானதும் தன் அரசியலால் தானே முறியடிக்கப்பட்டு மற்றொரு இறந்த, எதிர்வுகளால் ஆன சொல்லாகி விடுகிறது. இப்போது இலக்கிய விவாதங்களில் மக்கள் différance என்றால் அது difference அல்ல, வேறு என சொல்லத் தொடங்குகிறார்கள். இரு சொற்களை உடைத்து உருவாக்கப்பட்ட ஒட்டுச்சொல் (neologism) என அதனை வகைப்படுத்துகிறார்கள். இப்போது வழமையான சொல் – ஒட்டுச்சொல் என புதியதொரு எதிர்வு தோன்றுகிறது.

தனது “Différance” எனும் கட்டுரையில் தெரிதாவே இதைக் கிண்டலடிக்கிறார் – இச்சொல்லைப் படிக்கும் ஒருவர் இது ஒரு சொல் அல்ல எனத் தெரிந்தே அதை ஒரு சொல் என்றும் ஏற்றுக்கொள்கிறார். இது ஒரு அர்த்தம் தோன்றும் பாங்கு, différance எனும் ஒரு சொல் சொல்லல்ல என அவரே சொல்ல விரும்பினாலும் மொழிக்குள் வந்ததும் இது ஒரு சொல்லாவதை எவராலும் தடுக்க முடியாது.

அதை விடுங்கள் – இந்தச் சொல்லை இன்னும் சற்று விளக்க வேண்டும். தனது கட்டுரையின் துவக்கத்தில் தெரிதா இதை ‘to differ’ (ஒன்றிலிருந்து வேறுபட்டிட) என்பதை வைத்தே விளக்குகிறார். ஒன்றில் இருந்து வித்தியாசப்படுவது என்றால் காலத்தின் ஒழுங்கில் அது எப்படி நடக்கும்? அதாவது நீங்கள் ஒன்றில் இருந்து மாறுபடும் போது நிகழ்காலத்தில் இருக்கிறீர்களா அல்லது எதிர்காலத்திலா? மாறுபடுகிறேன் என நீங்கள் சொல்லும் போதே ஒரு சுயமுரண் அங்கு ஏற்கிறது – நீங்கள் மாறுபடுவது நிகழ்காலத்தில் என்றால் நீங்கள் மாறுபடவே முடியாதே? மாறுபடுவது என்பதே நிகழ்காலத்தில், நிகழ்கால நிலையில் இருந்து மற்றொரு காலத்துக்கு செல்வது அல்லவா? நிகழ்காலத்தில் இருந்தபடியே அதை எப்படிச் செய்ய முடியும்?

சமண தத்துவத்தில் ‘அநேகாந்தவாதம்’ என்றொரு கோட்பாடு உண்டு. இதில் ஒரு புதிர் எழுப்பப்படுகிறது. “ஒரு குயவன் ஒரு குடத்தை வனைகிறான்”. குடம் உருவாகி விட்டது. நம் கண்முன்னே அது உருவாக்கப்படுகிறது. இது சரி என்றால் உருவாக்கப்படும் ஒன்று எப்படி உருவாக முடியும்? உருவாக்கம் என்பது கடந்த காலத்தில் ஒரு தொடர்நிகழ்வாக நடக்கிறது, அதன் விளைவே குடம் என்கிறோம். ஆக, குடம் என்பது கடந்த காலத்தில் இருக்க முடியாது. குடம் உருவாக்கப்பட்ட பின்னர் குயவன் அதை உருவாக்குவதில்லை. இப்போது அந்தக் குடத்தை உருவாக்கியது யார்?

என்ன கேள்வி இது? குயவன்தானே குடத்தை உருவாக்கியிருக்க முடியும்? வெரி குட். குயவன் இதைக் கடந்த காலத்தில் உருவாக்கினான் என்றால் அது எப்படி நிகழ்காலத்துக்கு வர முடியும் அல்லது நிகழ்காலத்தில் இருக்கும் ஒன்று எப்படி கடந்த காலத்தில் உருவாக்கப்பட முடியும்? அதாவது இது யதார்த்த உண்மையின் தளத்தில் வைத்து கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்ல. குயவன் வனைந்ததே குடம் என அனைவருக்கும் தெரியும். இது நமது மொழிக்குள் காலம் வரும் போது ஏற்படும் முரணை உணர்த்துவதற்காக எழுப்பப்பட்ட கேள்வி. நாம் சர்வசாதாரணமாக கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறோம், அல்லது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சமமாக பாவிக்கிறோம். ஆனால் இது ஒரு கற்பிதம் என நாம் புரிந்துகொள்வதில்லை. இந்தக் கேள்விக்கு சமணர்கள் அளித்த பதிலுக்கு நான் போகப் போவதில்லை. என் நோக்கம் தெரிதாவின் கட்டுடைத்தல் தத்துவத்துக்கும் இந்தியத் தத்துவம் எழுப்பிய புதிருக்குமான தொடர்பைப் புலப்படுத்துவதே. இதே பாணியில்தான் தெரிதா இருபதாம் நூற்றாண்டில் மொழிக்குள் அர்த்தக் கட்டுமானங்கள் உறுதியற்று இருப்பதை அம்பலப்படுத்துகிறார் எனக் காட்டுவதே.

நான் உங்களுடன் ‘மாறுபடுகிறேன்’ எனும்போது நாம் ஒரு முரணான காலநிலைக்குள் செல்கிறோம். நாம் மாறுபடவோ மாறுபடாதிருக்கவோ (நிகழ்காலம்) முடியாத இடத்துக்குச் செல்கிறோம் – மாறுபடுகிறேன் எனும்போதே அது நிகழ்காலம் என்பதையும் கடந்து எதிர்காலத்துக்கு அருகில் சென்றுவிடுகிறேன். எப்படி? ஓர் உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் வாக்குவாதம் வருகிறது. “சொந்த சாதிக்குள்ளே நீ திருமணம் செய்ய வேண்டும்” என அவர் சொல்ல நீங்களோ “அதெல்லாம் முடியாது, நான் சாதியை ஏற்காதவன்” எனச் சொல்ல பெரிய சண்டை நடக்கிறது. கடைசியாக நீங்கள் உறுதியாகச் சொல்லிவிடுகிறீர்கள். “இல்லப்பா நான் உங்களோட மாறுபடுகிறேன்”. இப்போது அப்பாவுக்கு ஒரு குழப்பம், அதனால் ஒரு பயம் வருகிறது. நீங்கள் மாறுபடுவது இப்போதா அல்லது இது எதிர்காலத்துக்கும் நீடிக்குமா? இப்போதைக்கு என்றால் தற்காலிகமானது, ஆனால் எதிர்காலத்துக்கும் சேர்த்து என்றால் பிரச்சனை. சரி இப்போதைக்கு ஏற்றுவிட்டு எதிர்காலத்தில் “மாறுபடுகிறேன்” என நீங்கள் நினைத்தால், அப்பா “சரி அந்தப் பிரச்சனையை அது வரும் போது அப்பால பார்த்துக்கலாம்” என மகிழ்ச்சியாக ஒத்திப்போடலாம்.

ஆனால், உங்களுடைய “மாறுபடுகிறேன்” நிகழ்காலத்திலோ எதிர்காலத்திலோ முழுமையாக கறாராக இல்லை. அது இரண்டு காலங்களுக்கும் இடையே நழுவியபடி இருக்கிறது. அதுதான் உங்கள் அப்பாவின் கோபத்துக்குக் காரணம். “இல்லப்பா, இதை சொல்ற நொடியில் மட்டும் நான் உங்களோட மாறுபடுகிறேன்” எனச் சொல்லிப் பாருங்கள். அவர் கோபப்படவே மாட்டார். ‘ஐ லவ் யூ’ என ஒரு பெண்ணிடம் ரோஜாப் பூவை நீட்டும் போது, ‘இதோ இந்த நொடி மட்டுமே உன்னைக் காதலிக்கிறேன்’ என இலக்கணப்படி அர்த்தமில்லை. எதிர்காலத்துக்கும், நான் சாகும்வரை, செத்தபின் எப்பிறவியிலும் உன்னையே காதலிப்பேன் என்றும் அர்த்தமாகிறது. அது மட்டுமல்ல உன்னைப் பார்த்த நொடியில் இருந்தே உன்னோடு காதலில் இருந்தேன் என்றும் அர்த்தமாகிறது. “ஐ லவ் யூ” என்பது நிகழ்காலத்தில் இலக்கணப்படி இருந்தாலும் அது முக்காலத்துக்கும் பனிச்சறுக்கு விளையாடியபடி இருக்கிறது. அப்படி மொழிக்குள் விளையாட்டு நிகழ்ந்தாலே அவளது முகம் மலரும்.

மாறுபட வேண்டும் எனச் சொல்லும் போதே நாம் மாறுபடுவதை ஒத்திப்போடுகிறோம். ஆக, ‘to differ’ (மாறுபடுதல்) என்பதைப் புரிந்துகொள்ள ‘to defer’ (ஒத்திப்போடுதல்) முக்கியம் எனச் சொல்லி différance என்கிற புதிய சொல்லை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் தெரிதா.

ஒரு தனிமனிதனின் சுயம் என ஒன்று உண்டே – அதுவும் சுயமுரண்களால் இப்படியே கட்டமைக்கப்படுகிறது. Presence-absence எனும் கலைச்சொற்களால் இதை தெரிதா விளக்குகிறார். இருத்தல் – இருத்தலின்மை என்பது அன்றாடத்தின் ஒவ்வொரு சிறுநிகழ்விலும் செயல்படுகிறது என்கிறார். உதாரணமாக, நீங்கள் ஒரு காசோலையில் கையெழுத்திட்டு பணமெடுக்க வங்கிக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு அப்போது ஒரு எண்ணம் வருகிறது – “நான்தான் நேரடியாக வங்கிக்குப் போகிறேனே, ஏன் என் கையெழுத்தைப் போட்டு நான் ஒப்புதல் அளிப்பதாகச் சொல்ல வேண்டும்? ஒரு கையெழுத்து அளிக்கிற மதிப்பை, பணத்தைப் போட்டவனான எனக்கு அளிக்க மாட்டார்களா?” சத்தியமாக மாட்டார்கள். என்னதான் வாதிட்டாலும், நீங்கள்தான் வங்கிக் கணக்குக்குச் சொந்தக்காரர் என வங்கி அதிகாரிகளுக்குத் தெரிந்தாலும் உங்கள் கையெழுத்தில்லாமல் அந்தக் காசோலை செல்லுபடியாகாது. கையெழுத்து இல்லையென்றால் அதைக் கிழித்துப் போட்டு விடுவார்கள்.

இப்போது கையெழுத்து செல்லும், நீங்கள் ‘செல்லாதவர்’ என ஆவதில்லை. மாறாக, காசோலையில் கையெழுத்து தோன்றும் போது (presence) நீங்கள் மறைந்து போகிறீர்கள் (absence). மறைந்து போவதென்றால் இல்லாமல் போவதில்லை. உங்கள் சாயல் ஒரு நிழலாக, மறைவின் நிழலாக அந்தக் கையெழுத்தின் பின் விழுந்து கிடக்கிறது. அந்தக் கையெழுத்து மதிப்பே உங்கள் நிழல். உங்கள் “மறைவு” இல்லையென்றால் உங்கள் கையெழுத்தின் “தோற்றத்துக்கு” மதிப்பில்லை. வாழ்க்கையில் எப்போது உங்கள் பெயரைக் கையெழுத்திட, எழுத, கூற, படிக்க, கேட்கத் தொடங்குகிறீர்களோ அப்போதிலிருந்தே இந்த “இரட்டை” வாழ்க்கை ஆரம்பித்து விடுகிறது.

“அபிலாஷ்” என ஒருவர் என்னை அழைக்கும் நொடியில் நான் மறைகிறேன், அதற்கு “என்ன?” என பதிலுக்குக் கேட்கும் போது நான் “தோன்றுகிறேன்”. நான் இருப்பதினாலே அவர் என்னை அழைக்கிறார், ஆனால் அவருடைய கதையாடலில் நான் பகுதியாக இல்லை. அவரது ‘உலகில்’ நான் இல்லை. அவர் அழைக்கும் போதே என் உலகில் கதவு தட்டப்படுகிறது. “என்ன?” எனக் கேட்டு அந்தக் கதவைத் திறந்து விடுகிறேன். அவர் நுழைகிறார். அப்போது அவருலகில் நான் தோன்றுகிறேன். அப்படித் தோன்ற அவர் என் வீட்டுக் கதவுக்கு முன் நின்றுகொண்டிருக்கும் போது நான் இல்லாமல் ஆக வேண்டும்.

ஆக, இரண்டும் (மறைதல்-தோன்றுதல்) ஒரே சமயம் நடந்தாக வேண்டும். அபிலாஷ் என நீங்கள் என்னை அழைக்கும் போது என் பெயர் தோன்றி, நான் மறைகிறேன். நான் அதைக் கேட்கும் போது நான் தோன்றி, பெயர் மறைகிறது. இன்னும் ஆழமாய் சொல்வதானால் மறைந்து-தோன்றி, தோன்றி-மறைகிறோம் நானும் என் பெயரும். இது ஒவ்வொரு சொல்லுக்கும் நிகழ்கிறது என்கிறார் தெரிதா.

உங்கள் முன்னிருக்கும் ஒரு அழகிய பெண்ணை நீங்கள் இச்சையுடன் நோக்கும் நொடி அவள் மறைந்து போய் தோன்றுகிறாள். அதனாலே gaze எனப்படும் ஆண் நோக்கை பெண்கள் மறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள், மறுத்து எதிர்த்தபடியே உங்களை நோக்கி “ஹலோ” சொல்லவும் செய்கிறார்கள். அது பெண் அல்ல, ஒரு ஆப்பிள் என்றாலும் அதை நீங்கள் கருத்திற்கொள்ள, அடையாளம் காண அதற்கு முன்பு அங்கு உங்கள் பிரக்ஞையில் அது இல்லாமல் இருக்க வேண்டும். இன்மையில் இருந்தே இருப்பு தோன்றியாக வேண்டும். அதனளவில் இருப்பு என ஒன்று சாத்தியமில்லை. இருப்பு என ஒன்று தோன்றும்போதே தன் பின்னால் இன்மையின் நிழல் பிரம்மாண்டமாய் வாலைச்சுருட்டி படுத்துக்கிடப்பதை அது உணர்ந்தே இருக்கிறது.

இந்து ராஷ்டிரம் என்பதும் கடந்த காலத்தில் இல்லாமலும் இருந்தபடியும் இருக்கிறது – அது சமகாலத்திலும் தோன்றி, கடந்த காலத்திலும் இருப்பதால். அது எதிர்காலத்திலும் தோன்றப் போகிறது என்பதால். இதுவே இந்து ராஷ்டிரத்தை எட்டாக்கனியாக ஆக்குகிறது. எட்டாக்கனியாக இருப்பதாலே, அதீத புனைவுநிலையில் ஒரு தோன்றாத் தொன்மமாக இருப்பதாலே, அது கிளர்ச்சி தரும் ஒரு மாபெரும் கனவாக இந்துத்துவர்களுக்கு இருக்கிறது.

இங்கு இந்துத்துவர்கள் அரசியல் களத்தில் புனைவாக்கிக் காணும் அர்த்தங்களைப் போன்றே, ஏற்கனவே ஒரு ஆழமான தளத்தில், நமது மொழிக்குள் ஒவ்வொரு அர்த்தமும் உள்ளது. நாம் பகுத்தறிவின் மொழியில் பேசும் அரசியல் என்பதும் அவர்கள் தமது தொன்மத்தின் மொழியில், அதர்க்கமாய் பேசும் அரசியலும் வெவ்வேறு விதங்களில் ஒன்றே. இரண்டுமே புனைவுதான். தெரிதா இருந்திருந்தால் அப்படியே சொல்லியிருப்பார். என்ன, முற்போக்காளர்களின் ‘புனைவு’ மக்கள் நலனை கருத்தில் கொண்டது, ஏற்கத்தக்கது, ஆபத்தற்றது. ஆனால் இந்துத்துவர்களின் ‘புனைவோ’ இந்த நாட்டை நடுத்தெருவில் விடுவது.