இனிமை – டோனி மோரிசன் – தமிழாக்கம்: கார்குழலி

by கார்குழலி
0 comment

அது என்னுடைய தவறில்லை. அதனால் நீங்கள் என்னைக் குற்றம்சாட்ட முடியாது. நான் அதைச் செய்யவில்லை, அது எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை. என்னுடைய கால்களுக்கு இடையே இருந்து அவளை எடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்துகொண்டு விட்டேன். உண்மையாகவே சரியில்லை. எனக்கு அச்சமேற்படும் அளவுக்கு கறுப்பாக இருந்தாள். நடுநிசியின் கறுப்பு, சூடானின் கறுப்பு. நான் மாநிறமாக நல்ல தலைமுடியுடன் இருந்தேன். அடர் மஞ்சள் என்று சொல்லும் நிறம், அதே போலத்தான் இருந்தான் லூலா ஆனின் தந்தையும். எங்கள் குடும்பத்தில் யாருமே அந்த நிறத்தின் பக்கத்தில்கூட வந்தது இல்லை. அதை ஒத்திருந்தது தார் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் அவளுடைய தலைமுடி தோலுடன் ஒத்துப் போகவில்லை. வித்தியாசமாக இருக்கிறது – நேராக, ஆனால், சுருண்டிருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிர்வாணமானப் பழங்குடி இனத்தவரின் முடியைப் போல. அவளை ஒரு பின்னெறிவு என்று சொல்ல நீங்கள் முற்படலாம், ஆனால் எதனுடைய பின்னெறிவு?

நீங்கள் என்னுடைய பாட்டியைப் பார்த்திருக்க வேண்டும். அவரை வெள்ளைக்காரி என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரு வெள்ளைக்காரரை மணந்துகொண்டார், அதற்குப் பிறகு தன்னுடைய குழந்தைகளில் ஒருவரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. என் அம்மா, சித்திகளிடம் இருந்து கடிதம் வந்தால் அதைத் திறந்து பார்க்காமலே திருப்பி அனுப்பிவிடுவார். ஒருவழியாக, அவருக்கு எந்தச் செய்தியையும் அனுப்பக்கூடாது என்ற செய்தியை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அந்தக் காலத்தில் இருந்த எல்லா முலாட்டோக்களும்* க்வாட்ரூன்களும்* அதைத்தான் செய்தார்கள் – அதாவது, சரியான தலைமுடி அமையப் பெற்றவர்களாக இருந்தால். எத்தனை வெள்ளைக்காரர்களின் நாளங்களில் நீக்ரோ இரத்தம் ஒளிந்திருக்கிறது என்பது தெரியுமா? ஊகியுங்களேன். இருபது சதவீதம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய சொந்த அம்மாவான லூலூமே, தன்னை அப்படி காட்டிக் கொண்டிருக்கலாம் என்றாலும் அதைச் செய்யவேண்டாமென்று முடிவு செய்தார். அந்த முடிவுக்கு, தான் கொடுத்த விலையைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரும் என் தந்தையும் திருமணம் செய்துகொள்வதற்கு நீதிமன்றத்துக்குப் போன போது அங்கே இரண்டு பைபிள்கள் இருந்தனவாம். நீக்ரோக்களுக்கென வைக்கப்பட்டிருந்த பிரதியைத்தான் தொடவேண்டி இருந்ததாம். அந்த மற்றொரு பிரதி வெள்ளைக்காரர்கள் தொடுவதற்கானதாம். பைபிள்! அதை முறியடித்துவிட முடியுமா என்ன? வசதியான வெள்ளைக்காரத் தம்பதியரின் வீட்டைப் பராமரிக்கும் பணியில் இருந்தார் அம்மா. அவர் சமைத்த எல்லா உணவையும் அவர்கள் சாப்பிட்டனர், தொட்டியில் உட்கார்ந்து குளிக்கும்போது அவர்தான் முதுகு தேய்த்துவிட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இன்னும் என்னென்ன அந்தரங்கமான விஷயங்களை செய்யச் சொன்னார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் அவர் தொட்ட அதே பைபிளைத் தொடமாட்டார்கள்.

தோலின் நிறத்தின் அடிப்படையில் – எவ்வளவு வெளுப்பாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது – நாங்கள் குழு அமைத்துக் கொள்வது தவறான விஷயம் என்று உங்களில் சில பேர் நினைக்கலாம் – சமுதாயக் குழுக்கள், மக்கள் வசிக்குமிடங்கள், தேவாலயங்கள், கல்லூரி மகளிர் குழாம்கள், கறுப்பு நிறத்தவர்களின் பள்ளிகளிலும்கூட – வேறு எப்படித்தான் எங்களின் கண்ணியத்தைக் கொஞ்சமேனும் காப்பாற்றிக் கொள்வதாம்? மருந்துக்கடைகளில் உமிழப்படுவதையும் பேருந்து நிலையத்தில் நெட்டித் தள்ளப்படுவதையும் நடைபாதை முழுவதும் வெள்ளையர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதால் சாக்கடையில் நடக்கவேண்டியிருப்பதையும், மளிகைக்கடையில் வெள்ளையர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் காகிதப் பையை காசு கொடுத்து வாங்க வேண்டியிருப்பதையும் வேறு எப்படித்தான் தவிர்க்க முடியும்?

அசிங்கமான பெயர் சொல்லிக் கூப்பிடுவதை விடுங்கள். அது பற்றியும் அதுபோன்ற இன்னும் பல பல விஷயங்களைப் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அம்மாவின் தோலின் நிறத்தால் டிபார்ட்மென்ட் கடைகளில் தொப்பிகளை அணிந்து பார்ப்பதையும் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்துவதையும் யாரும் தடுக்கவில்லை. அப்பாவும் கடையின் பின் பகுதிக்குப் போகாமல் முன் பகுதியிலேயே காலணிகளை அணிந்துபார்க்க முடிந்தது. தாகத்தால் உயிரே போவதாக இருந்தாலும் ‘கறுப்பர்களுக்கு மட்டும்’ என்று ஒதுக்கப்பட்டிருந்த குழாயில் இருந்து இருவரில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.

இதைச் சொல்லப் பிடிக்கவில்லை என்றாலும் மகப்பேறு பிரிவில் முதலில் இருந்தே லூலா ஆன் என்னை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கினாள். எல்லாக் குழந்தைகளையும் போலவே, ஆப்பிரிக்கக் குழந்தைகளும்தான், பிறந்தபோது அவளுடைய தோலும் வெளுப்பாகத்தான் இருந்தது என்றாலும் சீக்கிரம் மாறிவிட்டது. கண்ணுக்கு முன்னால் அவள் கருநீலமாக மாறியபோது எனக்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று பயந்தேன். ஒரு நிமிடம் பைத்தியம் பிடித்தே விட்டது என்பது எப்படித் தெரியும் என்றால், சில நொடி மட்டும்தான், அவள் முகத்தின்மீது போர்வையை வைத்து அழுத்தினேன். ஆனால், எவ்வளவுதான் அந்தப் பயங்கரமான நிறத்தோடு அவள் பிறக்காமல் இருந்திருக்கலாமே என்று விரும்பினாலும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.

அவளை எங்காவது அனாதை விடுதியில் விட்டுவிடலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் சர்ச்சின் படிக்கட்டுகளில் குழந்தைகளை விட்டுச் செல்லும் அம்மாக்களைப் போல இருந்துவிடக் கூடாது என்று பயந்தேன். சமீபத்தில், ஜெர்மனியில், பனியைப் போல வெள்ளையாக இருந்த தம்பதிக்கு கறுப்பான குழந்தையொன்று எப்படிப் பிறந்தது என யாருக்கும் தெரியவில்லை என்று கேள்விப்பட்டேன். இரட்டையர்கள் என்று நினைக்கிறேன் – ஒன்று வெள்ளை, மற்றது கருப்பு. ஆனால் அது உண்மையா என்பது தெரியாது. அவளுக்குப் பாலூட்டுவது கறுப்புக் குஞ்சொன்று என் முலையை உறிஞ்சுவது போன்ற உணர்வைக் கொடுத்தது என்பது மட்டும் தெரியும். வீட்டுக்கு வந்த உடனேயே பாட்டில் பாலைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்.

என் கணவன் லூயி பளு தூக்கும் தொழிலாளி. ரயில் பயணத்தில் இருந்து திரும்பி வந்ததும் எனக்கு உண்மையாகவே கிறுக்குப் பிடித்துவிட்டதைப் போலப் பார்த்தான். குழந்தையை வேற்றுக் கிரகவாசியைப் போலப் பார்த்தான். கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுபவனில்லை என்பதால், “நாசமாப் போச்சு! என்ன சனியன் இது?” என்றபோது எங்களுக்குள் பிரச்சினை வரப்போகிறது என்பது தெரிந்துவிட்டது. அதுதான் இதைச் செய்தது – எனக்கும் அவனுக்கும் இடையே சண்டை வரக் காரணம் அதுதான். எங்கள் மண வாழ்க்கை துண்டுத் துண்டாக உடைந்தது. மூன்று வருடங்கள் நன்றாகத்தான் வாழ்ந்தோம், ஆனால் அவள் பிறந்ததும் என்னைக் குற்றம் சாட்டினான். லூலா ஆனை வேற்றாளைப் போல நடத்தினான் – அதையும்விட அதிகமாக எதிரியைப் போல. அவன் அவளைத் தொடவே இல்லை.

வேறு ஆணோடு எனக்குப் பழக்கம் இல்லை என்று அவனை நம்ப வைக்கவே முடியவில்லை. பொய் சொல்கிறேன் என்று உறுதியாக நம்பினான். நிறைய விவாதம் செய்தோம், அவளுடைய கருப்பு அவனுடைய குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்றும் என்னுடையதில் இருந்து அல்ல என்றும் நான் சொல்லும்வரையில். அன்றுதான் நிலைமை மோசமானது. எவ்வளவு என்றால், பேசாமல் எழுந்து வெளியே போய்விட்டான். நான் தங்குவதற்கு குறைவான வாடகையுடைய இடத்தைத் தேட வேண்டியிருந்தது. என்னால் இயன்றவரை சிறப்பாகச் செயல்பட்டேன்.

வீட்டுச் சொந்தக்காரரைப் பார்க்கப் போகும்போது அவளை எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் என்னுடைய பதின்வயது சொந்தக்காரப் பெண்ணிடம் அவளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போவேன். எப்படி இருந்தாலும் அவளை நான் அதிகம் வெளியில் எடுத்துச் செல்லவில்லை. ஏனென்றால், நடைவண்டியில் தள்ளிக்கொண்டு போகும்போது அவளைக் கொஞ்சுவதற்காக கீழே குனிந்து உள்ளே கூர்ந்து பார்ப்பவர்கள் திடுக்கிட்டுப் போய் பின்னால் குதித்து முகத்தைச் சுளிப்பார்கள். அது மனதைக் காயப்படுத்தியது. எங்கள் நிறம் இடம் மாறியிருந்தால், குழந்தையைப் பார்த்துக்கொள்பவள் என்று என்னை நினைத்திருக்கலாம்.

கறுப்பு நிறத்தவளாக இருப்பதால் – அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும்கூட – நகரத்தின் கண்ணியமான பகுதியில் வாடகைக்கு வீடு தேடுவது கஷ்டமான விஷயமாக இருந்தது. தொண்ணூறுகளில், லூலா ஆன் பிறந்த சமயத்தில், ஒருவர் இன்னார் என்பதால் அவருக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டேன் என்பது சட்டப்படி குற்றம் என்றாலும் வீட்டுச் சொந்தக்காரர்களில் பல பேர் அதைக் கண்டுகொள்ளவில்லை. வீடு கொடுக்காமல் இருக்க வேறு காரணங்களைக் கண்டுபிடித்தார்கள். விளம்பரத்தில் சொல்லி இருந்ததைக் காட்டிலும் ஏழு டாலர் அதிகமாக வாடகை கேட்டார் என்றாலும் திரு. லீயின் மூலம் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. வாடகையைக் கொடுக்க ஒரு நிமிடம் தாமதமானாலும் ஆடித் தீர்த்துவிடுவார்.

என்னை ‘அம்மா’ என்றோ ‘மம்மா’ என்றோ அழைப்பதற்குப் பதில் “இனிமை” என்று கூப்பிடச் சொன்னேன். அது பாதுகாப்பானதாக இருந்தது. அத்தனை கறுப்பாக இருந்ததாலும் தடித்த உதடுகளைக் கொண்டிருந்ததாலும் அவள் என்னை ‘அம்மா’ என்று கூப்பிட்டால் பார்ப்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் என்று நினைத்தேன். அதுபோக, அவளுடைய கண்ணின் நிறமும் வேடிக்கையாக இருந்தது – காக்கையின் கருமையோடு கொஞ்சம் நீலமும் கலந்தது போல – பார்க்கக் கொஞ்சம் சூனியக்காரியின் கண்களைப் போல இருந்தது.

அதனால், நீண்ட நாட்களுக்கு நாங்கள் இருவர் மட்டுமே தனியாக இருந்தோம். கைவிடப்பட்ட மனைவியாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதே இல்லை. எங்களை அப்படித் தனியே விட்டுச்சென்றது குறித்து லூயி மோசமாக உணர்ந்தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சில மாதங்கள் கழித்து வீடு மாற்றிவிட்டேன் என்பதைக் கண்டுபிடித்து, நான் அவனைக் கேட்கவுமில்லை நீதிமன்றத்துக்குப் போகவுமில்லை என்றாலும், மாதம் ஒரு முறை பணம் அனுப்பிவைக்க ஆரம்பித்தான். அவன் அனுப்பிவைத்த ஐம்பது டாலர் மணியார்டர்களும் மருத்துவமனையில் இரவு நேரப் பணியும் லூலா ஆனும் நானும் நல உதவியைப் பெறாமல் வாழ உதவியது. அது நல்ல விஷயம்தான்.

அதை நல உதவி என்று கூப்பிடுவதை நிறுத்திவிட்டு என் அம்மா சின்னப் பெண்ணாக இருக்கும்போது பயன்படுத்திய சொல்லையே திரும்பவும் உபயோகிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். அப்போதெல்லாம் அதை ‘நிவாரணம்’ என்றுதான் சொல்வார்கள். கேட்பதற்கே நன்றாக இருக்கிறது. நீங்களே உங்களைக் கவனித்துக்கொள்ளும் நிலைமை வரும்வரை ஒரு சின்ன உதவி. தவிரவும், அந்த நல உதவி தரும் எழுத்தர்கள் எச்சிலைப் போல கீழ்த்தரமானவர்கள். ஒரு வழியாக எனக்கு வேலை கிடைத்து அவர்களின் உதவி தேவையில்லை என்றான போது, அவர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பாரித்துக்கொண்டிருந்தேன்.

அவர்களுடைய அற்பமான சம்பளம் அவர்களைக் கயமை நிறைந்தவர்களாக்கி விட்டதால் எங்களைப் பிச்சைக்காரர்களைப் போல நடத்தினார்கள் என்று நினைக்கிறேன். முக்கியமாக, நான் ஏதோ அவர்களை ஏமாற்ற முயல்வதுபோல, முதலில் லூலா ஆனைப் பார்த்துவிட்டு, அடுத்து என்னைப் பார்ப்பார்கள். நிலைமை இப்போது முன்னைவிடப் பரவாயில்லை என்றாலும் கவனமாகவே இருக்க வேண்டியிருந்தது. அவளை எப்படி வளர்க்கிறேன் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். மிகுந்த கண்டிப்புடன் அவளை வளர்த்தேன். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் இருக்குமிடம் தெரியாமல் எந்த வம்பு தும்பிலும் சிக்காமல் இருக்கவேண்டும் என்றும் லூலா ஆன் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவளுடைய நிறம் அவள் சுமக்க வேண்டிய சிலுவை. ஆனால், அது என்னுடைய தவறில்லை. என்னுடைய தவறில்லை. இல்லை.

அப்புறம், லூலா ஆன் சின்னவளாக இருக்கும்போது அவளை நான் நடத்திய விதத்துக்காக சில நேரம் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் அவளைக் காப்பாற்றியாக வேண்டியிருந்தது. அவளுக்கு உலகம் தெரியாது. உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் அதுபோன்ற தோலோடு துடிப்புடனும் துணிச்சலுடனும் இருப்பதில் அர்த்தமில்லை. எதிர்த்துப் பேசியதற்காகவோ பள்ளியில் சண்டை பிடித்ததற்கோ சிறார் சிறைச்சாலைக்கு அனுப்பப்படலாம் என்ற உலகில், வேலைக்கு கடைசி ஆளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீக்கப்படும் போது முதல் ஆளாக இருப்பாய் என்ற உலகில், அப்படி இருக்க முடியாது. அவளுடைய கறுப்புத் தோல் வெள்ளைகாரர்களை எப்படி பீதியடையச் செய்யும் என்பதோ அவர்கள் சிரித்தபடியே அவளை ஏமாற்ற முற்படுவார்கள் என்பதோ அவளுக்குத் தெரியாது.

லூலா ஆன் அளவுக்கு கறுப்பாக இல்லாத சிறுமியை ஒருமுறை பார்த்தேன். பத்து வயதுகூட ஆகியிருக்காது. கூட்டமாக இருந்த வெள்ளைக்காரப் பையன்கள் அவள் காலை இடறிவிட்டார்கள். தட்டுத்தடுமாறியபடி எழுந்து நிற்க அவள் முயன்றபோது புட்டத்தில் காலை வைத்து அவளை நெடுஞ்சாண்கிடையாக கீழே தள்ளினான் ஒருவன். வயிறைப் பிடித்துக்கொண்டு முன்னால் குனிந்தபடி சிரிக்க ஆரம்பித்தார்கள் அந்தப் பையன்கள். சிறுமி அங்கிருந்து போய் வெகுநேரம் ஆன பின்னரும் தங்கள் செய்கையை நினைத்து பெருமையுடன் கொக்கரித்துக்கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் பேருந்தின் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் அந்த வெள்ளைக்காரக் குப்பையில் இருந்து அவளை வெளியே இழுத்துவந்து உதவியிருப்பேன். பாருங்கள், லூலா ஆனைச் சரியானபடி பயிற்றுவிக்கவில்லை என்றால் வெள்ளைக்காரச் சிறுவர்களிடம் அகப்படாமல் தெருவைக் கடப்பது எப்படி என்பது அவளுக்குத் தெரியாமல் போயிருக்கும். ஆனால் நான் அவளுக்குச் சொல்லிய பாடங்கள் நல்ல பலனை அளித்தன. அவள் என்னை மிகவும் பெருமைப்பட வைத்தாள்.

நான் ஒன்றும் மோசமான தாயல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என் ஒரே குழந்தைக்கு வலியைத் தரும் ஏதோ சில செயல்களை நான் செய்திருக்கலாம். அவளைக் காப்பாற்றுவதற்காக அதைச் செய்ய வேண்டியிருந்தது. செய்தே ஆக வேண்டியிருந்தது. அதுவும் தோலின் நிறத்தால் கிடைத்த சிறப்புச் சலுகைகளால்தான். துவக்கத்தில் அந்தக் கறுப்பு நிறத்தைத் தாண்டி அவள் யாரென்பதைத் தெரிந்துகொண்டு எளிமையாக அன்பு செலுத்த முடியவில்லை. ஆனால் இப்போது செய்கிறேன். உண்மையாகவே செய்கிறேன். இப்போது அவளுக்கு அது புரிகிறது என்று நினைக்கிறேன். அப்படித்தான் நினைக்கிறேன்.

கடந்த இரண்டு முறையும் பார்த்தபோது கண்ணைக் கவர்வதுபோல இருந்தாள். ஒருவித நம்பிக்கையும் தைரியமும் நிறைந்தவளாக. என்னைப் பார்க்க அவள் வந்த ஒவ்வொரு முறையும் எவ்வளவு கறுப்பாக இருந்தாள் என்பதை உண்மையிலேயே மறந்துவிட்டேன். அழகான வெண்ணிற உடைகளை அணிந்துகொள்வது மூலம் அதைச் சிறப்பாக எடுத்துக்காட்டினாள்.

குழந்தைகளிடம் எப்படிப் பழகுகிறீர்கள் என்பது முக்கியம். அவர்கள் அதை எப்போதும் மறக்காமல் இருக்கக்கூடும். அவளால் முடிந்த அடுத்த நொடியில் அந்த மோசமான அபார்ட்மெண்டில் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டாள். என்னைவிட்டு எவ்வளவு தொலைவு போக முடியுமோ போய்விட்டாள். நன்றாக அலங்கரித்துக்கொண்டு கலிஃபோர்னியாவில் பெரிய வேலையைத் தேடிக்கொண்டு விட்டாள். இப்போதெல்லாம் என்னைத் தொலைபேசியில் கூப்பிடுவதோ பார்க்க வருவதோ இல்லை. அவ்வப்போது பணமும் பொருட்களும் அனுப்பி வைக்கிறாள். ஆனால் அவளைக் கடைசியாக எப்போது பார்த்தேன் என்பது தெரியவில்லை.

வின்ஸ்டன் ஹவுஸ் நகருக்கு வெளியே இருக்கும் பிரம்மாண்டமான பெருஞ்செலவு பிடிக்கும் மருத்துவமனைகளை விடவும் இந்த இடம்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் இருப்பது சின்னது, வீட்டைப் போலவே எளிமையும் சௌகரியமும் உடையது, செலவும் மிகக் குறைவு, இருபத்து நான்கு மணிநேரமும் செவிலிகள் இருக்கிறார்கள். வாரம் இருமுறை மருத்துவர் ஒருவர் வருகை புரிகிறார். எனக்கு அறுபத்து மூன்று வயதுதான் ஆகிறது. சுறுசுறுப்பான வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுக்கும் வயதில்லை. ஆனாலும் இந்த அச்சமூட்டும் எலும்பு நோய் வந்துவிட்டதால் நல்ல கவனிப்பு இன்றியமையாதது.

பலவீனத்தையும் வலியையும் விட பொழுதைப் போக்குவதுதான் சிரமமாக இருக்கிறது. ஆனால், நர்ஸ்கள் அருமையானவர்கள். நான் பாட்டியாகப் போகிறேன் என்று சொன்னவுடன் என் கன்னத்தில் முத்தமிட்டார் ஒருவர். முடிசூட்டிக்கொள்ளப் போகும் ஒருவருக்குத் தகுதியான புன்னகையையும் பாராட்டையும் போல இருந்தது அது. லூலா ஆனிடம் இருந்து வந்த நீல நிறக் கடிதத்தைக் காண்பித்தேன். ‘மணப்பெண்’ என்று கையெழுத்து இட்டிருந்தாள். நான் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவளுடைய சொற்கள் மயக்கமூட்டுவதாக இருந்தன. “இனிமை, என்னவென்று ஊகியுங்கள் பார்க்கலாம். இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. எனக்கு மிகவும் சிலிர்ப்பாக இருக்கிறது, உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.”

அவளுக்கு ஏற்பட்டிருக்கும் சிலிர்ப்பு குழந்தையைப் பற்றியது, அதன் தந்தையைப் பற்றியது அல்ல என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவனைப் பற்றி அவள் எதுவுமே சொல்லவில்லை. அவளைப் போலவே கறுப்பாக இருப்பானோ என்று யோசிக்கிறேன். அப்படி இருந்தாலும், என் அளவுக்கு அவள் கவலைப்பட வேண்டியதில்லை. நான் இளைஞராக இருந்த சமயத்தை விட இப்போது சிறிதளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நீலக் கறுப்பர்கள் தொலைக்காட்சியெங்கும் நிறைந்திருக்கிறார்கள், பேஷன் இதழ்களிலும் விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும்கூட இப்போது நடிக்கிறார்கள்.

கடித உறையில் அனுப்புநரின் முகவரி இல்லை. நல்ல எண்ணத்துடன் அவசியமான முறையில் அவளை வளர்த்த காரணத்துக்காக இறக்கும்வரை தண்டிக்கப்படும் மோசமான பெற்றோராகத்தான் இன்னமும் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவள் என்னை வெறுக்கிறாள் என்பது தெரியும். அவள் எனக்குப் பணம் அனுப்புவது என்ற இடத்துக்கு எங்கள் உறவு இறங்கிவிட்டிருந்தது. அந்தப் பணத்துக்கு நன்றியுடையவளாக இருக்கிறேன் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். மற்ற நோயாளிகளைப் போல கூடுதல் சேவைகளுக்கு நான் கெஞ்சத் தேவை இருக்கவில்லை. விளையாடப் புதிய சீட்டுக்கட்டு தேவையென்றால் உடனே கிடைத்தது, வரவேற்பறையில் இருக்கும் நைந்துபோய் அழுக்காக இருப்பதில் விளையாடத் தேவையில்லை. தனிப்பட்ட முகக் கிரீமை வாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனாலும் நான் ஏமாறவில்லை. ஒதுங்கியிருந்தாலும் அவளுடைய மனசாட்சியைக் கொஞ்சமேனும் அமைதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் பணம் அனுப்புகிறாள் என்பது எனக்குத் தெரியும்.

நான் எரிச்சலுடன் நன்றிகெட்டுப் பேசுவது போலத் தெரிந்தால், அதற்கு உள்ளார்ந்த காரணம், எனக்கிருக்கும் வருத்தம்தான். நான் செய்யாமல் விட்டுப்போன அல்லது தவறாகச் செய்த சின்ன விஷயங்கள். அவள் முதன்முதலில் மாதவிலக்கு அடைந்தபோது எப்படி நடந்துகொண்டேன் என்பது நினைவிருக்கிறது. அவள் தடுமாறிய போதோ கீழே எதையாவது போட்ட போதோ நான் கத்திக் கூச்சலிட்ட சமயங்கள். உண்மை. நான் நிஜமாகவே எரிச்சல்பட்டேன். அவள் பிறந்தபோது, அவளுடைய கறுப்புத் தோல் எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. முதன்முதலில் இப்படி நினைத்தேன்… இல்லை. அந்த நினைவுகளை நான் தள்ளிவைக்க வேண்டும் – விரைவாக. அதில் அர்த்தமில்லை. அந்தச் சூழ்நிலையில் அவளுக்கு எது சிறந்ததோ அதைத்தான் செய்தேன். எங்களை விட்டு என் கணவன் பிரிந்தபோது, லூலா ஆன் எனக்குப் பாரமாக இருந்தாள். மிகவும் கனமான பாரம், ஆனாலும் அதை நன்றாகவே சுமந்தேன்.

ஆமாம், அவளிடம் கடுமையாக இருந்தேன். நிச்சயம் அப்படித்தான் இருந்தேன். அவளுக்குப் பன்னிரெண்டு முடிந்து பதிமூன்று நடப்பதற்குள், இன்னும் கடுமையாக இருக்கவேண்டியிருந்தது. எதிர்த்துப் பேசினாள், நான் சமைத்ததைச் சாப்பிட மறுத்தாள், முடியைச் சரிசெய்து கொண்டே இருந்தாள். நான் பின்னல்போட்டு அனுப்பினால், பள்ளிக்குப் போனதும் அதை அவிழ்த்துவிடுவாள். அவள் கெட்டுப் போகட்டும் என்று என்னால் விட்டுவிட முடியவில்லை. இதற்கு ஒரு முடிவுகட்டுவதற்காக அவளை என்னென்ன பெயர் சொல்லிக் கூப்பிடுவார்கள் என்று எச்சரித்தேன். இருந்தாலும், நான் கற்றுக்கொடுத்தவை அவளுக்குள் ஊறிவிட்டது என்று நினைக்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கிறாள் பாருங்கள்? வசதியான வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்கிறாள். அதை வெல்ல முடியுமா?

இப்போது கருவுற்றிருக்கிறாள். நல்ல முடிவு, லூலா ஆன். தாய்மை என்பது கொஞ்சுவதும் சின்னக் காலணிகளும் இடைத்துணியும் மட்டுமே என்று நீ நினைத்திருந்தால் மிகப் பெரிய அதிர்ச்சி  காத்திருக்கிறது. நீயும் பெயர் தெரியாத உன் ஆண் நண்பனோ கணவனோ ஒருநாள் மட்டுமே உறவு கொண்டவனோ, யாராக இருந்தாலும், யோசித்துப் பார். ஊஊ! ஒரு குழந்தை! கிச்சி கிச்சி கூ!

நான் சொல்வதைக் கேள். நீ பெற்றோரானதும் என்னவெல்லாம் செய்ய வேண்டும், இந்த உலகம் எப்படிப்பட்டது, எப்படி இயங்குகிறது, எப்படி மாறுகிறது என்பதைத் தெரிந்துகொள்வாய்.

நல்வாழ்த்துகள், கூடவே குழந்தைக்கு இறைவன் உதவட்டும்.

*

குறிப்புகள்:

1.முலாட்டோ – பெற்றோரில் ஒருவரை வெள்ளைக்காரராகவும் மற்றொருவரை கறுப்பினத்தவராகவும் கொண்டவர். 2. க்வாட்ரூன் – பெற்றோரில் கால் பங்கு கறுப்பினத்தவரின் இரத்தம் கொண்டவர்.

*

ஆங்கில மூலம்: https://www.newyorker.com/magazine/2015/02/09/sweetness-2