தாழப் பறக்கும் கழுகுகள் – ஹெலோன் ஹபிலா – தமிழாக்கம்: லதா அருணாச்சலம்

0 comment

அஜேகுன்லே சேரிப் பகுதிக்குள் நுழைய இரண்டு வழிகள் உள்ளன. பரபரப்பான போக்குவரத்துக்கிடையே அமைந்திருக்கும் சந்தடி மிகுந்த அங்காடித் தெருவில், ஆயத்த ஆடைகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் காட்சிப்படுத்தி வைத்திருக்கும் சிறு கடைகளைத் தாண்டி நடந்தால் அங்கிருந்து செல்லக்கூடிய முன்பக்கப் பாதை ஒன்று அல்லது அப்பாப்பா துறைமுகத் தொழிற்பேட்டையையும், சேரியையும் பிரிக்கும் அழுக்கும் கசடுகளும் தேங்கிய மலம் மிதக்கும் காயல் வழியே படகுப் பயணமாகப் பின்பக்க வழியாகவும் செல்லலாம். நீர் வழித்தடத்தில் செல்வதையே தேர்ந்தெடுத்தேன். நான் பணிபுரியும் ’வேன்கார்ட்’ செய்தித்தாள் அலுவலகத்திலிருந்து இரண்டு பேருந்து நிறுத்தங்களைக் கடந்தால் அந்தப் பாதை வந்துவிடும். இங்கே இடங்களுக்கிடையேயான தொலைவை பேருந்து நிறுத்தங்களாலேயே நாங்கள் அளப்போம். ஏனென்றால், சில வேளைகளில் பத்து நிமிடப் பேருந்துப் பயணம் ஒரு மணிநேரம் கூட எடுக்கும். இதோ, இப்போது நான் சென்றுகொண்டிருப்பதைப் போல..

நகராமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கும் பேருந்துகளால் திணறிக்கொண்டிருந்த போக்குவரத்து நெரிசலைக் காணும் போது நல்லதாக எதுவுமே நடக்கப் போவதில்லை என்பது போலத் தோன்றியது. ”கடவுளே, இந்த நெரிசலிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கரையேற்றினால் இனிமேல் பாவங்கள் ஏதும் செய்ய மாட்டேன்.”

ஒரு கையால் மக்காச்சோளக் கருதைப் பிடித்துக்கொண்டு அதைக் கொறித்தவாறும் மறுகையால் மடியிலிருக்கும் மளிகை மூட்டையை இறுகப் பற்றிக்கொண்டும் அமர்ந்திருக்கும் பருத்த உடல்வாகுடைய பெண்மணியின் இருக்கைக்கு அருகே அமர்ந்தேன். கூட்டம் பிதுங்கிய பேருந்திற்குள் அனைவரையும் வாட்டிக்கொண்டிருக்கும் தாளமுடியாத வெக்கையை சற்றும் கண்டுகொள்ளாதவள் போல அவள் தன் காரியத்தில் முனைப்பாக இருந்தாள். பயணிகள் திணிக்கப்பட்ட இந்தச் சிறிய ‘டான்ஃபோ’ பேருந்துக்குள் உடல் வியர்வை நெடி, அக்குள் வாசம், கூந்தல் தைலம், உணவுப் பண்டங்கள் வாசம் யாவும் சேர்ந்து தரும் தண்டனை போதாதென்று, தலைக்கு மேலோ, கீழோ பொருத்தப்பட்டிருந்த ஒலிவாங்கியிலிருந்து வெளியேறிய ஃபூஜி இசை செவிப்பறையைக் கிழித்துக்கொண்டிருந்தது. அப்படியே எனது கபாலத்தின் ஆழத்திலிருந்து ஒலிப்பது போல பெரும் இரைச்சல்.

நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்க, அந்தப் பெண்மணியோ என்னை நெருக்கிக்கொண்டிருந்தார். நான் உடலைக் குறுக்கிக்கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தேன். பின், தலையைத் திருப்பி ஜன்னலோரம் பார்த்ததும், சட்டென்று என் முகத்தின் மீது நடைபாதை விற்பனைப் பையனால் வீசியெறியப்பட்ட தண்ணீர் நிரப்பிய சிறு நெகிழிப் பை என் பார்வையை மறைத்தது. இறைச்சித் திண்பண்டம் விற்கும் நோஞ்சான் சிறுமி ஒருத்தி அவனைத் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து தன் கையிலுள்ள பண்டத்தை ஜன்னல் வழியே திணிக்க முயற்சி செய்தாள்.

“புத்தம் புது காலா வாங்கிக் கொள்ளுங்கள் முதலாளி.. இப்போதுதான் சமைக்கப்பட்டது, வாங்கிப் பாருங்கள்”. அந்தச் சிறுமி வலியுறுத்தினாள். அந்த இரு நடைபாதை விற்பனையாளர்களும் ஒரு பேருந்துக்கும் மற்றொன்றுக்குமிடையே இடுங்கி நின்றுகொண்டு ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டியிடுகையில், எந்தக் கணத்திலும் பேருந்துகள் நகர்ந்து ஒன்றோடொன்று நெருங்கும் போது அவர்களை நசுக்கிவிடும் எனத் தோன்றியது. ஆனால் அந்தக் கணம் நிகழவேயில்லை. அது அவர்கள் அலுவலின் சாதாரணமான  மற்றுமொரு நாளே.. இரு பேருந்துகளுக்கான இடைவெளிகளும், சாலைக்கும் நடைமேடைக்கும் இடையேயான கல்தடுப்பு விளிம்புகளும் அந்தச் சிறு வியாபாரிகளால் உயிர்த்திருந்தன. இளைஞர்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் என விற்பனையாளர்கள் யாவரும் கைக்கடிகாரங்களையும், சிகரெட்டுகளையும், வேர்க்கடலைகளையும், தூய்மையான குடிநீர் எனக் கூறப்படும் நெகிழிப்பையில் நிரப்பப்பட்ட நீரையும் கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள். அந்தத் தூய்மையான குடிநீரென்பது, பெரும்பாலும் குளியலறையின் துருவேறிய குழாய்களில் பிடித்து, நெகிழிப் பைகளில் அடைத்து கொண்டுவரப்பட்டு, களைப்பிலும் தாகத்திலும் இருக்கும் பயணிகளுக்கு இந்தச் சிறு பெண்களால் விற்கப்படுகிறது.

காலா விற்கும் சிறுமி ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும்? பத்து, இருபது, முப்பது அல்லது நூறு நைரா? ம்ம், சிறப்பான விற்பனை நாளாக இருக்கும் பட்சத்தில் இறுநூறு நைரா வருமானம் பார்க்கலாம். அதையும் கொண்டுபோய் அவளைப் போன்ற சிறுமிகளின் படையையே பணிக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிக்குக் கொடுத்துவிட வேண்டும். அதில் பத்து சதவீதத் தொகையை அவர்கள் கையில் எடுத்துச்செல்ல முடியும். அதாவது இருபது நைரா. மாதத்திற்கு சுமார் இருநூறு கிடைக்கலாம். புக்கா உணவகத்தில் விற்கப்படும் மிக மலிவான ஒருவேளை உணவின் விலை முப்பத்தைந்து நைரா இருக்கும். அந்தப் பெண் எப்படி சமாளித்து வாழ்கிறாள்? சாத்தியமே இல்லை! அவளுடைய சகோதரர்களும், சகோதரிகளும் அதே அளவு பங்கும், அவர்கள் தாய், தான் நடத்திக்கொண்டிருக்கும் புக்காவிலிருந்து அதைவிட இரு மடங்கும், ஓட்டுனர் வேலையில் கிடைக்கும் அதைப் போன்ற மூன்று மடங்கு தொகையைக் கொண்டுவரும் தந்தையின் பங்கையும் சேர்த்துப் பார்த்தால் வாழ்க்கை சற்றே சாத்தியம் போலத்தான் தெரிகிறது.

அந்தக் குழந்தைகளுக்கு புதிய காலணிகள் கிடையாது, புதிய ஆடைகள் கிடையாது, பள்ளி என்ற பேச்சே இல்லை – ஒருவேளை – ஆரம்பப் பள்ளி இருக்கலாம். ஏனென்றால் பெரும்பாலும் கட்டணமில்லா இலவசக் கல்விக்கு அங்கு வாய்ப்புள்ளது. ஆனால், காலா விற்பனையை விடுத்திருக்கும் ஒவ்வொரு நாளும் வருமானமற்ற நாளே – சர்வநிச்சயமாக பல்கலைக்கழகக் கல்வி இல்லை.

“பெண்ணே, ஒரு காலா கொடு”. அந்தப் பெண்ணை நோக்கி சத்தமாகக் கேட்டேன். அதை வாங்கி நான் சாப்பிடப் போவதில்லை. ஆனால் நான் வாங்குவதால் அவளுடைய வருமானத்திற்கு சிறு அளவாவது என்னால் பங்களிக்க முடியும்.

இந்தக் குழந்தைகளுக்கு என்ன நம்பிக்கை இருக்கப் போகிறது? நான் அஜேகுன்லே செல்லும் காரணங்களில் இதுவும் ஒன்று. அது லாகோஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மாபெரும் சேரிப் பகுதி, ஆப்பிரிக்காவிலேயே கூடப் பெரிதாக இருக்கலாம்.

*

இன்று காலை நாளிதழாசிரியர் தன் அலுவலகத்திற்கு அழைத்து, இதழின் இந்த முக்கியப் பணியை எடுத்துச் செய்யும் மனநிலை உனக்கு இருக்கிறதா என்று கேட்ட போது, ’ஆமாம், இருக்கிறது’ என்று சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லைதான். ஏனென்றால், இன்று எனது பணியின் இறுதி நாள். நான் பணியிலிருந்து விலகுகிறேன். அடுத்த நிலைக்குச் செல்கிறேன், வாழ்வை மறுசீரமைக்கப் போகிறேன்.. என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். எனக்கு வயதாகவில்லை. உண்மை என்னவென்றால் நான் மிகவும் சலிப்படைந்து விட்டேன். அதனால், வாழ்வில் வேறு ஏதாவது மாற்றிச் செய்ய விரும்புகிறேன், அது என்னவென்று எனக்கே இன்னும் தெரியவில்லை. இந்த ஆண்டு ஓய்வாக அமர்ந்து, அடுத்து செய்யப்போவதைச் சிந்திக்கப் போகிறேன். எனது கைவசம் சில திட்டங்கள் இருந்தாலும் தற்சமயம் எதுவுமே உறுதியாக இல்லை.

“பஸுஸு (Buzuzu) வழக்கு பற்றிய கட்டுரை. நீ அவனுடைய மிகப் பெரிய விசிறி என்று எனக்குத் தெரியும். நீ இங்கு பணியில் சேர்ந்த போது முதன் முதலாக அவனுடைய கதையைத்தான் எழுதினாய். அது உன்னுடைய மிகச் சிறந்த பணிகளுள் ஒன்று எனக் கருதுகிறேன். இன்னொரு நீண்ட கட்டுரை ஏன் எழுதக் கூடாது? அவன் என்னவாக இருந்தான், புகழை நோக்கிச் செல்வதென்பது எப்படி பட்டது, ஒன்றின் மீது மாறாத நம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருப்பதென்றால் என்ன என்பதைப் பற்றியெல்லாம் எழுதலாமே? இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அவற்றைப் பற்றிய கருத்தே இல்லை.”

உடனே, ’சரி,செய்து தருகிறேன்’ என்று கூறி விட்டேன். துவக்கத்தில் தயக்கமாக இருந்தாலும், அதன் பின் ஆர்வம் தழைத்து விட்டது. அதில் மனதுக்குத் திருப்தியான ஒரு சமச்சீர் தன்மை இருந்தது. அதே மனிதனைப் பற்றிய படைப்பிலிருந்தே துவங்கிய எனது பத்திரிகைத் துறையின் பணி இன்று அதிலேயே நிறைவடையப் போகிறது. எனக்கு பஸுஸுவை நன்கு தெரியும். என்னைப் போலவே அவனது இறப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் பலரும் அவன் யாராக இருந்தான், என்னவாக இருந்தான் என்பதைப் பற்றி அறிவார்கள். ஆனால் நான் சொல்லும் பொருளில், அவனைத் தெரியும் என்று கூறுபவர்கள் அதிகம் பேர் இல்லை. ஒரு மாதத்திற்கு முன் நிகழ்ந்த அவனுடைய மரணம் அஜேகுன்லேவில் மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டியது. அவனைப் போன்ற மகத்தான விளையாட்டு வீரன், ஏதோ ஒரு கால்பந்து தொடர்பான சாதாரண வாக்குவாதத்தில் தெருவில் வைத்துக் கொல்லப்பட்டான்.

செல்ஸி அணிக்கும் ஆர்ஸனல் அணிக்கும் இடையிலான பந்தயமா அல்லது மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் மான்செஸ்டர் சிட்டி அணிக்கும் இடையிலான போட்டியைப் பற்றியதா அது? அதே விளையாட்டு வீரர்கள் அவ்வப்போது அணி மாறித் தலைகாட்டிக் கொண்டிருக்கையில் யாருக்குத் தெரியும் எந்த அணியென்று? அவர்கள் அனைவருமே அமெரிக்காவின், ரஷ்யாவின், மத்திய கிழக்கு நாடுகளின் பண முதலைகளுக்குச் சொந்தமான வர்த்தகக் குறியீடுகள். விளையாட்டு வீரர்கள் அணியும் பனியன்கள், பயன்படுத்தும்  காலணிகள், உண்ணும் இனிப்புப் பண்டங்கள், சவரம் செய்யும் கிரீம் என அவர்கள்  நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருட்களையும் சற்றும் யோசிக்காமல் வாங்கும் அவர்களது நுகர்வோர் மட்டுமே நாம். அதை உணர்ந்துகொண்டதால் தான் இந்தப் பணியிலிருந்து நீங்கிச் செல்கிறேன். எனக்கு விளையாட்டின் மீதிருந்த நம்பிக்கை போய் விட்டது. அதைப் பற்றி இனிமேல் எழுத விருப்பமில்லை. ஆனால் பஸுஸூ மட்டும் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன்.

பேருந்திலிருந்து இறங்கி, காயல் நீர் வழிப்பாதையை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். அதன் மறுகரையில் அஜேகுன்லே இருக்கிறது. பாதையெங்கும் உபயோகித்து எறியப்பட்ட நெகிழிப் பைகள் இறைந்து கிடந்தன. திறந்திருந்த சில நெகிழிப்பைகளிலிருந்து மனிதக் கழிவுகள் போலத் தோற்றமளிப்பவை எட்டிப் பார்த்தன. அந்தக் குப்பைகளுக்கும், எண்ணெய்க் கசடுகள் மிதக்கும் மழைத் தண்ணீர் தேங்கிய குட்டைகளுக்கும் நடுவில் கைவிடப்பட்ட உடைந்த ஓடங்களுக்கருகே அமர்ந்து சில ஆண்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். ஒரு மரத்தடியில் ஒகோகோரொ பானம் விற்றுக்கொண்டிருந்த பெண், எந்த நிமிடத்திலும் போதையில் தடுமாறி சேற்றில் விழுந்துவிடும் நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்த இரு ஆண்களின் கீழ்த்தரமான நகைச்சுவைப் பேச்சுக்கு வலிந்து சிரித்துக்கொண்டிருந்தாள். அங்கிருந்த சிறிய படகுத் துறையிலிருந்த ஒரு படகில் மற்ற பதினைந்து பேருடன் ஒருவனாக நானும் ஏறி, மெதுவாக எதிர்க்கரையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தேன். அங்கு சென்றவுடன் நான் தொடர்புகொள்ள வேண்டிய நபர் டாகா டோலு, உள்ளூர் முக்கிய சமூக செயற்பாட்டாளர், பேருந்து வந்தவுடன் என்னைச் சந்தித்து அழைத்துச் செல்லவேண்டியவன். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே நான் வந்துவிட்டேன். எனது கைவசம் முப்பது நிமிடங்கள் இருந்ததால் சற்றுநேரம் நடக்கலாமென்று முடிவெடுத்தேன்.

பாதையின் ஓரங்கள் முழுவதும் குப்பைகளால் ஒதுக்கப்பட்டிருந்த தெருவுக்குள் சென்றேன். பெரும்பாலான இடங்கள் இந்த வேளையில் ஆளரவமற்று வெறிச்சோடியிருந்தன. விரைவில் அந்தப் பகுதியின் சமூகக் கால்பந்து மைதானத்தை அடைந்துவிடுவேன். அதை மரக்கானா விளையாட்டுத் திடல் என்று அழைப்பார்கள். செவ்வக நிலம், நூறு மீட்டர் நீளமும் அறுபது மீட்டர் அகலமும், இரு பக்கமும் இரண்டு கோல் கம்பங்களும் கொண்டது. வேலி ஏதும் போடப்படாமல், இப்போது பராமரிப்புமின்றி, காலியாக இருந்தது. அஜேகுன்லேயின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் குப்பை கூளங்கள் விரவிக் கிடந்தன.

பல வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக பஸுஸுவைப் பேட்டியெடுத்து அவனது கதையைப் பற்றி எழுத வந்தது எனது நினைவின் ஆழத்திலிருந்து மேலெழும்பியது. அப்போது டாகா டோலா இதே விளையாட்டு மைதானத்திற்கு என்னை அழைத்து வந்து, ’இதோ பார்! இதுதான் அஜேகுன்லேவின் மரக்கானா!‘ என்று சொன்னார். இப்போது போலவே அன்றும் பார்ப்பதற்கு அதிகமாக எதுவுமில்லை. தொலைவில் மனம் பிறழ்ந்த ஒருவர் புகை பிடித்துக்கொண்டே சுவரைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார். அதைவிடத் தொலைவில், தண்ணீருக்கு மேல் மேடை போன்ற  ஏதோ ஒரு அமைப்பு தொங்கிக்கொண்டிருந்தது. நீர்நிலை ஓரத்தில் ஒரு நபர் மலம் கழித்துக்கொண்டிருந்தார். பக்கத்தில், விளக்குக் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஏணியில் நின்று, மின் இணைப்புக் கம்பிகளில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார் இன்னொரு நபர். ஒருவேளை, மின் கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட இணைப்பை மீண்டும் இணைக்க முயற்சி செய்துகொண்டிருக்கலாம்.

“இந்த விளையாட்டு மைதானம்தான் எங்கள் கனவும் நம்பிக்கையும்”.

நாற்பத்து இரண்டு வயது டாகா டோலா, தனது வாழ்வைப் பெரும்பாலும் இந்தப் பகுதியிலேயே கழித்தவர். அவர் ஒரு கவிஞர். குடியாட்சியின் சார்புடைய கொள்கைகளுக்கு ஆதரவாளர். இராணுவ ஆட்சியிலும், மக்களாட்சியிலும் பல போராட்டங்களையும் கலகங்களையும் முன்னின்று நடத்தியவர், நடத்திக்கொண்டிருப்பவர்.

“அஜேகுன்லே நிறைய மாற்றங்களை சந்தித்து விட்டது. எங்களது முக்கியத் தொழில் இதோ, இந்தக் காயல் கழிமுகத்தில் மீன் பிடிப்பதுதான். ஆனால், இப்போது எதுவுமே மிஞ்சவில்லை”.

“இங்குள்ளவர்களின் வாழ்வாதரம் என்ன?” நான் கேட்டேன்

”சாலையிலிருந்து இந்த இடத்திற்கு நாம் வந்து சேரும் வரை வழியில் ஏழு தேவாலயங்களையும், இரண்டு மசூதிகளையும் நாம் கடந்து வந்ததை கவனித்துப் பார்த்தாயா? ஆக, மதம்தான் இந்த இடத்தின் பெரிய தொழில். லாகோஸின் மற்ற பகுதிகளைப் போலவே..”

”நான் தேவாலயங்களையும் மசூதிகளையும் கவனிக்கவில்லை. ஏனென்றால் அவை யாவுமே மக்கள் வசிக்கும் வீடுகள் போலவே இருக்கின்றன”.

குப்பைகள் இறைந்து கிடந்த, பாதிமண்  நீருக்கடியிலுமிருந்த கால்பந்து களத்தை நோக்கி, ”இதுதான்.. இங்குதான் அஜேகுன்லே இளைஞர்களின் உண்மையான நம்பிக்கை உள்ளது” என்றார்.

அங்கு எதிரெதிர் மன்றத்தினருக்கு உடைமையான இரண்டு கால்பந்து களங்கள் இருந்தன. அதில் அதிகப் பிரபலமானது மரக்கானா. கால்பந்து அணிகள் மட்டுமே அஜேகுன்லே இளைஞர்களுக்கான ஒழுங்கான முறையில் இயங்கும் அமைப்பாக இருக்கிறது எனலாம். ஏதேனும் ஒரு மன்றத்தின் உறுப்பினராவதென்றால் அவற்றை நடத்தும் மேலாளர்களிடம் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவர்கள் சிலவேளைகளில் தங்கள் உறுப்பினர்களை பெரிய புகழ்பெற்ற மன்றங்களுடன் தொடர்புகொள்ள வைப்பார்கள். அதில் சில வெளிநாட்டு மன்றங்களாகவும் இருக்கும். நைஜீரியாவின் முன்னாள் தேசிய கோல்கீப்பர் ‘டரிபோ வெஸ்ட்’ இங்குள்ள ஒரு களத்தில்தான் தனது வளர்ச்சியைத் துவங்கினார் என்று சொல்லப்படுகிறது.

இன்று அந்தக் களத்தில் தன்னந்தனியாக நிற்கிறேன். புழுதி மண்டி, மேடும் பள்ளமுமாக இருக்கும் இந்த மைதானம் எப்படி எண்ணற்ற கனவுகளையும் நம்பிக்கைகளையும் பேணி வளர்க்க முடியும் என்று எனக்கு வியப்பாக இருந்தது. இந்தத் திடலில் வந்து சேரும் கனவுகள், கான்கிரீட் தளத்தில் விழுந்த முட்டை போல உடைந்து போய்விடும் அல்லவா? ஒரு கோல் கம்பத்திலிருந்து இன்னொரு கோல் கம்பத்திற்கான தூரம் வரை நடந்து சென்றேன். மைதானத்தின் நடுவே இருக்கும் சிறிய வட்டத்திற்குள் நின்றேன். இங்கிருந்துதான் எல்லாமே துவங்குகிறது. ஆட்டத்தின் முதல் விசில் ஒலி. கண்களை மூடிக்கொண்ட பின் எங்கேயோ வெகுதொலைவுக்கு சென்றிருந்தேன். மீண்டும் என்னுடைய இளம் பிராயத்திற்குத் திரும்பியிருந்தேன். இரண்டு அண்டை ஊர்களுக்கிடையேயான போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கும் திரளான பார்வையாளர்கள்  என்னைச் சுற்றிலும் இருந்தனர். எந்தக் காரணம் கொண்டும் நான் இந்தக் கால்பந்தாட்ட மைதானத்திற்குப் போகக் கூடாது என்று என் அம்மா கடும் எச்சரிக்கை செய்திருந்தார்.

பக்கத்து ஊர் கால்பந்து மன்றம் வன்முறைக்குப் பெயர் போனது. எங்கள் பக்கத்து ஊர் ’சூப்பர் ஜெட்ஸ்’ அணி எங்களை விட மூத்த சகோதரர்களால் துவங்கப்பட்டது. கோந்து போட்டு ஒட்டி, அதன் மேல் தையல் போடப்பட்டு இணைத்த கந்தலான பந்துடன், காலணிகள் கூட இல்லாமல் வெறுங்காலுடன் அவர்கள் விளையாடினார்கள். இவற்றையெல்லாம் கவனித்த ஒரு அரசியல்வாதி, அவர்களுக்கு கால்பந்து வாங்கிக் கொடுத்ததோடு மன்றத்தையும் பதிவுசெய்து, அதன் பெயரை மாற்றி, அதற்கு தனது பெயரையே சூட்டிக்கொண்டார். அவர் தேர்தலில் தோற்றுப் போனார். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல அது வேறொரு கதை. இங்கு தேவையில்லை.

அந்தக் கால்பந்து மன்றம், அதன் அங்கத்தினரின் விளையாடும் திறமையை விட, கொலை செய்யக்கூடிய அளவு நடக்கக்கூடிய வன்முறைச் செயல்களுக்கே முதலில் பிரபலமாக அறியப்பட்டது. எந்த விளையாட்டு வீரனும்  மஞ்சள் சீட்டு கொடுக்கப்பட்டவுடன் பந்தை எடுத்து நடுவருக்கு ஒரு குத்து விடாமல் மைதானத்தை விட்டு வெளியேறியதாக வரலாறு இல்லை. கால்பந்து விளையாட்டு பற்றிய ஞானத்தை விடவும் அவர்களது முரட்டுத்தனத்தின் வன்மைக்காகவே நடுவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். எப்போதும் எல்லைக்கோட்டுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக நின்றுகொண்டுதான் ஆட்ட முடிவுக்கான விசிலை நடுவர் ஊதுவார். அப்போதுதான் தோல்வியுற்ற அணி தன்னை அணுகும் முன் வேகமாக  ஓடி அங்கிருந்து மோட்டார் பைக்கில் தப்பியோட ஏதுவாகவும் அல்லது பக்கத்திலுள்ள ஏதேனும் ஒரு வீட்டில் புகுந்துகொள்ள வசதியாகவும் இருக்கும்.

அன்று நகரின் இரு சிறப்பான அணிகள் மோதுகின்றன. நாளின் வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்கிறது. இரு பாதி விளையாட்டிலும் தலா பதினைந்து நிமிடங்கள் என மேலும் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டு விறுவிறுப்பான போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அது ஒரு இறுதிப் போட்டி போலவே இருந்தது. பெனால்ட்டிக்குள் நுழைய நேரிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். பார்வையாளர்கள் கூட்டம்  தள்ளிக்கொண்டும், கத்திக்கொண்டும் கட்டுப்பாடின்றி இருக்க, அதில் ஏறக்குறைய பாதி நபர்கள் மைதானத்தில் இறங்கி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அதன்பின், அந்தக் கடைசி நிமிடத்தில் கார்னர் கிக் வழங்கப்பட்டது. பந்து உதைக்கப்பட்டு, துல்லியமாகச் சுழன்று மேலே எழும்பி, வேகம் குறைந்து சரியான கோணத்தில் கீழே இறங்க, தலையால் தட்டி அதை வலைக்குள் செலுத்தும் நோக்கத்துடன் விளையாட்டு வீரர்கள் குதிக்க யத்தனிக்கும் போது, பெனால்டி பகுதியிலிருந்து ஏறக்குறைய வெளியேறப் போன பந்தை – அற்புதமான பைசைக்கிள் கிக் எடுத்து, அதன் பாதையின் போக்கை மாற்றி மீண்டும் வலைக்குள் விழ வைத்தான் ஒரு விளையாட்டு வீரன். அது மிக அழகாக நிகழ்ந்தது. அதன்பின் நடந்த சண்டை அசிங்கமானதுதான்.. ஆனால், அந்த கோல், அந்த ஆட்டம், மங்கிக்கொண்டிருந்த வெளிச்சம், வெறித்தனமாக கரகோஷம் எழுப்பும் முன் நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களின் அமைதி – அழகு!

”பஸுஸு! பஸுஸு!

நான் அவனைப் பார்த்தேன்.. மெலிவான தோற்றமுடைய இளைஞன். தன்னை தலைக்கு மேல்  உயரமாகத் தூக்கியிருந்தவர்களின் வியப்பிற்கு சற்றும் குறையாத வியப்பு அவன் முகத்திலும் படர்ந்திருந்தது.

நான் இதுவரை பார்த்த விளையாட்டுப் பயிற்சியிலேயே இதுதான் மிக அற்புதமானது. கொலம்பியா நாட்டு கோல்கீப்பர் ரெனி இகுட்டாவின் புகழ்பெற்ற ஸ்கார்ப்பியன் கிக் ஆட்டத்திற்கு  இணையான அழகுகொண்டது. நாளிதழ் பணியில் சேர்ந்ததும் நான் எழுதிய அந்தக் கட்டுரையில் அந்த நாள்முதல் நான் பஸுஸுவின் விசிறி ஆகி விட்டேன் எனக் குறிப்பிட்டிருந்தேன். அவனது ஆட்டத்தின் அந்த ஒரு செயல் பந்தின் போக்கை எப்படி திசை மாற்றியதோ, அதே போல எனது வாழ்க்கையையும் திசை மாற்றியது. ஆம், அதிலிருந்துதான் நான் விளையாட்டைப் பற்றி எழுதும் கட்டுரையாளனாக மாறினேன்.

*

ஜன்னல்கள் இல்லாத டாகா டோலாவின் சிறிய அலுவலம் தெருவைப் பார்த்தவாறு அமைந்திருந்தது. அவர் மெய்ப்பு செய்து, தொகுத்து வைத்திருக்கும் தொழிலாளர்களின் செய்தி அறிக்கையின் பிரதிகள் மேசையின் ஓரத்தில் இருந்தன. அதிலிருந்து ஒரு பிரதியை எடுத்து எனக்குக் கொடுத்தார்.

“உங்களுக்கு வேலை அதிகம், என்னிடம் பேசுவதற்காக  நேரம் ஒதுக்கியதற்கு மிகவும் நன்றி. அந்த வன்முறையைப் பற்றி மேலும் விவரங்கள் சொல்லுங்கள்”.

தோளைக் குலுக்கினார். அவருடைய நீண்ட பின்னல் ஜடைகள் அசைந்து தோளைச் சுற்றிப் புரண்டன. அந்த அலுவலகம் இருவர் அமர மிகவும் அடைசலாக இருந்ததால் நாற்காலியை இழுத்து வாசல் பக்கம் போட்டு அமர்ந்துகொண்டோம்.

“மக்களுக்கு பாதுகாப்பு, பணம், நீதி எதுவும் கிடைக்காத போது தங்கள் நம்பிக்கையை மற்ற ஏதோவொன்றின் மீது வைக்கத் தலைப்படுகிறார்கள். மதம் போல அல்லது கால்பந்து போல.. எங்களைப் பொருத்தவரை கால்பந்தென்பது மக்கள் பொழுதுபோக்குக்காகப் பார்க்கும் விளையாட்டு அல்ல. அதுதான் இங்கு எல்லாமே. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது கால்பந்து விளையாட்டென்பது, சொந்தமாக மன்றம் அமைத்து நடத்திக்கொண்டிருக்கும் மேலாளர்களால், ஒரு வளரும் தொழிலாக உருவாகி உள்ளது. அவர்கள் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பயிற்சி கொடுப்பதோடு ஏதேனும் ஒரு ஐரோப்பியக் கால்பந்து அணியில் இணைத்துவிடும் நம்பிக்கையையும் தருகிறார்கள். அஜேகுன்லேவின் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் ஐரோப்பா சென்று விளையாட விரும்புகிறார்கள். அடுத்த ஓபி மைக்கேல், அடுத்த கானு நுவான்கோ, அடுத்த ஒக்கோச்சா போல வர விரும்புகிறார்கள். ஐரோப்பிய லீக் போட்டிகளைத் தொலைக்காட்சிகளில் பார்க்கிறார்கள். காட்சி மையத்திற்குச் சென்று கால்பந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக இந்த இளைஞர்கள் வார இறுதியில் எப்படியோ நூறு அல்லது நூற்றைம்பது நைரா திரட்டி விடுகிறார்கள்“.

“அவர்கள் தங்கள் வீட்டில் ஏன் பார்ப்பதில்லை?”

”அவர்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்காது. அப்படியே இருந்தாலும் மின்சாரம் இருக்காது. அது போக, தங்கள் அணி உறுப்பினர்களுடன் சேர்ந்து பார்ப்பது அதிக உற்சாகம் தரும்”.

இது போன்ற காட்சி மையங்களுக்கு நான் பலமுறை சென்றிருக்கிறேன். பொதுவாக ஒரு சின்னக் கொட்டகை அல்லது வீட்டின் வரவேற்பறையின் மேசை மீது தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து, பார்வையாளர்கள் அமர, சில நாற்காலிகளும் பெஞ்சும் போடப்பட்டிருக்கும். வாயில் கதவருகில் ஒரு நபர்  நின்று பணம் வசூல் செய்துகொண்டிருப்பார். மின் இணைப்பு தருவதற்காக வீட்டின் பின்புறம் ஒரு ஜெனெரேட்டர் இருக்கும்.

“பெரும்பாலான இளைஞர்களுக்கு கால்பந்துதான் தொழில். அடுத்த ஆர்சனல் அணியின் போட்டியையோ, செல்ஸி அணியின் விளையாட்டையோ பார்க்காமல் அவர்களால் வாழ முடியாது. வார இறுதியில் ஏதேனும் பெரிய போட்டி நடக்கையில் நீங்கள் இங்கு வந்து பார்க்க வேண்டும். தெருவே அடைந்து கிடக்கும். இளைஞர்கள் அவரவர் அணியின் வண்ண ஜெர்சியை அணிந்துகொண்டு வர, இந்த இடம் திருவிழா போல இருக்கும்”.

பஸுஸு சொந்தமாக ஒரு காட்சி மையம் வைத்திருந்தார். அவருடைய மையத்தில் இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. அது 2012ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி, ஜெர்மனியின் பயேர்ன் ம்யூனிக் அணியும் இங்கிலாந்தின் செல்ஸி அணியும் ம்யூனிக் நகரின் அலையன்ஸ் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தன. அது UEFA ஐரோப்பிய கால்பந்துக் கழகம் நடத்தும் இறுதிச்சுற்றுப் போட்டி. யாரோ ஒருவர் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் ஆட்டம் பெனால்ட்டி சுற்றுக்கு வந்து செல்ஸி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போலீஸார் வந்து விட்டார்கள். ஒரு இளைஞனை அவர்கள் பிடித்துச் சென்ற போது பஸுஸு தலையிட்டு சமாதானம் பேச முயன்றான். அப்போதுதான் துப்பாக்கியால் சுடப்பட்டான். அவனுடைய வீட்டின் முன்னாலேயே தெருவில் விழுந்து இறந்து போனான் பஸுஸு. அவன் மனைவி ஓடிவந்து அவனுடைய உடலின் மீது விழுந்து கதறினாள்.

*

அந்த பைசைக்கிள் கிக், அந்த கோலுக்கு பிறகு லாகோஸின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியால் அவன் வாங்கப்பட்டதும், அடுத்த கட்டமாக வெளிநாட்டு அணியினராலும் எடுத்துக் கொள்ளப்பட்டதும் குறுகிய காலத்தில் நடந்தேறியது என்பது எங்களுக்குத் தெரியும். மாநிலக் குழுவோடு மாநிலத் தலைநகருக்கு ரயிலில் பயணமானான். அதற்கடுத்த ஆண்டில், மாநில இளையோர் அணியான ‘கோல்டன் ஈகிள்ஸ்’ பயிற்சி முகாமிற்கு அவன் அழைக்கப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்ட போது அவனுடைய வயது 17. அன்றைய தினம் எங்கள் சிறிய ஊர் அதுவரை காணாத அளவு கொண்டாட்டமாக இருந்தது. எங்களை, எங்கள் ஊரை உலக வரைபடத்தில் அவன் காண வைத்தான். எங்கள் பிரதிநிதி அவன். நாங்கள் எப்படியானவர்கள் என்று உலகத்துக்குக் காட்டினான் அவன்.

*

அலுவலகத்தில் எனது கூண்டில் அமர்ந்து மேசை இழுப்பறைகளைக் காலி செய்யத் துவங்கினேன். மன அடுக்கில் தூசி படிந்திருந்து மங்கிப் போன நினைவுகள் அஜேகுன்லே பயணத்தால் தெளிவாகத் துலங்கின. நான் வளர்ந்த சிறு நகரத்தையும், அதிலிருந்து எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அதை விட்டு நீங்கி வந்ததையும் நினைத்துக்கொண்டேன். பஸுஸுதான் முதலில் விட்டுச் சென்றான். 1996ஆம் வருடம் அமெரிக்காவின் அட்லாண்ட்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளச் சென்றான். அவனுடைய தந்தையின் வீட்டில், இப்போது காட்சி மையத்தில் போட்டிருந்தது போன்ற பெஞ்சில் அமர்ந்து எல்லோருமே போட்டிகளைப் பார்த்தார்கள். நகர் முழுவதும் அங்கே கூடி அமர்ந்து, எப்போதெல்லாம் ஒளிப்படக் கருவி – தன்னை ஆட அழைப்பதற்காக காத்திருக்கும் – அவனைக் காண்பிக்கிறதோ அப்போதெல்லாம் ஆரவாரத்துடன் கூக்குரல் எழுப்புவோம்.

எங்கள் நாடு ஸ்பெயினை தோற்கடித்த போதும் அவன் ஆட வருவான் எனக் காத்திருந்தோம். அதன்பின் பிரேஸிலைத் தோற்கடித்த போதும் அவன் வரவுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். ஒலிம்பிக்ஸ் முடிந்து, நைஜீரியா தனது முதல் ஒலிம்பிக் கால்பந்துக் கோப்பையை வென்ற போதும், அதில் பஸுஸு சிறிதுகூடப் பங்களிக்காத நிலையிலும் நாங்கள் உற்சாகக் கூவலை நிறுத்தவில்லை. அவன் ஒலிம்பிக் போட்டியின் வெண்ணிறப் பயிற்சி ஆடையில் தனது விலையுயர்ந்த காரில் வீட்டுக்கு வந்தபோதும் ஒட்டுமொத்த நகரமும் அவன் வீட்டின்முன் கூடிநின்று அவன் வருகைக்காவும் அவனுடன் கை குலுக்குவதற்காகவும் காத்துக்கொண்டிருந்தோம்.

அதன்பின் அவன் எங்கள் பார்வையிலிருந்து மறைந்து போனான். அவன் ஐரோப்பாவில் அஜாஸ் அல்லது நப்போலி அல்லது ரியல் மேட்ரிட் கால்பந்து அணிகளில் இருப்பதாகச் சொன்னார்கள். பின் ஒரு முறை ஆப்பிரிக்கக் கால்பந்து அணிகளின் கோப்பைக்காக எகிப்து நாட்டின் ஸாமிலெக் அணியில் விளையாடிக்கொண்டிருந்ததைத் தொலைக்காட்சியில் கண்டோம். அதன்பின், பல ஆண்டுகள் கழித்து ASEK மிமோஸா அணிக்காக கோதிவாரில் (Cote D’Ivoire) விளையாடியதைப் பார்த்தோம். அதன்பின் நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மூழ்கிவிட்ட போதும், அதில்  எங்களுடைய தனிப்பட்ட சந்திப்புகளும் விடைபெறுதல்களும் நிகழ்ந்துகொண்டிருந்த போதும்  நாங்கள் செய்திகள் பார்ப்போம். ஐரோப்பிய அணிகளில் அவன் பெயர் கேட்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்போம்.

நாங்கள் பயணம் செய்தோம், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றோம், திருமணம் செய்துகொண்டோம், விவாகரத்துப் பெற்றோம். அதில் சிலர், (நான் இல்லை) மீண்டும் திருமணம் செய்துகொண்டோம், இருப்பினும், பஸுஸோ பெரிய லீக் போட்டிகளில் விளையாடக் காத்திருந்தோம். ஆனால் அவன் தொலைக்காட்சித் திரைகளிலும் வருவதில்லை. அவனது இருப்பிடத்தைப் பற்றிய வதந்திகளே அதிகம் உலவின. சிலர் அவன் இன்னும் அபித்ஜானில் வசிப்பதாகவும், விளையாட்டுப் பயிற்சியாளராக இருக்கிறான் என்றும் கூறினார்கள். அவன் இறந்துவிட்டதாகவும் சிலர் கூறினார்கள். அவன் ’காணா’ நாட்டிற்கு குடிபெயர்ந்ததாகவும் அங்கே ஒரு கால்பந்து பயிற்சி மையத்தின் உரிமையாளனாக இருக்கினானென்றும் கூறினார்கள்.

அதன்பின் நான் லாகோஸ் வந்து வேன்கார்டு பத்திரிகையில் விளையாட்டுப் பகுதி எழுதும் கட்டுரையாளர் ஆனேன். ஐரோப்பியக் கால்பந்து அணிகளின் பாதிப்பால் உள்ளூர் கால்பந்து மன்றங்கள் எவ்வாறு நலிந்துகொண்டிருக்கின்றன என்னும் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கையில் அதன் ஒரு பாகமாகப் பெருகிக்கொண்டிருக்கும் கால்பந்து காட்சி மையங்களைப் பற்றி விவரங்கள் சேகரிக்க அஜேகுன்லே சென்றேன். அப்போதும் நான் தொடர்புகொண்ட டாகா டோலா, காட்சி மையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன எனவும், எப்படி இருக்கும் எனவும் நான் அறிந்துகொள்ள சில மையங்களுக்கு என்னை அழைத்துச் செல்ல முன்வந்தார்.

முதலில் நாங்கள் சென்றது, மற்ற மையங்கள் போலவே தொலைக்காட்சியும், பெஞ்சும், நாற்காலிகளும் போடப்பட்ட குறுகிய அறையாக இருந்தது. அறை மூலையில் இருந்த மேடையில் உரிமையாளரின் மனைவி குளிர்பானங்களும் உணவும் விற்றுக்கொண்டிருந்தார். நாங்கள் அமர்ந்திருக்க, எங்களைக் காண அதன் உரிமையாளர் வந்தார். பஸுஸு! இப்போது அவன் பருமனாக இருந்த போதிலும், என் ஞாபகத்திலிருந்ததை விட குள்ளமாகத் தெரிந்த போதிலும், அவன் சருமம் கறுத்து சொரசொரப்பாக இருப்பினும், என்னால் உடனடியாக அடையாளம் காண முடிந்தது. ஆனால், அவனால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இங்கே, அஜேகுன்லேவிற்கு எப்படி வந்து சேர்ந்தான் என்று எனக்கு வியப்பாக இருந்தது. அவனிடம் பல கேள்விகள் கேட்க விரும்பினேன். அந்த பைசைக்கிள் கிக் நாளிலிருந்து இன்று வரை அவன் வாழ்வில் நடந்தது என்ன? அன்றிலிருந்து இன்று வரை… A – B இரண்டுக்குமிடையில் நடந்தவற்றைப் பற்றி.. ஆனால் நான் அதைக் கேட்காமல் மிகத் தட்டையான கேள்விகள் கேட்டேன். அவன் மிக மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். அவ்வப்போது நாங்கள் அருந்திக்கொண்டிருந்த பானம் தீர்ந்துபோனதும் அதை  நிரப்ப வந்த மனைவியைப் பார்க்கையில் கண்களில் ஒளி மின்ன,  கைகளை நீட்டி வாஞ்சையுடன் அவளைத் தொட்டான். அவள் திருப்பிப் புன்னகைத்து, அங்கிருந்து நீங்கி மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்கச் செல்லும்முன், அவன் தோளில் கை வைத்து அழுத்தி விட்டுச் செல்வாள்.

அன்று நான் யாரென்று ஏன் அவனிடம் தெரியப்படுத்திக் கொள்ளவில்லை? அதிர்ச்சி! ஒருவேளை அதுவாகத்தான் இருக்கலாம்.. ஆச்சர்யமும்தான்.. ஆனால், எனது இயல்பான சுபாவமும்கூட காரணம்தான். ஒவ்வொரு செயலும் எந்த விளைவை ஏற்படுத்தும் என அதைச் செய்யும் முன்பே தெளிவாக யோசித்துப் பார்க்க விரும்பும் மனிதன் நான். என்னை விட்டுச் செல்லும் போது அந்தக் குணத்தையும் ஒரு காரணமாகக் காட்டினாள் என் மனைவி. ம்ம், அது வேறொரு கதை. நான் பஸுஸுவைப் பற்றி சிறப்புக் கட்டுரை எழுதும் முடிவை உறுதி செய்தேன். என்னுடைய பத்திரிகை ஆசிரியர் தன் ஆசீர்வாதத்தை வழங்க, நான் ஒரு படகில் அமர்ந்து, கழிவுகள் இறைந்து கிடக்கும் காயல் நீர் வழியாக அஜேகுன்லேவுக்கு மீண்டும் சென்றேன். அந்தச் சந்திப்பில் நான் என்னைப் பற்றி நேரடியாக அறிமுகம் செய்துகொண்டேன். அவனிடம் சொல்வதற்கு நிறைய இருந்தன. ஐரோப்பிய அணிகள் ஏதேனுமொன்றில் சேர முடியாதது பற்றி வருத்தம் ஏதும் உண்டா என்று கேட்ட போது இல்லையெனத் தலையசைத்தான்.

“இல்லை. ஒருவேளை அங்கு சென்றிருந்தால் என்னால் ஃபட்டோவை சந்தித்திருக்க முடியாது. என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரே அதிமுக்கியமான நிகழ்வு அவள்தான்”.

“ஒலிம்பிக்ஸ் செல்வதைக் காட்டிலுமா?”

“ஆமாம்”.

*

”உண்மையாக அன்று நடந்தது என்ன? அவன் எப்படி இறந்தான்?” டாகா டோலாவைக் கேட்டேன்.

‘ம்ம், அன்றும் வழக்கம் போல இங்கு கூடியிருக்கும் மக்களுக்கு தொல்லை கொடுக்கவும் காட்சி மையத்தின் உரிமையாளரிடம் மாமூல் பணம் வாங்கவும் போலீஸ் வந்தார்கள். அன்று, மே 19 ஆம் தேதி பஸுஸுவின் மையத்தில், பேயர்ன் அணியின் தோல்விக்கும் செல்ஸி அணியின் வெற்றிக்கும் பின்னர் ஆதரவாளர்களிடையே சண்டை ஏற்பட்டது. அது வழக்கமாக நடைபெறுவதுதான். ஆனால் அன்று கூட்டத்தைக் கலைக்க போலீஸ்காரர்கள் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினார்கள். அதில் முக்கியமாக, சார்லஸ் ஒகாஃபர் என்னும் சிறுவனை அவர்கள் அடித்தும் துப்பாக்கி முனையால் அவனது குறியில் குத்தியும் துன்பறுத்தினார்கள். அதைப் பார்த்த பின்புதான் பஸுஸு அங்கே வந்து குறுக்கிட, ஒரு போலீஸ் தனது துப்பாக்கியை எடுத்து நேருக்கு நேர் அவனைச் சுட்டான். அதன்பின் அவனை அங்கேயே விட்டுச் சென்று விட்டார்கள். அவன் இறந்து விட்டானென்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அது மட்டும் தெரிந்திருந்தால், அவனது சடலத்தை எடுத்துக்கொண்டு போய், அவர்களுக்கு ஏற்றவாறு ஏதாவது கதையை இட்டுக் கட்டியிருப்பார்கள்.

“ஆனால் அவனை அங்கேயே விட்டு விட்டார்கள். அங்கிருந்து கிளம்பி, வேறு இடத்திற்குப் போய், ஏறத்தாழ பதினான்கு இளைஞர்களை வளைத்துப் பிடித்து, காவல் நிலையத்தில் அடைத்து விட்டு மற்றுமொரு இடத்திற்குச் சென்றுவிட்டார்கள். பணம் பறிப்பதற்காக அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அதன்பின், துப்பாக்கிச் சூட்டில் இறந்தது பஸுஸு என்று அந்தப் பகுதி மக்கள் அறிந்தபின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவனுடைய  சடலத்தை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்றார்கள். பெரும் கலவரம் மூண்டது. போலீஸ் வாகனத்துக்கு ஒரு இளைஞன் தீ வைத்தான். மேலும் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

“ஆயுதங்கள் நிரம்பிய வாகனத்தில் எங்களை நோக்கி வந்தவர்கள், கூட்ட த்தை நோக்கிச் சுட்டனர். மக்கள் அவர்கள் மீது கற்களையும், வெடிகுண்டுகளையும் வீசினர் என்று குற்றம் சாட்டினார்கள். எல்லாவற்றையும் விட அவலம், அவர்கள்தான் பஸுஸுவை சுட்டுக் கொன்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்கள், இறுதியாக அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி, யாரோ ஒரு ஃப்ரான்க் மபா, இறந்தவரின் மனைவியைச் சந்திக்க வந்தார். சுட்டதாக அடையாளம் காட்டப்பட்ட போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டான்.  பஸுஸூ துப்பாக்கிச் சூட்டினால் இறக்கவில்லை, இருதயக் கோளாறால்தான் இறந்தான் என்று எப்படியோ பொய்யான பிரேதப் பரிசோதனை அறிக்கை தயாரித்து வாங்கி விட்டார்கள். ”

“இந்த நிலைமை எப்போதாவது மாறுமா?”

டாகா டோலோ மிக சோகமாகப் புன்னகைத்தார்.. தலையை ஆட்டிக்கொண்டே, தோளைக் குலுக்கியவாறு நீண்ட நேரம் சிந்தித்தார். ”ம்ம், அஜேகுன்லேவைப் பொருத்தவரை, இந்த நிலை எதிர்வரும் காலத்திலும் இப்படியேதான் தொடரப் போகிறது. இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களைப் பார்க்கையில் எந்த மாற்றமும் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த சேரியிலிருந்து ஒன்றோ, இரண்டோ, மூன்றோ நபர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மேலே வந்து இங்கிருந்து நீங்கிச் செல்வார்கள் என்பதை மறுக்கவில்லை. அவர்கள் நிச்சயம் வருவார்கள். கடந்த காலத்திலும் அது நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்தச் சமூகத்தை உருவாக்கும் இந்தப் பெரிய கூட்டம் – நீ பார்த்தாயே, மீனைச் சுட்டு விற்கும் இந்தப் பெண், இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கும் வறிய சிறுவர்கள், என் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த அசலான மனிதர்கள், இவர்களுக்குள் இங்கிருந்து ஐரோப்பா சென்று கால்பந்து விளையாடப் போகும் நம்பிக்கை கொண்ட 10,000, 20,000 அல்லது 50,000 இளைஞர்களில் ஐந்து அல்லது பத்து பேர் மட்டுமே சாதிப்பார்கள்”.

*

கூட்டம் நிரம்பிய பேருந்தில் அமர்ந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையை இரவில் எழுதிமுடித்த பின் ஆசிரியருக்கு மின்னஞ்சலில் அனுப்பி விடுவேன்.. பஸுஸோவின் மனைவியைச் சந்திக்கக் கடமைப்பட்டவனா, செல்ல வேண்டுமா என யோசிக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த சிறு நகரத்துக்கு, எனது வீட்டுக்கு நான் பயணம் செல்லக்கூடும். அங்கு என்னை அடையாளம் தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்களா என்று சிந்தித்துப் பார்க்கிறேன். அலுவலகங்கள் விடுத்து அனைவரும் வீடு செல்லும் இந்த மாலை நேரத்துப் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்துகொண்டிருந்த பேருந்தில் கண்மூடியபடி அமர்ந்திருந்தேன். நான் மீண்டும் ஒருமுறை அந்த விளையாட்டு மைதானத்தில் இருந்தேன்.. வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்கிறது, பார்வையாளர்கள் தங்கள் கண்களையே நம்ப முடியாமல் வெறித்துப் பார்க்க… மைதானத்தின் மூலையிலிருந்து, காற்றில் மிதக்கும் உடலிலிருந்து. அந்த பைசைக்கிள் கிக் உயர்கிறது.. உயர்ந்து.. உயர்ந்து.. பந்துடன் இணைகிறது. மிக அழகாக..

*

ஆசிரியர் குறிப்பு: ஹெலோன் ஹபிலா (Helon Habila)

நைஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர். நைஜீரியாவில் ஊடகவியலாலராக சில வருடங்கள் பணி புரிந்தபின், 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தின் East Anglia பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் அங்கத்தினராக இணைந்தார். 2001ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘Love Poems’ என்னும் சிறுகதை Caine Prize பெற்றது. 2002ஆம் ஆண்டில் இவரது முதல் நாவல், ‘Waiting for an Angel‘ வெளியிடப்பட்டது. அது சிறந்த அறிமுக நாவலாசிரியருக்கான காமன் வெல்த் பரிசு பெற்றது. 2007ஆம் ஆண்டு வெளியான அவரது இரண்டாவது நாவல், ‘Measuring Times‘ வெர்ஜீனியா இலக்கிய மன்றத்தின் சிறந்த நாவலுக்கான பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரது மூன்றாவது புத்தகமான ‘Oil on Water‘ மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் நலிந்து போன டெல்டா மாநிலத்து விவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் அதனால் அங்கு ஏற்பட்ட குற்றவியல் சூழலையும் பேசுகிறது இந்தப் புத்தகம். இவற்றோடு புகழ்பெற்ற ஆப்பிரிக்கச் சிறுகதைகளைத் தொகுத்தும் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள ஜார்ஜ் மேஸன் பல்கலைக்கழகத்தில், படைப்பிலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணி புரிகிறார். நைஜீரியாவில் வருடந்தோறும் எழுத்துத் துறை, புனைவிலக்கியம் பற்றிய கோடைகாலப் பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் சொந்த நாட்டின் அரசியல், சமூகப் பிரச்சனைகளையே இவரது எழுத்துகள் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன. இவரது இந்தக் கதை, நைஜீரிய இளைஞர்களின் கால்பந்து விளையாட்டு ஆர்வத்தைப் பற்றிப் பேசும் அதே வேளையில், ஐரோப்பிய அணிகளின் நுகர்வோர் கலாச்சாரம் உள்ளூர் அணிகளின் வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது என்பதையும், விளிம்புநிலை மக்களின் வாழ்வு அதிகார அமைப்புகளால் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும் விவரிக்கிறது. எழுத்தாளராக மட்டுமின்றி ஊடகவியலாளராகவும் இருப்பதால், ஒரு புனைவில், சமூகத்தின் பல பரிமாணங்களை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வெளிப்படுத்துகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்சி மையத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கால்பந்தாட்ட வீரரின் மரணத்தின் பின்னணியில் எழுதப்பட்ட புனைவு இந்தச் சிறுகதை.

*

ஆங்கில மூலம்: https://www.addastories.org/beautiful/