தல்ஸ்தோயின் க்ராய்ட்சர் சொனாடா அல்லது நரி முள்ளெலி டூயட்

1 comment

ஒரு இலக்கியப் படைப்பு ரயில் பயணத்தின் எல்லைக்குட்படுத்தப்படுவது ஏதோ ஒரு விதத்தில் நம் மனதைத் தொடுகிறது. சொல்லப்படுவதற்காக அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரம் அதை உடனழைத்துச் செல்லும் பயணத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதைச் செவிமடு்ப்பவர்கள் அதில் பாத்திரம் வேடம் தரித்துக்கொண்டாலும், அவரவர் நிறுத்தங்களில் ரயிலையும் அதையும் விட்டு, தங்கள் அன்றாடத்தைத் தொடரப் போய்விடுகிறார்கள். பயணம் முடிகையில் அது தனித்து நிற்கிறது, அதன் வருங்கால வாசகப்-பயணியை எதிர்பார்த்து. 

சாகியின் கதைசொல்லி என்று தலைப்பிடப்பட்ட கதைதான் இவ்வகைமையில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. அதில் திருமணமாகாத வாலிபன் ஒருவன் ரயிலில் பயணிக்கிறான். அவனுடன் உடன்பிறந்தார்களின் பிள்ளைகளுடன் ஒரு அத்தையும் பயணிக்கிறாள். குழந்தைகளின் சலிப்பைப் போக்குவதற்காக அக்குழந்தைகளுக்கு, அவர்களின் முறைபிசகாத அத்தை இறுதியில் கண்டனம் செய்யும், ஒரு கதையை அவன் கூறுகிறான். ஒரு “horribly good” குழந்தையைப் பற்றிய அக்கதையில் நன்னடத்தைக்காகப் பரிசு பெறும் அக்குழந்தையை மோசமான ஓநாயொன்று கடைசிப் பருக்கை வரை ருசித்துச் சாப்பிடுவதோடு கதை முடிவடைகிறது. “எது கலை?” கட்டுரையை எழுதிய வயதான தல்ஸ்தோய் அந்த ரயிலில் பயணிப்பதாக சில சமயம் கற்பனை செய்து பார்க்கிறேன். அவர் அத்தையை ஆமோதிக்கிறார். சாகி நாயகனுக்குப் பெயர் சூட்டவில்லை என்றாலும் அவனது குறும்புத்தனம் அவன் க்லோவிஸ் சாங்ரெய்லாகத்தான் (அவரது நாயகர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவன்) இருக்க வேண்டும் என்று அனுமானிக்கச் செய்கிறது. தல்ஸ்தோய்க்குச் சரியான பதிலடி கொடுப்பது போல், அவரை “என்ன ஒரு துக்ககரமான மனிதன்” என்று முணுமுணுத்தபடியே ரயிலை விட்டு இறங்குகிறான் க்லோவிஸ் என்று நினைத்துக்கொள்கிறேன். என்னையுமே பல அம்மாக்களும் சித்திகளும், மெச்சத்தக்க க்லோவிசின் கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாக, இக்கதையை அவர்கள் குழந்தைகளுக்குச் சொன்னதற்காக செல்லமாகக் கோபித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் வேறு ஒரு கட்டுரையில் பேசிக்கொள்வோம். 

ரயில்களும் குழந்தைகளும் அசோகமித்திரனின் குழந்தைகள் கதை முடிவில் வரும் அந்த மூர்க்கமான பொதுப்படுத்தலை நினைவுபடுத்துகிறது. ஆனால் அக்கதையின் முடிவில்தான் ரயில் புறப்படவே செய்கிறது. அவரது பிரபலமான காலமும் ஐந்து குழந்தைகளும் கதையிலோ கதாநாயகன் ரயில் டிக்கெட் வாங்கிவிட்டு பிளாட்பாரத்திலேயே சிந்தித்துக்கொண்டிருக்கிறான். தி.ஜா.வின் சிலிர்ப்பு ரயில் கதையின் மகத்தான முடிவை மறக்க முடியாதென்றாலும் எல்லாம் தெரிந்த அக்பர் சாஸ்திரியே அவர் கதைகளின் தலைசிறந்த ரயில்-கதை நாயகன். அக்பர் சாஸ்திரியை படிக்கும்போதெல்லாம் நினைவிற்கு வருவது தல்ஸ்தோயின் க்ராய்ட்சர் சொனாடாவின் முதல் பாதி. 

*

க்ராய்ட்சர் சொனாடா மிகச் சாதாரணமாக ஒரு ரயில் பயணப் பேச்சில் தொடங்குகிறது. பேச்சு காதல், திருமணம், கலவி, கல்வி என்று விரிந்துசெல்கிறது. அதனால் ஈர்க்கப்படும் “பளபளக்கும் கண்களுடைய” ஆடவனொருவன் ஓசையின்றி அங்கு வந்தமர்ந்து உரையாடலில் கலந்துகொள்கிறான். பேச்சின் தீவிரம் அதிகரிக்க அது மேலும் மேலும் ஆத்திரமூட்டுவதாக மாறுகிறது. சண்டைக்கார புது ஆசாமி, தான் அருவருக்கும் திருமண வழக்கத்தைப் பற்றி பேசத்தொடங்கி, கலவிக்காக மட்டுமே அனைவரும் திருமணம் செய்துகொள்வதால் மோசடியும் பலவந்தமும் நிறைந்திருக்கும் வாழ்க்கைகளை அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டுகிறான். எவரோவொருவர் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு இருபத்து ஐந்து அத்தியாயங்களுக்குப் பிறகு நாம் எதிர்கொள்ளவிருக்கும் கதையின் உச்சத்தை திடீரென்று போட்டுடைத்து விடுகிறான் – மனைவியைக் கொலை செய்ததற்காகப் பிரபலமான, பழிக்கப்பட்ட போஸ்ட்னிஷெவ்தான் (Pozdnyshev) தான் என்று அறிவிக்கிறான்.

பேச்சு சட்டென அடங்க, சில சக பயணிகள் கொலைகாரனுடன் பயணிக்க விருப்பமில்லாது அடுத்த பெட்டிக்குச் சென்றுவிடுகிறார்கள். கதைசொல்லியின் மனதில் எழும் (ஒப்புக்கு மட்டுமே அவன் கதைசொல்லி, ஏனெனில் கதையை பெரும்பாலும் போஸ்ட்னிஷெவ் வார்த்தைகளில்தான் நாம் கேட்கிறோம்) கொலையின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் அவா, பெண் விடுதலை, கல்வி, மணவாழ்வு, மருத்துவர்கள் பற்றிய போஸ்ட்னிஷெவ்-வின் கிறுக்குத்தனமான பொதுப்படுத்தல்களைக் கேட்கும் துர்பாக்கியத்திற்கு அவனை மனமுவந்தே உட்பட வைக்கிறது. போஸ்ட்னிஷெவ் அனைத்தையும் இருபாலினர்களுக்கிடையே நிலவும் காம இச்சையுடன் தொடர்புபடுத்துகிறான். பாலுறவாலும் அது விளைவிக்கும் குற்றவுணர்வாலும் இம்சிக்கப்பட்ட அவனது அகஸ்டீனியத் தர்க்கம் சட்டரீதியான மணவாழ்விலும் கலவி தவிர்க்கப்பட வேண்டும் (அத்தவிர்த்தல் மனிதகுலத்தின் அழிவிற்கே காரணமாக இருப்பினும்) என்ற முடிவிற்கு வருகிறது. இங்கு தி.ஜா.வின் கதையில் அதன் “வாழ்நாள் முழுதும் டாக்டரிடம் சென்றிராத” நாயகனான அக்பர் சாஸ்திரி தனது வியக்கத்தகும் உடல்நலத்திற்கான காரணமெனக் கூறியது நினைவிற்கு வருகிறது – 

“ரகசியம் என்ன தெரியுமா? எட்டாவது குழந்தை பிறந்தது. என் சம்சாரத்தைப் பார்த்தேன். என்ன சரிதானேன்னேன். சரின்னுட்டா. அதிலேருந்து ஒதுங்கிப்பிட்டோம். அப்ப எனக்கு முப்பத்தெட்டு வயசுதான்.”  

ஆனால் இது அளவோடு இருப்பதால் கதையின் பாத்திர இயல்போடு இசைந்திருக்கிறது. அக்பர் சாஸ்திரியின் பிரகடனங்களை தி.ஜா.வின் கருத்துகளென நாம் சந்தேகிப்பதில்லை. 

https://upload.wikimedia.org/wikipedia/commons/4/42/KreutzerSonata.jpg

கதையின் இரண்டாம் பாதி தஸ்தயேவ்ஸ்கிய களியார்வத்துடன் விரைகிறது. (குற்றமும் தண்டனையும் நாவலின் ரஸ்கோல்னிகோவ் கொலை செய்தபின் தன்-விழிப்புணர்வை இழக்கிறானென்றால் தல்ஸ்தோயின் போஸ்ட்னிஷெவ் கொலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தான் முற்றிலும் சுயநினைவோடுதான் இருந்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறான்). முறிந்துகொண்டிருக்கும் மணவாழ்வில் கசப்புணர்வு படிப்படியாக அதிகரித்துச் செல்வதை கதை விவரிக்கிறது. காமம், வெறுப்பு என்ற தடங்களில் மாறி மாறி உருண்டுசெல்லும் மணவாழ்விற்கு சந்தேகிக்கும் பொறாமை முற்றுப்புள்ளி வைக்கிறது. இசைக்கலைஞன் ட்ரூகாஷேவ்ஸ்கியின் (Trukhachevski) வருகை முன்னேற்றத்திற்கு வாய்ப்பளிக்காத இம்மணவாழ்வை அதன் நிலையான குழியிலிருந்து விடுவிக்கும் நெம்புகோலாக அமைகிறது. போஸ்ட்னிஷெவ் மனைவியின் பியானோ இசைக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசிக்க ட்ரூகாஷேவ்ஸ்கி முன்வருகிறான். இசை ஒரு பாலுணர்வூக்கி என்ற வினோதமான கருத்தைக்கொண்டிருக்கும் போஸ்ட்னிஷெவ் சேர்ந்திசைக்கும் அவ்விருவரும் தன் முதுகிற்குப் பின்னால் சல்லாபிக்கிறார்கள் என்று இயல்பாகவே சந்தேகிக்கிறான்.

பணி நிமித்தமாக வெளியூர் செல்கையில், க்ராய்ட்சர் சொனாடா வாசிக்கையில் அவர்கள் முகங்களில் தென்பட்ட களையைத் திடீரென்று நினைவுகூர்கிறான். அந்நினைவின் உந்துதலால் கோபமுற்று வந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு கள்ளக் காதலர்களை கலவியில் கையும் களவுமாகப் பிடிக்கும் நோக்கத்தோடு வீடு திரும்புகிறான். ஆனால் அவன் வீட்டிற்குள் நுழைகையில் அவர்கள் படுக்கையில் அல்லாது வரவேற்பறையில் இசைப்பயிற்சிக்குப் பிறகு உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள். நியாயப்படி இது அவனை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவன் செய்ய வந்ததற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால், அது தற்போது “மாற்ற முடியாத அளவிற்குத் தீர்மானிக்கப்”பட்டுவிடுகிறது. பாலுணர்வுப் பொறாமையின் கொடூரமான தர்க்கத்தின் (“சிறுக்கி, கேடுகெட்ட சிறுக்கி”, “எனக்குப் பிறந்த குழந்தைகள் என்று நம்பிக்கொண்டிருந்ததை பட்லர்களுடன் சல்லாபித்துப் பெற்றிருக்கிறாள்”) தடுக்கமுடியாத விசை அவனைச் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் வளைந்த தமாஸ்கஸ் குத்துவாளை எடுக்க வைக்கிறது. இங்கு சற்றே பொருந்தாதிருப்பினும், காட்சி விவரங்களை அபாரமாக கண்டெடுக்கும் அந்த தல்ஸ்தோயிய “நரிக்”கண், அனைத்து களேபரத்திற்கு மத்தியிலும், தன்னை நிலைநாட்டிக்கொள்கிறது.

கத்தியின் உறை சோஃபாவிற்குப் பின்னே விழுவதையும் போஸ்ட்னிஷெவ், “எல்லாம் முடிந்தபிறகு இதைத் தேடி எடுக்க வேண்டும், இல்லையெனில் தொலைந்து விடக்கூடும்” என்று தனக்கே நினைவுக் குறிப்பொன்றை மனதில் எழுதிக்கொள்வதையும் அக்கண் நமக்கு விவரிக்கிறது. இது அதிகரித்துக்கொண்டே செல்லும் உணர்வெழுச்சியைத் தாமதிக்கும் ஓர் இடை நிறுத்தமாகவே நமக்குப்படுகிறது. போரும் அமைதியும் நாவலின் முதல் பகுதியின் இரண்டாம் பாகத்தில் வரும் போர்க்காட்சி ஒன்று நினைவிற்கு வருகிறது. துப்பாக்கி சுடுதலுக்கிடையே என்ன நடக்கிறதென்பதைப் பற்றிய தெளிவில்லாது முற்றிலும் குழம்பியிருக்கும், போரை வீர சாகசமாக அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும் கத்துக்குட்டி நிகோலாய் இக்களேபரத்திலிருந்து விடுபட்டவனாய், தொலைவு, டேன்யூப் நதியின் நீர், வானம், சூரியன் இவை அனைத்தின் விகாசத்தையும் ஒரு விரிவுபடுத்தும் ஆனந்தமாக உணர்கிறான். இதே ஆனந்ததைத்தான் ஆஸ்டர்லிட்ஸ் போரில் தலையில் அடிபட்டு வீழ்ந்துகிடக்கும் ஆண்ட்ரூவும் அந்த முடிவிலா வானத்தில் கண்டெடுக்கிறான். ஆனால் இவற்றை எல்லாம் நாம் இடை நிறுத்தங்களாக உணர்வதில்லை. கதையின் பெரும் ஓட்டத்தின் ஓர் இயல்பாகவே நாம் இக்காட்சிகளை அனுபவிக்கிறோம். 

அதன்பின் அவன் சத்தமின்றி கதவருகே சென்று, அதைச் சட்டெனத் திறந்து, தான் கொல்ல முடிவு செய்திருக்கும் இருவரின் பயத்தால் அதிர்ச்சியுறும் முகங்களை எதிர்கொள்கிறான். ட்ரூகாஷேவ்ஸ்கி பியானோவிற்கு அடியே பாய்ந்து தப்பிச்செல்கிறான். போஸ்ட்னிஷெவ் அவனைத் துரத்தும் எண்ணத்தைக் கைவிடுகிறான். (வெறும் காலுறைகளை மட்டும் அணிந்துகொண்டு மனைவியின் காதலனைத் துரத்திச் செல்வது அபத்தமாக இருக்கும் என்பதால்). உக்கிரம் சற்றே குறையும் தறுவாயில் அவன் மனம் ஊசலாடுகிறது. ஆனால் “ஒன்றும் நடக்கவில்லை, ஒன்றும், ஒன்றும்” என்ற அவன் மனைவியின் அலறல் உக்கிரத்தை திசைதிருப்பி இருபத்து ஐந்து அத்தியாயங்களுக்கு முன் நமக்கு உறுதியளிக்கப்பட்ட கொலையை முடித்து வைக்கிறது.

*

க்ராய்ட்சர் சொனாடாவைப் பற்றிய பெரும்பாலான விமர்சனங்கள் அதில் தல்ஸ்தோயின் மிகையிருப்பையும் அதன் நாயகன் போஸ்ட்னிஷெவ் அவர் கருத்துகளை மொழியும் கருவியாக மட்டுமே இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. சரிதையும் ஓரளவிற்கு இக்கூற்றிற்கு ஆதாரமளிக்கிறது. 1887-இல் நடிகர் Andreyev-Burlak தல்ஸ்தோயைப் பார்க்கச் செல்கிறார். உணவருந்தியபின் நிகழும் பேச்சில் ரயிலில் ஒருவனை சந்தித்ததையும் அவன் தன் மனைவி சோரம் போனதைப் பற்றி பிலாக்கணம் வைத்ததையும் கூறுகிறார். தல்ஸ்தோயின் மனதில் இது காமத்தை மையப்படுத்தும் கதைக்கான கருவை விதைக்கிறது. அடுத்த வருடமும் புர்லாக் வருகிறார், இம்முறை ஓவியர் ரெபினுடன். விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக தல்ஸ்தோயின் மகன் பியானோவிலும் அவரது குழந்தைகளின் இசைப் பயிற்றுனர் வயலினிலும் க்ராய்ட்சர் சொனாடாவை சேர்ந்திசைக்கிறார்கள். காரணமேயின்றி தல்ஸ்தோய் இவ்விசைக் கேளிக்கையை புர்லாக் சென்ற வருடம் விவரித்த திருட்டுக் காதல் கதையுடன் தொடர்புபடுத்தி, “மனைவியைக் கொன்றுவிட்ட மனிதன்” என்ற தனது முற்றுப்பெறாத கதையொன்றையும் அதனுடன் சேர்த்து, புர்லாக் தனியுரையாக மொழிவதற்கு (ரெபின் ஒவியம் தீட்டுவதற்கும்) ஏதான ஒரு படைப்பை எழுத முடிவுசெய்கிறார். துரதிருஷ்டவசமாக புர்லாக் 1888-இல் இறக்கிறார். தனியுரை 1889-இல் புனைவாக உருமாறுகிறது. தல்ஸ்தோயின் மனைவி Sofia Andreyevna Tolstaya அதை அவர்கள் குழந்தைகளும் உடனமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தில் படித்துக்காட்டுகிறாள். 

டயரிக் குறிப்புகள் படைப்பு உருப்பெற்ற விதத்திற்கான சாவித்துளைக் குறுக்குவெட்டுச் சித்திரமொன்றை அளிக்கின்றன.

“சாகவிருக்கும் பெண்ணை, இவனா தன்னைக் கொல்ல வருகிறான் என்று நம்பமுடியாமல் அவள் மன்னிப்பு கோருகையில், ஒரு வெறிபிடித்த பிரமையில் காட்ட வேண்டும்”, “பாவத்தை விட்டொழிய முனையலாம், ஆனால் குடிகாரன் எப்போதுமே குடிகாரன்தான். புணர்பவன் எப்போதுமே புணர்பவன்தான். ஒருமித்த கவனத்தின் முதல் பிறழ்வில் அவன் வீழ்கிறான். நானும் பிறழ்வுணர்ச்சியை விழைபவன்தான்.” 

ஆனால் இக்குறிப்புகளில் அவர் தன் குடும்பம் இக்கதையை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதைப் பற்றிய கவலையை கிஞ்சித்தும் வெளிப்படுத்தவில்லை. கதையின் பதிப்பு வரலாறு (தணிக்கையாளரின் அனுமதி கிடைக்காதது, அதற்குப்பின் வந்த சமிஸ்டாத் பாணி கள்ளப் பதிப்புகள்), பின்னுரை, கலவியைப் பற்றிய அவரது பிரகடனங்கள், மணவாழ்விலும் கலவியைத் தவிர்க்க வேண்டும் என்பது போன்ற அவரது கருத்துகள் இவை அனைத்துமே கதாபாத்திரத்தை கதை எழுதுவோனிடமிருந்து பிரித்துப் பார்ப்பதற்குத் தடையாக இருக்கின்றன. கிசுகிசு, அப்போதும் இப்போதும் இலக்கிய வெகுமதியை அடையாளம் காண்பதற்குத் தடையாக இருக்கிறது.  

https://s3-ap-northeast-1.amazonaws.com/bhive-jp/media/yabai/article/4835/3.jpg

போரும் அமைதியும், ஆன்னா காரனீனா போன்ற மாபெரும் சாதனைகளை வாசித்துவிட்டு க்ராய்ட்சர் சொனாடாவிற்கு வரும் வாசகனுக்கு அதில் வெளிப்படையாகவே துருத்திக்கொண்டிருக்கும் ஆசிரியனின் இருப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. தல்ஸ்தோயின் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கும் ரிச்சர்ட் பெவியார், அம்மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரிக்கையில் ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பை முன்வைக்கிறார். போரும் அமைதியும் நாவலை மொழிபெயர்க்கையில் இரு புத்தகங்களை ஒரே சமயத்தில் மொழிபெயர்ப்பது போலிருந்தது என்று அவர் கூறுகிறார். முதலாமானது, திட்டமிட்டு தன்னிலை உணர்ந்த, தனது ஆசிரியனின் மிதமிஞ்சிய ஆளுமையை வெளிப்படுத்தும் படைப்பு. அதில் ஆசிரியன், நிகழ்வுகளைத் தேர்வுசெய்து, சாதுர்யமாக அவற்றைக் கட்டமைத்து, அவற்றைக் குறித்த தன் அறுதியான தீர்ப்புகளை முன்வைத்து, எங்கும் வியாபித்திருக்கிறான்.

இரண்டாவது புத்தகமோ வாழ்க்கையில் சாமானியமாகவும் உண்மையாகவும் இருக்கும் அனைத்தையும், எளிதில் அழிந்துவிடக்கூடிய – அவ்வாறு அழிந்துவிடக்கூடியதாலேயே பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்தையும், சட்டகங்களுக்குள் எளிதில் பொருத்திவிட முடியாத, அறுதியான தீர்ப்புகளை அனுமதிக்காத, மாறிக்கொண்டே இருப்பதால் சிந்தனையில் கோர்வையாக இடம்பெறாத, அரிதான கவனிப்புத் திறன் மற்றும் சுயபிரகடனங்களற்ற தன்மையால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அனைத்தையும் கூற முயல்கிறது. ஒன்று மற்றொன்றில் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறது என்பதில்தான் போரும் அமைதியும் என்ற படைப்பின் மாபெரும் கலைத்திறன் அடங்கியிருக்கிறது. நிகழ்வுகளை அடுத்தடுத்து கூறிக்கொண்டே செல்லும் அதன் கூறல்முறை எப்போதுமே கதையாடலின் தர்க்கத்துடன் இசைந்திருகிறது. இறுதிப் பகுதிகளைத் தவிர அரிதாகவே அது அத்தர்க்கத்திலிருந்து விலகி கதைசொல்லியின் உள்நோக்கத்திற்கு திரும்ப முனைகிறது. தல்ஸ்தோய் ஒரு தீவிரமான அகமையவாதி (கடவுளை விடவும் அவரது தர்க்கத்தையே அவர் மூர்க்கமாக உணர்ந்தார் என்ற அர்த்தத்தில். “கடவுள் என் விருப்பம்” என்ற வரியை அவர் நாட்குறிப்புகளில் படித்த கார்க்கி இவ்வாறு கூறினார் – ‘கடவுளுடன் அவருக்கிருக்கும் உறவு மிக உறுதியற்றது என்றாலும் அவர்களிருவரும் ஒரே குகையில் இருக்கும் இரண்டு கரடிகள் என்று நான் சில சமயம் நினைத்ததுண்டு.’) என்பது அனைவரும் அறிந்ததே.  

ஆனால் அவரது முக்கியமான படைப்புகளில் அவரது அகமையவாதம் பாத்திரங்களின் சுயங்களை முன்செல்ல அனுமதித்தது. தன் வயதான காலத்தில் தல்ஸ்தோய் இதையே வேறு விதமாகக் கூறினார் – “கதைகள் நாவல்களில் வரும் பாத்திரங்கள் அவற்றின் ஆன்மீக இயல்பின்படி செயல்படாமலிருப்பது மிகக் கொடூரமான ஒரு விஷயம்.”  இதனால்தான் போரும் அமைதியும் போன்ற நூற்றுக்கணக்கான பாத்திரங்களைக் கொண்ட ஒரு நாவலில் ஒவ்வொரு பாத்திரமும் அதன் இயல்பிற்குத் தக்க முடிவையே சென்றடைகின்றது. இச்சரியான தன்மை அல்லது வாழ்வின் பெருந்திரளை இச்சரியான தன்மையை நோக்கி வளைப்பதென்பது தல்ஸ்தோயிடமிருந்துதான் வருகிறதென்றாலும் வாசகர்களாகிய நாம் அதை உணராதிருப்பதே அவரது கலையின் மகோன்னதம். உணராதிருப்பது என்று கூறுவதைவிட அதைக் குறித்த அனுமானங்களை நாம் தெரிந்தே விருப்புறுதியுடன் ஒத்திவைக்கிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஹாஜி முராதின் அபாரமான முடிவை நினைவுகூர்கிறோம். காவியத்தன்மை அடைந்துவிட்ட அதன் நாயகன் தன் விழிப்புணர்வின் பட்டகத்தில் தன் மரணத்தின் கதிர்களை வளைத்துப் பார்க்கிறான் –

“எவனோ ஒருவன் சுத்தியலால் அடித்துக்கொண்டிருக்கிறான். யார் அல்லது ஏன் என்பதை ஹாஜியால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுவே தன் உடலோடு தொடர்பிலிருக்கும் அவன் இறுதி விழிப்புநிலையாகவும் இருந்தது. அதற்கு மேல் எதையுமே அவன் உணரவில்லை. அவனுக்குச் சம்பந்தமில்லாத ஒன்றை அவன் விரோதிகள் உதைத்துக் கூறுபோட்டுக் கொண்டிருந்தார்கள்.”

ஹாஜி முராத் வரலாறும் சுயசரிதையுமாலான கலவை என்பதில் சந்தேகமில்லை (தல்ஸ்தோய் தன் காக்கசஸ் (Caucasus) பிரதேச அனுபவங்களை இங்கு பயன்படுத்திக்கொண்டார்). வரலாறு நிகழ்ந்துகொண்டிருக்கையில் எவ்வாறு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது என்பதும் அச்சுயசரிதையின் ஒரு பகுதியே. ஆனாலும்கூட கதையின் உன்னதமான முடிவில் ஒரு துளி பீதியோ, அதிர்ச்சியோ ஏன் வருத்தமோகூட இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக கதை ஆரம்பிக்கையில் வரும் கசங்கிய டார்டார் என்றழைக்கப்படும் தெரிஞ்சிலும் குயில்களின் குழுவிசையுமே நமக்கு அளிக்கப்படுகிறது. 1902-இல் தல்ஸ்தோய் மரணத்தின் தறுவாயில் இருந்து தப்பி, தனக்களிக்கப்பட்டிருக்கும் அவகாசத்தை ஹாஜி முராத்-தை செப்பனிடப் பயன்படுத்தினார் என்ற சரிதையின் தகவலை விமர்சனத்தின் வில்லையைக்கொண்டு ஹெரால்ட் ப்ளூம் அபாராமாக அர்த்தப்படுத்துகிறார்: “ஆசிரியரின் மரணத்தை தன்மீது ஏற்றுக்கொள்ளும் அவரது கதாநாயகன், அவருக்காக அவர் சாவை தன் உயிர்துறத்தலைக்கொண்டு நிகழ்த்திக்காட்டுவதில் இந்த ஒத்திவைப்பு பிரதிபலிக்கப்படுகிறது.”

“அகமையவாதத்திலிருந்து மூப்பெய்திய தல்ஸ்தோயிற்கான விடுதலை” என்று ஹெரால்ட் ப்ளூம் வரையறுத்த ஹாஜியின் அகமையவாதத்தைத்தான் பெய்லி பூடகமாக நினைவில் நிற்கும் வகையில் “இறவாமைக்கான சுட்டெண்” என்று குறிப்பிட்டார். 

இங்கு பீதோவனின் க்ராய்ட்சர் சொனாடாவின் முதல் மூவ்மெண்ட் நினைவிற்கு வருகிறது. என் மேற்கத்திய இசைப் படைப்புகள் சேகரத்திலிருந்து என் மகனுக்கும் எனக்கும் பிடித்தமான குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் ஒரு விருப்பப் பட்டியலாக போஸ் இசை அமைப்புக் கருவியில் சேமித்து வைத்திருக்கிறேன். அப்பட்டியலில் முதலில் வருவது (மிகவும் பிடித்தமானது என்பதற்காக அல்ல முதலில் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பதால்) க்ராய்ட்சரின், மெதுவாக அடாஜியோ சொஸ்டெனெடோவாகத் தொடங்கி பின் பிரெஸ்டோவாக விரியும் முதல் பகுதிதான். இது வயலினும் பியானோவும் இணைந்து இசைக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படைப்பென்றாலும், முதல் பகுதியின் முதல் நான்கு பார்களுக்கு வயலின் மட்டும்தான் ஏதோ ஒரு அகமையவாதி என்பது போல் அனைத்தையும் தானே செய்து விடமுடியும் என்ற கர்வத்தில், தல்ஸ்தோயின் கதையில் வரும் போஸ்டினிஷெவ்வின் தனியுரைகளைப் போல் ஏ மேஜர் கீயில் தனித்து ஒலிக்கிறது. அதன்பின் பியானோ அதனுடன் இணைந்துகொண்டு தல்ஸ்தோயின் பாலுணர்வுப் பொறாமை-கொலைப் பகுதிகளைப் போல் ஆத்திரத்துடன் இருண்மையான ஏ மைனர் கீயில் விரையும் பிரஸ்டோவிற்கு இட்டுச்செல்கிறது. ஆத்திரம் அடங்கியபின், தல்ஸ்தோயின் நாயகன் பரிதாபகரமாக ரயிலில் தனித்து விடப்படுவதைப் பிரதிபலிப்பது போல், மீண்டும் முதலில் ஒலித்த அடாஜியோவிற்குத் திரும்பி ஒரு கோடாவில் நிறைவுபெறுகிறது.   

*   

எஜமானரும் மனிதனும் (Master and Man) (வில்லியம் காஸின் த பெடர்ஸன் கிட், ஈடித் வார்டனின் ஈதன் ஃரோம்-மிற்கு அடுத்து, எனக்குப் பிடித்த பனிக்கதைகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் கதை) என்ற அந்த அருமையான கதையின் முடிவு நமக்கு இவ்வகமையவாதத்திலிருந்து விடுபடுவதற்கான மற்றொரு வழியைச் சுட்டுகிறது. கறாராக பேரம் பேசும் வசீலி ஆண்ட்ரியேவிச் ப்ரெகுனோவ் எனும் வியாபாரி (அவனுக்கு அவ்வாற்றலைப் பற்றிய பெருமிதமும் உண்டு) பனிப்புயல் அபாயம் நிறைந்திருக்கும் மாலையில் பணியாள் நிகிடாவுடன் அவசரக் கொள்முதல் நிமித்தமாக பனிச்சறுக்கூர்தியில் புறப்படுகிறான். வழிதவறி, பயனற்ற வகையில் இலக்கின்றி அலைந்து திரிந்துவிட்டு, குதிரைக்கு ஓய்வளிப்பதற்காக வேறு வழியின்றி பயணத்தை இடைநிறுத்தம் செய்கிறார்கள். முதலில் பனிப்புயலைப் பற்றிச் சிந்திக்காதிருப்பதற்காக தனது வியாபாரத்தை பற்றி மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கும் ப்ரெகுனோவ் இறுதியில் நிகிடாவை அங்கேயே சறுக்கூர்தியில் விட்டுவிட்டு புகலிடம் தேடுவதற்காகக் குதிரையில் தனியே புறப்படுகிறான்.

அங்கு சுற்றி இங்கு சுற்றி ஒரே இடத்திற்கே திரும்பி வருவதால் தற்போது பீதியடைந்திருக்கும் ப்ரெகுனோவ் மனதில் (நம் மனதிலும்) புயலைப் பற்றிய பயத்தை தல்ஸ்தோய் மிகச் சாதுர்யமாக நுண்தகவல்களை அடுக்கியபடி அதிகரிக்கிறார். போரும் அமைதியும் நாவலை பற்றிப் பேசுகையில் விமரிசகர் பெய்லி தல்ஸ்தோயின் இத்திறனை மிக அருமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார் – “குறிப்பிட்ட நோக்கத்தோடோ அல்லது ஒழுங்கற்று எதேச்சையாக குவிக்கப்பட்டது போலல்லாது மிகப்பெரிய உயிரினமொன்று முன்செல்வதின் அறிகுறியாக, அசைந்துவரும் யானையின் முதுகில் எண்ணிக்கையில் மிகுந்திருக்கும் சுருக்கங்கள் போல்…” ஒருவழியாக பனியூர்தி இருக்கும் இடத்திற்கே அவன் திரும்பிட நேருகையில் அவன் வேலைக்காரன் அங்கு குளிரில் உறைந்து இறந்துகொண்டிருக்கிறான். அதற்குப்பின் வருவது அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும் கதையின் உச்சம்- 

“வசீலி ஆண்ட்ரியேவிச் அரை நிமிடம் பேசாமல் நின்றுகொண்டிருந்தான். பின் திடீரென, ஆதாயமான கொள்முதலை முடித்து வைக்கும் கைகுலுக்கலில் இருக்கும் திடத்துடன், ஓரடி பின்வைத்து, சட்டைக்கையை மடித்துவிட்டுக்கொண்டு நிகிடா மீதும் பனிச்சறுக்கின் மீதும் விழுந்திருந்த பனியை வாரி வெளியே தள்ளினான்.” 

இறுக்குப் பட்டையை தளர்த்தி மென்மயிர் மேலங்கியை பிரித்துவிட்டுக்கொண்டு நிகிடாவை கீழே தள்ளி அவன் மேல் படுத்துக்கொள்கிறான். அந்நிலையில் வெகு நேரமாக அசையாதிருக்கும் நிகிடா இறுதியில் பெருமூச்சிறைத்தபடி அசைகிறான். அதற்குப் பின் மொழியப்படுவது நம்மைச் சிலிர்க்க வைக்கிறது-

“அப்படி வா! நீயா சாகப்போகிறாய்! அப்படியே அசையாதிரு, குளிர் காய்ந்துகொள், அதுதான் நம் வழி” என்று வசீலி ஆண்ட்ரியேவிச் ஆரம்பித்தான். 

தீவிரமான கொடுக்கல் வாங்கல் நோக்குடன் வாழ்வை அணுகும் இம்மனிதன், சற்று முன் வாழ்நாள் முழுதும் அவனுக்கு விசுவாசத்துடன் உழைத்திருக்கும் வேலைக்காரனை பனியில் மரிக்கவிடத் துணிந்து, “இவன் இருந்தாலும் செத்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை… ஆனால் கடவுள் புண்ணியத்தில் நான் உயிர்த்திருப்பதற்கு பயனிருக்கிறது” என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்ளும் இவன்தான் இப்போது “அதுதான் நம் வழி” என்று கூறுகிறான். 

அதற்கு மேலும் தன்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை என்பது அவனைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கண்களில் நீர் மல்க, தொண்டையில் எழும்பிவரும் துக்கத்தை விழுங்கி அமிழ்த்துவதைத் தவிர அவனால் வேறெதுவுமே செய்ய இயலவில்லை என்பதை உணர்கையில், தான் மிகவுமே நொய்வுற்றிருப்பதாகவும் ஆனால் அந்நொய்வு, “இதமற்றதாக மட்டுமல்லாது தான் அதுவரையிலும் அனுபவித்திராத தனித்துவமான ஆனந்தத்தையும் உடனழைத்து வந்தது” என்றும் உணர்கிறான்.  

மறுநாள் அவன் இறந்துவிட்ட செய்தியை (நிகிடா பிழைத்துவிட்ட செய்தியையும்) கேட்டறிவதற்கு முன்னால் அவனது இறுதி வார்த்தைகளை, அவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் வார்த்தைகளை, நாம் கேட்கிறோம்- “பயப்பட வேண்டாம், இம்முறை நாம் அவனை இழக்க மாட்டோம்” (வாங்கி விற்பதைப் பற்றி பேசுகையில் அவனுள்ளெழும் பெருமிதத்துடன் என்று தல்ஸ்தோய் உபரி தகவல் ஒன்றை நமக்களிக்கிறார்)

எஜமானரும் மனிதனும்-இல் நாம் தல்ஸ்தோயின் பாணியை அடையாளப்படுத்திக்கொண்டே இருந்தாலும் அதை நாம் உறுத்தலாக உணர்வதில்லை. கதைக்கும் பாத்திர இயல்பிற்கும் ஏற்ப கதையாடல் தக்க அளவிற்கு விவரங்களை அளித்தபடி முன்நகர்கிறது. உச்சகணம் வரையிலும் அவனது பிரியமான கதைமாந்தருடன் குளிரில் நடுங்கி வந்த வாசகனை அக்கணத்தின் அத்வைதச் சிலிர்ப்பொன்று நடுங்குறச் செய்கிறது. சுயம் அவனை விட்டு நழுவிச்செல்கையில் தத்வமசி (அதுதான் நீ) என்ற அத்வைதக் கோட்பாட்டை ப்ரெகுனோவ் பருண்மையாக உணர்கிறான். போரும் அமைதியும்-மில் வரும் அந்தப் பிரபலமான இரவுக்காட்சி நமக்கு நினைவிற்கு வருகிறது. முடிவிலா பெரும்கூடாரத்தில் தணல்கள் தணிந்துகொண்டிருந்தன, காடும் புலமும் முழு நிலவொளியில் அடர்ந்து விரிந்தன, அவற்றிற்கும் அப்பால் அதனோடு இணைய அழைப்பு விடுக்கும் ஒளிர்ந்து ஊசலாடும் தொலைவு… என்று விரிந்துசெல்லும் அந்த அற்புதமான தரிசனம்- “யாதும் எனதே, என்னுள் யாதும், நானே யாதும்.”

ஹாஜி முராத்-இல் “நான் அதுவல்ல” என்ற உணர்வு, குயில்களின் கூவல்களில் விரிவுற்று விடுதலையளித்தால் எஜமானரும் மனிதனும்– இல் அதையொத்த ஆனந்தநிலை, “நான் அதுவும்கூட” என்ற உணர்தலால் எய்தப்படுகிறது. அகமையவாதத்தைப் போல் பரிவும் இறவாமைக்கான சுட்டெண் போலிருக்கிறது! 

*

விமரிசகர் ஐசையா பெர்லின் ஒரு முறை தல்ஸ்தோயைப் பற்றி இப்படி கூறினார்: “இயல்பில் நரியாக இருப்பினும் தன்னையொரு முள்ளெலியாக கற்பனை செய்துகொண்டார்.” கிரேக்கக் கவிஞர் ஆர்கிலோக்கஸ் வழியே நமக்கிதன் அர்த்தம் புலப்படுகிறது- நரி பல விஷயங்களை அறிந்திருக்கிறது, முள்ளெலிக்கு தெரிந்திருப்பதோ ஒரேயொரு மிகப் பெரிய விஷயம் மட்டுமே.” எவ்வாறு கலை செய்வது என்பதைக் காட்டிலும் எவ்வாறு வாழ்வதென்பதே தல்ஸ்தோயின் பிரதான நோக்கமாக இருந்தது. அதனால்தான் மனிதகுலம் சரியாக வாழ்வதற்கு அத்தியாவசியமான அந்த ஒற்றை உண்மையை வாழ்நாள் முழுதும் அவர் தேடிக்கொண்டிருந்தார். அவரது கலை வெற்றி பெற்றிபெறும் இடங்களில் இம்முள்ளெலித்தனம் பிரதியில் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படாது, அதன் எண்ணற்ற நுணுக்கங்களில் நம்மை வசியப்படுத்தும் அந்த அலகிலா விளையாட்டு, நரியின் கண்களில் சட்டென மின்னி மறையும் ஒளிக்கீற்றாக இயல்பாகவே பரிணமிக்கிறது.  

முள்ளெலி கதை நெடுக பவனிவருவதே க்ராய்ட்சரின் மிகப் பெரிய பலவீனம் எனலாம். ஆனால் அறக் கோட்பாட்டின் அருவருக்கத்தக்க அட்டைப்பட உருவத்திலிருந்து காமமும் சந்தேகமும் பிடரி பிடித்து உந்தும் கொலைகார மிருகமாக உருமாறி இறுதியில் ஊர் பேர் தெரியாத சக பயணியிடம் மன்னிப்புக் கோரும் பரிதாபமான மனிதனாக நம்மை நெகிழ்த்தும் விதம் அதன் மிகப்பெரிய பலம் என்பதில் சந்தேகமில்லை. உடலுறவையும் கொலையையும் முற்றிலும் வேறுபட்ட செயல்களென நாம் கருதினாலும் அம்முடிவின் வெளிச்சத்தில் அவ்விரு செயல்களிலும் அடியோட்டமாக ஓடும் சுயநலத்தைப் பற்றியும் நாம் சிறிது சிந்திக்கிறோம். இச்சை பூர்த்தியாகும்வரை, மற்றமையின் மெய்ம்மையை உணர முடியாத ஒரு சுயநலம். “முதலில் அதை எதிர்க்கும் கச்சிலும் பின் அதைவிட மென்மையாக இருக்கும் பிறிதொன்றிலும்” கத்தியைப் பாய்ச்சுவதற்கு முன் போஸ்ட்னிஷெவ்-வின் விழிப்புணர்வில் ஒரு கணத்திற்கு ஏதோவொன்று மின்னி மறையும் கொடூரமான அக்காட்சியை நினைவுகூர்கிறோம். பின்னர் சிறையில் இருக்கையில்தான் “மற்றொரு மனிதப்பிறவியைத்தான்” கொன்றுகொண்டிருக்கிறேன் என்று ஆழ்மனதில் கொப்புளித்த ஓர் உணர்வாக அவன் அதை அர்த்தப்படுத்திக்கொள்கிறான்.

https://m.media-amazon.com/images/M/MV5BYjg0YTUxNmUtZTgyOC00MDUwLTlkMjUtODkzMDVkNDMwNzI5XkEyXkFqcGdeQXVyNDUzNjkyMg@@._V1_SY1000_CR0,0,800,1000_AL_.jpg
The Kreutzer Sonata (1915) திரைப்படம்

கதையைக் குறித்த டயரி குறிப்புகளுக்கு நேர்மாறாக போஸ்ட்னிஷெவ்-வே மனைவியிடம் மன்னிப்பு கோருகிறான். அவளது பதிலோ கற்பனைமிக்க வாசகனுக்கு பல புது சாத்தியங்களை அளிக்கிறது: “மன்னிப்பா! அதெல்லாம் வெறும் குப்பைக் கூளம்… சாகாமலிருப்பது மட்டுமே!” போரும் அமைதியும் மூன்றாம் பகுதியின் மூன்றாம் பாகத்தில் பொரோடினோ போர்க்களத்தில் அடிபட்டுக் கிடக்கும் இளவரசன் ஆண்ட்ரூவுடன் அவளை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆண்ட்ரூ விவிலிய “நற்செய்தியின்” அன்பையும் கருணையையும் உணர்ந்துகொண்ட மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, அனடோல் நடாஷா குறித்த முந்தைய பழிவாங்கும் உணர்வுகளைப் புறந்தள்ளி தற்போது “உயிர்த்திருக்கும், மெய்ம்மையான” அடிப்படைகளில் அவர்களை உணர முடிவதால், இருவரையும் மன்னிக்கும் பெருந்தன்மையைக் கண்டடைகிறான்.

போரும் அமைதியும் (1869) க்ராய்ட்சருக்கு (1889) முன்னால் எழுதப்பட்டது என்ற தகவலை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆசிரியனின் “பரிணாம வளர்ச்சி” போன்ற எந்தவொரு கலைக் கோட்பாட்டுச் சட்டகத்திற்குள்ளும் தல்ஸ்தோய் அடங்க மறுக்கிறார். அவர் இறந்த பிறகு 1912-இல் பதிப்பிக்கப்பட்ட ஒப்பில்லா ஹாஜி முராத்-ஐ அவர் 1904 வரையில் செப்பனிட்டுக்கொண்டிருந்தார் என்பதை நாம் இங்கு நினைவில்கொள்ள வேண்டும். 

க்ராய்ட்சர் சொனாடாவின் பிரச்சனையை விமரிசகர் பெய்லி கச்சிதமாக அடையாளப்படுத்தியிருக்கிறார்: “இது எப்படி இருக்கிறதென்றால், ஷேக்ஸ்பியர் உடலுறவை வெறுத்தார். ஆனால் ஹாம்லெட் அளவிற்கு இல்லை என்பதையும், மனிதர்களை அருவருத்தார்- ஆனால் டிமோன் அளவிற்கு பரபரப்பூட்டுகிற விதத்தில் அல்ல என்பதையும் நாம் அறிந்திருப்பது போல்.” ஒருவேளை இதுவரை தான் அனுமானித்தது குறிப்பிட்ட மரத்தில்தான் இருக்கிறது என்று தவறான மரத்தைப் பார்த்துக் குரைத்துக்கொண்டிருக்கும் நாயைப் போல் நாமும் நம்மையே முடிச்சிட்டுக் கொள்கிறோமோ என்னவோ! ஒருவேளை மணவாழ்வுப் பிணக்கு, காமம், பொறாமை இவையனைத்தும் விதிவிலக்காக அல்லாது, இந்த கேடுகெட்ட தம்பதியருக்கு மட்டுமே உரித்தாக அல்லாது, அனைவருக்குமே பொருந்தும் என்பதைக் கண்டறிவதே இக்கதையின் நோக்கமோ என்னவோ!

ஏனெனில் ஆண்ட்ரூ, குட்டி இளவரசி, பியர், ஹெலீன், ஆன்னா, வெரான்ஸ்கி ஆகியோரின் வாழ்வுகளைத்தான் க்ராய்ட்சருக்கு முன்னேயே நாம் எதிர்கொண்டிருக்கிறோமே. (போஸ்ட்னிஷெவ் ஆன்னா காரனீனா-வின் பிரசித்தி பெற்ற முதல் வரியை சற்றே மாற்றிக் கூறுவானாயின், திருமணங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை, ஆனால் அவை ஒவ்வொன்றுமே அவற்றிற்கே உரிய விதத்தில் மகிழ்வற்றவையாக இருக்கின்றன என்று கூறியிருப்பான்). ஏன், தல்ஸ்தோயின் இறுதிக் கதை The Devil (1909)-லிலும்கூட அதன் நாயகன் Eugene Irtenev, அவன் காமுற்றிருக்கும் Stepanida-வைக் கொல்வதா அல்லது தன் மனைவியை கொன்றுவிட்டு Stepanida-வுடன் ஓடிவிடுவதா என்று இருதலைக்கொள்ளி எறும்பாக அவதிப்பட்டு இறுதியில் தன்னையே மாய்த்துக்கொள்கிறான். க்ராய்ட்சரின் பின் இணைப்பில் தரப்பட்டிருக்கும் கதையின் மாற்று முடிவில் வரும் வரியே அதற்கு அடுத்து வரும் கதையான The Devil-லை ஆரம்பித்து வைக்கிறது என்பது தற்செயல் அல்ல. அவ்வரி மத்தயூ v. 28-ஐ மேற்கோள் காட்டுகிறது-

“ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண்கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவு கொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான்.”

*

ஒருகால் க்ராய்ட்சர் சொனாடா சுட்டுவது முற்றிலும் வேறொன்றாகவும் இருக்கலாம். கொலைக் கதையொன்றை எழுதத் தொடங்கிய தல்ஸ்தோய் அதனால் உந்தப்பட்டு நிஜ வாழ்வில் தான் வலியுறுத்திய கருத்துகளின் தர்க்கத்தை அதன் நெருக்கடி விளிம்புவரை எடுத்துச் சென்றால் என்னவாகும் என்பதைப் புனைவில் கற்பனை செய்துபார்த்திருக்கலாம். ஒருகால் அந்தப் புனைவுச் சோதனை திடுக்கிடும் சில சுய-கண்டுபிடிப்புகளை அவருக்கு அளித்திருக்கலாம். சிடுக்குகள் நிறைந்திருக்கும் தன் காம விழைவைக் கட்டுப்படுத்தும் திருத்தமாக உருவாக்கிக்கொண்ட காதல், இச்சைத் தவிர்ப்பு குறித்த போதனைகளின் உட்கிடையாக வன்மமும் க்ரோதமும்கூட இருக்கலாம் என்பதை அவர் கண்டறிந்திருக்கலாம்.

இக்கண்டுபிடிப்பு இவ்வளவு தாமதமாக வராமல் முன்னதாகவே வந்திருந்தால் தனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கலாம். போஸ்ட்னி (Pozdny) என்ற சொல்லிற்கு ரஷ்ய மொழியில் “தாமதம்” என்று அர்த்தம் என்று தல்ஸ்தோயின் சரிதையாளர் கூறியது இங்கு நமக்கு ஒரு திறப்பை அளிக்கிறது. அதன் வெளிச்சத்தில் போஸ்ட்னிஷெவ்-வை “அவனைப் புனைந்தவனின் துயர்மிகு கற்பனையில் தாமதமாக உதித்தவன்” என்று நாம் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். 

நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் “தாமதமாக வந்தாலும் ஒரு வழியாக வரவாவது செய்ததே” என்று ஆறுதல்படுத்திக் கொள்ளலாம், ஏனெனில், “மன்னிப்பா? அதெல்லாம் வெறும் குப்பைக் கூளம்… சாகாமல் இருப்பதொன்றுதான்” என்ற நரித்தனமான கண்டறிதலே நாம் கண்டறிவதற்கான ஒரே உண்மை என்று அந்த முள்ளெலி மனம் தளர்ந்து அதன் வேட்கையைத் துறக்கக்கூடாது என்றுதானே நாமெல்லோரும் தீவிரமாக நம்புகிறோம்? அந்த நம்பிக்கை வீண் போகுமாயின் மானுடத்திடமிருந்தே நாம் பிரிந்துசெல்ல வேண்டி வரும். ஏனெனில் போஸ்ட்னி என்ற ரஷ்ய சொல்லின் மற்றொரு பொருள் “விடைகொடுத்தல்” என்பதால்.

*

மூலநூல்கள் / மேலும் படிக்க: 

  1. Tolstoy, Leo, Collected Shorter Fiction, Everyman’s Library, 2001
  2. Tolstoy, Leo, War and Peace, Vintage Classics, 2008 
  3. Tolstoy, Leo, Anna Karenina, Penguin, 2000 
  4. Bayley, John, Tolstoy and the Novel, Viking Press, 1967
  5. Bloom, Harold, The Western Canon, Harcourt Brace, 1994
  6. Wilson, A.N, Tolstoy, Ballantine Books, 1989. 
  7. Berlin, Isiah, The Hedgehog and the Fox, Princeton University Press, 2013
  8. Saki (H.H. Munro), The Storyteller, The Penguin Complete Saki, Penguin, 1987
  9. தி. ஜானகிராமன், சிலிர்ப்பு, காலச்சுவடு, 2008

1 comment

Comments are closed.