(தல்ஸ்தோயை உளவியல் ரீதியாக அணுகும் இந்தக் கட்டுரைக்கு முதல் தலைப்பாக பாவியும் ஞானியும் என்று இருந்தது. அதுவே சரியான தலைப்பாகவும் சில நேரங்களில் தோன்றுகிறது)
இந்தியப் புலத்தில் தல்ஸ்தோய் அளவுக்கு உச்சரிக்கப்பட்ட பெயராக வேறு எந்த இலக்கியவாதியின் பெயரும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இலக்கியம் தங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பகுதியாக இல்லாதவர்கள் வாழ்விலும் அவர் முக்கியமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். உதாரணம், காந்தி. இதற்கு தல்ஸ்தோயின் இலக்கியமல்லாத பிற்கால எழுத்துகள் காரணம் என்றாலும் தல்ஸ்தோய் இலக்கியத்தின் மூலமாகவே அவருடைய ஆன்மீக அரசியல் சிந்தனைகளுக்கும் வந்துசேர்ந்தார் என்பதால் அவருடைய வாழ்வையும் நாம் உற்றுக் கவனிப்பது அவசியமாகிறது.
தமிழில் தல்ஸ்தோய் தஸ்தாயேவ்ஸ்கி என்ற இரண்டு எழுத்தாளர்கள் மீதும் பக்திப்பூர்வமான ஈடுபாடு உண்டு. எழுபதுகளில் சோவியத் கம்யூனிசத்தின் பிரச்சார அலைகளாக மாக்சிம் கார்க்கி முதலான ருஷ்ய சோஷலிச எழுத்தாளர்களின் மலிவு விலைப் புத்தகங்கள் வந்து சாடுவதற்கு சற்று முன்பே தொடங்கிவிட்டது என்றாலும் இன்றளவும் அவர்கள் மீதான வாசிப்பும் கவனமும் நீடிப்பதற்கு அந்த மலிவு விலைப் பிரசுரங்கள்தான் காரணம். நானும் இருவரையும் சோவியத் வெளியீடுகளாகத்தான் படித்தேன். இதன் காரணமாகவே தமிழில் தல்ஸ்தோயை கம்யூனிஸ்ட் சித்தாந்தத்துடன் பொருத்திப் பார்க்கும் பார்வை இங்கு உள்ளது.
இது இயல்பாக எவருக்கும் நிகழக்கூடிய உணர்வுப் பிழைதான். ஆனால் தல்ஸ்தோயைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகள் அவரை சற்று விலகலுடன்- எச்சரிக்கையுடனே பார்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். லெனின், ‘நாம் வழியில் எப்போதும் தல்ஸ்தோயிசத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டேதான் செல்ல வேண்டும்’ என்றே சொல்கிறார். ருஷ்யப் புரட்சி வென்று ஆட்சியில் அமர்ந்த பிறகுதான் அவர் தல்ஸ்தோய் நமது சொத்து என்கிறார். மிக்கெய்ல் ஒல்மின்ஸ்கி (Mikhail Olminsky) போன்ற சோஷலிச அறிவுஜீவிகள் போரும் வாழ்வும் நாவலைப் புரட்சிக்கு எதிரானது என்றே கண்டித்தனர். ஆனால் ஸ்டாலினுக்கு தல்ஸ்தோயின் சில பகுதிகள் சோஷலிசப் பிரச்சாரத்துக்கும் ருஷ்ய தேசியவாத உணர்ச்சியை எழுப்புவதற்கும் உதவும் என்று சரியாகவே தோன்றியது.
ஜெர்மனி சோவியத் ருஷ்யாவின் மீது படை எடுக்கப்போகிறது என்று அறிவித்தவுடன் ஸ்டாலின் போரும் சமாதானமும் நூலை சுமார் ஒன்றரை லட்சம் பிரதிகள் அடித்து விநியோகிக்கும்படி செய்தார். அதில் ருஷ்ய தேசியவாத உணர்ச்சியைத் தூண்டும்படியான சில பகுதிகள் தனியாக அச்சிடப்பட்டு பொதுமக்கள் கூடும் வெளிகளில் ஒட்டப்பட்டன. ஸ்டாலின் ஒருபுறம் உலகத் தொழிலாளிகள் அரசாங்கம் என்று பேசினாலும் ருஷ்யப் பெருமிதம் அவருக்கு இருந்தது. அதை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்திருந்தார். பொதுவாக தல்ஸ்தோயின் மீதான கம்யூனிஸ்டுகளின் அவநம்பிக்கைக்குப் பல காரணங்கள் உண்டு.
முதல் காரணம் அவரது வர்க்கம். தல்ஸ்தோய் ருஷ்யாவின் மிக உயர்ந்த பிரபுக்குடிகளில் ஒன்றில் பிறந்தவர். இந்தக் குடி என்பது அன்று ருஷ்யாவில் இந்தியாவின் சாதி அடுக்கையும்விட மிக இறுக்கமான அமைப்பு. உயர்குடியில் பிறந்திராத ஒருவர் தன்னிச்சையாக ஒரு ஊரைவிட்டு இன்னொரு ஊருக்கு நகரவோ அதிக நாட்கள் தங்கவோகூட முடியாது. ஒருவர் தனது குழந்தைக்குப் பெயரிடுவதிலிருந்து சாகும்வரை அரசின் தடைகளை சந்தித்துக்கொண்டே இருக்கவேண்டியும் அனுமதிகளைப் பெறவேண்டியும் இருக்கும். சுதந்திரமாகத் திரிவதே கஷ்டம் எனும்போது சுதந்திரமாக எழுதுவது எல்லாம் ஜார் மன்னனின் கருணையால்தான் தீர்மானிக்கப்படும். அதுவும் ‘மகா பீட்டர்’ என்று அழைக்கப்பட்ட பீட்டர் அதிகாரத்துக்கு வந்தபிறகு ஏற்கனவே பலமாக இருந்த இந்த சமூகப் படிமுறை நுட்பப்படுத்தப்பட்டு இன்னும் இறுக்கப்பட்டது.
உதாரணமாக, தல்ஸ்தோய்க்கு இலக்கிய உலகின் ‘mentor’ அல்லது வழிகாட்டி என்று சொல்லக்கூடிய இவான் துர்கனேவ், எழுத்தாளர் கோகோல் மறைவுக்காக எழுதிய குறிப்பில், ஒருவரி அதிகமாகப் புகழ்ந்துவிட்டதற்காக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். ருஷ்ய சோஷலிசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அலெக்ஸ்சாண்டர் ஹெர்சன், ருஷ்யாவில், தனது பின்பகுதியில் வாழ முடியவில்லை. ஒப்பிட, தல்ஸ்தோயை ருஷ்ய அரசுகள் சகித்துக்கொண்டன. அதற்கு அவரது உயர்பிறப்பே காரணம் என்று சொன்னால் தவறில்லை. இந்தப் பாதுகாப்பு இல்லாத தஸ்தாயேவ்ஸ்கி, மரண தண்டனை வரை செலுத்தப்பட்டு, கடைசி நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் தல்ஸ்தோய் தன் மீதான வர்க்கத்தின் சுமையை உணர்ந்திருந்தார். அவர் இறுதிவரை அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றுகொண்டே இருந்தார் என்றே சொல்லவேண்டும். அது பல நேரங்களில் அவரை அபத்தமான பரிசோதனைகளுக்கு இட்டுச்சென்றது. உதாரணமாக, தனது இறுதிக் காலங்களில் தனது ஷூவை தானே தயாரித்துக்கொள்ள தல்ஸ்தோய் துவங்கினார். பிரச்சனை என்னவென்றால் தல்ஸ்தோய்க்கு அதில் எந்த விதத்திறமையும் இல்லை! ஒருமுறை தனது பண்ணையில் உள்ள பன்றிகளை, பண்ணையாட்களை நீக்கிவிட்டு, தானே கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார். உலகின் தீமைக்கெல்லாம் காரணம், தனக்கான வேலைகளைத் தானே செய்துகொள்ளாமல் பிறரது உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது என்ற கருத்துக்கு அவர் அப்போது வந்து சேர்ந்திருந்தார். அவரது உயர்ந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் பன்றிகள் முரண்டு பிடித்தன. அவற்றை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே அவற்றைப் பலவீனப்படுத்த அவற்றுக்கான சாப்பாட்டைக் குறைக்க அவை பட்டினியால் இறந்துபோயின.
இந்த மாதிரி விஷயங்களில் காந்தியின் நினைவு வருவதை ஒரு இந்தியரால் தவிர்க்க முடியாது. காந்தியின் ஆட்டுப்பால், கடலை, தனக்குத்தானே முடிவெட்டிக்கொள்வது போன்ற பரிசோதனைகளின் முன்னோடி தல்ஸ்தோய். தனது பிற்காலத்தில் குடி, புகை, மாமிசம் எதுவும் இல்லாமல் வாழ முயன்றார். பிறருக்கும் போதித்தார். ஆனால், காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் தல்ஸ்தோயையும் தாண்டியது. தல்ஸ்தோய்க்கு ஒருபோதும் அந்தத் துணிவு வந்திருக்காது. அதீத காமம் எப்போதும் அவரது ஆளுமையின் ஒரு பகுதியாகவோ பலவீனமாகவோ இருந்தது. மிக முதிர்ந்த வயதில்கூட, புதிதாக வந்த சமையல்காரனின் மனைவியின் அழகு அவரைத் தூண்ட, தன்மீது நம்பிக்கை இல்லாமல் ஒவ்வொரு முறை சமையல் அறையைக் கடக்கும் போதும் யாராவது ஒருவரைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்.
தல்ஸ்தோயை காமத்திலிருந்து அவரது நண்பரோ மகனோ மனைவியோ கடவுளோ கடைசிவரை காப்பாற்ற வேண்டியிருந்தது. காந்தி இந்தச் சபலத்தை நேரடியாக நிர்வாணப் பெண்களுடன் உறங்கும் சோதனைகள் மூலம் எதிர்கொண்டார். ஆன்னா காரனீனா எழுதிய பிறகுகூட தல்ஸ்தோயால் தனது சபலத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதில் வெற்றி பெறமுடியவில்லை. ஆன்னா காரனீனா அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகும். ஒரு கலைஞன் என்ற இடத்திலிருந்து போதகன்- ஆசிரியன் என்ற இடத்துக்கு இந்த நாவலுக்குப் பிறகே தல்ஸ்தோய் நகர்கிறார்.
கம்யூனிஸ்டுகள் அவரை அவநம்பிக்கையுடன் பார்த்ததற்கு இன்னும் காரணங்கள் உண்டு. அவரது ‘கடவுளின் அரசாங்கம்’ போன்ற கனவுகளை அவர்கள் இரசிக்கவில்லை. அவர்களது பொற்காலம் எதிர்காலத்தில் இருந்தது. தல்ஸ்தோயின் பொன் உலகம் விவிலியத்தின் ஏதேன் தோட்டமேதான். அவர் மனிதன் தனது அகங்காரத்தினால் அவனுடைய தூய நிலையிலிருந்து சரிந்துவிட்டான் என்று நினைத்தார். இதில் அவர் ஃபிரெஞ்சு எழுத்தாளர் ரூசோவின் எழுத்துகளால் பாதிக்கப்பட்டிருந்தார். Noble Savage என்ற கருத்தாக்கத்தை தனது வலிமையான எழுத்துகளின் மூலம் மேற்கில் உருவாக்கினார். ரூசோவைப் பின்பற்றி ஒரு கனவுவாத அலை ஐரோப்பாவில் அடித்தது. ஆனால் இது வால்டேர் போன்றவர்களுக்கு அருவருப்பைத் தந்தது போலவே கம்யூனிஸ்டுகளுக்கும் தல்ஸ்தோய் மேல் தந்தது. அவர்கள் ருஷ்யப் பழமைவாத திருச்சபையின் மக்கள் மீதான பிடியை உடைக்க விரும்பினார்கள். தல்ஸ்தோய், பின்வழியாக அவர்களை மீண்டும் மதத்துக்குள்ளேயே தள்ளுகிறார் என்று ஐயம் அடைந்தார்கள். அது ஓரளவு உண்மையும் கூடத்தான்.
மேலும் தல்ஸ்தோயின் சோசலிசம் மார்க்ஸூக்கு முந்தியது. பிரவுதானைச் சார்ந்தது. ஃபிரெஞ்சு சோசலிச சிந்தனையாளரான ஜோசப் பிரவுதானை (Joseph Proudhon) தல்ஸ்தோய் இங்கிலாந்து சென்றபோது சந்தித்து உரையாடியிருக்கிறார். தனி உடைமை என்பது திருட்டு என்ற புகழ்பெற்ற சொல்லாடல் பிரவுதானுடையதுதான். மார்க்சியர்கள் தங்களது துவக்கக் காலகட்டத்தில் பிரவுதானை எதிர்த்து கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. பிரவுதான் சோசலிசத்தையும் குடியானவர்கள் விடுதலையையும் வலியுறுத்திப் பேசியவர். ஆனால் வன்முறையான அதிகாரக் கவிழ்ப்புகளை அவர் ஆதரிக்கவில்லை. அவருக்கு ஃபிரெஞ்சுப் புரட்சியின் கொடூரங்கள் நினைவிலிருந்தன. ஆனால் மார்க்சியர்கள் இரண்டு வர்க்கங்கள் ஒரு உரையாடலின் முட்டுச்சந்தில் நிற்கும்போது வன்முறையே அடுத்த சொல்லாக இருக்கும் என்று நம்பினார்கள். ஆகவே மார்க்சியர்களுக்கு தங்கள் வர்க்க எதிரிகளைத் தீர்த்துக்கட்டும் தேவை இருந்தது போலவே தங்களைப் போலவே தோற்றமளிக்கும் இதர சோசலிச சித்தாந்திகளை ஒழித்துக்கட்டும் பணியும் இருந்தது. இன்றுவரை கம்யூனிஸ்டுகள் இதைத் தொடர்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம்.
கம்யூனிஸ்டுகள் தல்ஸ்தோயை ஒரு பிரவுதானியர் என்று சந்தேகித்ததில் தவறு இல்லை. தல்ஸ்தோயின் சோசலிசமும் பெரும்பாலும் குடியானவர்களின் விடுதலை குறித்தே இருந்தது. குடியானவர்களுடனான கம்யூனிஸ்டுகளின் உறவு சிக்கலானது. ருஷ்ய கம்யூனிஸ்டு கட்சி பெரும்பாலும் நடுவர்க்கப் புத்திஜீவிகளால் அல்லது தொழிலாளர்களானது. குடியானவர்களைப் புரட்சிக்குப் பயிற்றுவிக்க அவர்களால் முடியவில்லை. அது அவர்கள் அதிகாரத்துக்கு வந்தபிறகு அவர்களது ஐந்தாண்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத இலட்சக்கணக்கான குடியானவர்களைப் படுகொலை செய்வதில் முடிந்தது.
தல்ஸ்தோயின் பரிவும் கவனமும் முழுக்க குடியானவர்கள் பக்கமே இருந்தது. அவர் சமூகச் சீர்திருத்தம் என்று நினைத்தது நில உடைமைச் சீர்திருத்தத்தைத்தான். கிராமங்கள், கிராம வாழ்வு, கிராம மக்கள் மீதான பரிவை அவர் நகர்ப்புற வாழ்க்கையின் மீது காட்டவில்லை. நகர்ப்புற வாழ்வை அவர் சீரழிவு என்று நினைத்தார். வாழ்வின் முற்பகுதியில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் அவரது நேரடி அனுபவங்களும் சார்லஸ் டிக்கன்சின் பாதிப்பும் ஒரு காரணம். தல்ஸ்தோயின் முற்பகுதி எழுத்துகள் முழுக்க ரூசோ, சார்லஸ் டிக்கன்ஸ் இருவரது பாதிப்பும் மிக அதிகமாக இருந்தது. ஆங்கில இலக்கியத்தை மிகக் கவனமாகப் பின்தொடர்ந்தார். தல்ஸ்தோயின் ஆரம்பகாலக் கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது அங்கிருந்த விமர்சகர்கள் அவர் டிக்கன்சின் சோகையான பிரதி என்றே கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போரும் அமைதியும் எழுதும்வரை அவர் பற்றிய அவர்களது எண்ணம் மேம்படவில்லை.
தமிழில் தல்ஸ்தோய் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. ஜெயமோகன் நிறைய எழுதி இருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் எனதருமை டால்ஸ்டாய் என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார். ஒரு பெரிய உரையை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால் அவரது வாழ்க்கை – ஆளுமை பற்றி பொதுவாக இவர்கள் அளிக்கிற சித்திரங்கள் ஆங்கிலத்தில் hagiography என்று சொல்லப்படுகிற வியந்தோதுதல் சித்திரங்களாகவே உள்ளன. இதற்கு இவற்றை எழுதியவர்களின் தனிப்பட்ட மனச்சாய்வுகளைத் தவிர வேறு சிலவும் காரணமாக இருக்கலாம். ஜெயமோகன் ‘சரித்திர புருஷர்கள்’, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள்’, ‘விதி சமைப்பவர்கள்’ போன்ற கருத்துகளில் நம்பிக்கை உடையவர். ஆனால் போரும் சமாதானமும் போன்ற தல்ஸ்தோயின் பல நூல்கள் இந்தக் கருத்தைப் பகடி செய்கிறவை என்பது ஒரு நகைமுரண்.
போரும் சமாதானமும் நாவலில் அவர் நெப்போலியன், ருஷ்ய மன்னர் அலெக்சாண்டர் போன்றவர்கள் சேனையில் அடிமட்டத்திலிருக்கும் ஒரு சிப்பாயை விடவும் எந்தவிதத்திலும் உயர்ந்தவர் அல்லர் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். புகழ்பெற்ற தத்துவ ஞானிகளை விடவும் ஒரு கிராமத்துக் குடியானவனின் இயற்கை அறிவு உயர்ந்தது என்பது போல கசாக்குகள் போன்ற நாவல்களில் கூறிச் செல்கிறார். இது ஒருபுறமிருக்க, அவரது மனைவி சோபியா தல்ஸ்தோயின் நாட்குறிப்புகளும் அவரது மகளும் மகனும் எழுதிய நூல்களும் 1980கள்வரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது இன்னொரு காரணம். அதற்குள் அவரைப் பற்றி இங்கு ஒரு புனிதர் சித்திரம் உருவாக்கப்பட்டுவிட்டது.
இந்த மாதிரியான சித்திரங்களின் பிரச்சனை என்னவென்றால் ஒரு மனிதனது அலைக்கழிப்புகளின் தீவிரத்தை இவை மழுப்பிவிடுகின்றன. தெய்வப்படுத்துவதன் மூலம் அவர் நம்மிடமிருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டுவிடுகிறார். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எதுவும் இருப்பதில்லை. இதன் அபாயத்தை தல்ஸ்தோயின் ஆதர்ச மனிதராகிய இயேசுவும் உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது. அவர் திரும்பத் திரும்ப அவரது சீடர்களிடம் நான் செய்கிற எதுவும் உங்களாலும் முடியும் என்று சொல்கிறார். தல்ஸ்தோயின் வாழ்க்கை இலட்சியம் முழுவதுமே இயேசுவைப் போல வாழ்வது என்பதாகவே இருந்தது. அவருக்கு இயேசு கடவுளின் மகன், உயிர்த்தெழுந்தார், குருடர்களைக் காண வைத்தார், உயிர்த்தெழுந்து திரும்ப வருவார் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை. அவர் இதுபோன்ற ‘தந்திர வித்தைகள்’ இல்லாத ஒரு தூய இயேசுவை உருவாக்க விரும்பினார். தனது எழுத்துகளின் மூலம் உருவாக்கவும் செய்தார்.
இந்த ‘அறிவுப்பூர்வமான’, ‘நம்பத்தக்க இயேசு’ முழுக்க தல்ஸ்தோயின் மூளையில் உருவானவரே. அதற்கும் பாரம்பரியமான கிறித்துவ மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் தல்ஸ்தோய் மிக இள வயதிலேயே தான் ஒரு புது மதத்தை உருவாக்க விழைவதாகவே தனது நாட்குறிப்பில் எழுதினார். இதே போல், காந்தி இராமனை மையமாக வைத்து எழுப்பிய மதமும் அவருடையதே தவிர இந்து மதத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று ஒரு இந்தியர் யோசிப்பதை இங்கு தவிர்க்க முடியாதுதான். இந்த விஷயத்தில் அவர் தஸ்தாயேவ்ஸ்கிக்கு நேர் எதிரான நிலையைக் கொண்டிருந்தார். தஸ்தாயேவ்ஸ்கி மதத்தில் இந்த வாழ்க்கையில் மனிதனால் புரிந்துகொள்ள முடியாத ஒரு பூடகமான பகுதி ஒன்று எப்போதுமே இருக்கும் என்று நினைத்தார். அந்த வகையில் தல்ஸ்தோயின் ஆன்மீகம் முழுக்க முழுக்க பூமியைச் சார்ந்தது. சொர்க்கம், நரகம், மறுவாழ்வு இவை பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டால் ஒருவர் இந்தப் பூமியில் எப்படி வாழ்ந்தால் என்ன என்ற சாதாரண மனிதனின் திகைப்பை தல்ஸ்தோய் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
இது ருஷ்யப் பழமைவாத கிறித்துவச் சபையைத் தொந்தரவு செய்ததில் வியப்பில்லை. இறுதிவரை அதனுடனான அவரது உறவு பிரச்சனைக்குரியதாகவே இருந்தது. இவ்வளவுக்கும் தனது இறுதிக் காலங்களில் குடியானவர்களுடன் சேர்ந்து அவர் தொடர்ந்து பாரம்பரிய மத வழிபாடுகளுக்குள் திரும்ப முயன்றார். ஆனால் அவர் மனம் அதில் ஈடுபடவில்லை. அவர்கள் அவரை மதவிலக்கம் செய்தார்கள். அவர் இறந்தபோது தேவாலயக் கல்லறைத் தோட்டத்துக்குள் புதைக்கப்பட அனுமதிக்கப்படவில்லை.
தல்ஸ்தோயின் ஆன்மீகத்தின் அடிப்படை உந்துசக்தியாக குற்ற உணர்ச்சியையே சொல்ல வேண்டும். ஒன்று, அவருடைய அதீத உடல் இச்சை அவருக்குள் ஏற்படுத்திய குற்ற உணர்வு. அவர் மிக இள வயதிலேயே தனது இளைய சகோதரனால் விபச்சார விடுதிகளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அவருடைய முதல் ஆன்மீக நெருக்கடியே படிக்கப்போன நகரத்தில் ஒரு பால்வினை நோய் க்ளினிக்கில் சிகிச்சைக்காகத் தனியறையில் காத்திருக்கும்போது நிகழ்கிறது. கொனேரியாவுக்கு அன்றைய சிகிச்சை பாதரசத்தை ஆண்குறி வழியாக உள்ளே செலுத்துவது!அப்படிப்பட்ட சூழலில் யாருக்கும் நாம் யார், எங்கு செல்கிறோம், நாம் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்விகள் எழுவதில் வியப்பில்லை. (எனக்கு ஒவ்வொரு முறையும் பல் டாக்டர் என் வாய்க்குள் நுழைகையில் ஏற்படுகிறது) வழமையான சாமியார்களிடமிருந்து தல்ஸ்தோய் வேறுபடும் இடம் எதுவெனில் அவர் மத குருவோ அல்லது ரமணர், ஜே .கிருஷ்ணமூர்த்தி போன்ற மிஸ்டிக்கோ அல்ல. ஒரு மத குருவை வெறுப்பது போலவே அவர் மிஸ்டிக்குகளையும் ஆழ்மனதில் வெறுத்தார்.
தஸ்தாயேவ்ஸ்கியிடமிருந்து அவர் வேறுபடும் இடம் இதுதான். மிஸ்டிக்குகளை அவர் நாடிச் சென்றிருக்கிறார் எனினும் அவர் அவர்களிடமிருந்து எதையும் பெறவில்லை. போரும் அமைதியும் போன்ற நாவல்களில் அவர் ப்ரீ மேசன்கள் போன்ற குழுக்களைச் சற்று எதிர்மறையாகவே விவரித்திருக்கிறார். அவருக்கு அவர்கள் மீது ஆர்வம் இருந்தது என்பது உண்மை. மரணத்துக்கு முன்பு அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறி நேராக ஒரு மடாலயத்துக்குத்தான் செல்கிறார். அங்கு அவரது சகோதரி இருந்ததும் ஒரு காரணம். அந்த மடாலயத்துக்கு தஸ்தாயேவ்ஸ்கியும் அடிக்கடி செல்வதுண்டு. அங்கிருந்த தலைமை சன்னியாசிதான் அவரது கரமசாவ் சகோதரர்கள் நாவலில் வரும் துறவிக்கான முன்மாதிரி. ஆனால் தல்ஸ்தோய் முன்பே அங்கு அடிக்கடி சென்றிருந்தாலும் அவரது சிந்தனையில் அவர்களது பாதிப்பு மிகக் குறைவே.
தல்ஸ்தோயின் ஆன்மீக நெருக்கடிகள் முழுக்க முழுக்க அவரது அறச் சிக்கல்கள் சார்ந்தது. அதில் அபவுதீகமாய் எதுவும் இல்லை. அதனால்தான் இயேசு ஒரு தேவகுமாரன், மீண்டும் உயிர்த்தெழுவார் போன்ற சர்ச் கோரும் அடிப்படை நம்பிக்கைகளை அவரால் தரமுடியவில்லை. தனது நாட்குறிப்பில் இயேசு என்று ஒருவர் இருந்தாரா என்ற சந்தேகம் தனக்கும் இருக்கிறது என்றுகூட எழுதுகிறார். அவருக்கு இயேசு என்பவர் மானுடம் எப்படி வாழ வேண்டும் என்று மலைப்பிரசங்கத்தின் மூலமாக வழிகாட்டிய மிக உயரிய சில வசனங்களைச் சொல்லியவர். அவற்றை வாழ முயன்றவர் என்பதாகவே காண்கிறார். இந்த வகையில் அவர் பவுத்தத்துக்கு நெருக்கமாக வருகிறார். இதனாலேயே அவரை ஒரு ‘பிரசன்ன பவுத்தர்’ என்று சொல்கிறவர் உண்டு. அவர் கன்பூசியஸ் போன்ற கீழைத் தத்துவ ஞானிகள் மீதும் ஆர்வம்கொண்டிருந்தார். இந்தத் தத்துவங்கள் கிறித்துவத்தை பூர்த்திசெய்யும் என்று தனது நாட்குறிப்புகளில் எழுதுகிறார். இருந்தாலும், அவரது பிரதான பார்வை கிறித்துவப் பார்வைதான்.
பொதுவாக ஆன்மீகவாதிகளுக்கு ஏற்படும் எந்த இறை அனுபவமும் அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. தியானம் போன்ற விஷயங்களிலும் அவர் ஈடுபடவில்லை. இவ்வகையில் காந்தியும் இவ்விதமே என்பது கவனிக்கத்தக்கது.
உடல் இச்சைகள் சார்ந்த குற்ற உணர்வு கடைசி வரைக்கும் அவருக்கு இருந்தது போலவே அந்த இச்சைகளும் தீவிரமாக அவருக்குள் இருந்தது. முதல்முறையாக தனது கன்னித் தன்மையை ஒரு விபச்சாரியிடம் இழந்துவிட்டு அவர் அழுகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர்களிடம் செல்கிறார். இது மட்டுமல்லாமல் வேலைக்காரப் பெண்களிடமும் அவரது குடியானவப் பெண்களிடமும் நிறைய தொடர்புகள், கள்ளப் பிள்ளைகள். முப்பத்து நான்கு வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் முடிவெடுத்ததற்கே மாமிசத்தின் மிக வலிமையான தூண்டில்களிடமிருந்து திருமணம் தன்னைக் காப்பாற்றும் என்று அவர் நினைத்ததுதான். இவை எல்லாவற்றையும் அவர் தனது டயரியில் எழுதியிருக்கிறார். பதினெட்டு வயது நிரம்பாத சோபியாவிடம் திருமணத்துக்கு முந்தைய நாள் அவற்றைக் கொடுத்து படிக்கச் சொல்கிறார். சோபியாவின் அதிர்ச்சியை நம்மால் யூகிக்க முடிகிறது.
சோபியாவுடன் திருமணத்திற்கு சம்மதம் கொடுக்கும்போது கூட அவர் தனது பண்ணையில் வேலை பார்க்கும் ஒருவரது மனைவியுடன் தீவிரக் காதலில் இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்திருந்தது. (சோபியா தனது டயரியில் அந்தக் குழந்தை தல்ஸ்தோய் போலவே இருந்தது என்கிறார்) இந்தக் குழந்தை வளர்ந்து பின்பு தல்ஸ்தோயின் சட்டப்பூர்வமான மகன்களில் ஒருவரது வண்டியோட்டியாக வாழ்ந்து மறைந்தது. வினோதமாக தல்ஸ்தோயின் தந்தைக்கும் இதே போல ஒரு கள்ளப் பிள்ளை உண்டு. அவரும் தல்ஸ்தோயின் சகோதரர்களில் ஒருவருக்கு வண்டியோட்டியாக வாழ்ந்து மறைந்தார். அன்றைய பிரபுக் குடும்பங்களில் இதுவொரு பழக்கம்தான் எனினும் செய்தது தல்ஸ்தோய் எனும்போது நாம் அதிர்ச்சி அடைகிறோம்.
தல்ஸ்தோயின் சகோதரர் இந்த விஷயத்தில் தல்ஸ்தோயை விடவும் நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார். அவர் கல்யாணம் செய்துகொள்ளாமலேயே ஒரு நாடோடிப் பெண்ணுடன் வாழ்ந்தார். அவர்களிடையே குழந்தைகளும் உண்டு. ஒருகட்டத்தில் தனது தரத்தில் உள்ள ஒரு பிரபுக்குலப் பெண்ணைச் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்வது என்று தீர்மானிக்கிறார். ஆனால் அவ்வாறு முடிவுசெய்து சர்ச்சில் அறிக்கையும் கொடுத்தபின்பு அந்த ஜிப்சி பெண் மனமுருகி அன்னை மேரி உருவப் படத்தின் முன்பு பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதைப் பார்க்கிறார். மனம் மாறி அவளையே திருமணம் செய்துகொள்கிறார். அவரது இன்னொரு சகோதரர் விபச்சார விடுதியிலிருந்து ஒரு பெண்ணை மீட்டு அவளுடன் வாழ்ந்து அவள் கைகளிலேயே மடிந்தார். தல்ஸ்தோய்க்கு இந்தத் துணிச்சல் இருக்கவில்லை.
ஆனால் அது போன்ற பிரபுக் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்த சோபியாவுக்கே தல்ஸ்தோயின் பழைய சாகசங்கள் அதிர்ச்சியாகத்தான் இருந்தன என்று அவரது டயரி குறிப்புகளிலிருந்து தெரிகிறது. சோபியா தல்ஸ்தோயின் டயரியில் முதல் குறிப்பே இதுகுறித்துதான். அவரால் இறுதிவரை தல்ஸ்தோயின் டயரி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அது அவர்களது மணவாழ்வை ஆரம்பத்திலேயே விஷம் தோய்ந்ததாக மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. இதுதவிர தல்ஸ்தோய் தன் இளவயதில் ஒரு மிகப்பெரிய சூதாடியாக இருந்தார். ஊர் ஊராகப் போய் சூதாடினார், சூதாடிச் சூதாடி தனது பண்ணையையே இழந்தார். அவரது சகோதரர்கள் இறந்து அதன் மூலமாகக் கிடைத்த பங்கினாலேயே அவர் அந்தப் பண்ணையை மீட்க முடிந்தது. அவரது பிரிய சகோதரர் டிமிட்ரி இறந்துகொண்டிருக்கும் போதுகூட செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் சூதாட்ட விடுதிகள், விபச்சார விடுதிகள் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்ததாக அவரே டயரியில் எழுதுகிறார்.
தல்ஸ்தோய்க்கு கிறித்துவத்தின் குற்றம் அறிவித்தல் என்ற சடங்கின் மீது மிகப்பெரிய காதல் இருந்தது. தனது டயரியில் தன்னுடைய எல்லாக் ‘குற்றங்களையும்’ அவர் அறிவித்தபடியே இருந்தார். அந்த டயரிகளை சோபியாவிடம் அவர் கொடுத்தது ஒருவிதமான பாவ மன்னிப்பு கோரும் செய்கை. ஒரு நல்ல குடும்பப் பெண்ணால் எப்படிப்பட்ட பாவியையும் திருத்திவிட முடியும், அவர்களது கடமைகளுள் அது ஒன்று என்றும் அவர் கருதினார். சோபியாவால் அவர் தன்மீது சுமத்திய கிறித்து பாத்திர சிலுவையைத் தாங்க முடியவில்லை. அதிலும் அவரது கள்ளப் பிள்ளையை காதலியை தினம் சந்திக்க நேருகிற ஒருவரால் எப்படி அது முடியும்?
மேலும் சோபியாவால் தல்ஸ்தோய் ‘திருந்திவிட்டார்’ என்று நம்பமுடியவில்லை. நம்பும்படி அவரும் நடந்துகொள்ளவில்லை. தல்ஸ்தோய் போன்ற அளவுக்கதிகான உடல் இச்சை கொண்ட ஒருவருக்கு அது எப்படி சாத்தியம்? தல்ஸ்தோய்க்கு சோபியா பதிமூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொடுத்தார். பல நேரங்களில் பிரசவத்துக்குப் பிறகு குறைந்த காலம்கூட சோபியா உடல் தேற தல்ஸ்தோய் அனுமதிக்கவில்லை. ஒருமுறை கடுமையாக உதிரப்போக்கு ஏற்பட்டு மருத்துவர் வந்து எச்சரித்ததை தல்ஸ்தோயே அவமானத்துடன் தனது டயரியில் எழுதுகிறார். இவ்வகையிலும் காந்தியின் ‘சத்திய சோதனைகளுடன்’ தல்ஸ்தோய் ஒப்பிடத்தக்கவர். ஆனால் தல்ஸ்தோயைவிட காந்தி இதில் வெற்றியடைந்தார்.
பொதுவாகவே தல்ஸ்தோயின் கருதுகோள்களை அவரைவிட அவரால் பாதிப்படைந்தவர்கள் வெகுதூரம் வெற்றிகரமாகக் கொண்டுசென்றார்கள். தல்ஸ்தோயின் தன் ஷூவை தானே தைத்துக்கொள்வது, தனது மலத்தொட்டியைத் தானே எடுப்பது, பிரம்மச்சரியம் போன்ற விஷயங்களை காந்தி வெகுதூரம் கொண்டுசென்றார். தல்ஸ்தோய்க்குக் கடைசிவரை சரியாக ஷு தைக்க வரவில்லை. காந்தியின் சுழன்ற இராட்டினம் அப்படியல்ல. காந்திக்கு ஒரு ‘இலக்கியக் கடந்த காலம்’ இல்லை என்பது ஒரு முக்கியமான காரணமாகும். காந்தி ஒரு நேரடிவாதி. அவருக்குக் கற்பனைகள் குறைவு. தல்ஸ்தோயிடமிருந்த கலைஞன் என்கிற பிளவு அவரிடம் இல்லை.
தல்ஸ்தோய் ருஷ்யப் பாரம்பரிய சர்ச்சினால் மத விலக்கம் செய்யப்பட்டு தனியாக ஒரு பண்ணை வீ ட்டில் முதிர்ந்த வயதில் இருந்தபோதும் கூட அவரால் தசையின் கொடுக்கிலிருந்து தனது சிந்தனையை அகற்ற முடியவில்லை. அங்கு அவரைக் காண செகாவும் கார்க்கியும் செல்கிறார்கள். அங்கு அவர்களிடம் நடந்துகொண்ட விதம் அவரது சிந்தனையில் பிரதானமாக எவை இருந்தன என்று சுட்டிக்காட்டுகிறது.
கார்க்கியிடம் அவர், ‘நான் உன்னைவிடப் பெரிய குடியானவன்’ என்கிறார். கார்க்கி குடியானவர் இல்லை. மிக வறுமையான பின்புலத்திலிருந்து வந்தவர். ஒரு உதிரித் தொழிலாளியின் மகன். ஆனால், தல்ஸ்தோய்க்கு ஒரு குடியானவனைப் போல ‘எளிமையாக, குழந்தை போல’ ஆவதுதான் மிகப்பெரிய இலட்சியமாக இருந்தது. இது ரூசோவிடமிருந்து அவர் பெற்றது. காந்தியிடம் கையளித்தது. நகர்ப்புறத் தொழிலாளிகள் சார்ந்த கம்யூனிசப் புரட்சி அவரைச் சந்தேகத்துடன் பார்த்தது வியப்பில்லை. அவரும் விலகலுடன்தான் நடந்துகொண்டார்.
உடன் வந்த செகாவிடம் அவர் கேட்ட கேள்வி இன்னும் சுவராசியமானது. ‘நான் சின்ன வயதில் நிறைய பெண்களைப் போட்டிருக்கேன், நீ எப்படி?’
திகைத்து நின்ற செகாவிடம் அவர் பெருமையுடனும் சுய திருப்தியுடனும் கர்வத்துடனும் இவ்விதம் சொல்கிறார்-
“அதில நான் பிசாசாக்கும்”.
*
தல்ஸ்தோய்க்கு அவரது மனைவியுடன் இருந்த உறவு மிகச் சிக்கலானது. தல்ஸ்தோயின் வாழ்க்கை வரலாறுகளில் பெரும்பாலும் அவரது மனைவி சோபியா அவரது இலட்சியங்களைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு எளிய சுயநலம் பிடித்த மேட்டுக்குடிப் பெண்ணாகவே குறிப்பிடப்படுகிறார். ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நிகழ்ந்த அவரது மரணம் இந்த மனப்பதிவை பொதுப்புத்தியில் ஆழமாக வேரூன்றிவிட்டது. ஆனால் சோபியா இந்தச் சித்திரங்களில் குறிப்பிடப்படப்படுவது போல அவ்வளவு ஆழமற்ற பெண்மணி அல்ல. ஆனால், தான் அவ்விதம்தான் வரலாற்றில் சித்தரிக்கப்படுவோம் என்று சோபியா நன்கு அறிந்திருந்தார். ‘அவர்கள் என்னை Xanthippe ஆக்கிவிடுவார்கள்’ என்று அவர் தனது நாட்குறிப்பில் எழுதுகிறார். Xanthippe சாக்ரடீஸின் மனைவி. சரித்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட கொடுமைக்கார குறுகிய மனமுள்ள மனைவிகளில் ஒருவர்.
சோபியா பிற்காலத்தில் தல்ஸ்தோயிடம் கடுமையாக நடந்துகொண்டார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரை அவ்விதம் மாற்றியதில் தல்ஸ்தோய்க்கும் அவரது சீடர்களுக்கும் பெரிய பங்கு உண்டு.
சோபியாவுடன் தல்ஸ்தோய்க்கு இருந்த உறவைப் புரிந்துகொள்ள தல்ஸ்தோய்க்கு பெண்கள் மீது பொதுவாக இருந்த மதிப்பீட்டையும் நாம் பரிசீலிக்க வேண்டும். தல்ஸ்தோய்க்கு பெண் விடுதலை போன்ற விஷயங்களில் கடும் ஒவ்வாமை இருந்தது. ஒவ்வாமை அல்ல, வெறுப்பே இருந்தது. அவர் தனது புனைவுகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து ‘நவீனப் பெண்கள்’ குறித்த தனது எரிச்சலை வெளிப்படுத்துகிறார். கருத்தடை, கருக்கலைப்பு போன்ற விஷயங்களை அவர் கடுமையாக எதிர்த்தார். பத்தோ இருபதோ ‘ஆண்டவர் அளிக்கும்’ சந்தானங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களை நல்ல ‘குடியானவன்களாக’ வளர்க்க முயல்வதே பெண்களின் கடமை என்பதே அவரது கருத்தாக இருந்தது. இதுபற்றி, ‘What I Believe?‘ என்ற அவரது புத்தகத்திலும் ‘To Women’ என்று அவர் எழுதிய கட்டுரையிலும் விரிவாக எழுதியிருக்கிறார்.
தல்ஸ்தோயின் பெண் விடுதலை குறித்த பிற்போக்கான கருத்துகளை, அவரது எல்லாக் கருத்துகளையும் போலவே, கிறித்துவத்திலிருந்தும் விவிலியத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார் என்பதை நாம் காணலாம். ‘பெண்களுக்கு’ கட்டுரையில் அவர் தெளிவாகவே இதைச் சொல்லிவிடுகிறார். ஆதியில் கர்த்தர் ஆண்களுக்குக் கடின வேலையையும் பெண்களுக்கு பிள்ளைப் பேறையும் கடமையாக விதித்தார். இந்தக் கடமையிலிருந்து இருவரும் வழுவுகையில் சொர்க்கத்தை இழந்த ஆணும் பெண்ணும் பூமியில் நரகத்தையும் கொண்டுவந்து விடுகிறார்கள் என்று தல்ஸ்தோய் இந்தக் கட்டுரையில் சொல்கிறார்.
இந்தச் சமயத்தில் ஆங்கிலத்தில் labor என்று சொல்லப்படும் வார்த்தையைச் சற்று கவனிப்பது பலன் உள்ளதாக இருக்கும். இது ஆண்களுக்கு உடல் உழைப்பையும் பெண்களுக்குப் பிரசவ வேதனையையும் குறிக்கிறது! ஆண் உடல் உழைப்பை விட்டுவிட்டு நிலத்தில் பாடுபடுவதை விட்டுவிட்டு வேறுவிதமான பொழுதுபோக்குகளில் ஈடுபடத் துவங்கும்போது பெண்ணும் தன் உழைப்பான பிள்ளை வளர்ப்பிலிருந்து நழுவத் தொடங்குகிறாள். அவள் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள். பெற்ற குழந்தைகளுக்குப் பாலூட்ட மாட்டேன் என்கிறாள். கலை, நாடகம், இசை, நாவல் எழுதுவது என்று ஆண்கள் தங்கள் வாழ்வை வீணடிப்பதைக் காண்கிற அவள், தானும் அவற்றைச் செய்யத் துவங்குகிறாள். ஏனெனில் ஆண்களின் கடமையான கடின உடல் உழைப்பு அவள் செய்ய முடியாததாக இருந்தது. ஆனால் ஆண் செய்யும் இந்த ‘ஏமாற்றுகளை’ அவளாலும் செய்ய முடியும். இந்த ஏமாற்றுகள் மூலம், அவள் தனது பிள்ளைகளுக்குச் சேர வேண்டிய உடலை, தனது சொந்த இன்பத்துக்காகவும் சீரழிந்த பிற ஆண்களைக் கவர்ந்து அவர்களை அடிமைப்படுத்துவதற்காகவும் பயன்படுத்திக்கொள்கிறாள்.
சோபியா, இதுபோன்ற கருத்துகளைக்கொண்ட தல்ஸ்தோயைத்தான் எதிர்கொண்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சோபியா தல்ஸ்தோய்க்கு பதிமூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொடுத்தார். அவரது திருமணத்தின் முதல் பதினைந்து ஆண்டுகளும் தொடர்ச்சியான பிரசவங்களிலும் பிள்ளைப் பேணலிலுமே கழிந்தது. கருத்தடை போன்ற விஷயங்களை தல்ஸ்தோய் கடுமையாக எதிர்த்தார் என்று பார்த்தோம்.
அந்தக் காலகட்டத்தில் மேற்கு நாடுகளில் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு பற்றிய சிந்தனைகள் உரக்க எழுந்தன. ஆனால் அவற்றுக்கு எதிர்ப்பும் பலமாக இருந்தது. இங்கிலாந்தில் உடலுறவுக்குப் பின்பு பெண்ணுறுப்பில் ஒரு திரவத்தைச் செலுத்தி தேவையற்ற கர்ப்பம் உருவாவதைத் தடுக்கும் முறை பற்றிப் பேசிய ஒரு மருத்துவப் புத்தகம் தடைசெய்யப்பட்டது. ஆனால் அதன் கள்ளப் பிரதிகள் ருஷ்யாவில் கிடைத்தன. இதுபோன்ற வழிமுறைகள், ஏற்கனவே சீரழிந்த ஒரு சமூகத்தை, பெரிய அளவில் விபச்சாரத்துக்கு இட்டுச்செல்லும் என்று தல்ஸ்தோய் அஞ்சினார். ஆண் பெண் உறவு விவகாரங்களில் அன்றைய ருஷ்யா அதன் ஃபிரெஞ்சு கலாச்சாரத் தொடர்பின் காரணமாக இங்கிலாந்தைவிட சற்று சுதந்திரமாகவே இருந்தது.
ஆன்னா காரனீனா நாவலில் இந்தக் கருத்தடை முறை பற்றி ஆன்னா தனது தோழியிடம் பேசுகிறாள். அவள் அதைக் கேட்டுச் சந்தோஷமடைவதற்குப் பதிலாக அதிர்ச்சி அடைகிறாள். குழந்தைகள் கடவுளிடமிருந்து வருகின்றன என்பது அவளது கருத்தாக இருக்கிறது. அவர்களை மனிதர் தடைசெய்தல் கூடாது. அதன்பிறகு அவர்கள் இருவரும் ஒரு கிராமத்துக்குச் செல்லும்போது அங்கு ஒரு பெண் தனது குழந்தை இறந்துவிட்டது பற்றிப் பேசுவதைக் கேட்கிறார்கள். அவள், ‘அது இன்னொரு குழந்தைக்கு இன்னும் அதிகமான உணவைக் கொடுக்கும் என்று கடவுளே அதிகப்படியான ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டார்’ என்கிறாள். அவரது தோழி, ‘இதுவே உலகின் இயற்கையான குடும்பக் கட்டுப்பாடு’ என்கிறார். கடவுள் ஒரு குழந்தையை பூமிக்கு அனுப்பும்போது அதற்கான உணவையும் சேர்த்தே அனுப்புகிறார் என்கிற கிறித்துவ மதக் கருத்திலிருந்து உருவானது இது. அவன் விரும்பினால் ஒரு குழந்தையை அளிப்பான். அவனே வளர்ப்பான். விரும்பினால் எடுத்துக்கொள்வான். இன்றும் பழமைவாத மனம் கொண்ட கிறித்துவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்களிடம் இந்த மனப்பான்மை இருப்பதைக் காணலாம்.
தல்ஸ்தோய் இதில் மட்டுமில்லாமல் குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களிலும் மிகப் பழமைவாத மனநிலை கொண்டவராகவே விளங்கினார். சோபியாவின் முதல் பிரசவம் அவரது அம்மா அவரைப் பெற்றெடுத்த குறுகலான ‘பரம்பரை சோபாவிலேயே’ நிகழவேண்டும் என்று வற்புறுத்தினார். மூன்றாவது பிரசவத்துக்குப் பிறகு சோபியாவுக்கு முலை அழற்சி ஏற்பட்டு தாய்ப்பால் ஊட்ட முடியாமல் கடும் வலி ஏற்பட்டது. சோபியா ஒரு பாலூட்டும் செவிலித்தாயை வேண்டியதற்கு தல்ஸ்தோய் கடும் அதிர்ச்சி அடைந்தார். மருத்துவர் இடைப்பட வேண்டியதாயிற்று. அப்படியும் மனம் ஆறாமல், ‘the infected family’ என்று பெண்ணியம், பெண் விடுதலை, அது இது என்றெல்லாம் பேசி சொந்தக் குழந்தைக்கே பாலூட்ட மறுத்து நாசமாகப் போகும் ஒரு நவீனப் பெண் பற்றியும் அவளது குடும்பம் பற்றியும் ஒரு ஐந்து அங்க நாடகத்தை எழுதி மாஸ்கோவில் அதை அரங்கேற்ற முயற்சித்தார். அவரது சில கதைகளிலும் ‘பெண்களுக்கு’ கட்டுரையிலும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஆணுக்கு நிலத்தில் பாடுபடுதல் போல பெண்ணுக்கு குழந்தை பெற்றுக்கொள்வது, வளர்ப்பது, அவை பத்தோ இருபதோ எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவற்றிற்கு யாரும் நன்றியுடன் இருந்தாலும் இல்லவிட்டாலும், அவள் அதை மறுக்கக் கூடாது. இவ்வாறு தன்னலமற்றுச் செயல்படுவதன் மூலம் ஆண்களையும் மனித குலத்தையும் நன்மைக்குள் இட்டுச்செல்லும் மாபெரும் பொறுப்பு அவளிடம் இருக்கிறது.
நாம் இப்போது தல்ஸ்தோயின் பிரச்சினைகள் அவரது பிரச்சனைகள் அல்ல, கிறித்துவத்தின் பிரச்சனைகள்கூட என்று புரிந்துகொள்ளலாம். தல்ஸ்தோய் தன்னைச் சுற்றியிருந்த சமூகத்திலிருந்த பிரச்சனைகளை இயல்பாகவே ஒரு கலைஞனுக்குரிய கூருணர்வுடன் கண்டார். வேதனையுடன் உணர்ந்தார். வர்க்கங்களுக்கிடையே இருந்த பிரச்சனை, ஆண் பெண் உறவிலிருந்த பிரச்சனை, இனங்களுக்கிடையே நாடுகளுக்கிடையே இருந்த மோதல்களை அநீதிகளை எல்லாவற்றையும் கவனித்தார். ஆனால் இவற்றுக்கான தீர்வுகளுக்கு அவர் மதத்தின் பக்கம் திரும்பியது அவருக்குள் தீர்க்கவே முடியாத பிளவுகளுக்குள் இட்டுச்சென்றது. அவருக்குள் இயல்பாகவே ஒரு கலைஞன் இருந்தான். அவனை அவர் ஒரு குருவாகவும் துறவியாகவும் மாற்ற முயன்றார். இந்த மூன்று பேர்களுக்குமிடையே நடந்த இடைவிடாத யுத்தத்தின் சுவடுகளை அவரது நாட்குறிப்புகளில் காணலாம்.
‘எது கலை?’ என்கிற அவரது புகழ்பெற்ற கட்டுரையிலும் அவரது இந்தப் போராட்டத்தைக் காணலாம். தான் உணர்ந்தவற்றைப் பிறரும் இயல்பாக உணரச் செய்கிற ஒன்றே கலை. அதை இரசிக்கப் பயிற்சி தேவையில்லை என்றார் அவர். ஆனால் இதன்படி பார்த்தால் நாட்டுப்புறப் பாடல்கள், தொன்மங்கள், நீதிக்கதைகள், புராணங்கள் போன்றவை மட்டுமே இதன் வரையறைக்குள் வரும். இவை எல்லாவற்றின் அடிப்படை நோக்கமும் ஒழுக்கம் கற்பித்தலாகவே இருக்கும். வடிவ உத்திகள், சொல் நேர்த்திகள் போன்றவை இதில் முக்கியமல்ல. எவ்வளவு அற்புதமாக- நுட்பமாக செய்யப்பட்டிருந்தாலும் ஒழுக்கத்தை, அறத்தைப் போதிக்காதவை இலக்கியமோ கலையோ இல்லை.
தல்ஸ்தோய் கலைக்கான விவரணைகளை மட்டுமல்ல- மதம், அரசியல், சமூகவியல் என்று எல்லாவற்றின் பிரச்சனைகளையும் மிகச் சுருக்கிப் புரிந்துகொள்ள முயன்றார் என்றால் பிழையில்லை.
உண்மையில் தல்ஸ்தோய் கிறித்துவத்தையே ஐந்து கட்டளைகளாகச் சுருக்கிவிட்டார்,
1.எல்லோருடனும் சமாதானமாக இரு 2.தூய்மையாக இரு 3.சத்தியப் பிரமாணம் செய்யாதே 4.கெட்டதை எதிர்க்காதே 5. தேசிய அடையாளங்களை உதறிவிடு.
மேல்நோக்கில் எளிது போன்று தோற்றம் தரும் இந்த ஐந்து கட்டளைகளூம் நேர்வாழ்வில் அளிக்கும் சிக்கல்கள் பற்றி அவர் கவனத்தில் கொள்ளாமல் கலையும் அரசியலும் சமூகமும் மனிதர்களும் இந்த ஐந்து கட்டளைகளுக்குள் அடங்கி நிற்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். உதாரணமாக, தூய்மையாக இரு என்பதை காம, குரோத, அகங்காரம் போன்ற பவுத்தம் சொல்லும் அவஸ்தைகளிடமிருந்து விடுபட்டு ‘முழுமையான தூய்மை’ என்ற அர்த்தத்தில் சொல்கிறார். ஆனால் முதலில் அதீத காமம் தீயது, திருமணத்துக்கு வெளியே உறவு தவறு என்று சொல்ல ஆரம்பிக்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக காமமே தவறு, கணவன் மனைவிகூட உடல் உறவு கொள்வது அருவருக்கத்தக்கது என்கிற நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார். மதம், கலை, அரசியல் போன்றவை அதனதன் முன்னுரிமைகளோடு கூடியவை. இவை எல்லாவற்றையும் ஒரே ஒரு நெறியாக- வழியாக வகுக்கும்போது ஏற்படுகிற இடர்களைக் குறித்து தல்ஸ்தோய் கவனம் கொண்டிருக்கவில்லை.
ஐம்பது வயதுக்குப் பிறகு தல்ஸ்தோய் ஒரு கலைஞன், எழுத்தாளன் என்கிற நிலையிலிருந்து ஆசிரியன், குரு என்கிற நிலைக்கு மாறுவதைக் காணலாம். இந்த மாறுதலுக்குப் பிறகே அவர் ‘ஒருவருக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?’, ‘நாம் என்ன செய்ய வேண்டும்?’, ‘கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்குள்ளே இருக்கிறது’, ‘நான் நம்புவதென்ன?’, ‘எது கலை?’ போன்ற நீதி போதிக்கும் தன்மையுள்ள மதச் சாயல் உள்ள கட்டுரைகளையும் புத்துயிர்ப்பு போன்ற நாவல்களையும் போதனைக் கதைகள் பலவற்றையும் எழுதுகிறார்.
இந்த மத போதகர் மனப்பான்மைதான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செலவழித்து ஷேக்ஸ்பியர் ஒரு மோசமான படைப்பாளி என்று அவர் விரிவாக விளக்க முயலும் பெரிய கட்டுரையையும் எழுத வைத்தது. அந்தக் கட்டுரை தல்ஸ்தோயை இலக்கிய விமர்சகர்கள் மத்தியில் ஒரு கோமாளியாக்கியது என்றால் அது மிகையல்ல. அதை முதலில் ஆதரித்த தல்ஸ்தோயின் ஆராதகரான பெர்னார்ட்ஷாகூட முழுக்கட்டுரையைப் படித்ததும் அவரது ஷேக்ஸ்பியர் மீதான வெறுப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தக் கட்டுரையில் தல்ஸ்தோய் ஷேக்ஸ்பியரை மேதை என்று ஒத்துக்கொள்ளாததுடன் அவரை சாதாரணமான திறமைகொண்ட ஒருவர் என்றுகூட ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணங்கள் எதுவுமே கலை தொடர்பானதல்ல என்பதுதான் பிரச்சனை. எது அறம் என்று தெளிவாகச் சொல்லவில்லை, தனது நாடகங்கள் மூலமாக ஒழுக்கக்கேட்டை ஷேக்ஸ்பியர் விதைக்கிறார், வாழ்க்கையை விவரிப்பதிலேயே திருப்தி கொண்டுவிடுகிறார், வாழ்வின் நோக்கம் என்ன என்று சொல்வதில்லை என்பதைத்தான் அந்தப் பெருங்கட்டுரையின் பக்கங்களில் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
உண்மையில் மத நூல்கள், நாட்டுப்புறக் கதைகள் தவிர அவர் இலக்கியம் என்று ஒத்துக்கொண்டது டிக்கன்சின் சில கதைகள், தஸ்தாயேவ்ஸ்கியின் ஒரு நாவல், செர்வாண்டிசின் டான் குவிக்ஸாட், கதே- விக்டர் ஹ்யூகோவின் படைப்புகள் போன்ற சிலவற்றையே. செகாவின் கதைகள் மீது அவருக்கு பிரியம் இருந்தது. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணங்களை செகாவ் ஒத்துக்கொள்ள மிகவுமே தயங்குவார். அவரது பிரியத்துக்குக் காரணம் தன்னைப் போலவே செகாவும் பெண் விடுதலை போன்ற ‘சீரழிவுகளை’ எதிர்க்கிறார் என்கிற எண்ணம் எப்படியோ அவருக்கு தோன்றிவிட்டிருந்ததுதான். செகாவ் அப்படி ஒரு நபரல்ல.
இவை எல்லாவற்றையும்விட, மிகச்சிறந்த நாவல்களான ஆன்னா காரனீனா, போரும் அமைதியும் ஆகிய இரண்டையுமே சிறந்தவை என்று அவர் கருதவில்லை! அவை அவர் மனம் திரும்புவதற்கு முன்பு எழுதியவை, ஆகவே சீரழிவை ஊக்குவிக்குப்பவை. அவரது கருத்துப்படி அவர் எழுதியவற்றுள் சிறந்தவை, இன்று யாருமே நினைவில் வைத்திராத, தன் கடைசிக் காலத்தில் குழந்தைகளுக்காக அவர் எழுதிய இரண்டு நீதிக்கதைகள்!
*
(அடுத்த இதழில் நிறைவுறும்)