நூறு ரூபிள்கள்

5 comments

1

“எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன்.

“என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது.

“ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் பேச்சை அப்படியே விடப்போவதில்லை என்பதாகவோ மேற்கொண்டு என்னிடம் எதுவுமே பேசப்போவதில்லை என்பதாகவோ எதையோ அறிவித்தன.

“நீங்கள் சொன்னதுதான் சரி. ஆனால் அந்த வார்த்தைகளின் அடுக்கு சரிதானா என்பதுதான் தெரியவில்லை”. ஒரு நல்லிரவை நான் கெடுத்துக்கொள்ள ஆரம்பித்திருப்பதாக எனக்குத் தோன்றியது. முந்தைய முயக்கத்திலும் அத்தனை திருப்தி இருக்கவில்லை. உடலில் எஞ்சியிருக்கும் நேரத்தின் மதிப்பு மிகப்பெரியது. அதோடு, அது போன்ற விடுதிகளில் அதுவரையில் எனக்கு இப்படியான பேரழகி வாய்க்கக் கிடைத்ததில்லை. எங்கேயும் கூடவோ குறைத்தோ இல்லாத வாளிப்பு. மிக அபூர்வமாக, பூரண நிர்வாணத்தில்கூட அத்தனை வசியத்தை வைத்திருக்கும் மாது. அப்படியான மந்திரப் பொழுதில் இந்தக் கழிவிரக்கங்களெல்லாம் அவசியமற்றவையாகப்பட்டன. மேற்கொண்டு அந்தப் பேச்சை எடுக்கப்போவதில்லை என்பதில் நான் மிகத் தெளிவாகியிருந்தேன்.

“காதலிக்கப்பட்டேனா என்பதில் எனக்குத் தீர்மானம் இல்லை” முகத் தசைகளில் எந்தச் சுளிப்பும் இல்லாத மெழுகிய பாவனையில் இதைச் சொன்னாள்.

“அந்த வாரை வீசிவிட்டு இங்கே வா..” கையால் செய்கை காட்டி என்னருகில் அழைத்தேன்.

என் எண்ணம் ஈடேறவேண்டும் என்ற முனைப்பு அந்தப் பேச்சை முறித்த இடத்தில் எனக்கே பகிரங்கமாகத் தெரிந்தது. வந்திருப்பதின் வினையே அதுதான் எனினும் அந்தப் பட்டவர்த்தனமும் அடுத்த அரை வினாடி அவளது நெற்றியில் தெரிந்த சுருக்கங்களும் சற்று தொந்தரவு செய்தன.

“இல்லை.. வந்து என் அருகில் அமர்ந்து நீ சொல்ல நினைப்பதைச் சொல்.. மாஸ்லொவா.. அதுதானே உன் பெயர்?” தன்மதிப்பு இப்படித்தான் என்னையும் மீறிய வார்த்தைகளை உச்சரித்துவிடும். அவளுக்குள் எதையோ அச்சொற்கள் தணித்திருந்ததை உணர முடிந்தது.

“ஆமாம்.. மாஸ்லொவாதான் என் பெயர்.. இங்கே அப்படித்தான் எல்லோரிடமும் நான் சொல்லிக்கொள்கிறேன்.. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லொவா.. வீட்டில் அழைப்பதைப் போல இங்கே யாரும் காத்ரீனா என்றோ கத்யூஷா என்றோ அழைப்பதை நான் விரும்பவில்லை..” வரவழைக்கப்பட்ட அமைதியுடன் அவளது கண்களையே பார்த்துக்கொண்டிருந்த என்னை முதன்முறையாக கண்ணோடு கண்ணாகப் பார்த்துக் கேட்டாள், “நான் சொல்லலாமா? நீங்கள் கேட்பீர்களா அதை? இம்மாதிரியான விடுதிகளில் அதற்கெல்லாமும் இடமுண்டா என்ன?” அவளுமே இந்த இடத்திற்குப் புதியவளாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். 

“அதெற்கென்ன? எனக்கு உன்னுடன் பேசவும்தான் பிடித்திருக்கிறது..” உள ரீதியாக அவளைச் சாந்தமடையச் செய்யும் கண்ணியத்தை அக்குரலில் தருவித்திருந்தேன். கண்களைத் தாழ்த்த முயன்றவளின் கண்ணீரின் ஒரு சொட்டு அவளது மார்பில் விழுந்து மெல்ல உருள ஆரம்பித்தது. அத்தனை கண்ணியம் அந்த நொடியில் அவசியமில்லை என்று பட்டது.

2

துயர மனவோட்டத்திலிருந்து கணநேரமேனும் விடுபட நினைத்ததாலோ என்னவோ, என்னால் ஈடுகொடுக்க முடியாத மிருக வேட்கையை அடுத்த கூடலில் நிகழ்த்திவிட்டு சரிந்திருந்தாள். நான் உறங்கிவிட்டேனா என்ற ஐயத்துடன் கிசுகிசுப்பாக கேட்டாள்.

“திமித்ரி இவனோவிச்சை தெரியுமா உங்களுக்கு?”

“அந்தப் பெயரில் எனக்குச் சிலரைத் தெரியும். யாரது?”

“அதில் யாரோ ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.”

பதிலேதும் சொல்லாமல் யோசித்தபடி இருந்தபோது குறுக்கிட்டு, “பீட்டர்ஸ்பர்க் செல்லும் ரயிலில்தான் கடைசியாக அவரைப் பார்த்தேன். உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு” என்றவள், எதையோ சொல்லத் துவங்க ஆயத்தமாவதைப் போல எழுந்து அமர்ந்துகொண்டாள்.

அந்தத் திமித்ரி இவனோவிச்சின் அத்தைகளின் வீட்டில்தான் பணியாளாக இருந்ததாக அவள் சொன்னாள். செல்வச் செழிப்புள்ள அவ்விடத்தில் தான் ஒரு வளர்ப்பு மகளுக்கான அந்தஸ்துடன் இருந்து வந்ததாகவும், அங்கு வந்து சில காலம் தங்கியிருந்த அம்மனிதர் மீது தான் விருப்பம் கொள்ள அந்த அங்கீகாரம் தனக்கு கொஞ்சம் துணிவளித்தது என்றும், முதலில் ஏற்பட்ட திக்குமுக்காடலை இராணுவப் பயிற்சிக்கு அவர் போயிருந்த மூன்று வருடங்கள் பரிதவிப்பாக மாற்றியிருந்தது என்றும் அவள் அந்தப் பழைய கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். உடற்களைப்பில் எனக்கு அந்தக் கதையைக் கேட்கவே மனம் ஒப்பவில்லை. சற்று உறங்கிக் கிளம்பினால் இன்னொரு முறை சல்லாபிக்கலாம் என்பது மட்டும்தான் எனக்கு உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“அவன் மீண்டும் வந்தப்போது உன்னை வேட்டையாடிவிட்டு ஓடிவிட்டானா?” அந்த உரையாடலின் மீதான என் ஒவ்வாமையை முன்னிறுத்துவதாகவே இந்த வாக்கியம் ஒலித்திருக்க வேண்டும். பரவாயில்லை. அந்த நேரத்தில் என் சலிப்பையும் சோர்வையும் காட்டியாக அந்த உடனடித் துண்டிப்பு அவசியம் என்றுதான் தோன்றியது. எதையோ சொல்ல வாயெடுத்தவள் அப்படியே நிறுத்திக்கொண்டாள். குற்றவுணர்ச்சிக்கோ அறச் சிந்தனைகளுக்கோ அக்கணத்தில் வேலையில்லை என்பது போல என்னால் அந்த நொடியில் விசனம் ஏதுமின்றி உறங்க முடிந்தது.

3

“உங்களை ஒன்று மட்டும் கேட்கலாமா?”

நான் விழித்துக்கொண்டேன் என்பதை எப்படிக் கண்டுகொண்டாள் என்று தெரியவில்லை. குரல் வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தபோது, மேலாடைகளை அணிந்துகொண்டு அந்த அறையிலிருந்த இரசமிழந்த கண்ணாடியின் முன் அமர்ந்திருந்தாள்.

“அந்த மனிதரைப் பற்றி எதுவும் கேட்கப் போகிறாயா?”

“நிச்சயமாக இல்லை. உடல் கிளர்ச்சியை மட்டும் மையமாகக் கொண்ட தருணத்தில் அதையெல்லாம் பேச ஆரம்பித்தது என்னுடைய முட்டாள்தனம். நானும் இதற்கெல்லாம் ரொம்பவே பழகிப் போயிருக்கிறென். புகை.. மது.. இந்த உடற்களிப்பு.. எதுவுமே பெரிதல்ல என்ற நிலைக்கு நான் வந்து சில காலங்கள் ஆகிவிட்டன. மஞ்சள் சீட்டை விரும்பி வாங்கிக்கொண்டுதான் இந்த வீதிகளுக்குள் நுழைந்திருக்கிறேன். அதையெல்லாம் மறந்துவிடுங்கள். வேறொன்று கேட்கவேண்டும். சொல்வீர்களா?”

அந்த விரக்தியைத் தேற்றவேண்டுமா என்பதுபோல கொஞ்சம் தயங்கினேன்.

“இல்லை, நீங்கள் எதுவும் சலனப்பட அவசியமில்லை. எனக்குத் தெரிந்து மதுவருந்தாமல் இந்த அறைக்குள் வந்திருக்கும் முதல் மனிதர் நீங்கள்தான். மதுவருந்தாமல் என்னைத் துயிலுரிந்த முதல் ஆடவரும் நீங்கள்தான். வலிமைக்கு வீழ்த்தப்படுவது மட்டுமே இங்கு விதியாக இருந்திருக்கிறது. உடல் தினவில் துவண்டுதான் பெரும்பாலான இரவுகள் எனக்கு முடிந்திருக்கின்றன. அந்த விதத்தில் இது எனக்கே கொஞ்சம் ஆறுதலான இரவுதான்.”

உடலால் அல்லாமல் மனரீதியாக நான் அவளை காயப்படுத்தியிருக்கிறேன் என்பதைக் குத்திக்காட்டுகிறாளா என்று அவளது கண்களை அலசினேன். அப்படியும் தெரியவில்லை.

“சொல்லுங்கள்.. கேட்டால் மறைக்காமல் சொல்வீர்களா?”

“சொல்கிறேன்.. கேள்.”

“இந்த விடுதியின் உரிமையாளராக ஒரு பெண் இருப்பாளே அவளை நீங்கள் பார்த்தீர்களா?”

“ஆம்.. அவள் மூலமாகத்தான் வந்தேன்.. பணத்தையும் அவளிடம் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தாள்.”

“அதைத்தான் கேட்க விரும்பினேன்.. எவ்வளவு கொடுத்தீர்கள்?”

ஏனோ அந்தக் கேள்விக்கு என்னால் நேரடியாக பதில் சொல்லிவிட முடியவில்லை. அந்தச் சிறு தொகையின் மதிப்பு அவளது சுயமரியாதையைச் சிதைக்கவல்லது என்பதை அறிந்தே இருந்தேன்.

“பரவாயில்லை.. அது நிச்சயம் நூறு ரூபிள்களாய் இருக்காதுதானே?”

அவள் நிச்சயம் என்னைக் கேலி செய்யவே முயல்வதாகத் தோன்றியது. விலைமகள் ஒருத்திக்கு, அதுவும் இதுபோன்ற விடுதியில் கூலிக்கு இருப்பவளுக்கு, நூறு ரூபிளா?

“இருக்கமுடியாதுதான்.. கண்டிப்பாக இருக்க முடியாது..” முகத்தில் ஏதோ தீர்மானத்துடன் அவளே சொல்லிக்கொண்டாள். சொல்லியவள் மிதமாக புன்னகைப்பதைப் போலவும் தெரிந்தது. அந்த நொடியில் அவளது கடந்த காலத்தைக் கேட்டுவிடலாம் என்று தோன்றியது. அந்தப் புன்னகையிலிருந்த ஒரு மர்மத் துணுக்குதான் என்னைச் செலுத்தியிருக்கவேண்டும்.   

    

இராணுவப் பயிற்சிக்காக மூன்றாண்டுகள் அம்மனிதர் சென்றிருந்த காலகட்டத்தில், தான் காத்திருந்து ஏங்கியிருந்ததற்கு காரணம், அவரது கண்களில்- தான் சத்தியத்தைக் கண்டிருந்ததுதான் என்று கூறினாள். அந்தக் கண்கள் அவளது கீழ்மைகளையும் மீறி அவளைத் தேற்றியிருந்ததாகவும், தான் ஓர் உயரிய பிரஜையின் மனைவி ஆவதற்கான ஒளி பொருந்தியவளென நம்பிக்கை அளித்திருந்ததாகவும் சொன்னாள்.

“மூன்றாண்டுகள் கழித்து வந்தவனின் கண்களில் அந்த சத்தியம் மிச்சமிருந்ததா?”

இடைவிடாமல் பேசிக்கொண்டுவந்தவள் இந்தக் கேள்வியில் அப்படியே தேங்கிவிட்டாள். 

“இந்தக் கோணத்தை மட்டும் நான் சிந்தித்திடவே கூடாதென வலிந்து தள்ளிவைத்திருக்கிறேன். ஏனெனில் அது அக்கண்களில் அறவே இருக்கவில்லை என்ற முடிவிற்கு என்னால் எளிதில் வந்துவிட முடியும்.”

“அப்போதே தெரிந்ததா? அல்லது காயத்திற்குப் பின் அப்படி உணர ஆரம்பித்திருக்கிறாயா?”

“தெரிந்தும் ஏன் உடன்பட்டாய் என்று கேட்கப்போகிறீர்களா? எனக்கு இருந்ததும் வெறும் சரீர இச்சைதான் என்று முகம் தெரியாத உங்களது இராணுவ சகாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பெழுதப் போகிறீர்களா?” 

“இல்லையில்லை.. என்னிடம் எந்தப் பேனாவும் இல்லை.. நீ சொல்..”

“மன்னிக்கவேண்டும்.. எனக்குத் தெரியவேண்டும், ஏன் அப்படி கேட்டீர்கள் என..” 

எழுந்து உதறித்தள்ளிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறிவிடும் அத்தனை செளகர்யமும் எனக்கு உண்டு என்பது தெரிந்திருந்தும் இப்படிக் கேட்கிறாள் என்றால், வெறும் பச்சாதாபத்தின் பேரில் மட்டும் நான் அவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கவில்லை என்று நம்பியிருக்க வேண்டும். அந்த நுண்ணுணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பதில் சொன்னேன்.

“மூன்றாண்டு இராணுவப் பயிற்சியின் முடிவில் ஒருவன் என்னவாகத் திரும்பி வந்திருப்பான் என்பதை என்னால் ஓரளவு ஊகிக்க முடியும்.. ஒருவனது கனிவும் நற்சிந்தனைகளும் அறமும் அங்கு எத்தனை சேதப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நான் அறிவேன்.. அதனால்தான் அப்படிக் கேட்டேன்..”

இந்தப் பதில் அவளை என்ன செய்ததென்பதை ஊகிக்கவே முடியவில்லை. முகத்தை மூடிக்கொண்டு அப்படியே அமர்ந்துகொண்டாள். அருகில் சென்று கைகளை விலக்கிவிடுவதை ஏதோ தடுத்தது. படுக்கைக்கு அவளை நகர்த்திச் செல்லும் முயற்சியாக அவள் அதனை எடுத்துக்கொள்ளக்கூடும். அதற்கும் நான் தவித்துக்கொண்டுதான் இருந்தேன் எனினும் இன்னொரு முறை அவளது துயரத்தைப் பகடையாக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை.

“அவர் வரும்போதே அந்த எண்ணத்தில்தான் வந்திருப்பார் என்றா சொல்கிறீர்கள்?” அத்தனை நேரம் இந்தப் புள்ளியிலா வட்டமடித்துக்கொண்டிருந்தாள்?

“இல்லை.. அப்படி நிச்சயமாகவெல்லாம் சொல்லிவிட முடியாது.. பொதுவான கணிப்பாகத்தான் அதைச் சொன்னேன்..”

அவள் சமாதானப்பட்டதாகத் தெரியவில்லை.

“ஒரே விதியால் அத்தனை மனிதர்களும் இயங்குவதில்லையே.. என்னையும் எனக்குத் தெரிந்த மனிதர்களையும் வைத்து என்னால் சிலதை ஊகிக்கமுடியும்.. தவிர, நீ சொல்லும் திமித்ரி இவானோவிச் யாரென்றே எனக்குத் தெரியாதபோது, அவரைப் பற்றி நான் எப்படி சொல்லிவிட முடியும்?”

“இல்லை.. அவரிடம் அப்போதும் அந்த முந்தைய காதல் இருந்தது..” உற்சாகமாக மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.. “மீண்டு வந்த நாட்களின் ஒரு காலையில் நீல மலர் தோட்டத்தில் வைத்து என்னை அவர் முத்தமிட்ட போது அவரது கண்களில் அதனை நான் கண்டேன்..”

“அதுதான் முதல் முத்தமா?” வெட்கத்தில் சிவக்கும் அந்த முகக் கவர்ச்சியை எதிர்நோக்கித்தான் சொன்னேன். மாறாக எந்த மாற்றத்தையும் அவள் காட்டவில்லை. 

“ஈஸ்டர் வழிபாடு முடிந்து கோவிலின் வாசலில் இரண்டாவது முறையாக முத்தமிட்டார்.. அப்போதும் அந்தக் கண்களில் அது இருந்தது”, இம்முறை என்னிடம் பேசுவதைப் போலில்லாமல் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதைப் போல இதைச் சொன்னாள். “அது வெறும் விரக தாகம் மட்டுமல்ல.. நிச்சயம் இல்லை..”

“இறுதியாக அவரை எப்போது பார்த்தாய்?” முந்தைய வாழ்விலிருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுதான் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். அந்த மனிதனே அழைத்துக்கொண்டுவந்து இங்கு விற்றிருந்தாலும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை. 

“புறப்பட்டுக்கொண்டிருந்த ரயிலின் ஜன்னலில் முகத்தை வைத்து அழுத்தி உள்ளே இருந்தே அவரைப் பார்த்தேன். நண்பர்களோடு சீட்டாடிக்கொண்டிருந்தார். ரயில் நகர ஆரம்பித்ததும் சேர்ந்து வேகமாக ஓட ஆரம்பித்தேன். கூச்சலிட்டேன்.. கைகளால் ஜன்னலைத் தட்டினேன். கொட்டிக்கொண்டிருந்த மழையில் உள்ளே இருந்த அவருக்குக் கேட்டிருக்காது.. என்னை அவர் பார்ப்பதற்குள்ளேயே கால்கள் துவண்டு நின்றுவிட்டேன்..” 

அந்தப் பயணத்தின்போது இடையில் தன் அத்தைமார்களின் வீட்டிற்கு வந்து அவர்களைச் சந்திக்க வரப்போவதில்லை என்றும் குறித்த நேரத்தில் தன் சேனையுடன் அவர் பீட்டர்ஸ்பர்க் போக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகவும் அம்மனிதர் தன் அத்தைகளுக்குத் தந்தி அனுப்பியிருக்கிறார். கடந்து செல்லும் ரயில் நிலையத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே நிற்கும் ரயிலில் அவரைச் சந்தித்துவிடலாம் என்று இரவு இரண்டு மணிக்கு நிலையத்திற்குப் போயிருக்கிறாள். 

கைவிடப்பட்ட ஒருத்தியின் கதை இப்படித்தான் இருக்கமுடியும் என்றாலும் அக்காட்சியைக் கற்பனை செய்துபார்த்து அதில் அந்த அழகுப்பெண்ணைப் பொருத்திப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் இருந்தது.

“வயிற்றில் சிசுவுடன் என்னால் வேகமெடுத்து ஓடமுடியவில்லை.” 

மேற்கொண்டு எதுவும் கேட்டுக்கொள்ளாமல் புறப்பட்டுவிடலாம் என்று ஆயத்தமானேன்.

“நீ அவருடைய குழந்தையைத்தான் சுமந்துகொண்டிருந்தாயா?” வாய் தவறித்தான் அப்படிக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன் அல்லது அவளை என்னால் ஒரு விலைமகள் என்பதைத் தாண்டி அங்கீகரிக்க முடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும். தடுமாறி உடனே அந்தக் கேள்வியைத் திருத்தும்போது அவளது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். “நான் கேட்க வந்தது.. நீ அப்போது கர்ப்பவதியாக இருக்கிறாய் என்பது அவருக்குத் தெரியுமா?”

“தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஒரேயொரு தேக சம்பந்தத்தில் ஒரு சிசு உருவாகியிருக்கும் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். எனக்குமே அது வியப்பாகத்தான் இருந்தது.. ஆம் நிச்சயம் அவருக்கு அது தெரிந்திருக்காதுதான்.. தெரிந்திருந்தால்.. ஒருவேளை ரயிலின் ஜன்னலின் வழி என் முகத்தைப் பார்த்திருந்தால்.. எல்லாமே கூட மாறியிருக்கலாம்.. நிச்சயம் அங்கிருந்துதான் நான் தடம்புரண்டு வந்திருக்கிறேன்.. ஒரு நொடி அவர் என்னைப் பார்த்திருந்தால் போதும்.. நிச்சயம் முன்பு அவர் கண்களில் அந்தச் சத்தியத்தை நான் பார்த்திருக்கிறேன்.. எனக்குத் தெரியும்..” இடைவிடாது பேசிக்கொண்டே போனாள்.

“குழந்தை இப்போது எங்கிருக்கிறது?” 

“ஆம்.. அவர் கண்களில் நான் அந்தச் சத்தியத்தைப் பார்த்திருக்கிறேன்”. முனக்கமாக இதையே மறுமுறை சொல்லிக்கொண்டிருந்தாள். திடீரென வெடித்து ஓவென அழ ஆரம்பித்தவளைப் பார்த்துப் பதறிவிட்டேன். அப்போதுதான் நான் கேட்ட கேள்வி அவளது சிந்தையை அடைந்திருக்கும் என்று பட்டது. ஒருவேளை குழந்தை இறந்திருக்குமோ.. பச்சிளம் குழந்தை மரணங்கள் இப்போதெல்லாம் ருஷ்யாவில் பெருகிக்கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். அப்படித்தான் இருக்கும். அப்படியாயின், அவளுக்கு அது மிகையான துயரம்தான். 

“என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்..” கேவலின் நடுவே பேச ஆரம்பித்தாள்.. “அன்றிரவு ரயிலில் அந்தச் சீட்டுக் களியாட்டத்தில் அவரிடம் இம்மியளவும் குற்றவுணர்ச்சி இருக்கவில்லை.. அதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.. இம்மியளவும் இல்லை.. அம்மனிதரை அதற்காக முழுமையாக வெறுக்கிறேன்.. அவரது எஞ்சிய முழுவாழ்விற்குமாக அவரைச் சபிக்கிறேன்.”

நான் கேட்டிருந்த கேள்வியை அவள் கவனித்திருக்கவே இல்லை போலும். நல்லதுதான். 

“அந்தக் களியாட்டம் நாடகமா அல்லது அவர் முன்பு என்னிடத்தில் நடத்தியதுதான் நாடகமா? ஆனால் இப்போதும் நான் நம்புகிறேன்.. என்னுடைய முகத்தை அந்த சன்னலின் வழி அன்று அவர் கண்டிருந்தால்.. இந்த இரண்டில் எது மெய் என்பதை மட்டுமேனும் என்னால் உறுதிப்படுத்திக்கொண்டிருக்க முடியும்.. அவரது கண்களில் நான் எனக்கான விடையை அடைந்திருப்பேன்..”

“உனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்று நீ நம்புகிறாயா?”

“இல்லை.. நிச்சயம் கிடைக்கவில்லை.. உங்களால் ஏதோ ஒரு பக்கம் சாய முடிகிறது என்றால், நடந்தவற்றை, அவற்றை நான் கிரகித்த விதத்தை உங்களிடம் சரியாக நான் கடத்தவில்லை என்றுதான் இருக்கமுடியும் அல்லது நீங்கள் எளிதில் ஒரு சார்பு நிலைப்பாடு எடுக்கக்கூடியவராக இருக்கவேண்டும்.. அந்தக் கண்களைப் பார்த்து, அவரது மூச்சினை முகர்ந்து, அந்த உடலில் கலந்து, ஓர் உயிரைச் சுமந்து, பிரிந்து, அழுது, உடைந்து எங்கெங்கோ மோதி இங்கு வந்து நின்று, இதுதான் எனக்கு நிந்திக்கப்பட்ட வாழ்வோ என என்னையே இதற்கு ஒப்புக்கொடுத்துக்கொண்டு, விரும்பாமல் சேரும் உடலிலிருந்து கிடைக்கும் சம்போக இன்பத்தின் குழப்பத்தில் திணறிக்கொண்டிருக்கும் எனது பார்வையிலிருக்கும் தர்க்கத்துடன் உங்களால் உடன்பட முடியாமல் போவதில் ஆச்சர்யமில்லை.. அதற்காக அந்தக் குழப்பத்தைப் பரிகாசம் செய்யாதீர்கள்..”

எனக்கு மதுவருந்த வேண்டும் போல இருந்தது. அவளுக்குப் பதில் சொல்லிவிடவோ, அவளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடவோ, அவளை இன்னொரு முறை புசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிடவோ எனக்கு அது உதவி செய்யக்கூடும்.

“அவர் கடைசியாக உன்னிடம் என்ன சொல்லிவிட்டுப் போனார்? திரும்பி வருகிறேன் என்று எதுவும் நம்பிக்கை சொல்லிவிட்டுப் போனாரா?” இந்தக் கேள்வி நினைவூட்டக்கூடிய எந்தவொரு தருணமும் அவளுக்கான பதிலை உள்ளடக்கியிருக்கும். மூன்றாம் மனிதனான என்னிடம் அந்த இறுதிச் சொல்லைச் சொல்லும்போது அவளது காதுகளிலும் அது கேட்கும்பட்சத்தில் அவளுக்கே அது புரியக்கூடும்.

கைகளால் பொத்தப்பட்டிருந்த முகம் மெல்ல வெளியே வந்தது. நெடுநேரம் எதுவுமே பேசாமல் அமர்ந்திருந்தாள். காலத்தில் அப்படியே உறைந்துவிட்டாள் என்றோ அவளுக்கான விடை கிடைத்துவிட்டது என்றோ எனக்குத் தோன்றியது. மேற்கொண்டு எதுவும் பேசமாட்டாள் என்று நினைத்து புறப்பட எழுந்த நொடியில் வேறொரு புதிய குரலில் சொன்னாள்.

“நூறு ரூபிள் பணத்தை ஓர் உறையில் வைத்துச் சுருட்டி, என் மார்பங்கிக்குள் செருகிவிட்டு, வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டுப் போனார்”

சற்று நேரம் அவளையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மழையிரவில் ரயில் சன்னலின் வழியே நிச்சயம் அவளை அவன் பார்த்திருப்பான் என்று எனக்குத் தோன்றியதை அவளிடம் சொல்லாமல் விடுதியை விட்டு வெளியேறி வந்துவிட்டேன். 

5 comments

Shivani Anu November 20, 2020 - 11:19 pm

அற்புதம்????

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 234| 9 நவ. 2020 November 22, 2020 - 9:30 am

[…] நூறு ரூபிள்கள் – மயிலன் ஜி சின்னப்பன் […]

Vigneshkumar R November 27, 2020 - 11:49 am

Super

Daniskaran April 26, 2021 - 7:28 pm

தஸ்தோவஸ்கியின் சூதாடி நாவலை மீண்டும் ஒருமுறை வாசிக்க தூண்டும் சிறுகதை. நல்வாழ்த்துக்கள்.

Ramya R March 26, 2022 - 9:07 pm

அருமை… ஆண் மட்டுமே அறியும் ஆண் மனம் உண்டு. பெண் அறியாத ஆண் மனம் உண்டு. இரண்டையும் சந்திக்கும் புள்ளிக்கு கொணர்ந்து நிறுத்தியிருக்கிறீர்கள்… கடைசி வரை இந்த அப்பாவிகள் அப்படியே விடை தெரியாமல் மாண்டு போவது அவர்களுக்கு நல்லது… இறுதி வரிகள் கலங்கச் செய்து விட்டது…

Comments are closed.