காந்திக்கு நெருக்கமானவராக, அஹிம்சை, ஒழுக்கம், நல்லூழ் இவற்றில் நம்பிக்கை கொண்டவராக கிட்டத்தட்ட ஒரு சமய போதகருக்கு நிகரானதொரு பிம்பமே தல்ஸ்தோய் பற்றி தமிழ்ப்பரப்பில் நிலவியிருக்கிறது. அதில் பிழையில்லை என்றாலும்கூட அப்படியான நேர்மறை பிம்பமே பலருக்கும் அவரை அணுகுவதில் தயக்கத்தைத் தந்திருக்கிறது. தல்ஸ்தோயின் பெரும் நாவல்களான போரும் வாழ்வும், அன்னா கரினீனா, புத்துயிர்ப்பு போன்றவை அடைந்த கவனத்தில் பாதியைக்கூட ஃபேமிலி ஹாப்பினஸ், த கொஸாக்ஸ், த டெத் ஆஃப் இவான் இலியிச் போன்ற குறுநாவல்கள் இங்கு பெறவில்லை. அடுக்கடுக்காய் உயர்ந்து, அகன்று பரப்பி நிற்கும் மாபெரும் கோபுரத்தின் பிரம்மாண்டத்தில் இலயித்துவிட்ட ஒருவரின் கண்ணுக்கு அருகிலிருக்கும் கற்றூண்களின் கலை நுணுக்கங்கள் பார்வைக்குப் புலனாகாமல் போவதில் வியப்பில்லைதானே!
கதைசொல்லியான மாஷாவின் தாயின் மரணத்தைத் தொடர்ந்த நிகழ்வுகளில் கதை ஆரம்பிக்கிறது. ரஷ்யாவின் உள்ளாழ்ந்த கிராமமே கதை நடைபெறும் களம். ஏற்கனவே தந்தையை இழந்து வாடும் நிலையில் தாயும் தவறிவிட மனச்சோர்வின் பிடியிலிருக்கிறாள் மாஷா. அவளை தன்னுடைய இயல்பான உற்சாகத்தாலும் விசாலமான மனத்தாலும் அதிலிருந்து மீட்டுக்கொண்டு வருகிறார் செர்ஹே. அவர், அவளுடைய தந்தையின் தோழர். மாஷாவைவிட பதினெட்டு வருடங்கள் மூத்தவர். இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்கிறார்கள். எல்லோரையும் போலவே சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பின்னர், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் கதை.
சுருக்கிச் சொல்லும்போது மிகவும் எளிமையானதாகவும் திரும்பத் திரும்ப எழுதப்பட்டும் சொல்லப்பட்டும் வரும் கதைதானே இது என்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும் ஒரு பெருமழைக்கு ஆயத்தமாகும் வானத்தைப் போல அக, புறநிலைகளைத் தகுந்த விதத்தில் கோர்த்துச் சேர்த்த விதத்திலும் ஒரே அடியாக பெய்து தீர்க்காமல் சொட்டுச் சொட்டாய் ஆரம்பித்து நின்று நிதானித்து அடைத்துப் பெய்யும் மழைபோல கதையை நகர்த்திச் சென்று வாசிப்பவனின் மனத்தில் இருக்கச் செய்த வகையிலும் இது என்றென்றைக்குமான படைப்பாக நிலைத்து நிற்கிறது. இந்தக் குறுநாவல் எழுதப்பட்டு கிட்டத்தட்ட நூற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்று வாசிக்கும்போதும் அதன் வசீகரம் குன்றாமல் உயிர்ப்போடு இருக்கிறது. இக்குறுநாவல் பேசும் விசயத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட நிகழ்காலத்தோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.
ஆதி மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்த காலம்தொட்டு இருந்து வரும் ஒரு பிரச்சினையை, எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை, அனைவரும் அறிந்த ஒரு இரகசியத்தையே – ஆண் பெண் உறவுச் சிக்கலை – பேசுகிறது இக்குறுநாவல். ஆனால், நாம் கேள்விப்பட்ட கதைகளில், கண்டுணர்ந்த நிகழ்வுகளில், ஏன் நம் சொந்த அனுபவத்திலேயேகூட தவறவிடும் சில நுட்பான உள்ளடுக்குகளை, பிரச்சினையின் பிரதான வேர்களை, அவை பரப்பி நிற்கும் சல்லிகளைச் சொல்லிச் சென்ற விதத்தில் இக்குறுநாவல் தன்னை ஒரு கிளாசிக்காக நிறுவிக்கொள்கிறது. குறிப்பாக, தந்தையின் ஸ்தானத்தில் இருந்திருக்க வேண்டியவனே அப்பெண்ணின் மனக்கிளர்ச்சிக்குக் காரணமானதை முன்னிட்டு செர்ஹே நெக்குருகும் தருணமும், எழுச்சியும் வீழ்ச்சியுமாய் தத்தளிக்கும் மாஷாவின் மனப்போக்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் விதமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இடங்கள். தல்ஸ்தோயை தஸ்தாவ்ய்ஸ்கியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தல்ஸ்தோய் புறவயமானவர் என்பதாகவும் தஸ்தாவ்ய்ஸ்கி அகவயமானவர் என்பதாகவும் ஒப்பிடுவதைக் காண முடியும். தல்ஸ்தோயை அப்படியான எளிய சட்டகத்தில் அடைப்பது எத்தனை பிழையானது என்பதை இக்குறுநாவலை வாசித்த ஒருவரால் புரிந்துகொள்ள முடியும்.
தல்ஸ்தோயின் கதைகளில் இருக்கும் சில பொதுவான கட்டமைப்புகள் இதிலும் உண்டு. ஒரு தத்துவவாதிக்கே உரித்தான தேடலும் அலைக்கழிப்பும் தல்ஸ்தோய்க்கு இருந்திருக்கிறன. அவற்றை அவர் தொடர்ந்து தன் படைப்புகளில் முன்வைத்திருக்கிறார். அவரின் பெரும் படைப்புகளில் மனித வாழ்வின் சில அடிப்படைக் கேள்விகளை முன்னிறுத்தி விடை காண முற்படுதைப் போலவே இதிலும் முக்கியமான கேள்வி ஒன்றை முன்வைக்கிறார்.
எது உண்மையான மகிழ்ச்சி?
கதைசொல்லியான மாஷாவும், செர்ஹேவும் செல்வச் செழிப்புமிக்க நிலப்பிரவுத்துவ குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எல்லாச் செல்வமும் இருந்தும் அவற்றையெல்லாம் மீறிய அமைதியின்மை மாஷாவைத் துரத்துகிறது. அவள் வசிக்கும் கிராமத்தில் அடைந்து கிடப்பதே அவளுக்குச் சலிப்பூட்டுவதாக இருக்கிறது. அங்கிருந்து வெளியேறி பீட்டர்ஸ்பர்க்கிற்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்வதே தனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று நம்புகிறாள். ஆனால் அப்போது நிகழும் செர்ஹேவினுடைய வருகை அவளை அவளுடைய அத்தனை வாதைகளிலும் இருந்து மீட்டெடுக்கிறது. செர்ஹேவின் அருகாமையே தன் மகிழ்ச்சிக்கான திறப்பு என்பதை உணர்கிறாள். செர்ஹேவோ மகிழ்ச்சி என்பது அமைதியான கிராமத்து வாழ்விலும் சக மனிதருக்கு உதவுவதிலும் இருப்பதாய் நம்புகிறார். இருவரையும் காதல் இணைக்கிறது.
மாஷா விரும்பியபடி அவர்கள் திருமணமும் செய்துகொள்கிறார்கள். காலம் செல்லச் செல்ல, திருமண வாழ்வும் ஒரு கட்டத்தில் அவளுக்குச் சலிப்பையே தருகிறது. பழையபடி அவள் விரும்பிய நகரத்து வாழ்க்கையே அவளுக்கான மகிழ்ச்சியைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று திடமாக நம்புகிறாள். இருவரும் பீட்டர்ஸ்பர்க்கும் வெளிநாட்டிற்கும் செல்கிறார்கள். சில ஆண்டுகளில் அதுவும் அவள் தேடிய மகிழ்ச்சியைத் தருவதில்லை என்று உணரும்போது அவளிடமிருந்து மனதளவில் செர்ஹே வெகுதூரம் விலகிப்போய்விடுகிறார். தன் வாழ்வு ஆரம்பகாலத்தைப் போல மகிழ்ச்சியாக இல்லை, முன்புபோல செர்ஹே தன்னை இப்போது விரும்புவதில்லை என்று தமக்குள் குமைகிறாள். அந்தப் பழைய காதல் வாழ்வையும் மகிழ்ச்சியையும் எப்படியாவது அடைந்துவிட முடியாதா என்று துடிக்கிறாள். ஆனால் உண்மையான மகிழ்ச்சி அந்தந்த தருணத்துக்கானதாக இருக்கிறது. கடந்த காலத்தின் ஏக்கத்தையும் வருங்காலத்து எதிர்பார்ப்பையும்விட நிகழ் தருணத்திலேயே அது நிறைந்திருக்கிறது. இந்தத் தெளிவை அவள் அடையுமிடத்தில் நாவல் முடிகிறது.
‘மகிழ்ச்சி’ என்பது கேட்கவும் வாசிக்கவும் சட்டென்று புரிந்துகொள்ளவும் எளியதொரு வார்த்தை போன்று தோற்றமளித்தாலும் அது எப்போதும் அகநிலை சார்ந்த விசயமாகவே இருக்கிறது. பத்து வயதில் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் கொண்டுவந்து சேர்த்த அதே பண்டிகை தினம், இருபது வருடங்கள் கழித்து, மற்றும் ஒரு நாளாக கடந்துபோவதுகூட அப்படித்தானே? ஒரு தனி மனிதனாக இப்படியான தனிப்பட்ட அனுபவத்தோடு பொருத்திப் பார்த்து மகிழ்ச்சியின் சார்புநிலைகளைப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால், அதே மகிழ்ச்சியை இரு நபர்களுக்கிடையேயான பொருளாக வைத்துப் பார்க்கும்போது அது கொஞ்சம் சிக்கலாக ஆரம்பிக்கிறது. ஒரு அகநிலை என்பதைத் தாண்டி இரு அகநிலைகள், மேலும் அவற்றிற்கு இடையான புறநிலை என்று எல்லாம் சேர்ந்தே அவர்களுடைய மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன. அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருந்து அவர்களுக்கு இடையிலான உறவு காதலாகவோ திருமண பந்தமாகவோ இருக்கும்போது அது இன்னும் சிக்கலாகிறது. அதிலும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உறைந்து போய்விட மற்றொருவர் அதைக் கடந்து சென்றிட நேரும்போது இன்னும் இன்னும் அதிக குழப்பத்தையும் அவர்களுக்கிடையே கொந்தளிப்பையும் கொண்டுவந்து சேர்க்கிறது.
ஆரம்பத்தில் மாஷாவினுடையதாகவும் செர்ஹேவினுடையதாகவும் தென்படும் கதையை, வாசிக்க வாசிக்க ஒரு கட்டத்தில் இது நம்முடையது என்று உணரத் தொடங்குகிறோம். இதில் வெளிப்படும் காதலின் கனிவில், அன்பின் வெடிப்பில், விடுதலைக்கான வேட்கையில், எல்லாம் கடந்து வந்தடைந்த நிதானத்தில் என்று வாழ்வின் ஏதேனும் ஒரு படிக்கட்டில் நிற்கும் யாரொருவரும் இந்நாவலோடு தம்மைப் பொருத்திக்கொண்டுவிட முடியும். இந்த அனுபவத்தைச் சாத்தியமாக்க தல்ஸ்தோய்க்கு நூற்றுச் சொச்சம் பக்கங்கள் கொண்ட குறுநாவலே போதுமாக இருக்கிறது. அதுவே அவரை எழுத்தாளர்களின் எழுத்தாளராக நிறுவுகிறது.
இக்கட்டுரையை வாசித்துவிட்டு ஏதேனும் ஓர் எதிர்பார்ப்போடு நீங்கள் இந்நூலை அணுகினால் அது உங்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் தகர்த்து புதியதொரு பரிமாணத்தோடு வெளிப்படும். அதுவே ஒரு செம்படைப்புக்கு உரிய இலக்கணமுமாகும். ஆயிரமாயிரம் கட்டுரைகளால் விளக்க முடியாத ஒன்றை அது எப்போதும் தன்னகத்தே ஒளித்திருக்கும். அந்த ஒன்று உங்களுக்கே மட்டுமானதாகவும் இருக்கும்.
‘ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்?’ என்ற கட்டுரையில் இடாலோ கால்வினோ இப்படிக் குறிப்பிடுகிறார். “ஒரு கிளாசிக்கை வாசிக்கும்போது நாம் அதுகுறித்து கொண்டிருந்த கருத்திற்கு நேர் எதிராக நமக்கு ஆச்சரியங்களைத் தர வேண்டும்.” இக்குறுநாவல் அதைச் செவ்வனே செய்யும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வாச்சரியத்துக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்வது மட்டும்தான்.
1 comment
[…] […]
Comments are closed.