கடைத்தேறுதலின் ஊர்வலம்: தல்ஸ்தோயின் போரும் வாழ்வும்

by எம்.கே.மணி
2 comments

கதை மாந்தர்களுள் ஒருவரான பியர் அசந்தர்ப்பமாக பிடிபட்டு ஃபிரெஞ்சுப் படையினரால் கொண்டுசெல்லப்படுகிறார். அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை. அதுபற்றி யாருக்கும் ஒன்றுமில்லை. யுத்த வெளியில் பொருட்படுத்தக் கூடியதாக எதுவுமில்லை. ஒரு உயிருக்கு தனியான மதிப்போ, மாண்போ இல்லை. விசாரணை நடக்கிறது. மேலும் ஒரு அசந்தர்ப்பமாக ஒரு திருப்பம் நிகழ்கிறது. அதை தல்ஸ்தோய் இப்படி எழுதியிருக்கிறார்.

“டாவூட் தலை நிமிர்ந்து அவரை உன்னிப்பாக நோக்கினார். சில வினாடிகள் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வைதான் பியரைக் காப்பாற்றியது. யுத்தத்தினால் ஏற்பட்ட நிலைமைகளும் சட்டங்களும் ஒரு பக்கமிருக்க, அந்தப் பார்வையானது அந்த இரண்டு மனிதர்களுக்குள்ளும் மனித உறவை ஏற்படுத்தியது. அந்த வினாடியில் ஏராளமான காரியங்கள் மங்கலாக அவர்கள் இவருடைய உள்ளங்களிலும் ஓடிக்கொண்டிருந்தன. அவர்கள் இருவரும் மனித குலத்தின் குழந்தைகள் என்பதையும், அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.”

https://assets2.panuval.com/image/cache/catalog/1094/war-and-peace-10004431-1699x2678.jpg

போர் எனில் என்ன என்பதன் அவருடைய ஆவேசத்தை மீறி, இந்த நாவலின் அடிப்படைக் கோணம் என்னவென்பதை இதன் வழியாகவே புரிந்து கொள்ளலாம். தல்ஸ்தோய் தனிப்பட்ட முறையில் எப்படிப்பட்டவராக இருந்திருந்தாலும், அவர் ஒருவேளை யாரை எப்படி வெறுத்திருந்தாலும் மொத்த உலகின் மானுடத்தை நேசித்திருந்தவரால் மட்டுமே இப்படியொரு பரந்த பார்வையின் எழுதித் தீராத நாவலை இப்படி எழுத முடியும். அவருக்கு அதை எழுதத் துவங்கும் முன்னே அதன் பிரம்மாண்டம் தெரியாமல் இருந்திருக்காது. ஆயின், அதை நிதானமாக ஆற அமரத் துவங்குகிறார். சலிக்காமல் விவரணைகள் வந்தவாறு இருக்கின்றன. சொல்வதற்கு எவ்வளவோ நேரமிருக்கிறது என்பது போன்ற இரக்கமற்ற அலட்சியத்துடன் கதை மாந்தர்களின் முகங்களைக்கூட சின்னக் கீச்சல்களுடன் கடந்து போகிறார்.

ஆனால், வாசகனின் குறுகுறுப்பு அப்படி இருக்காதென்று அவருக்குத் தெரியும். அவர் இன்னும் இன்னும் ஒரு சோம்பலான கதைசொல்லி போல நடித்துக்கொண்டு புதிர்களை நட்டு வைத்தவாறு போவார். இன்றே எழுதி, வெளிவந்து, பாராட்டும் பரிசுகளும் பெறத் துடிக்கிற அவசரக்குடுக்கை எழுத்தாளர்களுக்கு ஒருவேளை அவரைத் தீண்டி சுகம் காண முடியாமல் போகலாம். நல்ல வாசகர்களுக்கு முதலில் அவர் சுவையான விருந்து. அப்புறம்தான் மற்றதெல்லாம். அவர் நம்மை கொத்திக் கிளறி, உழுது போடுவதை மெதுவாகவே சொல்லிக்கொள்ளலாம். அதற்கு முன் இது, தனது வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதைப் படிக்க முடிந்தால் நமது குணநலன்களில் நரம்பில் இவை பற்றின ஓர்மைகள் குருதியாக ஓடியவாறு இருக்கும். நாம் எவ்வளவு அற்ப ஜீவியாக இருந்தாலும் கூட. அப்படிப் பார்க்கையில் காந்தி எவ்வாறு தல்ஸ்தோயை அடைந்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளவும் கூட முடியும். இதையெல்லாம் நான் இதைப் படித்த அனுபவத்தில் மட்டுமே சொல்கிறேன்.

நாவல் போரைப் பற்றியது. அதனால் முதலில் அவர் வாழ்வைப் பற்றி சொல்லிக்கொண்டு வருகிறார். ஆண்களும் பெண்களுமான மனிதர்கள் தத்தம் ஆசாபாசங்களுடன் தங்களுடைய இலக்குகளுக்கு முட்டி மோதுகிற ஒரு துவக்கம் இருக்கிறது. அதை வெறும் துவக்கமாக மட்டும் கொள்ளவேண்டும். யாரோ வழிப்போக்கனைப் பற்றி பேசுவது போல, போரைப் பற்றின செய்திகள் ஓரமாக பேசப்பட்டு, அவைகள் மெல்ல மெல்ல வளருகின்றன. ஒரு கட்டத்தில் நாமே அதில் நுழைவது போன்ற பிரமை ஏற்பட்டு, அது குறித்த அச்சமும்கூட நேர்ந்து விடுவதை அறியலாம். போருக்குச் செல்லப் போகிறவர்கள் எந்த விசேஷமான அம்சத்தையும் கொண்டவர்கள் இல்லை. அவர்களிடம் போர் செய்வதற்கு என்று இறைத் தகுதிகளோ, பிறப்புத் தகுதிகளோ கிடைத்து விட ஆகாது. காதலிக்கிறவளின் மெல்லிய புன்னகைக்குத் தூங்க முடியாமல் மெத்தையில் புரளுகிற மனமும், அது கிடைக்காமல் நழுவின அவலத்துக்குப் பொருமும் மனமும் வாழ்வின் அம்சமல்லவா? எதிர்கால வாழ்வைப் பற்றின திட்டமிடல்களும், நான்கு பேர் கூடுகிற இடங்களில் தம்மை இன்னவராக நிறுத்துகிற மன அவசமும் எல்லாமே வாழ்வை வெற்றி கொள்வதற்கான கொந்தளிப்புகள்தானே? வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்க முந்துகிற ஒருவன்தான் மரணத்தின் களி அரங்கிற்கு அணிவகுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவே கூட வாழ்வின் அம்சத்தில் சேர்ந்ததாகப்படுவதுதான் கடுமையான நகைச்சுவை.

ஆண்ட்ரு என்ற கதாபாத்திரம். அவனது மனோ ராஜ்ஜியங்களை அறிய எழுத்தாளர் நமக்கு வாய்ப்பு தருகிறார். நாம் அவனை, அவனுடைய குணாதிசயங்களை, காதலை அறிகிறோம். அவனை அவ்வளவு அண்மையில் பார்த்த பிறகு மெதுவாக நெருங்கி வருகிற போர்க் காட்சிகளில் எவ்வளவோ நிகழ்வுகள், முஸ்தீபுகள், மனிதக் கூட்டம் இவற்றுக்கிடையே மறுபடி வெறும் ஒரு வரியாக மட்டும் அவனைப் படிக்கிறோம் நாம். சொல்லப்போனால் நான் இதற்குத் திடுக்கிட்டேன்.

ஒரு மனிதன் கூட்டத்தில் கரைவது என்பது இதுதான். தவறோ, சரியோ வரலாறு படைக்கப் போகும்போது எந்தக் கொம்பனும் இலட்சம் புள்ளிகளில் ஒரு புள்ளியாக மின்னி மறைந்து போக வேண்டும்.

https://images.theconversation.com/files/73952/original/image-20150305-3327-1b3jwlb.png?ixlib=rb-1.1.0&q=45&auto=format&w=1000&fit=clip

அதை எந்தப் பத்திகள் மூலமும் விவரிக்காமல் நாமாக உணரும் வண்ணம் வந்தவாறு இருக்கிற எழுத்தின் தொழில்நுட்பம் நம்மைத் திகைக்க வைக்கிறது. மமதையும் செருக்கும் முட்டாள்தனமும் அடாவடியும் கொண்ட ஆண்களை போர்முனைக்கு அனுப்பி வைத்த ஆசிரியர், பெரும்பாலும் பெண்கள் அந்தப் போரைப் பற்றி பேசாமலிருப்பதை எழுதுகிறார். எந்தக் காலத்திலுமே இந்த ஆண்களின் இம்மாதிரியான வீம்பு வைராக்கியங்கள் கொண்ட, சுய மோகமுடைய சர்க்கஸ்களையோ, அவர்களுடைய கோமாளித்தனங்களையோ, அவர்கள் புரிந்துகொள்கிற முயற்சிகளில் ஈடுபடுவதில்லை அல்லது அவர்கள் அதைச் சகித்துக்கொண்டு கடந்துவிடுகிறார்கள். அதன் பொருட்டு நிகழக்கூடிய இன்னல்கள் யாவும்கூட அவர்களுக்கே வந்து சேருகின்றன. இந்நாவலில் வருகிற பெண்கள் ஆண்களில் ஈடுபட்டு விலகுவதெல்லாம் மெதுவாக நாமறியாமல் நகரும் வாழ்க்கைப் போக்குகளாக இருக்கின்றன. உதாரணம் நட்டாஷா. அவளில் ஒளிபொழிகிற இளமைக்கு பல வர்ணங்கள். அவள் புதிதாகப் பிறந்த மான்குட்டியைப் போல. துள்ளிக் கொண்டிருக்கிற மகிழ்ச்சி அதன் யதார்த்தம். அவள் எல்லோரையும் காதலிக்க விரும்புகிறாள் என்பதன் நியாயம் அதுதான். அவளிடம் யாருமே மயக்கம் கொள்ள முடியும், காதலிப்பதாகச் சொல்ல முடியும். அவள் பொருட்டே அவன் தன்னை வதைத்துக்கொண்டே வாழ்ந்தாலும் அவனுக்கு நம்பிக்கை கொடுக்க அவளிடம் எந்த முகாந்திரமும் இல்லை. அவள் ஒருபோதும் வாழ்வைத் தீர்மானிக்காமல் இருக்கிறாள். வாழ்வு ஒருநாள் அவள் வாழ வேண்டியதென்ன என்பதைத் தீர்மானிக்கிறது.

அதைப் போலவே, அவளுக்கு எதிரான மனநிலையில் இருந்த மேரி. அழகிலும் கூட நட்டாஷாவிற்கு எதிர். சுய வலிமை இல்லாமல், கூன் போட்ட மனசுடன், சொந்தத் தகப்பன் செய்கிற வதைகளை மென்று விழுங்கி, இளம் வயதிலேயே தியாகம் மூலம் தந்திரமாக தன்னை ஒளித்து வைத்துக்கொண்டாலும் அதன் தொடர்ச்சியாக வாழ்வு அவளுக்கு ஒரு முடிவைக் கொடுக்கிறது. தன்னுடைய அடிகளை எடுத்து வைக்கிற ஒவ்வொரு திக்கிலும் அவள் உன்னதங்களை மட்டுமே செய்து நிறைவுறுவாள் என்றாலும், ஒருகட்டத்தில் அவள் அடி மனதில் இருந்து எழுகிற வெறுப்புடன் தகப்பனின் சாவுக்குப் பிரார்த்திக்கிறாள். தாமதமே இல்லாமல் அவரது மரணம் நடக்கிறது. வாழ்வின் யதார்த்தம் என்னவோ, அது போல, நாவலில் பல பெண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பலரும் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

என்றால், தங்களுடைய குடில்களுக்குள் அலங்காரம் செய்துகொண்டு, வம்பு பேசிக்கொண்டு, மிக நுட்பமான சதிகளுடன் தமது திட்டங்களை நிறைவேற்றத் துடித்துக்கொண்டு இருக்கிற அந்தப் பெண்களில் எத்தனையோ பட்ஷ பேதங்கள் இருந்தாலும் ஆண்களின் நெஞ்சங்களில் இருந்து எரிகிறார்கள் என்பது வெளிப்படை. தன்னை அணையாத தீபம் போல காப்பாற்றிக்கொண்டு வந்த பியர், ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லுகிற ‘Duel’ சண்டைக்குப் போகிறார். அதுவும் அவருக்கு ஆகாத ஒரு பெண்ணுக்காக. ஆனால் அந்த அனுபவம், தான் யாரென அவரை மருளச் செய்கிறது. பெண்களின் கண்களில் பலருமே தான் கண்டடைந்ததின் பொருட்டு குண மாற்றம் கொள்கிறார்கள். சாகும் தருணத்தில்தான் என்றாலும் மேரியின் தந்தை அவளுடைய மனதின் முன்னால் மண்டியிட்டு கண்ணீர் பெருக்குகிறார். அவருடைய வாழ்நாள் துயரம் அவளை அன்பு செய்து, அவளுக்காக வதைபட்டு, அதை வெளியே சொல்ல முடியாததில் இருந்திருக்கிறது. இளம்பெண்கள், மனைவிகள் என்றில்லை, நாவலின் அடைபடாத ஊற்றுக்கு பல்வேறு அடுக்குகளில் வாழ்கிற தாய்களும் காரணமாக இருக்கிறார்கள். இவர்களோடு ஆண்களையும் அவர்கள் தம் சமூகப் பொறுப்புகளையும் சிறுகச் சிறுக அடைந்து வந்தவாறு இருக்கையில் நமக்கு ரஷியாவைப் பற்றி ஒரு சித்திரம் தோன்றிவிடுவது இயல்பு. அவர்களுக்கு இந்தப் போர் அவசியம்தானா?

https://1.bp.blogspot.com/-2m8l9c96Rxo/XFQ9I6H6DOI/AAAAAAAAkgg/Ym5Es_wbHIApOGOokf3di2702WEkXUMyACLcBGAs/s640/nesterenko-sevastopol1.jpg

அது நீண்டு செல்கிறது. நமது கருத்துகளின்படி, அது ஒரு அணிவகுப்பு, பாய்ச்சல், தாக்குதல் என்றெல்லாம் அறிய பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். வீரம் என்கிற வேர்ச் சொல்லையே போரில் இருந்துதான் எடுத்திருக்கிறார்கள். உலகெங்கிலும் பல்லாயிரம் கவி பாடியிருக்கிறார்கள். இன்றுமே கூட அவைகளைத் தொடர்ந்த முழக்கங்கள் மேலும் வலுப்பெற்றவாறு இருக்கின்றன. அதெல்லாம் ஏன், இந்த நாவலில் கூட பெட்டியா என்கிற சிறுவன் தேசப்பற்று கொந்தளிக்க, எதிரியை கருவறுக்க எண்ணிப் புறப்படுகிறான். வாழ்வின் எங்கோ பல திக்குகளில் அடைந்த நஷ்டங்களையும், அவமானங்களையும் சமநிலை செய்துகொள்கிற நோக்கில் இராணுவத்தில் இணைந்துகொண்ட பலரும் எதிரிகளைக் கொல்கிற கணக்கில் வென்றால் கண்ணியவனாகி விட முடியும், யாரும் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காருங்கள் என்று சொல்வார்கள் என்று தங்களுக்குள் கறுவிக்கொள்கிறார்கள். மீசையை முறுக்கிக்கொள்வது என்கிற ஒன்று இருக்கிறது அல்லவா? வரலாறுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு கொடுத்துவிட முடியுமா? கொம்பூதி, எக்காளமிட்டு, போர் முழக்கங்களுடன் எதிரியை நோக்கிப் பாய்வதற்கு முன்னால் நிகழுகிற அணிவகுப்பின் பிரம்மாண்டக் கற்பனை எப்படிப்பட்டதாயிருக்கும்? ஒரு பெரிய மிருகத்தின் ஒற்றை மனம் போல கூர்மைப்பட்டிருக்க, அம்மிருகம் உறுமுவதுதானா அந்த பல்லாயிரம் பேரின் புறப்பாடு?

இதுவரை கண்டிராத எதிரிகளின் திசையை நோக்கி நிற்கிற ஒரு புறப்பாட்டுக் காட்சியில் தல்ஸ்தோய் எழுதுகிறார்.

“பிரித்து வைத்திருந்த அந்த எல்லை, இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் மத்தியிலுள்ள எல்லையைப் போலத் தோன்றியது. அந்த எல்லைக்குப் பின்னால், நிச்சயமற்ற தன்மையும் துன்பங்களும் மரணமும் காத்திருந்தன. அங்கே என்ன இருக்கிறது? யார் இருக்கிறார்கள்? அந்த நிலத்திற்கு அப்பால், அந்த மரத்துக்கு அப்பால், சூரிய ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த உயரமான மேட்டின் உச்சிக்கு அப்பால்? யாருக்கும் தெரியாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் தெரிந்துகொள்ள விருப்பம். பயம் இருக்கிறது என்றாலும் அந்த எல்லையைக் கடக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. சீக்கிரமாகவோ, பின்னாலோ அதைக் கடந்துதான் ஆக வேண்டும் என்பதும், அங்கே என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் எல்லோருக்கும் ஆசை. மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவதைப் போல, இதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது ஆசை.”

https://theartsdesk.com/sites/default/files/styles/mast_image_landscape/public/mastimages/Napoleon_near_Borodino_%28Vereshagin%29_-_detail.jpg?itok=On_jHuE2

அதை மயக்கம் என்கிறார். சந்தோஷமுள்ள ஒரு கூருணர்வு என்றுமே சொல்கிறார். ஆனால் மேலே செல்லும்போது போர் என்பது என்ன என்பதன் கற்பனைகளைத் தவிர்த்த நேர் நிலையான விவரிப்பு நமது ஆசைகளை கலைத்துத் தள்ளுகிறது. மெல்ல மெல்ல நம்முடைய கற்பனைகள் வடிவதைக் காண்போம். மெதுவான ஒரு ஆற்றாமையும், நிராசையும் போர் வீரர்களுக்கு உண்டாவதைப் போலவே அது நமக்கும் அருளப்படுவது பார்க்கலாம். நிக்கலஸ் ராஸ்டோவ் என்கிற கதாபாத்திரம் பங்குபெறுகிற ஓநாய் வேட்டை ஒன்று நாவலில் இடம்பெறுகிறது. ஒரு கூட்டமாகவே தான் அதற்குப் புறப்பட்டிருப்பார்கள். தன்னை எப்படியாவது நிருபிக்க வேண்டியிருந்த நிக்கலஸ், வேட்டையின் விதிமுறைகளுக்கு எல்லாம் காத்திராமல் ஒரு பெரிய ஓநாயை நோக்கிப் பாய்வது சொல்லப்படும். அவன் அந்த நேரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லவே இல்லை. வெறுமனே  குருட்டாம்போக்கிற்குப் போகிறது அந்தப் பாய்ச்சல். அதன் அடிப்படை பயம் மட்டுமே. ஓநாய்க்கும் அவருக்குமான அந்தச் சண்டையில், இந்தத் தருணத்திற்கு இது தாக்குதலாக வேண்டும் என்கிற மனவோட்டோம் கூட நிகழப் பெறாமல் உயிராசை மட்டுமே கொண்ட ஒரு மிருகத்தை மறிக்க முயன்று, தன்னுடைய உயிரை அடகு வைத்துக்கொண்டிருக்கிறார். பல தற்செயல்களுக்கு அப்புறம் ஓநாய் வாய் கட்டப்படுவது ஒருவகை அதிர்ஷ்டம் என்று சொன்னால் போதுமல்லவா? அந்த வெற்றிக்கு வேறு பலரின் முயற்சிகளும், அவர்களுடைய மனங்களும் காரணமாக இருந்தன.

நிக்கலஸ் இதே மாதிரி குருட்டாம்போக்கைக் கைக்கொண்டு போரில் ஒருமுறை அடிபடுகிறார். மற்றொரு முறை வெற்றி என்று சொல்லப்படும் அளவிற்கு ஒன்று நேர்ந்து பரிசு பெறுகிறார். பாராட்டுகளுடன், அவருக்கு பதவி உயர்வும் கிடைக்கிறது. போர் செல்லுகிறது என்பது இதையொட்டிய அபத்தங்களில்தான். நூறு நூறாயிரம் பேர் அபத்தங்களில் திளைப்பது போர். ஒரு வெற்றியை, அது வெற்றி என்பதாக எடுத்துக்கொள்ள காலம் பிடிப்பதைப் போல, தோல்வியை அறியவும் முடிவதில்லை. சுயமாக ஒன்றைச் செய்வதற்கு பின்னணி தெரிய வேண்டும் அல்லது கட்டளைகள் வந்து சேருவது கண்டிப்பாக இருப்பதில் வேண்டும். யார் யார் எங்கெங்கு முன்னேறி, எங்கெங்கு பின்னடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியக் கூடாமல் கட்டளைகள் பறந்துகொண்டிருக்கின்றன. அவை நேரத்துக்கு வந்து சேராமல், பழைய கட்டளையைக் கூட முடிக்க ஆகாமல் துப்பாக்கிச் சனியன்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. பீரங்கிகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன. அடிபட்டுச் சாய்ந்து அரை மயக்கத்தில் இருக்கும் ஒருவேளையில் நிக்கலஸ் இங்கு நான் எதற்கு வந்தேன் என்று ஆச்சரியப்படுகிறார். பின்னொரு முறை ஆண்ட்ரு அண்ணாந்து கிடந்து மேகங்களில் திளைத்து இதைக் காட்டிலும் தூய்மையான ஒன்று இருக்குமா என்று முழ்கி, உலகை வழி நடத்துவோரும் போர் செய்பவர்களுமான எவருமே தூசென்று தமக்குள் அறிந்தவாறு இருக்கிறார்.

பாரடினோ யுத்தம் கூட நாம் அறிவதற்கு என்னவாவது கிடைத்திருக்குமா என்று யோசிக்க முடியும். மாஸ்கோ ஆக்கிரமிப்பு ஒரு அவமானம். இரண்டு பக்கத்தில் இருந்தும் தங்களுடைய மக்களை கொலைக்குக் கொடுத்த அனுபவம். முன்னேறிச் சென்ற ஃபிரெஞ்சுத் துருப்பு, எதிரிகளைக் காணாமல் மலைத்து, தான் திரும்பிச் செல்ல வேண்டிய தூரத்திற்குச் சீரழிந்த கதையை ஆசிரியர் வெகு சீராக வர்ணிக்கிறார். மாஸ்கோ பற்றி எரிந்த காரணங்கள் சொல்லப்படுகின்றன. யுத்தம் செய்கிறவர்களுக்கு ரொட்டி இல்லை, அவர்கள் கைது செய்தவர்களை பெருமைக்கேனும் கூட்டிச் சென்றதில் என்ன நிகழும்? பாரத்தைக் குறைத்துக்கொள்ள அவர்கள் சுடப்படுகிறார்கள். மற்றவர்கள் குளிருக்கும், நோய்க்கும், பசிக்கும் ஆளாகி செத்துப் போகிறார்கள். பாகுபாடின்றி இரு தரப்பாரும் கொள்ளையடிக்கிறார்கள். பறி கொடுப்பதும் அடித்துப் பிடுங்குவதுமான பணியில் உயிர்களைக் கொன்றுகொண்டிருக்கிறார்கள். ஒருமுறை கொசாக்குகளால் சூழ்ந்து நெப்போலியனே கொல்லப்படவிருக்கிறான். அவன் உயிர் தப்பியதற்கு ஒரே காரணம் அந்தக் கூட்டம் வைத்துக்கொண்டிருந்த பொருட்களே. கொலை செய்ய வந்தவர்கள் அவைகளை கொள்ளையடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். அம்மக்கள், தன்னை யாரென அறியாமல் புறம்தள்ளிவிட்டுச் சென்ற அனுபவத்தை மாவீரன் நெப்போலியன் எவ்வளவு அவமானமாக நினைத்துக் குமைந்திருக்க வேண்டும்? ஒரு போரில் இருந்து வெளியேறி தப்பித்து ஓடுவதில் கூட, பின்னால் நாம் படிக்கக்கூடிய, ராஜ தந்திரங்கள் இருக்கின்றன.

https://external-preview.redd.it/jKj06c7tR91qtdgqTJyefm43S_swgJRp3KkZ0kSvAFA.jpg?auto=webp&s=fac8c6789897c32ce7a1f5d8322f344cde2b9dc0

தல்ஸ்தோய் மிகவும் உக்கிரமானவர். அவருடைய கோபங்கள் பல இடங்களிலும் கடுத்த நகைச்சுவைகளாக மாறுகின்றன. உதாரணத்திற்கு மருத்துவர்களைப் பற்றிச் சொல்ல நேரும் போதெல்லாம் அவர் எவ்வளவு சுதாரிப்படைகிறார் என்பதைக் கவனித்தால் போதும். நம்மை நோக்கிப் புன்னகை செய்தவாறு அவைகளைச் சொல்வது இரக்கமில்லாமல் கூட இருப்பதாக உணர்ந்தேன். அவ்வழியில்தான் நெப்போலியன் தோலுரிக்கப்படுகிறார். வெளிப்படையாக இல்லாத போதிலும், தாழ்வு மனப்பான்மை உள்ள ஒரு பயந்தாங்கொள்ளியின் முழுமையடையாத கோழைத்தனம் மக்களைக் கொல்வதில் முடிகிறது என்பது நிஜம்தான். வரலாற்றில் அவருக்குப் பின்னாலும் பலரைப் பார்த்திருக்கிறோம். இன்றுமே அல்லது நாளை நாம் நிற்கிற நிலத்தில் யுத்தம் நிகழலாம். அதற்குக் காரணங்கள் வளர்ப்பார்கள். கோழைத்தனமும் அச்சமும் மலையுச்சிக்கு ஏறும்போது இரண்டு பக்கமும் மக்கள் கொலை செய்யப்படப் போவது திண்ணம். அதன் ஆதாயங்கள் எத்தகையவை என்பதும் நமக்குத் தெரியும். அதற்கு எத்தனை வீர சூர பராக்கிரமக் கதைகள் உருவாக்கப்படுமோ, நினைத்தாலே பயமாக இருக்கிறது.

நெப்போலியனைச் சொல்வதால் மன்னர் அலெக்சாண்டருக்கு விலக்கில்லை. அம்மன்னர் ஒரு கட்டத்தில் ஒரு தாக்குதலில் சிக்குண்டு பள்ளம் ஒன்றில் வீழ்ந்து கிடக்கிறார். சொல்லப்போனால், வாய் விட்டு அழுகிறார். அவரை உடனடியாகக் காப்பாற்ற வேண்டிய நிக்கலஸ் அவருடைய பார்வையில் விழாமல் ஓடுகிறார். எதற்கு தெரியுமா? அக்காலம் முழுக்க அவர்மீது சொல்லவொண்ணாத வழிபாட்டுணர்வு கொண்டு அவரைக் காண்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று அலைபாய்ந்திருந்தார். இழிவான ஒரு தருணத்தில் அவருக்கு முன்னால் சென்று நின்றால், அவருக்கு தன் மீது வெறுப்பு வந்துவிடுமோ என்பதால் நழுவியது அது. முதல் காரியமாக நிக்கலஸ் மூலம் நாம் அவர் மீதிருந்த பிரமிப்புகளை உதறுகிறோம். அவரும் அதை உதறியிருக்கிறார். ரஷியர்கள் காறி உமிழ்ந்திருக்கலாம். அவர் மறுபடியும் போர் செய்வதற்கு போனாலுமே, ஒருத்தன் மன்னனாக இருந்து படை நடத்துவதெல்லாம் கூட தற்செயல்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/La_bataille_d%27Austerlitz._2_decembre_1805_%28Fran%C3%A7ois_G%C3%A9rard%29.jpg

ஒருமுறை, ஒரு சறுக்கலுக்கு, நெப்போலியன் காரணமில்லை – அவருக்கு ஜலதோஷம் என்று காரணம் சொல்லப்படுகிறது. அவருக்கு அது இருந்தாலும், இல்லையென்றாலும் போரின் போக்கு ஒருபோதும் மாறியிருக்காது. ஏனென்றால் அதுவரையில் நடந்து வந்த அந்தப் போரில் நெப்போலியனின் எந்தக் கட்டளையும் சென்று சேர்ந்து செல்லுபடியாகி இருந்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில், அந்தத் தருணத்தில், ஃபிரெஞ்சுக்காரர்களிடம் போர் செய்ய வேண்டாம் என்று தடுத்திருந்தால், அவர்கள் அவரையே கொன்று போட்டுவிட்டு போரைத் தொடர்ந்திருப்பார்கள் என்கிறார் தல்ஸ்தோய். குட்டி இளவரசன் நாவலில் அவன் புறப்படும்போது, அந்தத் தீவின் சர்வாதிகாரி, ‘உன்னைக் கிளம்புவதற்கு ஆணையிடுகிறேன்’ என்று கூறுவது நினைவுண்டா? அவர் அப்படிப்பட்ட ஒரு தகுதியில்தான் அங்கே உறைந்திருந்தார். ஃபிரெஞ்சுப் படைகள் ஓடிய கோழைத்தனத்தைக் காட்டிலும், ஓடினவர்களைத் துரத்தி செத்த பாம்பை அடித்த ரஷிய சூரப்புலிகள் பற்றியும் நாவலில் காவிய வரிகள் உண்டு.

ஒரு வகையில் நான் போரைப் பற்றி விவரிப்பதை விட்டுவிட வேண்டும். ஏனெனில் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய மகத்தான உண்மைகள் பற்றிய அபூர்வ தொகுப்பு அது. நான் சொல்லி முடிக்கப் போகிற துணுக்குகளில் அவற்றைக் கண்டடைய முடியாது. தல்ஸ்தோயை அறிய முயல்பவர்களுக்கு நான் சொல்வதன் முழு அர்த்தமும் புரியும்.

இந்நாவலில் மிக முக்கியமானவர் பியர். அவரை மிகவும் சிக்கனமாகவே ஆசிரியர் உபயோகிக்கிறார். அதை ஒரு உத்தி என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். ஆன்மாவின் கடைத்தேற்றல் என்பார்களே, நாவலின் இறுதிப் பாகங்களில் அவர் அதை நிகழ்த்திக்காட்டுகிறார். அதற்கு முன்பே அது நடந்து நாம் பலமுறை கண்ணீர் ததும்பியிருக்கிறோம். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்து, அதை முறியடித்து வேறு ஒருவனோடு புறப்பட முயன்று தோற்ற நட்டாஷாவை மரணத் தறுவாயில் நேசிக்கத் துவங்கிற ஆண்ட்ரு தனக்குள் ஒரு தரிசனத்தை அடைகிறார். மேரிக்கு முன்பு அவருடைய அப்பா, தன்னைக் காயப்படுத்திய பியரைத் தழுவுகிற டோலக்கேவ், ஒரு நிறுவனத்தின் அடைக்கலத்தில் ஆன்மீக மெய்மைகளை அடைய முடியுமென்று நம்பிய பியர், கைதியாக அவதிப்பட்ட காலத்தில் சக கைதி ஒருவனின் எளிமையான அனுபவங்களில் உண்மைகளை அடைவது என்று ஒளி வீசுகிற தருணங்கள் இருந்திருக்கின்றன. இருப்பினும் நாவலில் எங்கிருந்து துவங்கி துயரங்களின் வழியே எங்கே வந்து பியர் சேர்ந்திருக்கிறார் என்பதை எண்ணும்போது பிரமிப்பு உண்டாகிறது. அதிலும் நட்டாஷாவிற்கு ஆறுதலோடு காதலையும் சொல்லுகிற அவ்விஷயம் எவ்வளவு அபத்தமாயினும் அதற்கு ஒரு ஆழ்ந்த பொருளிருந்தது என்பதைச் சிந்திக்கும்போது தல்ஸ்தோயின் மேதமையைத் திகைக்காமல் முடியவில்லை.

https://4.bp.blogspot.com/-2j1QpAgMXzk/VnRa1vPgmKI/AAAAAAAAC-0/goVZFn_zptM/s1600/Borodino%2Bpainting.jpg

அவர் மிக விரைவாக எழுதுவார் என்பதைப் படித்திருக்கிறேன். அதனால் அவருடைய மனதின் நிதானத்தை மிகவும் போற்றுகிறேன். அவர் ஆழ்ந்த குளுமையில் நம்மை இறக்கி, புடம் போடுகின்ற வேலையைச் செய்கிறார். போரும் வாழ்வும் நாவல் இந்த மானுட சமுத்திரத்தின் போர்களைப் போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகள் எப்படிச் சாத்தியமாகின்றன என்பது பற்றி ஆராய்ந்து முடிவு சொல்லப் பார்க்கிறது. அவர் எந்தத் தத்துவத்தையும் சார்ந்திருக்கவில்லை. அவர் தன்னுடைய நாவலின் மூலமாகவே தன்னுடைய தருக்கங்களை வைக்கிறார். அதன் முடிவுகளை கொஞ்சமேனும் சொல்லிப் பார்க்கிறார். இது வரலாற்றின் முழுமை கூடிய புனைவுப் பதிவாக இருக்கலாம். ஆனால், பொய்களை அறவே களைந்த இதன் நம்பகத்தன்மை, நம்மைக் கடைத்தேற்றக் கூடியது என்று கருதுகிறேன்.

நாம் ஒருவரில் ஒருவரை பார்க்க முடியும். ஒருவேளை, அதில் ஒருவரை ஒருவர் அறிய முடியும். காந்தி எல்லா தருக்கங்களைத் தாண்டியும் அதைத்தான் நம்பிக்கொண்டு இருந்திருப்பார். அவருடைய அத்தனை பிரயத்தங்களும் அந்த ஒத்திகைகளில் இருந்தவாறு இருந்து, மனிதனுக்கு மனிதன் சகோதரனாகக் கூடிய சாத்தியக்கூறுகளில் கரைந்தவாறு இருந்திருக்கும். நம்மளவில் நமக்குப் புரியாமல் தாமதம் செய்துகொண்டிருப்பது அவருடைய குற்றமல்ல. அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்து, அவரிடம் வன்மம் வளர்க்கிற மக்களில் யாரோ ஒருவன், அவரை மீண்டும் உயிர்த்தெழச் செய்து, மீண்டும் சுடாமல் இருந்தால் சரி.

*

நூல்: போரும் வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் – தமிழாக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம், வெளியீடு: New Century Book House

2 comments

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020 November 22, 2020 - 4:13 pm

[…] கடைத்தேறுதலின் ஊர்வலம்: தல்ஸ்தோயின் … – எம்.கே.மணி […]

Selvam kumar August 7, 2021 - 10:14 am

மிகவும் அருமையான பதிவு

Comments are closed.