புனிதர்களும் மனிதர்களும்

by ஜெயமோகன்
1 comment

அரங்கு: ஒரு ரஷ்யப் புகைவண்டி நிலையத்தின் காத்திருப்பு அறை. உக்ரைன் பிராந்தியத்தைச் சார்ந்தது. பிரபுக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால், மோசமாகச் சிதைந்துவிட்டது. தோல்உறை போடப்பட்ட இருக்கைகள் பிய்ந்து பஞ்சு பறக்கின்றன. பலவகையான தட்டுமுட்டுச் சாமான்களும் உடைசல்களும் குவிந்து கிடக்கின்றன. பின்புறம் பெரிய கண்ணாடிச் சன்னல், நிறைய விரிசல்களுடன்.

அறையில் ஐந்து பேர் காத்திருக்கிறார்கள். நெடுநேரமாகக் காத்திருப்பவர்கள் போன்ற தோற்றம். ஒருவர் செம்படையின் கர்னல். வயதானவர், சீருடையும் பதக்கங்களும் அணிந்தவர். பதற்றத்துடன் சுருட்டை மென்று துப்பியபடி, புகைபிடித்தபடி இருக்கிறார். அருகே அவரது மனைவி எலிசா எகோரெவ்னா. மிக வெளிறிய மெலிந்த முகத்தில் எப்போதும் ஒருவகையான இறுக்கமும் அமைதியும். கழுத்தில் வெள்ளிச் சிலுவை அணிந்திருக்கிறாள். தொடர்ந்து அதைப் பற்றியபடி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறாள். ஒருவித வெறியுடன் மத நம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருப்பவள்.

குமாஸ்தா இலான் இவானிச் லாப்கின். அடக்கமான, எங்குமே தன்னைக் காட்டிக்கொள்ளாதிருக்கும் திறன்கொண்ட, ஒல்லியான ஆள். மிக அமைதியாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருப்பான். அவன் மனைவி லிசவெத்தா இவானினா. எளிமையான இல்லத்தரசி. அவள் விரல்கள் எப்போதும் பின்னலாடை பின்னியபடி இருக்கின்றன. அவர்கள் குழந்தை தத்யானா. துறுதுறுவென்று எதையாவது செய்தபடி தனக்குள் பேசியபடி இருக்கும் நான்கு வயதுப் பெண். பொதுவாக ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது மன ஓட்டத்தில் ஆழ்ந்திருக்கிறது. வேறு இருவர் பேசும் போது பிறர் அதை கவனிப்பதில்லை. தத்யானாகூட தன் விளையாட்டினூடாகவே பேச்சில் ஈடுபடுகிறாள்.

காட்சி தொடங்கும்போது தொலைவில் கண்ணாடிக் கதவால் அழுத்தப்பட்ட மங்கலுடன் மனிதக் கூப்பாடுகள், கதறல்கள், அழுகைகள், சில வேட்டுச் சத்தங்கள் . இராணுவ ஊர்திகள் மற்றும் விசில்களின் ஓசைகள். இந்த ஒலியே நாடகத்தின் பிரதான பின்னணி. இசை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப இது பெருகியும் தணிந்தும் அரங்கை நிறைக்கக்கூடும்)

கர்னல் : (அசௌகரியமாக உணர்ந்தவராக எழுந்து கனைத்து) மணி என்ன ஆகிறது எலிசா? வெகு நேரமாகிறதே.

எலிசா : (பிரார்த்தனையை நிறுத்தாமல்) பத்து மணி தாண்டிவிட்டது.

கர்னல் : (கோபமடைந்து) எப்போது பார்த்தாலும் முகத்தில் இதே மரணக்களை. நீ என்ன பிணமா பேயா? (உரக்க) நான் ஒரு பிணத்துடன்தான் வாழ்கிறேனா?

எலிசா : (பிரார்த்தனையினூடாக) ஆமாம்.

கர்னல் : உன்னைத்தான் சொன்னேன். (எலிசா பிரார்த்தனையைத் தொடர்கிறாள்) சனியன்! பீடை!

(இருளில் ஒரு சிரிப்பு. இருண்ட மூலை ஒன்று குரல் கொடுக்கிறது)

இருண்ட மூலை : சைபீரியாவிற்கல்லவா போகிறீர்கள் மேன்மை தங்கியவரே. பிணங்களுடன் பேசக் கற்றுக்கொள்வது நல்லதுதான்.

கர்னல் : யார்? யாரது? (கோபமாக எழுந்து) யார் அதைச் சொன்னது ?

(இருள் அமைதியாக இருக்கிறது )

கர்னல் : (ஏளனத்துடன்) பேசியதும் ஒரு பிணம்தானா? கோழைகள். முணுமுணுக்கும் அற்பர்கள்…

(திரும்பி அமர்கிறார். பதற்றத்துடன் சுருட்டை எடுத்தபடி இருட்டை நோக்கித் தலையசைக்கிறார்.)

கர்னல் : கோழைகளின் முணுமுணுப்பை ஒருபோதும் வரலாறு பொருட்படுத்துவதில்லை…

(பின்னணியின் அழுகைக் குரல்கள் வலுக்கின்றன)

கர்னல் : (கோபத்துடன்) பிசாசுகள். வாயை மூடிக்கொண்டு கௌரவமாக செத்துத் தொலைந்தால் என்ன? (புகையை இழுத்துவிட்டபடி) இங்கு எப்படி மனிதர்கள் தூங்க முடியும்?

இருண்ட மூலை : சைபீரியாவில் இது உங்களுக்கு தாலாட்டாக மாறிவிடும் மேன்மை தங்கியவரே.

கர்னல் : (துப்பாக்கியை உருவியபடி எழுந்து) யார்டா அவன்? கோழை! துரோகி! (படார் படாரென்று சுடுகிறார்)

(வெளியேயிருந்து செம்படை வீரன் ஓடிவருகிறான்)

செம்படை வீரன்: (சல்யூட் அடித்து) என்ன நடந்தது தோழர்?

கர்னல் : (கை நீட்டி) அங்கு… ஒரு துரோகியின் கேடுகெட்ட வாயை மூடினேன்.

(அரங்கில் பிறர் ஆர்வமிழந்து தங்கள் உலகுக்குத் திரும்புகிறார்கள். வேட்டுகள் அவர்களுக்கு மிகவும் பழகியவை)

செ.வீ : (அவர் சுட்டிக்காட்டிய இடத்துக்கு விளக்கை நகர்த்தி வைக்கிறான். யாருமில்லை) தோழர், இங்கா அவன் இருந்தான்?

கர்னல் : (உதாசீனத்துடன்) கோழைப்பயல்… ஓடியிருப்பான்.

செ.வீ : தோழர், இங்கு யாருமே இருந்திருக்க முடியாது. வேறு இடத்திற்கு நகரவும் முடியாது…

கர்னல் : கோழைப்பயல்… இருட்டு….

செ.வீ : (அவரை வினோதமாகப் பார்த்தபடி) நான் வருகிறேன் தோழர்.

கர்னல் : சரி. எப்போது முடியும் இந்த ரகளைகள்?

செ.வீ : தெரியவில்லை தோழர்.

கர்னல் : குளக்கு நாய்கள். கௌரவமாகச் சாகவும் தெரியாத புழுக்கள்….

(வீரன் போகிறான்.)

கர்னல் : இருண்ட மூலைகள்! (சுருட்டை மென்று துப்பியபடி) இருண்ட மூலைகளில் ஒளிந்திருக்கிறார்கள்.

இருண்ட மூலை : விசிறிக் காகிதம் போல உன் உலகம் மடிந்து மடிந்து செல்கிறது எகோர்; மூலைகள் பெருகிப்பெருகி வருகின்றன.

கர்னல் : (வெளிறி) பேய்கள், பிணங்கள்…

லாப்கின் : தோழர், ரயில்கள் எப்போது வருமென்று தங்களால் கூற முடியுமா?

கர்னல் : வரும். இல்லையேல் நாம் காத்திருக்க வேண்டியதில்லை அல்லவா?

லாப்கின் : ஆம் தோழர்.

கர்னல் : நாம் காத்திருப்பதே அவை வரும் என்பதற்கு ஆதாரம். தெரிகிறதா ?

லாப்கின் : (பணிவான குழப்பத்துடன்) ஆம் தோழர்.

கர்னல் : இது புரட்சியின் காலகட்டம். ஒவ்வொன்றுக்கும் தடைகள் அதிகம்.

இருண்டமூலை : தடையின்மையே புரட்சி என்று நம்பினார்கள் பழைய மூடர்கள்.

கர்னல் : (வெறிகொண்டு) வாயை மூடுடா நாயே…

லாப்கின் : நான் ஒன்றுமே சொல்லவில்லை தோழர், (பயந்து எழுந்து நிற்கிறான்)

கர்னல் : போய் உட்கார். இல்லையேல் சுடுவேன்…

லாப்கின் : (ஓடிப்போய் அமர்ந்து) உத்தரவு தோழர்.

(திடீரென்று வேட்டுகள் ஒலிக்கின்றன. அவற்றின் சுடர்கள் பளிச் பளிச் என்ற கண்ணாடிச் சன்னலுக்கு அப்பால் அதிர்கின்றன. குழந்தையுடன் ஒரு பெண் ஓடிவருகிறாள். நைந்து கிழிந்த கந்தல் உடைகள். மெலிந்து வெளிறி, குளிரில் நீலம் பாரித்த முகம். பீதியும் மூச்சிரைப்புமாக திறந்த வாய், விரிந்த விழிகள். கண்ணாடிச் சுவரில் அவளது கரமும் குழந்தைக் கரமும் ஊன்றிப்படிய, பின்புரம் வேட்டுகள் சுடர்ந்து அதிர்கின்றன. குண்டு பாய்ந்து அவள் சரிகிறாள். இரு செம்படை வீரர்கள் அவளை இழுத்துச் செல்கிறார்கள். அரங்கில் அனைவரும் எழுந்து பார்த்து நிற்கிறார்கள். எலிசா பிரார்த்தனையில் மீண்டும் மூழ்குகிறாள்.)

கர்னல் : யாரங்கே… என்ன அது?

செ.வீ. : (உள்ளே ஓடி வந்து வணங்கி) ஒருசிறு தவறு தோழர். ஒரு குளக்குப் பெண் எப்படியோ காவல் வளையத்தை மீறி ஓடிவந்துவிட்டாள்.

கர்னல் : எப்படியோ என்றால்…

செ.வீ. : கழிவுநீர் குழாயினூடாக வந்துவிட்டாள். உடனே பார்த்து துரத்த ஆரம்பித்துவிட்டோம்.

கர்னல் : கவனம்.

(அமர்கிறார், பிறரும் அமர்கிறார்கள்.)

எலிசா : இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ஏரோது மன்னனின் படைகளிலிருந்து கர்த்தரும் மேரியும் இப்படித்தான் தப்பியிருக்க வேண்டும்.

கர்னல் : (உரக்கச் சிரித்து) இம்முறை பிடித்து சுட்டுத்தள்ளிவிட்டோம் எலிசா.

எலிசா : கழிவுநீர் குழாய் எந்தக் காலத்திலும் உண்டு வரலாற்றில்.

லாப்கின் : சீமாட்டியே (தயங்கி) அப்படியானால் வரலாறு என்பது எப்போதும் இதேபோன்ற அகதிக் கூட்டமும் ராணுவமும் மட்டும்தானா?

கர்னல் : (சிரித்து) அட்டா, தத்துவார்த்தமான கேள்வி. (மேலும் சிரித்து) அத்துடன் இந்தக் கண்ணாடிச் சுவரையும் இதற்குள் இப்படிக் காத்திருக்கும் நம்மையும் சேர்த்துக்கொள். உருவகம் முழுமையாகி விடும். (திடீரென்று கனத்து) நாமெல்லாம் வெறும் பார்வையாளர்கள்.

இருண்ட மூலை : பார்வையாளர்களாக நடிப்பவர்கள்.

கர்னல் : வாயை மூடு பிசாசே….

தத்யானா : (இழுத்துச் செல்லப்படும் குளக்குப் பெண்ணைப் பார்த்து) அம்மா அது பேய்தானே?

லாப்கின் : சும்மாயிரு தாத்யா.

தத்யானா : பேய்தான். அதன் முகம் வெள்ளையாக இருந்தது. ரொம்பப் பாவமான பேய். (யோசித்து) ஏன் அதை இழுத்துச் செல்கிறார்கள் அப்பா? அவர்கள் யார்?

எலிசா : அவர்கள் தேவதூதர்கள். குழந்தை, தம் மீட்பரையும் மாதாவையும் சொர்க்கத்துக்கு இட்டுச் செல்கிறார்கள்.

கர்னல் : சரியாகச் சொன்னாய் எலிசா, ஏரோது மன்னனிடமிருந்து தப்பி இரண்டாயிரம் வருடம் அவர்கள் உலகில் அலைந்து திரிந்தார்கள். இப்போது நாங்கள் கண்டுபிடித்து உரிய இடத்திற்கு பத்திரமாக அனுப்பிவிட்டோம்.

இருண்ட மூலை : உரிய இடங்களில் உரியவை அமர்ந்து விடுவதே சோஷலிசம் எகோர்….

கர்னல் : (வெறிகொண்டு) வாயை மூடு சைத்தானே… சுட்டுத் தள்ளிவிடுவேன்…

தத்யானா : அவர் சுவரைப் பார்த்துப் பேசுகிறார்… அப்பா, அவருக்குப் பைத்தியமா?

கர்னல் : (மனம் தளர்ந்து) ஓ…. (பின்னால் சாய்ந்து) களைப்பாக இருக்கிறது.

தத்யானா : அப்பா அவருக்குப் பைத்தியமா?

லாப்கின் : வாயைமூடு தாத்யா. அம்மாவிடம் போ…

தத்யானா : (கிசுகிசுப்பாக) யாரிடம் பேசுகிறார்?

லிசவெத்தா :  தாத்யா இங்கே வா.

(தாத்யா அம்மாவிடம் போய் அமர்கிறாள்.)

லிசவெத்தா: என்ன அதிகப்பிரசங்கம் தாத்யா. நீ நல்ல பெண்தானே?

தத்யானா : ரொம்ப ரொம்ப நல்ல பெண். ஏழைப்பெண் சிண்ட்ரெல்லா மாதிரி நல்ல பெண்.

லிசவெத்தா :  அப்படியென்றால் பேசாமல் இரு!

தத்யானா : நல்ல பெண்கள் பேசக்கூடாதா?

லிசவெத்தா :  (சலித்து) ஓ… உன்னிடம் பேசவே பயமாக இருக்கிறது.

தத்யானா : அம்மா, அந்தக் கையடையாளங்களைப் பார்த்தாயா?

(எல்லாரும் திரும்பிப் பார்க்கிறார்கள். கண்ணாடிச் சுவரில் அன்னை, குழந்தை ஆகியோரின் இரத்தம் படிந்த கையடையாளங்கள் ஒளியில் மின்னுகின்றன.)

கர்னல் : அதை அழியுங்கள் யாராவது.

லாப்கின் : இந்தப் பக்கமிருந்து அதை அழிக்க முடியாதே தோழர்.

கர்னல் : ஒவ்வொருமுறை வெளியே பார்க்கும்போதும் இது தெரியும். இதன் வழியாகவே நாம் வெளியே பார்க்க முடியும்.

லாப்கின் : அழிந்துவிடும் தோழர். பனி கொட்டுகிறதல்லவா?

கர்னல் : பார்ப்போம்…

(அனைவரும் அதைப் பார்த்தபடி, பார்க்கமலிருக்க முயன்றபடி, அமர்ந்திருக்கிறார்கள்.)

லிசவெத்தா :  (சலித்து) கடவுளே! எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது?

(மெதுவாக இனிய இசையொன்று ஒலிக்க ஆரம்பிக்கிறது. அரங்கின் ஒளி மாறுபடுகிறது.)

தத்யானா : பாட்டி, யார் புல்லாங்குழல் வாசிப்பது?

எலிசா: கேட்கவில்லையே…

தத்யானா : பூவின் மணம். என்ன பூ அது?

எலிசா : எனக்குத் தெரியவில்லையே அம்மா.

தத்யானா : பாட்டு! யாரோ பாட்டு பாடுகிறார்கள். ரொம்ப நல்ல பாட்டு.

எலிசா : எனக்குத் தெரியவில்லையே!

தத்யானா : போ. நீ பொய் சொல்கிறாய்.

(வெளிச்சம் அதிகரிக்கிறது. தூய வெண்ணிற உடையுடன் வெண்சிறகுகளும் மலர்களினாலான மணிமுடியும் அணிந்த எட்டு வயதுச் சிறுவன் வருகிறான். ஒரு கையில் தூபக் குடுவை. மறுகையில் புனித நீர்க் குப்பி)

தத்யானா : அய்யோ அவனுக்கு சிறகு இருக்கிறது. வெண்புறா மாதிரி சிறகு..

எலிசா : யாரிடம் பேசுகிறாய் கண்ணே?

தத்யானா : இதோபார் பாட்டி, சிறகுள்ள அண்ணா… ஏழு புனிதர் கதையில் படம் போட்டிருக்கிறதே.. அதேமாதிரி அண்ணா.

லிசவெத்தா: (மன்னிப்புக் கோரும் குரலில்) அவள் அப்படித்தான். சம்பந்தமின்றி உளறுவாள்.

எலிசா : குழந்தைகள் எங்கும் விருப்பமான உலகைப் படைத்துக்கொள்கிறார்கள்.

(பிரார்த்தனையில் ஈடுபடுகிறாள்)

தத்யானா: நீ கப்ரியேல் தேவன்தானே? எனக்குத் தெரியும். நான் படம் பார்த்தேன்.

கப்ரியேல் : (ததயானாவிடம்) தள்ளி நில்லுடி மக்குக் கழுதை, குப்பியைத் தட்டிவிட்டுவிடுவாய்.

(கையிலிருந்த தூபத்தாலும் புனித நீராலும் அப்பகுதியைச் சுத்தம் செய்கிறான்)

தத்யானா : (பின்னால் நடந்தபடி) நீ கப்ரியேல் அண்ணாதானே?

கப்ரி: ஆமாம். நீதானே தத்யானா? அக்டோபர் பதினெட்டு, சைபீரியாவில் குவெல்லோப் கிராமம்?

கப்ரி: அங்குதான் நீ… (தவிர்த்து) ஒன்றுமில்லை. இரு, ஒரு சிறிய வேலை இருக்கிறது. முடித்துவிட்டு பேசலாம்.

தத்: என்ன செய்கிறாய்?

கப்ரி : இது புனித தூபம், புனித தீர்த்தம். இப்பகுதியைச் சுத்தப்படுத்துகிறேன்.

தத்யா : (தரையைப் பார்த்து) அழுக்காகத்தானே இருக்கிறது? சுத்தமே ஆகவில்லையே.

கப்ரி : (சிரிப்பை அடக்கி) மெல்லப் பேசுடி கழுதை, மேலே கேட்டுவிட போகிறது. இதெல்லாம் ரொம்பப் பழையகால சடங்குகள். பிரயோஜனமே இல்லை. சொன்னால் கேட்டால்தானே? (குரலை தாழ்த்தி) எப்படி கேட்கும். காது மந்தம். கண் தெரியாது. கிழம்.

தத்யானா : யார்? (ரகசியமாக) யார்?

கப்ரி : (ரகசியமாக) பிதா. பரலோகத்தில் இருக்கும் பரமபிதா என்பீர்களே, அதுதான்.

தத்யானா : பாவம் தாத்தா. அவரை நான் பார்க்க முடியுமா?

கப்ரி : அக்டோபர் ஏழு. இன்னும் கொஞ்ச நாள்தானே? நான் வந்து உன்னைக் கூட்டிச்செல்கிறேன்.

தத்யானா : அங்கே எப்படி இருக்கும்?

கப்ரி : ரொம்ப கும்மாளமாக இருக்கும். ஏகப்பட்ட குழந்தைகள், இந்தக் கிழம்தான் அவ்வப்போது கூப்பிட்டு வைத்து அறிவுரை கூறுகிறேன் என்று கழுத்தை அறுக்கும். மற்றபடி பெரியவர்கள் அங்கே வரமுடியாது.

தத்யானா : உண்மையாகவா? அப்பா அம்மா?

கப்ரி : யாருமே வர முடியாது. (சிரித்து) இந்தக் கிழம்கூட வராது. பிள்ளைகள் பின்னால் வந்து கிள்ளிவிட்டு ஓடிப்போகும்.

தத்யானா : பாவம் தாத்தா. தாத்தாவையெல்லாம் கிள்ளவே கூடாது.. கெட்டக் குழந்தைகளை மட்டும்தான் கிள்ள வேண்டும்.

கப்ரி : கிழத்துக்குப் பெரிய கொம்பன் என்று நினைப்பு. இவ்வளவு பெரிய தாடி அதற்கு. எனக்குத் தாடி இருக்கே, உனக்கு இருக்கா என்று ஆட்டி ஆட்டிக் கேட்கும். குழந்தைகளுக்கு எங்காவது தாடி முளைக்குமா? அதுகூடத் தெரியாது. மக்கு ஜென்மம். தாடி மட்டும் இருந்தால் போதுமா?

தத்யானா : ரொம்ப நீளமான தாடியா?

கப்ரி: பின்னே ? கால்வரை வரும்.

தத்யானா : உண்மையாகவா?

கப்ரி: சத்தியமாக….

தத்யானா : நானும் வருகிறேன் அண்ணா.

கப்ரி : இன்னும் கொஞ்ச நாள்தானே (விரல்விட்டு எண்ணி) பத்து நாள் (தடுமாறி) இல்லை, பதினொரு நாள் (தலையைச் சொறிந்து) பத்து நாள்தானே… ஆமாம், பத்துநாளில் நான் வருவேன். உன்னைக் கூட்டிப்போவேன்.

தத்யானா : பொய். நீ ஏமாற்றுகிறாய்.

கப்ரி : இல்லைடி மக்கு. உண்மையிலேயே வருவேன்… அப்போது நீ சைபீரியாவில் இருப்பாய். உனக்கு கடுமையாக சுரம் அடிக்கும். வைக்கோல் படுக்கையில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாய். நான் வெண்பனி வழியாக சறுக்கி இறங்கிவருவேன். பதினொரு நாள்… இல்லை. (கணக்குப் போட்டுக் குழம்புகிறான்)

தத்யானாஉனக்கு எண்ணவே தெரியவில்லையே. பெரியவனாக வேறு இருக்கிறாய்.

கப்ரி : எனக்கு கணக்கே தெரியவில்லை தாத்யா! என் விரல்கள் தப்புத்தப்பாக மடங்கி விடுகின்றன.

தத்யானா : நீ எத்தனாம் வகுப்பு?

கப்ரி : அங்கே பள்ளிக்கூடமே இல்லையே.

தத்யானா : உண்மையாகவா (மகிழ்ந்து, ஐயம்கொண்டு) பொய். நீ பொய் சொல்கிறாய்.

கப்ரி : சத்தியமாக. அது ஒரு பெரிய பூந்தோட்டம். அங்கு எல்லாமே உண்டு. பூக்கள், மிருகங்கள், பறவைகள். ஆனால் விஷமுள்ளதோ கடிக்கக் கூடியதோ இல்லை. இஷ்டப்படி சுற்றி அலைந்து நமக்கு விருப்பமானதைப் படிக்க வேண்டியதுதான். அதனால் அங்கே எல்லாருக்கும் அவரவர் கைவிரல்கள் அளவுக்குத்தான் எண்ணத் தெரியும். சில ஆறுவிரல் குழந்தைகள் உண்டு. அவர்கள்தான் கணக்கில் கெட்டிக்காரர்கள்.

தத்யானா : நானும் வந்துவிடுவேன். இங்கே எல்லாரும் பெரியவர்கள், சாமி சிலைகள் மாதிரி உம்மென்று இருக்கிறார்கள்.

கப்ரி : சரி, நான் வருகிறேன்.

தத்யானா : இப்போது எதற்கு வந்தாய்?

கப்ரி : இங்கே ஒரு புனிதர் மரணமடையப் போகிறார். இதோ இந்த பெஞ்சில். அவரை இங்கிருந்துதான் நான் அழைத்துப் போவேன். இடத்தைப் புனிதப்படுத்த வந்தேன்.

தத்யானா : புனிதர் என்றால் தாத்தாவா?

கப்ரி : ஆமாம், ஒன்று தாத்தா, இல்லாவிட்டால் குழந்தை. இந்தத் தாத்தா குழந்தைகளுக்காக நிறைய கதைகளெல்லாம் எழுதியிருக்கிறார். லேவ் தல்ஸ்தோய் என்று பெயர்.

தத்யானா : ஆமாம், ஆனால் அவர்தான் ரயில் நிலையத்தில் ரொம்பநாள் முன்பு இறந்துவிட்டாரே.

கப்ரி : இறக்கவில்லை. இத்தனை நாள் ஊர் ஊராக துறவியாக அலைந்து திரிந்தார். ஒரு புதிய கிறிஸ்துவ மதத்தை உருவாக்கி மக்களிடையே பரப்ப முயன்றார்.

தத்யானா : எதற்கு?

கப்ரி : வேறு வேலையில்லை. யாருமே கிழத்தைப் பொருட்படுத்தவில்லை. மனமுடைந்து போய் சரி, புனிதராக ஆகிவிடுவோம். அப்படியாவது ஜனங்கள் நமது பேச்சைக் கேட்கிறார்களா பார்ப்போம் என்று இங்கு வந்திருக்கிறார். இதோ வருகிறார்.

தத்யானா : புனிதரை கும்பிட வேண்டும்…

கப்ரி : ஆமாம். இந்த பெஞ்சு புனித இடமாகிவிடும். அவருக்கு சிலையெல்லாம் வைப்பார்கள். பாவம் கிழம். உயிரோடு இருக்கும் மனிதருக்கு நான் புனிதர் இல்லை என்று கூறும் சுதந்திரமாவது உண்டு. சரி, எனக்கு நேரமாகிறது. (தயங்கி) உனக்கு ‘உள்ளே வெளியே’ ஆட்டம் தெரியுமா?

தத்யானா : ரொம்ப நன்றாகத் தெரியும்.

கப்ரி : (மலர்ந்து) அங்கே அத்தனை குட்டிகளையும் நான் ஜெயித்து விட்டேன். நீ வந்துவிட்டால் நாம் ஆடலாம்.

தத்யானா : என்னை யாருமே தோற்கடிக்க முடியாது.

கப்ரி : வவ்வவ்வே. நான் இதுவரை தோற்றதே இல்லை.

தத்யானா : நான் உன்னைத் தோற்றுத் தூளியாட வைப்பேன்.

தத்யானா : வவ்வவ்வே, போடி…

தத்யானா : நீ போடா.

கப்ரி : போடி சப்பை மூக்கி.

தத்யானா : போடா கோழிச்சிறகா, வெள்ளைக் கொக்கு…

கப்ரி : (திணறி) போடி போடி போடி வவ்வவ்வே… (கிள்ளிவிட்டுப் பறந்து போகிறான்)

தத்யானா : ஆ, கிள்ளிவிட்டுப் போகிறான். தெண்டத்தடியா தெண்டத் தடியா…

எலிசா : என்னம்மா கண்ணு!

தத்யானா : கிள்ளிவிட்டுப் போகிறான் பாட்டி. கோழிச்சிறகன்.. கொக்கன்…

லிசவெத்தா: கொஞ்ச நாளாகவே இப்படித்தான் இருக்கிறாள் அம்மணி. ரொம்ப பயமாக இருக்கிறது.

எலிசா : குழந்தைகள் அப்படித்தானிருக்கும். நீ என்னிடம் வா கண்ணே.

கர்னல் : (சலிப்புற்று எழுந்து) ஓ எத்தனை சலிப்புமிக்க இரவு. பைத்தியம் பரவுகிறது. எங்கும் பைத்தியக்காரர்கள் நிரம்பிவிட்டார்கள். (கோபத்துடன்) இந்தக் குளக்குகளின் வாய்களைக் கட்டி ரயிலேற்றினால் என்ன? எதற்கு இப்படிக் கூப்பாடு போடுகிறார்கள் (சலிப்பும் கோபமுமாக) ரயில் எப்போது வரும்?

லாப்கின் : எனக்கு எப்படித் தெரியும் தோழர்?

கர்னல் : யாருக்கும் தெரியாது. யாருக்கும் எதுவும் தெரியாது. எங்கும் தெளிவு என்பதே இல்லை.

இருண்ட மூலை : தெளிவில்லாதவர்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள். அவர்களுக்கு பூரண ஆயுள்.

கர்னல் : (பதறி) யாரடா அது? முன்னால் வந்து பேசு. முணுமுணுக்காதே…

தத்யானா : (களுக் என்று சிரித்து) அந்தத் தாத்தா எப்போதும் சுவரிடம்தான் பேசுகிறார்.

கர்னல் : வாயை மூடு (கோபத்துடன்) அடங்காத குழந்தைகள், செத்து உறைந்த மனைவிகள். மட்கிப்போன சேவகர்கள்… (தலையை உதறி) ஓ… நரகம்! நரகம்!

(கிரீச்சென்று கதவு திறந்து ஒரு தளர்ந்து போன கிழவர் தள்ளாடியபடி வருகிறார். அலையும் துறவி. தலை நடுங்குகிறது. திரிதிரியாக வயிறைத் தொட்ட தாடி. அழுக்கடைந்த கிழிந்த உடை. ஒரு காலத்தில் மிக ஆஜானுபாகுவாக இருந்தவர். இப்போது கனத்த எலும்புகலிளிருந்து தசைகள் தளர்ந்து தொங்கும் கூன் விழுந்த உடல். கண்களை மறைக்கும் நரைத்த புருவம்.)

துறவி : (தள்ளாடி வந்து) கிறிஸ்துவுக்குத் துதிகள் உரித்தாகுக. நான் சற்று அமரலாமா?

லிசவெத்தா :  தாங்கள் இங்கு அமர வேண்டும் தந்தையே.

துறவி : (அமர்ந்து) நன்றி குழந்தை. உனக்கு என் ஆசி. (கால்களை நீட்டி) அப்பாடா, வந்து சேர்ந்துவிட்டேன். (தளர்ந்து சரிந்து) இதுதான் அந்த இடம். அந்த பெஞ்ச். என் உடலுக்கு அது நன்றாகத் தெரிகிறது.

லிசவெத்தா :  தாங்கள் எந்த ஊருக்குப் போகவிருக்கிறீர்கள் தந்தையே?

துறவி : வெகுதூரம். எத்தனை தூரம் என்று தெரியவில்லை.

லிசவெத்தா :  அங்கு யார் இருக்கிறார்கள்?

துறவி : என் தந்தை. என் உறவினர்கள்.

லிசவெத்தா :  உங்கள் தந்தையா? (புன்னகைத்து) நீண்ட ஆயுள் கொண்ட குடும்பம் போலிருக்கிறது.

துறவி : மரணமேயில்லாத குடும்பம். (சிரிக்கிறார்)

(கதவு மிகப் பலமாக கிரீச்சிட்டு வேகமாகத் திறந்து அதிர்கிறது. முற்றிய போதையில் தள்ளாடியபடியே ஒரு கிழவர் உள்ளே வருகிறார். கிழிந்துபோன படைவீரன் உடை. சிறிய உடல். முகத்தில் சிதறிப் பரவிய தாடி. யாரையோ தேடுகிறார். துறவியைப் பார்த்ததும் போதையில் கைநீட்டி சுட்டிக்காட்டுகிறார். அது அவருக்கே அவர் காட்டிக்கொண்டது. துரிதமான காலடிகளுடன் வந்து அருகே பெஞ்ச் விளிம்பில் அமர்ந்து குழறிய குரலில் உடனே பேச ஆரம்பிக்கிறார்)

வந்தவர் : நீங்கள் தானா ? உள்ளே நுழையும் பாதத் தடங்களைத்தான் பார்த்தேன். பனியில் . பெரிய பாதங்கள். நான்… என்னை தெரிகிறதா ?

துறவி : (அடையாளம் கண்டு முகம் மலர்ந்து) நீங்கள்தானா? சூதாடி.

சூதாடி : ஆம், நான்தான். நான் போகுமிடங்களிலெல்லாம் உங்கள் வழித்தடங்களைக் காண்கிறேன். ஆனால் சந்திக்க முடிந்ததேயில்லை. இப்போது இறுதியாக.

துறவி : ஆம், இறுதியாக. (பெருமூச்சுடன்) என் மனம் குலையும் தருணங்களிலெல்லாம் உங்களுடைய போதைச் சிரிப்பு தொலைவில் கேட்பது போலிருக்கும்…

சூதாடி : (பரபரப்புடன்) உங்களைச் சந்தித்துவிட்டேன்… கேள்வி கேட்கவேண்டும் உங்களை.

துறவி : சூது முடிந்துவிட்டதா?

சூதாடி : முடிந்துவிட்டது. இனி பணயம் வைக்க என்னிடம் ஏதும் இல்லை. ஆனால் (எழுந்து தீவிரம் கொண்டு) எல்லாவற்றையும் தோற்ற பிறகு ஒன்று தெரிந்தது. தோற்பதற்குச் சமானமாக சிலவற்றைப் பெற்றும் வந்திருக்கிறேன். சூதாடியின் காலிச் சட்டைப் பைகளில் நிரம்பியிருப்பது என்ன? ஒவ்வொன்றும் இல்லாமலான பிறகு இப்பிரபஞ்சத்தில் எஞ்சியிருப்பது எதுவோ அது. என்னால் அதன் கனத்தைத் தாங்க முடியவில்லை. இதை வைத்து எந்தச் சூதாட்டத்தை நான் ஆட முடியும்? இதை எப்படி நான் இழக்க முடியும்? (கரங்களை உரசியபடி நடந்து) வாழ்நாளெல்லாம் உடைமை என்பது சூதுப் பணயம் என்றே பொருள்கொண்டு வந்திருக்கிறேன்.

துறவி : நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும் எனத் தெரியவில்லை. என் வாழ்நாள் முழுக்க ஒவ்வொன்றையும் சொல்லாக மாற்றிவிட முயன்றேன். இப்பிரபஞ்சத்தை முழுக்க அப்படி மாற்றிவிட கனவு கண்டேன். ஆனால் நம்மிலிருந்து பிரியும் ஒரு சொல் தானிருந்த காலி இடத்தை நம்மில் விட்டுச் செல்கிறது.

சூதாடி : ஒரு விமரிசகன் எழுதினான், உங்களுக்கு சொல் ஒரு பிரார்த்தனை, எனக்கு ஒரு சூதாட்ட நாணயம் என்று…

துறவி : ஆம். விக்டர் ஃபெலின்ஸ்கி. முழு மூடன். ஆனால், அதை அறியாமலே இறந்துபோகும்படி ஆசியளிக்கப்பட்டவன்.

சூதாடி : சூதாட்ட மேஜைமீது பணயமாக வைக்கப்பட்ட நாணயம் மௌனமாக, உக்கிரமாகப் பிரார்த்தனை புரிவதைக் கவனித்திருக்கிறேன்.

துறவி : (புன்னகைத்து) ஆம், பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும் இறைவனுடனான சூதாட்டங்கள் என்று நானும் அறிவேன்.

தத்யானா : (ஊடே புகுந்து) தாத்தா நீங்கள்தான் சொர்க்கத்துக்குப் போக வந்திருக்கும் புனிதரா?

துறவி : ஆம் கண்ணே.

தத்யானா : யார் இவர்?

சூதாடி : நரகத்திற்குப் போகப்போகும் புனிதர்.

தத்யானா : நரகத்தில் பள்ளிக்கூடம் உண்டா? நரகமா, சொர்க்கமா எது நன்றாக இருக்கும்?

துறவி : நரகத்தில் கொடும் துயரங்கள் உண்டு குழந்தை. அதனால் அங்கு இறைவனும் இருப்பார். சொர்க்கத்தில் எல்லா போகங்களும் உண்டு. அங்கு சாத்தான் அப்போகங்கள் மீது நின்று பிரசங்கம் செய்வான். (குனிந்து தத்யானாவை அணைத்து) நீ எங்கே போக விரும்புகிறாய்?

தத்யானா : அம்மா பிரார்த்தனை செய்தபிறகு சொர்க்கத்துக்குப் போவதாக சொல்வாள். (யோசித்து) நான் எங்கே போவது? நான்தான் பிரார்த்தனையே செய்வதில்லையே? வேறு குழந்தைகளைப் பற்றித்தானே நினைப்பேன். ( மலர்ந்து) நான் குழந்தைகளின் சொர்க்கத்திற்குப் போவேன். அங்கு கடவுளும் சாத்தானும் குழந்தைகளாக மாறினால்தான் வரமுடியும். இரண்டு பேரையும் நான் ‘உள்ளே வெளியே’ விளையாட்டில் தோற்கடிப்பேன். (சிரிக்கிறாள்) இரண்டு பேரும் தோற்றுப்போய் விடுவார்கள். ரொம்ப அழுவார்கள்… ஆளுக்குப் பத்து தோப்புக்கரணம்.

சூதாடி : என் கண்ணே… (உணர்ச்சி தீவிரத்தில் அவருக்கு வழக்கமான சிறு வலிப்பு ஏற்பட்டு ஒரு கையும் வாயும் இழுத்துக்கொள்கின்றன) என் தேவதையே, இளவரசியே… (கண்ணீருடன் அவள் தோளை அணைத்து முத்தமிடுகிறார்)

தத்யானா : நீ பயந்தாங்குளித் தாத்தா… அழுகிறாய் பார்…

துறவி : (குழந்தையை தலைமீது கைவைத்து ஆசி அளித்து) நீ வானம் போன்ற பெண் அம்மா. ஒளி மறையாத வானம். (சிரிப்பில் முகம் கனிய) நடாஷாவை தெரியுமா?… கிட்டியை?

சூதாடி : (நினைவுகூர்ந்து உணர்ச்சியுடன் முரட்டுத்தனமாக அவளைத் தன் பக்கமாக திரும்பியபடி) உனக்கு நெல்லியை தெரியுமா?… சோனியா ?

தத்யானா : அவர்கள் எல்லாரும் என் தோழிகள். மாஸ்க்கோவில் இருக்கிறார்கள். அங்கே நாங்கள் பூங்காவில் விளையாடுவோம்.

துறவி : (மனமுருகி) விளையாடுங்கள் அம்மா… முடிவில்லாமல். இந்த மானுட குலம் உள்ளவரைக்கும் விளையாடுங்கள். உங்கள் சிறுகால்கள் தொட்டுத்தான் மரத்துப்போன இந்தப் பூமிக்கு உயிர் வரவேண்டும். புத்தம் புதிய ஒரு உலகை நீங்கள்தான் பெற்றெடுக்க வேண்டும்.

லிசவெத்தா : (எழுந்து வந்து) தத்யானா.. வா இங்கே (மன்னிப்பு கோரும் தொனியில்) மன்னிக்க வேண்டும் தந்தையே, குழந்தை சற்று அதிகப்பிரசங்கி. செல்லமாக வளர்த்துவிட்டோம்.

சூதாடி : (மிதமிஞ்சிய பரவசமும் போதையின் வெறிப்புமாக) அன்பில் முத்தங்களால் மட்டுமே இந்த உலகம் அவளிடம் உரையாட வேண்டும்.

துறவி : (லிசவெத்தாவிடம்) எங்கு செல்கிறாய் குழந்தை?

லிசவெத்தா : வெகுதூரம், தந்தையே. சைபீரியாவில் இவருக்கு வேலை மாற்றலாகியுள்ளது.

துறவி : பிரார்த்தனை செய்தபடி இரு.

லிச : ஆம் தந்தையே. நான் எப்போதுமே பிரார்த்தனை செய்தபடி இருப்பேன். பின்னல் வேலை செய்யும்போது ஒவ்வொரு முடிச்சுக்கும் ஒருமுறை மீட்பரை எண்ணுவேன். என் கைவிரல்கள் மனமாக மாறிவிடும்.

துறவி : அதுதான் நம் அன்னையர் காட்டிய வழி. தங்கள் தூய கண்ணீரால் பின்னிய உடைகளை அணிவித்து குழந்தைகளை வளர்த்தார்கள்.

லிச : (அடிபணிந்து) தங்கள் ஆசி தந்தையே.

துறவி : கிறிஸ்து உன்னை ஆசீர்வதிப்பார்.

கர்னல் : (அசௌகரியமடைந்து) அங்கே என்ன பேச்சு? (கிழவர்களிடம்) உங்களைப் பார்த்தால் பைத்தியங்கள் போலிருக்கிறதே, இங்கே எப்படி வந்தீர்கள்?

துறவி : எங்களுக்கு அனுமதி உள்ளது.

கர்னல் : யார் தந்த அனுமதி?

துறவி : மேலிடம்.

கர்னல் : (தணிந்து) மன்னிக்க வேண்டும் மூத்த தோழர். புரட்சியின் படை வீரன் என்ற முறையில் நல்லெண்ணத்தால்தான் கேட்டேன். தங்கள் பயணம் வெல்க.

(வேட்டுச் சத்தம். கண்ணாடி ஒளிர்கிறது. ஓர் உயிர்வதை அலறல் ஒலித்து ஓய்கிறது.)

சூதாடி : (உடல் பதற எழுந்து) என்ன? என்ன? (அந்தக் கையடையாளங்களைப் பார்க்கிறார்) ஆ… அவை என்ன?

துறவி : சிலுவைகள். (மனம் கசந்து சிரித்து) நூற்றாண்டுகளுக்கு முன் நம் ஆத்மாவின்மீது ஒரு சிலுவையின் பாரம் ஏற்றி வைக்கப்பட்டது. இப்போது சிலுவைகள் மலையெனக் குவிகின்றன.

சூதாடி : என்னால் இதைப் பொறுக்க முடியாது… (எழுந்து கிளம்புகிறார்)

துறவி : உம்மால் அங்கு போக முடியாது. இந்தக் கண்ணாடிச் சுவரை நீரும் நானும் தாண்ட முடியாது.

சூதாடி : ஏன்?

துறவி : ஏனெனில் இது நம் ஞானம். (மீண்டும் கசப்புடன் சிரித்து) ஞானமென்பது இதுதான். கற்சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச் சுவர்களாக மாற, உலகம் வெட்டவெளியாகும் நிலை. அவ்வெட்ட வெளியின் நடுவே தனிமையின் சிறையில் நாம் அடைபடுகிறோம்.

சூதாடி : அபத்தமான உருவகம். (குரல் ஒங்க) நான் என்ன செய்ய வேண்டும் இப்போது? என் உடம்பும் ஆத்மாவும் எரிகின்றன.

துறவி : எரியவிடும். அந்த நெருப்பே நமது ஆத்மாவிற்கு ஒளி.

சூதாடி : (கடும் கோபத்துடன்) என் ஆத்மா இருளில் அழியட்டும். சேற்றில் மக்கட்டும். (நரம்பு நோயாளிக்குரிய கிரீச்சிட்ட குரலில்) ஒளியை வெறுக்கிறேன். ஒளி ஒரு சாபம்.

துறவி : நீர் இன்னமும் சூதாடிதான். கையில் பணயமாக இன்னமும் சில எஞ்சியுள்ளன.

சூதாடி : (தணிந்து சோர்ந்து அமர்கிறார்) உண்மை. அதனால்தான் எனக்கு நிம்மதியில்லை. என் முடிவு நிகழவும் இல்லை. சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும்?

துறவி : எனக்கு ஏதும் தெரியவில்லை.

சூதாடி : எதற்கு இங்கு வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு வழி தெரிந்திருக்கிறது. அது என்ன? அதை அறியவே நானும் இங்கே வந்தேன்.

துறவி : ஓர் உள்ளுணணர்வின் கட்டளை. தெரியுமல்லவா? வோலாவோ ரயில் நிலையத்தில் 1910ல் இதே போல ஒரு பெஞ்சில் நான் அமர்ந்திருந்தேன். மரணம் மிக அருகாமையில் இருந்தது.

சூதாடி : அது வரலாறு.

துறவி : அப்போது என் அருகே ஒருவர் வந்து நிற்பதை உணர்ந்தேன். அவரது ஆடைகள் என்னை உரசின. அவர் தன் இனிய குரலில் என்னிடம் மகனே வருகிறாயா என்றார். ஆம் என்றேன். உங்களுடன் வருவதற்காகவே யாஷ்னா பல்யானாவையும் பண்ணைகளையும் துறந்தேன். என் நூல்களையும் உலகப் புகழையும் துறந்தேன். செருப்புத் தைத்து உண்டு வாழ்ந்தேன். இதோ, ஊர் பேரற்ற பஞ்சையாக உங்களை எதிர்பார்த்துக் கிடக்கிறேன் என்றேன். அவர் ஏமாற்றம் கொள்வது தெரிந்தது. அவரைக் கவரும் பொருட்டு என்ன சொல்வது என்று நான் தவிக்கும்போதே அவர் விலகிச் சென்றுவிட்டார். பரபரப்புடன் எழுந்து வெற்று வானைப் பார்த்து சுடுகண்ணீர் விட்டேன். ரஷ்யாவின் உறைந்த விரிநிலங்களில் அலையத் தொடங்கினேன்.

சூதாடி : (அவருக்கு மிகவும் பழக்கமான அந்தக் குரூரமான கூர்மையுடன்) கருணையும் தியாகமும் துர்நாற்றம் வீசும் அழகிய மலர்கள்.

துறவி : (அந்நிலையிலும் புண்பட்டு) பியோத்தர்…. (சமாதானமடைந்து) உண்மைதான்.

சூதாடி : அதை நீங்கள் இழந்துவிட்டீர்களா?

துறவி : இங்கு அது தெரியவரும்.

எலிசா : தூயவர்களே, ஒன்று கேட்கலாமா?

கர்னல் : எலிசா நீ வாயை மூடு.

எலிசா : (உதாசீனம் செய்து) புனிதர்களே, நான் பெரும்பாவி. படிப்பற்றவள். மனம் ஒன்றி ஒரு கணம்கூடப் பிரார்த்தனை புரிய முடியாதவள். ஆனால் என் ஆத்மா வேகிறது. என் மனமெங்கும் வலி நிரம்பியுள்ளது. சொல்லுங்கள். இதெல்லாம் எதற்கு? இந்த மானுட அழிவு, எண்ணத் தொலையாத இந்தத் துக்கம்….

கர்னல் : தோழர்களே, இவள் சில சமயம் துரோகியின் சொற்களை எதிரொலித்துவிடுகிறாள். எலிசா யெகோரெவ்னா, உனக்கு எத்தனை ஆயிரம் முறை கூறுவது? இது ஒரு யுகப் பிறப்பின் தருணம். வலியும் ரத்தமும் இன்றிப் பிரசவம் இல்லை. மாபெரும் புரட்சிக்குப் பிறகு சமூகத்தை ஒழுங்கு செய்யும் பிரம்மாண்டமான பணி நடைபெறுகிறது. சில அழிவுகள் தவிர்க்க முடியாதவை.

எலிசா : சொல்லுங்கள் தந்தையரே. இந்த உதிரத்திற்கு பொறுப்பேற்பவர்கள் யார்? (கோபத்துடன்) நமது குழந்தைகள், இன்னமும் பிறக்காத நமது குழந்தைகள், இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் இல்லையா? அவர்களுக்கு நாம் விட்டுச்செல்வது இந்தப் பெருஞ்சுமையா? (வெறிகொண்டு, படிப்படியாக நரம்பு நிலைகள் பதறி) இந்தக் கண்ணீர், இந்த சாபங்கள், ரத்தம்… (குரல் கிரீச்சிட) இதெல்லாம் கடைசியில் எங்கள் வயிற்றில்தான் வந்து படிய வேண்டுமா? (வயிற்றைப் படீரென்று அறைகிறாள்.)

(அந்த ஒலியில் அறையில் இருக்கும் அனைவரும் திடுக்கிடுகிறார்கள். எலிசா கேவிக்கேவி அழுகிறாள் )

கர்னல் : அவளுக்கு நரம்புப் பதற்றம் உண்டு, தோழர்களே.

துறவி : நான் பிரார்த்தனை புரிகிறேன் அம்மா.

சூதாடி : (எழுந்து ஆவேசமாக) நான் பொறுப்பெற்கிறேன் அம்மா. இந்தப் பாவத்திற்குப் பதிலாக நான் என் உயிரையும் ஆத்மாவையும் பணயம் வைக்கிறேன்.

துறவி : இன்னொரு சூதுப்பலகை கிடைத்துவிட்டது உமக்கு.

சூதாடி : வாயை மூடும். உமது பிரார்த்தனை ஒரு அழுகிய உடல். அதன்மீது வரலாற்றின் ராணுவங்களும் அகதிக் கூட்டங்களும் நடந்துசெல்கின்றன. எஞ்சுவது உமது வீங்கிச் சிவந்த கர்வம். உமது பிரார்த்தனைக்கு எதிர்முனையில் அந்த நாற்றமடிக்கும் கர்வம் அமர்ந்து மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

துறவி : (வாயடைந்துபோய்) இருக்கலாம்.. ஆம், அதுவே உண்மையாக இருக்கலாம். ஆனால் எனக்கு வேறு வழியில்லை.

சூதாடி : (குரூரமாக) நீர் ஏன் சிலுவை ஏறக்கூடாது?

துறவி : உயிர்த்தெழ முடியாதவர்கள் சிலுவையில் ஏறக் கூடாது.

சூதாடி : என்னை விடப் பெரிய சூதாடி நீர், கருணையை வைத்து புனிதத்துக்கு ஆடினீர். இதோ மரணத்தை வைத்து நிரந்தரத்துவத்திற்கு ஆடுகிறீர்.

துறவி : (உடல் நடுங்க) உமது வருகையின் நோக்கம் இப்போது புரிகிறது. (மண்டியிட்டு, கண்ணீருடன் பிரார்த்தனை புரியத் தொடங்குகிறார்)

சூதாடி : எனக்கும் புரிகிறது. நான் பார்த்ததிலேயே பெரிய சூதாட்டத்தை இதோ காணப்போகிறேன். பிரார்த்தனை, கண்ணீர், தியானம். காய்கள் உருளட்டும்.

(துறவி கண்ணீர் கொட்ட, பிரார்த்தனை செய்கிறார்)

தத்யானா : அவர் இரவுணவு சாப்பிடவில்லையே, பிறகு ஏன் பிரார்த்தனை செய்கிறார்?

சூதாடி : அவரது இரவுணவு வரலாற்றுடன். அதன் விசேஷ விருந்தினர் மாளிகையில், சக புனிதர்களுடன் அமர்ந்து. ரத்தம் போன்ற மது. வேக வைக்கப்பட்ட இதயங்கள், தேனில் ஊறி மிதக்கும் துயரம் நிரம்பிய கண்கள். பதற்றத்தில் பிணைத்துக்கொண்ட பொரித்த விரல்கள். ஓ… எத்தனை குரூரமான உணவு. இவன் மனிதனல்ல. மனிதர்கள் கோழைத்தனத்தால் கண்மூடிக்கொள்கிறார்கள். இவன் புனிதன். அகந்தையால் கண்களை மூடிக்கொள்பவன். (கோபத்துடன்) புனிதர்கள். சொற்களினுடாக உலகுக்குப் போதையூட்டி பேரழிவுக்கு வழிவகுக்கும் துரோகிகள்.

லிசவெத்தா :  தந்தையே, உங்களுக்குப் பிரார்த்தனையில் நம்பிக்கையில் இல்லாமலிருக்கலாம். நீங்கள் ஒரு வேளை… (தயங்கி) ரகசிய வழிப்பாட்டாளாராகக் கூட இருக்கலாம்.

சூதாடி : ஆமாம். ரகசிய வழிப்பாட்டாளன்தான். எனது இறைவன் சாத்தான். அவனது குரல் தெள்ளத்தெளிவானது. அவனிடம் கண்ணீர் இல்லை. பசப்பும் சொற்கள் இல்லை.

லிச : உங்கள் இறைவனை வணங்குங்கள். அவரை விட்டுவிடுங்கள்.

சூதாடி : தன்னை வணங்க உத்தரவிடுபவனல்ல எனது கடவுள். பிறரது வேடங்களை, கண்ணீரின் திரைகளை, பிரார்த்தனையின் கீழ்மையைக் கிழித்து வீசவே அவன் உத்தரவிட்டிருக்கிறான்.

லிச : எனக்குப் புரியவில்லை. அவர் யாருக்கு என்ன தீங்கு இழைத்தார்…?

சூதாடி : அதோ அந்தக் கண்ணாடிச் சன்னலில் தெரியும் கையடையாளங்கள்… அவற்றுக்கு அவர் என்ன பதில் கூறுகிறார்? அந்த ஏழைகள் செய்த பிழை என்ன? இவரும் இவரது மூதாதையரும் சொன்னவற்றை அப்படியே நம்பியது மட்டும்தான். இப்போது அந்தச் சொற்கள் எல்லாம் நீர்க்குமிழி போல உடைந்து மறைவதை அவர்கள் நிராசையுடனும் ஆங்காரத்துடனும் அறிகிறார்கள். நீதி, கருணை, தியாகம், அன்பு… தூ… (ஓங்கி தரையை உதைத்து) அவற்றின்மீது அவர்கள் ஆத்மாக்கள் காறி உமிழ்கின்றன. (ஓங்கி கைகளை மார்மீது அடித்து, வெறியுடன் வலிப்புடன் மேடையில் நடந்து சுழன்று) அவர்கள் வாட்களை நம்பியிருக்க வேண்டும். அட, மண்ணிலிருந்து கருங்கற்களைப் பொறுக்கி அவற்றை நம்பியிருக்க வேண்டும். அவை திடமானவை, பௌதீகமானவை. அவை மாயைகளல்ல.

லிச : (நடுங்கியபடி) தந்தையே, தாங்கள் கட்டற்ற நதி போலிருக்கிறீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது.

சூதாடி : ஏன் பயம்? பயம் என் மீதல்ல. அந்தத் துவாலையைக் கீழே போடு. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு முடிச்சாகப் போட்டு அத்துவாலையால் இவ்வுலகை மூடிவிட நினைக்கிறாய். இதோ பார், உனது ஆயிரம் பல்லாயிரம் துவாலைகளால் இந்தக் கையடையாளத்தை அழித்துவிட முடியுமா?

லிச : ஓ… மீட்பரே, என்ன இது? (தலையைப் பற்றிக்கொண்டு குனிகிறாள்.)

சூதாடி : நீ அசடாகவோ வெகுளியாகவோ வேடமணிய வேண்டாம். பெண்ணே, நான் சூதாடி. இந்த உலகின் சூதாட்டங்களின் உள்ளோட்டங்களையெல்லாம் அறிந்தவன். அந்தத் துவாலை ஒரு சூதாட்டம். ஒரு முடிச்சை நீ போடுகையில் மறுமுடிச்சை போடுபவன் எதிர்முனைச் சூதாடி.

லிச : (கோபமடைந்து) நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! (அவள் உடல் குலுங்குகிறது, விசும்பி அழுகிறாள்)

கர்னல் : இது சற்று அத்துமீறிவிட்டது. (சூதாடியிடம்) தோழர், தாங்கள் சற்று அத்துமீறி விட்டீர்கள். ஒரு சகமனிதனின், குறிப்பாக பெண்களின் கௌரவத்தைக் குலைக்க உங்களுக்கு உரிமை இல்லை.

சூதாடி : அதுதான் என் வேலையே. கௌரவங்களைக் குலைத்தல்.

கர்னல் : உம்மை இனி இங்கு அனுமதிக்க முடியாது, நீர் வெளியேறலாம். இது தகுதியுடையோர் தங்கும் அறை.

இருண்ட மூலை : தகுதி அக்கண்ணாடியின் கனத்தால் தீர்மானிக்கப்படுவது.

கர்னல் : என்ன ? (வெறிகொண்டு) என்னையே கிண்டல் செய்கிறாயா? மூடப்பதரே! (ஓங்கி சூதாடியை அறைந்து, பிடித்து இழுத்து, வெளியே தள்ளி, கதவை சாத்தி) கேடுகெட்ட கிழவன். கூளம். செத்தைக் கூளம்.

லாப்கின் : ஆமாம், மேன்மை தங்கிய தோழர். அனைவரையும் பெரும் பாவிகளென உணர வைத்துவிடுகிறான்.

கர்னல் : இம்மாதிரி குப்பைகளை அள்ளி வீசி இந்தப் பூமியை சுத்தம் செய்வோம்.

இருண்ட மூலை : ஆனால் அவர்களே மண்ணுக்கு எரு.

கர்னல் : என்ன சொன்னாய்?

லாப்கின் : நான் ஏதும் சொல்லவில்லையே ஐயா…

கர்னல்: சொல்லவில்லையா? (வெறுப்புடன் விழித்துப் பார்த்து) வாயைக் காவலில் வை. இந்நாட்களில் ஒரு புற்றுநோய்ப் புண்ணைவிட ஆபத்தானது அது.

லாப்கின் : ஆம் தோழர். நான் அறிவேன்.

இருண்ட மூலை : (சிரித்து) பேசாத வாய் கீழிறங்கி இதயத்திற்குப் போய்விடுகிறது.

கர்னல் : (எரிச்சலின் உச்சத்தில் திணறி, பின்பு தளர்ந்து) முணுமுணுக்கும் அற்பர்கள்! பைத்தியங்கள்! (அமர்ந்து) பைத்தியங்கள் உலகம்…!

(துறவி பிரார்த்தனை செய்கிறார்)

தத்யானா : நறுமணம்! பாட்டி அது என்ன பூ?

எலிசாஎன்ன மணம்?

தத்யானா : பூமணம்!

(கப்ரியேல் அவசர அவசரமாக வருகிறான். கையில் ஒரு பெரிய வெண்ணிற மலர்)

தத்யானா : வந்துவிட்டாயா? (ஓடிப்பிடித்து கிள்ளி) கிள்ளிவிட்டா போனாய்?

கப்ரியேல் : தள்ளிநில்லு குட்டி. எனக்கு வேலை இருக்கிறது.

தத்யானா : என்ன வேலை?

கப்ரி : வேறு என்ன? புனிதர்களை அழைத்துச் செல்வதுதான். இந்த அசட்டுக் கிழங்கள் ஏன் அங்கு வரவேண்டும்? அங்கேயும் கூடிக்கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும். இங்கே இன்னொன்று இருந்ததே எங்கே?

தத்யானா : யார்? கோபக்காரத் தாத்தாவா?

தத்யானாஅவரைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள்.

கப்ரி : ரொம்ப நல்லது. அதை நான் சைபீரியாவில்தான் சந்தித்து கூட்டிச் செல்ல வேண்டும். தூக்குமேடையிலிருந்து. (ஒரு தாளை உருவுகிறான்.)

தத்யானா : என்ன அது?

கப்ரி : மீட்புப் பத்திரம். இதைப் படிக்க வேண்டும்.

தத்யானா : எதற்கு?

கப்ரி : சடங்குதான். வேறு வேலை இல்லை. நீ சிரிக்கக் கூடாது. எனக்கும் சிரிப்பு வரும் பிறகு.

தத்யானா : சிரிக்கவில்லை. (சிரிப்பை அடக்குகிறாள்.)

கப்ரி : சிரிக்காதே. கிள்ளுவேன்.

(தியானிக்கும் துறவியின் நெற்றியை மலரால் தொட்டு எழுப்புகிறான்)

துறவி : (சிலிர்த்து, உடல் விதிர்விதிர்க்க எழுந்து) ஆ என் தேவனே நீதானா?

கப்ரி : (படிக்கிறான்) எழுக! உங்கள் நேரம் வந்துவிட்டது. சொர்க்கத்தின் பொன்னொளிர் வாசல்கள் உங்களுக்காக திறக்கவிருக்கின்றன. மண்ணுலகின் மாந்தர் நினைவில் இக்கணம் ஒரு மகத்தான தருணமாக என்றென்றும் நிலைப்பதாக.

துறவி : (அவன் கரங்களைப்பற்றி முத்தமிட்டு) என் வாழ்வு நிறைவு பெற்றது. நெடுங்காலம் என் கனவின் உச்சங்களில் நான் விழைந்த தருணம். ஆனால்…

கப்ரி : (படிக்கிறான்) லேவ் தல்ஸ்தோய் எனும் நீ உன் பிதாவிற்கு என்றும் பிரியமானவனாக இருந்தாய்… அறிதலும் அறிந்ததை துறத்தலுமாகக் கழித்த நூற்றியிருபது வருட வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும் உன் பிரக்ஞையின் ஊசல் ஆடி மேலெழுந்து உன் பிதாவின் பாதங்களைத் தொட்டு மீண்டது. இறுதியில் இதோ ஞானமெனும் படிகளில் ஏறி ஞானமின்மையின் தூய்மையை அடைகிறாய். உன் பிதாவின் கருணை இதோ உன் சிரத்தை வருடுகிறது. மண்ணில் உன் பணி முடிவடைந்தது. விண்ணில் உன் ஆத்மா ஒரு உன் ஆத்மா நறுமலராக விரியவிருக்கிறது. ஆமென்.

துறவி : ஆனால்…. (சஞ்சலத்துடன்) தூயனே, என் இதயம் வலிக்கிறது. என்னுள் நிறைவும் இன்பமும் இல்லை. இதோ இந்த இரு அடையாளங்கள். இவை மட்டுமே இப்போது என்னில் மிஞ்சியுள்ளன.

கப்ரி : உன் பிதாவின் அரண்மனைக்கு வருக. (தோளைத்தொட்டு எழுப்புகிறான். அவர் அவனைப் பின்தொடர்கிறார். அவர் உடல் மட்டுமே பெஞ்சு மீது கிடக்கிறது.) வருகிறேன் தத்யானா. அங்கே பிள்ளைகளிடம் உன்னைப்பற்றி சொன்னேன். உனக்குப் ‘புதிய முயல் பழைய முயல்’ பாட்டு தெரியுமா என்று தான்யா கேட்டாள்.

தத்யானா : தெரியுமே (உற்சாகமாக) புதிய முயல் பழைய முயல், பூவை தின்னும் குட்டிமுயல், புலலைத் தின்னும் பெரியமுயல்….

கப்ரி : தான்யா ரொம்ப நல்ல பெண். நிறைய பாட்டு தெரியும் அவளுக்கு. அவளுடன்தான் நான் விளையாடுவேன். நடாஷா கெட்டவள். நான் அவளுடன் காய். நீயும் காய்விட்டுவிடு, என்ன?

தத்யானா : ஏன்?

கப்ரி : நீ என் கட்சிதானே?

தத்யானா : அந்த நடாஷா என்ன செய்வாள்?

கப்ரி : அப்புறமாகச் சொல்கிறேன். இதோபார், கிழம் மூசுமூசு என்று அழுகிறது. கொண்டு சேர்த்தால்தான் நிம்மதி.

(துறவி அந்தக் கண்ணாடிச் சன்னலைப் பார்த்து கண்ணீர் விட்டபடி போகிறார்.)

எலிசா : (துறவியின் உடலை பார்த்து) என்ன ஆயிற்று அவருக்கு? (உற்றுப் பார்த்து) கடவுளே (எழுந்து தொட்டுப்பார்த்து) அய்யோ…!

லிசவெத்தா :  நிஜம்மாகவா?

(கண்களில் நீர் தளும்புகிறது. சிலுவை போட்டுக்கொள்கிறாள்)

கர்னல் : பிணங்கள். பிணங்களைப் பார்க்காமல் ஒரு நாள்கூடத் தாண்டுவதில்லை.

எலிசா : கடவுளே இது என்ன? (துறவியின் தலை மீதிருந்து ஒரு வெண்ணிற மலரை எடுத்து) இதைப் பார்த்தீர்களா!

கர்னல் : ஏதாவது பூசண மலராக இருக்கும்.

லிச : நான் இதுவரை இப்படியொரு மலரைப் பார்த்ததேயில்லை. என்ன அழகு! என்ன தெய்வீகமான மணம்?

எலிசா : இது எப்படி வந்தது இங்கு?

தத்யானா : இது அவன் கொண்டு வந்தது. கப்ரியேல் அண்ணா.

லிச : யார்?

தத்யானாகப்ரியேல் அண்ணா! வெண்ணிறமாக அங்கி போட்டு பெரிய சிறகுகளுடன் இருந்தானே?

லிச : உளறாதே கழுதை!

எலிசா : இல்லை. அவள் எதையோ பார்த்திருக்கிறாள். இந்த மலர்… ஆம் ஞாபகமிருக்கிறது. இதை நான் ஃபெலினியின் ஓவியத்தில் பார்த்திருக்கிறேன். இது தேவமலர். புனிதர்களின் ஆத்மாவை சொர்க்கத்திற்குத் தொட்டெழுப்பிச் செல்ல தேவதூதன் இதை எடுத்து வருவான்.

லிச : அப்படியானால் (சட்டென்று தத்யானாவைப் பற்றி அணைத்து) ஐயோ என் குழந்தை! அவள் மட்டும் ஏன் அதைப் பார்க்கிறாள். அவள்….

எலிசா : குழந்தைக் கண்களுக்கு மட்டும்தான் தெரியுமோ, என்னவோ?

லிச : இல்லை அம்மணி. என் ஆத்மாவிற்குத் தெரிகிறது. அய்யோ (குழந்தையை இறுக அணைத்து) என் உள்மனதில் ஒரு பதற்றம் இருந்தபடியே இருக்கிறது. இவளைப் பார்க்கும் போதெல்லாம் என் வயிறு பதைபதைக்கிறது. என் குழந்தை… (அழுகிறாள்.)

எலிசா : ஏன் தேவையின்றி பயப்படுகிறாய்? இதோ நம் முன் புனிதர் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார்… எகோர்.

கர்னல் : அவர் புனிதரில்லை. புனிதர்களை எங்கள் கருத்தியல் அனுமதிப்பதில்லை.

இருண்ட மூலை : (உரக்கச் சிரித்து) புனிதர்கள் இல்லாது பொன்னுலகு இல்லை தோழர்.

கர்னல் : வாயை மூடுடா பழிகார நாயே.

எலிசா : நாம் கொண்டாட வேண்டும். நம் கண்முன் இதோ ஒரு அற்புதம் நிகழ்ந்துவிட்டிருக்கிறது. யாராவது மாதா கோவிலுக்குச் செய்தி தெரிவியுங்கள். இதோ இந்த பெஞ்சு… இந்தத் தருணம் (மனம் பொங்கி) ஓ தேவனே! எத்தனை உன்னதம்!

(ஒவ்வொருவரும் பரவசமடைகிறார்கள். சடலத்தின் முன் மண்டியிட்டு வணங்குகிறார்கள். பிரார்த்தனை செய்கிறார்கள். கர்னலை தவிர. லிசவெத்தாவும் எலிசாவும் அழுகிறார்கள்)

தத்யானா : தாத்தா ஏன் நாற்றமடிக்கிறார்?

லிச : யார்?

தத்யானாஇந்தத் தாத்தாதான். அவர் உடம்பு நாறுகிறது.

லிச: வாயை மூடு! அதிகப்பிரசங்கிக் கழுதை.

லாப்கின் : : இந்த அறை பழையது. எலிகள் செத்திருக்கலாம்.

எலிசா : நாற்றமா? நறுமணமல்லவா வீசுகிறது? தேவமலர்!

தத்யானா : இது இல்லை பாட்டி. இந்தத் தாத்தாவின் நாற்றம்,

எலிசா : அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசாதே. போ அந்தப்பக்கம்

தத்யானா : தாத்தாதான் நாற்றமடிக்கிறார்.

எலிசா : லிசவெத்தா, உனக்கு ஏதேனும் தெரிகிறதா?

லிச : இல்லையே.

எலிசா : வேண்டுமென்றே சொல்கிறாள்.

கர்னல் : (தயங்கி) சிறிதளவு நாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

எலிசா : வாயை மூடுங்கள், நீங்களெல்லாம் நாத்திகப் பாவிகள். அழுகி நாறுவது உங்கள் ஆத்மாதான்.

கர்னல் : உன் நாத்திகத்தை இந்தப் பிணம் போக்கிவிடுமென்றால் சரி.

எலிசா : வாயை மூடுங்கள்! (கோபத்தில் நடுங்குகிறாள்)

லாப்கின் : சிறிய நாற்றம்தான்.

லிசவெத்தா : லாப்கின், உங்கள் எஜமான விசுவாசம் இங்கு தேவையில்லை.

கர்னல் : நாற்றம் தாங்க முடியவில்லை .

(நாற்றம் பரவுகிறது. முகங்களிலும் உடல்களிலும் அதைத் தவிர்க்கும் பாவனைகள். புறக்கணிக்கும் எத்தனங்கள். கர்னல் விசிறிக்கொள்கிறார். தத்யானா மூக்கைப் பிடித்துக்கொள்கிறாள்)

லாப்கின் : வயோதிக உடல்.

கர்னல் : நோயுற்றிருக்கக் கூடும்.

லிச : அவரது ஆத்மா தூய்மையாக இருந்தது.

எலிசா : ஆம். ஆத்மாவே புனிதமானது.

லிச : எனக்கும் நாற்றம் தாங்க முடியவில்லை.

எலிசா : மனப்பிரமை தான். இந்த அழுகிநாறும் அறை, நம்மைப் பித்துப் பிடிக்க வைக்கிறது.

லிசபெத்தா : ஆம். கடவுளே, என்ன நாற்றம்!

எலிசா : எல்லாம் பிரமை.

(நாற்றம் அனைவரையும் மூழ்கடித்தாயிற்று. விசிறுகிறார்கள். வளைக்கிறார்கள். தடுமாறுகிறார்கள்.)

தத்யானா : அம்மா வாந்தி வருகிறது.

(கதவு கிரீச்சிட்டுத் திறக்கிறது. சூதாடிக் கிழவர் மேலும் குடித்து, மேலும் தறிகெட்டு, தள்ளாடி வருகிறார். தடுமாறி, ஒரு பெருத்த ஏப்பமிட்டு அறை நடுவே நின்று, சிரமப்பட்டுக் கண்களைத் திறந்து பார்க்கிறார் )

சூதாடி : என்ன இங்கு அமைதி? (திருப்தியுடன்) நான் உலகிலேயே பெரிய நாவலாசிரியன் பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி. நான் வரும்போது அப்படித்தான் அமைதி தேவை. (ஏப்பம் விட்டு) வோட்காவில் தண்ணீர் சேர்க்கிறார்கள். அயோக்கியப் பதர்கள். (மூக்கைச் சுளித்து) என்ன நாற்றம் அது? பாசிபிடித்த புராதனக் கட்டிடங்களின் நாற்றம். (சுற்றுமுற்றும் பார்த்து) புதைந்த நகரங்களின் வண்டல் நாற்றம். நூற்றாண்டுகள் மட்கும் நாற்றம். (ஓங்கித் துப்பி) வரலாற்றின் துர்நாற்றம்.

தத்யானாதப்பு. இது இந்தத் தாத்தாவின் நாற்றம்.

சூதாடி : (சிரித்து) நினைத்தேன். கிழவன் அங்கிக்குள் ஒரு புட்டி வோட்காவாவது வைத்திருப்பான் என்று, போட்டுவிட்டுக் காலை நீட்டிவிட்டான். (விக்கல் எடுத்து) பழைய கட்டை. ஆனால் ஒரு புட்டிவரை போகும். ராட்சதக் கிழவன். (ஏப்பம் விடுகிறார்.)

தத்யானாதாத்தா செத்துப் போய்விட்டார்.

சூதாடி : (திடுக்கிட்டு) யார்?

எலிசா : தந்தையே, இங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. இதோ (வெண்மலரைக் காட்டி) இந்த தேவமலர் அவர் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்தது. (பரவசத்துடன்) அவரை பரமபிதா தன் மெய்ஞான மலரால் ஆசீர்வதித்தார். அவர் புனிதராகிவிட்டார்.

சூதாடி : (தள்ளாடியபடி வந்து, சடலத்தருகே நின்று உற்றுப் பார்த்து) புனிதரா, இவரா? இவர் புனிதரில்லை. இவர்… (உரக்கச் சிரித்து ) இவர் வேடதாரி. எந்த ஆஷாடபூதியும் தன் ஆத்மாவுக்கு நேர்மையாக இருப்பான். இந்த மேதை அதையும் வித்தகராக கண்ணீர்விட்டு ஏமாற்றிவிட்டான். அழுகி நாறாமல் எப்படியிருப்பான்?

எலிசா : (கோபத்துடன்) தந்தையே, நீங்கள் அத்துமீறுகிறீர்கள்.

சூதாடி : த்தூ… வாயை மூடு பிணமே. இப்போது எதற்கு நீ இந்த அழுகும் பிணத்திலிருந்து ஒரு புனிதனை உருவாக்க முயல்கிறாய் என்று அறியாத மூடனா நான்? நான்… (மார்பில் அறைந்து) நான் சூதாடியின் ஞானி! புனிதராம் (காறித்துப்பி) இந்தப் பாழடைந்த அறைக்குள் இந்த இழிந்த காத்திருப்பில் உங்களுக்கு ஒரு புனிதர் தேவைப்படுகிறார்… த்தூ…

(அனைவரும் விறைப்புற்று நிற்க, சூதாடி வெறிகொள்கிறார்)

சூதாடி : அங்கே லட்சக்கணக்கில் நிரபராதிகள் செத்து விழுகிறார்கள். அவர்களுடன் உடைந்து சிதறி அழிந்துகொண்டிருக்கிறது மொழி. பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்ட மொழி. மனித குமாரனும் உபதேசிகளும் பேசிய மொழி. சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் நெறிகளும் நிரம்பிய மொழி. செத்த உடல்போல புழுத்து மடக்குகிறது அது! நாற்றம்! (குமட்டி) குமட்டலெடுக்கச் செய்யும் நாற்றம். அன்பு, கருணை, பாசம், நீதி, தர்மம், மீட்பு, முழுமை… த்தூ (ஓங்கித் தரையை மிதித்து) கேடுகெட்ட நாய்களா… இங்கே இந்தக் கண்ணாடிக் கதவுக்கு இப்பால் இருந்து மீட்பு குறித்து கனவு கண்டபடி காத்திருக்கிறீர்கள். ஒன்றும் அறியாதவர்கள் போல. சொர்க்கம் திறந்து உங்களில் ஒரு அற்பப்பதரைப் புனிதனாக அழைத்துக்கொண்டது என்று கற்பனை செய்தபடி. நீங்கள் நடுத்தர வர்க்கம். உங்களுக்கு சொர்க்கமில்லை. நரகமும் இல்லை. இரண்டுக்கும் நடுவே முடிவேயில்லாத பாழ்வெளி உங்களுடையது. உங்கள் ஆத்மாவின் மீது அதிகார பீடங்களின் மலம் குவிந்து கிடக்கிறது. உங்கள் சமரசங்களின் மலம். ( குமட்டி) அதன் நாற்றம் இது…

எலிசா : நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் தந்தையே?

சூதாடி : ஆயிரமாயிரம் வருடங்களாக நீங்கள் எதைச் செய்து வருகிறீர்களோ அதையே இப்போதும் செய்கிறீர்கள். உங்கள் சுரணைகெட்ட அறிவின் கண்ணாடிச் சுவருக்கு அப்பால் ரத்தமும் கதறலுமாக வரலாறு வழிந்து போகிறது. வரலாறு… (திடீர்த் தெளிவுடன்) வரலாறு என்பது சாத்தானின் நாடக மேடை! (உடனே குழம்பி) அபத்தமான உவமை. ஏதோ நாடக வசனம் போல. என் மண்டையிலிருந்து வோட்கா இறங்கத் தொடங்குகிறது. மேன்மை தாங்கிய தோழர், உங்களிடம் ஒரு ஐம்பது கோப்பெக் இருக்குமா?

கர்னல் : இல்லை.

சூதாடி : நீங்கள் எனக்கு ஐம்பது கோப்பெக் தந்தால் வரலாறு குறித்து ஒரு நல்ல கட்டுரை அல்லது நல்ல உரை எழுதித் தருவேன். ஜெனரல் ஃபால்கின் எனது உரைகளைப் பேசியிருக்கிறார். என் பெயர் தஸ்தயேவ்ஸ்கி. கேள்விப்பட்டிருப்பீர்கள்…

கர்னல் : எனக்கு ஆர்வமில்லை.

சூதாடி : இது வரலாறு மீது ரத்தமழை பெய்யும் தருணம் தோழர்.

கர்னல் : இல்லை, இது வரலாற்றின் திருப்புமுனைத் தருணம்.

சூதாடி : உண்மை. ஆனால் வரலாற்றின் ஒவ்வொரு தருணமும் இதைப் போன்ற திருப்புமுனைத் தருணங்கள் தாம். வரலாறு தன்னை முடிவின்றி அழித்து ஆகிக்கொண்டிருக்கிறது. எப்போதும் தன் உடலின் ஒரு பகுதியை ரத்தமும் நிணமும் வழியக் கடித்து தின்றுகொண்டிருக்கும் வினோத மிருகம் அது. எப்படிப்பட்ட கற்பனை பார்த்தீர்களா தோழர். நீங்கள் ஐம்பது கோப்பெக்குகள் தாராளமாகத் தரலாம். இரண்டு கோப்பை வோட்காவின் விலைதான்.

கர்னல் : ஆளை விடும்.

சூதாடி : எப்படி வரலாறு இயங்குகிறது? அதன் ஒவ்வொரு உறுப்பும் வளரத் துடிக்கிறது. திடீரென்று ஓர் உறுப்பு வளர்ந்து பிற உறுப்புகளை அழித்துவிடுகிறது. அல்லது – உங்களுக்குப் பிடிக்குமென்றால் வரையறை மாதிரி எழுதித் தருகிறேன். வரலாறு தன் முந்தைய கணங்களை மறதிக்குத் தள்ளுவதனூடாகவே வளர்ச்சியடைகிறது. வரலாற்றை நிகழ்த்துபவை இரண்டு வல்லமைகள். மக்களின் இச்சை. மக்களின் உடல் சக்தி. அவை சரிவர இணையும் விகிதமே வரலாற்றின் திசையையும் இயங்கு முறையையும் தீர்மானிக்கிறது. எப்படி?

கர்னல் : (சலிப்புற்று) உம்மால் பேசாமல் இருக்க முடியுமா இல்லையா?

சூதாடி : புனிதர்களைப் பற்றிக்கூட நீங்கள் அருமையான வரிகளைக் கூற முடியும். உங்கள் சுயசரிதையில் இந்தச் சந்தர்ப்பத்தை எழுதும் போது கட்டாயம் தேவைப்படும். மறதிக்குத் தள்ளப்படும் கடந்தகால வரலாறு அல்லது அழிக்கப்பட்ட வரலாறு. அங்கு குற்ற உணர்வாக தேங்குகிறது. நொதித்து நுரைக்கிறது. அவற்றைக் குறியீடுகளாக மாற்றி வெளியே எடுத்து வழிபட ஆரம்பிக்கும் போதுதான் மனிதனுக்கு ஆறுதல் கிடைக்கிறது. புனிதர்கள் குறியீடுகளே. எனவே பேரழிவின் போது மனித குலத்திற்குப் பெரும்புனிதர்கள் தேவைப்படுகிறார்கள். புனிதன் என்பவன் அகங்காரம் கொண்டவன். தன் நேர்மை குறித்தோ ஞானம் குறித்தோ அகங்காரம் கொண்டிருப்பவன். அவ்வகங்காரத்தை வெல்ல அவன் தன்னை எளிமைப்படுத்திக்கொள்கிறான். துறக்கத் தொடங்குகிறான். உடனே அவனது அகங்காரம் நேர் எதிர்திசையில் வளர்ந்து பூதாகர வடிவம் கொள்கிறது. அதை அடையாளம் காணும் மனிதகுலம் அதை மேலும் மேலும் தூண்டி வளர்க்கிறது.. அகங்காரத்தின் பாரம் தாங்க முடியாமல் ஆகும்போது அந்த அசட்டு மனிதன் தன்னை பலி தருகிறான். புனிதன் ஆகிவிடுகிறான். குறிப்பை நீங்கள் இவ்வாறு முடிக்கலாம் தோழர், புனிதன் என்பவன் நாமனைவர் பொருட்டும் வரலாற்றுக்குத் தரப்பட்ட நரபலியன்றி வேறல்ல.

கர்னல் : உமக்கு நான் ஒரு கோபெக்கூட தரப்போவதில்லை.

சூதாடி : வோட்கா இல்லையேல் என்னால் பேச முடியாது. பேசாத சொற்கள் என் தலையை அறையும்.

கர்னல் : போய் சாகும்.

சூதாடி : (சோர்ந்து) அம்மணியீர், தங்களிடம் ஒரு இருபது கோபெக் இருக்க வாய்ப்புண்டா? (யோசனை கிடைத்து, மலர்ந்து, எலிசாவிடம்) அம்மணி! இந்தப் புனிதர் குறித்து அற்புதக் கதைகள் சிலவற்றை நான் கூற முடியும். ஒரு கதைக்கு பத்து கோப்பெக்.

எலிசா : (பேசாமலிருக்கிறாள்)

சூதாடி : சரி, ஐந்து கோபெக்.

லாப்கின் : தந்தையே தாங்கள் விரும்பினால் இந்த வோட்காவை அருந்தலாம். (அரைப்புட்டி வோட்காவைத் தருகிறாள்)

சூதாடி : நன்றி.. நன்றி.. (ஆவலாகப் பாய்ந்து பிடுங்கி மடமடவென்று குடித்து முடித்து) ஆ! எத்தனை ஆறுதல்.

எலிசா : தந்தையே நீங்கள் ஞானி. நீங்கள் கூறுங்கள். நான் என்ன செய்திருக்க வேண்டும்? (திடீரெனப் பெருகிய மனக் கொதிப்புடன்) கடந்த பதினைந்து வருடங்களாக என் இதயம் உருகிக் கொதித்தபடி இருக்கிறது. வெறுமை மிகுந்த வானம் நோக்கி மீண்டும் மீண்டும் கேட்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? நான் ஏதும் செய்யவில்லை. ஆனால் என் கரங்கள் முழுக்க நிரபராதிகளின் ரத்தம். (எழுந்து கிரீச்சிட்ட குரலில்) நான் யாரிடமும் பகிரமுடியாது இதை. வானை அண்ணாந்து பார்க்கையில் என்னுள் நிந்தனை நிரம்புகிறதே. கசப்பு என் சொற்களையெல்லாம் களிம்பேற வைக்கிறதே.

சூதாடி : சூதாட்டம்! மனிதர்களின் சூதாட்டத்தைக் கண்டு சலித்துப் போயிருக்கிறேன். இல்லை, விண்ணுலகிலிருந்து பரமபிதாதான் மனிதர்களைக் காய்களாக்கி பாதாள உலகுடன் சூதாடுகிறாரா?

எலிசா : ஆம் தந்தையே, (குரல் உடைந்து) என்ன செய்ய வேண்டும் என்று என் ஆத்மா அறியும். எல்லாம் பசப்புதான். அதை ஒத்திப்போட முயல்கிறேன். புறக்கணிக்கத் தவிக்கிறேன். (உடைந்து) நான் பெரும் பாவி.

சூதாடி : இந்தத் தருணத்தில் நிரபராதிகள் என்று எவரும் இருக்க முடியாது. கொல்லப்படுகிறவர்களைத் தவிர. பாவம் இந்த மண்ணிலும் காற்றிலும் பரவியுள்ளது. நாம் உண்பதும் உயிர்ப்பதும் பாவத்தையே. அதை வெல்ல வானை நோக்கிக் காறி உமிழ்ந்த பிறகு நாம் செத்து விழ வேண்டும்.

கர்னல் : எதற்காக இங்கே வந்து கத்துகிறாய்? மனிதர்கள் ஏனிப்படி சதா பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை.

இருண்ட மூலை : பிறர் குரலைக் கேட்காமலிருக்க எளிய வழி அதுதான் தோழர்.

கர்னல் : (மனமுடைந்து) அய்யோ என் மண்டை தெறிக்கிறது. பிணங்கள்! நாமெல்லாம் மட்கும் பிணங்கள். நம் அழுகிய மூளையிலிருந்து புழுக்கள் போல சொற்கள் வெளிவந்து குவிகின்றன.

சூதாடி : (பிணத்தைப் பார்த்து) புனிதச் சடலம்! பரலோகத்தில் இப்போது அவர் தேவ பாடகர் இசைக்க, பராமபிதாவுடன் இரவுணவு அருந்துவார். விண்மலர்களின் தேவ மணத்தில் தூங்குவார். அதை ஈடுசெய்ய இங்கு அவர் உடல் அழுகியாக வேண்டும்.

லிச : தந்தையே, உங்கள் நிந்தனை விஷம் மிக்கது. கண்ணீருடன் நமது புனிதர் பிரார்த்தனை செய்ததைக் கண்டேன். அந்தப் பிரார்த்தனை பொய்யா?

சூதாடி : பொய். ஆபாசமான பொய். அந்த மனிதரின் பிரார்த்தனை எப்படி நடந்தது தெரியுமா? இந்தக் கண்ணாடிச் சுவர் அடையாளங்கள் மீது அவரது மனமும் சொற்களும் சிக்கியிருந்தன. முட்புதரில் சிக்கிய கந்தலாடையை எடுப்பதுபோல அவர் மெல்ல அதிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டார். அவரைப் போன்ற புனிதர்களின் பிரார்த்தனைக்கு அதுதான் பொருள். அவர்களைப் பிறர் அறிய முடியாது. சூதாடி அறிய முடியும். ஏனெனில் அதுவும் ஒரு சூதாட்டம். (சிரித்து) இந்தப் புனிதரைப் பற்றி நான் இவர் உயிரோடிருக்கையிலேயே எழுதிவிட்டேன். கரமசோவ் சகோதரர்களில் தந்தை சோஷிமா பற்றிப் படித்திருப்பாயே.

லிச : படித்ததில்லை தந்தையே.

சூதாடி : ஆனால் மேகங்களின்மீது கால்வைத்து ஏறி அவர் விண்ணுலகு நோக்கிப் போகும்போது அந்தக் கந்தலில் ஒரு முள் மிஞ்சியிருப்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். ஏனெனில் சூதாடிகளுக்கு சூது ஒருபோதும் முற்றிலும் முடிவதில்லை. மலர்ந்து சிரித்தபடி அவர் போகும்போது…

தத்யானா : தாத்தா, அந்தப் பெரிய தாத்தா அழுதபடிதான் போனார்.

லிச : தாத்யா!

தத்யானா : நான் பார்த்தேன். அந்தத் தாத்தா கப்ரியேல் அண்ணாவிடம் ஏதோ கேட்கப் போனார். மேலே ஏறும்போது குனிந்து பார்த்தபடியே இருந்தார். இப்படி மார்பைப் பிடித்தபடி அழுதார்.

சூதாடி : (சொல்லிழந்து போய்) உண்மையாகவா? (ஓடிவந்து தத்யானாவைப் பற்றி, உலுக்கி) உண்மையாகவா? அழுதாரா? அழுதபடிதான் சென்றாரா?

தத்யானாஆமாம். நான் பார்த்தேன்.

சூதாடி : ஆ! (அடிபட்டவர்போல ஸ்தம்பித்து நிற்கிறார். தலையை ஆட்டியபடி சுதாரித்து அரங்கைச் சுற்றி வருகிறார்) விசித்திரம்! விசித்திரம்!

லிச: புனிதர்கள் சொர்க்கத்திற்கு அழுதபடி போவதில்லை.

சூதாடி : (பெருமூச்சுடன்) ஆம். அவர் அப்படித்தான் செல்வார். ஏனெனில் இந்த மண்ணில் பிறந்த புனிதர்களிலேயே அவர் வித்தியாசமானவர். ஒருபோதும் அவர் மண்ணை நிராகரித்ததில்லை. (மெதுவாக பரவசம்கொண்டு) லேவ் தல்ஸ்தோய்! எத்தனை மகத்தான பெயர்! துன்பத்தாலும் பாவத்தாலும் கறைபட்ட மனம்கூட நம்பிக்கையுடன் உச்சரிக்கத் தகுதியான இரண்டாவது பெயர் (உடைந்து) என் ஆசானே! என் மீட்பனே… இதோ என்னால் காணமுடிகிறது. உமது கண்ணீர் பரமபிதாவை சஞ்சலம் கொள்ள வைக்கிறது. சொர்க்கத்தின் மலர்களில் கண்ணீரை நிரப்புகிறது. (மண்டியிட்டு) இதோ இறுதியில் பூமியின் கண்ணீர்க் கடலில் இருந்து ஒரு துளி விண்ணை எட்டிவிட்டது. (நெகிழ்ச்சியும் உத்வேகமும் போதையும் கலந்து குமுறி அழுகிறார்) அநீதியின் ரத்த ஆற்றில் கை முக்கி கடவுளின் மனசாட்சிமீது அழியாத தடமொன்றை அவர் பதித்துவிட்டார். (பிரார்த்தனைபோலக் கரம் குவித்து வானைப் பார்க்கிறார்)

(அரங்கு அதிரும் இடியோசை. கனத்த அசரீரிக் குரல்கள் எழுகின்றன)

அசரீரி : அவர் புனிதர்களுள் மகத்தானவர். அவர் கடவுளுக்குச் சாத்தானையும் சாத்தானுக்கு கடவுளையும் அறிமுகம் செய்து வைத்தவர்!

அசரீரி : அவர் நினைவு ஓங்குக! அவர் அகந்தையின் கடைசித் துளியையும் கண்ணீராக மாற்ற முடிந்த மனிதர்.

(ஒளி மீள்கிறது. அசரீரிகளைப் பிறர் கேட்கவில்லை)

சூதாடி : தன் இறுதி சூதாட்டத்தில் அவர் வென்றுவிட்டார். (பெருமூச்சுடன்) இனி என் சூதாட்டம்.

லிச : என்ன சொல்கிறீர்கள்?

சூதாடி : என் இடம் எது என்று எனக்கு எப்போதும் ஐயமிருந்ததில்லை. அது தேவாலயமோ அரண்மனைகளோ ஞான சபைகளோ அல்ல. சிறைகள், விபச்சார விடுதிகள், மதுக்கடைகள், சாலையோர குப்பைக் குழிகள். எங்கு ஆத்மாக்கள் தங்களைத் தாங்களே காறி உமிழ்ந்து கொள்கின்றனவோ அங்கு.

லிச : சைபீரியாவிற்கா போகிறீர்கள்?

சூதாடி : ஆமாம். வெகுநாள் கழித்து மீண்டும். உனக்குத் தெரியாது பெண்ணே, பல வருடங்கள் முன்பு நடந்தது இது. சைபீரியாவில் ஒரு தூக்குமேடையருகே நாங்கள் எட்டு புரட்சியாளர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டோம். என் கண்ணெதிரே மூன்று சக புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடைய கழுத்து தவிர வேறு எதையும் எவரும் பார்க்கவில்லை. மனிதக் கழுத்து எந்த அளவு விகாரமாக நீளமடையும் தெரியுமா ? ஒவ்வொரு தோழருடனும் ஒருமுறையென மீண்டும் மீண்டும் தூக்கிலேற்றப்பட்டேன். என் முன்னால் இருவர் மட்டுமே மீதி. இரு மனிதர்களினாலான ஒரு சுவர். அப்பால் மரணத்தின் குளிர்ந்த கரிய கடல். அப்போது ஒருவன் என்னை நெருங்கி வந்தான். கரிய உடையணிந்த காவலன். என்னிடம் நீ ஏன் பிரார்த்தனை செய்யவில்லை என்று கேட்டான்.

லிச : நீங்கள் பிரார்த்தனை புரியவில்லையோ?

சூதாடி : இல்லை. அந்த நினைப்பே வரவில்லை. என் உடல் பதறிக்கொண்டிருந்தது. எந்த மரத்திலும் அமர முடியாத பறவை போல என் மனம் அர்த்தமற்று அலைமோதியது. அதே சமயம் அந்தக் காட்சியைப் புள்ளி புள்ளியாகக் கூர்ந்து கவனித்துக்கொண்டுமிருந்தேன். மகத்தான ஓவியமொன்றை ரசிக்கும் ரசிகனைப்போல. இன்னும் கூறப் போனால் அந்த ஒரு சில நிமிடங்களையே என் வாழ்நாள் முழுக்க பேரியக்கமாகச் சித்தரித்து எழுதப் போகிறேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நான் சாகக்கூடும் என்று என் உள்மனம் நம்பவேயில்லை. அப்படிச் செத்தால் அந்த அதிதீவிரமான அனுபவம் எனக்கு நேர்ந்ததற்கு அர்த்தமேயில்லாமல் ஆகிவிடுமல்லவா? (சிரித்து) அது எழுத்தாளனின் மாயை. தன்னை முதன்மையாகவும் இறுதியாகவும் அவன் எழுத்தாளனாகவே நினைத்துக்கொண்டிருக்கிறான். அத்தனை பேரும் தன்னை அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்றும் எண்ணிக்கொள்கிறான். கடவுள்கூட அப்படி நினைப்பதாகக் கனவு காண்கிறான். தனக்கு நிகழ்வதெல்லாம் தன்னால் எழுதப்படும் பொருட்டு எங்கிருந்தோ அனுப்பப்படுபவை என்று எண்ணுகிறான. (மேலும் சிரித்து) ஒவ்வொரு விசேஷ ஞானமும் ஒரு குறிப்பிட்ட வகைப் பேதைமையின் விளைவே.

லிச : அன்று என்ன நடந்தது?

சூதாடி : அந்தக் கரிய உடை மனிதன் என்னைக் குரோதத்துடன் உற்றுப் பார்த்தான். பிரார்த்தனை செய், உனக்கு நான் அமைதியைத் தருகிறேன் என்றான். பிரார்த்தனை புரிய எதிர்முனை மீது நம்பிக்கை தேவை, அல்லது தன் சொற்கள்மீது நம்பிக்கை தேவை. இரண்டுமில்லை என்னிடம் என்றேன். அவன் கோபத்தில் கொதித்தான். நமது ஆட்டம் முடியவில்லை பியோதர் என்று சொன்னபிறகு நடந்து கூட்டத்தில் மறைந்துவிட்டான். அப்போது ஒரு ஆச்சரியத்தை கவனித்தேன். எனக்கு முன்னால் நின்ற கைதியை காவலன் முன்னாள் போ என்று உத்தரவிட்டான். அவ்விரு சொற்களுக்கு நடுவேயிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நிகழ்ந்து முடிந்தன.

லிச : நீங்கள் ஒரு புனிதர் தந்தையே!

சூதாடி : நான் புனிதபாபி. அப்படி விக்டர் பெலின்ஸ்கி எழுத்தினான். அன்று என்னை ஒரு படைவீரன் குதிரைமீது ஜாரின் விடுதலை உத்தரவுடன் வந்து காப்பாற்றினான். நான் சூதாட்டத்திற்குத் திரும்பினேன். இதோ ஆட்டம் முடிந்துவிட்டது. மீண்டும் அங்கு போக வேண்டும். அவனைச் சந்திக்க வேண்டும். (சூதாடி உத்வேகத்துடன் வேகமாக நடக்கிறார். திடீரென நிற்கும்போது அவர் முகம் ஒளிவிழுந்து சுடர்விடுகிறது) அவருக்கு ரயில் நிலைய மேடை. எனக்கு தூக்கு மரம். அவர் கண்ணீர்விட்டார். நான் காறி உமிழ்வேன்.

கர்னல் : (ஏப்பம் விட்டபடி) என்ன இந்த இரவு விடியவே விடியாதா? பகலில் இந்த ஓலங்கள் பிற ஒலிகளில் மறைகின்றன. பகலில்தான் நாம் தூங்க முடிகிறது.

சூதாடி : இந்தக் கண்ணாடி. இதை உடைப்பேன். இதனுடாகவே நான் அங்கு போக முடியும்.

(ஓடிப்போய் அதை மோதுகிறார். பலவீனமான மோதல். கீழே விழுகிறார். மீண்டும் மோதுகிறார்)

கர்னல் : அடேய் குடிகாரக் கிழவா… பிடியுங்கள் அவனை…

சூதாடி : தள்ளிப்போடா மனிதப் புழுவே.

(கர்னல் ஓடிப்போய் சூதாடியைப் பற்றி இழுக்கிறார். அவர் திமிற, மாறி மாறி அறைகிறார்)

எலிசாஎகோர், அவர் புனிதர்.

கர்னல் : இவன் எதிர்ப்புரட்சிக்காரன்.

(மீண்டும் அறைகிறார். பிடியிலிருந்து தப்பிய சூதாடி வேகமாக கண்ணாடி சுவர் மீது மோத, ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அது, பிளந்து விழுகிறது.)

லாப்கின் : அய்யோ.

கர்னல் : மடையன்! மடையன்!

(சூதாடி கண்ணாடியினூடாக மறுபக்கம் போய்விடுகிறார்)

லாப்கின் : பனிக்குளிர் காற்று…

(குளிர்ந்த காற்றும் வயிற்றை கிழிக்கும் ஓலங்களும் அரங்கை நிறைக்கின்றன. உடைகள் பறக்க மெழுகுவர்த்திகள் அணைய பயங்கரமான தோற்றம்)

லிசவெத்தா : குளிர்கிறதே…

கர்னல் : அந்தப் பெட்டிகளை எடுத்து அடுக்குவோம். இல்லையேல் குளிர்ந்தே சாக வேண்டியதுதான்.

(அங்கிருந்த உடைசல் மேஜைகள் பெட்டிகளால் சுவரை மூடுகிறார்கள். பரபரப்பும் பயமும் நிரம்பிய கணங்கள். துளை மூடப்படுகிறது. காற்று தணிகிறது. லிசவெத்தா மெழுகுவர்த்தியை ஏற்றுகிறாள். மீண்டும் சகஜ நிலை)

தத்யானா : ஏன் அம்மா காற்று அப்படிக் கதறி அழுகிறது ?

லிசவெத்தா : வாயை மூடு சனியனே. (சலிப்புடன் பின்னலைத் தொடர்கிறாள்)

கர்னல் : அப்பாடா! என்ன நிம்மதி. கொலைக்காரக் கிழவன். நம்மை ஒழித்துக்கட்டிவிட இருந்தான்.

இருண்ட மூலை : ஒருவழியாக பாவமன்னிப்பு கேட்கும்போது அறிக்கையிட திட்டவட்டமான ஒரு பாவம் உனக்குக் கிடைத்துவிட்டது எகோர்.

கர்னல் : யாரது? வெளியே வாடா மூடா.

இருண்ட மூலை : இதோ உனது மீட்பருக்கு முகம் கிடைக்க எகோர். காறி உமிழும் புனிதர்.

கர்னல் : நிறுத்துங்கள். சதிகாரப் பாவிகளா, கோழைகளா… ஆ! (தலையைப் பற்றியபடி அமர்ந்து கண்களை மூடி உடல் நடுங்குகிறார்)

எலிசாஇந்தப் புனிதரை என்ன செய்வது?

லிசவெத்தா : விடியட்டும். அதற்குப் பிறகுதான் ஏதும் செய்ய முடியும்!

எலிசா : இந்த நாற்றம் என் அடிவயிற்றைத் தாக்குகிறது. கடவுளே என்ன நாற்றம்!

இருண்ட மூலை : (முணுமுணுப்பாக) நறுமணப் புனிதர்களின் யுகம் முடிந்தது. இது நம் ஆத்மாவில் அழுகி நாறும் புனிதர்களின் காலம்.

எலிசா : போதும் நிறுத்து, பாவி! பாவி!

கர்னல் : (திடுக்கிட்டு) எலிசா யாரிடம் பேசுகிறாய்?

எலிசா : முணுமுணுக்கிறார்கள்… எலிகள்…

(பல்லை நறநறவென்று கடிக்கிறாள்)

கர்னல் : எலிசா!

தத்யானாஹையா, இப்போது இந்தப் பாட்டியும் சுவரிடம் பேசுகிறாள்.

கர்னல் : எலிசா, இதோபார்!

எலிசா(விழித்துக்கொண்டவள்போல) எகோர்! (பாய்ந்து அவரைப் பற்றி உலுக்கி அழுதபடி) எகோர்… எனக்குப் பயமாக இருக்கிறது. என் கைகளைப் பிடித்துக்கொள்ளுங்கள். எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைத் தனியாக விட்டுவிடாதீர்கள்…

கர்னல் : எலிசா, என் கண்ணே (அவளை மார்புடன் அணைத்தபடி) நாம் எளிய மனிதர்கள் எலிசா. விதவிதமாக பாவனை செய்வதனூடாக அனைத்தையும் தாண்டி வாழ்ந்துவிடலாம் என்று கற்பனை செய்யும் பேதைகள்.

லாப்கின் : ஆம் தோழர், நான் வெறுமொரு குமாஸ்தா. என்னிடம் சொற்கள் குறைவு. ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது. அதை மாற்றி மாற்றி வேறுவேறு சொற்களால் எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன் தோழர்… (ஆங்காரமாக) புனிதர்கள் தங்கள் இறுதிப் பிம்பத்தில் அமைதி காண்கிறார்கள். அதிகார வெறியர்கள் இறுதித் தோல்வியில் அமைதி காண்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கெல்லாம் சுய அடையாளமிருக்கிறது. சொர்க்கத்திலோ நரகத்திலோ பட்டியலில் அவர்கள் பெயர் இருக்கிறது. ஆனால்.. (கண்கள் கலங்கி முகம் சிவந்து) அடையாளங்களில்லாத இந்த மனிதத் திரள்… இவர்களுக்கு எது அமைதியைத் தரும் ?

கர்னல் : பதில் கூற நான் ஒன்றும் புனிதனல்ல.

லாப்கின் : நீங்களும் என்னைப் போன்ற எளிய மனிதர்தான் தோழர். உங்கள் சீருடையும் பதக்கங்களும் அதை மறைப்பதில்லை. இதோ நமது ஆத்மாவின் மூடிய கதவுகள் மீது காறி உமிழ்ந்துவிட்டுப் போனார் ஒருவர். கண்ணீர் உதிர்த்துவிட்டு போனார் இன்னொருவர். சொல்லுங்கள், நீங்களும் நானும் என்ன செய்யக்கூடும்? அடையாளங்களின்றிச் சாவதன் முடிவற்ற நரகத்தை இந்தப் புனிதர்களுக்கு எப்படி நம்மால் புரியவைக்க முடியும்? அடையாளங்களின் பொருட்டே நாம் நமது ஆத்மாவைச் சிறையிலடைத்திருக்கிறோம் என்று கூறினால் அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? கண்ணீர் விடுவார்கள். காறி உமிழ்வார்கள்… அவர்கள் புனிதர்கள்… அவர்கள் அதைச் செய்யலாம். புனிதர்களை நாம் வணங்குவோம். அவர்கள் ஆசிகளையும் சாபங்களையும் நமது சிரங்களில் சூடுவோம்… ஆனால்…

கர்னல் : அவர்கள் நம்மை விடமாட்டார்கள். இந்த துர்நாற்றம் நமது ஆத்மாவில் குடியேறும். சந்ததிகளுக்கும் பரவிச்செல்லும்.

லாப்கின் : ஆம் ஐயா, நாம் நடுத்தர வர்க்கத்துக் கோழைகள். நமது ஆத்மா ஓர் இரும்புப் பல்லக்கு. அதில் அவர்கள் பயணம் செய்கிறார்கள். (மனமுடைந்த குரலில்) சாக முடியவில்லையே. அதோ அந்தப் பஞ்சைக் கூட்டங்களைப் போல ஊளையிட்டு அழுதபடியும் வானை நோக்கிச் சபித்தபடியும் செத்து மண்ணில் படிய முடியவில்லையே. (கோபம் கொண்டு) அந்தக் கையடையாளங்களைப் போல ஒரு வெற்றுத்தடமாக எஞ்ச ஒருபோதும் நான் தயாராக மாட்டேன். எத்தனை இழிவு! எத்தனை சிறுமை! எனக்கும் இது நிகழலாம். ஆனால் அதன் கீழே இவான் இவானிச் லாப்கின், முதல்நிலை கணக்கெடுப்பு குமாஸ்தா, வென்ஸ்டெய் கிராமம் என்று எழுதியிருக்க வேண்டும். உண்மை ஐயா, இருண்ட காலகட்டத்தில் என்னைப் போன்ற ஒரு நடுத்தர வர்க்கத்தினன் ஆசைப்படுவது பகிரப்படாத ஒரு கல்லறையும், ஒரு நடுகல்லும் மட்டும்தான். அதற்காக நான் என்னைச் சுற்றி இன்னும் நூறு கண்ணாடிச் சுவர்களை எழுப்பிக்கொள்வேன். வாலாட்டுவேன். பூட்சுகளை நக்குவேன். (எதிர்பாராத விதத்தில் உடைந்து நொறுங்கி) மீட்பரே, தேவனே, என்ன வாழ்க்கை! என்ன வாழ்க்கை! என் தேவனே, ஏசுவே (உடல் குலுங்கத் தேம்பி, குமுறி அழுகிறான். அந்த அழுகை பின்னணி அழுகைகளில் கலக்கிறது)

(அமைதி திரும்புகிறது. லாப்கின் மீண்டும் ஒண்டிச் சுருண்டுகொள்கிறான்)

தத்யானா : அப்பா வோட்கா சாப்பிட்டால்தான் இப்படி அழுவார். (யோசித்து) வோட்கா வெங்காயம் போல…

கர்னல் : எலிசா பொழுது விடியப்போகிறது. நாம் ஒரு இரவைத் தாண்டிவிட்டோம்.

எலிசா : ஆம். ஓர் இரவு. நல்ல விஷயம்தான்.

லிசவெத்தா : (பின்னலாடையைப் போட்டுவிட்டு) விடிந்துவிட்டதா?

எலிசா : அதை நீ முடிக்கவே இல்லை .

லிசவெத்தா : இல்லை அம்மணி, நான் ஒரு கண்ணிகூடப் பின்னவில்லை. (சலித்த குரலில்) ஒரு சில கண்ணிகள் முன்னகர்வேன். என் விரல்கள் பின்னகர்ந்து அம்முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்துவிடும். இதை நான் தொடங்கி வெகுநாளாகிறது.

(அரங்கில் அமைதி படர்கிறது. சில நிமிடங்களில் சிலைத்தன்மையும் மங்கும் இருளும் ஏற்படுகின்றன.)

தத்யானா : ஏன் திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டீர்கள் எல்லாரும்? பேச்சு முடிந்துவிட்டதா? (தரையிலிருந்து அந்த மலரை எடுத்து) அய்யோ தேவமலர். ஏன் இது யாருக்கும் வேண்டாமா? (யாரும் அவளைக் கவனிக்கவில்லை) இதைத் தாத்தாவுக்கு வைக்கவா? (தயங்கி) தாத்தா நாற்றமடிக்கிறார். நானே வைத்திருப்பேன். (வீம்பாக) இது என்னுடையது. (உரக்க) என்னுடையது. (பதிலுக்குக் காத்து) தரவே மாட்டேன். அழுதாலும் தர மாட்டேன்.

(மலரை மார்போடு சேர்க்கிறாள். அரங்கு முற்றிலும் இருள அவளும் மலரும் மட்டும் பொன்னிற ஒளியில் நிற்கிறார்கள். இனிய இசை தொடங்கி வலுக்கிறது. வெகுநேரம் துள்ளி விளையாடுகிறது. அந்த இசை, கனவு நிரம்பிய இசை. ததும்பியும் நுரைத்தும் பீறிட்டும் சுழித்தும் அலைத்தும் பெருகி நிறைகிறது. குழந்தைகள் விளையாடும் போது மட்டும் விண்ணுலகு எழுப்பும் மகத்தான இசை)

*

ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் பகுதி, தமிழினி வெளியீடு.

1 comment

தல்ஸ்தோய் மலர் | எழுத்தாளர் ஜெயமோகன் November 27, 2020 - 12:10 am

[…] புனிதர்களும் மனிதர்களும் […]

Comments are closed.