ஒரு சில வாரங்களுக்கு முன், ஜான் மாரிஸ் தன் கனிந்த 94வது வயதில் வாழ்வின் அக்கரைக்குப் பயணப்பட்டார். அவர் அந்த அடைமொழியை வெறுத்தார் என்றாலும், என்னளவில் ஜான் மாரிஸ் உலகின் தலைசிறந்த “பயண எழுத்தாளர்களில்” ஒருவர், எக்காலத்திலும்.
அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ‘கிளர்ந்தெழும்’ என்ற சொல் என் மனதில் தோன்றுகிறது, காலத்தையும் இடத்தையும் அவை கிளர்ந்தெழச் செய்வதால். அவர் எழுதிய நூல்களில் நான் வாசித்த முதல் நூல்கள், பாக்ஸ் பிரிட்டானிகா (Pax Britannica) முந்நூல் தொகை (ஆணாக அவர் அதைத் தொடங்கியிருந்தாலும் நான் அதை வாசித்தபோதே அவர் பெண்ணாகியிருந்தார்), அதன்பின் அவரது அற்புதமான வாக்கியங்களும் மகத்தான உரைநடையின் சொற்கட்டுத் தாளங்களும் என்னோடு எப்போதும் தங்கிவிட்டன. பயணம் குறித்து என்னைப் போன்ற ஒருவனின் டெஸ்யெஸ்சாண்ட் மனப்பாங்குக்கு அவரது ஒளி நிறைந்த நூல்கள் விருப்பத்துக்குகந்த வாகனங்களாயின1. நாம் பயண இலக்கியம் என்று சொல்வதை அவர் வரலாற்றாசிரியருக்கும் நாவலாசிரியருக்கும் உரிய பார்வையுடன் அணுகினார். வரலாற்றுக் கணத்தின் உடனடித் தன்மை, அதன் காட்சிகள், மணங்கள், அதன் இன்ப துன்பங்கள், அதன் அச்சங்கள், சாதனைகள் என அனைத்துமே அவரது நாவலாசிரிய கண்களால் மீள்கற்பனை செய்யப்பட்டு கச்சிதமான, மகத்தான உரைநடையில் சித்தரிக்கப்படுகின்றன.
பேரரசின் அழகியல் அவர் வெற்றிகண்ட களம். ஆனால் அவர் எழுதியுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவ்வகைமைக்குள் அவரைச் சிறைப்படுத்த முற்படும் நம் அவசரத்துக்கு ஒரு கணம் அணை போடுகின்றன. பேரரசின் அழகியல் ஆளப்பட்டவர்களால் விதந்தோதப்படும்போது ஆளப்பட்டவர்களின் அனிச்சையான விமரிசனத்தை எப்போதுமே தட்டி எழுப்புகிறது. எத்தனைதான் சார்பற்ற புறவய விவரணைகள் அளிக்கப்பட்டாலும் பாக்ஸ் மும்மை செஸில் ரோட்ஸ் (Cecil Rhodes) போன்ற ஒரு ஏகாதிபத்திய ஆளுமையின் இரக்கமற்ற அறமின்மையைப் பேசுவதோடு, 1857க்குப் பின் பிரிட்டிஷார் வினைப்படுத்திய கொடூரங்களையும் இந்தியாவிலிருந்து தொலைதூரத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்தியக் கூலித் தொழிலாளர்களின் பங்களிப்புகளையும் பேசுகிறது. மொழியின் நளினம் எத்தனை அளப்பறிய இன்பங்களை அளித்தாலும், ஆளப்பட்டவர்களின் வாதை நினைவுகளைத் தேற்ற முடியாது. வலி எப்போதும் அகவயப்பட்டது, தற்சார்புடையது. அதைத் திரும்பிப் பார்த்து மதிப்பீடு செய்யும்போது நம் மனம் அடிப்படையிலும் நியாயமான வகையிலும் அகவயப்பட்ட உணர்வுகளைக்கொண்டே அதை அர்த்தப்படுத்திக்கொள்ள முயலும் (பாரதி ஃபிஜீயில் பாடுபட்ட இந்தியப் பெண்களின் நிலை குறித்து வெதும்பியது நினைவிற்கு வருகிறது: “கரும்புத் தோட்டத்திலே – அவர்/ கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி/ வருந்துகின்றனரே! ஹிந்து/ மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய் சுருங்குகின்றனரே“)
இதை ஜானுமே அறிந்திருந்தார். எனவேதான் பேரரசின் மறைவு அவருக்கு ஒருங்கே மகிழ்ச்சியையும் துயரத்தையும் தந்தது. இந்த இரட்டைநிலை காலத்துக்கு ஒவ்வாதது என்ற விமரிசனம் நியாயமானதே எனினும் ‘மற்றமை’ குறித்து அவர் மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டிருந்தார். அதை அவர் சிறுமைப்படுத்தினார் என்று குற்றம்சாட்ட வாய்ப்பில்லை. தன் வாழ்நாள் எல்லாம் அந்த ‘மற்றமை’யை அறிந்து அதற்கு தன் எழுத்தில் நினைவிடம் எழுப்பிய ஒருவர் எப்படி அவ்வாறு செய்திருக்க முடியும்? என்ன இருந்தாலும் அவர் மானுட வாழ்வின் அடியாழ ‘மற்றமை’யான பால் அடையாளத்தையே கரை காண முனைந்தவர் ஆயிற்றே!
எனக்கும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பிருக்கிறது என்ற மூட நம்பிக்கை எனக்கு எப்போதுமே மகிழ்வளித்திருக்கிறது. ஜான் மாரிஸுடனும் அப்படிப்பட்ட ஒரு பந்தமிருப்பதை அவர் மறைவவிற்குப் பிறகே அறிந்துகொண்டது என்னை நெகிழ்த்தியது. சென்ற மாதம் தமிழினி தல்ஸ்தோய் சிறப்பிதழுக்கு எழுதிய ஒரு கட்டுரையளித்த ஊக்கத்தால் போரும் அமைதியும் நாவலை நாளுக்கு ஒரு அத்தியாயம் என்ற கணக்கில் நிதமும் வாசித்துக்கொண்டு வருகிறேன். அப்படி நிதானமாகப் படிப்பதே அந்நாவலின் பல நுணுக்கங்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வழி என்று தோன்றுகிறது. ஜானின் மறைவிற்குப்பின், ஏதோ ஒரு இரங்கல் குறிப்பொன்றில் படித்தது என் மூட நம்பிக்கையை வலுவூட்டியது. அவர் உலகின் தலைசிறந்த நாவலெனக் கருதிய ஆன்னா காரனீனாவை தினமும் இரவில் படிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார் என்பதை அறிந்துகொண்டது மகிழ்வூட்டியது. அவரது இழப்பைத் தொடர்ந்து ‘அப்பால்’ இருந்து அவர் அளிக்கப் போகும் அனுப்புகைகளை நினைத்து என்னைத் தேற்றிக்கொள்கிறேன். அமைதியே ஆகுக, ஜான்.
பின் வருவது 1997-இல் அவர் பாரிஸ் ரெவ்யூவிற்கு அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு.
*
ஜான் மாரிஸ் அக்டோபர் 2, 1926-இல் சாமர்செட், இங்கிலாந்தில் பிறந்து ஜேம்ஸ் ஹம்ஃப்ரி மாரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டார். Conundrum என்ற அவரது சுயசரிதைக் குறிப்பு புத்தகத்தில் அவர் நினைவுகூர்வதைப் போல்: “எனக்கு மூன்று நான்கு வயதிருக்கும், தவறுதலான ஒரு உடம்பிற்குள் பிறந்துவிட்டதாகவும் உண்மையில் நான் ஒரு பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.” முதல் கோடிகாட்டல்கள். ஆனாலும்கூட அடுத்த முப்பத்தாறு வருடங்களுக்கு ஒரு ஆணாகவே அவர் வாழ்வார். உள்ளூர் அரபிய செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவர், இருபத்து இரண்டு வயதில் கெய்ரோவில் தன்னை மணம்புரிந்த மனைவி எலிசபெத்திடம் மட்டுமே தன் பாலியல் குழப்பங்களைப் பற்றிக் குறிப்பிடுவார்.
பதினேழு வயதில் உறைவிடப் பள்ளியை விட்டு வெளியேறிய மாரிஸ் அடுத்த ஐந்து வருடங்களுக்கு பிரிட்டனின் சிறந்த குதிரைப் படையணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நைன்த் குயின்ஸ் லான்சர்ஸ் படையில் பணியாற்றினார். அதன்பின் கெய்ரோவிற்கு இடம்பெயன்றாலும் விரைவிலேயே பிரிட்டனிற்குத் திரும்பி ஆக்ஸ்ஃபோர்டில் இரண்டு வருடம் பயின்று டைம்ஸ் நிருபராகப் பத்திரிகைத் துறையில் மீள்நுழைவு செய்தார். வேறு எவருமே உடனடியாகக் கிடைக்காததால் ஹிலரி டென்சிங் எவரெஸ்ட் சிகர மலையேறும் சாதனையைப் பற்றிய செய்திகளைத் திரட்டுவதற்காக டைம்ஸ் அவரை அனுப்பி வைத்தது. இருபத்து ஆறு வயதில், அதுவரையில் எந்த மலையையுமே ஏறியிருக்காத மாரிஸ் எவரஸ்ட் சிகரத்தை முக்கால்வாசி (இருபத்து இரண்டு ஆயிரம் அடிகள்) ஏறி, அம்மலை முதன்முதலில் வெற்றிகொள்ளப்பட்ட சாதனையை உலகிற்கு அறிவித்தார். அது உலகளாவிய ஸ்கூப்பாக அமைந்ததால் சர்வதேச புகழை அவருக்குப் பெற்றுத்தந்தது. அதன்பின் டைம்ஸ், கார்டியன் பத்திரிகைகளின் வெளிநாட்டுத் தொடர்பாளராகப் (Foreign Correspondent) பணியாற்றி பிரத்யேகமான பணிவாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொண்டார்.
1956-இல் அவருக்கு காமன்வெல்த் ஃபெலோஷிப் வழங்கப்பட்டது. அதன் மூலமாக ஒரு வருடகாலம் வரையிலும் அவரால் அமெரிக்காவில் தங்கிப் பயணிக்க முடிந்தது. அப்பயண அனுபவங்களின் விளைவாக அவரது முதல் புத்தகமான As I Saw the U.S.A வெளிவந்தது. அதே போல் 1960-இல் குடும்பத்துடன் வெனிஸ் நகரத்தில் ஒரு வருடம் சபாடிகல் எனப்படும் பணிவிடுமுறைக்காகத் தங்கியது மிகவும் போற்றப்பெற்ற The World of Venice புத்தகத்தில் நிறைவடைந்தது. பத்திரிகை விதிமுறைகள் நிருபர் வேலையில் கிடைத்த அனுபவங்களைப் புத்தகங்களாக விரிவுபடுத்த அனுமதிக்காததால் தன் முழுநேர பத்திரிகையாளர் பணிவாழ்விற்கு 1961-இல் முற்றுப்புள்ளி வைத்தார். அதைத் தொடர்ந்து The Road to Huddersfield: A Journey to Five Continents (1963), The Presence of Spain (1965), and the Pax Britannica trilogy உள்ளிட்ட அவரது பல புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டன.
1964-இல் பணிவாழ்வில் அல்லாது அவரது தனிவாழ்வில் மற்றொரு மாற்றம் ஏற்பட்டது. பெண்ணாய் உருமாறுவதைத் தொடங்கி வைப்பதற்குத் தேவையான வளரூக்கி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினார். 1972-இல் அறுதியான அறுவை சிகிச்சைக்காக காசபிளான்காவிற்குப் பயணிப்பதுடன் இவ்வுருமாற்றம் நிறைவுபெறுகிறது. ஜான் மாரிஸாக அவரெழுதிய Conundrum புத்தகம் ஆணாயிருந்து பெண்ணாய் மாறிய கதையை விவரிக்கிறது. ஆனால் பால் மாற்றத்தைப் பற்றி மேலும் துருவியபோது, அவ்விசயம் முழுவதையுமே “the conundrum thing” என்று சுருக்கமாக அடைமொழியிட்டு, புத்தகமே அதைப் பற்றிய இறுதி விளக்கமாக இருக்கட்டும் என்று மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு Travels (1976), Hong Kong (1988), Manhattan ’45 (1987) மற்றும் இரு நாவல்கள், Last Letter from Hav (1985) and Fisher’s Face (1995) உள்ளிட்ட பதின்மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
பால்மாற்றம் தவிர்க்கவியலாத (ஆங்கிலேயச் சட்டம் அதை நியதிப்பதால்) விவாகரத்தை உடனழைத்து வந்தாலும் மாரிஸ் இன்னமும் தன் முன்னாள் மனைவியுடன் வடக்கு வேல்சில் Trefan Morys என்று பெயரிடப்பட்ட இல்லத்தில் வசிக்கிறார். Pleasures of a Tangled Life (1989) புத்தகத்தில் அவ்வில்லத்தை விவரிக்கிறார்: “அனைத்து ஜடப் பொருட்களைக் காட்டிலும், ஏன் சில உயிருள்ள ஜந்துக்களைக் காட்டிலும்கூட அதை நான் அதிகமாக விரும்புகிறேன்… அடிப்படையில் நாற்பது அடி நீளம்கொண்ட, இரண்டு வசிப்பறைகளைக் கொண்டிருக்கும் வீடது. இரண்டுமே புத்தகங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன. அன்றாட உபயோகத்திற்காகக் கட்டப்பட்டிருக்கும் இரண்டு மேல்தளங்களில் சில அறைகள் இருக்கின்றன. அவற்றை வளைந்து செல்லும் படிக்கட்டுகள் இணைக்கின்றன.”
எழுபத்து ஐந்து வயதாகியும் இன்னமும் வியக்கத்தக்க வகையில் இளமையாகவே தோற்றமளிக்கிறார். ஒருகால் வளமூக்கி மாத்திரைகளின் உபயமாகவும் இருக்கலாம். பிரிட்டனிடமிருந்து சீனாவிற்கு நிகழவிருக்கும் அதிகார மாற்றத்தைப் பற்றி எழுதுவதற்காக இவ்வருடமும், வேனிற்காலத்தில், ஹாங்காங்கிற்கு பயணிக்கவிருக்கிறார்.
பேட்டியாளர்
பயண எழுத்தாளர் என்று வரையறுக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
ஜான் மாரிஸ்
ஆமாம். குறைந்தபட்சத்தில் பயண எழுத்து தகவல் சார்ந்த எழுத்தாக இருந்தாக வேண்டும் என்பதை எதிர்க்கிறேன். அதன் கற்பனைக் கூறுகளிலும், கலையாகவும் இலக்கியமாகவும் இருப்பதற்கான சாத்தியத்திலும், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காலங்காலமாக நான் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் பயனளித்திருக்கிறது என்றே கூறுவேன். ஏனெனில் இப்போதெல்லாம் அறிவுக்கூர்மைமிக்க புத்தகக் கடைகள் பயண இலக்கியம் என்ற வகைமையிலும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதைச் சரியாக அர்த்தப்படுத்த எந்த வார்த்தையைப் பயன்படுத்துவது?
பேட்டியாளர்
இடத்தைப் பற்றிய எழுத்து?
மாரிஸ்
ஆம், நான் அதைத்தான் செய்கிறேன். ஆனால் பெரும்பாலும் என்னை அழகியல் சார்ந்த எதிர்வினைகளைக் கோரும் ஒரு பெல்லட்ரிஸ்டாகவே (belletrist) கற்பனை செய்துகொள்கிறேன். அது ஒரு பழங்காலத்து வார்த்தை. கட்டுரையாளர் என்றழைப்பதுகூட போதுமானதாக இருக்கும். வாசகர்கள் ஓரளவிற்குப் புரிந்துகொள்வார்கள். ஆனால் முக்கியமான விஷயம் இதுதான். என் எழுத்தின் கருப்பொருள் பெரும்பாலும் இடம் சார்ந்ததாக இருக்கிறது. அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. என் சிறந்த புத்தகங்கள் பெருமளவில் இடத்தைக் காட்டிலும் வரலாறு சார்ந்தவையாகவே இருந்திருக்கின்றன. அனைத்து எழுத்தாளர்களைப் போல நானும் என்னை மிகையாக மதிப்பிட்டுக்கொள்கிறேன் என்றாலும் அடிமனதில் என்னைப் பற்றி இம்மாதிரி எல்லாம் பேசுமளவிற்கு நான் தகுதியானவள் கிடையாது என்றே நினைத்துக்கொள்கிறேன் என்று தோன்றுகிறது.
பேட்டியாளர்
அடிப்படையில் நீங்கள் ஒரு வரலாற்றாசிரியர் என்கிறீர்கள்?
மாரிஸ்
என்ன சொல்ல வருகிறேன் என்றால், என் வரலாற்றுப் புத்தகங்களே என் மிகச்சிறந்த புத்தகங்களாகவும் இருந்திருக்கின்றன. அவ்வளவுதான்.
பேட்டியாளர்
உங்கள் Pax Britannica மும்மையிலிருந்து தொடங்குவோம். நீங்கள் அதை எழுதத் தொடங்குகையில் கிப்பனின் Decline and Fall of the Roman Empire-ஐ மனதில் வைத்துக்கொண்டிருந்தீர்களா?
மாரிஸ்
இல்லை, கண்டிப்பாக அப்படி ஏதும் இல்லை. மும்மையைத் தொடங்குகையில் அதை மும்மையாகத்தான் எழுதப் போகிறேன் என்பதை அறிந்திருக்கவில்லை. அதை எழுதும் எண்ணம் எப்படி உருப்பெற்றது என்பதை உங்களிடம் கூறியே ஆக வேண்டும். சாம்ராஜ்யம் தேயாது சாம்ராஜ்யமாகவே இருந்தபோது அது எப்படி இருந்தது என்பதை நினைவுகூரும் அளவிற்கு எனக்கு வயதாகிவிட்டது. வரைபடம் முழுவதுமே பெரும்பாலும் சிகப்புச் சாயம் பூசப்பட்டிருந்த ஓர் உலகில்தான் நான் வளர்ந்தேன். ஆகவே பெரியவனாக புறவுலகில் காலடி வைத்தபோது, ஏகாதிபத்திய ஆணவத்தில் தோய்ந்திருந்த ஒரு இளைஞனின் மனநிலையோடுதான் உலகை எதிர்கொண்டேன். பெரும்பாலான என் வயது ஆங்கிலேயர்களைப் போல் மேலாதிக்கம் செலுத்துவதை ஆங்கிலப் பிறப்புரிமையாகவே நம்பினேன். அதன்படி மேலாதிக்கம் செலுத்துவதற்காக புற உலகிற்குப் புறப்பட்டேன். ஆனால் என் பிந்தைய பதின்மத்திலும் என் வாலிபத்திலும் இதைக் குறித்த என் பார்வைகள் படிப்படியாக இயல்பாகவே மாறத்தொடங்கின.
பேட்டியாளர்
எதாவது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இவை மாறியதா?
மாரிஸ்
ஆமாம். அப்போது நான் பேலஸ்டீனில் வசித்துக்கொண்டிருந்தேன். காசாவின் மாவட்ட ஆணையரைச் சந்திக்க வேண்டி வந்தது. பேலஸ்டீனின் அப்பகுதியை அப்போது நிர்வகித்துக்கொண்டிருந்த ஆங்கில அரசின் அதிகாரியாக அவர் பொறுப்பேற்றிருந்தார். அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன், வெளியே வந்தார். அந்த ஆசாமி அணிந்திருந்த தொப்பி அவரைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தூண்டியது. பழக்கவழக்கத்திற்குப் புறம்பான ஒருவிதமான பொஹீமியத் தொப்பி அது. இறுக்கமற்று, சற்றே முறைகேடாக, வசீகரிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதிகாரத்தை நினைவுபடுத்தாத மிக மிகச் சாதாரணனின் தொப்பி. மாநிறத்தில் இருந்தது. ஆனால் பல ஏகாதிபத்திய சூரியன்களால் வெளிர்க்கப்பட்டும் வெப்பமண்டல இடிமின்னல் புயல்களால் தளர்த்தப்பட்டும் இருந்ததாலேயே வல்லரசின் அனைத்து பரிமாணங்களும் அத்தொப்பியில் பரிணமித்தன. பார்ப்பதற்கு நல்ல ஆசாமியைப் போல்தான் இருந்தார். அவரை மிகவுமே மெச்சினேன். திமிர்பிடித்த என் முட்டாள்தனமான குருட்டு ஆணவத்தின் ஒரு துளிகூட அவரிடத்தே இல்லை. கனவான் என்று அந்தக் காலத்தில் சொல்வார்களே, அப்படி இருந்தார். அவர் மூலமாகவும் அவர் சகாக்களைச் சந்தித்ததன் மூலமாகவும், வல்லரசு, குறைந்தபட்சத்தில் அதன் கடைசிக் காலத்திலாவது, துளியும் கர்வமாகவும் திமிர்பிடித்தும் இருக்கவில்லை என்பதை உணரத் தொடங்கினேன். அவரைப் போன்றவர்கள் ஒரு மாபெரும் வரலாற்று முறைமையிடமிருந்து பின்வாங்கி தம்மையடுத்து வருவோரிடம் அதைக் கண்ணியமான வழியில் ஒப்படைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். இவ்வனுபவம் வல்லரசு குறித்த என் பார்வையை மாற்றியது.
அதன்பின் ஆங்கில ராஜ்ய ஆதரவில் ஓமன் நாட்டு சுல்தானுடன் தென்கிழக்கு அரேபியாவைக் கடக்க முயற்சித்த சாகசத்தைப் பற்றி புத்தகம் எழுதினேன். அதை விமர்சித்தவர்களில் ஒருவர், “ஆசிரியர் ஏன் விளிம்புகளில், ஏகாதிபத்திய கருப்பொருளின் சுற்றளவுகளில் மட்டுமே உலாவிக்கொண்டிருக்கிறார்? களத்தில் இறங்கி மையத்தைத் தொட்டால்தான் என்ன?” என்று கேட்டிருந்தார். முதல் முறையாக ஒரு விமரிசகர் அறிவுறுத்தியதை ஆசிரியர் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்: அவர் அப்படிச் சொன்னதால், வல்லரசு விவாகரத்தின் உச்சமாக விளங்கிய 1897-இல் மகாராணி விக்டோரியாவின் வைரவிழா கொண்டாட்டங்களை வல்லரசுக் கதையில் மையப்படுத்தி வல்லரசின் பெருமைகளைக் கொண்டாடும் ஒரு பெரிய புத்தகத்தை எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதை இரசித்து அனுபவித்து எழுதி முடிக்கவும் செய்தேன். அதன்பிறகு அதன் இரு பக்கங்களிலும் தனித்தனிப் புத்தகங்களை எழுதி அதை ஒரு மும்மையின் நடுப்பகுதியாக மாற்றினால் என்ன என்றொரு யோசனை எழுந்தது. முதல் புத்தகம் ராணி விக்டோரியா அரியாசனத்திற்கு வருவதையும் வல்லரசு பகட்டுடன் அந்த உச்சத்திற்கு விரைவதை விவரிக்கும். அடுத்தது நான் ஏற்கெனவே எழுதிய அந்த உச்சத்தைப் பற்றியது. இறுதியாக அவ்வல்லரசின் பின்னடைதலையும் அதன் ஓய்ந்தொழியும் கணங்களையும் (வின்ஸ்டன் சர்ச்சிலின் மரணத்துடனேயே இம்முடிவை நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்) ஒரு இரங்கற்பாவின் தொனியில் விவரிக்கும் மூன்றாவது புத்தகம். ஆகவே, கிப்பனுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.
பேட்டியாளர்
இப்போது ராணி விக்டோரியா தொகுதி என்றாகிவிட்ட புத்தகத்தில் நீங்கள் அதற்குப் பிறகு அடிக்கடி பயன்படுத்திய ஒரு உத்தியைச் செய்துகாட்டினீர்கள். குறிப்பிட்ட ஒரு நுண்தகவலில், எமிலி ஏடனில் தொடங்கி ஆங்கில வல்லரசை நோக்கி விரித்துச் செல்கிறீர்கள். ஒருவகையில் வாசகனும் விக்டோரியா மகாராணியுடன் சேர்ந்து வளர்கிறான். முதல் தொகுதியின் முன்னுரையில் “பெருமளவில் வல்லரசின் அழகியலே உங்களை ஈர்ப்பதாக” கூறியிருக்கிறீர்கள். இதனால் உங்கள் அணுகுமுறை பாதிக்கப்பட்டதா?
மாரிஸ்
ஆமாம், பாதிக்கப்பட்டது. வல்லரசைக் குறித்த ஒரு அற நிலைப்பாட்டை நான் வெளிப்படுத்த முயலவில்லை. அதை ஒரு மாபெரும் திருவிழா பொருட்காட்சியாக அணுகினேன். அப்போது அதைச் செய்துகொண்டிருந்தவர்களின் நிலைப்பாட்டுடன் நான் உடன்போனேன். இப்போது தீங்கெனத் தோன்றுபவை விக்டோரிய காலத்தவர்களுக்குத் தீதெனத் தோன்றவில்லை என்பதும் உண்மையே. நான் அம்மெய்மையை ஏற்றுக்கொண்டேன். இது உண்மையில் ஒரு தப்பித்தல் நிலைப்பாடென்பதால் வல்லரசைப் பற்றிய எவ்விதமான மதிப்பிடலாகவும் அல்லாது முற்றிலும் ஒரு நினைவுமீட்டலாக கட்டமைக்க முடிவுசெய்தேன். அதன் காட்சிகள், வாசனைகள், புலனுணர்வுகள் இப்படி. நான் கற்பனை செய்ய முனைந்தது இதைத்தான்: ரோம சாம்ராஜ்யத்தின் இறுதி ஆண்டுகளில் வல்லரசு விழைவுகளையும், ஆடம்பரத்தையும் நினைவுகூரும் அளவிற்கும் வயதாகிய, அதன் முடிவுறுதலைப் பற்றிய பிரக்ஞையுடைய இளம் செண்டூரியன் ஒருவன் உடகார்ந்தபடியே தன்னுடைய உடனடி அனுபவங்களைப் பற்றிய ஒரு பெரிய புத்தகமொன்றை எழுதினால் அது எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்றும், அதைக் காட்டிலும் சிறந்த வல்லரசை, ஆங்கிலேயப் பேரரசைப் பற்றி எவராவது எழுதக்கூடுமானால், அது யாராக இருக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டேன். நான்தான்!
பேட்டியாளர்
வல்லரசின் வீழ்ச்சி தொடங்கியபோது, நிலங்களின் இழப்பைக்காட்டிலும் ஆள்வதற்கான விருப்புறுதியை இழந்துவிட்ட சாத்தியமே அதிகம் அச்சுறுத்தியது என்று நீங்கள் கூறுகிறீர்கள். எவ்வழிகளில் அவ்வீழ்ச்சி அப்போதைய ஆங்கிலேயப் பண்பின் வெளிப்பாடாக இருந்தது?
மாரிஸ்
பல விதங்களில் வெளிப்பட்டது. மாவட்ட ஆணையரை எப்படி எதிர்கொள்ள முயன்றேன் என்பது அதன் கௌரவமான உதாரணம். பல கண்ணியமான சிறப்புமிக்க நபர்கள் தங்கள் வாழ்க்கையை வல்லரசிற்காக அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருகால் தங்கள் பணிவாழ்க்கைகளை ஆரம்பிக்கும்போது நன்மை பயக்கும் தந்தை மரபுவழி பாவனைகளுடனே அப்பணியை அவர்கள் செய்திருக்கலாம். அதுவும்கூட ஒரு வகை ஆணவமே. ஆனால் நான் அதில் கவனம் செலுத்தத்தொடங்குகையில் வெகுசிலரிடமே அவ்வாணவம் இருந்தது. கண்ணியமாகவும், முடிந்த அளவிற்கு விரைவாகவும் பொறுப்பை ஒப்படைப்பதே அவர்களது கவலையாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில், என்னைப் பொறுத்தவரையில் அதை அவர்கள் மிக நன்றாகவே செய்துமுடித்தார்கள். ஃபிரெஞ்சுக்காரர்கள் வல்லரசைத் துறந்த விதத்தோடு ஒப்பிடுகையில் ஆங்கிலேயர்கள் அதைக் கனிவாகவும் வெற்றிகரமாகவும் செய்துமுடித்தார்கள் என்றே கூற வேண்டும். ஆனால் அதே சமயத்தில், இரண்டு உலகப் போர்களால் ஆங்கிலேயர்கள் முற்றிலும் நொறுக்கப்பட்டிருந்தார்கள். முதற் போரானது அவர்கள் வல்லரசின் எல்லைகளை அதுவரையில் இல்லாத அளவிற்கு விரிவுபடுத்தியது. இரண்டாவதோ வெளிப்படையாகவே அதன் சாவுமணிகளை ஒலித்தது. இரண்டாம் உலகப் போரை விட்டு மிகவுமே சோர்வுற்று நம்பிக்கையற்ற நாடாகவே இங்கிலாந்து வெளிவந்தது. அவர்களின் மாபெரும் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சிலை ஆட்சியிலிருந்து விலக்கியதே அம்மனநிலைக்கான உச்சகட்ட உதாரணம். தங்கள் தீவிற்குத் திரும்பிச் சென்று முன்பைவிட கண்ணியமான வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்வதையே அவர்கள் பிரதானமாக விரும்பினார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் வல்லரசிற்கான விருப்புறுதி அனேகமாக போயே போய்விட்டது என்றுதான் கூறவேண்டும். அதனுடன் ஊக்கம், சாகசம் மற்றும் இடர் களைந்து முன் செல்வதற்கான விழைவு, ஏன் அந்த உதட்டோர ஆணவம் அல்லது குறைந்தபட்சத்தில் அந்த மிடுக்கும்கூட… வல்லரசின் அத்தியாவசிய நீட்சியாக விளங்கிய அனைத்துமே ஆங்கிலேயர்களிடமிருந்து உதைத்தகற்றப்பட்டன. அப்படி நடந்ததும் நல்லதுதான்.
பேட்டியாளர்
அதில் அவ்வளவு எழிலும், ஆடம்பரமும், கோலாகால அணிவகுப்பும் இருந்ததே?
மாரிஸ்
அதன் முடிவைப் பற்றிக் கேட்கிறீர்களா அல்லது அதன் நடத்துதலைப் பற்றியா?
பேட்டியாளர்
அதன் நடத்துதலை.
மாரிஸ்
முடிவுமேகூட குறிப்பிட்ட ஆரவாரமான நளினத்துடன்தான் செய்யப்பட்டது. நிறைய கொடியிறக்கங்கள், எக்காள அழைப்புகள் மற்றும் அண்மையில் சிறையிலிருந்து வெளிவந்திருக்கும் முக்கிய மந்திரியை ராஜ குடும்பத்தினர் சந்தித்து முத்தமிடுவது போன்ற சடங்குகளுடன்.
பேட்டியாளர்
மும்மையை ஜேம்ஸ் மாரிசாகத் தொடங்குகிறீர்கள். இரண்டாவது தொகுதி பத்துவருட பாலினக் குழப்பத்தில் பெண்களுக்கான வளரூக்கிகளை எடுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் பாலை இன்னும் மாற்றியிராத இரண்டுங்கெட்டான் நிலையில் எழுதப்பட்டது. மூன்றாவது ஜான் மாரிசால் எழுதப்பட்டது. எவ்வளவிற்கு மும்மையின் பண்பிற்கு இம்மாற்றம் சுவை சேர்க்கிறது?
மாரிஸ்
உண்மையிலேயே, அப்படியேதும் நடக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. குறிப்பாக இதை மனதில் வைத்துக்கொண்டு மூன்று புத்தகங்களையும் மீள்வாசிப்பு செய்தேன். பெரிய வித்தியாசமேதும் எனக்குப் புலப்படவில்லை. மிகவுமே சேய்மையான கருப்பொருளை முற்றிலும் அறிவார்ந்து அல்லது அழகியல் மற்றும் கலாரீதியாக அணுகும் படைப்பு அது. என் தனிப்பட்ட விவகாரங்களால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய ஒரு படைப்பல்ல என்றே நினைக்கிறேன்… கண்டிப்பாக நான் எழுதிய மற்றதைக்காட்டிலும் குறைவாகவே பாதிக்கப்பட்டது.
பேட்டியாளர்
உங்கள் நுண்ணுணர்வுகளில் மாற்றம் ஏதாவது நிகழ்ந்ததை உணர்ந்தீர்களா என்பதை அறிந்துகொள்ளவே அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
மாரிஸ்
அது முற்றிலும் வேறு கேள்வி. மும்மை: அதைத் தொடங்கிய மனநிலையிலேயே முடிக்கவும் செயத்தேன். ஆனால் ஒரு விதத்தில் என் படைப்புகள் அனைத்துமே உலகத்தை நான் பார்த்து, அது என்னைத் திரும்பிப் பார்க்க அனுமதிக்கப்படும், நீட்டி முழக்கப்பட்ட ஆறப்போட்ட விவகாரங்கள் என்பதே உண்மை. என்னைக் குறித்த உலகின் பார்வை, அதைக் குறித்த என் பார்வை இரண்டுமே சந்தேகத்திற்கு இடமில்லாமல் மாறிவிட்டன என்றும் கூறலாம். கண்டிப்பாக மாறிவிட்டன., இவ்வனுபவத்தின் மூலம் உருவான நுண்ணுணர்வு மாற்றங்களை உலகிற்கும், ஏன் எனக்கேகூட அர்த்தப்படுத்திக்கொள்வதே Pleasures of a Tangled Life புத்தகத்தின் நோக்கம். இருபது வருடங்களுக்குப்பின் அதைப் பற்றி பேசிப் பேசி அலுத்துவிட்டது. அதிலிருந்த சிடுக்கு ஏதோவொரு விதத்தில் ஆழ்மனதினூடே என் அனைத்து படைப்புகளையும் ஊடுருவுகிறது. Pax Britannica மும்மையில் மட்டுமே இது நிகழவில்லை என்று நினைக்கிறேன்.
பேட்டியாளர்
மும்மையின் முடிவில் வல்லரசை வரலாற்று ரீதியாக அணுகுவதைக் காட்டிலும் மீட்பு ரீதியாகப் பார்க்கப் பழக்கிக்கொண்டதாக கூறினீர்கள். இதைச் சற்று விளக்க முடியுமா?
மாரிஸ்
டெய்யார்ட ஷார்டேனின் (Teilhard de Chardin) இன்ஃபெர்லிங் (infurling) என்ற கருத்தை நினைத்துக்கொள்கிறேன். அதில் மானுடத்தையும் இயற்கையையும் மெதுவாக, படிப்படியாக ஒருமைக்குள் கொண்டுவரும், தனக்குள்ளேயே திருப்பிக்கொள்ளும், ஒரு முறைமையாக வரலாறை அவர் அர்த்தப்படுத்துகிறார். நான் கனடாவில் இருந்தபோது ஏகாதிபத்தியத்தைப் பற்றி 1902-இல் கொடுக்கப்பட்ட விரிவுரையைப் பற்றிய நாளிதழ் பத்தி என் கண்ணில்பட்டது. அச்சமயத்தில் வல்லரசைக் குறித்த கிட்டத்தட்ட அனைத்து பேச்சுமே ஆங்கிலேயப் பொருளாதார பலத்தையோ அல்லது அதன் கடற்படை வலிமையையோ வலியுறுத்தின. ஆனால் இப்பேச்சு அதைச் செய்யவில்லை. விரிவுரையாளர் வல்லரசை அன்பின் முகமையாகப் பார்த்தார். குளறுபடியான உணர்வுகளினூடே அன்பெனும் பொதுச்சரடை — மக்கள் ஒருவருக்கொருவர் பிரியத்துடனும், ஒருவருக்கொருவரின் நலத்திற்காகவும் முயற்சிப்பதையும்- அவர் கண்டெடுக்கிறார். தீயதைக் காட்டிலும் நல்லதே நிலைத்து நீடிக்கும் திறன்வாய்ந்தது என்ற முடிவை ஏற்கும் பக்குவத்தை அடைந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆங்கில சாம்ராஜ்யம் என்ற மாபெரும் வரலாற்று முறைமையில், மோசமானது உலோகக் கழிவைப் போன்றது. தூக்கி எறியப்படுகின்றது. நல்லதே நிலைக்கிறது. வல்லரசிலும் சில நன்மைகள் இருந்திருக்கின்றன. அதற்குமுன் இருந்திராத அளவிற்கு மக்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்கு அது ஏதுவாக இருந்தது. சங்கிலியிட்டுக் கட்டுப்படுத்தும் பழக்கங்களிலிருந்தும், மரபுகளிலிருந்தும் மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள அது உதவியது. புதிய கருத்துகளையும் புதிய சந்தர்ப்பங்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. நம் எல்லோரின் ஒற்றுமைக்கும் மீட்சிக்கும் பொருட்படுத்தக்கூடியதாக இப்பங்களிப்புகள் இருந்திருக்கின்றன. அனைத்து வல்லரசுகளையும் நான் மனமார எதிர்த்தாலும் ஆங்கிலேயர்கள் பெருமளவில் நண்பர்களையே விட்டுச்சென்றார்கள் என்பதையும் நம்புகிறேன்.
பேட்டியாளர்
மும்மையின் முடிவில் “இது உண்மையா? இப்படித்தான் நடந்ததா?” என்று கேட்டுவிட்டு, “இது என் உண்மை. இதன் உணர்ச்சிகள் என்னுடையவை. இதன் காட்சிகள் உயர்வுகொள்வதும் குறைபடுவதும் என் தரிசனத்தால்தான். தரவால் எப்போதுமே மெய்ப்பிக்கப்படாவிட்டாலும் நிச்சயமாக அது கற்பனையால் மெய்ப்பிக்கப்படுகிறது” என்று பதிலளிக்கிறீர்கள். எந்த வரலாற்றிற்கும் இது எப்படி பொருத்தமாக இருக்க முடியும்?
மாரிஸ்
ஆம்! சில வரலாறுகளுக்கு இது கண்டிப்பாக பொருந்தாது என்றே நினைக்கிறேன்… சிலர் வரலாறை திட்டமிட்டே திரித்து எழுத முயல்கிறார்கள். ஏனெனில் ஒரு கோட்பாட்டையோ ஒரு சேதியையோ வலிந்து முன்வைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கிருக்கிறது. அந்த அர்த்தத்தில் என்னுடையது பொய்யல்ல என்றே கூறுவேன். இரு தரப்புகளையும் முன்வைக்கவே நான் முனைந்தேன். ஏதோவொரு நோக்கத்துக்குப் பொருந்த எதையும் நான் திரிக்கவில்லை.
பேட்டியாளர்
லிட்டன் ஸ்டிராட்ச்சி பேராயருக்கு அரை அல்லது ஒரு அங்குலம் கூடுதலாக அளித்தது நினைவிற்கு வருகிறது. வரலாறை எழுதுகையில் எழும் சபலம் இப்படியாகத்தான் இருக்கிறது – அந்தக் கூடுதல் அங்குலத்தைச் சேர்ப்பது.
மாரிஸ்
நிச்சயமாக, என் வகையான வரலாற்றிலும் ஒரு சிறு திரிபு இருக்கத்தான் செய்கிறது – அது சுவாரசியமாக இருக்க முற்படுகிறது. எனவே பொருளாதாரம் போன்ற சின்ன விஷயங்களை அது புறக்கணிக்கிறது. ஆனால் என்னிடம் ஒரு கதையும் இருக்கிறது. Pleasures புத்தகத்தில் உணவையும் மதுவையும் முதலில் அனுபவிக்கப் பழகிக்கொண்டதைப் பற்றி பேசும் ஒரு கட்டுரை வரும். நடு இருபதுகள் வரையிலும் அவற்றின் மீது பெரிய அக்கறை இருந்ததில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை, புகழ்பெற்ற கேலிச் சித்திர ஓவியர் ஜார்ஜ் மோல்னாரின் சிட்னி துறைமுகத்தைப் பார்வையிட ஏதாக அமைந்த ஒரு தோட்டத்திலிருந்த இல்லத்திற்கு மதிய உணவிற்காகச் சென்றிருந்தபோது உணவு எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது. கொத்துக்கறி மசியல், நறுக்கான ரொட்டி உருளைகள், ஒரு போத்தல் வைன், ஆப்பிள், இப்படி இம்மாதிரியான உணவு வகைகள். ஆனால் அவ்வுணவு வழங்கி பரிமாறப்பட்ட விதத்தில் ஏதோ ஒன்று என்னைக் கவர்ந்தது. ரொட்டியை அவர் மென்று சுவைத்த விதம் விரசமாக இருந்தது. மசியலை களிம்பு மருந்தைத் தடவிக்கொள்வதைப் போல் பரப்பிக்கொண்டார். மதுவை கிட்டத்தட்ட உறிஞ்சுவதைப் போல்தான் அருந்தினார். அதெல்லாம் மிக அற்புதமானதாக எனக்குத் தோன்றியது. புத்தகத்திற்காக அதை விவரிக்க முற்பட்டபோது அவை அனைத்தையும் துல்லியமாக என்னால் மீண்டும் பார்க்க முடிந்தது. ஆடும் கடல், துல்லியமான ஆஸ்திரேலிய வானம், பசும் புல், எங்களுக்கு மேலோ சிட்னி ஆபரா ஹவுஸின் அலகுகள், இவ்வனுபவத்தை ஆசீர்வதித்துக்கொண்டிருப்பது போல். இந்த அத்தியாயத்தை எழுதி முடித்தபோதுதான் நினைவிற்கு வந்தது. அப்போது சிட்னி ஆபரா ஹவுஸ் இன்னம் கட்டப்பட்டிருக்கவில்லை என்று!
பேட்டியாளர்
The World of Venice பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அந்தப் புத்தகத்தையும் மும்மை முழுவதையும் வைத்துப் பார்த்தால் சரிவுகளும் வீழ்ச்சிகளும் உங்களைப் பலமாக ஈர்ப்பது போல் தோன்றுகிறது. இதன் மூலம் முற்றுலகத்தின் சரிவையும் வீழ்வையும் பற்றி கூற முயல்கிறீர்களா? அப்படி என்றால் ஏதேனும் புதிய தொடக்கத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?
மாரிஸ்
நிச்சயமாக உலகின் சரிவையும் வீழ்வையும் விவரிக்க முயலவில்லை என்றே நினைக்கிறேன். அதற்கு நேர்மாறாக, ஒவ்வொரு வருடமும் உலகம் மேலும் சக்திகரமாகிக்கொண்டே செல்கிறது என்றே நினைக்கிறேன். ஒருகால், தற்காலத்தின் பரபரப்பையும் நம்மை ஆட்கொள்ளும் புது தொழில்நுட்பத்திலிருந்து வெடித்தெழும் அழகையும் உணர்ந்திருப்பதால்தான் பழையன கழிதலில் இருக்கும் தியக்கமும், அவற்றின் சரிவும் என்னை ஈர்க்கிறதோ என்னவோ! நலிவுறுதலைப் பற்றி ஏன் அதிகம் எழுதுகிறேன் என்றால் அது ஏதோ இல்லவே இல்லை என்பது போல் பாவனை செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. மூப்பை நம்புகிறேன். அது கண்டிப்பாக இனம்காணப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் நம்புகிறேன். வெனிசை எப்போதுமே நேசிப்பேன் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை மேம்படுத்தும் பாவனைகளில் எனக்கு இஷ்டமில்லை. அப்படிச் செய்வது அதன் வயதை நிராகரித்து அதன் புராதனத்தையும் தளர்வு நிலையையும் மறுக்கும் பாவனையே ஆகும். ஏனெனில் அவையே அதன் மெய்மை. என்னில் ஒரு பகுதி வெனிசின் நலிவால் ஈர்க்கப்படுகிறது. அதே சமயத்தில் மற்றொரு பகுதி வெனிஸ் நலிவுற்றிருப்பதை பிடிவாதமாக மறுப்பதை வியக்கிறது. இம்மாதிரியான ஒரு நிலைமை 1990-களின் உலகைக் குறித்த என் பார்வையில் இடம்பெறுவதில்லை. மாறாய், நான் அதற்கு எதிர்நிலை எடுக்கிறேன். உலகம் தற்போது மிக விறுவிறுப்பாகவும், வீரியமிக்கதாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது.
பேட்டியாளர்
The World of Venice-ஐ 1960-ல் ஜேம்ஸ் மாரிஸாகப் பதிப்பித்தீர்கள். 1974 மறுபதிப்பின் முன்னுரையில் ஜான் மாரிஸாக அப்புத்தகத்தைக் காலத்துக்கு உட்பட்ட பிரதியாகப் பார்த்தீர்கள்: “ரோம-முனை பேனாவின் சில துரிதமானக் கோடுகளால் நவீனப்படுத்த முடியாத, குறிப்பிட்ட கணத்தில் குறிப்பிட்ட கண்களின் வழியே, பார்க்கப்பட்ட வெனிஸ்” என்ற அர்த்தத்தில். ஜேம்சின் பார்வையிலிருந்து மாறுபட்டிருக்கும் ஒரு புத்தகத்தை ஜான் எழுதியிருப்பாரா?
மாரிஸ்
இதற்கு விடையளிப்பது மிகக்கடினம்தான். மீள்பதிப்பில் அதனால் சமகாலச் சித்திரமாக நீடிக்க முடியவில்லை. ஏனெனில் இடைப்பட்ட காலத்தில் வெனிஸ் மிகவுமே மாறிவிட்டிருந்தது. நான் விவரித்த வெனிஸ் என்னுடைய வெனிஸ் மட்டுமே என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஜான் மாரிஸ் வேறு ஒரு புத்தகத்தை எழுதியிருப்பாரா என்றால்… ஒரு காலத்தில், அகலமானப் பெரும் பார்வைகளைக் காட்டிலும் சின்னச் சின்ன விஷயங்களில், நுண்விவரங்களில்தான் அதிகம் கவனம் செலுத்துபவராக ஜானை நான் அர்த்தப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் வயதாக ஆக, அகல்பார்வைகளும் நுண்விவரங்களும் அச்சில் ஒன்றுதான் என்று முடிவே சரியானதாகப் படுகிறது. பேரண்டமும் அதன் பிண்ட நுட்பமும் வெவ்வேறானவை அல்ல.
பேட்டியாளர்
வெனிசைப் பற்றிய புத்தகத்தை “நகரத்தைப் பற்றியது என்பதைவிட அதன் அனுபவத்தைக் குறித்த மிகவுமே தற்சார்புடைய, கற்பனைநவிற்சி மிக்க, உணர்வுப்பதிவுச் சித்திரம்” என்று வரையறுக்கிறீர்கள். நீங்கள் சித்தரிக்கும் எந்த நகரத்திற்கும் இவ்வரையறை பொருந்துமா? அல்லது குறிப்பிட்ட சிலதிற்கு மட்டுமா?
மாரிஸ்
அவை அனைத்திற்குமே பொருந்தும், நிச்சயமாக. ஒரு நகரத்தினிடமிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கக்கூடும் என்பதை மற்றவர்களுக்குக் கூறும் அவ்வகையான எழுத்தாளர் அல்ல நான். என் புத்தகங்களைப் பயணப் புத்தகங்களாக நான் கருதவில்லை. எனக்குப் பயணப் புத்தகங்கள் பிடிக்காது என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அவற்றை இலக்கியத்தின் வகைமையாகக் கருதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. உண்மையில் நான் விவரிக்கும் ஒவ்வொரு நகரமும் நான் அதைக் கண்ணுருவதை அல்லது அதற்கான என் எதிர்வினையைப் பற்றிய விவரணை மட்டுமே. கண்டிப்பாக சில நகரங்கள் மற்றதைக் காட்டிலும் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. அச்சந்தர்ப்பங்களில் அந்நகரம் என்னை மீறி ஆட்கொள்வதால் அதைப் பற்றிய உணர்வுகளை விவரிக்காது அதைப் பற்றிய மிகக் காத்திரமான ஏதொவொன்றையே விவரிக்க நிர்பந்திக்கப்படுகிறேன். உதாரணமாக பெய்ஜிங். அந்நகரத்திற்குச் சென்றபோது நான் எப்போதுமே கடைபிடிக்கும் இரண்டு பற்றாணைகளுக்கான மனநிலையுடன் சென்றேன். முதலாவது ஈ.எம்.ஃபார்ஸ்டர் போதித்தது- இலக்கின்றி அலைந்து திரிவதே அலெக்ஸ்சாண்ட்ரியாவைச் சுற்றிப் பார்ப்பதற்கான தலைசிறந்த வழி. இரண்டாவதை ஆகமத்தின் சங்கீதங்களிலிருந்து எடுத்துக்கொண்டேன். உங்களுக்கு அவ்வரி நினைவிருக்கலாம். “நாய் போல் இளித்துக்கொண்டே நகரத்தில் ஓடித் திரியுங்கள்.”
பேட்டியாளர்
ஓடி, பொது ஜனங்களை பயத்தில் கதிகலங்கச் செய்ய வேண்டுமா?
மாரிஸ்
ஆமாம். அப்படித்தான் பெய்ஜிங்கில் அலைந்து திரிந்து, நாயைப் போல் இளித்து வழக்கப்படி அங்குமிங்கும் ஓட முயன்றேன். ஆனால் வேலைக்காகவில்லை! என்னால் சமாளிக்க முடியாத அளவிற்கும் பெய்ஜிங் மிகவும் பெரிதாக இருந்தது. அதன் அளவு நான் அதைப் பற்றி எழுதியதை முற்றிலும் ஆக்கிரமித்தது.
பேட்டியாளர்
நகரங்களைப் பற்றிய உங்கள் தொகுப்பின் அறிமுகத்தில் நீங்கள் சாதிக்க நினைத்ததை ஒரு வழியாக சாதித்து முடித்துவிட்டீர்கள் என்று கூறியிருக்கிறீர்கள்.
மாரிஸ்
புடபெஸ்ட் புகாரெஸ்ட் நகரங்களுக்கிடையே கற்பனையான ஆனால் பொருள்சுட்டக்கூடிய ஒரு கோட்டை வரைந்து கொள்கிறேன். அக்கோட்டிற்கு மேலே இருக்கும் நகரங்களே என் பார்வையில் “மாபெரும் நகரங்கள்” என்று போற்றத்தக்கவையாக இருக்கும் என்று படுகிறது. கோட்டிற்கு கீழே இருக்கும் நகரங்கள் அனைத்தையுமே, அவை மிக சுவாரஸ்யமானவையாக இருப்பினும், ஒரு படி கீழேதான் மதிப்பிடுவேன். எனவே, இறப்பதற்கு முன் புகாரெஸ்ட் கோட்டிற்கு மேலே உள்ள அத்தனை நகரங்களையும் பார்த்து, எழுதிவிட வேண்டும் என்ற உறுதி பூண்டேன். பிரியப்பட்டபோது கோட்டிற்கு கீழே அமைந்த நகரங்களுக்கும் பயணம் விடுக்கலாம். ஆனால் மேலேயுள்ள நகரங்களை விதிவிலக்கின்றி கண்டிப்பாக பார்க்க முயல வேண்டும் என்பதே திட்டம். இறுதியில் அதை செய்தும் முடித்தேன். பெய்ஜிங்கே கடைசி.
பேட்டியாளர்
இதுவரையில் எழுதியிராத ஆனால் பார்க்க விரும்பும் இடம் என்று ஏதாவது இருக்கிறதா?
மாரிஸ்
இடங்களைப் பற்றி, அவை இடங்களாக இருப்பதாலேயே, எழுதி எழுதி அலுத்து விட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அசல் டிபெட்டிற்கு (எல்லை மட்டும்) நான் போனதில்லை. அங்கு செல்ல விரும்புகிறேன். அதேபோல் வ்லாடிவோச்டாக்கிற்கும் – இரண்டு இடத்திலுமே நிலைமை, இடம் இரண்டுமே எழுதுவதற்கு சுவாரசியமாக இருக்கும்.
பேட்டியாளர்
வார்த்தைகளில் பிடிபடாத இடம் என்ற ஏதாவது இருக்கிறதா?
மாரிஸ்
லண்டன் என்னைத் தோற்கடித்துவிட்டது என்று எப்போதுமே நினைத்துக்கொள்கிறேன். அது போல் எக்கச்சக்கமான இடங்கள் இருக்கலாம் – யாருக்குத் தெரியும்?
பேட்டியாளர்
1980 வாக்கில் வெனிசுடனான உங்கள் காதல் முறிந்துவிட்டது என்று கூறியிருக்கிறீர்கள். என்ன ஆயிற்று?
மாரிஸ்
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வெனிசை நான் தொடர்ந்து விட்டு விட்டு காதலித்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப் போரின் இறுதியிலிருந்து வெனிசை அறிந்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரை பெரும்பாலும் தனக்கு உரித்தான பாத்திரத்தை அது நிர்ணயித்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்கிறது. அதாவது கற்பனைமிக்க, உயிர்ப்புள்ள, நகரமாக இருக்க வேண்டுமா அல்லது நாமெல்லோரும் கண்டுகளிக்கும் ஒரு அரும்பொருளக நகரமாக இருக்க வேண்டுமா என்று. ஒரு காலத்தில் மெஸ்ட்ரே உள்ளூராட்சிக்கும் காயலிற்கும் இடையே கட்டப்படப் போகும் ஒரு பெரிய தொழிற்சாலை வளாகத்திற்கான ஒரு துயில்கூட ஊராக இருக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தூய்மைக் கேடு அத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததால் வெனிசின் நிலை மீண்டும் சந்தேகத்திற்குள்ளானது. அதை நவீன உலகிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சி தோற்றுவிட்டது. அதன்பின் ஒரு நாள், புனித மார்க்கின் தங்கக் குதிரைகள் பசெலிகாவின் முகப்பிலிருந்து காணாமல் போய்விட்டதைக் கவனித்தேன். சிலைகளைக் கீழிறக்கி உள்ளே கொண்டு சென்றுவிட்டிருந்தார்கள். வெளியே சில பொம்மைகளை வைத்திருந்தார்கள்…. கண்டிப்பாக சிறப்பான நகலிகள்தான், ஆனால் பழைய சிலைகளின் அந்தக் காலத்தில் தோய்ந்த அற்புதமும், ஜொலிப்பும் கீறல்களும் இல்லாது. இத்தருணமே வெனிஸ் தன் நிலையைத் தீர்மானம் செய்த தருணம் என்று நினைத்துக்கொண்டேன். ராஜதந்திரம், வணிகம் அல்லது அரசியல் ரீதியில் ஒரு பெரும் நகரமாகவோ அல்லது கிழக்கின் பெரும் துறைமுகமாகவோ ஆகும் எண்ணத்தை விடுத்து நாமெல்லோரும் பார்க்கச் செல்லும் ஒரு அருங்காட்சியக நகரமாக இருக்க அது முடிவு செய்தது. ஒருகால் அதுவே அதற்கு ஏற்ற முடிவாகவும் இருக்கலாம். காலம் தன்மீது படர்ந்திருப்பதை அது உணர்ந்திருக்கவில்லை. இனிமேலும் அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒருவேளை அதுவே சரியான தீர்வாக இருக்கலாம். சிறிது காலம் நானுமே அவ்விளக்கத்தோடு உடன்பட்டேன். ஆனால் கடந்த ஐந்து அல்லது பத்து வருடங்களாக பெருந்திரள் சுற்றுலாப் பயணம், குறிப்பாக ஐரோப்பாவிலும் வெனிசிலும், இவ்வளவு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அந்தப் பாவப்பட்ட கிழட்டு இடமானது சுற்றுலாப் பயணிகளால் அவ்வளவு நெரிசலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், கூட்டத்தைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகளைக் கடைபிடிக்காவிட்டால் அருங்காட்சியகமாக நீடிப்பதுகூட சந்தேகம்தான்.
பேட்டியாளர்
இருந்தாலும், சுற்றுலா பயணிகளிடமிருந்து விலகியிருக்கும் பல வினோதமான பேய்பிடித்த சதுக்கங்களை வெனிசில் இன்னமும் ஒருவரால் கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றுகிறது.
மாரிஸ்
இந்தியானாபோலிசிலும்கூட ஒருவரால் பேய்பிடித்த சதுக்கங்களில் உட்கார்ந்திருக்க முடியும்.
பேட்டியாளர்
அந்த பொம்மைக் குதிரைகள் எனக்குமேகூட முக்கியமானவைதான். ஆனால் எனக்கவை சற்றே வித்தியாசமாகப் பொருள்படுகின்றன. என் காலத்தின், மெய்மையின் சரிவையும் வீழ்ச்சியையும் சுட்டும் குறியீடுகளாகவே நான் அவற்றைக் காண்கிறேன்.
மாரிஸ்
மெய்மையின் சரிவும் வீழ்ச்சியும் உண்மையானால் அதற்கான மூல காரணம் சுற்றுலாப் பயணமே. சுற்றுலாப் பயணம் மெய்மைக்குப் புறம்பானதையே ஊக்குவிக்கிறது. அதன் பின்புலத்தில் அசலாக இருப்பதைக் காட்டிலும் பாவனை செய்வதே பயணிக்குச் சுளுவாக இருக்கிறது. கோமாளித்தனமாக பழைய வெல்ஷ் தொப்பியொன்றை வாங்கி, தலையில் போட்டுக்கொண்டு ஏதாவது ஒரு போலி குடியகத்திற்கு வெளியே உட்கார்ந்துகொண்டு ராக் விற்பனை செய்வதுதான் உலகில் மிக சுலபமான காரியம்.
பேட்டியாளர்
ராக் என்னவென்று அறியாதவர்களுக்கு, அது மிகையாக தித்திக்கும் ஒரு இனிப்பு மிட்டாய்.
மாரிஸ்
மேலும், இடத்தின் பெயர் அதன் மீது எழுதப்பட்டிருக்கும் அடிவரையிலும்கூட. எவ்வளவு கடித்து மென்றாலும் அது வேல்ஸ் என்றே கூறிக்கொண்டிருக்கும். வேல்ஸ், வேல்ஸ், வேல்ஸ்.
பேட்டியாளர்
உங்கள் Conundrum புத்தகத்தில் பால் மாற்றம் செய்துகொள்ளும் முடிவைப் பற்றியும் அதன் முறைமையைப் பற்றியும் கேட்கப்படக்கூடிய கிட்டத்தட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விடுகிறீர்கள். உங்கள் வாழ்வே பயணங்களால் ஆனவை போலிருக்கிறது, புறத்தேயும் அகத்தேயும் பயணித்துக் கண்டறிவது என்ற இரு அர்த்தங்களிலும். எவ்வளவு தூரத்திற்குப் பயணம் ஒரு நிவாரணமாகவும் ஆணின் உடம்பில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் உணர்விலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாகவும் இருந்தது என்பதைப் பற்றி சற்று கூற முடியுமா?
மாரிஸ்
பயணம் என்று நீங்கள் குறிப்பிடுவது அதன் அன்றாட அர்த்தத்தில் என்று எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் அதற்கு ஒரு மீபொருண்மை அர்த்தமும் இருக்கிறதல்லவா?
பேட்டியாளர்
மீபொருண்மை பயணத்திற்கு பிறகு வருவோம்.
மாரிஸ்
எப்போதுமே பயணம் விருப்பமானதாகவே இருந்திருப்பதால் அதற்கும் தப்பித்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். என் முதல் பயணங்களை நான் தேர்வுசெய்யவில்லை. ஆங்கிலப் படையுடன் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது, தப்பித்தல் உணர்விற்கு அதில் வாய்ப்பே இல்லை. ஆனால் பல வருடங்களுக்குப் பின் என் பயணங்களுக்கு ஏதோவொரு விதத்தில் மீபொருண்மை அர்த்தம் இருக்கக்கூடும் என்பதை நம்பத் தொடங்கினேன். என்னை ஆட்கொண்டிருக்கும் மன அமைதியின்மையை ஏக்கமாக அர்த்தப்படுத்திக்கொண்டேன். தப்பிப்பதற்காக அல்ல. வேட்டத்திற்கான ஏக்கம், ஓர்மைக்கான ஏக்கம், முழுமைக்கான தேட்டம். நிச்சயமாக முதலில் அப்படி நினைக்கவில்லை. ஆனால் போகப் போக அதுவே எனக்கு ஏற்புடையதாக மாறியது.
பேட்டியாளர்
உங்களைப் பற்றி, தனிப்பட்ட முறையிலும் உங்கள் எழுத்தின் மூலமாகவும், நான் அறிந்துகொண்டிருப்பதை வைத்துப் பார்த்தால், அதுவே உண்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
மாரிஸ்
இணக்கம் என்ற கருத்து என்னை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக இயற்கையுடன் ஒத்திசைவது, கண்டிப்பாக மற்றவர்களுடன் இசைவதும்கூட. பயணம் என்பது இவ்விணக்கத்திற்கான தேட்டம், ஒருமைக்கான நாட்டம், ஏன் ஒற்றுமையுணர்வை அதிகரிப்பதற்கான ஒரு விழைவு என்றே தோன்றுகிறது.
பேட்டியாளர்
எவரெஸ்ட் உச்சி ஏறியதைப் பற்றிய உங்கள் விவரிப்பு ஒரு அதீதமான குறியீட்டு முயற்சியாகப்படுகிறது.
மாரிஸ்
அதைக் குறியீடாகப் பார்ப்பது மகிழ்வளித்தாலும் உண்மையில் நான் அதை அப்படிக் கருதுவதில்லை. அது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணி. அதை நான் செய்துமுடித்தேன். அவ்வளவுதான்.
பேட்டியாளர்
ஆக, மீபொருண்மைப் பயணத்தைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை என்கிறீர்கள்?
மாரிஸ்
இல்லை, ஏனெனில் அது அவ்வளவு ஆழத்திலிருக்கும் அந்தரங்கமான விஷயமாகப்படுவதால், என்னைப் போன்ற கிழட்டுத் துறைதேர்ந்தோரால் அதை வார்த்தைகளில் கைப்பற்ற முடியாது.
பேட்டியாளர்
ஜேம்ஸ் எழுதியிருக்க முடியாத புத்தகத்தை ஜான் எழுதியிருக்கிறாரா?
மாரிஸ்
Pleasures of a Tangled Life. நாம் ஜாடைமாடையாக, தவிர்க்கும் விதத்தில் “புதிர்மை அனுபவம்” என்று அழைத்ததிலிருந்து உருவான அல்லது வலுப்பெற்ற மனோபாவத்தை முன்வைப்பதே அந்தக் கட்டுரை புத்தகத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. என்னை நேர்காணல் செய்வதற்காக என் இல்லத்திற்கு வருவோர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி- “ஆட்சேபனை இல்லையென்றால் அந்த கானன்ட்ரம் விஷயத்தைப் பற்றி பேசுவோமா?” இவ்வகையான விஷயத்திலிருந்து உருவாகும் மனோபாவம் எப்படிப்பட்டது என்பதையே அப்புத்தகம் வாசகர்களுக்கு, ஏன் எனக்குமேகூட, விளக்க முயற்சித்தது.
பேட்டியாளர்
சிட்னியைப் பற்றிச் சற்று பேசுவோம். குறிப்பிட்ட ஒரு புத்தகத்திற்காக எப்படி உங்களைத் தயார்செய்து கொள்கிறீர்கள்?
மாரிஸ்
முதலில் புத்தகம் ஏன் எழுதுகிறேன் என்பதை முடிவுசெய்து கொள்கிறேன். சிட்னியை எழுத முற்பட்டதற்கான காரணம் என்னை அந்தப் பழைய வல்லரசைப் பற்றிய பேச்சிற்கும் மீண்டும் அழைத்துச் செல்கிறது. வல்லரசின் அலைகள் அடங்கிப் பின்செல்கையில் உலகின் மணற்கரைகளில் எக்கச்சக்கமான பொருட்களை விட்டுவிட்டுச் சென்றது போல் எனக்குத் தோன்றுகிறது. அவற்றில் சில அருவருப்பானவை, சில பொருட்கள் பொலிவிழந்தவை. ஆனால் அவற்றுள் ஒன்றே ஒன்று மட்டும் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. அது நயமானதல்ல, சொல்லப்போனால் கூர்மையானதும் கடுமையானதும்கூட. ஆனால் ஒளிமயமானது. அதை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி நகரமாகவே நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். பழைய வல்லரசின் எச்சமாக மட்டுமல்லாது ஏதோ ஒரு விதத்தில் புது நகரம் என்ற வகைமையைத் துவக்கி வைக்கும் அடிக்கல்லாக அமைந்திருக்கும் ஒரு நகரம். 1780-களில் அமெரிக்கா செய்ததைப் போல, புது யுகத்திற்கான மக்களை உருவாக்கியது. வல்லரசின் மீது எனக்கிருக்கும் மனப்பிடிப்பிற்கும், ஈடுபாட்டிற்கும் முடிவுரை ஒன்று எழுத வேண்டும் என்று விரும்பினேன். சிட்னி அதை முடித்து வைப்பதற்கு ஏற்ற இடம் என்று பட்டது. சிட்னியை விமர்சித்த ஒருவர் நான் எழுதிய அனேக புத்தகங்களுமே வல்லரசின் ஒன்றுவிட்ட சகோதரர்கள்தாம் என்று கூறியிருந்தார். அவை தொடர்புடையவை.
பேட்டியாளர்
புத்தகம் எழுதிக்கொண்டிருக்கையில் எந்தக் கட்டத்தில் உங்கள் கருப்பொருளைக் கைப்பற்றி விட்டதாக, இடம் உங்களுடையது ஆகிவிட்டது என்பதாக உணர்கிறீர்கள்?
மாரிஸ்
புத்தகத்திற்கு புத்தகம் இக்கட்டம் வேறுபடுகிறது. பொதுவாகவே முதற்படியை அதிகம் சிந்திக்காது ஒரு வகையான நனவிலி-ஓடை நடையில் எழுதிவிடுவேன். அனைத்தையும் உள்ளே செல்ல அனுமதிப்பேன். அதன்பின் இரண்டாவது படி தயாரிக்கையில் நான் திட்டமிட்டிருப்பதைக் காட்டிலும் முதலில் எழுதியதே சிறப்பாக இருக்கிறது என்பதைக் கண்டறிவேன். சில சமயம் நனவைக் காட்டிலும் நனவிலி சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால் நான் திடமானவள் அல்ல என்பதால் நனவிலிப் பகுதிகளை நனவில் எழுதியதைக்கொண்டு பரிமாற்றம் செய்வேன். ஆனால் அனேகமாக அப்படிச் செய்வது பாதகமாகவே அமைகிறது. நனவிலி-ஓடையைப் பற்றி பேசுகையில் இதையும் சொல்லியாக வேண்டும், நாற்பது ஆண்டுகள் முயற்சித்து ஒரு வழியாக ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசிஸ்சை படித்து முடித்துவிட்டேன். அப்படியும்கூட நமக்களிக்கப்பட்டிருக்கும் குறுகிய வாழ்நாளை ‘ஃபினிகன்ஸ் வேக்‘ படித்து வீணடிக்க முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது.
பேட்டியாளர்
இப்புத்தகத்தில் சிட்னியின் ஆழம் வரையிலும் சென்றிருப்பதாக உணர்கிறீர்களா?
மாரிஸ்
இல்லை, அப்படித் தோன்றவில்லை. நான் எப்போதுமே கூறுவதைப் போல், என் உணர்வுகளின் ஆழங்களைச் சென்றடைந்தேன். முதல் பார்வையிலேயே ஒருவரின் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும் நகரங்களில் சிட்னி ஒன்றல்ல. நேரடியாகவும், மாச்சோவாகவும், வேடிக்கையாகவும் இருக்கவே அது முயல்கிறது. ஆனால் மேலும் மேலும் அதை அனுபவித்து, அவ்வனுபவங்களைப் பற்றிச் சிந்தித்த பிறகு ஒன்றைக் கண்டறிந்தேன். அதற்கு ஒரு விதமான சோகம் இழையோடும் ஏக்கத்தன்மை இருக்கிறது. உண்மையில், அதைப் போல், அனைத்து மாச்சோ இடங்களின் பின்புலத்திலும் இத்தன்மை இருக்கக்கூடும்.
பேட்டியாளர்
சோகம் இழையோடும் தன்மையா?
மாரிஸ்
ஆமாம். ஒரு விதமான ஏக்கம். ஆஸ்திரேலியர்களைப் பற்றி நான் அடிக்கடி உணருவது. அம்மாதிரியான உணர்வுகளை உணரக் கூடாது என்று நினைப்பதாலேயே அவர்கள் சற்று எதிர்க்கிறார்கள் என்பதை. ஆனால் ஒருகால் அவற்றை அவர்கள் அதை மெய்யாகவே உணர்கிறார்களோ என்னவோ. நிலக்காட்சிக்கும் இதற்கும் ஏதோவொரு தொடர்பிருக்கலாம். இதை எல்லாம் பல வருடங்களுக்கு முன் டி.எச். லாரன்ஸ் இனம் கண்டுவிட்டார்.
பேட்டியாளர்
ஆனால் சிட்னியைப் போல், அதன் ஏக்கத்தன்மையால் எளிதில் பிடிகொடுக்காத நகரம், உங்களிடம் எப்படித் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது? அது நீங்கள் திட்டமிட்டுக் கையாளும் முறைமையின் ஒரு கட்டமாக நிகழ்கிறதா அல்லது வசிக்கும் காலம் அதிகரிக்கையில் இயல்பாகவே இது மலர்கிறதா?
மாரிஸ்
இதெல்லாம் அனிச்சையாகவே நிகழ்கிறது என்று நினைக்கிறேன். இடத்திற்குப் பயணித்து சதா சர்வகாலமும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதைத் தவிர நான் அதிகப்படியாக எதையும் செய்வதில்லை. சிட்னியைப் பொறுத்தவரையில் அதன் கடப்புத் தன்மை வெளிக்காட்டப்படாதிருந்தால் புத்தகம் சற்று சலிப்பூட்டுவதாகவே இருந்திருக்கும். அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அதை மேலும் மேலும் உணரத் தொடங்கினேன்.
பேட்டியாளர்
அப்படியானால் உடனடியாகவே ஆழ்நிலை கடத்தல் நிகழவில்லையா?
மாரிஸ்
இல்லை. பலரும் சிட்னி புத்தகத்தை அதை ஏதோ “டமாஸ்கஸ்சிற்கு செல்லும் வழி” அனுபவம் போல் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி ஏதும் இல்லை.
பேட்டியாளர்
துண்டுத் துணுக்குகளையும் கதைகளையும் குறிப்பிட்ட இடங்களில் உங்கள் எடுத்துரைப்பில் இடைச்செருகுகிறீர்கள். எடுத்துரைப்பை முன்நடத்திச் செல்வதற்காக திட்டமிட்டபடியேதான் புனைவு உத்திகளைக் கையாள்கிறீர்களா?
மாரிஸ்
புனைவு உத்திகளின் மீது நான் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதால், நீங்கள் கேட்டது மன நிறைவளிக்கிறது. நாவல் எழுதுவதற்கும் இம்மாதிரியான புத்தகத்தை எழுதுவதற்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதில் எழும் சூழ்நிலைகள் புனைவில் நாம் கட்டமைக்கும் சூழ்நிலைகளைப் போல்தான் – பின்புலம் நாவலில் திட்டமிடப்படுவது போலவும், அதற்கான பாத்திரங்களை நாம் உருவாக்குவதைப் போலவும். இவை போக கூடுதலான ஒரு வசீகரிப்பும் இருக்கிறது. புத்தகம் நெடுகிலுமே பூதாகரமாக வியாபிக்கும் பாத்திரம் நகரம்தான் என்பதும், அதனால் நாவலாசிரியரைவிட உங்களுக்குக் கிட்டும் அனுகூலமும். கதைத்திட்டத்தை உடனடியாகவே அளித்துவிடுவதால்தான் பயணப் புத்தகங்களை எழுதப் பிடிக்கும் என்று பால் தொரோ (Paul Theroux) ஒருமுறை என்னிடம் கூறினார். அதாவது அத்திட்டத்தைத் தீட்ட வேண்டிய வேலை மிச்சம் என்பதால். வெர்ஜீனியா உல்ஃபின் பயண எழுத்திற்கு நான் பதிப்பாசிரியராக இருந்திருக்கிறேன். To the Lighthouse பல வழிகளில் ஒரு பயணப் புத்தகமே. விரிகுடாவின் குறுக்கே நிகழும் பயணத்தைப் பற்றிய விவரணைகள், ஒரு இலக்கியப் பயணப் புத்தகத்தை அவர் எழுதியிருந்தால் எம்மாதிரியான பார்வைகளை அளித்திருப்பாரோ அதே பார்வைகளைத்தான் இதிலும் தருகிறார்.
பேட்டியாளர்
Pleasures of a Tangled Life-இல் நீங்கள் விளக்கிய, “புதிர்மை அனுபவத்தால்” ஏற்பட்ட மனோபாவமும், மனோபாவ மாற்றமும் சிட்னி புத்தகத்தை எவ்வாறு பாதித்தது?
மாரிஸ்
நிச்சயமாக Pleasures of a Tangled Life புத்தகத்தின் பகுதிகள் மிகவுமே வேறுபட்டிருந்தன. குறிப்பாக அது என் தனிப்பட்ட வாழ்வின் அம்சங்கள், அதன் பார்வைகள் ஆகியவற்றை விவாதித்தது. வீட்டில் நடப்பது, வாழ்தல், கலை மற்றும் மதம் இத்யாதி போன்ற வாழ்வின் பலதரப்பட்ட விஷயங்களை நான் எவ்வாறு எதிர்கொள்கிறேன் என்பதைப் பேசியது. ஆகவே, இயல்பாகவே அது மனோபாவத்தை மிக நேரடியாக வெளிப்படுத்துகிறது, இல்லையா? சிட்னியைப் போன்றதொரு புத்தகத்தைக் காட்டிலும் மிக நேரடியாக என்ற அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன். ஆனால் மற்றொரு விதத்தில் பார்த்தால், சிட்னியைப் போன்றதொரு புத்தகத்தையும் நான் 1965-இல் எழுதிய ஆக்ஸ்ஃபோர்ட் போன்றதொரு புத்தகத்தையும் ஒரு பரிவான, கனிவான பார்வையில் ஒப்புமை செய்தோமானால், நீங்கள் ஓரளவிற்குப் புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில், அவை வெவ்வேறு ஆட்களால் எழுதப்பட்டவை என்ற முடிவிற்கே வருவீர்கள். நடையில் பெரிய மாற்றம் இருப்பதாக நீங்கள் உணராவிட்டாலும் அவற்றிற்குப் பின்னால் இருக்கும் மனதும், உணர்வும், மனோபாவமும் மாறியிருப்பதை இனம் கண்டுகொள்வீர்கள். ஆம், சிட்னியைப் பற்றி நான் அப்படித்தான் நினைப்பேன் என்று நினைக்கிறேன்.
பேட்டியாளர்
ஒரு புத்தகத்திற்கான தகவல்களை ஆராய்வதற்காக பயணிக்கையில் தனியாகத்தான் செல்வீர்களா?
மாரிஸ்
பொதுவாகவே நான் தனியாகத்தான் பயணிக்கிறேன். ஆனால் சில சமயங்களில் நாற்பது வருடங்களாக என்னுடன் உடன்வாழும் என் கூட்டாளியும் சேர்ந்துகொள்வது உண்டு. அவள் எனக்கு மிகவுமே விருப்பமானவள் என்றாலும் வேலை செய்வதாக இருந்தால் தனித்திருப்பதே உகந்தது என்று நினைக்கிறேன். என் பார்வையில் பணியைப் பொறுத்தவரையில் காதலும் ஒரு கடிவாளம்தான். எப்போதுமே அடுத்தவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதையே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு இடத்தைப் பற்றி எழுத வேண்டுமானால் முற்றிலும் சுயநலமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. எழுதப்போகும் இடத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும். உணர்கொம்புகள் எப்பொழுதுமே உயர்த்தப்பட்டு வெளியிலிருந்து அதிர்வுகளையும் நுண்தகவல்களையும் சேகரித்தபடியே இருக்க வேண்டும். உங்களுடன் மற்றொருவரும் இருந்தால், குறிப்பாக அவர் உங்களுக்குப் பிரியப்பட்டவராக இருந்தால், இச்சேகரிப்பு அவ்வளவு திருப்திகரமாக அமைவதில்லை. ஆகவே, அவளிடம் இதைச் சொல்வதற்கு மனமில்லை என்றாலும், அவள் கூடவருவது வேலைக்காகாது என்பதே கசப்பான உண்மை.
பேட்டியாளர்
எந்த வகையான எழுத்தாளராக இருக்க ஆசைப்பட்டாலும் முற்றிலும் சுயநலமாக இருக்க வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க இயலாது.
மாரிஸ்
தனிமையையும்கூட என்று சேர்த்துக்கொள்ளலாம்.
பேட்டியாளர்
ஒரே இடத்தில் எவ்வளவு நாள் தங்குகிறீர்கள்?
மாரிஸ்
அது முற்றிலும் என்ன எழுதுகிறேன் என்பதைப் பொறுத்திருக்கிறது. பத்திரிகைக்காக கட்டுரை எழுத வேண்டி வந்தால், எழுதப்போகும் இடத்திற்குச் சென்று, ஒரு வாரம் தங்கி அதைத் தவிர ஒரு வாரத்திற்கு வேறெதைப் பற்றியுமே சிந்திக்காதிருப்பேன். அதன் பின் கடைசி சில நாட்களில், அரக்கப் பறக்க, ஆனந்தம் அல்லது விரக்தி தோய்ந்த ஒரு மனநிலையில் நாளைக்கு ஒன்று என்ற கணக்கில், கட்டுரையை மூன்று படிகளாக எழுதுவேன். ஒரே மூச்சில், தொடர்ச்சியாக, அது எவ்வளவு நேரமானாலும், அதை முடிக்கும்வரை எழுதுவேன். இறுதித் திருத்தங்களை எல்லாம் செய்து முடித்தபின், அதைத் தபாலில் சேர்த்துவிட்டு, வேறு இடத்தைப் பார்க்கக் கிளம்பும் உணர்வு எனக்கு மிகப்பிடித்தமானது. மிகவும் நிறைவளிப்பது. அதன் தாக்கமும், முன்னறிவிப்பின்மையும், சடுதியும் அதை இன்னமும் சிறப்பாக்குகிறது என்று நினைக்கிறேன்.
இடங்களைப் பற்றி நான் எழுதிய புத்தகங்களிலேயே தலைசிறந்தது ஸ்பெயினைப் பற்றிய புத்தகம்தான். ஆனால் ஆறு மாதங்கள் அங்கு தங்கி அதை எழுதி முடிப்பதற்காக பணிக்கப்பட்டிருந்தேன். அதன்படி ஃபோக்ஸ்வேகன் காம்பர்-பஸ் ஒன்றை வாங்கி, அதைப்பற்றி ஏதுமே அறிந்திராத இந்த நாட்டிற்கு அதில் புறப்பட்டேன். அப்படிச் செய்தது மிகவுமே பயனளிப்பதாக இருந்தது. மொத்த ஆறு மாதமும் ஸ்பெயினை மட்டுமே நினைத்திருந்தேன். புத்தகத்தை முடித்தவுடன் மேலே ஒரு விமானம் பறந்து செல்வதை பார்த்த நினைவிருக்கிறது. அதோ என் செல்லக் கையெழுத்துப்படி போகிறது, தன் நியூயார்க் இலக்கை நோக்கி என்று நினைத்துக்கொண்டதையும். அந்தப் புத்தகமே, அவ்வளவு குதூகலமான மிகைக்களிப்பான நிலையில் செய்யப்பட்டதால், என் மிகச்சிறந்த புத்தகம்.
பேட்டியாளர்
ஒரு இடத்தைப் பற்றிய உங்கள் சித்திரத்தை உங்கள் மனநிலை எப்படி பாதிக்கிறது? அதைப் பற்றி என்ன எழுதுகிறீர்கள் என்பதை?
மாரிஸ்
என்ன சொன்னாலும் நான் தொழில்முறை எழுத்தாளர். வேண்டிய மனநிலையை, தட்பவெப்பத்தை, அல்லது தன்னிச்சை சந்திப்புகளை உருவாக்கிக்கொள்ள நான் வெகுகாலம் முன்பே கற்றுக்கொண்டுவிட்டேன். எங்காவது ஓரிடத்தில் ஒரு வாரம் விடாத தலைவலி, அல்லது ஓயாத மழை, அல்லது, திருப்தியில்லாத குடிமக்களை மட்டும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் என்றால் நான் எழுதும் கட்டுரை எதிர்பார்த்த அளவு உற்சாகமாக இருக்காது என்பதை என்னால் உணர முடிகிறது.
பேட்டியாளர்
தனிமையில் இருப்பதாகச் சொன்னீர்கள்…
மாரிஸ்
ஆமாம். சரி, பயணிக்கும்போது நான் தனிமையை உணர்வதில்லை. ஆனால் ஒவ்வொரு எழுத்தாளரையும் போலவே, ஓரிடத்தில் உட்கார்ந்து அதை எழுதும்போது கொஞ்சம் தனிமை தெரிகிறது. ஏனென்றால் அதை நீங்கள் மட்டும்தான் செய்தாக வேண்டும். அதற்காக நான் கொஞ்சம் அதிகம் உழைக்கிறேன். மூன்று தடவை திருத்தி எழுதுகிறேன். அது ஒரு நீண்ட பிராசஸ். அந்தச் சமயத்தில் நான் யாருடனும் பழகுவதில்லை, வெளியே போவதில்லை. ஆனால் பயணத்தில், இல்லை, தனிமை முன் இருந்ததைவிட இப்போது குறைவாக, உண்மையில், என்ன காரணம் சொல்வது, உங்களுக்கே தெரியும். நான் நீண்ட காலமாக இப்படிச் செய்துகொண்டிருக்கிறேன். நான் எங்கே போனாலும் இப்போதெல்லாம் எனக்கு அங்கு யாரையாவது தெரிந்திருக்கிறது. எனவே, எனக்குத் தனியாக இருக்க வேண்டாம் என்று தோன்றினால் நான் தனியாக இருக்க வேண்டியதில்லை. இதில் தனிமை எங்கு வருகிறது என்றால் எழுத்தாளராக இருக்கிறேன் என்ற அந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தால்தான். அது எப்படியானாலும் தனியாகப் போக வேண்டிய பாதை. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும்போது மற்றவர்களுடன் பேச முடியாது. தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது.
பேட்டியாளர்
நீங்கள் இசை கேட்டுக்கொண்டிருக்கலாம்.
மாரிஸ்
சமீபத்தில் சின்னதாக ஒரு எலக்ட்ரானிக் கீபோர்ட் வாங்கினேன். அவ்வப்போது வேலை செய்வதிலிருந்து எழுந்து ஏதாவது வாசித்துக்கொண்டிருக்கலாம் என்று.
பேட்டியாளர்
நீங்கள் எது வாசிக்கிறீர்கள்?
மாரிஸ்
சில சமயம் என்னிடம் இசைக் குறிப்புகள் இருந்தால் கன்சர்ட்டோக்களின் தனிப்பகுதிகளை வாசிப்பேன். மென்டல்சோஹ்ன் வயலின் கன்சர்ட்டோக்களை மிக நன்றாக வாசிப்பேன்.
பேட்டியாளர்
மொழிகள் எவ்வளவு முக்கியம்? உங்களுக்கு எவ்வளவு மொழிகள் தெரியும்? ஒரு இடத்தைப் புரிந்துகொள்ள அது எந்த அளவுக்கு அவசியம்?
மாரிஸ்
நான் எழுத எடுத்துக்கொண்ட விஷயங்கள் காரணமாக ஒருவகையில் அது மிக முக்கியமாக இருக்கிறது. நான் பிரிட்டிஷ் பேரரசு மற்றும் அதன் ஒன்றுவிட்ட சகோதர அரசுகளுடன் என் காலத்தின் பெரும்பகுதியைச் செலவிட்ட காரணத்தால் ஆங்கிலம் பொதுமொழியாக இருந்தது. அதுவொரு பிரச்சனையாக அமையவில்லை. ஆனால் நான் மோசமான மொழியார்வலர் என்பதால் அந்நிய மொழியொன்று அவசியமாக இருக்கும் நகரங்கள் பற்றி புத்தகம் எதுவும் எழுதவில்லை, வெனிஸ் தவிர. நான் ஒருவகை கொச்சையான ஃபிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழிகள் பேசுவேன். பல ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் அரபி மொழி கற்றுக்கொண்டேன். ஆனால் அதை வைத்துக்கொண்டு எனக்கு மாஸ்கோ அல்லது பெர்லின் பற்றி புத்தகம் எழுதும் தகுதி வந்துவிடாது, இல்லையா? என் சகாக்கள் சிலர் போலன்றி, ஒரு தேசத்தைப் பற்றி எழுத முழுக்க முழுக்க புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் அர்ப்பணிப்பு எனக்கு உண்டா என்பது சந்தேகமாக இருக்கிறது. உதாரணத்துக்கு காலின் தூப்ரான் சீனாவில் பயணம் செய்வது பற்றி ஒரு புத்தகம் எழுதுவதற்காக மெனக்கெட்டு மண்டாரின் கற்றுக்கொண்டார்.
பேட்டியாளர்
அப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள், உதாரணத்துக்கு வெனிஸ் நகரில் தகவல் சேகரிக்க என்ன செய்தீர்கள், மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்திக்கொண்டீர்களா?
மாரிஸ்
சரி, எனக்கு இத்தாலியன் மொழி ஓரளவு நன்றாகவே தெரியும். இந்தக் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இத்தாலிய மொழி ரொம்ப சுலபம் என்று ஹெமிங்க்வே சொன்னபோது அவரது இத்தாலிய நண்பர், அப்படியானால், திரு. ஹெமிங்க்வே, நீங்கள் ஏன் அதன் இலக்கணத்தைப் பயன்படுத்தக் கூடாது, என்று கேட்டார். ஸ்பெயின் பற்றி ஒரு சிறிய, அறுபதாயிரம் சொல்லளவு புத்தகம் எழுதச் சொன்னபோது நான் ஸ்பெயின் சென்றேன். அதற்காக பதிவு செய்யப்பட்ட ஸ்பானிஷ் மொழிப்பாடம் வாங்கி கற்றுக்கொண்டேன். வெளிவந்த நாள் முதல் இன்றுவரை அந்தப் புத்தகம் பதிப்பில் இருக்கிறது.
பேட்டியாளர்
தொழில்நுட்பம், குறிப்பாக கணினியின் வருகை, உங்கள் உத்தியையோ நடையையோ எவ்வகையிலாவது மாற்றியிருக்கிறதா?
மாரிஸ்
நான் கணினி பயன்படுத்துகிறேன். ஆனால் அது என் எழுத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. நடையும் மன விஸ்தீரணமும் கருவி சார்ந்தது என்ற எண்ணம் ஒரு மூடநம்பிக்கை. எப்போது வேண்டுமானாலும் என்னால் எப்படியும் எழுத முடியும். நான் எல்லாம் பயன்படுத்தியும் இருக்கிறேன் — பேனா, டைப் ரைட்டர், எலக்ட்ரிக் டைப் ரைட்டர் — எதுவுமே ஒரு சிறு விஷயத்தையும் மாற்றியதில்லை. ஆனால் கணினியில் வேலை செய்யும்போது நான் முதல் சில பிரதிகளை நேரடியாக அதில் எழுதுவதில்லை. காரணம், நாம் எழுதியதைத் திருத்தி எழுதிக்கொண்டிருப்பது அல்லது இதையும் அதையும் இடம் மாற்றிக்கொண்டிருப்பது, அந்த உந்துதல் அதிகமாக இருக்கிறது. இறுதி வடிவத்தை தீர்மானம் செய்ய மட்டுமே எனக்குக் கணினி உதவுகிறது. ஒரு எழுத்தாளன் எழுதுவதன் இறுதி வடிவைத் தீர்மானிக்க கணினி அருமையான விஷயம் என்று நினைக்கிறேன். நீங்கள் அதை எவ்வளவு வேண்டுமானாலும் செம்மைப்படுத்த முடியும்.
பேட்டியாளர்
வாழ்வின் ஒரு கட்டத்தில் ஆணாக இருந்த காரணத்தால் தன்னந்தனியாக பயணிக்கும் துணிச்சல் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
மாரிஸ்
ஆம், ஆணாக இருந்தபோது எனக்கு இருந்த தன்னம்பிக்கையின் கிறக்கம் இன்னும் இருக்கிறது. நான் துவங்கியபோது பெண்ணிய இயக்கம் நிகழ்ந்திருக்கவில்லை. எனவே ஆண் பயணிக்கும் பெண் பயணிக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருந்தது. எல்லாம் மிகவும், மிகவுமே மாறிவிட்டது. பெண்கள் பலர் பயணம் செல்வது குறித்து தேவையே இல்லாமல் பயப்படுகிறார்கள். இப்போதெல்லாம் ஆண் பெண் வேறுபாடு அதிகமில்லை என்று நினைக்கிறேன். ஆமாம், வேறு வகையில் உடலுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவுதான் அச்சுறுத்தல் இருக்கிறது. பயணம் செல்லும் பெண்கள் நடத்தப்படும் விதமும் எத்தனையோ மேலானதாக இருக்கிறது. மற்றவர்கள் உங்களைப் பார்த்து அவ்வளவு பயப்படுவதில்லை. அவர்கள் உங்கள் மீது இன்னும் அதிகம் நம்பிக்கை வைப்பவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு இடையே உள்ள உறவு, ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ளதைவிட இன்னும் நெருக்கமாக இருக்கிறது. இந்த உலகின் எந்த இடத்துக்கு ஒரு பெண் பயணம் போனாலும் அவளுக்கு உதவ ஒரு சில லட்சம் நண்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பேட்டியாளர்
ஒரு இடத்துக்குப் போகும் முன் அது பற்றி வாசித்து, ஆய்வு செய்வதாகச் சொல்கிறீர்கள். அப்புறம் அந்த இடம் நீங்கள் நினைத்தது போல் பெருமளவு இருக்கிறதா அல்லது முற்றிலும் நினைக்காத வகையில் அமைகிறதா?
மாரிஸ்
எனக்குத் தெரியாத ஒரு இடத்தைப் பற்றி எழுதி வெகு காலம் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் ஏற்கனவே எனக்குத் தெரிந்த இடம் பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் செல்லப் போகும் இடத்துக்கு மிகச் சிறந்த பயணப் புத்தகங்கள் சிலவும் என்னைத் தயார் செய்வதில்லை என்றுதான் நினைக்கிறேன். அவற்றில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்த புத்தகம், தவுடியின் (Doughty) Arabia Deserta. அது அற்புதமான புத்தகம், ஒரு மகத்தான கலைப் படைப்பு. ஆனால் பாலைவனம் பற்றியும் அதன் வாழ்க்கை பற்றியும் அது உருவாக்கிய சித்திரம் நான் உணர்ந்த சித்திரமாக இருக்கவில்லை. நிச்சயம் குறைசொல்லவில்லை. பாலைவனத்தில் என்னால் எதைப் பார்க்க முடியும் என்பதைச் சொல்ல அவர் முயலவில்லை. அவருக்குப் பாலைவனம் எப்படி இருந்தது என்பதைத்தான் சொன்னார். பாலைவனம் என்றால் எப்படி இருக்கும் என்ற என் கற்பனைக்குப் பொருத்தமாக அமையாத ஒரு புத்தகம்தான் அது. உதாரணமாக ஸ்டெர்ன் (Sterne) எழுதியதைக்கூட சொல்லலாம். A Sentimental Journey-யில் உள்ளது போல் பிரான்ஸ் இருந்தது என்று சொல்ல முடியாது. இது போல் மற்றவர்களும் இருக்கிறார்கள். சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அது போல் எழுதிய கிங்ஸ்லேக் (Kingslake) அப்படிப்பட்டவர்களில் ஒருவர். வாழ்வை மனதில் பதியும் வகையில் வலிய சித்தரித்தார். ஆனால் அங்கே சென்று பார்த்தால் புத்தகத்தில் சொன்னதுபோல் அவ்வளவு பிரமாதமாக இருக்காது.
பேட்டியாளர்
பேரரசுகளின் நலிவுக்கு மீண்டும் திரும்புவோம். நாம் இன்னொரு பேரரசு, சோவியத் யூனியன், தேய்ந்து மறைந்ததைக் கண்டோம்.
மாரிஸ்
சோவியத் யூனியனின் பெருந்துயரம் என்பது அதுவொரு கோட்பாட்டுப் பேரரசின் மறைவைக் குறிக்கிறது என்பதுதான். பிரிட்டிஷ் பேரரசு உண்மையில் கோட்பாடு எதுவும் இல்லாதது. காலப்போக்கில் நடைமுறைக்கு ஏற்ப வளர்த்துக்கொண்ட கோட்பாடு என்று வேண்டுமானால் சொல்லலாம். நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பொது நியதி ஒன்று இருந்தது. ஆனால் சோவியத் பேரரசின் பின்னிருந்த தார்மீக நோக்கம் என்பது முற்றிலும் வேறொரு சங்கதியாக இருந்தது என்று தோன்றுகிறது. கம்யூனிசம் சிந்தனையளவில் எனக்கு எப்போது வசீகரமாகவே இருந்திருக்கிறது. அந்த நாட்களில் வாழ்ந்திருந்தால் ஒருவேளை நானும் கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்கலாம். அதன் பெருந்துயரம் என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை, அது வெகு சீக்கிரமே சீரழிக்கப்பட்டது. புரட்சிக்குத் துரோகம் இழைக்கப்பட்டது. அது ஸ்டாலினிசத்தின் கொடூரங்களில் புதையுண்டது. மெல்ல மெல்ல இப்போது நாம் காணும் செயலின்மை, அவநம்பிக்கை, மகிழ்ச்சியின்மை, விரக்தி ஆகிய புதைமண்ணில் மூழ்கியது. கோட்பாட்டளவில் மக்கள்நல நோக்கத்துடன் துவங்கினாலும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அதற்கு சிறிதும் இருக்கவில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள் என்பதை அரசியல் கோட்பாடு கருத்தில்கொள்ளத் தவறுகிறது என்றால் அதன் தோல்வி தவிர்க்கப்பட முடியாதது என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் உங்கள் அமைப்பு இவ்வளவு வெற்றி பெற்றதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் வெளிப்படையாகவே மகிழ்ச்சி நாட்டம் பற்றி பேசுகிறது, இல்லையா? அது முற்றிலும் வேறு விஷயம்.
பேட்டியாளர்
லண்டன் போயிருந்த ஒருவர், இருபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதன் நினைவுகள் அழிந்து விடக்கூடாது என்று அங்கு திரும்ப மறுத்தார். அப்படிப்பட்ட ஒருவரை நான் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அது போல் நீங்க எந்த நகர் குறித்தும் நினைத்திருக்கிறீர்களா?
மாரிஸ்
ஆம், எனக்கும் அப்படி இருந்திருக்கிறது. மீண்டும் திரும்பிப் போய் பார்க்க வேண்டுமா என்ற தயக்கம் அடிக்கடி வரும். ஆனால் அதெல்லாம் பெரும்பாலும் அடிப்படையற்றவை என்பதுதான் என் அனுபவம். சிகாகோ அப்படிப்பட்ட நகரம். 1953ஆம் ஆண்டு முதல்முறை சிகாகோ சென்றேன். அதன்பின் பலமுறை அங்கு சென்று அதைப் பற்றி எழுதும் வாய்ப்புகள் எனக்கு வந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும், இது தவறு என்றுதான் நினைத்தேன். நீ நினைப்பது போல் அது இருக்கப் போவதில்லை, நீ ஏமாறப் போகிறாய். ஆனால் அது போல் இருக்கவில்லை. அண்மையில் நான் இதுபற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதற்கு முன் எழுதியது போலவே இப்போதும் அது நன்றாகத்தான் வந்தது. அடிப்படையில் உங்கள் நண்பர் சொல்வது சரிதான் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நடப்பில் அது உண்மையல்ல என்கிற மாதிரிதான் தோன்றுகிறது.
பேட்டியாளர்
சிகாகோ உங்கள் எழுத்துக்கு ஏன் இந்த அளவு இணக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? அது மாறிவிட்டதா?
மாரிஸ்
ஆமாம், நான் முதன்முதலில் அங்கு போன நாளிலிருந்து இப்போது நிச்சயம் இது மிகவும் மாறியிருக்கிறது. ஆனால் இந்த மாற்றம் எனக்கு உற்சாகம் அளிப்பதாக இல்லை. இந்த மாற்றம் எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்துகொண்டிருக்கிறது- வெளிநாட்டுக்காரர்களாகிய நம்மில் பலர் அமெரிக்கா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அந்த மாதிரிதான் இந்த ஊர் இன்னும் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. மிகவும் நகர்ப்புறத்துக்கு உரிய, நாகரீகமான நார்மன் ராக்வெல் தன்மையின் ஒரு தொடுகை சிகாகோவுக்கு இருக்கிறது. அதை அப்பாவிகளாகிய நாங்கள் விரும்புகிறோம்.
பேட்டியாளர்
சிகாகோ ஒரு பூரண நகரம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது இப்போதும் சரிதானா?
மாரிஸ்
நான் பூரண நகரம் என்று சொன்னதாக நினைவில்லை. ஆனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு நகரங்களில், சிகாகோ பூரண நகரம் எனும் இலட்சியத்துக்கு மிக அருகே வருகிறது. அதன் வடிவம் எனக்குப் பிடித்திருக்கிறது. தர்க்கப்பூர்வமாக இருக்கிறது, அதன் கட்டிடங்கள் அற்புதமானவை. உலகில் உள்ள மெட்ரோபொலிஸ்களில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட நகரம் இது என்று என் கண்ணோட்டத்தில் தோன்றுகிறது. அந்த சிகாகோவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை என்று நினைக்கிறேன்! டிக்கனஸ் அப்படி நினைத்தார்தான். அவர் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது நடத்துனர் அவர் பெட்டிக்கு வந்து, திரு டிக்கனஸ், நீங்கள் இப்பேருலகின் பாஸ் நகருக்குள் நுழைந்துகொண்டிருக்கிறீர்கள், என்றார்.
பேட்டியாளர்
இதுவரை முப்பத்து இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள். எங்கள் கணக்குப்படி ஜேம்ஸ்சாக பதினெட்டு, ஜேனாக பதினான்கு. நீங்கள் செய்ய விரும்பிய அனைத்தையும் சாதித்துவிட்டீர்களா?
மாரிஸ்
அப்படிச் சொல்லவே முடியாது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நான் செய்யத் தவறிவிட்டேன். எனது இந்த அனுபவம் மீண்டும் மீண்டும் பிரச்சனையாக வந்துகொண்டே இருக்கிறது… நான் அதை கலாப்பூர்வமாக பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டேன் என்று நினைக்கிறேன். தனது பாலமைப்பை மாற்றிக்கொள்வது என்பது எவர் ஒருவருக்கும் மிகவும் அசாதாரணமான அனுபவமாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு எழுத்தாளருக்கு இது சாதாரண விஷயமாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஆனால், இதைச் செய்யவில்லை என்றாலும்கூட, நான் அடிக்கடி சொல்வது போல, நீங்களும் இதைப் புரிந்துகொள்கிறீர்கள், அதன் விளைவுகள் நான் எழுதும் எல்லாவற்றிலும் பிரக்ஞைக்குக் கீழ் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இதையொட்டி ஒரு கலைப்படைப்பை உருவாக்கத் தவறி விட்டேன் என்றுதான் நம்புகிறேன். Fisher’s Face இந்தச் சிக்கலில் தோன்றிய ஒரு வகை கலைப்படைப்பு என்று நினைக்கிறேன். இதைச் சில கவனமாய் வாசிக்கும் விமரிசகர்களும் கண்டுகொண்டார்கள். நான் எழுதிய புத்தகங்களில் இதுதான் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்- ஆனால், அதைவிட வெளிப்படையாக இந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள நான் இன்னும் வழி காணவில்லை. ஒருவேளை, இப்போது மிகவும் காலதாமதம் ஆகிவிட்டதோ என்னவோ?
*
அடிக்குறிப்பு: 1. Des Esseintes, உயஸ்மன்னின் நாவலில் வரும் இருக்கையிலிருந்தே பயணிக்கும் பிரபல பாத்திரம்.
*
ஆங்கில மூலம்: Jan Morris: The Art of the Essay
மூலநூல்கள் / மேலும் படிக்க:
1. Lerman, Leo, Jan Morris, Art of the Essay No. 2, the Paris Review, 1997
2. Morris, Jan, Pax Britannica Trilogy (3 Vols), Harvest/HBJ, 1980
3. Morris, Jan, Venice, Faber & Faber, 1983
4. Morris, Jan, Spain, Prentice Hall, 1988
5. Morris, Jan, The World, Travels 1950 – 2000, W.W. Norton 2003