காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள் அமுதவல்லி. கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும்போதுதான் அதைக் கவனித்தாள். ஒரு சந்தேகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஜன்னலின் அருகே நின்று வெளிச்சத்தில் வைத்துப்பார்த்த போது உறுதியாகத் தெரிந்தது… அது நரை முடிதான். முன்னெற்றியின் புருவத்திற்கு அருகே அந்த ஒற்றை நரைமுடி அழகாகச் சுருண்டுவிழாமல் இருந்திருந்தால், தனக்கு நரைக்க ஆரம்பித்திருப்பதே அவளுக்குத் தெரிந்திருக்காது. வேறு எங்கும் நரைத்திருக்கிறதா என்று விரல்களால் முன் தலையில் இருந்த முடிக்கற்றைகளை இலேசாக ஒதுக்கிப் பார்த்தாள். கண்ணுக்கு எதுவும் தட்டுப்படவில்லை. இப்போது இந்த ஒற்றை நரையை என்ன செய்வது என்று யோசனை எழுந்தது.
”வேரோடு ஒரே இழுப்பில் இழுத்து பிடுங்கிப்போட்டு விடலாமா?” என்று நினைத்தவள் பிறகு, ”ஏழு கழுத வயசாகுது, அது பேசாம இருந்துட்டுப் போகுது” என்று வாய்க்குள்ளேயே முனகியபடி, மதிய உணவை கைப்பையினுள் திணித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறிப்போன அப்பாவை இன்னும் காணவில்லை. அவர் இல்லையென்றால் பேருந்து நிறுத்தம்வரை நடந்துபோக வேண்டும். காலை நேரத்திலேயே கசகசப்பை ஏற்படுத்திய வெக்கை மேல் எரிச்சலாக வந்தது. பக்கத்து வீட்டு வாசலில் சின்ன அத்தை கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த அவளது மகளுக்கு ஜடை பின்னிக்கொண்டிருந்தாள். சின்ன அத்தையின் கணவன் சிவசு, வீட்டு வாசலில் அவனது இருசக்கர வாகனத்தைத் துடைத்தபடி மகளை அவளது கல்லூரியில் இறக்கிவிட ஆயத்தமாகிக்கொண்டிருந்தான்.
இவளைப் பார்த்ததும், “அண்ணன் வீட்ல இல்லையா அமுதா? மாமாவ வேணா பஸ் ஸ்டாப்ல எறக்கி விடச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள் சின்ன அத்தை.
அமுதாவுக்கு எரிச்சலாக வந்தது. இதுவரை ஒருநாள்கூட சிவசுவின் வண்டியில் அமுதா ஏறியதேயில்லை. சின்ன அத்தைக்கும் இது தெரியும். ஆனாலும் தெரியாததுபோல இந்தக் கேள்வியைக் கேட்கிறாள். வண்டியின் சக்கரங்களுக்கிடையே சிவசுவின் கண்கள் அமுதாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.
“இல்ல, நான் நடந்து போய்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். சிவசுவின் கண்கள் அவள் முதுகோடு ஒட்டிக்கொண்டு வருவது போலத் தோன்றியதும், சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் அப்போது வண்டியைத் துடைத்துக்கொண்டிருப்பதான பாவனையில் இருந்தான்.
”வேணும்னா அவுங்களே கேக்கட்டும், நீ ஏம்மா லூசு மாதிரி கெஞ்சிக்கிட்டு இருக்க?” என்கிற குரல் அமுதாவின் காதுகளில் சன்னமாக விழுந்தது.
பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் அந்த ஒற்றை நரை முடியை அனிச்சையாக கைகளால் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். அதைக் கதிரவன் பார்த்தால் என்ன சொல்லுவான் என்றொரு கேள்வி மனதுக்குள் ஓடியதும் அவளாகவே புன்னகைத்துக்கொண்டாள். கதிரவன் அமுதாவுடைய பெரிய அத்தையின் மகன். பெரிய அத்தையும் சின்ன அத்தையும் அப்பாவின் தங்கைகள்.
”ஏன் அமுதா.. எப்பதான் கல்யாண சாப்பாடு போடுவ?” என்று நேற்று பெரிய டீச்சர் கேட்ட கேள்வி வேறு இப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது. சமீபகாலங்களாக இந்தக் கேள்வியை யார் கேட்டாலும் அமுதாவுக்கு எரிச்சலேற்பட ஆரம்பித்திருந்தது. ”வயசு ஏறிக்கிட்டே போகுது உனக்கு. மாப்பிள்ளை பாக்கற ஐடியா எதுவும் உங்க அப்பாவுக்கு இருக்கா, இல்ல வேற வழி இல்லைன்னா, வீராப்ப எல்லாம் விட்டுட்டு என்னைக்காவது என் வீட்டு வாசல்ல வந்து மாப்பிள்ளேன்னு கூப்பிட்டுட்டு நிக்கலாங்கற யோசனைல இருக்காப்லையா?” என்று கதிரவன் ஏற்கனவே ஒருமுறை கேட்டிருக்கிறான்.
அவன் அப்படிச் சொல்லும்போதெல்லாம் “ம்க்கும், ரொம்பத்தான்…” என்று அவனுக்குப் பழிப்பு காட்டியிருக்கிறாள். ஆனால், ”அப்படி ஒருவேளை நடந்தாலும்கூட நல்லதுதான்” என்று இப்போதெல்லாம் அவளுக்கே தோன்ற ஆரம்பித்திருக்கிறது.
உண்மையிலேயே தன் மனதில் அவனைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதே புரியாமல்தான் இப்படிப் பேசுகிறானா அல்லது அது தெரிந்ததால்தான் இப்படிப் பட்டும் படாமலும் பேசி விலகுகிறானா என்கிற கேள்வியும் அமுதாவின் தலைக்குள் ஓடிக்கொண்டேதான் இருந்தது. அடுத்தவர்களின் எண்ணங்களெல்லாம் புரியாதவனில்லை கதிரவன். உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல்வரை விரல் நுனியில் புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு பேசுவான். அவனுடைய மாடி அறையில் புத்தகங்களாக வாங்கிக் குவித்து அதற்குள் குடியிருக்கும் புத்தகப்புழு அவன். விடுமுறை நாட்களில் அவனது மாடியறை அவனது நண்பர்களின் அரசியல்- இலக்கியப் பேச்சுகளாலும், வெடிச்சிரிப்புகளாலும் நிரம்பி வழியும்.
பெரிய அத்தைகூட விளையாட்டாகச் சொல்லும். “இவன கல்யாணம் பண்ணிக்கப் போறவ பாவம். மாடில இருக்கற இவன் புத்தகத்தையெல்லாம் ஒருநாள் தூசி தட்டி சுத்தம் பண்ணி அடுக்கி வச்சாலே இடுப்பு செத்துரும். மறுநாளே தலைதெறிக்க ஓடீருவா”.
கதிரவனுக்கும் அவளுக்கும் இரண்டு வருட வயசு வித்தியாசம்தான். இன்றுவரை ’வா, போ’ என்று ஒருமையில்தான் அவனைப் பேசிக்கொண்டிருக்கிறாள். அவனது நண்பர்கள் அவனுடனிருக்கும் நேரங்களில் மட்டும் ‘வாங்க, போங்க’ என்று அவனை மரியாதை கொடுத்துக் கூப்பிட அரைமனதாக முயற்சிசெய்திருக்கிறாள்.
“நீ எப்பவும் எப்படி இருக்கியோ, அப்படியே இரு. யாருக்காகவும் உன்னை மாத்திக்காத” என்று கதிரவன் சிலமுறை சொன்ன பிறகு அந்த மரியாதையும் இல்லை. சில அபூர்வ தருணங்களில், அவள் மனம் கனிந்திருக்கும் நேரங்களில் மட்டும் அவனை ’கதிரு’ என்று அழைப்பாள்.
சின்ன வயதிலிருந்தே தன்னுடைய பிரச்சனைகள் எல்லாவற்றையும் கதிரவனிடம் சொல்லிவிட வேண்டும் அவளுக்கு. இல்லாவிட்டால், தலை வெடித்துவிடும் என்பாள். அப்போதே பெரிய மனிதன்போல எந்தப் பிரச்சனையிலிருந்தும் விலகிநின்று அவளுக்கு அறிவுரை சொல்லுவான் அவன். அது இப்போது குடும்பம், அவளது தோழிகள் குறித்து, அவள் வேலைபார்க்கும் இடத்தில் நடக்கும் தினசரி விஷயங்கள் பற்றி என்று எல்லாவற்றையும் அவனிடம் தவறாமல் சொல்வதுவரை தொடர்கிறது.
உண்மையில் அவன் மேல் காதலாக இருக்கிறாளா இல்லையா என்று கேட்டாலும், அதற்கான பதில் அமுதாவுக்கே தெரியாது. கதிரவனிடம் எல்லா உரிமையும் எடுத்துக்கொள்வாள். அப்படி எடுத்துக்கொள்வதை அவன் அனுமதிக்கவும் செய்வான். பதினான்கு வயதில் அமுதா பெரிய பெண்ணான பின்பு ஒருநாள், பெரிய அத்தையின் வீட்டு வாசலில் கதிரவனுடைய முதுகில் உப்புமூட்டைபோலத் தொங்கி விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சின்ன அத்தை இவளது முதுகில் இரண்டு அடியைப்போட்டு வீட்டுக்குத் துரத்திவிட்டாள்.
“ஏய் சின்னப்பிள்ளைகடி ரெண்டும்” என்று பரிந்து பேசவந்த பெரிய அத்தையை அன்று சின்ன அத்தை மதிக்கக்கூட இல்லை. அப்படி அடித்ததை தன் அண்ணனான அமுதாவின் அப்பாவிடம் போய் சொல்லவும் செய்தாள். தன் சார்பாக அப்பா பேசுவார் என்று எதிர்பார்த்த அமுதாவுக்கு அவர் வெறுமனே “சரிதான்” என்று சொல்லியபடி நகர்ந்து சென்றதுதான் அத்தை அடித்ததைவிட வலித்தது. அதன்பின் கதிரவனுடனான உடலளவிலான நெருக்கம் என்பது மட்டும் குறைந்து போனது. சின்ன வயதிலிருந்தே பள்ளியிலிருந்து திரும்பிவரும் வழியில், அதே தெருவின் ஆரம்பத்திலிருந்த பெரிய அத்தையின் வீட்டுக்குள் நுழைந்து, கிடைத்ததை அள்ளித் தின்றுகொண்டேதான் வீட்டுக்கு வருவாள் அமுதா. அதேபோல இப்போது அரசுத் தேர்வில் தேறி, ஆசிரியையாகப் பக்கத்து ஊரில் வேலை பார்த்துவிட்டுத் தினசரி திரும்பி வரும்போதும் பெரிய அத்தையின் வீட்டுக்குள் நுழைந்து ஒரு வாய் காபி குடித்துவிட்டு வரத்தான் செய்கிறாள்.
இவள் வருவாள் என்பதற்காகவே மாலை நேரங்களில் பெரிய அத்தை திக்காக ஃபில்டர் இறக்கி வைத்திருக்கும். கூடவே இவள் கொறித்துத் தின்பதற்கும் எதையாவது வாங்கிவைத்திருக்கும். இதெல்லாம் காலம் காலமாக நடப்பதுதான். அப்பாவுக்கும் பெரிய அத்தைக்கும் பேச்சுவார்த்தை குறைந்து போனபிறகும் இவளுக்கும் பெரிய அத்தை குடும்பத்திற்கும் உள்ள உறவில் மட்டும் எந்த மாற்றமுமில்லாமல் தொடரவே செய்தது. இன்னும் சொல்லப்போனால் சின்ன அத்தையின் கண்காணிப்பிலிருந்து அவள் விடுதலையை உணரும் நேரம் என்பது அவள் பெரிய அத்தை வீட்டில் உலவும் நேரங்களில்தான். ”ஏன் அங்க போற?” என்று அப்பாவோ “எதுக்கு இங்கே வர்ற?” என்று பெரிய அத்தையோ அவளிடம் ஒருதடவை கூடக் கேட்டதேயில்லை. சின்ன அத்தை எதுவும் கேட்க மாட்டாள். அப்படிக் கேட்டுவிட்டால் இவள் ஆடித் தீர்ப்பாள் என்பது சின்ன அத்தைக்கும் நன்றாகவே தெரியும்.
அப்பாவும் பெரிய அத்தையும் ஒருவருக்கொருவர் ரொம்பவே பிரியமாக இருந்தார்கள் என்கிற கதைகளை அமுதா ஏற்கனவே நிறைய கேட்டிருக்கிறாள். அப்படியிருந்த இருவருக்கும் என்ன காரணத்திற்காக பேச்சுவார்த்தை குறைந்து போனது என்பதை இருவருமே இவளிடம் சொல்லிக்கொண்டதில்லை. அது தனக்கும் எந்த விதத்திலும் தேவை இல்லை என்பது இவளது எண்ணம். காலப்போக்கில் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்து, மனிதர்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வந்தபிறகு, இதற்கெல்லாம் சின்ன அத்தைதான் காரணமாக இருந்திருப்பாள் என்பதும், சின்ன அத்தை தனது அண்ணனை, தன்னைத் தவிர அவரைச் சுற்றியுள்ள எல்லோரிடமிருந்தும் விலக வைப்பதில் கெட்டிக்காரி என்பதும் யாரும் சொல்லாவிட்டாலும் இவளுக்குத் தெரிந்தே இருந்தது.
சின்ன அத்தைக்கு அவளது சிறு வயதிலிருந்தே மூச்சுத்திணறல் பிரச்சனை உண்டு. கொஞ்சம் ஓடியாடி வேலை பார்த்துவிட்டாலோ, உணர்ச்சிவசப்பட்டுக் கத்திப் பேசினாலோ, யாரிடமாவது சண்டை போட்டாலோ அவளது மூச்சுத்திணறல் அதிகமாகிவிடும். சில நேரங்களில் இருக்கும் இடத்திலேயே மயங்கிச் சரிந்துவிடுவாள். இத்தனைக்கும் பாதி சண்டைகளுக்கு அவளேதான் காரணமாக இருந்திருப்பாள். அமுதாவின் அப்பா சின்ன அத்தையை உள்ளூரிலேயே கட்டிக்கொடுத்ததற்கும், அவளது திருமணத்திற்குப் பிறகும் அவளைத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததற்கும் அவளது உடல்நிலையும் ஒரு காரணம். அருகருகே உள்ள வீடுகளில் வாழ்ந்ததால் அமுதாவுக்கும் சின்ன அத்தைக்கும் ஏற்படும் உரசல்கள் அமுதாவின் அப்பா வரைக்கும் போய் நிற்கும். அவர் கண்ணை மூடிக்கொண்டு சின்ன அத்தையின் பக்கமே நிற்பவராக எப்போதுமிருந்தார். சின்ன அத்தையிடம் சமாதானமாகப் பேசி அனுப்பிவிட்டு, இவளிடம் “அத்தைகிட்ட ரொம்ப சண்டை போடாத, அவளுக்கு மூச்சுத் திணற ஆரம்பிச்சுட்டா.. பெறகு எல்லாருக்கும் கஷ்டம், கொஞ்சம் அனுசரிச்சுப் போ” என்பார். இதுபோக, மனதின் ஒரு ஓரத்தில் தன் தங்கையின் உடல்நிலையை மறைத்து சிவசுவுக்குத் திருமணம் செய்துகொடுத்ததன் குற்றவுணர்ச்சியைச் சுமந்து அலையும் ஒரு மனிதராகவே இருந்த காரணத்தாலும், உடம்பு சரியில்லாத தங்கையை நன்றாக வைத்திருக்கிறான் என்று அவர் உளமாற நம்பியதால், சிவசுவைப் பற்றிய எந்தவொரு எதிர்மறை விஷயத்தையும் எந்தக் காலத்திலும் அவர் தன் காதில் போட்டுக்கொள்ள விரும்பியதேயில்லை.
இந்த ‘அனுசரிச்சுப் போ’ என்பதை அவர் பெரிய அத்தையிடமும், அமுதாவிடமும் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டேதான் இருந்திருக்கிறார். அதிலிருக்கும் கெஞ்சல் தொனிதான் அமுதாவை ரொம்பவே எரிச்சல்படுத்தும். “இந்த மனுசன் எதுக்காக இப்படி தங்கச்சிக்கு பயந்து சாகறாரு?” என்று தோன்றும். அதே நேரத்தில் “ஒடம்பு சரியில்லங்கற ஒரே காரணத்தை வச்சிக்கிட்டு அப்பாகிட்ட எல்லா காரியத்தையும் சாதிச்சுக்குது இந்தப் பொம்பள” என்று காலப்போக்கில் அது சின்ன அத்தையின் மீதான வெறுப்பாக மாறி நின்றது. சின்ன அத்தைக்கும், தான் என்ன செய்தாலும் கடைசியில் இரண்டு துளி கண்ணீர் சிந்தி, மூசுமூசென்று மூச்சு விட்டதும் அண்ணன் பதறிவிடுவார் என்று தெரியும். அதன்மூலம் குடும்பத்திற்குள் நடக்கும் எந்தப் பிரச்சனையையும் வென்றெடுக்கும் கலை சின்ன வயதிலிருந்து அவளுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.
எந்தவொரு பிரச்சனையிலும் சின்ன அத்தையின் பக்கமே நிற்கும் அப்பாவின் மனவார்ப்பு, அப்பாவுக்கும் பெரிய அத்தைக்கும் உள்ள பாசத்தில் விரிசலை உண்டாக்கி அதைப் பெரிதாக்கிக்கொண்டே சென்றது. சின்ன அத்தை அந்த விரிசலை தன்னால் முடிந்த அளவுக்கு, அவ்வப்போது புதிது புதிதாய் அவள் கிளப்பிய பிரச்சனைகளின் மூலம் உரம்போட்டு வளர்த்துக்கொண்டிருந்தாள். சிறுவயதிலிருந்தே உடம்பு சரியில்லாத தங்கைக்கு எல்லா விஷயங்களிலும் விட்டுக்கொடுத்துப் போகச் சொல்லிப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தாள் பெரிய அத்தை. எதையும் வெடுக்கென்று பேசிவிடும் பெரிய அத்தையின் குணத்துக்கு இது சற்றும் ஒவ்வாத ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு பிரச்சனையிலும், எந்தத் தவறுமே செய்யாத தனக்கு நியாயம் கிடைத்ததே இல்லை என்கிற ஆழமான வடுவைத் தன் மனதில் சுமந்துகொண்டிருந்தாள் பெரிய அத்தை.
சின்ன அத்தைக்குக் கல்யாணமான புதிதில் சிவசுவின் குணங்களை, அவனது பழக்கவழக்கங்களைப் பற்றித் தன் காதுக்கு வந்த ஒருசில தகவல்களை பெரிய அத்தை தன் அண்ணனிடம் போய்ச் சொல்லியிருக்கிறாள். ஆனால் அவள் சொன்ன எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவளைக் கண்டபடி திட்டி அனுப்பிய அவர், போதாதகுறைக்கு சின்ன அத்தையிடமும் அவற்றைச் சொல்லிவைக்க, அவள் அவளது பங்குக்கு தன் அக்காவை வாய்க்கு வந்தபடி வசவால் குளிப்பாட்டினாள். அதன்பிறகு பெரிய அத்தை சிவசுவைப் பற்றி வெளியில் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள். ஆனால் அவளுக்கு சிவசுவின் மேல் எந்தக் காலத்திலும் நல்ல மதிப்போ, மரியாதையோ இருந்ததில்லை. காலம் செல்லச்செல்ல இந்த விஷயங்களெல்லாம் சேர்ந்து ‘ஒரு காலத்தில்’ பாசத்தோடு ஒன்னுமண்ணாய்க் கிடந்த அண்ணன் தங்கைக்கிடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு கனத்த திரையை விரித்துவிட்டிருந்தது.
பெரிய அத்தையின் கணவர் திடீரென்று ஒருநாள் மாரடைப்பில் இறந்துபோன அன்றுகூட யாரோ மூன்றாவது மனிதர் போல, எதிலும் ஒட்டாமல் நின்றுதான் அப்பா செய்முறைகளைச் செய்துவிட்டுப் போனார். அதுவும் ”பிறந்த வீட்டுக் கோடி போடாவிட்டால் ஊருக்குள் நாலு பேர் ஏதாவது சொல்லுவார்கள் என்கிற எண்ணத்தினால்தான் எங்கண்ணன் வந்திருப்பாரு” என்று பெரிய அத்தை அமுதாவிடம் அடிக்கடி சொல்லுவாள். சின்ன அத்தை தனது அக்கா புருஷன் செத்ததற்கு ஒப்பாரி வைத்து அழுதாள். அது மாமா என்கிற நல்ல மனிதருக்காக. ஆனால் மறுநாள் எதுவுமே நடக்காதது அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள். “ஏன்டி உங்க அக்காக்காரிகூட ரெண்டு நாளாவது துணைக்கு இருக்கலாம்ல?” எனக் கேட்ட சொந்தக்காரப் பெருசுகளிடம் “அப்ப என் வீட்டுக்காரருக்கும் மகளுக்கும் தெனம் நீங்க சோறாக்கிப் போடறீங்களா?” என்று கேட்டு அவர்களது வாயை அடைத்தாள்.
பெரிய அத்தையும் இது எதையும் எதிர்பார்க்கும் குணம் கொண்டவள் இல்லை. அவளது கணவர் இறந்துபோன பிறகு வர ஆரம்பித்த பென்ஷன் பணம் அவளது அண்ணனையும் தங்கையையும் எதற்காகவும் அண்டி வாழாமல் இருக்க அவளுக்குக் கைகொடுத்தது. சில வருடங்களில் கதிரவன் தலையெடுத்த பிறகு அவளது வீட்டில் வசதிகளும் கொஞ்சம் கூடத்தான் செய்திருக்கிறது. கதிரவன் புத்திசாலி, கல்லூரியில் நன்றாகப் படித்தவன். ‘யாரிடமும் வேலைக்கும் போக மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அவனாகவே கோச்சிங் செண்டர் ஒன்றை ஆரம்பித்த அன்று, அமுதவல்லியின் அப்பா அவன்மேல் வைத்திருந்த கொஞ்சநஞ்சப் பிரியத்தையும், நம்பிக்கையையும் கைவிட்டு ‘உருப்படாத பய’ என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். அவரைப் பொறுத்தவரை கால் காசு என்றாலும் கவர்மெண்ட்டு சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே மனிதர்களாக மதிக்கத்தக்கவர்கள். இத்தனைக்கும் கதிரவன் அவனது தொழிலில் நன்றாகவே சம்பாதித்தான். நான்கைந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களே அவனது கோச்சிங் செண்டரில் பகுதிநேர ஆசிரியர்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாலு பேருக்குத் தெரிந்த, அவர்கள் மதிக்கும் மனிதனாக ஊருக்குள் மாறிக்கொண்டிருந்தான் கதிரவன்.
அப்படிப்பட்ட எண்ணம்கொண்ட அப்பாதான் ப்ரிண்டிங் ப்ரஸ்ஸும், சொந்த ஊரில் ஒரு தென்னந்தோப்பும், கொஞ்சம் வயலும் வைத்திருந்த சிவசுப்பிரமணியன் என்கிற சிவசுவுக்கு சின்ன அத்தையைக் கட்டிக்கொடுத்தார். சிவசுவின் அப்பா காலத்து அச்சகம் அது. அவருக்கு சிவசு ஒரே பையன். நல்ல உயரம், நிறம்கொண்ட உடல்வாகு சிவசுவுக்கு. ஒரு புல்லட் பைக்கில் ஊருக்குள் மேலும் கீழுமாகச் சுற்றிக்கொண்டிருந்த சிவசுவைச் சின்ன அத்தைக்குப் பிடித்ததா அல்லது கல்லூரிக்குப் போகிறேன் என்று ஒப்பேற்றிக்கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் மேனா மினுக்கித்தனம் பண்ணிக்கொண்டிருந்த சின்ன அத்தையை சிவசுவுக்குப் பிடித்துப்போனதா என்று தெரியவில்லை.
இருவீட்டாரும் பார்த்துப் பேசி முடித்த, ஆனால் ஒரு வகையான வெளியில் சொல்லாத காதல் திருமணம் அது. அவர்களது கல்யாணம் நடந்த அன்று, முதல்முறை வீட்டுக்குப் புது மாப்பிள்ளையாக வந்திருந்த சிவசு அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அமுதாவின் கன்னத்தைக் கிள்ளி “பாப்பா உன் பேரு என்ன?” என்று கேட்டான். இவள் பதில் சொல்லி முடித்த பிறகும் இவளது கைகளைப் பிடித்திருந்த அவனது பிடியை அவன் விலக்கிக்கொள்ளவே இல்லை. என்ன காரணத்தினாலோ அந்த நொடியிலிருந்து அமுதவல்லிக்கு சிவசுவைப் பிடிக்காமல் போனது.
கதிரவனுடன் சேர்ந்து விளையாடுவதற்குத் திட்டிக்கொண்டே இருந்த சின்ன அத்தை, “அடியே.. அவரு உன் மாமாடி, பயப்படாத… பிரியமாத்தான பேசறாரு… ஏன் பேசாம இருக்க? நல்லா சிரிச்சுப் பேசுடி” என்று புதுப்பொண்டாட்டியின் பவுசோடு சிணுங்கிக்கொண்டே சொன்னபோது அமுதாவுக்கு சின்ன அத்தையின் மீதும் வெறுப்புதான் வந்தது. ஆனாலும் சிவசுவைப் பிடிக்கவில்லை என்பதை அமுதா வெளிப்படையாக வாய்வார்த்தையாகச் சொன்னதே இல்லை. அவள் கணவனை யார் எந்தக் குறை சொன்னாலும் அவர்களைப் பாய்ந்து குதறிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பவளாகவே சின்ன அத்தை அவளுக்குக் திருமணமான காலத்திலிருந்தே இருந்தாள் என்பதே அதற்குக் காரணம்.
திருமணமான சில நாட்களிலேயே சிவசுவின் அப்பா இறந்துபோனார். தென்னந்தோப்பை வைத்துக்கொண்டு, வயலை மட்டும் விற்ற சிவசுவின் காசில் தனது சொந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டை விலை பேசி வாங்கிக்கொடுத்தார் அமுதாவின் அப்பா. அன்றிலிருந்து அம்மா இல்லாத அமுதவல்லியையும், மனைவி இல்லாத அண்ணனையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை சின்ன அத்தை தனதாக்கிக்கொண்டாள். அதே நேரம் அவர்களது எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் அதிகாரமும் தனக்கு இருப்பதாக அவள் நம்ப ஆரம்பித்ததுதான் அமுதாவுக்கு பிரச்சனையாக இருந்தது.
அமுதாவின் தாத்தா பாட்டி காலத்தில் அவர்களுக்கும், பின்பு அவரது மனைவி உயிரோடு இருந்த காலத்தில் மனைவிக்கும், பிறகு சின்ன அத்தைக்கும் கட்டுப்பட்டு நடந்துகொள்வது என்பதை அமுதாவின் அப்பா தனது இயல்பாகவே வரித்துக்கொண்டார். ஆனால் அமுதாவின் அத்தனை தினசரி விஷயங்களிலும் சின்ன அத்தை தன் தலையை நுழைக்க ஆரம்பித்த பிறகு, அமுதாவுக்கும் சின்ன அத்தைக்கும் இடையே சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. இத்தனைக்கும் பெரிய அத்தைதான் வாயாடி. எதையும் முகத்துக்கு நேராகப் பட்டென்று போட்டு உடைக்கும் குணம் அவளுடையது. ஆனால் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டாள். சின்ன அத்தை அதற்கு நேரெதிர் குணம். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது முகத்தில் தெரியாது. அவளது பேச்சு நாசூக்காக இருக்கும், அவள் பேசி முடித்துவிட்டுப் போனபிறகு நிதானமாக யோசித்தால்தான் அதிலுள்ள குத்தலும் விஷமமும் புரியும்.
இருவருக்குமான இந்த வித்தியாசம் ஏன் தன் அப்பாவுக்கு மட்டும் புரிவதே இல்லை என்று அமுதா யோசிக்காத நாளில்லை. சிவசுவோடு அமுதாவுக்குப் பேச்சுவார்த்தையே இருக்காது. சிவசு அந்தப் பக்கம் வருவது தெரிந்தால் இவள் இந்தப் பக்கமாக ஒதுங்கிப்போய்விடுவாள். அதை மாற்ற தன்னாலான அளவுக்குச் சொல்லிச் சொல்லிப் பார்த்த சின்ன அத்தை ஒரு காலத்துக்குப் பிறகு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள். பெரிய அத்தைக்கும் சிவசுவோடு ஒட்டுதல் இல்லை. தங்கச்சி புருஷன் என்றாலும்கூட “அவனெல்லாம் ஒரு ஆளுன்னு” என்பாள்.
“அந்தாள் மேல உங்களுக்கு ஏன் அத்தை இவ்வளவு வெறுப்பு?” என்று அமுதா கேட்டிருக்கிறாள்.
”ஆமா வெறுப்புதான், அந்தாளுக்கு தான் ஒரு பெரிய மன்மதக் குஞ்சுன்னு நெனப்பு, என் தங்கச்சிக்காரி அழகானவதான், என்ன… கொஞ்சம் உடம்பு சரியில்லாதவ, அவ என்னமோ உடம்பு சரியில்லாத அவளுக்கு அந்தாளு வாழ்க்க கொடுத்த மாதிரி நெனைச்சுக்கிட்டு புருஷன தலைல தூக்கி வச்சுக்கிட்டு ஆடறா. கூட எங்கண்ணனும் சேர்ந்து ஆடறாரு. இதெல்லாம் அந்தாளுக்கு வசதியாப் போச்சு” என்பாள் பெரியத்தை. “அப்படி அந்தாளுக்கு என்ன வசதியாப் போச்சு?” என்று அமுதா கேட்கும் நேரங்களில் பெரிய அத்தை தன் வாயை இழுத்து மூடிக்கொள்வாள்.
தனது எல்லா விஷயங்களிலும் தன்மீது சின்ன அத்தை செலுத்தும் ஆதிக்கத்தை ஓரளவுக்கு ஒப்புக்கொள்ள முடிந்திருந்த அமுதாவுக்கு, கதிரவனைப் பற்றி அவள் குத்தலாகவே பேசுவது மட்டும் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது. கதிரவன் மீதான ‘உருப்படாத பயல்’ பிம்பம் தன் அண்ணனின் மனதில் வேரூன்றி வளர்வதற்குத் தன்னால் ஆனதை சின்ன அத்தை மிகவும் இரசித்துச் செய்தாள். கடைசியாக ‘உனக்கு வெக்கமா இல்ல, இன்னேரம் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா ரெண்டு புள்ள பெத்திருப்ப. அந்த வெட்டிப் பயலோட சேர்ந்து நடுரோட்டுல கொஞ்சிக்கிட்டு இருந்தியாம்ல?” என்று இவளது அப்பாவின் முன்னால் ஒரு நாள் போட்டு உடைத்தபோது அமுதா கூசிப்போனாள்.
வேலை முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்த போது எதேச்சையாக கடைத்தெருவில் பார்த்த கதிரவனோடு நின்று அமுதா பேசிக்கொண்டிருந்ததை அந்தப் பக்கமாகப் போன சிவசு பார்த்தபடியே போனது அமுதாவுக்குத் தெரியும். ஆனால் கதிரவனோடு பேசுவதென்பது அவளுக்கு இயல்பான ஒன்று என்பதால் சிவசு பார்த்ததை அவள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அவளது அப்பாவே நேரடியாகப் பார்த்திருந்தாலும் அவள் அவரைப் பொருட்படுத்தியிருக்க மாட்டாள்தான். ஏனெனில் அதுவரை கதிரவனோடு அவளுக்குக் காதல் என்ற ஒன்று வந்திருக்கவில்லை. எனவே சின்ன அத்தை ’கொஞ்சிக்கிட்டு’ என்ற வார்த்தையை விட்டதும் அவளைக் காயப்படுத்திக் குதற வேண்டும் என்று அமுதாவுக்குத் தோன்றியது.
“அவன் என் அத்த மகன்தான? நான் கொஞ்சிக்கிட்டு திரிஞ்சா உனக்கு ஏன் எரியுது? ஏற்கனவே பெரிய அத்தைக்கும் எங்கப்பாவுக்கும் ஆக விடாம பண்ணிட்ட… இப்ப எந்தலைய வேற உருட்ட ஆரம்பிச்சுட்டியா?” என்று கேட்டுவிட்டாள்.
”நானாடி ஆக விடாம பண்ணுனேன்? பாருங்கண்ணே எப்பிடி பேசறான்னு? நீங்க இருக்கும்போதே எப்பிடி அடங்காம பேசறா பாருங்கண்ணே” என்று விசும்ப ஆரம்பித்தபடி தன் அண்ணனைத் தூண்டினாள் சின்ன அத்தை.
அமுதாவைப் பார்த்து, ”இனிமேல் உங்க பெரியத்தை வீட்டுக்குப் போறதையும், கதிரவன்கூட பேசறதயும் நிப்பாட்டு” என்றார் அதுவரை பேசாமலிருந்த அப்பா.
இதை எதிர்பார்க்காத அமுதா, ”அப்படித்தான் போவேன். உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் சும்மா போறது உங்களுக்குப் பிரச்சனைனா எனக்கு அவனைக் கட்டி வைங்க. அவன் பொண்டாட்டியா அந்த வீட்டுக்குப் போறேன்” என்றாள்.
அதுநாள் வரை கை நீட்டியிராத அமுதாவின் அப்பா, அன்று முதன்முறையாக அமுதாவின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, கன்னத்தில் அறைந்தார். அமுதா அனிச்சையாக முகத்தை விலக்கியதில் அவரது கை அவளது கீழுதட்டைக் கிழித்தபடி சென்றது. இலேசாக அதில் ரத்தம் துளிர்த்ததைப் பார்த்ததும் பதற்றத்தில் அவருக்கு உடல் மேலும் கீழுமாய் நடுங்கியது. அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த சிவசு இது எதையுமே கவனிக்காதவன் போல, சின்ன அத்தையைப் பார்த்து, “பசிக்குது, வா வந்து சாப்பாடு வை” என்றான். தான் அவமானப்படுத்தப்படும் இடத்தில் சிவசுவைப் பார்க்க அமுதாவுக்குப் பற்றி எரிந்தது. அவன்தான் கதிரவனோடு பேசிக்கொண்டிருந்ததை சின்ன அத்தையிடம் போட்டுக்கொடுத்திருப்பான் என உறுதியாக நம்பினாள்.
அதன் பிறகு இரண்டு மூன்று நாட்களுக்குப் பெரிய அத்தையின் வீட்டுப்பக்கம் போகவோ, கதிரவனைப் பார்க்கவோ அமுதாவுக்கு மனம் ஒப்பவே இல்லை. போன் செய்தாவது இதைக் கதிரவனிடம் சொல்லிப் புலம்ப வேண்டும் என்று மனதுக்குள் நினைக்க ஆரம்பித்தாள். முதல்முறையாக அவன் தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்று உண்மையிலேயே ஏங்கினாள். அந்த எண்ணம் தோன்றிய கணத்திலிருந்து அது வளர்ந்து வளர்ந்து ’இதற்கு மேல் தாங்காது’ என்று ஒரு சமயத்தில் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்த அன்று, வேலையை முடித்துவிட்டு வரும் வழியில் பெரிய அத்தையின் வீட்டு வாசலில் கதிரவனின் பைக் நிற்பதைப் பார்த்தவுடன் நேராக வீட்டுக்குள் நுழைந்தாள். ஒரு சோபாவில் கால்களை நீட்டியபடி படுத்து ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான் கதிரவன்.
இவளைப் பார்த்ததும், “என்ன டீச்சர், கொஞ்ச நாளா ஆளைக் காணோம். அண்ணன் மகளைக் காணோம்னு உங்க அத்தை புலம்பிக்கிட்டு இருந்துச்சு” என்றபடியே எழுந்து அமர்ந்தான்.
”அத்தை எங்க?” என்ற கேட்டபடியே அவன் அருகே சென்று அமர்ந்தாள் அமுதா.
”ரைஸ் மில்லுக்கு மசால் பொடி அரைக்கப் போயிருக்காங்க அம்மா” என்றான் கதிரவன்.
எதுவும் பேசத் தோன்றாமல் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்த அமுதாவிடம், “ஏதும் பிரச்சனையா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
மூன்று நான்கு நாட்களாக மனதுக்குள் குமைந்துகொண்டிருந்தவள் அவனது வார்த்தைகளுக்காகவே காத்திருந்தது போல அவன் தோள்களில் சாய்ந்து விசும்ப ஆரம்பித்தாள். கதிரவன் மிகப் பொறுமையாக அவள் சமநிலைக்கு வரும்வரை காத்திருந்தான். அவன் தன்னைத் தோளோடு அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று அவளது உள்மனதும் உடலும் ஏக்கம்கொள்ள ஆரம்பித்து. அந்த ஏக்கம் அவனது பொறுமையில் மெல்ல கரைந்துகொண்டிருந்தது.
சட்டென்று முகத்தை நிமிர்த்தியவள், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா கதிரு?” என்றாள்.
அப்போதும் கதிரவனின் முகம் சலனமற்றே இருந்தது. ”என்ன பிரச்சனைன்னு மொதல்ல சொல்லு” என்றான் கதிரவன்.
அவள் மொத்தமாகச் சொல்லிமுடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன், “இப்பிடியொரு எண்ணம் இருக்கா உனக்கு? இதுல நம்ம ரெண்டு பேர் விருப்பத்தையும் தாண்டி நிறைய பிரச்சனைகள் இருக்கு. அது எல்லாத்தையும் சரி பண்ண முடியும்னு எனக்குத் தோணல அமுதா. மனசுல ஆசைய வளர்த்துக்காம அமைதியா இரு. இப்போதைக்கு என்னால இவ்ளோதான் சொல்ல முடியும்” என்றான்.
அமுதாவுக்கு உண்மையில் மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. சற்று நேரம் தலை கவிழ்ந்து யோசித்துக்கொண்டிருந்தவள் பிறகு ”சரி, நான் வர்றேன். அத்த வந்தா சொல்லீரு” என்று சொல்லிவிட்டு எழுந்தாள். கதிரவன் ஏதாவது சொல்லுவான் என்று அவன் கண்களையே சில நொடிகள் பார்த்தாள். அவன் “சரி சொல்லிடறேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு புத்தகத்தை விரித்தபடி மீண்டும் சோபாவில் சாய்ந்தான்.
வீட்டைவிட்டு வெளியேறி நடந்தவளுக்கு கதிரவன் சலனமற்று இருந்தது குழப்பமாகவும், சட்டென்று உள்ளுக்குள் ஏதோவொன்று வடிந்துபோய் வெற்றிடமானது போலவும் இருந்தது. தனக்கிருந்த பிரச்சனையில் கதிரவனைத் தவறாகக் கணித்துவிட்டோமோ என்று நினைத்தாள். அவள் பெரிய அத்தையின் வீட்டிலிருந்து வெளியேறி நடந்து வருகையில் சிவசுவும் சின்ன அத்தையும் சிவசுவின் பைக்கில் அவளுக்குப் பின்னாலிருந்து கடந்து சென்றதை அவள் கவனித்திருக்கவில்லை.
சில நாட்களுக்கு பெரிய அத்தையின் வீட்டுக்குப் போவதைக் கொஞ்சம் குறைத்திருந்தாள். கதிரவனிடமிருந்து அழைப்பு வரும் என்கிற அவளது எதிர்பார்ப்பு நடக்கவேயில்லை. அவளது அப்பா வீட்டைவிட்டு வெளியே போயிருந்த ஒரு விடுமுறை நாளின் மதியப்பொழுதில் இவளே ஒருமுறை கதிரவனை அழைத்து பழைய கதைகளையே மீண்டும் பேசினாள். பேச்சினிடையே மனதின் அழுத்தம் தாங்காமல், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதப் பத்தி நீ இன்னும் எதுவுமே சொல்லலியே கதிரு” என்று அவள் கேட்டபோது, “ச்சீ சும்மாயிரு லூசு” என்று சொல்லிச் சிரித்தபடியே அவன் போனை வைத்துவிட்டான்.
சுய கழிவிரக்கத்தில் இவள் போனைத் தூக்கி அருகிலிருந்த தலையணையில் எறிந்தபோது, திறந்திருந்த வீட்டில் நுழைந்து “அப்பா இல்லையா அமுதா?” என்று கேட்டபடி இவளுக்கு எதிரே மிக நெருக்கத்தில் சிவசு நின்றிருந்தான். “நீங்க எப்ப உள்ள வந்தீங்க?” என்று அமுதா பட்டென்று கேட்டுவிட்டாள். அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், “என்ன உன் அத்த மவன் ஒத்துவர மாட்டேங்கறானா?” என்று ஒரு கோணல் சிரிப்புடன், மேலும் அவளுக்கு மிக அருகில் நெருங்கியபடி வந்து கேட்டான் சிவசு.
“அதப்பத்தி உங்களுக்கென்ன பிரச்சனை?” என்று வெடித்த அமுதாவிடம், “ஆமா, உனக்கும் வயசாகுது. உனக்கும் தேவைகள் இருக்கும்ல?” என்று மெல்லிய குரலில் சொன்னான். அமுதாவுக்கு அவனது பேச்சும், மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு அவன் நெருங்கிநின்று பேசியதும் எரிச்சலாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது.
“இந்த விஷயத்துல நான் ஏதாவது உதவி பண்ணனும்னா சொல்லு, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவசியம் செய்யறேன். ஏன்னா, உன் அத்த மகன்தான் உனக்கு ஒத்துவர மாட்டேங்கறான்ல” என்று அவன் நக்கல் சிரிப்புடன் சொல்லிவிட்டு, அவளது தோள்களில் கைவைத்துத் தட்டிக்கொடுத்தான் சிவசு. அமுதவல்லியின் உடல் கூசி, அவள் சிவசுவின் கையைத் தட்டிவிட்ட போதும், கையை எடுக்காமல் அவன் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான். அப்போது அவனது முகம் அதன் உச்சபட்ச விகாரத்தை அடைந்திருந்ததாக அமுதாவுக்குத் தோன்றியது.
சட்டென்று எழுந்து “நீங்க எனக்கு ஒன்னும் பண்ண வேண்டாம், நான் எதையும் எதிர்பார்க்கவும் இல்ல. மொதல்ல கிளம்புங்க” என்று அவன் முகத்துக்கு நேராகச் சொன்னாள் அமுதா. கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி வெளியேறினான் சிவசு. அவனை அனுப்பிவிட்டு பொத்தென்று படுக்கையில் விழுந்தாள் அமுதா. அவளது இதயம் படபடவென்று அடித்துக்கொண்ட சத்தம் அவளுக்கே கேட்டது. மனம் ஆசுவாசமடைந்ததும் திரும்பவும் கதிரவனுக்கு போன் செய்து, சிவசு நடந்துகொண்ட விதத்தை அப்படியே சொன்னதும்தான் அமைதியானாள் அமுதா.
“அவனையெல்லாம் அப்பவே வெளுத்திருக்கணும். உங்கப்பா மொகத்துக்காகவும், சொந்தத்துக்குள்ள அசிங்கம்னும் நினைச்சு விட்டது நம்ம தப்பு” என்று சொன்ன கதிரவன், “சரி… நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம இரு” என்றான்.
இது நடந்துமுடிந்த இரண்டாம் நாள், “கதிரவன் தன் புருஷனான சிவசுவை நடுரோட்டில் வைத்து வயசு வித்தியாசம் இல்லாமல் அடிக்கப்போனதாக” சின்ன அத்தை புதிதாக ஒரு பிரச்சனையைக் கிளப்பியபடி பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். அப்பாவால் அவளைச் சமாதானம் செய்ய முடியவேயில்லை. அமுதாவுக்கு, கதிரவன் கை நீட்டும் அளவுக்கு சிவசு என்ன செய்தான் என்று எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை. ஒருவேளை, தான் சொன்ன விஷயத்திற்காக கதிரவன் சிவசுவை அடிப்பதுவரை போய்விட்டானா என்று சந்தேகப்பட்டு அதற்காக மனதின் ஓரத்தில் சந்தோஷப்படவும் செய்தாள்.
அப்பா வீட்டுக்குள் நுழையும்போது படபடப்பாக வியர்த்து வழிந்தபடி வந்தார். வழக்கமாக தன் தங்கையைச் சமாதானப்படுத்தும் அதே உடல்மொழியோடு “சரிம்மா, சரிம்மா, பொறுமையா இரும்மா, மூச்சுவிட சிரமப்படப் போறம்மா நீ. கொஞ்சம் பொறுமையா பேசுமா, அமுதா, அத்தைக்குத் தண்ணி கொடுத்தியா?” என்றெல்லாம் கேட்டபடி, தங்கையைச் சமாதானம் செய்துகொண்டிருந்தார்.
அமுதாவுக்கு அந்த நாடகங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் அப்பா சொன்னதைச் செய்தாள். அமுதா கொண்டுவந்த தண்ணீரைக் குடித்துவிட்டு ஆங்காரமாகப் பெருமூச்சு விட்டபடியே “நீங்க வந்து அந்த நாய என்னன்னு கேளுங்கண்ணே” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள் சின்ன அத்தை. ஒரு கட்டத்தில் அவரது சட்டைக் காலரைப் பிடித்து அரற்ற ஆரம்பித்தாள். சின்ன அத்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு சீராக ஆரம்பித்தபோதும் அவள் அவரது சட்டையைப் பிடித்திருந்த தனது கைகளை எடுக்காமலே “இப்பவே வாங்கண்ணே, அந்த உருப்படாதவன் வீட்லதான் இருக்கான்” என்று அப்பாவை இழுக்க ஆரம்பித்தாள். அவள் இழுத்த இழுப்புக்கு வேறு வழியில்லாமல் அவரும் ஆட்டுக்குட்டி போல அவள் பின்னாலேயே வழக்கம்போலச் சென்றார்.
அவர்களிருவரும் நேராகப் பெரிய அத்தையின் வீட்டுக்குச் சென்று கதிரவனிடம் தகராறு செய்யப்போகிறார்கள் என்று நினைக்கையில், உள்ளூர ஒரு கொதிநிலையை எட்டியிருந்தாள் அமுதா. பிறகு “யாரும் எக்கேடும் கெட்டுப் போகட்டும்” என்று வாய்விட்டுச் சொன்னபடியே வீட்டிலேயே உட்கார்ந்திருந்தாள். கதிரவன் யாரையும் சமாளிப்பான் என்று அவன் நம்பினாள்.
சற்று நேரத்தில் கதிரவனிடமிருந்து இவளுக்கு அழைப்பு வந்தது. “அமுதா… இங்க வந்து மாமாவையும் சித்தியையும் கூட்டீட்டுப் போ, இருக்கற கடுப்புக்கு வெளியே வந்தேன்னா ரெண்டு பேரோட மண்டையையும் தொறந்து விட்ருவேன் பார்த்துக்கோ” என்று சொன்னான்.
”சொல்லாத… மொதல்ல அதைச் செய்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் அமுதா.
சற்றுநேரம் வெறி பிடித்தது போல நகங்களைக் கடித்தபடி உட்கார்ந்திருந்தாள். பிறகு கிளம்பி வீட்டைப் பூட்டிவிட்டு பெரிய அத்தையின் வீட்டை நோக்கி நடந்தாள்.
பெரிய அத்தையின் வீட்டு வாசலில் பத்திருபது பேர் கூடி நிற்க, அந்த வீட்டு வளவுக்குள் நின்று, சின்ன அத்தை மண்ணை வாரித் தூற்றியபடியே கதிரவனையும் பெரியத்தையையும் ஏக வசனத்தில் திட்டிக்கொண்டிருந்தாள். அப்பா வழக்கம்போல சின்ன அத்தையிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். பெரிய அத்தையும் கதிரவனும் சண்டையும் போடாமல், சமாதானமும் பேசாமல் வீட்டு வாசலின் நிலைக்கதவில் ஆளுக்கு ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
நான்கு வீடு தள்ளியிருந்த ஒரு கடையின் வாசலில் நிறுத்தியிருந்த பைக்கில் சிவசு உட்கார்ந்துகொண்டு நடப்பதற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என்பதுபோல அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அங்கிருந்ததை அப்பாவோ சின்ன அத்தையோ கவனித்ததாகத் தெரியவில்லை. சிவசு இவள் முகத்தைப் பார்த்ததும் அதே கோணல் சிரிப்பொன்றை உதிர்த்தான். அமுதா சிவசுவைப் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. ”ச்சீ இவன் என்ன மனுசன்” என்று மனதுக்குள் குமைந்தாள்.
அமுதா நேராகச் சின்ன அத்தையிடம் போய், “அசிங்கமா இல்ல உனக்கு? இப்பிடி நடுரோட்டுல நின்னு ட்ராமா போட்டுக்கிட்டு இருக்க? வீட்டுக்கு வா” என்று கையைப் பிடித்து இழுத்தாள்.
”நானாடி ட்ராமா போடறேன்? நீதான்டி உங்கத்த மகன அவன் ஆத்தாக்காரி வீட்டுல இல்லாதப்ப போய் கொஞ்சற, நடுரோட்டுல கொஞ்சற, அதையெல்லாம் பண்ணிட்டு இப்ப எங்கண்ணன் முன்னாடி நல்லவ மாதிரி இங்க வந்து ட்ராமா போடற” என்றாள். இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அமுதா விக்கித்துப்போய் நின்றாள். அமுதாவின் அப்பா அங்கிருந்த குத்துக்கல்லில் போய் தலைகவிழ்ந்து உட்கார்ந்துகொண்டார்.
அதுவரை அமைதியாக நின்றிருந்த கதிரவன் இரண்டடி முன்னகர்ந்து சின்ன அத்தையைப் பார்த்து, “சித்தி, ஓரளவுக்குத்தான் உங்களுக்கு மரியாதை. ரொம்ப பேசுனீங்கன்னா நடக்கறதே வேற” என்றான்.
”என்னடா பண்ணுவ நீ, கொன்றுவியோ?” என்று கேட்ட சின்ன அத்தை, “எவ்வளவு திமிரு இருந்தா.. என் புருஷன வயசுல மூத்தவருன்னுகூடப் பார்க்காம கை நீட்டப் போவ? ஆத்தாளும் மகனும் கேக்கறதுக்கு ஆளில்லன்னு கொழுப்பெடுத்துப் போய் ஆடறீங்களா?” என்று கத்தினாள்.
கதிரவன் அமுதாவுடைய அப்பாவின் பக்கம் திரும்பி “மாமா பிரச்சனைய நான் வளர்க்க விரும்பல. இவுங்கள இங்க இருந்து கூட்டிட்டு போங்க” என்றான்.
”இவன் சொன்னா போகணுமோ? நான் வர மாட்டேன். இந்த நாய என் வீட்டுக்காரர்கிட்ட வந்து மன்னிப்பு கேக்கச் சொல்லுங்கண்ணே” என்றாள் சின்ன அத்தை.
“என் மகன் என்ன தப்பு செஞ்சான்? அவன் யார்கிட்டையும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” என்று முதல்முறையாக வாய்திறந்து பேசினாள் பெரிய அத்தை.
அவ்வளவுதான்… அதன்பிறகு சின்ன அத்தை வெலமெடுத்து ஆடினாள். ஒரு கட்டத்தில் வழக்கமான மூச்சுத்திணறல் அதிகமாகி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அமுதாவின் அப்பா பெரிய அத்தையைப் பார்த்து “நீ வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? இவளுக்கு எதாவது ஆச்சுன்னா நான் என்ன செய்வேன்? அதுக்கப்புறம் நீ நல்லா இருப்பியா”? என்று சத்தம் போட ஆரம்பித்தார்.
“இந்த நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம். எத்தனை நாள் இதையே காரணமா சொல்லி ஏமாத்துவீங்க? பட்டதெல்லாம் போதும். செத்தா செத்துட்டுப் போறா.. போறவங்களத் தடுத்தா நிறுத்த முடியும்? அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று அமைதியாக, ஆனால் உறுதியான குரலில், சொன்னாள் பெரிய அத்தை.
“கூடப் பொறந்தவள செத்தா சாகட்டுங்கறியே.. நீயெல்லாம் ஒரு பொம்பளையா?” என்று கேட்டபடியே பெரிய அத்தையை நோக்கி வேகமாக கையை நீட்டியபடி நடந்துபோனார் அப்பா. சட்டென்று அவருக்குக் குறுக்கே பாய்ந்துநின்று மறித்தான் கதிரவன். “நிறுத்துங்க மாமா, எங்கம்மா கிட்ட அந்த ஆளு தப்பா நடந்துக்கப் பாக்கறான்னு சொன்ன அன்னைக்கே ஒரு அண்ணனா, ஒரு பெரிய மனுசனா அந்தாள தட்டிக்கேட்டிருந்தா இன்னைக்கு இது இவ்வளவு தூரம் வந்திருக்காதுல்ல? அன்னைக்கும் இன்னைக்கும் எங்களையே வந்து ஏறுங்க. ஏன் அந்தாள கேள்வி கேட்கத் துப்பில்லையா உங்களுக்கு? இன்னமும் அந்தாளு ஊர் மேஞ்சுக்கிட்டுதான் இருக்கான். இப்பவும் நீங்க செய்ய வேண்டிய வேலையைத்தான் நான் செஞ்சிருக்கேன். நான் எதுக்காக இப்ப அந்தாள்கூட சண்டை போட்டேன்னு உண்மைய சொன்னா தாங்கமாட்டீங்க. போங்க, மரியாதையா சொல்லும்போதே சித்தியைக் கூட்டிட்டுப் போயிருங்க” என்று கடுமையான முகத்தோடு சொன்னான். அப்பா அவன் சொன்னது புரிந்தும் புரியாததுபோல ஆவென்று வாயைத் திறந்தபடி நின்றுகொண்டிருந்தார்.
கதிரவன் சொன்னது அரைகுறையாக் காதில் விழுந்ததும் திரும்பவும் குதித்து எழுந்தாள் சின்ன அத்தை. “அட நாசமாப் போறவனே, எம் புருசனையா ஊர் மேயறாருன்னு சொன்ன? உன் நாக்கு அழுகிப் போயிரும். ஒரு மனுசன் ஓங்குதாங்கா நெறமா இருந்தா நாலு பேரு பாக்கத்தான்டா செய்வாளுக. அதுக்கு அவரென்ன செய்வாரு? எம்புருஷன் தங்கம்டா” என்றவள் பெரிய அத்தையின் பக்கம் திரும்பி ”அவரு நெனைச்சா எந்தச் சிறுக்கியா இருந்தாலும் தேடிவந்து அவரு மடியில விழுவாளுகடி. நீ என்ன பெரிய யோக்கியமா? எனக்கு கல்யாணம் ஆன புதுசுலையே என் புருஷன்கூட இளிச்சு இளிச்சு பேசுனவதான நீ? பெருசா பேச வந்துட்டா” என்று கத்தினாள்.
கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு பெரிய அத்தை விரக்தியோடு அவள் அண்ணனின் முகத்தைப் பார்த்தாள். அங்கிருந்து எந்த எதிர்வினையும் வராததால் தன் தலையிலடித்துக்கொண்டு நிலைப்படியில் போய் உட்கார்ந்தாள்.
அமுதாவுக்கு எல்லாம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று ஒரு நொடியில் புரிந்துபோனது…
சின்ன அத்தையை நெருங்கிப்போய் பளிச்சென்று அவளது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை வைத்தாள். அத்தனை நேரம் இருந்த கோபமும் ஆங்காரமும் பெருமூச்சும் நின்றுபோய் அதிர்ச்சியில் திருதிருவென முழித்தபடி அமுதாவைப் பார்த்தாள் சின்ன அத்தை. “ஐயோ” என்று அலறியபடி ஓடிவந்து சின்ன அத்தையைத் தாங்கிக்கொண்டார் அப்பா.
”உன் புருஷன் பெரிய மன்மதன்.. எல்லாப் பொம்பளையும் போய் அவன் மடில விழுவாளுகளோ? வெளிலதான் நிக்கறான் உன் புருசன். எல்லாப் பொம்பளையும் ஒரேமாதிரி இருக்க மாட்டளுகன்னு அந்தாள்கிட்ட போய் சொல்லு. இன்னும் செருப்படி வாங்காம ஊருக்குள்ள அந்தாளு சுத்தறதே பெரிய விஷயம். வாய மூடிக்கிட்டு வீட்டுக்குப் போ” என்றாள் அமுதா.
அவர்கள் பெரிய அத்தை வீட்டுக் காம்பவுண்டை விட்டு வெளியேறுகையில் இவர்களுக்கு எதிர்திசையில் திரும்பிக்கொண்டான் சிவசு. அமுதா திரும்பிப் பார்க்கையில் பெரிய அத்தை நிலைப்படியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் காட்சி மங்கலாகத் தெரிந்தது.
அவ்வளவு நேரம் செய்த ஆர்ப்பாட்டத்தின் சின்ன சுவடுகூட இல்லாமல் சின்ன அத்தை தலைகுனிந்தபடியே நடந்து வீட்டுக்குள் நுழைந்து எதுவுமே பேசாமல் உட்கார்ந்திருந்தாள். குளியலறைக்குச் சென்று முகம் கழுவப்போனார் அமுதாவின் அப்பா. தன் அண்ணன் அருகில் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, குரலைத் தாழ்த்தி “ஏன்டி… அந்தக் கேடுகெட்ட மனுசன் உங்கிட்டயுமா தப்பா நடந்துக்கிட்டான்?” என்று கேட்டாள் சின்ன அத்தை. பதிலேதும் சொல்லாத அமுதா அவளை வைத்த கண்வாங்காமல் பார்த்தாள். இவளது பதிலை எதிர்பார்க்காமலேயே “உங்கப்பாகிட்ட எதுவும் நீ சொல்லலைல?” என்று முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு மீண்டும் கேட்டாள்.
”அதைச் சொல்லீருந்தன்னு வையி, கதிரவன நீ அசிங்கப்படுத்துனதுக்காக உன்ன நான் பழி வாங்கறேன்னு உங்கண்ணங்கிட்ட ஏத்தி விட்டிருப்ப.. அவரு என்ன ஏதுன்னே கேக்காம என்னை நாலு சாத்து சாத்தியிருப்பாரு. அதான நடந்திருக்கும்? நீயோ உன் புருசனோ என்ன தப்பு செஞ்சாலும் எங்கப்பா உங்கள ஒன்னும் கேக்க மாட்டாங்கன்ற தைரியத்துலதான ஆட்டமா ஆடறீங்க? இப்ப மட்டும் என்ன அவருக்குத் தெரிஞ்சிருமோன்னு பயப்படற மாதிரி உருகற? அப்படியே தெரிஞ்சா மட்டும்…?” என்று முகத்தை வெறுப்பில் வேறு பக்கம் திருப்பிக்கொண்டே சொன்னாள் அமுதா.
முகம் கழுவி, துடைக்கத் துண்டு எடுக்கத் திரும்பி வந்த அமுதாவின் அப்பா, இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒரு வார்த்தை விடாமல் பக்கத்து அறையில் நின்றபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அன்றைக்குத் தன் தோள்மீது கைவைத்து, முகத்தின் வெகு அருகில் நெருங்கிநின்ற சிவசுவின் விகாரமான முகம் மீண்டும் அமுதாவின் நினைவிலாடியது. சின்ன அத்தை சோர்ந்துபோய் அவள் வீட்டுக்குக் கிளம்பினாள். சற்றுநேரம் அமைதியாக உட்கார்ந்திருந்த அமுதா, பிற்கு மனதுக்குள் ஏதோவொரு முடிவெடுத்தவள் போல பெரிய அத்தையின் வீட்டை நோக்கி நடந்தாள்.
அமுதாவும் வெளியேறிப் போனபிறகு, மெதுவாக வெளியே வந்து, மின்விசிறியைச் சுழலவிட்டு, அதற்குக் கீழே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்தார் அமுதாவின் அப்பா. மின்விசிறி இலேசான சத்தத்தோடு வழக்கம்போலச் சுழல ஆரம்பித்தது.
5 comments
Nice short story, your words dragged to 90’s
சிறுகதைகள் கடைசியில் எதிர்பாராத twist ஆக முடிய வேண்டும் என்ற சுஜாதாவின் இலக்கணத்தை அழகாக மீறியிருக்கிறது இந்தக் கதை. உறவுச் சிக்கல்கள் எத்தனை சிடுக்காய் இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. வாழ்த்துகள், இளங்கோவன் முத்தையா.
நல்ல நடை எதிர்பார்ப்புடன் தொடருங்கள்
மிகவும் ஆழமான உறவு சிக்கல்களை அழகான வார்த்தைகளால் வடித்திருக்கிரீர்கள். எல்லாருக்கும் அவரது நியாயங்கள் உயர்வு.
அருமையான உறவின் பதிவு அருமை
Comments are closed.